New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 05. வைசேடிகம் முனைவர் பழ. முத்தப்பன்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
05. வைசேடிகம் முனைவர் பழ. முத்தப்பன்
Permalink  
 


 5. வைசேடிகம்  முனைவர் பழ. முத்தப்பன்

 

ஐம்பெருங் காப்பியங்களில் இரட்டைக் காப்பியங்கள் எனக் கூறும் பெருமை படைத்தவை சிலப்பதிகாரம், மணிமேகலைக் காப்பியங்களாகும். இரண்டு காப்பியங்களையும் படைத்தளித்த புலவர் பெருமக்கள் இளங்கோவடிகளும், சீத்தலைச் சாத்தனாரும் ஆவர். இருவரும் சமகாலத்தவர். எனவே அவ்விருவரும் உணர்வு ஒன்றிய நட்பின் கேண்மையராக விளங்கியவர்கள். எனவே இருவரும் இணைந்து இரு காப்பியங்களையும் படைத்திருக்கிறார்கள். இரு காப்பியங்களையும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்பதை விளக்க இருகாப்பியங்களிலும் ஒரே காப்பியப் பாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. சிலப்பதிகாரத்தின் தொடர்பாக மணிமேகலைக் காப்பியம் படைக்கப்பட்டது என்பதைக் குறிப்பாக வெளிப்படுத்துவது போலச் சிலப்பதிகாரப் பதிப்பில் நூல் கட்டுரைப் பகுதி அமைந்துள்ளது. அதில் கீழ்க்கண்ட முடிபு அமைந்துள்ளது. 

‘‘மணி மேகலைமே லுரைப்பொருள் முற்றிய
சிலப்பதிகாரம் முற்றும்” (1) 

என்பது சிலப்பதிகாரப் பதிப்புகளில் காணப்படும் முடிவுப் பகுதியாகும். இதனைச் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் பாடியது என்றும், இல்லை பின்னால் வந்தவர் பாடியது என்றும் இருவேறு கருத்து உண்டு என்றாலும், பதிப்பில் மணிமேகலைக் காப்பியத்தில் உரைக்க வேண்டிய பொருள்களுள் இறுதியில் நின்ற வீடு என்னும் பொருள் முற்றுப் பெறுவதற்குக் காரணமான சிலப்பதிகாரம் முற்றும் என்ற பொருள்பட இவ்வரிகள் அமைந்துள்ளன. எனவே மணிமேகலையில் கூறப்படுகின்ற வீடு பற்றி அறிந்து கொள்வதற்குக் காரணமாக அமைந்தது சிலப்பதிகாரம் என்ற செய்தி இரண்டு காப்பியங்களுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுவதாகும். எனவே இவ்விரு காப்பியங்களும் இரட்டைக் காப்பியங்களாக அமைந்து, தமிழ் மொழிக்குச் சிறப்பைத் தருகின்றன. அதில் ஒன்றான மணிமேகலைக் காப்பியத்தில் இடம் பெற்றுள்ள பிற மதக்கோட்பாடுகளில் ஒன்றான வைசேடிகம் என்ற மதத்தினைப் பற்றியும் அதன் முற்கால பிற்கால நிலைகளைப் பற்றியும் இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.

 



மணிமேகலையில் சமய வாதங்கள்

 

மணிமேகலைக் காப்பியம் 30 காதைகளைக் கொண்டது. இதில் 27 ஆவது காதை சமயக் கணக்கர் தம்திறம் கேட்ட காதை என்பதாகும். வஞ்சி நகரத்திற்குச் சென்ற மணிமேகலை, அங்கு மக்களின் மத்தியில் வழங்கி வந்த மதவாதிகளைச் சந்திக்கிறாள். அவர்கள் அனைவரும் கூட்டமாக இருந்து ஒருவருக்கொருவர் தத்தம் சமயக் கருத்துக்களைக் கூறி வாதிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை நோக்கி மணிமேகலை அவரவர் மதக் கொள்கைகளை உணர்த்துங்கள் என்று கூறி, அவர்கள் கூறிய விளக்கங்களைக் கேட்டு, அவற்றை ஏற்றுக் கொள்ளாது அறவணஅடிகள் பால் தான் கேட்டு மனதில் பதிந்து கொண்ட பௌத்த மதக் கருத்திலேயே நின்றாள். இருப்பினும் பிறமதக் கருத்துக்களை அவள் கேட்டறிந்தது இன்றைய மெய்ப்பொருள் உலகத்திற்குக் கிடைத்தற்கரிய செய்தியாக அமைகிறது.

நமது நாட்டில் நிலவிய சமயங்களின் கருத்துக்களைக் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் மணிமேகலை பதிவு செய்யவில்லை என்றால், அன்றைக்கிருந்த சமயங்கள் பற்றிய செய்திகளை இன்று அறிய முடியாது. ஏனென்றால் தமிழகத்தில் இன்றைக்கு மணிமேகலை காலச் சமயங்கள் வழங்கப் பெறவில்லை. எனவே தமிழகத்தில் ஒருகாலத்தில் விளங்கிய சமயங்கள் பற்றி மணிமேகலை கூறுவதால் தான் அறிந்து கொள்ள முடிகிறது. ஆகவே சமயத் தத்துவ உலகத்திற்குக் கிடைத்த மாபெரும் பரிசு மணிமேகலைக் காப்பியத்தில் இடம் பெற்ற சமயக் கணக்கர் தம்திறம் கேட்ட காதையாகும்.

 

வைசேடிகம்

 

மணிமேகலையின் 27ஆவது காதையில் காப்பியத் தலைவி மணிமேகலை சந்திக்கின்ற மதவாதிகளில் ஒருவர் வைசேடிகர் ஆவார். சாங்கியவாதியின் கருத்துரைகளைக் கேட்டபின் வைசேடிக, நின் வழக்கினை உரை என்று கூறுகிறாள். அதனைக் கேட்ட வைசேடிகர் தன் மதக் கொள்கைகளை 242 ஆவது வரியிலிருந்து 262 ஆவது வரி வரை தன் மதக் கருத்துக்களைக் கூறுவதாகச் சீத்தலைச் சாத்தனார் குறிப்பிடுகிறார். 

‘‘வைசேடிக, நின் வழக்கு உரை” என்ன
பொய்தீர் பொருளும் குணமும் கருமமும் 
சாமானியமும் விசேடமும் கூட்டமும்
ஆம்ஆறு கூறுஆம் அதில் பொருள் என்பது
குணமும் தொழிலும் உடைத்தாய் எத்தொகைப்
பொருளுக்கும் ஏதுவாம் அப்பொருள் ஒன்பான்
ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசை
காலம் ஆன்மா மனம் இவற்றுள் நிலம்
ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும்
பயில் குணம் உடைத்து நின்ற நான்கும்
சுவை முதல் ஒரோ குணம் அவை குறைவு உடைய
ஓசை ஊறு நிறம் நாற்றம் சுவை
மாசில் பெருமை சிறுமை வன்மை
மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம் 
என்னும் நீர்மை பக்கம் முதல் அனேகம்
கண்ணிய பொருளின் குணங்கள் ஆகும்
பொருளும் குணமும் கருமம் இயற்றற்கு
உரிய உண்மை தரும் முதல் போதுத்தான்
போதலும் நிற்றலும் பொதுக்குணம் ஆதலின்
சாதலும் நிகழ்தலும் அப்பொருள் தன்மை
ஒன்று அணு கூட்டம் குணமும் குனியும் என்று
ஒன்றிய வாதியும் உரைத்தனன்”

என்று வைசேடிகவாதி தன் கருத்துக்களைக் கூறுவதாகச் சீத்தலைச் சாத்தனார் குறிப்பிடுகிறார். 



இதன் பொருள் - பொய்ம்மை தீர்ந்த பொருளும், குணமும், தொழிலும், பொதுவும், சிறப்பும், கூட்டமும் எனக் கூறப்படும் ஆறு கூறுபாட்டினை உடையன பொருள்கள் என்று உரைத்து மேலும், 

அதில் பொருள் எனப்படுவது குணம் செயல்களை உடையதாய் , தொகுதிப் பொருள்கள் அனைத்திற்கும் காரணமாகும். அப்பொருளும் ஒன்பது வகைப்படும். அவை -நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், திசை, உலகம், ஆன்மா, மனம் என்பனவாம். இந்த ஒன்பதினுள் நிலம் என்பது ஒலி, ஊறு, நிறம், சுவை, மனம் என்னும் ஐந்து குணங்களை உடையது. நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய நான்கும் அக்குணம் ஐந்தனுள் முறையே ஒவ்வொரு குணம் குறைவாக அமைந்து விளங்கும் என்று கூறுகிறான். 

மேலும் ஓசை, பரிசம், நிறம், மணம், சுவை என்பனவும் குற்றமில்லாத பெருமை, சிறுமை, வன்மை, மென்மை, சீர்மை, நொய்ம்மை, வடிவம் எனப்படும் பண்புகளும், இடம், வலம் முதலிய பக்கம் முதலான பல்வகைத் திசைகளும் மேற்சொல்லப்பட்ட பொருள்களின் குணங்களாம். 

பொருள், குணம் ஆகிய இரண்டும் தொழில் நிகழ்தற்கு உரியனவாகும். முதன்மையான பொதுவாவது பொருள்களின் உண்மைத் தன்மையை உணர்த்துவதாம். போவதும், நிற்பதும் எல்லாப் பொருள்களுக்கும் பொதுக்குணம் ஆதல் போல, இறத்தலும் இருத்தலும் அவ்வப் பொருள்களின் முதன்மையில்லாத் தன்மையவாம். இது சாமானியம் எனப்படும். 

விசேடமாவது ஒன்றாகிய அணுவாம். அதாவது ஒன்றுக்கே உள்ள சிறப்புத் தன்மை. சமவாயம் என்பது குணத்துக்கும் குணிக்கும் உள்ள இயைபு ஆகும் என்று வைசேடிகவாதி தம் மதக் கருத்துக்களைக் கூறினான். 

எனவே, தருக்கவாத சமயங்களில் ஒன்றான வைசேடிக மதம் மணிமேகலை காலத்தில் இத்தகைய கருத்துக்களைக் கொண்டு தமிழகத்தில் நிலவி வந்திருக்கிறது எனத் தெரிகிறது இவ்வாறு இடம் பெற்ற சைவசேடிக மதத்தின் கொள்கைகளைப் பின்வந்த தத்துவ வித்தகர்கள் அம்மதத்தைப் பற்றிய கொள்கைகளைத் தந்துள்ளனர். அதிலும் குறிப்பாக இங்கு எடுத்துக் கொள்ளப் பட்ட நூல்கள் -

1. கீழை மேலை நாடுகளின் மெய்ப்பொருள் இயல் வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு.

2. இந்தியத் தத்துவ ஞானம், ஆசிரியர் கி.லெட்சுமணன், பழனியப்பா பிரதர்ஸ் வெளியிடு 

3. இந்தியத் தத்துவக் களஞ்சியம், டாக்டர் சோ.ந. கந்தசாமி, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். 

என்ற நூல்களின் அடிப்படையில் வைசேடிக மதம் பற்றிய கருத்துக்கள் இடம் பெறுகின்றன.
தத்துவ அறிஞர்கள் நோக்கில் வைசேடிகம்

இன்றைய இந்தியத் தத்துவ ஆய்வாளர்கள் தந்துள்ள கட்டுரைகளில் கிடைக்கப் பெறும் செய்திகளைக் கொண்டு வைசேடிக மதம் பற்றிய செய்திகளை அறியலாம்.

 

வைசேடிகத்தின் தொன்மை நூல்

 

வைசேடிக தத்துவத்தின் கருத்துக்களைத் தருகின்ற தொன்மையான நூல் வைசேடிக சூத்திரம் ஆகும். இதன் ஆசிரியர் கணாதர் என்பர். இதனை மணிமேகலை ஆசிரியரும் குறிப்பிடுகிறார். 

‘‘பாங்குறும் உலகாயதமே லோகாயதமே பௌத்தம்
சாங்கியம் நையாயிகம் வைசேடிகம் 
மீமாஞ்சகம் ஆம் சமய ஆசிரியர்
தாம் பிருகற்பதி சினனே கபிலன்
அக்கபாதன் கணாதன் சைமினி” (பாடலடி - 78 - 82)

என்று மதங்களின் ஆசிரியர்களைக் குறிப்பிடுகின்ற பொழுது சீத்தலைச் சாத்தனார் வைசேடிக ஆசிரியர் கணாதரைக் குறிப்பிடுகின்றார். இவரின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு ஆகும். இவர் உருவாக்கிய வைசேடிகத் தத்துவத்திற்கு, ‘‘ஔலூர்க்கிய தரிசனம்” என்ற பெயர் வழங்கி வருகிறது.

 



வைசேடிகம் பெயர்க் காரணம்

 

வைசேடிகர் கண்ட அறுவகைப் பொருள்களில் விசேடம் என்பது முக்கியத் தத்துவம் ஆகும். இதனை வடமொழியில் ‘‘ஷட்பதார்த்தங்கள்” என்று குறிப்பிடுவர். விசேடம் என்பது முக்கியத் தத்துவம் வாய்ந்தது. விசேடம் என்ற சொல்லின் அடியாகத் தோன்றியது வைசேடிகம். குறிப்பிட்ட ஒரு பொருள், ஏனையப் பொருள்களினின்றும் வேறுபடுதற்குரிய விசேட இயல்புகள் அல்லது சிறப்புத் தன்மைகளை ஆராய்தலின் இத்தத்துவம் வைசேடிகம் எனப் பெயர் பெற்றது என்பர்.(2)

 

நூல்கள்

 

வைசேடிக மதத்தின் கொள்கைகளைத் தரும் நூல்களில் வைசேடிக சூத்திரம் தொன்மையானது. இதற்கு முதல் உரையாசிரியர் பிரசத்தபாதர் ஆவார். இவர் தம் கருத்துக்களையும் மூல நூலில் புகுத்தியுள்ளார். இந்நூலுக்குப் பெயர் பதார்த்த தரும சங்கிரகம் என்பதாகும். இதன்பின் தசபதார்த்த சாத்திரம் கி.பி. 648 ல் சீன மொழியில் மொழிபெயர்க்கப் பெற்றது. மேலும் வியோமசிவன் எழுதிய வியோமவதி என்ற நூலும், சீதரரின் குகமாஞ்சலி என்ற நூலும், நியாய கந்தலி என்னும் உரையும், உதயணரின் கிரணாவளி என்ற நூலும், சீவத்சரின், இலிதாவதி என்னும் உரை நூல்களும், சிவாதித்தரின் சப்த பதார்த்தி என்ற நூலும், சங்கர மிசிரரின் உபஸ்காரம் என்ற நூலும், விசுவநாதரின் பாசா பரிச்சேதம் என்ற நூலும், அதற்கு எழுந்த சித்தாந்த முத்தாவளி என்னும் உரைநூலும், அன்னம்பட்டரின் தருக்க சாங்கிரகம் என்ற நூலும், சகதீசரின் தருக்காமிருதம் என்ற நூலும், சயநாராயணரின் விவிருத்தியும் என்ற நூல்கள் குறிப்பிடத் தக்கனவாகும். தமிழில் நீலகேசியும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

மதம் தோன்றிய சூழல்

 

வைசேடிக மதத்தின் தோற்றத்தின் சூழலைச் செவி வழியாகச் சொல்வதுண்டு. உலக வாழ்வில் உண்டாகும் துன்பச் சுமையினை எடுத்தெறியும் எண்ணத்துடன் சிறந்த சீடன்குழு ஒன்று நல்லுரை கேட்கும் நாட்டத்துடன் ஆசாரியர்களை அணுகியது. சுருதி, சுமிருதி, புராண நூல்களைப் பாடம் கேட்டது. ஆன்மாவின் உண்மைகளை நேரிடையாகக் காண்பதுதான் குற்றங்களை நீக்குகின்ற வழி என்று கண்டது. வெறும் நம்பிக்கை மட்டுமன்றி பகுத்தறியும் பயிற்சியையும் மேற்கொண்டது. அந்த ஆசிரியர்தான் கணாதர் ஆவார். தன்னுடைய சீடர்களுக்கு வைசேடிக சூத்திரத்தினை அவர் அப்பொழுது வழங்கினார். அந்நூல் வீடுபேறு பெறுவதற்குரிய வழிகளைக் கூறுவதால் சீடர்களால் மோட்ச சாத்திரம் என்று கூடக் கூறப்பெற்றது. மேலும் யோகப் பயிற்சிதான் வீடுபேற்றுக்கு உரிய சாதனமாகும் என்பதையும் அச்சீடர்களுக்கு அவர் உரைத்தார். யோகப்பயிற்சிக்கு உலகப் பொருள்களின் இயல்புகளை அறிவதுதான் இன்றியமையாதது என்ற அடிப்படையில் பொருள்களைப் பற்றிய ஆய்வு வைசேடிக மதத்திற்கு அடிப்படையாகியது. இவ்வாறு இம்மதம் தோன்றிய சூழலை அம்மதத்தார் குறிப்பிடுவர்.

 

மதக் கொள்கைகள்

 

கிடைக்கப் பெற்ற நூல்களின்வழி வைசேடிக மதத்தின் கொள்கைகளை வகைப்படுத்தலாம்.


1. அறிவு அல்லது அறிவின் செயல் ஆன்மாவின் இயல்பாகும். புற உலகப் பொருள்களைப் புலப்படச் செய்தலே அறிவதாகிய செயலாகும். அச்செயல் வெவ்வேறு வகைப்படும். இதனைப் பிரமா என்றும், அப்பிரமா என்றும் பிரிக்கலாம். பிரமா எனின் பொருந்தும் அறிவு. அதாவது ஏற்கத்தக்க அறிவு என்று பொருள்படும். அப்பிரமா என்பது பொருந்தாத ஏற்கமுடியாத அறிவு எனப் பொருள்படும். பிரமா என்பதுள் காட்சி அளவை, கருதல் அளவை, உவம அளவை, ஆகமம் அல்லது உரை அளவை ஆகியவை அடங்கும். அப்பிரமா என்பதுள் நினைவு, ஐயம், பிழை, தருக்கம் ஆகியவை அடங்கும். 

2. இக்கொள்கையினர் நினைவினைப் பொருந்தா அறிவு எனக் கொள்கின்றனர். பொருள், காட்சியில் புலப்படுவது போன்று, நினைவில் புலப்படுவதில்லை. நினைவு என்பது முன்னரே அமைந்த பொருளின் சாயல் அல்லது பதிவு இப்பொழுது ஏற்படுவது ஆகும். இத்தகைய நினைவினைப் பொருந்தாத அறிவாக வைசேடிகர் கொள்கின்றனர். 

3. பொருளின் தன்மையோடு அல்லது இயல்போடு அறிவு ஒத்திருக்குமாயின் உண்மை என்றும், அவ்வாறு ஒத்திருக்காவிடின் பொய் என்றும் கொள்வர். இதனால் உண்மையான பொருள்களைப் பற்றிய சிந்தனையை இம்மதத்தினர் கொண்டனர் என்பர்.(3)

4. பொருள் பற்றிய ஆராய்கின்ற இம்மதத்தார் உண்மையில் உள்ள பொருள் மனமா, புறஉலகா, அல்லது இரண்டுமா, அல்லது இரண்டும் இல்லையா? என்று ஆராய்ந்து, இரண்டும் உண்மையே எனக் கொள்பவர் வைசேடிகர். அதாவது மனமும் உண்மை, புறத்தே நாம் காணும் பொருள்களும் உண்மை எனக் கொள்வர். எனவேதான் வைசேடிகரை மெய்ம்மைவாதிகள் எனக் குறிப்பிடுவர். 

5. இரண்டையும் உண்மை எனக் கொண்ட வைசேடிகர் உலகத் தோற்றத்திற்குக் காரணமான மூலப்பொருள் ஒன்று எனக் கொள்ள இடமில்லை. (கடவுள் என்ற பொருள் இல்லை). பல்வேறு இயல்புகளை உடைய இவ்வுலகத்திற்கு மூலம் ஒரே ஒரு பொருள்தான் என்பது பொருந்தாது என்பர். உலகத்திற்கு மூலம் பலபொருள் என்பது வைசேடிகருடைய முடிவாகும். 


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 



6. இந்த உலகமும், உலகில் உள்ள பொருள்களும் ஒரு பொய்த் தோற்றம் அல்ல. உலகம் உண்மை. உலகில் உள்ள பொருள்களும் உண்மை என வைசேடிகர் கருதினர். 

7. இவ்வாறு உண்மை எனக் கொண்ட பொருள்களுக்குத் தோற்றம் என்பது என்ன? அழிவு என்பது என்ன? என்று ஒவ்வொரு பொருளையும் நன்கு கவனித்தனர் வைசேடிகர். ஒவ்வொரு பொருளும் பல பகுதிகளாக உள்ளன. எனவே பகுதிகள் ஒன்று சேர்வது பொருளின் உற்பத்தி எனக் கொண்டனர். பின்னர் அப்பகுதிகள் தாமாகவோ பிற காரணத்தாலோ பிரிவதே பொருளின் அழிவு எனக் கொண்டனர். இதற்கு அவர்கள் நூலால் ஆகிய ஆடையை எடுத்துக் காட்டாகக் காட்டுவர். 

8. இதனால் அவர்கள் அறிவுறுத்துவது எது பகுதிகளை உடையதோ அது அழிவுடையது. அது நிலையற்றது. பகுதிகளை அவயவங்கள் என்று கூறலாம். எது அவயவங்களால் ஆகியதோ அது அழியும் என்ற கொள்கை வைசேடிகத்தில் இன்றியமையாததாகும்.

9. பகுக்க முடியாத அதி நுட்பமான பொருளை வைசேடிகர் அணுக்கள் அல்லது பரமாணுக்கள் என்பர். அணுக்களைப் பிரித்தல் இயலாது. அவை அழியாதவை. அவைகளே இவ்வுலகின் தோற்றத்திற்குக் காரணம் என்றும் நம்பினர். 

10. பொருள்களைக் கடைசிவரை பிரிக்கும் பொழுது, கடைசியாக ஏற்படும் அணுக்களே பொருள்களின் உற்பத்திக்கு மூலமாகும்.

11. வைசேடிகரின் இந்த அணுக்கொள்கை இந்தியா ஐரோப்பிய நாடுகளோடு தொடர்பு கொண்ட பொழுது எழுந்தது என்பர். எனவே அவர்தம் கொள்கையும் கிரேக்கர்களின் கொள்கையும் ஒன்றுபட்டுத் திகழுகின்றன என்பர். (4)

12. இவர்தம் கொள்கைகளில் இன்றியமையாதது பொருள்களைப் பாகுபடுத்தியதாகும். முதலில் மூன்று பொருட்பாகுபாடுகளைக் கொண்டனர். அதாவது திரவியம், குணம், கருமம் என்ற மூன்றினையே கொண்டனர். பிரசத்தபாதர் காலத்தில் சாமானியம், விசேடம், சமவாயம் என்ற மூன்றினைச் சேர்த்தனர். இதனையே மணிமேகலையும், 

‘‘பொய் தீர் பொருளும் குணமும் கருமமும்
சாமானியமும் விசேடமும் கூட்டமும்
ஆம் ஆறு கூறாம் ” (பாடலடி 27: 242 - 244)

என்று குறிப்பிடும்.

13. முற்கால வைசேடிகத்தில் அறுவகைப் பதார்த்தங்களும் இயல்பு உடையவை என்று கருதப்பட்டன. அந்த இயல்புகளில் பொது இயல்பு என்பது சாமானியம் என்று பொருள்படும். குறிப்பிட்ட பொருள்களில் காணப்படும் சிறப்பியல்பு நிலைபேறு உடைய பண்பு என்று கூறப்படும். 

14. ஆன்மா பற்றி வைசேடிக சூத்திரம் தெளிவாக உணர்த்துகிறது. பிராணன், அபானன், இமை மூடல், இமை விழித்தல், அறிகருவி, தொழிற்கருவிகளின் பாசங்கள், இன்ப துன்பங்கள், இச்சை, முயற்சி என்பன போன்றவற்றின் அடையாளங்கள் தான் ஆன்மா என்று கூறுகின்றது. 

15. நீர், நெருப்பு முதலியனவற்றைப் பயன் கொள்வான் ஒருவன் உளனாதல் போல, உடம்பினைப் பயன் கொள்வானை வைசேடிகர் ஆன்மா என்றனர். ஒவ்வொரு பொருளின் பயனையும் உடம்பு அனுபவிக்காது, உயிர்தான் அனுபவிக்கும். அதுவே ஆன்மாவாகும். ஆன்மா அநாதியாய் உளதாகும் என்ற கொள்கையினை உடையவர்கள்.

16. மனம் பற்றிய அவர்தம் கொள்கைகள் வைசேடிக சூத்திரத்தில் இடம் பெற்றுள்ளன. 

‘‘ஆன்மா இந்திரியங்களுடன் தொடர்பு கொண்டு அடையும் அறிதலும், 
அறியாமையும் ஆகிய அடையாளங்கள் மனத்தின் இருப்பினைச் 
சுட்டுகின்றன”

என்பது கணாதர் கூறும் தத்துவமாகும். ஆன்மா அறிகருவியுடன் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக இருப்பதுதான் மனம் எனப்படும் திரவியம் ஆகும். ஐம்பொறிகளின் வாயிலாக ஆன்மா புறஉலகில் உள்ள பொருள்களைக் காணமுடியுமே தவிர, அக உலகில் எழும் கருத்துக்கள், சிந்தனைகள், உணர்ச்சிகள் ஆகியவற்றை அறிவதற்கு அப்பொறிகள் உதவாது. மனம் ஒன்றுதான் உதவும். எனவே மனம் என்னும் திரவியத்தின் உண்மை சாதிக்கப்படுகிறது என்பர்.(5) 

இவ்வாறு கிடைக்கப் பெற்றிருக்கின்ற தத்துவ அறிஞர்களின் கருத்துக்களைக் கொண்டு வைசேடிக மதத்தின் கொள்கைகளை ஒரு சிறிது உணரமுடிகிறது. வைசேடிக மதம் தமிழகத்தில் பரவியிருந்த காரணத்தால், சிறு காப்பியங்களில் ஒன்றான நீலகேசியில் இம்மதம் பற்றிய கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

 

நீலகேசியில் வைசேடிகம்

 

 

“நீலகேசித் தெருட்டு” என இந்நூல் வழங்கப் பெறும். இது குண்டலகேசிக்கு மறுப்பாக எழுந்த நூல். இயற்றியவர் பெயர் தெரியவில்லை. சமயதிவாகரவாமன முனிவர் எழுதிய சிறந்த உரை ஒன்று இதற்கு உள்ளது. பத்துச் சருக்கங்களையும், 895 செய்யுட்களையும் கொண்டது இந்நூல். இதனை வாமனத் தேவரின் உரையுடன் சக்கரவர்த்தி நயினார் பதிப்பித்துள்ளார் என்பர்.(6) 

பழையனூர் நீலிப்பேய், முனிச்சந்திரர் என்ற சமண முனிவரின் தவத்தைக் கலைக்க முயற்சித்தது. ஆனால் அதில் தோற்று ஒரு அரசகுமாரி போல் வந்த அந்தப்பேய் அவரிடமே மாணவியாக அமைந்தது. அப்பேயின் மூலம் சமணக் கருத்துக்கள் உலகம் எங்கும் பரவச் சமண முனிவர் வழிவகுத்தார். நீலகேசியானது சமணத்தைப் பரப்பும் முகத்தான் பிற மதங்களை மறுத்துத் தன் மதத்தை வலியுறுத்தியது. அது மறுத்த மதங்கள் பௌத்தம், ஆசீவகம், சாங்கியம், வைசேடிகம் உள்ளிட்டவை ஆகும். வைசேடிக மதத்தை அது மறுத்ததினுடைய நிகழ்வு நீலகேசியின் எட்டாவது சருக்கமான வைசேடிகவாதச் சருக்கமாக அமைந்தது. இதில் மொத்தம் 41 பாடல்கள் உள்ளன. அதில் முதல் இரண்டு பாடல்கள் வாழ்த்துக்களாக அமைய, அடுத்த நான்கு பாடல்கள் சைசேடிக மதத்தின் கொள்கைகளை விரிவாக உணர்த்துகிறது. அதன் பின் அமைந்த பாடல்கள் அனைத்தும் வைசேடிக மதத்தின் மறுப்பாக அமைந்துள்ளன. 

நீலகேசியில் அமைந்துள்ள வைசேடிக மதத்தின் கருத்துக்களை இக்கட்டுரையில் காண்பது கருத்தரங்கத்தின் பொதுத்தலைப்பிற்கு உதவுவதாகும். மணிமேகலைக் காலத்துச் சமயத்தின் இன்றயை நிலையில் நீலகேசியின் கருத்துக்களைக் காண வேண்டியது இன்றியமையாதது ஆகிறது. 

நீலகேசியில் அமைந்துள்ள தத்துவக் கருத்துக்களின் சுருக்கத்தை அவ்வப் பாடல்கள் மூலம் எடுத்துக் காட்டப்படுகிறது. 

‘‘நெறி எனப்படுவது நின்ற மெய்ம்மை அங்கு
அறிதலுக்கு அறியென ஆறு சொற்பொருள்
செறியயான் சொலில் சிரப்பியம், குணம், தொழில்
பொறியினாய் பொது சிறப்புடன் புணர்ப்பதே” (பாடலடி - 785)

என்பது பாடல். 

இதன் பொருள் - வைசேடிக வாத மார்க்கமாவது அறிதற்கு அறிய உண்மைப் பொருளாம் பரமார்த்தத்தை உடைத்தாகிய சத்பதார்த்தங்கள் ஆகும். அந்த ஆறு பொருள்கள் திரவியம், குணம், கருமம், சாமானியம், விசேடம், சமவாயம் என்பன ஆகும் என்பது இதன் பொருளாகும். இப்பாடலில் அமைந்துள்ள சிரப்பியம் என்ற சொல் திரவியத்தைக் குறிப்பிடும். தொழில் என்பது கருமவினைகளைக் குறிப்பிடும். பொது என்பது சாமானியத்தைக் குறிப்பிடும். சிறப்பு என்பது விசேடத்தைக் குறிப்பிடும். உடன் புணர்ப்பு என்பது சமவாயத்தைக் குறிக்கும். 

‘‘பூதம் ஐந்தொடு திசை, மனம் பொழுது உயிர்
ஓதின் அப்பொருள்கள் தாம் ஒன்பதாம் அவை
நீதியில் குணம் அவற்றின் இயல்பு செய்கையும்
போதரும் பொருப்புடைப் பெயர்ச்சி ஆகுமே” (பாடலடி - 786)

என்பது பாடல். 

இதன் பொருள் - முன்பு கூறப்பட்ட பொருள்கள் ஆறில் திரவியம் பூதம் ஐந்தும், திக்கும், மனமும், காலமும், ஜீவனும் என அவை ஒன்பதாகும். குணம் என்பது அப்பொருள்களது இயல்பாம். செய்கையாகிய கருமமாவது அப்பொருள்களது புடைப்பெயர்ச்சியாம் என்று கூறப் பெற்றுள்ளது. 

‘பெரியதும் பின்னதும் ஆயது அப்பொது
உரிதனில் பொருள்களைச் செலுத்தும் ஒற்றுமை
தெரிவுற வருவது சிறப்பதாம் குணம்
கிரிகைகள் இதற்குஎனக் கிளத்தல் கூட்டமே” (பாடலடி - 787)

என்பது பாடல். 

இதன் பொருள் - பெரிய சாமானியமும், அபாந்தர சாமானியமும் என சாமானியம் இருவகைப்படும். மேலும் அது பரம் என்றும் அபரம் என்றும் கூறப்பெறும். அவற்றுள் முதலது சத்துவம், வஸ்த்துவம் முதலாயின ஒழிந்தது திரவியத்வம் , உணர்த்துவம் முதலாயின. அவைதாம் நித்தியமும், வியாபியமும் ஆகிய பொருள்களுக்கு ஒரு ஒற்றுமை செய்வதாம். பொருள்களுக்கு அந்நியோந்யம் வேறுபாட்டைச் செய்வது விசேடம் என்பதாம். பொருளுடன் அத்தியந்தம், பின்னமாகிய குணகருமங்களை இதனது இது என்னுமாறு சேர்த்து நித்தியமும் வியாபியும் ஆகியது. இதுவே சமவாயம் என்பதாம் என்று இப்பாடலுக்கு உரை தரப்பெற்றுள்ளது. 

‘‘ஆறின் முதல் மூன்று அத்தி மற்று அவற்றின்
தீதின் மும்மையும் இன்மையும் எய்தின
கூறின பொருள்களும் குணமும் செய்கையும்
வேறுஎன விரித்தனன் வைசிக வாதியே”(பாடலடி -788)

என்பது பாடல் .

இதற்குரிய பொருளாவது சொல்லப்பட்ட பதார்த்தம் ஆறினுள்ளும் முதற்கண் கூறப்பட்ட திரவிய , குண, கருமங்களில் அஸ்தித்வம் , சாமானியம் பிறப்பதாம். இறுதியில் உள்ள சாமானிய, விசேட, சமவாயங்களுள் அஸ்தித்வ, சாமானிய, விசேடம் இருக்காது. அவை அஸ்தித்வம் உடைய அல்லவாம். சாமானியதாயில் அஸ்தித்வம் கிடைக்கில் அஸ்தித்துவ சாமானியத்திலும், அஸ்தித்வம் உடையதாய் , அதனிலும் பிறிதொரு அஸ்தித்வம் உண்டாகும். இனித் திரவியமும், குண கருமங்களும் உடன் சேர்ந்திருக்கின்ற பின்னங்கள் ஆகும் என்று வைசேடிகவாதி கூறினார் என்பதாகும். 

இவ்வாறு நான்கு பாடல்களால் பிற்காலத் தமிழ் இலக்கியமாம் நீலகேசியில் வைசேடிகக் கொள்கைகள் கூறப்பெறுவதால் தமிழகத்தில் அம்மதமும் வழங்கியிருக்கிறது என்பது அறிய முடிகிறது.

 

முடிவு

 

மணிமேகலைக் காப்பியத்தில் சமயக் கணக்கர் தம்திறம் கேட்ட காதையில் இடம் பெற்ற வைசேடிகத்தின் கருத்து, பின்னர் தத்துவ அறிஞர்களால் ஆய்வு செய்யப் பெற்று, விரித்தும் தொகுத்தும் தரப்பெற்றன. அக்காலத்தில் இருந்த வைசேடிக மதம் தமிழகத்தில் நீலகேசியின் காலத்திலும் வழங்கி வந்தமையை, அவ்விலக்கியத்தில் இடம் பெற்ற பகுதிகளால் அறிய முடிகிறது. எனவே மணிமேகலை கால வைசேடிக மதத்தின் வளர்நிலையை நீலகேசி காலம் வரை அறிய முடிகிறது.

 

அடிக்குறிப்புகள்

 

1. நூல் கட்டுரை, 17 - 18 வது பகுதி.
2. சோ.ந. கந்தசாமி, இந்தியத் தத்துவக் களஞ்சியம், தொகுதி -2, ப. 137
3. சதீஸ்சந்திரசாட்டர;ஜி. கீழை மேலை நாடுகளின் மெய்ப்பொருள் இயல் வரலாறு, பக் 370 - 371
4. கி. லெட்சுமணன், இந்தியத் தத்துவஞானம், பக் - 220 - 224
5. சோ. ந. கந்தசாமி, இந்தியத் தத்துவக் களஞ்சியம், தொகுதி -2. பக் 149 - 150.
6. டாக்டர். தமிழண்ணல், புதிய நோக்கில் தமிழிலக்கிய வரலாறு, ப. 259


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard