மலக்குழி அடைப்பு மனிதர்கள் செய்ய தடைவிதித்து அதை நடைமுறைப்படுத்தாத ஆட்சியாளர்களின் பெயரில் அந்த TheVidiyal பையனால் கவிதை எழுத முடியுமா? இயந்திர மயமாகி விட்ட உலகில் இந்த வேலைக்கு இயந்திரம் வந்து பலகாலமாகிவிட்ட நிலையில் , இன்னும் மலக்குழி நினைப்புலயே இருக்கிறவனுக்கு " குலத்தளவே குணம்!" 75 வருட இட ஒதுக்கீட்டு சலுகை கிடைத்தும் படித்து முன்னேறாமல் அடுத்தவனை குறை சொல்லி பிழைப்பதற்கு பதில் பிச்சை எடுத்து பிழைக்கலாம்! கையாலாகாதவர்கள்
சென்ற வருடம் ஆகஸ்டு மாதம் இந்தியா சுதந்திரமடைந்த 75-ஆண்டை குறிக்கும் விதமாக “நீலம்” பத்திரிக்கை ஒரு சிறப்பிதழ் வெளியிட்டது, அச்சிறப்பிதழில் “தமிழகத்தில் மலக்குழி மரணங்கள்” என்ற தலைப்பில் முருகப்பன் ராமசாமி கட்டுரை எழுதியிருந்தார். முருகப்பனின் கட்டுரை முழுக்க தரவுகள் அடிப்படையில் ஒரு மனித பேரவலத்தை பேசியது. அக்கட்டுரையில் எந்த மதமோ, சாதியோ, தொன்மமோ சீண்டலாக கூட அல்ல மென்மையாகக் கூட விமர்சிக்கப்பட்டதாக நினைவில் இல்லை. அக்கட்டுரையை சமூகம் மொத்தமாக கண்டுக் கொள்ளவில்லை என்பதே நிஜம். அவ்வப்போது மலக்குழி மரணங்கள் நிகழும் செய்திகள் வெளிவரும் போது அந்த நேரத்துக்கு பேஸ்புக்கில் ஒரு உச் கொட்டிவிட்டு வேறெந்த கேள்வியையும் கேட்க மனமில்லாமல் தமிழ்ச் சமூகம் கடந்து போகும்.
விடுதலை சிகப்பி அவர்களும் தன் கவிதையில் சுய கழிவிரக்கத்தோடு சமூகத்திடம் மன்றாடும் தொனியில் மட்டுமே எழுதியிருந்தால் பிரச்சனை விளைந்திருக்காது என்பதோடு சில பாராட்டுகளும் கிடைத்திருக்கும். பிராமணர்களுக்கோ இந்துக்களுக்கோ எவ்வகையிலும் மணம் புண்பட்டுவிடக் கூடாதென்று ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் கழக அரசு நிதானமாக செயல்படும், இப்போது சநாதன சக்திகளை எதிர்ப்பதற்கு சிறந்த வழி அவர்கள் எதிர்ப்பவற்றை விரைந்து தண்டிப்பது என்கிற கூடுதல் பாரமும் இந்த அரசுக்கு இருக்கிறது. அண்ணாமலை தரப்பு எதையெல்லாம் அரசியல் ஆக்குகிறதோ அங்கெல்லாம் விரைந்து சென்று அத்தரப்பு மனம் குளிரும் வகையில் உடனடி தீர்வுகளை அரசு மேற்கொள்கிறது. ஒரு கன்னியாஸ்திரி எவ்வித முறையான விசாரனையுமின்றி அரசியல் எதிர்ப்புகளுக்காக கைது செய்யப்பட்டச் சூழலில் கறுப்பர் கூட்டம், விடுதலை சிகப்பி மீதான வழக்குகள் ஆச்சர்யமல்ல.
இதில் ஒரு துயரமான முரண் இன்று பாஜக இந்துக்கள் மனம் புண்படுகிறதென்ற ஆயுதத்தை எடுப்பதற்கு காரணமே திராவிட இயக்கத்தினர் வகை தொகையில்லாமல் பிராமணர்களையும் சாஸ்திரங்களையும் இழிவாகப் பேசியது தான். உதாரணம் இந்து திருமண மந்திரங்கள் குறித்து முதல்வர் பேசியது, ஐஐடி-யில் படிக்கும் பிராமண பெண்கள் குறித்து திமுக எம்.எல்.ஏ, அதுவும் மருத்துவர், பேசியது. அதெல்லாம் மேடையில் கைத்தட்டலுக்கான சில்லறை பேச்சுகள் நிஜத்தில் பிராமணர்களை சமயம் கிடைக்கும் போதெல்லாம் கொண்டாடுவதில் கழகத்தினரை பாஜக கூட மிஞ்ச முடியாது என்பதே யதார்த்தம்.
கீமாயணம், நீதி தேவன் மயக்கம், கம்ப ரசம், வாலி வதம், சம்பூகன் வதம் என்றெல்லாம் மேடைதோறும் ராமனை வைத்து கும்பியும் கட்சியும் வளர்த்த பிரகஸ்பதிகளெல்லாம் இன்று மேம்போக்காக கண்டனம் தெரிவித்தோ மவுனம் காத்தோ கடந்து செல்கிறார்கள். இதில் சில மகானுபவர்கள் “நல்ல கவிதை இல்லை, ஆனாலும்…” என்று நியாயவான்களாக தோற்றமளிக்கிறார்கள். ஏனய்யா நீங்கள் எல்லாம் என்ன ஞானபீட தரத்தில் தான் விமர்சனங்கள் செய்தீர்களா? இப்படிச் சொல்வதால் நானும் ஏதோ அக்கவிதையின் தர விவாதத்துக்குள் செல்கிறேன் என்பதல்ல பொருள்.
கவிதையில் “அந்தணரை தேடினேன்” என்கிற வரி வழக்கம் போல் விவாதமாகி இருக்கிறது. “நாங்கள் மட்டுமா, மற்றவர்கள் யோக்கியமா, மற்றவர்களை சொல்ல இயலுமா” என்று கேள்விக் கணைகள் வருகின்றன. அவர் என்ன பட்டியல் போட்டா கவிதை எழுத இயலும்?
அடுத்தது ராமன். இங்கு தான் பிரச்சனை இன்னும் திசைத் திருப்பப்படுகிறது. நான் செய்யும் தொழிலை என் கடவுள் செய்வானா? இல்லையென்றால் அவன் யாருடைய கடவுள், என் தொழில் எத்தகையது போன்ற கேள்விகளே இங்கு கவிஞர் முன் வைப்பது. (என் கருத்தைப் போன்றே பத்திரிக்கை ஆசிரியர் வாசுகி பாஸ்கரும் கேள்வி எழுப்பி உள்ளார், சுட்டி https://youtu.be/htyX8ZHSb3A ). சமூகமும் ராமன் உன் கடவுள் அல்ல என்கிற அளவில் தான் எதிர்வினையாற்றி இருக்கிறது. வந்த எதிர்வினைகளின் உட்கருத்து அது தான்.
செக்யூலரிச முகமூடி தரித்த இந்துத்துவ சிகாமணி ஒருவர் இது தான் சாக்கு என்று யேசுவை பற்றி எழுதுவாயா, நபிகளாரை எழுதுவாயா என்று எழுதி தன் செக்யூலரிச முத்திரையை பதித்துவிட்டுப் போகிறார். அவர் பார்வையில் விடுதலை சிகப்பி இந்து அல்ல அது தான் காரணம். “கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்” என்று எழுதியவன் பிராமண கவிஞன். அவனிடம் இந்த செக்யூலரிச சேப்பியன் (Sapien) ஏன் இயேசுவை பற்றி எழுதவில்லை எனக் கேட்பாரா? மாட்டார். மாட்டவே மாட்டார். “எவரும் எந்த பொருளும் தெய்வமானால்; கும்பிட்ட கூட்டம் போதும்; குப்பை கூட சொர்க்கம் சேரும்” என்று நாடகம் எழுதியவர் சாட்சாத் கமலஹாச ஐயங்கார். அவரை நோக்கி கேள்விக் கணை பாய்ந்ததோ?
செக்யூலரிச இந்துத்துவர் கேட்டிருக்க வேண்டிய கேள்வி இஸ்லாமிலும் கிறிஸ்தவத்திலும் செய்யும் தொழிலால் ஒருவன் விலக்கப்படுவதுண்டா என்று தான்? இந்து மதத்தில் சாதி முன் தோன்றியதா, தொழிலால் சாதி நிர்ணயிக்கப்பட்டதாவென அறுதியிட்டு சொல்ல முடியாதெனினும் சாதியும் தொழிலும் இரண்டற கலந்ததோடு சாதிக்கொரு கடவுளும் தீண்டாமையும் பிரித்தரிய முடியா வண்ணம் கலந்ததே நிஜம். அதனால் தான் விடுதலை சிகப்பி சிக்கலை சந்திக்கிறார். அந்த செக்யூலரிச சேப்பியனுக்கு தீர்க்கமான பதில்களை அடுக்க முடியும் ஆனால் அது விவாதத்தை தேவையே இல்லாத இந்து மதமா, இஸ்லாமா, கிறிஸ்தவமா என்று மடைமாற்றும். ஒரு வேளை அது தான் அவர் ஆசைப்படுவதாகவும் இருக்கலாம்.
தீவிர மத ஒப்புமை வேற்றுமைகளுக்குள் செல்லாமல் ஒரு உதாரணம். மீனாட்சிபுரம் மதமாற்றத்தை வைத்து ஜெயகாந்தன் எழுதிய ‘ஈஸ்வர அல்லா தேரே நாம்” குறுநாவலில் ஒரு மதம் மாறிய கசாப்புக் கடைக்காரர் பேசுவதில் இருந்து ஒரு பகுதி, “அல்லாவின் பேராலே அந்தத் தொழிலைச் செய்வாய். அப்போ உனக்குப் பாவம் இல்லை…..இந்து மதத்தில் யாகம் செய்வாக; உயிர்ப் பலி கொடுப்பாக…ஆனால் அவுகளுக்கு எல்லாம் பாவம் இல்லே..ஜீவகாருண்யம் பேசுவாக. அவுகளுக்கு ஒரு உறுத்தலும் இல்லை…வயத்து பொழைப்புக்குக் கால காலமாய் இந்தத் தொழிலைச் செய்யற நான் மட்டும் ஏன் பாவியானேன்; சண்டாளன் ஆனேன்; புலையன் ஆனேன்! எனக்கு மட்டும் ஏன் உறுத்தல்?”
இன்னொரு செய்தி மார்டின் லூதர் கிங் உரிமைப் போராளி மட்டுமல்ல அவர் ஒரு படித்துப் பட்டம் பெற்ற பாதிரியார், இறையியலாளர். மெம்ஃபிஸ் நகரில் தூய்மைப் பணியாளர்களுக்கான வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்று அவர்களின் ஊதிய உயர்வுக்காக போராடச் சென்ற போது தான் அவர் கொல்லப்பட்டார். எல்லா மதத்திலும் ஏதோ ஒரு ஏற்றத் தாழ்வும் குறைகளும் உள்ளன ஆனால் இவ்விஷயத்தில் விடுதலை சிகப்பியின் கேள்விக்கு நியாயமுண்டு.
கறுப்பர் கூட்டம் விவகாரத்திலும் சரி விடுதலை சிகப்பி விவகாரத்திலும் சரி தெள்ளத்தெளிவாகத் தெரிவது தமிழகத்தில் பிராமணர்களையோ இந்து தொன்மங்களையோ கேள்விக் கேட்பது கூட இடைநிலை சாதியினர் தான் செய்ய முடியும். திராவிட இயக்கத்தின் கொத்தளங்களில் தயாரான குத்தீட்டிகளை அவர்கள் மட்டுமே ஏந்த முடியும்.
இத்தனை நூற்றுக் கணக்கான பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன, இதோ பார் உலகத் தொழில் நுட்ப நிறுவனங்கள் தமிழகத்தில் உற்பத்தி செய்ய அணிவகுக்கிறார்கள் என்றெல்லாம் மார் தட்டும் கூட்டம் இன்றும் மலக் குழிக்குள் மனிதன் இறங்குகிறான், அதுவும் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே, என்ற அவல உண்மையை எதிர் நோக்க மன சாட்சியின்று கேள்வி எழுப்பியவர்களையே குற்றவாளி கூண்டில் நிறுத்துகிறது.
மே 3-ஆம் தேதி மீஞ்சூரில் ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் மலக்குழிக்குள் இறங்கிய இரண்டு தலித்துகள் இறந்து விட்டார்கள். பள்ளியின் தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார், வண் கொடுமை வழக்கும் பதியப்பட்டுள்ளது. பஞ்சாயத்து போர்டு இவ்விவகாரத்தில் கைக் கழுவுகிறது என்கிறது நியூஸ் மினிட் கட்டுரை. ஒரு நவீனக் காலச் சமூகத்தில் இப்படியான மரணங்கள் நிகழ்வது பேரவலம். கட்டுரை எழுதிய போது கண்டுக்காத சமூகம் கடவுளை வைத்து கவிதை எழுதிய போது பிரச்சனையை மறந்து, மறைத்து, கொதித்துக் கொண்டிருக்கிறது.