New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொல்காப்பியர் கால வழிபாட்டு மரபும், நம்பிக்கைகளும் பா.பிரபு


Guru

Status: Offline
Posts: 24799
Date:
தொல்காப்பியர் கால வழிபாட்டு மரபும், நம்பிக்கைகளும் பா.பிரபு
Permalink  
 


தொல்காப்பியர் கால வழிபாட்டு மரபும், நம்பிக்கைகளும்

தொடக்க காலத்தில் இயற்கையின் அச்சந் தரும் செயல்களே மனிதனை கடவுள் நெறிக்கு இட்டுச் சென்றது என்பது மானிடவியலாளர் சிலரின் கருத்தாகும். மனிதன் தன் ஆற்றல் ஓர் வரம்புக்குட்பட்டது என்பதை உணர ஆரம்பித்த நிலையில், கடவுள் கோட்பாடு உருவாகியது என்பர். தன் அறிவுக்கும், ஆற்றலுக்கும் முறையே புலப்படாத உட்படாதவற்றின் மீதான அச்சம் காரணமாக மனிதன் முதலில் இயற்கையை வழிபடத் தொடங்கி பின்னர் கடவுள் நம்பிக்கை கொள்ளத் தொடங்கினான். அவை வழிபாட்டு மரபாய் மாறியது.

                அவ்வடிப்படையில் பண்டைய தொல்காப்பிய காலத் தமிழ்ச்சமூக தெய்வக் கோட்பாடுகள் ஐநில மக்கள் வாழ்வியலுக்கேற்ப உருவாகி இருக்கின்றன. அவை இன்றைய மத நிறுவனங்கள், பெரும் சடங்குகள் அடிப்படையிலான இறைவழிபாடுகளைப் போல அன்று இருந்திருக்கவில்லை.

தெய்வம்

“மாயோன் மேய காடுறை உலகமும்

 சேயோன் மேய மைவரை உலகமும்

 வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

 வருணன் மேய பெருமணல் உலகமும்

 முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

 சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” (தொல். நூ. 951)

என்பது தொல்காப்பியம்.

                ஐந்திணைகளாகப் பகுக்கப்பட்டிருந்த பண்டைத் தமிழகத்தில் குறிஞ்சிக்குச் ‘சேயோன்’ என்ற முருகனும், முல்லைக்கு ‘மாயோன்’ என்ற திருமாலும், மருதத்திற்கு ‘வேந்தன்’ என்று குறிப்பிடப்படுகின்ற இந்திரனும், நெய்தலுக்கு வருணன் (வாரணன் என்று அழைப்பர்) என்ற தெய்வமுமாக நானிலக் கடவுளைத் தொல்காப்பியர் வெளிப்படுத்துகின்றார்.

                பாலை நிலத்திற்குக் கொற்றவையும் (காளி என்றும் அழைப்பர்) தெய்வமாய் இருந்துள்ளது. வேறு கடவுளைப் பற்றியோ, மத நிறுவனத்தைப் பற்றியோ குறிப்புகள் இல்லை.

போர் மரபில் வழிபாடுகளும், நம்பிக்கைகளும்

பண்டைய காலப் போர்மரபில் வழிபாட்டுச் சடங்குகள் நிகழ்ந்துள்ளதைத் தொல்காப்பியம் உறுதி செய்கிறது.

“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்

 சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தல் என்று

 இருமூன்று வகையிற் கல்லொடு புணர|| (தொல். நூ. 1006)

என்று தொல்காப்பியம், போர்க்களத்தில் இறந்துபட்ட வீரரை நினைத்து நடுகல் நட்டு வழிபட்ட முறையை குறிப்பிடுகின்றது. சங்க இலக்கியங்களிலும் இத்தகு நடுகல் வழிபாட்டு முறையைக் காண முடிகின்றது. குறிப்பாக குறிஞ்சித் திணையில், மலையும் மலை சார்ந்த வாழ்வில் ஆநிரை கவர்தல், மீட்டலில் ஈடுபட்டு, வீரமரணம் அடைந்தவர்களுக்கே ‘நடுகல்’ நட்டு வழிவழியாக வழிபாடு நிகழ்ந்திருக்கின்றது.

                நடுகல் வழிபாட்டு முறை பல்வேறு இடங்களில் காணப்பட்டுள்ளது. “இறந்தவனது ஆன்மாவை சில சடங்குகள் மூலம் ஓர் குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைக்கலாம். அங்குள்ள ஒரு பொருளில் நுழைந்து கொள்ளச் செய்யலாம் என்ற நம்பிக்கை உலகமெங்கும் பண்டைய மக்களின் பண்பாட்டில் காணப்படுகிறது” என்பர். புறநானூற்றிலும் (பா. 265, 264, 232, 329) சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குக் கல்லெடுத்து வந்து வழிபட்ட செய்தியைக் காண முடிகிறது. சிலம்பில் வஞ்சிக் காண்டத்தில் விஞ்சி நிற்கும் வழிபாட்டுச் செய்திகளும் காதைகளின் பெயர்களும், நடுகல் வழிபாட்டு மரபை உணர்த்தும். மேலும்,

                “வெற்றி சிறப்பின் வெவ்வாய் வேலன்” (தொல். நூ. 1004) என்ற அடிகள் போருக்கு செல்லும் போது வெற்றி கருதி சிவந்த வாயினையுடைய வேலனை வழிபட்டதையும், “மாயோன் மேய மன்பெறு சிறப்பின்” (தொல். நூ. 1006: 9) மாயோனைத் தெய்வமாகக் கொண்ட மண்ணின் சிறப்பினை எண்ணியும் கரந்தை வீரர்கள் போருக்குச் சென்றதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, “உடல்வேந் தடுக்கிய உன்னநிலையும்” (தொல். நூ. 1006:8) போருக்குச் செல்லும் போது நல் நிமித்தம் பார்ப்பதையும் கரந்தை வீரர்கள் கொண்டிருந்தனர் என்பார் தொல்காப்பியர். “உன்னமென்பது ஒரு மரம். நல்லதாயின் தளிர்த்தும் தீயதாயின் உலறியும் அது நிமித்தங் காட்டு மெனலால், அதைக் கண்டு அதனொடு சார்த்தி நிமித்தம் பார்க்கும் குறிப்பு நுவலப்பட்டது” (தி.சு.பாலசுந்தரம் உரை. பக் 265) என்பர். மேலும், தாம் வழிபடுகின்ற தெய்வம் ஊரைக் காக்கும் என்ற நம்பிக்கை தொல்காப்பியர் கால மக்களின் நம்பிக்கையாக இருந்ததை, “வழிபடு தெய்வம் நிற்புறங் காப்ப” (தொல். நூ. 1367) என்ற நூற்பாவின் அடிகள் உணர்த்துகின்றன.

பேய் பற்றிய நம்பிக்கை

                தொல்காப்பியர் காலத்தே மக்களிடத்தே பேய்கள் பற்றிய நம்பிக்கை இருந்திருக்கிறது. “பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்” (தொல். நூ. 1025) பேஎத்த மனைவி ஆஞ்சியானும்” (தொல். நூ. 1025) என்ற அடிகளின் வழியாக, போரில் இறந்துவிட்ட அல்லது விழுப்புண்பட்ட வீரர்களை பேய்கள் நின்று பாதுகாக்கும் என்ற நம்பிக்கையும், பழந்தமிழக மக்களின் நம்பிக்கையாக இருந்திருக்கிறது. “மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் ஃ துறந்த ஒழுக்கங் கிழவோற் இல்லை” (தொல்.நூ.1081) என்ற நூற்பாவில் ‘ஓரை’ என்ற சொல்லிற்கு பல பொருட்களை குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, நாழிகை, விளையாட்டு, முகூர்த்தம், ராசி என்று குறிப்பிடுகின்றனர். “நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்” (தொல்.1060) என்ற நூற்பாவில் ‘புள்’ என்ற சொல்லிற்கு முன்னர் பறவை யென்றும், பிற்காலத்தே சகுனம் என்றும் குறிப்பிடுவர். இதன் வழி, பொதுவாக பண்டைய மக்களிடம் ‘நிமித்தம்’ பார்க்கும் வழக்கம் இருந்துள்ளதை அறிய முடிகிறது. பண்டைய காலத்தில் ‘நிலையாமை’ கருத்துக்களும், ஊழ்வினை நம்பிக்கையும் இருந்துள்ளதையும் அறிய முடிகிறது.

கடவுள்

                “காமப்பகுதி கடவுளும் வரையார்” (தொல். நூ. 1029) என்ற நூற்பாவில் காமக் குறிப்பை வைத்து இலக்கியம் பாடுகின்ற பொழுது தேவரிடத்தும் மக்களிடத்தும் வரையார் என்று உரையாசிரியர் விளக்கம் தருகின்றனர். மேலும்,

“கொடிநிலை கந்தழி வள்ளி என்ற

வடுநீங்கு சிறப்பின் முதலான மூன்றுங் (தொல். நூ. 1034)

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” (தொல். நூ. 1034) என்று கொடிநிலை, கந்தழி,  வள்ளி-மூன்று துறையும் கடவுள் வாழ்த்தோடே பொருந்தி வரும் என்றும், “அமரர்கண் முடியும் அறுவகை யானும்” (தொல். நூ. 1027) என்று, தேவர் நிலைமையில் வைத்து வாழ்த்துதற்குரிய அறுவகை நிலையான சான்றோர், புலவர், வேந்தர், ஆன், மழை, உலகம் என அறுவகையில் வாழ்த்துதல் மரபெனவும் தொல்காப்பியர் சுட்டுகின்றார். இவை கடவுளை வாழ்த்தும் வகைப் பற்றிய குறிப்பாகும். இதன் வழி கடவுளை பாடும் மரபை பண்டையோர் கொண்டிருந்ததையும் அறிய முடிகிறது.

                திணைத் தெய்வங்கள் வழிவழி வணங்கப்பெற்று, காலவோட்டத்தில் தமிழர் வழிபாட்டு மரபில் மாற்றங்கள் நிகழ்ந்து புறச்சமயங்கள் வந்து கலந்து கலப்பு வழிபாட்டு மரபு தோன்றிவிட்டது. ‘தெய்வம்’ என்ற சொல் தொல்காப்பியத்தில் ஒன்பது இடங்களில் இடம்பெற்றுள்ளன. ‘இறை’, ‘இறைவன்’ என்ற சொற்கள் பண்டைய காலத்தில் தலைவனை குறிக்கும் சொல்லாகவும் காணப்படுகிறது.

                இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழிலக்கியங்களில் ‘சமயம்’ என்ற சொல்லே இல்லை. அதற்குப் பிற்பட்ட நூல்களில் தான் சமயம், மதம் என்ற சொற்கள் காணப்படுகின்றன. எனவே, சங்க காலத்தில் மக்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருப்பினும் அவர் சிவன், திருமால் போன்ற கடவுளர்களை வழிபட்டாலும் சைவ சமயம், வைணவ சமயம் போன்ற சமயப்பற்று வேறூன்றவில்லை என்பது தெரிகின்றது.

                ‘தெய்வம்’ என்பது கருப்பொருளிலேயே கூறப்பட்டுள்ளது. கருப்பொருளானது நிலத்தில் காலத்தால் கருக்கொள்ளும் பொருளாகும். இவை தோன்றி நின்று மறைவனவே யாகும். இதன் மூலம் ‘தெய்வம்’ என்று குறிப்பிடப்படுவது இறந்த முன்னோர்களே எனக் கருதவும் இடமுண்டு. தெய்வ வழிபாடே அன்றி நிலையான ‘கடவுள்’ என்ற கொள்கைப் பற்றி தொல்காப்பியத்தில் எங்கும் சுட்டப்பெறவில்லை என்பது ஆராயத்தக்கதாகும்.

                ஐந்திணைத் தெய்வம் பற்றி பலர் விளக்கம் தந்திடினும் தேவநேயப்பாவாணர் தெளிவுறச் சுட்டுகின்றார்.

                ‘குறிஞ்சி நிலத்து மக்கள் தம் தெய்வத்தை தீயின் கூறாகக் கொண்டதால் சேந்தன் (சிவந்தவன்) சேயோன் என்று பெயரிட்டு அழைத்தனர். முல்லைநிலத்து மக்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாததாக முதற்கண் மழையே இருந்ததால் முகிலையே தெய்வமாகக் கொண்டு ‘மால்’ என்று தம் தெய்வத்திற்கு பெயரிட்டு வழிபட்டனர். மருத நிலத்து மக்கள் இவ்வுலகில் தீவினையை விட்டு நல்வினை செய்து வாழும் கொள்கை கொண்டோராக, இம்மையில் வேந்தனாக அறவாழ்க்கை நடத்தினால், மறுமையில் தேவர் கோனாய்ப் பிறப்பான் என்ற கொள்கை கொண்டு தேவர்கோனைத் தேவர் ‘வேந்தன்’ என்றனர். மேலும், உழவுத் தொழிலுக்கு இன்றியமையாத மழையானது விண்ணிலிருந்து பொழிகிறது. இவ்விண்ணுலக வேந்தனே ‘இந்திரன்’ ஆயினான். நெய்தல் நிலத்து மக்கள் கடலை நம்பியே வாழ்க்கை நடத்தியதால் தம் தெய்வத்தைக் கடல் தெய்வமாகவே கொண்டு அதற்கு ‘வாரணன்’ அல்லது ‘வருணன்’ என்று பெயரிட்டு வணங்கினர். பாலை நிலத்து மக்களின் வாழ்வு வறட்சியும், போர்க்களங்களும், பிணங்களும், பிணந்திண்ணிப் பேய்களும் கொண்டதால் பேய்களுக்குத் தலைவியாகிய ‘காளி’யை தெய்வமாகக் கொண்டனர். இத்தகைய ஐந்நிலத்து மக்களும் தம் வாழ்வியலோடு ஒன்றி வந்த இயற்கையை பொருத்தி தெய்வத்தை தோற்றுவித்தனர். மேற்கூறிய கருத்தை தேவநேயர் தமிழர் மதம் நூலில் தெளிவுற குறிப்பிடுகின்றார்.

                மேலும், பண்டைய தமிழரின் தெய்வ வழிபாட்டு முறைகளுக்குக் காரணமாக 1. அச்சம், 2. முற்காப்பு, 3. நன்றியறிவு, 4. பாராட்டு, 5. அன்பு, 6. கருதுகோள், 7. அறிவு வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இறை வழிபாடு தோற்றம் பெற்றதாகவும் குறிப்பிடுகின்றார்.

                ‘தீயும், இடியும் போன்ற பூத இயற்கைக்கும், பாம்புபோலும் நச்சுயிரிக்கும், இறந்தோராவிகட்கும், பேய்கட்கும் அஞ்சிய அச்சத்தால் தெய்வ வணக்கம் முதற்கண்ணாகத் தோன்றியது. கொள்ளை நோய், பஞ்சம், இயற்கை சீற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்குமாக முற்காப்பு அடிப்படையில் அச்சம் தோன்றியது. இவை தெய்வங்களின் சீற்றத்தால் நேர்பவையென எண்ணி அச்சம் கொண்டனர். மேலும், உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத கதிரவன், மதி, மரம், ஆ, இன்ன பிறவற்றையும் தெய்வமாக நன்றியறிவின் பொருட்டு வணங்கினான். மறவனையும், மழை வரவழைத்தும், பழுக்கக் காய்ச்சிய பொன்னைக் கையிலேந்தியும், தீயோரைச் சாவித்தும், சினத்தால் ஊரினை எரித்தும், உடன்கட்டை ஏறியும், கடுங்கற்பைக் காத்தப் பத்தினிப் பெண்டிற்கும்; கல்நட்டு விழாவெடுத்தது பாராட்டே ஆகும். இவ்வடிப்படையிலும் தெய்வம் தோற்றம் பெற்றது. அரசன் இறந்த பின்னர் அன்பு மிகுதியால் அவனை வழிபட்டதும், கண்ணால் காணும் இயற்கைக் கூறுகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலம் தெய்வங்கள் கருதுகோளின் அடிப்படையிலும் தோற்றம் பெற்றன. அதுமட்டுமன்று அறிவு வளர்ச்சி பெற்ற பின்னர் மறுமையும், கடவுள் உண்மையும் கண்டு நம்பிக்கையின் அடிப்படையிலும் ‘தெய்வம்’ தோன்றிற்று என்று தேவநேயப்பாவாணர் அவர்கள் பழந்தமிழரிடம் உருவாகிய ‘தெய்வம்’ பற்றிய சிந்தனையை பற்றி விளக்குவதைக் காண முடிகிறது. இத்தகைய வழிபாட்டு முறையே பழந்தமிழரின் வழிபாட்டு முறையாம். மேற்கூறப்பட்டவையே தொல்காப்பியம் குறிப்பிடும் வழிபாட்டு முறையாம்.

                இதன் வழியாக, தொல்காப்பிய காலப் பழந்தமிழகத்தில் நில அடிப்படையில் கடவுள் கோட்பாடுகள் தோன்றியிருப்பினும் நிலைத்த மதமோ, சமயமோ தொல்காப்பியத்தில் காணப்படவேயில்லை. இடைக்காலச் சூழலே மதங்கள் தோன்றுவதற்குரிய காலமாக இருந்துள்ளன எனலாம். இதன் வழி நிலத்திற்கு ஏற்ப உருவ வழிபாடு, இயற்கை வழிபாடு ஆகிய இரண்டும் பழந்தமிழகத்தில் இருந்துள்ளன என்பதும் போர் மரபில் வழிபாடுகளும் நம்பிக்கைகளும் தோன்றியிருக்கின்றன என்பதும் தொல்காப்பியத்தில் காணும் வழிபாட்டு மரபு கோட்பாடுகளாம்.

சான்றெண் விளக்கம்

1.            தொல்காப்பியம், இளம்பூரணர் உரை, திசு.பாலசுந்தரம் உரை.

2.            தமிழர் மதம், தேவநேயப்பாவாணர்.

3.            நடுகற்களும் நம்பிக்கைகளும், நா. வானமாமலை (ஆராய்ச்சி மலர்)

- பா.பிரபு, முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard