மெய்ப்பாடு என்ற தமிழ் இலக்கியக் கோட்பாடு அதன் விளக்கங்கள் அனைத்தையும் ஒருசேரக்கொண்டு ஆயும்போது ஓர் உலக இலக்கியப் பொதுமைக்கோட்பாடாகக் காட்சியளிக்கிறது.

இலக்கியம் வாய்மொழியாக இருந்தபோது ஆடலுடன் கூடிய பாடலாக இருந்தது. கூத்துக்களில் இருந்த முக உடலசைவுகள், சைகை ஆகியன உணர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டின. இலக்கியத்தில் சொற்களை வைத்துத்தான் உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டியதாயிற்று. இவ்வாறு தோன்றிய மெய்ப்பாட்டுச் சொற்களின் விளக்கம் தொல்காப்பியர் காலத்திலிருந்தே பெறப்படுவதை அறியலாம். அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவான மெய்ப்பாடுகள் மெய்ப்பாட்டியலின் முதல் 12 நூற்பாக்களால் கூறப்படுகின்றன.

மெய்ப்பாடு

மெய்ப்பாடு என்ற சொல் மெய்யின்கண் தோன்றும் அவிநயம் எனப்பொருள் கூறப்படுகிறது. மெய்யின்கண் தோன்றுதலின் மெய்ப்பாடாயிற்று என்பார் இளம்பூரணர் (பொருள்.மெய்ப்பாட்டியல்.3, இளம்.,). இவரே  ‘இன்சுவை என்பது காணப்படுபொருளாற் காண்போரகத்தின் வருவதோர் விகாரம்’ (மு.நூ.மெய்ப்.1, இளம்.,) எனவும் கூறுகிறார். இக்கூற்றுகளால் உலகியலிலிருந்து கூத்துக்கலை வளர்வது நமக்குப் புலனாக்குகிறது.  பேராசிரியர், ‘சுவைப்பொருளுஞ் சுவையுணர்வுங் குறிப்பும் விறலுமென நான்காயின’ எனப் பகுக்கும்போது மெய்ப்பாடு கூத்தினுள் வெளிப்படும் முறையாகக் கொள்ளப்படுகிறது  (தொல்.பொருள்.மெய்ப்.1, பேரா.,). எனவே, மெய் என்பது பொருட்பிழம்பு; பாடு என்பது தோன்றுவது.

கவிதையானது தான் மெய்யாகிய பொருட்பிழம்பைத் தோற்றுவிக்கிறது என்பதாகும். மேலும் விளக்குமேயானால் சொல்ல வந்ததை அப்படியே கண்ணால் கண்டதுபோல், காதால்கேட்டதுபோல் உருவாக்கிக் கண்முன்னர் நிறுத்துவதே மெய்ப்பாடு. இவற்றைச் சங்க இலக்கியங்களில் நன்கு உணரலாம்.

மெய்ப்பாடு இலக்கியவுத்தி

மெய்ப்பாடு என்பது உடம்பில் தோன்றும் அசைவுகளே நினைவுக்கு வருவதால் அது நாடகத் தொடர்புடையது.  தொல்காப்பியர் தாம் கூறும் மெய்ப்பாடு இலக்கியத்திற்கே உரியது எனச் சுட்டுகிறார்.

உய்த்துணர் வின்றித் தலைவரு பொருண்மையின்

மெய்ப்பட முடிப்பது மெய்ப்பா டாகும்        (தொல்.பொ.செய்யுளி.196)

ஒன்றைப்பற்றி ஆராயாமல் கூறியவுடனேயே அதன்பொருளை மெய்ப்பாடு தோன்ற முடிப்பது மெய்ப்பாடாகும். இளம்பூரணர்,  ‘செய்யுட் செய்வார் மெய்ப்பாடு தோன்றச்செய்தல் வேண்டுமென்பது கருத்து’ (தொல்.இளம்.செய்யுளி.196) எனவும்  ‘இவ்விலக்கணங் கூத்தினுட் பயன்படல் உண்டாதலின் ஈண்டு வேண்டாவெனின், ஈண்டுஞ் செய்யுட் செய்யுங்காற் சுவைபடச் செய்யவேண்டுதலின் ஈண்டுங் கூறவேண்டுமென்க’ (மு.நூ.மெய்ப்.3இளம்.,) எனவும் சுட்டிச்செல்கிறார்.

மெய்ப்பாடு உணரப்படுதல்

தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் தலைவன் தலைவியிடையே இருக்கவேண்டிய ஒப்புமைகளையும் இருக்கக்கூடாத பண்புகளையும் பட்டியலிடுகிறார்.

கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்

       உணர்வுடை மாந்தர்க்கு அல்லது தெரியின்

       நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே

(தொல்.பொருள்.மெய்ப்.27இளம்.,)

என்னும் மெய்ப்பாட்டியல் இறுதி நூற்பாவில் படைப்பவனோடு ஒன்றுபட்டுக் கலையை நுகரவேண்டும் என்ற கருத்தை அழுத்தமாகக் கூறுகிறார் தொல்காப்பியர். ‘நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே’ என்று மெய்ப்பாட்டைச் சுட்டுகிறார். செய்யுளைப் பொறுத்தவரை மெய்ப்பாடென்பது நல்லநயமான பொருளைக் கொள்ளுதலே. மாந்தர்கள் மெய்ப்பாட்டின்வழி மற்றொருவர் தம் உளக்கருத்தை அறிவதென்பது ஆகும்.

பேராசிரியர், செய்யுளியல் முதல் நூற்பாவுரையில், ‘மெய்ப்பாடென்பது சொற்கேட்டார்க்குப் பொருள் கண்கூடாதல்’ என உரை கூறுவார். நச்சினார்க்கினியர், மெய்ப்பாடென்றது சொற்கேட்டோர்க்குப் பொருள்கட் புலனாதலை (தொல்.பொருள்.செய்யுளி.1, நச்.,) என்றே குறிப்பிடுகிறார். தண்டியலங்காரம், ‘மெய்ப்பாடாவது நேராகக் கண்டதுபோலத் தோன்றும் கருத்து’ எனக் குறிப்பிடுகிறது.

உய்த்துணர்வு இன்றித் தலைவரும் பொருளான்

       மெய்ப்பட முடிப்பது மெய்ப் பாடாகும்   (தொல்.செய்யுளி.204)

       எண்வகை இயல்நெறி பிழையா தாகி

       முன்னுறக் கிளந்த முடிவினது அதுவே   (தொல்.செய்யுளி.205)

என்பது தொல்காப்பியம்.

இளம்பூரணர், ‘யாதானும் ஒன்றைக் கூறியவழி அதன்கண் பொருண்மையை விசாரித்து உணர்தலன்றி அவ்விடத்துவரும் பொருண்மையானே மெய்ப்பாடு தோன்ற முடிப்பது மெய்ப்பாடு என்னும் உறுப்பாம் என்றவாறு’ என்பார். பேராசிரியர், ‘உய்த்துணர்ச்சி யின்றி செய்யுளிடத்து வந்த சொல்லப்படும் பொருள்தானே வெளிப்பட்டாங்குக் கண்ணீரரும்பல், மெய்சிலிர்த்தல் முதலாகிய சத்துவம் படுமாற்றான் வெளிப்படச் செய்வது மெய்ப்பாடென்னும் உறுப்பாம் என்றவாறு’ என உரைப்பார்.

செய்யுளியல் முதல் நூற்பா, செய்யுளுறுப்புக்களாகக் கூறும் 34 உறுப்புக்களையும் வரிசைப்படுத்தும்போது மெய்ப்பாட்டை இருபதாவது உறுப்பாகக் கூறுகிறது. அதாவது,

பயனே மெய்ப்பாடு எச்சவகை எனாஅ (தொல்.செய்யுளி.1, வரி.7)

என்பதில் பயன், கூற்றெச்சம், குறிப்பெச்சம் என்பன பாடலில் பொருள்கொள்ளும் முறை பற்றியது. மெய்ப்பாடும் பாட்டுப்பொருளை உணர்வதைப் பற்றியது என்ற ஐயம் உண்டாகிறது.

மெய்ப்பாட்டினை நாடக மெய்ப்பாடு, இலக்கிய மெய்ப்பாடு என இருபிரிவாகப் பிரிக்கலாம். இலக்கிய மெய்ப்பாடு என்பது பொருட்பாடாகும். அதாவது சொல்லப்படும் பொருள் தானே வெளிப்படுவது. சொல் கேட்போருக்குப் பொருள் கண்கூடாக அறிவது. இது தமிழ் இலக்கியத்தில் பெரிதும் அகத்திணையைச் சுட்டியே உணரப்படும். ஆகவே கவிதையில் மெய்ப்பாடு தானே வெளிப்படுத்துவதாகும்.

கவிதையின் சொல், தொடரைக் கண்டதும், கேட்டதும் அதன்பொருள் மெய்ப்பாட்டை உணர்த்துவதாக அமையும்.

தொல்காப்பிய மூலத்தாலும் உரை விளக்கங்களாலும் பெற்ற மெய்ப்பாட்டுக் கோட்பாட்டைக் கீழ்வருமாறு பகுக்கலாம் என்பார் தமிழண்ணல். அவை,

  1. செய்யுட் செய்வார் மெய்ப்பாடு தோன்றச்செய்தல்
  2. செய்யுளைப் படித்ததுமே மெய்ப்பாடு தோன்றுதல்
  3. பாடலின் கருத்து, உணர்வு உடனே மனத்திற்கு ஆகுதல்
  4. கண்ணீரரும்பல், மெய்மயிர்சிலிர்த்தல் முதலாகிய சத்துவம் தோன்றுமாற்றால் வெளிப்படச்செய்தல்
  5. சொல் கேட்டார்க்குப் பொருள் கண்கூடாதல்
  6. நோக்கு உறுப்பினால் உணர்ந்த பொருட்பிழம்பினைக் காட்டுதல் (ஒவ்வொரு பாக்களையும் மறித்து நோக்குவதால் அதன் அடைமொழி முதல் தொடர்நிலை வரை ஒவ்வோர் உறுப்பும் நன்கு உணரப்படுகின்றன. அதனால் பாடலின் கருத்து, பொருட் பிழம்பாகப் படிப்பவர் மனத்தில் தோன்றுகிறது).

நாடகத்தில் காட்சி ஒன்றில் நடிப்பவரிடத்தில் மெய்ப்பாடுகள் தோன்றுவதால் காண்பவரிடத்திலும் அவ்வுணர்வுகள் தோன்றும்.  கவிதையைப் படிக்கும்போது அதில்வரும் செய்தி கண்ணெதிரே தோன்றுமாறு இருக்குமேயானால் படிப்பவரிடத்தில் மெய்ப்பாடு தோன்றும்.

ஒரு பாடலின் சிறு அடைமொழி முதல் அதன் முழுப்பொருள்வரை வடிவமும் பொருளும் ஒருசேரக்கொண்டு நோக்கி உணர்வார்க்கு அப்பாடலின் பொருட்பிழம்பு (image) கண்ணெதிரே தோன்றும். அவ்வாறு காட்டப்பெறுவதே மெய்ப்பாடாகும்.

யாழ்ப்பாணம் சி.கணேசையர் தரும் விளக்கம்:- ‘இவள்மேனி அணைபோலும்; இது பரிசத்தால் அறிந்து சுவைத்தது.  இக்கனி அமிழ்து போலும்; இது நாவால் உணர்ந்து சுவைத்தது.  இவள் மேனி மாந்தளிர் போலும்; இது கண்ணாலுணர்ந்து சுவைத்தது. இவள் கூந்தல் பூப்போலும் நாற்றமுடையது; இது மூக்காலுணர்ந்து சுவைத்தது. இவள் மொழி யாழிசை போலும் இனிமையுடையது; இது செவியாலுணர்ந்து சுவைத்தது. இவ்வாறு மெய்ப்பாடு எனும் பொருளை உணர்தற்கு ஐம்புலனுணர்வுதான் மிக முக்கியமாகும்.

இனித் தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடுகளைக் காணலாம்.

நகையே யழுகை இளிவரன் மருட்கை

யச்சம் பெருமிதம் வெகுளி யுவகையென்

றப்பா லெட்டே மெய்ப்பா டென்ப          (தொல்.மெய்ப்.3)

நகை: எள்ளல் (இகழ்தல்), இளமை, பேதைமை (அறிவின்மை), மடம் (ஒன்றை வேறொன்றாகத் திரியக்கோடல்)

அழுகை (அவலம்): இழிவு (இழிவுபடுத்துதல்), இழவு (உயிரையோ பொருளையோ இழத்தல்), அசைவு (முன்னிருந்த சிறப்புக் குன்றித் தளர்தல்), வறுமை

இளிவரல் (பிறர்முன் இழிவுக்கு இலக்காகுதல்): மூப்பு, பிணி, வருத்தம், மென்மை (பிறர்முன்மெலியராதல்)

மருட்கை (வியப்பு): புதுமை (முன்பு இல்லாதது), பெருமை (முன்பு காணாத அளவு பெரியதாதல்), சிறுமை (மிகவும் நுண்ணியன), ஆக்கம் (ஒன்று மற்றொன்றாதல் அல்லது ஒன்றன் வளர்ச்சி, பரிணாமம்)

அச்சம்: அணங்கு (தெய்வத்தால்), விலங்கு, கள்வர், தம்இறை அல்லது தம்தலைவராயினார் (தந்தை, ஆசிரியர்)

பெருமிதம்:   கல்வி, தறுகண்மை (போர்,வீரம்), புகழ், கொடை

வெகுளி: உறுப்பறை (உறுப்புக்களை வெட்டுதலால்), குடிகோள் (குடிமக்களை நலிதலால்), அலை (அலைத்து வருதலால்), கொலை

உவகை: செல்வம் உடைமை, புலன் (அறிவுடைமை), புணர்வு (காதல் கூட்டத்தால்), இன்ப விளையாட்டு (ஆடல், பாடலால்)

இவையாவும் உலகியலில் மிக இயல்பாகத் தோன்றும் மெய்ப்பாடுகளாகக் கருதப்படுகின்றன.

தமிழ் அகஇலக்கியமும் புறஇலக்கியமும் நாடகப் பண்புடையன. அதனால் தொல்காப்பியர்,

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

       பாடல் சான்ற புலனெறி வழக்கம்   (தொல்.பொருள்.அகத்.53)

என்பார்.

தொல்காப்பியம் தவிர பிற இலக்கணங்களில் மெய்ப்பாடு குறித்துப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பின்வருமாறு,

அகப்பொருள் விளக்கம் அகப்பாட்டுறுப்புப் பன்னிரண்டு என்று கூறுகிறது. அதில் மெய்ப்பாடும்  ஒன்றாகும். அதாவது,

திணையே கைகோள் கூற்றே கேட்போர்

              இடனே காலம் பயனே முன்னம்

              மெய்ப்பாடு எச்சம் பொருள்வகை துறைஎன்று

              அப்பால் ஆறிரண்டு அகப்பாட் டுறுப்பே      (211)

என்பதாகும்.

இறையனார் அகப்பொருள் கூறும் முறையும் நோக்கத்தக்கது. அதாவது

திணையே கைகோள் கூற்றே கேட்போர்

இடனே காலம் எச்சம் மெய்ப்பாடு

பயனே கோள் என்று ஆங்கப்பத்தே

அகனைந் திணையும் உரைத்த லாறே   (56)

என அகப்பாட்டுறுப்புப் பத்து என்பதாகும்.

சுவையணி என்ப சுடுஞ்சினம் காமம்

              வியப்பு அவலம் இழிவுஅச்சம் வீரம்நகைஎன

              எண் மெய்ப்பாட்டின் இயைவன கூறி

              உள் மெய்ப்பாட்டை உணர்த்தித் தோற்றலே   (354)

என (தொன்னூல் விளக்கம்) மெய்ப்பாடு குறித்து இலக்கணங்கள் கூறுகின்றன