New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கலைஞரின் டாஸ்மாக் கொள்ளை..!


Guru

Status: Offline
Posts: 24778
Date:
கலைஞரின் டாஸ்மாக் கொள்ளை..!
Permalink  
 


 

கலைஞரின் டாஸ்மாக் கொள்ளை..!

 

 

19-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

டாஸ்மாக் கடைகளின் மூலம் தமிழக மக்களிடமிருந்து சுரண்டப்படும் தொகையை வைத்துத்தான் தமிழக அரசு பல இலவசத் திட்டங்களை வாரி வழங்கி வருகிறது..! ஒரு பக்கம் நம்மை பிச்சைக்காரனைப் போல வெளியில் காட்டிக் கொண்டு இன்னொரு பக்கம், இந்தியாவிலேயே பெரும் குடிகாரர்கள் தமிழகத்து மக்கள்தான் என்பதையும் சொல்லாமல் சொல்லி வருகிறது. வருடாவருடம் தமிழ்நாட்டில் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாயே இதற்குச் சாட்சி..!

இதற்கிடையில் மதுபான கடைகளுக்கு சப்ளை செய்யும் பிராண்டுகளைத் தயாரிக்கும் மதுபான ஆலைகள் அமைக்க முதல்வர் கருணாநிதி தனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருப்பதும் தெரிகிறது.

தமிழகத்தில் இருக்கும் மதுபான ஆலைகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் பற்றி சென்ற வார ஜூனியர்விகடனில் வெளி வந்த இந்தக் கட்டுரை வெகு சுவாரசியமானது. எத்தனை, எத்தனை இடங்களிலெல்லாம் இந்த அரசுகள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் வளைந்து கொடுக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.. படித்துப் பாருங்கள்.

''விரைவில் மதுவிலக்கு கொண்டு வரலாமா என்பதைப் பற்றி யோசித்து வருகிறோம்...'' என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டே, ஆண்டுக்கு 14 ஆயிரம் கோடிக்கு மது வகைகளை விற்று சாதனை படைத்திருக்கிறது தி.மு.க. அரசு.

''ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்துக்கொண்டே, ஏழையின் பாக்கெட்டிலிருந்து நோட்டுகளை உருவும் 'டாஸ்மாக்' தந்திரம் ஒரு வேதனை என்றால்... மதுபான கம்பெனிகளுக்கு அனுமதி கொடுத்த பின்னணி 'ஃபுல்'லான இன்னொரு வேதனை!'' என்கிறார்கள் மெதுவாகப் பேச ஆரம்பித்திருக்கும் கோட்டை நடுநிலை அதிகாரிகள்.

தமிழ் நாட்டில் மது வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனத்துக்கு   'தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்’ என்று பெயர். Tamil Nadu State Marketing Corporationஎன்பதைத்தான் சுருக்கி TASMAC என்கிறார்கள். மது வகைகளின் மொத்த விற்பனைக்காக 1983-ம் ஆண்டு, எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.

விஸ்கி, பிராந்தி, ரம், வோட்கா, ஒயின் மற்றும் பீர் போன்ற இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மது வகைகளைத் தயாரிக்க பாலாஜி டிஸ்டிலரீஸ், எம்.பி. டிஸ்டிலரீஸ், மோகன் புரூவரீஸ் அண்டு டிஸ்டிலரீஸ், சிவாஸ் டிஸ்டிலரீஸ், சாபில் டிஸ்டிலரீஸ் ஆகிய ஐந்து நிறுவனங்களுக்குத்தான் ஆரம்பத்தில் அனுமதி கொடுத்​தார்கள். வளம் கொழிக்கும் இந்த வர்த்தகத்துக்குள் தொடர்ச்சியாகப் பல நிறுவனங்கள் வந்தால், வருமானம் பாதிக்கலாம் என்பதால் புதிய லைசென்ஸ் யாருக்கும் தர வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது தனிக்கதை.

இதை உடைத்து கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கோல்டன் மிடாஸ் நிறுவனத்துக்கு அனுமதி தரப்பட்டது. ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் ஆசி பெற்ற மனிதர்களால் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. அதுவரை மது விற்பனையை தனியாருக்கு ஏலம்விட்டு வந்த முறையை மாற்றி, டாஸ்மாக் மூலமே 'ஒயின்ஷாப்'கள் நடத்தி விற்பனை செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா முடிவெடுத்தார். 2003-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி எடுக்கப்பட்ட இந்த முடிவை, கருணாநிதி மீண்டும் முதல்வராக வரும்வரை கண்டித்துக் கொண்டே இருந்தார். ''அரசாங்கம் மதுக் கடைகளை நடத்துவதா?'' என்று கேள்வி கேட்டார்.

ஆட்சிக்கு வந்தவுடன்தான் சுருதி மாறுமே..! டாஸ்மாக் மூலமாகக் கிடைத்த வருமானத்தைப் பார்த்த கருணாநிதி, ஜெயலலிதாவின் வழியையே தானும் பின்பற்றி விற்பனையைத் தொடர்ந்தார். இரண்டு ஆட்சியிலும் ஆண்டுவாரியாகக் கிடைத்த வருமானம்:

2003-04 - 3,639 கோடி, 2004-05 - 4,872 கோடி, 2005-06 - 6,030 கோடி, 2006-07 - 7,473 கோடி, 2007-08 - 8,821 கோடி, 2008-09 - 10,601 கோடி, 2009-10 - 12,491 கோடி.

அதாவது, 1983-ம் ஆண்டு வெறும் 183 கோடியாக இருந்த மது விற்பனை, இன்றைக்கு ஏறத்தாழ 15 ஆயிரம் கோடியைத் தொட்டிருக்கிறது. பணவீக்கம், விலை ஏற்றம் ஆகியவற்றைக் கழித்துவிட்டுப் பார்த்தாலும்... தமிழ்க் குடும்பங்களில் அரசாங்க மதுபானம் எப்படி வெள்ளமாக ஓடுகிறது என்பது புரியும்!

''நோகாமல் கோடிகளைக் குவிக்கும் இந்த வர்த்தகத்துக்குள் புதிய மனிதர்கள் பலர் உள்ளே நுழைந்து இருப்பதும், அவர்கள் தி.மு.க. சார்பானவர்களாக, அதுவும் முதல்வர் குடும்பத்துக்கு நெருக்கமானவர்களாக இருப்பதும்தான் கடந்த ஐந்தாண்டுகளில் சத்தமில்லாமல் நடந்திருக்கும் மற்றொரு சாதனை!'' என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள்.

மாகுன்ட சுப்புராமி ரெட்டியின் சகோதரர் சீனிவாச ரெட்டிக்கு சொந்தமானது பாலாஜி டிஸ்டிலரீஸ். எம்.பி. டிஸ்டிலரீஸ் உரிமையாளர் எம்.புருஷோத்தமன். ராமசாமி உடையார் குரூப், மோகன் புரூவரீஸ் நடத்தியது. பண்ணாரி அம்மன் சுகர்ஸ் பாலசுப்பிரமணியத்துக்குச் சொந்தமானது சிவாஸ். சாபில் டிஸ்டிலரீஸ் நிறுவனத்தை ஏ.சி.முத்தையா தொடங்கி இன்று எம்.ஜி.முத்து நடத்தி வருகிறார்.

2006-ம் ஆண்டு கருணாநிதி முதல்வராவதற்கு முன்புவரை ஆறு டிஸ்டிலரீஸ்  நிறுவனங்கள்தான் இருந்தன. இன்று அதன் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்திருக்கிறது. முன்பு நான்கு புரூவரீஸ்  இருந்தன.  அதன் எண்ணிக்கை இப்போது எட்டாக உயர்ந்துள்ளது. (பிராந்தி, விஸ்கி, ரம், ஒயின் போன்றவற்றை தயாரிக்கும் கம்பெனிகள் டிஸ்டிலரீஸ் என்றும் பீர் தயாரிக்கும் நிறுவனங்கள் புரூவரீஸ் என்றும் அழைக்கப்படும்)

புதிய உரிமம் பெற்றிருக்கும் டிஸ்டிலரீஸ்:

1. எஸ்.என்.ஜே. டிஸ்டிலரீஸ்.

2. கால்ஸ் டிஸ்டிலரீஸ்

3. எலைட் டிஸ்டிலரீஸ்

4. இம்பீரியல் ஸ்பிரிட்ஸ் அண்ட் ஒயின் பிரைவேட் லிமிடெட்

5. கிங் டிஸ்டிலரீஸ்

புதிய உரிமம் பெற்றிருக்கும் புரூவரீஸ் :

1. எஸ்.என்.ஜே. புரூவரீஸ்

2. எலைட் புரூவரீஸ்

3. எம்.பி. புரூவரீஸ்

4. டிராபிக்கல் புரூவரீஸ்.

இந்த கம்பெனிகளுக்குள் 'மிக்ஸிங்' ஆகியுள்ள முகங்கள் யார் யார்?

1. எஸ்.என்.ஜே. டிஸ்டிலரீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் இயக்குநர்களாக ஜெயமுருகன், கீதா ஆகிய இருவர் இருக்கிறார்கள். தமிழக முதல்வர் கருணாநிதியின் கதை - வசனத்தில் உருவான 'உளியின் ஓசை,’ 'பெண் சிங்கம்’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர்தான் இந்த ஜெயமுருகன்.

2. எலைட் டிஸ்டிலரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தி.மு.க. மத்திய அமைச்சர்களில் ஒருவரான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானது. இதன் மேலாண்மை இயக்குநராக ஜெகத்ரட்சகன் சந்தீப் ஆனந்த் என்பவரும், இயக்குநர்களாக ஜெகத்ரட்சகனின் மனைவி அனுசூயாவும், மகன் இளமாறனும் இருக்கிறார்கள்.

3. டிராபிக்கல் புரூவரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களாக ரேணுகா குமார், சரத்குமார், பிரசன்னா நடராஜன் ஆகிய மூன்று பேர் இருக்கிறார்கள். சரத்குமார் வேறு யாருமில்லை... கலைஞர் டி.வி-யில் 20 சதவிகித பங்குகளை வைத்திருக்கும், அதன் நிர்வாக இயக்குநர். அதன் நிர்வாகப் பொறுப்புகளை முழுமையாக கவனித்து வருபவர்.

2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் பெருமளவு பணத்தை லஞ்சமாகக் கொடுத்ததாகக் கைது செய்யப்பட்டிருக்கும் மும்பை ஷாகித் பால்வாவிடம் 200 கோடிக்கும் மேலாக 'கலைஞர் டி.வி.'-க்குப் பெற்ற சர்ச்சையில் சி.பி.ஐ-யின் கண்காணிப்பில் இருப்பவர் இந்த சரத்குமார்.

4. கால்ஸ் டிஸ்டிலரீஸ் நிறுவனம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ஜி.என்.எஸ். கம்பெனியின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும். வாசுதேவன் இதன் மேலாண்மை இயக்குநர். அருள்மணி சேகரன், ராஜசேகரன், நடேசன், பழனிச்சாமி ஆகிய ஐந்து பேர் இதன் இயக்குநர்கள்.
''காரைக்கால் பகுதி மது வர்த்தகத்தில் நீண்ட காலமாக இருந்த வாசுதேவனின் குடும்பம் ஒரு காலத்தில் காங்கிரஸ் அனுதாபம் கொண்டது. கடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட வாசுதேவன் விரும்பினார். ராஜாத்தி அம்மாளின் ஆசியைப் பெற்றுள்ள காரைக்கால் பகுதி தி.மு.க. அமைப்பாளர் நாஜிம் இவரை உரிய இடத்தில் அறிமுகப்படுத்தினார். தேர்தலில் போட்டியிட வாசுதேவனுக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், மது ஆலை நடத்தும் பம்பர் பரிசு கிடைத்தது!'' என்கிறார்கள் காரைக்கால் பகுதி தி.மு.க-வினர்.

5. கிங் டிஸ்டிலரீஸ் என்பது தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.ஆர்.பாலுவுக்கு சொந்தமானது.

6. இம்பீரியல் ஸ்பிரிட்ஸ் அண்ட் ஒயின் பிரைவேட் லிமிடெட், தரணிபதி ராஜ்குமார் என்பவருக்குச் சொந்தமானது. இவர் மது ஆலைக்கான அனுமதி கேட்டு விண்ணப்பித்தபோது அரசு தரவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவுப்படி அனுமதி தரப்பட்டது. தரணிபதி ராஜ்குமாரின் அப்பா கிருஷ்ணசாமி கவுண்டருக்கு தென்னை விவசாயிகள் நல வாரியத்தின் துணைத் தலைவர் பொறுப்பை முதல்வர் கருணாநிதி வழங்கி இருக்கிறார்.

''இந்தக் காலத்தில் யார் ஆளும் கட்சியாக வந்தாலும்,  தங்கள் கட்சி ஆட்களுக்கு சில சலுகைகள் காட்டுவார்கள். அது சகஜமாக நடக்கிற விஷயம்தான். ஆனால், இந்த மது ஆலைகள் விஷயத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அனைத்துமே தி.மு.க. சார்பானவர்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.

டான்சி வழக்கில் முக்கியக் குற்றச்சாட்டே, 'அரசு பதவியில் இருப்பவர் அரசாங்க நிலத்தை வாங்கக்கூடாது’ என்ற விதிமுறையை மீறியதுதான். முதல்வர் நாற்காலியில் இருக்கும் கருணாநிதி அமைத்த கோபாலபுரம் வீடு தொடர்பான அறக்கட்டளையில் உறுப்பினராக இருப்பவர் ஜெகத்ரட்சகன். மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர். அவருக்குத் தரப்பட்டுள்ள மதுபான அனுமதியைத் தொடர்ந்து வாலாஜாபாத்தில் ஆலை தொடங்கப்பட்டுவிட்டது. ஜெகத்ரட்சகனின் மகனும், மனைவியும் இதன் இயக்குநர்களாக அதிகாரபூர்வமாக இடம்பெற்று உள்ளார்கள்.

ஜெகத்ரட்சகனின் இன்னொரு நிறுவனமான ஏ.எம். புரூவரீஸ் பீர் தயாரிக்கும் அனுமதிக்கு காத்திருக்கிறது. 'ஏ' என்பது முதல் மனைவி அனுசுயா என்றும், 'எம்' என்பது இரண்டாவது மனைவியான மாலா என்றும் அர்த்தம் கொடுக்கப்படுகிறது.

''மாறன் குடும்பத்துடன் மோதல் வந்ததைத் தொடர்ந்து, போட்டியாக 'கலைஞர்' டி.வி-யை நிறுவியது முதற்கொண்டு தி.மு.க-வுக்கு மிக நெருக்கமாகிவிட்டார் சரத்குமார். அந்த டி.வி-யில் முதல்வரின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவிகித பங்குகளும், மகள் கனிமொழிக்கு 20 சதவிகித பங்குகளும் உள்ள நிலையில்... குடும்பக் கூட்டாளி என்றே சொல்லக் கூடிய அளவுக்கு உள்ளவர் இந்த சரத்குமார். இவருக்கு மது ஆலை உரிமம் கொடுப்பது என்பது தன் குடும்பத்துக்கே கொடுத்துக் கொள்வதாகும்!'' என்று குறிப்பிடும் அதிகாரிகள், ''மதுராந்தகத்தில் அமைந்திருக்கும் எஸ்.என்.ஜே. நிறுவனத்துக்கு டிஸ்டிலரீஸ் மற்றும் புரூவரீஸ் ஆகிய இரண்டு உரிமங்களும் தரப்பட்டுள்ளன. ஜெ.நந்தினி ஆர்ட்ஸ் மூலமாக 'உளியின் ஓசை’, 'பெண் சிங்கம்’ படங்களை எடுத்த ஜெயமுருகனுக்கு இந்த உரிமம் தரப்பட்டது பளிச்சென்று கண்ணை உறுத்தத்தானே செய்யும்!'' என்கிறார்கள்.

டி.ஆர்.பாலுவுக்கு தரப்பட்டுள்ள உரிமங்களுக்கு ஆதாரம் காட்ட வேண்டியதில்லை. காரைக்கால் வாசுவுக்கு தரப்பட்டுள்ள லைசென்ஸுக்குப் பின்னணியாக ராஜாத்தி அம்மாளின் ஆசீர்வாதம் சொல்லப்படுகிறது. இப்படி அனைத்துமே கலைஞரின் சுற்றம் சூழலுக்கே தாரை வார்க்கப்பட்டுள்ளது...'' என்ற ஆதங்கம் விஷயம் அறிந்தவர்கள் மத்தியில் அதிகமாகிக் கொண்டு வருகிறது.

இது போன்ற மதுபான அனுமதிகள் எந்த விதிமுறைப்படி தரப்படுகின்றன? ஆலைகளை அமைக்கும்போது அப்பகுதி மக்களிடம் வெளிப்படையான கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளதே... அவை நடத்தப்பட்டதா? டி.ஆர்.பாலுவின் ஆலை அனுமதிக்காக நடத்தப்பட்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவித்த மக்கள் போலீஸால் தாக்கப்பட்டார்களே... அந்த விவகாரம் என்ன ஆனது? என்பது போன்ற சந்தேகங்கள் வலுப்பட்டே வருகின்றன. இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் தமிழக அரசு இருக்கிறது!

நன்றி : ஜூனியர் விகடன்


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard