+ விளம்பரம், அரசியல், ஆர்ப்பாட்டமின்றி ஆறு கட்ட அகழ்வாய்வு முடித்து ஏழாம் கட்டத்தினுள் அடியெடுத்து வைக்கும் தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வாளர்கள்
+ வெறும் இரண்டு கட்ட ஆய்வுகளை அரைகுறையாக மேற்கொண்டுவிட்டு வெட்டி அரசியல், விளம்பரம், ஆர்ப்பாட்டம், குதியாட்டம் போடும் அமர்நாத் ராமகிருஷ்ணா !
-- தமிழ் ஊடகம் சிறப்புக் கட்டுரை --
தமிழ்நாட்டில் ஒரு வாய்ப்பு இருக்கிறது. அது, நீங்கள் ஒரு நல்ல சிற்பம் வடிக்கத் தொடங்கி அது தவறுதலாகத் தாறுமாறாக குரங்கு போல வந்துவிட்டால், உடனே "இது தமிழ்நாட்டுக்கு எதிரான பார்ப்பனிய சங்கிகள் சதி" என்று பத்திரிகை, ஊடகம் வாயிலாக முழங்கிவிட்டால் போதும். நீங்கள் செய்த தவறு மறைந்துபோய் "பார்ப்பனிய - சங்க பரிவாரம் Vs திராவிட இயக்கங்கள்" சண்டையாக எளிதில் அது மாறிவிடும். நீங்கள் மேற்கொண்டு ஒரு சிரமமும் பட வேண்டியதில்லை.
இதுகுறித்து உண்மை நிலையை உணர்த்தி எவர் பேசினாலும், எழுதினாலும் அவர்களுக்கும் "பார்ப்பனிய, சங்க பரிவார, சனாதனி" என்று முத்திரை குத்திவிட்டால் இன்னும் காரியம் எளிதாகிவிடும்.
இப்படித்தான், இந்தியத் தொல்லியல் துறையின் அலுவலரான அமர்நாத் ராமகிருஷ்ணா கீழடியை வைத்து தொடக்கத்திலிருந்தே மலிவான அரசியல் செய்து வருகிறார்.
இந்திய அரசை ஆட்சி செய்த, ஆளுகின்ற காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் தமிழ்நாட்டுப் பெருமைகள் உலகம் அறியவேண்டும் என்று ஒருபோதும் எண்ணுவதில்லை. இயன்றவரை அவற்றை மறைக்கவே முயலுவார்கள் என்பது கடந்த கால வரலாறு.
அவ்வளவு ஏன் மார்க்சிஸ்ட் அல்லது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினரே ஒருவேளை இந்தியாவை ஆண்டாலும் இதே நிலைப்பாடுதான் எடுப்பார்கள். காரணம் "இந்தியா எனும் பொறிமுறை (System)" வடிவமைக்கப்பட்டதே இந்த அடிப்படையில்தான்.
இதற்கு எடுத்துக்காட்டாக நாம் பல உண்மைகளைக் காணலாம். பூம்புகார் கடலில் செய்யப்பட்ட ஆய்வு, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட மிக முக்கியமான அகழ்வாய்வு முடிவுகள் - அறிக்கைகள் பல ஆண்டுகள் கழித்தும் இதுவரை இந்தியத் தொல்லியல் துறையினரால் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து தமிழ்நாட்டின் எந்த ஒரு அரசியல்வாதியும், "தொல்லியல் - வரலாற்று ஆய்வாளர்களும்" இலக்கிய எழுத்தாள சிகாமணிகளும் குரல் கூட எழுப்பியதில்லை. இவர்களுக்கு அமர்நாத் ராமகிருஷ்ணாவின் கீழடி அறிக்கை மட்டும் வெளிவந்துவிட்டால் போதுமானது. மற்ற தொல்லியல் இடங்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை.
தமிழ்நாட்டில் சுமார் 169 இடங்களுக்கும் மேலாகத் தொல்லியல் சிறப்பு வாய்ந்த இடங்கள் என்று தமிழ்நாடு தொல்லியல் மற்றும் பூமிக்கு மேலாக ஆய்வு செய்பவர்களால் அடையாளம் காணப்பட்டு தொல்லியல் துறையினரால் சோதனைத் துளைகள் / குழிகள் தோண்டப்பட்டு உறுதி செய்யப்பட்ட தொல்லியல் இடங்கள் இதுவரை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. அப்படியே கிடப்பில் கிடக்கின்றன.
தமிழ்நாடு ஓலைச்சுவடிகள் லட்சக்கணக்கில் சேகரிக்கப்பட்டு அதன் நிலை என்னவென்றே தெரியவில்லை.
தமிழ்நாடு கல்வெட்டுகள் ஏராளமான அளவு உடைக்கப்பட்டு, கல் குவாரிகள், சிமெண்ட் ஆலை குவாரிகளுக்குள் சிக்கி அழிந்து போய்க்கொண்டு இருக்கின்றன.
தமிழர் தொல்லியல் அடையாளங்கள் சுமார் 50 விழுக்காடு அழிந்து போய் விட்டன அல்லது அழிக்கப்பட்டு விட்டன.
தொல்லியல் துறையின் நாகப்பாம்பு என்று அழைக்கப்படும் நாகசாமி என்பவர் அத்தனை தொல்லியல் இடங்களையும் மூடி வைத்துவிட்டார். அதேபோல ஐராவதம் மகாதேவன் எனும் ஆய்வாளர் சிந்துவெளி நாகரிகம் "திராவிட நாகரிகம்" என்று ஒரு உருட்டு உருட்டி அதை சுமார் 40 ஆண்டுகாலம் மேற்கொண்டு ஆய்வுகள் நகராமல் பார்த்துக்கொண்டார்.
ஆக, பிராமணர்கள் ஒருபக்கம் இந்தப் பிறமொழி திராவிடர்கள் ஒருபக்கம் என தமிழர் தொல்லியல் வரலாற்று ஆய்வுகளில் செய்த தில்லாலங்கடிகள் ஏராளம். இது குறித்தெல்லாம் தமிழர்கள் கண்டு கொள்ளாமல் விட்டது இவர்களுக்கு சாதகமாகப் போய்விட்டது.
தமிழ்நாட்டில் கேட்பாரற்றுக் கிடைக்கும் தொல்லியல் இடங்கள், ஏற்கனவே ஆய்வு செய்தும் அறிக்கைகள் வெளியிடப்படாமல் கிடக்கும் தொல்லியல் இடங்கள் என இதற்கெல்லாம் கவலைப்படாத அமர்நாத் ராமகிருஷ்ணாவின் அரசியல் விளம்பரக் குழு, கீழடிக்கு மட்டும் முதலைக் கண்ணீர் வடிக்கிறது. அதிலும், அமர்நாத் ராமகிருஷ்ணா செய்த இரண்டே இரண்டு ஆய்வுகளுக்கு.
இங்கேதான் இவர்களின் மலிவு அரசியல் வெட்ட வெளிச்சமாக வெளி உலகிற்குத் தெரிகிறது.
கடந்த 2013 - 14 ம் ஆண்டுகளில், அப்போது மன்மோகன் சிங் தலைமையான காங்கிரஸ் ஆட்சி.
அப்போதுதான் இந்தியத் தொல்லியல் துறை தமது அலுவலரான அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு ஒரு பணியைத் தருகிறது. அது, தமிழ்நாட்டில் தொல்லியல் உள்ளடக்கம் (Potential) உள்ள இடத்தைத் தேர்வு செய்து அகழ்வாய்வு செய்யுங்கள் என்று.
அப்போது உண்மையில் அமர்நாத் ராமகிருஷ்ணா இதை ஆர்வமாக எடுத்துக்கொண்டு செய்யவில்லை. ஏதோ செய்வோம் என்றுதான் எண்ணினார். ஆனால் அதேவேளை, தமது வீடு உள்ள மதுரைக்குப் பக்கத்தில் ஏதாவது இடம் உள்ளதா என்று பார்ப்போம் என்று எண்ணி அவர் எடுத்த பட்டியல், தமிழ்நாடு தொல்லியல் துறையினரால் Potential Sites அதாவது தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த உள்ளடக்கம் உள்ள இடங்கள் என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட வைகை நதிக்கரையில் உள்ள சுமார் 41 இடங்கள்.
அதில் கீழடியைத் தேர்ந்தெடுக்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணா.
அது இந்தியத் தொல்லியல் துறை அகழ்வாய்வு அலுவலராக இருந்தாலும், அல்லது மாநில அல்லது பல்கலை அகழ்வாய்வு ஆய்வாளராக இருந்தாலும்கூட ஒரு ஆய்வாளருக்கு ஒரு இடத்தை அகழ்வாய்வு செய்ய ஒரு ஆண்டுக்கு மட்டுமே அனுமதி / உரிமம் இந்தியத் தொல்லியல் துறையால் தரப்படும்.
ஒரு ஆண்டு அகழ்வாய்வு முடித்த பிறகு அதற்கான அறிக்கைகளை சமர்ப்பித்த பிறகு மீண்டும் அனுமதி கேட்டால் அடுத்த ஆண்டுக்குத் தரப்படும்.
ஆக, அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு 2014 - 15 ம் ஆண்டுக்கு அதாவது ஒரு ஆண்டுக்கு அனுமதி / உரிமம் இந்தியத் தொல்லியல் துறையினரால் தரப்படுகிறது.
அவரது நல்ல நேரம், அவர் அகழ்வாய்வு செய்த கீழடி இடத்தில் கட்டுமானம் தவிர ஆயிரக்கணக்கான தொல்லியல் பொருட்களும் கிடைக்கின்றன.
அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு தலைகால் புரியவில்லை. உடனே அவற்றை பத்திரிகை ஊடகங்கள் வாயிலாக வெளியிடுகிறார்.
ஒரு தொல்லியல் அகழ்வாய்வு ஆய்வாளர் இவ்வாறு பத்திரிகை ஊடகங்களுக்குத் தகவல், படங்கள் நேரடியாகத் தரக்கூடாது என்பது தொல்லியல் துறையின் விதிமுறைகளில் மிக முக்கியமானது.
ஆனால், அங்கிருந்துதான் தமது "அரசியலைத்" தொடங்குகிறார் அமர்நாத் ராமகிருஷ்ணா.
நான் இப்படி வெளியிடாவிட்டால் இந்தியத் தொல்லியல் துறை வெளியிடாது. எனவே நான் வெளியிட்டேன் என்று அதற்கு நியாயம் கற்பித்தார்.
ஆனால் தொல்லியல் துறை இதனை விதி மீறலாகவே எடுத்துக்கொண்டது. எனினும் முதல் கட்ட ஆய்வு செய்த அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு இரண்டாம் கட்ட ஆய்வு செய்யவும் இந்தியத் தொல்லியல் துறை அனுமதி / உரிமம் கொடுத்தது.
இவர் முதல் கட்ட ஆய்வு செய்யத் தொடங்கியபோது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜக - மோடி ஆட்சி தொடங்கிவிட்டது.
முதல் கட்ட ஆய்வில் சரியான மாதிரிகளை எடுக்கத் தவறிய அமர்நாத் ராமகிருஷ்ணா (இதை அவரே ஊடக நேர்காணல்களில் கூறியிருக்கிறார்) இரண்டாம் கட்ட ஆய்வில் கிடைத்த பொருட்களை கரிமகால சோதனை உள்ளிட்ட ஆய்வக சோதனைகளுக்கு அனுப்புகிறார்.
அதில் அவருக்கு கிடைத்த முடிவு, அவர் அனுப்பிய பொருள் "கிமு.300" ம் ஆண்டைச் சேர்ந்தது என்பது.
நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், அமர்நாத் ராமகிருஷ்ணா இரண்டாம் கட்ட ஆய்வில் எடுத்த பொருளை அனுப்பி ஆய்வக சோதனை செய்தபோது அது கிமு 300 ம் ஆண்டைச் சேர்ந்தது என்று முடிவு வந்தது.
இரண்டு கட்ட ஆய்வுகள் முடிந்த நிலையில் அமர்நாத் ராமகிருஷ்ணா உள்ளிட்ட சுமார் 20 க்கும் மேற்பட்ட இந்தியத் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் பல்வேறு இடங்களுக்கு வழக்கமான பணி இட மாறுதல் செய்யப்படுகிறார்கள். அமர்நாத் ராமகிருஷ்ணா அசாமுக்கு மாற்றப்படுகிறார்.
மீண்டும் நன்கு கவனியுங்கள்....அமர்நாத் ராமகிருஷ்ணா மட்டுமே இட மாறுதல் செய்யப்படவில்லை மொத்தம் 20 க்கும் மேற்பட்ட அலுவலர்கள் இந்தியா முழுமைக்கும் இட மாறுதல்கள் செய்யப்படுகிறார்கள்.
ஆனால், இங்கே வந்து இரண்டு கட்ட ஆய்வுகள் செய்து பத்திரிகை ஊடகங்களில் தமது பெயர், நேர்காணல்களில் - பல்கலை மற்றும் ஆய்வு மேடைகளில் தமது உரை என்று மிகவும் பிரபலம் ஆகிவ "கீழடி நாயகன்" எனும் அளவுக்கு விளம்பரம் கிடைத்தவுடன் அமர்நாத் அடுத்த அரசியலைச் செய்தார். கீழடியை மனதில் வைத்து தாம் மட்டுமே பாஜக அரசால் மாற்றப்பட்டதாக ஒரு பொய்யான பரப்புரை மேற்கொள்கிறர்.
அதாவது....கீழடி எனும் தமிழரின் பெருமையைத் தாம் வெளிக்கொண்டு வந்ததால் ஆத்திரமடைந்த பாஜக அரசு, மேற்கொண்டு தாம் ஆய்வு செய்து ஒட்டுமொத்த கீழடி நாகரிகத்தை வெளிக்கொண்டு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே தம்மை இட மாறுதல் செய்ததாகச் செய்தியைக் கசிய விட்டு, சு.வெங்கடேசன் எனும் அரசியல் வாதியை (அவர் கீழடியை வைத்தே நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவர், கீழடிக்கு முன்னர் அவர் யார் என்றே தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாது) வைத்து பெரிய அளவுக்கு இதனை பத்திரிகை ஊடகங்கள் வாயிலாக அரசியல் விளம்பரம் செய்கிறார்.
நாம் முதல் பத்தியில் சொன்னது போல, தாம் செய்த தவறை மறைக்க, தமக்குக் கிடைத்த இந்த விளம்பரத்தை விட்டுவிடாமல் தக்கவைக்க அமர்நாத் ராமகிருஷ்ணா செய்த மலிவான அரசியல் இது.
இந்த அரசியலைச் செய்ததோடு, தம்மை எப்படியாவது மீண்டும் கீழடிக்கு மறுபடியும் மாற்றவேண்டும் என்று இந்த அரசியலை மிக உக்கிரமாக்குகிறார் அமர்நாத் ராமகிருஷ்ணா. தமக்கும் விளம்பரம் கிடைக்கிறதேயென்று சு.வெங்கடேசனும் குதியாட்டம் போடுகிறார். போதாததற்கு பாலருஷ்ணன் ஐ.ஏ.எஸ் வேறு.
ஆக, இதை திமுகவிடமும் பற்ற வைக்க, என்ன ஏது என்றே தெரியாமல் இந்தியத் தொல்லியல் துறையைச் சேர்ந்த அமர்நாத் ராமகிருஷ்ணா + சு.வெங்கடேசன் செய்த மலிவு அரசியலுக்கு திமுகவுமும் ஒத்து ஊதத் தொடங்குகிறது. முரசொலியில் அமர்நாத் ராமகிருஷ்ணா குறித்து உருக்கமான கட்டுரைகள் எல்லாம் வெளி வருகின்றன. நாடாளுமன்றத்திலும் திமுக எம்பிக்கள் கீழடி அறிக்கை எங்கே...எங்கே என்று குரல் கொடுக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் நடந்தது என்ன....?
இரண்டு கட்ட ஆய்வுகள் முடிந்தவுடன் அசாமுக்கு மாற்றப்பட்ட அமர்நாத் ராமகிருஷ்ணா தாம் செய்த இரண்டு கட்ட ஆய்வுகள் குறித்த அறிக்கையைத் தயாரிக்க மறுக்கிறார். தம்மை மீண்டும் கீழடிக்கு மாற்றம் செய்தால் மட்டுமே அறிக்கை தர முடியும் என்று சிறுபிள்ளைபோல அடம் பிடிக்கிறார். இதற்கு சு.வெங்கடேசன், கனிமொழி, கார்த்தி சிதம்பரம் என்று ஒரு அரசியல் லாபியும் குரல் கொடுக்கிறது.
ஆனால் இந்தியத் தொல்லியல் துறை மிக உறுதியாக இருந்து, கீழடிக்கு மாற்ற முடியாது, வேண்டுமானால் தமிழ்நாட்டில் உள்ள "இந்தியத் தொல்லியல் துறையின் கோயில் ஆய்வுத் துறைக்கு" மாற்றுகிறோம் அங்கே சென்று அமர்ந்து முதலில் கீழடி அறிக்கையை சமர்ப்பி என்று உத்தரவிட்டு அதேபோல Temple Survey துறைக்குத் தமிழ்நாட்டுக்கு அமர்நாத் ராமகிருஷ்ணனை அனுப்பி விடுகிறது.
அதன்பிறகும் தொடர்ந்து பத்திரிகை ஊடகம் வாயிலாகவும், நீதிமன்றம், பொது விவாத மேடை என்று சுற்றி சுற்றி வருகிறாரே தவிர அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை அமர்நாத் ராமகிருஷ்ணா.
அறிக்கை தயாரிப்பது என்றால் அமர்நாத் ராமகிருஷ்ணா மட்டும் அமர்ந்து எழுதுவது அல்ல. அவரோடு ஆய்வில் ஈடுபட்ட அவரது குழுவினரின் பணிகள்தான் இதில் மிக முக்கியம். அவர்கள்தான் எல்லாத் தரவுகளையும் தருவார்கள், அவற்றை ஒன்று சேர்த்து இறுதியாக அறிக்கை தருவார் அமர்நாத் ராமகிருஷ்ணா.
அப்படி இப்படி என்று அரசியல் செய்து இழுத்தடித்து ...2014 முதல் 2016 வரை ஆய்வு செய்த இரண்டு கட்டங்களுக்கான அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணா 982 பக்க அறிக்கையாக இந்தியத் தொல்லியல் துறையிடம் சமர்ப்பிக்க ஆறு ஆண்டுகள் எடுத்துக்கொண்டார். 2023 ம் ஆண்டுதான் சமர்ப்பிக்கிறார்.
இதை மறைத்து, இந்தியத் தொல்லியல் துறை, தமது அறிக்கையை சரி பார்க்க இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டது என்பதை மட்டும் வெளிப்படுத்தி மற்றுமொரு மட்டரகமான அரசியல் விளம்பரம் செய்கிறது அமர்நாத் ராமகிருஷ்ணா அரசியல் விளம்பரக் குழு.
அப்படி சமர்ப்பித்த அறிக்கையிலும் பொடி வைத்து சமர்ப்பிக்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணா.
அது என்ன தெரியுமா... நாம் ஏற்கனவே பார்த்த, "அமர்நாத் ராமகிருஷ்ணா தமது இரண்டாம் கட்ட ஆய்வில் கிடைத்த பொருளை அறிவியல் ஆய்வக சோதனை செய்தபோது கிமு. 300 என்று முடிவு கிடைத்தது" என்று சொன்னோம் அல்லவா....அந்த ஆய்வு முடிவையும் தமது அறிக்கையில் சமர்ப்பித்தவர் தமது ஆய்வில் கீழடி "கிமு 800" ஆண்டு வரை இருக்கலாம் என்று முடிவு செய்துள்ளதாக சமர்ப்பிக்கிறார்.
அதேவேளை, கிமு 800 என்பதற்கான அறிவியல் ஆய்வக சோதனை அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணா சமர்ப்பிக்கவில்லை, மாறாக, கிமு.300 எனும் அறிக்கையை மட்டுமே சமர்ப்பித்துள்ளார்.
எதில் பிடிக்கலாம் என்று காத்திருந்த இந்தியத் தொல்லியல் துறையினர், "கிமு 800 என்று நீங்கள் கூறியுள்ளதற்கான அறிவியல் ஆய்வகச் சான்று எங்கே ?" என்று கேட்கின்றனர். அவ்வாறு அந்த அறிவியல் ஆய்வகச் சான்று இல்லையெனில் நீங்கள் சமர்ப்பித்த கிமு. 300 ஆண்டு என்ற ஆய்வக அறிக்கையையொட்டி உங்கள் அறிக்கையில் திருத்தம் செய்து கொடுங்கள் என்று கேட்கின்றனர். இவ்வளவே.
ஆனால், இதையும் ஊதிப் பெரிதாக்குகிறர் அமர்நாத் ராமகிருஷ்ணா. தாம் சரியான அறிவியல் முறையில் சமர்ப்பித்த அறிக்கையை, வேண்டுமென்றே பாஜக அரசு திருத்தம் செய்யச் சொல்கிறது. கிமு.800 ம் ஆண்டைச் சேர்ந்த கட்டுமானத்தை கிமு.300 என்று திருத்தச் சொல்கிறது. நான் ஒரு திருத்தமும் செய்ய மாட்டேன். சொன்னது சொன்னதுதான் என்று சொல்லியவர் மற்றொரு குட்டிக்கரணம் போட்டார். அது, "ஹரப்பா மொஹஞ்சதோரா" அகழ்வாய்வு செய்தபோது அறிவியல் ஆய்வக கரிம கால சோதனை செய்தார்களா என்ன...இதுபோல இதையும் எடுத்துக்கொள்ளுங்கள்" என்று.
ஆனால், 2015 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு நேர்காணல்களிலும், மேடைப் பேச்சுகளிலும் அமர்நாத் ராமகிருஷ்ணா சொல்லி வருவது, "தாம் மட்டுமே முழுக்க முழுக்க அறிவியல் முறைப்படி கீழடியில் ஆய்வு செய்தேன்" என்பது.
ஆக, அவரே முரண்படுகிறார் அவரது சொற்களில்.
இதிலிருந்து தெள்ளத்தெளிவாக ஒன்று தெரிகிறது, தொடக்கம் முதலே விளம்பர அரசியல் மட்டுமே செய்து வருகிறார் அமர்நாத் ராமகிருஷ்ணா. இதற்கு சு.வெங்கடேசன், பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் போன்ற பக்கவாத்தியங்கள் வேறு.
இதற்கிடையில் அமர்நாத் ராமகிருஷ்ணா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் 3 ம் கட்ட ஆய்வுகள் மேற்கொள்ள ஸ்ரீராமன் என்கிற பாலக்காடு பிராமணர் ஒருவரை கீழடிக்கு அனுப்புகிறது இந்தியத் தொல்லியல் துறை. அந்த நபர் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அகழ்வாய்வு செய்கிறார். அதில் ஒன்றும் பெரிதாகக் கிடைக்கவில்லை என்று மூடிவிட்டு சென்றுவிடுகிறார். இந்த நபர் நாம் ஏற்கனவே குறிப்பிட்ட நாகப்பாம்பு நாகசாமியை விட மோசமானவர்.
இப்படிப்பட்ட நிலையில்தான் வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க, கீழடியில் மேற்கொண்டு ஆய்வுகள் செய்ய இந்தியத் தொல்லியல் துறை தமிழ்நாடு தொல்லியல் துறையினருக்கு அனுமதி கொடுக்கலாமே என்று நீதிமன்றம் பரிந்துரை செய்தது.
இதையடுத்து அப்போதய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு தமிழ்நாடு தொல்லியல் துறையினர் மேற்கொண்டு ஆய்வு செய்யப் பணித்தது.
அதன்படி நான்காம் கட்ட ஆய்வை மேற்கொண்ட தமிழ்நாடு தொல்லியல் துறையினர் கீழடியில் கண்டெடுத்த பொருளை சுமார் ஆறு அறிவியல் ஆய்வகங்களுக்கு சோதனைக்கு அனுப்பியபோது அந்தப் பொருள் கிமு.580 ம் ஆண்டைச் சேர்ந்தது என்று அறியவந்தது.
ஆக....அமர்நாத் ராமகிருஷ்ணா எடுத்த பொருள் கிமு.300 மட்டுமே. அதாவது இன்றிலிருந்தது 2325 ஆண்டுகள் மட்டுமே. ஆனால் 4 ம் கட்ட ஆய்வில் தமிழ்நாடு தொல்லியல் துறை அதிகாரிகள் செய்த சோதனையில் கிமு.580 அதாவது இன்றிலிருந்து 2605 ஆண்டுகள் பழமையானது என்று அறிய வந்தது.
இதையடுத்து, 5, 6, 7, 8, 9, 10 கட்ட ஆய்வுகளை நிறைவு செய்து விட்டது தமிழ்நாடு தொல்லியல் துறை. அடுத்து 11 ம் கட்ட ஆய்வுகளுக்கு இந்திய தொழில் துறை நேற்று (29/12/25) அன்று அனுமதி கொடுத்து இருக்கிறது.
இத்தனைக்கும் கடந்த மூன்று கட்ட ஆய்வுகள் திமுக ஆட்சியில்தான் நடக்கின்றன. இப்போது 11 ம் கட்ட ஆய்வுக்கு பாஜக - இந்தியத் தொல்லியல் துறை அனுமதி கொடுத்ததும் அதே மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில்தான்.....
இதில் எங்கே அமர்நாத் ராமகிருஷ்ணா, சு.வெங்கடேசன் சொன்ன பாஜக Vs தமிழ்நாடு அரசியல் ????
அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு ஆட்சிகளின்போதும் 4 முதல் 11 கட்ட ஆய்வுகள் அதாவது மொத்தம் 8 கட்ட ஆய்வுகளுக்கு இந்திய பாஜக அரசு - தொல்லியல் துறை அனுமதி கொடுத்து இருக்கிறதே....!
மேலும், 7 கட்ட ஆய்வுகள் செய்த தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வாளர்கள் எவரும் அமர்நாத் ராமகிருஷ்ணா போல வெட்டி விளம்பர அரசியல் செய்யவில்லையே....!
ஆக, அமர்நாத் ராமகிருஷ்ணா தொடக்கத்திலிருந்து செய்து வருவது மட்டரகமான, விளம்பர அரசியலா இல்லையா என்பதை இதனை வாசிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
இதைவிட நகைச்சுவை என்ன தெரியுமா...."கீழடி அறிக்கை எங்கே, கீழடி அறிக்கை எங்கே என்று நாடாளுமன்றத்தில் முழங்கும் திமுக எம்பிக்கள் கேட்டுக்கொண்டிருப்பது கிமு. 300 ஆண்டு பழையது எனும் அறிக்கையை. ஆனால் இதே தமிழ்நாடு தொல்லியல் துறை வைத்திருக்கும் ஆய்வு முடிவு கிமு.580 ஆண்டு பழைமையானது என்பது".
இந்தியத் தொல்லியல் துறைதான் அறிக்கை வெளியிடத் தாமதம் செய்கிறது, சாக்குப் போக்கு சொல்கிறது என்றால்...தமிழ்நாடு அரசு வைத்திருக்கும் கிமு.580 எனும் அறிக்கையைத் தமிழ்நாடு அரசு வெளியிடலாமே ?!
எதற்காக இந்திய அரசை எதிர்பார்த்து, மல்லுக்கட்டிக் கொண்டிருக்க வேண்டும் ?!
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், பத்திரிகை ஊடகவியலாளர், ஆசிரியர் : தமிழ் ஊடகம் வார இதழ், நிறுவனர் : தமிழியல் நடுவம் 30/12/25
தமிழர் பத்தி இலக்கியங்களில் உள்ள ஆரியன் எனும் சொல்லும், ஜெர்மனி நாட்டுக்காரன் கூறிய ஆரியர் எனும் தனித் தூய ஒரு இனத்தைக் குறிக்கும் சொல்லும் வேறு வேறு. இரண்டும் ஒரே பொருள் அல்ல.
தமிழில் சிவபுராணத்தில் மணிவாசகப் பெருமான் எனும் மாணிக்க வாசகர் (இவர் பிராமணர் அல்ல) "பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே" என்கிற வரியில் ஆரியனே என்று இறைவரைக் குறிப்பிடுகிறார்.
இங்கே மணிவாசகப் பெருமான் பயன்படுத்திய ஆரியனே எனும் சொல்லுக்கு "உன்னதமான, உயர்வான, பெரியோன், தலைவன், குரு, புலவர் " என்று பல பொருள்கள் உண்டு.
பிராமணன் எனும் சொல் ஒரு சாதியைக் குறிக்கும் சொல் அல்ல.
அந்தணர் எனும் சொல்லும் ஒரு சாதியை குறிக்கும் சொல் அல்ல.
வட வேத வைதீகர்கள் இந்தப் பெயர்களை சாதிப் பெயர்களாக, தனி வைதீக மதத்தின் பெயர்களாக வைத்துக்கொள்ள முயன்றபோது அதை உறுதிப்படுத்தி கூடவே பார்ப்பனர் எனும் சொல்லையும் அவர்களுக்கு சூட்டி ஒருவித அங்கீகாரம் கொடுத்தவர்கள் ஈ.வெ.ராமசாமியும் திராவிட இயக்கத்தவர்களுமே.
மிக மிகக் குறைவான எண்ணிக்கையில் இருந்த வட வேத வைதீகர்களை பிரிட்டிஷ்காரர்களுக்கு அடுத்தபடியாக கூர்மைப்படுத்தி, ஓர்மைப் படுத்தி கொம்பு சீவி விட்டதில் ஈ.வெ.ராமசாமிக்குப் பெரும் பங்கு உண்டு.
உண்மையில் மணிவாசகப் பெருமான் குறிப்பிட்ட ஆரியன் எனும் சொல் ஆரிய - திராவிட என்று கூறப்படும் ஆரிய இனத்தைக் குறிக்கும் சொல் அல்ல. காரணம், ஆரிய இனக் கோட்பாட்டை உலகிற்கு சொல்லி அமல்படுத்திய ஜெர்மனி அதிபர் பிறப்பதற்கு பல நூறு ஆண்டுகள் முன்னர் இயற்றப்பட்டது மணிவாசகப் பெருமானாரின் சிவ புராணம்.
ஜெர்மனியை ஆண்ட அந்த உலகப் "புகழ்" பெற்ற கொடுங்கோல் அதிபர், Lebensborn program - லெபன்ஸ்பார்ன் திட்டம் என்ற ஒரு திட்டத்தை அமல் படுத்தினார்.
இந்தத் திட்டத்தின் நோக்கம் தூய தனித் தன்மை வாய்ந்த உலகின் மிக உயரிய சிறந்த ஒரு இனமாக அவர் கருதிய "ஆரிய" இனக் குழந்தைகளைப் பெற்று எடுப்பது.
இதற்கென லெபன்ஸ்பார்ன் மையங்களை 1935 ம் ஆண்டு ஜெர்மனி முழுதும் அமைத்தார் அந்த அதிபர்.
"Fount of Life" அதாவது "வாழ்க்கையின் நீரூற்று" எனும் பெயரில் சங்கங்களாக இந்த மையங்கள் பதிவு செய்யப்பட்டன. இதன் தலைவராக Heinrich Himmler - ஹெய்ன்ரிச் ஹிம்லர் என்பவர் நியமிக்கப்பட்டார்.
இந்த மையங்களின் வேலை..."தூய, தனித்துவமான, உலகின் மிக உயரிய இனமான "ஆரியக்" குழந்தைகளைப் பெற்று எடுத்து அவர்களை அரசாங்கத்திற்கு அளித்து விடுவது."
ஜெர்மனி அதிபர் "ஆரியர்" எனும் இனமே உலகில் முதன்மையான, சிறந்த, உயரிய இனம் என்று உறுதியாக நம்பினார்.
இந்த ஆரியருக்குக் கீழ்ப்பட்டவர்களே பிற இனத்தவர் என்றும் நம்பினார்.
இது, வட வேத வைதீக மதத்தவர்களின் "பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்" எனும் வர்ணாசிரமப் படி நிலைகளை விட மிக மோசமானது.
இந்த அதிபரின் முடிவுப்படி "ஆரியர்" இனம் மட்டுமே உயர்வானது பிற அனைத்து இனங்களும் கீழானவை, தாழ்வானவை, ஒடுக்கப்படவேண்டியவை.
லெபன்ஸ்பார்ன் திட்டம் என்ன தெரியுமா....?
இந்தத் திட்டத்தின்படி, லெபன்ஸ்பார்ன் குழந்தை பிறக்கும் மையங்களில் தூய தனித்துவமான "நீல நிறக் கண்கள், பழுப்பு நிற முடி, சிவப்பும் - வெண்மையும் கலந்த தோல் நிறம்" கொண்ட தூய ஆரிய ஆண்கள் இருப்பார்கள்.
நாட்டில் உள்ள பெண்கள் குறிப்பாக ஜெர்மனி அதிபரின் ஆரியக் குழந்தை திட்டத்திற்காக தியாகம் செய்ய விரும்புவோர் இந்த மையங்களுக்கு செல்வார்கள், அதிபரே வாழ்க என்று கூறிக்கொண்டே.
அந்தப் பெண்கள் அந்த மையங்களில் உள்ள தூய ஆரிய ஆண்களில் தங்களுக்குப் பிடித்தமானவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
அந்த ஆணோடு உறவு கொண்டு கருத் தரித்து "தூய ஆரியக்" குழந்தையைப் பெற்று எடுத்து அந்தக் குழந்தையை அந்த மையத்திலேயே விட்டுவிட்டு வந்து விட வேண்டும்.
இதுதான் அந்தப் பெண்கள் செய்யவேண்டிய ஜெர்மனி நாட்டுக்கான சேவை !
இதுதான் லெபன்ஸ்பார்ன் திட்டம்.
இரண்டாம் உலகப் போரின்போது பல போலந்து இனத்தினர் கடத்தப்பட்டு "தூய ஆரிய ஜெர்மானியர்களாக" மாற்றப்பட்டனர்.
இந்தத் திட்டத்தின் அடிப்படையில் ஜெர்மனியில் மட்டும் சுமார், 8,000 முதல் 12,000 தூய ஆரியக் குழந்தைகள் பெற்றெடுக்கப்பட்டன. நார்வேயில் 6,000 முதல் 10,000 குழந்தைகள் பெற்றெடுக்கப் பட்டன.
முன்னதாக 1700 ம் ஆண்டுகளிலேயே இந்தியாவின் மொழி சமஸ்கிருதம், சம்ஸ்கிருத வேதங்களே இந்தியாவின் வேதம் என்று பிரிட்டிஷ்காரர்கள் மத்தியில் ஆழப் பதிய வைக்கப்பட்டுவிட்டது இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்த வைதீகர்களால் ( பிராமணர்கள் என்று அழைக்கப்படும் வட வேத வைதீகர்கள்).
காரணம், அன்று சிவந்த தோலுடன், ஆங்கிலம் கற்று பிரிட்டிஷ்காரர்களுக்கு நெருக்கமாக இருந்து அவர்களுக்கு அப்போதைய இந்திய நிலப்பரப்பு குறித்துத் தவறான தகவல்களை குறிப்பாக தங்களின் வேதமே உயர்வானது... சமஸ்கிருதம்தான் இந்திய நிலப்பரப்பின் அதிகாரப் பூர்வ மொழி... தாங்களே இந்திய நிலப்பரப்பின் உயரிய அறிவாளிகள் என்று பதிய வைத்தவர்கள் இந்த வைதீகர்கள் (பிராமணர்கள்).
இந்த நிலையில்தான் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1783 ம் ஆண்டு கொல்கத்தாவின் உயர்நீதி மன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார் சர் வில்லியம் ஜோன்ஸ்.
இவர்தான் 1784 ம் ஆண்டு Asiatic Society - ஆசியக் கழகம் என்ற ஒரு அமைப்பை நிறுவுகிறார்.
இவர்தான், "மனு ஸ்மிருதியை" இந்தியாவின் சட்ட நூலாக முன் நிறுத்துகிறார். (இதற்கு காரணம் இவருக்கு இந்திய நிலப்பரப்பு குறித்து அறியவும், ஆராயவும் சம்ஸ்கிருதம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு தவறான புரிதல் இருந்ததால், அதனை சரிவர பயன்படுத்திக் கொண்டனர் சம்ஸ்கிருத வட வேத வைதீகர்கள்.)
இன்றும் வெளி நாட்டில் இருந்து வரும் வெள்ளைக்காரர்கள், இங்கே சற்று வெள்ளைத் தோலுடன், ஆங்கிலம் நன்கு பேசக்கூடிய வைதீகர்களுடன் உடனே நெருங்கிப் பேசுவதைக் காணலாம்.
கடந்த 1700 ம் ஆண்டுகளில் இருந்தே சமஸ்கிருதம் கற்றுக்கொண்டால்தான் இந்தியாவில் குப்பை கொட்ட முடியும் என்பதாக வைதீகர்கள் செய்த பரப்புரை இந்தியாவில் பணி புரிய வரும் ஒவ்வொரு வெள்ளைக்கார அதிகாரிகள் மத்தியிலும் பரவ, லண்டனில் பல்கலைக் கழகங்களில் சம்ஸ்கிருதம் பயிற்றுவிக்கப்பட்டது.
இதுதான் பிரிட்டிஷ் வெள்ளைக்காரர்கள் முதன் முதலில் ஏமாந்த இடம்.
இந்திய நிலப்பரப்பில் சுமார் 30 க்கும் மேற்பட்ட மொழி வழி தேசிய இன மக்கள் வாழ்கிறார்கள் என்பதே பிரிட்டிஷ் வெள்ளைக்காரர்களுக்கு மிகப்'பிந்திய காலத்தில்தான் புரிந்தது.
இதற்கிடையில் மாக்ஸ் முல்லர் என்பவர் - இவர் ஜெர்மானியர். இந்தியாவுக்கு இவர் வந்ததும் இல்லை.
ஆனால் இந்த மாக்ஸ் முல்லர் எனும் "அறிவாளி" லண்டன் சம்ஸ்கிருதப் படிப்பை படித்துக்கொண்டு "ரிக்" வேதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அதனை நூலாக வெளியிட....."ஆகா ஓகோ இந்தியாவின் வேதம் இவ்வளவு அறிவார்ந்ததா" என்று பெருமைப் பட ஆரம்பித்து விட்டனர் பிரிட்டிஷ் வெள்ளைக்காரர்கள்.
ஆக....இந்த இடத்தில்தான் வட வேத வைதீகர்கள் பிரிடிஷ்காரர்கள் மத்தியில் இந்திய நிலப்பரப்பின் மொழி சமஸ்கிருதம், இந்திய நிலப்பரப்பின் வேதங்கள் - சட்ட திட்டங்கள் மனு ஸ்மிருதியும், ரிக் வேதமும் என்று பதிய வைத்ததில் பெரும் வெற்றி கண்டார்கள்.
இதன் பிறகு பிரிட்டிஷ்காரர்கள் சர் வில்லியம் ஜோன்ஸ், மாக்ஸ் முல்லர் ஆகியோர் அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலக அங்கீகாரம் பெற்றுக் கொடுத்து விட்டனர்.
ஒரு கட்டத்தில் "வைதீகர்களே (பிராமணர்கள்)" இந்தியாவின் ஆரியர்கள்" என்றே ஜெர்மானியர் மாக்ஸ் முல்லர் உணர்ச்சி வசப்பட்டுப் பேசி, பிறகு உண்மை அறிந்து தாம் தவறாகப் புரிந்து கொண்டதாக வருத்தம் தெரிவித்தார்.
ஆக, இந்த வட வேத வைதீக (பிராமணர்கள் / பார்ப்பனர்கள்) செய்த பொய்ப் பரப்புரையை நம்பியே பிரிடிஷ்காரர்கள் குறிப்பாக ஐரோப்பியர்கள் இந்திய நிலப்பரப்பு குறித்து மிகத் தவறான புரிதல்களை முதலில் கொண்டிருந்தனர்.
மேலும், இவர்களே இந்தோ - ஆரிய மொழிக்குடும்பம் என்று இந்தோ - ஐரோப்பிய மொழிக்குடும்பம் என்று சமஸ்க்ருதத்தை மையமாகக் கொண்டு மொழிக்குடும்பம் என்று பெயரிட்டனர்.
இந்த ஐரோப்பியர்களின் ஒருவரான, தெற்கில் வேலை செய்ய வந்த இராபர்ட் கால்டுவெல், இந்த சர் வில்லியம் ஜோன்ஸ், மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் உருவாக்கிய சமஸ்க்ருத மொழியை அடிப்படையாகக் கொண்ட இந்தோ - ஆரிய - ஐரோப்பிய மொழிக்குடும்பம் என்பதில் இருந்து வேறுபட்ட தனித்துவமான "தென்னிந்திய தனி மொழிக்குடும்பம்" என்று தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாள, துளு உள்ளிட்ட மொழிகளைப் பிரித்து அறிவித்தார்.
ஆக, ஆரியம் - திராவிடம் எனும் இரண்டு சொற்களும், பிரிவுகளும் ஐரோப்பியர்கள் அரைகுறையாக ஆய்வுகள் செய்து சூட்டிய பெயர்கள், பிரித்த மொழிக் குடும்பங்கள்.
இரண்டுமே ஐரோப்பியர்கள் பெற்றுப் போட்ட குழந்தைகள்.
இராபர்ட் கால்டு வெல் செய்தது, சர் வில்லியம் ஜோன்ஸ், மாக்ஸ் முல்லர் ஆகியோர் உருவாக்கிய ஒட்டுமொத்த இந்திய நிலப்பரப்பும் சமஸ்கிருதத்தைத் தாய் மொழியாகக் கொண்ட மொழிகள் பேசும் நிலப்பரப்பு என்பதை உடைத்து தென்னிந்திய மொழிகள் இந்த சம்ஸ்கிருத மொழிக்குடும்பம் என்று அவர்கள் பரப்பிய மொழிக்குடும்பத்திற்குத் தொடர்பில்லாத மொழிகள் என்றும், அதிலும் தமிழ் மொழி, தெலுங்கு, கன்னடம்,மலையாளம் போல் இல்லாமல் "தமிழ் மொழியில் உள்ள பிற மொழிச் சொற்கள் அனைத்தையும் எடுத்துவிட்டாலும் தனித்து இயங்க வல்ல மொழி தமிழ் " என்றும் உறுதிப்படுத்தினார்.
ஆனால் வட வேத வைதீகர்களை விட மிக மோசமான ஈ.வெ.ராமசாமி மற்றும் பிற மொழித் திராவிடர்கள் இந்த உண்மையை மறைத்து "திராவிடம்" எனும் சொல்லை இல்லாத ஆரிய இனத்துக்கு எதிரானதாகக் கட்டமைத்து தமிழர்களும் "திராவிடர்கள்" என்று பொய்யாகக் கட்டமைக்க அதை நம்பி ஏமாந்து போனார்கள் தமிழர்கள்.
திராவிடம் எனும் சொல் சம்ஸ்கிருத சொல், அது "தென்னிந்தியா" என்ற தமிழ் சொல்லுக்கான சமஸ்கிருதப் பெயர் என்று இராபர்ட் கால்டு வெல் தெளிவாகக் கூறிய பிறகும், திராவிடமும் தமிழும் ஒன்று, திராவிடம் எனது ஒரு இனம் என்றெல்லாம் சுமார் 60 ஆண்டுகளாகப் பொய்ப் பரப்புரை செய்து, தமிழர்களை ஏய்த்துப் பிழைத்து வரும் "திராவிடம்" மிக நுட்பமான, நய வஞ்சக நச்சுத் திட்டம்.
தமிழர்களே நீங்கள் தமிழர்கள் மட்டுமே., வேறு எந்த ஒரு இனமும் அல்ல. புரிந்து தெளிந்து தமிழர்களாய் ஒன்று சேர்ந்து செயல்படுங்கள். இல்லையெனில் இன்னும் சில காலத்தில் தமிழர் என்ற ஒரு இனம் இருந்ததற்கான அத்தனை அடையாளங்களையும் இந்தப் பிற மொழி திராவிடக் கூட்டம் முற்றாக அழித்துவிடும்.
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், பத்திரிகை ஊடகவியலாளர், ஆசிரியர் : தமிழ் ஊடகம் வார இதழ், நிறுவனர் : தமிழியல் நடுவம் 28/12/25