New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆய்வு: தொல் தமிழில் முருகு - முனைவர் ம. தமிழ்வாணன்


Guru

Status: Offline
Posts: 24799
Date:
ஆய்வு: தொல் தமிழில் முருகு - முனைவர் ம. தமிழ்வாணன்
Permalink  
 


 

ஆய்வு: தொல் தமிழில் முருகு

E-mailPrintPDF

- முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 113 -பண்டைத் தமிழ்க்குடி மக்களின் சமுக, கலாச்சார, மத வாழ்க்கை முறைகள் அனைத்தும் 'முருக' வழிபாட்டு முறைகளுக்கு ஏற்பவே அமைந்து இருந்தன. தமிழ்நாட்டின் அடிகானல்லூர் என்ற இடத்தில் இருந்த மிக முக்கியத்துவம் வாய்ந்ததும், மிகப் பழமையுமான மயானங்களில் இருந்த கல்லறைகளில் 'வேல்' மற்றும் 'சேவல்' சின்னங்கள் கிடைத்துள்ளன. இவை பழங்காலத் தமிழர்களைப் பற்றிய வரலாற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களில் மிக முக்கியமானவரும், பெரும் வல்லுரனுமான பேராசிரியர் 'பீ. டி. சீனிவாசன்' என்பவருடைய கூற்றின்படி, அடிகானல்லூரில் இருந்த அந்த கல்லறைகள் 7,000 ஆண்டுகளுக்கு முட்பட்டவை. வரலாற்றுக் காலத்திற்கு முன்னரே 'வேல்' வழிபாடும், முருக வழிபாடும் தமிழர்களிடம் இருந்தது. அதில் அவர்கள் தீவிர ஆர்வமும் கொண்டு இருந்தனர். 'தொல்காப்பியம்', 'பத்துப்பாட்டு' மற்றும் 'எட்டுத் தொகை' போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ள செய்திகளில் இருந்து அந்தக் காலத்தில் முருக வழிபாட்டு முறையைச் சார்ந்தே பண்டைத் தமிழ்க்குடி மக்களுடைய சமுக, கலாச்சார, மத வாழ்க்கை முறைகள் அமைந்து இருந்தன எனத் தெரிய வருகின்றது. “சேயோன் மேய மைவரை உலகம்” எனப் பண்டைத் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் குறிக்கும். இதனால் முருகப்பெருமான் குறிஞ்சி நிலத்திற்கு உரிய தெய்வமாக வழிபடப்பட்டமை புலனாகின்றது. எனவே தொன்மைச் சிறப்புக் கொண்ட தமிழும் முருகு எனப்படும் முருகனும் பற்றிச் சுருக்கமாகக் காண்போம்.

முருகக் கடவுள்
தமிழர்களுக்கு முருகு என்று சொல்லும்போதே மனதெல்லாம் உருகும் சொல்லது. "முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பதாகும். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும்.

முருகனின் பெயர்கள்
முருகனுக்கு பல்வேறு பெயர்கள் உண்டு அதில் 42 பெயர்கள் வருமாறு,

அரன்மகன், ஆசான், ஆண்டலைக் கொடியுயர்த்தோன், ஆறுபடை வீடுடையோன், ஆறுமகன், கங்கைமைந்தன், கடம்பன், கந்தசாமி, காங்கேயன், கார்த்திகேயன், குகன், குமரன், குழகன், குறிஞ்சிவேந்தன், சரவணபவன், சரவணன், சாமி, சிலம்பன், சுப்ரமணியன், சுரேஷன், சூர்ப்பகைவன், செட்டி, செந்தில்நாதன், செவ்வேள், சேந்தன், சேய், சோமாஸ்கந்தன், சோமாஸ்கந்தன், தாரகற்செற்றோன், தெய்வானைகாந்தன், புலவன், மஞ்ஞையூர்தி, மயில்வாகனன், மாயோன்மருகன், முத்தையன், முருகன், வரைபகவெறிந்தோன், வள்ளற்பெருமான், வள்ளிமணாவாளன், விசாகன், வேலினுக்கிறை, வேள்.

சங்க இலக்கியம் முழுவதும் ஒன்பது இடங்களில் முருகன் என்ற பெயர்சுட்டப்படுகிறது.

“உருவப்பல்தேர்இளையோன்சிறுவன்
முருகற்சீற்றத்துஉருகெழு குருசில்” (பொருநர்.131-132)

“முருகன்தாள்தொழு தன்பரங்குன்று” (பரி.8-81)
“முருகன்நற்போர்நெடுவேள் ஆவி” (அகம்.1.3 )

“சினம்மிகுமுருகன்தன்பரங் குன்றத்து” (அகம்.59:11 )
“முருகன்ஆர்அணங்கு என்றலின்” (அகம்.98:10 )

“முருகன் அன்ன” (அகம்.158:16 )

“முருகற் சீற்றத்து உருகெழு குருசில்” (புறம்.16:2)

“முருகன் சுற்றத்து அன்ன” (புறம்.23:4 )

“அணங்குடை முருகன் கோட்டத்து” (புறம்.299.6 )

முருகு என்னும் சொல் முருகன் என்னும் பொருளில் இடம்பெற்றுள்ளது. முருகு, முருகநழகு என்னும் பொருளைச் சுட்டி நிற்கும்.

“முருகு இயம் நிறுத்து, முரணினர் உட்க
முருகு ஆற்றுப் படுத்த உருகெழு வியல்நகர்” (முருகு.243-244)

“முருகு அயர” (மதுரை.38 )

“அருங்கடி வேலன் முருகொடு வளைஇ”(மதுரை.611 )

முருகு, முருகன் கடவுள் அல்லது நிலத்தலைவனின் பெயர் உணர்த்தி செவ்விய முருகியற் பொருந்திய இடத்தை எடுத்துக்காட்டுகிறது.

வேலன்/வேலான்/வேல்வல்லான்/செவ்வேலான்:
வேலன் பெயர் சங்க இலக்கியத்தில் முப்பத்து ஓரிடங்களில் இடம்பெற்று வந்துள்ளது. வேல் என்னும் கருவியினை உடையவன் என்னும் பொருளில் வேலுடையான் பொருளுணர்த்தி நிற்கிறது. கருவியை உடையவனாதலால் வேலின் பெயர் ஆளுக்காகி வேலன் என்றானது. வேல்+அன்= வேலன். வெறியாட்டு நிகழ்த்துதல் நிகழிடத்தில் கருவியானது முதன்மை. வழிபடு முறைகளுள் ஆள் ஒருவன் தன்மேல் முருகன் வருவதாய் ஆடி நிகழ்த்துவது சங்கப்பாடல்கள் பலவற்றில் பயின்று வந்துள்ளது.

வேல்+ஆன்=வேலான் என்று பரிபாடலின் ஈரிடங்களில் வருகிறது.(பரிபாடல்.9.68, கலி.27.16 ) வேற்சொல்லுடன் ஆன் விகுதிப்பெற்று வேலான் என்று வழங்கியுள்ளது. முருகனை வேலுடையவன் என்னும் பொருளில் வேலன், வேலான் என்றவாரு வழங்கிவந்துள்ளது.

வேல்வல்லான் – வேலில் வல்லான். குறிஞ்சி நிலத்தவனை/ தலைவனை/ முதன்மையுடையவனை முருகு, முருகன், வேலன், வேலான் என்று உணர்த்தி நின்று வேலில் வல்லானாய் முருகனைக் காட்டி வந்துள்ளது. செவ்விய வேலையுடையவன் என்னும் பொருளில் செவ்வேலான் என்றது.(கலி.93.26)

திருமுருகாற்றுப்படையின் முக்கியத்துவமும் முருகனும்
இந்நூல் ஆற்றுப்படை வகையைச் சார்ந்தது. இந்நூலின் வேறு பெயர்கள் 1. முருகு 2. புலவராற்றுப்படை என்பவை. திணை = புறத்திணை, பாவகை = ஆசிரியப்பா, அடி எல்லை = 317, இந்நூலானது கடவுள் வாழ்த்து போன்றது. பத்துப்பாட்டில் முதற்பாட்டாக இருப்பது திருமுருகாற்றுப்படை. பத்துப்பாட்டின் பத்து நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து போல் அமைந்துள்ளது. வேறு எந்த தெய்வத்திற்கும் வேறு எந்த நூலிலும் இவ்வளவு நீண்ட பாடல் இல்லை. முருகப்பெருமானைப் பாட்டுடைத்தலைவனாக் கொண்டு நக்கீரர் எழுதிய இனிய நூலாகும். இதற்குச் சிறந்த உரைகளாக நச்சினார்க்கினியர் உரையும் பரிமேலழகர் உரையும் விளங்குகின்றன.

நூல் குறிப்பிடும் செய்திகள்

முதல் பகுதி = திருப்பரங்குன்றம் என்னும் மலைக்கோவில், இயற்கை வளம், முருகனின் திருக்கோலம், சூரனுடன் முருகன் செய்த போர்.

இத்திருக்கோயில். மதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ள இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.

இரண்டாம் பகுதி = திருச்சீர்அலைவாய்(திருச்செந்தூர்) தலம், முருகனுடைய ஆறுமுகங்கள், பன்னிரு தோள்களின் செயல்கள்.

மூன்றாம் பகுதி = திரு ஆவின்குடி(பழனி மலை), வழிபாடும் மகளிரின் சிறப்புகள், முருகனை வெளிப்படும் முனிவரின் பெருமைகள்.

முருகனின் மூன்றாம் படை வீடாகும். நாரதர் சிவனுக்கு அளித்த ஞானப்பழம் தனக்கு கிடைக்காததால், முருகர் கோபம் கொண்டு ஆண்டியின் கோலம் பூண்டு இந்த திருத்தலத்தில் தங்கிவிட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது.

நான்காம் பகுதி = திருவேரகம்(சுவாமிமலை) என்னும் தலம், வெளிப்படும் மக்கள், மந்திரம் ஓதுவார் செயல்கள்,

இத்தலம் கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு முருகன் சுவாமிநாத சுவாமி என்ற பெயரில் கோவில் கொண்டுள்ளார். இதனை திருப்பதி என்று நச்சினார்கினியர் கூறுகிறார்.

ஐந்தாம் பகுதி = திருத்தணி அல்லது குன்றுதோறாடல். மலைப்பகுதி, மகளிர், குரக் குரவை, முருகனின் அணி, ஆசை, அழகு

ஆறாம் பகுதி = பழமுதிர்ச்சோலை, முருகன் இருக்கும் நீர்த்துறை, பழமுதிர்ச்சோலையின் அருவி, முருகன் அருளும் முறை.

முருகன் சிறுவனாய் வந்து ஔவையாரைச் சோதித்தது இங்குதானென நம்பப்படும் இடம். விஷ்ணு கோயிலான அழகர்கோயில் இதற்கு அண்மையில் அமைந்துள்ளது. அருணகிரிநாதர் இத்தலம் மீது திருப்புகழ் பாடியுள்ளார். ஆற்றுப்படை நூல்கள் பரிசில் பெறச் செல்வோரால் பெயர் பெறும். திருமுருகாற்றுப்படை மட்டும் பரிசில் கொடுப்போரால்(முருகன்) பெயர் பெற்றது. முருகனை முருகன் ஆற்றுப்படுத்துவதே திருமுருகாற்றுப்படையாகும்.

முக்கிய பாடலடிகள்
“உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு ” (முருகு. 1-3))

“இழுமென இழிதரும் அருவிப்
பழமுதிர் சோலை மலைகிழ வோனே ” (முருகு. 316-317)

“ஆல்கெழு கடவுள் புதல்வ! மால்வரை
மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!” (முருகு. 256-257)

“முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கட்கமழ் நெய்தல் ஓதி எல்படக்” (முருகு. 73-74)

பிற நூல்களில் முருகன் தலம்
முருகாற்றுப்படையைத் தவிர திருப்பரங்குன்றம், திருச்சீரளைவாய் என்ற இரண்டையும் பற்றி பல சங்க இலக்கியங்களில் கூறப்பட்டு உள்ளன. திருப்பரங்குன்ற ஆலயம், அதன் திருவிழாக்கள் மற்றும் பிற செய்திகள் என அனைத்தும் பரிபாடலில் கூறப்பட்டு உள்ளன (பரிபாடல். 6:69-75; 95; 8:11-16; 21:15; பதிற்றுப்பத்து. 17:1-2;). அதை எழுதிய நல்லந்துவனார் என்ற புலவர் அந்த மலையின் பெருமையைக் கூறி மகிழ்கிறார் (பரிபாடல். 6, 8, 11 ,20).

மதுரை மருதநீலகண்டனார் கீழ் உள்ளவாறு கூறி உள்ளார்

“சூர்மருங்கு அறுத்த சுடர்இலை நெடுவேல்
சினம்மிகு முருகன் தண்பரங் குன்றத்து
அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை” (அகம். 59: 10-12)

(அந்துவன் = நல்லந்துவனார் என்னும் புலவர்; சூர் = அரக்கன்; சந்து = சந்தனமரம்; வரை = மலை) அகநானுறு (59: 10-12) மற்றும் கலித்தொகை (கலித்தொகை. 27:16) இதை “வேலன் குன்று” எனக் கூறி உள்ளன. திருச்சிரலைவாய் பற்றியக் குறிப்பு அகநானுறு :266 மற்றும் புறநானுறு:55 போன்றவற்றில் உள்ளன.

“திருமணி விளக்கின் அலைவாய்ச்
செருமிகு சேஎயொடு” (அகம்.266:20-21)

“வானத்து அன்ன வண்மையும், மூன்றும்,
உடையை ஆகி, இல்லோர் கையற,
நீநீடு வாழிய நெடுந்தகை! தாழ்நீர்!
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்    
நெடுவேள் நிலைஇய காமர் வியந்துறை” (புறம். 55:17-21)

சிறுபாணாற்றுப்படை வேலூர் என்பது வேல் முருகன் என்பதில் இருந்தே வந்தது என்று கூறி உள்ளது.

“திறல்வே னுதியிற் பூத்த கேணி
விறல்வேல் வென்றி வேலூ ரெய்தி” (சிறுபாணாற்றுப்படை: 172-173)

இதன் பொருள்: ''ஈட்டி முனைப் போல, தாடகத்தில் மலர் இருக்க, வல்லமை வாய்ந்த ஈட்டியும் வெற்றியுமான வேலூர்'' நச்சினார்க்கினியர் என்பவர் இந்த நகருக்கு இந்தப் பெயர் வந்ததின் காரணத்தை ஒரு கிராமியக் கதை மூலம் கூறி உள்ளார்.

முருகன் கையில் வலியுடனையாக்கிய வேலின்ஈட்டி போலே கேனி பூக்கப்பட்ட வெற்றியையுடைய வேலாலே வெற்றியையுடைய வேலூர் என்றது ; இதன் அர்த்தம்: முருகனின் கையில் உள்ள வலிமையான ஆயுதமான வேலைப் போலவே அந்த தாடகத்தில் பூத்த மலரும், அந்த ஊருக்கு வெற்றியைத் தர, அந்த வேலின் பெயராலேயே வேலூர் என்றாயிற்று.

வழிபாடு
அசைவ உணவை உட்கொண்டவர்களின் கடவுளாக இருந்த முருகனை வேலன் என்று மக்கள் வழிபட்டதாகவும், ஆட்டு ரத்தத்துடன் கலந்த தினை மாவை அவருக்கு படைத்ததாகவும், அதன் பின் வந்த சமற்கிருத வழிபாட்டு முறையில் முருகன் வழிபாடு சைவ வழிபாடாக மாறியதாகவும் முனைவர் சண்முகம் பிள்ளை குறிப்பிடுகிறார். (சங்க இலக்கியங்களில் முருகன் பழங்குடி இன வெறியாட்டு வழிபாடு கட்டுரை) தமிழகத்திலும் தமிழர்கள் வாழும் பிற இடங்களிலும் அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் நடைபெறும் பல்வேறு வகையான வழிபாடுகள் வருமாறு.

காவடிஎடுத்தல், அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல், முடி இறக்குதல் (மொட்டை போட்டுக் கொள்ள நேர்ந்து அதன்படி செய்தல்), பாதயாத்திரை.

விழாக்கள்
கார்த்திகை மாத கார்த்திகைத் திருநாள் முருகப்பெருமானின் விசேட தினமாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசி மாத விசாக நட்சத்திர தினம் இவரது ஜென்ம நட்சத்திர தினமாகக் கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமான் சூரபதுமன் என்னும் அரக்கனை அழித்ததை ஒட்டி கந்தசஷ்டி என்னும் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், முருகன் கோயில்கள்தோறும் பங்குனி உத்திரத் திருநாள் முருகப்பெருமானுக்கு அணிசேர்க்கும் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

முருகனின் பெருமை பேசும் பன்னிரு திருமுறைகள்
பரமசிவனை வழிபடும் சைவ சமயத்தில், சிவபெருமானின் புகழையும் சிவனடியார்களின் மகிமைகளையும் போற்றும் நூல்கள் பன்னிரு திருமுறைகள் என்று போற்றப்படுகின்றன. தேவாரம், திருவாசகம் முதல் பெரிய புராணம் வரை உள்ள நூல்கள் பன்னிரு திருமுறைகள் என்று போற்றப்படுகின்றன. அதேபோல் முருகப் பெருமானுக்கும் ‘முருகவேள் பன்னிரு திருமுறைகள்’ உருவாக்கப்பட்டுள்ளன. தணிகைமணி செங்கல்வராய பிள்ளை என்பவர்தான் சிவனைப்போலவே அவரது திருமகனின் புகழைப்பாடும் நூல்களைத் தொகுத்து திருமுறைகளாக்க வேண்டும் என்று விரும்பினார். அதன்படி முருகனின் புகழ் பாடும் நூல்களைத் திரட்டத் தொடங்கினர். அதன் விவரம்.

* திருப்பரங்குன்றம் திருப்புகழ் என்னும் நூல் முதல் திருமுறை

* திருச்செந்தூர் திருப்புகழ் என்னும் நூல் இரண்டாநம் திருமுறை

* திருவாவினன்குடி திருப்புகழ் என்னும் நூல் மூன்றாம் திருமுறை

* சுவாமிமலை திருப்புகழ் என்னும் நூல் நான்காம் திருமுறை

* குன்றுதோறாடல் திருப்புகழ் என்னும் நூல் ஐந்தாம் திருமுறை

* பழமுதிர்சோலை திருப்புகழ் என்னும் நூல் ஆறாம் திருமுறை

* பொதுத் திருப்புகழ் பாடல்கள் என்னும் நூல் ஏழாம் திருமுறை

* கந்தரலங்காரம் - கந்தரந்தாதி என்னும் நூற்கள் எட்டாம் திருமுறை

* திருவகுப்பு என்னும் நூல் ஒன்பதாம் திருமுறை

* கந்தரனுபூதி என்னும் நூல் பத்தாம் திருமுறை

* நக்கீரர், பரிபாடல் ஆசிரியர்கள், கல்லாடர்முதலானவர்கள் முருகனைப் பற்றி பாடிய பாடல்கள் - பதினோராம் திருமுறை என வகைப்படுத்தி முருகனுக்கு அர்ப்பணித்தார்.

இருப்பினும் சைவ சமயத்தைப்போல பன்னிரு திருமுறைகள் கிடைக்காததை எண்ணிக் கலங்கினார். அதுவும் சைவத்தின் 12ஆம் திருமுறையான திருத்தொண்டர்கள் பெருமை கூறும் பெரிய புராணத்தைப்போல முருகனின் அடியார்களின் பெருமை சொல்லும் விதமாக ஒரு புராணம் இல்லையே என்று வருந்தினார். 12 திருமுறைகள் தொகுக்கப்பட்டால்தான் தனது முருகப்பணி சிறக்கும் என்று எண்ணினார். அதனால், முருகனை எண்ணி மனமுருகி வேண்டினார். 12ஆம் திருமுறையை அளிக்கவும் தனது அடியார்களின் பெருமையைக் கூறவும் முருகப்பெருமான் விரும்பினார். அதன்படி தணிகைமணி செங்கல்வராயபிள்ளைக்குச் சுந்தரர் உலா என்ற புத்தகத்தை கிடைக்கச் செய்தார். அந்தப் புத்தகத்தின் கருத்துக்களில், அழகிய தமிழ் நடையில் சொக்கிப்போன பிள்ளையவர்கள் அதை எழுதிய புலவரைத் தேடி அலைந்தார்.

இறுதியாக முருகன் அருளால் தேனூர் வரகவி வே. செ. சொக்கலிங்கனார் என்ற புலவர்தான் அதை எழுதியவர் என்று கண்டறிந்து அவரிடம் தனது ஆசையைக் கூறினார். 11 திருமுறைகளைத் தொகுத்த அவருக்கு 12ஆம் திருமுறையாக முருகனடியார்கள் வரலாறு என்ற சேய்த்தொண்டர் புராணம் என்ற நூலை எழுத சொக்கலிங்கனார் ஒப்புக்கொண்டார். பன்னிரண்டாம் சைவத் திருமுறையைச் சேக்கிழார் நாடெங்கும் சுற்றி சைவ அடியார்களின் தகவல்களை அறிந்து ஒரே ஆண்டில் எழுதியதைப்போல, சொக்கலிங்கனாரும் முருகன் அருளால் ஒரே ஆண்டில் முருகப்பெருமானின் 12ஆம் திருமுறையை எழுதிக்கொடுத்தார். அதன்படி முருகனடியார்கள் வரலாறு என்ற சேய்த்தொண்டர் புராணம் என்ற நூல் முருகப்பெருமானின் 12ஆம் திருமுறையானது. 12 திருமுறைகள் நிறைவு பெற்றதை எண்ணி மகிழ்ந்த தணிகைமணி செங்கல்வராய பிள்ளை முருகப்பெருமானின் எல்லையில்லாத கருணையை எண்ணி மகிழ்ந்தார். இப்படித்தான் சிவனின் புகழ்பாடும் சைவத்திருமுறைகளைப் போல கந்தனின் புகழ் பாடும் 12 திருமுறைகள் உருவானது. இன்றும் முருகனை முக்கியக் கடவுளாக எண்ணி வழிபடும் அடியார்களுக்கு இத்திருமுறைகள் புனித நூலாக விளங்கி வருகின்றன.

முருகனின் அடியார்கள்
கடவுளரில் சிறப்புக் கொண்ட முருகனுக்குக் கீழ்க்கண்டோர் அடியார்களாகத் திகழ்ந்தனர்.

அகத்தியர், நக்கீரர், ஔவையார், அருணகிரிநாதர், குமரகுருபரர், பாம்பன் சுவாமிகள், கிருபானந்தவாரியார்.

முடிபு: தமிழருக்கே உரிய கடவுளான முருகன், சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் ஆகக் கருதப்படுபவர் முருகக் கடவுள். தமிழ் மொழியை வடிவமைத்ததால் தமிழ்க் கடவுள் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு. தன்னுடைய வயதாகும் நிலையை நிறுத்தி, என்றும் குமரனாக, அழகனாக நீண்டகாலம் சுமார் 4000 ஆண்டுகள் பூத உடலுடன் வாழ்ந்து காட்டிய பெரும்மகான் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.’சரம்’ என்றால் மூச்சு. ’சரத்தை வயப்படுத்தினால் காலத்தை வெல்லலாம்; காலனையும் வெல்லலாம்; கடவுளையும் காணலாம்’ என்பது இவரது தத்துவம். சரத்தை வணப்படுத்திக் காட்டியதால் ‘சரவணன்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. மனிதன் வாழ்வின் இறுதியில் சவமாகக் கூடாது; சிவமாக வேண்டும். கற்பூரம் கரைவது போல் தன்னை வேறொரு பரிமாணத்திற்கு மாற்றிக்கொண்டு பிரபஞ்சம் எங்கும் வியாபிக்க வேண்டும் என்பது நிறைவான செய்தி. அதை அவரே நிரூபித்துக் காட்டியதால், ‘பெம்மான் முருகன் பிறவான்; இறவான்...’ என்று அருணகிரி நாதரால் பாடப் பெற்றார்.

உலகில் தமிழர் வாழும் நூற்றிற்கும் மேற்பட்ட நாடுகளில் முருகக் கோயில்கள் தமிழர்களால் கட்டப்பட்டுள்ளன. உலகில் முருகனை அறியாத தமிழர்கள், முருகனை வணங்காத தமிழர்கள் எந்த நாட்டிலும் இல்லை எனலாம். எனவே, தமிழ்க்கடவுள் முருகனைப் போற்றி வணங்குவோம்.

கருவி நூற்கள்
அருளம்பலவானர், சு., (ப.ஆ.)1937, திருமுருகாற்றுப்படை யாழ்ப்பாணம்.
சாமிநாதையர்.உ.வே.(ப.ஆ.) 1894, புறனானூறு மூலமும் உரையும் உ.வே.சா நூல் நிலையம், சென்னை.(முதற்பதிப்பு)
இராஜகோபாலையங்கார்.வே. (ப.ஆ.)1923, அகநானூறு மூலமும் உரையும் (உ.வே.ரா.இராகவையங்கார் சோதித்தது)
சாமிநாதையர்.உ.வே(ப.ஆ.) 1918, பரிபாடல் மூலமும் பரிமேலழகருரையும் கமர்சியல் அச்சுக்கூடம், சென்னை.
சாமிநாதையர்.உ.வே.(ப.ஆ.) 1904, பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும் வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை.
அருளம்பலம், பண்டிதர் சு., (ப.ஆ)1963, பதிற்றுப்பத்து ஆராய்ச்சி உரை யாழ்ப்பாணத்துக் காரை நகர் அ.சிவானந்தநாதன் வெளியீடு.
சுப்பிரமணியன
்.ச.வே.(ப.ஆ.), 2008, தமிழ்ச் செவ்வியல் நூல்கள் மூலம் முழுவதும், மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை சென்னை.

tamilveppp@gmail.com

* கட்டுரையாளர்: - முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 113 -



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard