சீன இதிகாசக் கதைகள் / முன்னோட்டம்
நமக்கெல்லாம் ‘இதிகாசம்’ என்றால் என்னவென்று தெரியும். நம் நாட்டில் மிக அதிகமாகப் பேசப்பட்ட இதிகாசங்கள் ராமாயணமும் மகாபாரதமும் ஆகும். இந்தக் கதைகளை அறியாதவர்கள் இருக்க முடியாது. ஆங்கிலத்தில் Mythology என்ற சொல் தமிழில் ‘தொன்மம்’ என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இருந்தும் இந்தப் புத்தகத்தில் சீன இதிகாசக் கதைகள் என்னும் தலைப்பே எளிமை காரணமாக வைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக உலகில் பேசப்படுகின்ற மொழிகள் ஒவ்வொன்றும் தமக்கென்று தனித்தன்மையோடு கூடிய வரலாறு, பண்பாடு, இதிகாசங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. தொன்மக் கதைகள் ஆதிமனிதர்கள் காலத்திலே தொடங்கியிருக்கவேண்டும். மனிதனின் அச்சம், ஆசை, ஆற்றாமை, கற்பனை, தனிமை, தன்னிரக்கம் என்றெல்லாம் மனிதச் சமூகம் காலங்காலமாகக் கொண்டிருந்த உணர்வுகளின் வெளிப்பாடே மனிதனின் சமூக, சமய வரலாற்றை வடிவமைக்கக் காரணமாயிற்று.
எல்லா மொழிகளிலும் உள்ள இதிகாசக் கதைகளைப் போலவே சீன மொழிக் கதைகளிலும் கற்பனை வளம், ஆற்றல், யதார்த்தத்தை உதைத்துக் கொண்டு துள்ளி எழுகின்ற மனித மனத்தின் ஆர்வ ஜாலங்கள், அமானுஷ்ய நிகழ்வுகள் வினோத கதாபாத்திரங்கள் ஆகியவை நிரம்பியுள்ளன. வாய்மொழி கதைகளாகத் தொடங்கி தலைமுறைகளைத் தாண்டி, இன்று வரை இவை பேசப்படுகின்றன. சீன இதிகாசம் உலகில் மிகத் தொன்மையானது என்பதற்கு அதன் தொடக்கம் கி.மு. 12ம் நூற்றாண்டு என்று கணிக்கப்பட்டுள்ளதிலிருந்து தெரிய வருகின்றது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, எழுத்து வடிவத்தை எட்டாமலே ‘மொழிதல்’ இலக்கியமாகத் தொடர்ந்து பின்னர் சற்றேக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்து வடிவில் இந்தக் கதைகள் உருப்பெற்றுள்ளன. தொடக்கத்தில் எழுத்தில் வடிக்கப்பட்ட நூல் ‘ஷன்-ஹாய்-ஜிங்’ (Shan Hai Jing) என்பதாகும்.
சீன நாட்டில் பல்வேறு பகுதிகளில் பேசப்பட்ட மொழிகளின் தன்மைக்கேற்ப அங்கங்கே வட்டார வழக்கிலும் ‘மொழிதல் இலக்கியம்’ வளர்ந்து, பின்னர் இவை நாட்டுப்புற மற்றும் நாடோடிப் பாடல்களாகவும், நாடகங்களாகவும் உருப்பெற்றன இவையாவும் பிற்காலங்களில் எழுத்தில் பதிவு செய்யப்பட்டன.
மகாபாரதத்தைப் போன்று நீண்ட கதைகளை ஊர் ஊராகச் சென்று ‘கதைச் சொல்லிகள்’ இசைக் கருவிகளை இசைத்து சொல்லி இருக்கிறார்கள். ஊருக்கு ஊர், ஆளுக்கு ஆள், காலத்துக்குக் காலம் ஒரே கதையே அனேக மாற்றங்களுடன் உருவாகியுள்ளன. இவ்வாறு உருவாக்கப்பட்ட கதைகளே பின்னர் சீன இலக்கியத்தின் பண்டைய இலக்கியங்களாக இடம் வகித்துள்ளன. சில குறிப்பிட்ட சீன இனக் குழுக்களின் பங்களிப்பில் இத்தகைய இலக்கியங்களின் பெரும் பகுதி வெளிப்பட்டுள்ளன. இவற்றின் வழியாக சீன நாட்டின் வரலாறு, மன்னராட்சி வரலாறு, சமய நம்பிக்கைகள், சமூக நடைமுறைகள், மாயா விநோதங்கள் ஆகியன நீள் கதைகளாகப் படைக்கப்பட்டு மக்களிடையே வைக்கப்பட்டன. இத்தகைய மக்கள் இலக்கியம் கதைகளாக ,வாய்மொழியாகச் சொல்லப்பட்டும், நாடகங்களாக நடத்தப்பட்டும் நிலைகொண்டன.
முதல் முதலாக நெடுங்கதை வடிவில் கி.மு.பத்தாம் நூற்றாண்டளவில் ‘ஹேய்யான் சுவான்’ என்ற பெயரில் (கார் இருட்டிலே என்பது இதற்குப் பொருள்) ஒரு காப்பியம் இயற்றப்பட்டது. ஹன் தேசிய இனத்தின் ஒரே காப்பியம் இது. அவர்களுடைய வாழ்விடமாக அமைந்த ஷென்னோன்ங்கியா (Shennongjia) என்ற மலையகப் பகுதியின் நிகழ்ச்சிகளை, அந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் இயல்புகளை, கற்பனை வளர்ச்சியை எடுத்துக்காட்டக் கூடியதாக இது விளங்குகின்றது.
மேலும் சில படைப்புகள் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம்.
- செய்யுள் வடிவில் அமைந்த ‘லிசாவ்’ (Lisao); இதனை க்யூ யுஆன் (Qu Yuan) என்ற ‘Chu’ என்ற பகுதியைச் சேர்ந்தவரால் புனையப்பட்டது.
- Feng Hen yanyi என்ற பெயரில் Zhou இனத்தினர் உருவாக்கிய கடவுளின் கதைகள். இவை மிகவும் விறுவிறுப்பானவை என்று அறியப்பட்டவை.
- சீனாவிலிருந்து இந்திய நாட்டுக்கு புனிதப் பயணம் செல்வதைக் கூறும் நெடுங்கதை. கதையின் தலைப்பு- “மேற்கு நோக்கிப் பயணம்” (Journey to the West) என்பதாகும். இதை எழுதியவர் யூ சென்ஜென் (Wu Chengen) என்பவர். ஸுவான்ஜாங் (Zuan Zang) என்ற ஊரிலிருந்து மலைகளையெல்லாம் கடந்து இந்தியாவுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்கின்றபோது எதிர்கொள்ளும் நிகழ்ச்சிகள், அச்சமூட்டும் பேய்கள், பூதங்கள், ராட்சஷர்கள், காண நேர்ந்த வினோத காட்சிகள் போன்றவை இதில் உள்ளன.
- ஒர் அற்புதமான காதல் கதையும் சீன இதிகாசத்தில் தலையாய இடம் வகிக்கின்றது. அது Baishe Zhuan. இதனை உருவாக்கியிவர் ஹாங் ஷுவு (Hang Zhou). இந்தக் கதையில் ஒரு பாம்பு மனித உருவில் பெண்ணாக மாறி ஒரு மனிதனைக் காதலிக்கும். சாகசங்கள், அறைகூவல்கள் அச்சுறுத்தல்கள், அமாஷ்ய நிகழ்வுகள் எல்லாமே இதில் உண்டு.
நுவா உலகில் ஏற்பட்ட ஊழிப்பெருவெள்ளத்திலே தப்பிப் பிழைத்த ஒரே பெண். இவளுடன் மிஞ்சி இருந்த இன்னொரு மனித உயிர் இவளுடைய சகோதரன். ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் இருவருமாக மீண்டும் மனித இனத்தைப் பூமியிலே நிலைபெறச் செய்யவேண்டும் என்று விரும்புகின்றனர். எனவே இவர்கள் திருமணம் செய்துகொள்கின்றனர்.
மண்ணிலே மனிதர்களும் விலங்குகளும் பறவைகளும் வேகவேகமாக பெருகவேண்டும். அப்பொழுதுதான் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கருதி, நுவா களிமண்ணைக் கொண்டு மனிதர்களை, விலங்குகளை, பறவைகளைப் படைக்கின்றாள். கடவுள் அவற்றை உயிர்பெறச் செய்கின்றார்.
ஒரு பிரளயத்தை ஒட்டி இப்படி ஒரு கதையைப் புனைந்தனர். கி.மு ஏழாம் நூற்றாண்டளவில் இந்த நுவா கதை தோன்றியுள்ளது. இந்தக் கதை Three August Ones, Five Emperors ஆகிய சீன இதிகாசங்களில் சொல்லப்படுகின்றன. நுவா கதை மற்றும் இந்த இரண்டு இதிகாசங்களும் ஜியா வம்ச ஆட்சிக்காலத்தில் (கி.மு.2850-கி.மு.2205) தொகுக்கப்பட்டுள்ளன.
‘உலகம் தோன்றிய கதை’ என்பது பான்-கூ என்பவனைப் பற்றிக் கூறுவது. உலகத் தோற்றம் குறித்த சுவையான கதைகள் சொல்லப்பட்டுள்ளன. மன்னர்களைப் பற்றி சொல்லப்பட்ட கதைகள் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டவை. அவை ஹூவாங்டடி, யூ-ஹுவாங், ஷென்நாங், ஷாஹுவா, யாவோ, ஷன், யூ போன்ற பேரரசர்களின் கதைகள்.
இந்தக் கதைகளில் மன்னர்கள் கடவுளுடன் நேரடியாக தொடர்பு கொள்வார்கள். சில மன்னர்கள் கடவுளாகவே இருந்துள்ளனர். ‘ஜாட்’ என்ற மன்னன் மூவுலகங்களுக்கும் அதிபராக இருந்து நியாயத் தீர்ப்பு வழங்குவதாகச் சொல்லப்படுகின்றது.
பல நூறு ஆண்டுகள் ஒரே மன்னர் குலம் ஆட்சி புரிந்துள்ளதும் தெரியவருகிறது. அப்படி ஆண்ட மன்னர் குல ஆட்சிகள் : ஜியா வம்சத்தினர் மற்றும் ஷாங் வம்சத்தினர்.
சீனாவில் மிகப்பழமையான மன்னர்களாகவும், மிகவும் போற்றத்தக்க வகையில் தூய்மையான அரசை நடத்தியவர்களாகவும் தங்களின் மைந்தர்களை அரச பாத்யதைக்கு உரியவர் ஆக்காமல், வெளியிலிருந்து ஆட்சி நடத்துகின்ற தகுதியுடையவர்களைத் தேர்ந்தெடுத்து ஆட்சி உரிமையை அவர்களுக்கு அளித்தவர்களாகவும் இருந்த மாமன்னர்கள் “முப்பெரும் வேந்தர்கள்” என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் பேரரசர் யாவோ, பேரரசர் ஷுன், பேரரசர் யூ ஆகியோராவார். ஆனால் மூன்றாவது பேரரசர் யூ மனம் மாறி, அவர் தேர்ந்தெடுத்தவர் தகுதியற்றவர் என்று தெரிந்தபிறகு தன் மைந்தனையே தன் வாரிசாகதேர்ந்தெடுக்கிறார். இவையாவும் வரலாற்று நிகழ்ச்சிகள். சீன இதிகாசக் கதைகளில் இவை இடம்பெற்றுள்ளன.
இந்த மூன்று மன்னர்களோடு மேலும் இரு மன்னர்களைச் சேர்த்து ஐந்து பேரரசர்கள் என்று அழைத்து அவர்கள் பெருமை கதைகளாக உருப்பெற்றுள்ளன. சில மாயவிநோதங்கள் இவற்றில் சுவைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன.
மன்னர் கதைகளில் டிராகன்கள் வகின்றன. அந்த டிராகன்கள் வகை, வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பல விநோதப் பறவைகளும் விலங்குகளும் வருகின்றன. ‘சீனாவின் பெருந்துயரம்’ எனப்படும் பெருவெள்ளப் பேரிடர் அடிக்கடி கதைகளில் வருகின்றது.
மொத்தத்தில் வரலாற்று வாசனை இல்லாத கதைகள் என்று எதுவும் சீன இதிகாசங்களில் இல்லை. அதனால்தான் பல கதைகள் நிகழ்ந்த காலகட்டத்தை வரலாற்றாசியர்களால் கணிக்கமுடிந்திருக்கிறது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வரலாற்றுக்கு சீனர்கள் அளித்துள்ள முக்கியத்துவத்தை இதிலிருந்து புரிந்துகொள்ளமுடிகிறது.
கி.பி.220-420 வரையிலான காலக்கட்டத்தில் தாவோ சமயத்தவர்களும், பௌத்தர்களும் கதைகளில் அதிக தாக்கம் செலுத்துகின்றனர். அவர்களுடைய மாய மந்திரங்கள், ஆவிகள் பற்றிய கற்பனைகள் ஆகியவை கதைகளில் பதிவாகியுள்ளன. இதே காலகட்டத்தில் கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய கடல் தொடர்புகள், கடல் பயணிகளின் அனுபவங்களுடன் கூடிய கற்பனைக் கதைகள் பல படைக்கப்பட்டுள்ளன. மேலும் ரசவாதிகளின் கண்டுபிடிப்புகள் பற்றிய யூகங்களும் உண்மைகளும்கூட கதைகளாக உருவாகியுள்ளன.
டாங் (Dong) பரம்பரை ஆட்சிக்காலத்தில் கதைப் படைப்பதில் படைப்பாளிகளின் முன்னேற்றம் தெளிவாகப் புலப்படுகின்றன. அப்போதுள்ள கதைகளில் (செய்யுள் நடைகளிலும்கூட) மனித வாழ்வைப் பிரதிபலிக்கின்ற நிகழ்வுகள், சமூக வாழ்க்கையின் நேர்க்காட்சிகள், மனித உறவுகள், பண்புகள், கயமைகள் என்று பல்வகைப் பொருள்கள் கதையின் தளங்களாக இடம்பெற்றுள்ளன.
அறிவுரை கூறும் எளிய கதைகளிலும்கூட கதைக்களமும் கதாபாத்திரங்களின் இயல்பும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. இதிகாசங்களில் இருந்து முன்னேறி அடுத்த கட்டமாக இலக்கியப் போக்குடன் கூடிய கதைகள் புனையப்பட்டன. பிறகு ஒரு கட்டத்தில் மீண்டும் இதிகாசத்துக்குக் கதைகள் திரும்பின. இதிகாசத்தின்மீது சீனர்களுக்கு அசைக்கமுடியாத ஆர்வம் இருந்ததை இந்தப் போக்கு உணர்த்துகிறது.
யுவான், மிங், கிங் ஆகிய மன்னர் பரம்பரையினரின் ஆட்சிக்காலத்தில் பேர்பெற்ற பல காவியங்கள். புனைக்கதைகள் கிளைமொழிகளில் தோன்றின. அவற்றில் குறிப்பிடத்தக்கவை, ‘மூன்று ராஜாக்களின் காதல் கதை’ (Romance of the Three Kingdom) நீர்க்கரைகள் (Water Margin), மேற்கு நோக்கிப் புனிதப் பயணம், (Pilgrimage to the West) பண்டிதர்கள், (The Scholars) சிவப்பு மாளிகைக் கனவு (Dream of the Red Mansions) ஆகியவை.
இந்தக் கதைகளைப் படைத்தவர்கள் சாமானியர்களாகவும் இருக்கலாம், பண்டிதர்களாகவும் இருக்கலாம். அவர்கள் எப்படி இருந்தாலும் அவர்களுடைய படைப்புகளின் அடிநாதம், மனித உணர்வுகள். அதனாலேயே இந்தக் கதைகள் சீனர்களுக்கு மட்டுமின்றி மனிதகுலம் முழுவதற்கும் சொந்தமானவை.