ஆனந்தவிகடன் விலை ரூ 200/-
இந்த வருடம் (2006) ஜூன் மாதம் ஐந்து சமண முனிவர்கள் மேட்டூருக்கு வருகை தந்தார்கள். இவர்களது பயணத்தின் நோக்கம் ‘உலக அமைதி.’ இந்த உடம்புகூட நமக்குச் சொந்தமல்ல என்ற தத்துவத்தின் அடிப்படையில் அவர்கள் நிர்வாணமாக உலக அமைதிக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
மேட்டூரில் அவர்கள் தங்கியிருந்த விடுதியின் முன்னர் பெரியார் திராவிடர் கழகத்தினர், சமீப காலமாக வீரத்தமிழர்கள் கையிலெடுத்திருக்கும் ஆயுதங்களான செருப்பு, துடைப்பம் ஆகியவற்றோடு போராட்டத்தில் இறங்கினர். ஜெயலலிதா ஆட்சியில் ‘தொட்டிலில் உறங்கும் புரட்சியாளர்கள்’ கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் துயில் எழுந்து ஆட்டம் போடத் தொடங்கிவிடுவது வழக்கமானதுதான்.
வீரப்பனின் ஆதரவளாராகப் பரவலாக அறியப்படும் கொளத்தூர் மணி சமண முனிவர்களின் வருகையைப் பற்றிக் கூறியதாவது: ‘அஞ்சுபேரு நிர்வாணமா போனா உலக அமைதி கிடைச்சிடும்னா… ஊருல இருக்கிற எல்லாருமே நிர்வாணமா சுத்தினா சீக்கிரமே உலக அமைதி கிடைச்சிடுமே. என்ன ஒரு கேவலமான கொள்கை. மதத்தின் பேரால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா? இவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.’
ஊரில் எல்லோரும் நிர்வாணமாக இருப்பதே ஆரோக்கியமானது என்று எண்ணியவர்கள் ஐரோப்பாவில் கடந்த நூற்றாண்டில் நிர்வாணச் சங்கங்கள் அமைத்தனர். அவற்றில் நிர்வாணமாகப் பங்குகொண்டு, நிர்வாணச் சங்கத்தினருடன் தானும் நிர்வாணமாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு தமிழகத்தில் அதைப் பிரசுரித்தவர் பெரியார்…
தமிழக அரசு, சிறுபான்மைச் சமணர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காகச் செருப்பு, துடைப்பம் ஏந்திய போராளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாகச் சமண முனிவர்களை மாநிலத்தைவிட்டு வெளியேற்றியது. ஏனெனில் சமணர்களுக்கு இங்கே ஓட்டு வலிமை இல்லை.
– கண்ணன், காலச்சுவடு, ஜூலை 2006
ஈவெரா-வை இழிவுபடுத்துவதற்காக அவருடைய ஐரோப்பியப் பயணம் பேசப்படுகிறதா, காலச்சுவடு தரும் வரலாற்றுச் செய்தியை நம்பலாமா என்றெல்லாம் யோசிப்பவர்களுக்காக வெளிநாட்டுப் பயணம் பற்றி மங்கள முருகேசன் எழுதியதைக் கொடுக்கிறேன்.
“13.12.1931 ஆம் நாள் ‘அம்போய்சி’ என்றும் பிரெஞ்சுக் கப்பலில் சென்னையிலிருந்து பெரியார் பயணம் புறப்பட்டார். புத்துலகம் காணும் வழிப்பட்டார்…
13.12.1931 இல் சென்னையிலிருந்து புறப்பட்டவர் 11.11.1932 இல் சுற்றுப்பயணம் முடிந்து இலங்கை வழியாகச் சென்னை திரும்பினார்.
இப்பயண நோக்கம் ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் சமூக- அரசியல் அமைப்புகளைக் குறித்து அறிந்து கொள்வதும் அந்நாட்டு சமுதாயச் சீர்திருத்த அமைப்புகளுடன் தொடர்பு கொள்வதும் ஆகும்.
ஜெர்மன் நாட்டில் நிர்வாணச் சங்கங்களுக்கும் சென்று அவர்களுடைய உண்மை நோக்கங்களையும் உணர்ந்தார். நிர்வாணச் சங்கங்ககளுக்குச் சென்று வந்ததை பற்றிக் குடியரசில் எழுதினார்…
நிர்வாணம் எதற்காக என்று நேரில் கண்டறியச் சென்றவர் அச் சங்கத்தவரைப் போலவே தம்மையும் நிர்வாணமாக்கிக் கொள்ளத் துளியும் தயங்கவில்லை ஜெர்மனியில் நிர்வாணச் சங்கத்தவருடன் ஆடை ஏதுமின்றிப் பெரியாரும் இராமனாதனும் நின்று அளவளாவியதுடன், நிர்வாணமாக நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டனர் என்பதோடு துணிவுடன் அதைத் தெரிவிக்கவும் செய்தவர் அவர்.
– பக். 323, 324 / சுயமரியாதை இயக்கம் / மங்கள முருகேசன்”
உடல் என்ற அடையாளத்தை உதற வேண்டும் என்று நினைக்கும் சமணத் துறவிகள் மீது தாக்குதல்; நிர்வாண ஆராய்ச்சி செய்த ஈவெராவுக்கு சிலை வைத்து பாராட்டு. தமிழகமே இதுதானா உன் தலைவிதி?
ஐரோப்பிய பயணத்திற்கு முன்பே, சுயமரியாதை இயக்கக் கூடாரம் காலியாகிறது என்பதை ஈவெரா உணர்ந்தார். இருந்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சுயமரியாதை இயக்கத்தில் இருப்போரும் ஈவெரா சொல்வதைக் கட்டளையாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
1930 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாட்டில் நாத்திகப் பிரசாரம் நடைபெறவில்லை.
”நாத்திகத்தை ஏற்பதும், பிரசாரம் செய்வதும் இவ்வியக்கத்தின் நோக்கமில்லை, இனியும் இராது” என்று வரவேற்புக் குழுத்தலைவரான சண்முகனார் பேசினார்.
இதை அடுத்து, விருதுநகரில் ஒரு மாநாடு நடந்தது. அங்கே சுயமரியாதை இயக்கத்தலைவரான ட்பிள்யு ஏ. சௌந்திரபாண்டியன், ”கட்சிக்குள் நிறைய கருத்துவேறுபாடுகள் உள்ளன. காங்கிரசின் மத நடுநிலைக் கருத்துகள் சுயமரியாதை இயக்கத்திற்கு ஒரு அடியைக் கொடுத்துவிட்டது” என்றார். வி. வி. ராமநாமி நாடார், டபிள்யு. எ. சௌந்திரபாண்டியன் கி. ஆ. பெ விசுவநாதம் ஆகியோர் விலக விருப்பம் தெரிவித்தனர்.
சேலம் நகரில் 29. 06. 1931 இல் பேசிய பி. டி. ராஜன்:
“சுயமரியாதை இயக்கம் நாத்திக இயக்கமல்ல; சமூகத் துறையில் வெகுகாலமாக இருந்து வரும் குறைபாடுகளை ஒழிக்க முனைந்து வேலை செய்யும்போது குறைபாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு இவ்விதம் தோன்றுகிறது…
கடவுள் இருக்கவேண்டும்; ஏனெனில் மனித சமூக முன்னேற்றத்திற்கு எந்தக் கடவுளும் தடையாக இருக்க மாட்டார். கடவுளுக்குத் தரகர் முறையும் ஒழிக்கப்படவேண்டியதுதான். ஆதலால் நமது முயற்சிகள் நாத்திகமென்று யாரும் பயப்படவேண்டியதில்லை.”
வெகுஜனங்களிடையே புதுரத்தம் பாய்வதையும் காங்கிரஸ் அமைப்பு ரீதியாக வளர்ச்சி பெறுவதையும் தாங்க முடியாமல் வெளிநாட்டுக்குப் போனார் ஈவெரா.
இனி, தமிழகத்தில் தேசிய எழுச்சியைப் பார்ப்போம்.
தமிழகத்து எழுச்சியில் தமிழ் இதழ்களுக்கு முக்கிய பங்கு உண்டு. சங்கு கணேசன், சங்கு சுப்பிரமணியம் ஆகியோரால் தொடங்கப்பட்ட (30.01.1930) சுதந்திரச் சங்கு விற்பனையில் சாதனை படைத்தது. வாரம் இருமுறை, மும்முறை என்று வெளிவந்த இந்த இதழ் எழுபத்தையாயிரம் பிரதிகள் விற்றன. விடுதலைப் போருக்கு ஆதரவாகச் செயல்பட்ட சிலர் இந்த இதழை நூற்றுக்கணக்கில் வாங்கி மக்களிடையே விநியோகித்தனர். சுதந்திரச் சங்கு வெளியிட்ட அரசியல் கார்டூன்கள் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன.
ஆனந்தவிகடன் என்ற இதழை பூதலூர் வைத்தியநாத ஐயரிடமிருந்து 1928இல் எஸ்.எஸ். வாசன் வாங்கினார். எழுத்துக்கு 25ரூ வீதம் ஆனந்தவிகடன் 200ரூபாயாக மதிப்பிடப்பட்டது. ஆரம்பத்தில் வாசனுக்கு அரசியல் ஈடுபாடு இல்லை. பின்னர் கல்கி ஆசிரியரான பிறகு மாற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 1933-இல் மணிக்கொடியும், 1934-இல் தினமணியும் தொடங்கப்பட்டன. இதழ்களைப் பற்றிய விவரங்களை பிறகு வரும் பகுதிகளில் பார்க்கலாம்
ஈவெரா ஐரோப்பாவில் நிர்வாண சங்கத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது தமிழகத்தைக் துக்கத்தில் உறையச்செய்த சம்பவம் ஒன்று நடந்தது.
தேசியக் கொடியை ஏந்திச் சென்ற குற்றத்திற்காக குமாரசாமி என்ற 28 வயது இளைஞர் போலீசாரால் தாக்கப்பட்டு ரத்தம் சிந்தி உயிரைவிட்டார். இது நடந்தது திருப்பூரில்.
இளம் மனைவியைத் தவிக்கச் செய்து உயிர்த்தியாகம் செய்த குமாரசாமியை ‘கொடிகாத்த குமரன்’ என்று தமிழ்மக்கள் சொந்தம் கொண்டாடினார்கள்.
இனி, திருப்பூர் குமரன் பற்றி:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை என்ற ஊரில் பிறந்தவர் குமரன்; செங்குந்தர் மரபைச் சேர்ந்தவர். ஏழைக்குடும்பத்தில் குமரனோடு பிறந்தவர்கள் ஆறுபேர்.
‘சொந்தத்தில் திருமணம் நடந்தால் குடும்பத்திற்கு ஒரு ரூபாய் வீதம் மொய் வைக்கவேண்டும்’ என்ற வழக்கம் சென்னிமலை செங்குந்தர்களிடம் இருந்தது. 1922 இல் ஒரே நேரத்தில் 63 திருமணங்கள் வந்ததில் மொய் வைக்கக் காசில்லாமல் ஊரைவிட்டு புறப்பட்டார் குமரன்; திருப்பூர் வந்த குமரன் பஞ்சுக் கம்பெனியில் குமாஸ்தாவாக சேர்ந்தார்; ‘ராமாயி’ என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.
குமரனுக்கு தேசத்திடமும் தெய்வத்திடமும் ஈடுபாடு அதிகம். தினமும் திருக்குறளும் திருவாசகமும் படிப்பார். எப்போதும் கதர்த்துணிகளையே அணிவார்.
ராஜாஜி தலைமையில் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்து கொள்ள விரும்பினார் குமரன். சூழ்நிலை அவரைத் தடுத்துவிட்டது. அவருக்கு ஏகப்பட்ட வருத்தம்.
பின்னர் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். மறியலுக்குப் போகும்போது பக்கத்துவீட்டு தையல்காரரின் ஐந்துவயது பையனையும் அழைத்துபோவார். கடைக்கு வருவோரின் காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்சுவான் அந்தச் சிறுவன். அவன் பிடியிலிருந்து தப்புவதே பெரும்பாடாயிருக்கும்.
கள்ளுக்கடைக்காரர் பட்டாசைக் கொளுத்தி குமரன் முகத்தில் வீசினார். முகமெல்லாம் புண்ணாக ஆன நிலையிலும் குமரனின் உறுதி குலையவில்லை.
அப்போது மகாத்மா காந்தி கைது செய்யப்படுகிறார். (04.01.1932.) செய்தி கேட்டவுடன் மக்கள் வெகுண்டெழுந்தார்கள். திருப்பூரிலும் மற்ற இடங்களிலும் சட்ட மறுப்பு நடவடிக்கைகள் சூடுபிடித்தன.
குமரன் சட்டமறுப்பு போராட்டத்திற்குத் தயாராகிறார். உறவினர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். குமரன் ஒரே எண்ணத்துடன் இருக்கிறார். யாருக்கும் பாக்கி இருக்கக்கூடாது என்று கடன் கொடுத்தவர்களை எல்லாம் சந்தித்துக் கடனை தீர்த்து விடுகிறார்.
திருப்பூரின் முக்கிய வீதிகளில் ரிசர்வ் போலீஸ் அணிவகுப்பு நடைபெறுகிறது. போராட்ட நாளான ஜனவரி 10 அன்று காலை 6 மணிக்கே திருப்பூர் தேசபந்து வாலிப சங்க உறுப்பினர்கள் 9 பேர் தலைவர் ஈசுவர மூர்த்தியின் வீட்டு வாசலில் அணிவகுத்து நிற்கின்றனர். அதில் குமரனும் ஒருவர். போலீஸ் கொடுமைக்குப் பயந்து ஈசுவரமூர்த்தி போராட்டத்திற்கு வரமறுத்துவிடுகிறார். பி.எஸ். சுந்தரம் என்ற தொண்டர் தலைமையேற்கிறார்.
1. குமரன்
2. ராமன் நாயர்
3. பொங்காளி முதளியார்
4. நாச்சிமுத்து செட்டியார்
5. விஸ்வநாத நாயர்
6. சுப்பராயன்
7. நாச்சிமுத்து கவுண்டர்
8. நாராயணன்
9. சிறுவன் அப்புக்குட்டி
என்ற தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்
குமரனிடம் தலைவர் மூவர்ணக் கொடியைக் கொடுக்கிறார். ‘மகாத்மா காந்திக்கு ஜே! வந்தே மாதரம்!’ என்று கோஷமிட்டபடியே தொண்டர்கள் நடக்கிறார்கள்.
திருப்பூர் மங்கள் விலாஸ் மாளிகை அருகே ஊர்வலம் வந்தபோது தொண்டர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகம் இடப்படுகிறது.
திருப்பூர் நகர போலீஸ் ஸ்டேஷன் அருகில் இன்ஸ்பெக்டர் முகமது மற்றும் ஒரு அதிகாரியும் தொண்டர்களை வழிமறித்து எச்சரிக்கிறார்கள். தடியடி நடக்கும் என்று மிரட்டுகிறார்கள்.
தொண்டர்கள் உரத்த குரலில் கோஷமிடுகிறார்கள். முப்பது போலீஸ்காரர்கள் தொண்டர்களைச் சுற்றி வளைத்து தாக்குகிறார்கள். இன்ஸ்பெக்டர் முகமது ‘இந்த வாய்தானே வந்தேமாதரம் சொன்னது’ என்று குமரனின் முகத்தில் அடிக்கிறார்.
போலீசார் குமரனின் கையில் இருக்கும் கொடியைப் பிடுங்க முயற்சி செய்கிறார்கள். மீண்டும் மீண்டும் குமரன் தாக்கப்படுகிறார். குமரனின் இடது காதுக்கு நேராக மண்டை பிளந்து ரத்தம் கொட்டுகிறது. ஆனால் அவர் ‘வந்தே மாதரம்’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார். வலக்கரம் மூவர்ணக் கொடியை உறுதியாகப் பிடித்திருக்கிறது. குருதி வெள்ளத்தில் குமரன் கீழே சாய்கிறார். ராமன் நாயருக்கும் பலத்த அடி. அவரும் கீழே விழுந்து விடுகிறார்.
இன்ஸ்பெக்டர் முகம்மது பி.எஸ் சுந்தரத்தின் மீது பாய்கிறார்; லத்தியால் அடித்து கை, கால் எலும்புகளை உடைக்கிறார்.
குமரன், சுந்தரம், ராமன் நாயர் மூவரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர்.
மறுநாள் (11.01.1932) அதிகாலை 5 மணிக்கு குமரனின் உடலைவிட்டு உயிர் பிரிந்துவிடுகிறது.
’என் உயிர் போய்விடும்; நீ புத்தியாகப் பிழைத்துக்கொள்’ என்று மனைவி ராமாயிடம் சொன்னதுதான் அவருடைய கடைசி வார்த்தை.
குமரன் சிந்தியரத்தம் தாய்மண்ணில் கலந்துவிட்டது.
மேற்கோள் மேடை:
நீதிக்கட்சியின் ஆட்சியில் திருப்பூர் குமரனைக் கொன்றார்கள். கள்ளுக்கடை மறியல் செய்தவர்களை அடித்து உதைத்துச் சிறையிலிட்டார்கள். உப்புச் சத்தியாகிரகம் நடந்தபோதும் இதே பணியைத்தான் செய்தார்கள். வெள்ளையர்களின் மனம் குளிரும்படியாக தேசியவாதிகளைத் துன்புறுத்தினார்கள்.
– பக்கம் 28, கண்டுகொள்ளுவோம் கழகங்களை / நெல்லை ஜெபமணி.