New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 21.பகுத்தறிவுப் பல்டி


Guru

Status: Offline
Posts: 24778
Date:
21.பகுத்தறிவுப் பல்டி
Permalink  
 


போகப் போகத் தெரியும்-21

April 29, 2009
சுப்பு rss_icon16.jpg

 

பகுத்தறிவுப் பல்டி

pattukottai kalyanasundaramபள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்
பயணம் போறேண்டா – நான்
பள்ளிக் கூடம் இல்லாத ஊருக்குப்
பயணம் போறேண்டா….

எழுதிப் படிக்க அறியாதவன்தான்
உழுது ஒளச்சு சோறும் போடுறான்
எல்லாம் படிச்சு ஏதேதோ பேசி
நல்லா நாட்டைக் கூறு போடுறான் – இவன்
சோறு போடுறான் – அவன்
கூறு போடுறான்

– ‘கண் திறந்தது’ திரைப்படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்.

திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவினைக்காக ஓங்கிக் குரல் கொடுத்த காலத்தில் (1959) பட்டுக்கோட்டையார் இந்தப் பாடல் எழுதினார்.

தலைமுடியை நேர் வகிடாக எடுத்திக்கொள்வதும், உதட்டுக்கு மேலே ஒரு வரியாக மீசையை ஒதுக்கிக் கொள்வதும் தமிழ்ப் பற்றாகக் கருதப்பட்ட காலம் அது. மகாலிங்கங்களும் (டி.ஆர்), ஜெயராமன்களும் (சி.எஸ்) தமிழகத்தை மயக்கி வைத்திருந்தார்கள் அப்போது சினிமாவில் வருவதுதான் சிலப்பதிகாரம்; மைக்கில் பேசுவதுதான் மணிமேகலை என்று ஒரு கூட்டத்தால் பரப்பப்பட்டது. சத்தம் போடுவதுதான் சங்கத்தமிழ் என்றும் சிலர் நம்பினார்கள்.

படித்தவர்களுக்குத் தி.மு.க. மீது ஏற்பட்ட கவர்ச்சி பிறகு பாமரர்களையும் வீழ்த்தியது. அரிசிப் பஞ்சமும் அரிசிப் பொய்யும் அதோடு சேர்ந்து கொள்ள ஜாலவித்தைக்காரர்கள் ஜார்ஜ் கோட்டைக்குள் நுழைந்து விட்டனர். ஐம்பது வருடங்களுக்குப் பிறகு ஜனநாயகத்தின் அடுத்த கட்டமாக தில்லியிலும் இடம் கிடைத்துவிட்டது. மாநில அரசில் முழு உரிமை, மத்திய அரசில் முக்கால் உரிமை என்பது சாத்தியமாகிவிட்டது; ஆட்சியோடு வரும் ஆதாயங்களும் ஆயிரம் கோடிகளாக, அல்ல அல்ல, லட்சம் கோடிகளாகக் குவிந்துவிட்டன.

தனியார் தொலைக்காட்சி வியாபாரத்தில் நான்கு மாநிலங்களிலும் நல்ல வசூல் நடப்பதால் தமிழ் உணர்வு கூடத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இப்போது தி.மு.க.வுக்கு இறையாண்மை என்றாலே இதயம் துடிக்கிறது; நாட்டுப்பற்று என்றாலே நாடி ஒலிக்கிறது; ஒருமைப்பாடு என்றாலே உடம்பு சிலிர்க்கிறது.

‘கார்கில் வெற்றிக்குக் கூடக் கலைஞர்தான் காரணம்’ என்று அப்துல் ரகுமான்கள், எழுத ஆரம்பித்து விட்டார்கள்.

இந்தப் பகுத்தறிவுப் பல்டியைப் பற்றிப் பாடுவதற்காக பட்டுக்கோட்டையார் மீண்டும் வர வேண்டும்.

நாம், தொடரை விட்ட இடத்தில் தொடங்கலாம். சென்ற முறை டாக்டர். டி.எம். நாயரின் சொற்பொழிவைப் பார்த்தோம். இந்தத் தமிழ் என்ற பயிருக்குத் தண்ணீர்விட்ட உரைநடை முயற்சிகளைப் பார்க்கலாம்; சில தேசிய இதழ்களைப் பார்க்கலாம்.

ஹிந்து: 1878

ஜி.சுப்பிரமணிய ஐயர்ஹிந்து இதழ்தான் சென்னையிலிருந்து வெளியிடப்பட்ட முதல் தேசிய இதழாகும். சென்னை நகரத்தைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் கூடி செப். 20, 1878ஆம் ஆண்டில் இந்தியர்களுக்கான ஆங்கில இதழான ‘தி ஹிந்து’வைத் துவக்கினர். ஜி. சுப்ரமணிய ஐயர், எம். வீரராகவாசார், டி.டி. ரங்காசாரியார், பி.வி. ரங்காசாரியார், டி.கேசவ்ராவ் பந்த் மற்றும் என். சுப்பாராவ் பந்துலு ஆகிய நண்பர்கள் வெளியிட்ட இந்தப் பத்திரிக்கை ஆங்கில வார இதழாக வெளிவந்தது; முதலில் 80 பிரதிகளை அச்சிட்டனர்.

பிறகு வாரத்துக்கு மூன்று முறை வெளிவந்த ஹிந்து 1889ல் நாளிதழாக மாறியது.

ஹிந்து நாளிதழ் குறித்த விவரங்களை பிறகு பார்க்கலாம். இந்தப் பகுதியில் தமிழ் இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

சுதேசமித்திரன்: 1882

ஹிந்து நாளிதழை உருவாக்கிய ஜி. சுப்ரமணிய ஐயர்தான் சுதேசமித்திரனைத் துவக்கினார். 1885 மார்ச் மாதம் பம்பாய் நகரத்தில் இந்திய தேசியக் காங்கிரசின் முதல் கூட்டம் நடைபெற்றது. சுரேந்திரநாத் பானர்ஜி தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தவர் ஜி. சுப்ரமணிய ஐயர்.

தாய்மொழியில் செய்திப் பத்திரிகை வேண்டும் என்று நினைத்த ஜி. சுப்ரமணிய ஐயர் 1882ல் சுதேசமித்திரன் வார இதழைத் தொடங்கினார்; 1887 வரை இது வாரம் இருமுறையாக வெளி வந்தது; 1889 முதல் நாளிதழாக மாறியது.

சுதேசமித்திரன் குறித்து ஹிந்து இதழில் வெளிவந்த விளம்பரத்தின் தமிழ் வடிவம் இதோ:

இந்த ராஜதானியில் ஆங்கிலம் அறியாத ஜனங்கள் வாசிக்கத் தகுந்த ஒரு தமிழ் சமாசாரப் பத்திரிகை வெகு நாளாய் இல்லை. அதைப் பற்றிப் பல தடவைகள் பல எத்தனங்கள் செய்தும் முடியாமல் இப்போது வயதிலும் அநுபோகத்திலும் முதிர்ந்த சிலரும் எ.ஏ. முதலான இங்கிலீஷ் பரீட்சை தேறின சிலரும் இன்னும் ஒருமுறை முயற்சி செய்ய வேண்டுமென்ற எண்ணத்துடன் சுதேசத்தாருடைய உதவியைத் தேடுகிறார்கள்.

ஆங்கில அரசின் கெடுபிடிச் சட்டங்களுக்கு அஞ்சாமல் வெற்றிகரமாக நடத்தப்பட்ட முதல் தமிழ் நாளிதழ் சுதேசமித்திரன்தான். அரசியல், வரலாறு, பொருளாதாரம், கலை ஆகிய துறைகளில் கட்டுரைகளை வெளியிட்ட இதழ் சுதேசமித்திரன். காங்கிரஸ் இயக்கம் குறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தலையங்கம், துணுக்குச் செய்தி, பெட்டிச் செய்தி, மாநாட்டு நிகழ்ச்சிகள் என்று பலவகையான செய்திகள் வெளியிடப்பட்டன.

நம் தேசக் கடைகளில் அரிசி, பருப்பு, காய்கறி தவிர மற்றவை எல்லாம் ஆங்கிலேயர் சாமான்களேயன்Ri நமது சாமான்கள் அல்லவே! அப்படிப்பட்ட சாமான்களை சிருஷ்டிக்க நமது தேச மக்களுக்குத் திறமையில்லையே; ஐக்கியமில்லையே; தைரியமில்லையே; ரோஷமில்லையே…

என்று ஆவேசத்தோடு எழுதப்பட்ட தலையங்கங்கள் 04.05.1887ல் வெளிவந்தன.

சுதேசமித்திரன் தலையங்கங்களைக் காரணம் காட்டி ஜி. சுப்ரமணிய ஐயர் 1908ல் சிறைவைக்கப்பட்டார்.

தமிழரிடையே மகாத்மா காந்தியின் பெருமையைத் தெரியப்படுத்திய இதழ் சுதேசமித்திரன் என்று சொல்லலாம். காந்தியடிகளின் தென்னாப்பிரிக்கப் போராட்டங்கள் பற்றி சுதேசமித்திரனில் எண்பது தலையங்கங்கள் எழுதப்பட்டன.

1904 நவம்பர் முதல் 1906 வரை பாரதியார் சுதேசமித்திரனில் துணையாசிரியராகப் பணிபுரிந்தார்.

தேசபக்தன்: 1917

தேசபக்தன் முதல் இதழ் வெளிவந்தது 07.12.1917 அன்று.

தேசபக்தன் சுதந்திரத்தை விரும்புகிறான், சுயாட்சி கேட்கிறான், சகோதரத்துவத்தை உண்டு பண்ணுகிறான்.

என்று எழுதினார் திரு.வி.க. அவரால் தமிழ் உரைநடை எழுச்சி பெற்றது; தலைப்புகள் தமிழில் எழுதப்பட்டிருந்தன; வாக்கியங்கள் அளவோடு இருந்தன.

அன்னி பெசண்ட் அம்மையார் நடத்திய ஆங்கில இதழான ‘நியூ இந்தியா’வை தேசபக்தன் பின்பற்றியது. தேசபக்தனைத் தோற்றுவித்தவர் எம். சுப்பராய காமத். இவர் ‘நியு இந்தியா’வில் துணை ஆசிரியராக இருந்தார். தேசபக்தனுக்காக அன்னி பெசண்ட் 3000 ரூபாய் நன்கொடை அளித்தார்.

ஹோம்ரூல் இயக்கத்தில் திலகரும் அன்னி பெசண்ட்டும் இணைந்து பணி செய்தபோது தேசபக்தன் துவக்கப்பட்டது.

தேசபக்தனின் முதல் ஆசிரியர் திரு.வி. கல்யாண சுந்தர முதலியார்.

தமிழ் மறுமலர்ச்சி, தேசிய எழுச்சி, தொழிலாளர் இயக்கம், சமயப் பணி, பத்திரிகை அலுவல் என்று பன்முகப்பட்ட வாழ்க்கை திரு.வி.க. வுடையது.

திரு.வி.கதிரு.வி.க.வைப் பற்றிச் சொல்லாமல் தமிழ் இதழியல் வரலாறு நிறைவடையாது. திரு.வி.க.வின் வாழ்க்கையைப் பற்றிய விவரங்கள் இதோ:

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிற்றூர் துள்ளம். இந்த ஊரில் 26.08.1883 அன்று பிறந்தவர் வி. கல்யாண சுந்தரம். அவருடைய மூதாதையர் திருவாரூரைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஊர்ப் பெயராகத் திருவாரூரைச் சேர்த்துக் கொண்டார்; பின்னாளில் திரு.வி.க என்று அழைக்கப்பட்டார்.

திரு.வி.க.வின் பெற்றோர்கள் சென்னை ராயப்பேட்டையில் குடியேறினர். திரு.வி.க.வின் தந்தை மண்டி வைத்து வியாபாரம் செய்தார்.

வெஸ்லி கல்லூரியில் சேர்ந்த கல்யாண சுந்தரம் கட்டணம் செலுத்தாத மாணவராக விளங்கினார். குடும்பச் சூழ்நிலையால் பள்ளிப் படிப்பைத் தொடரமுடியாத திரு.வி.க புக் கீப்பிங் பரீட்சை எழுதி வெற்றி பெற்றார்.

சுவாமிநாத பண்டிதர், தணிகாசல முதலியார், சிதம்பர முதலியார், சுவாமி வேதாச்சலம், தேவப் பிரகாசம் பண்டிதர், பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் ஆகியோரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுக் கொண்டார்.

மருவூர் கணேச சாஸ்திரியார், கிருஷ்ணமாசாரியார், கடலங்குடி நடேச சாஸ்திரியார் ஆகியோரிடம் கீதை, சம்ஸ்கிருத இலக்கியங்கள் ஆகியவற்றைப் படித்துக் கொண்டார்.

பொருளாதார நிர்பந்தத்தால் திரு.வி.க. ஸ்பென்சர் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார்.

பணியிடத்தில் வந்தே மாதரம் பத்திரிகை படிப்பதில் ஆர்வம் காட்டியதாக திரு.வி.க. எச்சரிக்கப்பட்டார்; ஸ்பென்சர் கம்பெனியை விட்டு விலகினார்.

பிறகு ராயப்பேட்டை வெஸ்லியன் மிஷன் பள்ளிக் கூடத்தில் ஆசிரியராகச் சேர்ந்தார். 1916ம் ஆண்டில் திரு.வி.க. வெஸ்லி கல்லூரியின் தலைமைத் தமிழாசிரியராக நியமிக்கப்பட்டார்.

1916ல் தொடங்கப்பட்ட நீதிக்கட்சிக் கூட்டங்களில் கேள்வி கேட்பது, மறுப்பு துண்டுப் பிரசுரங்கள் வெளியிடுவது ஆகிய செயல்களில் திரு.வி.க. ஈடுபட்டார்.

இது பற்றி அவரே எழுதியது:

தொடக்கத்தில் காங்கிரஸ் சார்பில் கூடுங் கூட்டங்களில் ‘ஜஸ்டிஸ்’ கட்சியின் கொள்கையை மறுப்பதை யான் ஒரு பெருந் தொண்டாகக் கொண்டேன். அத்தொண்டு காலத்துக்கு உரியதாகிறது. அதைக் காலதேவதையும் நாடியது. வகுப்பு வாதத்தால் நாட்டின் ஒருமைப்பாடு குலையும் என்று யான் நம்பினேன்; உறுதியாக நம்பினேன். அந் நம்பிக்கையினின்றும் யான் இன்னும் மாறுதல் அடையவில்லை. ஜஸ்டிஸ் கட்சியைக் குலைக்கும் தொண்டு சென்னையில் நானா பக்கமும் நிகழ்ந்தது; வெளியூர்களிலும் நிகழ்ந்தது. செல்வாக்குடைய ‘தேசபக்தனும் தமிழ்நாட்டிலுள்ள பலப்பல தொழிற்சங்கங்களும் என் வயப்பட்டிருந்தமையால் ‘ஜஸ்டிஸ்’ கட்சியின் ஆக்கத்தைச் சிதைப்பது எனக்கு அருமையாகத் தோன்றியதில்லை.

– பக். 229 / திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் / பூம்புகார் பதிப்பகம்.

மூன்று ஆண்டு காலப் பணிக்குப் பிறகு திரு.வி.க. 1920 ஜூலையில் தேசபக்தனிலிருந்து விலகிக் கொண்டார்.

திரு.வி.க அபிமானம் கொண்ட தொழிலாளர்கள் அவருக்கு 3000 ரூபாய் பணமுடிப்பு அளித்தனர். அவர் அதைக் கொண்டு ‘நவசக்தி’ என்ற வார இதழைத் தொடங்கினார்.

ஜாலியன்வால பாக் படுகொலை குறித்த செய்திகளை வெளியிட்டதற்காக தேசபகதன் ஜாமீன் தொகை 1000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது; புதிதாக 6000 ரூபாய் ஜாமீன் கட்டும்படி சொல்லப்பட்டது.

வ.வே.சு ஐயர்திரு.வி.க.வுக்குப் பிறகு வ.வே.சு. ஐயர் தேசபக்தன் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

தேசபக்தன் தலையங்கத்தில் திரு.வி.க. பற்றி வ.வே.சு. ஐயர் எழுதுகிறார் (31.07.1920):

ஸ்ரீமான் கல்யாண சுந்தர முதலியார் அலங்கரித்த பத்திராசிரிய ஸ்தானத்தில் உட்காருவதற்கு எனக்கு அச்சமாக இருக்கிறது. அவரது சொல்வன்மையும் தீரமும் நேர்மையும் கலங்காமையும் பாரபட்சமின்மையும் அவசியம் நேர்ந்த போது காட்டிய நிர்த்தாட்சண்யமும் பத்திராசிரியத் தொழிலுக்கே அணிகலன்களாக விளங்கின.

தேசபக்தனில் வ.வே.சு. ஐயர் பணியாற்றியது பற்றி தமிழ் இதழ்கள் 19151-1966 நூலில் ரா.அ. பத்மநாபன் எழுதுகிறார்:

1920ல் தேசபக்தன் ஆசிரியர் ஆனபோது வ.வே.சு. ஐயருக்கு வயது 39. அவருக்கு மாதம் ரூ.150 ரூபாய் சம்பளம்.

ஐயரது மேற்பார்வையில் தேசபக்தன் புதுப்பொலிவுடன் விளங்கியது. கிலாபத் இயக்கமும் ஹோம்ரூல் இயக்கமும் அவரது தேசபக்தன். பத்திகளில் நிறைய இடம் பெற்றன. ஐயரது தலையங்கங்களும் குறிப்புகளும் பெஸன்ட் அம்மையாரின் நியூ இந்தியா போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளாலும் எடுத்து வெளியிடப்பட்டன. தேசபக்தன் பத்திரிகை விரைவில் சுதேசமித்திரனையும் மிஞ்சி, விற்பனையில் முதலிடம் பெற்றுவிட்டது…..

ஐயர் பேச்சில் தமிழ்மொழிகளே மிளிரும். தமிழில் இரண்டறக் கலந்துவிட்ட வடமொழிச் சொற்களையும் இடையிடையில் காணலாம். ஆங்கிலச் சொற்களோ, சொற்றொடர்களோ கலக்கவே மாட்டார். அவரது பேச்சு நயமானது…..

அலுவலகத்திலும் சரி, பிறவிடங்களிலும் சரி, அவர் யாரிடத்தும் பேதமின்றிப் பழகுவார். வைதிகமான ஆசாரத்தில் நம்பிக்கை கொண்டவராயினும் அவர் உணவில் வைதிக ஆசாரம் பார்க்க மாட்டார். அதாவது தான் உண்ணும் போது பிராமணரல்லாதார் பார்க்கலாகாதென்றோ, பிராமணரல்லாதார் தொட்ட உணவைப் புசிக்கலாகதென்றோ கருதமாட்டார். தேசபக்தன் காரியாலயத்தில் பிற்பகலில் ஒரு காப்பியும் நெய் தோசையும் கடையிலிருந்து வாங்கி வரச் செய்து உண்பார். அதை வாங்கிவர, காரியாலயப் பையன்களில் ஒருவனையே அனுப்புவார். அவன் போகுமுன் கைகால்களை சுத்தம் செய்து கொண்டு போய்வர வேண்டும் என்றே வற்புறுத்துவார்.

ஐந்து வருடங்களுக்குப் பிறகு சேரன்மாதேவி குருகுலப் பிரச்சினையில் பிராமணர்களின் உணவுப் பழக்கம் காரசாரமாகப் பேசப்பட்டது. ஐயர் என்ற நல்ல மனிதருக்குப் பாகுபாடு இல்லை என்பதை இந்த வர்ணனை தெளிவுபடுத்துகிறது. மற்ற விஷயங்களை அந்தப் பகுதியில் பார்த்துக்கொள்ளலாம்.

வெற்றிகரமாக நடந்த தேசபக்தனுக்கு ஏற்பட்ட சோதனைகளைப் பற்றி அறிந்து கொள்ள தினமணி சுதந்திரப் பொன்விழா மலரில் பெ.சு. மணி எழுதிய ‘சுதந்திரத்துக்குப் பாடுபட்ட பேனாக்கள்’ என்ற கட்டுரையிலிருந்து சில வரிகளைக் கொடுக்கிறேன்:

வ.வே.சு. ஐயர் தேசபக்தனில் சேர்ந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு ‘தேசபக்தன்’ சுப்பராய காமத்திடமிருந்து நாகேசுவர சாஸ்திரி என்பவரிடம் கை மாறியது புதிய நிர்வாகம் வ.வே.சு. ஐயருக்குத் தொல்லை கொடுத்தது. 1921 மே 6-ல் தேசபக்தனில் ‘அடக்கு முறை’ என்ற தலைப்பில் தலையங்கம் வெளிவந்தது. இதை வ.வே.சு. ஐயர் வெளியூர் சென்ற சமயத்தில் வேறொருவர் எழுதினார். இந்தத் தலையங்கம் கூட விரோதமானது என்று குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டது. ஆசிரியர் என்ற பொறுப்பில் தாம் எழுதாத கட்டுரைக்காக ஒன்பது மாத சிறைத் தண்டனையை ஏற்றார் வ.வே.சு. ஐயர். தலையங்கத்தை எழுதியவர் மன்னிப்புக் கேட்டு விடுதலை பெற்றார். இதற்குப் பிறகு ‘தேசபக்தன்’ நின்றுவிட்டது.

இந்தியா: 1906

பாரதியார் சுதேசமித்திரனிலிருந்து வெளியேறிய பிறகு ‘இந்தியா’ இதழில் பணியாற்றினார். சுரேந்திரநாத் ஆர்யா, சர்க்கரைச் செட்டியார், வக்கீல் துரைசாமி ஐயர், வ.உ. சிதம்பரனார் ஆகியோர் ‘இந்தியா’ இதழுக்கு உதவினர். காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரவாதத்தைச் சார்ந்தோர்களின் பத்திரிகையாக இந்தியா செயல்பட்டது.

இந்தியா 4000 பிரதிகள் விற்ற வார இதழாகும். எல்லா கவர்மெண்டாருக்கு ரூ.50.00, ஜமீன்தார், ராஜாக்களுக்கு ரூ.30.00, மாதம் ரூ.200.00க்கு மேற்பட்ட வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.15.00, மற்றவர்களுக்கு ரூ.3.00 என்று சந்தா நிர்ணயிப்பதில் பாரதியார் புதுமை செய்திருந்தார்.

தாங்கள் ஊரில் நடக்கும் செய்திகளை எழுதி அனுப்புவோருக்கு சன்மானம் தந்த முதல் இதழ் இந்தியாதான்.

1908ல் ஆங்கில அரசு நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து பாரதியார் புதுச்சேரிக்கு சென்றார். அக்டோபர் 1908 முதல் மார்ச் 1910 வரை ‘இந்தியா’ புதுச்சேரியிலிருந்து வெளிவந்தது.

நவசக்தி: 1920

திரு.வி.க வை ஆசிரியராகக் கொண்ட நவசக்தி 22.10.1920ல் தொடங்கப்பட்டது. முதலில் வார இதழாக வந்த நவசக்தி 1923ல் வாரம் மும்முறையாக வெளிவந்தது; 1941 வரை திரு.வி.க. ஆசிரியர் பொறுப்பிலிருந்தார்.

நவசக்தி பற்றி திரு.வி.க கூறியது:

நவசக்தி என்னிடம் வளர்ந்த கால முழுவதும் நவசக்தியில் அரசியல் பூத்த வண்ணமிருக்கும். அவ்வப்போது அக்கொடியினிடம் சமூக சீர்திருத்தம், பெண் நலன், மொழிச் சிறப்பு, கலையாக்கம் முதலியனவும் முகிழ்க்கும். இறுதியில் நவசக்தி மலர்களில் பெரிதும் சமதர்ம மார்க்கமே கமழ்ந்தது.

தமிழ்நாடு: 1919

டாக்டர். பி. வரதராஜுலு நாயுடு 1919ல் சேலத்தில் துவக்கிய வார இதழ் ‘தமிழ்நாடு’. பின்னாளில் பேனா மன்னர் என்ற புகழைப் பெற்றவர் டி.எஸ். சொக்கலிங்கம். இவர் 1923ல் தமிழ்நாடு இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார்.

1925ல் தமிழ்நாடு வார இதழ் சென்னையிலிருந்து வெளிவந்தது; 1926ல் நாளிதழாக மாறியது.

சுதேசமித்திரனுக்கும் தமிழ்நாடுக்கும் சரியான போட்டி இருந்தது. சுதேசமித்திரன் விலை ஒன்றரையணா; தமிழ்நாடு விலை ஓரணா.

தமிழ்நாடு இதழில் எழுதிய கட்டுரைகளுக்காக 1921ல் டாக்டர். நாயுடுவுக்கு ஒன்பது மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

காந்தியடிகளின் உப்புச் சத்தியாகிரகம், சட்ட மறுப்புப் போராட்டம் ஆகியவற்றை எதிர்த்ததால் தமிழ்நாடு வாசகர்களின் ஆதரவை இழந்தது (1930-1932).

டாக்டர் நாயுடு 1932ல் ஆரம்பித்த ஆங்கில நாளிதழ் தி இந்தியன் எக்ஸ்பிரஸ். பிறகு அவர் அதை விற்றுவிட்டார்.

தேசிய இதழ்களைப் பற்றியே எழுதினால் போதுமா? திராவிட இயக்க இதழ்கள் பற்றிச் சொல்ல வேண்டாமா என்று ஒரு நண்பர் கேட்கிறார். திராவிட இயக்க இதழ்களைப் பற்றி அவற்றுக்குரிய காலகட்டத்தில் பார்க்கலாம். இப்போதைக்கு ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை மட்டும் சொல்கிறேன்.

திருவாரூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் பி.சி. கணேசன். நல்ல படிப்பறிவு உடைய இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் சரளமாக எழுதக் கூடியவர். திராவிட இயக்கங்களில் ஈடுபாடு கொண்டிருந்த பி.சி. கணேசன் ‘சுவராஜ்யா’ என்ற ஆங்கில இதழுக்கு திராவிட இயக்கம் குறித்த கட்டுரைகளை எழுதினார்; அவை வெளியிடப்பட்டன. ‘சுவராஜ்யா’ இதழின் ஆசிரியர் காசா சுப்பாராவ் என்ற பிராமணர்.

பிராமணர் நடத்தும் ‘சுவராஜ்யா’ இதழில் பிராமணரான பி.சி. கணேசன் திராவிட இயக்கத்தைப் பற்றி எழுதியிருக்கிறார் என்று பரவசப்பட்டுக் கொண்டார் ஈ.வே.ரா.வுக்கு நெருக்கமான குத்தூசி குருசாமி. அதைப் பத்திரிகையிலும் எழுதிவிட்டார்.

பி.சி. கணேசன் பிராமணர் அல்லர். அவருக்குக் கோபம் வந்துவிட்டது. “ஆங்கிலத்தில் சிற்ப்பாக எழுத வேண்டுமென்றால் பிராமணராகத்தான் இருக்க வேண்டுமா? இந்தக் கருத்து குத்தூசி குருசாமியின் தாழ்வு மனப்பான்மையைக் காட்டுகிறது” என்று வெளுத்து வாங்கிவிட்டார்.

குத்தூசி குருசாமி வருத்தம் தெரிவித்தார்.

மேற்கோள் மேடை:

கால்டுவெல் பார்ப்பன ஆதிக்கக் கொள்கைக்கு வித்திட்டவர். வடமொழியின் ஆக்கிரமணத்தைப் பற்றிப் பேசுகையில் அவர் தாம் ஒரு மொழி ஆராய்ச்சியாளர் என்பதை மறந்து உணர்ச்சி வசப்பட்டு விடுகிறார்.

– பக். 69 / கணையாழியின் கடைசிப் பக்கங்கள் / சுஜாதா

குறிச்சொற்கள்: the Hinduthiru.vi.ka.சுதேச மித்திரன்ஜி. சுப்ரமணிய ஐயர்திரு.வி.க.பகுத்தறிவுபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பெரியார்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard