New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 25. பௌத்தம் முனைவர் சு. மாதவன்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
25. பௌத்தம் முனைவர் சு. மாதவன்
Permalink  
 


25. பௌத்தம்

 

முனைவர் சு. மாதவன்

 

மணிமேகலையில் பௌத்தம் என்று தனியே சிந்திக்க வேண்டியதில்லை. ஏனெனில், மணிமேகலையே முழுநிறை பௌத்தக் காப்பியம் ஆகும். இன்னும் சொன்னால் ஒரே நேரத்தில் அது பௌத்தக் கலைக் களஞ்சியமாகவும் பல்சமயக் களஞ்சியமாகவும் திகழ்கிறது.

 

புத்த வழிபாடு

 

மஹாயான பௌத்தமும் ஈனயான பௌத்தமும் கலந்து வழிபாட்டு நெறிகள் மணிமேகலையில் காணக் கிடைக்கின்றன:

1. அந்தரத்தில் பறத்தல், உருமாறுதல், தாந்திரீகத்தன்மை
கொண்ட உருவ வழிபாட்டு புத்தர்”

2. புத்த பாத பீடிகை வணக்கம் - ஹீனயான பௌத்தம் (செல்லன் கோவிந்தன்., 2001: 150)

புத்தனை வழிபடத் தொடங்கிய மகாயான பௌத்தத்தில் வைணவ நெறிகளை சரணாகதிக் கொள்கை (மணி. 30: 3-5) இடம் பெற்றுள்ளது.

“புத்த தன்ம சங்க மென்னும்
முத்திற மணியை மும்மையின் வணங்கி
சரணா கதியாய்ச் சரண்சென் றடைந்தபின்” (மணி: 30: 3-5)

சரணாகதியாகி விட்டால், உள்ளம் நெக்குருகப் பாடி வேண்ட வேண்டுமே? அதுவும் வந்துவிடுகிறது. பௌத்தத்துக்குள், போற்றிப் பாடல்கள் எனப்படும் பாசுரவடிவில் சாத்தனார் ஆங்காங்கே பாடியுள்ளார்:

“எங்கோ னியல் குணனேதமில் குணப்பொருள்
... ... ... ... ... ... ... ... ... பாசுரம்-1 (5: 71-79)

“புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன்
... ... ... ... ... ... ... ... ... பாசுரம் -2 (5:98-105)

“இளவள ஞாயிறு தோன்றியதென்ன” பாசுரம் -3 (10: 11-15)

“மாரனை வெல்லும் வீர நின்னடி” பாசுரம் -4 (11: 61-70) (கந்தசாமி.,சோ.ந.1977: 10-11)

 



புத்தரின் பெயர்கள்

 

மகாயான பௌத்த மரபில் புத்தருக்குப் பல பெயர்கள் தோன்றின. ஒவ்வொரு பெயருக்குள்ளும் வைதீகச் சார்பெதிர்ப்புக் கூறுகள் இருப்பதாய்க் காணமுடிகிறது.

உலகத் தோற்றத்திற்கு முன் ஒளிர்ந்த பரம்பொருள்தான் ஆதிநாதர் என்றும் ஆதிபுத்தர் என்றும் தொழப்படும் இறைவன் ஆகும். இவர் அவ்வப்பொழுது மக்களை நெறிப்படுத்த அவதாரம் எடுப்பார். இங்ஙனம் காரண்ட வியூகம் என்னும் மகாயான நூல் மொழிகிறது.

மணிமேகலையில் ஆதிமுதல்வன்(6:11, 10:61, 12:37, 107, 29:23), ஆதிசால் முனிவன் (7:19), ஆதிசினேந்திரன் (29:47) முதலிய திருப்பெயர்கள் உலகிற்கு ஆதியாய் உள்ள முதல்வனாகப் புத்தர் பிரானைச் சுட்டும் தொடர்களாக வழங்குகின்றன. ஆதிபகவன் என்ற குறள் தொடரும் இவற்றுடன் இணைத்து நோக்கத்தக்கது. பகவன் என்ற சொல் மணிமேகலையிலும் புத்தரைக் குறிக்கும், (3:61, 26:54), முதல்வன் (25:58, 28:120), மன்னுயிர் முதல்வன் (25:117, 29:15), முன்னவன் (28:141), தொல்லோன் (11:64), தலைவன் (11:43, 15:26, 12:55), நாதன் (11:173-4, 12:101-2, 26:47, 28:77, 89, 144, 29:24), புராணன் (5:98), எங்கோன் (11:126, 5:71), அண்ணல் (26:53) எனவரும் திருப்பெயர்களும் புத்தபிரானின் முதன்மை தன்மையினை (பரத்துவம்) மொழிவனவாக உள்ளன. (கந்தசாமி.,சோ.ந. 1977: 11-12)

 

புத்தர் பலர் என்னும் வழக்காறு

 

பாடலிபுத்திரத்தில் கி.மு.243ல் நடைபெற்ற மூன்றாவது பௌத்தக் கூட்டத்தில் கௌதமருக்கு முன்னால் வாழ்ந்த புத்தர்கள் 24 பேர் என்று நிச்சயித்தனர். (செல்லன் கோவிந்தன்., 2001: 155) இதை,

“இறந்த காலத்து எண்ணில் புத்தர்களும்” (மணி. 30: 14)

என்று மணிமேகலை வழங்குகிறது.

 

புத்தரின் அவதாரம் குறித்த வழக்காறுகள்

 

புத்தரின் அவதாரம் குறித்த வழக்காறுகள் ஹீனயானத்தில் இல்லை. மகாயானம் அது குறித்து நிறையப் பேசியுள்ளது. கடவுள் அவதார மறுப்புக் கொள்கை கொண்ட புத்தரையே பரம்பொருளாக வழிபட்டதன் விளைவு இது. புத்தசரிதம், இலலித விஸ்தரம், இலங்காவதார சூத்திரம், மகாவத்து முதலிய மகாயான நூல்களில் புத்தரின் அவதாரம் புனைந்துரைக்கப்பட்டது. சுத்தபிடகத்தின் முதல் நான்கு நிகாயங்களில் கௌதம புத்தருக்கு முன் ஆறு புத்தர்கள் இருந்தனர் என்ற செய்தி இடம்பெற்றுள்ளது. புத்தவமிசம் என்ற நூலில் 24 புத்தர்களைப் பற்றி குறிப்பு உண்டு.

 



மகாயான நூல்கள்

 

1. மஹாவஸ்து, கி.பி.100-200-முந்நூறு மில்லியன் (புத்தர்களின் எண்ணிக்கை)

2. புத்தசரிதம், கி.பி. .200 -கங்கைகரையின் மணலை ஒத்தவர்

3. இலங்காவதார சூத்திரம், கி.பி. 300 -கங்கைக் கரையின் மணலை ஒத்தவர்

4. லலிதவிஸ்தரம், கி.பி. 300-பத்து மில்லியன்

5. சத்தரும புண்டரிகம், கி.பி.300-400 பத்து மில்லியன்

6. சுகாவதி வியூகம், கி.பி. 300 எண்ணிறந்தவர்

7. கருணா புண்டரிகம், கி.பி. 300-எண்பத்தொன்று மில்லியன் நியூதங்கள்

8. பிரஞ்ஞா பாரமித சதகம் கி.பி. 300 எண்ணிறந்தவர் (கந்தசாமி.,சோ.ந. 1977: 2)

இந்நூல்களின் பயிற்சி சாத்தனார்க்கு இருந்திருத்தல் வேண்டும். இம்மகாயான நூல்களை அடியொற்றியே, “இறந்த காலத்து எண்ணில் புத்தர்களும் (30:14) என்று மணிமேகலையில் குறித்துள்ளார் சாத்தனார்.

இனிப் பிறக்கப் போகும் புத்தருக்கு ‘மைத்ரேயர்’ என்று பெயர் என்கின்றனர். இவ்வாறு, புத்தரின் அவதாரம் இரு வகைகளில் பேசப்படுகிறது:

1. புத்தர் இவ்வாறெல்லாம் பிறந்தார்

2. இவர்தான் புத்தராகப் பிறந்தார்

இதுவரை கண்டவை முதல்வகை. இரண்டாம் வகையில், இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான சமயங்களில் கடவுளர்களின் முந்தைய - பிந்தைய அவதாரம் தான் புத்தர் என்னும் வழக்காறு நிலவுகிறது. சிவன், திருமால், பிரம்மா போன்ற கடவுள்கள் தான் புத்தராக அவதரித்தார்கள் என்று ஒவ்வொரு சமயங்களும் சொல்கின்றன. அந்த அளவுக்கு கருத்தியல், மெய்யியல், வாழ்வியல் ஏற்புக்குரியவராகப் புத்தர் திகழ்கிறார் என்பது பெறப்படுகிறது.

 

புத்தர் வருகை நிமித்தங்கள்

 

வைதீக இருள் படர்ந்துகிடந்த இந்திய நாட்டில் ஞாயிறன்ன புத்தன் ஒளிபரப்பினான் என்பதை,

“இருள் பரந்து கிடந்த மலர்கலி யுலகத்து
விரிகதிரிச் செல்வன் தோன்றின னென்ன
வீரெண்ணூற்றோ டீரொட்டாண்டினில்
பேரறிவாளன் தோன்றி மகதநன் னாட்டும்
கொருபெருந் திலகமென்
சாக்கைய ராளுந் தலைத்தர் வேந்தன்
ஆக்கையுள் றுதித்தன னாங்கவன் றானென?

என்று மணிமேகலை பாடுகிறது.



உலகில் புனிதர்கள் தோன்றும் போதெல்லாம் சில நிமித்தங்கள் நிகழ்ந்தனவாகக் கூறுதல் மரபு. இயேசு, முகம்மது நபி போன்றோர் தோன்றியபோது, சில அதிசய நிகழ்வு நிமித்தங்கள் நடைபெற்றன என்பர். அவ்வாறே, புத்தர் தோன்றியபோதும் நிகழ்ந்தன என்று மணிமேகலை குறிப்பிடுகிறது:

“புத்த ஞாயிறு தோன்றுங் காலைத்
திங்களும் ஞாயிறுந் தீங்குறா விளங்கத்
தங்கா நாள்மீன் தகைமையின் கடக்கும்
வானம் பொய்யாது மாநிலம் வளப்படும்
ஊனுடை உயிர்கள் துயரைக் காணா
வளிநிலம் கொட்கும் மாதிரம் வளம்படும்
... ... ... ... ... ... ... ... ... (மணி 12: 86-103)

இவ்வாறே, கடல் நலம் பல தரும்; பால்மிக ஊறும்; பறவை உணவுக்காக வேற்றிடம் நீங்கா; பகைமை நீங்கும்…….. என்றவாறு இயற்கையில் நிகழச் சாத்தியமானவற்றைக் கூறியிருப்பதே பௌத்த வழக்காற்றின் சிறப்பு எனலாம்.

 

 

பௌத்தக் கடைப்பிடி நெறிகள்

 

சமயங்கள் பெரும்பாலும் தத்தம் கடைப்பிடி நெறிகளை இரண்டாக வகுத்துக் கொண்டன: 1. துறவியற் அறநெறிகள், 2. இல்லறத்தார் அறநெறிகள். பௌத்தக் கடைப்பிடி நெறிகளில் பெரும்பான்மையானவை இருவருக்கும் பொதுவானவை. காமவிழைவு நீக்கம் தவிர்த்த பிறவெல்லாம் பொது அறநெறிகளாகவே விளங்குதல் பௌத்தத்துக்கே உரிய பெருஞ்சிறப்பாகும் (இல்லற நெறியிலும் பிறன்மனை நயவாமை என்பது உண்டு). பௌத்தக் கடைப்பிடி நெறிகளைப் பின்பற்றுவதற்கான மெய்யியல் பின்புலத்தைத் தருவன நால்வகை வாய்மைகள். நால்வகை வாய்மைகளின்படி துன்பநீக்க வழிகள் என்னும் நான்காவது வாய்மையின் நெறிமுறைகள் தாம் பௌத்தக் கடைப்பிடி நெறிகள் ஆகும். அவை முறையே பஞ்சசீலம், எண்வகை சீலம், பத்துச் சீலம் பத்துபாரமிதைகள் போல்வன. இவையனைத்தும் வாழ்வியலைச் செம்மையாக்குவன.

எவ்வுயிரும் தன்னுயிர்போல் நோக்கில்; (கொல்லாமை), (மணி. 13: 27-34, 16:84-85, 16: 116-117) , தனக்குரிமையில்லா பிறர்க்குரிமைப் பொருளைத் திருடாமை (கள்ளாமை) (மணி, 23: 124-77) , பிறன்மனை நோக்காப் பேராண்மை (காமமின்மை) (மணி. 5: 86-91, 16:76-79) எல்லாத் தீங்குகளுக்கும் காரணியான பொய் சொல்லாமை (பொய்யாமை) (மணி. 22: 61, 21: 20-3) , மயக்கமும் மடிமையும் தரும் கள்வகை தவிர்த்தல் (கள்ளுண்ணாமை), என்றவாறு தொடரும் பல்வகைக் கடைப்பிடி நெறிகளும் பௌத்த வாழ்வியலுக்கான வழக்காறுகளாகும்.

பௌத்த சீலங்களைப் பின்பற்றுவதற்கு வாழ்வியல் நல்வினை, தீவினை அறிந்து தீவினை ஒழித்து நல்வினையாற்றல் வேண்டும். தீவினைகளின் எதிர்நிலை நல்வினை: நல்வினைகளின் எதிர்நிலை தீவினை என்றும புரிதலின் அடிப்படையில் கடைப்பிடிநெறிகள் அமையும்.

தீவினைகள் 10 நிலைகளில் 3 வகைகளில் மனிதனைப் பற்றுகின்றன:

உடலால் - 3 - கொலை, களவு, காமம்

வாயால் - 4 - பொய், குறளை, கடுஞ்சொல், பயனில்வொல்

மனதால் - 3 - வேட்கை, வெகுளி, பொல்லாக்காட்சி (மணி: 66-77)

தீவினை 10-ம் நீங்கி அதன் மறுதலை எதிர்நிலையைப் பின்பற்றினால் அதுவே நேர்நிலை நெறியாகும். நல்வினை 10 குறித்து ஆகம சூத்திரம் பேசுவதை மணிமேகலை அப்படியே பேசுகிறது. (மணி :11: 76-81)

பௌத்தக் கடைப்பிடி நெறிகள் அனைத்தையும் முழுமையாக - முறையாகப் பதிவுசெய்துள்ள ஒரே தமிழ் இலக்கியம் மணிமேகலையாகும். இந்தவகையில், மணிமேகலை ஒரு பௌத்தக் களஞ்சியமாகத் திகழ்கிறது.

 

 

பௌத்தத் தெய்வங்கள்

 

பௌத்த வாழ்வியலின் முன்மாதிரிகளாகப் பௌத்த தெய்வங்கள் விளங்குகின்றன. ஹீனயான பௌத்தத்தில் இல்லாத இந்த தெய்வ உருவாக்கங்கள் மகாயான பௌத்தத்தால் உருவாக்கப்பட்டவை. மணிமேகலைக் காப்பியத்தில் மணிமேகலா தெய்வம் உட்பட பல தெய்வங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் பெண் தெய்வங்களும் உள்ளன; ஆண் தெய்வங்களும் உள்ளன.

பெண் தெய்வங்கள்

மணிமேகலா தெய்வம், தீவதிலகை, சாம்பாபதி, மணிமேகலை, சிந்தாதேவி, கந்திற்பாவை, கண்ணகி ஆகியோர்.

ஆண் தெய்வங்கள்

புத்தன், இந்திரன், சாத்தன், தருமராசன், அறவணஅடிகள், புண்ணியராசன், சங்க தருமன், கோவலன், மாரன் ஆகியோர்.

பெண் தெய்வங்களில் மணிமேகலா தெய்வம் கடற்தெய்வமாக வழங்கப்படுகிறது. அதிலும் கடல்திசை காட்டும் தெய்வமாக இயங்குகிறது. மணிமேலைக் காப்பியத்தினதும் பௌத்த சமயத்தினதுமான முதன்மை நோக்கம் பசி ஒழிப்பே. இந்தப் பசி ஒழிப்புக்கு உரிய அமுதசுரபியை மணிமேகலைக்குச் சொன்னது இந்த மணிமேகலா தெய்வமே. கடலில் தத்தளிப்போருக்குத் திசைகாட்டுவதுபோலப் பசியில் துன்புறுவோர்க்கு உணவு தந்து பசியமர்த்தும் கலங்கரை விளக்கமாக மணிமேகலை தானே விளங்குகிறாள். பௌத்தச் ஜாதகக் கதைகளின் இரண்டினில் மணிமேகலா தெய்வத்தின் கதை இடம் பெற்றுள்ளது. அவைமுறையே, சங்கா ஜாதகா, மகாஜனக ஜாதகா ஆகியவை. சங்கா ஜாதாகவில் வரும் மணிமேகலா எனும் கடல் தெய்வம் குறித்த கதை வருமாறு:

“மோலினீ என்னும் வாரணாசியில் ஒரு பிராமணன். அவன் பெயர் சங்கா. அவன் தானம் செய்வதற்காகச் சுவன்ன பூமிக்குப் போனான் (சுவன்னாபூமி - தங்கநாடு - பர்மாவாக இருக்கலாம்) கப்பல் கவிழ்ந்தது. ஏழுநாள் கடலில் தத்தளித்தான். அப்போது மணிமேகலா தெய்வத்திடம் நான்கு கடவுளரும் சொன்னார்கள்:

“கப்பலில் போகிறவர்கள் நல்லொழுக்கம் செய்தவர்களாகவோ தந்தை தாயை வணங்கியவர்களாகவோ இருந்தால் நீ அவர்களைக் காப்பாற்று”

மணிமேகலா தெய்வம் சங்கா முன்பு தோன்றியது. புனித உணவு தந்தது. அத்தோடு, கப்பலில் ஒரு நல்ல பொருள்களை நிரப்பியது. மோலினீ வந்து சேர உதவியது”

மகா ஜனகா ஜாதகாவில் வரும் மணிமேகலா எனக் கடல் தெய்வம் குறித்த கதை வருமாறு:

‘மகா ஜனகா இளவரசன் வடஇந்திய மிதிலையை ஆண்ட மகா ஜனகாவின் மூத்த மகன், பொருள்திரட்ட சுவன்ன பூமிக்குக் கப்பலில் போனான். 7ஆம் நாள் கப்பல் கவிழ்ந்தது; மூழ்கியது. 7 நாள் கடலில் மிதந்தான். அந்நேரம் கடவுள்களின் தங்கை மணிமேகலா தெய்வத்தைக் கடற்காவலாளியாக நியமித்தனர், உவகைக் காக்கும் நான்கு கடவுளரும், அவளிடம் சொன்னார்கள்:

“எவரொருவர் நல்லொழுக்க நிலையொடு அவர்தம் தாயையும் அவரையொத்தவரையும் பாதுக்காக்கிறாரோ அவர்கள் கடலில் மூழ்கத் தக்கவரல்லர்; அவர்கள் காப்பாற்றப்பட வேண்டியவர்கள்”.

ஏழு நாளும் மணிமேகலா தெய்வத்தால் கடலுக்குள் இளவரசர் மகாஜனகாவைக் காண இயலவில்லை. பிறகொருநாள், நடுக்கடலில் அவனைக் கண்டு கரையேற்றினாள்; மிதிலைக்கு அனுப்பி வைத்தாள் - பத்திரமாக”

இவ்விரு கதைகளும் மணிமேகலா தெய்வம் ஒரு கடல்காவல் தெய்வமாக இருந்ததான வழக்காறு ஒன்றை அறியத்தருவதோடு, வாணிகனாகச் சென்ற சங்கா, மகா ஜனகா இருவரும் சாதுவனை அடையாளப்படுத்துகின்றன என்பதையும் உணரத் தருகிறது.

“பரப்புநீர் பௌவம் பலர்தொழக் காப்போள்” (மணி. 25: 20) (மணி, 25: 184-191, 16: 14-16, 29:23-28, 5:96-105, 10:3-16, 10:79-91, 28:212-16, 29: 29-31)


பௌத்தச் சிறுதெய்வ வழிபாட்டில் இடம்பெற்றுள்ள தாராதேவிதான் மணிமேகலா தெய்வமாக இங்கு வணங்கப்படுகிறாள் என்ற கருத்தும் உள்ளது. அதற்குப் பொருத்தமாக, தாராதேவி, என்பதில் உள்ள ‘தாரா’ என்னும் சொல்லுக்குக் ‘கடலைக் கடத்தல்’ என்ற பொருள் வழங்கப்படுகிறது என்பதும் இங்கு அறியத்தக்க செய்தியாகும். இந்தச் செய்திகளையெல்லாம் அடிப்படையாகக் கொண்டுதான், மணிமேகலை நூலிலும் சிலப்பதிகாரத்திலும், மணிமேகலா கடல்தெய்வம் கடலில் திசைகேட்டுச் செல்கின்றவர்களுக்குத் திசை அறிவிப்பவளாக விளங்கினாள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பது தெளிவு.

தீவதிலகை என்பது தீவுகளைக் காக்கும் தெய்வமாகப் பௌத்த வழக்காற்றில் உள்ளது.(மணி. 11: 27-29, 28: 212-215) மணிபல்லவத் தீவில் மணிமேகலைக்கு ‘அமுதசுரபி’ பற்றிச் சொல்லிப் பெறச் செய்தவள் தீவதிலகை. எனவே, மணிமேகலையின் பசிஒழிப்புக் கோட்பாட்டுக்கான எடுகோளைத் தந்த தெய்வமாகத் தீவதிலகை விளங்குகிறாள்.

சம்பாபதி, அறவோர்களைக் காக்கும் தெய்வம. சம்பாதி என்பது காவிரிப்பூம்பட்டினத்தின் பழைய பெயர். இத்தெய்வம, தொன்மூதாட்டி, பொன்னிற் பொலிந்த நிறத்தான், முந்தைய முதல்வி, முதியான், முதுமூதாட்டி என்ற பல பெயர்களில் மணிமேகலையில் சுட்டப்பட்டுள்ளது. (மணி. 2: 1-3, பதிகம். 8)

சிந்தாதேவி என்பது வைதீகத் தெய்வமாகிய கலைமகளைப் பௌத்தம் தன்வயப்படுத்திக் கொண்ட தெய்வமாகும். ஆபுத்திரனுக்கு அமுதசுரபியை வழங்கியது இத்தெய்வம்(மணி. 14: 9-16, 14: 17-21, 15: 146-153)

ஆண்தெய்வங்களில் ‘இந்திரன்’ பல்சமயச் சார்புடைய தெய்வமாகும். இந்திரலோகம் எல்லா இன்பங்களும் கிடைக்கும் உலகம்; துன்பம் என்பதே சிறிதும் இல்லாத குதூகல உலகம். அந்த உலகத்தின் தலைவன் இந்திரன். எனவே, இன்பங்களின் தலைவன் இந்திரன். மண்ணுலகம் இப்படி மாறினால் தேவலாம் என்று கற்பனை செய்தோரின் கற்பித உலகம் இந்திரர் உலகம். இன்பங்கள் வேண்டா இதயம் உண்டோ? பௌத்தமும் இந்திரனை எடுத்துக் கொண்டது. மணிமேகலையில் இந்திரன், “தேவர் நன்னாட்டுக்கு இறைவன் ஆகிய பெருவிரல் வேந்தே” (14: 43-3), வானவர் தலைவன் (29:13) , அமரர் தலைவன் (1:9) என்றவாறு பலவாறு விளக்கப்படுகிறான்.

இத்தகைய இந்திரனின் தலைமையில் பல சிறு தெய்வங்கள் ஏவல் புரிந்தனர். அவர்களுள் சம்பாபதி, தீவதிலகை, மணிமேகலா தெய்வம் ஆகிய பெண் தெய்வங்கள் சிறப்பிடம் பெற்றனர்.

புகார் நகரில் முதன்முதலில் இந்திர விழாவைக் கொண்டாடிய வேந்தன் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் ஆவான். இந்திரவிழா 28 நாள்கள் நடத்தப்பட்டது. (1: 5-9)

புத்தரின் கருணைச் செயலைச் சேகரிக்க வேண்டி அவரது இருவிழிகளையும் தருமாறு இந்திரன் வேண்டினான். வேண்டியவாறே கண்களை வழங்கினார் புத்தர். புத்தரின் கருணைச் செயலைக் கண்டு மனம் உருகி புத்த பக்தன் ஆனான் இந்திரன். இச்செய்தி, மணிமேகலை, வீரசோழியம், நீலகேசி முதலிய இலக்கியங்களிலும் புத்த ஜாதகக் கதைகளிலும் இடம் பெற்றுள்ளது. புத்த பக்தனான இந்திரன் மணிபல்லவத் தீவில் புத்த பீடிகை, ஒன்றை அமைத்து வணங்கியதோடு, தீவ திலகையைப் பீடிகைக்கும் காவல் தெய்வமாகவும் ஆக்கினான். (8:55, 11:27-29) (கந்தசாமி.,சோ.ந. 1977 : 37-38)

புத்தரை ‘ஜினேந்திரன்’ என்று அழைக்கும் மரபைச் சாத்தனார் குறிப்பிட்டுள்ளார் (29:47). இந்திரன் புலனின் வேட்கையும் வேட்டையும் உடையவனாக அறியப்படுகிறான். இஃது ஒழித்தவர்; ஒழிந்தவர் புத்தர் என்பதால் அவரைச் ‘ஜினேந்திரன்’ என்றனர். ஜினன் - வென்றவர்; புலன்களை வென்றவர்.

சாத்தனார் வழிபாடு சங்ககாலம் முதல் தமிழ்ச் சமூகத்தில் நிலவி வருகிறது. சாத்தனார் என்பவர் அறநெறித் தெய்வம் என்ற கருத்தை; அறப்பெயர்ச் சாத்தன்’ என்ற புறநானூற்றுக் குறிப்பு காட்டுகிறது (புறநா. 395). சங்ககாலப் புலவர்கள் ‘சாத்தன்’ என்னும் பின்னொட்டுப் பெயர்களில் 84 பாடல்களைப் பாடியுள்ளனர். புறநானூற்றில் மட்டுமே 10 புலவர்கள் ‘சாத்தனார்’ எனும் பெயரில் இடம் பெற்றுள்ளனர் (பக்குபோதிபாலா.,ஜெயபாலன்.,க.அன்பன்., இ. (பதி.ஆ), அறிவுராஜ்.,பி. 2013: 89) . சிலப்பதிகாரத்தில் வரந்தருகாதையில் மங்கள மடந்தைக் கோட்டத்தில் காணப்படும் சாத்தனார் என்ற ஐயனார், பூரணை, புஷ்கலா என்ற இரு பெண் தெய்வங்களோடு காட்சியளிப்பதைக் காணமுடிகிறது.

இத்தகைய சாத்தனார் தமிழிலக்கியப் பெரும்பரப்பிலும் நாட்டுப்புற வழிபாட்டிடங்களிலும் பரவி நிறைந்திருக்கும் போது மணிமேகலையில் மட்டும் சாத்தனார் வழிபாடு ஏன் இடம்பெறவில்லை என்பது ஆராய்ச்சிக்குரியது. ஒருவேளை, மணிமேகலையை இயற்றுவதே சீத்தலைச் சாத்தனார் தானே, தாமே காப்பியத்துக்குள் இடம் பெறுவது தற்சார்புத் தன்னமக்கு இடம் வகுக்கும் ஏன்று சாத்தனாரை விடுத்திருப்பாரோ...?


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard