தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்திற்காக மேரு மலையை மத்தாகவும், வாசுகி பாம்பினைக் கயிறாகவும் கொண்டு தேவர்கள் ஒருபுறமும், அசுரர்கள் மறுபுறமும் இருந்து பாற்கடலைக் கடைந்த போது, நீண்ட நேரம் கடைந்ததன் காரணமாக வாசுகி பாம்பு வலிதாங்காமல் விசத்தினை கக்கியது. அந்நஞ்சு உலகிலுள்ள உயிர்களை கொல்லும் தன்மையுடையதாகையால், அதிலிருந்து தங்களைக் காக்கும்படி தேவர்களும், அசுரர்களும் சிவனை வேண்டிக் கொண்டார்கள். அவர்கள் மீது பெருங்கருணை கொண்ட சிவன், ஆலால சுந்தரரை அனுப்பி, ஆலகால நஞ்சினை அள்ளிவரச் செய்து, உண்டார். உலகெலாம் நிறைந்துள்ள ஈசன் திருமேனியில் நஞ்சு பரவினால், அது உலகையே பாதிக்குமென்பதால், உமையவள், அஞ்சியவள் போல், ஈசன் திருக்கழுத்தைப் பற்றிக் கொண்டாள். நஞ்சு கீழிறங்காமல் கழுத்திலேயே தங்கிக் கொண்டது. சிவன் ஆலகால விசத்தினை இவ்விதம் நஞ்சு அருந்தி உலகை காப்பாற்றினார்
ஓங்குமலைப் பெருவிற்பாம்பு ஞாண் கொளீ இ
யொருகணை கொண்டு மூவெயிலுடற்றிப்
பெருவிறலமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற்றண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கு மொருகண் போல
(புறம் 55)
ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங் கணிச்ச்சி மணிமிடற்றோனும்... (புறம் 56)
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணிமிடற் றொருவன்...... (புறம் :91)
நன்றாய்ந்த நீணிமிர்சடை
முது முதல்வன் ..... (புறம் :166)
நீலநாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த .... (சிறுபாணாற்றுப்படை, 96-97)