New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 2026 தமிழகத் தேர்தல்: தி.மு.க புலம்பல்கள்


Guru

Status: Offline
Posts: 25377
Date:
2026 தமிழகத் தேர்தல்: தி.மு.க புலம்பல்கள்
Permalink  
 


2026 தமிழகத் தேர்தல்: தி.மு.க புலம்பல்கள்

விஜயின் தேர்தல் வெற்றியை சமீபத்திய, நான் நேரில் அனுபவித்த, தேர்தல் அதிர்வுகளுடன் ஒப்பிட வேண்டுமென்றால் 2016-இல் டிரம்ப் ஜெயித்ததோடு ஒப்பிடலாம். இது ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டின் படியான ஒப்பீடு தான், வேறு வகைகளிலல்ல. அந்த 2016 நவம்பர் அதிகாலையில் அமெரிக்காவும் உலகமும் அதிர்ந்தன என்றால் மிகையில்லை. ஜனநாயக கட்சியினர் பலர் வெளிப்படையாகவே அழுதனர், அதிர்ச்சியில் உறைந்து போயினர் என்றும் சொல்லலாம் ஆனால் கூடவே பலர் “நாம் நம் வாக்கு வங்கிகளை இழந்தோம், ஏன் உழைக்கும் வர்க்கம் நம்மை கைவிட்டதென்று ஆராய வேண்டும்” என்றும் பேசினர்.

1967-இல் காமராஜரே தோற்ற போது கண்ணதாசன் “அறம் பாடி அழித்து விடவா விருதுநகரை” என்று சொன்னதாக படித்திருக்கிறேன். இன்று கொளத்தூரில் ஒரு முதல்வரே தோற்ற அதிர்ச்சியில் இருந்து திமுக-வினர் பலர் மீளவேயில்லை, புரிந்துக் கொள்ளக் கூடியது தான். திமுக பல தோல்விகளை சந்தித்திருக்கிறது என்றாலும் இது மிக மிக பலமான அடி, கட்சிக்குள் பல கேள்விகளை எழுப்ப வேண்டிய அடி.

திமுகவின் அதிகார நாளேடாகவே மாறிவிட்ட தி இந்து-வே தேர்தல் புள்ளி விவரங்களை தொகுத்தக் கட்டுரையில், “1967 முதல் மாநிலத்தில் கோலோச்சிய திராவிட இயக்கங்களால் கட்டமைக்கப்பட்ட அரசியலை மாற்றுகின்ற தேர்தலாக இது இருக்கக் கூடும்” என்று சொன்னது.

‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம், எதிர்கட்சியாக எங்கள் கடமைச் செய்வோம், ஆட்சியமைப்புக்கு இடையூறு செய்ய மாட்டோம், தோல்விக்கான காரணங்களை ஆராய்வோம்” என்று ஸ்டாலின் அறிவித்தாலும் செயல்களில் ஒவ்வொன்றையும் மீறினார். மக்கள் தீர்ப்புக்கு விரோதமாகவும் விஜய் ஆட்சியமைக்கத் தடையாகவும் பல வியூகங்கள் வகுக்கப்பட்டன,, சரி அது அரசியல் என்று தள்ளிவிடுவோம். திமுகவினர் முதல் பல பத்திரிக்கையாளர்கள் உட்பட, இவர்களில் பலர் திமுக அடிமட்ட தொண்டனை விட திமுகவுக்காக இரவும் பகலும் உழைப்பவர்கள், இப்போது த.வெ.க-வின் வெற்றிக்கு காரணங்களை வீசுகிறார்கள்.

இன்ஸ்டாகிராமை வைத்து ரீல்ஸ் போட்டு ஆட்சியைப் பிடித்து விட்டார் என்கிறார்கள் ஒரு ஐ.டி.விங்கை நடத்தியவர்கள், பத்திரிக்கையாளர்களை கைக்குள் போட்டு தொலைக்காட்சி விவாதங்களில் அராஜகம் செய்தவர்கள். மாநில உளவுத்துறை எப்போதும் சட்டம் ஒழுங்கை கவனிப்பதை விட எதிர்கட்சி பற்றி வேவு பார்த்து தேர்தல் வெற்றித் தோல்விப் பற்றி கணிப்புகள் வழங்குவது வழக்கம், இதெல்லாம் இருந்துமா கோட்டை விட்டீர்கள்? பிரண்ட்லைன் பத்திரிக்கையாளர் இளங்கோவன் ராஜசேகரன் கூட விஜயின் வெற்றியின் காரணத்தை வெறும் ரீல்ஸ் தந்திரோபாயம் என்று சுருக்கிவிடுகிறார். உண்மையில் திமுகவினர் போடாத ரீல்ஸா, செய்யாத பரப்புரையா? சினிமா நிகழ்ச்சி தொகுப்பாளரை வைத்து கல்வி விழா நடத்தி அதில் ஸ்டாலினை ஒரு செய்கையை மீண்டும் செய்யச் சொல்லி ஃபயர் விட்டு ரீல்ஸ் பரப்பியதெல்லாம் யார்? சினிமா கவர்ச்சி என்று கூக்குரலிடுகிறார்கள், சினிமா கவர்ச்சி மூலம் 1967 முதல் இன்று வரை அரசியல் செய்தவர்கள்.

இன்று ஒரு ரீல்ஸ் பார்த்தேன். யாரோ ஒரு திமுக அனுதாபி சிலரை கேட்டாராம், “உங்களுக்கு பி.டி.ஆரை, டி.ஆர்.பி.ராஜாவை எல்லாம் தெரியுமா?” அதற்கு அவர்கள் “எங்களுக்கு விஜய் டான்ஸ் பிடிக்கும்” என்றார்களாம். ஐயா அறிவாளி உங்கள் கட்சியிலேயே பி.டி.ஆர் வெறும் டம்மி பீஸ் தானே? பி.டி.ஆர் டம்மியாக்கப்பட்டதே அவர் குறைந்த பட்ச நேர்மையாளர் என்பதால் தானே? நிதித்துறையை நிர்வகிக்கவே பிறப்பெடுத்தவர் என்று பேசப்பட்ட பி.டி.ஆர் இரண்டு வருடத்துக்குள்ளாக வெளியேற்றப்பட்டார். தன் கணினித் துறைக்கு நிதியும் இல்லை அதிகாரமும் இல்லை என்று சட்டசபையிலேயே பிடிஆர் புலம்பும் அளவுக்கு டம்மியாக வைத்திருந்தது திமுக.

இன்று முரசொலிக்கு போட்டியாக இயங்கும் ‘தி இந்து’ ஒரு காணொளி வெளியிட்டது, அதில் த.வெ.க-வின் பொய்யுரைகள் என்று தேர்தல் ரிசல்ட் வெளியானதும் த.வெ.க அதிகமாக தலித் வேட்பாளர்களை பொதுத் தொகுதியில் நிறுத்தியதென்று பல இடங்களில் தென்பட்ட செய்தியினை சுட்டிக் காட்டிப் பேசினார் நிருப்ர் ஒருவர். ஐயா நியாயமாரே அது என்ன அதிகாரப்பூர்வ த.வெ.க செய்தியா? இல்லையே. ஆம் இன்றைய ஏ.ஐ. யுகத்தில் இது போல் பல செய்திகளை ஆதரவாளர்களும் எதிரிகளும் பரப்புவர், அதனை மறுக்க வேண்டும் ஆனால் என்னமோ இது ஐ.டி.விங்கே செய்தது போல் பேசுவது திமுக தொண்டன் செய்ய வேண்டிய வேலை, பத்திரிக்கையாளரல்ல. 5 வருடம் அதிகாரப்பூர்வ திமுக செய்திகள், ரீல்ஸ் எதையாவது இந்து பத்திரிக்கை சரி பார்த்திருக்கிறதா? டி.ஆர்.பி ராஜா வெளியிட்ட ரீல்ஸ் ஒன்றில் தமிழகம் டென்மார்க் மாதிரி என்கிறார். பாவம் டென்மார்க்.

த.வெ.க பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்று நிறுவுவதில் இருக்கும் ஆர்வம் ஏன் தலித் வாக்கு வங்கி த.வெ.க-வுக்கு சென்றது? ஏன் திருமா திமுக கூட்டணியில் இருந்தும் தலித் வாக்குகளை விஜய் அறுவடை செய்தார்? என்ற கேட்பதில் ஆர்வமில்லை. திமுக பெற்ற தலித் வாக்குகள் 29.88 %, விஜய் பெற்றது 32.96% (ஆதாரம் ‘தி இந்து’). அவ்வளவு ஏன், பா.ம.க கூட்டணியில் இருக்கும் அதிமுக 31.13%. வெற்றிப்பெற்ற தலித் வேட்பாளர்களில் திமுக கூட்டணி மூன்றாமிடம் (9 சீட்), அதிமுக 13 சீட், த.வெ.க 20 சீட். தலித்துகள் திமுக கூட்டணியை ஒதுக்கி இருக்கிறார்கள். இதற்கான காரணத்தை ஒரு வினாவாகக் கூட வைக்காமல், ரீல்ஸ், இன்ஸ்டா என்று பசப்புகிறார்கள். உண்மையில் இன்ஸ்டாவை விட விஜயை வீடு தோறும் கொண்டு சேர்த்தது கலைஞர் இலவச தொலைக் காட்சியும் சன் டி.வி-யும் தான்.

பாஜக கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மையினர் மொத்தமாக அதிமுக-வை நிராகரிப்பார்கள் என்றும் ஒரு பிழையான புரிதல் இருப்பதையும் சொல்ல வேண்டும். 2021-இல் திமுக இஸ்லாமியர் வாக்குகளை பெருவாரியாக (69%) வென்றாலும் அதிமுக கணிசமான இஸ்லாமிய வாக்குகளை (24%) வென்றது. கிறிஸ்தவர்களின் வாக்குகளில் திமுக 56% பெற்றாலும் அதிமுக அணி 38% பெற்றது (கிறிஸ்தவர்களுக்கு மத ரீதியான உணர்வை விட சாதி ரீதியான ஒருங்கிணைப்பு அதிகம், இதில் தலித்துகளும் அதிகம்). 2026-க்கு இப்படியான புள்ளி விபரம் இன்னும் கிடைக்கவில்லை எனினும் மிகக் கணிசமான சிறுபான்மையினர் வாக்குகளை ஜோசப் விஜய் பெற்றார். (2021 விபரங்களுக்கு ஆதாரம் இந்தியா டுடே)

தெளிவான அரசியல் ஆய்வுகளை மேற்கொள்ள ஒன்றிரண்டு பத்திரிக்கையாளர்களே எஞ்சியிருக்கும் தமிழ் நாட்டில் இந்த “இன்ஸ்டா ரீல்ஸால் ஜெயித்தார்” என்ற குப்பையே அதிகம் கிடைக்கும், அவலம். ஓ, தி பெடரல் போல் இன்னும் ஒன்றிரண்டு பத்திரிக்கைகள், விஜய் அடுத்து கேரளாவை குறி வைக்கிறார் என்கிறார்கள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard