மூலங்கிழார் புறநானூற்று 166 ஆவது செய்யுளில் வேதங்கள் நான்கு ,அங்கங்கள் ஆறு , அவை சிவபிரானிடமிருந்து தோன்றின என்பதை , நன்றாய்ந்த நீணிமிர்சடை முதுமுதல்வன் வாய்போகாது ஒன்று புரிந்த வீரிரண்டின் ஆறுணர்ந்த வொருமுது நூல் . (புறம் 166:1-4 )
வேதங்கள் எழுதப்படாமல் குருமுகமாகவே கற்பிக்கப்பட்டு வந்தன என்பதைக் குறுந்தொகையில் பாண்டியன் எழுதி நெடுங்கண்ணனார் , பார்ப்பன மகனே பார்ப்பன மகனே எழுதாக் கற்பி னின்சொ லுள்ளும் பிரிந்தோர் புணர்க்கும் பண்பின் மருந்து முண்டோ . ( 156) என்றவிடத்து எழுதாக்கற்பு என்ற சொல்லாற் குறித்தனர் .
இக்கருத்தினையே பதிற்றுப்பத்திலும் புறநானூறு முதலியவற்றிலும் வழங்கப்படும் கேள்வி என்ற சொல்லும் அறிவிக்கும் :
உரைசால் வேள்வி முடித்த கேள்வி அந்தண ரருங்கல மேற்ப . ( பதிற் . 64 , 4-5 ) வேள்வியிற் கடவு ளருத்தினை கேள்வி உயர்நிலை யுலகத் தையரின் புறுத்தினை . ( பதிற் . 70 ; 18-9 ) கேள்வி கேட்டுப் படிவ மொடியாது வேள்வி வேட்டனை யுயர்ந்தோ ருவப்ப ( பதிற் . 74 , 1-2 ) கேள்வி முற்றிய வேள்வி யந்தணர்க்கு . ( புறநா . 361 , 3 - 4 ) அந்தணரே வேதங்களைச் சிறப்பாகக் கற்றுப் பாடினர் என மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியிற் கூறினர் : சிறந்த வேதம் விளங்கப் பாடி அந்தணர் பள்ளியும் ( 468-476 ) அந்தணர் வேதம் பாட (656 ) அவற்றின் கருத்தை விரித்து விளக்கியோரை வாய்மொழிப் புலவர் எனக் குன்றம்பூதனார் பரிபாடல் ஒன்பதாம் பாட்டிற் கூறினர் :
நான்மறை விரித்து நல்லிசை விளக்கும் வாய்மொழிப் புலவீர் கேண்மின் ( 12-13 )