பாடியவர்: ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன். பூதப்பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் ஒல்லையூரைப் பகைவரிடமிருந்து வென்றதால் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்று சிறப்பிக்கப்பட்டான். பூதப்பாண்டியனும் அவன் மனைவி பெருங்கோப்பெண்டு என்பவளும் மிக்க அன்போடு இல்லறம் நடத்தினர்.
பாடலின் பின்னணி: ஒரு சமயம் பூதப்பாண்டியனுக்கும் சேர சோழ மன்னர்களுக்கும் பகை உண்டாயிற்று. அப்பகையின் காரணத்தால் அவர்கள் பூதப்பாண்டியனோடு போருக்கு வந்தனர். அதை அறிந்த பூதப்பாண்டியன் மிகுந்த சினத்தோடு கூறிய வஞ்சினமே இப்பாடல். பூதப்பாண்டியன் இப்போரில் கொல்லப்பட்டான். அதை அறிந்த அவன் மனைவி, தன் கணவன் இறந்த பிறகு தான் வாழ விரும்பவில்லை என்று கூறித் தீக்குளித்து உயிர் துறக்கிறாள். அவள் தீக்குளிக்குமுன் பாடியதாக ஒரு பாடல் புறநானூற்றில் (புறம் - 246) உள்ளது.
திணை: காஞ்சி; துறை: வஞ்சினக் காஞ்சி
மடங்கலின் சினைஇ, மடங்கா உள்ளத்து, அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து என்னொடு பொருதும் என்ப ; அவரை ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு 5 அவர்ப்புறம் காணேன் ஆயின் - சிறந்த பேரமர் உண்கண் இவளினும் பிரிக: அறன்நிலை திரியா அன்பின் அவையத்துத், திறன்இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து மெலிகோல் செய்தேன் ஆகுக; மலி புகழ் 10 வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின் பொய்யா யாணர் மையற் கோமான் மாவனும், மன்எயில் ஆந்தையும், உரைசால் அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும், வெஞ்சின இயக்கனும், உளப்படப் பிறரும், 15 கண்போல் நண்பிற் கேளிரொடு கலந்த இன்களி மகிழ்நகை இழுக்கி யான் ஒன்றோ, மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த தென்புலம் காவலின் ஒரிஇப், பிறர் வன்புலங் காவலின் மாறி யான் பிறக்கே!
உரை: சிங்கம்போலச் சினத்தையும், உறுதியான உள்ளத்தையும், வலிமைமிக்க படையையுமுடைய வேந்தர் ஒன்று கூடி என்னோடு போரிடுவேமென்று கூறுகிறார்கள். நான் அவ்வேந்தரைப் பொறுத்தற்கரிய போரில் அவர்கள் அலறுமாறு போரிட்டு, அவர்களை அவர்களுடைய தேருடன் புறமுதுகு காட்டி ஓடுமாறு செய்யேனாயின், சிறந்த, பெரிய மையணிந்த கண்களையுடைய இவளிடமிருந்து (என்னுடைய மனைவியிடமிருந்து) நீங்குவேனாக. அறநிலை மாறாத அன்போடு கூடிய என் அரசவையில் தகுதியற்ற ஒருவனை இருத்திக் கொடுங்கோல் புரியச் செய்தேனாக. மிக்க புகழுடைய வைகையாற்றால் சூழப்பட்ட வளம் பொருந்திய ஊர்களில் பொய்க்காத புதுவருவாயுடைய மையல் என்னும் பகுதிக்குத் தலைவனாகிய மாவன், நிலைபெற்ற அரண்களையுடைய ஆந்தை, புகழமைந்த அந்துவஞ் சாத்தன், ஆதன் அழிசி, சினமிக்க இயக்கன் ஆகியோர் உட்பட என் கண்போன்ற நட்பினையுடைய நண்பர்களோடு கூடிக் களிக்கும் இனிய செருக்குடைய மகிழ்ச்சியை இழந்தவனாவேனாக. நான், மறு பிறவியில் மக்களைப் பாதுகாக்கும் பெருமைமிக்க பாண்டியர் குடியில் பிறக்காமல் வளமற்ற நிலம் காக்கும் குடியில் பிறப்பேனாக.
சிறப்புக் குறிப்பு: மனைவியைப் பிரியாமலிருப்பது, கொடுங்கோலன் என்று மக்களால் கருதப்படாமலிருப்பது, நண்பர்களின் நட்பு, மற்றும் பாண்டிய நாட்டை ஆளும் வாய்ப்பு ஆகிய இவையெல்லாவற்றையும் பூதப்பாண்டியன் மிகவும் மேன்மையானயவையாகவும் விருமபத்தக்கவையாகவும் கருதினான் என்பது இப்பாடலிலிருந்து தெரிகிறது.