New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இக்கால இலக்கியம் (கூறு 1)


Guru

Status: Offline
Posts: 24778
Date:
இக்கால இலக்கியம் (கூறு 1)
Permalink  
 


இக்கால இலக்கியம் (கூறு 1)

 
அ) பாரதியார்
          ‘கவிதை எழுதுபவன் கவியன்று; கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி’
 என்றும் ‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்றும் சொன்ன பாரதிசின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு திசம்பர் 11, 1882 இல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். பாரதியாரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார். 1887ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரது பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.
தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார்.1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சில காலத்திலேயே, அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு ஆண்டுகள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர்,1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது.
தேச பக்தி, தெய்வபக்தி, தாய்மொழிப்பற்று, பெண் விடுதலை, சமுதாய நலன் போன்றவை இவரது பாடல்களில் விஞ்சி நிற்கின்றன. மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியப் பணி, இதழாசிரியர், மொழி பெயர்ப்பாளர், கட்டுரையாசிரியர் என வேறுபட்ட பணிகளில்  ஈடுபட்டிருந்தார். பாஞ்சாலி சபதம் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு என்பன இவரது குறிப்பிடத்தகுந்த படைப்புகள்.
1921 ஆம் ஆண்டு சூலை மாதம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார். பிறகு 1921ல் செப்டம்பர் 11 அதிகாலை இயற்கை எய்தினார்.
வசன கவிதை என்னும் கவிதை வடிவத்தினையும் கேலிச்சித்திரம் எனப்படும் வரையும் முறையையும் தமிழுக்கு முதலில் தந்த பெருமை பாரதியையே சாரும். தமிழ்ப் புதுக்கவிதையின் முன்னோடி இவரே.
அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர். தேசிய கவி என்ற முறையிலும் உலகம் தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் பாடியதாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் அளவிற்குச் சிறப்பு பெற்றவர்.  
1. கண்ணன் பாட்டு
கண்ணன் என் தோழன்
(புன்னாகவராளி - திஸ்ரஜாதி ஏகதாளம் - வத்ஸல ரசம்)
 
பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப்
            புறங்கொண்டு போவதற்கே - இனி
என்ன வழியென்று கேட்கில் உபாயம்
            இருகணத் தேயுரைப் பான்; - அந்தக்
“கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக்
            காணும் வழியொன் றில்லேன் - வந்திங்கு
உன்னை யடைந்தனன்’ என்னில் உபாயம்
            ஒருகணத் தேயுரைப் பான்;                                                              1
 
கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்
            கலக்க மிலாதுசெய் வான்; - பெருஞ்
சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்
            தேர்நடத் திக்கொ டுப்பான்; - என்றன்
ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்
            உற்ற மருந்துசொல் வான்; - நெஞ்சம்
ஈனக் கவலைக ளெய்திடும் போதில்
            இதஞ்சொல்லி மாற்றிடு வான்;                                                      2
 
பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாலொரு
            பேச்சினிலே சொல்லு வான்;
உழைக்கும் வழிவினை யாளும் வழிபயன்
            உண்ணும் வழிவுரைப் பான்;
அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்
            அரைநொடிக் குள்வரு வான்;
மழைக்குக் குடைபசி நேரத் துணவென்றன்
            வாழ்வினுக் கெங்கள்கண் ணன்.                                                    3
 
கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்
            கேலி பொறுத் திடுவான்; - எனை
ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்
            ஆறுதல் செய்திடுவான்; - என்றன்
நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று
            நான்சொல்லு முன்னுணர் வான்; - அன்பர்
கூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்பு
            கொண்டவர் வேறுள ரோ?                                                             4
 
உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்
            ஓங்கி யடித் திடுவான்; - நெஞ்சில்
கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன்னாலங்கு
            காறியுமிழ்ந்திடு வான்; - சிறு
பள்ளத் திலேநெடு நாளழு குங் கெட்ட
            பாசியை யெற்றிவிடும் - பெரு
வெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லி
            மெலிவு தவிர்த்திடு வான்;                                                               5
 
சின்னக் குழந்தைகள் போல் விளையாடிச்
            சிரித்துக் களித்திடுவான்; - நல்ல
வன்ன மகளிர் வசப்படவே பல
            மாயங்கள் சூழ்ந்திடு வான்; - அவனை
சொன்ன படிநட வாவிடி லோமிகத்
            தொல்லை யிழைத்திடுவான்; - கண்ணன்
தன்னை யிழந்துவிடில், ஐயகோ, பின்
            சகத்தினில் வாழ்வதிலேன்.                                                                         6
 
கோபத்தி லேயொரு சொல்லிற் சிரித்துக்
            குலுங்கிடச் செய்திடு வான்; - மனஸ்
தாபத்தி லேயொன்று செய்து மகிழ்ச்சி
            தளர்த்திடச் செய்திடுவான்; - பெரும்
ஆபத்தினில் வந்து பக்கத்தி லேநின்று
            அதனை விலக்கிடுவான்; - சுடர்த்
தீபத்தி லேவிழும் பூச்சிகள் போல்வருந்
            தீமைகள் கொன்றிடு வான்;                                                            7
உண்மை தவறி நடப்பவர் தம்மை
            உதைத்து நசுக்கிடுவான்; - அருள்
வண்மையி னாலவன் மாத்திரம் பொய்கள்
            மலைமலை யாவுரைப்பான்; - நல்ல
பெண்மைக் குணமுடையான்; - சில நேரத்தில்
            பித்தர் குணமுடையான்; - மிகத்
தண்மைக் குணமுடை யான்; சில நேரம்
            தழலின் குணமுடை யான்.                                                              8
 
கொல்லுங் கொலைக்கஞ் சிடாத மறவர்
            குணமிகத் தானுடையான்; - கண்ணன்
சொல்லு மொழிகள் குழந்தைகள் போலொரு
            சூதறி யாதுசொல் வான்; - என்றும்
நல்லவ ருக்கொரு தீங்கு நண்ணாது
            நயமுறக் காத்திடுவான்; - கண்ணன்
அல்லவ ருக்கு விடத்தினில் நோயில்
            அழலினி லுங்கொடி யான்.                                                             9
 
காதல் விளைய மயக்கிடும் பாட்டினில்
            கண்மகிழ் சித்திரத்தில் - பகை
மோதும் படைத்தொழில் யாவினுமே திறம்
            முற்றிய பண்டிதன்காண்; - உயர்
வேத முணர்ந்த முனிவ ருணர்வினில்
            மேவு பரம்பொருள் காண்; - நல்ல
கீதை யுரைத்தெனை இன்புறச் செய்தவன்
            கீர்த்திகள் வாழ்த்திடு வேன்.                                                          10
 
 
 
 
 
 
 
பாரத நாடு
2. எங்கள் நாடு
[ராகம்-பூபாளம்]
 
மன்னும் இமயமலை யெங்கள் மலையே
    மாநில மீதிது போற் பிறிதிலையே!
இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
    இங்கிதன் மாண்பிற் கெதிரதுவேறே?
பன்னரு முபநிட நூலெங்கள் நூலே
    பார்மிசை யேதொரு நூல் இது போலே!
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே
    போற்றுவம் இஃதை எமக்கிலைஈடே.                                       1
 
மாரத வீரர் மலிந்தநன் னாடு
    மாமுனி வோர்பலர் வாழ்ந்த பொன்னாடு
நாரத கான நலந்திகழ் நாடு
    நல்லன யாவையும் நாடுறும் நாடு
பூரண ஞானம் பொலிந்தநன்நாடு
    புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
பாரத நாடு பழம்பெரும் நாடே
    பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே.                                            2
 
இன்னல்வந் துற்றிடும் போததற்கஞ்சோம்
    ஏழையராகி இனிமண்ணில் துஞ்சோம்
தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்
    தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்
கன்னலும் தேனும் கனியும் இன்பாலும்
    கதலியும் செந்நெலும் நல்கும் எக்காலும்
உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
    ஓதுவம் இஃதை எமக்கிலைஈடே.                                               3
 
 
 
 
 
3. தமிழ்
 
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
            இனிதாவது எங்கும் காணோம்.
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
            இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
            வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
            பரவும்வகை செய்தல் வேண்டும்.                                       1
 
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
            வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
             உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
            வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
            தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!                                                2
 
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
            தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
            தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
            சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
            அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.                                3
 
உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
            வாக்கினிலே ஒளி யுண்டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
             கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
             விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
             இங்கமரர் சிறப்புக் கண்டார்.                                             4
 
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஆ) பாரதிதாசன்
 
புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை, இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920 ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார்.
நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.
தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் "எங்கெங்கு காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது. பாரதியின் மரபைப் பின்பற்றி அவரது கொள்கையில் ஈடுபாடு கொண்டு தன் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்.
புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைபெயர்களில் எழுதி வந்தார்.
திராவிட இயக்கச் சார்பும் தமிழினப் பற்றும், தமிழ் மொழிப்பற்றும் மூட நம்பிக்கைச் சாடலும் மொழி விடுதலையும், பெண் விடுதலையும் இவருடைய பாடல்களில் மிளிர்கின்றன. எல்லோராலும் புரட்சிக் கவி என்றும் பாவேந்தர் என்றும் அழைக்கப் பெறுகிறார்.
அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, சஞ்சீவி பர்வதத்தின் சாரல், இசை அமுது முதலியன இவருடைய படைப்புகளாகும். பிசிராந்தையார், நல்ல தீர்ப்பு ஆகிய கவிதை நாடகங்களையும் படைத்துள்ளார். குயில் என்னும் இதழின் ஆசிரியராக இருந்தார். 
கவிஞர் 21.4.1964இல் இயற்கை மரணம் எய்தினார்.
 
 
1. சங்க நாதம்
 
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்:
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே!
சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென்று ஊதூது சங்கே!
பொங்கும் தமிழர்க்கின்னல் விளைத்தால் சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு!
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்.
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துகள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனில்கமழ்ந்து லீரஞ்செய்கின்றதமிழ் எங்கள் மூச்சாம்!
(எங்கள்)
 
2. பேரிகை
 
துன்பம் பிறர்க்கு நல் இன்பம் தமக்கெனும்
            துட்ட மனோபாவம்,
அன்பினை மாய்க்கும்; அறங்குலைக்கும்; புவி
            ஆக்கந் தனைக் கெடுக்கும்!
வம்புக் கெலாம் அதுவே துணை யாய்விடும்
            வறுமையெலாம் சேர்க்கும்!
'இன்பம் எல்லார்க்கும்' என்றே சொல்லிப் பேரிகை
            எங்கும் முழக்கிடுவாய்!                                                        1
 
தாமும் தமர்களும் வாழ்வதற்கே இந்தத்
            தாரணி என்ற வண்ணம்,
தீமைக் கெல்லாம் துணையாகும்; இயற்கையின்
            செல்வத்தையும் ஒழிக்கும்!
தேமலர்ச் சோலையும் பைம்புனல் ஓடையும்
            சித்தத்திலே சேர்ப்போம்!
'க்ஷேமம் எல்லார்க்கும்' என்றே சொல்லிப் பேரிகை
            செகம் முழக்கிடுவாய்!                                                          2
 
நல்லவர் நாட்டினை வல்லவர் தாழ்த்திடும்
            நச்சு மனப் பான்மை
தொல்புவி மேல்விழும் பேரிடியாம்; அது
            தூய்மைதனைப் போக்கும்!
சொல்லிடும் நெஞ்சில் எரிமலை பூகம்பம்
            சூழத் தகாது கண்டாய்!
'செல்வங்கள் யார்க்கும்' என்றே சொல்லிப் பேரிகை
            திக்கில் முழக்கிடுவாய்!                                                        3
 
 
3. கூடித் தொழில் செய்க
கூடித் தொழில் செய்தோர் கொள்ளைலா பம்பெற்றார்
வாடிடும் பேதத்தால் வாய்ப்பதுண்டோ தோழர்களே!
 
நாடிய ஓர் தொழில் நாட்டார் பலர் சேர்ந்தால்
கேடில்லை நன்மை கிடைக்குமன்றோ தோழர்களே!
 
சிறுமுதலால் லாபம் சிறிதாகும்; ஆயிரம்பேர்
உறுமுதலால் லாபம் உயருமன்றோ தோழர்களே!
 
அறுபதுபேர் ஆக்கும் அதனை ஒருவன்
பெறுவதுதான் சாத்தியமோ பேசிடுவீர் தோழர்களே!
 
பற்பலபேர் சேர்க்கை பலம்சேர்க்கும்; செய்தொழிலில்
முற்போக்கும் உண்டாகும் முன்னிடுவீர் தோழர்களே!
 
ஒற்றைக் கைதட்டினால் ஓசை பெருகிடுமோ
மற்றும் பலரால் வளம்பெறுமோ தோழர்களே!
 
ஒருவன் அறிதொழிலை ஊரான் தொழிலாக்கிப்
பெரும்பே றடைவதுதான் வெற்றி என்க தோழர்களே!
 
இருவர் ஒருதொழிலில் இரண்டுநாள் ஒத்திருந்த
சரிதம் அரிதுநம் தாய்நாட்டில் தோழர்களே!
 
நாடெங்கும் வாழ்வதிற் கேடொன்று மில்லைஎனும்
பாடம் அதைஉணர்ந்தாற் பயன்பெறலாம் தோழர்களே!
 
பீடுற்றார் மேற்கில் பிறநாட்டார் என்பதெல்லாம்
கூடித் தொழில்செய்யும் கொள்கையினால் தோழர்களே!
 
ஐந்துரூபாய்ச் சரக்கை ஐந்து பணத்தால் முடித்தல்
சிந்தை ஒருமித்தால் செய்திடலாம் தோழர்களே!
 
சந்தைக் கடையோநம் தாய்நாடு? லக்ஷம்பேர்
சிந்தை வைத்தால்நம்தொழிலும் சிறப்படையும் தோழர்களே!
 
வாடித் தொழிலின்றி வறுமையாற் சாவதெல்லாம்
கூடித் தொழில்செய்யாக் குற்றத்தால் தோழர்களே!
 
கூடித் தொழில்செய்யாக் குற்றத்தால் இன்றுவரை
மூடிய தொழிற்சாலை முக்கோடி! தோழர்களே!
 
கூடைமுறம் கட்டுநரும் கூடித்தொழில்செய்யின்
தேடிவரும் லாபம் சிறப்புவரும் தோழர்களே!
 
 
இ) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
 
தமிழ் நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள குமரி மாவட்டத்தின்சிவதாணுப்பிள்ளை, ஆதிலட்சுமி தம்பதியர்க்கு இரண்டு பெண் குழந்தைகளை அடுத்து மூன்றாவதாக 1876 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 27 ஆம் நாள் பிறந்தார் கவிமணி. பிறந்த குழந்தைக்குத் தான் வணங்கும் தேசிக விநாயகரின் பெயரை வைத்தார் சிவதாணுப்பிள்ளை. ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார். எம்.ஏ. படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். உமையம்மை எனும் பெண்ணை 1901 ல் மணம் முடித்தார். நாகர்கோவிலிலுள்ள கோட்டார் ஆரம்பப்பள்ளி, நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி மற்றும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரி போன்றவற்றில் ஆசிரியராக 36 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
மலரும் மாலையும் என்ற இவரது நூலும் மருமக்கள்வழி மான்மியம் என்ற நூலும் இவரது படைப்புகளுள் குறிப்பிடத்தகுந்தன.
எட்வின் ஆர்னால்ட் எழுதிய புத்தரின் வரலாற்றைக் குறும் ‘The Light of Asiaஎன்ற நூலை 'ஆசிய ஜோதி' என்ற பெயரிலும், பாரசீகக் கவிஞர் உமர் கய்யாமின்பாடல்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார்.  'காந்தளூர்ச்சாலை' பற்றிய ஆய்வு நூலை எழுதினார்.
சென்னை, பச்சைப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் கவிமணி என்ற பட்டம் வழங்கினார்.
கவிஞார் 1954 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 இல் இயற்கை எய்தினார்.
 
பெண்களின் உரிமைகள்
 
மங்கையா ராகப் பிறப்பதற்கே - நல்ல
     மாதவஞ் செய்திட வேண்டும், அம்மா!
பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ - இந்தப்
     பாரில் அறங்கள் வளரும், அம்மா!
 
அல்லும் பகலும் உழைப்பவர் ஆர்? - உள்ளத்து
     அன்பு ததும்பி யெழுபவர் ஆர்?
கல்லும் கனியக் கசிந்துருகித் - தெய்வ
     கற்பனை வேண்டித் தொழுவர் ஆர்?
 
ஊக்கம் உடைந்தழும் ஏழைகளைக் காணில்
     உள்ளம் உருகித் துடிப்பவர் ஆர்?
காக்கவே நோயாளி யண்டையிலே - இரு
     கண்ணிமை கொட்டா திருப்பவர் ஆர்?
 
 
 
 
சிந்திய கண்ணீர் துடைப்பவர் ஆர்? - பயம்
     சிந்தை யகன்றிடச் செய்பவர் ஆர்?
முந்து கவலை பறந்திடவே - ஒரு
     முத்தம் அளிக்க வருபவர் ஆர்?
 
உள்ளந் தளர்வுறும் நேரத்திலே - உயிர்
     ஊட்டும் உரைகள் உரைப்பவர் ஆர்?
அள்ளியெடுத்து மடியிருத்தி - மக்கள்
     அன்பைப் பெருக்கி வளர்பவர் ஆர்?
 
நீதி நெறிநில்லா வம்பருமே - நல்ல
     நேர்வழி வந்திடச் செய்பவர் ஆர்?
ஓதிய மானம் இழந்தவரை - உயர்
     உத்தமர் ஆக்க முயல்பவர் ஆர்?
 
ஆவி பிரியும்அவ் வேளையில் - பக்கத்து
     அன்போ டகலா திருப்பவர் ஆர்?
பாவி யமனும் வருந்திடாமல் - ஈசன்
     பாதம் நினைந்திடச் செய்பவர் ஆர்?
 
ஏங்கிப் புருஷனைத் தேடியழும் - அந்த
     ஏழைக் கிதஞ்சொல்லி வாழ்பவர் ஆர்?
தாங்கிய தந்தை யிழந்தவரைத் - தினம்
     சந்தோஷ மூட்டி வளரப்பவர் ஆர்?
 
சின்னஞ் சிறிய வயதினிலே - ஈசன்
     சேவடிக் கன்பெழச் செய்பவர் ஆர்?
உன்னம் இளமைப் பருவமெலாம் - களிப்பு
     உள்ளம் பெருகிடச் செய்பவர் ஆர்?
 
மண்ணக வாழ்வினை விட்டெழுந்து - மனம்
     மாசிலா மாணிக்க மாயொளிர்ந்து
விண்ணக வாழ்வை விரும்பிடவே - நிதம்
     வேண்டிய போதனை செய்பவர் ஆர்?
 
 
அன்பினுக் காகவே வாழ்பவர் ஆர்? - அன்பின்
     ஆவியும் போக்கத் துணிபவர் ஆர்?
இன்ப உரைகள் தருபவர் ஆர்? - வீட்டை
     இன்னகை யாலொளி செய்பவர் ஆர்?
 
இப்பெரு நற்கரு மக்களெல்லாம் - உமக்கு
     ஈசன் அளித்த உரிமைகளாம்
மெய்ப்பணி வேறும் உலகில் உண்டோ? - இன்னும்
     வேண்டிப் பெரும்வரம் ஒன்றுளதோ?
 
மங்கைய ராகப் பிறந்ததனால் - மனம்
     வாடித் தளர்ந்து வருந்துவதேன்?
தங்கு புவியில் வளர்ந்திடும் கற்பகத்
     தாருவாய் நிற்பதும் நீர் அலவோ?
 
செம்மையிற் பெற்ற குணங்களெலாம் - நீங்கள்
     செய்வினை யாலே திருத்துவீரேல்,
இம்மைக் கடன்கள் முடித்திடவே - முத்தி
     எய்திச் சுகமா யிருப்பீரே.
 
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஈ) நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை
 
“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்க பிள்ளை தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுகிறார்.
கவிஞர் நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள  மோகனூர் என்னும் சிற்றூரில்  வெங்கடராமன், அம்மணியம்மாள் ஆகியோருக்கு 1888 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் நாள் பிறந்தார்.  தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். ஆங்கில அரசின் தடையுத்தரவையும் மீறிக் கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1932 இல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர். ‘தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்’ பதவியும், `பத்ம பூஷண்’ பட்டமும் பெற்றவர். சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தவர்.
‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மலைக் கள்ளன், தாமரைக்கன்னி, கற்பகவல்லி, மரகத வல்லி, காதல் திருமணம் முதலியன இவர் எழுதிய நாவல்களாகும். 1972 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் நாள் கவிஞர் இயற்கை எய்தினார்.
சான்றோரைப் போற்றுதல்
1) இளங்கோவடிகள்
 
முத்தமிழும் தித்திக்க முழங்கும் காதை
       மூவேந்தர் ஆட்சிமுறை அளக்கும் செங்கோல்
‘பத்தினியென் றொருசொல்லைப் பகரும் போதே
       பாரெங்கும் வேறெவரும் அல்ல வென்னும்
உத்தமிஅக் கண்ணகியின் ஒளிஉண் டாக்கி
       உள்ளத்தில் தெள்ளறிவை ஊற்றும் செஞ்சொல்,
இத்தகைய காவியத்தை எமக்குத் தந்த
       இளங்கோவை உளங்குளிர எண்ண வேண்டும்.                   1
 
‘நெடுங்காலம் அறம்வழுவாப் பாண்டி நாட்டில்
       நீதிகொன்ற நீதானோ மன்னன்?‘ என்று
கடுங்கோபம் கனல்பறக்கக் கடிந்து சொல்லிக்
       கற்பரசி தன்பிழையைக் காட்டக் கண்டான்;
அடங்காத மானம்வந்(து) அழுத்திக் கொள்ள
       அக்கணமே அறியணையில் உயிரை நீத்த
இடங்காணும் தமிழரசின் இயல்பைக் காட்டும்
       இளங்கோவை மறப்போமோ எந்த நாளும்.                          2
பண்டிருந்த தமிழர்களின் பரந்த வாழ்வில்
       பலகலையும் பரிமளித்த உண்மை பாடிக்
கொண்டிருந்த அறநெறியின் சிறப்பும் கூறி,
       ‘கொடுங்கோலை எதிர்த்தகற்றும் திறமும் கொண்ட
பெண்டினத்தின் வழிவந்தோம் நாங்கள்‘ என்னும்
       பெருமையையும் தமிழ்மக்கள் பெறுவ தாக்கி
எண்டிசையும் புகழ் ஒலிக்கும் சிலம்பைச் சொன்ன
       இளங்கோவின் திருநாமம் என்றும் வாழும்.                            3
 
2) கம்பன்
 
எண்ணிஎண்ணித் திட்டம்போட் டெழுதி னானோ!
       எண்ணாமல் எங்கிருந்தோ கொட்டி னானோ!
புண்ணியத்தால் உடன்பிறந்த புலமைதானோ!
       போந்தபின்னர் ஆய்ந்தறிந்து புகன்ற தாமோ?
தண்ணியல்சேர் தமிழணங்கின் தவமே தானோ!
       தயரதனும் சனகனுமே தரித்த நோன்போ!
விண்ணமுதின் சுவைகெடுத்த கம்பன் பாடல்
       விரிந்தவிதம் என்றென்றும் வியப்பே ஆகும்!                        1
 
சாதிமத விலங்கினம்வாழ் காட்டை மாற்றிச்
       சமனாக்கிச் சமரசமாம் தளத்தின் மேலே
நீதிநெறி கருணையெனும் நிலைகள் நாட்டி
       நித்தியமாம் சத்தியத்தின் சிகரம் நீட்டிக்
காதல்அறம் வீரம்எனும் கொடியைத் தூக்கிக்
       கம்பனென்பான் கட்டிவைத்த கனக மாடம்
ஆதிமுதற் பரம்பொருளின் சக்தி யாகும்
       அன்னையெங்கள் தமிழ்த்தெய்வம் அமரும் கோயில்.           2
 
ஏழையென்று செல்வனென்று பேதம் எண்ணார்
       எல்லோரும் எச்சுகமும் எளிதே பெற்றுக்
கோழையென்ற குடிசனங்கள் எவரும் இன்றிக்
       கொடுங்கோலும் கடுங்காவல் இல்லா நாட்டில்
வாழுதற்கு வேண்டும் எல்லா வளமும் தாங்கி
       வந்தபகை நொந்து விழும் பொறிகள் வைத்தே
ஆழியுடன் தமிழ்த்தாயார் அரசு காக்கும்
       அற்புதமாம் கோட்டையன்றோ கம்பன் பாட்டு?                  3
 
வேந்தருக்கும் குடிகளுக்கும் பொருத்தம் சொல்லி
       வேற்றரசர் படையெடுக்கா வீரம் கூறித்
தேர்ந்தபல கலையறிவின் இன்பம் தேக்கித்
       தெய்வபக்தி நட்பிவற்றின் திறமும் சேர்த்துக்
காந்தனுக்கும் காதலிக்கும் கற்பைக் காட்டிக்
       கட்டாயப் படுத்தாமல் கடமை பேசிச்
சாந்தமுள்ள சமுதாய அமைப்புக் காக்கும்
       சாத்திரமாம் கம்பனென்பான் தந்த பாட்டு.                            4
 
கம்பனென்ற பெரும்பெயரை நினைக்கும் போதே
       கவிதையென்ற கன்னிகைதான் வருவாள் அங்கே;
அம்புவியில் கண்டறியா அழகினோடும்
       அமரருக்கும் தெரியாத அன்பி னோடும்
இன்பமென்று சொல்லுகின்ற எல்லாம் ஏந்தி
       இன்னிசையும் நன்னயமும் இணைத்துக் காட்டித்
துன்பமென்ற மனத்துயரைத் துடைத்து விட்டுத்

 

       தூங்காமல் தூங்குகின்ற சுகத்தை ஊட்டும்.                            5


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard