தொடர்ச்சி…
நீதிக்கட்சி ஆரம்பித்ததன் பின்னணி
தற்காலம், பிராமணர்கள் என்று பெயர் வைத்துள்ள வகுப்பாருள் கீழ்ச்சாதி மேற்சாதியென்னும் வரம்புகளை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். அவ்வரம்புக்குள் அடங்கி சாதிபேதம் வைத்துள்ளவர்கள் யாவரும் பிராமணக் கூட்டத்தோர்களையே சேர்ந்தவர்களாகும்.
சைவம், வைணவம், வேதாந்தமென்னும் சமயங்களையும் அப்பிராமணரென்போர்களே ஏற்படுத்தியுள்ளதால், அச்சமயங்களை, எவரெவர் தழுவி நிற்கின்றனரோ அவர்களும் பிராமணச் சார்புடையவர்களேயாவர்.
இத்தகையச் செயலுள் சாதி ஆசாரங்களையும், சமய ஆசாரங்களையும் தழுவிக் கொண்டே (நான்-பிராமிண்ஸ்) என்ற சங்கங்கள் கூடியிருக்கிறன்றனரா? அன்றேல் சாதியாசாரங்களையும் சமய ஆசாரங்களையும் ஒழித்து (நான்-பிராமிண்ஸ்) என்ற சங்கங்கள் கூடியிருக்கின்றனரா என்பது விளங்கவில்லை.
அங்கனம் சாதியாசாரங்களையும், சமயவாசாரங்களையும் ஒழித்துள்ளக் கூட்டமாயிருக்குமாயின் அவர்களுடன் சேர்ந்துழைப்பதற்கு அனந்தம் பெயர் காத்திருக்கின்றார்கள். பிராமணர் என்போரால் வகுத்துள்ள சாதி ஆசாரங்களையும் சமய ஆசாரங்களையும் வைத்துக் கொண்டு (நான்-பிராமிண்ஸ்) எனக்கூறுவது வீணேயாகும்.
‘‘15-9-1909, தமிழன்’’ பத்திரிகை ஆசிரியர் பண்டிதர் க.அயோத்திதாசர்
தாழ்த்தப்பட்ட தலைவர்களில் சிலர் ஈவேரா, நீதிக்கட்சி ஆகியவற்றுடன் தொடர்பு வைத்திருந்தனர். ஆனால், அதில் கலந்துவிடவில்லை. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையிலேயே அந்தத் தொடர்பு இருந்தது. அப்போதும் கூட ஈவேரா, நீதிக்கட்சி ஆகியவற்றை பல நேரங்களில் தாழ்த்தப்பட்ட தலைவர்கள் விமர்சித்தே வந்திருக்கின்றனர்.
ஏனெனில், உயர்த்தப்பட்ட சாதியினரான நீதிக்கட்சியினர் தங்களது சொந்த சாதியினரின் உயர்வுக்காக மட்டுமே உழைத்தவர்கள். அவர்களுக்குத் தாழ்த்தப்பட்டோரைப் பற்றி எஞ்ஞான்றும் கவலை இருந்ததேயில்லை. இதை மறந்து விடக் கூடாது.
தாழ்த்தப்பட்டவர்களுக்காகத் தாழ்த்தப்பட்டோரே வாதாடினார்கள், போராடினார்கள், தியாகம் புரிந்தார்கள். அதனால் தாழ்த்தப்பட்டோர் பெற்ற உரிமைகள் ஏராளம்….ஏராளம். இதைத் தாழ்த்தப்பட்ட தலைவர்களின் வாழ்நாட் குறிப்புகளைப் படிக்கும்போது நாம் உணர்ந்துகொள்ளலாம். இந்த குறிப்புகள் அன்பு பொன்னோவியம் அவர்கள் எழுதிய ‘மக்களுக்கு உழைத்த பெருமக்கள்’ என்ற நூலில் தெளிவாக உள்ளன.
ஆனால், தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்தையும், உரிமையையும் மட்டுமே குறிக்கோளாய் கொண்டு நீதிக்கட்சி தோன்றியது என திராவிட இயக்க எழுத்தாளர்கள் எழுதி வருகின்றனர். ஆனால் உண்மை என்ன?
நீதிக்கட்சி ஆரம்பித்ததின் வரலாற்றுப் பின்னணியைப் பார்ப்போம்.
அரசாங்க உத்தியோகங்களில் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர், அதனால் மற்றவர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு 1851ஆம் ஆண்டு முதலே கூற ஆரம்பித்தது.
அதன் பின்னர் உத்தியோகங்களைத் தங்களது உறவினர்களுக்கே பிராமணர்கள் வழங்குகிறார்கள் என்று கலெக்டர்களுக்கு புகார்கள் வந்தன. இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டு அந்த ஆண்டு வருவாய்த்துறை வாரியம் ஒரு உத்தரவினை வெளியிட்டது.
கீழ்நிலை உத்தியோகங்களை ஒரு சில செல்வாக்குள்ள குடும்பங்கள் ஏகபோகமாக்கிக் கொள்ளக்கூடாது என்றும், அனைத்து உத்தியோகங்களையும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள முக்கிய சாதியினருக்குப் பகிர்ந்தளிக்க முயற்சிக்க வேண்டுமென்றும், தாசில்தார் பதவிகளில் ஒரு விகிதாச்சாரம் பிராமணரல்லாத சாதியினருக்கு அளிக்க வேண்டும் என்றும் கலெக்டர் அலுவலகத்தில் ஹுசூர் சிரஸ்தேதார், இங்கிலீஷ் ஹெட்கிளார்க் என்ற இரு பிரதான வருவாய் அதிகாரிகள் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாதென்றும் அந்த உத்தரவு கூறியது.
ஆனால், இந்த உத்தரவை அதைப் பிறப்பித்த அரசே பின்பற்றவில்லை. இது ஏன் என்பது ஆராயத் தக்கது.
ஆனால், 1871ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டது.
‘அரசுப் பதவிகளில் அவர்களது (பிராமணர்களது) எண்ணிக்கையைக் குறைப்பதும், அதிக அளவு இந்து பிராமணரல்லாதாரையும், முஸ்லீம்களையும் அரசு உத்தியோகங்களில் ஊக்குவிப்பதும், அதன் விளைவாக எந்த ஒரு குறிப்பிட்ட சாதியும் மற்றவர்களைவிட அதிக முக்கியத்துவமோ அல்லது அதிக எண்ணிகைப் பலமோ பெற்றுவிட அனுமதிக்காமல் இருப்பதும்தான் அரசின் உண்மையான கொள்கையாக இருக்க வேண்டும்’
நாட்டு நிர்வாகம் சம்பந்தப்பட்ட உத்தியோகங்களில் எந்த ஒரு சாதியும் ஏகபோகம் வகிப்பதைத் தவிர்ப்பதற்கு, அரசு தனிச்சலுகைகள் வழங்க வேண்டும் என்று மக்கள் தொகைக் கணிப்புக் கண்காணிப்பாளர் கார்னிஷ் குறிப்பிட்டிருந்தார்.
நீதிக்கட்சி தோன்றுவதற்கு 45 ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கருத்து உதயமானது குறிப்பிடத்தக்கது.
வாய்ப்பு இல்லாதவர்களுக்கு வாய்ப்புத் தந்து அவர்களைக் கைதூக்கிவிடவேண்டும் என்ற ஆங்கிலேயரின் சமநோக்கு மட்டும் இதற்கு காரணம் இல்லை. ஒரு சாராரின் ஆதிக்கம் பெருகிவிட்டால் அது அன்னியர் ஆட்சிக்கு எதிரான சதிக்கு இடம் கொடுத்துவிடும் என்கிற அச்சமே அப்போது ஆங்கிலேயரிடம் மேலோங்கியிருந்தது. (திராவிட இயக்க வரலாறு, தொகுதி-1, முரசொலிமாறன்)
பிராமணரல்லாதாரின் மனதில் ஆங்கிலேயர் போட்ட இந்த தூபம் தான் பின்னாளில் நீதிக்கட்சியாக உருவெடுத்தது.
