New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வள்ளுவர் உணர்த்தும் உழவுச் செய்திகள் - சு.ஜெனிபர்


Guru

Status: Offline
Posts: 24799
Date:
வள்ளுவர் உணர்த்தும் உழவுச் செய்திகள் - சு.ஜெனிபர்
Permalink  
 


வள்ளுவர் உணர்த்தும் உழவுச் செய்திகள்

E-mailPrintPDF

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -தமிழகத்தில்  சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்கள் அறம், அகம், புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் அறநூல் பதினொன்று,அக நூல் ஆறு, புற நூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன.திருக்குறள் அறநூல் வகையை சார்தது ஆகும். இந்நூலின் ஆசிரியர் திருவள்ளுவர் இந்நூலில்;  1330 பாடல்கள் உள்ளன.133 அதிகாரமாக பகுக்கப்பட்டு ஒவ்வொரு அதிகார விதம் மொத்தம் பத்து குறள்களாக உள்ளன.இந்நூலில் இடம் பெறும் உழவுக் குறித்த செய்திகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

உழவு என்பதன் பொருள்
சென்னைப் பல்கலைக் கழக ஆங்கில தமிழ் அகராதி உழவு என்பதற்கு வேளாண்மை,விவசாயம் என்று பொருள் விளக்கம் தருகிறது. தமிழ் - தமிழ் அகரமுதலி உழவு என்பதற்கு உழவு நிலத்தை உழும் தொழில்,வேளாண்மை,உடம்பினால் உழைக்கை என்று பல்வேறு விளக்கம் தருகிறது.

திருக்குறளில் உழவு என்ற அதிகாரம் 104 ஆவது அதிகாரமாக அமைந்துள்ளது.சிறுபான்மை வணிகர்க்கும்,பெரும்பான்மை வேளாளர்க்கும் உரிதாய உழுதல் தொழில் செய்விக்குங்கால் ஏனையோர்க்கும் உரித்து என்பர் பரிமேலழகர்.அக்கால நிலை அது போலும்,ஆனால் திருவள்ளுவர் உழந்தும் உழவே தலை,சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் (1031)உழுவார் உலகத்தார்க்கு ஆணி (1032) உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் (1033) என்பர்.அவர் உழவை மிக மதித்தார் என்பதும் அரசரே உழவர்க்கு அடுத்தபடிதான் என்பதும் அவர் குறளாலேயே விளக்கமுறும்  (1034).

உழவன் உலகின் உயிர்,உழைப்பாளி காடு,கடல்,நிலம்,வணிகம் எனப் பல தளத்திலும் உழைப்பான்,உயிர்களுக்கு அன்னையைப் போன்றவர் உழைக்கும் உழவரே (வெண்பாமாலை.344).போர்ப் படையைவிட ஏர்ப்படையே சிறந்தது.அரசரைவிட உழவரே சிறந்தவர்(பெரும்பொருள்)விளைவிக்கும் காலத்தில் விளைவிக்க வேண்டும்.உழவர் குடிக்கு வேண்டாதது சூது.வேண்டுவன பார்ப்பாரைக் கண்டு எச்சரிக்கைகையாக இருத்தல்.உழவை விரும்பியப் போற்றுதல் (திரிகடுகம்.42)ஒரு நல்ல உழவன் நாள்தோறும் ஏரைப் போற்றுவான் புன் செய் நிலத்தைத் திருத்துவான்.

எருவிடுவான்,கலப்பையால் நிலத்தை உழுது பண்படுத்துவான் (சிறுபஞ்சமூலம்.52)உழவனுக்கு எருதுகள் இல்லாமை இன்னா.நிலத்தின் ஈரம் இல்லாமை இன்னா (இன்னாநாற்பது.4).நிலத்தை உழுது விதைத்து நெற்பயிர் விளை (ஆத்திசூடி.82) ஒருவரை வணங்கி வாழ்தலைவிட உழுது விளைத்து வாழ்தல் இனிது.பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.உழவு வழி வரும் செல்வம் குன்றாது (கொன்றை வேந்தன்.77)உழவு பணியே சிறந்தது.பிற பணி எல்லாம் பழுதுடையவை (நல்வழி.12) உழவுர்க்கு அழகு தானே உழைத்து விளைத்த உணவை உண்ணுதல்,உழுதொழிலைச் செய்து உணவு உண்ணாது வறிதே ஏழையாக இருப்போர் பதராவர்.

உழவுத் தொழிலே சிறந்தது.

உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலைப் பின்பற்றியே நிற்கும்.அதனால் எவ்வளவு துன்பமானாலும் உழவே சிறந்த தொழிலாகும் என்று வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்;.இதனை,

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை     (குறள்.1031)

என்ற குறளின் வழி தெளிவுப்படுத்தியுள்ளார்.

உழவர் அச்சாணி போன்றவர்
உழுத்தொழில் செய்யும் வலிமை இல்லாது பிற தொழில் செய்கின்றவரையும் தாங்குவதால்,உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர் அவர் இதனை,

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து    (1032)

என்ற குறள் வெளிப்படுத்துகிறது.

உரிமையோடு வாழ்வர்
உழவு செய்து வாழ்வரே உரிமையோடு வாழ்வா.; மற்றவர் பிறரைத் தொழுது அவர் பின் சென்று வாழ்வர்.இதனை,

உழுதுண்டு வாழ்வரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்      (1033)

என்ற குறள் வெளிப்படுத்துகிறது.

உழுது நெல்லை உற்பத்தி செய்யும் உழவர்கள் பல வேந்தரின் நிலங்களையும் தம் வேந்தரின் நிலங்களையும் தம் வேந்தரின் குடைக்கீழ் கொண்டு வருவார்கள் என்பதை,

பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்        (1034)

என்ற குறள் வெளிப்படுத்துகிறது.இதன் மூலம் நான்கு வருணத்தார்களில் (அந்தணர்,அரசர்,வணிகர்,வேளாளர்) இரண்டு வருணத்தாரான அரசரும்,வேளாளரும் இருந்த செய்தியை அறியமுடிகிறது.

உழவர்கள் யாசிக்க மாட்டார்கள்
கையினால் தொழில் செய்து உழைத்து உண்ணும் தொழிலாளர் பிறரிடம் சென்று யாசிக்க மாட்டார்.தம்மை யாசித்தவருக்கு மறைக்காமல் கொடுப்பர்.இதனை,

இரவார் இரப்பார்க்குஒன்று ஈவர் கரவாது
கைசெய்துஊண் மாலை யவர்        (1035)

என்ற குறளின் வழி வெளிப்படுகிறது.

உழவரின் கைத்தொழில் செய்யாது மடங்கி இருக்குமானால் பற்றற்ற துறவிகளுக்கு வாழ்வு இல்லை என்பதை,
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை        (1036)

என்ற குறளின் வழி தெளிவுப்படுத்தியுள்ளார்.

மண்ணைக் காயவிடல்
நிலத்தை உழுபவன் ஒரு பலம் அளவுள்ள புழுதி கால் பலம் அளவு ஆகும்படி மண்ணைக் காயவிட்டால் அந்நிலப் பயிருக்கு ஒரு பிடி எருவும் இட வேண்டாமல் மிகுதியாக விளையும் என்று வள்ளுவர் குறிப்பிட்டுள்ளாh.; இதனை

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்ததுஎருவும்
வேண்டாது சாலப் படும்        (1037)

என்ற குறளின் வழி அறியமுடிகிறது.

எருவிடல்
ஏர் உழுவதைவிடப் பயிருக்கு எரு விடுதல் நல்லது.இத்துடன் களை எடுத்தலும் பயிர் காத்தலும் நீர் விடுதலும் நன்மை தரும் என்கிறார் வள்ளுவர்,
ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
நீரினும் நன்றுஅதன் காப்பு       (1038)

என்ற குறளின் வழி குறிப்பிடுகிறார்.

நிலத்திற்கு செய்ய வேண்டியதை செய்ய வேண்டும்
நிலச் சொந்தக்காரன் நாள்தோறும் நிலத்திற்கு செய்ய வேண்டியதைச் செய்யாது சோம்பி இருப்பானால் ,அந்நிலம் மனைவி போலப் பிணங்கிவிடும் என்பதை,

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்    (1039)

என்ற குறளின் வழி புலப்படுத்தியுள்ளார்.

பொருள் இல்லை என்று வறுமையால் சோம்பி இருப்பவரைக் கண்டால் அவனுடைய அறியாமையை நினைத்து நிலமகள் தன்னுள்ளே சிரிப்பாள் இதனை,

இலம்என்று அசைஇ இருப்பவரைக் காணின்
நிலம்என்னும் நல்லாள் நகும்   (1040)

என்ற குறளின் வழி கூறியிருக்கிறார்.இதன் மூலம்  எப்போதும் நிலைத்து நிற்கும் தொழில் நிலத்தொழிலாகிய உழவு தொழில் செய்ய வேண்டும் என்பது புலப்படுகிறது.

உழவனின் இலக்கணம்
ஒரு நல்ல உழவன் தன் நிலத்திலிருந்து கிடைக்கும் வைக்கோலைச் சேர்த்து வைத்திருப்பான் நாள்தோறும் உழுது ஏரைப் போற்றுவான் புன்செய் நிலத்தையும் திருத்துவான்.எருவிடுவான் கலப்பையால் நிலத்தைப் பண்படுத்துவான்.இதனை,

நன் புலத்து வை அடக்கி,நாளும் ஏர் போற்றி
புன் புலத்தைச் செய்து எருப் போற்றிய பின் நன் புலக்கண்
பண் கலப்பை பாற்படுப்பான் உழவன் என்பவே
நுண் கலப்பை நூல் ஓதுவார்        (சிறுபஞ்ச.58)

என்ற பாடலில் மூலம் உழவரின் இலக்கணத்தை அறியமுடிகிறது.

வேளாளர்க்கு அழகு
சூதாடிப் பொருள் சேர்க்க விரும்பாமை,பார்ப்பனரைத் தீயாகக் கொண்டு மிக அகலாமை,மிக அணுகாமை உழவுத் தொழிலை விரும்பிச் செய்தல் ஆகியன வேளாண் குடிக்கு அழகுகள் ஆகும்.இதனை நல்லாதனார்,

கழகத்தால் வந்த பொருள் காமுறாமை
பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகல்
உழவின்கண் காமுற்று வாழ்தல் - இம் மூன்றும்
அழகு என்ப வேளாண் குடிக்கு     (திரிகடுகம்.42)

என்ற குறளின் வழி அறியலாம்.மேலும் மற்றொரு பாடலில் உழும் போது சால் போகும் வழியை கவனிக்க வேண்டும் என்பதை,

சால் நெறிப் பாரா உழவனும் தன் மனையில்
………………………………………………
………………………………….இம்மூன்றும்
கடன் கொண்டார் நெஞ்சில் கனா   (திரிகடுகம்.மி.பா.3)

என்ற பாடலின் வழி தெளிவுப்படுத்தியுள்ளார்.உழவுத் தொழிலில் ஏர் பூட்டி உழுவதற்கு முன் அதன் குறைப்பாடுகளை அறிந்து ஏர் பூட்ட வேண்டும் அப்படி பூட்டாமல் இருந்தால் அவன் உயிருடன் இருந்தாலும் இறந்ததிற்கு சமம் என்கிறார் நல்லாதனார்,

ஏர்க் குற்றம் பாரா உழவனும் …………..
……………………………………………
…………………………………இஇம்மூவர்
இருந்திட்டு என்?போய் என்,இவர்?    (திரிகடுகம்.மி.பா.4)

என்ற பாடலின் வழி அறியமுடிகிறது.

நெற்பயிர் விளை       (ஆத்திசூடி.72)

நெற்பயிரை விடாது விளைத்திட வேண்டும்.

பூமி திருத்தி உண்      (ஆத்திசூடி.82)

உன் விளைநிலத்தில் நீயே உழைத்து உணவை விளைத்து உண்பாயாக என்று குறிப்பிடுகிறது.

முடிவுரை
இந்தியாவில் இருக்கும் தமிழகத்தில் இன்றளவும் உழவுத் தொழில் சிறந்ததாக காணப்படுகிறது.இத்தகைய உழவுத் தொழிலின் மூலம் விளையும் பொருட்களை இன்றளவும் உட்கொண்டு  மக்கள் உயிர்    வாழ்கின்றனர்.இத்தகைய உழவின் சிறப்பை அற இலக்கியங்கள் எடுத்துரைத்துள்ளன என்பதை இக்கட்டுரையின் வழி அறியமுடிகிறது. உழவு என்பதன் பொருள் பற்றியும், உழவு தொழிலே சிறந்தது என்றும், உழவர்களே உலகத்திற்கு அச்சாணிப் போன்றவர் என்றும் உழவுத் தொழில் செய்பவர்கள் அக்காலத்தில் உரிமை உடையவர்களாக கருதப்பட்டனர் என்பதைப் பற்றியும் இத்தொழில் செய்வதற்கு முன் மண்ணைக் கிளர்ந்து காய விட வேண்டும் என்பதைப் பற்றியும்,எருவிடும் முறைப் பற்றியும்,இவ்வுழவுத் தொழில் செய்யும் உழவரின் இலக்கணம் பற்றியும்,மற்ற நூல்கள் தரும் விளக்கங்கள் பற்றியும் இக்கட்டுரையின் வழி அறியமுடிகிறது.இதனை இக்காலப் படித்த இளைஞர்கள் உணர்ந்து அறிந்து நாட்டை முன்னேற்றம் அடையும் செய்யும் நோக்கில் இத்தொழில் சார்ந்த படிப்பையும் இத்தொழிலையும் செய்ய முன் வர வேண்டும் என்பதை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

துணை நூற்பட்டியல்
1. பாலசுந்தரம் ,ச திருக்குறள் தெளிவுரை  மணிவாசகர் பதிப்பகம் சென்னை -600017  பதிப்பு -2000
2 இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)  பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 1 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -2009
3 இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)    பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 3  செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -1999
4 பத்மதேவன்,தமிழ்ப்பிரியன் (உ.ஆ)   நீதி நூல் களஞ்சியம் கொற்றவை வெளியீடு  முதற்பதிப்பு -2014
5 அகராதிகள்   செந்தமிழ்ச் சொற்ப்பிறப்பியல் பேரகரமுதலி கௌரா தமிழ் அகராதி

jenifersundararajan@gmail.com

* கட்டுரையாளர் : -  சு.ஜெனிபர் முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி – 24 -



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard