தலித்துகளுக்கு ஜீரோ இடஒதுக்கீடு
அந்த ஜோதிடரிடம் ஒரு கோளாறு உண்டு. கண் விழித்துச் சொப்பனம் காண்பவர் அவர். ஒருவரைப் பார்த்தவுடனேயே அவரது வயதை ஊகித்து விடுவார். கிரகங்களை ஜாதகத்தில் நிறுத்தி உடனே பலன் சொல்லிவிடுவார். யாழ்ப்பாணத்து வீதிகளில் அவரது மிதியடிச் சத்தத்தைக் கேட்டாலே தெரு காலியாகி விடும். ‘கண்டால் எதையாவது சொல்லி வைப்பார். பெரும்பாலும் அது கெட்டதாகத்தான் இருக்கும்’ என்பது வெகுஜன அபிப்ராயம்.
சாது அப்பாத்துரை என்ற மகான் மீது ஜோதிடருக்குக் கடுப்பு. ‘கிரகங்கள் ஞானியரை நெருங்க முடியாது’ என்று அப்பாத்துரை சொல்லியிருந்தார். இது ஜோதிடருக்குப் பொறுக்கவில்லை. அவர் அப்பாத்துரைக்கு நாள் குறித்துவிட்டார். அப்பாத்துரையின் வீட்டுக் கதவைத் தட்டி ‘நீங்கள் மரணம் அடையும் வேளை நெருங்கிவிட்டது. உம்முடைய ஞானம் அப்போது வேலை செய்யாது’ என்று சொல்லிவிட்டார். அப்பாத்துரையிடம் ரியாக்ஷன் இல்லை.
அன்றிரவு ஜோதிடருக்குத் தூக்கமில்லை. புரண்டு புரண்டு படுத்தவர் பொழுது விடிவதற்காகக் காத்திருந்தார். காலையில் அப்பாத்துரையின் வீட்டுக் கதவைத் தட்டினார். அப்பாத்துரை ஜோதிடரை வரவேற்றார். மீண்டும் நாள் குறிப்பு. அப்பாத்துரை எதுவும் பேசவில்லை. இது மறுநாளும் நடந்தது. அதற்கு அப்புறமும் தொடர்ந்தது….
ரகசியமாகத் தகவல் பரிமாறப்பட்டு விஷயம் ஊருக்குள் பரவிவிட்டது. எல்லோரும் ஒருவிதக் கவலையுடன் இருந்தனர். அந்த நாளும் வந்தது. அன்றும் அப்பாத்துரையின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது ஆனால் தட்டியவர் ஜோதிடர் அல்ல. ‘ஜோதிடர் அகால மரணம் அடைந்துவிட்டார்’ என்ற சேதியைக் கொண்டுவந்தவர் கதவைத் தட்டினார்.
மக்கள் அப்பாத்துரையிடம் இதுபற்றிக் கேட்டார்கள். “ஜோதிடத்தின் பலனுக்கு இலக்காக இங்கே யாரும் இல்லை. இது எவரும் இல்லாத வெளி” என்றார் அப்பாத்துரை.
கோடீஸ்வரக் கம்யூனிஸ்ட் நடத்தும் ஆங்கில நாளிதழ் முதல் பெரும்பாலான ஊடகங்களில் ஜோதிடர் பாணிதான் நிலவுகிறது. வடமாநிலத் தேர்தல்களின் முடிவு வந்தவுடன் இவர்கள் பா.ஜ.க.வுக்கு நாள் குறித்துவிட்டார்கள். இவர்கள் கட்டுரை எழுதும் காகிதங்களை எடைக்குப் போட்டால் கூட எடுப்பார் இல்லை.
மீடியாக்களின் கிறுக்குத்தனத்தைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது நம் கவனத்திற்கு உரியவர்கள் மைனாரிட்டிகள்.
இந்து மதத்தில் உள்ள சாதிவேறுபாடுகளைப் பற்றிப் பேசும் கிறிஸ்தவ அமைப்புகளின் லட்சணம் என்ன என்று இப்போது பார்க்கலாம்.
இடஒதுக்கீடு விஷயத்தில் இவர்களின் நடைமுறை எப்படி உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால் தமிழகத்தில் சமூக, அரசியல் சூழலில் இடஒதுக்கீடு கேள்விக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. கேள்வி கேட்ட வழக்கறிஞர் விஜயனின் எலும்புகளை அம்மாவின் பிள்ளைகள் அடித்து நொறுக்கிவிட்டார்கள். அது நமக்கும் தெரியும். நம்முடைய கருத்துப்படி இடஒதுக்கீடு அவசியம்தான். ஆனால் நாம் கேட்கப்போவது வேறுவிதமான கேள்வி.
கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் நடத்தும் கல்லூரிகளில் வேலைக்கான இடஒதுக்கீடு இருக்கிறதா?
ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோருக்கான ஊதியத்தை அரசிடமிருந்து 100 சதவீதம் மானியமாகப் பெறும் கல்லூரிகளில் தலித் விரிவுரையாளர்கள் இருக்கிறார்களா?
தயவு செய்து நம்புங்கள். இல்லை என்பதுதான் பதில். அரசிடமிருந்து நிதிஉதவி பெறும் இந்த மைனாரிடி கல்லூரிகளில் ஒரு தலித்கூட வேலைக்குச் சேர்க்கப்படவில்லை.
பார்வைக்காகப் பட்டியலைக் கொடுதிருக்கிறேன். நமக்குக் கிடைத்த தகவல்களின்படி, விரிவுரையாளர் பணியிடங்களும், அதில் தலித் மற்றும் பழங்குடியினரின் எண்ணிக்கையும் கொடுத்திருக்கிறேன். ஜூன் 2000 முதல் ஜூலை 2008 வரையிலான மானியமும் தரப்பட்டுள்ளது.
எண் | கல்லூரி | மானியம் (ரூ. கோடி) | விரிவுரையாளர் பணியிடங்கள் | தலித் | பழங்குடியினர் |
1. | லயோலா கல்லூரி, சென்னை-34 | 34.12 | 140 | 0 | 0 |
2. | நியு காலேஜ், சென்னை-14. | 26.43 | 145 | 0 | 0 |
3. | சென்னை கிறித்துவக் கல்லூரி, சென்னை-96 | 39.93 | 124 | 0 | 0 |
4. | காயிதே மில்லத் கல்லூரி, சென்னை | 11.67 | 35 | 0 | 0 |
5. | ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, சென்னை | 26.01 | 75 | 0 | 0 |
6. | ஜஸ்டிஸ் பக்ஷீர் கல்லூரி சென்னை-18 (SIET) | 32.56 | 76 | 0 | 0 |
7. | பெண்கள் கிறித்துவக் கல்லூரி, சென்னை | 19.99 | 56 | 0 | 0 |
8. | மெஸ்டன் கல்லூரி, சென்னை-14 | 3.32 | 9 | 0 | 0 |
9. | ஸ்டெல்லா மதுதுனா கல்லூரி, சென்னை | 3.24 | 7 | 0 | 0 |
10. | ஒய்.எம்.சி.ஏ கல்லூரி, சென்னை-35 | 3.38 | 5 | 0 | 0 |
11. | புனித கிறிஸ்டோபர் கல்லூரி, சென்னை | 3.89 | 13 | 0 | 0 |
12. | இஸ்லாமியக் கல்லூரி, வாணியம்பாடி | 19.22 | 83 | 0 | 0 |
13. | அப்துல் அக்கீம் கல்லூரி, மேல்விசாரம் | 22.28 | 81 | 0 | 0 |
14. | ஆக்ஸிலியம் பெண்கள் கல்லூரி, வேலூர் | 12.23 | 46 | 0 | 0 |
15. | பிஷப் ஹிபர் கல்லூரி, திருச்சி | 25.76 | 106 | 0 | 0 |
16. | ஹோலி கிராஸ் கல்லூரி, திருச்சி | 36.38 | 116 | 0 | 0 |
17. | சதகதுல்லா கல்லூரி, பாளையங்கோட்டை | 15.3 | 65 | 0 | 0 |
18. | புனித சேவியர் கல்லூரி, பாளையங்கோட்டை | 2.71 | 12 | 0 | 0 |
19. | ஸ்காட் கிறித்துவக் கல்லூரி, நாகர்கோவில் | 24.59 | 115 | 0 | 0 |
20. | நாசரத் மார்கோசிஸ் கல்லூரி, நாசரத் | 11.71 | 48 | 0 | 0 |
21. | போப்ஸ் கல்லூரி, சாயர்புரம் | 12.43 | 48 | 0 | 0 |
22. | நேசமணி மெமோரியல் கல்லூரி, மார்த்தாண்டம் | 23.86 | 74 | 0 | 0 |
23. | ஹோலி கிராஸ் கல்லூரி, நாகர்கோவில் | 25.56 | 78 | 0 | 0 |
24. | ஜாமியா தருஸ்ஸலாம் கல்லூரி, உமராபாத் | 0.72 | 7 | 0 | 0 |
25 | பிராவிடன்ஸ் பெண்கள் கல்லூரி, குன்னூர் | 6.98 | 33 | 0 | 0 |
இராக் போருக்குக் கூட இட ஒதுக்கீடுதான் காரணம் என்று சொல்லும் சன் டி.வி. வீரபாண்டியன் என்ன சொல்லப் போகிறார்? இங்கிலாந்து டெஸ்டில் இந்தியா அடைந்த வெற்றிக்கும் இடஒதுக்கீடுதான் வழி வகுத்தது என்று சொல்லத் துடிக்கும் சோலையின் கருத்து என்ன? சுயமரியாதைச் சுடரொளி வீரமணியின் நிலைப்பாடு என்ன? இடஒதுக்கீட்டுக்காக அல்லும் பகலும் பாடுபடும் பிற தமிழகத் தலைவர்களின் நிலை என்ன? எஸ்ரா சர்க்குணமும் அப்துல் ரகுமானும் என்ன சொல்கிறார்கள்?
‘இத்தனை பேரை இழுத்தீர்களே? திருமாவளவன் பேரைச் சொல்லவில்லையே’ என்ற நியாயமான சந்தேகம் ஏற்படலாம். காரணமிருக்கிறது. அவர் சில நேரங்களில் நியாயமாக நடந்து கொள்கிறார்.
சிதம்பரம் கோவிலுக்கு வந்தவர் சட்டையைக் கழற்றி விபூதி அணிந்தார். இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார். ‘மசூதிக்குச் செல்லும்போது தொப்பி அணிகிறோம். தேவாலயங்களில் ஜெபத்தை ஏற்கிறோம். இவை மட்டும் சிலரால் முற்போக்கானவை என்று சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடராசர் கோவில் சந்நிதிக்குச் சென்றது பகுத்தறிவுக்கு எதிரானதாகச் சித்தரிக்கப்படுகிறது’ என்பது அவருடைய பதில்.
ரோமன் கத்தோலிக்க சபையில் இருக்கும் சாதிக் கொடுமைகளைக் கண்டித்து கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 21 கிறிஸ்தவ ஆலயங்களை விடுதலைச் சிறுத்தைகள் இழுத்து மூடினர்.
புதுவை மாதாகோவில் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் (19.03.2008) ‘மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பவரே ஏசு என்பதால் திருமாவளவன்தான் ஏசு’ என்று அறிவிக்கப்பட்டது.
ஆகையால், திருமாளவன் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். நம்மைப் பொறுத்தவரை சமூக ஏற்றத் தாழ்வுகளைச் சரி செய்வதற்காக இட ஒதுக்கீடு அவசியம் என்று கருதுகிறோம். அதில் ஐயமில்லை.
மேற்கோள் மேடை
கடந்த தாது வருஷம் பஞ்சத்தின் போது பெரிய பெரிய அண்டாக்களில் கூழைக் காய்ச்சி வைத்துக் கொண்டு சாகக் கிடப்பவர்களை ஒரு கைக் கூழுக்குக் கிறிஸ்தவர்களாக்கினார்கள். மிஷன் பாதிரிகளைக் கொண்டு ‘கிறிஸ்தவர்களானால் நிறைப் பணம் தருகிறோம். பெரிய வேலைகள் கொடுக்கிறோம் என்று சொல்லச் செய்து ஏமாற்றி நடுத்தெருவில் திண்டாடச் செய்தார்கள்.
– பாரதியார் (பாரதி நினைவுகள் / யதுகிரி அம்மாள் / பக்கம் 60)