ஒரு வில்லன் இல்லாமல் எந்தச் சரித்திரமும் முழுமையடைவதில்லை. முற்றிலும் பிழை என நாம் கருதும் ஒரு மனநிலையை மனிதர்களுள் சிலர் எப்படி அடைகிறார்கள்? எம்மாதிரியான சந்தர்ப்ப சூழல்கள் ஒருவனை அப்படிப்பட்ட நிலைக்குத் தள்ளுகின்றன? காலம்தோறும் உருவாகி வந்திருக்கும் வில்லன்களை வரிசைப்படுத்தி, ஆராய்கிறது இந்தத் தொடர்.
வெளிறிய உருவம், ரத்தம் வடியும் கூரிய பற்கள், வழித்துச் சீவிய தலைமுடி, நீண்ட கருப்புக் கோட்டு. பார்த்தாலே பயங்கரம். ஆ, டிராகுலா!
பிராம் ஸ்டோக்கருக்கு முன்பே பல காட்டேரிக் கதைகள் வந்துவிட்டிருந்தாலும், காட்டேரிக்கு “டிராகுலா” என்ற பெயரை வைத்த புண்ணியம் இவரையே சாரும். [1897ல் முதல் முதலில்.] இத்தனைக்கும் ஸ்டோக்கர் தம் நாவலை எழுத ஆரம்பித்தபோது டிராகுலா என்ற பெயரை வைக்கும் எண்ணமே கிடையாது. தனது கதாபாத்திரத்துக்கு “வாம்பிர்” என்று சப்பபையாகத்தான் பெயரிட்டிருந்தார். ஆனால் பாதிக்கதை எழுதிக் கொண்டிருக்கும்போதே அவர் வில்லியம் வில்கின்சன் என்பவர் 1820ல் வலாக்கிய மல்டோவிய நாடுகளைப் பற்றி எழுதிய புத்தகத்தைப் படித்தார். அப்புத்தகம்தான் அவரை தனது வில்லனின் பெயரை “டிராகுலா” என்று மாற்றத் தூண்டியது. ரத்தம் குடிக்கும் காட்டேரிக்கு ஒரு நிஜ மனிதனின் பெயர் வைக்குமளவுக்கு அந்த ”சரித்தர நாயகனைப்” பற்றிய குறிப்புகள் அவரைக் கவர்ந்திருந்தன. யாரந்த ஆள்?
சரித்திரம் வில்லனாகச் சுட்டிக்காட்டும் வலாக்கிய மன்னர் மூன்றாம் விளாட் வீட்டுக்குப் போய்ப்பார்ப்போம்.
கிழக்கு ஐரோப்பா கொஞ்சம் ஏடாகூடாமான இடந்தான். மேற்கு ஐரோப்பாவிலும், தெற்கு ஐரோப்பாவிலும் பல புதிய நாகரிகங்களும் பேரரசுகளும் தோன்றி, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துவந்தபோது கிழக்கில் மட்டும் ஏதும் உருப்படியாக நடக்கவில்லை. நாடோடி சமூகங்களின் உறைவிடமாக அது இருந்ததும், ஆசியாவிலிருந்து அடிக்கடி நிகழும் படையெடுப்புகளும் கிழக்கு ஐரோப்பாவை ஒரு சவலைப் பிள்ளையாகவே தேக்கி வைத்துவிட்டன. இங்கே உருவாகி, தழைத்த நாடோடி சமூகங்கள், ஒன்று மேற்கிலுள்ள மேம்பட்ட நாகரிகங்களைத் தாக்கி அழித்துள்ளன; அல்லது கிழக்கிலிருந்து படையெடுப்பவர்களிடம் நன்றாக அடிவாங்கியுள்ளன. இருண்ட யுகம் என்றழைக்கப்படும் ஐரோப்பிய இடைக்காலம் வரை இவர்களது கதை இவ்வாறே இருந்துள்ளது. மூன்றாம் விளாட் வாழ்ந்த பதினைந்தாம் நூற்றாண்டிலும் இதுவே நிலைமை.
அப்போது ஓட்டோமானியப் பேரரசு வளர்ந்து வந்த காலம். சிலுவைப் போர்கள் ஒய்ந்து, பைசாண்டியப் பேரரசு சோர்ந்து போயிருந்த சமயத்தில் இஸ்லாத்தை உலகெங்கும் பரப்பும் முனைப்புடன் உருவானதுதான் ஒட்டோமான் சுல்தானகம். 1299ல் துருக்கியில் உருவான இந்தப் பேரரசு பதினைந்தாம் நூற்றாண்டில் மாபெரும் சக்தியாக வளர்ந்து விட்டது. மத்திய கிழக்காசியாவின் வல்லரசாக மாறியபின் மற்ற கண்டங்களை நோக்கி ஒட்டோமான் சுல்தான்களின் பார்வை திரும்பியது. கிழக்கு ஐரோப்பா மீது ஒட்டோமான் படையெடுப்புகள் தொடங்கின. 1453ல் சுல்தான் இரண்டாம் முஹமது பைசாந்தியப் பேரரசின் தலைநகரான கான்ஸ்டாண்டிநோபிளைக் (தற்கால இஸ்தான்புல்) கைப்பற்றி பைசாந்தியத்துக்கு ஒரு முடிவு கட்டினார். அதன் பின்னர் கிழக்கு ஐரோப்பியப் பிரதேசங்களை ஒன்றன் பின் ஒன்றாகக் கைப்பற்றத் தொடங்கினார். அவரது இலக்குகளில் ஒன்றுதான் வலாக்கியா.
பல நூறு ஆண்டுகளாக ஹங்கேரி நாட்டிற்குட்பட்ட சிற்றரசாக இருந்த வலாக்கியா, பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மெல்ல ஒட்டோமான் பேரரசின் ஆதிக்கத்தின்கீழ் வந்தது. தற்கால ரொமேனியா, பல்கேரியா போன்ற நாடுகளின் பகுதிகள்தான் அக்காலத்தில் வலாக்கியா என்றழைக்கப்பட்டன. அக்காலத்தில் இந்நாடு அண்டைய வல்லரசுகளிடையே மாட்டிக்கொண்டு அல்லாடிக்கொண்டிருந்தது. வடக்கிலும் மேற்கிலும் ஹங்கேரிய அரசும், வட கிழக்கில் போலந்து அரசும், தெற்கில் ஒட்டோமான் பேரரசும் இதை நெருக்கி வந்தன. இவர்களுக்குள் நிகழ்ந்த பலப்பரீட்சையில் அவ்வப்போது கட்சி மாறிப் பல கூட்டணிகளில் தப்பிப் பிழைத்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்படி நிறைய நாட்கள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. கி.பி 1415ல் ஒட்டாமான் பேரரசின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. அந்நியர் ஆதிக்கச் சிக்கல் போதாதென்று அவ்வப்போது உள்நாட்டுப் போர்கள்வேறு மூண்டுகொண்டிருந்தன. இந்த நிலையில் மூன்றாம் விளாடின் தந்தை இரண்டாம் விளாடின் கட்டுப்பாட்டில் வந்தது. இவர்தான் முதன் முதலில் “டிராகுல்” என்ற பட்டத்தைத் தன் பெயருக்குப் பின் சேர்த்துக் கொண்டவர்.
“டிராகுல்” என்றால் ரொமேனிய மொழியில் “டிராகன்” என்று பொருள். ஒரு சாதாரண பிரபுத்துவப் பட்டமாகவே இரண்டாம் விளாட் இதனை ஏற்றுக் கொண்டார். இரண்டாம் விளாட் வலாக்கியாவின் சிற்றரசராக முடிசூடுவதற்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பே 1431ல் அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அரச குல வழக்கப்படி இளவரசருக்கும் தந்தையின் பெயரான விளாட் என்னும் பெயரையே வைத்தனர். விளாட் தெபேஷ் என்றும் அச்சிறுவன் அழைக்கப்பட்டான். அப்பா இரண்டாம் விளாட் என்ற பெயருடன் வலாக்கியாவின் குறுநில மன்னரான பின்னால் தேபேஷ் மூன்றாம் விளாட் ஆகி விட்டான்.
ஓட்டோமானிய ஆளுமைக்கு உட்பட்டு கப்பம் கட்டி வந்த இரண்டாம் விளாடுக்கு ஏகப்பட்ட சிக்கல்கள். நாட்டுக்குள்ளேயே அவருக்குப் போட்டியாகப் பல கோஷ்டிகள் இருந்தன. முடிசூடி ஆறே ஆண்டுகளில் உள்நாட்டுச் சதி காரணமாக அவர் தன் அரியணையை இழக்க நேரிட்டது. மீண்டும் அரசராவதற்காகத் தமது ஒட்டோமான் எஜமானர்களின் காலில் விழுந்தார் இரண்டாம் விளாட். அவர்களது உதவியைப் பெறுவதற்காக அவர் தனது இரு மகன்களையும் பணயக் கைதிகளாக இஸ்தான்புல்லுக்கு அனுப்பி வைத்தார். மூன்றாம் விளாடும் அவன் தம்பி ராதுவும் சுல்தானின் அரண்மனையில் அவரது கண்டிப்பான மேற்பார்வையில் வளரத் தொடங்கினார்கள். ஒட்டோமான் அரண்மனை வாழ்க்கை இரு சகோதரர்களிடம் நேரெதிரான விளைவுகளை உண்டு பண்ணியது. ஒட்டோமான் வாத்தியார்களின் கண்டிப்பும் தண்டனைகளும் சிறுவன் விளாடின் மனத்தில் ஒட்டோமான் பேரரசின் மீது அழியாத வெறுப்பை உருவாக்கி விட்டன. ஒரு சிற்றரசனின் மகன்தானே என்று அவனை ஒட்டோமான் அதிகாரிகள் கேவலமாகப் பார்த்தனர். விளாட் பட்ட அவமானங்களும் கேலிச் சிரிப்புகளும் அவனுக்கு மேலும் வெறியூட்டின. வளார்ந்து பெரியவனானதும் ஒட்டோமான் பேரரசை வேரோடு அழிப்பேன் என்று கங்கணம் கட்டிவிட்டான் விளாட். [அவன் தம்பி ராதுவோ ஒட்டோமானிய அடக்குமுறைகளுக்கு அடிபணிந்துவிட்டான். இஸ்லாமிய மதத்தைத் தழுவி சுல்தான் இரண்டாம் மெகமதின் பணியாளாக மாறிவிட்டான். “அழகிய” ராது என்று புனைபெயரிடப்பட்ட இவன், பிற்காலத்தில் தன் அண்ணனுக்கு எதிராகவே ஒட்டோமானிய துருப்புகளின் தளபதியாகப் போர் புரியும் நிலை ஏற்பட்டது.]
ஒட்டோமானிய ஆதரவுடன் மீண்டும் வல்லாகியாவின் அரசரான இரண்டாம் விளாடின் ஆட்சி நீண்ட நாள் நிலைக்கவில்லை. அவருடைய போயர் பிரபு விரோதிகள் அவரைப் படுகொலை செய்துவிட்டனர். இதனால் 1447 ல் பதினாறு வயதில் விளாட் தெபேஷ் வலாக்கியாவின் மன்னனாக வேண்டிய நிலை ஏற்பட்டது. பதின்ம வயது மன்னனை யாரும் மதிக்கத் தயாராக இல்லை. போயர்கள் ஹங்கேரி அரசனின் உதவியுடன் வலாக்கியாவைத் தாக்கிக் கைப்பற்றினார்கள். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள விளாட் நாட்டை விட்டு ஓட வேண்டியதாயிற்று. நாடிழந்து பக்கத்து நாடுகளில் உதவி கேட்டு நாடோடியாக பல ஆண்டுகளாகச் சுற்றி திரிந்த விளாடுக்கு ஒட்டோமானிய சுல்தானகத்தின் மீது இன்னும் வெறி அதிகமானது. எப்படியாவது அவர்களைப் பழிவாங்கத் துடித்த அவன், தன் விரோதிகளின் ஆதரவாளரான ஹங்கேரி அரசரிடம் போய்த் தஞ்சம் புகுந்தான். அக்காலத்தில் ஹங்கேரிதான் ஒட்டொமானியப் பேரரசின் முதல் எதிரி நாடு.
ஹங்கேரி அரசருக்கு விளாடைப் பார்த்து ஒரே வியப்பு. என்னடா இவனது தகப்பன் ஒட்டோமான்களின் அடியளாக இருந்தான், இவனோ அவர்களை அழித்தே தீருவேன் என்று வெறி கொண்டு அலைகிறானே என்று. ஆனால் விளாடிடம் வெறும் பழி வாங்கும் வெறி மட்டுமல்ல, ஒட்டோமானிய அரசு, படை, உத்திகள், நோக்கங்கள் எனப் பல விஷயங்களைப் பற்றிய அபார அறிவும் இருந்தது. இதனால் ஹங்கேரி மன்னருக்கு அவனை மிகவும் பிடித்துப் போனது. அவனைத் தன் உதவியாளனாக வைத்துக் கொண்டார். அவர் இறக்கும் வரை பொறுமையாகக் காத்திருந்த விளாட், கி.பி. 1456ல் படைதிரட்டி தன் நாட்டின் மீது படையெடுத்தான். ஹங்கேரி மன்னரின் ஆதரவுடன் ஆட்சி செய்து வந்த அரசனை வென்று தானே வலாக்கியாவின் மன்னன் என்று பறைசாற்றினான். வலாக்கியா அப்போது உள்நாட்டுப் போர்களால் பாதிக்கப்பட்டு பலவீனமான நிலையிலிருந்து. நாட்டை சீர்திருத்தி நிலைமையை சரிசெய்வதற்காக விளாட் தனது நீண்ட நாள் கனவான ஒட்டோமானியப் பேரரசை அழிப்பதை சற்றே தள்ளிப் போட நேர்ந்தது.
ஆனால் வலாக்கியாவில் நிலைமையைச் சரி செய்ய விளாடுக்குக் கொஞ்ச வருடங்களே ஆகின. தன் தந்தையையும் சகோதரனையும் கொன்ற போயர்களை அறவே ஒழிப்பேன் என்று சபதம் செய்திருந்த விளாட், ஆட்சிக்கு வந்ததும் அதை நிறைவேற்றத் தொடங்கினான். போயர்கள் அனைவரும் குடும்பத்தோடு கைது செய்யப்பட்டனர். அவர்களுள் வயதானவர்களைக் கழுவிலேற்ற உத்தரவிட்டான். வயது குறைந்தவர்களை உடனே கொல்லவில்லை. அவர்களை அடிமைகளாக்கி, தனது போயினேரி கோட்டையைச் செப்பனிடச் செய்தான். செல்வச் செழிப்பில் வளர்ந்த அவர்கள் மாடுகளைப் போல உழைக்க நிர்பந்திக்கப்பட்டனர். வேலைப்பளுவைத் தாங்க முடியாமல் பலர் கோட்டை வேலை நடந்து கொண்டிருக்கும் போதே பசியாலும் அயர்ச்சியாலும் மாண்டனர். கோட்டை வேலை முடிந்த பின்னர் மிஞ்சியவர்களையும் கழுவிலேற்றி அவர்கள் துடிதுடித்துச் சாவதை சாவகாசமாகப் பார்த்து ரசித்தான் விளாட்.
கழுவேற்றம் என்றால் சாதாரண தண்டனையல்ல. ஒரு மரக்கட்டையை ஒரு முனையில் நன்றாகக் கூர் தீட்டி நிலத்தில் புதைத்து வைத்திருப்பர். தண்டனை விதிக்கப்பட்டவரைத் தூக்கி அவரது ஆசனவாய் வழியாக அந்த மரக்கட்டையில் சொருகி விடுவார்கள். வலியால் அவர் துடிக்கத் துடிக்கக் கட்டை இன்னும் உள்ளே செல்லும். மெதுவான, கொடுமையான மரணம் அது. போயர் பிரபுக்களும் அவர்களது குடும்பங்களும் கழுவில் சிக்கித் துடித்துக் கொண்டிருக்க, நிதானமாக அருகில் ஒரு மேசை நாற்காலி போட்டு அமர்ந்து, ரசித்துச் சாப்பிடுவதுதான் விளாடின் அன்றாடப் பழக்கம். பத்தாண்டுகளுக்குள் மொத்த போயர் கூட்டமே ஒன்றன் பின் ஒருவராக கழுவிலேறிப் பரலோகம் போய்விட்டது. மக்கள் அனைவரும் விளாடை ”தி இம்பேலர்” (கழுவேற்றுபவன்) என்று பயத்துடன் அழைக்கத் தொடங்கினர். இப்படி நாற்பதாயிரம் முதல் ஒரு லட்சம் பேர் விளாடினால் கொல்லப்பட்டிருக்ககூடும் என்று வரலாற்றாளார்கள் கணித்துள்ளார்கள்.
உள்நாட்டு விரோதிகளை ஒழித்து, நிர்வாகத்தை சீர்திருத்தி, படைகளைப் பலப்படுத்தியபின் விளாடின் பார்வை மீண்டும் ஒட்டோமான் பேரரசை நோக்கித் திரும்பியது. வலாக்கியாவில் தன் கை ஓங்கியதும் விளாட் செய்த முதல் வேலை – ஒட்டோமான்களுக்குக் கொடுத்து வந்த கப்பத்தை நிறுத்தியது. எரிச்சலடைந்த சுல்தான் மெகமது முதலில் ஆள் அனுப்பி மிரட்டிப் பார்த்தான். ஆனால் விளாடுக்குப் பணிந்து போகும் எண்ணம் அறவே இல்லை. என்ன ஆனாலும் சரி; குண்டுமணியளவு வெள்ளி கூட கப்பம் கட்ட மாட்டேன் என்று மறுத்து விட்டான். கப்பத்தை நிறுத்தியது மட்டுமல்லாமல், ஒட்டோமானியர்களை எப்படித் தாக்குவது என்றும் யோசிக்கத் தொடங்கினான். அப்போது பார்த்து போப் இரண்டம் பையஸ் ஒட்டோமானியர்களுக்கு எதிராகப் புதிய சிலுவைப் போரை அறிவித்தார். உற்சாகத்துடன் அதற்கான வேலைகளில் இறங்கினான் விளாட்.. 1459ல் மெகமதின் தூதர்கள் மீண்டும் விளாடை மிரட்டினர். 10,000 டூகட் தங்கமும் (சுமார் முப்பது டன்) படையில் பணிபுரிய ஆட்களும் வேண்டுமென வற்புறுத்தினர். கோபம் கொண்ட விளாட் அவர்களைக் கொன்று விட்டான். மெகமது விளாடைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தான். சமாதானத்துக்கு அழைப்பது போல அழைத்து திடீரென்று தாக்கி விளாடின் கதையை முடித்துவிடுங்கள் என்று தன் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டான். ஆனால் விளாடுக்கு எப்படியோ விஷயம் தெரிந்துவிட்டது. ஒட்டோமானிய தூதர்களையும் வீரர்களையும் அவர்கள் எதிர்பாராத நேரத்தில் தாக்கி சிறைபிடித்து விட்டான்.
பிறகென்ன? விளாடின் உள்நாட்டு விரோதிகளுக்கு நேர்ந்த கதியே அவர்களுக்கும் நேர்ந்தது. அவர்களைக் கழுவேற்றியது போதாது என நினைத்து, சுல்தான் மெகமதுக்கு மறக்க முடியாத பாடமொன்றைக் கற்பிக்க முடிவு செய்தான் விளாட்..
கி.பி 1461ல் ஒட்டோமானிய பேரரசின் மீது படையெடுத்தான் விளாட். செர்பியாவுக்கும் கருங்கடலுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தைச் சூறையாடின, விளாடின் படைகள். சிக்கிய எதிரி வீரர்களையும் அதிகாரிகளையும் வழக்கம்போலக் கழுவில் சொருகி விட்டான் விளாட். கிட்டத்தட்ட 24,000 பேருக்கு இந்தக் கழுமோட்சம் கிடைத்தது. இச்செய்தி இஸ்தான்புல்லை அடைந்ததும் ஒட்டோமானிய அதிகார வர்க்கமே ஆட்டம் கண்டது. தகுந்த பதிலடி கொடுக்க வேண்டுமென்று சுல்தான் மெகமெது முடிவெடுத்தான். பெரும்படையொன்றைத் திரட்டி வலாக்கியா நோக்கி முன்னேறினான். விளாடை ஒழித்துக்கட்ட கங்கணம் கட்டிக்கொண்டு வந்த அந்தப் படைக்கு உணவும் தண்ணீரும் கிடைக்காமல் செய்ய வலாக்கிய பிரதேசங்களை நாசம் செய்தனர் விளாடின் படையினர். வயல்கள் கொளுத்தப்பட்டன, பயிர்கள் எரிக்கப்பட்டன, தோப்புகள் வெட்டப்பட்டன, குளங்களிலும், கிணறுகளிலும் விஷம் கலக்கப்பட்டது. வலாக்கியாவின் பூமியே ஒட்டோமானியப் படைக்கு நஞ்சாகும் வண்ணம் ஏற்பாடு செய்தான் விளாட்.
வெற்றி எளிதில் கிடைக்கும் என்ற நினைப்பில் வந்த சுல்தானுக்கு திகில் கூடியது. நேரடியாக மோதாமல், கொரில்லாத் தாக்குதல் நடத்திய விளாடின் படைகளை விரட்டியே சுல்தானின் படைகள் களைத்துப் போயின. சுல்தானின் படைமுகாமையே விளாடும் அவனது வீரர்களும் தாக்கி மெகமதைக் படுகொலை செய்ய முயன்றனர். அதிர்ஷ்டவசமாக சுல்தான் அத்தாக்குதலில் இருந்து தப்பினான். விளாடின் படையினைப் பிடிக்க முடியாவிட்டாலும் அவனது தலைநகரையாவது கைப்பற்றலாம் என்று சுல்தான் முடிவு செய்தான். டார்கோவிஸ்டே நகரை நெருங்கிய ஒட்டோமானிய படைகளின் கண்களில் ஒரு கொடூரக் காட்சி பட்டது.
தலைநகர் டார்கோவிஸ்டேவின் கோட்டைக் கதவுகள் திறந்திருந்தன. மனித நடமாட்டமே எங்கும் இல்லை. அமானுஷ்ய அமைதியினூடே மெதுவாக நகரினுள் முன்னேறிய படைகள் அக்கோரக் காட்சியைக் கண்டு ஸ்தம்பித்து நின்றன. நகரினுள் கழுமரங்களாலான ஒரு காடு உருவாக்கப்பட்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான கழுமரங்கள் வ்ரிசையாக நடப்பட்டிருந்தன. ஒவ்வொரு கழுமரத்தின் உச்சியிலும் ஒர் ஒட்டோமானிய உடல் சொருகப்பட்டிருந்தது. தன்னிடம் பிடிபட்ட ஒட்டோமானிய வீரர்கள், அதிகாரிகள், அப்பாவி மக்கள் அனைவரையும் கழுவிலேற்றிவிட்டுப் போயிருந்தான் விளாட். “என்னை எதிர்ப்பவர்களின் கதி இதுவே” என்று சொல்லாமல் சொல்லியிருந்தான் விளாட்.
நீண்ட போரினால் சோர்ந்து போயிருந்த சுல்தானின் படைகளுக்கு இக்காட்சி ஒரு பேரிடியாக இருந்தது. சுல்தான் மெகமதுவால் இதனை ஜீரணிக்கவே முடியவில்லை. இப்படிப்பட்ட கொடூரனை எதிர் கொள்ளும் திராணியில்லாமல் போனது அவனுக்கு. படையின் பொறுப்பை தன் தளபதிகளிடம் ஒப்படைத்துவிட்டுத் தன் தலை நகருக்கே திரும்பி ஓடிவிட்டான்.
என்னதான் கொடூர உத்திகளைப் பயன்படுத்தினாலும், இறுதியில் ஒட்டோமானியப் பேரரசின் பலமும், விளாட்டின் சொந்த நண்பர்கள் சிலர் செய்த சதியும் சேர்ந்து விளாட்டுக்குத் தோல்வியையே தந்தன.. போர்க்களத்தில் போரிடும் போது மடிந்த அவனது தலையை வெட்டி தேனில் பதப்படுத்தி இஸ்தான்புல்லுக்கு அனுப்பி வைத்தனர் ஒட்டோமானிய தளபதிகள். விளாடின் தலையைப் பார்த்த பின்னர்தான் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது மெகமதுக்கு. விளாட் இறந்து விட்டான் என்பதைத் தமது குடிமக்கள் நம்ப வேண்டுமென்பதற்காக விளாடின் தலையைப் பொது இடத்தில் பார்வைக்கு வைக்க உத்தரவிட்டான்.
கொடூரமானவன்தான். வில்லன் தான். ஆனாலும் நாடோடிக் கதைகளும் பழம்பாடல்களும் விளாடின் ‘பெருமை’களை இன்னும் ஊதிப் பெரிதாக்கிவிட்டன. அதன் உச்சக்கட்டம்தான் ரத்தக்காட்டேரிக் கதைகளில் அவன் பெயர் இணைக்கப்பட்டது! பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் விளாடின் கதையால் பிரமிப்படைந்த பிராம் ஸ்டோக்கர், தனது நாவலின் காட்டேரிக்கு “டிராகுலா” என்று பெயர் வைத்தது இதன் தொடர்ச்சியே!