New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ்நாட்டில் 1,200ஆண்டுமுன் இயங்கிய 'ஐஏஎஸ்' மாடல் பயிற்சிப் பள்ளி - பார்த்திவ சேகரபுரம் பார்த்தச


Guru

Status: Offline
Posts: 24603
Date:
தமிழ்நாட்டில் 1,200ஆண்டுமுன் இயங்கிய 'ஐஏஎஸ்' மாடல் பயிற்சிப் பள்ளி - பார்த்திவ சேகரபுரம் பார்த்தச
Permalink  
 


 

தமிழ்நாட்டில் 1,200 ஆண்டுகளுக்கு முன் இயங்கிய 'ஐ.ஏ.எஸ்' மாடல் பயிற்சிப் பள்ளி - வியப்பூட்டும் வரலாறு

பார்த்திவபுரம் கல்வி சாலை
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,மகேஷ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 24 ஜூன் 2023

இன்று இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான பயிற்சி வழங்கப்படுவது போலவே, சுமார் 1,200 வருடங்களுக்கு முன், தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது.

இந்தியாவின் தென்கோடிப் பகுதியான கன்னியாகுமரியில், கி.பி. 9ஆம் நூற்றாண்டில் அரசியல் நடைமுறை கல்வி கற்பிக்க ஓர் உறைவிடப் பள்ளி செயல்பட்டுள்ளது. இங்கு, அரசாங்கத்தை நடத்துவதற்கான அடிப்படை சமூக சட்டங்கள் தொடர்பான கல்வி பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சுமார் 40 கி.மீ., தொலைவில் உள்ள விளவங்கோடு வட்டத்தில், கேரள எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது பார்த்திவபுரம். இங்குள்ள பார்த்தசாரதி கோயில் மிகவும் பிரசித்திபெற்றது.

பண்டைய கால கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் இந்த ஊர் பார்த்திவ சேகரபுரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்பேடுகளில் சொல்லப்பட்ட 'உறைவிடப் பள்ளி'

தொல்லியல் ஆய்வாளர் கோபினாத ராவ் மூலம் திருத்தப்பட்ட திருவிதாங்கூர் தொல்லியல் தொடர் நூலில், (Travancore Archaeological Series – Volume 1, Edited by T.A. Gopinatha Rao), அவருக்குக் கிடைத்த செப்பேடுகளில் (Copper Plates) பார்த்திவ சேகரபுரம் ‘சாலை’ (உறைவிடப் பள்ளி) குறித்துக் கூறப்பட்டுள்ள தகவல்களைத் தொகுத்துள்ளார்.

அதில் அவர் ஹுசூர் தலைமை செயலகம் (Huzur Secretariat) எனப்படும் ஹுசூர் அலுவலகத்தில் இருந்து, கிரந்த எழுத்துக்கள் கலந்த தற்கால தமிழில் எழுதப்பட்ட 6 செப்பேடுகள் (Copper Plates) கிடைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

பள்ளியில் பயின்ற 95 மாணவர்கள்

தமிழர் வரலாறு

முதல் செப்பேட்டில், 869ஆம் ஆண்டு ’ஆய்’ மன்னரான கோக்கருநந்தடக்கன், ‘உழக்குடிவிளை’ என உள்ளூரில் அறியப்படுகிற விளை நிலங்களை முஞ்சிறை சபையிடமிருந்து படிப்படியாக வாங்கியதாகக் கூறப்பட்டுள்ளது.

இதற்கு ஈடாக அவர்களுக்கு வேறு நிலங்களும் வழங்கப்பட்டுள்ளன. பின்னர் அந்த நிலத்தின் எல்கைகளை நிர்ணயம் செய்து அங்கு ஒரு கோவிலை எழுப்பி அங்கு விஷ்ணு சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார்.

தொடர்ந்து அந்தக் கோவிலைச் சுற்றியுள்ள கிராமத்திற்கு பார்த்திவ சேகரபுரம் எனப் பெயரிட்டுள்ளார்.

மேலும் அங்கு ஒரு ‘சாலையை’ – உறைவிடப் பள்ளியை (Boarding School) - நிறுவி அங்கு பயிலும் 95 சட்டர்களுக்கு (மாணவர்கள்) உணவு அளிக்க ஏற்பாடு செய்துள்ளார். அதே போல் இந்தச் சாலை காந்தளூர் சாலையைப் போன்று நிறுவப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவில் சேவைகளுக்காகவும் நிலங்களை வழங்கியுள்ளது குறித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு ஊதியம்

இரண்டாவது செப்பேட்டில் கோவில் பணியாளர்கள் மற்றும் கோவிலுக்கு பூக்கள் விநியோகம் செய்ய அமர்த்தப்பட்டவர்களின் கடமைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்ததாக கோவிலில் உள்ள அணையா விளக்குகளைப் பராமரிக்க வழங்கப்பட்ட நிலங்கள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல் கோவிலில் பங்குனி மாதம் 7 நாட்கள் நடத்தப்படவேண்டிய திருவிழா குறித்தும், 7 நாட்கள் திருவிழாவின்போது கோவில் பணியாளர்கள் மற்றும் சாலையில் உள்ள தலைவர்கள் அல்லது மூத்த மாணவர்களுக்கு இரண்டு மடங்கு ஊதியம் வழங்கப்படவேண்டியது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருவிழா நடத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தில் இருந்து கிடைக்கும் வருவாயில் திருவிழாவை நடத்த வேண்டும் என்பதும் கூறப்பட்டுள்ளது.

தொண்டு நிறுவனமாக நடந்த பள்ளி

தமிழர் வரலாறு

மூன்றாவது செப்பேட்டில் கோவிலின் முக்கிய பூசாரி, பஞ்சகவ்யா தயாரிப்பவர், பூக்கள் விநியோகிப்பவர் மற்றும் இசை கலைஞர்கள் உள்ளிட்ட கோவில் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க ஒதுக்கப்பட்டுள்ள நிலம் குறித்துக் கூறப்பட்டுள்ளது.

நான்காவது செப்பேட்டில் தொண்டு நிறுவனமான ‘சாலையை’ மக்கள் பாதுகாக்க வேண்டியதன் கடமை குறித்துக் கூறப்பட்டுள்ளது.

சாலையில் பவிஷ்ய சரணத்தை சார்ந்த 45 மாணவர்களுக்கும், தயித்திரிய சரணத்தைச் சார்ந்த 36 மாணவர்களுக்கும் தலவகார சரணத்தைச் சார்ந்த 14 மாணவர்களுக்கும் உணவு வழங்கப்பட்டுள்ளது குறித்தும் கூறப்பட்டுள்ளது.

(இந்தச் சரணங்கள் நான்கு வேதங்களாக இருக்கக்கூடும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.)

மீதம் உள்ள செப்பேடுகளில் சாலையில் பயிலும் மாணவர்களின் நடத்தை விதிகள் மற்றும் கல்வியை அவர்கள் தொடர வேண்டிய முறை குறித்தும், நிலத்திற்கான வாடகைப் பணத்தை வசூல் செய்யும் முறை குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவில் பணியாளர்கள் சாலையில் உள்ள மாணவர்களிடம் நடந்து கொள்ளுதல் குறித்த விதிகளை நிர்வகித்தல் குறித்து அடுத்து குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐந்தாவது செப்பேட்டின் பின் பகுதியின் துவக்கத்தில் ஸ்ரீ வல்லபன் (திருமால்) பற்றிய ஒரு சமஸ்கிருத கவிதையும் உள்ளது. செப்பேடுகளில் உள்ள உள்ளடக்கத்தின் மூலம் இவை ஒரே ஆவணத்தின் பகுதிகள் என்பது தெரிய வருகிறது.

பள்ளியின் விந்தையான விதிகள்

தமிழர் வரலாறு

உறைவிட பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட விதிகளில் சில மிகவும் வேடிக்கையானவையாக உள்ளன. சாலையில் பயிலும் மாணவர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு உணவும் வழங்கப்படாமல் மறுக்கப்பட்டுள்ளது.

சாலையில் பயிலும் ஒரு மாணவர் கோவில் வளாகத்தில் வைத்து மற்றொரு மாணவரைப் பழிச்சொல்/வசைமொழியில் பேசினால், பேசிய மாணவர் சாலையில் உள்ள மூத்தவர்கள் அல்லது மாணவர்களின் தலைவனுக்கு 5 கணம் தங்கத்தை அபராதமாகச் செலுத்திய பிறகுதான் சாலையில் உணவு உண்ண முடியும்.

அதேபோல் சாலையில் பயிலும் ஒரு மாணவன் மற்றொரு மாணவரை அடித்தால் சாலையில் அவர் தனது உணவை உண்பதற்கு முன்பு அபராதமாக ஒரு காசு செலுத்த வேண்டும். அடி வாங்கிய மாணவரும் சாலையில் தனது உணவை உண்பதற்கு முன்பு 5 கணம் தங்கத்தை அபராதமாகச் செலுத்த வேண்டும்.

சாலையில் பயிலும் மாணவர்கள் சாலைக்குள் ஒன்றுகூடும் இடங்களுக்கு ஆயுதங்களை எடுத்து வரவோ, ஆயுதங்கள் மூலம் ஒருவருக்கொருவர் காயப்படுத்திக் கொள்ளவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஆயுதத்தைக் கொண்டு ஒரு மாணவரைக் காயப்படுத்தும் மாணவர் சாலையில் இருந்து வெளியேற்றப்படுவார்.

அதேபோல் சாலையில் பயிலும் மாணவர்கள் அவர்களுடைய துணைவிகளையோ, பெண் சேவகிகளையோ தங்களுடன் தங்க வைக்கக் கூடாது என்றும் விதிகள் இருந்ததாக செப்பேடுகளில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளியில் பயின்றவர்கள் மந்திரிகளாக நியமிக்கப்பட்டார்களா?

பார்த்திவபுரம் கல்வி சாலை

பார்த்திவ சேகரபுரம் சாலை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கல்வெட்டு ஆய்வாளரும் ‘தொல்லியல் கழகம், தஞ்சாவூர்’ அமைப்பின் தலைவரும் ‘செம்பவளம் ஆய்வுத்தளத்தின்’ இயக்குநருமான செந்தீ நடராசன், "பார்த்திவ சேகரபுரம் சாலை சேர நாட்டில் இருந்த காந்தளூர் சாலையைப் போன்று உருவாக்கப்பட்டதாக அந்த செப்பேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது," என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "பார்த்திவ சேகரபுரம் சாலையில் கடைபிடிக்க வேண்டிய சமூக அரசியல் நடைமுறை ஆசாரங்களுக்கான கல்வி மூன்று சரணங்களில் (பவிஷ்ய, தயித்திரிய, தலவகார) கற்பித்துக் கொடுக்கப்பட்டுள்ளது என்பது அறியப்படுகிறது. இதை தற்போதைய இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்) படிப்போடு ஒப்பிட்டுக் கூறலாம்," என்றார்.

இந்த சாலையில் கல்வி பயின்றவர்கள் மந்திரிகளாக நியமிக்கப்பட்டிருக்கலாம். இங்கு பயின்றவர்கள் ஆய் மன்னர்களின் அரசவையில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல அரசுகளிலும் பணிக்குச் சென்றிருக்கலாம் என்பதை அறிய முடிகிறது.

ஆய் மன்னர்களால் அமைக்கப்பட்ட பார்த்திவ சேகரபுரம் சாலை எவ்வளவு காலம் இயங்கியது என்பதற்கான ஆதாரம் கிடைக்கப் பெறவில்லை.

"9ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்த சாலை 10ஆம் நூற்றாண்டு வரை இயங்கியிருக்கலாம். ஆய் மன்னர்களால் அமைக்கப்பட்ட இந்த சாலை ஆய் மன்னர்களின் வீழ்ச்சியோடு சேர்ந்து இல்லாமல் சென்றிருக்கலாம்.

நிச்சயமாக சோழர்களின் படையெடுப்புக்குப் பின்னர் பார்த்திவ சேகரபுரம் சாலை இயங்கியிருக்க வாய்பில்லை," என்று செந்தீ நடராசன் தெரிவித்தார்.

சமஸ்கிருத அறிஞர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள்

பார்த்திவ சேகரபுரம் பகுதியில் பல சமஸ்கிருத அறிஞர்களும் வாழ்ந்துள்ளனர், என்கிறார் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளரான முனைவர் அ.கா.பெருமாள்.

"1300 வருடங்களுக்கு முந்தைய ‘சொப்பன வாசவ தத்தா’ என்ற சமஸ்கிருத நாடகத்தினுடைய உரையின் மூலம் பார்த்திவ சேகரபுரம் பகுதியில் கிடைத்துள்ளது.

இந்தியாவில் கிடைத்த மிக நல்ல உரைகளில் இதுவும் ஒன்று. குப்தர்கள் காலகட்டத்தில் வட இந்தியாவில் எழுதப்பட்ட ஒரு நாடக உரை பார்த்திவ சேகரபுரம் பகுதியில் கிடைத்துள்ளது. இதன் மூலம் சிறந்த சமஸ்கிருத அறிஞர்கள் இங்கு வாழ்ந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது," என்றார் அவர்.

ஹுசூர் செப்பேடுகள் அல்லது பார்த்திவ சேகரபுரம் செப்பேடுகள் என அறியப்படும் இந்த செப்பேடுகள் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

 

 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard