New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பண்டைத் தமிழர் அறவழியில் திருக்குறளும் சிலப்பதிகாரமும்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
பண்டைத் தமிழர் அறவழியில் திருக்குறளும் சிலப்பதிகாரமும்
Permalink  
 


https://www.facebook.com/1510063999254940/posts/2294955494099116/
அவன் கண்ணகியை நோக்கி " மாபெரும் பத்தினித் தெய்வமே! உனக்குத் தீங்கு செய்த அன்றைக்கே இந்த ஊரை எரித்து அழிக்கும் கட்டளை எனக்கு வந்துள்ளது . ஆனால் எல்லோரையும் எரிப்பதா என யோசித்தேன் . யாரையெல்லாம் எரியும் தீயிலிருந்து காக்க வேண்டும் , யார் எரியாது இருக்க வேண்டும் என்ற கட்டளை இடுவாயாக " எனக் கேட்டான் .
"மாபத்தினி ! நின்னை மாணப் பிழைத்த நாள்
பாய் எரி இந்தப் பதி ஊட்டப் பண்டை ஓர்,
ஏவல் உடையே னால்! யார் பிழைப்பர் ஈங்கு" என்னப்
"பார்ப்போர் அறவோர் பசு பத்தினிப் பெண்டிர்
மூத்தோர் குழவி எனும் இவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்க!" என்று காய்த்திய
பொற்றொடி ஏவப்புகை அழல் மண்டிற்றே
நல்தேரான் கூடல்நகர்.'
என இதனை சிலப்பதிகாரம் சொல்கிறது .
தீயால் சிலரை எரிக்க வேண்டாம் என கண்ணகி ஆறு வகைப்பட்ரோரைக் கூறுகிறாள் . அதில் ஐந்து மானிடப்பிறவிகள் . ஒன்று விலங்குக் கூட்டம் ஆன பசுக் கூட்டம் .
மானிடப் பிறப்பில் பார்ப்பனர் எனும் குலத்தார் , அறவோர் எனும் நல்லவர்கள் , பத்தினிப் பெண்கள் அதாவது கற்புநெறியில் வாழும் பெண்டிர் , வயதான மூத்தவர்கள் , குழந்தைகள் இவர்களைத் தவிர்த்து தீமை செய்வோர்களை மட்டும் எரிக்கச் சொன்னாள் . விலங்குகளில் பசுவைத் தவிர அனைத்தையும் எரிக்கச் சொன்னாள்
மேலே சொன்னதில் குழந்தைகள் ஒரு பாவமும் அறியாதது . குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பர் . வஞ்சமில்லாதவர்கள் குழந்தைகள் . குழந்தைகளுக்கு நாளை பற்றிய நேற்றைப் பற்றிய கவலை ஏதும் கிடையாது . பிறர் சொத்தை அபகரிக்கும் பேராசையும் இருக்காது . மனம் அலைபாயாது. ஆணவம், அகம்பாவம் இருக்காது .
அதனால்தான்' மீண்டும் ஒரு குழந்தையாகப் பிறப்பெடுத்தால் ஒழிய இறைவனின் ராஜ்ஜியத்தில் நுழைய முடியாது ' என இயேசு சொன்னதாகச் சொல்வர் . ஞானம் அடைந்தவர்கள் எதையும் ஏற்று அதன் போக்கிலேயே வாழ்வது போல குழந்தைகள் கள்ளம் கபடமின்றி நிகழ்காலத்தில் மட்டும் வாழ்வோர் . அதனால் விட்டுவிடச் சொன்னாள் என நினைக்கிறேன்.
மூத்தவர்கள் . இவர்கள் வயதான பிறகு தமது கடைசிக் காலத்தில் வாழ்வில் உயிர் போகும் வேளையில் இறை சிந்தனையோடு் இனி எந்தத் தவறையும் செய்ய வேண்டாம் என இருப்பர். மறுமைக்குத் தேவையான புண்ணியங்கள் மட்டும் செய்து தலங்கள் பலச் சென்று புனித நீராடி புகும்கதியை அதாவது முக்தியை எதிர்நோக்கி இருப்பர் என்ற நோக்கில் விட்டுவிடச் சொன்னாள் என எண்ணுகிறேன் .
பத்தினிப் பெண்கள் பட்டியலில் கண்ணகியே முதலில் இருப்பதால் இதுவும் சரியே . பதிவிரதைகள் என்போர் கணவனைத் தெய்வமாக மதிப்போராம் . அதனால் விதிவிலக்கு அளித்தாள் .
அறவோர் என்போர் அநீதி இழைக்காது நேர்மையாக நீதி வழி நடப்போர் மற்றும் யாருக்கும் நன்மையன்றி எந்தத் தீங்கும் செய்யாதோர் ஆகையால் பட்டியலில் சேர்த்தாள் .இதுவும் சரி.
பார்ப்போர் , பசு இந்த இரண்டையும் விடச் சொன்னது கொஞ்சம் ஆராயத்தக்கது .
நானும் பசுவை நேசிப்பவன் . எனது வீட்டில் பசுமாடுகள் , கன்றுகள் எப்போதும் இருக்கும் . அதனோடு தினமும் நான் கொஞ்சுவதும் உண்டு . அதே நேரத்தில் எனது வீட்டு நாய்க்கும் அன்பு காட்டுபவன் .
பசு என்பது சனாதன மதத்தில் ஒரு தெய்வீகப் பிறவியாகக் கருத்தப்படுவதால் இளங்கோ இதனைச் சேர்த்தாரா என்பதை ஆய்வாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் . அதே சனாதன மதத்தின் தாக்கம் இருந்த சூழலால் பார்ப்பனர் என்பாரையும் சேர்த்தாரோ ?
பார்ப்பு என்ற சொல்லில் இருந்து பார்ப்பனர் என்ற சொல் வந்ததாக பாவலேறு பெருஞ்சித்திரனார் உரைக்கிறார் . பார்ப்பு எனில் பார்த்தல் . ஜோதிடம் , ஜாதகம் , குறி முதலியன பார்த்ததால் பார்ப்போர் என அழைக்கப்பட்டனர் . அந்தணர் , பிராமணர் , அய்யர், ஆரியர் எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டாலும் சனாதனத்தைக் கட்டிக் காக்கும் வேதம் ஓதுவோர் பார்ப்போர் எனப்பட்டோர்.
துவிஜர் எனப்படும் இருபிறவியாளர்கள் இவர்களாம் . முப்புரி நூலான பூணூல் அணியும் முன் ஒருபிறவியும் உபநயனம் என்கிற பூணூல் அணிந்தபின் இரண்டாம் பிறவியும் எடுப்பவர்களாம் .
பார்ப்பு என்ற சொல்லுக்குப் பறவையின் குஞ்சு என்ற பொருளும் சொல்லப்படுகிறது . முட்டையின் உள்ளே உள்ள கரு ஒருஉயிர் . அது பக்குவமடைந்து வளர்ச்சி பெற்று குஞ்சாவது மறுஉயிர் ஆதலின் அதைப்போல பார்ப்பனர் எனில் இரு பிறவியாளர்கள் என்பர் . இவர்கள் ஆட்சியாளர்களையே ஆளும் சாணக்கியத்தனம் உள்ளவர்கள் என்பதால் கண்ணகி விடச் சொல்லியிருப்பாள் எனக் கருதுவதை விட இவர்கள் மறந்தும் பிறருக்குத் தீங்கு நினைக்காதவர்கள் என நினைத்து விதிவிலக்கு அளித்திருக்கலாம் .
பசுவுக்கு மட்டும் விலங்குக் கூட்டத்தில் விதிவிலக்குத் தந்தாள்.
எருமைகளை விடுங்கள் ;பாவம் அவை எமன் ஏறும் வாகனம் என புராணங்களில் எழுதி வைத்துவிட்டார்கள் . ஆடுகள் , குதிரைகள் , நன்றியுள்ள நாய்கள், பூனைகள், கோழிகள் போன்றவற்றை ஏன் எரிக்கச் சொன்னாள் என இன்னும் யோசிக்கிறேன் .
எப்படியோ இந்த ஆறுவகைப் பிறப்புகளையும் விட்டுவிடச் சொன்ன கண்ணகியின் கருணையை அறத்தை எண்ணி வியக்கிறேன் . " தமிழ் இலக்கியத்தின் அடிநாதம் என்னவெனில் தனிமனிதனில் ஆரம்பித்துச் சமூகத்தில் சென்று முடிவதுதான் " என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து தன்னுடைய கல்வெட்டுக்கள் என்னும் படைப்பில். கண்ணகி என்ற கைம்பெண்ணின் பார்வை இங்கு சமூகம் நோக்கித் திரும்பிற்று எனவே கருதுகிறேன்.
'தீத்திறத்தார் பக்கமே நெருப்பு சேர்க' என்றதனால் இவள் விட்டுவிடச் சொன்னவர்கள் எல்லோரும் நல்லறம் புரிவோர்கள், புரிந்தவர்கள் என நம்புவோமாக!

 https://arasiyaltamil.blogspot.com/2019/04/blog-post_5.html

https://keetru.com/periyarmuzhakkam/sep06/kannaki.php

 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: பண்டைத் தமிழர் அறவழியில் திருக்குறளும் சிலப்பதிகாரமும்
Permalink  
 


சிலப்பதிகாரத்தை தமிழர் போற்றலாமா?
முனைவர் இரா. மணியன்

 

சிலப்பதிகாரம் பார்ப்பனியத்தைப் பரப்பும் காப்பியமே என்ற பெரியார் கருத்தை ஆதாரங்களுடன் விளக்குகிறார் கட்டுரையாளர். அவர் எழுதியுள்ள ‘பெரியாரின் இலக்கியச் சிந்தனை’ நூலிலிருந்து ஒரு பகுதியைப் பெரியார் பிறந்த நாள் விழாச் சிந்தனையாக வெளியிடுகிறோம்.

சிலப்பதிகாரத்து வஞ்சினமாலை கூறும் செய்திகளில் பெரும்பாலானவை பகுத்தறிவிற்கு மாறானவையாகவும், நம்ப முடியாதனவாகவும், ஆரியப் பார்ப்பனப் புரட்டுகளாகவும், பார்ப்பனர்களுக்குப் பாதுகாப்பளிப்பனவாகவும் உள்ளதைப் பெரியார் எடுத்துக் காட்டுகிறார்.

கருணையில்லாத கதாநாயகி “யானோ அரசன் யானே கள்வன்” எனக் கூறித்தான் நீதி தவறியதை நினைந்து வருந்தி மயங்கி இருக்கையிலிருந்து கீழே விழ்ந்து உயிர் துறந்த பாண்டியன் நெடுஞ்செழியனின் பாதங்களைத் தொழுத பாண்டி மாதேவியை நோக்கிய கண்ணகி, “பெருந்தேவியே, பிறனுக்கு முற்பகலில் கேடு செய்தான் ஒருவன் தன் கேட்டினை அன்றைப் பிற்பகலே காணுவான்” என்று கூறுகிறாள்.

“இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு”

- என்ற திருக்குறளுக்கு ஏற்ப கண்ணகி நடந்து கொள்ளவில்லை. பாண்டியன் தன் தவற்றை உணர்ந்து மயங்கி விழுந்து உயிர் துறந்தான் என்பதைக் கண்ணகி எண்ணிப் பார்த்து அவனை மன்னித்திருக்க வேண்டும். பாண்டியனின் பாதங்களில் வீழ்ந்த பாண்டிமாதேவி என்னானாள் என்பதைக்கூட கண்ணகி பார்க்கவில்லை. இப்படிப்பட்ட ஒரு பெண்ணைச் சால்புடையவளாக எப்படிக் கூற முடியும்! சான்றாண்மை இல்லாதவனை எவ்வாறு பெருமைமிக்கவளாகக் கருத முடியும் என்பதே பெரியாரின் சிந்தனை.

மேலும், நடுங்கி வீழ்ந்த கோப்பெருந்தேவியை விளித்து, ‘யான் ஒப்பற்ற கற்புடை மகளிர் பலர் பிறந்த பதியின்கண் பிறந்தேன்; யானும் ஒரு பத்தினியாயின் அரசோடு மதுரையையும் ஒழிப்பேன்’ என்று கண்ணகி கூறுகிறாள்.

கண்ணகி கூறும் பத்தினிப் பெண்களின் கதைகள் கூட மூடநம்பிக்கையின் அடிப்படையில் எழுந்தனவாகவும், பகுத்தறிவுக்கு ஒவ்வாதனவாகவும் ஆணாதிக்கத் தன்மையையும், பெண்ணடிமைத்தனத்தையும் அறிவுறுத்து வனவாகவுமே அமைந்துள்ளன.

சினத்திலும் பார்ப்பனர்க்குப் பாதுகாப்பு மதுரையை ஒழிப்பேன் என்று சூளுரைத்த கண்ணகி, “கூடல் மாநகர மகளிரே, மைந்தரே, வானக் கடவுளரே, மாதவம் செய்வோரே நான் சொல்வதைக் கேளுங்கள்: என் கணவனுக்குத் தவறிழைத்த கோநகரைச் சீறினேன்; குற்றமிலேன்யான்” என்று கூறுகிறாள். தனக்குத் தானே நீதிபதியாக ஆகித்தான் குற்றமற்றவள் என்று தீர்ப்பளித்துக் கொள்கிறாள் கண்ணகி. பின்னர் தன் இடமுலையைக் கையால் திருகி எடுத்து, மதுரையை வலம்வந்து வட்டித்து எறிந்தாள்.

அப்பொழுது தீக்கடவுள் பார்ப்பன வடிவில் தோன்றுகின்றான். அவன் கண்ணகியை நோக்கி, “உனக்குத் தவறிழைத்த அந்த நாளிலேயே இவ்வூரை எரியூட்டும் ஏவலைப் பெற்றுள்ளேன். எரியும்போது பிழைக்க வேண்டியவர்கள் யார் யார் என்பதை மட்டும் கூறுக” என்று கேட்கிறான். அப்பொழுது, “பார்ப்பனர், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழந்தை ஆகிய இவர்களைத் தவிர மற்றவர்கள் அழியட்டும்” என்று கண்ணகி கூறுகிறாள். கண்ணகி ஏவலால் மதுரை மாநகர் தீப்பற்றி எரிந்தது.

சிலப்பதிகாரக் கதையைத் திறனாய்ந்த பெரியார், கண்ணகி மதுரையை எரித்த செயலைக் கண்டிக்கிறார். “தேவடியாள் வீட்டிற்குக் கணவன் போனதை அறிந்தபோது, அந்தத் தேவடியாளை ஏதாவது செய்திருக்க வேண்டும்” என்கிறார் பெரியார். அப்போதே கோவலனைக் கண்டித்து மாதவியைத் தண்டித்திருந்தால், இத்தகைய வேதனைகளே வந்திராது என்பது பெரியார் கருத்துப் போலும்.

“கோவலனை அரசன் தண்டித்த மாதிரியானது, நம்நாட்டு இராஜாக்களுக்கே ரொம்பவும் அவமானம் தருவதாகும்” என்று பெரியார் கருதுகிறார். அப்படி அவர் கருதினாலும், கண்ணகி மதுரையை எரித்து நிரபராதிகளைச் சுட்டு சாம்பலாக்கிய செயலையும் கண்டித்துள்ளார். இப்படி எரித்தால்தான் இவள் கற்புடையவள் என்று சமுதாயம் கருதுமா! “அகலிகை, சீதை, துரோபதை, தாரை எல்லாம் கற்புக்கரசிகளாய் இருக்கும்போது, கண்ணகி கற்புக்கு மாத்திரம் முட்டாள் தனம் வேண்டுமா!” எனறு பெரியார் கேட்கிறார்.

மதுரையை எரிப்பதற்குக் கண்ணகி கையாண்ட முறை பகுத்தறிவுக்கு ஒத்து வருமா? அரசனின் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கண்ணகியிடத்து அனுதாபம் கொண்ட பொது மக்கள் அங்கங்கே அரசனுக்குச் சொந்தமான மாளிகைகளை எரித்தார்கள் என்று சொல்லியிருந்தாலாவது யதார்த்தமாக இருந்திருக்கும். அதை விட்டுவிட்டு, கண்ணகி மார்பைத் திருகி எறிவதற்கு அது என்ன நட்டு போட்டா முடிக்கி வைத்துள்ளது! திருகியதும் கைக்கு வந்துவிட. அப்படியே எறிந்தாலும் அது என்ன பாஸ்பரசா தீ மூட்டுவதற்கு! இப்படிப்பட்ட சிந்தனைகளைக் கொண்ட பெரியார், சிலப்பதிகாரம் பற்றிய ஒரு சொற்பொழிவில், “இந்த அம்மாளுக்குக் கோபம் வந்ததும், தன் மார்பைத் திருகி எறிகிறாள். இது என்ன புத்தி! மார்பைக் கையால் திருகினால் அது வந்துவிடுமா? இந்தப்படி நடந்த சங்கதியும் அனுபவமும் சிலப்பதிகாரம் தவிர வேறு எதிலும் எங்கும் காணக் கிடைக்கவில்லை. அந்தப்படி திருகிப் பிடுங்கின மார்பு (முலை) வீசி எறிந்தால் அது நெருப்புப் பற்றிக் கொள்ளுமா? அதில் ‘பாஸ்பரஸ்’ இருக்குமா? இந்த மூட நம்பிக்கைக் கற்பனையானது, என்ன பயனைக் கொடுக்கிறது? இதனால் கண்ணகிக்கு வீரம் இருந்ததாகக் கூற முடியுமா?” என்று கேட்கிறார்.

பார்ப்பனர்க்கு மட்டும் விதிவிலக்கு ஏன்?

மதுரையை எரிக்கச் செய்த கண்ணகி பார்ப்பனர்கள் மீது ஏன் பரிதாபம் கொள்ள வேண்டும் என்பது பெரியார் கேள்வியாகும். இவ்வாறு பரிதாபம் கொள்ளச் செய்தது பார்ப்பனர்களின் வருணாசிரமத் தர்மந்தானே! அரச இனத்தைச் சார்ந்தவர்களும், வணிகர்களும், சூத்திரர்களும் மட்டும் ஏன் சாக வேண்டும்? இப்படிச் செய்தது கண்ணகியின் முட்டாள்தனமா? அல்லது வருணாசிரமத் தர்மத்தை அவள் மூலம் நிலை நாட்ட முயன்றவர்களின் அயோக்கியத்தனமா? இப்படியெல்லாம் எண்ணிய பெரியார், “அக்கினி பகவானுக்குக் கண்ணகி, ‘பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களைச் சுடு’ என்று கட்டளை இட்டாளாம். அதுபோல் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் சாம்பலானார்களாம். மதுரை நகரம் சாம்பலாயிற்றாம்.

இதுதான் கண்ணகியின் கற்பின் பெருமையா? அவள் புத்தியின் பெருமையா? அக்கினி பகவானுக்குப் புத்தி வேண்டாமா? ஒரு பெண் பிள்ளை முட்டாள்தனமாக உளறினால் நிரபராதிகளைச் சுடலாமா? ஒரு பட்டணத்தைக் கொளுத்தலாமா என்கிற அறிவு வேண்டாமா? பார்ப்பனர்களை எதற்காக மீதம் விட வேண்டும்? ஆகவே, வருணாசிரம; தர்ம மனுநூல், இராமாயணம், பாரதத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?” என்று வினவுகிறார்.

கண்ணகியின் அநீதி பாண்டியன் நெடுஞ்செழியன் முழுமையான விசாரணையை மேற்கொள்ளாமல் தீயவனை நம்பி நீதி தவறும் செயலைச் செய்தான். அவன் செய்தது குற்றம் தான். அதைவிடப் பெரிய குற்றத்தைக் கண்ணகி செய்யலாமா? கண்ணகி யாரை விசாரித்தாள்? பாண்டியன் நீதி தவறியதற்கும் பார்ப்பனர்களைத் தவிர மற்ற சமுதாயத்தினர்க்கும் என்ன சம்பந்தம்? சூத்திரர்களை எரிக்குமாறு ஏன் சொல்ல வேண்டும்? அரசனை நீதி வழுவுமாறு செய்த அந்த பொற் கொல்லனை மட்டும் அவள் தண்டித்திருந்தால் அவளை அறிவுடையவள் என்று கூறியிருக்கலாம். இப்படியெல்லாம் சிந்தித்த பெரியார், “இராமன் பார்ப்பான் - ஆகவே சூத்திரனைக் கொன்றான் என்பது இராமாயணம். பார்ப்பனனை மட்டும் காப்பாற்ற வேண்டும் என்பது சிலப்பதிகாரம்! எவ்வளவு முட்டாள்தனமான கொடுமை செய்தாலும் பார்ப்பனர்களைக் காப்பாற்றினால் அவள் பதிவிரதை ஆகிவிடுவாள் என்பது சிலப்பதிகாரம்! பாண்டியன் விசாரணை செய்து அவனுக்குக் கிடைத்த உண்மை மீது கோவலனுக்குத் தண்டனை விதித்தான்.

ஆனால், கண்ணகி ஒரு விசாரணையும் செய்யாமல் ஒரு குற்றமும் காணாமல் நிரபராதிகளான மக்களை, பெண்களைச் சுட்டு எரித்துக் கொன்றாள். அவள் கற்புக்கரசி; வணங்கத் தக்கவள்; தெய்வமானவள்! பாண்டியன் ‘குற்றவாளி’ - இது தானே சிலப்பதிகாரக் கதை. இதுதான் தமிழர் பண்பாம்! எவ்வளவு முட்டாள்தனம் - இந்த மாதிரியான ஆபாசமும் அநீதியும் நிறைந்து இருக்கும் கதைகளை நாம் வைத்துக் கொண்டு நமக்குச் சொந்தம் என்றா சொல்வது? இவைகளைத்தான் ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகிறோம். நெருப்பு வைக்க வேண்டும் என்று சொல்லுகிறோம். சமுதாயத்திற்கு உதவாக்கரை என்று ஒதுக்கி வைக்கிறோம்!” என்று கடுமையாகச் சாடுகிறார்.

கண்ணகி தமிழ்ப் பெண்ணாக இருக்க முடியுமா என்ற ஒரு கேள்வியையும் கூட பெரியார் எழுப்புகிறார். “கண்ணகியைப் போல இன்று எந்த ஒரு பெண்ணாவது, அவள் எவ்வளவுதான் கற்புடைய கன்னிகையாக இருந்த போதிலும் இந்தக் காரியத்தைச் செய்ய முடியுமா? எங்காவது இம்மாதிரிக் காரியம் நடந்திருக்குமா? அந்தச் சமயத்திலும் அவள் நெருப்புக்கு ஆணை இடுகிறாள், ‘பார்ப்பனரை அழிக்காதே’ என்று. பார்ப்பனரை அழிக்காதே என்று ஆணையிடுபவள் ஆரியப் பெண்ணாக இருப்பாளா? தமிழ்ப் பெண்ணாக இருப்பாளா? நீங்களே சிந்தித்துப் பாருங்கள்” என்று பெரியார் தமிழ் மக்களைக் கேட்கிறார்.

சிலப்பதிகாரத்தின் இருபத்திரண்டாவது பகுதியான அழற்படு காதை யுள்ளும் நால்வகை வருணங்கள் கூறப்படுகின்றன. ஒவ்வொரு வருணத்துக்கும் ஒவ்வொரு பூதம் தெய்வமாக உள்ளது என்றுரைத்து வருணபூதர் நால்வருடைய இயல்புகளும் விவரிக்கப்பட்டுள்ளன. இவையன்றி இந்திரன், இயமன், வருணன், சோமன் என்னும் நான்கு தெய்வங்கள் கோட்டை வாயில்களைக் காத்துக் கொண்டு இருந்தன என்றும், அவை நகர் காக்கும் தெய்வங்கள் என்று கூறப்படும் என்றும் பாண்டியன் இறந்த பின் அவை நகரைவிட்டு நீங்கின என்றும் அழற்படுகாதையின் தொடக்கத்திலேயே கூறப்பட்டுள்ளது. ஏவல் தெய்வத்து எரிமுகம் திறந்தது, காவல் தெய்வம் கடைமுகம் அடைந்தன என்ற அழற்படு காதையின் முதல் இரண்டு அடிகளுக்கு உரைகூறப் போந்த நாவலர் ந.மு.வே. நாட்டார் அவர்கள் “கண்ணகியின் ஏவல் பெற்ற தீக்கடவுளின் எரியின் கூறு வெளிப்பட்டது. நகர் காக்கும் தெய்வங்கள் கோட்டை வாயில்களை காவாதொழிந்தன என்று கூறிக் காவல்தெய்வம் இந்திரன், இயமன், வருணன், சோமன் என்னும் நான்கு தெய்வங்களுமாம்” என்று விளக்கமும் அளித்துள்ளார்.

வருணப் பூதங்கள் காவல் தெய்வங்கள் பற்றிக் கூறும் ஒரு நூலை தமிழ் மக்களுக்குரிய நூல் என்று கூறலாமா? என்பதுதான் பெரியாரின் ஐயமாகும். “மனிதனுக்குக் கடவுள் உணர்ச்சி தோன்றிய காலந்தொட்டே இந்த நாட்டில் மேல் சாதி - கீழ்ச் சாதி உணர்ச்சி தோன்றிவிட்டது” என்பதுதான் பெரியாரின் கருத்தாக உள்ளது. சாதியமைப்பே இல்லாத தமிழ்ச் சமுதாயம் இருந்த போது கடவுள் பற்றிய எண்ணமே இல்லாமல் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதே பெரியார் கருத்தாகும். அப்படிப்பட்ட சமுதாயத்தைக் கொண்ட தமிழ்நாட்டில் மனுதர்ம சாஸ்திரம் கூறும் வருணாசிரமத் தர்மத்தை - நால் வருணக் கோட்பாட்டை நிலை நிறுத்துவதற்காகவே ஆரியர்கள் தெய்வங்களைக் கூறித் தமிழர்களிடையே மூட நம்பிக்கையை வளர்த்துத் தங்களது மேன்மைக்காகப் பாடுபட்டிருக்கிறார்கள். இதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல், தமிழ்நாட்டு மூவேந்தர்க்கும் உரிய கதை என்று சொல்லி, அழகிய இனிய தமிழ்ச்சொற்களில் ஆரியர்களின் வஞ்சக எண்ணங்களை அறியாமல் இளங்கோவடிகள் சிலப்பதிகாரக் கதையில் வருணபூதம் நால்வருடைய இயல்புகளைக் கூறியுள்ளார் என்பது பெரியாரின் குற்றச்சாட்டு.

அழற்படு காதையுள் கூறப் பெறும் நால்வகை வருணப் பூதங்களைப் பற்றிய செய்திகள் மனுநீதி சாஸ்திரத்தில் கூறப் பெற்ற பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர சாதிப் பிரிவுகளை நினைவூட்டுகின்றன. முதலில் ஆதிப்பூதம் கூறப்படுகிறது. ‘பசுமை முத்துவடமணிந்த நிலவு போல் விளங்கும் ஒளியினை உடைய, நான்முகன் யாகத்துக்கென உரைத்த உறுப்புக்களோடே முத்தீ வாழ்க்கையின் இயல்பினின்றும் பிழையாத தலைமை அமைந்த ஆதிப் பூதமாகிய கடவுளும்” என்று பூதக் கடவுளை விவரித்துள்ளனர். இப்பூதக் கடவுளைப் பிராமணப் பூதம் என்று கூறுகிறார் அரும்பதவுரையாசிரியர். இதுபோலவே அரச பூதம், வணிக பூதம், வேளாண் பூதம் என்று கூறுகின்றபோது அவற்றையும் கடவுள் என்றே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. “சிலப்பதிகாரம் கண்ணகியின் கதையைக் கூறும் நூலா? அல்லது மனுநீதியான வருணாசிரமத் தர்மத்தை விவரிக்க வந்த நூலா?” என்று பெரியார் வினவுகிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் பார்ப்னியம்

 
கண்ணகி என்ற பெயரை கேட்டவுடனேயே " மதுரையை எரித்த கண்ணகி" என்பது நினைவுக்கு வந்துவிடும். அசோகன் என்றவுடன் "அசோகர் மரம் நட்டார்" என்பது நினைவுக்கு வருவது போல. கண்ணகி சிலருக்கு "மதுரையை எரித்தவள்". சிலருக்கு "வீரத்தமிழச்சி". இன்னும் சிலருக்கு "அப்பத்தா". இது போன்று ஏராளான முகங்கள் உள்ளன. இவை எல்லாம் மற்றவர்களின் பார்வைக்கு.

ஆனால், இங்கு நாம் கண்ணகியினுள்ளே குடிகொண்டிருந்த பார்ப்பனிய முகத்தைப் பற்றி பார்ப்போம்.

ஆனால், அது கண்ணகியின் பார்ப்பனியமா? அல்லது கண்ணகியின் வழியாக தன்னுடைய பார்ப்பனியத்தை வெளிக்காட்டினாரா நம்ம புலவர் இளங்கோவடிகள் என்பது அவரவர்களின் பார்வைக்கு இருக்கட்டும். ஏனெனில் இது நம்ம இளங்கோவின் கற்பனையே. அப்படி என்னதான் அந்த ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது என்று பார்க்கலாம்.

அதற்குமுன் இப்பெறும் காப்பியத்தைப் பற்றி தந்தை பெரியாரின் விமர்சனத்தை பார்ப்போம். இது "பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்தும் நூல்" என்றும், "விபச்சாரத்தில் ஆரம்பித்து பத்தினித் தனத்தில் வளர்ந்து முட்டாள்தனத்தில், மூடநம்பிக்கையில் முடியும் பொக்கிஷம்" என்றும் விமர்சித்தார். ஏன் பெரியார் அவ்வாறு விமர்சித்தார்? அதில் என்ன பெண்ணடிமைத்தனம் உள்ளது? அப்படி என்ன முட்டாள்தனம், மூடநம்பிக்கை உள்ளது? என்று பார்க்கலாம்.
 
சிலப்பதிகாரத்தில் கண்ணகி பத்தினியாக போற்றப்படுகிறாள். ஆம் அது மிகவும் முயன்று பெறக்கூடிய பட்டங்களில் ஒன்று. அதுவும் சாதா பத்தினி இல்லை. தர்மபத்தனி, உத்தமபத்தினி.

இவற்றிற்கெல்லாம் என்ன விளக்கம். கோவலன் மாதவியுடன் இருப்பது தெரிந்தும் அவனை போய் அழைத்து கொண்டு வரவில்லை கண்ணகி. இதுவரை இருந்தால் அது சாதா பத்தினி. ஆனால் கண்ணகி செய்தது இதற்கும் மேல். தன் கணவன் மாதவியுடன் இருப்பது தெரிந்தும் அவனை அழைத்து வராதது மட்டும் இல்லாமல், அவனுக்கு தேவைப்படும் பொருளையும் எடுத்து கொடுத்திருக்கிறார். எந்த அளவுக்கு எடுத்து கொடுத்திருக்கிறார் என்றால், பொருட்கள் அனைத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வரும் நிலைமை ஏற்படும் வரையிலும் எடுத்து கொடுத்திருக்கிறார்.

இது சாதா பத்தினி செய்ய கூடிய காரியம் இல்லை. இது தர்மபத்தினியால் மட்டுமே செய்யக்கூடிய காரியம். ஆக, பத்தினி என்றால், தன் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளான் என்பது தெரிந்தும் அவனை ஏன் என்று கேட்காமல் இருந்தால் அந்தப்பெண் பத்தினி என்று போற்றத்தக்கவர். இத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், அவனுக்கு தேவைப்படும் போதெல்லாம் பணத்தை கொடுத்து " சென்றுவா கணவா அந்த பெண்ணை நோக்கி" என்று சொல்லி வழியனுப்பி வவைத்தால், அந்த பெண் தர்மபத்தினி மற்றும் உத்தமபத்தினி என்றெல்லாம் போற்றத்தக்கவர்.

கண்ணகி ஒரு சாதுவான பெண் அதனால் தான் கணவனை எதிர்த்து பேசவில்லை என்று நினைக்கலாம். ஆனால், கண்ணகி ஒன்றும் சாதுவான பெண் கிடையாது. மிகவும் துணிச்சலான பெண். எந்தளவுக்கு துணிச்சலான பெண் என்றால், நம்ம பாண்டிய மன்னனையே பார்த்து " தேரா மன்னா" என்று கேட்கும் அளவிற்கு துணிச்சலான பெண் தான். ஆனால், கணவன் இப்படி மாதவி வீட்டில் இருக்கும் போது, அவனை அடித்து இழுத்து கொண்டு வந்திருக்கலாம். ஆனால் என்ன செய்ய, அப்படி செய்தால் பத்தினி என்ற பட்டம் கிடைக்காமல் போய்விடுமே.

இதில் தெள்ளத் தெளிவாக விபச்சாரத்தை பாராட்டி இருப்பது தெரிகிறது. இதனால்தான் தந்தை பெரியார் இதனை விபச்சாரத்தை பாராட்டும் நூல் என்று கூறினார். பெண்கள் மட்டும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று இருக்க வேண்டும். ஆனால் ஆண்களுக்கு இந்த சட்டம் கிடையாது. ஒரு பெண் தனக்கு பிடித்த ஆண்மகனுடன் எல்லாம் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும். இதை நினைத்துப் பார்க்கவே சற்று அசிங்கமாகத்தான் இருக்கும்.

அப்படியானால் ஒரு ஆண் தனக்கு பிடித்த பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் போதும் அவ்வாறே அசிங்கமாக தான் இருக்க வேண்டும். இதை நாங்கள் எடுத்துச் சொன்னாள் பார்த்தீர்களா பார்த்தீர்களா ஒரு தமிழிலக்கியத்தை எப்படி எல்லாம் அவதூறு கூறுகிறார்கள் என்று பேசுவார்கள்.

நாங்கள் ஒன்றும் அவதூறு கூறவில்லை. அந்த இலக்கியத்தில் இருப்பதை எடுத்து சொல்லுகிறோம் அவ்வளவுதான்.

ஒருவேளை நாங்கள் சொல்லுவதை எதிர்ப்பவர்கள், இந்த இலக்கியத்தை பாராட்டக் கூடியவர்கள் இருப்பார்களேயானால் அவர்கள் எதனை ஆதரிக்கிறார்கள் என்பது அவரவர்களின் விருப்பத்திற்கே விட்டு விடுவோம்.

கண்ணகியின் பார்ப்பனியம் இதனோடு மட்டும் நின்று விடவில்லை இன்னும் தொடர்கின்றது. மதுரைக் காண்டத்தின் வஞ்சின மாலை காதையில்,
தனது இடமுலையை  திருகி மதுரையை மும்முறை வலம் வந்தார் கண்ணகி என்று சொல்லப்படுகிறது. இது எவ்வளவு முட்டாள்தனமானது அறிவுக்கு புறம்பானது.
மேலும் இந்த நிலையில் தீக்கடவுள் தோன்றுகிறார். அவரும் கூட பார்ப்பனராக தோற்றமளிக்கிறார் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. அப்படி தோன்றிய தீக்கடவுள் கண்ணகியிடம் யாரையெல்லாம் விட்டுவிட வேண்டும் என்று எண்ணுகிறாய் என்று கேட்கிறார்.
அதற்கு கண்ணகியின் பதில் மிகவும் வித்தியாசமாக உள்ளது.

"பார்ப்பனர், பசு, பத்தினிப் பெண்டிர், சான்றோர், மூத்தோர், குழவி எனும் இவரைக் கைவிட்டுத் தீத்தரத்தோர் பக்கம் சாய்க" என்று கண்ணகி கூறுகிறார்.

இதற்கு முன்னால் ஊர்சூழ் வரி என்னும் காதையில்,

பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்?
சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்?

என்று கேட்கிறார். அப்பொழுது பெண்டிரும் சான்றோரும் இருந்திருந்தால்தான் வந்திருப்பார்களே. ஆனால் யாரும் வரவில்லை. அதுதான்அங்கு பத்தினிப் பெண்டிரும் சான்றோரும் இல்லையே அப்புறம் ஏன் அவர்களை கைவிட வேண்டும். மேலும் ஏன் பார்ப்பனரை கைவிட வேண்டும் அவர்கள் மட்டும் என்ன கண்ணகிக்கு உதவியா செய்தார்கள்? அவர்களும் ஒன்றும் செய்யவில்லை அப்படி என்றால் அவர்களையும் எரிக்க சொல்ல வேண்டியதுதானே.

இது இத்துடன் நிற்கவில்லை மேலும் தொடர்கிறது. அதாவது பசுவையும் விட்டுவிட வேண்டுமாம். அது ஏன் பசுவை மட்டும் விட்டுவிடவேண்டும் எருமை மாடு என்ன செய்தது எருமை மாடும் நல்லா பால் கறக்கும். மற்ற ஆடு கோழி மற்ற விலங்குகள் எல்லாம் என்ன செய்தது? என்ன பாவம் செய்தது? பசுமாட்டை மட்டும் காப்பாற்ற வேண்டுமாம்? பார்ப்பனர்களை முக்கியமாக காப்பாற்ற வேண்டுமாம்?
இதில் பார்ப்பனியம் வெளிப்படையாக தெரிகிறது. இது பரவாயில்லை, "தீ"க்கு எப்படி தெரியும் நல்லவர் கெட்டவர் என்று. ஒருமுறை பற்ற வைத்து விட்டால் பற்றி எரிய கூடிய பொருள்கள் அனைத்திலும் தீ பரவி எரிந்தே தீரும். தீ எரிந்து கொண்டிருக்கும் போது இவரை விட்டுவிட்டு இவரை மட்டும் கொடுத்து என்று சொன்னால் அது கேட்கவா செய்யும். இது அவ்வளவு அறிவுக்குப் பொருந்தாதது. ஆகவே சிலப்பதிகாரம் என்பது தந்தை பெரியாரின் கூற்றுப்படி விபச்சாரத்தில் தொடங்கி பத்தினி தனத்தில் வளர்ந்து மூடத்தனத்தில் முடியும் ஒரு பொக்கிஷமாகும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

அந்தணர் – பார்ப்பனர் – பிராமணர்!

சில சங்க இலக்கியச் சான்றுகள் -ம.செந்தமிழன்

ஆரியத்தின் சாதியம் ஐந்து அடிப்படைகளைக் கொண்டது:

1. பிறப்பு அடிப்படை
2. குறிப்பிட்ட சாதியினர் குறிப்பிட்ட தொழில்தான் செய்ய வேண்டும் என்ற விதி
3. பிற பிரிவினருடன் கலவாமை / தனித்துவம் காத்தல்
4. தீண்டாமை
5. இவற்றை மீறுவோருக்குக் கடும் தண்டனைகள்
தொல்காப்பிய நால்வகைத் தொழிற்பிரிவுகளில் இந்த ஐந்து அடிப்படைகளுமே இல்லை.

மேலும், தொல்காப்பியர் மிகத் தெளிவாகப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்;

’ஊரும் பெயரும் உடைத் தொழிற் கருவியும் யாருஞ் சார்த்தி அவைஅவை பெறுமே’ (மரபியல் 75)

-இதன் பொருள்,

’ஊர், பெயர்,தொழிற் கருவி ஆகியவை அவரவருக்கு ஏற்ப அனைவருக்கும் உரிமையுடையவையே’

என்பதாகும். எந்தப் பிரிவினர் என்ன தொழில் செய்ய வேண்டும் என்பது திணிக்கப்பட்ட ’தர்மம்’ அல்ல என்பதை இந்த விதி விளக்குகிறது.

‘தலைமைக் குணச்சொலும் தத்தமக் குரியதோர்
நிலைமைக் கேற்ப நிகழ்த்துப வென்க’ (மரபியல் 76)

-என்கிறார் தொல்காப்பியர்.

தலைமைப் பண்பைப் பொறுத்தவரை, அவரவரும் தமது நிலைமைக்கேற்பவே நிகழ்த்திக் கொள்ள வேண்டும் என்கிறது இவ்விதி. தலைமைப் பண்பு என்பது, பிறப்பினால் தீர்மானிக்கப்படுவதில்லை.

அது, தொடர்புடையவர், குறிப்பிட்ட சூழலில் எந்த நிலையில் இருக்கிறார் என்பதைப் பொறுத்தே முடிவு செய்யப்படும்.

மேற்கண்ட இரு விதிகளும் மிக விரிவாகப் பொருள் கொள்ளத்தக்கவை ஆகும். நால்வருணத்தின் அடிப்படைகளுக்கும் இவ்விதிகளுக்கும் முரண்பாடுகள் மட்டுமே இருக்கின்றன.
மேலும், நால்வருணக் கோட்பாடு வகுத்த அதிகாரப்படிநிலை,

1. பிராமணர்
2. சத்ரியர்
3. வைசியர்
4. சூத்திரர் -என்பதாகும்.

தொல்காப்பியம் வகுத்த நான்குவகைப் பிரிவுகளின் அதிகாரப்படிநிலை,
1. அரசர்
2. அந்தணர்
3. வணிகர்
4. வேளாளர் -என்பது.

இதில், பிராமணர் என்ற பிரிவே இல்லை. பிராமணர் இருக்க வேண்டிய இடத்தில் அரசர் உள்ளார். அவருக்குப் பிறகே, அந்தணர் வருகிறார். அந்தணர் என்றால், அது ஆரிய பிராமணரைக் குறிப்பதாக, கற்பனையாகப் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது.

அந்தணர் என்போர் யார் என விரிவாகக் காண்போம்.
தமிழர் மரபில் அந்தணர், ஐயர், பார்ப்பனர் ஆகியோர் யாவர் என்ற கேள்விக்கு விடை கண்டால் மட்டுமே, சங்க இலக்கியங்கள் பதிவு செய்த வாழ்வியலைப் புரிந்துகொள்ள முடியும்.

ஐயர் என்ற சொல் ’தலைவர் / சமூகத் தலைவர்’ எனும் பொருளைக் குறிப்பதாகும்.

’பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப’ என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். கற்பு மணத்தைச் சமூகத் தலைவர்கள் உருவாக்கினர் என்ற பொருளிலேயே இச்சொல் கையாளப்பட்டுள்ளது. ’ஐயை’ என்பது தலைவியைக் குறிக்கும். ’ஐயா’ என்பது மரியாதையுடன் ஒருவரை விளிக்கும் சொல். இவ்வகையில்தான், ஐயர் என்னும் சொல், தலைவர் என்ற பொருள் தாங்கி நின்றது.

சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்ட ஒன்றாகும். சிந்துவெளித் தமிழரின் எழுத்துக்களைப் படித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார் முனைவர்.இரா.மதிவாணன்.
சிந்துவெளி எழுத்துக்கள் அனைத்தும் தூய தமிழ்ச் சொற்களாக இருப்பதை இந்நூல் வாயிலாக உணரலாம்.
இந்நூலில் உள்ள அகர வரிசைச் சொற்களில் ஒன்று,
‘அய்யன்’ என்பதாகும்.

(Indus Script Dravidian / Dr.R.Mathivanan / Tamil Chanror Peravai / 1995 / பக் – 137)

(அ)ய்யஅன்
(அ)ய்ய(ன்) மாசோண(ன்) மன்னன்
(அ)ய்ய(ன்) வைகா சானஅன்
(அ)ய்ய(ன்) காங்கணஅன்
(அ)ய்ய(ன்)

(மேலது நூல் – பல்வேறு பக்கங்களில்)
ஐயர், என்றால் அதுவும் பிராமணர்தான், என்றால், சிந்துவெளித் தமிழரும் ஆரிய பிராமணர்தான் என்பார்களோ, திராவிடக் கோட்பாட்டாளர்கள்!
மேற்கண்ட நூலில் உள்ள ’சானஅன்’ என்னும் சொல் விரிவான ஆய்வுகளுக்குட்படுத்தப்பட வேண்டியதாகும்.

ஏனெனில், இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ள இடங்களில், அந்தனன், அய்யன் போன்ற, அறிவுத் துறைச் சொற்கள் உடன்வருகின்றன.
சாணார், என்போர் சான்றோர். இவரே, பின்னாட்களில் நாடாரெனும் சாதியரானார் என்ற கருத்து நெடு நாட்களாகக் கருத்துலகில் உள்ளது.

சிந்துவெளிச் சொற்களில், சானாஅர், அந்தனஅர், அய்யஅன் ஆகிய மூன்று சொற்களுக்கும் இந்த உறவு உள்ளதாகத் தெரிகிறது.

ஆரியர் வருகைக்கு முன்னரே, அய்யன் என்னும் சொல்லைத் தமிழர்கள் பயன்படுத்தினர் என்பது கவனிக்கத்தக்கது.

ஐயர் என்பது, பிராமணரில் ஒரு பிரிவினரைக் குறிப்பதாகப் பின்னாட்களில் அப் பிராமணர்களாலேயே மாற்றிக்கொள்ளப்பட்டது.

அந்தணர் என்னும் பிரிவினர் தமிழ்ச் சமூகத்தின் அறிவாளர்கள் ஆவர். அரசு உருவாக்கத்தின்போது, அரசர்களுக்கான அறிவுரைகள் வழங்கியும், மெய்யியல் துறைகளில் ஈடுபட்டும் வந்தவர்கள் அந்தணர் ஆவர். இவர்கள் தமிழர்களே.

சான்றாக, பதிற்றுப் பத்து தொகை நூலில் இரண்டாம் பதிகம் பாடிய குமட்டூர் கண்ணனார் ஒரு அந்தணர்(பதிற்றுப் பத்து தெளிவுரை –புலியூர் கேசிகன்). இவர் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் எனும் சேரப் பேரரசரின் அவையில் இருந்தவர். குமட்டூர் கன்ணனார் பாடிய பதிகங்களைப் படித்தாலே, அக்காலத் தமிழரின் ஆரிய எதிர்ப்பின் வீரியம் விளங்கும்.

இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன், இமையம் வரை படையெடுத்துச் சென்று ஆரிய மன்னரைக் கண்டவிடத்தில் எல்லாம் அழித்து வெற்றி வாகை சூடியவன். இவ்வரலாற்றை கூறும் பதிகத்தில், இமையவரம்பன் ஆளும் நாட்டின் எல்லையை,
’இமிழ்கடல் வேலித் தமிழகம்’ என்று குறிக்கிறார் கண்ணனார்.

மேலும், ஆரிய அரசர்கள் தமிழ் அரசனான இமையவரம்பனுக்கு அடிபணிந்து கப்பம் கட்டிய செய்திகளையும் குமட்டூர் கண்ணனார் பதிவு செய்துள்ளார்.

குமட்டூர் கண்ணனார் எனும் அந்தணர், ஆரியர் அழிவுற்ற காட்சிகளைப் பின்வருமாறு விவரிக்கிறார்;
’இமையவரம்ப மன்னனே, நீ படையெடுத்துச் சென்ற நாடுகள் எப்படி அழிந்தன தெரியுமா? இமைய மலைச் சாரலிலே கவரி மான்கள் தாம் உண்ட நரந்தம் புல்லைக் கனவில் எண்ணிப் பார்த்தபடிப் படுத்திருக்கும்.

(அதுபோல செம்மாந்து இருக்கும்) ஆரியர் நிறைந்த பகுதிகளையும் பிற பகுதிகளையும் தாக்கி அழித்தாய். மரணம் வந்து தாக்கிய பிறகு பிணமானது, ஒவ்வொரு நொடியும் அழிந்து கொண்டேயிருக்குமே, அதேபோல் தமது தலைவர்களை இழந்த நாடுகள் கணத்துக்குக் கணம் அழிந்துகொண்டிருந்தன.

வயல்கள் எல்லாம் பாழ்பட்டு அங்கே காட்டு மரங்கள் வளரத் தொடங்கிவிட்டன. அவர்களது கடவுள்கள் எல்லாம் காட்டுக்குள் சென்றுவிட்டன. காடுகளின் ஓரங்களில், உனது படையினர் இளம் பெண்களோடு வெற்றிக் களிப்பில் ஆடி மகிழ்கின்றனர்’
அந்தணர் எல்லாரும் ஆரியப் பார்ப்பனர் என்றால், ஆரியர் அழிந்த நிகழ்வை இவ்வளவு மகிழ்வுடன் பாடியுள்ள குமட்டூர் கண்ணனார் ஆரியரா?
தாம் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர் என்பதைக் குமட்டூர் கண்ணனார் குறிப்பிடுகிறார்.

‘எமது ஆடைகள் பருந்தின் நனைந்த இறக்கைகள் போலக் காணப்பட்டன. எம் உடைகளை மண் தின்று கந்தலாக்கியிருந்தது. அப்படி வந்த எமக்குப் பட்டாடைகள் கொடுத்தாய் அரசே. வளைந்த மூங்கில் போலத் தோன்றும் எம் பாணர் மகளிர் அனைவருக்கும் ஒளிவீசும் அணிகலன்கள் வழங்கினாய்’ என்ற வரிகளிலிருந்து குமட்டூர் கண்ணனார் பாணர் குலத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது.

பாணர்கள் என்போர், இசை, கூத்து ஆகிய கலை நிகழ்வுகளின் வல்லுநர்கள். ஆயினும், அவர்கள் நேரடி உற்பத்திசாராத மரபினர் என்பதால், அவர்கள் வறுமையில் வாடியதும் உண்டு.

அரசுருவாக்கம் நிகழத் தொடங்கிய பின்னர், அரசர்களைப் பாடியும் அவர்களுக்கு அரசு நடத்தும் முறைமை கற்றுக் கொடுத்தும் தமது இருத்தலை உறுதிப்படுத்தினர் பாணர்கள். விறலியர், கூத்தர் ஆகிய பிற பிரிவினரும் இதே நிலையை ஒத்தவர்களே.

இதேவேளை, பாணர் உள்ளிட்ட உற்பத்தி சாரா பிரிவினர் தமிழ்ச் சமூகத்தின் வர்க்க நிலையில் பின் தங்கியே இருந்தனர். உற்பத்தியில் ஈடுபட்ட வேளாண் மாந்தரும் அவரையொத்த பிறரும் வர்க்க நிலைமையில் மேம்பட்டிருந்தனர். பின் தங்கிய வர்க்கத்தினராக இருந்தாலும், பாணர்களைத் தமிழ் அரசர்கள் தமக்கு நெருக்கமாக வைத்துப் போற்றினர்.

எனது இக்கூற்றை மெய்ப்பிக்கும் தொல்காப்பிய விதி ஒன்றைக் காண்போம். அகத்திணையியலில் தலைவனது சமூகப் பங்களிப்புகளாகக் கூறப்பட்டுள்ளவை;

‘கல்வி கற்றல், போர்ப் பயிற்சி பெறல், சிற்பக் கலை கற்றல், இவற்றிற்காக வெளியூர் செல்லுதல், முரண்பட்ட இரு அரசர்களிடையே பகை நீக்குதல், அரசர்களிடையே தூதராகச் செல்லுதல், அரசர்களுக்குத் தூதாகச் செல்லும்போதே அரசரது வலிமை, செய்யப் போகும் வேலையின் தன்மை, துணையாக வருவோரின் வலிமை ஆகியவற்றை ஆராய்தல்....’உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் கூறப்பட்டுள்ளன

(அகத்திணையியல் 44).

இவ்விதியில், ’தலைவன்’ என்ற சொல் இருப்பதால் இவ்விதி அரசனுக்கானது என்று பொருள் கொள்ளல் தவறு. தலைவன் எனும் சொல்லைத் தொல்காப்பியர் அனைத்துப் பிரிவினருக்கும் கையாண்டுள்ளார். அதாவது, குழுத் தலைவன், குடும்பத் தலைவன் என்று அனைத்து அலகுகளின் தலைமையில் உள்ளவன் என்று பொருள். இந்தத் தலைவன், அரசருக்காக செய்ய வேண்டிய / செய்யத்தக்க பங்களிப்புகள்தான் அகத்திணையியலில் கூறப்பட்டது.

அரசு உருவாக்கத்தின்போதும் சமத்துவச் சமூக அமைப்பின் கூறுகளை முன்னிறுத்தியவர் நம் தமிழர் என்பதற்கான சான்று மேற்கண்ட தொல்காப்பிய விதி.
இந்த வகையிலேயே குமட்டூர் கண்ணனார் உள்ளிட்ட எண்ணற்ற அறிவாளர்கள் அரசருக்கு நெருக்கமாக இருந்தனர்.

ஆரியரது அரசக் கோட்பாடுகளோ இதற்கு நேர் எதிரானவை.

’அரசாட்சி நடத்துவது என்பது உதவியாளர்களை வைத்துக்கொண்டால்தான் சாத்தியமாகும். அரசன் அமார்த்யாயர்களை அமர்த்திக்கொள்ள வேண்டும்.அவர்கள் அபிப்ராயங்களைக் கேட்க வேண்டும்’ என்றான் சாணக்கியன். அமார்த்தியாயர்கள் என்போர் ஆரிய பிராமணர் ஆவர். அவர்களிலும் வர்க்கத்தால் மேம்பட்டோர் ஆவர்.

அர்த்த சாத்திர விதிகளின்படி, ’அரசன் அமார்த்தியாயருக்குத் தெரியாமல் எதுவும் செய்யக் கூடாது. அரசனுக்கு உணவு அளிக்கும் உரிமை அரசிக்குக் கூட இல்லை. அமார்த்யாயர்களின் மேற்பார்வையில்தான் உணவு அளிக்கப்பட வேண்டும். அரசன் தன் வாரிசுகளுடன் கூட நெருக்கமாக இல்லாதவாறு பல விதிகள் விதிக்கப்பட்டன.

எல்லாவற்றிற்கும் மேலாக, அரசருக்கும் மக்களுக்குமான உறவு வெகு தொலைவில் இருந்தது. அமார்த்யாயர் எனப்பட்ட ஆரிய பிராமணரே, உண்மையான / மறைமுக ஆட்சியாளர்களாக இருந்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வேதம், கடவுள் ஆகியவற்றின் பெயரால் ஆரிய பிராமணர்கள் செய்து முடித்தனர்.

இந்தக் காலத்தில்தான், தமிழர் மரபு சமூகத்தின் கடைநிலை மாந்தரையும் அரசருக்கு ஆலோசனை சொல்லும் உரிமை உடையவராக அங்கீகரித்தது. அர்த்த சாத்திரம் எழுதப்பட்ட காலம் தொல்காப்பியத்திற்குப் பிந்தியது என்றாலும், அர்த்த சாத்திரத்தின் கூறுகள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே ஆரியரிடையே வழக்கத்தில் இருந்தனவே.

ஆரிய பிராமணரான அமார்த்தியாயர் தமது சிறப்புத் தகுதிகளாகக் கூறிகொண்டவற்றில் ’நிமித்தம் பார்க்கும் திறன்’ ஒன்றாகும். அரசருக்கு நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்துச் சொல்வது இதன் முக்கியப் பணி.

நிமித்தம் என்பது வானியல் அறிவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இந்த வானியல் அறிவும் தமிழரிடமிருந்து ஆரியர் திருடியதே. இது குறித்த ஆழமான ஆய்வு நூல், அறிஞர் குணா எழுதிய ’வள்ளுவத்தின் வீழ்ச்சி’ ஆகும். தமிழர் அறிவைத் தமது பிழைப்புக்காக மூட நம்பிக்கையாக மாற்றியவரே ஆரிய பிராமணர் என்பதை உணர்த்துவதற்காகவே இதை இங்கே குறிப்பிடுகிறேன். ஆயினும், அறிஞர் குணா அவர்களின் அரசியல் நிலைகளில் எனக்கு மாறுபாடுகள் உண்டு.

சங்ககாலத்தில் நிமித்தம் பார்ப்பதைப் பிழைப்பாகக் கொண்டு செயல்பட்டோரும் தமிழகத்தில் ‘பார்ப்பார்’ என்று அழைக்கப்பட்டனர். இப் பார்ப்பாரில் ஒரு பகுதியினர், தொல்காப்பியர் காலத்திலும் சங்க காலத்தின் பிற்பாதிக் காலம் வரையிலும் சமூகத்தின் கடைநிலை மாந்தராகவே இருந்தனர்.

தமிழகத்திற்கு வந்தேறிய ஆரிய பிராமணரில் பலரும் தமிழகப் பார்ப்பாரோடு கலந்தனர். ஆகவே, பார்ப்பார் எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பிரிவினரில் தமிழரும் உண்டு, ஆரிய பிராமணரும் உண்டு. பார்ப்பார் எனும் சொல், குலத் தொழிலைக் குறிக்கும் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டது.

தமிழகத்திற்குப் பிழைப்பு தேடி வந்த எல்லா ஆரிய பிராமணரும், உயர் நிலையில் வைக்கப்படவில்லை. அவர்களது நிலை, தமிழர் அரசுகள் வீழ்ந்த பிறகுதான் உயர்ந்தது.

பார்ப்பாரின் சமூகச் செயல்பாடுகளாகத் தொல்காப்பியர் கூறுபவை;

’தலைவன் (கணவன்) தலைவியைப் (மனைவியை) பிரிந்து செல்லும்போது அவனிடம் சென்று ‘நீ பிரிந்து சென்றால் தலைவியின் வேட்கை மிகும்’ எனக் கூறுதல், தலைவன் செல்வதற்கு வாய்ப்பான நிமித்தம் பார்த்துக் கூறல், தலைவியிடம் சென்று ’தலைவன் பிரிந்து சென்றான்’ எனக் கூறல், இவை போன்ற பிற செயல்கள் அனைத்தும் பார்ப்பாருக்கு உரியனவாகும்’

(தொல்காப்பியம், கற்பியல்-36)

அகநானூற்று பாடல் ஒன்று பார்ப்பாரைப் பற்றிப் பின்வருமாறு விவரிக்கிறது:

’உப்பு வணிகரின் பொதிகளைச் சுமக்கும் கழுதைகளைப் போல் பாறைகள் கிடக்கும் இடத்தின் வழியாக, தூது செல்வதையே பல காலமாகத் தொழிலாகக் கொண்டுள்ள பார்ப்பான் (’தூதொய் பார்ப்பான்’)
செல்கிறான்.

அப் பார்ப்பான், மடியிலே வெள்ளிய ஓலைச் சுவடியை வைத்திருக்கிறான். அவன் வருவதைப் பார்க்கும் மழவர்கள் ’இவன் கையில் வைத்திருப்பது பொன்னாக இருக்கலாம்’ எனக் கருதுவர்.அப்போதே அவனைக்கொன்றும் வீழ்த்துவர். இறந்துகிடக்கும் அப்பார்ப்பானுடைய ஆடைகள் கந்தலாக இருப்பதைக் கண்டதும் அம் மழவர்கள், வெறுப்பில் தம் கைகளை நொடித்தபடியே செல்வர்’

(அகநாநூறு 337)

குறுந்தொகைப் பாடல் ஒன்று பார்ப்பாரை வம்புக்கு இழுக்கிறது.

‘பார்ப்பன மகனே பார்ப்பன மகனே செம்பூ முருங்க மரத்தின் தடியில் கமண்டலத்தை உடைய, நோன்பிருந்து உண்ணும் வழக்கமுடைய பார்ப்பன மகனே, உங்களுடைய எழுத்து வடிவம் இல்லாத கல்வியாகிய வேதத்தில் (’எழுதாக் கற்பு’) உள்ள இனிய உரைகளில், பிரிந்து சென்ற தலைவன் தலைவியை மீண்டும் புணரச் செய்யும் மருந்து உள்ளதா?’

(குறுந்தொகை 156)

பார்ப்பார் எனப்பட்டோர் தூது செல்வதற்கும் அதற்கேற்ற நிமித்தம் பார்ப்பதற்கும் பயன்படுத்தப்பட்டனர் என்பவற்றை இப்பாடல்கள் விளக்குகின்றன. மேலும் அவர்களைப் பிற சமூகத்தினர் இழிவாக நடத்தியமையும் இப்பாடல்களிலிருந்து புலனாகின்றன.

குறிப்பாக, குறுந்தொகைப் பாடல், வேதத்தைக் கேலி செய்கிறது என்றே கொள்ளலாம். தமிழ் மொழி தொன்மை இலக்கணங்களுடன் செம்மாந்து இருக்கும்போது, பார்ப்பாரின் வேதங்கள் எழுத்து வடிவம் கூட இல்லாமல் வெறும் வாய்வழியாகவே வேதங்கள் பாடி பரப்பபட்டதை அப்பாடல் குத்திக் காட்டுகிறது.

மேலும், வேதங்களின் அடிக் கருத்தியல் மறுபிறப்புக் கொள்கையைக் கொண்டவை. இப்பிறப்பில் இன்பம் இல்லை என்பவை. அக வாழ்க்கையை எதிர்த்தவை.
ஆதலால்தான், ’பார்ப்பான் மகனே...உன் வேதம் புணர்ச்சிக்கு உதவுமா?’ எனக் கேட்கிறார் புலவர்.

இப்பாடல்களில் குறிப்பிடப்படும் பார்ப்பார் அனைவரும் ஆரியர் அல்லர். குறுந்தொகைப் பாடலில் வரும் ’பார்ப்பான் மகன்’ மட்டும் ஆரிய பிராமணன் எனத் தெரிகிறது.

நான்கு வேதங்களை முன்னிறுத்தல், வேள்விகள் நடத்தி ஆரியக் கடவுள் கோட்பாட்டைத் தமிழ் அரசரிடம் பரப்புதல், நோன்பு இருத்தல், நிமித்தம் என்ற பெயரில் சோதிடக் கருத்துகளை அதிகரித்தல், இல்லறத்தை வெறுக்கச் செய்து மறுபிறப்புக் கொள்கையை வலியுறுத்தல் ஆகியவை ஆரியர் மேற்கொண்ட திட்டமிட்ட பண்பாட்டுப் படையெடுப்புகளாகும். இப் படையெடுப்பில் தமிழ்ப் பார்ப்பாரும் அந்தணரும் நேரிடையாகப் பாதிக்கப்பட்டனர். அரச உருவாக்கம் ஆரியரது பண்பாட்டுப் படையெடுப்பை விரைவுபடுத்தியது.

ஆகவே, பார்ப்பார் எனும் சாதி முற்றும் முழுதாக ஆரிய இறக்குமதி அல்ல. அதேவேளை, பார்ப்பார்கள் வானியல் அறிவாளர் குலத்தினராக இருந்து ஆரியப் பார்ப்பனர் வருகையினால் முக்கியத்துவம் இழந்து சிதைந்தவர் எனலாம்.

குறிப்பாக, அந்தணர் எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டது, தமிழ் மெய்யறிவாளர்களைத்தானே தவிர, ஆரிய பிராமணர்களை அல்ல. தொல்காப்பியர், தமிழ்ச் சமூகத்தின் பிரிவுகளில் ஆரிய பிராமணர்களைக் குறிப்பிடக் கூட இல்லை. ஆனால், மிகத் தவறான புரிதல்களால், திராவிடக் கோட்பாட்டாளர்கள், ‘தொல்காப்பியரே ஓர் ஆரிய பிராமணர்தான்’ என்று பரப்பிவிட்டார்கள்.

மூலமான சான்றுகளைப் படித்து, மெய்யான தமிழர் வரலாற்றை அறிய வேண்டியது தமிழர் கடமை!

#தமிழ்ச்_சங்கம்
 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

சிலப்பதிகாரம் பற்றிய திராவிட இயக்கத்தின் முரண் கருத்துநிலை

 

 


 
முனைவர் கி.பார்த்திபராஜா
துணைப்பேராசிரியர்
தூய நெஞ்சக் கல்லூரி
திருப்பத்தூர் – வே.மா.
https://maatrunatakam.blogspot.com/2012/12/blog-post_8434.html
திராவிட இயக்கம் தமிழக அரசியல், சமூக, பண்பாட்டு மறுமலர்ச்சி இயக்கமாகத் தோற்றம் பெற்று நிலை பெற்ற இயக்கமாகும். தமிழ்ச் சமூகத்தோடு ஊடாடத் தொடங்கிப் பின் தமிழ்ச் சமூகத்தின் தீர்மானகரமான சக்தியாக வளர்ந்துவிட்ட பார்ப்பனீயத்தை வீழ்த்துவதைத் தன் நோக்கமாகக் கொண்டு எழுந்த இயக்கம் இதுவாகும். பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கையில் தொடங்கி, நீதிக்கட்சியாகக் கிளைத்து, சுயமரியாதை இயக்கமாக வடிவெடுத்துத் திராவிட இயக்கமாக இறுதிவடிவம் பெற்றது இவ்வியக்கம்.
திராவிட இயக்கத்தின் கருத்துநிலை ஆளுமையாக ஈ.வெ.ராமசாமி (இனி.. பெரியார்) இருந்தார். அவருடைய கருத்துநிலைப் பரப்புநராகவும் இரண்டாம் நிலை ஆளுமையாகவும் இருந்தவர் சி.என்.அண்ணாதுரை (இனி அண்ணா). திராவிட இயக்கத்தின் செயல்பாடுகளில் பகுத்தறிவு நெறி பரப்பல், ஆரிய எதிர்ப்பு, வருணாசிரம எதிர்ப்பு, ஆரியத்துக்கு முந்தையவற்றை உயர்த்திப் பிடித்தல், விதவை மணம், கோவில் நுழைவு முதலான சீர்திருத்தங்கள் முதலானவை முதன்மை பெற்றன. இச்செயல்பாடுகளின் ஒரு பகுதியாகவே, திராவிடக் கருத்துநிலைகளின் அடிப்படையில் புராண, இதிகாச, இலக்கிய மறுவாசிப்புகள் நடைபெற்றன. கம்பராமாயணமும், பெரியபுராணமும் பெரியாரின் தாக்குதலுக்கு உள்ளாயின. சிலப்பதிகாரத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை. கம்பராமாயணம் அளவுக்கு அவர் சிலப்பதிகாரத்தை விமரிசிப்பதைக் குறித்து அக்கறை காட்டவில்லையெனினும் சிலப்பதிகாரமும் அவரது தாக்குதல் இலக்கிலிருந்து தப்பிட அனுமதிக்கவில்லை எனலாம்.
 சிலம்பு பற்றிய பெரியாரின் நோக்கு:
சிலப்பதிகாரம் விபச்சாரத்தில் ஆரம்பித்து, பத்தினித் தனத்தில் வளர்ந்து, முட்டாள் தனத்தில், மூடநம்பிக்கையில் முடிந்த பொக்கிசமாகும்’ (விடுதலை;செப்.23,1964) என்பது சிலப்பதிகாரம் பற்றிய பெரியாரின் கருத்தாகும். இலக்கியத்துக்கான அழகியல் மதிப்புக் குறித்து அக்கறைப்பட்டவரல்லர் பெரியார்; மாறாக, அதன் பயன் மதிப்பைக் குறித்தே கவனம் செலுத்தினார். ஆகவேதான் பகுத்தறிவு, சுயமரியாதை ஆகியவற்றுக்குப் புறம்பான எதையும் அவர் ஏற்கவில்லை. அந்த அடிப்படையிலேயே அவர் சிலப்பதிகாரம் உள்ளிட்ட அனைத்து இலக்கியங்களையும் நோக்கினார்.
‘அரைசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும்; உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்; ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்’ என்பது சிலப்பதிகாரத்தின் பாயிரத்தில் இடம்பெற்றுள்ள முப்பெரும் உண்மைகளாகச் சொல்லப்படுவதுண்டு. பெரியார், சிலப்பதிகாரத்தின் முப்பெரும் உண்மைகள் என்று குறிப்பிடுவது கருத்தில் கொள்ளத்தக்கது ஆகும்.
‘சிலப்பதிகாரம் போன ஜென்மம், வருகிற ஜென்மம் என்று தலைவிதியைக் காட்டி மனிதனை எப்படிப்பட்ட இழிவுக்கும் ஆளாகச் செய்கிறது. பார்ப்பான் சொல்லுகிறபடி, அவன் எது கேட்டாலும், எடைக்கு எடை கொடுக்க வேண்டும் என்று சொல்லுகிறது. முட்டாள்தனமான கற்பையும் பெண் அடிமையையும் பெருமைப்படுத்துகிறது’ (விடுதலை;ஜூலை 28,1951) என்பார் அவர். அவைதீக சமயத்தைச் – சமணம் – சார்ந்த காப்பியமானாலும் அதில் பார்ப்பனீயம் செல்வாக்குப் பெற்றிருக்கிறது என்பது பெரியாரின் வாசிப்பு ஆகும்.
சிலப்பதிகாரத்திலிடம்பெறும் பாத்திரங்கள்:
சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் பல்வேறு பாத்திரங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் விளைவுகளையும் நுட்பமாகத் திறனாய்வு செய்துள்ளார் பெரியார். சிறு சிறு பாத்திரங்களையும் கூட, திராவிடக் கருத்துநிலையின் அடிப்படையில் நோக்கியிருக்கிறார். அவரது கருத்துக்கள் வருமாறு:
-        மாடலன் என்ற மறையவனின் சூழ்ச்சி வலையில் சிக்கி, ஆரியத்துக்கும் ஆரிய மடமைக்கும் மண்டியிட்டவன் சேரன் செங்குட்டுவன்.
-        மாமுது பார்ப்பான் மறைவழி காட்டத் தீ வலம் வருவது பார்ப்பனருக்குத் தலைமையிடம் கொடுப்பதாகிறது.
-        கோவலனை அரசன் தண்டித்த மாதிரியானது, நம் நாட்டு இராஜாக்களுக்கே ரொம்பவும் அவமானம் தருவதாகும்.
-        கண்ணகி பெருங்கோபம் வந்து நிரபராதிகளான மதுரை மக்களைச் சுட்டுச் சாம்பலக்கினாள்.
-        கோவலன், கண்ணகியின் கணவன் என்பதை அறிந்தும் அவனோடு கூடும் மாதவியின் செயல் நியாயமானதா? அப்படிப்பட்டவளுக்குக் கண்ணகி பொருள் வசதி செய்து கொடுக்கலாமா?
-        கோவலன் ஒழுக்கமற்றவன்; தாசி ஒழுக்கமற்றவள்; கண்ணகி மடப்பெண்
இதுவே சிலப்பதிகாரத்தின் பாத்திரங்கள் பற்றிய பெரியாரின் மதிப்பீடு ஆகும். பார்ப்பனீய எதிப்புணர்வும் பகுத்தறிவுக்குப் புறம்பானவற்றை எடுத்தெறியும் ஆவேசமும் அவருடைய மதிப்பீட்டில் பொதிந்து கிடப்பதைக் காண முடிகிறது.
கண்ணகி பற்றிய பகடி:
சிலப்பதிகாரத்தின் முதன்மைப் பாத்திரங்களில் அதிகமும் பெரியாரால் தாக்குண்டவர் கண்ணகியேயாவார். முட்டாள் தனத்தைத் தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதைத் தொடர்ச்சியாகத் தனது பேச்சிலும் எழுத்திலும் பகிர்ந்து வந்த பெரியாருக்குக் கண்ணகியின் மீதான எதிர்ப்புணர்வு இயல்பாகவே அமைகிறது எனலாம். அவ்வடிப்படையிலேயே அவர் கண்ணகியைப் பல்வேறு நிலைகளில் விமரிசிக்கிறார். கண்ணகி மதுரையை எரித்தமை பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார் பெரியார்:
‘இந்த அம்மாளுக்குக் கோபம் வந்ததும் தன் மார்பைத் திருகி எறிகிறாள். இது என்ஃன புத்தி? மார்பைக் கையால் திருகினால் அது வந்துவிடுமா? இந்தப்படி நடந்த சங்கதியும், அனுபவமும் சிலப்பதிகாரம் தவிர வேறு எதிலும், எங்கும் காணக்கிடைக்கவில்லை. அந்தப்படித் திருகிப் பிடிங்கின மார்பு வீசி எறிந்தால் அது நெருப்புப் பற்றிக் கொள்ளுமா? அதில் பாஸ்பரஸ் இருக்குமா? இந்த மூடநம்பிக்கைக் கற்பனையானது என்ன பயனைக் கொடுக்கிறது?’ (விடுதலை, ஜூலை 28, 1951) என்கிறார்.
கம்பன்=இளங்கோ:
வால்மீகி வடமொழியில் எழுதிய இராமாயணம், குற்றங்குறைகளுடைய மனிதனாக இராமனைச் சித்தரிக்க, அவ்விதிகாசத்தைத் தமிழாக்கிய கம்பன், அவனை அவதார புருஷனாக்கினார் என்பது பெரியாரின் குற்றச்சாட்டு. எனவேதான் அவர், ‘கம்பன் புளுகும் வான்மீகி வாய்மையும்’ போன்ற ஆய்வுகளுக்கு ஆதாரமாக அமைந்தார். பெரியாரின் ‘இராமாயணப் பாத்திரங்கள்’ இவ்வடிப்படையைக் கொண்டதேயாகும். தமிழரை, ஆரியருக்கு அடிமைப்படுத்தும் எண்ணத்தைக் கொண்டது கம்பராமாயணம் என்பது அவரது கருத்து. அந்த அளவுகோல்களைக் கொண்டே அவர் இளங்கோவையும் அளந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இளங்கோ, அரச மரபினர் என்பதையோ, துறவி என்பதையோ, சிலப்பதிகாரம் அவைதீக மரபைச் சார்ந்தது என்பதையோ, மூவேந்தர்களை ஒன்றுபடுத்தும் நோக்கம் அதாவது தமிழகத்தைப் பிரிவுகளின்றி ஒன்றாகச் சித்தரிக்க வேண்டிய தமிழ்தேசியச் சிந்தனை சிலம்புக்கு இருப்பதையோ பெரியார் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. அவை காப்பியத்தின் தீர்மானகரமான பண்புகள் இல்லை என்று அவர் கருதியிருக்கலாம். எனவேதான் இளங்கோவடிகளின் காப்பியமான சிலப்பதிகாரத்தைக் கடுமையாகச் சாடி வந்தார். பெரியாரின் கருத்துநிலைப் போராளியாக அறியப்பட்ட அண்ணா, பெரியாரின் சிலப்பதிகாரம் குறித்த மதிப்பீடுகளில் மாறுபட்டு நிற்கிறார்.
பெரியாரின் சிலப்பதிகார எதிர்ப்புக்கான விளைவு:
பெரியாரின் செயல்பாடுகள் கெட்டிதட்டிப் போயிருந்த சமூக நிறுவனங்களை எதிர்க்கும் கலகச் செயல்பாடுகளாகவே அமைந்தன. எனவே அவரால் எதிர்கொள்ளப்பட்ட ஆன்மீக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், தங்களின் பாதுகாப்புக்கு அணிதிரள்வதும் உடன்நிகழ்வாக நிகழ்ந்தேறியது. பெரியாரின் கடவுள் மறுப்பு, எதிர்நிலையில் ஏராளமா தெருவோரக் கோவில்கள் உருவாகவும் கம்பராமாயண எரிப்புப் போராட்டம் ஏராளமான கம்பன் கழகங்கள் உருவாகவும் காரணங்களாயின என்பர். அதைப்போலவே பெரியாரின் சிலப்பதிகார எதிர்ப்புக்கு எதிர்விளைவுகள் தமிழ்ச்சமூகத்தில் விளைந்தே வந்தன எனலாம்.
சிலம்புச் செல்வர் என்ற அடைமொழியால் அழைக்கப்படும் ம.பொ.சிவஞானம், பெரியாரை அவருடைய சிலப்பதிகார எதிர்ப்புக்கும் விமரிசிப்புக்கும் கடுமையாகச் சாடினார். தனது ‘தமிழரசு’ ஏட்டில் பெரியாரையும் அண்ணாவையும் சாடிக் கட்டுரைகள் எழுதினார். ‘இலக்கியத்தின் எதிரிகள்’ என்ற தலைப்பிட்டே சிறு வெளியீட்டையும் கொணர்ந்தார்.
‘தமிழ்க்காப்பியங்களில் நல்லெண்ணமும் நம்பிக்கையுமில்லாத ஈ.வெ.ரா.வுக்கு அவற்றைப் பற்றி ஆழ்ந்த அறிவோ, அனுபவ ஞானமோ இருக்குமென்று எப்படி நம்ப முடியும்? ஆயினும் இலக்கியத்துறையில் எல்லாம் உணர்ந்தவர்போல, அடிக்கடி அபிப்பிராயம் கூற முற்படுவதும், ‘ஆராய்ச்சி’ என்ற பெயரால் ஆபாசக் கருத்துக்களை வெளியிடுவதும் ஈ.வெ.ரா.வுக்குத் தொழிலாகிவிட்டது’ (இலக்கியத்தின் எதிரிகள்;1955:15) என்கிறார் ம.பொ.சி.
கண்ணகி குறித்த பெரியாரின் கடுமையான விமர்சனங்களுக்குப் பதிலடியாக, அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், குறிப்பாக, பெரியாரின் 72-ஆவது வயதில் அவருடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கிய 26 வயது மணியம்மையார் குறித்தும் பேசினார் ம.பொ.சி.
‘கண்ணகி என்று கூறப்பட்டிருக்கிற பெண்ணுக்குச் சிறிதாவது அறிவு, மனித உணர்ச்சி – தன்மானம் இருந்தது என்று யாராவது ஒப்புக்கொள்ள முடியுமா? என்று கம்பீரமாகக் கேள்வி போடுகிறார் ஈ.வெ.ரா. உணர்ச்சிக்காக அல்லாமல் உடைமைக்காக முதுமையைக் காதலிக்கும் பெண் மனித உணர்ச்சி அற்றவள் தான்! ஊரார் பழிக்கும் நிலைமையிலும் உணர்ச்சியற்ற கட்டையாகக் கிழத்தோடு பவனி வரும் பெண் தன்மானமற்றவள்தான்! இந்தக் குறைபாடுகள் அனைத்தும் கொண்ட ஒரு பெண்ணை ஈ.வெ.ரா. எப்போதோ – எங்கேயோ சந்தித்துவிட்டார் போலும்! அவளை நினைவில் வைத்துக்கொண்டு கண்ணகியைச் சாடுகிறார்’ (இலக்கியத்தின் எதிரிகள்;1955:26) என்று வம்பளக்கிறார் ம.பொ.சி.
பெரியாரின் சிலப்பதிகார எதிர்ப்பு, ம.பொ.சிவஞானம் போன்றோரைச் ‘சிலப்பதிகார மகாநாடு’ நடத்தத் தூண்டியது எனலாம்.
கம்பன் இளங்கோ:
அண்ணா, திராவிடக் கருத்துநிலையின் அடிப்படைகளைக் கட்டியவர்களில் குறிப்பிடத்தக்கவர். பெரியாரின் தொண்டன் என்று தன்னை அழைத்துக் கொண்டபோதும், அவருடைய செயல்பாடுகளிலும் கருத்தியல்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் முரணியவர். பெரியார்-மணியம்மையார் திருமணத்தில் முரண்பட்ட குழுவினருக்குத் தலைமை தாங்கியவர் அண்ணா. ‘கண்ணீரோடு வெளியேறுகிறோம்’ என்று குறிப்பிட்டுத் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி, 1949 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியவர். திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டபோது, ‘சூழ்நிலை அப்படியே இருக்கிறது; கோரிக்கையை மட்டும் கைவிடுகிறோம்’ என்று புதுநெறி(!) காட்டியவர். கடவுள் மறுப்புப் பாரம்பரியத்திலிருந்து விலகி, ‘ஒருவனே தேவன்’ என்று நெகிழ்வு காட்டியவர்.
அத்தகைய அண்ணா, கம்பராமாயணம் பற்றிய எதிர்ப்புப் போரில் பெரியாரைப் போலன்றிச் சிலப்பதிகாரத்திற்கு வலுவான தமிழ் அடையாளம் கற்பித்தார். கம்பராமாயணம் ஆரிய ஆதரவுக் கலை என்றால், சிலப்பதிகாரம் தமிழர் ஆதரவுக் கலை என்று நிறுவ முயன்றார். அந்த அடிப்படையில் அவர் பெரியாரின் சிலம்பு குறித்த கருத்துக்களோடு வெளிப்படையாக அறிவிக்காமல் முரண்பட்டார்.
1943 இல் பெரியாரால் முன்மொழியப்பட்ட, ‘கம்பராமாயண எரிப்பு, பெரியபுராண எரிப்பு’ இயக்கத்திற்குக் கருத்துநிலைப் பரப்புநராக இருந்தார் அண்ணா. சென்னையிலும் பிறகு சேலத்திலும் நடத்தப்பட்ட ‘கம்பராமாயணத்தை எரிக்க வேண்டுமா? வேண்டாவா?’ எனும் தலைப்பிலான விவாத அரங்கில் அண்ணா கலந்து கொண்டு பெரியாரின் தரப்பு வாதங்களை முன்வைத்தார். சென்னையில் அண்ணாதுரையின் கருத்தை மறுத்துப் பேசியவர் சொல்லின் செல்வர் என்று புகழ்ந்துரைக்கப்பட்ட ரா.பி.சேதுப்பிள்ளை. சேலத்தில் மறுப்புரை வழங்கியவர் நாவலர் ச.சோமசுந்தர பாரதியார். மேற்குறித்த இரண்டு விவாதங்களிலும் அண்ணா, சிலப்பதிகாரத்திற்குத் தரும் இடம் கவனத்தில் கொள்ளத்தக்கது.
கம்பன் தனது காவியத்தின் நோக்கத்தை வெளிப்படையாகப் பாயிரத்தில் ஏன் குறிப்பிட அஞ்சுகிறார் என்று வினாவெழுப்புகிறார் அண்ணா. ‘பழந்தமிழ் நூலான சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள், தமது பாயிரத்தில், தாம் காதை பாடுவது எதற்கு என்பதைக் கூறும்போது, பத்தினியை உலகு புகழ்ந்தேத்தும், நீதி தவறிய அரசு கெடும், அவனவனின் செயலின் விளைவு அவனவனைத் தாக்கும் என்ற கருத்துரைகளைக் கூறவே, நான் இப்பாட்டுடைச் செய்யுளை இயற்றினேன் என்று எழுதினார் தெளிவாக.  … ஆண்டவனின் அவதாரம் என்று ஆரியராலும், கம்பராலும் போற்றப்படும் இராமகாதை பாடுவதற்குக் கம்பர் ஏன் இவ்வளவு சஞ்சலப்படுகிறார்? இதனால் உலகு பழிக்குமோ என்ற சந்தேகம் ஏன் கொண்டார்? என்று கேட்கிறேன்’ (தீ பரவட்டும்;2005:11) என்கிறார் அண்ணா.
காப்பிய நோக்கத்தினை இளங்கோ தெளிவுபடக் கூறியுள்ளாரென்றும் கம்பர் கரந்து ஒளித்துள்ளார் என்றும் கூறுமிடத்துச் சிலம்புக்கு அண்ணா தரும் ஏற்றம் புலப்படுகிறது. ‘கம்பராமாயணத்தைப் புறந்தள்ளினால், தமிழருக்கான இலக்கியமாக எது இருக்கும்?’ என்ற வினாவுக்கு விடையளிக்கும்போது,
‘தனது இளமை எழில், செல்வம் யாவற்றையும் பரத்தைக்கு ஈந்து, வறியனாகித் திரும்பிடும் கோவலனைக் கண்ணகி கண்டபோது, தனக்குற்ற இடரெல்லாம் மறந்து கோவலனிடம் கனிமொழி பேசிய அம்மாண்புடன் காட்டுக்கு வராதே என்றதும் இராமனை நோக்கிச் சீதை பேசும் மொழியுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கற்பின் மாண்புக்குச் சிலப்பதிகாரமிருக்க, கம்பனின் ஆரியக்கதை வேண்டுமா என்று யோசிக்கும்படி வேண்டுகிறேன்’ (தீ பரவட்டும்;2005:14) என்கிறார் அண்ணா.
‘ஆரியக் கற்பனைகளைத் தமிழ்க்கலை எனும் நகாசுவேலை செய்த்து, தமிழருக்குக் கம்பன் செய்த கேடு என்பேன். கண்ணகியிஃ மாண்பைக் கம்பன் சீதையைத் தீட்டுவதிலே காண்கிறோம் என்கிறார் (ரா.பி.சே). கண்ணகி குறித்த ஏடு இருக்க இது ஏன்? என்று கேட்கிறேன்’ (ப:26) என்றும் மற்றொரு இடத்தில் குறிப்பிட்டுப் பேசுகிறார் அவர்.
மேற்குறித்த அண்ணாவின் பேச்சு அவர் கம்பராமாயணத்திற்கு மாற்றாகச் சிலப்பதிகாரத்தைக் கட்டமைக்க முயன்றமையைக் காட்டுகிறது. தமிழரின் வீரம் பற்றிய விவாதங்களிலும் சிலப்பதிகாரத்தின் சேரன் செங்குட்டுவனின் இமய வெற்றி விதந்தோதப்படுவதைக் காண முடிகிறது. அண்ணாவின் இயக்கத்தார்களும் கருத்துநிலை வழித்தோன்றல்களும் இக்கருத்துக்களையே முற்றிலும் தமிழ்ச்சமூகத்தின் முன் பெருமையுடன் முன்வைத்தார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.
முடிவாக…
ஆரியத்துக்கு எதிரான செயல்பாடுகளில் ஒன்றாகவே தமிழ் இலக்கியங்களை மறுவாசிப்புச் செய்தலை மேற்கொண்டது திராவிட இயக்கம்.
சிலப்பதிகாரத்தைப் பகுத்தறிவுக் கண் கொண்டு நோக்கிய பெரியார், அக்காப்பியத்திலுள்ள மூட நம்பிக்கைகளைக் கடுமையாகச் சாடினார். பார்ப்பனீயத்தின் நிலைபேற்றிற்குத் துணைபோகும் காப்பியம் என்று மதிப்பிட்டார்.
சிலம்பின் கதை, பாத்திரங்கள், விளைவு ஆகிய அனைத்தையும் பயன் என்ற ஒற்றைக் கண்ணாடி கொண்டு பார்த்தார் பெரியார். இலக்கியங்களின் அழகியல் மதிப்புக் குறித்துப் பெரியார் அக்கறைப்படவில்லை.
சிலப்பதிகாரத்தின் உருவாக்கச் செய்திகள், பின்புலம், அரசியல், பண்பாட்டு நிலைப்பாடு ஆகியன குறித்த ஆய்வுப் பூர்வமான முடிவின் அடிப்படையில் பெரியார் எதிர்ப்பில் ஈடுபடவில்லை; பொதுநிலையில் நின்று சிலப்பதிகாரத்தை எதிர்த்தார். சிலப்பதிகாரத்தின் தமிழ்தேசியச் சார்பு நிலைப்பாட்டையோ, முரண்பாடுகளையோ அவர் கவனத்தில் எடுக்கவில்லை.
பெரியாரின் சிலப்பதிகார எதிர்ப்பு ம.பொ.சிவஞானம் போன்றோரை எதிர்நிலையில் தூண்டியது. தனிமனித வசைபாடல்களுக்கும் காரணமாக அமைந்தது. ‘சிலப்பதிகார மாகாநாடு’ கூட்டப்படவும் காரணமாயிற்று.
அண்ணா பெரியாரிடமிருந்து முரண்பட்ட இடங்களில் சிலப்பதிகாரத்தின் மீதான மதிப்பீடும் ஒன்றாகும். பெரியாரது கம்பராமாயண எதிர்ப்புப் பரப்புரை செய்யும்பொழுதே அதற்கு மாற்றாகச் சிலப்பதிகாரத்தை அண்ணா முன்வைத்தார். பின்னாளில் பெரியாரிடமிருந்து பல்வேறு கருத்துக்களில் அவர் முரண்பட்டமைக்கான தொடக்கப்புள்ளியாக இதைக் காணலாம்.
திராவிட இயக்கத்தின் திறனாய்வுக் கோட்பாடுகளோ, இவ்வாறான எதிரெதிர் முரண்களைக்  கொண்டிருக்கிறது என்பதைத் தொகுத்துக் கொள்ளுவது அதன் பின்னாளைய அரசியல் தடுமாற்றங்களைப் புரிந்துகொள்ள உதவும்.
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard