1
மனிதர்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏதாகிலும் சில தருணங்கள் மறக்க முடியாதவையாக அமைந்து போவதுண்டு! ஆச்சரியங்களாலும், சுவாரஸ்யங்களாலும் நிரம்பி வழிந்து மூச்சு திணறச் செய்வதுண்டு!
உஜ்ஜயினி பட்டணத்தின் மன்னனான போஜராஜனுக்கு அன்றைய நாள் அப்படித்தான் அமைந்தது! அவன் ஸ்தம்பித்துப் போயிருந்தான்.
உலகின் தலை சிறந்த உன்னதமான ராஜ்ஜியங்களுள் ஒன்றாக பிரசித்தி பெற்றிருந்தது உஜ்ஜயினி ராஜ்ஜியம். புராண காலம் தொட்டு ராமாயண, மகாபாரத இதிகாசங்களில் இடம் பெற்ற, புராதனமான புகழ் வாய்ந்த ராஜ்ஜியம் உஜ்ஜயினி பட்டணம். கிருஷ்ணர், பலராமர், சுதாமர் ஆகியோர் உஜ்ஜயினியில் தான் சாந்தீப முனிவரிடம் கல்வி பயின்றதாக பாகவதம் சொல்கிறது.
இத்தனை கீர்த்தி மிக்க உஜ்ஜயினி பட்டணத்துக்கு அரசனாக இருப்பதில் போஜராஜனுக்கு மிகுந்த பெருமிதம் உண்டு. நேர்மை தவறாத நல்லரசு நடத்தி வந்த போஜராஜன் தனது குடி மக்களை உயிர் போல பாவித்தான். அவர்களுக்கு எந்த ஒரு குறையும், தீங்கும் நேராமல் கண்ணும் கருத்துமாக ஆட்சி புரிந்தான். அவன் தற்போது உஜ்ஜயினியின் எல்லைப்பகுதியில் இருந்த அடர்ந்த காட்டுக்குள் நுழைந்ததுகூட தனது குடிமக்களின் துயரம் ஒன்றைத் தீர்ப்பதற்காகத்தான்!
கடந்த சில நாள்களுக்கு முன்னதாக ஒரு நாள், உஜ்ஜயினியின் எல்லைப்புற குடிமக்கள் பெருங்கூட்டமாக அலறியடித்துக்கொண்டு அரசவைக்குள் வந்து குவிந்தனர். பலரும் பலவிதமாகக் கதறி முறையிட்டனர்.
‘மன்னவா! காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள். எங்களையும், எங்களது குடும்பத்தினரையும் தாங்கள்தான் காப்பாற்றி அருளவேண்டும்.’
‘தினம் தினம் செத்து மடிகிறோம் அரசே.’
‘ஆமாம்! ஆமாம்! நாளும் நாளும் உயிர்கள் தொடர்ந்து பலியாகிக் கொண்டிருக்கின்றன. துயரத்திலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் அரசே!’
எல்லோரும் ஆளாளுக்கு அழுது புலம்பி ஒருசேரப் பேசியதில் மன்னன் போஜராஜனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
‘என் ஆருயிர் குடிமக்களே, பதட்டப்படாதீர்கள். எதற்கும் கலங்காதீர்கள். உங்களுடைய பிரச்னை எதுவானாலும் நான் தீர்த்து வைக்கிறேன்! கலங்காதீர்கள்!’ என்று ஆறுதல் கூற, மன்னரின் அருகில் இருந்த நீதிவாக்கிய மந்திரி, அவர்களைப் பார்த்துக் கேட்டார்:
‘பிரஜைகளே! அமைதி! அமைதி! நீங்கள் எல்லாம் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்? என்ன உங்களின் பிரச்னை? எல்லோரும் ஆளுக்கு ஆள் கத்தாமல் யாராவது ஒருவர் மட்டும் முன் வந்து புரியும்படியாகச் சொல்லுங்கள்’ என்றார்.
கூட்டத்தில் தலைவன் போல் தென்பட்ட ஒருவன் முன்வந்து, ‘அரசே, நாங்கள் அனைவரும் நமது உஜ்ஜயனி நாட்டின் எல்லைப்புற கிராமங்களில் வசிப்பவர்கள். பக்கத்திலேயே அடர்த்தியான வனப்பகுதி என்பதால், அந்தக் காட்டுப் பகுதியிலிருந்து புலி, கரடி, நரி போன்ற கொடிய மிருகங்கள் இரவு வேளைகளில் அடிக்கடி எங்கள் இருப்பிடத்துக்குள் புகுந்து மனிதர்களைத் தாக்குவதுடன், கொட்டிலில் வளர்க்கும் ஆடு, மாடுகளையும் அடித்து இழுத்துச் சென்று விடுகின்றன. சில நேரங்களில் தொட்டிலில் உறங்கும் குழந்தைகளையும்கூட பலியாக்கிக் கொள்கின்றன. இதனால் நாங்கள் மிகவும் துன்பப்படுகிறோம். இதிலிருந்து தாங்கள்தான் எங்களைக் காக்கவேண்டும்.’ என்று முறையிட்டான்.
மன்னன் போஜராஜன் நீதிவாக்கிய மந்திரியுடன் கலந்தாலோசித்து விட்டு, மக்களிடம் சொன்னான்: ‘என் அன்பான பிரஜைகளே! கலங்காதீர்கள். காட்டு மிருகங்களால் இனி உங்களுக்கு எந்தத் துன்பமும் நேராமல் நான் பார்த்துக் கொள்கிறேன். நாளை, நானே நமது வீரர்களுடன் நேரில் காட்டுக்குச் சென்று மிருகங்களை வேட்டையாடத் தீர்மானித்து விட்டேன். இனி அந்தக் காட்டு மிருகங்களால் உங்களுக்குத் துன்பம் ஏதும் நேராது. அனைவரும் தைரியமாக புறப்பட்டுச் செல்லுங்கள்’ என்று கூறி வழியனுப்பி வைத்தான்.
மக்கள் மிகுந்த மனமகிழ்ச்சியுடன் மன்னரைப் போற்றி வணங்கி விட்டுச் சென்றனர்.
மறுநாள் உஜ்ஜயினியின் காட்டுப் பகுதி திமிலோகப்பட்டது. ஒரு சிறு சேனையுடனும், மந்திரி பிரதானிகளுடனும் வனத்துக்குள் நுழைந்த போஜ மன்னன் கானகத்தை நாலாபுறமும் சூழ்ந்து உள் நுழைந்து புலி, சிங்கம், கரடி, நரி போன்ற அபாய மிருகங்களை வளைத்து வளைத்து வேட்டையாடினான்.
ஏராளமான மிருகங்கள் எதிர்பட்டதால் அரைநாளுக்கும் மேலாக வேட்டை தொடர்ந்தது. சூரியன் உச்சிக்கு வந்து வெய்யில் தகித்துக் கொளுத்தியது. மன்னனும் ஏனைய படைவீரர்களும் களைத்துப் போனார்கள். நா வறண்டது. வியர்வை பெருக்கெடுத்து உடைகளைத் தொப்பலாக நனைத்தது. பசி வயிற்றைக் கிள்ளியது.
மன்னன் போஜராஜன் சற்றே களைப்பார நினைத்தான். தாகசாந்திக்கு நீரும், சிரமப்பரிகாரம் செய்ய நிழலும் எங்காவது இருக்கிறதாவென்று தேடி அவனும் படை வீரர்களும் கானகத்துக்குள் அலைந்தனர்.
தேடி அலைந்ததில் ஒரு காத தூரத்திலேயே வனத்தின் கிழக்குப் பகுதியில் கம்பங்கொல்லை ஒன்று அவர்கள் கண்ணில் தட்டுப்பட்டது.
நான்குபுறமும் அடர்ந்த நிழல் தரும் பழ மரங்களும் நடுவே கம்பங் கொல்லையும், பெரிய ஆழ் கிணறும், பிஞ்சு வெள்ளரிக்காய் விளைந்த தோட்டமுமாக அப்பகுதி அவர்களை வசீகரித்தது.
அந்தக் கம்பங்கொல்லைக்கு உரிமையாளன் சரவணப்பட்டன் என்னும் அந்தணன். சரவணப்பட்டன் அப்போது முற்றிய கதிர்களை பறவைகளிடமிருந்து காப்பதற்காக உயர்ந்த பரண் ஒன்று அமைத்து அதன்மீது அமர்ந்து கவண் கல்லில் கற்களைப் பூட்டி வீசி பறவைகளை விரட்டிக் கொண்டிருந்தான்.
மன்னனும் மந்திரிகளும் படை வீரர்களும் கம்பங்கொல்லையை நெருங்கும்போதே சரவணபட்டன் அவர்களை இனம் கண்டு கொண்டான். வேட்டையாடிக் களைத்துத் தள்ளாடியபடி வந்த அவர்களது நிலையை உணர்ந்து இரக்கம் கொண்டான்.
பரண் மீது இருந்தபடியே அவர்களை வரவேற்றான். ‘வாருங்கள். அனைவரும் வாருங்கள். உங்களை அன்புடன் வரவேற்கிறேன். புவியாளும் மாமன்னர் இந்த எளியேனின் இருப்பிடத்துக்கு வருகை தந்ததை எனது பூர்வ ஜென்ம புண்ணியமாகக் கருதி மகிழ்கிறேன். எல்லோரும் வேட்டையாடி மிகவும் களைத்துப் போயிருக்கிறீர்கள். இதோ எனது இந்தக் கிணற்றில் சுவையான குளிர்ந்த நீர் தளும்பிக் கிடக்கிறது. முகம் கை கால்களைச் சுத்தம் செய்து கொண்டு நீர் அருந்துங்கள். கம்பங்கொல்லையில் முதிர்ந்த கதிர்கள் உள்ளன. எடுத்துச் சாப்பிடுங்கள். மரங்களில் இனிப்பான பழங்கள் கிடைக்கும். தோட்டத்து பிஞ்சு வெள்ளரிக்காய் உங்கள் தாகம் தீர்ப்பதுடன் பசியையும் போக்கும். எல்லோரும் தயங்காமல் நிறைவாக எடுத்துச் சாப்பிடுங்கள். உங்களது குதிரைகளுக்கும் உண்ணவும், அருந்தவும் கொடுங்கள்’ என்று சொன்னான்.
சரவணப்பட்டனின் வரவேற்பில் மகிழ்ந்த போஜராஜன் தனது படையினருடன் கம்பங்கொல்லைக்குள் நுழைந்தான்.
அவ்வளவுதான் அடுத்த நொடி அந்த தோப்பும், கம்மங்கொல்லையும் துவம்சமாகியது. மன்னனும் அவனது மந்திரி பிரதானிகளும், வீரர்களும் பசியின் காரணமாக கதிர்களை ஒடித்தும், பழ மரங்களை உலுக்கிப் பழங்கள் பறித்தும், வெள்ளரிப் பிஞ்சுகளை பிய்த்தும் பசி தீரச் சாப்பிடத் தொடங்கினார்கள்.
பரணில் இருந்து இதை சந்தோஷமாகப் பார்த்துக் கொண்டிருந்த சரவணப்பட்டன், சற்று நேரத்தில் கம்மங்கொல்லைக்குள் நுழைய முயன்ற பன்றி ஒன்றைத் துரத்துவதற்காக பரணை விட்டுக் கீழிறங்கினான்.
அவனது பாதங்கள் தரையில் பட்டதும், சரவணப்பட்டனின் பார்வை மாறிப் போனது. முகம் விகாரமானது. கம்பங்கதிர்களை வீரர்கள் ஒடிப்பதையும், பழ மரங்களை உலுக்கி நாசம் செய்வதையும், விளைந்த வெள்ளரிப் பிஞ்சுகள் எல்லாவற்றையும் ஆளாளுக்கு பிய்த்துச் சாப்பிடுவதையும் கண்டு மனம் பதறினான். மிகுந்த கோபத்துடன் இரைந்து கத்தினான்.
‘ஐயையோ! இந்த அநியாயத்தை கேட்பாரில்லையா! போஜ மன்னரே நீங்களே இப்படி அக்கிரமம் செய்யலாமா? இந்த ஏழை அந்தணனின் கம்பங்கொல்லையை இப்படி அழித்து நாசம் செய்து விட்டீர்களே? இது உங்களுக்கே தகுமா? எனது மொத்த விளைச்சலையும் உண்டு தீர்த்து எனது குடும்பத்துக்கு வருமானம் இல்லாமல் செய்து விட்டீர்களே! ஏழை பிராமணனின் வயிற்றில் அடித்து விட்டீர்களே. இதுவா நீதி? ‘மதம் பிடித்த யானையையும், அகங்காரத்தால் நீதி நெறி தவறி நடக்கும் மன்னையும் யாரால்தான் கட்டுப்படுத்த முடியும்?’ என்று பழமொழி சொல்வார்கள். உங்கள் விஷயத்தில் அது இன்று உண்மையாகி விட்டது. நான் மோசம் போய்விட்டேன், நாசமாகி விட்டேன். ’ என்று புலம்பினான். தலையில் அடித்துக் கொண்டான்.
மன்னன் போஜராஜனும் மற்றோர்களும் இதைக் கண்டு அதிர்ந்து போனார்கள். ‘இதென்ன கொடுமை! வரவேற்று உபசரித்தவனே இப்படி தூற்றிப் பேசினால் என்னதான் செய்வது?’
மன்னனும் அவனைச் சார்ந்தவர்களும் ஏதும் மறுமொழி பேசாமல் கம்பங்கொல்லையை விட்டு வெளியேறத் தொடங்கினார்கள்.
இதைப் பார்த்தபடியே வெறுப்பு ததும்ப சரவணப்பட்டன் மீண்டும் நடந்து பரண் மீது ஏறி நின்றான்.
பரண் மீது கால் வைத்ததுமே அதுவரையில் அவன் முகத்தில் பரவியிருந்த கசப்பும் வெறுப்பும் நீங்கி, பூரண சாந்தம் நிலவியது. மீண்டும் புன்சிரிப்பு தவழ்ந்தது.
தனது கம்மங்கொல்லையிலிருந்து மன்னரும் மற்றவர்களும் வெளியேறுவதைப் பார்த்தவன், குழப்பத்துடன் அவர்களை நோக்கிச் சத்தமாக, ‘அரசே, நில்லுங்கள்! இதென்ன வந்த காரியம் முடியாமல் ஏன் எல்லோரும் பாதியிலேயே வெளியேறுகிறீர்கள்? இப்போதுதானே கம்மங்கதிர்களையும், பழங்களையும் சாப்பிடத் தொடங்கினீர்கள். இன்னும் ஒருவர் முகத்திலும் பசிக் களைப்பு நீங்கியதாகவே தெரியவில்லையே? அதற்குள்ளாக ஏன் புறப்பட்டுச் செல்கிறீர்கள்? இப்படி அரைகுறையாக தாங்களும் தங்களது பரிவாரங்களும் புறப்பட்டு விட்டால் விருந்தாளிகளை சரியாக உபசரிக்கவில்லையே என்று என் மனது வருத்தப்படாதா? தயவுசெய்து மீண்டும் உள்ளே வாருங்கள். வயிறாரச் சாப்பிட்டு, களைப்பு தீர மர நிழலில் தங்கி ஓய்வெடுங்கள். சூரியன் அஸ்தமித்ததும் மாலையில் எல்லோரும் புறப்பட்டுச் செல்லுங்கள். அப்போதுதான் என் மனம் திருப்தியாகும்!’ என்றான்.
போஜராஜன், நீதிவாக்கிய மந்திரியிடம், ‘மந்திரியாரே இதென்ன ஆச்சரியமாக இருக்கிறதே. இந்த அந்தணன் அந்தப் பரண் மீது இருந்தபோது மிகுந்த மனித நேயத்துடன் காணப்பட்டான். பசியும், களைப்புமாகக் கிடந்த நமது நிலைமையைப் புரிந்துகொண்டு கொல்லையில் அவனுக்குச் சொந்தமான அனைத்தையும் எடுத்துக்கொள்ளச் சொல்லி தாராள மனத்துடன் உபசரித்தான். ஆனால் சிறிது நேரத்துக்கெல்லாம் பரண் மீதிருந்து கீழிறங்கியவன் ஒரு சாமான்யனுக்கே உரித்தான சுயநலத்துடன் கொல்லை நாசமானதற்காக கோபத்தில் கொதித்து நம்மை விரட்டியடித்தான். இப்போதோ மீண்டும் பரண் மீது ஏறியதும் நாம் பசிக்களைப்பு தீராமல் திரும்புவதைக் கண்டு வருத்தப்பட்டு அதே பழைய நற்குணத்துடன் உபசரிக்கிறான். இது மிகவும் விசித்திரமாகவும் புதிராகவும் இருக்கிறது. என்னக்கென்னவோ இந்தப் புதிருக்கான விடை அந்தப் பரண்மீதுதான் உள்ளதென்று தோன்றுகிறது. ’ என்றான்.
‘ஆம் மன்னவா! எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இவன் நடத்தையே எனக்கு மிகவும் அதிசயமாயிருக்கிறது!’ என்றார் மந்திரி.
‘இருங்கள். நான் அந்த பரண் மீது ஏறிப்பார்த்து விட்டு வருகிறேன்’
மன்னன் போஜராஜன் விறுவிறுவென நடந்து சென்று சரவணப்பட்டன் நின்றிருந்த பரண் மீது ஏறினான்.
அடடா! அடடா! என்ன உணர்விது! மன்னன் பரண் மீது ஏறி நின்றதுமே தனக்குள் பெறும் மாறுதலை உணர்ந்தான். பிறவியெடுத்தது முதல் இதுவரை உணர்ந்திராத ஒரு பேரமைதி அவனுக்குள் நிலவியது. பிரபஞ்சத்தின் மீதான அத்தனை ஜீவன்களின் மீதும் பேரன்பு பொங்கித் ததும்பியது. ஒரு பெரும் ஞானநிலை; உத்தம குணங்களின் மொத்த பெட்டகமாக அவனது இதயம் நிறைந்து வழிந்தது. போஜராஜனிடம் அந்தச் சமயத்தில் யார் என்ன கேட்டாலும், அவனது ராஜ்ஜியத்தையே கேட்டாலும், ஏன் அவனது உயிரையே கேட்டாலும் தந்து விடுவான். போஜராஜன் ஆனந்தமும் ஆச்சர்யமும் கொண்டான். ‘என்ன இது அதிசயம்! அழகான இந்தக் கம்மங் கொல்லைக்குள், அதுவும் இந்தப் பரண் மீது ஏறியதுமே அப்போதுதான் பிறந்த குழந்தையின் நிர்மலமான இதயம் போல உள்ளம் எந்தக் களங்கமும் இல்லாமல் புனிதமாகத் திகழ்கிறதே. என்ன காரணமாக இருக்கும்? எப்படி இதைக் கண்டுபிடிப்பது?’
போஜன் ஒரு முடிவுக்கு வந்தான். அவன் சரவணப்பட்டனிடம், ‘அந்தணரே, இந்தக் கொல்லையின் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டுதான் தங்கள் குடும்பம் வருடம் முழுவதும் ஜீவிக்க வேண்டும் என்பதை நானறிவேன். ஆனால் இன்று நானும் எனது பரிவாரத்தினரும் எங்கள் பசிக்காக இந்தக் கம்மங்கொல்லையின் மொத்த விளைச்சலையும் உண்டு தீர்த்து விட்டோம். இதனால் தாங்களும், தங்களது குடும்பத்தினரும் வருடம் முழுவதும் சிரமப்பட நேரிடும் என்பதால் நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். நானே இந்த கம்மங்கொல்லையை வாங்கிக் கொள்கிறேன். இதற்கு ஈடாக பொன்னோ, பொருளோ, பல நூறு மடங்கு நிலமோ நீங்கள் எது கேட்டாலும் விலையாகத் தருகிறேன். என்ன வேண்டுமோ கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள். இதில் தங்களுக்குச் சம்மதம்தானே?’ என்று கேட்டான்.
சந்தோஷத்தின் உச்சத்தில் மிதந்த சரவணப்பட்டன் மிகுந்த பணிவுடன், ‘அரசே, தாங்களே எனது வரம் தரும் கடவுள். பகவானின் கடைக்கண் பார்வையில் பக்தனின் துயரங்கள் தொலைந்து போகும் என்பது போல எனது இந்தக் கம்மங்கொல்லையை தாங்கள் பெற்றுக் கொள்வதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். தங்களது இந்த அநுக்கிரகத்தால் நான் பெரும் பாக்கியசாலியும், தன்வந்தனாகவும் ஆவேன் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. எனக்கு இதில் முழு சம்மதம். தாங்கள் இதற்கு விலையாக எதைத் தந்தாலும் பெற்றுக்கொள்கிறேன்.’ என்று வணங்கினான்.
மன்னன் போஜ ராஜன் அடுத்தநாளே சரவணப்பட்டனை அரசவைக்கு வரவழைத்து ஏராளமான பொன்னும், மணிகளும், பட்டாடைகளும், தங்க ஆபரணங்களும் பரிசளித்து, கம்மங்கொல்லைக்கு ஈடாக ஒரு பெரும் கிராமத்தையே எழுதித்தந்து அவனை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தான்.
உடனே காலம் தாழ்த்தாமல் அரண்மனை வேலையாட்களை காட்டுக்கு அனுப்பி, கம்மங்கொல்லையின் பரணுக்கு கீழ் பூமியைத் தோண்டும்படியாகக் கட்டளையிட்டான்.
மன்னனின் ஆணைப்படி வேலையாட்கள் பரணை அகற்றிவிட்டு, பூமியைத் தோண்டத் தொடங்கினார்கள். கிட்டத்தட்ட ஆறடிக்குக் கீழ் பள்ளம் வெட்டி மேலும் தோண்ட முற்படும்போது மண்வெட்டி ஏதோ உலோகத்தில் பட்டு ‘டிங்’ என்ற சத்தம் எதிரொலித்தது.
அதன்பின் ஆட்கள் சர்வ ஜாக்கிரதையாக கொஞ்சம் கொஞ்சமாகத் தோண்டத் தொடங்க, பூமிக்குள்ளிருந்து வெளிப்பட்ட வஸ்துவைக் கண்டு ஸ்தம்பித்துப் போனான் போஜராஜன்.
அழகிய கலை நுணுக்கத்துடன் வைர வைடூரியங்கள் ஒளிர ஒரு நவரத்தின சிம்மாசனத்தின் மேற் பகுதி மெல்ல வெளிப்பட்டது. அதைக் கண்டதுமே போஜ மன்னன் கட்டுக்கடங்காத ஆனந்தமும் ஆச்சரியமும் கொண்டான். முழு சிம்மாசனத்தையும் மெல்ல மெல்ல ஒரு சிறு சிதைவும் நேராமல் எடுக்கச் சொன்னான்.
அதுபோலவே ஆட்கள் நாலாபுறமும் மிகுந்த ஜாக்கிரதையாக மண்ணை அகழ்ந்து போட சிறு சேதாரமும் இன்றி முழு சிம்மாசனமும் காணக் கிடைத்தது.
ஆஹா! என்ன அற்புதம்! முழுக்க முழுக்க பசும் பொன்னால் செய்யப்பட்டு, நவரத்தினங்களால் இழைக்கப்பட்டு ஜொலித்த அந்த சிம்மாசனம், முப்பத்திரண்டு படிகளுடன், ஒவ்வொரு படிக்கும் ஒரு பதுமையாக முப்பத்திரண்டு பதுமைகள் கொண்டதாக அமைந்திருந்தது.
சிம்மாசனத்தைப் பார்க்கப் பார்க்க பரவசம் கொண்ட போஜராஜனின் மனம் துள்ளிக் குதித்தது.
இந்த சிம்மாசனம் புதையுண்டு கிடந்த இடத்தின் மீது நின்ற போதே மனத்தில் உயர்ந்த நற்குணங்கள் உண்டாகின என்றால், இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து ராஜ்ஜியத்தை ஆட்சி செய்தால் எத்தனை உயரிய ஆட்சியைத் தரமுடியும்; இதனால் தனக்கு எத்தனை பெயரும், புகழும் உண்டாகும் என்று நினைத்துப் பார்த்தான்.
போஜன் சிறகடிக்கும் மனத்துடன் சிம்மாசனத்தை சர்வ ஜாக்கிரதையாக பள்ளத்திலிருந்து மேலே கொண்டு வரச் சொன்னான். ஆட்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிம்மாசனத்தை உயரே தூக்க முயற்சித்தனர். கிட்டத்தட்ட ஐம்பது பேர். ஆனால் சிம்மாசனத்தை கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை.
அனைவருக்குமே இது அதிர்ச்சியாக இருந்தது. போஜராஜன் நீதிவாக்கிய மந்தியிடம் திரும்பி, ‘அமைச்சர் பெருமானே, சிம்மாசனம் இந்த இடத்தை விட்டு நகர மறுக்கிறதே! என்ன காரணமாக இருக்கும்?’ என்று துயரத்துடன் வினவினான்.
‘மன்னவா, வருத்தப்படாதீர்கள். எல்லாவற்றுக்கும் காரண காரியம் இருக்கும்! இந்தச் சிம்மாசனம் யாருடையதென்று நமக்குத் தெரியாது. எத்தனை யுகங்களுக்கு முற்பட்டதென்றும் தெரியாது. இதில் அமர்ந்து ஆட்சி செய்தவர்கள் தேவலோகத்தின் தேவாதி தேவர்களாக இருக்கலாம். கந்தர்வ, கின்னரர்களாக இருக்கலாம். அதனாலேயே இந்த சிம்மாசனம், தெய்வாம்சம் கொண்டதாகத் திகழ்கிறது. அப்படியிருக்க இதை சாமான்யர்களாகிய நாம் அத்தனை சுலபமாக அடைந்து விட முடியுமா என்ன? சாதாரண ஒரு புதையலை எடுக்கவே முறைப்படி பூஜை புனஸ்காரங்கள் செய்விக்கும்போது, இந்த சிம்மாசனத்தை தாங்கள் அடையும் முன்பாக அதற்கென பரிகார பூஜைகள் செய்து பிராமணர்களுக்கு தான தர்மங்கள் செய்வித்து பிறகு சிம்மாசனத்தை அணுகினால் எல்லாம் நன்மையாகவே முடியும் என்பது என் எண்ணம்!’ என்றார்.
போஜராஜன் நீதிவாக்கிய மந்திரியின் ஆலோசனைப்படியே அரண்மனை புரோகிதர்களை வரவழைத்து அவ்விடத்திலேயே சிம்மாசனத்துக்கு சகல சம்பிரதாயங்களோடு, சாஸ்திர முறைப்படி பூஜை செய்வித்தான். பூஜையின் முடிவில் அந்தணர்களுக்கும், ஏழை எளியோர்க்கும் தான தர்மம் செய்வித்து, சிம்மாசனத்தை பக்தியுடன் வணங்கி நிறைவு செய்தான். அதன் பிறகு காவலர்கள் சிம்மாசனத்தை தூக்க முயற்சிக்க, அந்த அதிசயம் நிகழ்ந்தது! சிம்மாசனம் அசைந்து கொடுத்தது.
போஜராஜன் மகிழ்ந்து போனான். நீதிவாக்கிய மந்திரியின் சமயோசித ஆலோசனைதான் இந்த அற்புதத்துக்குக் காரணம் என்று எண்ணியபோது, ஒரு நாட்டுக்கு மதியூகியான நல்ல மந்திரி எத்தனை அவசியம் என்பதை தீர்மானமாக உணர்ந்தான். அதைச் சொல்லவும் செய்தான்.
‘மந்திரியாரே தங்களது அறிவுரையும் ஆலோசனையும் இல்லாதிருந்தால் இந்த அதிசயம் நிகழ்ந்திருக்காது! அறிவாளிகளுடன் நட்பு கொள்வதென்பது எத்தனை சிறந்தது என்பதை நான் இப்போது உணர்கிறேன்’ என்றான்.
நீதிவாக்கிய மந்திரி, ‘மன்னா, தங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி. இந்த நல்ல நிகழ்வுக்குக் காரணம் நான் மட்டும் அல்ல; நான் கூறிய ஆலோசனையை, ‘இவனென்ன சொல்வது? நாமென்ன கேட்பது?’ என்றில்லாமல் அதை மதித்து ஏற்றுக் கொண்டீர்கள் அல்லவா, அதுதான் முக்கியம். ஒருவன் எத்தனை சிறந்த அறிவாளியாக இருந்தாலும் மற்றவர்களின் கருத்துக்களையும் காது கொடுத்துக் கேட்டு ஏற்றுக் கொள்பவனே புத்திசாலி. அப்படியில்லாதவன் அழிவையே எதிர்கொள்வான்.
‘அதுபோலவே மந்திரியும் தனது கருத்தையும் யோசனைகளையும் வலுக்கட்டாயமாக மன்னனின் மேல் திணிக்கக்கூடாது என்பதும் முக்கியம். அரசனின் எண்ணப் போக்கை உணர்ந்து, அதற்கேற்ப பக்குவமாக நடந்து மன்னனுக்கு நன்மையே உண்டாகும்படியாக நடந்து கொள்ளவேண்டும். அதாவது, நந்தமன்னனை அவனது மந்திரி பஹுசுருதன் என்பவர் பிரும்மஹத்தி தோஷத்திலிருந்து காப்பாற்றியது போல!’ என்றார்.
‘அடடா! அது என்ன கதை அமைச்சரே? எனக்குச் சொல்லுங்கள்’ ஆவலுடன் கேட்டான் போஜ ராஜன் . நீதிவாக்கிய மந்திரி சொல்லத் தொடங்கினார்.