New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்ககாலத் தமிழகத்தில் சைவம்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
சங்ககாலத் தமிழகத்தில் சைவம்
Permalink  
 


சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1

சங்ககாலத் தமிழகத்தில் சிவபெருமான், முருகப்பெருமான், திருமால், பலராமன், கொற்றவை ஆகிய தெய்வங்கள் சிறப்பாக வழிபடப்பட்டனர். இத்தெய்வங்களுள் மிகப் பழங்காலங்தொட்டே சிறப்பாக அதிகமாக வழிபடப்பட்ட பெருந்தெய்வம் சிவபெருமான் என்பது சங்க இலக்கியப் பாடல்களாலும்,வரலாற்று ஆதாரங்களாலும் அறியப்படுகிறது.

புறநானூறு சிவபெருமானை “முதுமுதல்வன்” என்றும் வேதங்களை உருவாக்கியவர் என்றும் கூறுகிறது.

“நன்றாய்ந்த நீணிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகா
தொன்றுபுரிந்த வீரிரண்டின்
ஆறுணர்ந்த வொருமுதுநூல்
இகல்கண்டோர் மிகல்சாய்மார்
மெய்யன்ன பொய்யுணர்ந்து
பொய்யோராது மெய்கொளீஇ
மூவேழ் துறையு முட்டின்று போகிய
உரைசால் சிறப்பி னுரவோர் மருக.

(புறம் 166, 1-9)

மேலும் புறநானூற்றில் காணப்படும் ஒரு பாடலால் மிகப்பழங்காலந்தொட்டே சிவபெருமானுக்குத் தமிழகத்தில் பெருங்கோவில்கள் இருந்து வந்தது தெரிகிறது.

“பணியிய ரத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே

(புறம் 6. 17-18)

மேலும் கரிகாற்பெருவளத்தார் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு கோவிலைப் புதுப்பித்தார் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன.அது சிவன் கோவில் என்பது திருஞானசம்பந்த பெருமானின் தேவாரம் மூலம் தெரியவருகிறது. மேலும் கோச்செங்கணாச்சோழர் காவிரி உற்பத்தி ஆகும் குடகிலிருந்து காவிரி கடலில் கலக்கும் இடம்வரை சிவபெருமானுக்கு 70 மாடக்கோவில்கள் கட்டினார் என்பது வரலாற்று ஆதாரங்களாலும்,நாயன்மார்கள் தம் திருப்பதிகங்களாலும்,திருமங்கையாழ்வார் பாசுரத்தாலும் தெரிகிறது. மேலும் மூவேந்தர்களும்,குறுநில மன்னர்களும் பெரும்பாலும் சைவசமயத்தவராகவே இருந்தனர் என்பதும் சங்க இலக்கியப் பாடல்களால் தெரிகிறது.

சிலப்பதிகாரம்: 

மாமன்னர் சேரன் செங்குட்டுவர் சிவனருளால் பிறந்தவர் என்று இளங்கோவடிகள் தம் சிலப்பதிகாரத்தில் கூறுகிறார். மேலும் சிறந்த சிவபக்தரான செங்குட்டுவர் கனக விஜயரை வெல்ல வடநாடு மீது படையெடுத்துச் செல்வதற்கு முன் பரமேஷ்வரரை வணங்கி அவர்தம் திருவடியைத் தன் சிரசில் வைத்தார் என்று இளங்கோவடிகள் கூறுகிறார்.

“நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி
உலகுபொதி உருவத்து உயர்ந்தோன் சேவடி
மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து
இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு
மறையோர் ஏந்திய ஆவுதி நறும்புகை
நறைகெழு மாலையின் நல்லகம் வருத்தக்
கடக்களி யானைப் பிடர்த்தலை ஏறினன்

(சிலம்பு 26 54 – 60)

குடக்கோக் குட்டுவன் கொற்றம் கொள்கென
ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடங் கொண்டு சிலர் நின்று ஏத்தத்
தெண்ணீர்க் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்
ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத்
தாங்கினன் ஆகித் தகைமையில் செல்வுழி

(சிலம்பு 26”)

மேலும் சோழர் தம் தலைநகரான புகாரிலும் சிவபெருமானுக்குப் பெருங்கோவில்கள் இருந்தமை சிலப்பதிகாரத்தால் தெரிகிறது.மேலும் சிவவழிபாடு பெரிதும் பரவியிருந்தமையும் தெரிகிறது.

“அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்
கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியில்
வெள்ளியம்பலத்து.. ” (சிலம்பு – பதிகம், 39-41)

குழவித் திங்கள் இமையோர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்தாயினும் (சிலம்பு 2.38 -39)

பெரியோன் தருக திருநுதல் ஆக என (சிலம்பு 2.41)

பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் (சிலம்பு 5.69)

திரிபுரமெரியத் தேவர் வேண்ட
எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப
உமையவ ளொருதிற னாக வோங்கிய
இமையவ னாடிய கொடுகொட்டி யாடலும் (சிலம்பு 6.40 – 43)

தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
பாரதி யாடிய வியன் பாண் டரங்கமும் (சிலம்பு 6.44 – 45)

பிறைமுடிக்கண்ணிப் பெரியோன் ஏந்திய… (சிலம்பு 11.72)

அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும்
வருமுறை எழுத்தின் மந்திரமிரண்டும் (சிலம்பு 11.128 – 129)

கண்ணுதல் பாகம்  (சிலம்பு 12.2)
ஆனைத்தோல் போர்த்து  (சிலம்பு 12.8)
புலியின் உரி உடுத்து  (சிலம்பு 12.8)
கண்ணுதலோன்  (சிலம்பு 12.10)

நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து   (சிலம்பு 12.55)

நஞ்சுண்டு கறுத்த கண்டி  (சிலம்பு 12.57)

சென்னியன் இளம்பிறை சூடிய இறையவன் சிலம்பு  (22.86 – 87)

ஆலமர் செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோய்   (சிலம்பு 23.91)

ஆலமர் செல்வன் மகன்  (சிலம்பு 24.15)

மேலும் ஔவைப்பிராட்டியார் அதியமான் நெடுமானஞ்சியை சிவபெருமானைப் போல் என்றும் நிலைத்து வாழ்வாயாக என்று வாழ்த்துகிறார்.

“பால் புரை பிறை நுதற் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே    (புறம் 91, 5-7)

இதுகாறும் காட்டிய சில ஆதாரங்களால் மிகப்பழங்காலந்தொட்டே தமிழகத்தில் சிவவழிபாடு பெரிதும் பரவியிருந்ததும், சிவபெருமானையே முழுமுதல்வனாக தமிழர்கள் வழிபட்டனர் என்பதும்,அரச சமயமாக சைவமே இருந்தது என்பதும்,சைவம் தமிழர்களால் பெரிதும் பின்பற்றப்பட்டது என்பதும் தெரிகிறது.

பதிற்றுப்பத்து – கடவுள் வாழ்த்து:

எரி எள்ளு அன்ன நிறத்தன், விரி இணர்க்
கொன்றைஅம் பைந் தார் அகலத்தன், பொன்றார்
எயில் எரியூட்டிய வில்லன், பயில் இருள்
காடு அமர்ந்து ஆடிய ஆடலன், நீடிப்

புறம் புதை தாழ்ந்த சடையன், குறங்கு அறைந்து
வெண் மணி ஆர்க்கும் விழவினன், நுண்ணூல்
சிரந்தை இரட்டும் விரலன், இரண்டு உருவா
ஈர் அணி பெற்ற எழிற் தகையன், ஏரும்

இளம் பிறை சேர்ந்த நுதலன், களங்கனி
மாறு ஏற்கும் பண்பின் மறு மிடற்றன், தேறிய
சூலம் பிடித்த சுடர்ப் படைக்
காலக் கடவுட்கு உயர்க மாவலனே.

விளக்கவுரை:

சிவபிரானின் செம்மேனி வண்ணமும், அளவில்லா ஆற்றலும், அவன் கூத்தியற்றும் அற்புதப் பாங்கும், அவன் சக்தியோடு கலந்திருக்கும் அந்தத் தனித்தன்மையும்,அவன் அருளின் செவ்வியும்,பிறவும் கூறி வியந்து போற்றுகிறார் புலவர்.

“எரியையும் எள்ளுவது போன்ற நிறம்”, என்றது எரி நெருப்பினைக் காட்டிலும் செம்மையும்,வெம்மையும்,ஆற்றலும், ஒளியும் கொண்டதான செம்மேனி வண்ணம் என்பதாம்.

அத்திருமேனி உடையானின் திருமார்பிடத்தே கொன்றைப் பைந்தார் அழகுசெய்தபடி விளங்கும் என்றது, அவனது தண்மையையும், அழகுணர்வையும் நினைந்து மகிழ்ந்ததாம்.

“பொன்றார் எயில் எரியூட்டிய வில்லன்”, என்றது அடியவர்க்கு அடியவனாகி அவர்க்கு தீங்கிழைப்பாரின் ஆணவத்தை அழித்தொழிக்கும் சினத்தோடு செயல்பட்டு அருளுகின்ற உளப்பாங்கு உடையவன் அவன் என்று கூறியதாகும்.

“பயிலிருள் காடமர்ந்து ஆடிய ஆடலன்”,என்றது ஸர்வ ஸம்ஹார காலத்தில் அனைத்தயும் ஒடுக்கி ஆடுகின்ற ஊளிப்பெருங்கூத்தினைக் குறித்தது.இது அவனே ஆதியும் அந்தமும் ஆன பரம்பொருள் என்பதை உணர்த்துவது.

“சிரந்தை இரட்டும் விரலன்”,என்றது அவன் தன் உடுக்கையினின்று ப்ரணவத்தைத் தோற்றுவித்து, அதனின்று ஸகலத்தையும் தோற்றுவிப்பவன் என்பதை உணர்த்துவதற்காம்.

இளம்பிறை சேர்ந்த நுதலும்,களங்கனி மாறேற்கும் பண்பின் மறுமிடறும் அவனது அளப்பில் பெருங்கருணையையும்,அளவில்லாத ஆற்றலையும் நினைந்ததாம்.

“சூலம் பிடித்தவன்”, என்று கூறியது ஸ்ருஷ்டி,ஸ்திதி,ஸம்ஹாரம் ஆகிய மூன்றையும் அவனே நடத்துபவன்,முச்சக்திக்கும் அவனே முதல்வன் என்பனவற்றை உணர்த்துதற்காம்.

“காலக் கடவுட்கு”,என்றது அவன் காலத்தைக் கடந்து நிற்பவன் எனவும், அவனே காலமாக இருப்பவன் எனவும், அவனே ஆதி முழுமுதல்வன் எனவும் உணர்த்துதற்காம்.

“அனைத்துமாகிய அவன் பெருவெற்றி உலகெங்கும் உயர்ச்சி பெறுக”,என்றது, உலக மாந்தர் அனைவரும் அனைத்தும் அவன் செயலே என்பதை உணர்ந்து, அவன்பாலே தம்மையும் ஒன்றுபடுத்தி உயரவேண்டும் என விரும்பி உரைப்பதாம்.

சிவபெருமானை உமையொருபாகனாக வழிபட்டு வாழ்வு பெறும் மரபு பண்டைக்காலத்துத் தமிழ் மரபே என்பதையும் நாம் இதனால் அறிதல் வேண்டும்.

அகநானூறு – கடவுள் வாழ்த்து:

கார் விரி கொன்றைப் பொன் நேர் புது மலர்த்
தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;
மார்பினஃதே மை இல் நுண் ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு,

கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்
வேலும் உண்டு, அத் தோலாதோற்கே;
ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே
செவ் வான் அன்ன மேனி, அவ் வான்

இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று,
எரி அகைந்தன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை,
முதிராத் திங்களொடு சுடரும் சென்னி,
மூவா அமரரும் முனிவரும் பிறரும்

யாவரும் அறியாத் தொல் முறை மரபின்,
வரி கிளர் வயமான் உரிவை தைஇய,
யாழ் கெழு மணி மிடற்று, அந்தணன்
தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால், உலகே.

விளக்கவுரை:

கார்காலத்தில் கட்டவிழ்ந்து மலரும் கொன்றையின் பொன்னைப் போன்ற புதுமலர்களினால் சேர்ந்த தாரினை உடையவன், கட்டிய மாலையினை உடையவன், தொடுத்த கண்ணியினையும் உடையவன் சிவபிரான்.குற்றமில்லாத நுண்மையான பூணூல் அவன் மார்பினிடத்தே விளங்கும். அவன் நெற்றியிடத்தோ இமையாத கண்,அவன் கைகளில் விளங்குவனவோ குந்தாலியும்,மழுவாயுதமும்.அவை பகைவரை வென்ற சிறப்பும் உடையன.தோல்வியே அறியாதவன் அவன். அத்தகைய அவனுக்கு முத்தலை வேலும் உண்டு. அவன் ஏறி ஊர்ந்தது ஆன் ஏறு,அவனில் ஒரு பகுதியாகச் சேர்ந்திருப்பவள் உமையம்மை.

செவ்வானத்தைப் போன்ற ஒளியுடைய செந்நிறம் வாய்ந்தது அவன் திருமேனி.அவ்வானத்திலே விளங்கும் பிறைநிலவினைப் போன்ற வளைந்த வெண்மையான கூரிய பற்கள் அவனுடையவை. நெருப்பு கப்புவிட்டு எரிந்தாற் போன்று விரிந்து, இடையீடுபட்டு விளங்குவது அவனுடைய முறுக்குண்ட செஞ்சடை.வளர்ந்து முதிராத இளந்திங்களுடன் கூடியதாக அவன் சென்னி ஒளிவீசும். மூப்பே இல்லாத அமரர்களும்,முனிவர்களும், மற்றையோரும்,பிறர் யாவரும் அறியமுடியாத,அத்துணைப் பழமையான தன்மையினை உடையவன் அவன்.

கோடுகளுடன் விளங்கும் வலிய புலியின் தோலினை உடுத்தவன்.யாழ் இசை முழங்குகின்ற நீலமணிக் கழுத்தினன்.உயிர்கள் பால் அளப்பருங்கருணையை உடைய அந்தணன் அச் சிவபெருமான். அவனுடைய அழிதல் இல்லாத திருவடி நீழலையே உலகம் தனக்குக் காப்பாகக் கொண்டு என்றும் தங்கியிருக்கிறது.

பரிபாடல் 8ஆம் பாடல்:

திருப்பரங்குன்றமும் இமயமும்:

மண்மிசை அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்
புள்மிசைக் கொடியோனும் புங்கவம் ஊர்வோனும்
மலர்மிசை முதல்வனும் மற்றவனிடைத் தோன்றி
உலகிருள் அகற்றிய பதின்மரும் இருவரும்

மருந்துரை இருவரும் திருந்துநூல் எண்மரும்
ஆதிரை முதல்வனிற் கிளந்த
நாதர்பன் னொருவரும் நன்திசை காப்போரும்
யாவரும் பிறரும் அமரரும் அவுணரும்

மேவரு முதுமொழி விழுத்தவ முதல்வரும்
பற்றாகின்று நின் காரண மாகப்
பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்.

விளக்கவுரை:

நிலத்திடத்தே தோன்றி மலர்கின்றதான திருத்துழாய் மலரினையும்,செந்தாமரை மலரானது தந்த செல்வத்துக்கு உரியவளான திருமகளையும்,புட்களிற் சிறந்ததான கருடன் உருவம் எழுதப்பெற்ற கொடியையும் உடையவன் திருமால். அவனும், இடப ஊர்தியை உடையவனாகிய சிவபிரானும்,தாமரை மலர்மீது இருப்போனாகிய நான்முகனும், அவனிடமிருந்து தோன்றி உலகத்தின் இருளைப் போக்கியவரான ஆதித்யர் பன்னிருவரும்,தேவ மருத்துவர்கள் இருவரும், சிறந்த நூற்புலமை கொண்டோராகிய வசுக்கள் எண்மரும்,ஆதிரை முதல்வனாகிய சிவபிரானது பெயராலேயே சொல்லப்படுகின்றவரான பதினொரு ருத்ரர்களும்,நல்ல திசைகளைக் காக்கும் திக்பாலகர்களான எண்மரும்,மற்றுமுள்ள தேவர்கள் யாவரும், இவரொழிந்த அமரரும், அவுணரும் ஆகிய பிறருமாகிய எல்லாரும், விரும்பத்தக்க வேதங்களைக் கற்ற சிறந்த தவமுதல்வர்களான எழுவரும்,நின்னைக் கண்டு போற்றும் பொருட்டாக இத் திருப்பரங்குன்றத்திற்கு வருபவர் ஆகின்றனர். ஆதலினாலே இப்பரங்குன்றமானது எம்பெருமானாகிய சிவபிரான் குடிகொண்டிருக்கும் இமயக்குன்றமாகிய திருக்கயிலாயத்தையே ஒப்புடையதாக விளங்கும்.

பரிபாடல் – 9ஆம் பாடல்:

தனிநிலைச் சலதாரி:

இரு நிலம் துளங்காமை வடவயின் நிவந்து ஓங்கி
அரு நிலை உயர் தெய்வத்து அணங்குசால் தலை காக்கும்
உருமுச் சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட
எரிமலர்த் தாமரை இறை வீழ்த்த பெருவாரி

விரிசடை பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப
தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி
மணி மிடற்று அண்ணற்கு மதியாரற் பிறந்தோய்!

விளக்கவுரை:

பெரிதான இந்நிலவுலகமானது நிலைகெட்டு அழிந்துபோகாமற்படிக்கு இதன் வடதிசைப் புறத்தே,உயர்ந்து ஓங்கிய அரிய நிலையினை உடையதும்,உயரிய தெய்வத்தன்மை வாய்ந்த அணங்குகள் சிறப்புறப் பேணிக் காப்பதும், இடியேறுகள் சூழ்ந்திருக்கும் மிகவுயரிய முடிகளை உடையதுமாகத் திகழும் இமயத்திடத்தே உயர்ந்தோர் பலரும் வீற்றிருப்பார்கள்.அவர்கள் ஏற்றுக் கொண்டாட,எரியொத்த செந்தாமரை மலரைப்போலும் திருமேனியினைக் கொண்ட இறைவனான சிவபெருமான், தன் சடையிடத்தே தாங்கித் தரைக்கண் வீழச்செய்த பெருவெள்ளமான கங்கை நீரானது, அப்பெருமானது விரித்த செஞ்சடைப் பொற்றையிடத்தே தோன்றித் தரைக்கண் விழுகின்ற ஒப்பற்ற மலரைப்போலத் தோன்றும். இவ்வாறாகக் கங்கையின் சீற்றம் தணியுமாறு தாங்கிக் காத்தவன்,தானே தனிமுதல் என்னும் சிறப்புடைய சலதாரி எனப் பெயர் பெற்றனன். நீலமணிபோலும் கறைவிளங்கும் கழுத்தையுடையோனாகிய அத்தலைவனுக்கு,மதிப்புவாய்ந்த கார்த்திகைப் பெண்களிடத்தே தோன்றிய முருகப்பெருமானே!

புறநானூறு – கடவுள் வாழ்த்து:

கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
வண்ன மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;

கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;

பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீரறவு அறியாக் கரகத்துத்
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.

விளக்கவுரை:

தவமுதிர்ச்சியின் சான்றாக விளங்குவது அவனது தாழ்சடை.அனைத்து உயிர்களுக்கும் காவலாக விளங்கும் அருளுடைமையைக் காட்ட,நீர் வற்றுதல் இல்லாத கமண்டலமும் அவன் கையிலே உள்ளது. மேலும் அவன் தலையிலும், மார்பிலும் கொன்றை மலரினை அணிபவன்.வாகனமாகவும், கொடியாகவும், தூய வெண்ணிற ஆனேற்றினைக் கொண்டிருப்பவன்.அவன் திருக்கழுத்தை காலகூடவிஷத்தின் நச்சுக்கறை அழகு செய்கிறது. மறைகளை ஓதுபவர்களான அந்தணர்களால் அது புகழவும் படுகிறது. பெண் உருவை ஒரு பாகத்தில் அறியக்காட்டியும்,தன்னுள் அதனை அடக்கி ஒளித்துத் தானாகத் தனித்தும் அவன் விளங்குகிறான்.அவன் தனது திருநுதலில் பிறையைச் சூடியிருக்கிறான்.அவனது திருநுதலுக்கு வனப்புத் தரும் அப்பிறை பதினென் தேவராலும் போற்றவும் படுகிறது.

இத்தகைய பெருந்தெய்வமான சிவபிரானைப் பணிபவர் தாமும் தம் துயர் தீர்வர் என்பது இப்பாடலின் கருத்து.

புறநானூறு – 55ஆம் பாடல்:

பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனின் சிறப்புகளைக் கூறவந்த புலவர் மதுரை மருதன் இளநாகனார்,நன்மாறன் அனைத்து வேந்தர்களைவிட சிறப்பு மிக்கவன் என்கிறார். அவன் எத்தகைய சிறப்பு மிக்கவன் என்பதற்கு புலவர் இவ்வாறு கூறுகிறார்,

“ஓங்குமலைப் பெருவில் பாம்பு ஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற்றண்ணல் காமர் சென்னிப்
பிறை நுதல் விளங்கும் ஒருகண் போல
வேந்து மேம்பட்ட பூந்தார் மாற!”

விளக்கவுரை:

ஓங்கி உயர்ந்த மலைத்தொடரான மேருமலைத்தொடரையே வில் ஆக்கி,பாம்பரசனான வாசுகியை வில்லின் நாண் ஆக்கி,அக்னி, வாயு,விஷ்ணு ஆகியோரை ஒரு அம்பு ஆக்கி,அந்த ஒரே அம்பால் அசுரர்களின் முப்புரங்களை எரித்து, ஆற்றல் மிகுந்த அமரர்களுக்கு வெற்றியைத் தந்தவர் சிவபெருமான். காலகூடவிஷத்தின் நச்சுக்கறை அழகுசெய்ய விளங்கும் திருக்கழுத்தை உடைய பெருமானான அவரின் திருநுதலில் விளங்கும் சிறப்புமிக்க நெற்றிக்கண் போலத் தனிச்சிறப்பு பெற்று விளங்கும் மாறனே.

இங்கு புலவர்,அரசர்களுள் சிறப்பு மிக்கவன் நன்மாறன் என்று கூறும்போது, பெருந்தெய்வமான சிவபிரானின் சிறப்புமிக்க நெற்றிக்கண் போன்ற சிறப்பு மிக்கவன் என்று கூறுகிறார்.

கலித்தொகை -2ஆம் பாடல்:

மதங்கொண்ட யானை ஒன்று ஒரு வேங்கை மரத்தைப் பார்க்கிறது. பூக்கள் பூத்துக்குலுங்கும் அவ்வேங்கைமரம் அதன் கண்களுக்கு வேங்கைப்புலியைப் போலத் தெரிகிறது. கோபத்தோடு தனது தந்தங்களால் வேங்கை மரத்தின் அடிப்பாகத்தில் குத்துகிறது.தந்தங்கள் மரத்தில் ஆழமாக நுழைந்துவிட்டபடியால் யானையால் தந்தங்களை விடுவித்துக்கொள்ள இயலவில்லை. துன்பத்தோடு வருந்தி அது கத்துகிறது.இக்காட்சியை வர்ணிக்கும் புலவர், அந்த யானையை அரக்கர்கோமானான இராவணனோடு ஒப்பிடுகிறார்.

இராவணன் கர்வத்துடன் திருக்கைலாய மலையையே பெயர்க்க முயன்றான்.அவன் மலையின் அடியில் கைகளைக் கொடுத்துத் தூக்க முயன்றான். பரமேஷ்வரர் தன் ஒரு கால்விரலால் மலையை அழுத்த,அரக்கன் மலையின் அடியில் அகப்பட்டு வருந்தி அழுதான். அச்சரிதத்தைப் புலவர் இங்கு கூறுகிறார்.

“இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக்கையின் கீழ்ப்புகுத்து அம்மலை
எடுக்கை செல்லாது உழப்பவன் போல”

விளக்கவுரை:

கங்கையைத் தன் திருச்சடையிலே தாங்கினார் பரமேஷ்வரர்.ஆதலின் அவரது திருச்சடை ஈரமாக விளங்கும். அவ்விறைவன் மேருமலையையே வில்லாக வளைத்தவர்.அவர் திருக்கைலாயத்தில் உமையம்மையுடன் அமர்ந்திருந்தார். அப்போது பத்துத் தலைகளை உடைய அரக்கர்கோமானான இராவணன் வந்தான்.அவன் கர்வம் மிகுந்தவனாக திருக்கைலாயத்தையே பெயர்க்க முற்பட்டான்.மலையின் அடியில் தன் கைகளைக் கொடுத்துத் தூக்கினான். இறைவனால் தண்டிக்கப்பட்டு வருந்தினான், துன்பமடைந்தான்.

இப்பாடல்கள் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இதிஹாஸ,புராணக்கதைகளை மக்கள் அறிந்திருந்தனர் என்பதும், மக்கள் சிவபக்தி கொண்டோராக விளங்கினர் என்பதும் விளங்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம். 

தொடர்ச்சி.. 

புறநானூறு – 6ஆம் பாடல்:

புலவர் காரிகிழார் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை வாழ்த்தியும்,நல்லுரைகளை வழங்கியும் பாடுகிறார். அவரது பாடல் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் சிவபெருமானுக்குப் பெருங்கோவில்கள் இருந்தமை தெரிகிறது.

“பாசவற் படப்பை ஆர்எயில் பலதந்து
அவ்வெயில் கொண்ட செய்வுறு நன்கலம்
பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப்
பணியியர் அத்தை நின்குடையே,முனிவர்
முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே!
இறைஞ்சுக பெரும,நின்சென்னி சிறந்த
நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே!”

(பாடல் அடிகள் 14-20)

எதிர்த்த பகைவர் பெரும்படையின் வலிதொலைத்து அவர்தம் அரண்களை அழித்துச் சூறைகொண்டு அவற்றைப் பரிசிலர் மகிழ வழங்கும் அருளாளன் நீ!நின் வெண்கொற்றக் குடை,நீ முக்கண்ணரான சிவபெருமானின் கோவிலை வலம் வருங்கால் மட்டுமே தாழ்ந்து விளங்குக! நான்மறையாளர் வாழ்த்தும்போது நின் தலை தாழ்க!

புறநானூறு – 91ஆம் பாடல்:

ஔவைப்பிராட்டியார், தனக்கு மூப்பில்லாத வாழ்வு தரும் அரிய நெல்லிக்கனியை வழங்கிய அதியமான் நெடுமானஞ்சியின் பெரும் கொடைத்திறத்தையும்,நல்லுள்ளத்தையும் வாழ்த்திப் பாடுகிறார்.அவர் அதியமானை,என்றும் நிலைத்து நிற்கும் சிவபெருமானைப் போல நீயும் நிலைத்து வாழ்வாயாக,என்று வாழ்த்துகிறார்.

“வலம்படு வாய்வாள் ஏந்தி,ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடி தடக்கை
ஆர்கலி நறவின்,அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே!தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க,எமக்கு ஈந்தனையே”.

களத்திலே பகைவரை வென்று வீரவளை அணிந்திருக்கும் தலைவனே!வீரச்செல்வமும்,பொன்மாலையும் உடைய அஞ்சியே!மலைச்சரிவிலே கடுமுயற்சியுடன் பெற்ற இனிய நெல்லிக்கனி அது.அதனைப் பெறுதற்கு அரிதென்று கருதாது,அதனால் விளையும் பேற்றினையும் கூறாது, நின்னுள்ளத்திலேயே அடக்கிக்கொண்டு, எம் சாதல் நீங்க எமக்கு அளித்தனையே!பெருமானே!திருநுதலில் பிறைநிலவையணிந்தவரும்,நீலமணிமிடற்றை உடையவரும் ஆன இறைவன் சிவபெருமானைப் போல நீயும் நிலைபெற்று வாழ்வாயாக.

அகநானூறு – திருக்கார்த்திகைத் திருவிழா:

அகநானூற்றில் திருக்கார்த்திகைத் திருவிழா பற்றிக் கூறப்படுகிறது. திருக்கார்த்திகைத் திருவிழாவானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்திலும்,கேரளத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்விழாவானது தமிழர்களின் முக்கியமான திருவிழா என்பது அகநானூற்றாலும்,ஔவைப்பிராட்டியாரின் பாடல்களாலும், திருஞானசம்பந்தப் பெருமானின் திருப்பதிகத்தாலும் தெரிகிறது.

திருக்கார்த்திகைத் திருநாளுக்கு இரண்டு சிறப்புகள் உள்ளன. திருக்கார்த்திகைத் திருநாளில் தான் பரமேஷ்வரர், ப்ரஹ்மவிஷ்ணுக்களால் அடிமுடி அறியமுடியாத லிங்கோத்பவராக திருவடிவம் கொண்டார்.மற்றொரு சிறப்பு,திருக்கார்த்திகைத் திருநாள் ஆனது முருகப்பெருமான் திரு அவதாரம் செய்த திருநாள் ஆகும்.

தலைவனைப் பிரிந்த தலைவியின் துயரைப் போக்கத் தோழியானவள் ஆறுதல்கள் கூறுகிறாள்.தலைவி தோழியிடம்,தலைவனின் பிரிவு தரும் துன்பத்தைத் தான் பொறுத்துக்கொள்வதாகவும்,தலைவன் திருக்கார்த்திகைத் திருநாளை தன்னோடு சேர்ந்து கொண்டாட வருவார் என்று நம்புவதாகவும் கூறுகிறாள்.

“மழைக்கால் நீங்கிய மாக விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர,மதி நிறைந்து
அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள்
மறுவிளக் குறுத்து,மாலை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுஉடன் அயர,வருகதில் அம்ம!”

(அகநானூறு, பாடல் 141,அடிகள் 6-11)

ஏர்த்தொழில் மடிந்து, அதனாலே உலகிலுள்ள மற்றைத் தொழில்களும் கெடும்படி மழையானது பெய்யும் இடத்தை விட்டுச் சென்ற ஆகாயத்தில், சிறுமுயலாகிய மறுவானது தன் மார்பகத்தே விளங்கச் சந்திரன் நிறைந்தவனாகி,உரோகிணி தன்னுடன் சேரும் இருளகன்ற நடுஇரவில்,அஃதாவது திருக்கார்த்திகைத் திருவிழா நாளின் இரவில், வீதிகளில் விளக்கு வைத்து,மாலைகளைத் தொங்கவிட்டுப்,பழைமையைத் தனக்குப் பெருமையாகவுடைய மூதூரில் பலருடன் கலந்து கொண்டாடும் விழாவினை,நம்மோடு கூடிக் கொண்டாடும் வண்ணம்;

திருஞானசம்பந்தப் பெருமான் தேவாரத்திலும் கார்த்திகைத் திருவிழா குறிப்பிடப் பட்டுள்ளது (இரண்டாம் திருமுறை, திருமயிலாப்பூர்ப் பதிகம்).

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்தொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.

கலித்தொகை – கடவுள் வாழ்த்து:

“ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து,
தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்து,
கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங் கூளி
மாறாப் போர், மணி மிடற்று, எண் கையாய்! கேள், இனி:

படு பறை பல இயம்ப, பல் உருவம் பெயர்த்து நீ,
கொடுகொட்டி ஆடுங்கால், கோடு உயர் அகல் அல்குல்,
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ?
மண்டு அமர் பல கடந்து, மதுகையால் நீறு அணிந்து,

பண்டரங்கம் ஆடுங்கால், பணை எழில் அணை மென் தோள்,
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ?
கொலை உழுவைத் தோல் அசைஇ, கொன்றைத் தார் சுவல் புரள,
தலை அங்கை கொண்டு, நீ காபாலம் ஆடுங்கால்,

முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ?
என ஆங்கு
பாணியும், தூக்கும், சீரும், என்று இவை
மாண் இழை அரிவை காப்ப,
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை, ஆடி”.

வேதங்களுக்குரிய ஆறு அங்கங்களையும் அறியும் அந்தணர்களுக்கு நால்வேதங்களை அருளிச்செய்தவனும், தெளிந்த கங்கையைத் திருச்சடையிலே அடக்கியவனும்,முப்புரங்களை அழித்தவனும், வாக்கிற்கும்,மனத்திற்கும் எட்டாமல் முன் செல்பவனும், கடுங்கூளி என்னும் பின்வாங்காத போரினைச் செய்பவனும்,நீலமணிபோலும் திருக்கழுத்தையும்,எட்டுத் திருக்கரங்களையும் உடையவனும் ஆன சிவபெருமானே! இப்போது யான் கூறுவதைக் கேட்பாயாக.

நின் திருக்கரத்தில் ஒலிக்கின்ற பறை பல ஓசைகளை உண்டாக்க,அனைத்தயும் அழித்து நீ “கொடுகொட்டி” எனும் தாண்டவத்தை ஆடுங்கால்,பக்கம் உயர்ந்த, அகன்ற அல்குலினையும்,கொடிபோன்ற இடையினையும் உடைய உமையம்மையோ,தாளம் முடிந்துவிடும் காலத்தினைத் தன்னகத்தே கொண்ட சீரைத் தருவார்.

முப்புர அசுரர்களோடும்,நின் பகைவரோடும் நீ செய்த போர்கள் அனைத்திலும் நீ வென்று,அப்பகைவர்களை அழித்து, அவர்தம் சாம்பலை அணிந்து நீ “பாண்டரங்கம்” எனும் தாண்டவத்தை ஆடுங்கால்,மூங்கிலின் அழகைக்கொண்ட மெல்லிய தோள்களையும், வண்டுகள் மொய்க்கும் கூந்தலையும் உடையவரான உமையம்மையோ,தாளத்து இடைநிகழும் காலத்தினையுடைய தூக்கைத் தருவார்.

கொல்லும் புலியின் தோலினை உடுத்து,கொன்றைமாலை தோள்மேல் அசைய,ப்ரம்மனின் கபாலத்தை ஏந்தி நீ “காபாலம்” எனும் தாண்டவத்தை ஆடுங்கால்,முல்லையரும்புகளைப் போன்ற திருப்பற்களை உடைய உமையம்மையோ,தாளத்தின் முதலெடுக்கும் காலத்தினையுடைய பாணியைத் தருவார்.

என்று சொல்லும்படியாக,பெருமானே!நீ ஸர்வஸம்ஹாரத்தை நிகழ்த்தும் காலத்தில் பாணி,தூக்கு,சீர் ஆகியவற்றை,மாட்சிமை மிகுந்த அணிகளை அணிந்த உமாதேவியார் காக்கும்படி ஆடி,அன்பில்லாத பொருள்களாகிய எமக்காக ஒரு வடிவம் தாங்கி வந்து இவ்வுலகில் தங்கினாயே.

இப்பாடலில் புலவர், சிவபெருமான் ஆடும் மூன்று வகைத் திருத்தாண்டவங்களைக் கூறுகிறார்.அனைத்தயும் அழிக்கும் ஸம்ஹார காலத்தில் ஆடுவது கொடுகொட்டி எனும் தாண்டவம். திரிபுரத்தை அழித்த போது ஆடியது பாண்டரங்கம் எனும் தாண்டவம். ப்ரம்மனின் சிரத்தைக் கொய்து ஆடியது காபாலம் எனும் தாண்டவம்.

பரமேஷ்வரர் இவ்வாறு உக்ரமாகத் திருநடனம் புரியும் காலங்களில் எல்லாம் அவரின் உக்ரத்தை ஜகன்மாதாவான உமாதேவியார் தணிக்கிறார். சிவசக்தி தத்துவம் இங்கு விளக்கப்படுகிறது.

(தொடரும்)



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

  1. R Nanjappa on August 24, 2018 at 2:15 pm

    பல விஷயங்களைச் சொல்லும் கட்டுரை. ஆனால் இங்கு சொன்ன விஷயங்கள் அனைத்தும் சங்க காலத்தைச் சேர்ந்தவை அல்ல. மேலும். புறநானூறு,அகநானூறு ஆகியவை பிற்காலத்தில் தொகுக்கப்பட்ட நூல்கள். இவற்றின் கடவுள் வாழ்த்தும் பிற்காலத்தில் எழுதப்பட்டவை. சிலப்பதிகாரமும் சங்ககாலத்திற்குப் பிற்பட்டது.

    பாரதத்தின் பொதுவான கொள்கைகளும் நம்பிக்கைகளும்தான் தமிழ்நாட்டிலும் நிலவின.சங்க இலக்கியம் முழுதும் படிப்பவர்கள் இதை உணர்வார்கள். இன்று பல விஷயங்கள் மறைக்கப்படுகின்றன. உரை எழுதுவோர்கூட பல விஷயங்களை அமுக்கிவிடுகிறார்கள் அல்லது திரித்துவிடுகிறார்கள்..

    சங்க காலத்தில் ஐவகையாக பிரிக்கப்பட்ட நிலங்களில் ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு தெய்வம் இருந்தது. ஆக, சிவபெருமான் எந்த நிலத்திற்கான தெய்வம்? இச் செய்தி எங்கு வருகிறது? [சேயோனும் கொற்றவையும் இருந்ததால் சிவபிரான் இருந்தமை விளங்குகிறது.ஆனால் பரிபாடலில் திருமால் பற்றியும், முருகன் பற்றியும் வைகை பற்றியும் சிறப்பாக, முழுப்பாடல்கள் இருப்பதுபோல் சிவபிரான் பற்றி முழுமையக ஒரு நெடிய பாடல் இல்லாது ஏன்? சங்க இலக்கியத்திற்கே முதலில் வருவது திருமுருகாற்றுப்படைதானே? சிவபிரான் பெருந்தெய்வமாக விளங்கினார் எனின் அவரைப்பற்றிய சிறப்பான பெரிய பாடல் இல்லாதது ஏன்? அவரை முன் நிறுத்தாதது ஏன்? இப்படிக் கேட்கலாமல்லவா?
    [இங்கு காட்டிய சங்கப் பாடல்களில் சிவபிரான் பற்றி வரும் செய்திகள் அனைத்தும் புராணங்களில் இருப்பவை. இதேபோல் திருமாலை முதன்மையாக வைத்து வரும் செய்திகளும் புராணங்களில் வருகின்றன.அவை இங்கு வரவில்லை. ஏனெனில் எழுதியவர் சிவச் சார்புடையவர்!]
    சிவ வழிபாடு இருந்தாலும் அதை “சைவம்” என்று எப்படிச் சொல்ல முடியும்? இன்றும் சிவன் கோவிலுக்குப் போகிறவர்கள் அனைவரும் “சைவர்கள்” எனச் சொல்லமுடியுமா?
    சைவம், வைணவம். சாக்தம் போன்ற பிரிவுகள் மிகப் பிற்காலத்தவை. வைதீக மதத்தில் இத்தகைய பிரிவுகள் இருந்ததில்லை. “ஏகம் ஸத்; விப்ரா பஹுதா வதன்தி = உள்ள பொருள் ஒன்றுதான்; அறிஞர்கள் அதைப் பலவாறு வழங்குகிறார்கள் என்பது தான் வேதத்தின் கொள்கை. இன்றுவரை பொதுவான வேத வழியைப் பின்பற்றுபவர்கள் [ ஸ்மார்த்தர்கள்] சிவ-விஷ்ணு பேதம் இல்லாமல்தான் இருக்கிறார்கள்.
    வைணவம் ஸ்ரீ ராமானுஜருக்குப் பின் [1017-1137]தோன்றியது. ராமானுஜருக்குப் பின்னும் பல பிரிவுகள் தோன்றிவிட்டன.இப்படி 500 ஆண்டுகளுக்கு முன் வந்தது கௌடிய வைஷ்ணவம் [ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு வங்காளத்தில் ஏற்படுத்தியது].வைஷ்ணவம் என்ற பெயரில் வழங்கினாலும் இவர்கள் தத்துவக் கொள்கைகளும் [philosophy] தெய்வாம்ச விளக்கங்களும் [theology] மாறுபடுகின்றன. அதேபோல் சைவர்கள் என்பவர்களிடையேயும் philosophy, theology என்பவற்றில் பல பிரிவுகள். ஆக, எது சைவம்? எது வைஷ்ணவம்? இச் சர்ச்சையை விட்டு, சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு என்பதே சரியானதாகும். [ கௌடிய வைஷ்ணவர்கள் விஷ்ணுவே கிருஷ்ணனின் அம்சம் என்பார்கள்.]
    வேதத்தில் எந்த குறிப்பிட்ட philosophy, theology வற்புறுத்தப் படவில்லை.
    வேதத்தில் சிவன், ருத்ரன், விஷ்ணு, இந்த்ரன், வருணன், அக்னி என்பதெல்லாம் ஒரே பரம்பொருளுக்கான பெயர்களே தவிர, தனித் தனிக்கடவுளருக்கான பெயர்கள் அல்ல.[இவை பின்னர் வரும் புராணப்பெயர்கள் அல்ல] எல்லா பெயரிலும் துதிகள் அங்கு வருகின்றன; இவை தனித் தனிக் கடவுளைக் குறிப்பவை அல்ல. அதே போல் உள்ளது ஒன்றே என்பதோடு வேதத்தின் தத்துவ விளக்கப் பகுதி[உபனிஷதம்] அமைகிறது. அதைப் பல கோணங்களில் காண்கிறது. எந்த குறிப்பிட்ட தத்துவ நிலையையும் அது வற்புறுத்தவில்லை. அனுபவத்தில் அறியுங்கள் [அபரோக்ஷ அனுபூதி] என்பதே அதன் நிலை.
    பிற்காலத்தில் ஒவ்வொரு கடவுள் பெயரில் புராணங்கள் எழுந்தன. அதன் பிறகுதான் ஒவ்வொரு பெயரில் ஒரு பிரிவு தோன்றியது.
    இன்னமும் உட்பிரிவுகள் தோன்றிய வண்ணம் இருக்கின்றன. தத்துவங்களிலும் உட்பிரிவுகள் தோன்றிய வண்ணம் உள்ளன.
    வேதத்தைப் பற்றியும், நமது தத்துவங்களின் சரியான விளக்கத்தையும், புராணங்களின் உட்கருத்தையும் அறிய விரும்புவோர் ஸ்ரீ அரவிந்தரின் விளக்கங்களைப் படித்தறியவேண்டும்.

    சுமார் 40-45 ஆண்டுகளுக்குமுன், ஸ்வாமி சித்பவானந்தர் நடத்திவந்த”தர்ம சக்கரம்” பத்திரிகையில் சங்க இலக்கியத்தில் சமயக் கருத்துக்கள் பற்றி ஒரு தொடர் வெளியானது. அது நடு நிலையிலிருந்து எழுதப்பட்டதாகும். அது தபோவனத் தொடரில் பத்தகமாக வெளிவந்ததா எனத் தெரியவில்லை.

    இந்நிலையில், தற்கால வழக்கைக்கொண்டு சங்ககாலத்தைப் பார்ப்பது தவறாகும்.
    திரு அன்புராஜ் எழுதியபடி, சைவ-வைஷ்ணவ பிரிவினை வாதம் நமக்குத் தேவையில்லை. அந்தக் குட்டையில் மீண்டும் விழவேண்டாம். ஹிந்துப் பண்பாடு என்பதே போதுமானது.

     
  2. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on September 2, 2018 at 2:56 pm

    அ. அன்புராஜ் “நண்பா் காளிதாஸ் அவர்களின் பேஸ்புக் பகுதிக்குச் சென்று பார்த்தேன். பண்டைய சைவ-வைணவ சண்டைகளை புதுப்பிக்க அவர் துடித்துக்கொண்டிருக்கின்றாா். இந்த காரியம் பயனிலலாதது என்று எனது கருத்தை பதிவு செய்தேன். இனி வருங்காலங்களில் இந்து என்ற பண்பாட்டின் அடிப்படையில் அனைவரும் செயல்பட வேண்டும்.சைவம்-வைணவ மோதல்களை உயிா்பிக்க வேண்டாம்”. சைவர் வைணவர்களிடையே பரத்துவத்திலே விவாதம் என்றைக்கும் இருந்துகொண்டே இருக்கும். அப்படிவிவாதிக்கின்றபோது பரஸ்பரம் மரியாதையோடு விவாதிப்பது அவசியம். சைவமும் வைணவமும் னமது இரு முக்கியமான வைதீகசமயங்கள் என்ற புரிதல் அவசியம். சைவத்தினுடைய அனைத்து சம்பிரதாயங்களும் வைணவத்தினுடைய எல்லா பரம்பரைகளும் மறுமலர்ச்சி அடையவது அவசியம். நண்பர் கௌதம் காளிதாஸ் சிவபரத்துவத்திலே ஆழ்ந்த பற்றுக்கொண்ட சைவர். சைவ இலக்கியங்களிலே ஆழ்ந்த ஈடுபாடு நிறைந்தவர். அவரது கட்டுரைகளை வரவேற்கின்றேன். மேன்மேலும் பல கட்டுரைகளையும் நூல்களையும் அவர் எழுதவேண்டுகின்றேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

  1. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on September 2, 2018 at 3:47 pm

    R Nanjappa
    “பல விஷயங்களைச் சொல்லும் கட்டுரை. ஆனால் இங்கு சொன்ன விஷயங்கள் அனைத்தும் சங்க காலத்தைச் சேர்ந்தவை அல்ல”.
    இது பொத்தாம் பொதுவான விமர்சனம். எந்தப்பாடல் சங்ககாலத்தது அல்ல என்பதை ஆதாரப்பூர்வமாக சொல்லுவது அவசியம். ஒரே அடியாய் அடிப்பது சரியானது அல்ல.

    R Nanjappa “மேலும். புறநானூறு,அகநானூறு ஆகியவை பிற்காலத்தில் தொகுக்கப்பட்ட நூல்கள். இவற்றின் கடவுள் வாழ்த்தும் பிற்காலத்தில் எழுதப்பட்டவை.
    பிற்காலத்திலே தொகுப்பட்ட நூல்கள் என்றாலும் பாடல்கள் சங்ககாலத்தவையே. கடவுள் வாழ்த்தில் உள்ள பாடல்கள் இடைச்செருகல்கள் என்பதற்கு ஆதாரமிருந்தால் நீங்கள் வழங்கவேண்டும்.
    R Nanjappa “சிலப்பதிகாரமும் சங்ககாலத்திற்குப் பிற்பட்டது”. ஆம் ஆனால் சிலம்பு சங்ககால இலக்கியத்தின் தொடர்ச்சியே என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள்.
    ஸ்ரீ நஞ்சப்பா போன்ற பெரியவர்கள் ஆதாரப்பூர்வமாக குறிப்பாக கருத்துரைப்பது ஆரோக்கியமானது. பொத்தாம்பொதுவாக ஆதாரமின்றி கதைப்பது சரியல்ல. நஞ்சுண்ட கண்டனே போற்றி போற்றி!

     
  2. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on September 2, 2018 at 3:54 pm

    நஞ்சப்பா
    “சங்க காலத்தில் ஐவகையாக பிரிக்கப்பட்ட நிலங்களில் ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு தெய்வம் இருந்தது. ஆக, சிவபெருமான் எந்த நிலத்திற்கான தெய்வம்? இச் செய்தி எங்கு வருகிறது?”
    சிவபெருமான் எல்லா நிலத்துக்கும் பொது தெய்வம். எந்த ஒரு நிலத்துக்கும் தனிதெய்வம் அல்ல.
    நஞ்சப்பா
    “[சேயோனும் கொற்றவையும் இருந்ததால் சிவபிரான் இருந்தமை விளங்குகிறது.ஆனால் பரிபாடலில் திருமால் பற்றியும், முருகன் பற்றியும் வைகை பற்றியும் சிறப்பாக, முழுப்பாடல்கள் இருப்பதுபோல் சிவபிரான் பற்றி முழுமையக ஒரு நெடிய பாடல் இல்லாது ஏன்? சங்க இலக்கியத்திற்கே முதலில் வருவது திருமுருகாற்றுப்படைதானே? சிவபிரான் பெருந்தெய்வமாக விளங்கினார் எனின் அவரைப்பற்றிய சிறப்பான பெரிய பாடல் இல்லாதது ஏன்? அவரை முன் நிறுத்தாதது ஏன்? இப்படிக் கேட்கலாமல்லவா?” நிச்சயமாகக்கேட்கலாம். சங்கப்பாடல்கள் எல்லாமே கிடைத்திருந்தால் இந்தக்கேள்வி நியாயமானதாக இருந்திருக்கும். திருமுருகாற்றுப்படையே திருமுருகப்பெருமானுடைய தந்தையாக கொற்றைவை சிறுவனாக முருகப்பெருமானை சொல்வதால் தெளிவாகவே சைவத்தின் இருப்பு தெளிவாகின்றது.

     
  3. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on September 2, 2018 at 4:04 pm

    நஞ்சப்பா “சைவம், வைணவம். சாக்தம் போன்ற பிரிவுகள் மிகப் பிற்காலத்தவை. வைதீக மதத்தில் இத்தகைய பிரிவுகள் இருந்ததில்லை. “ஏகம் ஸத்; விப்ரா பஹுதா வதன்தி = உள்ள பொருள் ஒன்றுதான்; அறிஞர்கள் அதைப் பலவாறு வழங்குகிறார்கள் என்பது தான் வேதத்தின் கொள்கை. இன்றுவரை பொதுவான வேத வழியைப் பின்பற்றுபவர்கள் [ ஸ்மார்த்தர்கள்] சிவ-விஷ்ணு பேதம் இல்லாமல்தான் இருக்கிறார்கள்”. ஐயா நஞ்சப்பா உங்களுடைய ஸ்மார்த்த சார்பு இங்கே தெளிவாகத்தெரிகின்றது. ஸ்மார்த்தம் என்ற சமயமே பிற்பட்டது. எல்லாவற்றின் கலவை அது. சைவமே பழைய சமயம். சிவாலயங்களே பழமையானவை. சிவ வழிபாடே பழமையானது. ஸ்மார்த்தம் என்றப்பிரிவு பிராம்மணர்களுக்கு மட்டுமே உரியதே. வேறு எந்த சாதியினரிடத்தேயும் பஞ்சாயதனம் என்ற வேதத்திலே கூறப்படாத ஐந்துமூர்த்தி வழிபாடு கிடையவே கிடையாது. வேதத்திலே சிவபரத்துவத்துக்கு அனேக சான்றுகள் உள்ளன. சிவலிங்க பூஜையை, விபூதி தாரணத்தை, வில்வார்ச்சனையை வேதமே விதிக்கின்றது. சிவ ஏகோ த்யேஹ என்பது அதர்வசிரஸ் வாக்கியமாகும். தமிழிலே வழங்கும் கடவுள், இயவுள், இறை என்றப்பதங்கள் சிவபெருமானையே சுட்டும். ஸ்மார்த்தப்பரமாக எந்தப்புராணமும் கிடையவே கிடையாது. பரம்பொருள் என்று சொன்னால் அவரிடத்திலே ஏகாக்ர பக்திவேண்டும் ஆகவே சைவம் வைணவம் சாக்தம் ஆகிய சமயங்கள் வேண்டும். ஸ்மார்த்தராக நீங்கள் இருங்கள் அது உங்கள் விருப்பம். ஹிந்துக்கள் எல்லோரும் ஸ்மார்த்தர்களாகவேண்டும் என்ற உங்களுடைய உபதேசம் ஹிந்து ஒற்றுமைக்கே வேட்டுவைத்துவிடும்.

     
  4. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on September 2, 2018 at 4:11 pm

    நஞ்சப்பா
    “[இங்கு காட்டிய சங்கப் பாடல்களில் சிவபிரான் பற்றி வரும் செய்திகள் அனைத்தும் புராணங்களில் இருப்பவை. இதேபோல் திருமாலை முதன்மையாக வைத்து வரும் செய்திகளும் புராணங்களில் வருகின்றன.அவை இங்கு வரவில்லை. ஏனெனில் எழுதியவர் சிவச் சார்புடையவர்!]”
    சிவபெருமானைப்பற்றி சங்க இலக்கியங்களிலே இருக்கும் செய்திகளைப்ப்பகுத்தும் தொகுத்தும் தருவதே இந்தக்கட்டுரையாளரின் நோக்கம். ஐயா நீங்கள் கட்டுரையின் தலைப்பையே வாசிக்கவில்லை என்று தெரிகின்றது. சிவபெருமானைப்பற்றியக்கட்டுரையிலே கூடத்திருமாலைப்பற்றிய சங்க இலக்கிய ஆதாரங்கள் குறிப்பிடப்படவேண்டும் என்பது உங்களது ஸ்மார்த்த நோக்கின் பிழையே அன்றி கட்டுரையாளரின் பிழையன்று. விவாதம் செய்யுங்கள். ஆதாரம் கொடுங்கள். ஸ்மார்த்தத்தையே எங்கும் தேடாதீர்கள். யாம் சைவர். எம்மை ஸ்மார்த்தராக்க முயலாதீர்கள். வேதம் விதித்தபடி விபூதியே பூசினாலும் ருத்ராக்ஷமே தரித்தாலும் சிவபரத்துவத்தை ஏற்காத ஸ்மார்த்தம் வேறு சைவம் வேறே. சுத்த அன்னத்தை போஜிக்கின்றவர்களுக்கு கதம்ப சாதம் பிடிக்காது. அதை எம்மீது திணிக்கவேண்டும். ஹரஹர மஹாதேவா!

     
  5. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on September 2, 2018 at 4:26 pm

    Nanjappaa
    “வைணவம் ஸ்ரீ ராமானுஜருக்குப் பின் [1017-1137]தோன்றியது. ராமானுஜருக்குப் பின்னும் பல பிரிவுகள் தோன்றிவிட்டன.இப்படி 500 ஆண்டுகளுக்கு முன் வந்தது கௌடிய வைஷ்ணவம் [ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு வங்காளத்தில் ஏற்படுத்தியது].வைஷ்ணவம் என்ற பெயரில் வழங்கினாலும் இவர்கள் தத்துவக் கொள்கைகளும் [philosophy] தெய்வாம்ச விளக்கங்களும் [theology] மாறுபடுகின்றன. அதேபோல் சைவர்கள் என்பவர்களிடையேயும் philosophy, theology என்பவற்றில் பல பிரிவுகள். ஆக, எது சைவம்? எது வைஷ்ணவம்? இச் சர்ச்சையை விட்டு, சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு என்பதே சரியானதாகும். [ கௌடிய வைஷ்ணவர்கள் விஷ்ணுவே கிருஷ்ணனின் அம்சம் என்பார்கள்.]”
    சிவவழிபாடு விஷ்ணு வழிபாடு என்று பார்ப்பது இரண்டையும் சமதிருஷ்டியிலே பார்ப்பதோடு இரண்டுக்கும் மேலே வேதத்திலே இல்லாத நிர்குணப்பிரம்மத்தைக்கற்பிக்கின்ற சங்கராத்வைதப்பார்வையாகும். ஒரு சமயம் ஒற்றையாகத்தான் தட்டையாகத்தான் இருக்கவேண்டும் என்பதே தவறான நோக்காகும். அதே ஐரோப்பிய அபிராஹாமியப்பார்வையாகும். சங்கரமதம் ஒன்றுதான் அது இல்லறத்தாருக்கு கர்மத்தையும் துறவிகளுக்கு ஞான மார்கத்தையும் விதிக்கின்றது. அதிலே பக்தியாலே மோக்ஷம் மானுடருக்கு கிடையாது. ஏன் என்றால் பக்தியும் கர்மத்தின் வகையிலே வருகின்றது. சைவம் வைணவம் ஆகிய இரண்டின் அடிப்படை பரத்துவ நிஸ்ச்சயமாகும். சிவமே நமக்குப்பரம் என்று சிரமேற்கொள்வோர் சைவராவர். சைவரிலே வைதீகரும் உள்ளனர் தாந்த்ரீகரும் உள்ளனர். சைவ மெய்யியலிலே த்வைத பரமான லகுலப் பாசுபதம், விசிஸ்டாத்வைதமான சிவாத்வைதம், சுத்தாத்வைதமான சைவசித்தாந்தம், சுத்த சைவமான எங்கும் சிவத்தை மட்டுமே காணும் காஸ்மீரசைவம் ஆகியன அனைத்துக்கும் பொதுவான அடிப்படை சிவமே ஜகத்காரணம் என்பதும் முப்பத்தாறு தத்துவங்களைக்கடந்த பஞ்சமூர்த்திகளுக்குத் துரியராக இலங்குகின்ற பரசிவமே பரப்ரம்மமாகும் என்பதே. பதினெட்டுப்புராணங்களிலும் அளவில் பெரியவை சிவபரத்துவம் கூறும் புராணங்களே. ஏகம் சத்விப்ரா பகூதாவதந்தி என்பதற்கு நீங்கள் கூறுகின்ற விளக்கத்தை சாற்றுகின்ற புராணங்கள் எதுவும் கிடையாது. மெய்யியல் வேறுபாடுகள் காட்டி சைவம் வைணவம் ஆகிய சமயங்களை சுமார்த்தத்திலே கரைக்கமுயலும் உங்களது ஒற்றையாக்குதல் தட்டையாக்குதல் வாதத்தை எள்ளளவும் ஏற்கமுடியாது.

     
  6. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on September 2, 2018 at 4:34 pm

    Nanjappaa
    “வேதத்தில் எந்த குறிப்பிட்ட philosophy, theology வற்புறுத்தப் படவில்லை.
    வேதத்தில் சிவன், ருத்ரன், விஷ்ணு, இந்த்ரன், வருணன், அக்னி என்பதெல்லாம் ஒரே பரம்பொருளுக்கான பெயர்களே தவிர, தனித் தனிக்கடவுளருக்கான பெயர்கள் அல்ல.[இவை பின்னர் வரும் புராணப்பெயர்கள் அல்ல] எல்லா பெயரிலும் துதிகள் அங்கு வருகின்றன; இவை தனித் தனிக் கடவுளைக் குறிப்பவை அல்ல. அதே போல் உள்ளது ஒன்றே என்பதோடு வேதத்தின் தத்துவ விளக்கப் பகுதி[உபனிஷதம்] அமைகிறது. அதைப் பல கோணங்களில் காண்கிறது. எந்த குறிப்பிட்ட தத்துவ நிலையையும் அது வற்புறுத்தவில்லை. அனுபவத்தில் அறியுங்கள் [அபரோக்ஷ அனுபூதி] என்பதே அதன் நிலை”.
    இது ஆர்ய சமாஜிகள் வாதமாகும். வேதத்திலே பூர்வபாகத்திலே காணப்படும் கர்மக்காண்டம் வேறு வேதாந்தமாகிய உபனிடதப்பகுதி வேறு என்ற ஐரோப்பியக் காலனிய சிந்தனையாளர்களின் வாதம் எப்படி மொன்னையானதோ, சாரமற்றதோ அப்படியே வேதம் வேறு புராணம் வேறு என்றவாதமும் ஆதாரப்பூர்வமானது அல்ல. வேதத்தின் பொருளை உபனிசதங்களின் மூலம் அவற்றைப்பற்றியத்தெளிவை இதிகாசப்புராணங்களிடத்திலே இருந்தும் நாம் அறிதல்வேண்டும். வேத வாங்மயம் வித்யாஸ்தானம் பதினான்கு வித்தைகள் என்று சொல்லப்படுகின்ற தொகுப்பு முழுவதையும் ஒன்றாகவே காணவேண்டும். பாரதப்புண்ணிய பூமியிலே வேதகாலத்திலே மட்டும்தான் ஞானியர் வாழ்ந்தனர் என்பது சரியானது அல்ல. இன்றும் இங்கே மஹத்தான அருளாளர்கள் வாழ்கின்றார்கள். நமக்கு வழிகாட்டுகின்றார்கள் என்பதே உண்மை. எப்படி ஸ்மார்த்தர்களுடைய ஒற்றைவாதம் எமக்கு ஏற்பு இல்லையோ அப்படியே ஆர்யஸ்மாஜிகளின் தட்டைவாதமும் ஏற்புடையது அல்ல.

     
  7. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on September 2, 2018 at 4:45 pm

    Nanjappa
    “பிற்காலத்தில் ஒவ்வொரு கடவுள் பெயரில் புராணங்கள் எழுந்தன. அதன் பிறகுதான் ஒவ்வொரு பெயரில் ஒரு பிரிவு தோன்றியது.
    இன்னமும் உட்பிரிவுகள் தோன்றிய வண்ணம் இருக்கின்றன. தத்துவங்களிலும் உட்பிரிவுகள் தோன்றிய வண்ணம் உள்ளன”. பாரத பண்பாடு ஜீவ நதிபோல ஓடிக்கொண்டிருப்பதாகும். அதன் சிறப்பே அதன் உறையாத தேங்கிகெடாதத்தன்மையாகும். அபிராஹாமிய ரிலிஜியன் கள் ஒற்றையானவைத் தட்டையானவை. தமது வழி மட்டுமே சரி மற்றவர்களை அவ்வழிக்கே மாற்று என்று சொல்பவை. போர்மூலம் தமது வழியை அடுத்த்வர்கள் மீது திணிக்கும் நோக்கமே அவற்றின் தேங்கியத்தன்மை மற்றும் ஒற்றைத்தன்மையினாலே வந்தது. அதேபோன்று ஸ்மார்த்த அச்சிலே ஹிந்துப்பண்பாட்டை ஒற்றையாக்கும் முயற்சி ஏற்புடையதாகாது. எல்லாரையும் ஸ்மார்த்தர்களைபோல தமது சம்பிரதாயங்களை விட்டுவிடச்சொல்வது கேடானதாகும். உங்கள் மாதிரி எல்லோரையும் ஆக்கமுயலவேண்டாம். மனிதன் பலதரப்பட்டவன் ஆதலின் அவன் உய்யும் வழியென்ப்பலதை பரமேஸ்வரன் தந்தார்.

     
  8. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on September 2, 2018 at 4:57 pm

    நஞ்சப்பா
    “இந்நிலையில், தற்கால வழக்கைக்கொண்டு சங்ககாலத்தைப் பார்ப்பது தவறாகும்.
    திரு அன்புராஜ் எழுதியபடி, சைவ-வைஷ்ணவ பிரிவினை வாதம் நமக்குத் தேவையில்லை. அந்தக் குட்டையில் மீண்டும் விழவேண்டாம். ஹிந்துப் பண்பாடு என்பதே போதுமானது”.
    சங்ககாலத்திலேயே சைவம் வைணவம் ஆகிய இரு வைதீக நெறிகளும் இங்கே இருந்தன. சைவம், வைணவம் ஆகிய இருசமயங்களும் அவற்றின் பல்வேறு சம்பிரதாயங்களும் இப்போது பாரதமெங்கும் மறுமலர்ச்சி அடைந்தே வருகின்றன. அவற்றிடையே பூசல் பொறாமை போர் வேண்டாம். ஆனால் அந்த சமயங்களின் சம்பிரதாயங்கள், மெய்யியல் மரபுகள், வழிபாட்டு நெறிகள் விதிகள் ஆகியன தொடரவேண்டும். இந்த சம்பிரதாயங்களின் இலக்கியங்களும் பயன்பாட்டிலே செழித்தல் வேண்டும். சைவம் வேண்டாம் வைணவம் வேண்டாம் ஹிந்து மட்டும் போதும் என்பது ஒற்றையாக்குதல். ஒரு சைவனாக மட்டுமல்லாமல் ஒரு ஹிந்துவாக ஹிந்துத்துவனாக இந்த தட்டையாக்கும் முயற்சியை நிராகரிக்கின்றேன். ஹிந்துப்பண்பாட்டு அடையாளம் ஒற்றையல்ல. அது தட்டையும் அல்ல. பாரதம் என்ற அடையாளம் பாரத நாட்டின் பல்வேறு பிராந்தியங்கள், மொழிகள் ஆகியவற்றின் அடையாளத்துக்கு இயைந்தே அமைகின்றது. இதையெல்லாம் ஒற்றையாக செய்யமுயல்வது
    ஹிந்துப்பண்பாட்டின் தேக்க நிலைக்கே வழிவகுக்கும். கலை, இலக்கியம் ஆகியவற்றின் மறுமலர்ச்சி பக்தியியக்கத்தினாலே இந்த தேசத்திலே எங்கும் என்றும் நிகழ்ந்தது. பாரத நாட்டின் மெய்யியல் பன்மைத்தன்மையினாலும் ஆரோக்கியமான விவாதத்தாலுமே காலந்தோறும் வளர்ந்துவருவது. அபிராஹாமியத்தைப்போல ஒற்றையாக்கும் முயற்சி பாரத தேசத்தில் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் எதிரானது முரணானது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard