பாடியவர்: கோவூர் கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 31-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாடலின் பின்னணி: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோபமூட்டியவர்கள், அவர்களின் நாடுகளில் நடைபெறும் தீய நிமித்தங்களையும், அவர்களின் கனவில் காணும் தீய நிகழ்ச்சிகளையும் நினைத்து அஞ்சுகின்றார்கள். அவர்கள் தம் அச்சத்தை தம் மகளிர்க்குத் தெரியாதவாறு மறைத்துக் கலங்குகின்றனர். சோழனின் பகைவர்களின் நிலையையும் சோழனின் வலிமையும், கொற்ற வள்ளைத் துறையில் அமைந்துள்ள இப்பாடலில் கோவூர் கிழார் குறிப்பிடுகிறார்.
திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: கொற்ற வள்ளை. அரசனுடைய வெற்றியைக் கூறி பகைவரின் நாட்டின் அழிவை உரைத்தல்.
காலனும் காலம் பார்க்கும்; பாராது
வேல்ஈண்டு தானை விழுமியோர் தொலைய,
வேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்தே!
திசைஇரு நான்கும் உற்கம் உற்கவும்,
5 பெருமரத்து இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும்,
வெங்கதிர்க் கனலி துற்றவும், பிறவும்,
அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரல் இயம்பவும்,
எயிறுநிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும்,
களிறுமேல் கொள்ளவும், காழகம் நீப்பவும்,
10 வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்,
கனவின் அரியன காணா நனவின்
செருச்செய் முன்ப! நின் வருதிறன் நோக்கி,
மையல் கொண்ட ஏமம்இல் இருக்கையர்,
புதல்வர் பூங்கண் முத்தி, மனையோட்கு
15 எவ்வம் கரக்கும் பைதல் மாக்களடு
பெருங்கலக் குற்றன்றால் தானே; காற்றோடு
எரிநிகழ்ந் தன்ன செலவின்
செருமிகு வளவ! நிற் சினைஇயோர் நாடே.
அருஞ்சொற்பொருள்:
1. காலன் = இயமன். 2. ஈண்டுதல் = செறிதல், நிறைதல்; விழுமியோர் = சிறந்தோர். 3. அடுதல் = வெல்லுதல், கொல்லுதல். 4. உற்கம் = விண்வீழ் கொள்ளி; உற்கவும் = எரிந்து விழவும். 6. கனலி = கதிரவன்; துற்றவும் = நெருங்கவும். 7. புள் = பறவை. 8. எயிறு = பல். 9. களிறு = ஆண் பன்றி, ஆண் யானை, விலங்கேற்றின் பொது; காழகம் = உடை. 12. செரு = போர்; முன்பு = வலிமை. 13. ஏமம் = பாதுகாவல். 15. எவ்வம் = துன்பம்; கரக்கும் = மறைக்கும்; பைதல் = துயரம். 17. செலவு = படையெடுப்பு. 18. சினைஇயோர் = சினம் கொள்ளச் செய்தோர்.
கொண்டு கூட்டு: வேந்தே, முன்ப, வளவ, நீ இத்தன்மையை ஆதலால், நிற்சினைஇயோர் நாடு பைதல் மாக்களோடு பெருங்கலக்குற்றது எனக் கூட்டுக.
உரை: ஓருயிரைக் கொள்வதற்கு ஏற்ற காலத்தில்தான் இயமனும் அவ்வுயிரைக் கொள்வான். ஆனால், நீ நேரம் பார்க்காமல், வேல்களோடு கூடிய பகைவர்களின் படையை நீ விரும்பிய நேரத்தில் அழிப்பாய். போர்களில் வெற்றி பெரும் வேந்தே! . காற்றொடு தீ கலந்தாற்போல் படையெடுக்கும் வலிமை மிகுந்த சோழனே! உன்னைச் சினமூட்டியவர்களின் நாட்டில், எட்டுத் திசைகளிலும் வானத்திலிருந்து எரிகொள்ளிகள் எரிந்து விழுகின்றன; பெரிய மரத்தில் இலையில்லாத நெடிய கிளைகள் பட்டுப்போகின்றன. கதிரவனின் கதிர்கள் சுட்டு எரிக்கின்றன; மற்றும், அச்சம் தரும் பறவைகள் ஒலிக்கின்றன. இவையெல்லாம், உன்னைச் சினமூட்டும் பகைவர்களின் நாடுகளில் உண்மையாகவே நடைபெறும் நிகழ்ச்சிகள். இவை மட்டுமல்லாமல், அங்குள்ளவர்கள் பல கெட்ட கனவுகளும் காண்கின்றனர். பற்கள் நிலத்தில் விழுவது போலவும், எண்ணெய் தேய்த்துக் குளிப்பது போலவும், பெண்பன்றி ஆண்பன்றி மேல் ஏறுவது போலவும், தங்கள் ஆடைகள் கழன்று கீழே விழுவது போலவும், ஓளி திகழும் படைக்கலங்கள் தாமிருந்த கட்டிலினின்று கவிழ்ந்து விழுவது போலவும் கனவுகள் காண்கின்றனர். இதுபோல் நனவிலும் கனவிலும் காணத் தகாத நிகழ்ச்சிகளை உன் பகைவர்கள் காணுமாறு போர் செய்யும் வலியவனே! நீ படையெடுத்து வருவதைக் கண்டு, கலங்கிய பாதுகாவல் இல்லாத உன் பகைவர்கள், தம் குழந்தைகளின் பூப்போன்ற கண்களில் முத்தமிட்டு, தம் மனைவியரிடம் தம் துயரம் தெரியாதவாறு மறைத்துத் துன்பத்தோடு உள்ளனர்.
சிறப்புக் குறிப்பு: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் வெற்றிகளைக் கூறி, அவன் பகைவர்களை அழிக்கும் ஆற்றலைப் பற்றியும் கூறுவதால் இப்பாடல் கொற்ற வள்ளை என்ற துறையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.