சில வருடங்களுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நண்பர் ஒருவருடன் சென்றிருந்தேன். வரலாற்றிலும் இலக்கியங்களிலும் கோயில் சிற்பங்களிலும் அவருக்கும் நல்ல ஆர்வமும் ஈடுபாடும் உண்டு.கோயிலில் உள்ள விஷயங்களையெல்லாம் நிதானமாக ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டு உரையாடியபடியே வந்தோம். நடராஜர் வீற்றிருக்கும் கனகசபையின் கூரையில் வேயப்பட்டுள்ள தங்க ஓடுகளைத் தலையைத் தூக்கி நிமிர்ந்து பார்த்தோம். “சோழனும் பாண்டியனும் போட்டி போட்டுக்கொண்டு இந்தக் கோயிலை அலங்கரித்திருக்கிறார்கள் பார்த்தீர்களா? ‘சென்னி அபயன் குலோத்துங்கச் சோழன் தில்லைத் திருவெல்லை பொன்னின் மயமாக்கிய வளவர் போரேறு’ என்று பெரியபுராணத்தில் ஒரு இடத்தில் வருகிறது. ஜடாவர்மன் சுந்தர பாண்டியனுக்கு ‘கோயில் பொன்வேய்ந்த பெருமாள்’ என்றே ஒரு பட்டப்பெயர் உண்டு. தமிழ் மன்னர்கள் அன்று இங்கே கொண்டு வைத்த தங்கம் இவ்வளவு நூற்றாண்டுகளுக்குப் பிறகும் எப்படி தகதகக்கிறது பாருங்கள்.” – மிகவும் நெகிழ்ச்சியுடன் சொல்லிக்கொண்டு போனார் நண்பர்.
என் முகத்தில் ஒரு விரக்தியான புன்னகை அரும்பியதைக் கவனித்து அவர் பேச்சை நிறுத்தினார். என்ன ஏதாவது தப்பாகச் சொல்லிவிட்டேனா என்பது போலப் பார்த்தார். “நீங்கள் சொன்னது சரிதான். ஆனால், அந்தப் பொன் அல்ல இப்போது நீங்கள் இங்கே பார்ப்பது” என்றேன். அவர் ஒரே நேரத்தில் ஆச்சரியமும் பதற்றமும் அடைந்தார். அக்கோயில் வரலாற்றின் சில பக்கங்களை அவருக்கு விளக்கினேன். இக்கட்டுரைக்கான பின்னணி இதுதான்.
ஸ்ரீரங்கம், மதுரைக் கோயில்கள் 13-14ம் நூற்றாண்டுகளில் இஸ்லாமியப் படையெடுப்புகளால் சிதைக்கப்பட்டு மீண்டும் புனரமைக்கப்பட்டது குறித்த வரலாறு இப்போது ஓரளவு பரவலாகத் தமிழ் மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. மதுரைக் கோயிலில் இது குறித்த ஒரு தகவல் பலகையும் உள்ளது. ஆனால், சிதம்பரம் மற்றும் இன்னும் சில முக்கியக் கோயில்களும் இதே போன்ற தாக்குதல்களுக்கு உள்ளாகிப் பிறகு அழிவிலிருந்து மீண்டெழுந்தன என்பது பலர் அறியாதது.
“மாலிக் காபூர் உறையூருக்கு அண்மையிலிருந்த வீரபாண்டியனின் தலைநகரான ‘பீர்தூல்’ என்ற இடத்தை நோக்கித் தன் படைகளைச் செலுத்தினான். வீரபாண்டியனின் படைகளில் பணிபுரிந்து வந்த 20,000 முஸ்லீம் படைவீரர்கள் தக்க சமயத்தில் தம் கடமையையும் நன்றியையும் மறந்தவர்களாய் மாலிக்காபூர் படையினருடன் சேர்ந்து கொண்டனர். வீர்பாண்டியன் ஊரைவிட்டே ஓடிவிட்டான்... காடுகளில் ஒளிந்து ஒளிந்து வெளிப்பட்டான். தன் கைகளிலிருந்து நழுவி நழுவிச் சென்ற வீரபாண்டியனைத் துரத்திக் கொண்டு மாலிக்காபூர் சிதம்பரம் வந்தடைந்தான். ஆங்குப் பொன்னம்பலத்தை அடியுடன் பேர்த்தெடுத்துக் கொண்டு கோயிலுக்கு எரியூட்டினான். ஊருக்கும் தீயிட்டான். உடைமைகளைச் சூறையாடினான். ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் கொன்று குவித்து வெறியாட்டயர்ந்தான். சிதம்பரத்தில் இருநூற்றைம்பது யானைகளைக் கைப்பற்றினான். கொள்ளையடித்த பொன்னையும் மணியையும் யானைகளின் மேல் ஏற்றிக் கொண்டான். மீண்டும் பீர்தூலை நோக்கித் தன் படையைச் செலுத்தினான். ஆங்காங்கே கண்ணில்பட்ட கோயில்கள் அத்தனையும் இடித்துத் தரைமட்டமாக்கினான் (கி.பி. 1311). திருவரங்கத்தையும் அவன் விட்டு வைத்தானல்லன்.” (தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்”, கே.கே. பிள்ளை, பக். 386-387).
மேற்கண்ட பிரபல வரலாற்றுப் பாடப்புத்தகத்தில்தான் இந்த வர்ணனையை நான் முதலில் கண்டேன். இதற்கு அடிப்படையாக இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்களே எழுதிவைத்த ஆதாரபூர்வமான ஆவணங்கள் உள்ளன என்பது பின்னர் தெரியவந்தது.
அலாவுதீன் கில்ஜியின் அரசவைப் புலவராகவும் பன்மொழி வல்லுநராகவும் இருந்த அமீர் குஸ்ரு எழுதியுள்ள ‘வெற்றிப் பொக்கிஷங்கள்’ (Khazain-Ul-Futuh) என்ற நூலில் மாலிக் காபூரின் படையெடுப்பு குறித்த விவரங்கள் தேதியிட்டுத் தரப்பட்டுள்ளன. இதன்படி, மாலிக் காபூரின் தமிழ்நாட்டுப் படையெடுப்பு நிகழ்ந்த காலம் 1311ம் ஆண்டு மார்ச் 10 முதல் ஏப்ரல் 25 வரை 45 நாட்கள். இப்படையெடுப்பு தொடர்பான ஒரு குறிப்பிட்ட பகுதியை அமீர் குஸ்ருவின் சொற்களிலேயே காண்போம்.
“பிர்தூலுக்கு வந்தபிறகு, மாலிக்காபூர் ராஜாவை காண்டூருக்கு துரத்திச் சென்றான். ராஜா மறுபடி தப்பித்து விட்டான். எனவே, காண்டூரில் முழுப் படுகொலை ஆணையிடப்பட்டது. அவன் ஜால்கோட்டாவுக்கு தப்பியோடி விட்டான் என்று தெரியவந்தது. அங்கு மாலிக் அவனை மீண்டும் துரத்தினான். அவன் காடுகளுக்குள் தப்பித்து ஒளிந்திருந்தான். மாலிக் அங்கு புகமுடியவில்லை. எனவே மீண்டும் காண்டூருக்குத் திரும்பிவந்தான். இங்கு, பிரம்ஹஸ்த்புரி என்ற இடத்தில் உள்ள தங்க விக்கிரகத்தைப் பற்றியும் அதைச் சுற்றிலும் யானைகள் கட்டிவைக்கப்பட்டிருப்பதையும் குறித்து அவன் அறிந்தான். அந்த இடத்தைக் குறிவைத்து மாலிக் ஒரு இரவுப் படையெடுப்பை நிகழ்த்தினான். காலையில் இருநூற்றைம்பதுக்குக் குறையாத எண்ணிக்கையில் யானைகளைக் கைப்பற்றினான். பிறகு, அவன் அந்த அழகிய கோயிலை அடியோடு தகர்ப்பதற்குத் தீர்மானித்தான். அது ஷாதாதின் சொர்க்கம் போல இருந்து, இழக்கப்பட்ட பிறகு அந்த நரகவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்ட ராமனின் பொன்மயமான இலங்கை போன்று இருந்தது என்று கூறலாம். மொத்தத்தில் அது ஹிந்துக்களுக்குப் புனிதமான ஒரு இடம். மாலிக் மிகவும் கவனத்துடன் அஸ்திவாரத்தோடு அதைப் பெயர்த்து எடுத்தான். பிராமணர்கள் உள்ளிட்ட காஃபிர்களின் தலைகள் அவர்கள் கழுத்திலிருந்து ஆடி ஆடி அவர்கள் கால்களின் கீழ் நிலத்தில் விழுந்தன. ரத்தம் வெள்ளமாகப் பெருகி ஓடிற்று.
லிங்க் மஹாதேவ் என்று அழைக்கப்படும் கற்சிலை அங்கு நீண்டகாலமாகவே நிறுவப்பட்டிருந்தது. காஃபிர் பெண்கள் தங்கள் பிறப்புறுப்புக்களை இதன்மீது தேய்த்து மகிழ்ச்சியடைவார்களாம். இந்த அனாசாரங்களை இது நாள்வரை இஸ்லாம் என்ற குதிரை உடைத்து எறியாமல் இருந்தது. இப்போது முஸல்மான்கள் எல்லா லிங்கங்களையும் அழித்தொழித்தார்கள். தேவ் நாரயண் கீழே விழுந்தது. அங்கே பீடத்தில் அமர்ந்திருந்த மற்ற கடவுளர்கள் இலங்கைக் கோட்டையில் சென்று விழுந்தனர். லிங்கங்களுக்கும் கால்கள் இருந்தால் அவையும் பறந்து சென்றிருக்கும். பெருமளவிலான பொன்னும், விலையுயர்ந்த நகைகளும் முஸல்மான்களின் கைகளில் வந்து சேர்ந்தது. இவ்வாறு தங்கள் புனிதக் கடமையை முடித்த பிறகு, ஹிஜ்ரி 710 ஜில்கிதா 13ம் நாள் (1311 ஏப்ரல் 4) முஸல்மான்கள் தங்கள் அரச கூடாரத்துக்குத் திரும்பினர். பிறகு பிர்தூலில் இருந்த அனைத்துக் கோயில்களையும் அழித்தனர். கொள்ளைகளைப் பொக்கிஷத்தில் சேர்த்தனர்.”
(மூலம்: The History of India as told by its own historians, Elliot and Dowson: Vol II, pp 90-91)
இந்த விவரணத்தில் அமீர் குஸ்ரு பாரசீக மொழி வடிவில் கூறும் ஊர்ப்பெயர்கள் குறிக்கும் இடங்களை வரலாற்றாசிரியர்கள் அடையாளம் காண முயன்றுள்ளார்கள். ‘பிர்தூல்’ என்பது ‘வீரதாவளம்’ எனப்பட்ட ஜெயங்கொண்ட சோழபுரம். ‘காண்டூர்’ என்பது ஹொய்சளர்களுக்கும் மதுரையிலிருந்து ஓடிவந்த வீரபாண்டியனுக்கும் முக்கியத் தளமாக விளங்கிய கண்ணனூர். ‘ஜால்கோட்டா’ எந்த ஊர் என்று தெரியவில்லை. கொள்ளிடத்திற்கு அருகில் இருந்த பழைய ‘நீர்க்கோட்டை’யைக் குறிக்கலாம் என்ற ஊகம் உள்ளது. பிரஹ்மஸ்த்புரி என்று குறிக்கப்படுவது சிதம்பரம்தான் என்று சீதாராம் கோயல்1, ரிச்சர்ட் எம் ஈடன்2உள்ளிட்ட பல வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். கிருஷ்ணசுவாமி ஐயங்கார் சிதம்பரத்திற்குரிய சைவாகமப் பெயரான பிரம்மபுரி என்பதன் திரிந்த வடிவமே அது என்கிறார். லிங்க் மஹாதேவ், தேவ் நாராயண் என்று இரு கடவுளர் பெயர்களையும் குறிப்பிடுவதால் நடராஜர், கோவிந்தராஜர் இருவரும் உறையும் சிதம்பரம் கோயில்தான் அது என்கிறார்3. விதிவிலக்காக, குடவாயில் பாலசுப்ரமணியன் இது பிரகதீஸ்வரபுரி எனப்படும் தஞ்சையைக் குறிக்கலாம் என்று கருதுகிறார். தஞ்சைப் பெரிய கோயிலின் மகாமண்டபம், திருச்சுற்று மாளிகை மற்றும் பிரகாரங்களிலுள்ள சிற்பங்களில் ஏற்பட்டுள்ள சீரழிவுகள், இந்தப் படையெடுப்பின் போது நிகழ்ந்திருக்கலாம் என்றும் சிவலிங்கத்தின் பீடத்தை உடைக்க முயற்சி செய்து அதில் இஸ்லாமியப் படையினர் தோல்வியுற்றனர் என்றும் கூறுகிறார்4. எப்படியானாலும், சோழநாட்டின் எல்லா முக்கியக் கோயில்களுமே இக்காலகட்டத்தில் மிக மோசமாக சேதப்படுத்தப்பட்டன என்பதில் ஐயமில்லை.
கலைப் பெட்டகங்களாகத் திகழ்ந்த கோயில்களின் இடிப்புகளையும், தமிழ்நாட்டு மக்களின் அழித்தொழிப்பையும் இவ்வாறு பெருமிதத்துடன் எழுதிச் செல்லும் இந்த அமீர் குஸ்ருதான் சிறந்த பாரசீக, உருது மொழிக் கவிஞராகவும் சூஃபி ஞானியாகவும் மேதையாகவும் அறியப்படுகிறார். அதற்கும் மேலாக, இந்தியாவின் மார்க்சிய வரலாற்றாசிரியர்கள் குஸ்ருவை மத நல்லிணக்க உணர்வின் சின்னமாகவும், இந்திய கலாசாரப் பன்மையின் அடையாளமாகவும் முன்வைப்பது குரூரமான நகைச்சுவை அன்றி வேறில்லை. இதே போன்ற விவரணங்கள் குஸ்ருவின் நண்பரும் கவிஞருமாகிய ஜியாசுதீன் பரனி எழுதிய Tarikhi Firoz Shahi என்ற நூலிலும், வேறு சில இஸ்லாமியப் பதிவுகளிலும் உள்ளன.
மாலிக் காபூர் படையெடுப்பின் இறுதிக் கட்டமாக மதுரை மாநகர் அழிக்கப்பட்டது. பின்பு 1318ல் குஸ்ரூகான் தலைமையில் மீண்டும் ஓர் இஸ்லாமியப் படை தில்லியிலிருந்து வந்து தமிழகக் கோயில்களைக் கொள்ளையடித்துச் சிதைத்துவிட்டுப் போயிற்று. 1320 முதல் சுமார் 50 ஆண்டுகள் மதுரையில் சுல்தானியக் கொடுங்கோலாட்சி இருந்தது. தமிழக வரலாற்றின் மிக இருண்ட காலகட்டம் இது.
பின்பு தென்னாட்டின் ஒளிவிளக்காக 1336ல் விஜயநகரப் பேரரசு உருவாகி எழுந்து வந்தது. அதன் நிறுவனர்களில் ஒருவரான புக்கராயரின் மருமகன் குமார கம்பணன் இஸ்லாமிய ஆட்சியை முறியடித்து 1371ல் மதுரையை மீட்டார். தமிழ் ஆவணங்கள் ‘வீர கம்பண உடையார்’ என்றே இவரது பெயரைக் குறிக்கின்றன. இதன்பிறகுதான் அழிந்து வீழ்ந்து கிடந்த தமிழ்நாட்டுக் கோயில்கள் ஏற்றம் பெற்றன. “துலுக்கர் கலகத்தால் நாற்பதாண்டுகள் கோயில்கள் மூடப்பெற்றிருந்தன” என்று 1370ம் ஆண்டைச் சேர்ந்த கம்பணரின் இன்னம்பூர் கல்வெட்டு (கும்பகோணம் அருகில்) கூறுகிறது. திருவையாறு வீரசாவண உடையார் சாசனம் (1381), திருவொற்றியூர் இராஜநாராயண சம்புவரையன் சாசனம் ஆகியவை துருக்கரால் சிதைக்கப்பட்ட கோயில்கள் புதுப்பிக்கப்பட்டதைக் கூறுகின்றன. இக்காலகட்டத்தில் சிதம்பரமும் மீண்டிருக்க வேண்டும். இப்போது நாம் காணும் கனகசபை முழுவதும் சோழரும் பாண்டியரும் அலங்கரித்ததல்ல, விஜயநகர அரசர் எழுப்பியது என்றே கருதவேண்டும். பிறகு தொடர்ச்சியாக விஜயநகர மன்னர்கள் சிதம்பரம் கோயிலில் செய்த திருப்பணிகள் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. 1428ல் மகாதேவராயர் கோயில் நிர்வாகத்தை சீரமைத்தது, 1503ல் திம்மராயர் ஒரு கிராமத்தை நிவந்தமாக அளித்தது, 1510ல் கிருஷ்ணதேவராயர் வடக்குக் கோபுரத்தைக் கட்டி, பல பூசைகளுக்கான கொடைகளை அளித்தது, 1529ல் அச்சுதராயர் தேர்த்திருவிழாவைச் சிறப்புற நடத்த 38 கிராமங்களை சர்வமானியமாக வழங்கியது, 1578ல் வேங்கடதேவராயர் துறவிகளுக்கும் பக்தர்களுக்கும் கட்டிச்சோறு வழங்க கிராமங்களை அளித்தது என்று இது தொடர்கிறது. பின்னர் நாயக்க மன்னர்களும் இப்பாரம்பரியத்தினைப் பின்பற்றினர்.
17ம் நூற்றாண்டில், ஹைதர் அலியின் ஆட்சிக் காலத்தில் சிதம்பரம் கோயில் மீண்டும் இஸ்லாமியத் தாக்குதல்களுக்கு இலக்காயிற்று. சுமார் 38 ஆண்டுகள் கோயில் பூஜையின்றி இருந்தது. இக்காலகட்டத்தில் நடராஜரின் திருவுருவம் வேறுவேறு இடங்களில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வந்தது என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைக்கின்றன.
இது குறித்த ஒரு செவிவழிச் செய்தியை வைத்து உ.வே.சாமிநாதையர் ‘அம்பலப்புளி’ என்ற சுவாரஸ்யமான கட்டுரையை எழுதியிருக்கிறார் (நினைவு மஞ்சரி இரண்டாம் பாகம், பக். 1-10). இஸ்லாமியப் படையெடுப்பு குறித்து அறியவந்த சிதம்பரம் தீட்சிதர்கள் இரவோடிரவாக நடராஜரின் மூர்த்தியை எடுத்துச் சென்று ஒரு சிற்றூரிலிலுள்ள புளியந்தோப்பில் புளியமரப்பொந்தில் வைத்து அப்பொந்தை மூடிவிட்டுத் திரும்பி வந்து விடுகிறார்கள். அத்தோப்புக்குச் சொந்தக்காரர் எதேச்சையாக அதற்குள் நடராஜரின் திருவுருவம் இருப்பதைக் கண்டு இதற்கு ஏதோ காரணம் இருக்கவேண்டும் என்று ஊகிக்கிறார். இந்த மரத்தில் தெய்வம் இருப்பதாகக் கனவு கண்டதாக ஊர்மக்களிடம் கூறிப் பூசை செய்து வருகிறார். ஆண்டுகள் பல கடந்ததும் சிதம்பரத்தில் அமைதி திரும்புகிறது. தீட்சிதர்கள் நடராஜரை மறைத்து வைத்த இடத்தை அடையாளம் காண முடியாமல் ஊரூராகத் தேடி அலைகிறார்கள். ஓரிடத்தில் “தம்பி, அந்த அம்பலப்புளியில கொண்டு போய் மாட்டைக் கட்டு” என்று ஒரு பெரியவர் சொல்வதைக் கேட்டு அங்கு சென்று பார்க்க, நடராஜர் உருவம் அங்கு ஒரு புளியமரப்பொந்தில் இருந்தது கண்டு பெருமகிழ்ச்சியடைந்து, அதை எடுத்துவந்து கோயிலில் பிரதிஷ்டை செய்கிறார்கள். இதன் காரணமாகவே அந்த ஊருக்கு புளியங்குடி என்று பெயர் ஏற்பட்டது என்று கூறி அதற்குச் சான்றாக ‘சோழமண்டல சதகம்’ என்ற நூலிலிருந்து பின்வரும் பாடலையும் உ.வே.சா மேற்கோளாகத் தருகிறார்.
தெளிவந்து அயன்மால் அறியாத தில்லைப்பதி அம்பலவாணர்
புளியம்பொந்தினிடம் வாழும் புதுமை காட்டிப் பொருள்காட்டி
எளிதிற் புளியங்குடியார் என்று இசைக்கும் பெருமை ஏருழவர்
வளருங்குடியில் பொலிவாழ்வு வளஞ்சேர் சோழமண்டலமே.
உ.வே.சா குறிப்பிடும் விஷயம் கற்பனையல்ல, வரலாற்றில் உண்மையாக நடந்த சம்பவங்களின் அடிப்படையிலானதே என்பதற்கான ஆதாரம் செப்பேடுகள் மூலம் உறுதி செய்யப் படுகிறது5. இதில் நான்கு செப்பேடுகள் (‘தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்-50’ நூலின் படி, செப்பேடு எண் 45 முதல் 48) சிதம்பரத்தில் நடந்த இரண்டு கும்பாபிஷேக விழாக்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன. இவை சத்ரபதி சிவாஜியின் புதல்வரான சாம்பாஜி காலத்தியவை.
47 எண்ணுள்ள செப்பேடு 1684ல் நடந்த கும்பாபிஷேகம் பற்றிக் கூறுகிறது. இதில் வரும் பாடலில், முதல் பாதியில் கும்பாபிஷேக ஆண்டு நாள் கிழமை விவரங்கள் உள்ளன. இரண்டாம் பாதி இவ்வாறு கூறுகிறது –
உயர் ஆகமப் படியின் ஆனந்த நடராஜர்
ஒளிபெற நிருத்தமிடவே
ஓங்கு சிற்சபைதனைச் செம்பினால் மேய்ந்திடும்
உண்மையை உரைக்க எளிதோ.
‘செம்பினால் மேய்ந்திடும் என்பது கவனிக்கத்தக்கது. இதன்மூலம், சோழபாண்டியர்கள் அளித்த பொன் முழுவதும் இஸ்லாமியப் படையெடுப்பில் கொள்ளையடிக்கப்பட்ட பிறகு மூளியாக இருந்த சிற்சபை, சுமார் 350 ஆண்டுகளுக்குப் பிறகு செம்புத் தகடுகள் வேய்ந்து திருப்பணி செய்யப்படுகிறது என்பது புலனாகிறது. கீழே அடுத்துவரும் பாடலில் இருந்து இந்தக் கும்பாபிஷேகத்தின்போது நடராஜரின் மூலமூர்த்தி தில்லைக்கு வெளியே இருந்தது என்பதும் தெரியவருகிறது.
45ம் எண்ணுள்ள செப்பேட்டின் படி, 1686ம் ஆண்டு, கனகசபையில் முற்றிலும் பொன் வேய்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட செய்தி உள்ளது. இதுதான் இன்று நாம் காணும் பொன்னம்பலம். இந்த நிகழ்வைக் குறிக்கும் கீழ்க்காணும் செப்பேட்டுப் பாடலில் நடராஜர் தில்லையிலிருந்து வெளியேறி மீண்டும் திரும்பிவந்த காலக்கணக்கு துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மருவிய சகாத்தம் ஆயிரமும் ஐநூற்றெழுப-
துக்கு மேல் சர்வதாரி
வருஷ மார்கழி மாதம் ஆதித்த வாரமதில்
மன்னும் அம்பலவாணரை
அருமையொடு குடுமிமாமலையில் நாற்பது மாதம்
அப்புறம் மதுரை தனிலே
அடவுடன் எழுந்தருளி ஆகமுப்பதிமின்-
னெட்டான அட்சய வருஷமும்
பரவு கார்த்திகை மாத தேதி பதினாலுடன்
பருதிநாள் வளர்பக்கமும்
பகருட்டிரத்தாதி திசமிக்கும் பத்தினில்
பாருயிரெலாம் உய்யவே
திருமருவு செம்பொன்மா மழைகளது பொழியவும்
தில்லை மாநகர் வாழவும்
தேவர்கள் துதிக்கவும் ஊருடைய முதலியார்
சிற்சபையும் மேவினாரே.
ஆக, நடராஜர் வெளியே இருந்த காலம் சகாப்தம் 1570 சர்வதாரி மார்கழி 25 (1648 டிசம்பர் 24) முதல் சகாப்தம் 1608 அட்சய வருடம் கார்த்திகை 14 (1686 நவம்பர் 14) வரை. அதாவது 37 ஆண்டுகள் 10 மாதம் 20 நாட்கள்.
மேற்கூறிய இரண்டு கும்பாபிஷேகங்களும் சாம்பாஜி மன்னரின் ஆணைப் படி நிகழ்ந்தன. அவரது குலகுருவான முத்தைய தீட்சிதரின் வழிகாட்டலில் திருச்சிற்றம்பல முனிவர் நடத்தி வைத்தார். பறங்கிப் பேட்டையில் மராட்டிய மன்னரின் அதிகாரியாக இருந்த கோபால் தாதாஜி பண்டிதர் என்பவர் பொறுப்பேற்று திருப்பணிகளைக் கண்காணித்தார். இந்தச் செய்திகளும் இச்செப்பேடுகளிலிருந்து தெரிய வருகின்றன.
இதற்குப் பின்னரும், இன்னும் ஒரு பத்தாண்டுகள், 1686 முதல் 1696 வரை மீண்டும் நடராஜர் தில்லையிலிருந்து வெளியேறி திருவாரூரில் இருந்தார் என்ற செய்தி சிதம்பரம் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஒரு கல்வெட்டிலிருந்து தெரிய வருகிறது. ஔரங்கசீப்பின் இஸ்லாமியப் படைகள் மராத்தியப் படைகளைத் துரத்தி வந்து செஞ்சியில் முகாமிட்டிருந்தது இதற்குக் காரணமாக இருக்கலாம்.
சிவாஜியின் முதல் மனைவியின் மூத்த மகனாகப் பிறந்த சாம்பாஜியின் வாழ்க்கை பெரும் போராட்டங்களும் துயரங்களும் தியாகமும் நிறைந்தது. அவர் உலகில் வாழ்ந்திருந்ததே 31 ஆண்டுகள்தான். ஆட்சியில் இருந்த காலம் பத்தாண்டுகள் கூட அல்ல. அவ்வளவு குறுகிய வாழ்க்கையில் இரண்டு முறை தில்லை நடராஜரின் கும்பாபிஷேகம் அவரது ஆணையின் கீழ் நடந்திருக்கிறது என்பது மிகவும் ஆச்சரியத்திற்குரிய விஷயம். இரண்டே ஆண்டுகளில் சிற்சபைக்குக் கூரையிடும் அளவு பொன்னைத் திரட்டிய சாம்பாஜியின் பக்தியுணர்வும், முயற்சியும் வியக்க வைக்கின்றன. 1689ம் ஆண்டு சாம்பாஜி இஸ்லாமியப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டார். ஔரங்கசீப்பின் ஆணைப் படி அவர் குரூரமாகச் சித்திரவதை செய்து கொல்லப்பட்டார் என்பது வரலாற்றில் ஆதாரபூர்வமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, ஔரங்கசீபின் முன் தலைவணங்கி இஸ்லாம் மதத்தை ஏற்றால் சாம்பாஜியை விடுவிக்கிறோம் என்று ஆசைகாட்டப்பட்டது என்றும், சாம்பாஜி அதை மறுத்து மரணத்தைத் தழுவி தனது வீரமரபின் மேன்மையைக் காத்தார் என்றும் மராட்டிய வீரகதைப் பாடல்கள் கூறுகின்றன. சாம்பாஜியை ‘தர்மவீரன்’ என்று புகழ்கின்றன.
இனி அடுத்தமுறை சிதம்பரத்திற்குச் சென்றால், கனகசபையின் பொற்கலசங்களை நோக்கும்போது இந்த வரலாறும் உங்கள் நினைவில் எழட்டும். ஸ்தலபுராணக் கதைகளோடு சேர்த்து, அந்தந்தத் தலத்தின் புனிதத்தையும் பண்பாட்டையும் காப்பதற்காக நமது முன்னோர்கள் தொடர்ந்து போராடிய தியாக வரலாறுகளையும் அறிந்து கொள்வோம். அவற்றை நமது அடுத்த தலைமுறைக்கும் கூறுவோம்.
உசாத்துணைகள்:
[1] Hindu Temples: What Happened to Them: Vol. 2 (The Islamic Evidence), Sita Ram Goel. Voice Of India, Ch. 7
[2] Temple desecration and Indo-Muslim states, Richard M Eaton, Frontline, Jan 2001, pp 72-73
தில்லையில் ஆறு ஆண்டுகள் இருந்து அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக உயர்கல்வி பயில்வதற்கும், ஆடல்வல்ல பெருமானை வேண்டும் பொழுதும் தொழுவதற்கும் அவனே அருள் பொழிந்தனன். அந்த மேன்மை மிக்க கோயிலுக்கு இவ்வளவு கொடுமைகளை பாலைவனத்து பதர்கள் இழைத்திருக்கின்றார்கள் என்பதை சிதம்பரத்தில் இருந்த யாரும் சொல்லவில்லை. சைவர்களாகிய நம்மால் கோயில் என்று கொண்டாடடப்படும் சிதம்பரத்தின் மீது நடத்தப்பட்ட அன்னியத்தாக்குதல்களைப்பற்றி எந்த ஒரு வரலாற்றுக்குறிப்பு ஸ்ரீ சிதம்பரம் சபா நாயகர் கோயிலில் வைக்கப்படவே இல்லை. மதுரையம்பதிக்கு சென்றபோது, மீனாக்ஷி அம்மன் கோயில் மாலிக்காபூரால் தாக்கப்பட்டு முற்றிலும் இடிக்கப்பட்டதும், அது மாவீரர் குமார கம்பண உடையாரால் மீட்கப்பட்டதும், விஜய நகர அரசால் மறுபடியும் கட்டி எழுப்பப்பட்ட வரலாறும் அங்கே எழுதி வைக்கப்பட்டிருக்கின்றது. அப்படித் தில்லையிலே எதுவும் வைக்கப்படாததற்கு யாது காரணம்? ஸ்ரீ ஜடாயுவின் இந்த அருமையானக்கட்டுரையை படிக்கும் போது ஆழ்ந்த வருத்தம் மிஞ்சுகின்றது. என்றாலும் என்னத்தாக்குதல் அன்னியர்கள் நடத்தினாலும் மீண்டெழும் சக்தி நமக்கு இருக்கின்றது என்பதை புரிந்துகொள்ளுகின்றபோது ஒரு ஹிந்துவாக சைவனாக மகிழ்ச்சி அடைகின்றேன். இது ஏதோ முடிந்துபோன வரலாறு அல்ல. இன்றைக்கும் ஹிந்துக்களுக்கு சொரணையற்றுப்போனால், விவேகமற்றுப்போனால் நமது ஆலயங்களுக்கு அவல நிலை நேரிடும். அபிராஹாமியம் உலகம் முழுதையும் ஒற்றையாக்கி ஆதிக்கம் செலுத்தும் தனது போராட்டாத்தை இன்னமும் தொடரத்தான் செய்கின்றது.
பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தமிழக வரலாற்றைப் பார்க்கையில் ஒரு மாபெரும் அழிவிலிருந்து தமிழ்நாடு எப்படித் தப்பிப் பிழைத்தது என்கிற ஆச்சரியம் வருவதனைத் தவிர்க்க இயலவில்லை. சோழ, பாண்டிய அரசுகள் அழிந்த பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டு வரைக்குக்ம் தமிழகம் ஏறக்குறைய ஒரு திறந்து கிடக்கிற வீட்டைப் போலத்தான் இருந்திருக்கிறது. ஏறக்குறைய நானூறு ஆண்டுகள் விஜய நகரத்து நாயக்கர்களும், அவர்களைத் தொடர்ந்து மராத்தாக்களும் தமிழர்களை இஸ்லாமிய படையெடுப்புகளிலிருந்து பாதுகாத்திருக்கிறார்கள். அவர்கள் மட்டும் இல்லாமலிருந்தால் இன்றைய தமிழகம் ஒரு இஸ்லாமிய தமிழகமாகத்தான் இருந்திருக்கும் என்பது மறுக்க முடியாததொரு உண்மை.
சோழ, பாண்டியர்கள் ஜன்மப் பகைவர்கள். நூற்றாண்டுக் கணக்கில் போரிட்டு பேரழிவுகளைச் சந்தித்தாலும் விடாமல் போரிட்டு இறுதியில் இருவருமே அழிந்தார்கள். விடாத போர்களால் தமிழ்நாடு எல்லாவிதங்களிலும் வலிமையற்றுப் போனது. ராஜேந்திர சோழனுக்குப் பின் வந்த சோழர்கள் திறமையற்றவர்கள். திறமையற்ற மூன்றாம் ராஜராஜன் காலத்திற்குப் பிறகு சோழ சாம்ராஜ்யம் வீழ்ச்சி கண்டது (இந்தச் சோழன்தான் கம்பனின் காலத்தவன் என்று எண்ணுகிறேன்). பாண்டியர்கள் திருநெல்வேலிக்கு தங்களின் தலைநகரை மாற்றிப் பின்னர் மெல்ல, மெல்ல வரலாற்றிலிருந்து மறைந்தார்கள்.
இதில் ஓரளவிற்கேனும் தப்பிப் பிழைத்தவர்கள் சேரர்கள்தான். சோழ, பாண்டியப் போர்களில் யாருடனும் சேராமல் ஒதுங்கியிருந்தாலும் போரின் பாதிப்பு அவர்களையும் எட்டியது. பெரும்பாலான போர்கள் அவர்களது தலைநகரமான கரூருக்கு அருகிலேயே நடந்தது ஒரு காரணம். மூன்று நாடுகளின் எல்லையும் கரூருக்கு அருகிலேயே ஒன்றினைவதால் ஓயாத போர்களின் பாதிப்பு அவர்களுக்கும் அதிகமானது. எனவே கொடுங்கல்லூருக்கு (இன்றைக்கும் கேரத்தில் இருக்கிறது) தங்களின் தலைநகரை சேரர்கள் மாற்றிக் கொண்டார்கள். அவர்களும் பிற்காலத்தில் திப்பு போன்றவர்களால் பாதிக்கப்பட்டார்கள்.
அங்கொன்றும் இங்கொன்றுமான பகுதிகளில் அமைதி நிலவினாலும் பெரும்பாலான தமிழகம் தொடர்ச்சியான கொள்ளைகளையும், கொலைகளையும், பெண்கள் மானபங்கப்படுத்தப்படுவது, தூக்கிச் செல்லப்படுவது, வீடுகள் எரிக்கப்படுவது, வயல்கள் தீவைத்து கொளுத்தப்படுவது, கோவில்கள் கொள்ளையடிக்கப்படுவது, இடிக்கப்படுவது என்று படுபயங்கரமான சூழ்நிலையே தமிழ் நாட்டில் நிலவி வருவதினைப் பார்க்கலாம்.
பதினாறு மற்றும் பதினெழாம் நூற்றாண்டுகளில் ஆற்காட்டு நவாப்கள் திருச்சி, தஞ்சை வரை கைப்பற்றி கொள்ளையிடுவது தொடர்ந்தது. அவர்களுடன் சேர்ந்து கொண்டு ஃப்ரெஞ்சுக்காரர்கக் கோவில்களைக் கொள்ளையடித்து ஏராளமான தங்க, வைர நகைகளையும், பிற சொத்துக்களையும் ஃப்ரான்ஸிற்கு எடுத்துச் சென்றார்கள். இன்று ஃப்ரான்ஸின் அரண்மனைகளில் மினுக்கும் தங்க, வைர அலங்காரங்கள் அனைத்தும் தமிழகக் கோவில்களில் கொள்ளையடித்துச் சென்றவையே. அதையேதான் பிரிட்டிஷ்காரர்களும் செய்தார்கள். ஆனால் அவர்கள் ஆர்ப்பாட்டமில்லாமல், சிஸ்டமேட்டிக்காக கொள்ளையடித்தார்கள் என்பதுதான் வித்தியாசமே. ஆளாளுக்கு கொள்ளையடிப்பதைத் தடுத்து ஒரு ஒழுங்குடன் அவர்கள் ஒருவர்களே கொள்ளையடித்ததால் தமிழர்கள் அவர்களை ஏற்றுக் கொண்டிருந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன்.