New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 23. ஈகை ( பிறர்க்கு கொடை வழங்குதல் )


Guru

Status: Offline
Posts: 24709
Date:
23. ஈகை ( பிறர்க்கு கொடை வழங்குதல் )
Permalink  
 


23. ஈகை

( பிறர்க்கு கொடை வழங்குதல் )

221. வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங்
        குறியெதிர்ப்பை நீர துடைத்து.

222. நல்லா றெனினுங் கொளறீது மேலுலக
        மில்லெனினு மீதலே நன்று.

223. இலனென்னு மெவ்வ முரையாமை யீதல்
        குலனுடையான் கண்ணே யுள.

224. இன்னா திரக்கப் படுத லிரந்தவ
        ரின்முகங் காணு மளவு.

225. ஆற்றுவா ராற்றல் பசியாற்ற லப்பசியை
        மாற்றுவா ராற்றலிற் பின்.

226. அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன்
        பெற்றான் பொருள்வைப் புழி.

227. பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
        தீப்பிணி தீண்ட லரிது.

228. ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை
        வைத்திழக்கும் வன்க ணவர்.

229. இரத்தலி னின்னாது மன்ற நிரப்பிய
        தாமே தமிய ருணல்.

230. சாதலி னின்னாத தில்லை யினிததூஉ
        மீத லியையாக் கடை.



குறள் 221

வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறிஎதிர்ப்பை நீரது உடைத்து.

 

சொல்லுரை:

வறியார்க்கு - ஏழைகளுக்கு

ஒன்று - ஏதேனும் ஒன்றை

ஈவதே - கொடுப்பதே

ஈகை - ஈகைக்குணமாகும்

மற்று - மற்ற

எல்லாம் - கொடைகள் எல்லாம்

குறிஎதிர்ப்பை – அளவுக் குறியிட்டுக் கொடுத்து திரும்ப எதிர்பார்க்கும்

நீரது - தன்மையை

உடைத்து - உடையதாகும்

 

பொருளுரை:

ஏழைகளுக்கு ஏதேனும் ஒன்றைக் கொடுப்பதே ஈகைக்குணமாகும். மற்ற கொடைகள் எல்லாம் அளவுக் குறியிட்டுக் கொடுத்து திரும்ப எதிர்பார்க்கும் தன்மையை உடையதாகும்.

 

விளக்கவுரை:

பொருள் இல்லாதவர்க்கும் திருப்பிச் செய்ய இயலாத ஏழைகளுக்கும் அவர்களுக்கு வேண்டிய பொருளைக் கொடுப்பதே ஈகை என்னும் அறச்செயலாகும். மற்றது எல்லாம் திரும்பப் பெறும் நோக்குடன் எதிர்பார்த்துக் கொடுப்பது. ‘குறியெதிர்ப்பை நீர துடைத்து’ என்பது அளவு குறித்துக் கொடுத்து அதே அளவில் திரும்பப் பெற்றுக்கொள்ளும் கடன் போன்றது. மேற்கூறியவற்றின்மூலம் ஈகையின் இலக்கணம் கூறப்பட்டது.



குறள் 222

நல்லா றெனினும் கொளறீது மேலுலக
மில்லெனினு மீதலே நன்று.

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்எனினும் ஈதலே நன்று.

 

சொல்லுரை:

நல்லாறு - நல்ல நெறிகளுக்காக

எனினும் - என்றாலும்

கொளல்தீது - பிறர்பொருளை அடைய முற்படுதல் தீதாகும்

மேலுலகம் - மேல் உலகத்தை அடைதல்

இல்எனினும் – இல்லை என்றாலும்

ஈதலே - பிறருக்கு ஒன்றைக் கொடுப்பதே

நன்று - நல்லது

 

பொருளுரை:

நல்ல நெறிகளுக்காக என்றாலும் பிறர்பொருளை அடைய முற்படுதல் தீதாகும். மேல் உலகத்தை அடைதல் இல்லை என்றாலும் பிறருக்கு ஒன்றைக் கொடுப்பதே நல்லது.

 

விளக்கவுரை:

நல்ல நெறிகளுக்காக என்றாலும் பிறருடை பொருளை அடைய முற்படுதல் தீமை பயக்கும். இங்கு ‘கொளல்தீது’ என்று குறிப்பிடப்படுவது கொடுக்கும் நிலையில் இல்லாதவர்களிடம் கொடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி பொருளைப் பெற்றுக்கொள்ளுதல் தீது என்பதாம். திருமங்கை ஆழ்வார் வழிப்பறி கொள்ளையடித்து திருமாலுக்கு கோயில் கட்ட முனைந்ததைப்போல. ஏதோ ஒரு காரணத்தினால் மேல் உலகம் உனக்கு இல்லை என்று கூறப்பட்டாலும் ஈதல் செய்தலே சிறந்ததாகும்.



குறள் 223

இலனென்னு மெவ்வ முரையாமை யீதல்
குலனுடையான் கண்ணே யுள.

இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன்உடையான் கண்ணே உள.

 

சொல்லுரை:

இலன்என்னும் - தன்னிடம் ஒரு பொருளும் இல்லை என்னும்

எவ்வம் - இழிசொல், துன்பமான சொல்

உரையாமை - பிறரிடம் கூறாத தன்மையும்

ஈதல் - உள்ளதைப் பிறருக்கு கொடுக்கும் தன்மையும்

குலன்உடையான் - நற்குடியில் பிறந்தவன்

கண்ணே - இடத்தே

உள - உள்ளதாகும்

 

பொருளுரை:

தன்னிடம் ஒரு பொருளும் இல்லை என்னும் இழிசொல்லை, துன்பமான சொல்லை பிறரிடம் கூறாத தன்மையும் உள்ளதைப் பிறருக்கு கொடுக்கும் தன்மையும் நற்குடியில் பிறந்தவன் இடத்தே உள்ளதாகும்.

 

விளக்கவுரை:

வறியவர்கள் இரந்து பொருள் கேட்கும்போது ‘தன்னிடம் ஒரு பொருளும் இல்லை’ என்னும் இரப்பவர்க்குத் துன்பம் தரும் சொல்லை உரைக்காதிருக்கும் தன்மையும், தன்னிடம் உள்ள பொருளில் ஏதேனும் ஒன்றைப் பிறருக்குக் கொடுத்து உதவும் ஈகைக்குணமும் நற்குடியில் பிறந்தவனிடம் உள்ள நல்ல குணமாகும்.



குறள் 224

இன்னா திரக்கப் படுத லிரந்தவ
ரின்முகங் காணு மளவு.

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு.

 

சொல்லுரை:

இன்னாது - துன்பமானது

இரக்கப் படுதல் - யாசிப்பதைப் பார்ப்பது

இரந்தவர் - யாசிப்பவரின்

இன்முகம் - இனிய மலர்ந்த முகத்தை

காணும் - காணும்

அளவு - வரையிலும்

 

பொருளுரை:

துன்பமானது யாசிப்பதைப் பார்ப்பது யாசிப்பவரின் இனிய மலர்ந்த முகத்தைக் காணும் வரையிலும்.

 

விளக்கவுரை:

ஒரு பொருளை வேண்டி இரந்து நிற்பவரை நோக்கி பொருள் கொடுப்பதற்கு முன் இரக்கப்பட்டு அவனை பார்ப்பது துன்பமானதாகும். ஏனெனில், இரக்கப்படுவதால் பொருள் கொடுக்கப்படுவது காலதாமதப்படுத்தப்படுகிறது. பொருள் வேண்டி நின்றவன் பொருளை இன்னும் பெறவில்லையாதலால் அவன் இன்பம் அடையவில்லை. அதனால், அவன் முகம் இன்பத்தால் மலர்ச்சி அடையவில்லை. ஆதலால், இரக்கப்படும் காலத்தை தவிர்த்து, பொருளை விரைந்து கொடுத்து பொருள் வேண்டியவனின் இன்முகத்தை விரைந்து காண்பதே சிறப்பாம்.



குறள் 225

ஆற்றுவா ராற்றல் பசியாற்ற லப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்.

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.

 

சொல்லுரை:

ஆற்றுவார் - தவம் புரிவோரின்

ஆற்றல் - வல்லமை

பசியாற்றல் - பசியை பொறுத்துக்கொள்ளும் ஆற்றலாகும்

அப்பசியை - அந்த பசியை

மாற்றுவார் - போக்குவோரின், நீக்குவோரின்

ஆற்றலின் - வல்லமைக்கு

பின் - பிற்பட்டதேயாகும்

 

பொருளுரை:

தவம் புரிவோரின் வல்லமை பசியை பொறுத்துக்கொள்ளும் ஆற்றலாகும். அந்த பசியை போக்குவோரின், நீக்குவோரின் வல்லமைக்குப் பிற்பட்டதேயாகும்.

 

விளக்கவுரை:

தவம் புரிவோர் தம் உடல் இயக்கத்திற்கு காற்றை மட்டும் சுவாசித்து சூரிய ஒளியின் சக்தியைப் பெற்று அதன்மூலம் வரும் ஆற்றலால் உயிர் வாழ்வர். அவர்கள் பசிப்பிணியை பொறுத்துக்கொண்டு தவம் ஒன்றே அவர்களின் நோக்கமாக இருக்கும். தம் பசியை பொறுத்துக்கொள்ளும் ஆற்றல் இருந்தாலும் பிறர் பசியை போக்கும் நிலையில் அவர்கள் இல்லை. ஆனால், ஈகைக்குணமுள்ளவன் தன் பசியையும் போக்கி, பிறர் பசியையும் போக்கும் வல்லமை உடையவனாகிறான். ஈகை நெஞ்சமுள்ளவன் இவ்வுலகிலுள்ள உயிர்களின் பசியை போக்கும் ஆற்றலானது, தம் பசியைப் பொறுத்துக்கொள்ளும் தவம் புரிவோரின் ஆற்றலைவிட சிறந்தது என்பதாம்.



குறள் 226

அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
பெற்றான் பொருள்வைப்பு உழி.

 

சொல்லுரை:

அற்றார் - தன்னிடம் ஒரு பொருளும் இல்லாத வறியவர்களின்

அழிபசி - அவரை அழிக்கும் பசியை

தீர்த்தல் - போக்குதல்

அஃதுஒருவன் - அந்த அறச்செயலானது ஒருவன்

பெற்றான் - செல்வத்தைப் பெற்றவன்

பொருள் - தன் செல்வத்தை

வைப்பு - சேமித்து வைக்கும்

உழி - இடமாகும்

 

பொருளுரை:

தன்னிடம் ஒரு பொருளும் இல்லாத வறியவர்களின் உடலையும் எண்ணங்களையும் கொல்வதுபோன்ற பசியைப் போக்குதல் என்ற அந்த அறச்செயலானது செல்வத்தைப் பெற்றவன் தன் செல்வத்தை சேமித்து வைக்கும் இடமாகும்.

 

விளக்கவுரை:

ஒருவன் பொருளை சேமித்து வைக்க எண்ணுவது தனக்கு அப்பொருள் நல்ல முறையில் எதிர்காலத்தில் பயன்படும் என்ற காரணத்தினால். தன் இல்லத்திலோ மற்ற இடத்திலோ சேர்த்து வைக்கப்படும் பொருள் களவு, இயற்கை சீற்றங்கள் முதலியவற்றினால் காணாமல் போக வாய்ப்புண்டு. ஆனால், ஒன்றுமற்ற வறியவர்களின் கொடிய பசியை போக்குவானாயின் அதுவே செல்வத்தைப் பெற்றவன் தம் பொருளை சேமித்து வைக்கும் சிறந்த இடமாகும். தன்னை கொல்வதுபோல் வருத்துவதினாலும், குடிபிறப்பு, கல்வி, மானம், அறிவுடைமை போன்ற பண்புகளையும் அழிப்பதினாலும் அழிபசி எனப்பட்டது. ‘பசி வந்தால் பத்தும் பறந்துபோம்’ என்பதுபோல.



குறள் 227

பாத்தூண் மரிஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்ட லரிது.

பாத்துஊண் மரிஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.

 

சொல்லுரை:

பாத்துஊண் - பகுத்து உண்ண

மரிஇ யவனைப் - பழகிய அவனை

பசியென்னும் - பசி என்னும்

தீப்பிணி - கொடிய நோய்

தீண்டல் - நெருங்குவது

அரிது - அரிதாகும்.

 

பொருளுரை:

தன்னிடம் உள்ளவற்றை பகுத்து உண்ண பழகிய ஒருவனை பசி என்னும் கொடிய நோய் நெருங்குவது அரிதாகும்.

 

விளக்கவுரை:

பசியென்பது ஒவ்வொருவருக்கும் வேளைதோறும் வருவது. நல்லோர், தீயோர் என்று பாகுபாடின்றி அனைவரையும் பசி துன்புறுத்தும். பிற நோய்களால் ஏற்படுத்த முடியாத வலியையும், மனத்துயரத்தையும், துன்பத்தையும் செய்யும் தன்மை பசிக்கு இருப்பதால் அது தீப்பிணி எனப்பட்டது. தன்னிடம் உள்ள உணவை மற்றவர்களுடன் பகிர்ந்து உண்ணும் தன்மையுடையவனுக்கு செல்வம் என்றும் குன்றாதிருக்கும். மாறாக, அவன் செல்வம் ஒருவேளை காலமாற்றத்தால் குறைய நேர்ந்தாலும், அவன் மற்றவர் பசிப்பிணியை போக்கியவன் என்பதினால் அவன் பசியினால் துன்பப்படுவதற்கு யாரும் விடமாட்டார் என்பதும், அவன் முன்பின் அறியாத வேறிடத்தில் இருந்தாலும் அவன் செய்த நல்வினைப் பயன் அவன் பசிப்பிணியை போக்கும் என்பதாம்.



குறள் 228

ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். .

ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
வைத்திழக்கும் வன்கண் அவர்.

 

சொல்லுரை:

ஈத்துஉவக்கும் - கொடுத்து மகிழும்

இன்பம் - இன்பத்தை

அறியார்கொல் - அறியமாட்டார்களோ

தாம்உடைமை - இது தம்முடைய பொருள் என்று

வைத்திழக்கும் - சேர்த்து வைத்து பின்னர் இழந்துவிடும் தன்மையர்

வன்கண்அவர் - இரக்கமற்றவர் ஆவர்.

 

பொருளுரை:

வறியவர்க்கு கொடுத்து மகிழும் இன்பத்தை அறியமாட்டார்களோ? இது தம்முடைய பொருள் என்று சேர்த்து வைத்து பின்னர் இழந்துவிடும் தன்மையர் இரக்கமற்றவர் ஆவர்.

 

விளக்கவுரை:

தம்மிடம் உள்ள பொருளை வறியவர்க்கு உவந்து கொடுத்து, அதனால் வறியவன் பெறும் இன்பத்தினைக் கண்டு கொடுத்தவனும் உவகையின்பம் கொள்கிறான். இந்த இன்பம் மனத்திற்கு நன்மை பயக்கும். ஆன்மாவிற்கு பலம் சேர்க்கும். பொருளை வறியவர்க்கு ஈயாமல் சேர்த்து வைத்து பின்னர் களவு, இயற்கை சீற்றம் போன்றவற்றால் இழந்துவிடுபவர்கள் வறியவர்க்கு ஈந்து அதனால் வரும் உவகையின்பத்தை அறியாத அறிவிலிகள் என்கிறார். ஈந்து என்ற சொல் ஈத்து என நீண்டது.



குறள் 229

இரத்தலி னின்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல்.

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.

 

சொல்லுரை:

இரத்தலின் - யாசிப்பதைவிட

இன்னாது - துன்பமானது

மன்ற - நிச்சயமாக, உறுதியாக

நிரப்பிய - சேர்த்து வைத்த பொருளை, நிரப்பி வைத்த பொருளை

தாமே - தான் மட்டுமே

தமியர் - தனித்திருந்து

உணல் - உண்ணுதல்

 

பொருளுரை:

தான் சேர்த்து நிரப்பி வைத்த பொருளை பிறருக்கு ஈயாமல் தான் மட்டுமே தனித்திருந்து உண்ணுதல் யாசிப்பதைவிட துன்பமானது.

 

விளக்கவுரை:

ஈகைக்குணமற்றவன் மேன்மேலும் பொருளீட்டி சேர்த்து வைப்பதிலேயே தன் உடலையும் உள்ளத்தையும் வருத்தி செயல்படுவான். எவ்வளவு பொருள் சேர்த்தாலும் மனநிறைவு கொள்ளாமல் மேன்மேலும் பொருள் சேர்ப்பதிலேயே நாட்டம் உள்ளவனாய் இருப்பான். பிறர்க்கு ஈவதால் பொருள் குறைந்துவிடுமென்று எண்ணி யாருக்கும் ஈயாமல், தன்னுடைய தேவைக்கு மட்டும் பயன்படுத்திக்கொண்டு, உண்பதுகூட பிறருடன் பகிர்ந்துகொள்ளாமல் தனித்து உண்ணும் தன்மை உடையவனாவான். இதனால் அவன் உள்ளமும் உடலும் எவ்வித இன்பமும் கொள்வதில்லை. உடலையும் உள்ளத்தையும் வருத்தி பொருள் சேர்ப்பதினால் அது அவனுக்கு துன்பத்தையே தருகிறது. மாறாக இரப்பவன் உடல் நலத்துடன் வாழ்வதோடு தாம் பெற்ற உணவையும் பகிர்ந்தளித்து உண்கிறான். அதனால் தனித்து உண்ணுதலை இரத்தலின் இன்னாது என்றார்.



குறள் 230

சாதலி னின்னாத தில்லை யினிததூஉ
மீத லியையாக் கடை.

சாதலின் இன்னாதது இல்லை இனிதுஅதூஉம்
ஈதல் இயையாக் கடை.

 

சொல்லுரை:

சாதலின் - சாவதைவிட

இன்னாதது - துன்பமானது வேறு ஒன்று

இல்லை - இல்லை

இனிது - இன்பமாகும்

அதூஉம் - அதுவும்

ஈதல் - வறியவர்க்கு கொடுத்தல்

இயையாக் - இயலாத

கடை - இடத்து

 

பொருளுரை:

சாவதைவிட துன்பமானது வேறு ஒன்று இல்லை. வறியவர்க்கு கொடுத்தல் இயலாத இடத்து அதுவும் இன்பமாகும்.

 

விளக்கவுரை:

ஒருவருக்கு சாதலைவிட துன்பமான ஒன்று வேறில்லை. ஆனால், வறியவன் ஒருவன் தன்னிடம் வந்து யாசிக்கும்பொழுது ஒன்றும் கொடுக்கமுடியாத நிலை உண்டாயின், ஈகைக்குணம் உள்ளவனுக்கு அவ்வாறு கொடுக்க இயலாததால் உண்டாகும் இழிநிலையில் வருந்தி துன்பப்பட்டு வாழ்வதைவிட சாதல் இன்பமானதாக ஆகிறது. பிறருக்குப் பயன்படாத இவ்வாழ்வு வாழ்வதைவிட உடலை விட்டு உயிர் நீங்குதல் இனிதாகிறது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard