அப்படியானால் வள்ளுவர் இந்து இல்லையா? +++++++++++++++++++++++++++++++++ """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""" உறுதியாக அவரை இந்து மதத்திற்குள் திணிக்க முடியாது. திருக்குறளின் கடவுள் வாழ்த்தை எடுத்துக் கொள்ளுங்களேன். "அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு" என்பது முதற் குறள். "ஆதிபகவன்" -என இந்திய மதங்களில் சமண மதத்தின்அருகக் கடவுளைத்தான் குறிப்பார்கள்.
"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்" - என்பது கடவுள் வாழ்த்தில்ல் அமைந்துளள இன்னொரு குறள். அருகக் கடவுள் நடக்கும்போது அவரது பாதம் தரையில் படாமல் அங்கொரு தாமரை மலர் அதைத் தாங்கிக் கொள்ளும் என்பது சமண நம்பிக்கைகளில் ஒன்று. மலர்மிசை ஏகினான் என இந்துக் கடவுளர் யாரையும் சொல்வதில்லையே !
காஞ்சிபுரம் அனந்தநாத நயினார் எனும் சமண அறிஞர், "திருக்குறள் ஆராய்ச்சியும், ஜைன சமய சித்தாந்த விளக்கமும்" எனும் நூலில் மிக விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் திருக் என்பதை குறள் ஒரு சமண நூல்தான் நிறுவுவார். (இதை நீங்கள் tamilvu தளத்தில் தரவிரக்கம் செய்து படிக்கலாம்). இந்நூலுக்கு மதிப்பிற்குரிய தமிழறிஞர் திரு.வி.க அவர்கள் அற்புதமான ஒரு முன்னுரை எழுதியிருப்பார். அதிலும் அவர் திருக்குறளின் சமணப் பின்புலத்தை நிறுவி இருப்பார்.
எனவே இந்திய மரபுகளில் ஏதேனும் ஒன்றுடன் திருக்குறளை அடையாளம் காண முடியுமானால் அது சமண மரபாகத்தான் இருக்க முடியும்.
சமணத்தில் திருவள்ளுவரை "ஆச்சார்ய ஸ்ரீகுந்தகுந்தர்" என ஏற்று வணங்குவதும் இங்கு குறிப்பிடத் தக்கது. வந்தவாசியிலிருந்து சுமார் ஆறு கல் தொலைவில் உள்ள பொன்னூர் எனும் கிராமத்தில் உள்ள மலையில் ஆச்சார்ய ஸ்ரீ குந்தகுந்தரின் திருப்பாத கமலங்கள் செதுக்கப்பட்டு வணங்கப் படுகின்றுன. நானும் சென்று தரிசித்து வந்துள்ளேன்.
திருக்குறளை பௌத்த நூல் எனச் சொல்வாரும் உண்டு. பௌத்தத்திற்கும் சமணத்திற்கும் இடையில் சில பொதுமைகள் உண்டு. நுணுக்கமான வேறுபாடுகளும் உண்டு. இரண்டுமே பார்ப்பனீயத்தையும், அதன் வேள்விச் சடங்குகள் முதலானவற்றையும் கடுமையாக எதிர்த்தவை. சாத்தனார் அவரது பௌத்தப் பெருங் காப்பியமான மணிமேகலையில் குறைந்தது இரு இடங்களில் திருக்குறளை எடுத்தாண்டிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. நம்மிடையே வாழும் பௌத்தவியல் அறிஞரான மதிப்பிற்குரிய ஓ.ர.ந.கிருஷ்ணன் அவர்கள் திருக்குறளை ஒரு பௌத்த நூலாகவே முன்வைத்து வருகிறார். எனினும் இந்த ஓரம்சத்தில் மட்டும் எனக்கு அவருடன் கருத்து மாறுபாடு உண்டு.
இறுதியாக ஒன்று. அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு புருடார்த்தங்களில் திருக்குறள் முதல் மூன்றுடன் நிறுத்திக் கொள்வதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வீடு பேற்றை அது குறிப்பதில்லை.
(அடுத்த பதிவுடன் முடியும்)
“இந்திரன்” என்கிற கருத்தாக்கம் பிராமணத்திலும் சிரமணத்திலும் ஒன்றா? ++++++++++++++ """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""" திருவள்ளுவர் இந்து மதத்தில் அடக்கப்பட வேண்டியவர்தான். திருக்குறள் ஒரு இந்து சமய நூல்தான் என சாதிக்கும் முயற்சிகள் அபத்தமானவையாகவும் நகைச்சுவையாகவும் முடிவதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டைப் பார்க்கலாம். இந்த சர்ச்சையின் பின்னணியில் ஒரு காணொளி பெரிய அளவில் பரப்பப் படுகிறது. மறைந்த துக்ளக் சோ திருக்குறள் இந்து மதநூல்தான் என ஏதோ ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துகொண்டு பேசும் ‘வீடியோ கிளிப்பிங்’தான் அது, அதில் அவர் ஒரு நான்கைந்து குறள்களைப் படித்துக் காட்டி திருக்குறள் ஒரு இந்துநூல் என “நிறுவ” முயல்கிறார், அந்த முயற்சியின் ஊடாக அவர் தமிழகப் பண்பாட்டு வரலாறு, மத நம்பிக்கைகள் எல்லாவற்றிலும் எத்தனை அறிவுக் குறைபாடுடையவராக உள்ளார் என்பதைத்தான் வெளிப்படுத்துகிறார்.
“திருக்குறள் இந்துமத நம்பிக்கைகளைப் பல இடங்களில் பேசறது” எனத் தொடங்கும் அவர் அதற்குச் சான்றாகச் சில குறள்களையும் அவற்றுக்கான பொருள்களாக அவர் கருதிக் கொண்டிருப்பனவையையும் குறிப்பிடுகிறார், அவற்றில் சில:
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்” “ஐந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான் இந்திரனே சாலும் கரி.” “அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டிவிடும்” “தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம் அதனை அஃதிலார் மேற்கொள்வது”
முதலான சில குறள்களைப் படித்துக் காட்டி, பிறவிப் பெருங்கடல் என்பது இந்துமதக் கோட்பாடுதானே, இந்திரன் என்பது இந்து மதக் கடவுள்தானே, தவம் என்பது இந்து மத வழக்கம்தானே... எனச் சொல்லி “திருக்குறள் ஒரு இந்துமத நூல்தான்” – என ‘நிறுவுகிறார்’ !
இந்திய மரபுகள், இந்திய மதங்கள் ஆகியன குறித்த பொதுப் புத்தியில் நிலவும் கருத்துக்கள்தான் இவை. “பிறவிப் பெருங்கடல்”, “தவம்” என்பனவெல்லாம் இந்திய மதங்கள் எல்லாவற்றிலும், அவ்வவற்றுக்குரிய தனித்துவத்துடன் பயிலப்படுகின்றன. இந்து நம்பிக்கைகளில் உள்ள தவம் மற்றும் தவமுனி என்கிற கருத்தாக்கங்களில் தவசி என்பவன் இறுக்கமான பிரம்மச்சாரியத்தைக் கடை பிடிப்பவன் அல்ல. ஆனால் சமண, பௌத்த அவைதீக மதங்களில் தவசி என்போர் முற்றும் துறந்தவர்கள். தவமுடையோரின் இறுக்கமான ஒழுக்க நெறிகளைச் சொல்வதுதான் திரிபிடகங்களில் ஒன்றான ‘விநயபிடகம்’. பௌத்தத் துறவிகள்இவ்வாறு இல்லற வாழ்விலிருந்து அகன்றவர்கள். ஆனால் இந்துமதத்தில் தவ முனிகள் என்போர் மனைவியுடன் வாழ்ந்தவர்கள். எடுத்துக்காட்டாக கோதம முனியை எடுத்துக் கொண்டால் அவர் தன் அழகிய மனைவியான அகலிகையுடன் தவமிருந்தவர். ஆயிரம் கண்ணனாக இந்திரன் சபிக்கப்பட்ட புராணக் கதையில் இந்த அகலிகையை ஏமாற்றிப் புணர்ந்ததாலேயே அவன் கோதமரால் சபிக்கப்பட்டு ஆயிரம் கண்ணனாக வாழ வேண்டியவனாகிறான்.
இந்த இந்திரனும், சிரமண மரபில் வரும் இந்திரனும் ஒன்றல்ல. சமண நூலாகிய சிலப்பதிகாரம், பௌத்த நூலாகிய மணிமேகலை இரண்டிலும் தொடக்கத்திலேயே இந்திரவிழா கொண்டாட்டங்கள் இடம் பெறுகின்றன. சிலம்பில் புகார்க் காண்டத்தில் ஐந்தாவது காதையாகவும், மேகலையில் முதற் காதையாகவே “இந்திரவிழா ஊரெடுத்த காதை”யும் இடம் பெறுவது குறிப்பிடத் தக்கது. சங்கத்தை ஒட்டிய காலத்தில் தமிழர்களின் வாழ்வில் இந்திர விழா மிக முக்கியமான பங்கு வகித்ததையே இது காட்டுகிறது. கிட்டத்தட்ட ஒருமாத காலம் கொண்டாடப்படும் திருவிழாவாக அது இருந்துள்ளது என்பர்.
பிறவிப் பெருங் கடல் எனும் கருத்தாக்கமும் இந்திய மதங்களுக்கு ஒரு வகையில் பொதுவானவையாகவும், அதே நேரத்தில் அவ்வவற்றுக்குள்ள தனித்துவங்களுடனும் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. துறவுக்குரிய “ஏது”க்கள் (ஹேது) முகிழ்த்துப் பக்குவம் அடைவது பௌத்தத் துறவில் முக்கிய கருத்தாக்கமாக இருந்ததைப் பெருங்கவி சாத்தானார் விளக்குவதே மணிமேகலை எனும் மாகாவியம். இது வைதிக மதத்தில் கிடையாது.
“இப்போது இந்திரனே சாலும் கரி” – எனும் சர்ச்சைக்குரிய குறளை எடுத்துக் கொள்வோம். இந்து புராணங்கள் முன்னிறுத்தும் ‘இந்திரனும்’, சிரமண மதங்கள் முன்வைக்கும் ‘இந்திரனும் வேறு வேறு என்பதை மனங்கொண்டு மேலே தொடரலாம்.
இக்குறளுக்குப் பிராமண மரபில் வரும் பரிமேலழகர் சொல்லும் உரை இப்படி அமையும்:
“ஐந்து அவித்தான் ஆற்றல் - புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு; அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி - அகன்ற வானத்துள்ளார் இறைவனாகிய இந்திரனே அமையும் சான்று.” – அதாவது “ஐந்து புலன் நுகர்ச்சிகளையும் கட்டுப்படுத்தியவனது ஆற்றலுக்கு அகண்ட வானத்தில் உள்ள இந்திரனே சாட்சி” என்கிறார் பரிமேலழகர். அதனூடாக இந்து புரான நம்பிக்கை ஒன்றை அவர் குறளுக்குள் திணிக்கிறார். ஐந்து புலன்களையும் அடக்கியவன் கோதமன். அவனது மனைவியை ஏமாற்றிப் புணர்ந்தவனான இந்திரன் தேவர் கோமானாக இருந்தபோதிலும், ஐந்து புலன்களையும் அடக்கியவனான கோதமனின் சாபத்தால் அவன் அதன்பின் ஆயிரம் கண்ணனாக அவமானப்பட வேண்டியிருந்தது என்கிறார் பரிமேலழகர். ஆனால் கோதமர் ஐந்து புலன்களையும் அடக்கியவர் அல்லர். அவர் அழகிய மனைவியுடன் வாழ்ந்தவர். தவிரவும் விளக்கம் அளிக்கிறேன் எனும் பெயரில் மூலத்தில் இல்லாத ‘சாபம்’ எனும் கருத்தைப் புகுத்தி ஒரு வைதிக நம்பிக்கையை இங்கே பரிமேலழகர் திணிப்பதை ஏற்க இயலாது.. இக்குறள் இடம்பெறும் அத்தியாயத்திற்கு “நீத்தார் பெருமை” என்பதே வள்ளுவர் இட்ட தலைப்பு. அதாவது முற்றும் துறந்தோரின் பெருமை. முற்றும் துறந்த முனிவர்கள் என்போரை ஆத்திரத்தில் சபிப்போர் என்பதாகச் சிறுமை செய்வதும் இங்கு பொருத்தமற்றது
பரிமேலழகருக்கு மூத்தவரும் இன்னொரு முக்கியமான உரை ஆசிரியருமான மணக்குடவர் இப்படியான திருத்தல் வேலைகளைச் செய்யாது பொருள் விளம்பிய அறிஞர். அவர் இக்குறளுக்கு அளிக்கும் விளக்கம்:
“நுகர்ச்சியாகிய வைந்தினையுந் துறந்தானது வலிக்கு அகன்ற விசும்பிலுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே யமையுஞ் சான்று. இந்திரன் சான்றென்றது; இவ்வுலகின்கண் மிகத் தவஞ் செய்வாருளரானால், அவன் தன்பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலியனென்றது.”
சுருங்கச் சொல்வதானால் “ஐந்து புலன்களையும் அடக்கியவனை மிக்க வலிவுடைய இந்திரனும் கூட அஞ்சுவான்” என்பதையே இக்குறளின் நேரடிப் பொருளாக மணக்குடவர் முன்வைக்கிறார்.
வள்ளுவரை இப்படி இந்துத்துவச் சிமிழுக்குள் அடக்க முயலும் முயற்சியைச் செய்வோர்கள் அம்பலப்படுவார்களே ஒழிய அவர்கள் இம்முயற்சியில் வெற்றி பெற இயலாது.
உலகம் திருக்குறளைப் பொதுமறையாக ஒப்புக்கொள்கிறதோ இல்லையோ, தமிழர்கள் திருக்குறளைப் பொதுமறையாகத்தான் கொண்டாடிவந்துள்ளார்கள். மதம் தாண்டி, ஒரு மொழியின், அம்மொழிபேசும் மக்களின் பொது அடையாளமாகக் குறள் கருதப்பட்டுவந்துள்ளது. இது ஏதோ திராவிடக் கட்சியினரின் சதியோ சாதனையோ அல்ல. அவர்களுக்கு முன்பே திருக்குறள் பல அறிஞர்களாலும் பொதுமறையாகப் பார்க்கப்பட்டிருக்கிறது. பரிமேலழகர் உரையை விளக்கவுரையுடன் பதிப்பித்த வை.மு.கோ. அவ்வாறுதான் கூறுகிறார். சைவ மடமான திருப்பனந்தாள் காசி மடத்தின் உரைக்கொத்துப் பதிப்புகளிலேயே கூட இதைக்காணலாம். ராமக்கிருஷ்ண மடம் பதிப்பித்த கி.வ.ஜ. ஆய்வுரையிலும் இதே முடிவுக்கே வருகிறார்கள்.
வள்ளுவர் இன்ன மதம் என்று எதை வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளும் உரிமை பாஜகவுக்கும் உண்டு. ஆனால் திடீரென்று அவருக்கு ஆதாரமற்ற சமயச்சாயம் பூசுவதிலுள்ள அரசியல் கணக்குகள் ஆபத்தானவை. சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் இணைக்கும் ஒரு முக்கியமான சரடினை அறுக்கும் முயற்சி இது. ஒருவகையில் இது இவர்கள் இந்துத்துவக் கட்டமைப்பில் உள்ளடக்கியிருக்கும் சமணர்களையும் அந்நியப்படுத்தக்கூடும். தமிழின் முக்கியமான சமண, பௌத்தப் படைப்புகளை அனைத்துத் தமிழர்களும் கொண்டாடும் வழக்கமே உ.வே.சா. காலம் தொடங்கி இங்குண்டு.
குறள் சைவ நூல் அல்ல என்று சொல்பவர்கள் எல்லாரும் சைவ எதிர்ப்பாளர்களோ, இந்துமத எதிர்ப்பாளர்களோ அல்லர். சைவ நூல் என்பதால் திருவாசகத்துக்கு உருகாமலோ போய்விட்டோம். உண்மையில் என் மகள் திருமுறையிசை கற்றுக்கொள்ளத்தொடங்கிய கடந்த ஐந்தாண்டுகளில், திருக்குறளை விடவும் தேவாரமும் திருவாசகமுமே என் காதில் அதிகம் விழுந்துகொண்டிருக்கின்றன. திருக்குறள் சைவ நூலாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்வதில் என்ன தயக்கம் இருக்கமுடியும்.
திருக்குறள் பரிமேலழகர் உரைப் பதிப்பில் (உமா பதிப்பகம்) வை.மு.கோபாலக்கிருஷ்ணமாச்சாரியார் வள்ளுவர் வைதிகக் கொள்கையினர் என்று கொண்டாலுமே இன்ன மதத்தவர் என்று கூறமுடியாது என்று எழுதுகிறார்:
/இவரது மதம் இன்னதென்று எவ்விதத்திலும் நன்கு விளங்கவில்லை. இவர் இந்நூலின் முதலிற் கூறிய கடவுள் வாழ்த்தும், பல சமயங்கட்கும் பொதுவாகவே உள்ளது; மற்ற விஷயங்களும் பெரும்பாலும் இப்படியே. இவரைச் சைவரென்றாவது வைஷ்ணவரென்றாவது ஒருசார்பாகக் கூறி யாவரும் ஒத்துக்கொள்ளும்படி நிறைநிறுத்துதற்குத் தக்க ஆதாரமொன்றுமில்லை. இவர்க்கு நாயனாரென்று வழங்குகிற பெயர் மாத்திரத்தைக் கொண்டு அவரைச் சைவரென்று சாதிக்கலாகாது; நாயனாரென்னும் அச்சொல் சைவசமயத்தில் மாத்திரமேயன்றி வைஷ்ணவ சமயத்திலும் ஜைந சமயத்திலும் கடவுளுக்கும் அடியார்கட்கும் பெயராக வழங்குதல் உணர்க. [...]
இது நிற்க: இவரது மதம் ஜைனமாயிருக்கலாமென்று சிலர் ஊகிக்கிறார்கள்; [...] ஜைநர்க்குச் சிறப்பாகவுள்ள புலால்மறுத்தல், கொல்லாமை என்ற ஒழுக்கங்களை மிக வற்புறுத்திக் கூறுதலும், அதிலும் "அவிசொரிந்தாயிரம் வேட்டலினொன்ற னுயிர்செகுத்துண்ணாமை நன்று" என யாகத்தை மறுத்தலும் முதலிய என்ப. அந்தத் திருக்குறளில் "உலகியற்றியான்", "அந்தணர் நூல்", "மறப்பினுமோத்துக் கொளலாகும் பார்ப்பான்", "பிறப்பொழுக்கம் குன்றக்கெடும்", "அறுதொழிலோர் நூன்மறுப்பர்", "அவியுணவி னான்றோர்" என்பவை முதலாகக் கூறியன கொண்டு இக்கொள்கை மறுக்கப்படும். இவர் வேதம், கடவுள், உயிர், பூதமைந்து, புலால்மறுத்தல், தவம் முதலியன கொண்டிருத்தலால், பௌத்தருமாகார். இனி, "மடியிலா மன்னவனெய்தும் அடியளந்தான், தாஅயத்தெல்லாம் ஒருங்கு" என்று கூறியிருத்தலாலும், "தாம்வீழ்வார் மென்தோட்டுயிலினினிதுகொல் தாமரைக்கண்ணானுலகு", என்று சிற்றின்பத்தை எல்லாவற்றினுஞ் சிறந்த மோட்சலோகத்துப் பேரின்பத்தினும் சிறந்தது என்று சொல்ல வேண்டிய விடத்துத் தாமரைக் கண்ணானுலகு என்று திருமாலினது ஸ்ரீ வைகுண்ட லோகத்து இன்பத்தையே குறித்தலாலும், இவ்வுலகமாகிய லீலாவிபூதிக்கும் ஸ்ரீவைகுண்டமென்கிற நித்திய விபூதிக்கும் இறைவன் திருமாலேயென்று தெரிவித்த ஆசிரியர் திருமாலுக்கு உரிய அகாரத்தையே முதன்மொழியாகத் தொடங்கினாலும், இங்ஙன் அகச்சான்று பல இருத்தலால் இவரை வைஷ்ணவர், தம்மதத்தவரென்று சாதிக்கலாம். ஆயினும், தாமரைக்கண்ணானென்பது "மலர்மிலசையேகினான்" என்றாற்போன்று அடியார்களின் இதய கமலத்தின்கணுள்ளானென்ற பொருளைக் காட்டலாமாதலால் திருமாலையே சிறப்பாகக் காட்டுவதென்று கொள்ளவேண்டியதில்லை யென்றும், "அடியளந்தான் தாஅயது" என்று கூறியமாத்திரத்தானே திருமாலினிடத்துப் பக்தியினாற்றான் கூறினாரென்று கொள்ள முடியாதென்றும், பாணினி பகவான் "அ இ உண்" என்று தொடங்கினாற்போல இந்நூலாசிரியர் மங்களவெழுத்தாக அகரத்தைத் தொடங்கியிருக்கலாமென்றும், ஆகவே, இந்த அகச்சான்றுகள் இவரை வைணவரென்று நிலைநாட்டப்போதா என்று வைணவர் கூறுவதற்கு மறுப்புக் கூறவியலும்: இங்கனிருத்தலால், இந்த நூலாசிரியரை வேதவேள்விகளையும் சாதிகளையும் உடன்பட்ட வைதிகக் கொள்கையினரென்று சொல்லலாவதன்றி, இன்ன மதத்தவர்தாம் என்று உறுதியாகச் சொல்லி நாட்டுதற்கு ஏற்ற சிறந்த ஏது ஒன்றும் காணப்பட்டிலது. இங்ஙன் இருப்பது கருதியே திருவள்ளுவரின் திருக்குறளைப்பற்றி
திருப்பனந்தாள் காசிமடம் பதிப்பித்த திருக்குறள் உரைக்கொத்து நூலின் பதிப்புரையில் இவ்வாறு கூறுகிறார்கள்: “திருக்குறள் எனும் தமிழ்மறை ஓர் ஒப்பற்ற நூலாகும். […] எல்லா மதத்தினரும் எல்லாத் துறையினரும் உரிமை கொண்டாடும் சிறப்புடையது.”
இவர்களே இவர்களது பதிப்பில் (2002) சமய அடையாளமற்ற திருவள்ளுவரின் படத்தையே போட்டிருக்கிறார்கள்.
திரு.வி.க. திருக்குறளைப் பொதுநெறி, அருநெறி என்றும், தமது தமதென்று இடுக்கில் நுழைதல் கூடாது என்றும் கூறுகிறார். ( திருக்குறள் பன்முக வாசிப்பு - பதிப்பு: மாற்று/வெ.பிரகாஷ்)
“திருவள்ளுவர், நாயன்மார் ஆழ்வார்கட்கு முற்பட்டவர். அவர் அருளிய திருக்குறளோ மன்பதைக்குரிய அருள் மறை; பொது மறை. அத்தகைய ஒருவர் திருவுருவம் சைவ வைணவக் கோயில்களில் ஏன் அமைக்கப்படுவதில்லை? சைவ வைணவ நூல்களில் அடியவர் வாழ்த்தில் அவர் ஏன் சேர்க்கப்படவில்லை? அவர் நூல் பூசைக்காலங்களில் ஏன் ஓதப்படுவதில்லை? அன்பவர்கள் உன்னுவார்களாக. முன்னாளில் திருவள்ளுவர் ஜைநர் என்று கொள்ளப்பட்ட வழக்கே, அவரைச் சைவ வைணவக் கோயில்களும், நூல்களும், சம்பிரதாயமும் புறக்கணிக்கக் காரணமாக நின்றிருக்கலாம் என்று எவரும் ஊகிக்கக் கூடும். பின்னே போந்த சைவ வைணவ அறிஞர்கள், திருவள்ளுவர் அறிவுறுத்திய அருணெறியின் பெற்றியுணர்து, அவரை ஏற்றுப் போற்றுவதோடு, அவரைத் தம்மவர் தம்மவர் என்று கொள்ளச் சொற்போரும் நிகழ்த்தலானார்கள்.
திருவள்ளுவர் அறிவுறுத்தியது பொதுநெறி - அருணெறி. ஜீவகாருண்ய ஒழுக்கம். அந்நெறியை எவர் எப்பெயரிட்டழைப்பினும் அழைக்க. திருவள்ளுவரைச் சைவரெனில், வைணவரெனில், பிறரெனில், அவரது சைவமும் வைணவமும் பிறவும் அருகதேவர் கண்ட அருணெறியின்பாற் பட்டனவென்க. அருகர் குறிப்பிட்ட ஒரு கூட்டத்தார்க்கு மட்டும் உரியவரல்லர். அவர் உலகிற்கே உரியர். அருணெறியோம்பப் போந்த ஆசிரியர் பலரும் உலகிற்குரியராவர். அவரைச் சமயவாதிகள் தங்கள் தங்களுக்கே உரியர் என்று கருதிக் கொள்கிறார்கள். அச்சுட்டறிவு பொது உணர்விற்கே கேடு சூழ்கிறது. சுட்டி இடுக்கில் நுழைதல் கூடாது. இடுக்கு இடுக்கணுறுத்தல் இயல்பு. பரந்த பொது வெளியில் உலவ முயல்வதே அறிவுடைமை. அவ்வறிவு சிறப்பளிக்கும்.”
திருக்குறள் சார்ந்த திராவிடத்தின் முதல் மோசடி எதுவென்றால் பொதுநூல், பொதுமறை என்று கூறுவதே.
இவ்வாறான போலி பிரச்சாரங்களால்தான் வள்ளுவத்திற்க்கு மற்ற மத, சமயத்தார் புரட்டு விளக்கம் கொடுக்க வாய்ப்பாகிவிட்டது.
திருக்குறள் பொது நூலா? என்றால் கிடையாது.
எனவே திருக்குறள் பொது நூல் அல்ல என்ற தலைப்பில் 1959 ல் ஸ்ரீ ஈஸ்வரமூர்த்தி பிள்ளை அவர்கள் ஒரு நூலை எழுதினார்கள். இந்நூலை திருநெல்வேலி சைவச்செந்நெறிக் கழகம் முதலில் வெளியிட்டார்கள்.
இந்நூலை பின்பு 2005 ல் திருவாவடுதுறை ஆதினம் மறுபதிப்பு செய்தார்கள்.
இந்நூலுக்கு தகுந்த விளக்கங்களோடு பழனி ஈசான சிவாச்சாரியார்கள் ஆசியுரை வழங்கி உள்ளார்கள்.
இது போன்ற நூல்கள் பொது தளத்தில் பிரச்சாரம் செய்யப்படாமையே திராவிட போலி கொள்கைகளுக்கு கடந்த காலத்தில் பலமாகிவிட்டது.
இப்பொழுதேனும் அனைவரும் இந்நூலை படிக்கவேண்டும். சிவார்ப்பணம். @தில்லை கார்த்திகேயசிவம்.