அ) பாரதியார்
‘கவிதை எழுதுபவன் கவியன்று; கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி’ என்றும் ‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்றும் சொன்ன பாரதிசின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு திசம்பர் 11, 1882 இல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். பாரதியாரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார். 1887ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரது பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி’ என்றும் ‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்றும் சொன்ன பாரதிசின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு திசம்பர் 11, 1882 இல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். பாரதியாரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார். 1887ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரது பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.
தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார்.1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சில காலத்திலேயே, அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு ஆண்டுகள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர்,1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது.
தேச பக்தி, தெய்வபக்தி, தாய்மொழிப்பற்று, பெண் விடுதலை, சமுதாய நலன் போன்றவை இவரது பாடல்களில் விஞ்சி நிற்கின்றன. மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியப் பணி, இதழாசிரியர், மொழி பெயர்ப்பாளர், கட்டுரையாசிரியர் என வேறுபட்ட பணிகளில் ஈடுபட்டிருந்தார். பாஞ்சாலி சபதம் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு என்பன இவரது குறிப்பிடத்தகுந்த படைப்புகள்.
1921 ஆம் ஆண்டு சூலை மாதம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார். பிறகு 1921ல் செப்டம்பர் 11 அதிகாலை இயற்கை எய்தினார்.
வசன கவிதை என்னும் கவிதை வடிவத்தினையும் கேலிச்சித்திரம் எனப்படும் வரையும் முறையையும் தமிழுக்கு முதலில் தந்த பெருமை பாரதியையே சாரும். தமிழ்ப் புதுக்கவிதையின் முன்னோடி இவரே.
அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர். தேசிய கவி என்ற முறையிலும் உலகம் தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் பாடியதாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் அளவிற்குச் சிறப்பு பெற்றவர்.
1. கண்ணன் பாட்டு
கண்ணன் என் தோழன்
(புன்னாகவராளி - திஸ்ரஜாதி ஏகதாளம் - வத்ஸல ரசம்)
பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப்
புறங்கொண்டு போவதற்கே - இனி
என்ன வழியென்று கேட்கில் உபாயம்
இருகணத் தேயுரைப் பான்; - அந்தக்
“கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக்
காணும் வழியொன் றில்லேன் - வந்திங்கு
உன்னை யடைந்தனன்’ என்னில் உபாயம்
ஒருகணத் தேயுரைப் பான்; 1
கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்
கலக்க மிலாதுசெய் வான்; - பெருஞ்
சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்
தேர்நடத் திக்கொ டுப்பான்; - என்றன்
ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்
உற்ற மருந்துசொல் வான்; - நெஞ்சம்
ஈனக் கவலைக ளெய்திடும் போதில்
இதஞ்சொல்லி மாற்றிடு வான்; 2
பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாலொரு
பேச்சினிலே சொல்லு வான்;
உழைக்கும் வழிவினை யாளும் வழிபயன்
உண்ணும் வழிவுரைப் பான்;
அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்
அரைநொடிக் குள்வரு வான்;
மழைக்குக் குடைபசி நேரத் துணவென்றன்
வாழ்வினுக் கெங்கள்கண் ணன். 3
கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்
கேலி பொறுத் திடுவான்; - எனை
ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்
ஆறுதல் செய்திடுவான்; - என்றன்
நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று
நான்சொல்லு முன்னுணர் வான்; - அன்பர்
கூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்பு
கொண்டவர் வேறுள ரோ? 4
உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்
ஓங்கி யடித் திடுவான்; - நெஞ்சில்
கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன்னாலங்கு
காறியுமிழ்ந்திடு வான்; - சிறு
பள்ளத் திலேநெடு நாளழு குங் கெட்ட
பாசியை யெற்றிவிடும் - பெரு
வெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லி
மெலிவு தவிர்த்திடு வான்; 5
சின்னக் குழந்தைகள் போல் விளையாடிச்
சிரித்துக் களித்திடுவான்; - நல்ல
வன்ன மகளிர் வசப்படவே பல
மாயங்கள் சூழ்ந்திடு வான்; - அவனை
சொன்ன படிநட வாவிடி லோமிகத்
தொல்லை யிழைத்திடுவான்; - கண்ணன்
தன்னை யிழந்துவிடில், ஐயகோ, பின்
சகத்தினில் வாழ்வதிலேன். 6
கோபத்தி லேயொரு சொல்லிற் சிரித்துக்
குலுங்கிடச் செய்திடு வான்; - மனஸ்
தாபத்தி லேயொன்று செய்து மகிழ்ச்சி
தளர்த்திடச் செய்திடுவான்; - பெரும்
ஆபத்தினில் வந்து பக்கத்தி லேநின்று
அதனை விலக்கிடுவான்; - சுடர்த்
தீபத்தி லேவிழும் பூச்சிகள் போல்வருந்
தீமைகள் கொன்றிடு வான்; 7
உண்மை தவறி நடப்பவர் தம்மை
உதைத்து நசுக்கிடுவான்; - அருள்
வண்மையி னாலவன் மாத்திரம் பொய்கள்
மலைமலை யாவுரைப்பான்; - நல்ல
பெண்மைக் குணமுடையான்; - சில நேரத்தில்
பித்தர் குணமுடையான்; - மிகத்
தண்மைக் குணமுடை யான்; சில நேரம்
தழலின் குணமுடை யான். 8
கொல்லுங் கொலைக்கஞ் சிடாத மறவர்
குணமிகத் தானுடையான்; - கண்ணன்
சொல்லு மொழிகள் குழந்தைகள் போலொரு
சூதறி யாதுசொல் வான்; - என்றும்
நல்லவ ருக்கொரு தீங்கு நண்ணாது
நயமுறக் காத்திடுவான்; - கண்ணன்
அல்லவ ருக்கு விடத்தினில் நோயில்
அழலினி லுங்கொடி யான். 9
காதல் விளைய மயக்கிடும் பாட்டினில்
கண்மகிழ் சித்திரத்தில் - பகை
மோதும் படைத்தொழில் யாவினுமே திறம்
முற்றிய பண்டிதன்காண்; - உயர்
வேத முணர்ந்த முனிவ ருணர்வினில்
மேவு பரம்பொருள் காண்; - நல்ல
கீதை யுரைத்தெனை இன்புறச் செய்தவன்
கீர்த்திகள் வாழ்த்திடு வேன். 10
பாரத நாடு
2. எங்கள் நாடு
[ராகம்-பூபாளம்]
மன்னும் இமயமலை யெங்கள் மலையே
மாநில மீதிது போற் பிறிதிலையே!
இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரதுவேறே?
பன்னரு முபநிட நூலெங்கள் நூலே
பார்மிசை யேதொரு நூல் இது போலே!
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே
போற்றுவம் இஃதை எமக்கிலைஈடே. 1
மாரத வீரர் மலிந்தநன் னாடு
மாமுனி வோர்பலர் வாழ்ந்த பொன்னாடு
நாரத கான நலந்திகழ் நாடு
நல்லன யாவையும் நாடுறும் நாடு
பூரண ஞானம் பொலிந்தநன்நாடு
புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
பாரத நாடு பழம்பெரும் நாடே
பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே. 2
இன்னல்வந் துற்றிடும் போததற்கஞ்சோம்
ஏழையராகி இனிமண்ணில் துஞ்சோம்
தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்
தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்
கன்னலும் தேனும் கனியும் இன்பாலும்
கதலியும் செந்நெலும் நல்கும் எக்காலும்
உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஓதுவம் இஃதை எமக்கிலைஈடே. 3
3. தமிழ்
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்.
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும். 1
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்! 2
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும். 3
உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளி யுண்டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார். 4