New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புறநானூறு 41-50 -முனைவர். பிரபாகரன்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
புறநானூறு 41-50 -முனைவர். பிரபாகரன்
Permalink  
 


41. காலனுக்கு மேலோன்!

http://puram1to69.blogspot.com/2011/02/41.html

 
பாடியவர்: கோவூர் கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 31-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாடலின் பின்னணி: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோபமூட்டியவர்கள், அவர்களின் நாடுகளில் நடைபெறும் தீய நிமித்தங்களையும், அவர்களின் கனவில் காணும் தீய நிகழ்ச்சிகளையும் நினைத்து அஞ்சுகின்றார்கள். அவர்கள் தம் அச்சத்தை தம் மகளிர்க்குத் தெரியாதவாறு மறைத்துக் கலங்குகின்றனர். சோழனின் பகைவர்களின் நிலையையும் சோழனின் வலிமையும், கொற்ற வள்ளைத் துறையில் அமைந்துள்ள இப்பாடலில் கோவூர் கிழார் குறிப்பிடுகிறார்.
திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: கொற்ற வள்ளை. அரசனுடைய வெற்றியைக் கூறி பகைவரின் நாட்டின் அழிவை உரைத்தல்.

காலனும் காலம் பார்க்கும்; பாராது
வேல்ஈண்டு தானை விழுமியோர் தொலைய,
வேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்தே!
திசைஇரு நான்கும் உற்கம் உற்கவும்,
5 பெருமரத்து இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும்,
வெங்கதிர்க் கனலி துற்றவும், பிறவும்,
அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரல் இயம்பவும்,
எயிறுநிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும்,
களிறுமேல் கொள்ளவும், காழகம் நீப்பவும்,
10 வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்,
கனவின் அரியன காணா நனவின்
செருச்செய் முன்ப! நின் வருதிறன் நோக்கி,
மையல் கொண்ட ஏமம்இல் இருக்கையர்,
புதல்வர் பூங்கண் முத்தி, மனையோட்கு
15 எவ்வம் கரக்கும் பைதல் மாக்களடு
பெருங்கலக் குற்றன்றால் தானே; காற்றோடு
எரிநிகழ்ந் தன்ன செலவின்
செருமிகு வளவ! நிற் சினைஇயோர் நாடே.

அருஞ்சொற்பொருள்:
1. காலன் = இயமன். 2. ஈண்டுதல் = செறிதல், நிறைதல்; விழுமியோர் = சிறந்தோர். 3. அடுதல் = வெல்லுதல், கொல்லுதல். 4. உற்கம் = விண்வீழ் கொள்ளி; உற்கவும் = எரிந்து விழவும். 6. கனலி = கதிரவன்; துற்றவும் = நெருங்கவும். 7. புள் = பறவை. 8. எயிறு = பல். 9. களிறு = ஆண் பன்றி, ஆண் யானை, விலங்கேற்றின் பொது; காழகம் = உடை. 12. செரு = போர்; முன்பு = வலிமை. 13. ஏமம் = பாதுகாவல். 15. எவ்வம் = துன்பம்; கரக்கும் = மறைக்கும்; பைதல் = துயரம். 17. செலவு = படையெடுப்பு. 18. சினைஇயோர் = சினம் கொள்ளச் செய்தோர்.

கொண்டு கூட்டு: வேந்தே, முன்ப, வளவ, நீ இத்தன்மையை ஆதலால், நிற்சினைஇயோர் நாடு பைதல் மாக்களோடு பெருங்கலக்குற்றது எனக் கூட்டுக.

உரை: ஓருயிரைக் கொள்வதற்கு ஏற்ற காலத்தில்தான் இயமனும் அவ்வுயிரைக் கொள்வான். ஆனால், நீ நேரம் பார்க்காமல், வேல்களோடு கூடிய பகைவர்களின் படையை நீ விரும்பிய நேரத்தில் அழிப்பாய். போர்களில் வெற்றி பெரும் வேந்தே! . காற்றொடு தீ கலந்தாற்போல் படையெடுக்கும் வலிமை மிகுந்த சோழனே! உன்னைச் சினமூட்டியவர்களின் நாட்டில், எட்டுத் திசைகளிலும் வானத்திலிருந்து எரிகொள்ளிகள் எரிந்து விழுகின்றன; பெரிய மரத்தில் இலையில்லாத நெடிய கிளைகள் பட்டுப்போகின்றன. கதிரவனின் கதிர்கள் சுட்டு எரிக்கின்றன; மற்றும், அச்சம் தரும் பறவைகள் ஒலிக்கின்றன. இவையெல்லாம், உன்னைச் சினமூட்டும் பகைவர்களின் நாடுகளில் உண்மையாகவே நடைபெறும் நிகழ்ச்சிகள். இவை மட்டுமல்லாமல், அங்குள்ளவர்கள் பல கெட்ட கனவுகளும் காண்கின்றனர். பற்கள் நிலத்தில் விழுவது போலவும், எண்ணெய் தேய்த்துக் குளிப்பது போலவும், பெண்பன்றி ஆண்பன்றி மேல் ஏறுவது போலவும், தங்கள் ஆடைகள் கழன்று கீழே விழுவது போலவும், ஓளி திகழும் படைக்கலங்கள் தாமிருந்த கட்டிலினின்று கவிழ்ந்து விழுவது போலவும் கனவுகள் காண்கின்றனர். இதுபோல் நனவிலும் கனவிலும் காணத் தகாத நிகழ்ச்சிகளை உன் பகைவர்கள் காணுமாறு போர் செய்யும் வலியவனே! நீ படையெடுத்து வருவதைக் கண்டு, கலங்கிய பாதுகாவல் இல்லாத உன் பகைவர்கள், தம் குழந்தைகளின் பூப்போன்ற கண்களில் முத்தமிட்டு, தம் மனைவியரிடம் தம் துயரம் தெரியாதவாறு மறைத்துத் துன்பத்தோடு உள்ளனர்.

சிறப்புக் குறிப்பு: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் வெற்றிகளைக் கூறி, அவன் பகைவர்களை அழிக்கும் ஆற்றலைப் பற்றியும் கூறுவதால் இப்பாடல் கொற்ற வள்ளை என்ற துறையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

42. ஈகையும் வாகையும்!

 
பாடியவர்: இடைக்காடனார் (42). இவர் இடைக்காடு என்னும் ஊரைச் சார்ந்தவராதலால் இடைக்காடனார் என்ற பெயரை பெற்றார் என்று சிலர் கூறுவர். வேறு சிலர், இடைக்காடன் என்பது இவர் இயற்பெயர் என்றும் கூறுவர். இவர் இவற்றிய பல பாடல்கள் சங்க இலக்கியத் தொகைநூல்களுள் காணப்படுகின்றன. இவர் பாடல்கள் இலக்கிய வளமும் உவமை நயமும் மிகுந்தவை.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாடலின் பின்னணி: இப்பாடலில், இடைக்காடனார், கிள்ளிவளவனின் வலிமையையும் அவன் செங்கோல் செலுத்திப், புலி தன் குட்டிகளைக் காப்பதுபோல் மக்களைக் காப்பதையும், கடலை நோக்கி ஆறுகள் செல்வது போல் கிள்ளிவளவனை நோக்கிப் புலவர்கள் வருவதையும் பாராட்டுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

ஆனா ஈகை அடுபோர் அண்ணல்நின்
யானையும் மலையின் தோன்றும்; பெருமநின்
தானையும் கடலென முழங்கும்; கூர்நுனை
வேலும் மின்னின் விளங்கும் ; உலகத்து
5 அரைசுதலை பனிக்கும் ஆற்றலை யாதலின்,
புரைதீர்ந் தன்றுஅது புதுவதோ அன்றே;
தண்புனற் பூசல் அல்லது நொந்து
களைக வாழி வளவ! என்றுநின்
முனைதரு பூசல் கனவினும் அறியாது
10 புலிபுறங் காக்கும் குருளை போல
மெலிவில் செங்கோல் நீபுறங் காப்பப்
பெருவிறல் யாணர்த் தாகி அரிநர்
கீழ்மடைக் கொண்ட வாளையும் உழவர்
படைமிளிர்ந் திட்ட யாமையும் அறைநர்
15 கரும்பிற் கொண்ட தேனும் பெருந்துறை
நீர்தரு மகளிர் குற்ற குவளையும்
வன்புலக் கேளிர்க்கு வருவிருந்து அயரும்
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந!
மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி
20 நிலவரை இழிதரும் பல்யாறு போலப்
புலவ ரெல்லாம் நின்நோக் கினரே;
நீயே, மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்
கூற்றுவெகுண் டன்ன முன்பொடு
மாற்றுஇரு வேந்தர் மண்நோக் கினையே.

அருஞ்சொற்பொருள்:
1. ஆனா = குறையாத; அண்ணல் = மன்னன், பெருமையிற் சிறந்தோன். 3. தானை = படை. 5. அரைசு = அரசன், அரசாட்சி; பனிக்கும் = நடுங்கச் செய்யும். 6. புரை = குற்றம், பழுது (குறை). 7. பூசல் = பெரிதொலித்தல். 9. முனை = போர்முனை. 10. குருளை = புலிக்குட்டி. 11. மெலிவு = தளர்ச்சி; புறங்காத்தல் = பாதுகாத்தல். 12. விறல் = சிறப்பு; யாணர் = புது வருவாய்; அரித்தல் = அறுத்தல். 13. மடை = வாய்க்கால்; வாகை = வாளை மீன். 15. அறைதல் = துண்டித்தல். 16. குற்ற = பறித்த; வன்புலம் = குறிஞ்சி, முல்லை; மென்புலம் = மருதம், நெய்தல். 17. அயர்தல் = செய்தல். 18. வைப்பு = இடம், ஊர். 22. கணிச்சி = கோடரி; வட்டித்தல் = சுழலுதல் (சுழற்றுதல்).

கொண்டு கூட்டு: பொருந, புலவரெல்லாம் நின் நோக்கினர்; நீ அரைசு தலை பனிக்கும் ஆற்றலை யாதலின், இருவேந்தர் மண்ணோக்கினை; அதனால் இச் செய்தி புரை தீர்ந்தது; நினக்குப் புதுவதன்று ஆகலின் எனக் கூட்டுக.

உரை: குறையாது கொடுக்கும் ஈகையும் வெல்லும் போரும் உடைய தலைவனே! உன் யானை, மலை போலத் தோன்றும். பெருமானே! உன் படைகளோ கடல் போல் முழங்கும். உன்னுடைய கூர்மையான நுனியையுடைய வேல் மின்னலைப் போல ஒளியுடன் விளங்கும். நீ உலகத்து அரசர்களெல்லாம் நடுங்கச் செய்யும் ஆற்றல் உடையவன். ஆதலால், உன் நாட்டில் குறையில்லாத ஆட்சி நிலவுகிறது. இது உனக்குப் புதியது அல்ல. குளிர்ந்த நீரோட்டத்தினால் எழும் ஒலியைத் தவிர, உன் வீரர்கள் வருந்தி, “ எம் துயரத்தைக் களைக, வளவனே” என்று போர்முனையில் ஒலி எழுப்புவதை, நீ கனவிலும் கேட்டதில்லை. புலி தன் குட்டிகளைப் பாதுகாப்பதைப் போல் செங்கோல் செலுத்தி நீ உன் நாட்டு மக்களைக் காப்பாற்றுகின்றாய். உன் நாடு மிகச்சிறந்த புதுவருவாயை உடையது. அங்கு, கடைமடையில் நெல் அறுப்போர் பிடித்த வாளைமீன், உழவர்களின் ஏர் முனையில் சிக்கிய ஆமை, கரும்பு அறுப்போர் கரும்பிலிருந்து எடுத்த இனிய கருப்பஞ் சாறு, பெரிய நீர்த்துறையிலிருந்து நீர் கொண்டுவரும் மகளிர் பறித்த குவளை மலர்கள் ஆகியவற்றை, மலை மற்றும் காடு போன்ற வலிய நிலங்களிலிருந்து வருபவர்களுக்கு விருந்தாக அளிக்கும் மருத வளம் மிகுந்த நல்ல நாட்டின் தலைவனே! மலைகளிலிருந்து வரும் ஆறுகளெல்லாம் பெரிய கடலை நோக்கிச் செல்வது போல புலவரெல்லாம் உன்னையே நோக்கி வருகின்றனர். நீ, ஒப்பற்ற கணிச்சி என்னும் ஆயுததைச் சுழற்றிச் சினந்து கொல்லும் கூற்றுவன் போன்ற வலிமையோடு மற்ற இரு வேந்தர்களின் நிலத்தை நோக்குகிறாய்.

சிறப்புக் குறிப்பு: இங்கு, மற்ற இரு வேந்தர்கள் என்பது சேர பாண்டிய மன்னர்களைக் குறிக்கும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

43. பிறப்பும் சிறப்பும்!

 
பாடியவர்: தாமற்பல் கண்ணனார் (43). இவர் காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ள தாமல் என்ற ஊரைச் சார்ந்தவர் என்று கருதப்படுகிறது. இப்பாடலிலிருந்து, இவர் பார்ப்பனர் என்று தெரிகிறது. புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றுதான்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான். சோழன் கரிகால் பெருவளத்தானுக்கு மணக்கிள்ளி, வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்று இரண்டு மகன்கள் இருந்தனர். கரிகாலன் இறந்த பிறகு, சோழநாட்டை இரண்டாகப் பிரித்து, மணக்கிள்ளி உறையூரைத் தலைநகரமாகவும், வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி பூம்புகாரைத் தலைநகரமாகவும் கொண்டு சோழநாட்டின் இருபகுதிகளையும் ஆண்டனர். மணக்கிள்ளிக்கு நெடுங்கிள்ளி என்று ஒரு மகனும் நற்சோனை என்று ஒரு மகளும் இருந்தனர். வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கு, கிள்ளி வளவன், நலங்கிள்ளி, மாவளத்தான் என்று மூன்று மகன்கள் இருந்தனர். நலங்கிள்ளி பூம்புகாரைத் தலைநகரமாகக்கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டான். அவனுக்கும், மணக்கிள்ளியின் மகன் நெடுங்கிள்ளிக்கும் பகை மூண்டது. ஒரு சமயம், நெடுங்கிள்ளி ஆவூர் என்ற ஊரில் தங்கியிருந்த பொழுது, நலங்கிள்ளியின் சார்பாக, அவன் தம்பி மாவளத்தான், நெடுங்கிள்ளி இருந்த ஆவூர் என்னும் ஊரை முற்றுகையிட்டதாக வரலாறு கூறுகிறது.
பாடலின் பின்னணி: ஒருசமயம், தாமற்பல் கண்ணனார் சோழன் மாவளத்தானோடு சூதாடினார். சூதாட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வட்டு ஒன்று தாமற்பல் கண்ணனாருக்குத் தெரியாமலேயே அவருக்கு அடியில் மறைந்திருந்தது. ஆனல், தாமற்பல் கண்ணனார் சூதாட்டத்தில் வட்டை மறைத்துவைத்துத் தன்னை ஏமாற்றியதாக எண்ணிய மாவளத்தான், சினமுற்று, அவ்வட்டை அவர் மீது எறிந்தான். அதனால், கோபமுற்ற தாமற்பல் கண்ணனார், மாவளத்தானைப் பார்த்து, “உன் செய்கையைப் பார்த்தால், நீ சோழ மன்னனுக்குப் பிறந்தவனாக எனக்குத் தோன்றவில்லை” என்று கூறினார். தான் செய்த குற்றத்தை உணர்ந்த மாவளத்தான் நாணினான். முடிவில், தாமற்பல் கண்ணனார் மாவளத்தானைப் புகழ்ந்து பாடிப் பரிசு பெற்றார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்
கால்உண வாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக்
5 கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீஇத்
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக!
நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்
10 தேர்வண் கிள்ளி தம்பி! வார்கோல்
கொடுமர மறவர் பெரும! கடுமான்
கைவண் தோன்றல்! ஐயம் உடையேன்:
ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர்: மற்றுஇது
15 நீர்த்தோ நினக்குஎன வெறுப்பக் கூறி
நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும்
நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே;
தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல்!
இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணும்எனக்
20 காண்டகு மொய்ம்ப! காட்டினை; ஆகலின்
யானே பிழைத்தனென்; சிறக்கநின் ஆயுள்;
மிக்குவரும் இன்னீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே!

அருஞ்சொற்பொருள்:
1. அலமரல் = வருந்தல், துன்பமுறல். 2. தெறு = சினம், அச்சம், துன்பம். கனலி = கதிரவன். 3. கால் = காற்று; கொட்குதல் = சுழலல். 4. அவிர் = ஓளி; சிறை = சிறகு. 5. உகிர் = நகம்; ஏறு = இடி; ஒரீஇ = நீக்கி (தப்பி). 7. தபுதி = அழிவு; சீரை = துலாத்தட்டு. 8. உரம் = வலி. 9. நேரார் = பகைவர்; முரண் = வலி. 10. வண் = மிகுதி; வார் = நேர்மை; கோல் = அம்பு. 11. கொடுமரம் = வில்; கடு = விரைவு; மான் = குதிரை. 12. கைவண் = வண்கை = கொடைக்கை; வண்மை = ஈகை; தோன்றல் = அரசன். 13. ஆர் = ஆத்தி; தெரியல் = மாலை. 15. நீர் = தன்மை; நீர்த்தோ = தன்மையான செயலோ (தகுமோ). 17. நனி = மிக. 19. எண்மை = எளிமை. 20. மொய்ம்பு = தோள்வலி. 23. எக்கர் = மணற்குன்று.

உரை: உலகில் வாழ்வோரின் துன்பங்கள் தீர, சுடும் கதிரவனின் வெப்பத்தைத் தாம் பொறுத்து, காற்றை உணவாகக் கொண்டு, கதிரவனின் சுடர்போல் சுழன்று திரியும், விளங்கிய சடையையுடைய முனிவர்கள் திகைக்குமாறு, வளைந்த சிறகினையும் கூரிய நகங்களையுமுடைய பருந்தின் தாக்குதலுக்குத் தப்பி தன்னிடத்தில் அடைக்கலம் புகுந்த, குறுகிய நடையையுடய புறாவின் அழிவுக்கு அஞ்சி, தராசில் புகுந்த, வரையாது வழங்கும் வள்ளலின் வழித்தோன்றலே! பகைவரை வென்ற, மிகுந்த செல்வத்தையுடைய, கிள்ளிவளவனின் தம்பியே! நீண்ட அம்பினையும் வளைந்த வில்லையுமுடைய மறவர்களுக்குத் தலைவ! விரைந்து செல்லும் குதிரைகளையும் வள்லல் தன்மையுமுடைய தலைவ! ”உன் குடிப்பிறப்பிலே எனக்கு ஐயம் எழுகிறது. ஆத்திமாலை சூடிய உன் முன்னோரெல்லாம் பார்ப்பனர்கள் நோவுமாறு எந்தச் செயலையும் செய்யமாட்டர்கள். நீ செய்த செயல் உன் தகுதிக்கு ஏற்றதோ?” என்று நீ வெறுக்குமாறு நான் கூறினேன். இருப்பினும், என் பிழையைக் கண்டு வெறுக்காமல், நீ தவறு செய்ததைப்போல் வெட்கப்பட்டாய். தமக்குத் தவறிழைத்தவர்களைப் பொறுத்தருளும் தலைவ! தவறிழைத்தவர்களைப் பொறுக்கும் தகுதி உன் குலத்தில் பிறந்தார்க்கு எளிது என்று எனக்குக் காட்டிய வலியவனே! உன் செயலால் நான் பிழைத்தேன். பெருகி வரும் இனிய நீரையுடைய காவிரிக்கரையில் உள்ள மணல்மேடுகளிலுள்ள மணல்களைவிட நீ அதிக நாட்கள் வாழ்வாயாக.

சிறப்புக் குறிப்பு: இப்பாடலில், மாவளத்தான் தவறுகளைப் பொறுத்தருளும் இயல்பினன் என்று அவனைப் புகழ்ந்து பாடப்பட்டிருப்பதால் இப்பாடல் அரச வாகை என்னும் துறையைச் சார்ந்ததாகியது.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

44. அறமும் மறமும்!

 
பாடியவர்: கோவூர் கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 31-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் நெடுங்கிள்ளி. சோழன் கரிகால் பெருவளத்தானுக்கு மணக்கிள்ளி, வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்று இரண்டு மகன்கள் இருந்தனர். கரிகாலன் இறந்த பிறகு, சோழநாட்டை இரண்டாகப் பிரித்து, மணக்கிள்ளி உறையூரைத் தலைநகரமாகவும், வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி பூம்புகாரைத் தலைநகரமாகவும் கொண்டு சோழநாட்டின் இருபகுதிகளையும் ஆண்டனர். மணக்கிள்ளிக்கு நெடுங்கிள்ளி என்று ஒரு மகனும் நற்சோனை என்று ஒரு மகளும் இருந்தனர். வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கு, கிள்ளி வளவன், நலங்கிள்ளி, மாவளத்தான் என்று மூன்று மகன்கள் இருந்தனர்.
நலங்கிள்ளி பூம்புகாரைத் தலைநகரமாகக்கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டான். அவனுக்கும், மணக்கிள்ளியின் மகன் நெடுங்கிள்ளிக்கும் பகை மூண்டது. ஒரு சமயம், நெடுங்கிள்ளி ஆவூர் என்ற ஊரில் தங்கியிருந்த பொழுது, நலங்கிள்ளியின் சார்பாக, அவன் தம்பி மாவளத்தான் ஆவூரை முற்றுகையிட்டு நெடுங்கிள்ளியை வருத்தினான். நெடுங்கிள்ளி, அங்கிருந்து தப்பி, உறையூருக்குச் சென்றான். பின்னர், நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிட்டுப் போரிட்டான். அப்போரில் நெடுங்கிள்ளி தோல்வியடைந்ததாக வரலாறு கூறுகிறது. மற்றும், சோழன் நெடுங்கிள்ளி, காரியாறு என்னும் இடத்தில் இறந்ததால், அவன் சோழன் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்றும் அழைக்கப்பட்டான்

பாடலின் பின்னணி: நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிட்ட பொழுது, நெடுங்கிள்ளி போருக்கு வராமல், தன் அரண்மனைக்குள் அடைபட்டுக் கிடந்தான். அச்சமயம், கோவூர் கிழார், நெடுங்கிள்ளியிடம் சென்று, “நீ அறவழியில் வாழ விரும்பினால் நலங்கிள்ளிக்கு உன் நாட்டைக் கொடு; மறவழியில் வாழ விரும்பினால் நலங்கிள்ளியுடன் போர் செய். இரண்டு செயல்களில் எதையும் செய்யாமல், அரண்மனைக்குள் ஒளிந்துகொண்டிருப்பது வெட்கத்திற்குரியது” என்று இப்பாடலில் அறிவுரை கூறுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

இரும்பிடித் தொழுதியடு பெருங்கயம் படியா
நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ
திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி
நிலமிசைப் புரளும் கைய வெய்துயிர்த்து
5 அலமரல் யானை உருமென முழங்கவும்
பாலில் குழவி அலறவும் மகளிர்
பூவில் வறுந்தலை முடிப்பவும் நீரில்
வினைபுனை நல்லில் இனைகூஉக் கேட்பவும்
இன்னாது அம்ம ஈங்குஇனிது இருத்தல்;
10 துன்னரும் துப்பின் வயமான் தோன்றல்!
அறவை ஆயின் நினதுஎனத் திறத்தல்
மறவை ஆயின் போரொடு திறத்தல்
அறவையும் மறவையும் அல்லை ஆகத்
திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின்
15 நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல்
நாணுத்தக உடைத்திது காணுங் காலே.

அருஞ்சொற்பொருள்:
1. இரு = கரிய; பிடி = பெண் யானை; தொழுதி = கூட்டம்; கயம் = குளம். 2. மிதி = மிதித்துத் திரட்டப்பட்ட கவளம். 3. திருந்திய = செவ்விய, திருந்துதல் = ஒழுங்காதல்; அரை = மரத்தின் அடிப்பாகம். நோன் = வலி; வெளில் = யானை கட்டும் கம்பம்; ஒற்றி = தள்ளி. 4. வெய்து = வெம்மையுடையது; உயிர்த்தல் = பெருமூச்சு விடுதல். 5. அலமரல் = கலங்குதல்; உரும் = இடி. 8. இனை = வருத்தம். 9. ஈங்கு = இவ்விடம். 10. துன்னுதல் = நெருங்குதல்; துப்பு = வலி; வயம் = வலிமை; மான் = குதிரை; தோன்றல் = அரசன். 11. அறவை = அற வழியில் நடப்பவன். 12. மறவை = வீர வழியில் நடப்பவன். 14. திண் = வலி. 15. சிறை = பக்கம்

உரை: ஆண் யானைகள் பெண்யானைகளின் கூட்டத்தோடு சேர்ந்து குளங்களில் படியாமல் உள்ளன; நெய்யோடு சேர்த்து, மிதித்துத் திரட்டப்பட்ட உணவுக் கவளங்களை உண்ணாமல், செவ்விய பக்கங்களையும் வலிமையுமுடைய கம்பங்களைச் சாய்த்து, நிலத்தில் புரளும் தும்பிக்கைகளுடன் வெப்பமுடைய பெருமூச்சு விட்டுக் கலங்கி இடி இடிப்பதுபோல் பிளிறுகின்றன. குழந்தைகள் பாலில்லாமல் அலறுகின்றனர். மகளிர் பூவில்லாத வெறுந்தலையை முடிந்துகொள்கிறார்கள். நல்ல வேலைப்படுகளுடன் கூடிய வீடுகளில் வாழும் மக்கள் நீரின்றி வருந்தும் ஒலி கேட்கிறது. இனியும் நீ இங்கே இருப்பது கொடிய செயல். பகைவர்கள் நெருங்குதற்கரிய வலிமையுடைய குதிரைகளையுடைய அரசே! நீ அறவழியில் நடக்க விரும்பினால், உன் கோட்டையின் கதவுகளைத் திறந்து, இந்த நாடு உன்னுடையது என்று நலங்கிள்ளிக்கு அளித்ப் போரைத் தவிர்ப்பாயாக; வீர வழியில் நடப்பவனாக இருந்தால் கோட்டையின் கதவுகளைத் திறந்து நலங்கிள்ளியுடன் போருக்குப் போவாயாக.” அறவழியிலும் வீரவழியிலும் செயல் படாமல், திறவாமல் அடைக்கப்பட்ட நீண்ட வலிய கதவுகளையுடைய மதில்களின் ஒருபக்கத்தில் நீ ஒளிந்திருப்பது வெட்கத்திற்குரிய செயல்.

சிறப்புக் குறிப்பு: சங்க காலத்தில், மன்னர்கள் தவறு செய்தால், அவர்களைத் தட்டிக் கேட்டு, இடித்துரைத்து நல்வழிப்படுத்தும் அறிவும், ஆற்றலும் உடைய புலவர்கள் இருந்தார்கள் என்பதற்கும், அரசர்கள் புலவர்களுக்கு அந்த உரிமையை


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

45. தோற்பது நும் குடியே!

 
பாடியவர்: கோவூர் கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 31-இல் காண்க.
பாடப்பட்டோர்: சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும். சோழன் நலங்கிள்ளியைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-லிலும், சோழன் நெடுங்கிள்ளியைப் பற்றிய செய்திகளைப் பாடல் 44-லிலும் காண்க.
பாடலின் பின்னணி: தங்களுக்குள் இருந்த பகை காரணமாக சோழன் நலங்கிள்ளிக்கும் சோழன் நெடுங்கிள்ளிக்கும் இடையே போர் மூண்டது. சோழ குலத்தில் தோன்றிய இருவரும் ஒருவரோடு ஒருவர் போரிடுவது ஏளனத்துக்குரியது என்று அவர்களுக்கு எடுத்துரைத்து, அவர்களைச் சமாதானப் படுத்துவதற்குக் கோவூர் கிழார் மேற்கொண்ட முயற்சி இப்பாடலிலிருந்து தெரிகிறது.

திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: துணை வஞ்சி. பிறரை வெற்றி கொள்ள நிற்பவனுக்குச் சந்து செய்வித்தல்.

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்;
நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;
5 ஒருவீர் தோற்பினும் தோற்பதும் குடியே;
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,
குடிப்பொருள் அன்றுநும் செய்தி; கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும்இவ் இகலே!

அருஞ்சொற்பொருள்:
1. இரு = பெரிய; வெண் = வெண்மை; தோடு = இலை, ஓலை, பூவிதழ்; மலைதல் = அணிதல், சூடுதல். 2. சினை = மரக்கொம்பு; தெரியல் = மாலை. 3. கண்ணி = மாலை; ஆர் = ஆத்தி; மிடைதல் = நிறைதல், செறிதல். 6. வேறல் = வெல்லுதல். 7. பொருள் = தன்மை (தகுதி); செய்தி = செய்கை. 9. மலி = நிறைதல், மிகுதல்; உவகை = மகிழ்ச்சி, களிப்பு; இகல் = பகை

உரை: இங்கு போர் புரிபவர்களில் யாரும் கரிய பனையின் வெண்ணிறப் பூமாலை அணிந்தவன் அல்லன்; கரிய வேம்பின் மாலையை அணிந்தவனும் அல்லன். உன்னுடைய மாலை ஆத்திப் பூக்களால் தொடுக்கப்பட்டது. உன்னோடு போர் புரிபவனின் மாலையும் ஆத்திப் பூவால் தொடுக்கப்பட்டதுதான். உங்கள் இருவரில் ஒருவர் தோற்றாலும் தோற்பது சோழனின் குடிதான். இப்போரில் நீங்கள் இருவரும் வெற்றி பெறுவது இயற்கையும் அல்ல. ஆதலால், உங்கள் செயல் உங்கள் குடிப்பெருமைக்குத் தகுந்ததன்று. தேர்களில் கொடியோடுகூடிய உம்போன்ற வேந்தர்கள், இந்தப் போரைப்பார்த்துத் தங்கள் உடலெல்லாம் மிகவும் பூரிக்கும் வகையில் ஏளனமாகச் சிர்ப்பார்கள்.

சிறப்புக் குறிப்பு: பனந்தோட்டாலாகிய மாலை சேரர்களுக்குரியது; வேப்பம்பூ
மாலை பாண்டியனுக்குரியது. இங்கு, போர்புரிபவர்கள் இருவருமே சோழர்கள் என்பதைக் குறிப்பிடுவதற்காக, கோவூர் கிழார், பனந்தோட்டு மலை அணிந்தவனோ வேப்பம்பூ மாலை அணிந்தவனோ இங்கு போர் புரியவைல்லை என்று கூறுகிறார்.

இப்பாடலும், முந்திய பாடலைப்போல், கோவூர் கிழார், அரசர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு அறிவுரை வழங்கும் ஆற்றல் உடையவராக இருந்தார் என்பதையும் அரசர்களிடத்து அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது என்பதையும் உறுதிப்படுத்துகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

46. அருளும் பகையும்!

 
பாடியவர்: கோவூர் கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 31-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாடலின் பின்னணி: கிள்ளிவளவன், தன் பகைவனாகிய மலையமான் என்பவனின் மக்களை யானையின் காலின் கீழே இட்டுக் கொலை செய்ய முயன்றான். அதைக் கண்ட கோவூர் கிழார், சிறுவர்கள் கொலை செய்யப்படுவதைத் தடுக்க விரும்பி இப்பாடலை இயற்றினார். “நீ, ஒருபுறாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தன்னையே அளித்த சிபியின் வழித்தோன்றல். இவர்கள் புலவர்களுக்குப் பெருமளவில் ஆதரவளித்த மலையமானின் சிறுவர்கள்; இவர்களைத் துன்புறுத்தாமல் விட்டுவிடு. நான் கூற விரும்பியதைக் கூறினேன். நீ உன் விருபபப்ப்டி செய்.” என்று கிள்ளிவளவனிடம் கோவூர் கிழார் முறையிடுகிறார்.

திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: துணை வஞ்சி. பிறரை வெற்றி கொள்ள நிற்பவனுக்குச் சந்து செய்வித்தல்.

நீயோ, புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை;
இவரே, புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித்
தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்
5 களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த
புன்தலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி
விருந்திற் புன்கண்நோ வுடையர்
கேட்டனை யாயின்நீ வேட்டது செய்ம்மே.

அருஞ்சொற்பொருள்:
1. அல்லல் = துன்பம். 2. இடுக்கண் = துன்பம்; மருகன் = வழித்தோன்றல். 3. புலன் = அறிவு; புன்கண் = துன்பம். 5. அழூஉம் அழாஅல் = அழுகின்ற அழுகை. மன்று = மன்றம்; மருளல் = வெருளுதல், அஞ்சுதல். 6. புன்தலைச் சிறாஅர் = சிறிய தலையையுடைய சிறுவர்கள். 7. விருந்து = புதிது. 8. வேட்டது = விரும்பியது; செய்ம்மே = செய்வாயாக.

கொண்டு கூட்டு: அழும் அழால் களிறு கண்டு மறந்த எனக் கூட்டுக.

உரை: நீயோ, ஒருபுறா அடைந்த துன்பம் மட்டுமல்லாமல் மற்ற உயிரினங்களின் துன்பத்தையும் களைந்த சிபியின் வழித்தோன்றல். இவர்களோ, அறிஞர்களின் வறுமைக்கு அஞ்சித், தம்மிடத்து உள்ளவற்றைப் பகிர்ந்து உண்ணும் இரக்க குணமுள்ளவர்களின் மரபினர். இவர்கள், முன்பு யானைகளைக் கண்டு அஞ்சி அழுதனர்; இப்பொழுது இந்தச் சிறுவர்கள் இந்த மன்றத்தைப் பார்த்த வியப்பால் தங்கள் அழுகையை மறந்தனர். ஆனால், முன்பு அறியாத புதிய துன்பத்தை அவர்கள் இப்பொழுது அடைந்திருக்கிறார்கள். நான் கூறியதைக் கேட்ட பிறகு, நீ உன் விருப்பப்படி செய்க.

சிறப்புக் குறிப்பு: மலையமானின் சிறுவர்களைக் கொலை செய்யவிருக்கும் கிள்ளிவளவனிடம், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கூறி கோவூர் கிழார் அவனைச் சமாதானப் படுத்துவதால், இப்பாடல் துணை வஞ்சி என்னும் துறையைச் சார்ந்ததாயிற்று.

“புலன் உழுது உண்மார்” என்பது அறிவையே தம் தொழிலாகக் கொண்டவர்கள் என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது.

”புல்” என்னும் சொல்லுக்குச், ”சிறுமை”, ”அற்பம்” என்று பொருள். இங்கு, “புன்தலைச் சிறாஅர்” என்பது அவர்கள் மிகவும் சிறியவர்கள் என்பதை வலியுறுத்துவதற்காகக் கூறப்பட்டுள்ளது.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

47. புலவரைக் காத்த புலவர்!

 
பாடியவர்: கோவூர் கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 31-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் நெடுங்கிள்ளி. இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 44-இல் காண்க.
பாடலின் பின்னணி: சோழன் நலங்கிள்ளியிடமிருந்து இளந்தத்தன் என்னும் புலவன் உரையூருக்குச் சென்றான். உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த நெடுங்கிள்ளி, இளந்தத்தன் ஒருவொற்றன் என்று கருதி அவனைக் கொலை செய்ய முயன்றான். அதைக் கண்ட கோவூர் கிழார், இளந்ததத்தன் ஒற்றன் அல்லன் என்று நெடுங்கிள்ளிக்கு எடுத்துக் கூறி இளந்தத்தனைக் காப்பற்றினார். இப்பாடல் அச்சமயம் இயற்றப்பட்டது.

திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: துணை வஞ்சி. பிறரை வெற்றி கொள்ள நிற்பவனுக்குச் சந்து செய்வித்தல்.

வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி
நெடிய என்னாது சுரம்பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்
பெற்றது மகிழ்ந்தும் சுற்றம் அருத்தி
5 ஓம்பாது உண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந் தன்றோ? இன்றே, திறப்பட
நண்ணார் நாண அண்ணாந்து ஏகி
ஆங்குஇனிது ஒழுகின் அல்லது ஓங்குபுகழ்
10 மண்ணாள் செல்வம் எய்திய
நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே.

அருஞ்சொற்பொருள்:
1. வள்ளியோர் = வரையாது கொடுப்போர்; படர்தல் = நினைத்தல். புள் = பறவை. 2. சுரம் = பாலைவழி. 3. வடியா = தெளிவில்லாத; வடித்தல் = தெளித்தெடுத்தல். 4. அருத்தல் = உண்பித்தல். 5. ஓம்புதல் = பாதுகாத்தல்; கூம்பல் = ஊக்கங்குறைதல். வீசுதல் = வரையாது கொடுத்தல். 6. வரிசை = சிறப்பு, மரியாதை, பாராட்டு; பரிசில் = கொடை, ஈகை. 7. திறம் = திறமை (அறிவு); திறப்படல் = கூறுபடல், தேறுதல், சீர்ப்படுதல்; நண்ணார் = பகைவர் (மாறுபட்ட கருத்துடைய மற்ற புலவர்கள்). 11. செம்மல் = தருக்கு (பெருமிதம்).

கொண்டு கூட்டு: பரிசில் வாழ்க்கை நும்மோர் அன்ன செம்மலும் உடைத்து; ஆதலால், நண்ணார் நாண இனிது ஒழுகின் அல்லது பிறர்க்குத் தீது அறிந்தன்றோ இன்று எனக் கூட்டுக.

உரை: வரையாது கொடுக்கும் வள்ளல்களை நினைத்து, நெடிய வழி என்று எண்ணாமல், பாலைவழிகள் பலவற்றைக் கடந்து, பறவைகள் போல் சென்று, தமது தெளிவில்லாத நாவால் தம்மால் இயன்றதைப் பாடிப் பெற்ற பரிசிலைக் கண்டு மகிழ்ந்து, பிற்காலத்துக்கு வேண்டும் என்று எண்ணி, அவற்றைப் பாதுகவாமல் உண்டு, பிறர்க்கும் குறையாது கொடுத்துத் தம்மை ஆதரிப்பவர்கள் தமக்குச் செய்யும் சிறப்புக்காக வருந்துவதுதான் பரிசிலர் வாழ்க்கை. இத்தகைய வாழ்க்கை வாழ்பவர்கள் பிறர்க்குத் தீமை செய்வதை அறிவார்களோ? அவர்கள் பிறர்க்குத் தீமை செய்யமாட்டர்கள். புலவர்கள், கல்வி கேள்விகளால் தம்மோடு மாறுபட்டவர்களைத் தம் புலமையால் நாணுமாறு செய்து அவர்களை வெற்றிகொண்டு தலை நிமிர்ந்து நடப்பவர்கள். அது மட்டுமல்லாமல், அவர்கள் உயர்ந்த புகழும் உலகாளும் செல்வமும் பெற்ற உன்னைப் போன்றவர்களைப்போல் பெருமிதம் உடையவர்கள்.

சிறப்புக் குறிப்பு: கோவூர் கிழார் இளந்தத்தனைக் காப்பாற்றுவதற்காக நெடுங்கிள்ளியைச் சமாதானப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால், இப்பாடல் துணை வஞ்சித்துறையைச் சார்ந்ததாயிற்று.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

48. எம்மும் உள்ளுமோ; முதுவாய் இரவல !

 
பாடியவர்: பொய்கையார் (48, 49). இவர் இப்பாடலில், “கள்நாறும்மே கானலம் தொண்டி; அஃது எம் ஊரே” என்று கூறியிருப்பதிலிருந்து இவருடைய ஊர் தொண்டி என்பது தெரிய வருகிறது. புறநானூற்றில் இவர் பாடிய இரண்டு பாடல்களும் சேரமான் கோக்கோதை மார்பனைப் புகழ்ந்து பாடப்பட்டவையாகும். இவர் நற்றிணையில் 18 - ஆம் செய்யுளையும் இயற்றியுள்ளார்.
பாடப்பட்டோன்: சேரமான் கோக்கோதை மார்பன் (48, 49). இவன் சேர வேந்தருள் ஒருவன். கோதை மார்பன் என்பது இவன் இயற்பெயர் என்றும், இவன் தொண்டி என்னும் ஊரைத் தலைநகரமாகக் கொண்டு தன் நாட்டை ஆட்சி செய்தான் என்றும் அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார். இவன் நாடு குறிஞ்சி, மருதம் மற்றும் நெய்தல் ஆகிய நிலப்பகுதிகளைக் கொண்டிருந்ததாகப் புலவர் பொய்கையார், புறநானூற்றுப் பாடல் 49-இல் கூறுகிறார்.

கோக்கோதை மார்பன் என்ற சேரமன்னன் சேரன் செங்குட்டுவனின் மகன் என்றும் இவன் குட்டுவன் கோதை, கோதை மார்பன், மாக்கோதை மார்பன், கடுமான் கோதை, செங்கோல் குட்டுவன், கடும்பகட்டியானை நெடுந்தேர்க் குட்டுவன், வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன் முதலிய பெயர்களாலும் அழைக்கப் பட்டதாகவும் பேராசிரியர் முனைவர் கோ. தங்கவேலு தம் நூலில் குறிப்பிடுகிறார். சேரன் செங்குட்டுவனுக்குக் குட்டுவன் சேரல் என்று ஒருமகன் இருந்ததாகவும், அவனைப் புலவர் பரணர் என்பவருக்கு சேரன் செங்குட்டுவன் பரிசாக அளித்ததாகவும் பதிற்றுப்பத்தில் ஐந்தாம்பத்தின் பதிகத்தில் காண்கிறோம். சேரன் கோக்கோதை மார்பன் என்பவனும், சேரன் செங்குட்டுவனின் மகனாகிய குட்டுவன் சேரல் என்பவனும் ஒருவனா என்பது ஆய்வுக்குரியது.
பாடலின் பின்னணி: சேரன் கோக்கோதை மார்பனைப் பாடிப் பரிசுபெற்ற புலவர் பொய்கையார், வேறொரு புலவரைச் சேரனிடம் ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: புலவர் ஆற்றுப்படை. புலவன் ஒருவன் இரவலனாக வந்த மற்றொரு புலவனை நோக்கித் தலைவனுடைய இயல்பையும் ஊரையும் தன் தலைமை தோன்றக் கூறி அவ்விரவலனை அத்தலைவனிடத்தே செலுத்துதல்.

கோதை மார்பிற் கோதை யானும்
கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்
மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
கள்நா றும்மே கானல்அம் தொண்டி;
5 அஃதுஎம் ஊரே; அவன்எம் இறைவன்;
அன்னோர் படர்தி ஆயின் நீயும்
எம்மும் உள்ளுமோ; முதுவாய் இரவல!
அமர்மேம் படூஉங் காலை நின்
புகழ்மேம் படுநனைக் கண்டனம் எனவே.

அருஞ்சொற்பொருள்:
1.கோதை = சேரன், பூமாலை. 3. மா = கரிய; கழி = உப்பங்கழி, கானல் (கடற்கரைச் சோலை). 4. கள் = மலர்த்தேன்; கானல் = கடற்கரைச் சோலை. 6. படர்தல் = செல்லுதல். 7. முதுவாய் = முதிய வாய்மையுடைய. 8. அமர் = போர்; மேம்படுதல் = உயர்தல். 9. மேம்படுநனை = மேம்படுத்துபவனை.

கொண்டு கூட்டு: இரவல, நீயும் அன்னோர் படர்குவை ஆயின், நின் புகழ் மேம்படுநனைக் கண்டனம் எனக் கூட்டுக.

உரை: சேரன் கோக்கோதை மார்பில் அணிந்த மாலையாலும், அந்தக் கோதையைக் கூடிய மகளிர் அணிந்த மாலைகளாலும், கரிய நிறமுடைய உப்பங்கழிகளில் மலர்ந்த நெய்தல் மலர்களாலும் தேன்மணம் கமழும் கடற்கரைச் சோலைகளை உடையது தொண்டி நகரம். அது என்னுடைய ஊர். அவ்வூரில் உள்ள சேரன் கோக்கோதை மார்பன் என் அரசன். முதிய வாய்மையுடைய இரவலனே! அத்தன்மையுடை ய தொண்டி நகரத்திற்கு நீ சென்றால், என்னை நினைவில் கொள்வாயா? ”நீ போரில் வெற்றி அடையும்பொழுது உன் புகழைப் பாராட்டிப் பாடுபவனைக் கண்டேன்” என்று சேரன் கோக்கோதை மார்பனிடம் கூறுவாயாக.

சிறப்புக் குறிப்பு: தலவனின் இயல்பையும் ஊரையும் கூறி, “ முதுவாய் இரவல எம்முள் உள்ளும்” என்று தன் தலைமை தோன்றுமாறு கூறியதால், இப்பாடல் புலவர் ஆற்றுப்படை என்னும் துறையைச் சார்ந்ததாயிற்று.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

49. யாங்கனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை?

 
பாடியவர்: பொய்கையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 48-இல் காண்க.
பாடப்பட்டோன்: சேரமான் கோக்கோதை மார்பன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 48-இல் காண்க.
பாடலின் பின்னணி: சேரன் கோக்கோதை மார்பனின் நாடு குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நிலவளங்களெல்லாம் அடங்கியது. ஆகவே, அவன் நாடு எத்தகையது என்று எளிதில் கூற முடியாது என்ற கருத்தில் கோதையின் நாட்டைப் புலவர் பொய்கையார் இப்பாடலில் புகழ்ந்து பாடியுள்ளார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: புலவர் ஆற்றுப்படை. இயன்மொழியும் ஆகும்.
புலவர் ஆற்றுப்படை: புலவன் ஒருவன் இரவலனாக வந்த மற்றொரு புலவனை நோக்கித் தலைவனுடைய இயல்பையும் ஊரையும் தன் தலைமை தோன்றக் கூறி அவ்விரவலனை அத்தலைவனிடத்தே செலுத்துதல்.
இயன்மொழி: இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

நாடன் என்கோ? ஊரன் என்கோ?
பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ?
யாங்கனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை?
புனவர் தட்டை புடைப்பின் அயலது
5 இறங்குகதிர் அலமரு கழனியும்
பிறங்குநீர்ச் சேர்ப்பினும் புள்ஒருங்கு எழுமே!

அருஞ்சொற்பொருள்:
1. நாடு = குறிஞ்சி நிலப்பகுதி; நாடன் = குறிஞ்சி நிலத் தலைவன்; ஊர் = மருத நிலப்பகுதி. ஊரன் = மருதநிலத் தலைவன். 2. பாடு = ஓசை; இமிழ் = ஆரவாரம்; சேர்ப்பன் = நெய்தல் நிலத் தலைவன். 3.ஓங்கு = மேம்பட்ட; ஓங்குதல் = பெருமையுறல்; கோதை = சேரன். 4. புனவர் = குறிஞ்சி நில மக்கள். தட்டை = கிளி ஓட்டுங்கருவி. 5. இறங்கு கதிர் = வளைந்த கதிர்; அலமருதல் = சுழல். 6. பிறங்குதல் = ஒலித்தல், மிகுதி; சேர்ப்பு = கடற்கரை.

கொண்டு கூட்டு: புனவர் தட்டை புடைப்பின் கழனியிலும் சேர்ப்பினும் புள்ளெழும்; ஆதலால், கோதையை யாங்கன் மொழிகோ எனக் கூட்டுக.

உரை: தினைப்புனங்காப்போர் தட்டை என்னும் பறையை அடித்துத் ஒலி எழுப்பினால், அப்புனத்திற்கு அருகே, வளைந்த கதிர்களையுடைய வயல்களிலிலும், நீர் மிகுந்த கடற்கரையிலும் உள்ள பறவைகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து எழுகின்றனவே. சேரன் கோக்கோதை மார்பனின் நாடு குறிஞ்சி நிலமுடையதால் அவனை நாடன் (குறிஞ்சி நிலத் தலைவன்) என்பேனா? அவன் நாடு மருத நிலமுடையதால் அவனை ஊரன் (மருத நிலத் தலைவன்) என்பேனா? அவன் நாடு ஒலிமிகுந்த குளிர்ந்த கடலை உடையதால் அவனைச் சேர்ப்பன் (நெய்தல் நிலத் தலைவன்) என்பேனா? உயர்ந்த வாளையுடைய கோதையை எப்படிக் கூறுவேன்?

சிறப்புக் குறிப்பு: தினைப்புனங்கள் குறிஞ்சி நிலத்திலும், வயல்கள் மருத நிலத்திலும், கடல் சார்ந்த நிலம் நெய்தலிலும் உள்ளவை ஆகையால் கோக்கோதையின் நாடு குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய மூன்று நிலவளங்களும் உடையது என்று புலவர் பொய்கையார் கூறுவது இப்பாடலிலிருந்து தெரிகிறது. புனவர் தட்டை புடைத்தல் குறிஞ்சி நிலத்திலும் முல்லை நிலத்திலும் நிகழ்வதாகையால், நாடன் என்பது குறிஞ்சி மற்றும் முல்லை நிலத் தலைவனையும் குறிப்பதாகக் கொள்ளலாம் என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார். ஆகவே, கோக்கோதையின் நாடு குறிஞ்சி, முல்லை, மருதம் மற்ரும் நெய்தல் ஆகிய நானில வளமும் உடையது என்ற கருத்தில் புலவர் பொய்கையார் இப்பாடலில் குறிப்பிட்டிருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

இப்பாடலில் புலவர் ஒருவர் மற்றொரு புலவரை ஆற்றுப்படுத்துவதாக வெளிப்படையாகத் தெரியவில்லை. கோக்கோதையின் இயல்பைப் புகழ்ந்ததால், இப்பாடல் இயன்மொழித் துறையைச் சார்ந்ததாகக் கருதுவது பொருத்தமானதாகத் தோன்றுகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

50. கவரி வீசிய காவலன்!

 
பாடியவர்: மோசிகீரனார் (50, 154, 155, 156, 186). இவர் மோசி என்பவரின் மகன் என்று சிலர் கருதுகின்றனர். வேறு சிலர், இவர் மோசுக்குடி அல்லது மோசிக்குடி என்ற ஊரைச் சார்ந்தவராக இருந்ததாலும் கீரர் குடியினராக இருந்ததாலும் மோசிகீரனார் என்று அழைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். இவர் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையையும் கொண்கான நாட்டுத் தலைவனையும் பாடியுள்ளார். “நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்ற கருத்துச் செறிவுள்ள பாடல் (புறநானூறு - 186) இவர் இயற்றிய பாடல்களில் ஒன்று.

இவர் புறநானூற்றில் நான்கு செய்யுட்களும், அகநானூற்றில் ஒரு செய்யுளும் ( 392), குறுந்தொகையில் இரண்டு செய்யுட்களும் (59, 84), நற்றிணையில் ஒரு செய்யுளும் ( 342) இயற்றியவர்.
பாடப்பட்டோன்: சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை. தகடூரைஅழித்து, அவ்வூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த அதியமானை வென்றதால் இச்சேரமன்னன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்று அழைக்கப்பட்டான். இவன் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்ற சேரமன்னனுக்கும் அவன் மனைவி பதுமன் தேவிக்கும் மகனாகப் பிறந்தவன். பதிற்றுப்பத்தில் 8-ஆம் பத்தில் அரிசில் கிழார் இவனைப் பாடியுள்ளார். பதிற்றுப்பத்தில் தன்னைப் புகழ்ந்து பாடியதற்குப் பரிசாக ஒன்பது நூறாயிரம் பொற்காசுகளையும், தன் அரண்மனையையும், நாட்டையும் அரிசில் கிழாருக்குப் பெருஞ்சேரல் இரும்பொறை பரிசாக அளித்தான். ஆனால், அரிசில் கிழார் இவன் நாட்டை ஆள்வதை விரும்பாமல், இவனிடத்தே அமைச்சராகப் பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது. இச்சேரன், சோழனையும் பாண்டியனையும் போரில் வென்றதாகவும் கூறப்படுகிறது.

பாடலின் பின்னணி: ஒருகால், மோசி கீரனார் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைக் காணச் சென்றபோது களைப்பு மிகுதியால் அங்கிருந்த முரசுக் கட்டிலில் படுத்து உறங்கினார். அக்காலத்தில், முரசுக் கட்டில் புனிதமானதாகக் கருதப்பட்டது. அந்தக் கட்டிலில் யாராவது படுத்தால் அவர்களுக்குக் கடுந்தண்டனை வழங்குவது வழக்கம். அவர்கள் கொலையும் செய்யப்படலாம். ஆனால், புலவர் மோசி கீரனார் முரசுக் கட்டிலில் உறங்குவதைக் கண்ட சேர மன்னன், அவரை உறக்கத்திலிருந்து எழுப்பாமல் அவருக்குக் கவரி வீசினான். மன்னனின் செயலால் மிகவும் வியப்படைந்த புலவர் மோசி கீரனார் அவனைப் பாராட்டும் வகையில் இப்பாடலை இயற்றியுள்ளார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

மாசற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்
பொலங்குழை உழிஞையடு பொலியச் சூட்டிக்
5 குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர
இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
10 அதூஉம் சாலும்நற் றமிழ்முழுது அறிதல்
அதனொடும் அமையாது அணுக வந்துநின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சித் தண்ணென
வீசி யோயே; வியலிடம் கமழ
இவண்இசை உடையோர்க்கு அல்லது அவணது
15 உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம்படு குருசில்நீ ஈங்குஇது செயலே.

அருஞ்சொற்பொருள்:
1. மாசு = குறை; விசித்தல் = இறுகக் கட்டுதல்; வார்பு = வார்; வள்பு = தோல். 2. மை = வயிரம்; மருங்குல் = நடுவிடம், பக்கம்; மஞ்ஞை = மயில். 3. ஒலித்தல் = தழைத்தல் (மிகுதல்). பீலி = மயில் தோகை; மணி = நீலமணி; தார் = மாலை. 4. பொலம் = பொன்; உழை = பூவிதழ்; உழிஞை = பொன்னிறமான ஒருவகைப் பூ. 5. வேட்கை = விருப்பம்; உரு = அச்சம். 6. மண்ணுதல் = கழுவுதல்; அளவை = அளவு. 7. சேக்கை = படுக்கை (தங்குமிடம்). 8. தெறு = சினம். 9. வாய் = வழி, மூலம். 10. சாலும் = சான்று. 12. மதன் = வலிமை; முழவு = முரசம்; ஓச்சுதல் = ஓட்டுதல்; 13. வியல் இடம் = அகன்ற இடம்; கமழ = பரக்க. 16. மாறு = இயல்பு, தன்மை. 17. வலம் = வெற்றி; குருசில் = குரிசில் = அரசன்.

கொண்டு கூட்டு: குருசில், நீ இது செய்தல், இசையுடையோர்க்கு அல்லது உறையுள் இன்மை விளங்கக் கேட்ட மாறுகொல் எனக் கூட்டுக.

உரை: குற்றமில்லாமல் வாரால் இறுக்கிக் கட்டப்பட்டு, வயிரங் கொண்ட கரிய மரத்தால் செய்யப்பட்டு, நடுவிடம் அழகாக விளங்குமாறு நெடிய மயில் இறகுகளால் அலங்கரிக்கப்பட்டு, நீலமணிகளும் பொன்னிறமான உழிஞைப் பூக்களும் அணிந்து, குருதிப்பலியை விரும்பும் அச்சம் தரும் முரசு, நீராட்டுவதற்காகக் கொண்டு செல்லப்பட்டிருந்தது. அவ்வேளையில், எண்ணெய் நுரையை முகந்து வைத்ததுபோல் இருந்த மெல்லிய மலர்க் கட்டிலை முரசுக்கட்டில் என்று அறியாது நான் ஏறிப் படுத்தேன். என் செயலுக்காக என்னைச் சினந்து, இரு கூறாக வெட்டக்கூடிய உன் கூரிய வாளால் வெட்டாமல் விடுத்தாய். நீ தமிழை நன்கு அறிந்தவன் என்பதற்கு அதுவே சான்று. அத்தோடு அமையாமல், என்னை அணுகி, உன்னுடைய வலிய, முரசு போன்ற தோளை வீசிச் சாமரத்தால் குளிர்ச்சி தரும் வகையில் விசிறியவனே! வெற்றி பொருந்திய தலைவ! பரந்த இவ்வுலகத்தில் புகழோடு வாழ்ந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு விண்ணுலகத்தில் வீடு பேறு இல்லை என்பதை நன்கு கேள்விப்பட்டிருந்ததால்தான் நீ இவ்விடத்து இச்செயலைச் செய்தாய் போலும்.

சிறப்புக் குறிப்பு: சங்க காலத்தில், அரசர்கள் புலவர்களைப் பாராட்டி அவர்களுக்குப் பொன்னும் பொருளும் பரிசாக அளித்தது மட்டுமல்லாமல் அவர்களைப் பெரிதும் மதிப்பிற்குரியவராகக் கருதினர் என்பதற்கு இப்பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard