மணிரத்னம் இயக்கிய கல்கி அவர்களின்; பொன்னியின் செல்வன்| படம் குறித்து நண்பர் ஒருவரிடம் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தேன்.
அவர் சற்றே வில்லங்கமான, குறும்புகார நபர்.
பொன்னியின் செல்வன் படம் குறித்து அவர் தனது மாற்றுக் கருத்தை இப்படி சொன்னார்.
சோழர்களின் வரலாற்றை, அந்த கால தமிழர்களின் பொற்காலத்தை சொல்வது 'பொன்னியின் செல்வன்" கதை.
ஆனால், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு இப்போதைய சோழ நாட்டு பகுதியில் ஒருநாள் கூட நடக்கவில்லை. தாய்லாந்து காடுகள், வட இந்திய அரண்மனைகள், ஐதராபாத்தில் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தி இது சோழர்களின் நிலப்பரப்பு என்கிறார் மணிரத்னம்.
இவ்வளவு ஏன், ராஜராஜ சோழனுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட தஞ்சை பெரிய கோயிலுக்கு படக்குழு செல்லவே இல்லை.
திருவனந்தபுரம், ஐதராபாத், மும்பை, டில்லிக்கு சென்ற படக்குழுவினர் தஞ்சைக்கு வரவில்லை.
தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்று சாமி கும்பிடவில்லை. இராஜராஜன் நினைவிடம் என்று சொல்லப்படும் இடத்துக்கு சென்று மரியாதை செலுத்தவில்லை. ரூ.500 கோடி பட்ஜெட்டில் படமெடுத்தவர்கள் தஞ்சை பெரிய கோயில் வாசலில் இருக்கும் இராஜராஜன் சிலைக்கு 100 ரூபாய்க்கு மாலை வாங்கி போடவில்லை.
பொன்னியின் செல்வன் நாவலை எழுதிய திரு.கல்கி அவர்களுக்கு படக்குழுவோ, மணிரத்னமோ உரிய மரியாதை செய்யவில்லை.
இது வரை நடந்த பாடல்கள் வெளியீடு விழா, புரமோஷன்களில் கல்கி படத்திற்கு யாரும் மலர் மாலை போட்டு, கவுரப்படுத்தப்படவில்லை.
பொன்னியின் செல்வன் கதை வீராணம் ஏரியில் தொடங்கி அதே வீராணம் ஏரியில் முடியும்.
ஆனால், படக்குழுவினர் ஒருவர் கூட வீராணம் ஏரிபக்கம் சென்றது இல்லை.
அந்த காலத்தில் பாடல் முறை வேறு, ஏ.ஆர் ரகுமான் இந்த படத்துக்கு போட் இசை வேறு.
படம் பார்க்கும் வேறு மாநிலத்தவர்கள் இதுதான் அந்த கால 10ம் நூற்றாண்டின் இசை என்று நினைக்கு கூடும்.
நந்தினி கேரக்டர் தான் கதையில் முக்கியம். அந்த கேரக்டரில் நடித்த ஐஸ்வர்யாராய்க்கு தமிழ் எழுத படிக்க தெரியாது. குந்தவையாக நடித்த திரிஷா எனக்கு சரியாக தமிழ் பேச தெரியாது" என்று ஓபனாகவே சொல்லி விட்டார்.
தமிழகம் வெப்ப மண்டல பகுதி, சோழர் கால உடைகள் வேறு, அணிகலன்கள் வேறு.
பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் அணிந்த உடைக்கும், நகைக்கும் பழங்கால தமிழர்களுக்கும் சம்பந்தம் இல்லை. படத்தில் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றியவர் தமிழரே இல்லை. வட இந்திய பெண்,
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் பெரும்பாலான நடிகர், நடிகைகள், படக்குழுவினர் ஆங்கிலத்தில் தான் பேசினார்கள்.
ஆங்கிலம் தான் அங்கே தொடர்பு மொழியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இப்படி தமிழை, தமிழர்களை, சோழர்களை, அவர்கள் நிலப்பரப்பை புறக்கணித்து எடுக்கப்பட்ட படம் தான் 'பொன்னியின் செல்வன்".
படத்தை தயாரித்தவர் சுபாஸ்கரன் என்ற இலங்கை தமிழர். கதைப்படி அருண்மொழிவர்மன் முதலில் இலங்கையில் தான் இருப்பார்.
அந்த வகையில் மட்டுமே ஒரு சின்ன தொடர்பு இருக்கிறது இந்த படத்திற்கும் திரு.கல்கி அவர்களின் புதினத்திற்கும்.
நன்றி : சினிமா நிருபர், திருச்சி தினமலர், 02.10.22
கொஞ்சம் கூட எந்த ஒரு expectationsம் இல்லாமல்தான் சினிமா போனோம்
வந்தியத்தேவன், பழவேட்டறையர் போன்று அவ்வப்போது வரும் பெயர்களைத்தவிர, ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு நடந்த கதையை இப்படியா படமாக்குவது? தமிழை போற்றிக்காத்த சோழ பாண்டிய மக்களை ‘சோள நாட்டு தளபதியிடமிருந்து ஓலை வந்திருக்கிறது’ என்று ஏனோதானோ என்று டயலாக் பேசவிட்டு,…..கொடுமை! “சோழ நாடு” என்று சொல்லும்போதே அழகும் கம்பீரமும் மிளிரவேண்டாமோ?
“ஓலை கொண்டுவந்திருக்கிறேன்”
“அப்படியா? நான் ஒரு ஓலை கொடுக்கிறேன்” என்று எல்லோரும் மாறி மாறி ஒருவருக்கொருத்தர் ஓலை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இல்லாவிட்டால் கழுத்தில் கத்தியை வைக்கிறார்கள்.
ஐஸவர்யாராய் ஒரு வில்லி கேரக்ட்டராகவே இருந்துவிட்டு போகட்டும். அதற்காக இப்படியா? ஐஸவர்யா வரும்போதெல்லாம் வயிற்றைக்கலக்கும்படி பயமும் சோகமும் கலந்த ‘ஏஎஏஎஏஎஏ ஓஓஓஓஒஒஓஓஓஓ’ ன்னு ஒரு background score. மற்ற சமயங்களில், subtle ஆக ARRahman ம்யூசிக் அதுபாட்டுக்கு, தனி ட்ராக்கில் தொந்தரவு பண்ணாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. எந்த ஒரு எமோஷனோ, situation, character களை enhance பண்ணத்தக்க ம்யூசிக்கோ கொஞ்சம்கூட இல்லை. ஏதோ, தலைவலி வரவில்லையே என்று திருப்திபடுத்திக்கொள்ள வேண்டியதுதான்.
இன்ட்டர்வலுக்கு பிறகு அந்த ஓலை எக்சேஞ் கொஞ்சம் குறைந்து, சிலோன், கடல் என்று sceneries கொஞ்சம் நல்லா இருந்தது. ஆனால் ஆரம்பம் முதல் கடைசி வரை கத்தி வாள் அம்பு என்று மாறிமாறி சண்டை போட்டுக்கொண்டே இருக்காங்க.
வடிவேலு இல்லாவிட்டால் படம் ஓடாது என்று சொல்லியிருப்கார்கள் போலிருக்கிறது. அதனால், ஆழ்வார்கடியானை வடிவேலுவாக்கிவிட்டார் மணிரத்னம்.
மணிரத்னம் படைத்தை பார்த்து பொன்னியின் செல்வன் கதையே இப்படித்தான் இருக்குமோ என்று நான் ஏமாறமாட்டேன். இவர் ராவணன் எடுத்த லக்ஷணம் போறாதா?
ஆயிரம், இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பே, சேரசோழ பாண்டிய பல்லவ மன்னர்கள் காலங்களில், அவ்வப்போது போர் நடந்துகொண்டிருந்தாலும், அக்காலத்திலேயே நமது பழைய நாகரீகம் பரமிக்கத்தக்க வகையில் இருந்திருக்கிறது. கட்டிடக்கலை, விவசாயம், அணைகள், கடல்கடந்து வியாபாரம், drainage system, தமிழ் சங்கம், தேர்தல்கள் என்று மிகவும் முன்னேறி இருந்திருக்கிறார்கள். அதையெல்லாம் கொஞ்சம்கூட reflect பண்ணாமல், மாறிமாறி எல்லோரும் ஒருவருக்கொருத்தர் கழுத்தில் கத்தி வைத்துக்கொண்டு,….. போறும்டா சாமி.
போறாக்குறைக்கு இதில் நடித்துள்ள நூறு ஆக்டேர்ஸும் டிவியில் மாறிமாறி இன்ட்டர்வ்யூ கொடுத்து, “காலை நாலு மணிக்கே எழுந்திடுவோம்” . “ராத்திரி பத்து மணிவரைக்கும் ஷூட்டிங் இருக்கும்” னு பந்த்தாபண்ணிட்டு கோடிக்கோடியா பணத்தை அள்றாங்க. ஏதோ நாமெல்லாம் ஒருநாளைக்கு ஒருமண்ணேரம் மட்டும் உழைக்கிறமாதிரி.
ஒரு விஷயம் தெளிவாகிவிட்டது. Part 2 shooting எல்லா வொர்க்ஸும் முடிந்துவிட்டதாம். அது ரிலீஸ் ஆன உடன், அரக்கப்பரக்க சினிமா த்யேட்டருக்கு ஓடாமல், நிதானமாக OTT யில் கையில் ரிமோட்டோடு ஐஸ்வர்யா வரும்போதெல்லாம் ம்யூட் பண்ணி, கத்தி வாள் சண்டைகளை fast forward பண்ணி, நிதானமாக பார்த்துக்கொள்ளலாம்.
தவளை மாதிரி நான்கைந்து புரோகிதர்கள் சமே சமே.. என்று சமகம் சொல்ல, பழுவேட்டரையர் அலட்சியப் படுத்திப் படியேறி செல்கிறார்.
ராமானுசருக்கு முந்தைய வைணவம் எப்படி இருந்திருக்கும்? ஆழ்வார் பாடிய வரிகள் எதுவும் எந்த காட்சியிலும் இல்லை. நாயன்மார்கள் பாடிய பதிகங்கள் இல்லை.
திடீரென்று நினைத்துக் கொண்டு தஞ்சை பெரியகோவில் மாதிரி ஒரு கோவிலை எழுப்பி விட முடியாது - அதற்கு எத்தனை தலைமுறைகள் பயிற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும்? அது பற்றியும் எதுவும் இல்லை.
சுந்தர சோழர் அக்கு பங்ச்சர் செய்துகொள்கிறார்.. ஆயுர்வேதம் இல்லை.
தேவராளன் ஆட்டம் காளி போன்ற சிலை முன்னால் ஆடும்போதும் ஒரு சொல் காளி பற்றியோ, அந்த தெய்வத்தைப் பற்றியோ இல்லை. ஆட்டத்திலும் எந்த அழகியலும் இல்லை. தொப்பை விழுந்த ஒருவர் தப்பி தப்பி ஆடுகிறார்.
பாண்டியர்கள் கொற்றவை என்றுதான் சொல்கிறார்களே தவிர மீனாட்சி என்று சொல்வதில் தயக்கம். தப்பித் தவறிக்கூட மத சாயல் வந்து விடக் கூடாதாம்.. பாண்டியர் ஏதோ காட்டுமிராண்டி கூட்டம் போல வருகிறார்கள்.
நாம் என்ன ஹாலிவுட் சண்டை காட்சிகளைப் பார்க்கவா வருகிறோம் அதற்கு ஹாலிவுட் படங்களையே பார்த்து விடலாமே.. இந்த மண்ணின் கதை, எழுபதாண்டு கனவு என்றெல்லாம் பில்டப் ஏன் ?
திருநீறு இடுவதற்கு ஒரு முறை இருக்கிறது. வானத்தைப் பார்த்துக்கொண்டு திருநீற்றை நெற்றி நிறைய பூசுவார்கள்.. இங்கே சாக்பீஸில் கோடு போட்டது போல,, திருமண்ணும் அப்படித்தான் சாக்பீஸில் அணிந்திருக்கிற மாதிரி காட்சிகள்.. அவன் பொன்னியின் செல்வன் மட்டும் அல்ல, சிவபாத சேகரன்! ஒரு காட்சியில் கூட லிங்க வழிபாடு இல்லை.
எனக்கு சிவபக்தியே கிடையாது என்று சொல்லி மதுராந்தக சோழன் ருத்ராக்ஷ மாலைகளை அறுத்தெறிவதாக காட்டுவதில் மட்டும் கதை நடந்த காலத்திற்கேற்ற ரியலிசம்.
இசை? எங்கே போய் முட்டிக் கொள்வது,, அதற்கு விமர்சனமே தேவையில்லை.
உண்மையிலேயே பொன்னியின் செல்வன் எடுக்க விரும்பும் ஒருவர் கல்கிக்கோ அல்லது தஞ்சை ராஜராஜ சோழனின் சிலைக்கோ கொஞ்சமேனும் மரியாதை செய்திருப்பார்.. தஞ்சைக்கே போகாமல் தஞ்சை பற்றி படம்..
வெப்ப பிரதேசத்தில் உடல் முழுவதும் போர்த்திய உடைகள்.. பெண்களுக்கு மட்டும் அதில் விதிவிலக்கு. யாழும் பண்ணும் கூடிய இசைக்கும் விதிவிலக்கு.
"கள்"ளழகர், "மது"சூதனர் என்று பகடி பேசும் வசனங்களில் எந்த அழுத்தமும் இல்லை. சிங்கள மொழியைப் புகுத்தியவர்கள், ஸம்ஸ்க்ருதத்தில் ஏராளமான கல்வெட்டுகள் எழுதிய சோழர்களுக்கு, ஸம்ஸ்க்ருதத்தை விடுங்கள், தெலுகு, கன்னட மொழியின் இருப்பு கூட கொடுக்கவில்லை. காட்சிகளில் எந்த புதுமையும் இல்லை. கதையில் எந்த ஜீவனும் இல்லை.
சுருக்கமாகச் சொன்னால், இதில் பொன்னியின் செல்வன் என்ற பெயரை எடுத்து விட்டால் இது ஒரு பொதுவான ஆக்ஷன் திரில்லர் படம். அதிலும் நேர்மையான முயற்சியும் இல்லை.
இதை எழுதியே ஆகவேண்டும் என்று நினைத்தேன்! மறந்துவிடுவதற்குள் எழுதி விடுகிறேன்..
சோழர்களை சிவ பக்தியிலிருந்து பிரித்துப் பார்க்கவே முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. வரலாற்று புதினமான கல்கியின் பொன்னியின் செல்வனும் அவ்வாறே கூறியது! கல்கி சைவம் சோழ நாட்டில் தழைத்த விதத்தை பல முறை விவரித்திருப்பார்.
பொ.செ.வை கருவாக கொண்ட மணிரத்னத்தின் படம் எவ்வாறு சிவ இலட்சிணைகளைக் கையாண்டது என்பதனை அறிய அனைவருக்கும் curiosity இருக்கிறது. நான் முன்பே கூறியிருந்தேன், மத சின்னங்கள் யாவும் படத்தில் விரல் சுடாத அளவு மட்டுமே இருந்தது என்று. அவை என்ன என்ன என்று என் நினைவில் உள்ள வரை கூறுகிறேன்.(Detailing முக்கியம் அமைச்சரே!) {எழுத்துரு - அருண் பிள்ளை}
1. சோழ சிவ பெரும் பழம் என்று போற்றப்படும் மாதேவரடிகள் செம்பியன் மாதேவி ஒரே ஒரு இடத்தில் காட்டப்பட்டார். மார்பில் பல நகைகள் சூழ ஒரே ஒரு சிறிய உத்திராட்ச மாலை அணிந்திருந்தார். நெற்றியில் குங்குமம் (?) மட்டுமே, விபூதி இல்லை. (பெரிய பிராட்டிக்கே இந்த நிலைமை!)
2. பெரிய பிராட்டி காட்டப்படும் காட்சியில் பிராமணர்கள் கும்ப ஸ்தாபனம் செய்து ருத்ர பாராயணம் செய்வது போன்று காட்டப்பட்டிருக்கும்.
3. மதுராந்தக சோழன் நெற்றி நிறைய முக்கோட்டு திருநீறு. கழுத்தில் மூன்று நான்கு உத்திராட்ச மாலைகள், அதையும் காட்சியின் நிறைவில் அறுத்து எறிந்து விட்டு போய்விடுவார்.
4. சுந்தர சோழர் முதல் சோழர்கள் அனைவரும் ஒரு விரல் விபூதியும் குங்கும நேர்கோடும் தரித்திருந்தனர். அவ்வபோது சின்னதாக மூன்று கோடுகள்.
5. சிறு வயது ஆதித்த கரிகாலன் முக்கோடு தரித்திருப்பான், பெரிய வயதில் அவ்வபோது.
6. அருண்மொழி வர்மன் ஒரே ஒரு சிறிய கோடு, குந்தவை அது கூட இல்லை. மாறாக குந்தவைக்கு நாமம் போல பொட்டு (?) !
7. இந்த சந்தடி சாக்கில் பழுவேட்டரையர் மற்றும் ஏனைய சிற்றரசர்களை சோழர்கள் என்பதையே மறந்துவிட்டனர் போலும். அவர்களுக்கு திருநீறே இல்லை.
8. சேந்தன் அமுதன் மட்டுமே உண்மையான திருப்புண்டரீகம் தரித்திருந்தான். தளிகுளத்தார் கோயிலில் மலர் கைங்கர்யம் செய்வதாக கூறுவான்.
9. குந்தவை தஞ்சைக்கு வரும் காட்சியில், வேத கோஷங்கள் முழங்க பூரண கும்ப மரியாதை செய்யப்படும்.
10. குந்தவை சுந்தர சோழரோடு நந்தவனத்தில் பேசிக்கொண்டு இருக்கும் காட்சியின் போது சுவர் ஒன்றில் திரிபுராந்தகர் (?) போன்றதொரு சிற்பம் காட்டப்பட்டிருக்கும்.
11. Trailerஇல் காட்டப்பட்ட பதஞ்சலியின் நடராஜ ஸ்தோத்திரம் படத்தில் இல்லை. May be எங்காவது சண்டைக் காட்சியில் இருந்து, நான் கவனிக்காமல் விட்டிருக்கலாம்.
12. அருண்மொழி வர்மருக்கு வானதி கொடுத்ததாக அனுப்பப்படும் ஓலையை அவர் படிக்கும் போது, திருமுறையின் முதல் பதிகம் பெண் குரலில் BGM ஆக இசைக்கும். பக்தி ரசத்தில் அல்ல, காதல் கிறக்கத்தில் .. 'சுடலைப் பொடி பூசி .. என் உள்ளம் கவர் கள்வன்(3).. ' என்ற வரிகள் மட்டும். (படத்தில் அருண்மொழி எங்கடா சுடலை பூசிருந்தான்?)
அதாகப்பட்டது 'இராஜராஜ சோழன்' படத்தில் சிவாஜி, வரலக்ஷ்மி போன்றே நெற்றி நிறைய விபூதி இட்டுக்கொண்டு தெய்வப்பிறவிகளாக அனைவரும் காட்சியளிக்க வேண்டும் என்று கேட்க வில்லை. இள வயது சோழர்களுக்கு விபூதி கட்டாயம் என்பதில் கூட எனக்கு கருத்து வேறுபாடு உண்டு. ஆனா நீங்க பெரியவர்களைக் கூட சைவத்திற்கு சம்பந்தமே இல்லாதவர்கள் போல காட்டியிருப்பது தான் நெருடல்! ஆக மொத்தம்.. ஒரு பழமொழி சொல்லுவாங்க.. 'வேண்டா வெறுப்பா புள்ளையப் பெத்து ... காண்டாமிருகம் னு பேர் வச்சாங்களாம்!' என்று கூறுக்கொண்டு..
பொன்னியின் செல்வன் பாகம்-1 (PS-1) நேற்று குடும்பமாக சென்று பார்த்தோம். ஒட்டுமொத்தமாக படம் சுவாரஸ்யமாக, ரசிக்கும்படியாக இருந்தது. சிற்சில போதாமைகள் தவிர்த்து பெரிய குறைகள், சொதப்பல்கள் எதுவும் இல்லை. கூர்மையான சினிமா ரசனை கொண்ட என் மகள்கள் உட்பட எல்லாருக்குமே படம் பிடித்திருந்தது.
ஒரு நாவலாக பொ.செ. கதையமைப்பிலும், விவரணைகளிலும் உள்ள போதாமைகள், வார இதழ் தொடர்கதையாக வந்ததால் ஏற்பட்ட விபரீதங்கள், அதன் வரலாற்று ஆதாரங்கள் இத்யாதி குறித்து நவீன இலக்கிய விமர்சகர்கள் நிரம்ப எழுதிவிட்டார்கள். இது அனைத்தையும் தாண்டி, இந்த நாவல் ஒரு cult கிளாசிக் ஆக ஆனதற்கும் அவ்வாறு நீடிப்பதற்கும் வலுவான காரணங்கள் உள்ளன. நன்கு அறியப்பட்ட மாமன்னன் இராஜராஜனின் ஆட்சிக் காலத்தைக் களமாக்கி ஒரு பெரிய கதையை எளிதாக கல்கி எழுதியிருக்கலாம். ஆனால் அதை விடுத்து, அதற்கு சற்று முன்னதாக சோழ சாம்ராஜ்ய வரலாற்றில் நிலவிய முப்பதாண்டு கால குழப்பத்தைக் களமாக்கி, ஆதித்த கரிகாலன் கொலை என்ற வரலாற்றுப் புதிரைச் சுற்றி, மிகச் சொற்பமான கல்வெட்டு செய்திகளை வைத்துக்கொண்டு ஒரு மாபெரும் காவியத்தன்மை கொண்ட நாவலை அவர் சிந்தித்தார். இது கல்கியின் கூர்மையான வரலாற்று பிரக்ஞையையும், ஒரு கதாசிரியராக அவரது கற்பனை வளத்தையும் காட்டுகிறது. கூடவே தமிழ்ப் பண்பாடு, வரலாறு சார்ந்த பல செய்திகளையும் நுண்தகவல்களையும் இயல்பான போக்கில் அந்த நாவலுக்கு உள்ளே இணைத்து அதற்கு ஒரு அபாரமான கலைக்களஞ்சியத் தன்மையையும் அளித்து விட்டார். இதுவே அந்த நாவலின் பரவலான வெற்றிக்கும், வசீகரத்திற்கும் காரணம். பொன்னியின் செல்வன் வாசித்த ஒரே காரணத்தினால் தான் வரலாறு, சமயம், தத்துவம், சிற்பக் கலை, கோயில் கட்டடக் கலை, பயணம் ஆகியவற்றில் ஒன்றிலோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவற்றிலோ ஆர்வம் உண்டாயிற்று என்று கூறும் பல நண்பர்களை அறிவேன். அந்த நாவலின் வீச்சு அத்தகையது.
ஒருவகையில் பொன்னியின் செல்வன் ஒரு "தமிழ் ஹாரி பாட்டர்" போல. 15 முதல் 20 வயதிற்குள் வாசிக்கப் படவேண்டிய நாவல் அது. ஒரு குறிப்பிட்ட வயதில், பருவத்தில் அதை நாவலாக வாசித்தவர்கள் அதன் மொழியையும், நடையையும், நுட்பங்களையும் எல்லாம் நினைவில் வைத்திருப்பார்கள். அவர்கள் அனைவரும் சினிமா வடிவில் அதைப் பார்க்கையில் ஒருவித அதிருப்தியையே அடைவார்கள். ஏனென்றால் அந்த நாவலை மன அளவில் அவர்கள் தங்கள் இளமைக் காலத்துடன் தொடர்பு படுத்தி வைத்திருப்பவர்கள். கடந்து சென்ற இளமையின் மீள்உருவாக்கங்கள், நினைவுகள் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் எதுவும் அசலுக்கு நிகராவதில்லை என்பதைப் போலத் தான் இது. ஆனால் நேரடியாக ஹாரி பாட்டர் சினிமாக்களையே முதலில் பார்ப்பவர்களுக்கு அந்தப் பிரசினை இல்லை. அவர்கள் அதை உள்ளபடியே ரசிப்பார்கள்.
சினிமா என்பது அடிப்படையில் காட்சி ஊடகம். அபாரமான காட்சிப் படுத்தல்களின் (விஷுவல்ஸ்) வழி இந்தத் திரைப்படம் பெருமளவில் நாவலில் உள்ள அந்த வசீகரத்தைக் கொண்டு வந்துள்ளது. படத்தின் அனைத்து காட்சிகளிலும் ஒளிப்பதிவின் நேர்த்தியும் துல்லியமும் வெளிப்படுகிறது. VFX தொழில்நுட்பம் சமைத்திருக்கும் ஜாலங்கள் விழிகளை விரியவைத்து, மனம் மயக்குகின்றன. தமிழ் சினிமாவில் சமீபகாலங்களில் வரலாற்றுத் திரைப்படம் என்று எதுவுமே வரவில்லை என்பதால், பலர் "சோழர் காலக் கதை" என்றால் சிவாஜி கணேசனின் ஆவேச நீள வசனங்களையும் ஜிகினா ஒப்பனைகளையுமே கற்பனை செய்து கொண்டிருந்தனர். அத்தகைய சபல எதிர்பார்ப்புகளை சிறிதும் சட்டை செய்யாமல், இந்தப் படத்தின் வசனங்கள் சுருக்காகவும், அதே சமயம் பல முக்கிய இடங்களில் நாவலில் உள்ள உரையாடல் மொழியையும் வாசகங்களையும் அப்படியே எடுத்தாள்வதாகவும் அமைந்துள்ளன. ஒப்பனைகளும் மிகப் பொருத்தமாக உள்ளன. குறிப்பாக அரச உடைகள் நேர்த்தியாகவும் தகதகா மினுக்குகள் இல்லாமல் அமர்ச்சையாகவும் உள்ளது சிறப்பு.
ஜெயம் ரவி உட்பட அனைத்து நடிகர்களும் சோடை போகாமல் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயராம் மூவரின் நடிப்பும் மிக அருமை. உண்மையில் இவர்கள் நடித்துள்ள நந்தினி, ஆதித்த கரிகாலன், ஆழ்வார்க்கடியான் ஆகிய பாத்திரங்களே மனதில் பதியும் வகையில் சிறப்பாக படத்தில் வெளிப்பட்டுள்ளன. இந்தப் படத்தின் முக்கியமான ஒரு குறை என்றால், மற்ற பாத்திரங்கள் இவற்றைப் போல அவ்வளவு சரியாக வெளிப்படவில்லை என்பது தான். குறிப்பாக, கதையின் protagonist என்றே சொல்லத் தகுந்த வந்தியத் தேவனின் ஆளுமையை இளமை, குறும்புத்தனம், வீரம், சாகசம், புத்திக் கூர்மை என பல அம்சங்களும் கலந்து மிகவும் விரும்பத் தக்க வகையில் கல்கி படைத்திருப்பார். இந்தப் படத்தில் அந்தப் பாத்திரம் சரியாக வரவில்லை. கேளிக்கைத் தனத்துடன் அசடு வழியக் கூடிய ஒரு பேர்வழி என்பது போல ஆகிவிட்டது. அதே போல அருண்மொழி வர்மனின் அலாதியான மனப் போக்கைப் பற்றிய சித்திரம் இல்லாததால், ஆபத்துக் காலத்திலும் அவர் படைகளை எல்லாம் விட்டுவிட்டு திடீரென்று யானைமேல் உட்கார்ந்து காட்டுக்குள் தனியாகப் போவது ஏதோ சிறுபிள்ளைத்தனம் போன்ற தோற்றம் தருகிறது. குந்தவை, பூங்குழலி பாத்திரங்களின் விஷயத்திலும் இக்குறை உள்ளது. இரண்டரை மணிநேரப் படத்தில் இத்தனை பாத்திரங்களின் பரிமாணங்களையும் கொண்டு வருவது கடினம்தான், ஆயினும் வேறு சில தேவையற்ற காட்சிகளைத் தவிர்த்து, இதில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
படத்தின் இறுதியில் வரும் கப்பல் சண்டை, விபத்துக் காட்சியின் பிரம்மாண்டம் தொழில்நுட்ப ரீதியாக
அருமையாக
உள்ளது. ஆனால், பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் போன்ற ஹாலிவுட் படங்களின் நகல் காட்சி போன்ற ஒன்றை அதே தரத்துடன் செய்துகாட்ட முடியும் என்பதைத் தாண்டி, படத்தின் கதைப்போக்கிற்கோ கருவுக்கோ அந்தக் காட்சி எந்தவகையிலும் பெரிதாக பங்களிக்கவில்லை என்பதே உண்மை. ஆரம்பத்தில் வரும் ஆதித்த கரிகாலன் போர்க்காட்சி சிறப்பாக இருந்தது, மறுபடியும் அதே போன்ற இன்னொரு போர்க்காட்சியை தவிர்த்திருக்கலாம். நாவலில் ஆ. கரிகாலன் தனது மனத்தைத் திறந்து பேசும் அந்த காட்சி போர்க்களத்தில் நிகழ்வதில்லை, அவர்கள் மாமல்லபுரக் கடற்கரையில் அமர்ந்து பேசுவதாக நினைவு. அதை அவ்வாறே காட்டியிருக்கலாம்.
பின்னணி இசை பல இடங்களில் அழுத்தமாகவும் சிறப்பாகவும் இருந்தது. ஆனால் பாடல்களும், அவற்றின் இசையமைப்பும் வழக்கமான மணிரத்னத் தனத்திற்குள்ளும் ஏ ஆர் ரஹ்மானிய மோஸ்தரிலும் சிக்கிச் சீரழிந்திருந்தன. பாடல்களின் போது நல்ல தமிழ்ப்புலமையும், செவியுணர்வும் கொண்ட எனக்கே பல இடங்களில் சொற்கள் விளங்கவில்லை. பெங்களூரின் பல திரையரங்குகளில் இப்போது வழமையாகிவிட்ட சப் டைட்டில்கள் மூலம் தான் அவற்றின் பொருளைத் தெரிந்து கொள்ள முடிந்தது அந்த அளவுக்கு கூச்சலும், இசைச்சித்ரவதையும் அவற்றில் இருந்தன. நடனங்களைப் பொறுத்த வரையில், தேவராளன் ஆட்டத்தில் அசைவுகள் மட்டுமே இருந்தன, அதன் முக்கியக் கூறான சன்னதம், குறி சொல்லுதல் ஆகியவை காண்பிக்கப் படவில்லை. பழையாறையில் நிகழும் கிருஷ்ண ஜெயந்திக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நாவலில் வரும் கம்சன் - கிருஷ்ணன் நாடகத்திற்கான நடனமும் ஒட்டவில்லை. "ராட்சச மாமனே ராத்திரியின் சூரியனே" என்ற பாடலின் வரிகள் அபத்தம்.
படத்தில் மத, அரசியல் சீண்டல்கள் என்று திட்டமிட்டு ஏதும் நுழைக்கப் படவில்லை என்பது ஒரு பெரிய ஆசுவாசம். சைவ, வைணவ சண்டை ஒரு காட்சியில் சகஜமாக காட்டப் படுகிறது. பங்காளிகள் ஒற்றுமையுடன் இல்லாவிட்டால் அன்னியன் நாட்டைக் கைப்பற்றுவான் என்ற பொதுவான ராஜதர்மம் கூறப் படுகிறது. வேதமந்திரங்கள் ஓதும் காட்சிகளும், கோயில்களும், வழிபாடுகளும், பாத்திரங்களின் நெற்றியில் விபூதி, குங்குமம், திலகம் இத்யாதி சின்னங்களும் தேவையான அளவில் காட்சிப் படுத்தப் பட்டுள்ளன. படம் வெளிவருவதற்கு முன்பு இது குறித்து உருவான பதற்றங்களை படம் அர்த்தமற்றதாக்கியிருப்பது குறித்து மகிழ்ச்சி.
நாவலுக்கு முரணாக படத்தில் ஏதேனும் காட்டப் படுமா என்றவகைப் பதற்றங்களையும் படம் பொய்யாக்கி விட்டது. உண்மையில் மூலக்கதையில் உள்ள தர்க்கப்பிழை கொண்ட, தேவையற்ற சமாசாரங்களை தனது படைப்புச் சுதந்திரத்தின் பெயரால் இயக்குனர் தவிர்த்திருக்கலாம் (உதாரணமாக, அருண்மொழியை "அடையாளம் கண்டுகொள்ளாமல்" அவரும் வந்தியத்தேவனும் சண்டைபோடும் காட்சி). ஆனால் அவற்றைக் கூட விசுவாசமாக படத்தில் கொண்டு வந்திருக்கிறார். நாவலில் உள்ள "ஊமை ராணி" சமாசாரத்தை ஒரு மாய யதார்த்தம் போலக் கூட படத்தில் காட்டிச் சென்றிருக்கலாம் என்று தோன்றியது. ஆனால், அதுவும் அப்படியே மூலத்தில் உள்ளது போலத் தான் வரும் என்பது இந்தப் படத்தின் கடைசியில் இரண்டாம் பாகம் என்று அறிவிப்பு போட்டு, ஐஸ்வர்யா ராய் ஊமை ராணியாக நீந்தும் காட்சியிலேயே வெளிப்பட்டு விட்டது. நாவலை வாசிக்காதவர்களுக்கு ஒரு பயங்கரமான "தூண்டில்" அது என்று இயக்குனர் நினைக்கிறார் போலிருக்கிறது. சிரிப்புத் தான் வருகிறது. அரங்கை விட்டு வெளியே வந்த உடனேயே நாவலைப் படித்திருக்காத என் மகள்களும் மனைவியும் பலவித காம்பினேஷன்களை யோசித்து, அந்த "மர்மத்தை" ஊகித்து விட்டார்கள்
படத்தில் வரும் கத்தி, மாளிகை, கோட்டை, சிம்மாசனம், கப்பல் எல்லாம் வரலாற்று பூர்வமாக அந்தக் காலகட்டத்தின் படியே துல்லியமாக உள்ளதா இல்லையா என்பது குறித்து நிபுணர்கள் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். மற்ற விஷயங்கள் எப்படியோ, ஆனால் சோழர் காலத்தில் பெண்கள் ரவிக்கை அணிந்திருக்கும் வழக்கம் இல்லை என்ற முக்கியமான வரலாற்றுக் குறிப்பை சோழ இளவரசி முதல் ஓடக்கார பூங்குழலி வரை முற்றிலும் 100% முழுமையாக கடைப்பிடித்திருக்கிறார்கள்
பொதுவாக வரலாற்றுக் கால படம் என்றால் அதில் பாலியல் காட்சிகளையும், வன்முறைகளையும் கணிசமான அளவில் காண்பிப்பது ஹாலிவுட் படங்களின் ஃபார்முலா. OTT தொடர்களைப் பற்றி சொல்லாமல் இருப்பதே மேல். ஆனால், இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, எந்தவித ஆபாசங்களும் இல்லாமல் குழந்தைகளுடன், குடும்பத்துடன் பார்த்துக் களிக்கும் வகையில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வந்துள்ளது சிறப்பு. இரண்டாம் பாகமும் இப்படியே இருக்கும் என்று நம்புவோம்.
இது ஒரு நல்ல பொழுதுபோக்குத் திரைப்படம், entertainer. சோழர் வரலாற்றின் அடிப்படையில் அமைந்த ஒரு பிரபல கிளாசிக் நாவலின் கதையைச் சொல்கிறது என்பது ஒரு தற்செயல், அவ்வளவே. மற்றபடி, இதன் ப்ரமோக்களில் கூறப்பட்டது போல இந்தப் படத்தைப் பார்த்து விட்டு தமிழ் நாட்டு வரலாற்றிலும், பழந்தமிழ் இலக்கியங்களிலும், ஏன் மூல நாவலிலுமே கூட ஆர்வம் கொண்டு கணிசமான மக்கள் அவை குறித்து தேடலில் ஈடுபடுவார்கள், வாசிப்பார்கள், கற்பார்கள் என்பதெல்லாம் அதீதமான எதிர்பார்ப்பு. நீலகண்ட சாஸ்திரி, குடவாயில் போன்ற பெயர் உதிர்ப்புகள் எல்லாம் படத்திற்கான ஒரு பெரிய பில்ட் அப் என்பதைத் தாண்டி எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தப் போடவில்லை. Troy என்ற ஹாலிவுட் ஹிட் படத்தைப் பார்த்தவர்களில் எத்தனை பேர் இலியட் இதிகாசத்தையும், கிரேக்க வரலாற்றையும் தேடிச் சென்று வாசித்திருப்பார்கள்? 1% கூட இருக்காது. ஆனால் அக்கிலிஸ், ஹெக்டர், ஹெலன் போன்ற பெயர்கள் அவர்களுக்கு அன்னியமாக இருக்காது, இந்த இதிகாச நாயகர்களைப் பற்றிய முற்றிலும் சினிமா அடிப்படையிலான ஒரு சிறு பரிச்சயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும். அதே தான் பொன்னியின் செல்வன் விஷயத்திலும் நிகழும். தஞ்சாவூர் போனால் நந்தினியின் மாளிகையைப் பார்க்க முடியுமா என்று dumb மேல்தட்டு சுற்றுலா பயணிகள் கூகிளில் தேடிப் பார்ப்பதற்கான சாத்தியம் இருக்கிறது
அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டின் மூன்று தலைமுறைகளை வசீகரித்த கல்கியின் கிளாசிக் நாவல் இப்படி ஒரு கச்சிதமான திரைவடிவம் பெற்றிருக்கிறது என்பதே ஒரு பெரும் வெற்றி. இப்படி ஒரு சினிமாவை சாத்தியமாக்கிய இயக்குனர் மணிரத்னத்திற்கும் அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்.