New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள் Kural Thiran


Guru

Status: Offline
Posts: 24778
Date:
திருக்குறள் Kural Thiran
Permalink  
 


சங்க இலக்கியத்தின் வலுவான பின்புலத் துணையுடன் புதிய யாப்பில், புதிய முறையில், பல புதுமைக் கருத்துக்களோடு சமூக முன்னேற்றத்தை அடிப்படை நோக்கமாகக் கொண்டு பொருட்பெருக்கமும் சொற்சுருக்கமும் கொண்ட தனிச்சிறப்புடன் எழுதப்பட்ட ஒப்புயர்வற்ற நூல் குறள். இது அற நூல், மெய்யியல் நூல், இலக்கிய நூல், அரசியல் நூல், இன்ப நூல், வாழ்வியல் நூல் என்ற பல பரிமாணங்களை உடையது.
குறள் யாக்கப்பட்டது புலவர்களுக்காகவோ அறிஞர்களுக்காகவோ அல்ல. யாரையும் குறிப்பாக நோக்காமல் எல்லா நிலையில் உள்ள உலக மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வண்ணம் எளிய நடையில் படைக்கப்பட்ட பனுவல் ஆகும் இது.
மனிதன் பலவேறு நிலமைகளில் கொள்ளவேண்டியவற்றையும் தள்ளவேண்டியவற்றையும் கூறி, நாட்டிலே நல்லாட்சி ஏற்பட, இல்வாழ்வான் சான்றாண்மையுடனே குடிமையை நடத்தி, இன்பம் நுகர்ந்து, வாழ்வாங்கு வாழ வழி கூறுவது நூலின் நோக்கமாகும்.

நூல்

திருக்குறள் என்பது அழகிய குறள் வெண்பாவினால் ஆகிய நூல் எனப் பொருள்படும். திரு என்னும் அடைமொழி ஒவ்வொரு குறளையும் சிறப்பித்து நிற்கிறது. இந்நூலை வள்ளுவர் குறட்பாக்களால் கூற எடுத்துக்கொண்டதால், சுருங்கச்சொல்லல், விளங்கவைத்தல், நவின்றோர்க்கினிமை, நன்மொழி புணர்த்தல் முதலான அழகுகள் இனிதாக அமைந்தன. ஏழு சீர்களில் எதுகை மோனை இன்பத்துடன், இலக்கியச் சுவை மிக்க, கவித்துவம் ஒளியிடும் நுலாக அமைந்துள்ளது. குறட்பாக்கள் அனைத்தும் கேட்டாரை மீண்டும் தம்மை நோக்கி நோக்கப் பயன்கொள்ள நிற்கும் நிலைமை வாய்ந்தன.

பதினெண்கீழ்கணக்கு

சங்க கால இலக்கியங்களில் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சேர்ந்து பதினெண்மேல்கணக்கு என்று பகுத்துக் காட்டப்பட்டது. சங்கம்/சங்கம் மருவிய கால பதினெட்டு நூல்களின் தொகுப்பு பதினெனண்கீழ்க்கணக்கு எனப்பெயர் பெற்றது. ஏறத்தாழ 500 ஆண்டுகளில் எழுதப்பட்ட பலவேறு சிந்தனை நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்ற ஒரே தொகை நுல்களாயின. கீழ்க்கணக்காவது- பெரும்பாலும் ஐந்தடியின் மிகாத பாடல்களால், ஐம்பதில் குறையாமல் ஐந்நூற்றில் மிகாமல், வெண்பா யாப்பில் அமைவது- என்ற இலக்கண வரையறையில் நூல்வகைப் படுத்தினர் என்று பழம் செய்யுட்களால் தெரியவருகிறது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பன்னிரண்டு நீதி நூல்கள். இவை யாவும் வெண்பாக்களால் ஆனவை. திருக்குறள் எழுசீர் வெண்பாவாகும். இந்நூல்களின் பாடல் மற்றும் யாப்புவகை ஒருதன்மைத்தானது எனக் கொள்ளப்பட்டு பதினெண்கீழ்க்கணக்கு என்ற இந்தத் தொகுப்பில் திருக்குறளையும் சேர்த்து விட்டனர்.

குறள் வெறும் நீதிநூல் எனப் பிற்காலத்தவர் முடிவு எடுத்துப் பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாகத் தொகுத்துள்ளனர். பதினெண்கீழ்க்கணக்குத் தொகுதி முறையே மிகத்தவறானது என்று ஆய்வாளர்கள் கருதுவர். இத்தொகுதியினுள் சங்க நூல்களும் சங்கம் மருவிய நூல்களும் இருக்கின்றன. குறள் இத்தொகுப்பில் கண்ட ஏனைய 17 நூல்களுக்கும் முற்பட்டது. மற்ற நூல்களின் பழமையையும் கருத்தையும் உயர்த்தவே குறள் இவைகளோடு இணைக்கப்பட்டதா? குறள் ஐந்நூறில் மிகுந்த ஆயிரத்து முந்நூற்று முப்பது பாடல்களால் ஆனது; எந்த வகையில் குறளை பதினெண்கீழ்க்கணக்குத் தொகை நூல்களில் ஒன்றாகப் பகுத்தார்கள்? என்ற கேள்விகள் எழுகின்றன. அத்தொகுதியில் சேர்க்கப்பட்டதால் திருக்குறளின் உள்ளார்ந்த மெய்ப்பொருளும், நுவல் பொருளும், மறுமலர்ச்சிச் சமுதாயத்தைப் படைக்கும் புதுமைக் கொள்கைகளும், மறைக்கப்பட்டு, திரிபு படுத்தப்பட்டுத் தோற்றம் தருகிறது என்றும் இதனால் குறள் வெறும் நீதி நூலாகவும் சிற்றிலக்கியமாகவும் வடமொழி வழிநூல் கருத்துக்களின் தொகுப்பாகவும் திசை திருப்பப்பட்டு விட்டது என்றும் அதன் நுண்மாண் நுழைபுலத் திறன்கள், அஃகி அகன்ற அறிவுக் கோட்பாடுகள், உண்மைப் பொருள் விளக்கங்கள் நமக்குத் தரப்படவேயில்லை என்றும் பதினெண்கீழ்க்கணக்கில் சேர்க்கப்பட்டதால் குறளுக்குப் பிறழ்ச்சியும் அநீதியும் நேர்ந்தன என்பார் கு ச ஆனந்தன்.
தனிப் பெருமை வாய்ந்த திருக்குறளை பதினெண்கீழ்க்கணக்கினுள் ஒன்றாக்கிக் மற்ற ஏனைய சிறு நூல்களில் ஒன்றாய்க் கூறியது பொருத்தமற்றது. குறளைத் தொகை நூல்களில் ஒன்றாகப் பார்க்காமல் தனி நூலாகப் பார்ப்பதே ஏற்புடையதாகும்.

முப்பால்

சங்ககாலத்தில் தமிழ் மரபைச் சார்ந்த இலக்கியக் கோட்பாடு அகம், புறம் என்றிருந்தது. வடநூலார் அறம், பொருள், இன்பம், வீடு என்று நான்கு உறுதிப் பொருட்களைச் சொல்கிறார்கள். சில சஙகப்பாடல்கள் முப்பொருள் பற்றிப் பேசின.
அந்நிலை மருங்கின் அறமுத லாகிய
மும்முதற் பொருட்கு முரிய வென்ப 
(செய். 105)என்று தொல்காப்பியமும்

அறமும் பொருளும் இன்பமு மூன்றும்
ஆற்றும் பெருமநின் செல்வம் 
(புற. 28)

சிறப்புடை மரபிற் பொருளு மின்பமும்
அறத்துவழிப் படூஉந் தோற்றம் போல 
(புற. 31) என்று புறநானூறும் கூறுகின்றன.

முப்பால் பகுப்புப் பற்றிய சோமசுந்தர பாரதியார் கருத்து இங்கு கவனிக்கத்தக்கது: "இனி, இதுவே போல், குறள் நூலும் இன்பமல்லா எல்லாப் பொருளுமே புறப்பகுதி ஒன்றிலே அடங்கும். அதை அறத்துப்பால்-பொருட்பால் என்றிரு வகையாக்க யாதோர் அவசியமும் நியாயமும் இல்லை.அது தமிழ்மரபும் ஆகாது. அறமற்ற பொருளும் பொருள் தொடர்பற்ற அறமும் கருத்தொணாதன. அது போலவே அறத் தொடர்பற்ற இன்பமும் இன்பமாகக் கொள்ளாத அறமும் தமிழறிஞர்கட்கு உடன்பாடில்லை. அறமே 'சிறப்பீனும் செல்வமும் ஈனும்' எனவும் 'அறத்தான் வருவதே இன்பம்' எனவும் பேசும் பொய்யில் புலவர் பொருளுரைகள் போற்றற் பாலனவாம். எனவே அறம், பொருள் என்ற இரண்டும் ஒன்றோடொன்று இன்றியமையாத் தொடர்புடைய வாகலும், அதனால் அவை வெவ்வேறு பொருவகைகளாகாமையும் இனிது விளங்கும். ஆனால், அவை அனைத்தும் அகத்தின் வேறாய புறப்பொருள் வகைகளாய் அடங்கும் என்பதும் மறுக்கொணாது. உண்மை இதுவாகவும் குறட்பொருளைத் தமிழ் மரபுக்கேற்ப அகம் புறம் என்றிருவகையாக்காமல் அறத்தை வேறு பிரித்து அறம், பொருள், இன்பம் என முப்பாற்படுத்தியதோடு, இன்பத்தைக் காமத்துப் பால் எனப் பெயரிட்டதும் உரைகாரர் குறளை வடநூல் வரன்முறையாக்கும் நோக்கத்தாலன்றி அதற்கு வேறு தக்க ஏது ஏதுவுமில்லை. மேலும் அப்பாகுபாடு குறளுக்குப் பொருள் நிறைவும் மாட்சியும் தருமாறில்லை எனக் கான்கிறோம். அது உரைகாரர் குறள் துவக்கத்தில் பாயிரம் என்று வேறு ஒரு பகுதி வகுப்பதால் தெளிவாகும். அவர் கொண்ட மூவகுப்பிலும் அடங்காத ஊழ்-உழவு-கள்ளாமை, கயமை- வரைவின் மகளிர்-மருந்து-மானம் போன்ற பலவற்றை வலிந்து பொருத்தமின்றிப் பொருள் வகையில் புகுத்தி இடர்ப்படுவதாலும் அவர் வீண் முயற்சி விருதாவாவது தெளிவும் தேற்றமுமாகும். அவை அனைத்தும் தமிழ்ப் புறப்பொருள் வகையில் அடங்கி அமைவதும் ஈண்டுச் சிந்திக்கத்தக்கதாம்."

வள்ளுவர் தமிழ் இலக்கியக் கோட்பாடோடு மேலே சொன்ன உறுதிப் பொருள்களை இணைத்துப் பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டார் போல் தோன்றுகிறது. மேலும் அறநெறியோடு இந்த உலகத்தில் வாழ்ந்தால் தானாகவே அமைவது வீடு என்பதால் சிந்தைக்கு எட்டாத வீட்டை கைவிட்டு வள்ளுவர் திருக்குறளை அறம், பொருள், காமம் என முப்பாலாய் தன் நூலில் பகுத்துக்கொண்டார் என்று விளக்கம் அளிப்பார் பரிமேலழகர்.
எனினும் குறளை ஒரே பாலாகக் கொண்டு நூல் முழுவதையுமே தொடர்ச்சியாக அறிந்து அதை ஒரு வாழ்வியல் நூலாகக் கொள்வது சிறப்புடைத்து.

குறள் அமைப்பு

இலக்கியப் படைப்புகள் சிறந்த வெற்றியினைப் பெறுவதற்குப் பாடு பொருளுடன் அவற்றின் வடிவமும் அடிப்படையாக அமையும். யாப்பின் கட்டுக்கோப்புடன் இருக்கும் இலக்கியங்கள் யாவும் இன்றும் அழியா இலக்கியங்களாக உள்ளன. எப்பொருள் எந்த யாப்பில் பாடினால் சிறக்கும் என்பதனை அறிந்த கவிஞர்கள் அந்தந்த அடிப்படையில் இலக்கிய வடிவங்களை வகுத்தனர். வெண்பா யாப்பும் அவ்விலக்கிய வடிவங்களுள் ஒன்றாகும்.
குறள் முழுமையும் குறுகிய எழுசீர் வெண்பாக்களால் ஆனது. குறட்பாக்களான வேறு ஒரு பெரிய இலக்கிய நூல் முன்பு இருந்ததாகத் தெரியவில்லை. இலக்கண நூல்கள் மட்டும் சில இருந்தனவென்று யாப்பருங்கலவிருத்தியால் தெரிகின்றது. வெண்பா பிரிவில் முதலில் வைக்கப்பட்ட பா வகை குறட்பா ஆகும். குறள் என்பது குறுமை - குறுகியதைக் குறிக்கும். குறுகிய பா குறட்பா. இது குறுவெண்பாட்டு என்றும், குறள் வெண்பா என்றும் சொல்லப்படும். முதல் அடி நான்கு சீரும், இரண்டாம் அடி மூன்று சீருமாக ஏழு சீர் கொண்டது குறள் வெண்பா. எளிதில் ஓதும் வண்ணம் பெரும்பான்மையும் ஓரசை முதல் மூன்றசைகளுடைய் எழுத்துக்களால் அமைந்துள்ளன. ஒவ்வொரு குறளும் முப்பதுக்குட்பட்ட எழுத்துக்களால் ஆனது. ஈற்றடியிலுள்ள இறுதிச்சீர், நேர், நிரை, நேர்பு, நிரைபு என்னும் நால்வகை அசையுள் ஓர் அசையாய் நிற்கும்.

"வெண்பாவில் வேற்றுச் சீர்கள் கலந்துவிட்டால் ஓசை கெட்டுப் போகும். உயர்ந்த ஒழுக்கத்தை வரையறுக்கும் நூலுக்கு வேற்றுச்சீர் விரவினும் ஓசை கெடும்; வெண்பா பாடுபவனுக்குத் துன்பம்; படிப்பனுக்கு எளிது. வெண்பாவை இருமுறை படித்தாலே பாடம் வந்துவிடும்; சிறந்த கருத்துக்களத் தாங்கி நிற்கும் பாக்களும் பயில்வார் மனத்தில் எளிதில் பதிய வேண்டும் என்பதால் வெண்பா யாப்பு வள்ளுவரால் விரும்பப்பெற்றது; வெண்பாவிற்கு உரிய ஓசை செப்பலோசை; செப்பல் என்றால் சொல்வது என்று பொருள்; அறக்கருத்துகளை எடுத்துச்சொல்வதற்கு செப்பலோசையுடன் பிற தளைகள் கலவாத தூய்மையுடையதாக வெண்பா கருதப்பட்டது."- இவை ச தண்டபாணி தேசிகர் கூறும் விளக்கங்கள்.
திருவள்ளுவர் தம்நூலை எல்லோரும் ஓதி உணர விரும்பியதால் செய்யுள் வழக்கினை மட்டும் மேற்கொள்ளாமல் பேச்சு வழக்கினையும் பின்பற்றிச் சென்றார்.

பகுப்பு

இந்நூலில் பெரும் பிரிவு பால் எனவும், சிறு பிரிவு இயல் எனவும், அதனில் சிறு பிரிவு அதிகாரம் எனவும் அமைக்கப் பெற்றுள்ளது.
பால்: பகுதி என்னும் பொருள்பட்டது.
இயல்: இலக்கணம் என்ற பொருள் கொண்டு பாலின் உட்பகுதியாகிய 'கற்பியல்' போன்றவற்றின் இலக்கணம் உணர்த்தும்.
அதிகாரம்: இயலின் உட்பிரிவாகி அதிகரித்தல் உடைய பகுதி எனப் பொருள்படும். ஏனைய நூல்களில், இப்பெயர் பெரும் பிரிவிற்கே வழங்கியிருக்கிறது. குறித்த பத்துக் குறளிலும் அந்தப் பொருள் அதிகரித்து நிற்பதால் இப்பெயர் இடப்பெற்றிருக்கலாம் என்கிறார் ச தண்டபாணி தேசிகர்.
பாக்கள்- ஒவ்வொரு அதிகாரமும் பத்து குறள்களை உடையது. இவ்வாறாக 133 அதிகாரங்களுக்கு மொத்தம் 1330 குறட்களால் ஆனது இந்நூல்.
ஒவ்வொரு குறளும் முப்பதுக்குட்பட்ட எழுத்துக்களில் அமைந்தவையாய் உள்ளது.
குறள் அமைப்பொழுங்கை நினைவிற்கொள்ள:
நூல் - 1 ; பால் - 3 ; இயல் - 13; அதிகாரம் - 133; பாக்கள் - 1330

குறளைப் பெரும் பிரிவாகப் மூன்று பாலாகப் பிரித்தாலும், அறமே மூன்று பகுதியாகப் பிரிக்கப்பட்டு, ஒழுக்கம் பற்றிய அறமும், பொருளீட்டல் பற்றிய அறமும், இன்பம் பற்றிய அறமுமாக இயற்றப்பட்டதாக அறிஞர்கள் கருதுவர்.

குறளின் பகுப்பு முறையும் மிகுந்த ஐயப்பாட்டுடனே நோக்கப்படுகிறது. திருக்குறள் மூலநூல் அதன் ஆசிரியரால் செய்யப்பட்ட மெய்யான பகுப்புக்களுடன் இன்றுவரை முழுவடிவில் கிடைக்கவில்லை. திருக்குறளின் முப்பால் முறையும், இயல்கள் பகுப்பும் அதிகார அடைவும் வள்ளுவரால் செய்யப்பட்டனவா? திருக்குறள் என்ற பெயரோ முப்பால்களின், இயல்களின் அதிகாரங்களின் தலைப்புக்களோ குறட்பாக்களைத் தொகுத்தவர்கள் தந்தனவா? பாக்களையும் அதிகாரங்களையும் வரிசைப்படுத்தியது வள்ளுவர்தானா? என்ற ஐய வினாக்கள் எழுப்பப்ப்ட்டுள்ளன..
உரை ஆசிரியர்கள் வழியும் திருவள்ளுவமாலை பாடியவர்கள் வழியும் பால், இயல், அதிகாரம், பாக்கள் ஆகியவற்றின் துணையுடன்தான் அமைப்பு முறையைக் கணிக்க முடிகிறது. பாக்கள் இயற்றி அதிகாரப் பெயரிட்டுப் பகுப்பு செய்தது வள்ளுவர்தான் என்பதில் பெரும்பாலும் எல்லா ஆய்வாளர்களும் உடன்படுகின்றனர். ஆனால் இயற்பகுப்பு, அதிகார வரிசை, குறள் உட்பகுப்பு, முறை வைப்பு இப்பொழுது உள்ளபடியே மூலநூலில் இருந்தது என்று சொல்ல முடியாதிருக்கிறது. இவற்றில் உரைகாரர்கள் வேறுபடுகின்றனர். எனவே இவை உரைகாரர்களது பிற்காலப் படைப்பே என்று ஆய்வாளர்கள் கருதுவர்.

பரிமேலழகர் பகுத்தபடி 9 இயல்கள்.
அறத்துப்பால்: (38 அதிகாரங்கள்)
1. பாயிரம்- 4அதிகாரங்கள்;
2.இல்லறவியல்- 20அதிகாரங்கள்;
3.துறவறஇயல்-13அதிகாரங்கள்;
4.ஊழ்-1அதிகாரம்.
பொருட்பால்: (70அதிகாரங்கள்)
5.அரசியல்-25அதிகாரங்கள்;
6.அங்கவியல்-32அதிகாரங்கள்;
7.ஒழிபியல்-13அதிகாரங்கள்.
காமத்துப்பால்: (25அதிகாரங்கள்)
8.களவியல் (7 அதிகாரங்கள்);
9.கற்பியல் (18 அதிகாரங்கள்)
மேற்சொன்னபடி மொத்தம் 133 அதிகாரங்களாகும்.
பரிமேலழகர் பகுப்பு முறையே பெரும்பாலும் பின்பற்றப்படுகிறது. ஆனால் “வள்ளுவரது முறையை உணர்வதற்குப் பரிமேலழகரைக் காட்டினும் பிற உரைகாரர்களே நாம் நம்பித் துணையாகக் கொள்வதற்கு உரியன. மணக்குடவர் நமக்கு துணையாகலாம் என்று தோன்றுகிறது. இவரது செய்யுள் வைப்புமுறை பெரும்பாலும் வள்ளுவரது ஆகலாம். ஆனால் இவர் உரை கிடைக்கக்கூடும் பிரதிகள் அனைத்தையும் ஒப்பு நோக்கி ஆராய்ச்சி முறையாகப் பதிப்பிக்கப்பெறவில்லை” என வையாபுரிப்பிள்ளை தனது ஆய்வுக் கருத்தில் சொல்கிறார்.

71,110 ஆகிய இரண்டு அதிகாரங்களுக்கும் 'குறிப்பறிதல்' என்ற பெயரே உள்ளது. எனவே 132 தலைப்புகளே 133 அதிகாரங்களுக்கு உள்ளன. காலிங்கர் தம் உரையில், 110-ம் அதிகாரத்தைக் 'குறிப்புணர்தல்' என வேறு பெயரில் குறிக்கிறார்.

பாயிரம்

பாயிரம் என்பது நூலைப் பற்றிய பருப்பொருள்களை அறிவிப்பது. பாயிரத்தால் நூற்போக்கு அறியப்படும். குறளின் முதல் நான்கு அதிகாரங்களான கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்பனவற்றைக் கூட்டாக பாயிரம் என்று கூறுவர். குறளின் கடவுள் வாழ்த்திற்கும் ஏனைய நூல்களின் கடவுள் வாழ்த்திற்கும் வேறுபாடு உண்டு. ஏனைய நூல்களில், எடுத்துக்கொண்ட நூல் இனிது நிறைவேறுதற்காகவும் நின்று நிலவுதற்காகவும் கவிஞர் கடவுளை வாழ்த்துவர். இந்நூலில் கடவுளின் பொது இயல்பும், சிறப்பியல்பும் கூறி, அவரை வாழ்த்துததால் உண்டாகும் பயனும் கூறப்படுகின்றன. குறளில் கடவுளை வாழ்த்துதலும் தலையாய அறம் அல்லது ஒழுக்கம் என்பது உணர்த்தப் பெற்றதேயன்றி, ஏனைய நூல்களைப் போலப் பயன் கருதிக் கடவுள் வாழ்த்தப்படவில்லை. கடவுளை வாழ்த்தாமல், கடவுளை வாழ்த்துதல் கற்றவருக்கும் மற்றவர்க்கும் உள்ள கடமை என்று அதனையும் ஓர் ஒழுக்க இயலாக வள்ளுவர் உரைத்தார்.
பாயிரத்திலுள்ள நான்கு அதிகாரங்களுமே வள்ளுவரால் இயற்றப்படவில்லை என்று ஒரு சாரார் கூறினர். வான் சிறப்பு அதிகாரம் எந்த வகையில் பாயிரத்தில் சேர்க்கப்பட்டது என்றும் வினவப்படுகிறது. ஆனால் அவர்கள் கூற்றில் வலு இல்லை என்பதும் பாயிரம் வள்ளுவர் இயற்றியதே என்பதுமே பெரும்பன்மையோர் கருத்தாகும்.

மூலநூலா? வழிநூலா?

திருக்குறளின் முதல்நூல்கள் எவை என்று ஆராய்ந்தவர்கள் மேம்போக்காக சில அடிப்படை உண்மையற்ற முடிவுகளைக் கூறினர். அவற்றில் ஒன்று குறள் வடமொழி இலக்கியங்களின் வழிநூல் என்பதாகும்.
தமிழ்நூல்களில் சங்க இலக்கியங்களும் தொல்காப்பியமும் எப்படி குறளுக்கு முன்னோடியாக வழிகாட்டி நூல்களாக இருந்திருக்கின்றனவோ அதேபோல சில வடமொழி இலக்கியங்களின் தாக்கமும் குறளுக்கு இருந்திருக்கலாம். எல்லா நூல்களும் பல்வேறு நூல்களிலிருந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு பிறப்பனவே என்ற புரிதலில் இருந்து எழும் எண்ணமாகவும் இது இருக்கக்கூடும். குறள் ஒருவரால் இயற்றப்பட்டதா? அல்லது பலரின் கூட்டு முயறசியால் நாலடியார் போல உருவான தொகை நூலா? என்றுகூட சிலர் ஐயுற்றனர். பரந்துபட்ட பல்வேறு துறைகளுக்குரிய விழுமிய கருத்துக்களை ஒரு தனிப் புலவரால் எடுத்துரைக்க இயலுமா என வியப்புற்றுதால் எழுந்த வினாக்களே இவை. "எல்லா நூல்களிலும் நல்லன வெடுத்து எல்லார்க்கும் பொதுப்படக் கூறுதல் இவர்க்கியல்பு" என்னும் பரிமேலழகர் (குறள் 322) கருத்துரை இங்கு நோக்கத்தக்கது.

குறள் எப்படி வடநூலின் வேறுபடுகிறது?
வள்ளுவர் செய்த பனுவலில் வடநூலார் வழிகாட்டும் வீடில்லை .
பெற்றோரும், மனைவி, குழந்தைகள் பசியால் வருந்துவராயின் தீயன செய்தாயினும் புறந்தருக என்பதும் இறக்க நேர்ந்தால் இளிவந்தன செய்தாயினும் உய்க என்பது வடநூன்முறையாகும். ஆனால் குறளோ உடம்பினது நிலையின்மையை வலியுறுத்தியும் மானத்தினது நிலையுடைமையைத் தூக்கியும் 'ஈன்றவள் பசி காண்பாளாயினும் சான்றோர் பழிக்கும் வினையைச் செய்யற்க' என்கிறது என்பதைப் பரிமேலழகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாணக்கியரும் சுக்கிரநீதி நூலுடையாரும் தத்தம் பொருள் நூல்களிற் கள்ளினை சிறிதளவுண்ண இடம் கொடுத்திருக்க, திருவள்ளுவர் கள்ளுண்ணாமையை நன்கு வற்புறுத்திச் சொல்லியுள்ளார். சுக்கிரநீதி சிறிதளவு உண்ணப்படும் கள் மதி நுட்பத்தையுந் தருவதாகும் என்கிறது. குறள் கள்ளுண்பவரைச் சாடி அவர்களைச் செத்தார் என்கிறது.
பிறப்பால் உயர்வும் பீடில்லாத் தாழ்வும் மக்களுக்கு என்றும் மாறா நிலையில் உள்ளது என்று கூறி சாதிக்கொரு நீதி விதித்தது வடவர் நூல்கள். அதை மறுத்து ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்று முழங்கும் குறள் பிறப்பாலுரிமையும், சாதி நீதியும் பேசாது மட்டுமல்ல; ‘பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்’ என்று நம் சமுதாயக் கொள்கையையும் வரையறுக்கிறது.
எல்லா ஸ்மிருதிகளும் நான்குவருணங்கள் நான்கு புருஷார்த்தங்கள் நான்கு ஆசிரமங்கள் இவற்றைப்பற்றியே விரித்துரைக்கின்றன. ஒரு நீதிநூலை இன்னொன்றுடன் நாம் வேறுபடுத்திப்பார்ப்பது எவ்வகையில் அது இந்த பொதுமையில் இருந்து வேறுபடுகிறது என்பதை வைத்தே. குறள் நான்குவருணங்களைப் பற்றிப் பேசவே இல்லை. நான்கு புருஷார்த்தங்களில் வீடுபேறை விட்டுவிட்டது.
ஆல்பர்ட் சுவைட்சர் என்ற ஜெர்மனி நாட்டைச் செர்ந்த உலகப் புகழ் பெற்ற அறிஞர் "பண்டைக்கால இந்தியாவில் திருக்குறளில் காணாப்படுவதைப் போன்ற அன்புவழிப்பட்ட செயல்முறை வாழ்க்கையும், வாழ்க்கை மறுப்பு இன்மைக் கோட்பாடும் புத்த,(சமண)சமயத்திலோ, பகவத்கீதை வழி வளர்ந்துள்ள இந்து சமயத்திலோ இடம் பெறவில்லை" என்று தெளிவுபடக் கூறியுள்ளார்.
இவை குறளுக்கும் வடநூலார் மரபுக்கும் உள்ள வேற்றுமைகளில் ஒருசில. இதுவே குறள் வழிநூல் அல்ல; அது தனித்தன்மை வாய்ந்த மூலநூலே என்பதைத் தெள்ளிதின் விளக்கும்.

குறளின் சிறப்புக்கள் சில

தானே முழுது உணர்ந்து தண்தமிழில் ஓதற்கும் உணர்தற்கும் எளிதான குறளைப் படைத்தார் வள்ளுவர். “மிக எளிய நடை; பளிங்கு போலத் தெளிவாகத் தோன்றும் சிந்தனை, பொருத்தமான, அழுத்தமான, சிறிய தேர்ந்த சொல்லாட்சி, ஆழமான கல்வி, பண்பாடு, ஞானம், விரிந்து பரந்த மனப்பான்மை, தேவையானவற்றையெ தேர்ந்து தரும் திறம், மேன்மையான நகைச்சுவை, முழுமையான அறவுரை ஆகிய அனைத்தும், சேர்ந்து, அவரை எக்காலத்திலும் தொழத்தக்கவராய் ஆக்கியுள்ளன; தமிழ் மக்களின் மறைநூலாக அவரது நூல் மதிக்கப்படுகிறது.” என்று எஸ். வையாபுரிப் பிள்ளை குறளுக்கு ஒரு தெளிவான திறனுரை தந்துள்ளார்.

வள்ளுவர் தாம் கூற விரும்பும் பொருளை நன்கு உணர்த்துவதற்குப் பல்வேறு உத்திகளையும் மொழி நடைகளையும் பயன்படுத்துகின்றார். முன்னிலைப் படுத்தி விளித்தலையும், ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினா-விடைப் பாணியில் உரையாடல்களை அமைத்தலை ஒருவகைக் கலைத்திறனாகக் கையாண்டுள்ளார். உபநிடதங்கள், புத்தரின் போதனைகள், பிளேட்டோவின் உரையாடல்கள் போன்ற மெய்யியல் நூல்களும் இந்த உத்தி பின்பற்றப்படுவதை அறிஞர்கள் சுட்டிக்காட்டுவர்.

நூல் மிகச்சிறந்த அமைப்புடையது. மிக அரிய செய்திகளை வரையறைப்படுத்திச் சுருக்கமாக கூறுகிறது. சொல் வளனும், பொருட்சிறப்பும், நுண்ணோக்கும், அணி நலனும், ஓசையொழுக்கும், ஆழ்கருத்தும் ஒருங்கு நிறைந்தது குறள். சொல், தொடர், குறிப்புப்பொருள் எனப்பலவற்றில் நுட்பமான உத்திகளைப் பயன்படுத்திச் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது குறள். நூல் முழுவதும் உயர்வு நவிற்சியையோ, இல்பொருளையோ எடுத்துக் கூறாது பெரும்பாலும் தன்மை நவிற்சியாக இயற்கையோடு பட்டு, மக்கள் மனத்தில் தைக்குமாறு அழகுற எளிய நடையில் உவமைகளை ஆண்டுள்ள திறம் வியக்கவைக்கும். இப்பனுவலில் தமிழின் இனிமை உண்டு; தத்துவத்தின் தெளிவுண்டு; வாழ்க்கையின் விளக்கமுண்டு; உணர்வும் உண்மையும் ஒன்றி இருக்கும்; அறத்தோடு பொருளும் பொருளோடு இன்பமும், இன்பத்தோடு அறமும் பொருந்திக் கிடக்கும்; இனிமையும் எளிமையும் இணந்திருக்கும்; ஆழமும் அகலமும் அமைந்திருக்கும்.

சமயத்திலும் வாழ்க்கையிலும் மேல்நாட்டார் பெரும்பாலும் உலகையும் வாழ்க்கையயும் ஏற்றுக்கொள்ளுதல் (World and Life Affirmation) என்ற கோட்பாட்டையே பின்பற்றுகின்றனர் எனவும் இந்தியரோ பெரும்பாலும் உலகையும் வாழ்க்கையையும் மறுத்தல்(World and Life Negation) என்ற கோட்பாட்டைத் தழுவுகின்றனர் எனவும் மெய்யியல் அறிஞர் ஆல்பர்ட்டு சுவெட்சர் கருதினார். பிறப்புக்களினின்று விடுதலையடைதல் வேண்டும் என இந்தியச் சமயங்கள் கற்பிப்பதால் வாழ்க்கையும் உலகும் துன்பமானவை அல்லது குறையுள்ளவை என அவற்றை மறுத்து விடுதலையைத் தேடுதல் இந்திய மக்களின் நோக்கமாகிறது. உலகையும் வாழ்க்கையையும் மறுத்தல் என்னும் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளும் மக்கள் தீமை செய்யாமையையே சிறந்த அறமாகக் கொள்வார் அன்றி நன்மையைச் செய்தலாகிய அறங்களில் அதிகம் கருத்தைச் செலுத்தார். தீமை செய்யாமை ஒருவரை உலகினின்றும் காக்கிறது; நன்மை செய்தாலோ ஒருவரை உலக வாழ்க்கையில் ஈடுபடும்படி செய்யும். ஆகவே உலகையும் வாழ்க்கையையும் மறுக்க விழைவோர் தீமை செய்யாது தம்மைக் காத்துக் கொள்வாரேயன்றி நன்மை செய்தல், பிறர்க்கு உதவி செய்தல், பிறர் துன்பம் நீக்குதல் ஆகிய அறச் செயல்களில் போதிய அளவு ஈடுபடார் என சுவைட்சர் கருதினார். குறளை நன்கு ஆய்ந்துணர்ந்த சுவைட்சர், பிற இந்திய மொழி நூல்கள் வாழ்வின் நிலையாமையை வலியுறுத்தக் குறளோ வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உடன்பாட்டு நிலையை வலியுறுத்தும் நூல் என்று கூறினார்.
உலகமும், உயிர்களும், மானிட வாழ்வும் கனவுமல்ல, பொய்யுமல்ல, மாயையுமல்ல. மாறாக அவை மனிதன் உணரக்கூடிய உண்மையே என்னும் உடன்பாட்டுக் கொள்கையை ஏற்றுக் கொண்டு, மனிதனைச் செயற்பாட்டு வாழ்வில் நின்று ஒழுகச் செய்வதற்கு ஊக்கமளித்திடும் நெறியாகவும் குறளறம் மாட்சிமை கொண்டு விளங்குகிறது.

பொருளும் காமமும் பெரிதாகக் கொண்ட நூலை வெறும் அறநூலென்பது தவறு. குறள் ஒரு அறநூல் மட்டுமல்லாது கவிச்சுவையோடு கூடிய வாழ்வியல் நூலுமாகும். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத பல கருத்துக்களைக் கொண்டு, சமயம், காலம், இடம், இனம் என்ற வேறு பாட்டுக்கு அப்பாற்பட்ட அடிப்படையான உண்மைகளச் சொல்லுகிறது. அற நூல் என்பதற்கும் வாழ்வு நூல் என்பதற்கும் நிரம்ப வேறுபாடு உண்டு. அற நூல்கள் பல சமயச் சார்பும் அறநெறியை விதிகளாக வகுத்துக் கூறும் போக்கும் மிக்கன. குறள் அறக்கருத்துகளைக் கூறும் வகையில் மட்டும் அற நூலுடன் ஒற்றுமை உடையது என்பதைத் தவிர தனக்கெனப் பல தனித் தன்மைகளை உடையது. பொருட்டொகையாலும், முறைவகையாலும் குறளுக்கு ஈடான நூல் வேறொன்று இல்லை.

இன்றைய காலகட்டத்தின் குடியரசுப் பண்புகளுடன் ஒத்துப்போகின்றவையாக குறட்பாக்கள் இருக்கின்றதையும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

மனித வாழ்க்கையினை உயர்ந்த வழியில் அமைத்துக் கொள்ளுவதற்கு அடிகோலும் நூல் இது. பொதுவாக உலகில் வழங்கிவரும் எல்லா அற நூல்களும் இறை வழிபாட்டினையும் தத்துவார்த்தமான சிந்தனையுடன் போதனை நுலாக மட்டுமே உள்ளன. ஆனால் திருக்குறள் மனிதன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய நெறிகள் அனத்தையும் கூறும் நடைமுறை நூலாகும்.



-- Edited by Admin on Saturday 19th of August 2023 03:02:22 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard