தாது மணல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் - உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - ORE SAND CASE
சட்டவிரோதமாக கடற்கரை தாது மணலை எடுத்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்தது தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் கோப்புப்படம் (ETV Bharat Tamilnadu)
சென்னை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷிஸ் குமார், தனியார் நிறுவனங்கள் உரிய அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக கடற்கரை தாது மணலை எடுப்பதாக தலைமை செயலாளருக்கு புகார் அளித்தார். அதனடிப்படையில், கடற்கரை மணலில் இருந்து சட்ட விரோதமாக இல்மனைட், ரூட்டைல்ஸ், சிர்கோன், மோனோசைட் உள்ளிட்ட கனிம வளங்களை எடுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாக்குமரி மாவட்டங்களில் கடந்த 2013ம் ஆண்டு தமிழ்நாடு அரசு தடை விதித்தது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில், ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு, சட்டவிரோதமாக மணல் எடுக்கப்பட்டதால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை அளித்தார். அறிக்கையை ஏற்ற பின் மாநிலம் முழுவதும் கடற்கரை மணலை எடுப்பதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது.
இந்நிலையில், சட்டவிரோதமாக கடற்கரை தாது மணல் எடுத்ததால் அரசுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, தனியார் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தஞ்சாவூரை சேர்ந்த விக்டர் ராஜமாணிக்கம் என்பவர் 2015-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை பின்பு சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
இதனிடையே, கடந்த 2017-ம் ஆண்டு சத்யப்ரதா சாஹூ ஐ.ஏ.எஸ் தலைமையில் மீண்டும் ஒருநபர் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அவரது விசாரணையில் 1.5 கோடி டன் தாது மணல் தனியார் குடோன்களில் பதுக்கி வைத்திருப்பதாக அறிக்கை அளித்தார். தொடர்ந்து, மறு மதிப்பீட்டு செய்ய தமிழ்நாடு அரசு அமைத்த 3-வது குழு அளித்த அறிக்கையில், கனிம வளிங்களை எடுக்க அரசு தடை விதித்த நிலையில் 2018 முதல் 2021 வரை சுமார் 16 லட்சம் டன் கனிம வளங்களை தனியார் நிறுவனங்கள் அரசு அதிகாரிகள் உதவியுடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருப்பதாக அறிக்கை அளித்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞர் ஆணையர் வி.சுரேஷ் விசாரணை அறிக்கையில், சுமார் 1.50 கோடி டன் கனிம வளங்களை சட்டவிரோதமாக எடுத்ததால் அரசுக்கு 5,832 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது.
இதையடுத்து, வழக்கறிஞர் ஆணையர் அறிக்கையின் படி சட்டவிரோதமாக கனிமவளங்களை எடுத்த தனியார் நிறுவனங்களிடம் இருந்து 5,832 கோடி ரூபாயை வசூலிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸை எதிர்த்தும், தடையை நீக்க உத்தரவிடக் கோரியும் தனியார் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் எஸ்.எம் சுப்ரமணியம், எம். ஜோதிராமன் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. அப்போது நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், "சிலர் செய்யும் சிறு தவறுகள் சமுதாயத்தை புற்றுநோய் போல அரித்துவிடும். அதை நீதிமன்றம் அனுமதிக்க முடியாது" என கூறி தீர்ப்பை வாசித்தனர். அதில், "தமிழ்நாடு அரசு அமைத்த ககன்தீப் சிங் பேடியின் குழு அளித்த அறிக்கையை நீதிமன்றம் முழுமையாக ஏற்றுக் கொள்கிறது. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையர் அளித்த அறிக்கையின் படி, ரூ.5,832 கோடியை தனியார் நிறுவனங்களிடம் இருந்து மீட்க வேண்டும் என்பதை நீதிமன்றம் முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. தாது மணல் கொள்ளையால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை தனியார் நிறுவனங்களுடம் இருந்து தமிழ்நாடு அரசு வசூலிக்கலாம். அரசு தடை விதித்திருக்கும் போது தாதுமணல் எப்படி எடுத்துச் செல்லப்பட்டது? என விசாரணை நடத்தி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தீர்ப்பளித்தனர்.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியும் உத்தரவிட்டனர். மேலும், "தமிழ்நாடு அரசு இதுவரை நடைபெற்ற விசாரணை அறிக்கைகளை சிபிஐ-யிடம் 4 வாரத்தில் ஒப்படைக்க வேண்டும். தனியார் நிறுவனங்களின் குடோன்களுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
தாது மணல் கொள்ளையில் தொடர்பாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான தொடர்பு குறித்தும் சிபிஐ விசாரணை செய்ய வேண்டும். தாது மணல் கொள்ளை தொடர்பாக நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் யாராவது செயல்படுவது தெரிந்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம்" என நீதிபதிகள் எஸ்.எம் சுப்ரமணியம், எம். ஜோதிராமன் அமர்வு தீர்ப்பளித்தது.
சென்னை: சட்டவிரோதமாக தாதுமணல் எடுத்து அரசுக்கு ரூ.5832 கோடி இழப்பு ஏற்படுத்தியது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தென் தமிழகத்தில் கடற்கரைகளில் சட்ட விரோதமாக தாதுமணல் எடுத்து வருவதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக விக்டர் ராஜமாணிக்கம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்ட கடலோரப் பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தாது மணல் சட்டவிரோதமாக எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கை கடந்த 2015ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் தமிழ்நாடு தொழில்துறை செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தாது மணல் எடுப்பதற்காக, வி.வி.மினரல்ஸ், டிரான்ஸ் வேல்டு கார்னெட் நிறுவனம் உட்பட 7 நிறுவனங்களுக்கு, திருநெல்வேலி மாவட்டத்தில் 52 உரிமங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் 6, கன்னியாகுமரியில் 6 என மொத்தம் 64 உரிமங்கள் வழங்கப்பட்டு உள்ளது. சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து தாது மணல் எடுப்பதற்கும் கொண்டு செல்வதற்கும் 2013ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
தடை விதிக்கும் முன்பும், தடை விதித்த பிறகும், சட்டவிரோதமாக தாது மணல் எடுத்ததால் ஏற்பட்ட 5,832 கோடியே 44 லட்சம் ரூபாய் இழப்பை, தனியார் தாது மணல் ஏற்றுமதியாளர்களிடமிருந்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தனியார் நிறுவனங்கள் வசம் உள்ள ஒரு கோடியே 55 லட்சம் டன் தாது மணலை பறிமுதல் செய்து மத்திய அரசிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு மீண்டும் ஆய்வு செய்ததில் 2018 முதல் 2022 ஆண்டு வரை இடையேயான ஆண்டுகளில் மட்டும் சுமார் 16 லட்சம் டன் அளவிலான தாது மணல் சட்ட விரோதமாக கடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
சுமார் 6,449 டன் அளவிலான மோனோசைட் என்ற கனிமங்களும் கடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது என்று கூறப்பட்டிருந்தது. மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், அணுசக்திக்கு தேவையான மோனோசைட் தாது என்பது மிக முக்கியமான தாதுவாக இருப்பதால் அதை பிரித்தெடுக்க மத்திய அரசு யாருக்கும் அனுமதி அளிப்பதில்லை. மோனோசைட் தாது பிரித்து எடுப்பதற்காக எந்த ஒரு புதிய கொள்கைகளையையும் மத்திய அரசு வகுக்கவில்லை என்று கூறப்பட்டிருந்தது. நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சுரேஷ், கார்னெட், இலுமினைட் உள்ளிட்ட தாதுமணல் எடுக்கப்பட்டு தூத்துக்குடி துறைமுகம் வழியாக சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அரசுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வு தீர்ப்பளித்தது. தீர்ப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி கடற்கரைகளில் சட்டவிரோதமாக தாதுமணல் எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிறகும் தாதுமணல் எடுக்கப்பட்டதாக அறிக்கைகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட மாபியாக்கள் மீது அதிகாரிகள் எப்படி நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளார்கள் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு கனிம வளத்துறை பொறுப்பேற்க வேண்டும். அதிகாரிகள் இந்த முறைகேடு குறித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வெறும் பார்வையாளர்களாக இருந்துள்ளனர். இது அரசின் செயல்பாடுகள் மீது மக்களுக்க உள்ள நம்பிக்கையை சீர்குலைத்துவிடும். சம்மந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் நடந்திருக்காது. இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் மீது மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் கலெக்டர்கள் மீது வழக்கு பதிவு ெசய்யப்பட வேண்டும்.
சட்டவிரோதமாக தாது மணல் இருப்பு வைக்கப்பட்டதும், கடத்தப்பட்டதும் உறுதி செய்யப்படுகிறது. தனியார் நிறுவனங்களுக்கு அரசால் விதிக்கப்பட்ட அபராதம் அது தொடர்பான உத்தரவு செல்லும். தாதுமணல் தொடர்பாக ககன் தீப் சிங் போடி, சத்தியபிரதா சாஹு, நீதிமன்றம் நியமித்த அதிகாரி சுரேஷ் ஆகியோரின் அறிக்கைகள் செல்லும். சட்டவிரோதமாக எடுக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ள தாதுமணலை உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். தாது மணல் சட்டவிரோதமாக கோடிக்கணக்கான மதிப்பில் எடுத்துள்ளது நிரூபணமாகியுள்ளது. இந்த முறைகேட்டில் அதிகாரிகள் சம்மந்தப்பட்டு அரசுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுதியுள்ளது தெரியவந்துள்ளது.
தாது மணல் கொள்ளை மூலம் மாநில அரசுக்கு ரூ.5,832 கோடியே 44 லட்சத்து 23,835 இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த இழப்பை குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்பட்டு கிடங்குகளில் சேகரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை அரசு ஊழியர்கள்வரை உடந்தையாக இருந்துள்ளனர். இந்த முறைகேட்டில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீதான விசாரணை ஒதுக்கிவைத்துவிட முடியாது. நிறுவனங்களுக்கு குறைவான ராய்ல்டி தொகை நிர்ணயிக்கப்பட்டு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் அரசு அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும். சட்டவிரோத மணல் கொள்ளை தொடர்பாக புகார் அளிப்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். ராயல்டி தொகை தொடர்பான முறைகேட்டில் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மட்டுமல்லாமல் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அரசில் தலையீடு இருக்கும் என்பதால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்கிறோம். மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தை சீரழிக்கும் வகையில் அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசு அமலாக்கத்துறை, வருமானவரி துறை, சுங்கத்துறை, வணிகவரித்துறை ஆகிய துறைககள் மூலம் விசாரணை நடத்த வேண்டும். இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது மத்திய, மாநில அரசுகள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிபிஐயிடம் மாநில போலீசார் நான்கு வாரங்களில் வழக்கின் ஆவணங்களை வழங்க வேண்டும். சிபிஐ இயக்குநர் சிறப்பு விசாரணை குழுவை ஏற்படுத்தி விசாரணை நடத்த வேண்டும். சிபிஐ இயக்குநர் விசாரணையை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
*சட்டவிரோத மாபியாக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. * தனியார் நிறுவனங்களுக்கு அரசால் விதிக்கப்பட்ட அபராதம், அது தொடர்பான உத்தரவு செல்லும். * தாது மணல் கொள்ளை மூலம் மாநில அரசுக்கு ரூ.5,832 கோடியே 44 லட்சத்து 23,835 இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.