தேர்தல் காலங்களில் பலவிதமான விஷயங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்படுவதும் காரசாரமாக விவாதிப்பதும் வழக்கமான நடைமுறை தான். தற்போதைய தேர்தலின் வேகம் ஆரம்பிக்கும் முன்னரே தொடங்கி பாஜக பிரதமர் வேட்பாளரும் மத்திய நிதியமைச்சரும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் குறித்து அவ்வப்போது தங்களின் கருத்துக்களைப் பரிமாறி வருகின்றனர். ஒருசமயம் சென்ற நவம்பர் மாதம், ‘இந்திய வரலாற்றில் மிகப் பெரும்பாலான மக்கள் ஏழைகளாகவே இருந்துள்ளனர். சிலர் மட்டுமே அரசர்களாகவும் நிலக்கிழார்களாகவும் வசதியாக வாழ்ந்துள்ளனர்’ என நிதியமைச்சர் கூறினார்.
அதற்கு முன்னர், நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளிநாட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கு இந்தியாவை ஐயாயிரம் வருடத்திய ஏழை நாடாகச் சித்தரித்திருந்ததாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறை கூறியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசியபோது தான் சிதம்பரம் மேற்கண்டவாறு சொல்லிருந்தார். கூடவே நரேந்திர மோடி வரலாற்றைப் படிக்க வேண்டும் எனவும் அவர் கிண்டலடித்திருந்தார்.
மேற்குறிப்பிட்ட இரு முக்கிய தலைவர்களின் கருத்துக்கள் குறித்து கடந்த ஐந்து மாதங்களாக பொதுவெளியில் எந்தவிதமான விவாதங்களும் தொடர்ந்து எழவில்லை. எனவே அந்தக் கருத்துப் பறிமாற்றம் அப்படியே நின்று விட்டது. அதிலுள்ள அரசியலை ஒதுக்கிவிட்டு அந்தப் பொருள் குறித்து உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் தொன்மை வாய்ந்த நமது நாட்டின் பொருளாதார வரலாறு குறித்து முற்றிலும் மாறுபட்ட இருவேறு கருத்துகள் நிலவுவது நம்மிடமுள்ள பெரிய குறைபாட்டையே காட்டுகிறது.
ஒரு நாட்டின் எதிர்காலம் குறித்து வெவ்வேறு விதமான கணிப்புகள் இருக்கலாம். நிகழ்கால நடைமுறைகள் குறித்து சிந்தனைகள் மாறுபடலாம். ஆனால் நடந்து முடிந்த வரலாறு குறித்து எப்படி முற்றிலும் வேறான கருத்துக்கள் இருக்க முடியும்?
சுதந்திரம் அடைந்து அறுபத்தாறு ஆண்டுகளைக் கடந்து வந்த பின்னர் இன்னமும் முந்தைய காலப் பொருளாதார நிலை பற்றிய அடிப்படை விஷயங்களில் எவ்வாறு மாறுபட்ட கருத்துகள் நிலவ முடியும்? வளர்ந்த நாடுகள் ஏதாவது ஒன்றிலாவது இந்த மாதிரி குழப்பத்தைப் பார்க்க முடியுமா?
ஐரோப்பியர்கள் தங்களது காலனியாதிக்க காலத்தில் இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளின் வரலாறுகளையும் அவர்களுக்குத் தக்கபடிஎழுதினார்கள் என்பது அவர்களாலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையாகும். அந்த வரலாறு அவர்கள் மட்டுமே மேலானவர்கள் என்கின்ற எண்ணத்தை உருவாக்கவும், பிற நாட்டு மக்கள் எந்த விதமான சிறப்புக்கும் சொந்தமில்லாவர்கள் என்கின்ற நிலைப்பாட்டைத் தோற்றுவிக்கவும் கடைப்பிடிக்கப்பட்ட உத்தியாகும். அப்போது கல்வி, கலாசாரம், தொழில், பொருளாதாரம் எனப் பல விஷயங்களிலும் ஐரோப்பிய நாடுகளே முன்னிலைப்படுத்தப்பட்டு, மற்ற நாடுகளின் உண்மை நிலைகள் மறைக்கப்பட்டன.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்து வந்த தேசியக் கல்வி முறையை அழித்து புதிய முறையைத் திணித்தார்கள். அதன்படி கல்வியின் அடிப்படையும் நோக்கமும் மாறிப் போயின. நமது நாட்டின் செயல்பாடுகள், உண்மையான வரலாறு என எல்லாமே கல்வித் திட்டத்திலிருந்து விலகிப் போயின. நாடு சுதந்தரம் பெற்ற பின் கல்வித் திட்டத்தை மாற்றுவதன் அவசியத்தைப் பலரும் வலியுறுத்தியும் அது இன்று வரை நடைபெறவில்லை. எனவே கல்வி குறித்த விஷயங்களில் மேற்கத்திய தாக்கங்களே இன்னமும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. நீண்ட பாரம்பரியமுள்ள இந்தியாவுக்கெனப் பல துறைகளிலும் ஒரு வரலாறு இருந்திருக்க வேண்டும் என்பது பற்றி, கல்வி நிறுவனங்கள் யோசிப்பது கூட இல்லை.
அதுவும் பொருளாதாரம் போன்ற மிகவும் அடிப்படையான துறையில் நமது நாட்டுக்கு என நல்ல பின்னணி எதுவும் இருக்க முடியாதென நாமே கருதிக் கொள்கிறோம். கடந்த இருநூறு வருடங்களாக உலகப் பொருளாதார அரங்கில் ஐரோப்பாவும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவும் முன்னிலையில் இருந்து வருகின்றன.ஆகையால் அதை வைத்துக்கொண்டு வரலாற்றுக்காலம் முழுவதும் அப்படியே இருந்திருக்கலாம் என எண்ணிக் கொள்கிறோம். ஏனெனில் நாம் படிக்கும் வரலாறு ஐரோப்பாவின் தொழிற்புரட்சியில் தொடங்கியே உலகில் பொருளாதார வளர்ச்சி ஆரம்பித்ததாக போதிக்கிறது.
மேலும் நாம் சுதந்திரம் வாங்கும்போது இந்தியா ஒரு பெரிய ஏழை நாடாகவே இருந்தது. எனவே நமது மனக் கண்ணில் அந்த வறுமையான சித்திரமே முன் காட்டப்படுகிறது. அதற்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தான் நமது பொருளாதாரம் சிதைக்கப்பட்டு வீழ்ச்சியடைந்தது. ஆனால் அது பற்றி நமக்கு விரிவாகப் போதிக்கப்படுவதில்லை.
இந்தியப் பொருளாதாரத்தின் முந்தைய நிலைகள் குறித்து பண்டைய காலம் தொடங்கி, தொடர்ந்து வெளிவந்த பல இலக்கியங்கள் பேசியுள்ளன. விவசாயம், தொழில்கள், வியாபாரம் பற்றிய பல விஷயங்களை அவை குறிப்பிடுகின்றன. உதாரணமாக சிலப்பதிகாரம் அப்போது தமிழ் நாட்டில் சர்வதேச வணிகம் எவ்வாறு சிறப்பாக நடைபெற்று வந்தது, எப்படி பல நாடுகளிலிருந்தும் வணிகர்கள் வந்து சென்றார்கள் என்பது பற்றியெல்லாம் விவரிக்கிறது.
உலகத்தின் முதல் பொருளாதார மற்றும் அரசியல் நூலாக ‘அர்த்த சாஸ்திரம்’ கருதப்படுகிறது. அது சுமார் 2,300 வருடங்களுக்கு முன்னால் மௌரிய சாம்ராஜ்ய காலத்தில் எழுதப்பட்டது. விவசாயம், ஜவுளி, பிற தொழில்கள், வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதி, வரிக் கொள்கை, ஊதியம், நுகர்வோர் நலன் எனப் பல விஷயங்களைப் பற்றியும், அவற்றை முறைப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அவற்றுக்குத் தேவையான நிர்வாக முறைகள் ஆகியவை பற்றியும் அந்த நூல் விவரிக்கின்றது. பொருளாதாரம் பற்றிய சரியான அறிவும் அனுபவங்களும் இல்லாமல் அப்படிப்பட்ட நூல் எழுதப்பட்டிருக்க முடியாது. மேற்குலகத்தில் முதல் பொருளாதார நூல் பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பகுதியிலேயே வந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, இந்தியாவுக்கு தொடர்ந்து பல நாடுகளிலிருந்து வெளி நாட்டவர்கள் வந்துகொண்டு இருந்துள்ளனர். பிந்தைய காலங்களில் தொழில் மற்றும் பணி நிமித்தமாக ஐரோப்பியர்கள் பலர் நமது நாட்டுக்கு வந்து தங்கியிருந்தும் பார்த்தும் சென்றுள்ளனர். அவர்களில் பலர் இந்திய வாழ்க்கை முறை, சமூகம், கலாசாரம், பொருளாதாரம் உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி எழுதியுள்ளனர். அவை பெரும்பாலும் இந்தியா மேற்கத்திய நாடுகளை விடப் பலவகைகளிலும் சிறப்பாக இருந்ததாகவே சொல்கின்றன.
ஆயினும் அண்மைக் காலம் வரையிலும் உலக நாடுகளின் தொடர்ச்சியான பொருளாதாரப் பின்னணி குறித்து ஒரு சரியான வரலாற்றுப் பார்வை இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் 1980களில் தொடங்கி கடந்த முப்பது ஆண்டுகளாக பலஅறிஞர்கள் உலகப் பொருளாதாரம் குறித்து சில முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டு வந்துள்ளனர். அவை மேற்கு நாடுகளின் பொருளாதார வரலாற்றை மட்டுமன்றி, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பிற நாடுகளின் வரலாறு குறித்தும் முக்கியமான விஷயங்களைச் சொல்கின்றன.
அவை உலகப் பொருளாதாரம் என்பதே ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆரம்பித்தது என்பதை உறுதியாக மறுக்கின்றன. ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்துக்கான அடித்தளம் காலனியாதிக்க காலத்தில் அவை ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் மேற்கொண்ட சுரண்டல்கள் மூலமே என்பது குறித்து முன்னரே பல விவரங்கள் சொல்லப்பட்டுள்ளன. மேற்கண்ட ஆய்வுகள் உலகப் பொருளாதாரத்தில் இந்தியா மற்றும் சீனா ஆகியவையே முதன்மையான பங்கு வகித்து வந்துள்ளன என்பதை நிறுவுகின்றன.
அவற்றில் முக்கியமாக உலகிலுள்ள பணக்கார நாடுகளின் கூட்டமைப்பான பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் முன்னேற்றத்துக்கான அமைப்பு ( Organisation for Economic Cooperation and Development) வெளியிட்டுள்ள ஆய்வுகள் குறிப்பிடத் தக்கவையாகும். அவை பிரபலபொருளாதார வரலாற்றாசிரியரான ஆங்கஸ் மாடிசன் அவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டவை. உலகப் பொருளாதாரம் குறித்த கடந்த இரண்டாயிரம் வருட வரலாற்றைப் புள்ளி விபரங்களுடன் அவை முன் வைக்கின்றன. இன்று வரைக்கும் அந்த ஆய்வுகளின் முடிவுகள் யாராலும் மறுக்கப்பட இயலாதவையாக உள்ளன.அவற்றின் மூலம் உலகப் பொருளாதாரம் குறித்த ஒரு தெளிவான சிந்தனைக்கு வழிகோலப்பட்டுள்ளது.
அவை இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் பொது யுகம் தொடங்கிய காலத்தில், உலகப் பொருளாதாரத்தின் முதன்மையான சக்தியாக இந்தியா விளங்கி வந்துள்ளதை எடுத்துச் சொல்கின்றன. அப்போது உலகின் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு ( 32.9 விழுக்காடு) இந்தியாவிடம் இருந்துள்ளது. இரண்டாவது நிலையில் சீனா 26.2 விழுக்காடு பங்குடன் இருந்துள்ளது. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகள் மட்டும் சுமார் அறுபது விழுக்காடு அளவு பொருளாதார பலத்தை வைத்திருந்துள்ளன. அதே சமயம் மேற்கத்திய நாடுகள் அனைத்தும் சேர்ந்து மொத்தமாக 15 விழுக்காட்டுக்கும் குறைவான அளவே பங்களித்துக் கொண்டிருந்தன.
உலகப் பொருளாதாரத்திற்கு மூன்றில் ஒரு பங்கினை அப்போதே இந்தியா அளித்துக் கொண்டிருந்தது என்பது அசாத்தியமானது. அந்த அளவுக்கு பொருளாதார வரலாற்றில் உலகின் எந்த மேற்கத்திய நாடும் இன்று வரை பங்களித்ததில்லை. எந்த ஒரு நாடும் திடீரென உலகப் பொருளாதாரத்தின் முதல்நிலைக்கு செல்ல முடியாது. அப்படியெனில் பொது யுகம் தொடங்குவதற்கு பல நூற்றாண்டுகள் முன்னரே முன்னேற்றத்துக்கான அடித்தளங்கள் இந்தியாவில் போடப்பட்டிருக்க வேண்டும். மேலும் வளர்ச்சிக்கு ஏதுவான வழிமுறைகள் இருந்திருக்க வேண்டும்.
சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முந்தைய சிந்து- சரஸ்வதி நாகரிக காலத்தை ஆய்வு செய்த நிபுணர்கள் கூட, அப்போதிருந்த திட்டமிட்ட நகரமைப்பு, வளர்ச்சிக்கான அடையாளங்கள் ஆகியவை குறித்து மிகவும் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளனர். பொதுயுக காலத்துக்கு முந்தைய பல நூற்றாண்டுகளில் நிலவிய சர்வதேச வணிகம், வியாபாரம், தொழில்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விபரங்கள் உள்ளன. ஆனால் தொடர்ச்சியாக நாடு முழுமைக்கும் பொருந்தக் கூடிய அளவில் தற்போது கிடைத்துள்ளது போன்ற புள்ளிவிவரங்கள் அப்போதைய காலங்களுக்கு இல்லை.
இந்தியப் பொருளாதாரத்தின் மற்றொரு தனிச்சிறப்பு அதன் நீடித்த தன்மையாகும். பொதுயுகம் தொடங்கிய காலத்தில் இருந்து 1600ஆம் ஆண்டு வரை இந்தியாவே உலகப் பொருளாதாரத்தில் வல்லரசாக முதல்நிலையில் இருந்து வந்துள்ளது. சீனா தொடர்ந்து இரண்டாமிடத்தில் இருந்துள்ளது. 1600ல் சீனா முதலிடத்தை அடைய, பின்னர் 1700ல் மீண்டும் இந்தியா முதலிடத்தைப் பிடிக்கிறது. மறுபடியும் ஒரு முறை 1820 இல் சீனா முதலிடத்தைப் பிடிக்க இந்தியா இரண்டாம் நிலையை அடைகிறது. எனவே கடந்த இரண்டாயிரமாண்டு காலப் பொருளாதார வரலாற்றில் மிகப் பெரும்பான்மையான காலம் இந்தியாவே முதலிடத்தில் இருந்துள்ளது. இந்தியாவும் சீனாவுமே உலகப் பொருளாதாரத்தின் இரண்டு வலுவான சக்திகளாக இருந்து வந்துள்ளன.
பின்னர் அவை இரண்டும் வலுவிழந்ததற்கு முக்கியக் காரணமே காலனி ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட சிதைவுகளாகும். ஐரோப்பியர்களின் ஆட்சிக்காலத்தில் உலக வரலாறே கண்டிராத கொடுமைகளை இந்தியா எதிர்கொண்டது என அமெரிக்க வரலாற்றாசிரியர் வில் துரந்த் விவரித்துள்ளார். அப்போதுதான் முதல்தரமான பொருளாதாரமாக விளங்கி வந்த இந்தியா, வறுமையும் பிணிகளும் நிறைந்த ஏழை நாடாக மாறிப் போனது. ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட பஞ்சங்கள் பல லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்துக் கொண்டன. தொன்றுதொட்டு ஏற்றுமதிக்குப் பெயர் பெற்றிருந்த நாடு, இறக்குமதியைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
1750ல் உற்பத்தித் துறைக்கு உலக அளவில் கால் பகுதியைக் கொடுத்துக் கொண்டிருந்த இந்தியா, 1900 ஆம் வருடத்தில் வெறும் 1.7 விழுக்காடு மட்டுமே கொடுக்கக் கூடிய நிலைமைக்குத் தள்ளப்பட்டது. 1800லிருந்து 1850 வரைக்குமான ஐம்பது வருட காலத்தில் சென்னை பிரசிடென்சியில் மூன்றில் ஒரு பங்கு விவசாயிகள் அரசாங்கத்தின் கொடுமையான வரிகளால் தொழிலைவிட்டுச் சென்றுவிட்டனர் என பொருளாதார நிபுணர் ரமேஷ் தத் தெரிவிக்கிறார். எனவே பத்தொன்பதாம் நூற்றாண்டில் தனிநபர் ஆண்டு வருமானம் மிகவும் குறைவாகப் போனதாக தாதாபாய் நௌரோஜி குறிப்பிட்டுள்ளார்.
சமகாலத்தில் பணக்கார நாடுகளாகக் கருதப்படும் மேற்கத்திய நாடுகள் உலகப் பொருளாதார வரைபடத்தில் பதினாறாம் நூற்றாண்டில் தான் முதன்முதலில் தலையைக் காட்டுகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் தொடங்கியே அவை குறிப்பிடத்தக்க பொருளாதார பலத்தைப் பெறும் பாதையில் பயணிக்கின்றன. மேலும் அண்மைக் காலமாக அந்த நாடுகள் வீழ்ச்சியைக் கண்டுவருவது அவர்களே ஒப்புக்கொள்ளும் விஷயமாகும். அதே சமயம் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் பொருளாதாரங்கள் உலக அளவில் மீண்டும் மேலெழுந்து வரத் தொடங்கியுள்ளன. எதிர்காலத்தில் இந்த இரு நாடுகளும் உலகப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கினை வகிக்கும் என கணிக்கப்படுகிறது.
உலகப் பொருளாதார வரலாற்றின் முக்கியமான காலகட்டத்தில் நாம் இப்போது இருந்து வருகிறோம். மேற்கத்திய சித்தாந்தங்கள் பெருமளவு தோற்று வருகின்றன. அதேசமயம் நமது நாட்டுக்கென வலிமைகளும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளதை ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த சமயத்திலாவது நமது பொருளாதார வரலாறு, அதன் அடிப்படைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த சரியான உண்மைகளைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. இதில் குறிப்பாக நமது நிபுணர்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் அறிவு ஜீவிகளின் பங்கு அதிகமாக உள்ளது.
வரலாறு குறித்த தெளிவான பார்வையில்லாத சமூகத்தைக் கொண்ட எந்த நாடும் எதிர்காலத்துக்கான பொருத்தமான கொள்கைகளை வகுக்க இயலாது. அதிலும் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பவர்களுக்கே அடிப்படையான வரலாற்று உண்மைகள் கூடத் தெரியாமல் இருப்பது மிகவும் ஆபத்தானதாகும்.