தாங்கள் பிராமணரல்லாதாராய் இருந்த ஒரே காரணத்தால், வேலையில் புறக்கணிக்கப்பட்டு, வேலை உயர்வு போன்ற நியாயமாகக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் மறுக்கப்பட்டதை உணர்ந்து அரசு ஊழியர்கள் சிலர் மெட்ராஸ் யுனைடெட் லீக் என்னும் அமைப்பை 1912ஆம் ஆண்டில் உருவாக்கினர். இந்த அமைப்பிற்கு டாக்டர் சி. நடேசன் முதலியார் வழிகாட்டியாக விளங்கினார்.
இந்த இயக்கம் அமைவதற்குப் பாடுபட்டவர்களாகக் குறிப்பிடப்படுபவர்கள்:
சரவணபிள்ளை (பின்னால் தஞ்சையில் டெபுடி கலெக்டர் ஆனவர்)
ஜி. வீராசாமி நாயுடு
துரைசாமி முதலியார் (பொறியியல் துறையைச் சார்ந்தவர்)
எஸ்.நாராயணசாமி நாயுடு (வருவாய் வாரியத்தின் ஷெரீப்பாகப் பணியாற்றியவர்)
தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமைகள் வாங்கித் தருவதற்காக இந்த அமைப்பை இவர்களில் யாருமே துவங்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உத்தியோகத்துறையிலும் பதவி உயர்விலும் தாங்களும், தங்களுக்கு இணையான மற்ற உயர்த்தப்பட்ட சாதியாரும் புறக்கணிக்கப்படுவதை எதிர்க்கவே இந்த அமைப்பை உருவாக்கினர்.
1913ஆம் ஆண்டு. டாக்டர் நடேச முதலியாரின் மருத்துவமனையில் உள்ள தோட்டத்தில் மெட்ராஸ் யுனைடெட் லீக்கின் முதலாவது ஆண்டு நிறைவு விழா நடந்தது. அப்போது அதனுடைய பெயரைத் ‘திராவிடர் சங்கம்’ என்று மாற்ற ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெயர் மாற்றப்பட்ட திராவிடர் சங்கமும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு நன்மை எதுவும் செய்ததாகக் குறிப்புகள் கிடைக்கவில்லை.
சென்னை திராவிடர் சங்கத்தின் சார்பில் 1915ல் வெளியிடப்பட்ட பிராமணரல்லாதோர் கடிதங்கள் ரெட்டி, நாயுடு, வேளாளர் ஆகியோருக்கான ஒருங்கிணைவை முதலில் குறிப்பிட்டது. (சுயமரியாதை இயக்கமும் பொதுவுடைமையும், கோ.கேசவன்)
1916ம் ஆண்டு டாக்டர் நடேச முதலியார் திராவிட சங்க விடுதி என்ற விடுதி ஒன்றைத் துவக்கினார். திருவல்லிக்கேணி அக்பர் சாகிப் தெருவில் உள்ள ஒரு பெரிய கட்டிடத்தில் பிராமணரல்லாத மாணவர்களுக்கென்று பிரத்யேகமாக அந்த விடுதி செயல்படத் துவங்கியது. இவ்விடுதியும் தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்தைக் கருதி ஆரம்பிக்கப்பட்டதல்ல. பிராமணரல்லாத மற்ற உயர் சாதி மாணவர்களின் முன்னேற்றத்தைக் கருத்தில்கொண்டே ஆரம்பிக்கப்பட்டது.
நீதிக்கட்சியை ஆரம்பித்தவர்களில் முக்கியமானவர்களாகக் கருதப்படுபவர்கள் டி.எம்.நாயர் மற்றும் சர்.பி.டி.தியாகராய செட்டியார் ஆகியோர். நீதிக்கட்சியை இவர்கள் ஆரம்பித்த கதை ரசிக்கும்படியானது. முக்கியமானதும் கூட.
டி.எம்.நாயர் கட்சி ஆரம்பித்த கதை:
டி.எம்.நாயர் நீதிக்கட்சியை ஆரம்பிப்பதற்கு முன்பு காங்கிரசில் இருந்தார். 1907ஆம் ஆண்டில் சித்தூர் நகரில் நடைபெற்ற வடஆற்காடு மாவட்ட காங்கிரஸ் மகாநாட்டில் தலைமை வகித்தார்.
1904ஆம் ஆண்டு பிராமணர்கள் அதிகம் வாழக் கூடிய திருவல்லிக்கேணித் தொகுதியிலிருந்து அவர் சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னரும் தொடர்ந்து மும்முறை அந்தத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1916ம் ஆண்டு அதே தொகுதியில் இந்திய சட்டசபைக்குப் போட்டியிட்ட பொழுது அவர் தோற்றார். தாம் தோற்றதற்கு அங்கு வாழும் பிராமணர்களே காரணம் என்ற புதுமையான (?) முடிவுக்கு அவர் வந்தார். இந்தத் தோல்வியானது அவரை பிராமணரல்லாத இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.
சர்.பி.டி.தியாகராய செட்டியார் கட்சி ஆரம்பித்த கதை:
வெள்ளுடை வேந்தர் என்று அழைக்கப்படும் சர்.பி.டி.தியாகராய செட்டியார் நீதிக்கட்சியைத் தொடங்குவதற்கு முன் காங்கிரசிலேதான் இருந்தார்.
ஒருமுறை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு மற்றெல்லாரையும் விட அதிகத் தொகையாகிய ரூ.10,000 அளித்தார் தியாகராய செட்டியார். இருந்தும், விழாக் கூட்டத்திற்குச் சென்றபோது அவரை மேடையில் உட்கார வைக்காமல் கீழே உட்காரச் செய்தார்களாம். ஹைகோர்ட் ஜட்ஜ் முதல் அர்ச்சக, பரிச்சாரக, தரகர் – பார்ப்பனரெல்லாம் மேடையில் அமர்ந்திருந்தனராம். இவரிடம் இவருடைய அலுவலகத்தில் வேலைக்கு இருந்த சில பார்ப்பனச் சிப்பந்திகள் கூட மேடைமேல் வீற்றிருந்தனராம். ஆனால், இவரை மேடையில் வீற்றிருக்க யாரும் அழைக்கவில்லையாம்.
இந்தப் பார்ப்பன சாதித் திமிரை சகிக்க முடியாத சர்.பி.டி.தியாகராய செட்டியார், அந்த இடத்தை விட்டு விர்ரென்று எழுந்து காரிலேறி டாக்டர் நாயர் பங்களாவுக்குச் செல்லச் சொன்னாராம். இந்த நிகழ்ச்சிகள்தான் பிராமணரல்லாத கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியதாம்.
இதைப்பற்றி ‘டாக்டர் நாயர், தியாகராயர், நான்’ என்ற தலைப்பில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் பின்வருமாறு எழுதுகிறார்:-
‘ …ஆரம்பகாலத்தில் பார்ப்பனரல்லாதவர்களுக்கு விரோதமாக தேசியப் போர்வையில் பார்ப்பனர்களை ஆதரித்தவர்தான் அவர் (நாயர்). நானும் ஆரம்பத்தில் பார்ப்பனர்களுக்கு ஆதரவாயிருந்து பார்ப்பனரல்லாதார் தேர்தலை எதிர்த்தவன்தான். பிறகுதான் உண்மை உணர்ந்து நாங்கள் பார்ப்பனரல்லாதாரோடு ஒன்றானோம். ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களில் மிக முக்கியமானவரான சர்.பி.டி.தியாகராய செட்டியார் கூட ஆரம்பத்தில் தேசியவாதியாக இருந்தவர்தான். 1914ல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் காரியதரிசியாயிருந்து அரும்பெரும் தொண்டாற்றியவர்தான் அவர். அவரும் இன உணர்ச்சி பெற்றார். ஆகவே நாங்கள் எல்லாம் துவக்கத்திலேயே இராட்சதர்களாக ஆக்கப்பட்டவர்கள் அல்லர். அடிமைகளாயிருந்து பிறகு அவர்களின் கொடுமை தாங்காமல் இழிவு பற்றிய உணர்ச்சி பெற்று விழிப்படைந்தவர்கள்தாம் நாங்கள்.’1
(நீதிக்கட்சி 75வது ஆண்டு பவள விழா மலர் 1992)
ஈவேராவும் தனது சொந்தப் பிரச்சினைகளின் காரணமாகவே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நீதிக்கட்சியை ஆதரித்தார். இது குறித்து “ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்” என்ற எனது நூலில் விவரங்கள் உள்ளன.
ஆக இதிலிருந்து நாம் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அதாவது நீதிக்கட்சியை ஆரம்பிக்கவும், ஆதரிக்கவும் சொந்தப் பிரச்சினைகளே காரணமாக இருந்தன. டி.எம்.நாயர் தேர்தலில் தோற்றுப் போனதாலும், தியாகராய செட்டியார் தம்மை மேடையில் உட்கார வைக்கவில்லை என்பதாலும் பிராமணர்கள் மேல் இவர்கள் வெறுப்புக்கொண்டனர். இந்த சொந்த பிரச்சினைகளால் எழுந்த வெறுப்பால்தான் பிராமணரல்லாத கட்சியை ஆரம்பிக்க எண்ணம் கொண்டார்களே தவிர, தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற காரணத்திற்காக அல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
நான் இப்படிச் சொல்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. டி. எம். நாயர் சென்னை மாநகராட்சிக்கு மும்முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்த மும்முறையும் அவர் தாழ்த்தப் பட்டவர்களைப் பற்றி எண்ணியதுண்டா? கவலைப்பட்டதுண்டா? தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏதாவது நன்மை செய்திருக்கிறாரா? சேரியிலே புழுக்களாக அகப்பட்டுக் கொண்டு தினமும் இன்னல்களை அனுபவித்து வந்த தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி மாநகராட்சியில் பேசியதுண்டா?
இல்லை…இல்லை…இல்லை.
அதைப் போலவே தியாகராய செட்டியாரும் நீதிக்கட்சியை ஆரம்பிப்பதற்கு முன் தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்கு ஏதாவது செய்திருக்கிறாரா? கெடுதிதான் செய்திருக்கிறார்.
1921ஆம் ஆண்டு சென்னை பெரம்பூர் பக்கிங்காம் கர்னாடிக் மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்தால் ஏற்பட்ட போராட்டம் சாதிக் கலவரமாக மாறியது. இதைக் காரணமாக வைத்து தியாகராயர் என்ன செய்தார் தெரியுமா?
‘தாழ்த்தப்பட்டோர்களை நகருக்கு வெளியே குடியமர்த்த வேண்டும்’ என்று அரசுக்கு ஆலோசனை வழங்கினார்.
அன்றைய தொழிலாளர் தலைவரான எம்.சி.ராஜா இதைக் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த நேர்மையற்ற செயல் ‘ஏறிவந்த ஏணியை எட்டி உதைக்கும் நீதிக்கட்சியினர்’ என்று தலைவர் ஜெ.சிவசண்முகம் பிள்ளையை எழுத வைத்தது.
அதேபோல 1921-22ல் தியாகராய செட்டியார் தீண்டாமை ஒழிப்பைப் பற்றிய விவாதத்தில் ஆதரவான கருத்து ஏதும் கூறாமலே இருந்துவிட்டார்.
இப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதுவுமே செய்யாத, அவர்களுக்கு எதிராக இருந்தவர்களா தாழ்த்தப் பட்டவர்களின் முன்னேற்றத்திற்காக நீதிக்கட்சியை ஆரம்பித்தனர்?
கல்வியிலும் செல்வத்திலும் வளமாக இருந்த நாயருக்கும் தியாகராய செட்டியாருக்கும் ஒருவேளை கட்சியிலும் மேல் சாதியாரிடத்தும் மதிப்பும் வாய்ப்பும் கிடைத்து இருக்குமானால் இந்த ‘இன உணர்வு’ உண்டாகியிருக்குமா என்பதை நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
இவர்களுடைய சொந்த நலன்கள் பாதிக்கப்பட்டதாலேயே பிராமணரல்லாத கட்சியை ஆரம்பித்தார்கள் என்பதுதான் உண்மை.
1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் நாள் நீதிக்கட்சி உருவானது. அதே ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் நாள் தியாகராயச் செட்டியார் ‘பிராமணரல்லாதார் கொள்கை அறிக்கை’யை வெளியிட்டார். அந்த அறிக்கை, பிராமணரல்லாத உயர்சாதி மக்களுக்கான – பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான அறிக்கையாகத்தான் வெளிவந்தது.
அந்த அறிக்கையின் ஒரு பகுதியிலிருந்தே இதை உணர்ந்து கொள்ளலாம்.
‘‘…..(கல்வித்துறையில்) தாமதமாக நுழைந்திருந்தாலும் பிராமணரல்லாத சமுதாயங்கள் முன்னேறத் துவங்கிவிட்டன. அவர்கள் இப்போது முன்னேற்றத்தின் பல படிக்கட்டுகளில் இருக்கிறார்கள். செட்டியார், கோமுட்டி, முதலியார், நாயுடு, நாயர் போன்ற சமுதாயத்தினர் வேகமாக முன்னேறி வருகின்றனர். மிகவும் பின்தங்கியோர்கூட முன்னேறியிருப்பவர்களைப் போல புதிய காலத்தின் தகுதிகளைப் பெறுவதற்காக அக்கறையுடன் பாடுபட்டு வருகிறார்கள். கல்வியில் முன்னேற வேண்டும் என்கிற பொதுவான உணர்வு எல்லோருக்கும் ஏற்பட்டுவிட்டது.
பிராமணர்களில் காணப்படுவதைவிட சில பிராமணரல்லாத சமுதாயத்தினரிடையே காணப்படும் கல்வி வளர்ச்சி சீரானதாகவும், சமநிலையிலும் (ஆண்-பெண் இருபாலரும் கல்வி கற்கும் சூழ்நிலையிலும்) இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க சூழ்நிலையாகும். எது காரணம் பற்றியோ கல்வி இலாக்காவினர் பிராமணப் பெண்களுக்கும், குறிப்பாக பிராமண விதவைகளுக்கும் ஏதோ அவர்கள் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் போலக் கருதிக்கொண்டு கல்விச் சலுகை அளித்து வருகின்றனர். இருந்தாலும் பிராமணரல்லாதாரைச் சேர்ந்த நாயர் பெண்களின் அளவுக்குப் பிராமணப் பெண்கள் கல்வி கற்றுவிட்டதாக இல்லை. பல்வேறு வழிகளிலும், பல்வேறு துறைகளிலும் பிராமணரல்லாதார் அடக்கமாக அதேநேரம் பயனுள்ள வகையில் இந்த மாகாணத்தின் முன்னேற்றத்திற்காகப் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களும் அவர்களுடைய சகோதரர்களும் இதுவரையில் வேறுவழியின்றி பின்னால் தள்ளப்பட்டுக் கிடந்தார்கள். பிராமண ஜாதியினர் தந்திரமாகவும், பல்வேறு வழிகளிலும் அரசியல் அதிகாரத்தையும், உத்யோகச் செல்வாக்கையும் பயன்படுத்திய காரணத்தால் அறிவுத்துறையில் தீவிரமான போட்டி நிலவுகின்ற இந்த நாட்களில் பரீட்சைகளில் வெற்றி பெறும் திறமை ஒரு தனித்திறமை என்பதை நாங்கள் மறுக்கவில்லை.
எங்களால் புரிந்துகொள்ள முடியாதது என்னவெனில், மற்றவர்களைவிட ஆங்கிலம் கற்ற ஆடவர் தொகை அதிகம் கொண்டிருக்கிற ஒரு சிறு வகுப்பு, இதர வகுப்புகளில் ஏதோ குறைந்த அளவாவது திறமை, ஞானம், பண்பாடு கொடுக்காமல் அவர்களை முற்றிலும் ஒதுக்கிவிட்டு, அரசாங்க உத்தியோகங்களில் பெரிதும், சிறியதும், உயர்ந்ததும், தாழ்ந்ததுமான அனைத்தையும் உறிஞ்சிக்கொள்ள அனுமதிக்கப்படுவதுதான்!” ….
(திராவிட இயக்க வரலாறு, தொகுதி-1, முரசொலிமாறன்)