தனி மனித நோக்கிலும் மதவாத அடிப்படையிலும் பாடலாசிரியர் வைரமுத்துவின் மீது வைக்கப்படும் கீழ்த்தரமான வசைகள் கண்டிக்கத்தக்கவை என்று ஒப்புக்கொள்ளும் அதே வேளையில் ஆண்டாள் குறித்த அவரது உரையில் அதன் எழுத்து வடிவமாக தினமணியில் வெளியான கட்டுரையில் அவர் முன் வைத்த வாதங்களை அடிப்படையாக வைத்து சில மாற்றுக்கருத்துக்களைத் தொகுத்துப் பதிவு செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு மதவாதிகளையும் பக்திமான்களையும் மட்டுமே சார்ந்ததல்ல என்பதையும் சொல்லியாக வேண்டியிருக்கிறது.
தமிழ் மொழியின் மகத்தான ஓர் ஆளுமை ஆண்டாள். எந்த மானுடனையும் மணாளனாய் நாட மாட்டேன் என்று தன் உடல் மீதும், உயிர் மீதும் தனக்குள்ள உரிமையை உரத்துப் பிரகடனம் செய்த ஒரு பெண்ணியவாதி. பாரதியின் சீடரான வ ரா, 1945 ஆம் ஆண்டில் எழுதிய தனது ‘கோதைத் தீவு’ நாவலில் பெண் விடுதலையின் குறியீடாக ஆண்டாளையே நிறுத்துகிறார். அந்த வகையில் வைரமுத்துவின் கட்டுரைக் கருத்துக்களை எதிர்கொண்டு பதிலளிக்கும் கடமை தமிழ் இலக்கிய ஈடுபாடும் தேர்ச்சியும் உடையவர்களுக்கும், தங்கள் பெண்மொழிக்கு ஆண்டாளை முன்னுதாரணமாக முன்னோடியாகக் சொல்லிக் கொண்டிருக்கும் பெண்ணியவாதிகளுக்கும் கூட உரியதுதான். `
எழுத்தாளர்கள் பலர் கூட்டாக விடுத்துள்ள ஒரு அறிக்கை, குறிப்பிட்ட ஒரு சாராருக்கு மட்டுமே உரியவள் அல்ல ஆண்டாள் என்றும் உலகளாவிய கவியாகிய அவளைப்பற்றிக் கருத்துச்சொல்லும் உரிமை எல்லோருக்கும் உண்டென்றும் சொல்கிறது. அதை முழுமையாக உடன்படும் அதே நேரத்தில் பிறழ்வான கருத்துக்களுக்குக் கருத்தியல் ரீதியாக பதில் சொல்லும் பொறுப்பு அறிவுலகுக்கு இருக்கிறதென்பதையும் நிராகரித்து விட முடியாது. தவறான, அரைகுறையான, உறுதிப்படுத்தப்படாத ஊகங்களும் அனுமானங்களும் முன்வைக்கப்பட்டு ஒரு இலக்கிய ஆளுமையின் ஒட்டு மொத்தப் பங்களிப்பும் கருத்தில் கொள்ளப்படாமல் மேலோட்டமாக மட்டுமே எழுதப்பட்டிருக்கும் ஒரு கட்டுரை, கருத்துச் சுதந்திரம் என்ற ஒன்றை மட்டும் காரணமாகக் காட்டித் தூக்கிப்பிடிக்கப்படுவதை ஏற்பதற்கில்லை.
உணர்ச்சியின் பிடியில் மட்டுமே ஆட்கொள்ளப்பட்டிருக்கும் எந்தத் தரப்பின் சார்பு நிலையும் இல்லாமல் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் உரை அல்லது கட்டுரையை அது வைத்திருக்கும் கருத்தடிப்படையில் மட்டுமே எதிர்கொண்டு உரிய எதிர்வினைகளை நடுநிலையோடு ஆற்றியாக வேண்டியிருக்கிறது. அதைத் தவற விடும் நிலையில் தமிழ் இலக்கிய வரலாற்றின் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமை ஒருவரைப்பற்றி வைரமுத்து போன்ற பிரபலங்கள் முன்வைக்கும் நீர்த்துப்போன கருத்துக்கள் மட்டுமே பரவலான மக்கள் திரளைச்சென்றடையக்கூடிய அபாயம் இருக்கிறதென்பதை சிந்தனையாளர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
சாதி சமய மறுப்பாளர் என்று தன்னை வெளிப்படையாகப் பிரகடனம் செய்து கொள்ளும் வைரமுத்து போன்ற ஒருவர் ’தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்புடன் சில இலக்கியப்பிரதிகளை அணுகும்போது ஆண்டாள் பதித்திருக்கும் தமிழ் முத்திரைகளின் மீது மட்டுமே அவரது கவனம் குவிந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுவது இயற்கை; சமயம், வரலாறு, இயற்கை இறந்த நிகழ்வுகள் என்று பிற எல்லாவற்றையுமே ஒதுக்கி வைத்து விட்டு மொழியின் ஒயிலையும் இலக்கிய அழகியலையும் மட்டுமே பார்க்க எண்ணினாலும் கூட அதற்கான வாய்ப்பை அளவுக்கு அதிகமாகவே ஏற்படுத்தித் தருபவை ஆண்டாளின் பாடல்கள். ஆனால் தலைப்பை மட்டுமே தமிழ் என்று தந்து விட்டு அதிலிருந்து அவர் தடம் மாறிச்சென்று விட்டாரோ! என்று எண்ண வைக்கும் வகையிலேயே கட்டுரையின் தொனி தொடக்கம் முதல் அமைந்திருக்கிறது. (அந்தத் தலைப்புமே கூட இரவல்தான் என்பதும் பிற கவிஞர்களின் பாடல்வரிகளை நாம் மறந்து விடாமல் இருக்க அவ்வப்போது நினைவுபடுத்தும் அவரது வாடிக்கையான புத்திசாலித்தனமான தழுவல் போக்குதான் அது என்பதும் வேறு விஷயம்)
- “கொழுந்தமிழும் செழுந்தமிழும் பழந்தமிழும் இளந்தமிழும் வசந்த காலக்கிளைகளில் கொழுந்தெழுந்து வருவது போலக்குழைந்தெழுந்து வருகின்றன’’
- “ஆண்டாள் இறைத்த நீர் கண்ணன் என்ற கழனி சேர்வதற்கு முன் தமிழ் என்ற வாழையைத் தழைக்க வைத்திருக்கிறது’’
என்று கட்டுரையின் இடையிடையே சொல் அலங்காரங்களைச் செருகியதைத் தவிர ஆண்டாளின் தமிழில் கொழிக்கும் அழகை எடுத்துக்காட்டும் முயற்சி கட்டுரையில் எதுவும் இல்லை. மாறாகக் கட்டுரையின் இறுதியில் எங்கிருந்தோ எடுத்தாண்டிருக்கும் உறுதிப்படுத்தப்படாத ஒரு மேற்கோளை முன் முடிவாகக்கொண்டு அதை நோக்கியே கட்டுரை மையப்படுத்தப்பட்டிருக்கிறது. (அந்த மேற்கோள் பற்றிய சர்ச்சைகளே ஏராளம்)
- “இப்படி ஒரு விடுதலைக்குரல் எப்படி சாத்தியம்’’
- “இந்த உறுதியும் உணர்ச்சியும் எதற்கான முன்னோட்டம்’’
- “கன்னி கழியாத பெண்ணின் பாலியல் உரையாடலுக்கு எது அடிகோலியது’’
- “கனவு காணும் வேளையிலும் கலவி கண்டு விண்டுரைக்கும் துணிச்சலும் சுதந்திரமும் ஆண்டாளுக்கு வாய்த்தது எப்படி’’
என்றும் திரும்பத் திரும்ப எழுப்பப்படும் கேள்விகளும்,
அந்தக் கேள்விக்கு சாதகமான பாடல்களை மட்டுமே தேர்ந்து முன் வைத்தபடி அவள் “தமிழ் வெட்கமறுத்து விளையாடுகிறது’’ என்ற முடிவுக்கு வந்து சேருவதும், அவள் பிறப்பு குறித்து ஏதும் பெறப்படாததாலும், ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும் “குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள சாதிக்கட்டுமானமுள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும், சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாக அடைந்துவிட்டதாலும், கோயிலுக்குப் பெண்ணைக் காணிக்கையாக்குவதை அரசும் சமூகமும் அங்கீகரித்ததாலும் கலாச்சார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள்.” என்று இறுதியில் ஆங்கில மேற்கோளுக்கு வந்து முடிப்பதும் தான் முன்னனுமானம் செய்து கொண்ட ஒரு கருதுகோளை (Hypothesis) உறுதிப்படுத்திக்கொள்ளும் முயற்சிதான் கட்டுரையாளரின் நோக்கம் என்பதை எடுத்துக்காட்டி விடுகிறது.
பாலியல் படிமங்கள் சொல்லப்பட வேண்டுமென்றால் அந்தப்பெண்ணின் பிறப்புப் பின்புலம் வேறுவகையாகத்தான் இருந்தாக வேண்டும் என்ற முடிவை எட்ட வைக்கும் ஆண்நோக்குக் கருதுகோள் மட்டுமே அது. அந்தக்கருத்தையுமே கூட ‘பக்தர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், ஆணாதிக்க மறுப்பாளர்களும், சமய மறுப்பாளர்களும் எண்ணிப்பார்ப்பார்கள்’ என்று கூறுகிறார் வைரமுத்து.