New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 36. உலகக் காப்பிய வரிசையில் மணிமேகலை முனைவர் க. சோமசுந்தரம்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
36. உலகக் காப்பிய வரிசையில் மணிமேகலை முனைவர் க. சோமசுந்தரம்
Permalink  
 


36. உலகக் காப்பிய வரிசையில் மணிமேகலை

 

முனைவர் க. சோமசுந்தரம்

 

உலக அளவில் பல்வேறு இலக்கிய வகைகள் தோன்றி வருகின்றன. இவற்றில் காப்பியவகைக்கு முக்கிய இடம் உண்டு. காப்பியம் என்ற நெடிய கதை வகை உலக மொழிகளில் ஒத்துக் காணப்படுகிறது. உலக மொழிகளில் எபிக் என்று குறிக்கப்பெறும் காப்பிய வகையானது அவை தோன்றிய நாட்டின் இலக்கிய அடையாளமாக விளங்குகின்றது.

 

உலகக் காப்பியங்கள்

 

இன்றைய நிலையில், உலகக் காப்பிய வரிசையில் இடம் பெறும் காப்பியங்கள் பின்வருமாறு;

இந்தியாவில் தோன்றிய இதிகாசங்களான மகாபாரதம், இராமாயணம் ஆகியனவும் உலகக் காப்பிய அரங்கில் தனித்த இடம் பெற்று விளங்குகின்றன. கிரேக்க நாட்டின் படைப்பான ஹோமரால் எழுதப் பெற்ற இலியாத்தும் ஒடிசியும் இவ்வரிசையில் கொள்ளத்தக்கன. இலியாத் கவிதையால் ஆக்கப் பெற்றது. டிரோசான் போரினை மையமாக வைத்து எழுதப்பட்ட காப்பியம் இதுவாகும். இலியாத்தின் கதை என்பதே இலியாத் ஆகும். டிராயின் வீழ்ச்சிக்குப் பிறகு நடந்தவற்றை விவரிப்பது ஒடிசி ஆகும். ஒடிசியின் பல்வேறு அனுபவங்களை முன்வைத்து இது எழுதப் பெற்றுள்ளது.

இத்தாலி நாட்டின் காப்பியமான ஒர்லாண்டோ பியுரியாசோ என்ற காப்பியம் அரிஸ்டோ என்பவரால் எழுதப்பட்டதாகும். இதுவும் உலகக் காப்பிய வரிசையில் கொள்ளத்தக்கது. கிறிஸ்துவர்களுக்கும் பகன் இனத்தவர்களுக்கும் இடையே நிகழ்ந்த போரினை மையமாக வைத்து எழுதப்பெற்ற காப்பியம் இதுவாகும். இதில் பலவகை பயண அனுபவங்கள் இடம்பெற்றுள்ளன.

இதே நாட்டைச் சார்ந்த தாந்தே அலிகேரி என்பவர் எழுதிய தி டிவைன் காமெடி என்பதும் உலகக் காப்பிய வரிசையில் கொள்ளத்தக்கது. இறந்ததற்குப் பின் செல்லக் கூடிய உலகம் பற்றியக் காப்பியம் இதுவாகும். கதைசொல்பவர் காட்டில் தொலைந்து போக அவரை விர்ஜில் என்பவர் இறப்பிற்குப் பின்னான உலகத்திற்கு அழைத்துப் போவது என்ற நிலையில் இக்காப்பியம் படைக்கப் பெற்றுள்ளது.



இவ்வரிசையில் பழைய ஆங்கிலத்தில் பெயர் அறியப்படாத கவிஞர் ஒருவர் பிவொல்ப் என்ற காப்பியமும் அடங்குகிறது. இது மூவாயிரம் வரிகளைக் கொண்டது. பிவொல்ப் சிறந்த போராற்றல் மிக்கவர்.

இதனைத்தொடர்ந்து அமைவது மில்ட்டன் எழுதிய ‘பாரடைஸ் லாஸ்ட்’ என்பதாகும். இழந்த சொர்க்கம் என இது தமிழில் பலரால் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது. சாத்தானுக்கும் கடவுள் வழிக்கும் இடையே ஏற்படும் போராட்டமாக இதன் கதை அமைகின்றது. பலர் சாத்தான்தான் இக்கதையின் காப்பியத் தலைவன் என்றே கருதுகின்றனர். பைபிளின் தொன்மத்தைத் தன் கவிவளத்தால் மெருகேற்றியுள்ளாஎ மில்ட்டன்.

அடுத்து உலகக்காப்பிய வரிசையில் அமைவது சானேம் என்பதாகும். இதனை எழுதியவஎ பெர்தோசி ஆவார். ஐம்பது பர்சிய அரசர்களின் தொன்மங்களை எழுத்தோவியமாக இக்காப்பியம் ஆக்கியுள்ளது, மன்னர்களின் புத்தகம் என்றே இது அழைக்கப்படுகிறது. உலகக் காப்பிய வரிசையில் அடுத்து அமைவது வெர்ஜில் எழுதிய அனிய்டு என்பதாகும். ரோமநாட்டின் காப்பியமாக இது கொள்ளப் பெறுகின்றது. இதில் நிறைய நாடகக் கூறுகள் அமைந்திருப்பதாகக் கருதப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளுக்குக் கடற்பயணம் செய்வது பற்றிய குறிப்புகளும் இதனுள் காணப்படுகின்றன. 

இவ்வாறு பத்து காப்பியங்கள் உலக முதன்மைக் காப்பிய வரிசையில் அமைகின்றன. இவை அனைத்தும் கடவுளை அல்லது மன்னர்களைப் பாடுவன. ஆனால் மணிமேகலை இவற்றில் இருந்து வேறுபட்டுக் காப்பியத் தலைமையை ஒரு பெண்ணிடம் தந்து, அப்பெண்ணும் ஆண் தலைமை வேண்டாநிலையில் படைக்கப் பெற்றிருப்பது குறிக்கத்தக்கது. இன்றைய காலத்தில் பெண்ணியச் சிந்தனையாளர்கள் கருதும் பெண்ணை முன்னிலைப்படுத்தும் இலக்கியப் பாங்குத் தமிழில் இருந்துள்ளது என்ற நிலையில் உலகக்காப்பிய வரிசையில் அணி செய்யத்தக்கதாக மணிமேகலை அமைகின்றது. இன்றைய பெண்ணியவாதிகளிடம் தமிழின் மூத்த காப்பியம் ஒன்று பெண்ணை முன்னிலைப்படுத்தியுள்ளது என்பதை அறிவிக்க வேண்டிய அவசியம் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.

உலகக்காப்பியங்கள் என்ற நூலினை எழுதிய காசிராசன் அவர்களின் கருத்துகளையும் இக்கட்டுரையில் இணைப்பது பயிலரங்க மாணவர்களுக்கு வலுசேர்க்கும் என்ற நிலையில் இக்கட்டுரையில் அந்நூல் தந்த பல குறிப்புகள் வழங்கப் பெறுகின்றன.

 

சிறப்பு பெற்ற உலகக் காப்பியங்கள்

 

கதையை வேராகக் கொண்ட காப்பிய வகையை உலக மொழிகளில் உருவாக்கிய கிளை பரப்பியதை டாக்டர் இரா. காசிராசனின் உலகக் காப்பியங்கள் நூல் மூலம் தெளிவாக உணர முடிகிறது.

1. கிரேக்கக் காப்பியங்கள்

ஹோமரின் இலியட்ஒடிசி எனும் காப்பியங்கள் இம்மொழிசார்ந்தன. டிராய் நகர யுத்தம் தொடர்பான காப்பியங்கள் தோன்றிய சைபீரியா எத்தியோப்பியா இலியன் பொசீஸ் நோஸ்டாய், டெலிகோனியா ஆகியன புகழ்மிக்கன.

2. கிப்ரு மொழிக் காப்பியங்கள்

மனித ஆத்மாவின் போராட்டங்களை எடுத்துரைக்கும் யோபு தொன்மம் நிறைந்த காப்பியம்.

3. லத்தீன் மொழிக் காப்பியங்கள்

ரோமன் நாட்டு மொழியான லத்தீனில் வெர்ஜிலின் ஏனியட் தோன்றியது. சிலியஸ் இத்தாலிகஸின் பியூனிகர் எனும் காப்பியம் அக்கால சில் காப்பியம், ஏனியட் காப்பியம் ஆகியன லத்தீன் மொழியில் அமைந்த காப்பியங்கள்.

4. ஆங்கிலக் காப்பியங்கள்

மில்டனின் பாரடைஸ் லாஸ்ட், கீட்சின் காப்பியமான எண்டிமியன் மனக்கிளர்ச்சியை ஊட்டும் வகையில் எழுதப்பெற்ற பீவுல்ப், காப்பியம், காவர்டு பைல் எழுதிய ராபின்குட் உரைநடைக் காப்பியம் ஆகியன குறிப்பிடத்தக்க ஆங்கிலக் காப்பியங்கள்.

5. அரேபியக் காப்பியங்கள்

அபுல் காசின் மான்சர் இயற்றிய ஷா நமி எனும் பாரசிகக் காப்பியம், 1001 இரவுகள் கதை ஆகியன குறிப்பிடத்தக்கன.



6. ஜெர்மன் காப்பியங்கள்

ஜெர்மன் மொழியில் அமைந்த நிபிலங்கன்லைட் காப்பியம் புகழ்மிக்கது.

7. பிரஞ்சு மொழிக் காப்பியங்கள்

ரோலன்டின் பாடல் எனும் பிரஞ்சுமொழிக் காப்பியம் வீரயுக யாப்பமைப்பு கொண்டது.

8. இத்தாலி மொழிக் காப்பியம்

இத்தாலி மொழியிலமைந்த அரியஸ்டோவின் ஆர்லண்டோ பியூரியசோ, சிலுவைப் போர் பற்றி விளக்குகிறது. மரினசின் அடோன் கீயூராவின் ரிச்சியலார்டிட்டேவும் குறிப்பிடத்தக்கன.

உலகக் காப்பியங்களில் ஒரு சில மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டது. விரித்துரைத்தால் பட்டியல் நீளும்.

 

உலகக் காப்பியங்களுக்கு நிகரான தமிழ்க் காப்பியங்கள்

 

1. வரபலம் பெற்றவர்கள் தமிழ்க் காப்பியத்தலைவன் தலைவியாகக் காப்பியத்தில் மணிமேகலா தெய்வத்தின் வரத்தைப் பெற்று நினைத்தவுடன் தன் வடிவம் மாற்றக் கூடிய சக்தி பெற்றவளாகச் சாத்தனார் மணிமேகலையைப் படைத்துள்ளார். கில்கெமிஷ் காப்பியத்தில் கதைத் தலைவன் கில்கெமிஷ் அனுபெல், இயா ஆகிய கடவுளரிடமிருந்து வரம் பெற்றவனாக அமைகிறான். மகாபாரதத்தில் வரம் பெற்றவனாக அமைகிறான். சூரியனின் மகனாகக் காட்டுகிறார் அதே போல் கி.மு.3000 ஆண்டுகளுக்கு முன்தோன்றிய கில் கெமிஷ் காப்பியத்தலைவனும் சூரியபகவான் ஷாமாவின் மகனாகப் படைக்கப்பட்டார்.

2. ஆங்கிலக் காப்பியமான ஆர்தர் சீவகசிந்தாமணி காப்பியக் கதையோடு ஒத்துப் போகிறது. தன் திறனைக் காட்டிச் சீவகன் எட்டுப் பெண்களை மணந்ததாக அக்கதை கூறுகிறது. சிறந்த முறையில் போர் வீரனாய்த் திகழ்ந்த ஆர்தர் காயம் படுகிறான் அவனது வீரத்தைக் கனீவர் என்பாள் விரும்புகிறாள் காதலாக மாறுகிறது. அவள் தந்தையிடம் ஆர்தர் தோட்டக்காரனாகப் பணிக்குச் சேருகிறான். பக்கத்து மன்னன் கனீவரை விரும்பி மணக்க நினைக்க ஆர்தர் வெள்ளைக் குதிரையேறி அவனைத் தோற்கடித்தான் என்று கதை நடைபெறுகிறது.

3. நாககுமாரகாவியம் போன்றே பாரசிக மொழியில் பாம்பு சுற்றிய பாம்பரசன் சோகாக் அரசன் கதை கூறும் ஷா நமி கதையைக் கதையைக் கூற முடியும்.



4. எபிரேய எழுத்தாளர்கள் விவிலியக் கதைகளைக் காப்பியமாக்கியது போன்று தமிழில் வீரமாமுனிவர் இயேசு நாதரின் வளர்ப்புத் தந்தை ஜோசப்பின் கதையைத் தேம்பாவணியாக்கினார் ஹெச். ஏ. கிருஷ்ணபிள்ளை. இரட்சண்ய யாத்திரிகம் படைத்தார்.

5. அரேபியாவில் நடந்த இப்ராஹிம் (நபி) அவர்களின் வரலாற்றை ஆபிரகாம் வரலாறாக விவிலியத்தில் காணமுடிகிறது. தன் அன்பு மகன் சீராளனை அரிந்த பிள்ளைக் கறி தந்த கதையாகச் சிறுத்தொண்டரின் வாழ்வியல் கதையைப் பெரியபுராணம் அமைகிறது.

 

உலகக் காப்பியங்களுடன் தமிழ்க் காப்பியங்கள் ஒற்றுமை

 

 

1. ஏதாவது ஒரு சமயக் கருத்தை வலியுறுத்தும் விதமாகக் கதை அமைக்கப்பட்டுள்ளது.

2. ஒரு சிக்கல் ஏற்படும் அச்சிக்கலால் பலர் பாதிக்கப்படுவர். அச்சிக்கலை மித மிஞ்சிய வலிமை பெற்ற தன்னிகரற்ற தலைவன் தீர்த்து வைப்பான்.

3. அநீதி தோற்று நீதி வெல்லும்.

4. ஆற்றல் சார் தேவதைகளும் வான தூதுவர்களும் கதையில் வருவர்.

5. நிறைய கிளைக்கதைகள் காப்பியத்திற்கு அணி சேர்க்கும்.

6. நிறைய தொன்மங்கள் விடையளிக்க இயலா வினாக்கள் இடம் பெறும்.

7. இயற்கை சார்ந்த வருணனைகள் மிகுந்து காணப்படும்.

8. பாத்திரப் படைப்புக்கள் நாடு பல தாண்டியும் ஒத்த தன்மையோடிருக்கும்.

9. மொழிதான் வேறு, கருத்தும் கதையும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும்.

இவ்வகையில் உலகக் காப்பிய வரிசையில் தமிழ்க் காப்பியங்கள் நிலை நிறுத்தத்தக்கன என்பதை அறியும் போது, அவை ஏன் அவ்விடங்களுக்குச் செல்லவில்லை என்பது குறித்து ஆராய வேண்டியுள்ளது.

தமிழ்க்காப்பியங்களுக்கு உரிய நல்ல மொழிபெயர்ப்புகள் அமையவில்லை என்பதுவே அதற்கு மிக முக்கியமான காரணம் ஆகும். எனவே இதனை உணரந்து, தமிழ்க்காப்பியங்களை உரிய நிலையில் மொழிபெயர்த்து அளிப்பது காலத்தின் கட்டாயம் ஆகின்றது.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard