திருவனந்தபுரம், 2011 ஜூலை 14: அந்த இடத்தில் மீடியாக்காரர்களை குண்டர்களும் காவல் துறையினரும் ஒன்று சேர்ந்து ரத்தவிளாறாக அடித்து நொறுக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இரண்டு தொலைக்காட்சி சேனல்களைச் சேர்ந்த நான்கைந்து நிருபர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தங்கள் சகாக்களைக் காப்பாற்ற மற்ற சில நிருபர்களும் பத்திரிகையாளர்களும் வந்தனர். குண்டர்களைத் தடுத்து நிறுத்துமாறு அவர்கள் காவல்துறையினரிடம் முறையிட, அவர்கள் மீது மேலதிக வன்முறை செலுத்தப்பட்டது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பின் பேரில், விஷமிகளுடன் சேர்ந்து கொண்டு நிருபர்களைத் தாக்கிய காவலர்களை மாநில அரசு பிறகு அரைமனதுடன் சஸ்பெண்ட் செய்தது.
சம்பவம் நடந்த இடம் நகரின் சி.எஸ்.ஐ. திருச்சபை தலைமையகம் (டயசீஸ்). நிருபர்களைத் தாக்கிய கும்பலில் பெரும்பாலோர் சர்ச் பணியாளர்கள்; சில மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களும் உண்டு. தாக்குதலை நடத்தி முடித்த பின்னர், சர்ச் பணியாளர்கள் நிருபர்களின் காமிராவை உடைத்து நொறுக்கி, அதில் தாக்குதல் காட்சிகள் பதிவாகியிருந்ததையும் திருடி வைத்துக் கொண்டனர்.
காரணம்? சர்ச் நடத்தும் மருத்துவக் கல்லூரியில் சில பல லட்சங்களை கேபிடேஷன் கட்டணம் என்ற பெயரில் வசூலித்து, சட்டவிரோதமாக மாணவர்கள் சேர்க்கப் படுவதை இந்த ஊடகத்தினர் அம்பலப்படுத்தி விட்டார்கள் என்பதுதான்.
உள்ளூர் பத்திரிகைகள் சர்ச் மருத்துவக் கல்லூரியில் நடக்கும் முறைகேடுகள் பற்றி பல காலமாகவே எழுதிக் கொண்டுதான் இருந்திருக்கின்றன. ஆயினும், எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மிக மோசமான கல்வித் தகுதிகளும் மதிப்பெண்களும் கொண்ட பணம் கொழுத்த மாணவர்களுக்கு மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டின்கீழ் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. லகரங்களைத் தராத, ஆனால் உண்மையிலேயே இடம் கிடைத்திருக்க வேண்டிய தகுதியுள்ள மாணவர்களின் கதி பற்றி சர்ச்சுக்கு எந்தக் கவலையும் இல்லை. பணம் கொடுத்து இடம் வாங்கிய சில மாணவர்கள் அரசு நடத்திய பொது நுழைவுத் தேர்வில் மகா மட்டமான ரேங்க் (47000-க்கும் கீழே!!) வாங்கியிருந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தை வைத்து தேசிய அளவில் ஏதேனும் கொந்தளிப்பு நிகழ்ந்ததா? ஊடகங்களுக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் எதிரான இந்த வன்முறையைக் கண்டித்து எங்கேயாவது, ஏதாவது எதிர்ப்புப் பேரணிகள் நடந்ததா? வழக்கமாக இத்தகைய விஷயங்களுக்காகப் பொங்கி எழும் சிவில் சொசைட்டி செயல்வீரர்கள் இந்த அராஜகம் குறித்து கனத்த மௌனத்தை மட்டுமே தங்கள் எதிர்வினையாக அளிக்கிறார்கள்.
இதே போல ஒரு சம்பவம் ஒரு ஹிந்து டிரஸ்ட் நடத்தும் கல்லூரியிலோ அல்லது பாஜக ஆட்சி செய்யும் மாநிலத்திலோ நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். எத்தனை எரிமலைகள் இந்நேரம் வெடித்திருக்கும்! எத்தனை தொலைக்காட்சி சேனல்களில் நாள்கணக்கில் ”இந்துத்துவ குண்டர்கள்” நார்நாராகக் கிழிபட்டிருப்பார்கள்!
கோவை அருகில் உள்ள காருண்யா தொழில்நுட்பக் கல்லூரி, தமிழகத்தின் ஒரு பிரபல கிறிஸ்தவ மதபோதக மாஃபியாவால் நடத்தப்படும் கல்லூரி. இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சமீபத்தில் நிர்வாகத்திற்கு எதிராக, பெரிய போராட்டத்தில் இறங்கினார்கள். கிறிஸ்தவ பிரார்த்தனைகளில் கலந்து கொள்ள மாணவர்களைக் கட்டாயப் படுத்தக் கூடாது என்பதும் அவர்களது முக்கிய கோரிக்கைகளில் ஒன்று. கடும் போராட்டத்திற்கும், காவல்துறை தலையீட்டிற்கும் பிறகு, நிர்வாகம் சில “விதிமுறைகளை”தளர்த்துவதற்கு ஒத்துக் கொண்டது. பொறியியல் படிக்கும் வளர்ந்த மாணவர்களையே மதப் பிரச்சாரத்திற்கு நிர்ப்பந்திக்கும் அளவுக்கு ஒரு கிறிஸ்தவ உயர்கல்வி நிறுவனம் செயல்படுகிறது என்ற விஷயமே இந்த போரட்டத்தின் மூலமாகத் தான் தெரிய வந்தது.
கேரளத்திலுள்ள ஒரு பிரபலமான கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் கன்யாஸ்திரீ சிஸ்டர் ஜெஸ்மி “ஆமென்- ஒரு கன்யாஸ்திரியின் சுயசரிதை” என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார் (தமிழில் காலச்சுவடு பதிப்பக வெளியீடு). கிறிஸ்தவ கான்வெண்டுகளுக்குள் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் பற்றியும் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்கள் குறித்தும் அந்த நூலில் அவர் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். அதோடு, அவர் பணியாற்றிய கிறிஸ்தவ கல்வி நிலையங்களில் நிகழ்ந்த சட்ட மீறல்கள், அற மீறல்கள், அதிகாரச் செயல்பாடுகளைப் பற்றியும் பதிவு செய்திருக்கிறார். அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளை அமல்படுத்துவது போல பாவனைசெய்து, அதே சமயம் உரியவர்களுக்கு இடம் தராமல் ஏமாற்றுவது, சுயநிதிப் பிரிவின் இடங்களுக்கு அதிக நன்கொடை வசூலிப்பது… இப்படிப் பல வகை அத்துமீறல்கள். இதெல்லாம் மற்ற கல்வி நிலையங்களிலும் நடப்பதுதான். ஆனால், அங்கு மக்கள் சக்தியும் ஊடகங்களும் அதைக் கேள்வி கேட்கவாவது முடிகிறது. கிறிஸ்தவ கல்வி நிலையங்கள் விஷயத்தில், அவர்களது அளப்பரிய மத அதிகாரமும் அரசியல் செல்வாக்கும் கொண்டு எதுவும் வெளியே வர முடியாதபடி இருட்டடிப்பு செய்து விடுகிறார்கள். அதையும் மீறித்தான் சில விஷயங்கள் கசிந்து வருகின்றன.
***
சில வாரங்கள் முன்பு ”இந்தியாவின் தலைசிறந்த கல்லூரிகள்” என்ற இந்தியா டுடே கருத்துக் கணிப்புவெளிவந்தது. கல்வியின் தரம், ஆசிரியர்கள், வசதிகள், மாணவர்களின் சாதனைகள் என்று பல்வேறு அம்சங்களைக் கணக்கில் கொண்டு கல்லூரிகளை வரிசைப் படுத்தியிருக்கிறார்கள். கடந்த 10 வருடங்களாக இந்தக் கணிப்பு வந்து கொண்டிருக்கிற்து. இதில் ஒவ்வொரு வருடமும் முதல் 10 என்ற பட்டியலில் தவறாமல் இடம் பெறுபவை தில்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி, கல்கத்தா செயிண்ட் சேவியர் கல்லூரி, வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, பெங்களூர் கிரைஸ்ட் காலேஜ், புணே ஃபெர்குசன் கல்லூரிபோன்றவை. கலைத் துறைகள் (Humanities), அறிவியல் துறைகள் (Sciences), மருத்துவம் ஆகியவற்றில் முதல் 25 பட்டியலிலும் முதல் 50 பட்டியலிலும் பெரும்பான்மையாக இடம் பெற்றிருப்பவை கிறிஸ்தவக் கல்லூரிகளே. பொறியியல், வணிகம், சட்டம் ஆகிய துறைகளில்தான் ஐஐடிக்கள், என்.ஐ.டிக்கள், ஐஐஎம்கள், அரசு சட்டக் கல்லூரிகள், அதைத் தொடர்ந்து மற்ற கல்லூரிகள் ஆகியவை பட்டியலில் உள்ளன. இந்தத் துறைகளுக்கான பட்டியலிலும் கிறிஸ்தவக் கல்லூரிகள் இல்லாமல் இல்லை. ஆனால் முன்பு சொன்ன துறைகள் போல முற்றாக ஆக்கிரமித்திருக்கவில்லை, அவ்வளவே.
அகில இந்திய கிறிஸ்தவ உயர்கல்விச் சங்கம் (All India Association for Christian Higher Education) என்ற அமைப்பின் புள்ளிவிபரப்படி, இந்தியாவில் நூறாண்டுகளுக்கும் மேல் பழமையான கிறிஸ்தவ கல்லூரிகள் 27. சுமார் 75 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை 20. சுதந்திரமடைந்தபோது இந்தியாவில் இருந்த 450 கல்லூரிகளில் ஏறத்தாழ 100 கல்லூரிகள் கிறிஸ்தவக் கல்லூரிகள். 2011-ஆம் ஆண்டு கணக்குப்படி, 300 கல்லூரிகள் கிறிஸ்தவக் கல்லூரிகள். இன்றைய தேதியில், இந்திய மக்கள் தொகையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் கிறிஸ்தவக் கல்லூரிகளின் எண்ணிக்கை விகிதாசாரப்படி மிக மிக அதிகம். எனவே, ஒரு சராசரி இந்து மாணவரை விட சராசரி கிறிஸ்தவ மாணவருக்கு நல்ல கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகளும் அதே மடங்கு அதிகமாக இருக்கும்.
இன்னொரு முக்கியமான வேறுபாடு- பொதுவான இந்து மக்களால் நிர்வகித்து நடத்தப்படும் பல துறைகளுக்கான கல்வி நிலையங்கள் போல, இவை பொதுவான கிறிஸ்தவ மக்களால் நடத்தப்படுபவை அல்ல. மாறாக கத்தோலிக்க திருச்சபை, சி.எஸ்.ஐ, ஜெசூட்டுகள் போன்ற மிகப் பெரிய கிறிஸ்தவ மத அதிகார அமைப்புகளின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளவை. இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு அளப்பரிய அதிகாரங்களை அளிக்கும் 30-வது சட்டப் பிரிவு குறித்து ஏற்கனவே ஒரு கட்டுரையில் விரிவாகப் பேசியிருக்கிறோம். அந்த சட்டப் பிரிவைக் காரணம் காட்டி, இந்தியா டுடே பட்டியலில் பல துறைகளில் முதல் இடத்தில் உள்ள தில்லி செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் 50% இடங்கள் கிறிஸ்தவ மாணவர்களுக்கே ஒதுக்கப்படும் என்று அந்தக் கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. அது தொடர்பான வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் இது அரசு நிதி உதவி பெறும் கல்லூரி; ஆனால் நிர்வாகம் முழுவதும் சர்ச் கையில். கல்லூரியின் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கே சாதகமாகத் தீர்ப்பு வரும் வகையில் சட்டம் இருக்கிறது என்று விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். எனவே, வருங்காலத்தில் இந்தியாவில் எல்லாத் *தலைசிறந்த* கல்லூரிகளும் இதே போன்ற கிறிஸ்தவ முன்னுரிமைக் கொள்கைகளை சட்ட ரீதியாகவே அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். இப்படியாக, உயர்தரக் கல்லூரிகளில் உயர்தர உயர்கல்வி, தட்டில் வைத்து கிறிஸ்தவர்களுக்கு அளிக்கப் படுவதற்காக, பெரும்பான்மை இந்தியர்கள் செலுத்தும் வரிப்பணம் செலவழிக்கப்படும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சமூக முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வித் துறைகளில் மிகச் சிறந்த கல்லூரிகள் ஒட்டுமொத்தமாகவே கிறிஸ்தவ மத அதிகார பீடங்களின் கையில்தான் உள்ளன. இது ஏற்கனவே தெரிந்ததுதான்; இத்தகைய கணிப்புகள் அந்த உண்மையை இன்னும் உறுதிப் படுத்துகின்றன. லயோலா, செயின்ட் ஸ்டீபன்ஸ்போன்ற கல்லூரிகள் நூற்றாண்டு காலப் பாரம்பரியம் கொண்டவை. பல சாதனையாளர்களை உருவாக்கியவை. எனவே அவற்றின் தரமும், மதிப்பும் உயர்ந்த நிலையில் இருப்பதில் வியப்பில்லை. பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களின் முழு ஆதரவும், பொருளுதவியும் இக்கல்வி நிலையங்களுக்கு இருந்தது. ஆனால் அதே காலகட்டத்தில் இவற்றுக்கு மாற்றாக, மிகப் பெரிய முயற்சிகள் எடுத்து, ஒவ்வொரு காசாகச் சேர்த்துத்தான் நம் நாட்டவர்கள் இந்திய தேசியக் கல்விக் கூடங்களை உருவாக்க வேண்டியிருந்தது. காசியின் பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகம் முதல் திருநெல்வேலி இந்துக் கல்லூரி வரை அப்படி உருவானவையே. ஆனால் சுதந்திரத்திற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகும், கல்வித் துறையில் கிறிஸ்தவ மேலாதிக்கம் இன்று வரை தொடர்ந்து வருகிறது.
நடைமுறைத் தளத்தில் பல கிறிஸ்தவக் கல்லூரிகளின் செயல்பாடுகள் ஒரு பொதுவான, மதச்சார்பற்ற கல்வி நிலையம் போலவேதான் இருக்கின்றன. ஆனால் தங்கள் கல்வி அமைப்புகளின் முக்கிய நோக்கங்கள் என்று அவர்களே பிரகடனப் படுத்தியிருப்பதைப் பார்த்தால், அதில் முதன்மையாக இருப்பது ஏசு கிறிஸ்தவின் நற்செய்தியைப் பரப்புவதும் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு மக்களை மனந்திரும்ப வைப்பதுமே. அந்த இறுதி இலக்குக்கான ஒரு சாதனமாகத்தான் கல்வி வரையறுக்கப்படுகிறது.
***
மேற்கத்திய நாடுகளில், அமெரிக்காவில் கூட ஆரம்பத்தில் கல்வி அமைப்புகள் மிஷனரிகளின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. ஆனால் அறிவியல் வளர்ச்சியும் நவீன பொருளாதார முன்னேற்றங்களும் பெருகி, மேற்குலகில் கிறிஸ்தவத்தின் வலு குறையக் குறைய, அந்த அதிகாரம் சம்பிரதாய ரீதியாகத் தொடர்கிறதே அன்றி, கல்விக் கொள்கைகளை முற்றாகக் கட்டுப்படுத்தும் விதமாக அல்ல. ஆனால் இந்தியாவில் அப்படியல்ல. இந்தக் கல்வி நிலையங்களின் தலைவர்களாகவும் துணைவேந்தர்களாகவும் அப்பட்டமான கிறிஸ்தவ அடிப்படைவாத பாதிரியார்களே உள்ளனர். இவ்வளவு பெருமை பெற்ற செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியின் தற்போதைய பிரின்சிபால் ரெவரெண்ட் வல்சன் தம்பு. இவரை சர்ச் தடாலடியாக நியமித்தபோது, இவர் ஆய்வு முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெறாதவர் என்று ஆட்சேபம் எழுப்பப்பட்டது. உடனடியாக, அலகாபாத் விவசாயப் பல்கலைக் கழகம் அவரை ஆய்வறிஞராக ஆக்கியது! ஏனென்றால், அந்தப் பல்கலைக் கழகத்தில் விவசாயத்தோடு கூட முக்கியத் துறையாக இருப்பது கிறிஸ்தவ இறையியல் (theology). இதே போன்று, பல பொதுப் பெயர் தாங்கிய கிறிஸ்தவக் கல்லூரிகளில் கிறிஸ்தவ இறையியல் சார்ந்த பாடத்திட்டங்களும், துறைகளும் உள்ளுக்குள் தந்திரமாக நுழைக்கப்பட்டுள்ளன.
கலைத் துறைகளைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இன்றைய சூழலில், படிப்பில் நல்ல திறமையும் தேர்ச்சியும் உடைய மாணவர்கள் கணினி, மருத்துவம், மேனேஜ்மெண்ட் ஆகிய தொழில்சார்ந்த (professional) துறைகளையே உயர்கல்விக்காகத் தேர்ந்தெடுக்கிறார்கள். எனவே, வரலாறு, சமூகவியல், சமூகப் பணி (social work), அரசியல், மொழித் துறைகள் ஆகியவை காத்தாடுகின்றன; அல்லது வேறுவழியில்லாமல் இவற்றில் சேரும் மிகச் சுமாரான, சராசரியான மாணவர்களை வைத்துக் கொண்டு நடந்து வருகின்றன. ஆனால் வரலாறு சார்ந்த, சமூகம் சார்ந்த கல்விப்புல ஆய்வுகளும் கருத்தாக்கங்களும் இத்துறைகளில் இருந்துதான் வரவேண்டும். ஏற்கனவே இத்தகைய தேக்க நிலை இருந்து வரும் சூழலில், இந்தியா முழுவதும் பல்கலைக் கழகங்களில் உள்ள இத்தகைய துறைகளை இடதுசாரித் தரப்பினரும் கிறிஸ்தவர்களும் விஷக் கிருமிகள் போன்று ஆக்கிரமித்துள்ளார்கள். ஐரோப்பிய மையவாதத்தையும் காலாவதியான காலனியக் கருதுகோள்களையும் இந்திய தேசியத்தைப் பிளவுபடுத்தும் கண்ணிகளையுமே பாடங்களாகப் போதித்து மீள்சுழற்சி செய்து வருகிறார்கள். ஒட்டுமொத்தமான சமூகக் கண்ணோட்டத்தை உருவாக்கும் சக்தி இத்தகைய கல்வியாளர்களின் கையில் உள்ளது. இவர்கள் உருவாக்கும் மெக்காலேயின் வாரிசுகள்தான் பத்திரிகை, தொலைக்காட்சி ஆகிய ஊடகத் துறைகளிலும் நுழைகிறார்கள். இந்துப் பண்பாட்டையும், இந்து சமூகத்தையும், இந்திய தேசியத்தையும் எதிர்மறைக் கண்ணோட்டத்துடனேயே அணுகவும் சித்தரிக்கவும் அவர்கள் தங்கள் கல்விக் கூடங்களிலேயே பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறார்கள்.
அத்துடன், இத்தகைய கல்வித் துறைகள் பொய்யான ஆய்வுகளையும் கருத்தாக்கங்களையும் “வளர்த்தெடுப்பதற்கான” களங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. உதாரணமாக, செயிண்ட் தாமஸ் கிறிஸ்தவத்தில் இருந்துதான் இந்துமதத்தின் பல பிரிவுகள் உருவாயின என்று கூறும் டுபாக்கூர் ”ஆய்வுத் தாள்களின்” பட்டியல் Breaking India நூலில் தரப் பட்டிருக்கிறது. அந்தப் பட்டியலைப் பார்த்தால், சில குறிப்பிட்ட கல்லூரிகள் மற்றும் ஆய்வு மையங்களில் இருந்தே மீண்டும் மீண்டும் இத்தகைய ஆய்வு அறிக்கைகள் உற்பத்தி செய்யப்படுவது புலப்படும். அதிலும், ஒரு சில “ஆய்வாளர்களே” திரும்பத் திரும்ப தங்களுக்குள் ஒருவரது ஆய்வுத் தாளை இன்னொருவர் மேற்கோளாகக் காண்பித்து, தங்கள் சீரிய “ஆய்வு முடிவுகளை” வெளியிட்டிருப்பார்கள். இப்படியே ஒரு சுழல்போல அது போய்க் கொண்டிருக்கும்!
இந்திய கிறிஸ்தவ மாணவர் இயக்கம் (Student Christian Movement of India) என்ற முற்றிலும் மத அடிப்படையிலான மாணவர் இயக்கத்தையும் கிறிஸ்தவக் கல்வி நிலையங்கள் ஊக்குவித்து வளர்த்து வருகின்றன. இந்தியா முழுவதும் இந்த இயக்கத்திற்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். World Student Christian Federation என்ற அகில உலக கிறிஸ்தவ மதப்பிரசார மாணவர் அமைப்பில் இந்த இயக்கமும் ஓர் உறுப்பினராக உள்ளது.
எனவே, எண்ணிக்கை ரீதியாக மட்டுமல்ல, கருத்தியல் ரீதியாகவும் பல துறைகளை இந்தக் கல்வி நிலையங்கள் கிறிஸ்தவ மயமாக்கி வருகின்றன. இதற்கு ஏதுவாகவே நமது ஒட்டுமொத்த கல்விச் சூழலும் அமைந்து விட்டிருப்பது ஒரு சோகம்.
***
உயர்கல்வியில் மட்டுமல்ல, பள்ளிக் கல்வியிலும் கிறிஸ்தவ ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. இந்தியா முழுவதும் சுமார் 50,000 கத்தோலிக்க கிறிஸ்தவப் பள்ளிகள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. மற்ற எல்லா கிறிஸ்தவப் பிரிவுகளையும், உதிரி மதபோதக அமைப்புகளையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை கட்டாயம் ஒரு இலட்சத்தைத் தாண்டும்.
இது தவிர, ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை இன்று மத்திய, மாநில அரசுகளை விட அதிகமாக, கிறிஸ்தவ அமைப்புகளே நடத்தி வருகின்றன. ஏழ்மையில் உழலும் கீழ்நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, ஒரு புகலிடமாக இந்த பயிற்சிப் பள்ளிகள் தங்களை அறிவித்துக் கொள்கின்றன. இவற்றில் சேர்ந்து பயிலும் அப்பாவிப் பெண்கள் கிறிஸ்த மூளைச்சலவையோடு, சில இடங்களில் பாலியல் அத்துமீறல்களுக்கும் ஆளாகிறார்கள் என்று அரசல் புரசலாக செய்திகள் வருகின்றன. குண்டர் தாக்குதல்களுக்கெல்லாம் துணிந்த நேர்மையான ஊடகங்கள்தான் அது பற்றிய உண்மைகளை வெளிக் கொணர வேண்டும்.
மத்திய, மாநில அரசுகளின் பள்ளிக் கல்வி பாடநூல் வரைவுக் குழுக்களிலும் கிறிஸ்தவ மதப்பிரசார எண்ணம் கொண்டவர்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றனர். இந்துப் பண்பாடு மீது எதிர்மறை எண்ணங்கள் தோன்றும்படியும், கிறிஸ்தவ ஆளுமைகள், கருத்துகள் ஆகியவற்றின் மீது பரிவு உண்டாக்கும்படியும் பாடப் புத்தகங்களில் இவர்கள் பாடங்களை அமைக்கின்றனர். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் எல்லா வகுப்புகளுக்குமான பாடப் புத்தகங்களை ஒரு பருந்துப் பார்வையாகப் பார்த்தாலே இது புரிய வரும். உதாரணமாக, தமிழ்ப் பாட நூல்களின் செய்யுள் பகுதியில் தமிழின் உண்மையான இலக்கியச் செல்வங்களான கம்பராமாயணம், பெரிய புராணம், திருமுறைகள், பிரபந்தம், தாயுமானவர் பாடல்கள் ஆகியவை ஓரங்கட்டப்பட்டு அல்லது பெயரளவில் வைக்கப் பட்டு, தேம்பாவணி, பெத்லேகம் குறவஞ்சி போன்ற அப்பட்டமான மதப்பிரசார ஜல்லிகள் மதச்சார்பின்மை என்ற பெயரால் நுழைக்கப் படுகின்றன. வரலாற்றுப் பாடங்கள் படுமோசமான திரிபுகளுடன் எழுதப் படுகின்றன. தனியார் பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள பாடநூல்களை பல பள்ளிகள் பரிந்துரை செய்கின்றன. கொஞ்சம் தேடிப் பார்த்தால், அத்தகைய பல பதிப்பகங்களுக்கும் கிறிஸ்தவத் தொடர்புகள் இருப்பது தெரியவந்து முகத்தில் அறைகிறது.
கிறிஸ்தவப் பள்ளிகளில் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் நடக்கும் மதமாற்றப் பிரசாரங்களும், உளவியல் ரீதியான அழுத்தங்களும் நாம் அறிந்தவை. ஆனால் சில சமயங்களில் இவர்கள் தங்கள் பலத்தை அப்பட்டமான அரசியல் காரணங்களுக்காக வெளிப்படையாகவே பிரயோகிக்கிறார்கள்.
ஒரிஸ்ஸாவின் கந்தமால் மாவட்டத்தில், 2008-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜன்மாஷ்டமி இரவில் கிறிஸ்தவ-மாவோயிஸ்டு பயங்கரவாதிகளால் சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் மிகப் பெரும் கலவரம் வெடித்தது. இரு தரப்பிலும் சேதங்களும், உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. இதன் பின்னணியில், ”கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து” 29-8-2008 அன்று இந்தியாவில் உள்ள அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளிகளும் மூடப்படும் என்று அகில இந்திய கத்தோலிக்க பிஷப்கள் சம்மேளனம் அறிவித்தது. ஒன்று விடாமல் அனைத்து கத்தோலிக்கப் பள்ளிகளும் மூடப்பட்டன. ஒரிஸ்ஸா அரசுக்கு எதிராகவும், இந்துக்களை வன்முறையாளர்களாக சித்தரித்தும் எழுதப்பட்ட அட்டைகள் கைகளில் திணிக்கப் பட்டு, பாதிரிகள் புடைசூழ பள்ளிக் குழந்தைகள் வெயிலில் நடத்தப்பட்டனர். ஒரிஸ்ஸாவில் ஜனாதிபதி ஆட்சி அமல் செய்யப்படவேண்டும் என்ற அரசியல் கோரிக்கை இந்தப் பேரணிகளில் எழுப்பப்பட்டது. இலட்சக் கணக்கான இந்துக் குழந்தைகள் கிறிஸ்தவ மத அதிகார அமைப்பின் அரசியல் நோக்கங்களுக்காக பகடைக் காய்களாக ஆக்கப்பட்டனர். ’கிறிஸ்தவர்களின் உயிர்தான் மதிக்கத் தக்கது; இந்து உயிர்கள் ஈசல் போல சாவதற்காகப் பிறந்தவைதான்’ என்ற கருத்து ஆழமாக அவர்கள் மனதில் வேரூன்றப் பட்டது.
இந்த அப்பட்டமான சட்டமீறல் பற்றி மனித உரிமை ஆணையம் எதுவும் கேள்வி கேட்டதாகத் தெரியவில்லை. பொது சிவில் அமைப்புகளை விடுங்கள், இந்து அமைப்புகள் கூட சர்ச்சின் இந்த அராஜக நடவடிக்கை குறித்துக் கண்டுகொள்ளவில்லை; வழக்கு ஏதும் போட்டதாகத் தெரியவில்லை. வழக்கமான அசமஞ்சத் தனத்துடன் இந்த நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்தன.
ஒரு பேச்சுக்காக, இந்துத்துவ இயக்கங்கள் சார்ந்த அமைப்புகள் நடத்தும் பள்ளிகள் அனைத்தும் ஏதோவோர் இந்து அரசியல் போராட்டத்திற்கு ஆதரவாக இப்படி அணி திரள்வதாக அறிவிக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். நாட்டில் என்ன களேபரம் நடந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்!
***
நீண்டகால அளவில் கல்வித் துறையில் கிறிஸ்தவம் உருவாக்கும் விளைவுகள் பற்றியும் நாம் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.
அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களில், பைபிள் பெல்ட் என்று சொல்லப்படும் பகுதிகளில் பரிணாம அறிவியலைப் பள்ளிகளில் பாடமாகக் கற்பிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ அடிப்படைவாதக் குழுக்கள் பலகாலமாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேற்கத்திய நாடுகளில் இத்தகைய குழுக்கள் கருத்தடைக்கு எதிராகவும் குளோனிங் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் ஆய்வுகளுக்கு எதிராகவும் நிலைப்பாடு எடுத்துள்ளனர். இந்தக் குழுக்களையே இங்குள்ள பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தங்கள் ஆதர்சமாக எண்ணி வருகின்றனர். எனவே அறிவியலுக்கு எதிரான இத்தகைய கிறிஸ்தவ இயக்கங்கள் இங்கும் உருவாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை. ஏற்கனவே அதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டன. சென்னைப் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்தவத் துறை PG Diploma in Ethics and Biotechnologyஎன்று ஒரு டிப்ளமா வகுப்பு நடத்தி சான்றிதழ் தருகிறது. சம்பந்தமே இல்லாமல் கிறிஸ்தவத் துறை ஏன் உயிரியலில் மூக்கை நுழைக்க வேண்டும்?
இந்தியாவின் கல்வித் துறையில் கிறிஸ்தவமும், கிறிஸ்தவ மத அதிகார அமைப்புகளும் அளவுக்கதிமான ஆதிக்கமும் தாக்கமும் செலுத்தி வருகின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இது குறித்து மத்திய, மாநில அரசுகள் எதுவும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. பெரும்பாலான அரசியல் கட்சிகளும் தேச நலனை விடவும் கிறிஸ்தவ வாக்கு வங்கியையே முக்கியமாக எண்ணும் போக்கு உடையவை.
ஆனால் இது இப்படியே நீடிக்கக் கூடாது. அரசு நிதிஉதவி பெறும் கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களின் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளும், கல்விக் கொள்கைகளும் அவற்றுக்கு இணையான மற்ற கல்வி நிறுவனங்கள் போலவே அமையுமாறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப் பட வேண்டும். அரசு நிதி உதவி பெறாத தனியார் கிறிஸ்தவக் கல்வி நிலையங்களின் செயல்பாடுகளும் கண்காணிக்கப் பட வேண்டும். நீண்ட கால அளவில் கிறிஸ்தவ கல்வி நிலையங்களுக்கு மாற்றாக சிறந்த கல்வி நிலையங்களை தெளிவான இந்துத்துவ சமூகப் பிரக்ஞையுடன் இந்து மத, சமூக இயக்கங்கள் உருவாக்கி வளர்க்கவேண்டும்.
இந்துத்துவர்கள் மட்டுமல்ல; சுதந்திரம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, அறிவியல் நோக்கு ஆகிய விழுமியங்களில் நம்பிக்கை கொண்டுள்ள எல்லா இந்தியர்களுமே கவலைப்பட வேண்டிய விஷயம் இது.
தற்போது இருக்கும் இந்துப் பள்ளிக்கூடங்களிலும் கிறிஸ்தவ ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களும் தங்கள் மதமாற்ற பாடங்களை செவ்வனே நடத்துகிறார்கள். ஆனால் இந்து ஆசிரியர்கள் தங்கள் மதத்தைப் பற்றி எங்குமே போதிப்பது இல்லை. எனவே இந்து அமைப்புகள் நிறைய பள்ளிக்கூடங்களை ஆரம்பி்ப்பதோடு அதில் கிறிஸ்தவர்களை ஆசிரியர் பணிக்கு சேர்க்கக்கூடாது. இந்துப் பள்ளிகளில் நம் மதத்தை போதிக்கவும் செய்ய வேண்டும். தரமான இந்துப் பள்ளிக்கூடங்கள் பெருகி விட்டால் கிறிஸ்தவர்களின் பள்ளிகளில் வியாபாரம் ஆகாது. நாம் நம் குழந்தைகளை இந்துப் பள்ளிகளிலேயே சேர்க்க வேண்டும் என்று தீர்மானமாக இருக்க வேண்டும்.
ஒரு நண்பர் தங்கள் மகளை ஒரு கிறிஸ்தவ பள்ளியில் சேர்த்து விட்டு, அவள் வீட்டில் ஜெபம் செய்ய ஆரம்பித்ததுடன் இந்து மதத்தைப் பற்றி பள்ளியில் ஆசிரியர் இந்து மதத்தை கேலி செய்வதை அப்படியே வீட்டிலும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட அவளுக்கு தகுந்த பதில் கூறி அவளை இந்துவாக இருக்க செய்தனர். அந்த பள்ளியில் ஏன் உங்கள் மகளைச் சேர்த்தீர்கள். ஒரு இந்துப்பள்ளியில் சேர்த்திருக்கலாமே என்றதற்கு அங்குதான் கல்வி நன்றாக இருக்கிறது என்கின்றனர். அங்கு படித்தும் மற்ற பள்ளிகளைப் போல் தான் மார்க் எடுத்தாள். நம்மவர்களின் மனப்பான்மை அப்படி இருக்கிறது.
நேற்று எனக்கு கிடைத்த ஒரு முக்கிய செய்தி:
கர்நாடக மாநிலத்தில் கிராமப்புற மாணவர்களை விளையாட்டு துறையில் முன்னேற்றுகிறேன் பேர் வழி என்று கூறி பல இளைஞர்களை மிஷி நரி கூட்டங்கள் மதம் மாற்றுகின்றன என்ற அதிர்ச்சி அளிக்கக் கூடிய விசயத்தை கேள்விபட்டேன்.
இதை பற்றிய விசயத்தை கிராமப்புற மாணவர்களுக்கு விழிப்புணர்வை நமது ஹிந்து இயக்கங்கள் தீவிரமாக ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் செய்து கொண்டு இருகின்றன.