New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நீதிக்கட்சியின் மறுபக்கம் – 07 பதவியைத் தந்தது கொள்கையா, சூழ்நிலையா?


Guru

Status: Offline
Posts: 24778
Date:
நீதிக்கட்சியின் மறுபக்கம் – 07 பதவியைத் தந்தது கொள்கையா, சூழ்நிலையா?
Permalink  
 


 நீதிக்கட்சியின் மறுபக்கம் – 07

 

தொடர்ச்சி..

பதவியைத் தந்தது கொள்கையா, சூழ்நிலையா?

“முதன்முதலாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் பிரதிநிதியை அமைச்சர் பதவியில் அமர்த்தியது நீதிக்கட்சி” – என்று பெருமை பொங்க, ‘களத்தில் நின்ற காவலர்கள்’ என்ற நூலில் எழுதியிருக்கிறார் க. திருநாவுக்கரசு.

இதைப் படிப்பவருக்கு ‘ஆஹா ! நீதிக்கட்சி உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தது’ என்றும் ‘தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறது’ என்றும் நினைக்கத் தோன்றும்.

நீதிக்கட்சி எந்தச் சூழ்நிலையில், எப்போது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் பிரதிநிதியை அமைச்சர் பதவியில் அமர்த்தியது என்பதை மட்டும் வசதியாக மறைத்துவிடுகின்றனர். ஆகவே, அந்த மறைக்கப்பட்ட வரலாற்றை நாம் தற்போது ஆராய்ந்து பார்க்கலாம்.

தாழ்த்தப்பட்ட பிரதிநிதியை அமைச்சராக்கும் சூழ்நிலை ஏன் வந்தது? என்பதைத் தெரிந்து கொள்ள நீதிக்கட்சியின் ஆரம்பகால ஆட்சி முதலாகத் தாழ்த்தப்பட்ட பிரதிநிதியை அமைச்சராக்கியவரையில் நாம் ஆராயலாம்.

rajaofpanagal

மாண்ட்போர்டு சீர்த்திருத்தத்தின் அடிப்படையில் முதல் பொதுத் தேர்தல் 1920ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்றது. அத்தேர்தலில் மொத்தம் இருந்த 98 தொகுதிகளில் 63 தொகுதிகளில் நீதிக்கட்சியினர் வெற்றி பெற்றனர்.

 

நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவை 17.12.1920ஆம் ஆண்டு பதவியேற்றுக்கொண்டது. முதலமைச்சராக அகரம். ஏ. சுப்பராயலு ரெட்டியாரும், அமைச்சர்களாக பி. இராமராயநிங்கார் (பனகல்ராஜா), கே. வி. ரெட்டி நாயுடுவும் பதவியேற்றுக் கொண்டனர்.

 

இதில் தாழ்த்தப்பட்ட பிரதிநிதி ஒருவரை அமைச்சராக்கவில்லை நீதிக்கட்சி.

இரண்டாவது பொதுத்தேர்தல் 1923ஆம் ஆண்டு 31ம்நாள் நடைபெற்றது. இத்தேர்தலின் முடிவுப்படி நீதிக்கட்சி மீண்டும் அமைச்சரவையை அமைக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தாலும் பல இடங்களில் தோல்வியைச் சந்தித்திருந்தது. இருப்பினும் நீதிக்கட்சியே ஆட்சி அமைத்தது.

இரண்டாவது அமைச்சரவை 19.11.1923ல் பதவியேற்றுக்கொண்டது. முதலமைச்சராக பனகல் அரசரும், அமைச்சர்களாக ஏ. பி. பாத்ரோ, டி. என். சிவஞானம்பிள்ளையும் பதவியேற்றுக் கொண்டனர்.

இதிலும் தாழ்த்தப்பட்ட பிரதிநிதி ஒருவரை அமைச்சராக்கவில்லை நீதிக்கட்சி.

நீதிக்கட்சியின் சரிவு இரண்டாவது தேர்தலிலேயே தெரிய ஆரம்பித்தது.

பார்ப்பனரல்லாதார்களுக்கு உரிமைப் பெற்றுத் தரவே ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்று குறிப்பிடப்படும் நீதிக்கட்சி இரண்டாவது பொதுத் தேர்தலிலேயே அதிகம் இடங்கள் பெறாமல் இருந்ததற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

1. நீதிக்கட்சியின் தலைவர்களிடையே ஒற்றுமையின்மை, சீர்குலைவு காணப்பட்டன.

2.  நீதிக்கட்சியின் முன்னணித் தலைவர்களாக இருந்த டாக்டர் சி. நடேச முதலியார், ஓ. கந்தசாமிப்பிள்ளை, எம். சி. ராஜா போன்றோர் கட்சித் தலைமையின் நடவடிக்கைகள் முறையாக நடைபெறவில்லை என்று காரணங்காட்டிக் கடுமையாக எதிர்த்து வந்தனர். அதனால் கட்சியில் வலிவுக்குறைவு ஏற்பட்டது.

3. முதலாவதாக அமைந்த அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மூவரும், தெலுங்கர்களாகவே அமைந்துவிட்டதால், அப்படிப்பட்ட நிலை, தமிழகத் தலைவர்களிடையே பெரிதும் மனக்கசப்பை ஏற்படுத்தியிருந்தது.

4. நீதிக்கட்சித் தலைவர்களிடையே, தெலுங்கர் தமிழர் என்ற மாற்சரிய உணர்வு ஏற்பட்டிருந்ததானது கட்சியை ஓரளவுக்கு வலிவுக் குன்றச் செய்திருந்தது.

5. சரியான முறையில் பிரச்சாரம் செய்யப்படாமல் இருந்தது நீதிக்கட்சியின் தேர்தல் சரிவுக்கு ஏதுவாக அமைந்துவிட்டது.

டி. என். சிவஞானம் பிள்ளையை அமைச்சரவையில் சேர்த்ததற்கு எதிர்ப்பாகச் சில காரணங்களைக் காட்டி டாக்டர் சி. நடேசமுதலியார், ஓ. தணிகாசலம் செட்டியார் மற்றும் சிலர் நீதிக்கட்சியின் தலைமை மீது குறை கூறினார்கள்.

நீதிக்கட்சியின் அமைச்சரவையைப் பொறுப்பிலிருந்து அகற்ற வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சி எதிர்க்கட்சியினரிடையே ஏற்பட்டது. நீதிக்கட்சிக்குள்ளேயே இருந்து அவ்வப்போது தகராறுகள் செய்து கொண்டிருந்த சிலரும், அந்த உணர்வுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர்.

சர். பி. தியாகராயரின் மறைவுக்குப் பின்னர், நீதிக்கட்சியைத் திறம்பட நடத்திச் செல்லும் தலைவர் யாரொருவரும் சரியாக அமையவில்லை. பனகல் அரசர்கூட ஆட்சியை நடத்திச் செல்லுவதில் வல்லமை பெற்றிருந்தாரேயல்லாமல், கட்சியைக் கட்டிக்காத்து வளர்ப்பதில் வெற்றிபெற முடியவில்லை. கருத்துவேறுபாடு கொண்டு நீதிக்கட்சியை விட்டுப் பிரிந்திருந்த டாக்டர் சி. நடேசமுதலியார் போன்றவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர, பனகல் அரசர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் உருவான பலன் எதனையும் அளிக்கவில்லை.

நீதிக்கட்சியின் தலைவர்களில் பல பேர்கள் தங்கள் தங்களுக்கு என்று தனித்தனிப் போக்குகளை வகுத்துக் கொண்டு, தனித்தனியாகச் செயல்படத் தொடங்கினர். பனகல் அரசரால், நீதிக்கட்சியின் சரிவுநிலையை, ஓரளவுக்குத்தான் தடுத்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்ததே அல்லாமல், அந்த முயற்சியில், அவரால் முழுவெற்றி பெற முடியவில்லை.

1926ஆம் ஆண்டு நவர்பர் 8ஆம் நாளன்று, சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில், சுயராஜ்யக் கட்சியினர் 41 இடங்களையும், சுயேச்சைகள் 36 இடங்களையும், நீதிக்கட்சியினர் 21 இடங்களையும் வென்றனர்.

நீதிக்கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட தலைவர்களில் பனகல் அரசர் மட்டும் வெற்றி பெற்றார். மற்றத் தலைவர்களான கே. வி. ரெட்டி நாயுடு, ஏ. இராமசாமி முதலியார், டாக்டர் சி. நடேச முதலியார், ஓ. தணிகாசலம் செட்டியார் போன்றவர்கள் தோல்வியுற்றனர்.

இந்தத் தேர்தல் மூலம் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஆட்சியை அமைக்கக் கூடிய பெரும்பான்மை இல்லை.

எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆட்சி அமைக்க முன்வர முடியாத நிலையில், ஆளுநர் கோஷன், அரசின் நியமன உறுப்பினர்களான 34 பேர்களுடைய ஆதரவைத் தருவதாக வாக்குறுதி தந்து, சுயேச்சையாக வெற்றிபெற்று வந்திருந்த டாக்டர் பி. சுப்பராயன் அவர்களை அழைத்து, அமைச்சரவையை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார். டாக்டர் சுப்பராயன் அவர்கள் சுயேச்சை உறுப்பினர்கள் சிலரின் ஒத்துழைப்போடும் ஆளுநர் அளித்த வாக்குறுதியோடும் அமைச்சரவையை அமைக்க இசைந்தார். டாக்டர். பி. சுப்பராயன் அவர்கள் முதலமைச்சராகவும், ஏ. அரங்கநாத முதலியார், ஆர். என். ஆரோக்கியசாமி முதலியார் ஆகியோர் அமைச்சர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தியாவில் இரட்டை ஆட்சிமுறையை ஆராய்ந்து பார்த்து, அறிக்கை ஒன்றினைத் தயாரிக்க வேண்டி, பிரிட்டிஷ் அரசு திரு ஜான் சைமன் என்பவரைத் தலைவராகக் கொண்ட ஆய்வுக்குழு ஒன்றினை 1927 நவம்பர் 8ஆம் நாள் அமைத்தது.

இக்குழுவில் இந்தியர்கள் யாரும் இல்லை என்ற காரணத்தால் சட்டமன்றம் சைமன் குழு நடவடிக்கைகளுக்கு எவ்வித ஒத்துழைப்போ, உதவியோ நல்கக் கூடாது என்ற தீர்மானத்தை சுயராஜ்யக் கட்சியைச் சேர்ந்த திரு. ஜி.  ஹரி சர்வோத்தமராவ் என்பவர் கொண்டு வந்தார்.

நீதிக்கட்சியினர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். முதலமைச்சர் டாக்டர் பி. சுப்பராயன் தீர்மானத்தை எதிர்த்து சைமன் குழுவிற்கு ஆதரவாக வாக்களித்தார். ஆனால், அவரது அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் ஏ. அரங்கநாத முதலியார், ஆரோக்கியசாமி முதலியார் ஆகிய இருவரும் சைமன் குழுவிற்கு எதிராகத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அமைச்சரவைக்குள்ளேயே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டுவிட்ட நிலையை உணர்ந்த டாக்டர் பி. சுப்பராயன், தமது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளத் தீர்மானித்துப் பதவி விலகல் கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்தார். அதன் காரணமாக மற்ற இரு அமைச்சர்களும் பதவிகளைத் தாமாகவே இழக்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டது.

ஆளுநர் கோஷன், டாக்டர் பி. சுப்பராயன் அவர்களின் அமைச்சரவையைப் புதுப்பிக்கக் கருதி, நீதிக்கட்சியின் தலைவரான பனகல் அரசரின் உதவியைப் பெரிதும் நாடினார். நீதிக்கட்சியினருக்கு மனநிறைவு ஏற்படச் செய்ய வேண்டி, ஆளுநர், நீதிக்கட்சியைச் சேர்ந்த எம். கிருஷ்ண நாயரை நிருவாக ஆலோசனை அவையில் சட்ட உறுப்பினராக நியமித்தார்.

அதன் காரணமாக பனகல் அரசர் டாக்டர் பி. சுப்பராயன் புதிய ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்க முன்வந்தார். அவர் எஸ். முத்தையா  முதலியார், எம். ஆர். சேதுரத்தினம் அய்யர் ஆகிய இருவரையும் சுயராஜ்ய கட்சியிலிருந்து பிரித்து டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் இரு அமைச்சர்களாகப் பொறுப்பேற்க வைத்தார்.

(டாக்டர் பி. சுப்பராயன் அரசு நீதிக்கட்சி அரசு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது- டாக்டர் பி. சுப்பராயன் அரசை இங்கு குறிப்பிட்டதற்குக் காரணம் அந்த அமைச்சரவையிலும் தாழ்த்தப்பட்ட சமூக பிரதிநிதிகள் அமைச்சர்களாக யாரும் அமர்த்தப்படவில்லை என்பதற்காகவே.)

1930ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலில், நீதிக்கட்சி வென்று 1930 அக்டோபர் 27ஆம் நாள் அன்று நீதிக்கட்சியின் தலைவராக இருந்த பி. முனுசாமிநாயுடு முதலமைச்சராகவும் பிடி. இராசன், எஸ். குமாரசாமி ரெட்டியார் ஆகிய இருவரும் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.

இதிலும் தாழ்த்தப்பட்ட சமூகப் பிரதிநிதி யாரையும் அமைச்சராக்கவில்லை நீதிக்கட்சி.

முதலமைச்சர் பி. முனுசாமி நாயுடு பிரச்சினைகளைத் திறம்படத் தீர்ப்பதில் வல்லவராகத்தான் இருந்துவந்தார் என்றாலும், நீதிக்கட்சியிலிருந்த பெரும் ஜமீன்தார்களும், பணக்காரர்களும், முனுசாமி நாயுடு அமைச்சரவைக்கு எதிராக உட்பூசல்களைக் கிளப்பித் தொல்லைகள் பலவற்றைத் தொடர்ந்து தந்து கொண்டே இருந்தனர். அப்படித் தொல்லைகளைத் தருவதில் பொப்பிலி அரசர், வெங்கட்டகிரி குமாரராஜா, எம். ஏ. முத்தையா செட்டியார் போன்றவர்கள் முன்னிலையில் நின்றனர்.

1932ஆம் ஆண்டு அளவில் நீதிக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கிடையே சில குழுக்கள் உருவாக, உட்கட்சிப் பூசல்கள் வளர்ந்து, பிளவுகளும் பிணக்குகளும் ஏற்பட்டுக் கட்சியின் கட்டுக்கோப்பு சிதைந்து காணப்பட்டது.

முனுசாமி நாயுடு அவர்களின் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றினைக் கொண்டு வருவதற்கான சூழ்நிலை ஏற்பட்டது. நீதிக்கட்சிக்குள் பிளவை உண்டாக்கிக் கொண்டிருந்த குழுவினரே மறைமுகமாகக் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், சுயராஜ்யக் கட்சி உறுப்பினர்கள் ஆகியோரைத் தூண்டிவிட்டு அப்படிப்பட்ட சூழ்நிலையை உருவாக்கினர்.  நாடகக் காட்சிகளைப் போல, சில நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அமைச்சர்களாக இருந்த பிடி. ராஜனும், எஸ். குமாரசாமி ரெட்டியாரும் திடீரென்று தமது அமைச்சர் பதவிகளிலிருந்து விலகிக் கொண்டனர். பி. முனுசாமி நாயுடு வேறுவழியில்லாமல் தமது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

நீதிக்கட்சிக்குள் ஏற்பட்ட பதவிப் போட்டியில் வெற்றி பெற்ற பொப்பிலி அரசர் அவர்களின் தலைமையில் புதிய அமைச்சரவை ஏற்பட்டது. 1932ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம்நாள் பொப்பிலி அரசர் முதலமைச்சராகவும், பிடி. இராஜன், எஸ். குமாரசாமி ரெட்டியார் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.

இதிலும் தாழ்த்தப்பட்ட சமூகப் பிரதிநிதி யாரையும் அமைச்சராக்கவில்லை நீதிக்கட்சி.

பொப்பிலி அரசர் தலைமையின் கீழ்ப் புதிய அமைச்சரவை அமைந்ததே ஒழிய, நீதிக்கட்சியின் கட்டுக்கோப்பு நாளுக்குநாள் சீர்குலைய ஆரம்பித்தது. நீதிக்கட்சியைப் பழையபடி சரிப்படுத்த பொப்பிலி அரசர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காமல் வீணாயின.

1934இல் இந்திய மத்திய பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில், காங்கிரசுக் கட்சி பெருவாரியான இடங்களில் போட்டியிட்டுப் பெரும் வெற்றியைப் பெற்றது. நீதிக்கட்சி உட்கட்சிப் பூசலின் காரணமாக வலுவிழந்து காணப்பட்டதால், அது அந்தத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது.

அமைச்சர் எஸ். குமாரசாமிரெட்டியார், 1936ஆம் ஆண்டில்,  உடல்நலக் குறைவின் காரணமாக அமைச்சர் பதவியைத் துறந்தார். அந்த அமைச்சர் பதவியில் செட்டிநாட்டுக் குமாரராசா எம். ஏ. முத்தையா செட்டியார் நியமிக்கப்பட்டார்.

இதிலும் தாழ்த்தப்பட்ட சமூகப் பிரதிநிதி யாரையும் அமைச்சராக்கவில்லை நீதிக்கட்சி.

நீதிக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் என்பவர்கள் பலரும், கட்சி வளர்ச்சியைப் பற்றியோ, கொள்கைக் குறிக்கோள்கள் பரவ வேண்டிய இன்றியமையாமை பற்றியோ, திட்டங்கள் நிறைவேற்றுவதைப் பற்றியோ, பொதுமக்களின் அன்பையும் ஆதரவையும் பற்றையும் பரிவையும் பெறுவதைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் தத்தமது பதவி உயர்வு பற்றியும், ஆட்சி அதிகாரம், ஆதிக்கம் ஆகியவற்றைப் பெறுவதைப் பற்றியும் மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிருந்ததால் நீதிக்கட்சியானது கவனிப்பாரற்றுக் கூனிக்குறுகிச் செல்வாக்குக் குறைந்து காணப்பட்டது. பொது மக்களிடம் அது கொண்டிருந்த பிடிப்பு, ஆதரவு, அரவணைப்பு ஆகியவை நாளுக்குநாள் தளர்ந்துபோய்க் கொண்டிருந்தன.

இந்நிலையில் 1935ம் ஆண்டு இந்திய அரசு அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் முதல் பொதுத் தேர்தலை 1937 பிப்ரவரியில் நடத்துவது என்று இந்திய அரசு முடிவு எடுத்திருந்தது.

இந்த நிலையில் நீதிக்கட்சியைச் சேர்ந்த சில தலைவர்களும், டாக்டர் பி. சுப்பராயன், எஸ். இராமநாதன், கே. சீத்தாரம ரெட்டி போன்றவர்களும் காங்கிரசுக் கட்சியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டனர்.

நீதிக்கட்சியினர் அதிகார மமதையிலும், பணத்திமிரிலும், அலட்சியப்போக்கிலும், பெரும்போக்கான மிதப்புத் தன்மையிலும், ஆழ்ந்து கிடந்ததால் பொதுமக்களின் ஆதரவைப் பெரும் அளவுக்கு இழந்து காணப்பட்டனர்.  தேர்தல் நெருங்க, நெருங்க நீதிக்கட்சியைச் சேர்ந்த பலர், நீதிக்கட்சியை விட்டுவிட்டுக் காங்கிரசில் சேரத் தொடங்கினர்.

1937ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரசு மாபெரும் வெற்றியை ஈட்டியது. நீதிக்கட்சியோ படுதோல்வி அடைந்தது. சட்டமன்றத்தில் மொத்தம் 215 இடங்களில், காங்கிரஸ் கட்சிக்கு 159 இடங்களும், நீதிக்கட்சிக்கு 17 இடங்களும், சுயேச்சைகளுக்கும் பிற கட்சிகளுக்கும் 46 இடங்களும் கிடைத்தன.

இந்தத் தேர்தலில் பொப்பிலி அரசர், பி. டி. இராஜன், வெங்கட்டகிரி குமாரராசா, ஏ. பி. பாத்ரோ போன்ற நீதிக்கட்சியின் மாபெரும் தலைவர்கள் பலரும் தோல்வியுற்றனர். 1937ஆம் ஆண்டு தேர்தல் நீதிக்கட்சியின் செல்வாக்கையும் வலிவையும் பெரும் அளவுக்கு மங்க வைத்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

1937 தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது, பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை அமைக்கும் தகுதியைப் பெற்றிருந்தபோதிலும் அது ஆட்சியை அமைக்க முன்வரவில்லை. அமைச்சரவை மீது ஆளுநருக்கு இருந்த சில ஆதிக்கக் கட்டுப்பாடுகளைக் குறைக்கும் அளவுக்கு, 1935 அரசமைப்புச் சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்றும், அது நிறைவேறுகின்ற வரையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கப்போவதில்லை என்றும் காங்கிரஸ் கட்சியினர் கூறிவந்தனர்.

mcraja

ஆட்சிப் பொறுப்பை ஏற்கக் காங்கிரஸ் கட்சி முன்வராதநிலை ஏற்படவே ஆளுநர், எதிர்கட்சியினராக விளங்கிய நீதிக்கட்சியினரை அழைத்து இடைக்காலப் பொறுப்பு அமைச்சரவையை அமைக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு நீதிக்கட்சியினர் இசைவு அளித்தனர். இந்த அமைச்சரவையில் சர். கே. வி. ரெட்டிநாயுடு தலைமையின் கீழ்ப் பொறுப்பு அமைச்சரவை அமைக்கப்பட்டது.

இந்த அமைச்சரவையில்தான் தாழ்த்தப்பட்ட சமூக பிரதிநிதியான எம். சி. ராஜாவை அமைச்சராக்கியது நீதிக்கட்சி. அதாவது ஆட்சி காங்கிரஸ் கட்சியினருக்கு மறுபடியும் போய்விடக்கூடிய சூழ்நிலையில்தான் – மூன்றுமாதங்களே இருந்த அமைச்சரவையில்தான் – தாழ்த்தப்பட்ட சமுதாயப் பிரதிநிதியான எம். சி. ராஜாவை அமைச்சராக்கியது நீதிக்கட்சி.

இதில் நாம் தெளிவாக தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் – நீதிக்கட்சி பெருவாரியாக வெற்றிபெற்றபோது தாழ்த்தப்பட்ட பிரதிநிதிகளை அமைச்சராக்கவில்லை என்பதைத்தான். மக்கள் செல்வாக்கு முழுவதும் இழந்துவிட்ட நிலையில் – எப்பொழுது வேண்டுமானாலும் அமைச்சரவை கலைக்கப்படலாம் என்று தெரிந்திருந்தபோதுதான் எம். சி. ராஜாவை அமைச்சராக்கியது.

இதில் கூட, சரிந்துவிட்ட தன் நிலைமையை, தாழ்த்தப்பட்ட சமுதாய பிரதிநிதி ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதன் மூலம் உயர்த்திக்கொள்ளலாம் என்ற எண்ணமும் அடங்கியிருந்தது. அதனால் தான் தாங்கள் பெருவாரியாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது – மக்கள் செல்வாக்கோடு இருந்தபோது – அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டோருக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. மக்கள் செல்வாக்கு சரிந்துவிட்டநிலையில், அமைச்சர் பதவி கொடுத்தது. இந்த இடைக்கால பொறுப்பு அமைச்சரவை மூன்று மாதங்களே நடைபெற்றன. பிறகு காங்கிரசுக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் ஏற்பட்ட சுமுகமான உடன்பாடு காரணமாக காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.

(முற்றும்)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard