New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புறநானூறு 11-20 -முனைவர். பிரபாகரன்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
புறநானூறு 11-20 -முனைவர். பிரபாகரன்
Permalink  
 


11. பெற்றனர்! பெற்றிலேன்!

http://puram1to69.blogspot.com/2010/12/11.html

 
பாடியவர்: பேய்மகள் இளவெயினியார் (11). இவர் பேயுருவத்தோடு நின்று பாலை பாடிய சேரமான் பெருங்கடுங்கோவைப் பாடினார் என்றும், இளமையிலே இறந்து பின்னர் பேய் உருவம் பெற்றார் என்றும், போர்க்களத்துப் பிணந்தின்னும் பேய்மகளிரை வியந்து பாடியதால் பேய்மகள் என்ற பெயர் பெற்றார் என்றும் பலரும் பலவாறாகக் கூறுவர். இவர் இயர்பெயர் இளவெயினி. குறமகள் இளவெயினி என்று ஒருபுலவர் இருந்ததால், அவரிடமிருந்து இவரை வேறுபடுத்துவதற்காக பேய்மகள் இளவெயினி என்று அழைக்கப்பட்டார் என்றும் கூறுவர். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றுதான்.
பாடப்பட்டோன்: சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ (11). இவன் முடிசூடிய மூவேந்தருள் ஒருவனாக சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல், சிறந்த தமிழ்ப் புலமை உடையவனாகவும் விளங்கினான். இவன் புறநானூற்றில் 282 - ஆம் பாடலையும், அகநானூற்றில் 11 செய்யுட்களையும் (5, 99, 111, 155, 185, 223, 261, 267, 291, 313, 379), குறுந்தொகையில் 10 பாடல்களையும் (16, 37, 124, 135, 137, 209, 231, 263, 283, 398), நற்றிணையில் 10 செய்யுட்களையும் (9, 48, 118, 202, 224, 256, 318, 337, 384, 391), கலித்தொகையில் பாலைக்கலி முழுவதையும் (1-35) இயற்றிய பெரும் புலவன். இவன் பாலைத் திணைப் பாடல்களை இயற்றுவதில் மிகுந்த புலமையுடையவனாக இருந்தான். இவன் பாடல்கள் அனைத்தும் இலக்கிய நயமும், கருத்துச் செறிவும் உடையவை.
பாடலின் பின்னணி: சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் புகழ்ந்து பாடிய பாடினியும் பாணனும் பரிசு பெற்றதை இப்பாடலில் பேய்மகள் இளவெயினி புகழ்ந்து பாடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் விரும்பிப் புரவலரிடம் சென்று தன் விருப்பத்தைக் கூறுதல்.

அரிமயிர்த் திரள்முன்கை
வால்இழை மடமங்கையர்
வரிமணற் புனைபாவைக்குக்
குலவுச்சினைப் பூக்கொய்து
5 தண்பொருநைப் புனல்பாயும்
விண்பொருபுகழ் விறல்வஞ்சிப்
பாடல்சான்ற விறல்வேந்தனும்மே
வெப்புடைய அரண்கடந்து
துப்புறுவர் புறம்பெற்றிசினே;
10 புறம்பெற்ற வயவேந்தன்
மறம்பாடிய பாடினியும்மே
ஏருஉடைய விழுக்கழஞ்சின்
சீருடைய இழைபெற்றிசினே;
இழைபெற்ற பாடினிக்குக்
15 குரல்புணர்சீர்க் கொளைவல் பாண்மகனும்மே
எனவாங்கு
ஒள்அழல் புரிந்த தாமரை
வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே.

அருஞ்சொற்பொருள்:
1.அரி = மென்மை; திரள் = திரண்ட. 2. வால் = தூய; இழை = அணிகலன்கள். 3. புனை = அலங்காரம். 4. குலவு = வளைவு; சினை = மரக்கிளை. 6. பொருதல் = முட்டுதல்; விறல் = வெற்றி; வஞ்சி = கரூர், சேர நாடு. 7. சான்ற = அமைந்த; விறல் = வெற்றி. 8. வெப்பு = வெம்மை; கடந்து = அழித்து. 9. துப்பு = பகை, உறுதல் = பொருந்துதல். 10. வயம் = வலிமை. 12. ஏர் = தோற்றப் பொலிவு; விழு = சிறந்த; கழஞ்சு = பன்னிரண்டு பணவெடை அளவு. 13. சீர் = அழகு; இழை = அணிகலன்கள். 15. குரல் = ஒலி, முதல் இடம்; சீர் = ஓழுங்கு; கொளை = இசை, தாளம் போடுதல்; வல் = திறமை. 17. ஒள் = ஒளி; அழல் = நெருப்பு, வெப்பம்.

உரை: மென்மையான மயிர்களுடைய திரண்ட முன்கையையும் தூய அணிகலன்களையும் உடைய இளம்பெண்கள் ஆற்றங்கரையில் இருந்த மணலால் செய்த பாவைக்கு வளைந்த கிளைகளிலிருந்து கொய்த மலர்களைச் சூடுகிறார்கள். குளிர்ந்த ஆன் பொருநை ஆற்றில் பாய்ந்து விளையாடுகிறார்கள். அத்தகைய, வானளாவிய புகழும் வெற்றியும் பொருந்திய வஞ்சி நகரத்தில், புலவர்களால் புகழ்ந்து பாடும், வெற்றியுடைய வேந்தன் சேரமான் பெருங்கடுங்கோ. அவன், பகைவர்களின் வலிய அரண்களை அழித்து அவர்களைப் புறங்காட்டி ஒடவைத்த வலிமை பொருந்திய வேந்தன். அவன் வீரத்தைப் புகழ்ந்து பாடிய பெண், தோற்றப் பொலிவமைந்த சிறந்த பொன் அணிகலன்களைப் பரிசாகப் பெற்றாள். அவ்வணிகலன்களைப் பெற்ற பெண்ணின் பாடலுக்கு ஏற்ப இசையோடும் தாளத்தோடும் இணைந்து பாடிய பாணன் வெள்ளி நாரால் தொடுத்த ஒளி மிகுந்த பொன்னாலான தாமரை மலர்களைப் பரிசாகப் பெற்றான்.

சிறப்புக் குறிப்பு: பாடினியும் பாணனும் பரிசு பெற்றார்கள்; ஆனால் தனக்குப் பரிசுகள் ஏதும் கிடைக்கவில்லையே என்று இளவெயினியார் கூறாமல் கூறுவதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

12. அறம் இதுதானோ?

http://puram1to69.blogspot.com/2010/12/12.html

 
பாடியவர்: நெட்டிமையார். இவரைப் பற்றிய குறிப்புகளை பாடல் 9-இல் காண்க.
பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. இவனைப் பற்றிய குறிப்புகளை பாடல் 6-இல் காண்க.
பாடலின் பின்னணி: இப்பாடலில், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி தன் பகைவர்க்குக் கொடியவனாக இருந்து, அவர்களின் நாட்டை வென்று, அவர்களின் பொருள்களைக் கொண்டுவந்து தன்னிடம் அன்போடு இரக்கும் இரவலர்க்கு யானையும் தேரும் அளிக்கும் இனியவனாக இருக்கிறான் என்று கூறி, அவனுடைய இச்செயல் எவ்வாறு அறமாகும் என்ற ஒருவினாவையும் நெட்டிமையார் முன்வைக்கிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன்மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

பாணர் தாமரை மலையவும், புலவர்
பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்
அறனோ மற்றிது விறல்மாண் குடுமி?
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு
5 இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே.

அருஞ்சொற்பொருள்:
1. மலைதல் = அணிதல். 2. பூ = பட்டம். புனை = அலங்காரம்; பண்ணல் = செய்தல், அலங்கரித்தல். 3. விறல் = வெற்றி; மாண் = மாட்சி. 4. இன்னா = துயருண்டாகுமாறு. 5. ஆர்வலர் = பரிசிலர்; முகம் = இடம்.

கொண்டு கூட்டு: குடுமி! பிறர் மண் கொண்டு, மலையவும் பண்ணவும், நின் ஆர்வலர் முகத்து இனிய செய்வை; இது நினக்கு அறமோ எனக் கூட்டுக.

உரை: வெற்றியில் சிறந்த குடுமி! பகைவர்களுக்குக் கொடியவனாக இருந்து, அவர் நாட்டை வென்று, உன்னை விரும்புபர்களுக்கு இன்முகத்தோடு இனியன செய்கிறாயே! பாணர்களுக்குப் பொன்னாலான தாமரை மலர்களையும் புலவர்களுக்குப் பட்டம் சூட்டிய யானைகளையும் அலங்கரிக்கப்பட்ட தேர்களையும் வழங்குகிறாயே! இது அறமாகுமோ?

சிறப்புக் குறிப்பு: இப்பாடலில், நெட்டிமையார் பாண்டியனைப் பழிப்பதுபோல் புகழ்கிறார்.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

13. நோயின்றிச் செல்க!

 
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் (13, 127 - 135, 241, 374, 375).
இவர் இயற்பெயர் மோசி. இவர் முடவராக இருந்ததால் முடமோசியார் என்று அழைக்கப் பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் உறையூரின் ஒரு பகுதியாக இருந்த ஏணிச்சேரி என்னும் ஊரைச் சார்ந்தவர். புறநானூற்றில் இவர் பதின்மூன்று பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் பன்னிரண்டு பாடல்கள் ஆய் அண்டிரன் என்ற வள்ளலைப் புகழந்து பாடப்பட்டவையாகும்.

பாடப்பட்டோன்: சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி (13). இவன் இயற்பெயர் பெருநற்கிள்ளி. முடிசூடுவதற்குரிய இளவரசனாகையால் “முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி” என்று அழைக்கப்பட்டான். இவன் காலத்தில், சேர நாட்டை ஆண்டவன் சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறை.
பாடலின் பின்னணி: சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறைக்கும் சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளிக்கும் இடையே இருந்த பகையின் காரணத்தால் கோப்பெருநற்கிள்ளி வஞ்சியை முற்றுகையிட்டான். அச்சமயம், ஒருநாள், அந்துவஞ்சேரல் இரும்பொறை தன் அரண்மனையிலிருந்து உறையூர் ஏணிச்சேரி முடமோசியாருடன் உரையாடிக்கொண்டிருந்த பொழுது, ஒருவன் மதம் பிடித்த யானை மீது ஏறி வருவதையும், அந்த யானையைச் சூழ்ந்திருந்த பாகர்களால் அதைக் கட்டுப்படுத்த முடியாத காட்சியையும் கண்டான். அந்தக் காட்சியைக் கண்ட சேரன், முடமோசியாரை நோக்கி, “அங்கு வருபவன் யார்?” என்று கேட்டான். அதற்கு, முடமோசியார், “அவன், நீர் வளமும் நில வளமும் நிறைந்த சோழ நாட்டின் மன்னன் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி. அவனை இன்னலின்றித் திரும்பிச் செல்ல விடுக” என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: வாழ்த்தியல். தலைவனை வாழ்த்துதல்

இவன்யார் என்குவை ஆயின், இவனே
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய
எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்
மறலி அன்ன களிற்றுமிசை யோனே;
5 களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்
பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்
சுறவுஇனத்து அன்ன வாளோர் மொய்ப்ப
மரீஇயோர் அறியாது மைந்துபட் டன்றே;
நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம,
10 பழன மஞ்ஞை உகுத்த பீலி
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்
கொழுமீன் விளைந்த கள்ளின்
விழுநீர் வேலி நாடுகிழ வோனே.

அருஞ்சொற்பொருள்:
2. நிறம் = தோல்; கவசம் = போர் வீரன் அணியும் இரும்புச் சட்டை; பூம்பொறி = அழகிய தோலின் இணைப்பு; சிதைத்தல் = அழித்தல். 3. பகடு = வலிமை; எழில் = அழகு. 4. மறலி = எமன்; மிசை = மேலே. 5. முந்நீர் = கடல்; வழங்குதல் = செல்லுதல்; நாவாய் = மரக்கலம். 6. நாப்பண் = நடு (இடையே). 7. சுறவு = சுறா மீன்; மொய்த்தல் = சூழ்தல். 8. மரியவர் = பின்பற்றி நடப்பவர் (பாகர்); மைந்து = பித்து (மதம்). 9. பெயர்தல் = திரும்புதல்; தில் - விழைவை உணர்த்தும் அசைச்சொல் 10. பழனம் = வயல்; மஞ்ஞை = மயில்; பீலி = மயிலிறகு. 11. சூடு = நெற்கதிற். 12. கொழுமீன் = ஒருவகை மீன், கொழுத்த மீன். விளைந்த = முதிர்ந்த. 13. விழு = சிறந்த (மிகுந்த); கிழவோன் = உரிமையுடையவன்.

கொண்டு கூட்டு: களிற்று மிசையோனாகிய இவன், யாரென்குவையாயின், நாடு கிழவோன்; இவன் களிறு மதம் பட்டது; இவன் நோயின்றிப் பெயர்க எனக் கூட்டுக.

உரை: ”இவன் யார்” என்று கேட்கிறாயா? இவன் அம்புகளால் துளைக்கப்பட்ட புள்ளிகளுடன் சிதைந்து காணப்படும் புலித்தோலாலாகிய கவசத்தைத் தன் வலிய அழகிய மார்பில் அணிந்து கூற்றுவன் போல் யனைமீது வருகிறான். அந்த யானை வருவது கடலில் ஒருமரக்கலம் வருவதைப்போலவும், பல விண்மீன்களுக்கு நடுவே விளங்கும் திங்களைப்போலவும் காட்சி அளிக்கிறது. அந்த யானையைச் சுற்றிலும் சுறாமீன்களின் கூட்டம் போல் வாளேந்திய வீரர்கள் சூழ்ந்துள்ளனர். அவர்களிடையே உள்ள பாகர்கள் அறியாமலேயே அந்த யானை மதம் கொண்டது. இவன் நாட்டில் வயல்களில் மயில்கள் உதிர்த்த தோகையை உழவர்கள் நெற்கதிர்களோடு சேர்த்து அள்ளிச் செல்வார்கள். இவன் கொழுத்த மீனையும் முதிர்ந்த கள்ளையும், நீரை வேலியாகவும் உள்ள வளமான நாட்டுக்குத் தலைவன். இவன் இன்னலின்றித் திரும்பிச் செல்வானாக.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 14. மென்மையும்! வன்மையும்!

 
பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய குறிப்புகளை பாடல் 8-இல் காண்க.
பாடப்பட்டோன்: சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன். இவனைப் பற்றிய குறிப்புகளை பாடல் 8-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒருசமயம், சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் கபிலரின் கையைப் பிடித்தான். அவர் கை மிகவும் மென்மையாக இருப்பதைக் கண்ட அவன் மிகவும் வியப்படைந்தான். அவன் கபிலரைப் பார்த்து, “தங்கள் கைகள் ஏன் இவ்வளவு மென்மையாக இருக்கின்றன?” என்று கேட்டான். அதற்குக் கபிலர், அரசே! நீ யானை, குதிரை ஆகியவற்றைச் செலுத்துகிறாய். போர்க்களத்தில் வில்லேந்தி அம்பு எய்கிறாய். என் போன்ற இரவலர்கள் முயற்சியின்றிப் பிறர் அளிக்கும் புலாலையும் சோற்றையும் உண்ணுவதைத் தவிரத் தங்கள் கைகளால் வேறு எந்தக் கடினமான வேலையையும் செய்வதில்லை. ஆகவேதான், என் கை மென்மையாக உள்ளது.” என்று இப்பாடல் மூலம் சேரனின் கேள்விக்குக் கபிலர் விடை அளிக்கிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன்மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

கடுங்கண்ண கொல்களிற்றான்
காப்புடைய எழுமுருக்கிப்
பொன்இயல் புனைதோட்டியான்
முன்புதுரந்து சமந்தாங்கவும்
5 பார்உடைத்த குண்டுஅகழி
நீர்அழுவம் நிவப்புக்குறித்து
நிமிர்பரிய மாதாங்கவும்
ஆவம் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாவ நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்
10 பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும், குரிசில்!
வலிய ஆகும்நின் தாள்தோய் தடக்கை;
புலவு நாற்றத்த பைந்தடி
பூநாற்றத்த புகை கொளீஇ ஊன்துவை
கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது
15 பிறிதுதொழில் அறியா ஆகலின் நன்றும்
மெல்லிய பெரும! தாமே நல்லவர்க்கு
ஆரணங்கு ஆகிய மார்பின் பொருநர்க்கு
இருநிலத்து அன்ன நோன்மைச்
செருமிகு சேஎய்! நின் பாடுநர் கையே.

அருஞ்சொற்பொருள்:
1. கடுங்கண்ண = கடும்+கண்ண = கொடிய கண்ணையுடைய. 2. காப்பு = காவலான இடம்; எழு = தூண், கணைய மரம்; முருக்கி = முறித்து. 3. பொன் = இரும்பு; புனை = அழகு; தோட்டி = அங்குசம். 4. முன்பு = வலிமை; துரந்து = குத்தி. சமந்தாங்குதல் = வேண்டுமளவில் பிடித்து இழுத்தி நிறுத்துதல். 5. பார் = நிலம், பூமி; குண்டு = ஆழம். 6. அழுவம் = பரப்பு; நிவப்பு = உயர்ச்சி. 7. நிமிர்தல் = ஓடல்; பரிதல் = ஓடுதல்; மா = குதிரை; தாங்குதல் = நிறுத்துதல். 8. ஆவம் = அம்புறாத்தூணி. 9. சாவம் = வில்; நோன் = வலி; ஞாண் = கயிறு; வடு = தழும்பு; வழங்குதல் = செலுத்துதல். 10. குரிசில் = தலைவன். 11. தாள் = கால்; தோய்ந்த = பொருந்திய; தட = பெரிய. 12. புலவு = ஊன்; பை = வலிமை (கொழுத்த); தடி = தசை; கொளீஇ = கொளுத்தி. 13. துவை = துவையல். 15. நன்றும் = மிக; ஆரணங்கு = ஆற்றுதற்கு அரிய வருத்தம். 16. நல்லவர் = பெண்கள். 17. பொருநர் = பகைவர். 18. இரு = பெரிய; நோன்மை = வலிமை. 19. செரு = போர்; சேய் = முருகன்.

கொண்டு கூட்டு: குரிசில், பெரும, சேஎய், வலியாகும் நின்கை; நிற்பாடுநர் கை தாம் மெல்லியவாகும் எனக் கூட்டுக.

உரை: கொடிய கண்களையுடைய, கொல்லும் யானைகளால், பாதுகாப்பிற்காகப் பகைவர்கள் வைத்திருந்த கணையமரங்களை முறித்து, இரும்பால் செய்யப்பட்ட அழகிய அங்குசத்தால் வலிமையாகக் குத்தி யானைகளைப் பிடித்து இழுத்து நிறுத்துகிறாய். நிலத்தைத் தோண்டி உருவாக்கப்பட்ட அகழிகளின் நீர்ப்பரப்புகளின் ஆழம் கருதி அவைகளின் மீது செல்லாமல் விரைவாக ஓடும் குதிரைகளைக் கடிவாளத்தைப் பிடித்து இழுத்து நிறுத்துகிறாய். அம்புறாத்தூணியை முதுகில் பொருத்தித் தேர் மேலிருந்து வில்லின் நாணால் கையில் வடு உண்டாகுமாறு அம்பைச் செலுத்துகிறாய். மற்றும், பரிசிலர்க்குப் பெறுதற்கரிய அணிகலன்களை அளிக்கிறாய். அரசே! இத்தகைய செயல்களால் உன் முழங்கால் வரை நீண்ட பெரிய கைகள் வலிமையாக உள்ளன. புலால் மணக்கும் கொழுத்த தசையைப் பூ மணமுள்ள புகையுடன் கூடிய தீயினால் கொளுத்திச் சமைத்த புலாலும், துவையலும், கறியும் சோறும் உண்ணுவதைத் தவிர, உன்னைப் பாடுபவர்கள் வேறு வலிய செயல்களைத் தங்கள் கைகளால் செய்யாததால், அவர்களின் கைகள் மிகவும் மென்மையானதாக உள்ளன. அரசே! பெண்டிர்க்கு வருத்ததைத் தரும் மார்பும், பகைவருடன் வலிய நிலம் போன்ற திண்மையோடு போர்புரியும் முருகனைப் போன்ற ஆற்றலும் உடையவனே!


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 15. எதனிற் சிறந்தாய்?

 
பாடியவர்: நெட்டிமையார். இவரைப் பற்றிய குறிப்புகளை பாடல் 9-இல் காண்க.
பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. இவனைப் பற்றிய குறிப்புகளை பாடல் 9-இல் காண்க.
பாடலின் பின்னணி: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி பல போர்களில் வெற்றி பெற்றதையும் பல வேள்விகள் நடத்தியதையும் கண்டு நெட்டிமையார் மிகவும் வியப்படைந்தார். “அரசே! நீ கழுதைகளை ஏரில் பூட்டி உழுது பகைவர்களின் அகன்ற இடங்களைப் பாழ் செய்தாய்; அவர்களின் வயல்களில் குதிரைகள் பூட்டிய தேர்களைச் செலுத்திப் பாழ் செய்தாய்; பகைவர்களின் குளங்களில் யானையைப் படியச் செய்து அவற்றைப் பாழ் செய்தாய்; நீ அத்தகைய வலிமையுடையவன். உன்னுடைய தூசிப்படையை எதிர்த்துப் போரிட வந்து தோல்வியுற்றுப் பழியுடன் வாழ்ந்தவர்கள் பலரா? அல்லது வேதமுறைப்படி வேள்வி நடத்தி நீ நிறுவிய வேள்விச்சாலைகளின் எண்ணிக்கை அதிகமா? இவற்றில் எது அதிகம்?” என்று வினவி, இப்பாடலில் தன் வியப்பை வெளிப்படுத்திப் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன்மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்
பாழ்செய் தனை, அவர் நனந்தலை நல்லெயில்;
புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்
5 வெள்ளுளைக் கலிமான் கவிகுளம்பு உகளத்
தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்துத்;
துளங்கு இயலாற், பணை எருத்தின்
பா வடியாற்,செறல் நோக்கின்
ஒளிறு மருப்பின் களிறு அவர
10 காப் புடைய கயம் படியினை;
அன்ன சீற்றத்து அனையை ஆகலின்
விளங்குபொன் எறிந்த நலங்கிளர் பலகையடு
நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார்
ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார்
15 நசைதர வந்தோர் நசைபிறக்கு ஒழிய
வசைபட வாழ்ந்தோர் பலர்கொல்? புரையில்
நற்பனுவல் நால்வேதத்து
அருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்கப் பன்மாண்
20 வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி
யூபம் நட்ட வியன்களம் பலகொல்?
யாபல கொல்லோ? பெரும! வார் உற்று
விசிபிணிக் கொண்ட மண்கனை முழவின்
பாடினி பாடும் வஞ்சிக்கு
25 நாடல் சான்ற மைந்தினோய்! நினக்கே.

அருஞ்சொற்பொருள்:
1. கடு = விரைவு; குழித்த = குழியாக்கிய; ஞெள்ளல் = தெரு. 2. வெள் = வெளுத்த; புல்லினம் = புல்+இனம் = இழிந்த கூட்டம். 3. நனம் = அகற்சி (அகலம்); தலை = இடம்; எயில் = அரண். 4. புள்ளினம் = பறவைகள்; இமிழும் = ஒலிக்கும். 5. உளை = பிடரிமயிர்; கலிமான் = குதிரை; உகளல் = தாவுதல். 6. தெவ்வர் = பகைவர். 7. துளங்கல் = அசைதல்; இயல் = தன்மை; பணை = பெருமை; எருத்து = கழுத்து. 8. பா = பரந்த; செறுதல் = கோபித்தல். 9. மருப்பு = கொம்பு(தந்தம்); அவர = அவருடைய. 10. கயம் = வற்றாத குளம். 12. பொன் = இரும்பு; கிளர் = மேலெழும்பு; எறிதல் = அடித்தல். 13. ஒன்னார் = பகைவர். 14. கடுந்தார் = விரைவாக செல்லும் படை; முன்பு = வலிமை; தலைக்கொள்ளுதல் = கெடுத்தல். 15. நசை = ஆசை; தருதல் = அழைத்தல்; பிறக்கு = முதுகு, பின்புறம். 17. பனுவல் = நூல். 18. சீர்த்தி = மிகுபுகழ்; கண்ணுறை = மேலே தூவுவது; மலிதல் = மிகுதல், நிறைதல். 19. ஆவுதி = ஆகுதி = ஓமத்தீயில் நெய்யிடுதல். 20. வீதல் = குறைதல். 21. யூபம் = தூண்; வியன் = அகன்ற, மிகுந்த; களம் = இடம். 22. உற்று = பொருந்தி. 23. விசி = கட்டு; கனை = நெருக்கம். மண்கனை = ஒருவகை மண்ணால் ஆகிய சாந்து; முழவு = முரசு, பறை. 24. வஞ்சி = பகைவர் மீது படையெடுப்பு. 25. நாடல் = நாட்டம் (நோக்கம்); சான்ற = அமைந்த; மைந்து = வலிமை.

கொண்டு கூட்டு: பெரும, மைந்தினோய், பாழ் செய்தனை; தேர் வழ்ங்கினை; கயம் படியினை; ஆதலின், நினக்கு ஒன்னாராகிய வசைபட வாழ்ந்தோர் பலர் கொல், யூபம் நட்ட வியன்களம் பலகொல்; இவற்றுள் யா பல கொல்லோ எனக் கூட்டுக.

உரை: விரைவாகச் செல்லும் தேர்களால் குழிகள் தோண்டப்பட்ட தெருக்களில், வெண்மையான வாயுள்ள கழுதைகளை ஏரில் பூட்டி, உன் பகைவர்களின் நல்ல அரண்கள் சூழ்ந்த அகன்ற இடங்களைப் பாழ் செய்தாய். பறவைகள் ஒலிக்கும் புகழ் மிகுந்த விளைவயல்களில் வெள்ளைப் பிடரி மயிருடைய குதிரைகளின் குவிந்த குளம்புகள் தாவுமாறு செய்து உன் பகைவர்களின் நாட்டில் தேர்களைச் செலுத்தினாய். பருத்த, அசையும் கழுத்தும், பெரிய காலடிகளும், சினத்துடன் கூடிய பார்வையும், ஒளிரும் தந்தங்களுமுடைய யானைகளை ஏவிப் பகைவர்களின் குளங்களைப் பாழ்செய்தாய். நீ அத்தகைய சீற்றம் உடையாய். ஆதலால், வலிய இரும்பால் செய்யப்பட்ட ஆணியும் பட்டமும் அறையப்பட்ட அழகிய பலகையோடு நிழல் உண்டாக்கும் நெடிய வேலை எடுத்து, உன் பகைவர், ஒளிரும் படைக்கலங்களுடன் கூடிய உன்னுடைய விரைந்து செல்லும் தூசிப்படையின் வலிமையை அழிக்க விரும்பி ஆசையோடு போருக்கு வந்தனர். பின்னர், அந்த ஆசை ஒழிந்து பழியுடன் வாழ்ந்தவர் பலரா? அல்லது குற்றமற்ற நல்ல நூலாகிய வேதத்தில் சொல்லியவாறு அரிய புகழுடைய சுள்ளியும், பொரியும், நெய்யும் இட்டுப் பலவிதமான மாட்சிமைகளும், கேடற்ற சிறப்பும் உடைய யாகங்கள் செய்து, நீ நிறுவிய தூண்கள் நடப்பட்ட அகன்ற வேள்விச்சாலைகளின் எண்ணிக்கை அதிகமா? வாரால் இறுகக் கட்டி, மார்ச்சுனை தடவிய முழவுடன் உன் படையெடுப்புகளைப் புகழ்ந்து பாடும் பாடினியின் பாட்டுக்கேற்ப ஆராய்ந்து அமைந்த வலிமை உடையோய்! இவற்றுள் எதன் எண்ணிக்கை அதிகம்?

சிறப்புக் குறிப்பு: போரில் முன்னணியில் செல்லும் படை தூசிப்படை. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் முன்னணிப்படையிடம் பலரும் தோல்வியுற்றார்கள் என்று இப்பாடலில் நெட்டிமையார் கூறுவதிலிருந்து அவனுடைய முழுப்படையின் வலிமையை எதிர்த்துப் போரிடுவது மிகவும் கடினம்; அவனை எதிர்த்துப் போரில் வெற்றி பெறுபவர்கள் யாரும் இல்லை என்ற கருத்துகளும் இப்பாடலில் மறைந்திருப்பதைக் காணலாம்.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 16. செவ்வானும் சுடுநெருப்பும்

 
பாடியவர்: பாண்டரங் கண்ணனார் (16). இவருடைய இயற்பெயர் கண்ணனார். இவர் தந்தையார் பெயர் பாண்டரங்கன். ஆகவே, இவர் பாண்டரங் கண்ணனார் என்று அழைக்கப்பட்டார் என்று சிலர் கூறுகின்றனர். பாண்டரங்கம் என்பது ஒருவகைக் கூத்து. அக்கூத்தில் வல்லவராக இருந்ததால் இவர் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பாடப்பட்டோன்: சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி (16, 377). இவன் இராச சூயம் என்ற வேள்வி செய்ததால் இவனுக்கு இப்பெயர் வழங்கப்பட்டது. இவன் ஆட்சிக்காலத்தில் சேர நாட்டை முதலில் மாரிவெண்கோ என்பவனும் அவனுக்குப் பிறகு சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பவனும் ஆட்சி புரிந்தனர். சோழன் பெருநற்கிள்ளிக்கும் சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறைக்கும் போர் மூண்டது. அப்போரில் சோழனுக்குத் துணையாகப் போர்புரிந்த மலையமான் என்பவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையை வென்றான்.

இச் சோழமன்னனின் காலம் கி.பி. 3-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும்.

பாடலின் பின்னணி: இப்பாடலில் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி பகைவர்களின் நாட்டை அழித்த போர்த்திறத்தைப் புலவர் பாண்டரங்கண்ணனார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: மழபுல வஞ்சி. பகைவர் நாட்டைக் கொள்ளையிடுதல், எரித்தல் ஆகிய செயல்களைச் செய்து அழித்தலைப் பற்றிக் கூறுதல்.

வினைமாட்சிய விரைபுரவியொடு
மழையுருவின தோல்பரப்பி
முனைமுருங்கத் தலைச்சென்றவர்
விளைவயல் கவர்புஊட்டி
5 மனைமரம் விறகுஆகக்
கடிதுறைநீர்க் களிறுபடீஇ
எல்லுப்பட இட்ட சுடுதீ விளக்கம்
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்றப்
புலம்கெட இறுக்கும் வரம்பில் தானைத்
10 துணைவேண்டாச் செருவென்றிப்
புலவுவாள் புலர்சாந்தின்
முருகன் சீற்றத்து உருகெழு குருசில்!
மயங்குவள்ளை மலர்ஆம்பல்,
பனிப்பகன்றைக் கனிப்பாகல்
15 கரும்புஅல்லது காடுஅறியாப்
பெருந்தண்பணை பாழ்ஆக
ஏமநன் னாடு ஒள்எரி ஊட்டினை;
நாம நல்லமர் செய்ய
ஓராங்கு மலைந்தன பெரும!நின் களிறே.

அருஞ்சொற்பொருள்:
1. விரைவு = வேகம்; புரவி = குதிரை. 2. மழை = மேகம்; உரு = நிறம்; தோல் = கேடயம். 3. முனை = போர்முனை; முருங்க = கலங்க; தலைச்சென்று = மேற்சென்று. 4. கவர்பு = கொள்ளை; ஊட்டி = அடித்து (ஊட்டுதல் = புகட்டுதல், அனுபவிக்கச் செய்தல்). 6. கடி = காவல்; கடிதுறை = காவற் பொய்கை; படீஇ = படியச் செய்து. 7. எல்லு = கதிரவன்; எல் = ஒளி. 8. செக்கர் = சிவப்பு, செவ்வானம். 9. புலம் = இடம்; இறுத்தல் = செலுத்தல், தங்குதல். 10. செரு = போர். 12. உரு = அச்சம்; குருசில் = குரிசில் = அரசன், தலைவன். 13. மயங்குதல் = கலத்தல்; வள்ளை = ஒருகொடி; ஆம்பல் = அல்லி. 14. பகன்றை = சீந்தில், சிவதை, கிலுகிலுப்பை (ஒருவகைக் கொடி). பாகல் = ஒருவகைக் கொடி. 15. காடு = புன்செய் நிலம். 16. பணை = மருத நிலம்;. 17. ஏமம் = காவல். 18. நாமம் = அச்சம். 19. ஓர் ஆங்கு = ஒன்றுசேர, ஒன்று போல், எண்ணியவாறு; ஆங்கு = அவ்வாறு; மலைத்தல் = பொருதல், போரிடுதல்.

கொண்டு கூட்டு: குருசில், பெரும, நீ அமர் செய்ய நின் களிறு ஓராங்கு மலைந்தன எனக் கூட்டுக.

உரை: போரில் தேர்ச்சி பெற்ற, விரைந்து செல்லும் குதிரைப்படையுடனும், மேகம் போல் பரப்பிய கேடயங்களுடனும், போர்க்களம் கலங்குமாறு மேற்சென்று பகைவர்களின் நெல்விளையும் வயல்களைக் கொள்ளையிட்டாய். அவர்களின் வீட்டிலுள்ள கதவு, தூண் போன்ற மரத்தால் செய்த பொருட்களை விறகாக்கி அவற்றை தீயில் எரித்தாய். யானையைப் படியச் செய்து காவல் உள்ள நீர்த்துறைகளைப் பாழ் செய்தாய். பகைவர்களின் நாட்டில் நீ மூட்டிய தீயிலிருந்து எழுந்த ஒளி, சுடருடன் கூடிய ஞாயிற்றின் சிவந்த நிறம் போலத் தோன்றியது. பெருமளவில் படையைப் பரப்பி, துணைப்படை தேவையில்லாமல் போரில் வெற்றிபெற்றாய். புலவு நாற்றத்தையுடைய வாளும், பூசிய சந்தனம் உலர்ந்த மார்பும், முருகன் போன்ற சினமும், அச்சமும் பொருந்திய தலைவ! ஒன்றோடு ஒன்று சேர்ந்த வள்ளையும், மலர்ந்த ஆம்பலும், குளிர்ந்த பகன்றையும், பழுத்த பாகலையும் உடைய, கரும்பு அல்லாத பிற பயிர்கள் விளையாத புன்செய் நிலமும், பெரிய குளிர்ந்த மருத நிலமும் பாழாகுமாறு பகைவர்களின் காவலுடைய நல்ல நாட்டிற்குத் தீ மூட்டினாய். அரசே! அஞ்சத்தக்க நல்ல போரை நீ எண்ணியவாறு உன் யானைகள் செய்தன.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 17. யானையும் வேந்தனும்!

 
பாடியவர்: குறுங்கோழியூர் கிழார் (17, 20, 22). கோழி அல்லது கோழியூர் என்பது உறையூருக்கு மற்றொரு பெயர். குறுங்கோழியூர் என்பது உறையூரைச் சர்ந்த ஒருபகுதியாக இருந்திருக்கலாம். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல்கள் மூன்று. இம்மூன்று பாடல்களும் சேரமான் யனைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற சேர அரசனைப் பற்றியவையாகும்.
பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை (17, 20, 22). பதிற்றுப்பத்து என்னும் எட்டுத்தொகை நூலில் பல சேர மன்னர்கள்ளின் வரலாறு காணப்படுகிறது. அந்நூலில் கூறப்படாத இரும்பொறை மரபைச் சார்ந்த மன்னர்களுள் இவன் ஒருவன். மற்றொருவன் கணைக்கால் இரும்பொறை என்பவன்.

இவனது இயற்பெயர் சேய். யானையினது நோக்குப் போலும் நோக்கினையுடையவன் என்பது குறித்து இவன் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்று அழைக்கப்பட்டான். “யானைக்கண்” என்பதற்கு மற்றொரு விளக்கமும் கூறப்படுகிறது. முருகப்பெருமான் சூரனை வெல்லப் பிணிமுகம் என்னும் யானைமீது அமர்ந்து சென்றது போல் இவன் யானைமீது ஏறிச் சென்றதை ஒப்பிட்டு “யானைக்கட் சேய்“ என்ற பெயர் வந்திருக்கலாம் என்பது ஒருசாரார் கருத்து.

ஒருசமயம், இச்சேரமன்னனுக்கும் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் இடையே போர் மூண்டது. அப்போரில், சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்ச் சேரல் இரும்பொறை பாண்டியனிடம் தோல்வியுற்று சிறையில் அடைக்கப்பட்டான். பின்னர், தன் வலிமையால் சிறைக் காவலரை வென்று தப்பிச் சென்று தன் நாட்டை மீண்டும் ஆட்சி செய்தான்.

இச்சேரமான் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான ஐங்குறுநூறு என்னும் நூலைத் தொக்குப்பித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு பாடப்பட்ட சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தொண்டி என்னும் ஊரைத் தலநகராகக்கொண்டு கி. பி. 200 - 225 காலக்கட்டத்தில் ஆட்சி புரிந்ததாக வரலாறு கூறுகிறது (சுப்பிரமனியன், பக்கம் 45).
பாடலின் பின்னணி: சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் சிறையிலிருந்து தப்பிச் சென்றதை இப்பாடலில் குறுங்கோழியூர் கிழார் புகழ்ந்து பாடுகிறார். அவன் சிறையிலிருந்து தப்பிச் சென்றதை, குழியில் அகப்பட்ட யானை, தன் வலிமையால் குழியைத் தூர்த்து வெளியேறிச் சென்று தன் இனத்தோடு வாழ்ந்ததற்கு ஒப்பிடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

தென்குமரி, வடபெருங்கல்,
குணகுட கட லாஎல்லை,
குன்று,மலை, காடு,நாடு
ஒன்றுபட்டு வழிமொழியக்
5 கொடிதுகடிந்து, கோல்திருத்திப்
படுவதுஉண்டு, பகல்ஆற்றி,
இனிதுஉருண்ட சுடர்நேமி
முழுதுஆண்டோர் வழிகாவல!
குலைஇறைஞ்சிய கோள்தாழை
10 அகல்வயல் மலைவேலி
நிலவுமணல் வியன்கானல்
தெண்கழிமிசைச் சுடர்ப்பூவின்
தண்தொண்டியோர் அடுபொருந!
மாப்பயம்பின் பொறைபோற்றாது
15 நீடுகுழி அகப்பட்ட
பீடுஉடைய எறுழ்முன்பின்
கோடுமுற்றிய கொல்களிறு
நிலைகலங்கக் குழிகொன்று
கிளைபுகலத் தலைக்கூடியாங்கு
20 நீபட்ட அருமுன்பின்
பெருந்தளர்ச்சி பலர்உவப்பப்
பிறிதுசென்று மலர்தாயத்துப்
பலர்நாப்பண் மீக்கூறலின்
உண்டாகிய உயர்மண்ணும்
25 சென்றுபட்ட விழுக்கலனும்
பெறல்கூடும் இவன்நெஞ்சு உறப்பெறின் எனவும்,
ஏந்துகொடி இறைப்புரிசை
வீங்குசிறை வியல்அருப்பம்
இழந்துவைகுதும் இனிநாம்இவன்
30 உடன்றுநோக்கினன் பெரிதுஎனவும்
வேற்றுஅரசு பணிதொடங்குநின்
ஆற்றலொடு புகழ்ஏத்திக்
காண்கு வந்திசின் பெரும! ஈண்டிய
மழையென மருளும் பல்தோல் மலையெனத்
35 தேன்இறை கொள்ளும் இரும்பல் யானை
உடலுநர் உட்க வீங்கிக் கடலென
வான்நீர்க்கு ஊக்கும் தானை ஆனாது
கடுஒடுங்கு எயிற்ற அரவுத்தலை பனிப்ப
இடியென முழங்கு முரசின்
40 வரையா ஈகைக் குடவர் கோவே!


அருஞ்சொற்பொருள்:
2. குணக்கு = கிழக்கு; குடக்கு = மேற்கு. 4. வழிமொழிதல் = வழிபாடு கூறுதல். 5. கோல் = அரசாட்சி. 6. படுவது = உரியது, அனுபவிப்பது; பகல் = நடுநிலை. 7. நேமி = சக்கரம். 8. வழி = மரபு. 9. இறைஞ்சுதல் = தாழ்தல்; கோள் = கொள்ளத்தக்க; தாழை = தென்னை. 11. கானல் = கடற்கரை, காடு. 12. தெண் = தெளிந்த; கழி = கடலையடுத்த உப்பங்கழி; மிசை = மேல். 13. தொண்டி = தொண்டி என்னும் ஊர்; அடுதல் = வெல்லுதல்; பொருநன் = அரசன். 14. மா = பெரிய; பயம்பு = பள்ளம்; பொறை= பூமி. 16.எறுழ் = வலிமை; முன்பு = வலிமை. 17. கோடு = கொம்பு. 18. நிலைகலங்க = நிலை சரிய; கொன்று = அழித்து. 19. கிளை = உறவு; புகலுதல் = விரும்புதல்; தலைக்கூடுதல் = நிறைவேற்றுதல் (சேர்தல்). 20. அரு = காணமுடியாத (பொறுத்தற்கரிய). 22. பிறிது = வேறு; மலர்தல் = விரிதல்; தாயம் = சுற்றம். 23. நாப்பண் = நடுவே. 24. உண்டு = தன்னிடத்தே இருந்த; உயர்மண் = உயர்ந்த நிலம். 26. உறல் = அணைதல், சார்தல், புணர்தல். 27. ஏந்தல் = உயர்ச்சி; இறை = உயர்ச்சி, தங்குதல்; புரிசை = மதில். 28. வீங்கு = மிக்க; சிறை = காவல்; வியல் = அகலம்; அருப்பம் = அரண், மதில். 29. வைகுதல் = இருத்தல். 30. உடன்று = வெகுண்டு. 33. ஈண்டுதல் = திரளுதல். 34. தோல் = கேடயம். 35. தேன் = வண்டு; இறை = தங்குதல்; இரு = பெரிய. 36. உடலுநர் = பகைவர் (உடலுதல் = சினத்தொடு பொருதல்); உட்குதல் = அஞ்சுதல். 37. வான் = மேகம்; ஊக்கும் = முயலும்; ஆனாது = அமையாது. 38. கடு = நஞ்சு; ஒடுங்குதல் = பதுங்கல், தங்குதல்; எயிறு = பல்; அரவு = பாம்பு. பனி = நடுக்கம். 40. வரையா = அளவில்லாத (குறையாத); குடவர் = குட நாட்டவர்.

கொண்டு கூட்டு: காவல், பெரும, கோவே, ஏத்திக் காண்கு வந்திசின் எனக் கூட்டுக.

உரை: தெற்கே குமரியும், வடக்கே இமயமும், கிழக்கிலும் மேற்கிலும் கடலை எல்லையாகக்கொண்டு குன்று, மலை, காடு, நாடு ஆகியவற்றில் வாழ்வோர் ஒருங்கே வழிபாடு செய்ய, கொடுமைகளை நீக்கி, செங்கோல் செலுத்தி, உரிய வரியைத் திரட்டி நடுவு நிலைமையோடு உலகம் (தமிழ் நாடு) முழுவதையும் இனிமையாக நல்லாட்சி புரிந்தவர்களின் வழித்தோன்றலே!

குலைகள் தாழ்ந்து பறிப்பதற்கு ஏற்றதாக உள்ள தென்னை மரங்களையும், அகன்ற வயல்களையும், மலையையே வேலியாக உள்ள இடங்களையும், நிலவு போன்ற மணல் நிறைந்த கடற்கரையையும், தெள்ளிய கழியிடத்து நெருப்புப்போல் பூத்த சிவந்த ஒளிவிடும் பூக்களையும் உடைய குளிர்ந்த தொண்டி என்னும் ஊரில் வாழ்வோரின் வெற்றி வேந்தனே!

பெரிய குழியான இடம் இருப்பதை அறியாது, அந்த நெடிய குழியில் வீழ்ந்த, செருக்கும், மிகுந்த வலிமையும் உடைய, தந்தங்கள் முதிர்ந்த யானை அக்குழியைத் தூர்த்துத் தன்னை விரும்பும் சுற்றத்தோடு சென்று வாழ்ந்ததைப்போல் உன் அரிய வலிமையால் பகைவரிடம் நீ அடைந்த தளர்ச்சியினின்று நீங்கி, மீண்டும் அகன்ற உன் நாட்டிற்குச் சென்றது உன் சுற்றத்தார் நடுவே புகழ்ந்து பேசப்படுகிறது. நீ பாண்டியனால் தோற்கடிக்கப்பட்டு சிறையிலடைக்கப்படுவதற்கு முன்பு, உன்னால் தோற்கடிக்கப்பட்ட உன் பகைவர்கள், “இவன் மனமுவந்தால் நாம் இழந்த நம் நாட்டையும் இவனால் கொள்ளப்பட்ட அணிகலன்களையும் திரும்பப்பெறக்கூடும்” என்று எண்ணினார்கள். மற்றும், உன் வரவை எதிர்பாராத பகைவர்கள், தாங்கள் கவர்ந்து கொண்ட கொடி பறக்கும் உயர்ந்த மதில், மிகுந்த காடுகள், அகழி முதலியவைகளைக் காவலாக உடைய அரண்களை இழந்து வருந்த நேரிடும் என்று எண்ணினார்கள். இவ்வாறு எண்ணிய உன் பகைவர்கள் உனக்குப் பணிபுரிவதற்குக் காரணமாகிய உன் புகழை வாழ்த்தி உன்னைக் காண வந்தேன்.

உன் வீரர்கள் ஏந்தியிருக்கும் கேடயங்கள் திரண்ட மேகங்களைப்போல் காட்சி அளிக்கின்றன. உன் யானைகளைப் பெரிய மலை என்று எண்ணி தேனீக்களின் கூட்டம் அவைகளிடம் வந்து தங்குகின்றன. பகைவர்கள் அஞ்சும் உன் படையைக் கடலென்று கருதி மேகங்கள் நீர் கொள்ள முயலுகின்றன. இத்துணை வலிமையும் பெருமையும் உடைய படைகள் மட்டுமல்லாமல், பல்லில் நஞ்சுடைய பாம்பு நடுங்குமாறு இடிபோல் முழங்கும் முரசும் உடையவனே! குறையாத கொடையுடைய குடநாட்டின் அரசே!


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 18. நீரும் நிலனும்

 
பாடியவர்: குடபுலவியனார் (18, 19).இவரது இயற்பெயர் புலவியன் என்பது. இவர் குட நாட்டவராதலால் குடபுலவியனார் என்று அழைக்கப்பட்டார். புலவியன் என்பது விரிந்த அறிவுடையவன் என்று பொருள்படும்.

பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் (18, 19, 23 - 26, 76 - 79, 371, 372)
பாண்டிய நாட்டை மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்த மன்னர்களில் தலையாலங்கானதுச் செருவென்ற நெடுஞ்செழியனும் ஓருவன். இவன் சிறுவதிலேயே பாண்டிய நாட்டுக்கு மன்னனாக முடிசூட்டப்பட்டான். இவன் ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை, திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள் மற்றும் பொருநன் ஆகிய எழுவரும் தலையாலங்கானம் என்னும் இடத்தில் இவனை எதிர்த்துப் போர் செய்தனர். தலையாலங்கானத்தில் நடைபெற்ற போரில் வெற்றி பெற்றதால் இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று சிறப்பிக்கப்பட்டான். இவனைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் சின்னமனூர், வேள்விக்குடி ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற செப்பேடுகளில் காணப்படுவதாக வரலாறு கூறுகிறது.

இவனைப் புகழ்ந்து பாடியவர்கள் பலர். புறநானூற்றில் 12 பாடல்களில் இவன் புகழ் கூறப்படுகிறது. பத்துப்பாட்டில் மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக் காஞ்சி என்ற பாட்டுக்குப் பாட்டுடைத் தலைவன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்பது குறிப்பிடத் தக்கது.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஒர் சிறந்த அரசன் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த புலவனாகவும் திகழ்ந்தான் என்பது புறநானூற்றில் அவன் இயற்றிய பாடல் (பாடல் - 72)மூலம் தெரிய வருகிறது.
பாடலின் பின்னணி: ஒருசமயம், பாண்டிய நாட்டின் ஒருபகுதியில், நீர்நிலைகள் இல்லாத காரணத்தால், அங்கு பயிர்கள் விளையாமல் வறுமை நிலவியது. இப்பாடலில், நீரைத் தேக்கி நீர்நிலைகளை உருவாக்குவது இன்றியமையாதது என்று பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் புலவர் குடபுலவியனார் அறிவுறை கூறுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: முதுமொழிக் காஞ்சி; பொருண்மொழிக் காஞ்சி எனவும் பாடம்.
முதுமொழிக் காஞ்சி. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருட்களைப் பற்றிக் கூறுவது.
பொருண்மொழிக் காஞ்சி. உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.


முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்து பட்ட வியன் ஞாலம்
தாளின் தந்து தம்புகழ் நிறீஇ
ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்
5 ஒன்றுபத்து அடுக்கிய கோடிகடை இரீஇய
பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே!
நீர்த்தாழ்ந்த குறுங்காஞ்சிப்
பூக்கதூஉம் இனவாளை
நுண்ஆரல் பருவரால்
10 குரூஉக்கெடிற்ற குண்டுஅகழி
வான்உட்கும் வடிநீண்மதில்
மல்லல்மூதூர் வயவேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி
15 ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த
நல்இசை நிறுத்தல் வேண்டினும் மற்றதன்
தகுதி கேள்இனி மிகுதி யாள!
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;
20 உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
25 வைப்பிற்று ஆயினும் நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே; அதனால்
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம இவண்தட்டோரே
30 தள்ளா தோர்இவண் தள்ளா தோரே.

அருஞ்சொற்பொருள்:
1. முழங்குதல் = ஒலித்தல்; முந்நீர் = கடல்; வளைஇ = சூழப்பட்டு. 3. தாள் = முயற்சி; தந்து = கொண்டு. 4. உரம் = வலி; உம்பல் = வழித்தோன்றல். 5. இரீஇய = இருக்கச் செய்த. 8. கதூஊம் = பற்றும் (கதுவுதல் = பற்றுதல்). 9. பரு = கனத்த. 10. குரு = ஒளி; கெடிறு = கெளிற்று மீன். 11. உட்கும் = அஞ்சும்; வடிதல் = நீளுதல். 12. மல்லல் = வளமை; வயம் = வலி. 14. முருக்கி = அழித்து. 17. மிகுதியாள = பெரியோன். 20. பிண்டம் = உடல். 24. வித்தி = விதைத்து. 25. வைப்பு = இடம்; நண்ணி = நெருங்கி (பொருந்தி); தாள் = முயற்சி. 27. வல்லே = விரைவாக. 28. நெளிதல் = குழிதல், வளைதல். 29. தட்டல் = முட்டுப்பாடு; தட்டோர் = தடுத்தோர்; அம்ம - அசைச் சொல். 30. தள்ளோதார் = தடுக்காதவர்.

கொண்டு கூட்டு: உணவின் பிண்டம் உண்டி முதற்றே, உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே என மாறிக் கூட்டுக.

உரை: ஒலிக்கும் கடல் சூழ்ந்த பரந்து கிடக்கும் அகன்ற உலகத்தைத் தமது முயற்சியால் வென்று, தம்முடைய புகழை உலகத்தில் நிலைநிறுத்தித் தாமே ஆட்சி செய்த வலியவர்களின் வழித்தோன்றலே! ஒன்று, பத்து என்ற எண்களின் வரிசையில் கடைசி எண்ணாகக் கருதப்படும் கோடி என்ற பெருமையுடைய எண் அளவுக்கு நீ வாழ்க! நீரளவுக்குத் தாழ்ந்து இருக்கும் சிறிய காஞ்சிப்பூவைக் கவ்வும் வாளை மீன்களின் கூட்டமும், சிறிய ஆரல் மீன்களும், பருத்த வரால் மீன்களும், ஒளிறும் கெளிறு மீன்களும் நிறைந்துள்ள ஆழமான அகழியும், வானளாவிய நெடிய மதிலும் உடைய வளமான பழைய ஊரில் உள்ள வலிய வேந்தனே! நீ மரணத்திற்குப் பிறகு செல்ல இருக்கும் உலகத்தில் அனுபவிப்பதற்கேற்ற செல்வத்தை விரும்பினாலும், உலகத்தை காக்கும் மற்ற அரசர்களின் வலிமையை அழித்து நீ ஒருவனே தலைவனாக விரும்பினாலும், சிறந்த புகழை நிலைநாட்ட விரும்பினாலும், அதற்குரிய தகுதியை நான் கூறுகிறேன்; நீ அதைக் கேட்பாயாக! நீரில்லாமல் வாழ முடியாத இவ்வுடலுக்கு உணவு கொடுத்தவர்கள்தான் உயிர் கொடுத்தவர் ஆவர். உணவாலாகிய இவ்வுடலுக்கு உணவுதான் முதன்மையானது. ஆகவே, உணவு என்று சொல்லப்படுவது நிலத்தோடு கூடிய நீர். அந்நீரையும் நிலத்தையும் ஒன்று சேர்த்து உணவுப் பொருள்களை விளைவித்தவர்கள்தான் உயிரையும் உடலையும் வாழவைப்பவர் ஆவர். விதைகளை விதைத்துவிட்டு மழையை எதிர்பார்த்திருக்கும் புன்செய் நிலம் அகன்ற பரப்புடையதாக இருந்தாலும் அதனால் மன்னனுக்கு ஒருபயனுமில்லை. ஆகவே, கொல்லும் போரையுடைய பாண்டியனே! நான் கூறுவதை இகழாது கேள்! வளைந்து செல்லும் ஆழமான இடங்களில் விரைந்து நீர்நிலைகளை உருவாக்கியவர்கள்தான் இவ்வுலகில் தாம் விரும்பியவற்றைத் தடுத்து நிறுத்தி வைத்துக்கொண்டவராவர். அவ்வாறு செய்யாதவர்கள், இவ்வுலகில் தாம் விரும்பியவற்றை நிலை நிறுத்திக் கொள்ளாதவராவர்.

சிறப்புக் குறிப்பு: ”நீர் இன்று அமையாது உலகு” என்று வள்ளுவர் கூறுவது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

”நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம இவண் தட்டோரே; தள்ளாதோர் இவன் தள்ளாதோரே” என்ற இந்த அடிகளில் நீர்நிலைகள் கட்டி நீரைத் தேக்கி வைத்தவர்கள், செல்வம், புகழ், ஆட்சி முதலியவற்றைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற கருத்தும் உலகுக்கு நீர் இன்றையமையாததால், நீர்நிலைகள் கட்டி, நீரைத் தேக்கி வைக்கத் தவறியவர்கள் செல்வம், புகழ், ஆட்சி முதலியவற்றை இழக்க நேரிடும் என்றும் குடபுலவியனார் கூறுவதாகக் கொள்ளலாம்.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 19. எழுவரை வென்ற ஒருவன்

 
பாடியவர்: குடபுலவியனார். இவரைப் பற்றிய குறிப்புகளை பாடல் 18 -இல் காண்க.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இவனைப் பற்ரிய குறிப்புகலைப் பாடல் 18-இல் காண்க.
பாடலின் பின்னணி: பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துப் போரில் வென்று திரும்பிய பிறகு, குடபுலவியனார் அவனைக் காணச்சென்றார். இப்பாடலில், அவன் வெற்றியைக் குடபுலவியனார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து
மன்உயிர்ப் பன்மையும் கூற்றத்து ஒருமையும்
நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய!
5 இரும்புலி வேட்டுவன் பொறிஅறிந்து மாட்டிய
பெருங்கல் அடாரும் போன்ம்என விரும்பி
முயங்கினேன் அல்லனோ யானே; மயங்கிக்
குன்றத்து இறுத்த குரீஇஇனம் போல
அம்புசென்று இறுத்த அரும்புண் யானைத்
10 தூம்புஉடைத் தடக்கை வாயடு துமிந்து
நாஞ்சில் ஒப்ப நிலமிசைப் புரள,
எறிந்துகளம் படுத்த ஏந்துவாள் வலத்தர்
எந்தையோடு கிடந்தோர் எம்புன் தலைப்புதல்வர்
இன்ன விறலும் உளகொல் நமக்குஎன,
15 மூதில் பெண்டிர் கசிந்துஅழ, நாணிக்
கூற்றுக்கண் ஓடிய வெருவரு பறந்தலை,
எழுவர் நல்வலங் கடந்தோய்நின்
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே.

அருஞ்சொற்பொருள்:
1. இமிழல் = ஒலித்தல்; கிடக்கை = உலகம்; ஈண்டுதல் = செறிதல்.2. தலை = இடம்; மயங்குதல் = கலத்தல், கூடுதல். 4. தூக்குதல் = ஆராய்தல், ஒப்பு நோக்குதல். 5. இரு = பெரிய. 6. அடார் = விலங்குகளை அகப்படுத்தும் பொறி; போன்ம் = போலும். 7. முயங்குதல் = தழுவுதல். மயங்கி = கலங்கி. 8. இறுத்தல் = தங்குதல்; குரீஇ = குருவி. 10. தூம்பு = இடுக்கு, துளை; தடக்கை = பெரிய கை, வளைந்த கை; துமித்தல் = அறுத்தல். 11. நாஞ்சில் = கலப்பை. 12. எறிதல் = அறுத்தல்; படுத்தல் = வீழ்த்துதல்; வலம் = வெற்றி, வலி. 13. எந்தை = எம்+தந்தை = எம் தலைவன். 14. விறல் = வெற்றி. 15. மூதில் = மறக்குடி; கசிதல் = உருகுதல், நெகிழ்தல். 16. கண்ணோடிய = இரங்கிய; வெரு = அச்சம்; பறந்தலை = போர்க்களம். 17. கடத்தல் = வெல்லுதல். 18. கழூஉ = கழுவி; கவைஇய = அகத்திட்ட.

கொண்டு கூட்டு: செழிய, கடந்தோய், இரும்புலி வேட்டுவன் பொறிஅறிந்து மாட்டிய பெருங்கல் அடாரும் போன்ம் என நின் கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பை யான் விரும்பி முயங்கினேன் அல்லனோ எனக் கூட்டுக.

உரை: ஒலிக்குங் கடலால் சூழப்பட்ட திரண்ட, அகன்ற உலகில் தமிழர்களின் படைகள் தலையாலங்கானத்தில் கைகலந்தன. அப்போரில், பல உயிர்களைத் தனியன் ஒருவனாகக் கொன்ற உனக்கு கூற்றுவன் ஒப்பானவனா என்று ஆராயத்தக்க அளவிற்கு உன் வெற்றிக்குக் காரணமான வேலையுடைய செழிய! வயல்களிலிருந்து தம் நிலை கலங்கி மலைக்குச் சென்று தங்கிய குருவிக் கூட்டம் போல் உடலெங்கும் அம்புகள் துளைத்துத் தங்கியதால் பொறுத்தற்கரிய புண்களைக் கொண்ட யானையின் துளையுடைய பெரிய தும்பிக்கை வாளால் வெட்டப்பட்டு நிலத்தில் கலப்பையைப்போல் புரளுகிறது. அவ்வாறு தும்பிக்கையை வாளால் வெட்டிய வீர இளைஞர்கள் தம் தந்தையரோடு போர்க்களத்தில் இறந்து கிடக்கின்றனர். அதைக் கண்ட மறக்குல மகளிர், இத்தகைய வெற்றியும் நமக்குக் கிடைத்ததோ என்று கண் கசிந்து அழுகின்றனர். அஞ்சத்தக்க போர்க்களத்தில் எழுவரின் நல்ல வலிமையை அழித்தாய். உன் அழிக்கும் ஆற்றலைக் கண்டு கூற்றுவன் வருந்தி நாணுகிறான்.

பெரிய புலியைப் பிடிக்கும் வேடன் மாட்டிய அடார் என்னும் கல்லைப் போன்ற மார்பினன் என்று எண்ணி, கழுவி விளங்கிய முத்தாரம் அணிந்த உன் மார்பை விரும்பித் தழுவினேன் அல்லனோ?


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 20. மண்ணும் உண்பர்

 
பாடியவர்: குறுங்கோழியூர்கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 17-இல் காண்க.
பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 17-இல் காண்க.
பாடலின் பின்னணி: இப்பாடலில், சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் செங்கோல் ஆட்சியின் சிறப்பைக் குறுங்கோழியூர் கிழார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

இருமுந்நீர்க் குட்டமும்
வியன்ஞாலத்து அகலமும்
வளிவழங்கு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றாங்கு
5 அவைஅளந்து அறியினும் அளத்தற்கு அரியை;
அறிவும் ஈரமும் பெருங்க ணோட்டமும்
சோறுபடுக்கும் தீயொடு
செஞ்ஞாயிற்றுத் தெறல்அல்லது
பிறிதுதெறல் அறியார் நின்நிழல்வாழ் வோரே;
10 திருவில் அல்லது கொலைவில் அறியார்;
நாஞ்சில் அல்லது படையும் அறியார்;
திறனறி வயவரொடு தெவ்வர் தேயஅப்
பிறர்மண் உண்ணும் செம்மல் நின்நாட்டு
வயவுறு மகளிர் வேட்டுஉணின் அல்லது
15 பகைவர் உண்ணா அருமண் ணினையே!
அம்புதுஞ்சும் கடிஅரணால்
அறம்துஞ்சும் செங்கோலையே!
புதுப்புள் வரினும் பழம்புள் போகினும்
விதுப்புற அறியா ஏமக் காப்பினை
20 அனையை ஆகல் மாறே
மன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே.

அருஞ்சொற்பொருள்:
1.இரு = பெரிய; முந்நீர் = கடல். 2. குட்டம் = ஆழம். 4. காயம் = ஆகாயம்; வறிது = உள்ளீஈடற்றது . 6. ஈரம் = அருள். 7. படுத்தல் = செய்தல். 8. தெறல் = வெம்மை. 10. திருவில் = வானவில். 11. நாஞ்சில் = கலப்பை. 12. திறன் = கூறுபாடு, வழி; வயவர் = வீரர். 13. செம்மல் = தலைவன். 14. வயவு = கருப்பம்; வேட்டல் = விருப்பம்; 16. துஞ்சும் = தங்கும்; துஞ்சல் = நிலைத்தல். 18. ஏமம் = காவல். 19. விதுப்பு = நடுக்கம். 20. அனைய ஆகன் மாறு = அத்தன்மையை உடைமையால்.

கொண்டு கூட்டு: அளத்தற்கு அரியை; நின் நிழல் வாழ்வோர், கொலைவில் அறியார், படையும் அறியார்; செம்மல், அருமண்ணினை; செங்கோலை; ஏமக்காப்பினை; மன்னுயிர் எல்லாம் நின் அஞ்சும்.

உரை: பெரிய கடலின் ஆழத்தையும், அகன்ற உலகத்தின் அகலத்தையும், காற்று செல்லும் திசையையும், ஆகாயத்தின் வெறுமையையும் அளந்து அறிய முடிந்தாலும், உன்னுடைய அறிவும், அருளும், கண்ணோட்டமும் அளப்பதற்கு அரிது. உன் நாட்டில், சோறு சமைப்பதற்காக மூட்டிய தீயின் வெப்பமும் சிவந்த ஞாயிற்றின் கதிர்களால் எழும் வெப்பமும்தான் உண்டு. இவற்றைத் தவிர வேறு வெப்பத்தை உன் ஆட்சியில் வாழ்வோர் அறிந்திலர். வானவில் அல்லது கொலைவில்லை அவர்கள் அறியமாட்டர்கள். கலப்பையைத் தவிர வேறு படையை அவர்கள் அறிந்திலர். போர்த்திறம் மிக்க வீரர்களோடு சென்று பகைவர்களின் நாட்டைக் கவரும் அரசே! உன் நாட்டில் கருவுற்ற பெண்கள் வேட்கையால் உன் நாட்டு மண்ணை உண்ணுவார்களே தவிர உன் பகைவர்களால் உன் நாட்டு மண்ணைக் கொள்ள முடியாது.

உன் நாட்டில் அம்புகளோடு கூடிய காவலுடைய இடங்கள் உள்ளன. அங்கே, நீ அறம் நிலைபெற்ற செங்கோல் செலுத்துகிறாய். புதிய பறவைகள் வருவது பழைய பறவைகள் தங்கள் இடத்தைவிட்டுச் செல்வது போன்ற நிமித்தங்களால் நீ கலங்காமல் வாழக்கூடிய காவலுடையவன். நீ அத்தகையவன் ஆதலால், உலகத்து உயிர்களெல்லாம் உன் நன்மையைக் கருதி அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard