எங்கள் பரம்பரை… விஜய நகரப் பரம்பரை…
-பெரியாரின் ஒப்புதல் வாக்கு மூலம்.
பெரியார் எப்போதும் பிறப்பால் வேறு இனத்தவர் என்று மேடை தோறும் கூறிக்கொண்டே தம்மை தமிழராகக் கருதுவதாகவும், தமிழ்ச்சமூகத்திற்கு பாடுபட்டு வருவதாகவும் கூறிக் கொள்வார். இது உண்மையல்ல. சட்ட எரிப்புப் போராட்டத்தின் போது பிரதமர் நேருவிற்கு தான் என்ன பரம்பரை என்பதை தெளிவாகவே கூறியுள்ளார். அது பின் வருமாறு:
“இவர்களாவது பரம்பரை கருமாதி பண்ணி பிழைத்துக் கொண்டு இருந்த குடும்பம், என் முன்னோர்கள் என்ன அப்படிப்பட்ட பரம்பரையா? இந்த நாட்டிலே எத்தனையோ ஆண்டு சேரன், சோழன், பாண்டிய, நாயக்கன் ஆண்டு இருக்கிறார்களே… விஜயநகரத்திலே மதுரையிலே எங்கள் பரம்பரை ஆண்டிருக்கின்றானே? இவைகளுக்கு இன்றைக்கும் சரித்திர ஆதாரம் இருக்கிறது. ஆண்ட சின்னங்கள் இருக்கிறதே, மறுக்க முடியுமா?
(ஆதாரம்: தமிழ்நாடு தமிழருக்கே, நூல் பக். 80)
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தமிழ் மன்னர்கள் சரி, விஜயநகர மன்னர்களும் , மதுரை நாயக்க மன்னர்களும் தமிழ் மன்னர்கள் தானா? என்பதை தமிழ் மன்னர்களை பழித்துப் பேசும் வீரமணியும், விடுதலை இராசேந்திரனும் தான் தெளிவு படுத்திச் சொல்ல வேண்டும்.
தமிழர்கள் தங்கள் வரலாற்று கதாநாயர்களாக தமிழ் மாமன்னர்கள் இராசராச சோழனையும், இராசேந்திர சோழனையும் கொண்டாடினால், ஆரிய அடிமைகளாகிய தமிழ் மன்னர்களை பாராட்டுவது அவமானம் என்று வீரமணியும், விடுதலை இராசேந்திரனும் பழிக்கிறார்கள். ஆனால், அவர்கள் தலைவராக கொண்டாடும் பெரியாரோ தன்னை விசயநகரப் பரம்பரை என்று பெருமை பொங்க பேசுகிறார்.
விசயநகரப் பேரரசை மதுரையில் நிறுவிய திருமலை நாயக்கர் என்ன ஆரியத்தை எதிர்த்த புரட்சி வீரரா? ஆரியத்தை அண்டிப் பிழைத்த அக்மார்க் ஆரியஅடிமை தான் திருமலை நாயக்கர் என்று தமிழக வரலாற்று ஆவணங்கள் எடுத்துரைக்கின்றன. பழனி கோயில் பூசாரிகளாகிய பண்டாரங்களை வெளியேற்றி விட்டு வடுக பிராமணர்களை நியமித்தவர் திருமலை நாயக்கர் என்று செப்பேடுகள் கூறுகின்றன.
வடுக பிராமணரின் அடிமையாகிய திருமலை நாயக்கரை நம்மவராகக் காட்டி போற்றுகின்ற உரிமை பெரியாருக்கு உள்ள போது, தமிழ்ப்பேரரசு நிறுவிய இராச ராச சோழனையும், இராசேந்திர சோழனையும் நம்மவராகக் கருதி தமிழர்கள் போற்றக் கூடாதா?
இரட்டை நாக்குடையது மனுவை உயர்த்திப் பிடிக்கும் ஆரியம் மட்டுமல்ல, பெரியாரை உயர்த்திப் பிடிக்கும் திராவிடமும் தான் என்பதை தமிழர்கள் இனியாவது உணர வேண்டும்!