பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: ஒரு சமயம் நடைபெற்ற போரில், அதியமான் பகைவர்கள் அனைவரையும் வென்றான். வெற்றி பெற்றாலும், அவன் போரில் பகைவர்களின் படைக்கருவிகளால் தாக்கப்பட்டு மார்பிலும் முகத்திலும் புண்பட்டான். போரில் வெற்றி வாகை சூடி விழுப்புண்ணோடு இருக்கும் அதியமானைக் கண்ட அவ்வையார் பெருமகிழ்ச்சி அடைந்தார். இப்பாடலில், “பெரும, உன்னால் போரில் தோற்கடிக்கப்பட்டவர்கள் சிதறியோடினார்கள். அவர்கள் அவ்வாறு தோற்று ஓடியதால், விழுப்புண் படாமல் நோயுற்று வாளால் வெட்டப்பட்டு அடக்கம் செய்யப்படும் இழிவிலிருந்து தப்பினர். மற்றும், பகைவர்கள் ஓடியதால், இனி போர்கள் நடைபெற வாய்ப்பில்லை; ஆகவே, இனி நீ போர்களில் வெற்றி பெறுவது எப்படி சாத்தியமாகும்?” என்று கூறுகிறார்.
திணை: வாகை. வாகைப்பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தல்.
துறை: அரச வாகை. அரசனது வெற்றியைக் கூறுதல்.
திண்பிணி முரசம் இழுமென முழங்கச்
சென்றுஅமர் கடத்தல் யாவது? வந்தோர்
தார்தாங் குதலும் ஆற்றார் வெடிபட்டு
ஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்
5 நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்
காதல் மறந்துஅவர் தீதுமருங் கறுமார்
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி
மறம்கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
10 நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கஎன
வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ
வரிஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து
அண்ணல் யானை அடுகளத் தொழிய
அருஞ்சமம் ததைய நூறிநீ
15 பெருந் தகை விழுப்புண் பட்ட மாறே.
அருஞ்சொற்பொருள்:
1.திண்மை = வலிமை; பிணி = கட்டு; இழும் - ஒலிக் குறிப்பு. 2. அமர் = போர்; கடத்தல் = வெல்லுதல்; யாவது = எவ்வாறு. 3. தார் = முற்படை; வெடிபடுதல் = சிதறுதல். 4. மரீஇய = மருவிய, தழுவிய; பீடு = பெருமை, வலிமை. 5. விளித்தல் = இறத்தல்; யாக்கை = உடல்; தழீஇய = தழுவிய. 6. மருங்கு = பக்கம், விலாப்பக்கம். 7. புரிதல் = விரும்பல். 8. திறம் = செவ்வை (செப்பம்), மேன்மை. 9. கந்து = பற்றுக்கோடு. 10. நீள் = உயரம், ஒளி; உழி = இடம். 11. போழ்தல் = பிளத்தல்; உய்ந்தனர் = தப்பினர்; மாதோ - அசைச் சொல்.12. ஞிமிறு = வண்டு, தேனீ;ஆர்க்கும் = ஒலிக்கும்; கடாம் = யானையின் மத நீர். 13. அடுகளம் = போர்க்களம். 14. சமம் = போர்; ததைதல் = நெருங்கல், சிதைதல்; நூறுதல் = வெட்டுதல், அழித்தல். 15. மாறு = ஆல்.
கொண்டு கூட்டு: பெருந்தகை, நீ அருஞ்சமம் ததைய நூறி விழுப்புண் பட்டவாற்றால் நின்னொடு எதிர்த்து வந்தோர் தாம் பீடில் மன்னர் விளித்த யாக்கை தழீஇ நீள் கழல் மறவர் செல்வுழுச் செல்கென வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் ஆதலின், இனி முரசு முழங்கச் சென்றமர் கடத்தல் யாவது எனக் கூட்டுக.
உரை: பெருந்தகையே! உன்னை எதிர்த்து வந்த பெருமை இல்லாத மன்னர்கள் உன்னுடைய முற்படையையே தாங்கமுடியாமல் சிதறி ஓடினர். அம்மன்னர்கள் (அவ்வாறு ஓடியதால்), நோயுற்று இறந்தவர்களின் உடலைத் தழுவி, அவர்கள் மேல் உள்ள ஆசையை மறந்து, அவர்கள் போரில் வாளால் இறக்காத குற்றத்தை (இழிவை) அவர்களிடத்தினின்று நீக்க வேண்டி, நான்கு வேதங்களையும் நன்கு கற்றறிந்து அறத்தை விரும்பும் பார்ப்பனர், செம்மையான, விரும்பத்தக்க பசுமை நிறமுள்ள புல்லைப் (தருப்பையைப்) பரப்பி, அதில் அவர்களின் உடலைக் கிடத்தி, “தமது ஆண்மையில் பற்றுடன் போரில் மாய்ந்த வீரக்கழலணிந்த வீரர்கள் செல்லும் இடத்திற்குச் செல்க” என வாளால் பிளந்து அடக்கம் செய்யப்படும் இழிவிலிருந்து தப்பினர். வரிகளை உடைய வண்டுகள் ஒலித்து வாயில் புகுகின்ற மதம் கொண்ட யானைகளைப் போர்க்களத்தில் நெருங்கி அழித்து விழுப்புண் பட்டதால், இனி வலிய கட்டமைந்த முரசம் “இழும்” என்னும் ஒலியுடன் முழங்குமாறு போரில் வெல்வது எப்படி? பகைவர்கள் ஓடியதால் இனி, போர்கள் நிகழ வாய்ப்பில்லை; அதனால் போரில் வெல்லும் வாய்ப்பும் இல்லை என்பது பொருள்.