எருமைத் தலையனுக்கு எக்ஸ்ட்ரா டைம்
எருமைத் தலையன் ஒருவன் ஏகமாக ஆடிக் கொண்டிருந்தான். தலையால் சிலரை முட்டினான்; வாலால் சிலரை அடித்தான்; கொம்புகளால் மலைகளைத் தூக்கியெறிந்தான்; கொழுப்பு மிஞ்சிவிட்டதால் அவன் சுற்றிச் சுழன்று வந்தான். அவனுடைய பாரத்தில் பூமி அதிர்ந்தது; மூச்சுக் காற்றின் வெப்பத்தில் மேகங்கள் கருகின.
ஆனால் தேவி அசரவில்லை. சிவந்த கண்களோடு சிரித்தபடியே அவள் பேசினாள். “ஓ மூடனே! சிறிது நேரம் நீ உறுமிக் கொண்டிரு. இன்னும் சிறிது நேரம்தான். அதற்குப் பிறகு தேவர்கள் ஆரவாரம் செய்வார்கள். நான் உன்னை அழித்து விடுவேன்” என்றாள் தேவி. பிறகு, மஹிஷாசுரவதம் நடந்தது என்கிறது தேவி மாஹாத்மியம்.
கொஞ்ச நேரம் ஓய்வு; பிறகு கொந்தளிப்பு. அதை யாரும் அடக்க முடியாது. அண்டப் பந்துகளின் ஆட்டம் போகப் போகத் தெரியும். தேவி மாஹாத்மியம் நமக்குச் சொல்லும் செய்தி இதுதான்.
சென்ற முறை, சேரநாட்டுச் செய்தி ஒன்றைப் பார்த்தோம். அபயா வழக்கை முதலில் விசாரித்த கேரளப் போலீஸ் அதிகாரியும் அப்போதே மர்மமான முறையில் இறந்துகிடந்தார் என்ற செய்தியும் வெளிவந்திருக்கிறது. சிறுபான்மை முகமூடியை அணிந்து கொண்டு சிலர் செய்யும் அட்டகாசத்தின் ஒரு பகுதிதான் இது.
கோடிக்கணக்கில் பணத்தைக் கொண்டு வந்து ஆயிரக்கணக்கில் ஆட்களை இறக்கி ராணுவ நடவடிக்கை போல நடத்தப்படும் மதமாற்ற முயற்சிகளைக் கண்டு நம்மில் சிலருக்கு நம்பிக்கை குறைந்து விட்டது. அவர்கள் புத்துணர்ச்சி பெறுவதற்காக ஒரு வர்த்தக இதழிலிருந்து ஒரு பகுதி.
ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்த தொடர் சுவருக்குள் சித்திரங்கள். தியாகு என்றழைக்கப்படும் தியாகராஜன் கல்லூரி மாணவராக இருந்த போதே படிப்பை உதறிவிட்டு நக்சலைட்டாக மாறினார். அந்த இயக்கத்தின் கட்டளையை ஏற்று ஒரு பண்ணையாரைக் கொலை செய்தார். பிறகு பிடிபட்டு ஆயுட்கைதி ஆனார். அவருடைய சிறை அனுபவங்கள்தாம் இந்தத் தொடர்.
தூக்குத் தண்டனைக் கைதிகளைக் கிறிஸ்துவ போதகர்கள் அணுகும் முறை பற்றியும், மதமாற்ற நடவடிக்கைகள் பற்றியும் விவரமாகச் சில பக்கங்கள் இதில் உண்டு. இங்கே அதைச் சுருக்கிக் கொடுத்துள்ளேன்:
கிறிஸ்துவ சகோதரிகள், போதகர்கள் வாராவாரம் சிறைக்கு வருவார்கள். சிறைக்கென்று ஒரு இந்து சாமியாரும், இஸ்லாமிய உலேமாவும் கூட உண்டு என்று சொல்வார்கள். பின்னவர் ரம்ஜான் சமயத்தில் மட்டும் வருவார். முன்னவர் தூக்கிலிடப்பட இருக்கும் இந்துவை ஒருமுறை வந்து பார்த்துப் போவார்.
ஆக கிறிஸ்தவர்கள்தான் ஏகபோகமாய் வந்து போவார்கள். பொதுவாக கிறிஸ்தவ சகோதரிகள் சிறைப்பட்டவர்களை, குறிப்பாக மரண தண்டனைக் கைதிகளை, எளிதில் கவர்ந்து விடுவார்கள். அவர்களது அணுகுமுறையில் ஆன்மீகத்தைப் போலவே லெளகிகமும் இருக்கும். சிறைப்பட்டவர்களின் தேவைகள், குடும்பநிலை யாவற்றையும் தெரிந்துகொண்டு இயன்றவரை உதவுவார்கள். மாலை ஆறு மணிக்கு மேல் சிறை அலுவலரும் ரெமிஷன் கிளார்க்கும் ஒரு கோப்புடன் வந்தால் நம் புராணக் கதைகளின்படி எமனும் சித்ரகுப்தனும் பாசக் கயிறுடன் வருவதாகப் பொருள். யாரோ ஒருவருக்கு ஓலை வந்துவிட்டதென்று பீதி பரவும். எந்த அறையின் எதிரில் அவர்கள் நிற்கிறார்களோ அந்த அறைக்குரியவர் அன்றிலிருந்து பத்தாம் நாள் தூக்கிற்குப் போக வேண்டியதுதான்.
அன்று மாலை உள்ளே வந்த ஜெயிலரும் கிளார்க்கும் மாணிக்கம் செட்டியார் அறைக்கு எதிரில் நின்றார்கள். மறுநாள் மாலை எமனும் சித்ரகுப்தனும் மீண்டும் இவ்வளவு சீக்கிரம் வருவார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. வந்தார்கள். இந்த முறை சுப்பையா கவுண்டரின் அறை எதிரில் நின்று ‘வர்ர மாசம் ஏழாம் தேதி’ என்று சேதி சொன்னார்கள். அன்று இரவெல்லாம் கவுண்டரின் அறையிலிருந்து ஒப்பாரிப் பாடல் ஒலித்துக் கொண்டே இருந்தது.
மாணிக்கம் செட்டியாரையும் சுப்பையா கவுண்டரையும் ரோமன் கத்தோலிக்கப் பாதிரியார்கள் வந்து பார்த்தார்கள். இறுதி அடக்கத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். அதற்கு முன்னதாக (உயிரோடிருக்கும் போதே) அவர்கள் இருவரும் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து ஞானஸ்நானம் பெறவேண்டும் என்பதை நாசூக்காகத் தெளிவுபடுத்தினார்கள். நான் உட்பட மற்றவர்கள் அனைவரும் வேடிக்கை பார்க்க மரண தண்டனைக் கூடத்தின் தாழ்வாரத்தில் அந்த ஞானஸ்நானங்கள் நடந்தேறின. மாணிக்கம் செட்டியார் அந்தோனியாகவும், சுப்பையா கவுண்டர் பீட்டராகவும் பெயர் மாற்றம் பெற்றார்கள்.
ஏழாம் தேதி விடிவதற்குள் சுப்பையா கவுண்டரின் கொட்டடி திறக்கப்பட்டது. உள்ளேயே குளிக்கச் செய்து, புத்தாடை உடுத்தச் செய்து, பால் ரொட்டி சாப்பிடச் செய்து, ஜெபம் பண்ண நேரம் கொடுத்து, கைகளைப் பின்னால் வைத்து விலங்கு மாட்டி, இரண்டு பக்கமும் காவலர்கள் இழுக்காத குறையாக சுப்பையா கவுண்டரின் இறுதிப் பயணம் தொடங்கியது. “தோழர்களே! எனக்கும் மாணிக்கம் செட்டியாருக்கும் ஏற்பட்ட கதி உங்களில் யாருக்கும் ஏற்படக் கூடாது,” சுப்பையா கவுண்டர்தான் குரல் கொடுத்தார். தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டதும் “கர்த்தரே, கர்த்தரே” என்று கூவினார் சுப்பையா கவுண்டர். முகத்தைக் கறுப்புத் துணியால் மூடி, கால்களைச் சேர்த்துக் கட்டினார்கள். அது கடைசி விநாடி.
கவுண்டரின் குரல் கடைசி முறையாக வீறிட்டு ஒலித்தது – “முருகா!”
மேற்கோள் மேடை
“ஈழத்தமிழர்கள் கிறிஸ்தவர்களாக இருந்திருந்தால் இப்பிரச்னையை அமெரிக்கா எப்போதோ தீர்த்திருக்கும். ஆனால், அவர்களில் பலர் இந்துக்கள். எனவே, இந்தியாதான் உதவ வேண்டும்.”
~ டாக்டர் ராமதாஸ், பா.ம.க. நிறுவனர், ஆதாரம்: தினமலர், 8.12.2008 பக்கம் 8.