தச்சம்யோ- ராவ்ருணிமஹே. காதும் யஜ்ஞாய.
காதும் யஜ்ஞபதயே தைவி ஸ்வஸ்தி-ரஸ்து ந:
ஸ்வஸ்திர்-மானுஷேப்ய: ஊர்த்வம் ஜிகாது பேஷஜம்
சந் நோஅஸ்துத்வியதே. சஞ் சதுஷ்பதே.
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
நிகழ்கால துன்பத்திற்கும், எதிர்கால துன்பத்திற்கும் நிவாரணம் அளிக்கிற நற்கர்மம் எதுவோ, அதை ஆர்வத்துடன் வேண்டுகின்றோம். யாகத்திற்கு வளர்ச்சியை வேண்டுகின்றோம். யாகத்தை செய்பவனுக்கு நற்பயன் கிட்ட வேண்டு கின்றோம். நமக்கு தேவதைகளின் அருள் உண்டா கட்டும். மனித சமூகத்திற்கு க்ஷேமம் உண்டா கட்டும். செடி, கொடிகள் மேலோங்கி வளரட்டும். இரண்டு கால் படைப்புகளிடம் சுபம் உண்டா கட்டும். நான்கு கால் படைப்புகளிடம் சுபம் உண்டாகட்டும்.அமைதி நிலவட்டும்
. – ஒரு வேத மந்திரம்
முதலிலேயே ஓர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து விடுகிறேன். இந்தக் கட்டுரைத் தொடரில் ஆங்காங்கே வேதங்கள் உபநிஷத்துக்கள் தர்ம சாத்திரங்கள் புராணங்கள் ஆகியவை ஆதாரமாகக் கூறப்படும் அவற்றிலிருந்து மேற்கோள்கள் காட்டப்படும் ஒரு சில ஸ்லோகங்களும் குறிப்பிடப்படும்.
இவற்றைப் படித்துவிட்டு, நான் ஏதோ இவற்றை யெல்லாம் கரைத்துக் குடித்து விட்டதாக யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம். அந்த அளவுக்கு ஸம்ஸ்க்ருத ஞானமும் எனக்குக் கிடையாது. உழைப்பும் கிடையாது. இவை பற்றியெல்லாம் விளக்கி இருக்கிற ஒரு சில நூல்களிலிருந்து நான் திரட்டிய தகவல்களைத்தான், இந்தக் கட்டுரையில் பெரும்பாலும் பார்ப்பீர்கள்.
விஷயத்திற்கு வருவோம்.
‘… எங்கெங்கே பிராமணீயம் தாண்டவமாடு கிறதோ, அது யாருடைய இல்லத்திலே தாண்டவ மாடினாலும், பிராமணியத்தைத்தான் நாங்கள் வெறுக்கிறோமேயல்லாமல், தனிப்பட்ட பிராமணர் களை எதிர்க்கவில்லை. இதை நான் மாத்திரம் சொல்லவில்லை, அண்ணா மாத்திரம் சொல்ல வில்லை, தந்தை பெரியாரே சொல்லியிருக்கிறார் என்று பெரியாருடைய பொன்மொழிகள் – சுய மரியாதை பிரசார ஸ்தாபனம் வெளியிட்டது-விடுதலை அச்சகத்திலே அச்சு ஏற்றப்பட்ட புத்தகத்திலிருந்து படித்துக் காட்டி, பெரியாரே சொல்லியிருக்கிறார், நான் தனிப்பட்ட பிராமணனுக்கு விரோதி இல்லை. தனிப்பட்ட பிராமணர்கள் எனக்கு நண்பர்கள்தான்.
ஆனால் இந்த நாட்டிலே, சமுதாயத்திலே, விஷ வித்துக்களைப் பரப்புகின்ற பிராமணீயத்திற்கு நான் விரோதி. அந்த பிராமணீயத்தைத்தான் நான் எதிர்க்கிறேன். தனிப்பட்ட பிராமணர்களை அல்ல என்று பெரியார் பேசியதை, பெரியாருடைய பொன் மொழிகளை அச்சு ஏற்றப்பட்டு வந்திருப்பதை, அதிலும் விடுதலை அச்சகத்திலே அச்சிட்டு வந்திருப்பதை, நான் படித்துக் காட்டினேன். நான் எடுத்து எழுதினேன். அப்பொழுது என்னுடைய நண்பர் வீரமணி அவர்கள், நான் திரிபுவாதம் செய்கிறேன், பெரியார் அப்படிச் சொல்லவில்லை, பெரியார் தனிப்பட்ட பிராமணரை எதிர்த்தார், பிராமணியத்தை எதிர்த்தார் என்று அவருடைய பொன் மொழிகளையெல்லாம் கருணாநிதி திரித்துப் பேசுவது தவறு என்று வீரமணி சொன்னார். பிராமணர்களில் நல்லவர்கள் இருப்பார்கள். எனவே, பிராமணீயம்தான் கெட்டதே தவிர, தனிப்பட்ட பிராமணர்கள் கெட்டவர்கள் அல்ல, என்று நான் சொன்னதை எதிர்த்து அன்றைக்குச் சொன்னார்.” – திருவாரூரில் ஒரு திருமண விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி பேசிய பேச்சின் ஒரு பகுதியான இது – ஆகஸ்ட் 2-ஆம் தேதி (2000) முரசொலியில் வெளியாகியுள்ளது.
பிராமணீயம் – என்று முதல்வர் கருணாநிதியும் பெரியாரும் பொதுவாகக் கழகத்தவரும், எதை குறிப்பிட்டு வருகிறார்கள் எனறு எனக்குப் புரியவில்லை. ஏனென்றால் , பிராமணீயம் என்று ஒரு சித்தாந்தம் கிடையாது. . பிராமணர்களினால் ஏற்கப் படுகிற வேதங்கள், புராணங்கள் இதிகாசங்கள் – போன்றவற்றில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் தான் பிராமணீயம் என்றால் -இவற்றை பிராமணர்கள் மட்டுமல்லாமல் மற்ற வர்ணத்தவர்களும் ஏற்கிறார்களே பிராமணர், க்ஷத்ரியர், வைசியர், சூத்திரர்-என்ற நான்கு வர்ணங்களைச் சார்ந்தவர்களும் இவற்றை நம்புகிறார்கள் எனும்போது – இந்த நூல்கள் கூறும் கோட்பாடுகள்தான் பிராமணியம் என்று எப்படிச் சொல்வது? பிராமணியம், க்ஷத்ரீயம், வைசீயம், சூத்ரியம் என்று இதை நான்கீயமாக்குவதுதானே முறையாக இருக்கும்?
இவை எல்லாமே பிராமணர்களால் செய்யப் பட்டவை – அதனால் இது பிராமணியம் என்றும் சொல்லி விட முடியாது. வேதங்களை இயற்றியவர்களே கிடையாது. இதிஹாசங்களாகிய மஹாபாரதம், ராமாயணம் ஆகியவற்றை இயற்றியவர்கள் பிராமணர்கள் அல்ல. ஆனால் பிராமணர்களுக்கு மேலாக மதிக்கப்பட்டவர்கள்.
இந்த நிலையிலேயே ஒரு விஷயத்தை தெளிவாக்கி விடுவது நல்லது. இந்த நான்கு வர்ணங்கள் பிறப்பின் அடிப்படையில் ஏற்படுத்தப் பட்டவை அல்ல. குணம், வாழும் வகை ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்கள் இப்படி வகைப் படுத்தப்பட்டனர். இதுபற்றி ‘எங்கே பிராமணன்’ தொடரில் விளக்கமாக எழுதியிருக்கிறேன். இந்தக் கட்டுரையிலும் ஓரளவுக்கு இவ்விஷயத்தைப் பார்க்க நேரிடலாம்.
குணம், வாழும் வகை ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட இந்த நான்கு வகைகள், காலப்போக்கில் பல மாற்றங்களைச் சந்தித்து, பிறப்பின் அடிப்படையில் ஏற்படுகிற பிரிவுகளாக உருவெடுத்து விட்டன.
இப்போதோ இந்த நான்கு வகைகள் கூட இரண்டாக மாறி விட்ட தோற்றம் உண்டாகியிருக்கிறது. பிராமணர், பிராமணரல்லாதார் என்று பிரிட்டிஷார் செய்த பாகுபாடு இன்று கிட்டத்தட்ட நடைமுறைக்கு வந்து விட்டது. கழகத்தவரின் பிராமண எதிர்ப்புப் பிரசாரம் தீவிரமடைந்ததிலிருந்து, அவர்கள் தங்களுடைய பிரசார வசதிக்காக க்ஷத்ரியனையும், வைசியனையும் விழுங்கி விட்டார்கள். தங்களுடைய பிராமண எதிர்ப்பு வலுப் பெறுவதற்காக, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர வகைகளை ஒன்றாக்கி, அந்த மூன்று வகைகளையும் சூத்திரர்கள் என்ற வகையில் அடக்கியது அவர்கள்தான். இதை பிராமணர்கள் உட்பட யாரும் மறுக்காததால், இதுவே நிலைபெற்று விட்டது. அதுவுமின்றி காலப்போக்கில் பல ஜாதிகள் தோன்றி விட்டதால், நடைமுறையில் வர்ணக்குறிப்பைவிட ஜாதிக்குறிப்பு முக்கியத்துவம் பெற்று விட்டது.
வர்ணம் வேறு , ஜாதி வேறு. வர்ணம் பிறப்பினால் வருவதல்ல. ‘வ்ரி ‘ என்ற வேரிலிருந்து வர்ணம் என்ற சொல் வருகிறது. என்பதற்கு விரும்பித் தேர்ந்தெடுப்பது (to Choose) என்று அர்த்தம். வாழும் ஒரு வகையை ஒருவன்
விரும்பித் தேர்ந்தெடுப்பதால், அவன் அதற்குரிய வர்ணத்தைச் சார்ந்தவனாகிறான்.
ஜாதி என்ற சொல்லோ, ‘ஜன் ‘ என்ற வேரிலிருந்து வருகிறது. அதற்குப் பிறப்பு என்று பொருள் ஆக ஜாதி, பிறப்பை அடிப்படையாகக் கொண்டது; வர்ணமோ ஒருவன் விரும்பி ஏற்கும் வாழும் வகையை அடிப்படையாகக் கொண்டது. வேதத்தில் ஜாதி என்ற சொல் கிடையாது. அது பிறகு காலப்போக்கில் வந்துவிட்ட விஷயம். ஒரு ஜாதியிலிருந்து இன்னொரு ஜாதிக்கு மாற முடியாது. ஆனால் ஒரு வர்ணத்திலிருந்து இன்னொரு வர்ணத்திற்கு மாற முடியும். அது மட்டுமல்ல , குறிப்பிட்ட குணாதிசயங்கள் வாழும் வகைகள் போன்ற ‘லட்சணங்கள்’ யாரிடம் காணப்படுகிறதோ அவன் அந்த வர்ணத்தைச் சார்ந்தவனாகிறான் .
பகவத் புராணத்தில் ஒரு ஸ்லோகம் வருகிறது
– யஸ்ய யல்லக்ஷ்ணம் ப்ரோக்தம் –
பும்ஸோ வர்ணபிவ் யஞ்ஜகம்
யத் அன்யத்ராபி த்ருஷ்டேய –
தத் தேனைவ வி நிர்திசேத்
இதன் அர்த்தம். ஒரு வர்ணத்திற்குரிய லக்ஷ்ணங்கள் ஒருவனிடம்காணப்பட்டு இன்னொருவனிடம் காணப்படாமல் இருந்தால், எவனிடம்அவை காணப்படுகின்றனவோ அவனை அந்த வர்ணத்தைச் சார்ந்தவனாகஅறிக .
இம்மாதிரி விளக்கங்கள் பல நூல்களில் கொட்டிக் இடக்கின்றன. இந்த விளக்கங்கள் தேவைப்பட்டன என்பதிலிருந்தே ஒரு விஷயம் புரிகிறது. அப்போதே இது பற்றிய கேள்விகள் எழுந்து விட்டன. வாழும் வகை, குணம் ஆகியவைதான் ஒருவன் என்ன வர்ணம் என்று நிர்ணயிக்கும் என்ற நிலை மாறத் தொடங்கி, பிறப்பின் மூலமே ஒருவன் ஒரு வர்ணத்தைச் சார்ந்தவனாகிறான் என்ற நடைமுறை வந்து விட்டது அதனால் இதுபோன்ற விளக்கங்கள் அப்போதே தேவைப்பட்டிருக்கின்றன.