New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 43. காங்கிரஸில் சிக்குன் குன்யா


Guru

Status: Offline
Posts: 24625
Date:
43. காங்கிரஸில் சிக்குன் குன்யா
Permalink  
 


போகப் போகத் தெரியும் – 43

December 20, 2009
சுப்பு rss_icon16.jpg

 

காங்கிரஸில் சிக்குன் குன்யா

1939 ம் ஆண்டு இறுதியில் மாகாண காங்கிரஸ் தலைமைப் பதவியில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரும் சத்திய மூர்த்தியும் போட்டியிட்டனர். அந்தப் போட்டியில் வகுப்புவாதம் குறுக்கிட்டதால் சத்திய மூர்த்தி தோல்வி அடைய நேர்ந்தது. மனமுடைந்து போயிருந்த சத்தியமூர்த்தி அன்றிரவு என்னைப் பார்த்து ‘காமராஜ், அடுத்த வருஷம் உன்னைத்தான் காங்கிரஸ் தலைவராகத் தேர்தலுக்கு நிறுத்தப் போகிறேன். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். வகுப்புவாதத்தைப் போக்க அது ஒன்றுதான் வழி. நீ தலைவனாக இரு. நான் உனக்குக் காரியதரிசியாக இருந்து வேலை செய்கிறேன்’ என்றார்.

‘அதற்கு இப்போது என்ன அவசரம்? அப்போது பார்த்துக் கொள்ளலாம்’ என்று நான் பதில் கூறினேன்.

‘அடுத்த வருஷம் உன்னையேதான் நிறுத்தப் போகிறேன். இந்த முடிவு நிச்சயமானதுதான்’ என்று உறுதியாகக் கூறிய சத்தியமூர்த்தி தாம் கூறியபடியே அடுத்த வருஷம் நடைபெற்ற தலைவர் தேர்தலில் என்னை நிறுத்தவும் செய்தார். பலத்த போட்டி இருந்த போதிலும் சத்தியமூர்த்தியின் தலைமையில் ஊழியர்களின் ஆதரவுடன் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னுடைய இந்த வெற்றி சத்திய மூர்த்திக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அந்த ஆண்டு நான் தலைவராக இருந்தபோது அவரே காரியதரிசியாக இருந்து, எனக்கு ஆலோசனை கூறி என்னப் பெருமைபடுத்தியது என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்…

1937 ல் ராஜாஜி சென்னையில் முதன்முதலாக மந்திரிசபை அமைத்தபோது சத்தியமூர்த்திக்கு அந்த மந்திரிசபையில் இடம் அளிக்கவில்லை.

சத்தியமுர்த்தி நிச்சயம் மந்திரிசபையில் இடம் பெறுவார் என்றே எல்லோரும் எதிர்பார்த்தார்கள். தலைவர் சத்தியமூர்த்தியும் எதிர்பார்த்தார். ஆனால் எல்லோரும் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை.

கே. காமராஜ் / 1964 ல் எழுதிய கட்டுரை.

kamarajar1காங்கிரஸ் கட்சி தோன்றிய நாள்முதலே அதில் கோஷ்டிகள் தோன்றிவிட்டன. கட்சியில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கும் பிளவுகளுக்கும் காரணமான இந்தக்கோஷ்டிப் பூசல் கட்சியின் அடையாளமாகவே ஆகிவிட்டது. எல்லாக் கோஷ்டியினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மகாத்மா காந்திகூட இதற்கு விதிவிலக்கல்ல. நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு, காந்தி ஒத்துழைப்பு தரவில்லை. தமிழ் நாட்டிலும் ராஜாஜி கோஷ்டி என்னும் சத்தியமூர்த்தி கோஷ்டி என்றும் இந்த சிக்கன் குனியா பரவி, காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை முடக்கியது. முதலில் பிராமணர்களுக்குள் மோதல் என்று துவங்கி, பிறகு பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வடிவெடுத்தது இந்த மோதல். சத்தியமூர்த்தியின் காலத்திற்குப் பிறகு ராஜாஜியை எதிர்ப்பதற்காக திராவிடர் கழகத்தின் ஆதரவைத் தேடினார் காமராஜ். ஈவெராவும். காங்கிரஸ் வேண்டாம், ஆனால் காமராஜ் வேண்டும்’ என்று அறிவித்து காமராஜருக்குப் ’பச்சைத் தமிழன்’ என்று பட்டம் சூட்டினார். அண்ணாதுரையின் தலைமையில் தன்னை விட்டு வெளியேறியவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை அமைத்து அரசியல்ரீதியாகப் பெற்ற வளர்ச்சியை ஈவெராவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே அவர் காமராஜரை ஆதரித்தார். காமராஜரும் கட்சிக்கும் நாட்டுக்கும் ஏற்படக்கூடிய பாதகங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னுடைய தலைமையை வலுப்படுத்திக்கொண்டார். ராஜாஜி சும்மாயிருப்பாரா? அவர், அண்ணாதுரைக்கு ஆதரவு கொடுத்து 1967 தேர்தலில் திமுகவை அரியணை ஏற்றிவிட்டார். தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும் இதனால் ஏற்படக்கூடிய கேடுகளைப் பற்றி அவரும் கவலைப்படவில்லை. தனிநபர் போட்டியால் அரசியலில் தரம் தாழ்ந்துவிட்டது.anti-hindi இது பற்றிய விவரங்களை போகப் போகத் தெரியும் 2 ஆம் பகுதியில் பார்க்கலாம்.

தலைகுப்புற விழுந்து கொண்டிருந்த திராவிடர் இயக்கத்தைத் தடுத்து நிறுத்தி அதற்குப் புத்துயிர் கொடுத்தவை காங்கிரஸ் கோஷ்டிப் பூசலும், இந்தி எதிர்ப்புப் போராட்டமும் ஆகும்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

ராஜாஜி தலைமையில் அமைந்த காங்கிரஸ் மந்திரிசபை பள்ளிக்கூடங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியது. இதற்கு எதிராக ஈவெரா ஆள்திரட்டினார். ஏ.டி. பன்னீர்செல்வம்
கி. ஆ. பெ. விசுவநாதம், ஈழத்து சிவானந்த அடிகள், அண்ணாதுரை, மறைமலையடிகள் ஆகியோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

maraimalaiatikalசுயமரியாதை இயக்கத்தின் ஆரம்ப நாட்களில் ஈவெரா வோடு கருத்து மோதல் நடத்திய சைவர்கள் இப்போது இந்திப் போராட்டத்தில் அவருக்குத் தோள் கொடுத்தார்கள்.

சுயமரியாதை இயக்கத்திலுள்ள நல்ல பகுதிகள் எல்லாம் மறைமலையடிகள் ஞானத்தந்தையாக அருள் சுரந்து இட்ட பிச்சையென்பது தமிழ்நாடு அறிந்ததே. இப்பிச்சை வாங்கிப் பிரசாரம் செய்பவர்கள் பிதா செய்த நன்றியை மறப்பாராயின் அப்பிரசாரம் முழுமையும் கடலில் பெய்த மழைபோல் ஒரு பயனும் தராது போகும்.

– செந்தமிழ்ச் செல்வி, ஜூலை -ஆகஸ்டு 1928

என்று முரண்பட்டதெல்லாம் இந்தி எதிர்ப்பில் மறந்துபோனது.

சைவ சமயத்தின் உண்மை நெறிகள் விரித்துணர்த்தி உண்மைப் பக்தியும் அன்பும் மக்களுக்கு உண்டாகும்படி செய்து சைவத்தை வளர்த்தல் சாலுமேயின்றி பார்ப்பனத்துவேஷம் வடமொழித் துவேஷம் காரணமாக மனம் போனவாறு மாறுதல் செய்யக்கூடாது – சிவநேசன், மே 1929

என்ற கொள்கை எல்லாம் பத்து ஆண்டு காலத்திற்குள் பறந்துவிட்டது.

சாமி வேதாசலம் வெளியே சைவம் பேசிக்கொண்டு மறைவாகப் புலால் உண்கிறார். என்று கைவல்ய சாமியார் குடியரசில் எழுதிய கட்டுரைகளை மறைக்கப்பட்டு விட்டன.

திருநெல்வேலி சைவ வேளாளர்கள் ஈவெரா-வின் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர். சோமசுந்தர பாரதியார் தமிழகம் எங்கும் பயணம் செய்து இந்தி எதிர்ப்புப் பிரசாரம் செய்தார். வேளாளர் ஆதரவு ஈவெரா-வின் அந்தஸ்தை உயர்த்தியது. அங்கங்கே தமிழறிஞர்களும் போராட்டத்தை ஆதரித்தனர்.

தாளமுத்து நடராசன் என்ற இரு இளைஞர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்தனர்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மறியல் நடத்தியதற்காக ஈவெராவுக்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் இரண்டு ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

1938 நவம்பர் 13ஆம் நாள் சென்னையில் கூட்டப்பட்ட தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் ஈவெரா-வுக்கு ‘பெரியார்’ என்ற பட்டப் பெயர் வழங்கப்பட்டது.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தபோது ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டன; பத்திரிகைகளில் ரயில் நிறுத்தம் பற்றிய செய்திகள் வெளிவந்தன. அப்போது ஒருநாள் கோவில்பட்டி அருகே கழுதை ஒன்று தண்டவாளத்தில் நின்றதால் நெல்லை எக்ஸ்பிரஸ் பிரேக் போட்டு நின்றது. மறுநாள் தினமணியில் முதல் பக்கத்தில் இந்தச் செய்தி பெட்டிச் செய்தியாக ‘கழுதையும் ரயில் நிறுத்தியது’ என்ற தலைப்பில் வெளிவந்தது. பத்திரிகைகள் கலவரங்களுக்குப் பயப்படாத காலம் அது.

நீதிக்கட்சித் தலைவராக இருந்த போப்பிலி அரசர் இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் ஈவெராவும் அவரது ஆட்களும் மேற்கொண்ட அராஜகங்களுக்கு அவரது ஆதரவை தெரிவித்தார். அண்ணாமலைச் செட்டியார், சி. நடேச முதலியார் போன்ற நீதிக்கட்சித் தலைவர்கள் இந்தி எதிர்ப்பு பிராமண எதிர்ப்பாக மாறுவதைக் கண்டித்தனர். பெரும்பாலான ஆந்திரத் தலைவர்கள் நீதிக்கட்சியை விட்டு விலகியது ஈவெராவுக்குச் சாதகமாக அமைந்தது.

சிறையில் இருந்த ஈவெராவை 1938 டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாடு, தலைவராகத் தேர்ந்தெடுத்தது.

சிறையில் இருந்து வெளிவந்த ஈவெரா சென்னையில் சர். ஸ்டாபோர்ட் கிரிப்சை சந்தித்து ‘திராவிட நாட்டுப் பிரிவினை’ கோரிக்கையை வலியுறுத்தினார்.

1940 இல் அண்ணாதுரையோடு பம்பாய்க்குச் சென்ற ஈவெரா திராவிட நாட்டுக் கோரிக்கைக்கு ஜின்னாவின் ஆதரவைத் தேடினார்.

ஈவெரா தலைமையில் திருவாரூரில் (04.08.1940) நீதிக் கட்சியின் 15-வது மாகாண மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டின் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதோ :

திராவிடர்களுடைய கலை, நாகரீகம், பொருளாதாரம் ஆகியவைகள் முன்னேற்ற மடைவதற்கு, பாதுகாப்பதற்குத் திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம் இந்தியா மந்திரியின் நேர்ப்பார்வையின் கீழ் ஒரு தனி நாடாகப் பிரிக்கப்படவேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கிறது.

ஜின்னாவின் முஸ்லிம் லீக் வைத்த பாக்கிஸ்தான் கோரிக்கை எவ்வளவு அயோக்கியத்தனமாக இருந்தாலும் அதில் ஓரளவு தன்மான உணர்வாவது இருந்தது. ஆனால் ஈவெரா கேட்டது திராவிட விடுதலையை அல்ல. ஆனால் ஈவெரா கேட்டது திராவிட விடுதலையை அல்ல காலாகாலாத்திற்கும் பிரிட்டிஷ்காரர்களுக்குச் சேவகம் செய்வதையே அவர் இயக்கத்தின் லட்சியமாக வைத்திருந்தார்.

‘திராவிட நாடு’ தீர்மானத்தை பி. பாலசுப்பிரமணியம் முன்மொழிய, அண்ணாதுரையும், சி. பாசுதேவும் வழிமொழிந்தனர்.

பின்னர் நீதிக்கட்சி, திராவிடர் கழகமாக மாறிய போதிம் இந்த எஜமான விசுவாசம் மாறவில்லை. சேலத்தில் நடந்த மாநாட்டில் (1944) நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதோ

திராவிடர் கழகத்தின் முக்கிய கொள்கைகளில் திராவிட நாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம் மத்திய அரசாங்க நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும் நேரே பிரிடிஷ் செக்ரட்டரி ஆப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதுமான ஒரு தனி (ஸ்டேட்) நாடாகப் பிரிக்கப்படவேண்டுமென்ற கொள்கையை முதற்கொள்கையாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

மானமிகு என்ற அடைமொழியை அலங்காரமாகப் பயன்படுத்தும் திராவிட இயக்கத்தினர் ஆங்கில அரசாங்கத்திற்கு விசிவாசமாக இருந்தது மானமா, ஈனமா என்பதை வாசகர்கள் யோசிக்க வேண்டும்.

மேற்கோள் மேடை:

மார்கழி மாதம் ஆன்மீக மலர்ச்சிக் காலம்!
இறையை உணர்வின் எழுச்சிக்காலம் !

மார்கழி மாதம் சிவநெறியும், திருமால் நெறியும் பற்றிய தமிழர்கள் இறைமை உணர்வோடு இரண்டாகக் கலந்திருக்கின்ற காலம்! தங்கள் வாழ்க்கைக்கு நல்ல தலைவன் வேண்டும் என்று கன்னியர்கள் பாவை நோன்பு நோற்கின்றனர். முரசொலி, தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் சிறப்பு மலர், 14.01.2009



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard