New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மெட்ராசின் கதை -பார்த்திபன் (Parthiban)


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: மெட்ராசின் கதை -பார்த்திபன் (Parthiban)
Permalink  
 


Friday, November 18, 2011

பெரம்பூர் ராஜா

 

வட சென்னையின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றான பெரம்பூர் இன்று எப்படி இருக்கிறது என்று நம் எல்லோருக்கும் தெரியும். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது தெரியுமா? மூங்கில் மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. ஆனால் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பே இந்த காட்டுப் பகுதி திருத்தி அமைக்கப்பட்டு ஊராகிவிட்டது.

1752ஆம் ஆண்டு எழுதப்பட்ட 'ஆனந்தரங்கம் விஜய சம்பு' என்ற சமஸ்கிருத நூலில் பெரம்பூர் பற்றிய சுவாரஸ்யமான ஒரு செய்தி இருக்கிறது. அதாவது அந்தக் காலத்தில் கருவேந்தன் என்ற ஒருத்தர் அயனாவரத்தில் வசித்து வந்தார். சிறந்த கலா ரசிகனான கருவேந்தன் அவரைத் தேடி வரும் கலைஞர்களுக்கு நிறைய பரிசுப் பொருட்களைக் கொடுத்து கவுரவிப்பாராம். அதேபோல ஒருமுறை கொல்கொண்டாவில் இருந்து வந்திருந்த சில கவிஞர்களுக்கு கருவேந்தன் அள்ளிக் கொடுத்து அனுப்பியிருக்கிறார். அவர்கள் நாடு திரும்பியதும் இவரைப் பற்றி தங்கள் அரசரிடம் ஆஹா ஓஹோவென்று புகழ்ந்திருக்கிறார்கள்.

கவிஞர்கள் போற்றும் அந்த கலா ரசிகனை பார்க்க வேண்டும் என்று கூப்பிட்டு அனுப்பியிருக்கிறார் கோல்கொண்டா அரசர் மகரங்கா. அரசரைப் பார்க்கப் போன இடத்தில் கருவேந்தனுக்கு அடித்தது அதிர்ஷ்டம். கருவேந்தனைப் பிடித்துப் போன மகரங்கா அவருக்கு பரிசாக வெட்ரபுரா என்ற இடத்தைக் கொடுத்தார். அதுதாங்க நம்ம பெரம்பூர். அதாவது வெட்ர என்றால் பிரம்பு என்று அர்த்தம். வெட்ரபுரா என்றால் பிரம்புகள் நிறைந்த ஊர் என்று பொருள். அப்படித்தான் பெரம்பூரைப் பெற்றுத் திரும்பினார் கருவேந்தன். ராஜா ஆனதும் அவர் அயனாவரத்தில் இருந்து பெரம்பூருக்கு வீட்டை மாற்றிக் கொண்டு வந்துவிட்டார்.

அதெல்லாம் சரி, இந்த கருவேந்தனுக்கும் 'ஆனந்தரங்கம் விஜய சம்பு' நூலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? நியாயமான கேள்வி. இரண்டுக்கும் பல தலைமுறை சம்பந்தம் இருக்கிறது. அதாவது இந்த நூலின் கதாநாயகன் ஆனந்தரங்கப் பிள்ளை. இந்த அனந்தரங்கப் பிள்ளை யார் தெரியுமா? பிரெஞ்சு கவர்னர் துய்ப்ளேக்ஸின் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர். இவர் 1736 முதல் 1760 வரை கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகள் தான் பார்த்த கேட்டவற்றை நாட்குறிப்பு போல எழுதி வைத்தார்! அந்த காலகட்டத்தை அறிந்துகொள்ள இந்த குறிப்புகள் பெருமளவில் உதவுகின்றன.

சரி, விஷயத்திற்கு வருவோம். இந்த ஆனந்தரங்கத்தின் கொள்ளு கொள்ளுத் தாத்தாதான் நம்ம கருவேந்தன். இதற்கும் ஆதாரம் இருக்கிறது. கருவேந்தன் பெரம்பூருக்கு வீடு மாறியதும், அவருக்கு சோலை, வடமலை, திருமலை என மூன்று மகன்கள் பிறந்தனர். இவர்களில் சோலையின் மகன் பொம்மைய்யா. அந்த பொம்மைய்யாவிற்கு பெத்த பொம்மா, சின்ன பொம்மா என இரட்டைக் குழந்தைகள். இதில் சின்ன பொம்மாவிற்கு 6 மகன்கள். அதில் மூத்த மகனான பொம்மையாவிற்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். இதில் இரண்டாவது மகன் பேர் திருவேங்கடம். இவர்தான் நம்ம ஆனந்தரங்கத்தின் அப்பா. அப்பாடா... ஒருவழியா சொல்லி முடிச்சாச்சு.

இந்த திருவேங்கடத்திற்கு பிரெஞ்சு, ஆங்கிலம், டச்சு, போர்த்துகீஸ் என பல ஐரோப்பிய மொழிகள் தெரியுமாம். திறமைசாலியாக மட்டுமில்லாமல் பெரிய மனசுக்காரராகவும் இருந்திருக்கிறார் திருவேங்கடம். பெரம்பூரில் அவர் கட்டிய சத்திரமும், அருகிலேயே ஏழைப் பிரமாணர்களுக்காக அவர் உருவாக்கிய சிறிய கிராமமும் இதற்கு ஆதாரமாக விளங்கின.

கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் மெட்ராசில் காலூன்றி அதனை விஸ்தரித்துக் கொண்டிருந்தபோது, பெரம்பூர் ஆர்காடு நவாபின் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போதைய நவாப்பாக இருந்த முகம்மது சையத், 1742ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு ஐந்து கிராமங்களை வழங்கினார். அதில் நம்ம பெரம்பூரும் இருந்தது. பின்னர் ஆங்கிலேயர்கள் இங்கு குடியேறினர். அப்போதைய மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வே கம்பெனிக்காக 1856இல் இங்கு ஒரு ரயில்வே வொர்க் ஷாப் கட்டப்பட்டது. இங்கு பணிபுரிவதற்காக இன்னும் நிறைய ஆங்கிலேயர்கள் இப்பகுதிக்கு வந்தனர். இதனால் ஒரு காலத்தில் பெரம்பூர் ஒரு குட்டி வெள்ளையர் நகரம் போலவே காட்சியளித்தது. இன்றும் பெரம்பூர் பகுதியில் நிறைய ஆங்கிலோ - இந்தியர்கள் காணப்படுவதற்கு இதுதான் காரணம்.

ஒரு கலா ரசிகனுக்கு பரிசாக கிடைத்து உருவானதாலோ என்னவோ, இப்போதும் பெரம்பூர் பல்வேறு மதத்தினரும், கலாச்சாரத்தினரும் ஒன்றுகலந்து வாழும் உயிர்துடிப்புமிக்க கலைப் படைப்பைப் போல் காட்சியளிக்கிறது.

 

நன்றி - தினத்தந்தி

 

துய்ப்ளேக்ஸ் அரசாங்கத்தில் மற்றவர்களுக்கில்லாத உரிமைகளை ஆனந்தரங்கப் பிள்ளை பெற்றிருந்தார். பல்லக்கில் மேள வாத்தியத்தோடு கவர்னர் மாளிகையினுள் போகவும்தங்கப் பிடிபோட்ட கைத்தடி வைத்திருக்கவும்பாதரட்சை அணிந்து கவர்னரின் காரியாலயத்திற்குச் செல்லவும் அவருக்கு உரிமை அளிக்கப்பட்டிருந்தது,

* சாதாரண வழக்குகளை ஆராய்ந்து நீதி வழங்கும் அதிகாரத்தையும் பிரெஞ்சுக்காரர்கள் அவருக்கு அளித்திருந்தனர்.

* ஆனந்தரங்கப் பிள்ளை 'ஆனந்தப் புரவி' என்ற பெயரில் புதுச்சேரி - கொழும்பு இடையே வியாபாரக் கப்பலை நடத்தும் அளவுக்கு செல்வாக்குடன் இருந்தார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Saturday, November 12, 2011

ரிப்பன் மாளிகை

 

எப்போது பார்த்தாலும் பொங்கலுக்கு வெள்ளை அடித்தது போல பளிச்சென்று இருக்கும் ஒரு புராதனக் கட்டிடம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் ரிப்பன் மாளிகைக் கட்டிடம். ஆங்கிலேயர் காலத்தைச் சார்ந்த பல கட்டிடங்களும் செக்கச் சேவல் என்று நின்று கொண்டிருக்க இது மட்டும் பவுடர் போட்ட பெரிய பாப்பா மாதிரி வெள்ளை வெளேரென்று பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.

சென்னையின் இந்த வெள்ளை மாளிகை உருவான கதையைத் தேடிப் போனால் அது 1688இல் போய் நிற்கிறது. அப்போதுதான் இந்தியாவின் முதல் மாநகராட்சியாக மெட்ராஸ் மாநகராட்சி உதயமானது. கிழக்கிந்திய கம்பெனியின் தலைவராக இருந்த சர் ஜோசய்யா சைல்ட் என்பவரின் மூளையில் உதித்த யோசனைதான் இது. உள்ளாட்சி நிர்வாகத்தை கவனிப்பதற்கென்றே ஒரு தனி அமைப்பு தேவை என்று அவர் கருதினார். இது குறித்து அப்போது இங்கிலந்தை ஆட்சி செய்த மன்னர் இரண்டாம் ஜேம்சிடம் அவர் எடுத்துக் கூற, மன்னரும் உடனடியாக ஒப்புதல் அளித்துவிட்டார். இதனையடுத்து 1688ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி மெட்ராஸ் மாநகராட்சி தொடங்கப்பட்டது.

நதானியேல் ஹிக்கின்சன் (Nathaniel Higginson) என்பவர் முதல் மேயராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உதவி செய்வதற்காக ஆங்கிலேயர்கள், போர்த்துகீசியர்கள், யூதர்கள், இந்துக்கள் என பலதரப்பு பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் அதே செப்டம்பர் 29ஆம் தேதி புதிய மேயர் தேர்வு செய்யப்பட்டார். இப்படித் தான் இந்தியாவின் முதல் மாநகராட்சி தனது பணியைத் தொடங்கியது. அப்போது ரிப்பன் மாளிகை கட்டப்படவில்லை. கோட்டைக்குள் இருந்த டவுன் ஹாலில் தான் முதல் மாநகராட்சி செயல்பட்டது.

உற்சாகமாகத் தொடங்கப்பட்டதே தவிர அதன் செயல்பாடுகள் அத்தனை உற்சாகமாக இல்லை. ஆறே மாதத்தில் முதல் மேயர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அடுத்ததாக லிட்டில்டன் என்பவர் மேயரானார். மாநகராட்சி தனது பணிகளை மேற்கொள்ள போதுமான நிதி இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போதைய மெட்ராஸ் ஆளுநராக இருந்த சர் எலிஹூ யேலுக்கும் மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் இடையே அதிகார மோதல்கள் வெடித்தன. அப்படியே சண்டை சச்சரவுகளுடன் போய்க் கொண்டிருந்த மாநகராட்சி நிர்வாகம் 1727இல் மறுசீரமைக்கப்பட்டது. நகரம் வளர வளர மாநகராட்சியின் பணிகளும் அதிகரித்துக் கொண்டே சென்றன.

இந்நிலையில் டவுன் ஹால் பகுதியை அரசு எடுத்துக் கொண்டதால் அங்கிருந்த மாநகராட்சி அலுவலகம், ஜார்ஜ் டவுன் பகுதியின் எர்ரபாலு செட்டி தெருவுக்கு மாற்றப்பட்டது. பின்னர் சில ஆண்டுகளில் அந்த இடம் போதவில்லை எனக் கருதப்பட்டதால் புதிய இடம் தேடும் படலம் தொடங்கியது. அப்போதுதான் பீப்பிள்ஸ் பார்க் பகுதியில் ஒரு இடத்தை ஒதுக்கி மாநகராட்சிக்கென புதிய கட்டிடம் கட்டுவதென முடிவு செய்யப்பட்டது. அப்படித்தான் அந்தக் காலத்திலேயே ரூ. 7.5 லட்சம் செலவு செய்து தற்போதுள்ள ரிப்பன் மாளிகை கட்டப்பட்டது. நான்கு ஆண்டுகளாக இதைப் பார்த்துப் பார்த்து இந்தோ - சாரசனிக் பாணியில் பிரம்மாண்டமாக கட்டித்தந்த லோகநாத முதலியார் கூலியாக வாங்கிய தொகை ரூ. 5.5 லட்சம்.

1913இல் இந்த கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் மூவாயிரத்திற்கும் அதிகமான முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மாநகராட்சி கட்டிடம் என்பதால் உள்ளாட்சி நிர்வாகத்தில் பல்வேறு சீரமைப்புகளை செய்த லார்ட் ரிப்பனின் பெயரையே இதற்கும் வைத்துவிட்டனர். அவரை நினைவு கூறும் வகையில் அவரது சிலை ஒன்றும் இங்கு நிறுவப்பட்டது.

252 அடி நீளமும், 126 அடி அகலமும் கொண்ட இந்த கட்டிடத்தின் முக்கியமான அம்சம், அதன் நடுவில் இருக்கும் கோபுரம். 132 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தின் நடுவில் எட்டு அடி விட்டத்தில் ஒரு பிரம்மாண்ட கடிகாரமும் அமைக்கப்பட்டது. இதற்கு தினமும் கீ கொடுப்பார்கள். அந்தக் காலத்தில் மெட்ராசிற்கு வரும் நிறைய பேர், சுமார் நூறு அடி உயரத்தில் இருந்த இந்த மெகா சைஸ் கடிகாரத்தை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மாநகராட்சி இந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட பிறகு முதல் தலைவராக இருந்தவர் (அப்போது மேயர் பதவியை தூக்கிவிட்டார்கள்) பி.எல். மூர். பின்னர் 1919இல் தான் மெட்ராஸ் மாநகராட்சிக்கு முதல் இந்தியத் தலைவர் கிடைத்தார். அவர்தான் சர் பி. தியாகராய செட்டி. மீண்டும் 1933ஆம் ஆண்டு மேயர் பதவி உயிர் பெற்று எழுந்தது. அப்போது முதல் மேயரானவர் குமார ராஜா எம்.ஏ. முத்தையா செட்டியார். அதன் பிறகு இதுவரை மேயர் என்ற பதவி தொடர்ந்து நீடித்து வருகிறது.

தற்போது ரிப்பன் அலுவலக வளாகத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது நிறைவடைந்துவிட்டால், இதுவரை அருகில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்கள் வந்து செல்லும் சத்தத்தை மட்டும் கேட்டுக் கொண்டிருந்த ரிப்பன் மாளிகை, தனது வளாகத்திற்குள்ளேயே ரயில் வந்துசெல்லும் காட்சியையும் காணலாம். ரிப்பன் மாளிகை விரைவில் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும்போது, நாமும் அதற்கு மெட்ரோ ரயிலில் சென்று பூங்கொத்து கொடுக்கலாம்.

நன்றி - தினத்தந்தி

 

* இந்தியாவின் முதல் பெண் மேயரைத் தந்ததும் சென்னை மாநகராட்சிதான். அவர்தான் தாரா செரியன்.

* கிழக்கிந்திய டச்சு அரசாங்கத்தின் நிர்வாகத்தைப் பார்த்துதான் சர் ஜோசய்யா சைல்ட்டுக்கு மாநகராட்சி ஏற்படுத்தும் யோசனை பிறந்ததாக கூறப்படுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Saturday, November 5, 2011

அரசு அருங்காட்சியகம்

 

ஒரு சில விநாடி இடைவெளியில் வெவ்வேறுகாலகட்டங்களையும், வெவ்வேறு நாகரிகங்களையும் பார்க்க ஆசைப்படுகிறீர்களா? அப்படி என்றால் டைம் மெஷின் எனப்படும் கால இயந்திரத்தில் சென்று பார்க்கலாம். 'என்ன கிண்டலா... அட, நடக்குற கதையைப் பேசுப்பா..' என்பவர்கள் எழும்பூரில் இருக்கும் அரசு அருங்காட்சியகத்திற்கு போய் வரலாம். ஆங்கிலேயர்கள் உருப்படியாக செய்துவிட்டுப் போன காரியங்களில் மிகவும் முக்கியமானது அருங்காட்சியகம் அமைத்தது.

 

'வரலாறு முக்கியம் அமைச்சரே..' என்று நினைத்த மெட்ராஸ் கல்விக் கழகத்தினர் (Madras Literary Society) சென்னை நகருக்கு ஒரு அருங்காட்சியகம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதை ஏற்று அப்போதைய மெட்ராஸ் ஆளுநராக இருந்த சர் ஹென்றி பாடிங்கர்(Sir Henry Pottinger), லண்டனில் இருந்த கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்திடம் இதற்கான அனுமதியைப் பெற்றார். இதை அடுத்து 1851ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் முதன்முதலாக ஒரு அருங்காட்சியகம் உருவானது.

 

கல்லூரிச் சாலையில் தற்போது இருக்கும் டிபிஐ (DPI) வளாகத்தில் அந்த காலத்தில் ஒரு கல்லூரி இருந்தது. அந்த கல்லூரியின் முதலாம் மாடியில்தான் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. அப்போது மெட்ராஸ் கல்விக் கழகத்திடம் இருந்த 1100 நிலவியல் மாதிரிகள் இங்கு வைக்கப்பட்டன.

 

அருங்காட்சியக அலுவலர்களின் ஆர்வம் காரணமாக அது வேகமாக விரிவடைந்தது. அதேசமயம் அது இடம்பெற்றிருந்த கட்டடமும் அதே வேகத்தில் சிதிலமடையத் தொடங்கியது. அதனால் 1854ஆம் ஆண்டு எழும்பூரில் உள்ள பாந்தியன் என்ற கட்டடத்தில் அருங்காட்சியகத்தை பால் காய்ச்சி குடி அமர்த்திவிட்டார்கள்.

 

பாந்தியன் தோட்டம் என்பது ஹால் பிளூமர் என்ற பொதுப்பணித் துறை காண்டராக்டருக்கு சொந்தமானது. அவர் அதை கமிட்டி ஆஃப் 24 என்ற அமைப்பினருக்கு விற்க, அவர்களிடம் இருந்து மூரட் என்ற பணக்கார ஆர்மீனிய வணிகர் அந்த இடத்தின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கினார். பின்னர் 1830ஆம் ஆண்டு அதை அப்போதைய அரசுக்கு ரூ. 28,000க்கு விற்றுவிட்டார். அங்கு 1853ஆம் ஆண்டு ஒரு பொதுநூலகம் ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு நமது அருங்காட்சியகம் வந்து சேர்ந்துகொண்டது.

 

ஒரு புலியும், சிறுத்தைக் குட்டி ஒன்றும்தான் அருங்காட்சியகத்தின் அப்போதைய கதாநாயகர்கள். இவற்றைப் பார்க்க வெகு தொலைவில் இருந்தெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். மெட்ராசுக்கு வந்தவர்கள் உயிர் காலேஜ், செத்த காலேஜ் பார்க்காமல் திரும்புவதில்லை என்ற சபதத்தோடே ஊரில் இருந்து புறப்பட்டது போல தோன்றியது.

 

இதைப் பார்த்த அருங்காட்சியகப் பொறுப்பாளரான மருத்துவர் பல்ஃபர்,கர்நாடக நவாப்பிடம் இருந்த காட்டு விலங்குகளை அருங்காட்சியகத்துக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். நவாப்பும் அனுப்பி வைக்க, 1856 ஆம் ஆண்டு முதல் அருங்காட்சியகத்தில் 360 விலங்குகள் இருந்தன. பின்னர் மாநகர சபை இந்த விலங்கினக் காட்சிச்சாலையைப் பொறுப்பேற்று வேறிடத்துக்கு மாற்றியது.

சில ஆண்டுகளில் நீர்வாழ்விலங்குகள் காட்சியகம் (Aquarium) ஒன்றும் அரசு அருங்காட்சியகத்தில் திறந்து வைக்கப்பட்டது. 1942 ஆம் ஆண்டில் மெட்ராஸ் மீது ஜப்பான் தாக்குதல் நடத்தும் என்ற பீதி நிலவியதால், அதற்கு பயந்து நகரத்திலிருந்து நிறுவனங்கள் அகற்றப்பட்டபோது நீர்வாழ்விலங்குகளை கை கழுவிவிட்டனர். இதனை மீண்டும் அமைப்பதற்கான முயற்சிகள் கடைசி வரை கை கூடவில்லை.

1984 ஆம் ஆண்டு சமகால ஓவியங்களுக்கான புதிய கட்டிடம் ஒன்று திறக்கப்பட்டது. இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டு இருப்பனவற்றுள் ராஜா ரவிவர்மாவின் அற்புதமான ஓவியங்களும் அடங்கும். 1988 ஆம் ஆண்டில் இங்கு ஒரு சிறுவர் அருங்காட்சியகமும் தொடங்கப்பட்டது. சிறுவர்களின் கற்பனைகளை சிறகடிக்க வைக்கும் பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

 

கற்கால மனிதர்களில் தொடங்கி சேர, சோழ, பாண்டியர்கள் வரை நமக்கு அழகாக அறிமுகப்படுத்துகிறது இந்த அருங்காட்சியகம். அரிய வரலாறுகளை சுமந்து நிற்கும் கல்வெட்டுகள், மீண்டும் மீண்டும் காணத் தூண்டும் கலைப் படைப்புகள், பிரபஞ்ச ரகசியங்களை கற்றுத் தரும் விண்கற்கள் என இங்குள்ள ஒவ்வொரு பொருளும் விலை மதிக்கமுடியாதவை. கொஞ்சம் நேரத்தை மட்டும் செலவழித்தால், பிரபஞ்சம் எத்தனை பிரம்மாண்டமானது, வாழ்க்கை எவ்வளவு அழகானது, அர்த்தமுள்ளது என்பதை புரிய வைக்க ஆர்வமுடன் காத்திருக்கிறது இந்த அருங்காட்சியகம்.

தினத்தந்தி - பார்த்திபன்

---------------------

16.25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் ஆறு கட்டிடங்களும், அவற்றில் 46 காட்சிக் கூடங்களும் உள்ளன.

எம்டன் போர் கப்பல் சென்னையில் தாக்குதல் நடத்தியதில் கண்டெடுக்கப்பட்ட வெடித்து சிதறிய உலோக சிதறல்கள்வெடிக்காத குண்டுகள் ஆகியவையும் இங்கு இருக்கின்றன.

* கடற்கரையில் ஆவேசமாக நின்று கொண்டிருந்த கண்ணகி கூட, சில காலம் இந்த அருங்காட்சியகத்தில் ஓய்வெடுத்தார்.

அருங்காட்சியக வளாகத்தில் கலையரங்கம் ஒன்றும் இருக்கிறது



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Sunday, October 30, 2011

பேங்க் ஆஃப் மெட்ராஸ்

 

கடற்கரை ரயில்நிலையத்திற்கு எதிரில் பிரம்மாண்டமாக காட்சியளித்துக் கொண்டிருக்கும் ஒரு சிகப்பு கட்டடத்தில் தற்போது பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடம் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டதே ஒரு வங்கிக்காகத்தான். அந்த வங்கிதான் மெட்ராஸ் ராஜதானியின் தலைமை வங்கியாக ஒரு காலத்தில் செயல்பட்டு வந்த பேங்க் ஆஃப் மெட்ராஸ். அன்றைய மெட்ராஸ்வாசிகளின் கைகளில் புரண்டு கொண்டிருந்த ரூபாய் நோட்டுகளை அச்சடித்து விநியோகித்த அந்த புராதன வங்கியின் கதையைத் தான் இந்த வாரம் பார்க்க இருக்கிறோம்.

இந்தியாவில் பண்டைய காலந்தொட்டு வசதி படைத்த சில தனியார் தான் வங்கித் தொழில் செய்து வந்தனர். பொதுவங்கிகள் என்ற விஷயமே பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில்தான் தொடங்கப்பட்டது. 1786ஆம் ஆண்டு தி ஜெனரல் பேங்க் ஆஃப் இந்தியாமற்றும் பேங்க் ஆப் ஹிந்துஸ்தான் ஆகியவை முதலில் துவங்கப்பட்டன. ஆனால் அவ்வங்கிகள்தற்பொழுது செயல்பாட்டில் இல்லை. இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருப்பவற்றில் மிகப்பழமையான வங்கி பாரத ஸ்டேட் வங்கியாகும்(State Bank of India).

அப்படிப் பழம்பெருமை பெற்ற பாரத ஸ்டேட் வங்கியின் தாய்தான் பேங்க் ஆப் மெட்ராஸ். இதன் கதை சுமார் 200 ஆண்டுகள் பழமையானது. ஆங்கிலேயர்கள் மெட்ராசில் குடியேறி நிர்வாக வசதிகளுக்காக பல்வேறு விஷயங்களையும் உருவாக்கிக் கொண்டிருந்தபோது, நிதி விவகாரங்களை கையாள ஒரு வங்கி தேவை என்பதை உணர்ந்தனர்.

முதன்முதலில் 1683இல் ஆளுநர் வில்லியம் ஜிப்போர்டும், அவரது குழுவினரும் மெட்ராசில் ஒரு வங்கியை தொடங்கினர். இதன் அடுத்தகட்டமாக 1805இல் அப்போதைய ஆளுநர் சர் வில்லியம் பெண்டிக் நிதிக் குழு ஒன்றை கூட்டினார். அக்குழுவின் ஆலோசனையின்படி 1806இல் ஒரு வங்கி உருவாக்கப்பட்டது. அதுதான் மெட்ராஸ் வங்கி (பேங்க் ஆப் மெட்ராஸ் என்பது வேறு), இதனை அரசு வங்கி என்றும் மக்கள் அழைத்தனர்.

அந்தக் காலத்தில் இதைப் போல வேறு சில வங்கிகளும் செயல்பட்டு வந்தன. பின்னர் 1843ஆம் ஆண்டு, மெட்ராஸ் வங்கி, கர்நாடிக் வங்கி, பிரிட்டிஷ் பேங்க் ஆஃப் மெட்ராஸ், ஆசியாடிக் வங்கி ஆகிய நான்கையும் இணைத்து ரூ.30 லட்சம் முதலீட்டில் ஒரு மத்திய வங்கி தொடங்கப்பட்டது. அதுதான் பேங்க் ஆஃப் மெட்ராஸ்.

கிட்டத்தட்ட சென்னை மாகாணம் முழுவதற்குமான ரிசர்வ் வங்கியைப் போன்று இது செயல்பட்டது. இதேபோல பம்பாய் மற்றும் வங்காள மாகாணங்களுக்காக பேங்க் ஆஃப் பம்பாய், பேங்க் ஆஃப் பெங்கால் ஆகிய வங்கிகள் உருவாக்கப்பட்டன. கிழக்கிந்திய கம்பெனி வழங்கிய உரிமை சாசனத்தின் கீழ், மூன்று தலைமை மாகாணங்களுக்குரிய வங்கிகளாக இவை நிறுவப்பெற்றன.

பேங்க் ஆஃப் மெட்ராஸிற்கு கோவை, நாகை, தூத்துக்குடி, பெங்களூர், மங்களூர், கொச்சி, ஆலப்புழை, குண்டூர் என தென்னிந்தியா முழுவதும் கிளைகள் இருந்தன. இதுமட்டுமின்றி இலங்கையின் கொழும்பு நகரிலும் இந்த வங்கி கிளை விரித்திருந்தது. ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது உள்பட சென்னை மாகாணத்தின் அனைத்து நிதித் தேவைகள் மற்றும் சேவைகளை இந்த வங்கி கவனித்துக் கொண்டது.

இந்த வங்கியின் தலைமை அலுவலகம் கட்டுவதற்காக 1895ஆம் ஆண்டு மெரினா கடற்கரைக்கு எதிரில், தெற்கு கடற்கரைச் சாலையில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து நிலம் வாங்கப்பட்டது. அங்கு நம்பெருமாள் செட்டி என்ற மெட்ராசின் புகழ்பெற்ற காண்ட்ராக்டரைக் கொண்டு ரூ.3 லட்சம் செலவில் ஒரு பிரம்மாண்ட கட்டடம் கட்டப்பட்டது.பாரிமுனையில் உள்ள ஐகோர்ட்சட்டக்கல்லூரிஎழும்பூரில் உள்ள சிற்பக் கலை கல்லூரிமியூசியம்கன்னிமாரா நூலகம் போன்றவற்றை எல்லாம் கட்டியவர் இந்த நம்பெருமாள் செட்டிதான். கர்னல் சாமுவேல் ஜேக்கப் வடிவமைப்பில் கட்டப்பட்ட பேங்க் ஆஃப் மெட்ராஸ் கட்டிடம், விக்டோரியா காலத்து இந்தோ சாராசனிக் கட்டடக் கலைக்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது.

1921ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி, பேங்க் ஆஃப் மெட்ராஸ், பேங்க் ஆஃப் பெங்காள், பேங்க் ஆஃப் பம்பாய் ஆகிய மூன்று மாகாண வங்கிகளையும் இணைத்து இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியா (Imperial Bank of India) உருவாக்கப்பட்டது. இம்பீரியல் வங்கி நியமனம் செய்த முதல் இந்திய டைரக்டர் யார் தெரியுமா? நம்பெருமாள் செட்டிதான். இந்த வங்கி 1955இல் மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னர், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எனப்படும் இன்றைய பாரத ஸ்டேட் வங்கியாக மாறியது.

கடற்கரை ரயில் நிலையத்திற்கு எதிரில் இருக்கும் இந்த பழைய பேங்க் ஆஃப் மெட்ராஸ் கட்டடம் சென்னையின் பல முக்கிய நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறது. அவற்றில் குறிப்பிடத்தக்கது முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள். உலகப் போர்களுக்கும் இந்த வங்கிக்கும் ஒரு எதிர்பாராத தொடர்பு ஏற்பட்டது. 1914ஆம் ஆண்டு, முதல் உலகப் போர் உச்சத்தில் இருந்தபோது, ஜெர்மனின் எம்டன் கப்பல் சென்னை துறைமுகம் மீதுகுண்டு வீசியது. ஒரு சில நிமிடங்களில் 125 குண்டுகளை எம்டன் அள்ளி வீசியது. இந்த தாக்குதலில் ஒரு குண்டு சிதறல்சென்னை உயர்நீதிமன்றத்தின் பின்புற சுற்றுச்சுவரில் விழுந்த இடம் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எம்டன் வீசிய ஒரு குண்டு கடற்கரையில் விழுந்து சிதறி பேங்க் ஆப் மெட்ராசின் சுவற்றில் மண்ணை அப்பியது. எம்டன் போய்விட்டாலும் வங்கியின் சுவற்றில் அது விட்டுச் சென்ற அடையாளம் மெட்ராஸ்வாசிகளை கதிகலங்க வைத்தது. சுவற்றில் அப்பியிருந்த மணலை அவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து அச்சத்துடன் பார்த்துச் சென்றனர்.

இரண்டாம் உலகப் போரின்போது மெட்ராஸ் மீது ஜப்பான் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. குறிப்பாக துறைமுகப் பகுதியில் அவை குண்டுகளை வீசின. இந்த தாக்குதலையும் பேங்க் ஆஃப் மெட்ராஸ் மௌன சாட்சியாக பார்த்துக் கொண்டிருந்தது. இப்படி சென்னையுடன் தொடர்புடைய பல அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளை இந்த புராதன கட்டடம் பார்த்திருக்கிறது, இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

நன்றி - தினத்தந்தி

 

---------

1969ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி நாட்டின் மிகப்பெரிய 14வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. அப்போது நாட்டிலிருந்த வங்கிக் கிளைகள் 8260 மட்டுமே.

* பேங்க் ஆஃப் மெட்ராஸ் வெளியிட்ட ரூபாய் நோட்டுகளில் மெட்ராஸ் ஆளுநராக இருந்த சர் தாமஸ் மன்ரோவின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Wednesday, October 26, 2011

பிரசிடென்சி கல்லூரி

 

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தாயாக கருதப்படும் பிரசிடென்சி கல்லூரி எனப்படும் மாநிலக் கல்லூரிசென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று. மெரினா கடற்கரைக்கு எதிரில் வங்கக் கடலை வேடிக்கை பார்த்தபடி கம்பீரமாக நின்றுகொண்டிருக்கும் இந்த சிகப்பு நிறக் கட்டிடத்திற்கு 140 வயதாகிறது. எத்தனையோ அறிஞர் பெருமக்களை உருவாக்கி இருக்கும் இக்கல்லூரி, சென்னைக்கு கிடைத்த மாபெரும் வரம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இத்தாலிய அரண்மனை போல் காட்சியளிக்கும் இந்த கல்லூரியின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. 1826இல் அப்போதைய மெட்ராஸ் ஆளுநராக இருந்த தாமஸ் மன்றோ,Committee of Public Instruction என்ற குழு ஒன்றை அமைத்தார். பத்து ஆண்டுகள் கழித்து 1836இல் இந்த குழுவின் பணிகளை Committee of Native Education என்ற கல்விக் குழு ஏற்றுக் கொண்டது. அந்தக் குழு கல்வி தொடர்பாக சில யோசனைகளை முன்வைத்தது. ஆனால் அவை அப்போதைய ஆளுநர் லார்ட் எல்ஃபின்ஸ்டோனுக்கு பிடிக்கவில்லை. அதற்கு பதில் அவரே 19 தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றினார். அதில் முக்கியமான தீர்மானம், மெட்ராசில் ஒரு பல்கலைக்கழகத்தை தொடங்குவது என்பது.

இதன் முதல்படியாக, 1840ஆம் ஆண்டு அக்டோபர் 15ந் தேதி, எழும்பூரில் ஒரு வாடகைக் கட்டிடத்தில் பிரசிடென்சி பள்ளி தொடங்கப்பட்டது. கல்வி ஆர்வம்மிக்க தனியார் சிலர் சேர்ந்து இந்த பள்ளியைத் தொடங்கினர். இந்த பள்ளியின் நிர்வாகம் அன்று மெட்ராஸில் வசித்த ஆங்கிலேய மற்றும் முக்கிய இந்தியப் பிரமுகர்கள் அடங்கிய குழுவின் கட்டுப்பாட்டில் இருந்தது.

இந்த பள்ளியின் முதல்வராக இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் ஹானர்சில் தேர்ச்சி பெற்ற இ.பி. பவுல் என்பவரை நியமிக்க எல்ஃபின்ஸ்டோன் விரும்பினார். ஆனால் விதி விளையாடியதில் பவுலுக்கு அந்த வரலாற்றுப் பெருமை கிடைக்காமல் போய்விட்டது.

எல்ஃபின்ஸ்டோனின் அழைப்பை ஏற்று உடனடியாக இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு வந்த பவுல், 1840 செப்டம்பர் 20ந் தேதி பம்பாய் துறைமுகத்தை அடைந்துவிட்டார். ஆனால் அங்கிருந்து மெட்ராஸ் துறைமுகம் வருவதற்கு அவருக்கு 4 வார காலம் ஆகிவிட்டது. அதுவரை பொறுக்க முடியாத கல்விக் குழுவினர், கல்கத்தா ஹூக்லி கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த கூப்பர் என்பவரை தற்காலிக முதல்வராக இருக்கும்படி கேட்டுக் கொண்டனர். அவரும் மாதம் ரூ.400 சம்பளத்திற்கு பிரசிடென்சி பள்ளியின் முதல்வராக வந்து சேர்ந்தார்.

பவுல் வந்த பிறகு சில மாதங்களிலேயே கூப்பர் மீண்டும் கல்கத்தா சென்றுவிட்டார். 1841ல் பிரசிடென்சி பள்ளி, உயர்நிலைப் பள்ளியானது. இடமும் எழும்பூரில் இருந்து பிராட்வேவிற்கு மாறியது. மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்து 1853இல் பிரசிடென்சி பள்ளி, பிரசிடென்சி கல்லூரியாக உயர்ந்தது. சிறுவர், சிறுமியர் உலவிக் கொண்டிருந்த வளாகத்தில் வளர்இளம் பருவ பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கத் தொடங்கின. 1857இல் சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட போது, அதன் கீழ் இந்த கல்லூரி இணைந்தது. அப்போதும்கூட பிரசிடென்சி கல்லூரி பிராட்வேயில் தான் இருந்தது.

கல்லூரிக்கு இந்த சிறிய இடம் போதாது என்பது சில ஆண்டுகளிலேயே உணரப்பட்டது. எனவே பெரிய கட்டிடம் ஒன்றை மெரினா கடற்கரைக்கு எதிரில் கட்டுவது என தீர்மானிக்கப்பட்டது. இந்த கட்டடத்திற்காக சிறப்பான வரைபடம் தயாரித்துக் கொடுப்பவருக்கு ரூ.3000 சன்மானம் அளிக்கப்படும் என 1864இல் ஒரு போட்டி அறிவிக்கப்பட்டது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு ரூ 3000 என்பது எவ்வளவு பெரிய தொகை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அருமையான ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என விரும்பியதால், இத்தனை பெரிய சன்மானம் கொடுக்க முன்வரப்பட்டது. இந்த ஜாக்பாட் பரிசு யாருக்கு என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்க, அந்த பரிசைத் தட்டிச் சென்றார் இங்கிலாந்தின் புகழ்பெற்ற கட்டடக்கலை நிபுணரான ராபர்ட் சிஸ்ஹோம்.

இதனைத் தொடர்ந்து கல்கத்தாவில் இருந்த அவர் மெட்ராஸ் வந்தார். மெட்ராசில் ராபர்ட் சிஸ்ஹோம் வடிவமைத்துக் கொடுத்த முதல் கட்டடம் பிரசிடென்சி கல்லூரி. பின்னர் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், விக்டோரியா பப்ளிக் ஹால், தலைமைத் தபால் நிலையம் என அந்தக் கால மெட்ராசின் பல கட்டடங்கள் இவரது கைவண்ணத்தில் உருவாகின. அவர் மெட்ராஸ் வந்த புதிதில் வடிவமைத்துக் கொடுத்த கட்டிடம் என்பதால், பிரசிடென்சி கல்லூரி கட்டடத்தில் இத்தாலிய பாணியின் தாக்கம் அதிகம் இருக்கும். காரணம், அப்போதைய இங்கிலாந்தில் இத்தாலிய பாணி கட்டடங்கள் பிரபலமாக இருந்தன. பின்னர் அவர் வடிவமைத்த கட்டிடங்களில் பலவகை பாணிகள் காணப்படுகின்றன.

1867இல் அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் லார்ட் நேப்பியர் அடிக்கல் நாட்ட கட்டுமானப் பணி தொடங்கியது. மூன்று ஆண்டு கால கடும் உழைப்பில் கட்டி முடிக்கப்பட்ட பிரசிடென்சி கல்லூரி கட்டடத்தை 1870ஆம் ஆண்டு மார்ச் 25ந் தேதி எடின்பர்க் கோமகன் திறந்துவைத்தார்.

1940இல் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, கல்லூரி கட்டடத்தில் நான்கு முகங்களைக் கொண்ட கடிகார கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டது. அந்த தானியங்கி எலெக்ட்ரிக் கடிகாரத்தில் சிறப்பு தானியங்கி விளக்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. கல்லூரியின் இயற்பியல் பேராசிரியர் பரமேஸ்வரன் தலைமையில் இயற்பியல் துறையிலேயே அந்த கடிகாரம் வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்தக் காலத்தில் மணிக்கொரு தரம் இந்த கடிகாரம் இசைக்கும் இனிய இசை திருவல்லிக்கேணி முழுவதும் எதிரொலிக்குமாம்.

பிரசிடென்சி கல்லூரியின் மற்றொரு சிறப்பு இங்கு பணிபுரிந்த வரலாற்று சிறப்புமிக்க ஆசிரியர்கள். கரையானுக்கும்செல்லரிப்புக்கும் பலியாகிக் கொண்டிருந்த அரிய தமிழ் சுவடிகளைக் காப்பாற்றிக் கொடுத்ததால், தமிழ் தாத்தா என்று கொண்டாடப்படும் உ.வே. சாமிநாத அய்யர், இங்கு 16 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கல்லூரியின் முன்புறத்தில் 1948ஆம் ஆண்டு அவருக்கு சிலை வைக்கப்பட்டது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், வள்ளலாரின் திருவருட்பா வெளியாகக் காரணமாக இருந்த தொழுவூர் வேலாயுதம் முதலியார், இலங்கை தமிழறிஞர் சி.வை. தாமோதரன் பிள்ளை, பேராசிரியர் சி. இலக்குவனார் (இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தொல்காப்பியத்தை அண்ணா யேல் பல்கலைக்கழகத்திற்கு செல்லும்போது கொண்டு சென்றார்) என பலப் பிரபலங்கள் இங்கு ஆசிரியர்களாக பணிபுரிந்திருக்கின்றனர்.

அக்காலத்தில் நிலவிய சாதிய ஏற்றத் தாழ்வுகள் பிரசிடென்சி கல்லூரியையும் விட்டுவைக்கவில்லைஇங்கு தமிழ்ப் பேராசிரியராக வேலை பார்த்த கா. நமச்சிவாயம் முதலியார் அவர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.81 ஆகவும்அதே நேரத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராக வேலை பார்த்த குப்புசாமி சாஸ்திரி அவர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.300ஆகவும் இருந்திருக்கிறது. இதுகுறித்து அறிந்ததும், இந்தக் கொடுமையை எதிர்த்து தந்தை பெரியார் அவர்கள் எழுத அதன் அடிப்படையில் நீதிக்கட்சி ஆட்சியில் முதலமைச்சராக இருந்த பனகல் அரசர் அந்த வேறுபாட்டை நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.

நோபல் பரிசு பெற்ற சர். சி.வி.ராமன், டாக்டர் சுப்பிரமணிய சந்திரசேகர் ஆகியோர் இந்த கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள். சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர், மூதறிஞர் ராஜாஜி, இந்தியாவின் முதல் பாதுகாப்புத் துறை அமைச்சர் வி.கே. கிருஷ்ண மேனன், என இக்கல்லூரியின் பிரபலமான மாணவர்கள் பட்டியலும் மிக மிக நீளமானது.

இப்படி எண்ணற்ற மாணவர்களை உருவாக்கியபடி, தனது 200வது பிறந்தநாளை நோக்கி அதே இளமையுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறது சென்னை மாநிலக் கல்லூரி.

நன்றி : தினத்தந்தி

 

* 1891இல் இந்த கல்லூரியின் பொன்விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கல்லூரி முதல்வரான டாக்டர் டேவிட் டங்கன், கல்லூரியின் 50 ஆண்டு சாதனைகளை புத்தகமாக வெளியிட்டார். இதுதான் கல்லூரியின் வரலாறை நன்கு அறிந்துகொள்ள இப்போது நமக்கு உதவுகிறது.

* இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆரம்பித்த இரண்டு பிரசிடென்சி கல்லூரிகளில் இதுவும் ஒன்று. மற்றொன்று கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரி

* 1987ஆம் ஆண்டு இந்த கல்லூரிக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Friday, October 7, 2011

விக்டோரியா பப்ளிக் ஹால்

 

மெட்ராஸ் ராஜதானியில் முதல் திரைப்படம் திரையிடப்பட்ட அரங்கம்தான் விக்டோரியா பப்ளிக் ஹால். எட்வர்ட் என்ற ஆங்கிலேயர் 1897இல் மவுனமாக ஓடும் சலனப்படக் காட்சிகளை முதன்முறையாக இங்கு திரையிட்டுக் காட்டினார். ரயில் நிலையத்தில் ரயில் வந்து நிற்பதும், தொழிற்சாலையில் இருந்து தொழிலாளர்கள் வெளியே வருவதும்தான் இங்கு திரையிடப்பட்ட முதல் சலனப்படக் காட்சிகள்.

திரையில் படங்கள் நகர்வதைப் பார்த்தவர்களுக்கு தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை. திடீரென ஒரு வெள்ளைத் திரையில் எப்படி ரயில் ஓடுகிறது, இத்தனை பேர் எங்கிருந்து வந்து போகிறார்கள் என்ற சூட்சுமம் புரியாமல் விழிகள் வியப்பில் விரிய, ஒரு மாயாஜால மயக்கத்தில் கிறங்கிப் போனார்கள் மெட்ராஸ்வாசிகள். இந்த அமோக வரவேற்பின் விளைவுதான் மெட்ராசில் தொடங்கப்பட்ட நிரந்தர திரையரங்குகள்.

இப்படி சென்னையின் திரையரங்குகளுக்கு அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்த இந்த விக்டோரியா பப்ளிக் ஹாலின் அஸ்திவாரம் போடப்பட்ட கதையும் சுவையானதுதான். 1882இல் ஜார்ஜ் டவுன் பகுதியில் கூட்டம் போட்ட முக்கியப் பிரமுகர்கள், மெட்ராசிற்கென ஒரு பிரத்யேக டவுன் ஹால் வேண்டுமென தீர்மானித்தனர். அதற்கென முக்கியஸ்தர்கள் சிலரிடம் நிதி வசூலிக்கப்பட்டு ரூ. 16,425 திரட்டப்பட்டது. இதற்கென 12 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. 1886ஆம் ஆண்டு பீப்பிள்ஸ் பார்க் (People's Park) பகுதியில் 57 கிரவுண்டு நிலம் 99 ஆண்டு லீசுக்கு எடுக்கப்பட்டது. லீசுக்கான தொகை எவ்வளவு தெரியுமா? ஒரு கிரவுண்டுக்கு எட்டணா வீதம் மொத்தம் ரூ 28.

விஜயநகர மன்னர் சர் ஆனந்த கஜபதி ராவ் அடிக்கல் நாட்ட கட்டுமானப் பணி தொடங்கியது. இதற்கு நிதி அளித்தவர்களில் திருவாங்கூர் மகாராஜா, மைசூர் மகாராஜா, புதுக்கோட்டை அரசர் ஆகியோர் முக்கியமானவர்கள். இந்தோ - சாராசெனிக் பாணியில் அமைந்த இந்த கட்டிடத்தை ராபர்ட் பெல்லாஸ் சிஸ்ஹோம் என்ற கட்டிடக் கலை வல்லுநர் வடிவமைத்துக் கொடுக்க, நம்பெருமாள் செட்டி கட்டினார். இத்தாலியப் பாணி கோபுரத்தில் கேரளப் பாணி கூரை அமைக்கப்பட்டது இதன் சிறப்பம்சம். திருவாங்கூர் மகாராஜாவும் நிதி அளித்ததால், கேரளப் பாணி கூரை அமைத்துவிட்டார்கள் போல் இருக்கிறது.

விக்டோரியா அரசியின் பொன்விழா 1887ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டதை நினைவுகூறும் வகையில், இந்த கட்டிடத்திற்கு அவரின் பெயரை சூட்ட வேண்டும் என முக்கியப் பிரமுகர்கள் கருத்து தெரிவித்தனர். இதனை அடுத்து 1888ஆம் தொடங்கி 1890ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இக்கட்டிடத்திற்கு விக்டோரியா பப்ளிக் ஹால் எனப் பெயர் சூட்டப்பட்டது.

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் ஆங்கிலேயர் காலத்து மெட்ராஸை நினைவுபடுத்தியபடி நின்று கொண்டிருக்கும் இந்த சிவப்பு நிறக் கட்டிடம், சலனப்படக் காட்சி திரையிடப்பட்டது முதல் அரசியல் கூட்டங்கள் அரங்கேறியது வரை மெட்ராசின் பல முக்கிய நிகழ்வுகளை பார்த்திருக்கிறது.

தமிழ் நாடக உலகின் முன்னோடிகளான சங்கரதாஸ் சுவாமிகளும், பம்மல் சம்மந்த முதலியாரும் தங்களின் நாடகங்களை இங்கு மேடையேற்றி இருக்கின்றனர்.

அக்கால மெட்ராஸ்வாசிகளின் மாலைப் பொழுதை இனிமையாக்கும் பணியை இந்த சிவப்பு கட்டிடம் செவ்வனே செய்திருக்கிறது. அவர்களின் நினைவுகளில் உற்சாகம் பாய்ச்சக் கூடிய கனவுப் பிரதேசமாகவே இந்த ஹால் திகழ்ந்திருக்கிறது. மரங்கள் நிறைந்த பீப்பிள்ஸ் பார்க்கில், கலைநயமிக்க கட்டிடத்தில், ரம்மியமான மாலை நேரத்தில், வங்கக் கடல் காற்று வருடிக் கொடுக்க, ஹாயாக அமர்ந்து நாடகம் பார்ப்பது என்பது நினைக்கும்போதே சுகமான மயக்கம் தரக்கூடிய விஷயம்தானே. அதனால்தான் இங்கு நடைபெறும் நாடகங்களைக் காண மக்கள் ஆர்வமாகக் கூடினர். பெரும்பாலான நாடகங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே நடைபெற்றிருக்கின்றன. சில காட்சிகளுக்கு முன்பதிவு செய்தும் பார்த்திருக்கிறார்கள். அன்றைய மெட்ராசில் தெலுங்கர்கள் அதிகம் வசித்ததால், தெலுங்கு நாடகங்கள் பெருமளவில் அரங்கேறின.

பம்மல் சம்பந்த முதலியாரின் சுகுண விலாஸ சபாவினர் இந்த அரங்கில் முதன்முதலில் நாடகம் போட்டபோது அதனை பிரபலப்படுத்துவதற்காக 25,000 பிட் நோட்டீஸ்களை அச்சடித்து, ஒரு குதிரையை வாடகைக்கு அமர்த்தி, ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மூலம் தெருத்தெருவாக கொடுத்திருக்கின்றனர். அந்தக் காலத்தில் இங்கு நடைபெறும் நாடகங்கள் இரவு 9 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.30 மணிக்கு முடியும்.

இதனால் அடுத்தநாள் வேலைக்கு செல்ல முடியவில்லை என அரசு ஊழியர்களும், வியாபாரிகளும் புலம்பியதால், நாடக நேரம் மாற்றப்பட்டது. 1906இல் சுகுண விலாஸ சபாவினர், தங்களின் 'காதலர் கண்கள்' என்ற நாடகம் மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிக்கு முடியும் என அறிவித்தபோது பலரும் ஆட்சேபம் தெரிவித்தனர். இந்த முயற்சிக்கு வரவேற்பு கிடைக்காது என்றனர். ஆனால் மக்கள் இதனை விரும்பி ஏற்றுக்கொண்டனர். பின்னர் மெட்ராசில் சினிமா அரங்குகள் தொடங்கப்பட்டபோது மாலைக் காட்சிக்கு இதேநேரம்தான் தேர்வு செய்யப்பட்டது.

தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஜூலியஸ் சீசர் போன்ற ஆங்கில நாடகங்களும் இங்கு மேடையேறி இருக்கின்றன. ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களை தமிழில் மொழிமாற்றம் செய்தும் அரங்கேற்றி இருக்கின்றனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் ஷேக்ஸ்பியர் தினம் கொண்டாடி, பின்னாளில் அதனை ஷேக்ஸ்பியர் வாரமாக மாற்றினர். அரங்கில் இடமில்லாத அளவிற்கு கூட்டம் வந்ததால், விக்டோரியா அரங்கத்திற்கு பின்புறம் உள்ள டென்னிஸ் மைதானத்தில் நாடகம் போட வேண்டியதாகிவிட்டது.

விக்டோரியா ஹாலில் ஒருமுறை பம்மல் சம்பந்த முதலியாரின் மனோகரா நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கிளைமாக்ஸில் மனோகரன் தன்னை பிணைத்திருக்கும் சங்கிலிகளை அறுத்தெறியும் காட்சி. மனோகரனாக நடித்தவர் சங்கிலிகளை அறுத்தெறிந்த சத்தம் கேட்டு, தனது குவார்டர்ஸில் தூங்கிக் கொண்டிருந்த விக்டோரியா ஹாலின் கண்காணிப்பாளர் எல்லிஸ் ஏதோ கலவரம் வந்துவிட்டது என எண்ணி அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தாராம். இப்படி நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் இந்த ஹாலில் அரங்கேறி இருக்கின்றன.

நாடகங்கள் மட்டுமின்றி பொதுக் கூட்டங்களும் இங்கு நடைபெற்றிருக்கின்றன. சுவாமி விவேகானந்தர்சர்தார் வல்லபாய் படேல்,கோபால கிருஷ்ண கோகலேபாரதியார் போன்ற தலைவர்கள் இங்கு உரையாற்றி உள்ளனர். 1902ஆம் ஆண்டு இந்த அரங்கில் மாறுவேடப் போட்டி கூட நடந்திருக்கிறது.

மெல்ல சிதிலமடைந்து வந்த இந்த புராதன கட்டிடத்தை 1967ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபொழுது புனரமைத்து திறந்து வைத்தார். ஆனால் கடந்த 40 ஆண்டுகளாக இது பயன்பாடின்றி இருந்தது. தற்போது மீண்டும் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாடிப்படிகள்,பழுதடைந்த ஜன்னல், கதவுகள்சுவர்களில் உடைந்த செங்கற்கள் ஆகியவை கலைநயத்துடன் வடிவமைப்பு மாறாமல் புனரமைக்கப்படுகின்றன. பணிகள் நிறைவடைந்ததும் கலை, கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் ஒரு பொன்மாலைப் பொழுதிற்கு தயாராகிறது விக்டோரியா பப்ளிக் ஹால்.

நன்றி - தினத்தந்தி

-----------------------------

 

* விக்டோரியா அரசியின் பெயர் கொண்ட கட்டடிடத்தில் அவரின் படம் இருக்க வேண்டும் எனக் கருதி சுகுண விலாஸ சபாவினர் ரூ. 200 செலவழித்து 1910ஆம் ஆண்டு அவரது படத்தை நிறுவினர்.

* 1908ஆம் ஆண்டு இங்கு ஒரு நூலகமும் ஏற்படுத்தப்பட்டது. ஆங்கிலம் மட்டுமின்றி நான்கு தென்னிந்திய மொழி நூல்கள் இதில் இடம்பெற்றிருந்தன. அந்நாட்களில் நாடகங்கள் தொடர்பான புத்தகங்கள் இருந்த நூலகம் சென்னையிலேயே இது ஒன்றாகத் தான் இருக்கும் என்கிறார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Sunday, September 4, 2011

மூர் மார்க்கெட்

 

அந்தக் கால மெட்ராசில் புத்தகப் பிரியர்களின் புதையல் சுரங்கமாய் திகழ்ந்தது மூர் மார்க்கெட். புத்தகங்கள் மட்டுமின்றி பழமையான கலைப் பொருட்கள் முதல் பல்பொடி வரை இங்கு கிடைக்காததே கிடையாது என்பார்கள். அப்பா, அம்மாவைத் தவிர அனைத்தும் கிடைக்கும் இடம் என்று மூர் மார்க்கெட்டைப் பற்றி அன்றைய மெட்ராஸ்வாசிகள் பெருமை அடித்துக் கொள்வார்கள்.

சென்டிரல் ரெயில் நிலையம் அருகில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த சிவப்பு நிறக் கட்டிடத்தில் மூர் மார்க்கெட் இயங்கி வந்தது. இந்த மார்க்கெட் உருவானதற்கு ஒரு வரலாறு உண்டு.அந்தக் காலத்தில் சென்னை பிராட்வேயில் ஒரு மெயின் மார்க்கெட் இருந்தது. அந்தப்பகுதி சாக்கடைகள் தேங்கி சுகாதார குறைவாகக் காணப்பட்டது. அப்போது முனிசிபாலிடி தலைவராக இருந்த லெப்டினட் கர்னல் சர் ஜார்ஜ் மூர், சென்னை நகரத்தின் மேம்பாட்டிலும்சுகாதாரத்திலும் மிகுந்த அக்கறை காட்டினார்.அதனால் பிராட்வேயில் உள்ள மெயின் மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற மூர் திட்டமிட்டார். எனவே சென்ட்ரல் ஸ்டேஷன் அருகில் குஜ்லி பஜார் இருந்த இடத்தில் மூர் மார்க்கெட் கட்ட, 1898ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜார்ஜ் மூர் அடிக்கல் நாட்டினார். 1900 நவம்பரில் கட்டி முடிக்கப்பட்டு, அப்போதைய கவர்னர் ஆர்தர் ஹேவ்லாக்கால் மூர் மார்க்கெட் திறந்து வைக்கப்பட்டது. கடைகள் வியாபாரிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டு வாடகை வசூலிக்கப்பட்டு வந்தது.

மெட்ராசில் வசிப்பவர்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து வந்து போவோரும், தவறாமல் கால்பதிக்கும் இடமாக மூர் மார்க்கெட் திகழ்ந்தது. இந்தோ சாரசானிக் பாணியில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் பார்க்கும்போதே பரவசத்தில் ஆழ்த்தக் கூடியதாக இருந்தது. நுழைவாயில்களில் கருங்கல்களாலான வளைவுகளும்கூரைக் கைப்பிடிச் சுவர்களில் இடம் விட்டு இடமாய் கோயில் கலசங்களின் வடிவில் கல் கலசங்களும் காட்சியளித்தன. இன்று அல்லிக் குளத்தின் மேல் எழுப்பப்பட்டுள்ள புதிய மூர்மார்கெட் அங்காடியின் மாடிச் சுவர்களில் இந்த கல் வடிவங்கள் பத்திரப்படுத்தப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.

அந்தக் காலத்து அசல் மூர் மார்க்கெட்டின் (இன்றைய சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம்) உள்ளே, மத்தியில் மரங்களுக்கிடையில் அழகிய நீரூற்று ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. மூர் மார்க்கெட்டில் பழைய பொருளும் கிடைக்கும்புதிய பொருளும் கிடைக்கும். பழைய புத்தகங்கள்புதிய புத்ககங்கள்எல்லா மொழிகளிலும் புத்தகங்கள்பத்திரிகைகள் என புத்தகப் பிரியர்களின் சொர்க்க லோகமாகவே இந்த மார்க்கெட் திகழ்ந்தது. அந்தக் கால மஞ்சள் பத்திரிகைகள் கூட இங்கு கிடைக்கும்.

மூர் மார்க்கெட்டில் கிடைத்த மற்றொரு முக்கியமான பொருள் கிராமஃபோன் இசைத்தட்டுக்கள். எல்லா மொழிகளிலும் வெளிவந்த சாதாரண இசைத் தட்டுக்கள் முதல் எல்.பி ரெக்கார்டுகள் வரை இங்கு வாங்கலாம். கர்னாடக இசைஇந்துஸ்தானி இசைதமிழ்இந்திதெலுங்கு,மலையாள சினிமாக்களின் இசைத்தட்டுக்கள் என அனைத்து இசைகளையும் வசப்படுத்தி வைத்திருந்தது இந்த கலை மார்க்கெட். ஆங்கிலோ - இந்தியர்கள் மேனாட்டு இசைத் தட்டுக்களை விற்கவும்,வாங்கவும், ஒன்றைக் கொடுத்துவிட்டு இன்னொன்றை பரிமாறிக் கொள்ளவும் எப்போதும் இங்கே அலைந்து கொண்டிருப்பார்கள். இங்கு நம்மிடமுள்ள இசைத் தட்டுக்களை கொடுத்துவிட்டு, அதற்குப் பதில் சொற்பக் காசை மட்டும் கொடுத்து வேறு இசைத் தட்டை பேரம் பேசி எடுத்துச் செல்லலாம்.

மூர் மார்க்கெட்டில் பொருட்களை பேரம் பேசி வாங்குவதே ஒரு தனிக்கலை. ஆயிரங்களில் தொடங்கி அணாக்களில் முடியும் அதிர்ச்சி தரும் பேரங்கள் எல்லாம் இங்கு சர்வசாதாரணம். மார்க்கெட் வாசலிலேயே இசைத் தட்டுகளுக்கான தரகர்கள் காத்திருப்பார்கள். இப்போது சென்ட்ரல் ஸ்டேஷன் வாசலில் ஆட்டோகாரர்கள் செய்யும் வேலையை அப்போது அவர்கள் செய்து கொண்டிருந்தனர். என் கடைக்கு வா, உன் கடைக்கு வா.. என கையைப் பிடித்து இழுப்பார்கள்.

மூர் மார்கெட் வளாகத்தில் நிரந்தரக் கடைகள், தற்காலிகக் கடைகள் என இருவகை கடைகள் இருக்கும். நிரந்தர கடைகளில் பழைய பர்மா தேக்கில் நேர்த்தியாய்ச் செய்து கண்ணாடிச் சட்டமிட்ட கதவுகளைக் கொண்ட பிரம்மாண்டமான பீரோக்களில் அரிதான வெளிநாட்டு - உள்நாட்டு நூல்களை அடுக்கி வைத்திருப்பார்கள். அச்சுக்கலை கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்களைக் கூட இங்கு வாங்கிவிட முடியும்.

மற்றொரு வகை விற்பனையாளர் ''கேர் ஆஃப் பிளாட்பாரம்'' தினுசு. இவர் மூர் மார்க்கெட் வெராண்டாக்களில் நிரந்தர கடைக்காரர்களின் தயவில் கடை விரித்திருப்பார். பெரும்பாலும் பேப்பர் பேக் நூல்களும் பழைய பத்திரிகைகளுமாயிருக்கும். விற்காமல் தேங்கிப் போகும் நூல்களையும் பத்திரிகைகளையும் அவற்றின் தகுதியறிந்து கூறு,கூறாகப் பிரித்து அம்பாரமாக்கிக் குவித்து, ''இதெல்லாம் பத்து ரூபாய் இதெல்லாம் ஐந்து ரூபாய் அதெல்லாம் எது எடுத்தாலும் ஒரு ரூபாய் எது எடுத்தாலும் எட்டணா'' என்று எழுதிய அட்டைகளைக் குத்தி வைப்பார்கள்.

புத்தகக் கடைகள் மட்டுமின்றி ரெடிமேடு துணிக்கடைகள்பொம்மைக் கடைகள்என அனைத்து வகையான கடைகளும் இங்கிருக்கும். வண்ண மீன்கள்கிளிகள்முயல்கள் போன்ற உயிரினங்களும், அவற்றை வளர்ப்பதற்கான தொட்டி, கூண்டு என சகலமும் கிடைக்கும். கடைசி பகுதிக்கு சென்றால் ஆட்டுக்கறி, கோழிக்கறி கடைகள் இருக்கும். சுருங்கச் சொன்னால் அந்தக் கால மெட்ராசின் ஒரு பிரம்மாண்ட ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்தான் மூர் மார்க்கெட்.

சென்ட்ரல் ரயில் நிலைய விரிவாக்கத்திற்காக மூர் மார்க்கெட் முழுவதையுமே வேறு இடத்துக்கு மாற்ற அரசாங்கம் திட்டமிட்டது. ஆனால் இதற்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில்தான் 1985ஆம் ஆண்டு ஒரு நள்ளிரவில் மூர் மார்க்கெட் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. இரவு நேரம் என்பதால் தீ பிடித்த விவரம் யாருக்கும் தெரியவில்லை. கட்டிடம் முழுவதும் கொழுந்துவிட்டு எரியும் போதுதான் தெரியவந்தது. தீயணைப்பு படையினர் 20 தீயணைப்பு வண்டிகளுடன் வந்து ராட்சத ஏணி கொண்ட இயந்திரங்களை பயன்படுத்தி 11 மணி நேரம் போராடி தீயை அணைத்தார்கள்.

ஆனால் அதற்குள் தீயின் நாக்குகள் அந்த பிரம்மாண்ட மார்க்கெட்டை அப்படியே சுருட்டி வாயில் போட்டுக் கொண்டன. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு ஓரிரு கடைகளே தப்பின. கடைகள் எல்லாம் இடிந்த நிலையில் மூர் மார்க்கெட்டின் உள் பகுதியில் வியாபாரிகள் சோகமே உருவாக உட்கார்ந்து இருந்தனர். படையெடுப்பிற்குப் பிறகு அழிந்து போன நகரம் போல மூர் மார்க்கெட் காட்சி அளித்தது. இப்படி 85 ஆண்டுகாலம் மிகவும் பரபரப்பாக இயங்கி, தங்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்ட மூர் மார்க்கெட் திடீரென தீயில் மாயமானதை நம்ப முடியாமல் மெட்ராஸ்வாசிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட சேதம் ரூ.10 கோடி என்று அப்போதைய அரசு தெரிவித்தது. ஆனால், கடைசி வரை தீ விபத்துக்கான உண்மைக் காரணம் வெளிச்சத்துக்கு வராமலேயே போய்விட்டது.

நன்றி - தினத்தந்தி



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Sunday, August 28, 2011

எழும்பூர் ரயில் நிலையம்

 
அன்று முதல் இன்று வரை தமிழ் திரைப்படங்களில், கிராமத்தில் இருந்து கதாநாயகனோ, கதாநாயகியோ சென்னை வந்தால், அவர்கள் முதலில் கால்பதிக்கும் இடம் அநேகமாக எழும்பூர் ரயில் நிலையமாகத் தான் இருக்கும். சென்னையின் மையப் பகுதியில் பரந்து விரிந்து, அந்தக் கால கம்பீரத்துடன் ஓங்கி நிற்கும் இந்த ரயில் நிலையக் கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கல்லும் பல கதைகளை தன்னுள் புதைத்து வைத்திருக்கின்றன.

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு இன்றும் பயன்பாட்டில் இருக்கும் மிகச் சில கட்டிடங்களில் முக்கியமானது எழும்பூர் ரயில் நிலையம். கூவம் ஆற்றின் வட பகுதியில் அமைந்திருந்த எழும்பூர் என்ற கிராமத்தில் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பிருந்தே மக்கள் வாழ்ந்து வந்தனர். ஜார்ஜ் கோட்டையில் குடியேறிய ஆங்கிலேயர்கள், தண்டையார்பேட்டை, புரசைவாக்கம் என அருகில் உள்ள கிராமங்களை விலைக்கு வாங்கி, மெல்ல மெல்ல தங்கள் குடியிருப்பை விஸ்தரித்தனர். அந்த வகையில் அப்போதைய மெட்ராசின் ஆளுநர் எலிஹூ யேல் (அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகத்திற்கு இவரது பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது), நவாப் சூல்பிகர் கான் என்ற முகலாய வைஸ்ராயிடம் இருந்து 1720ஆம் ஆண்டு விலைக்கு வாங்கிய ஊர்தான் எழும்பூர். இந்த ஊரின் பெயர் ஆங்கிலேயர்களின் வாய்க்கு வளைய மறுத்ததால், எழும்பூரை அவர்கள் எக்மோர் ஆக்கிவிட்டார்கள்.

இந்த ஊரில் ஆங்கிலேயர்கள் முதலில் கட்டிய பிரம்மாண்டமான கட்டிடம் எழும்பூர் அருங்காட்சியகம், அடுத்தது எழும்பூர் ரயில் நிலையம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை போன்று எழும்பூரிலும் ஓர் பெரிய ரயில் நிலையம் கட்ட வேண்டும் என ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, 1908ஆம் ஆண்டு இது கட்டப்பட்டது. முதலில் ராயபுரம் ரயில் நிலையத்தில் இயங்கி வந்த அப்போதைய மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வேயின் தலைமையகம் பின்னர் இங்கு மாற்றப்பட்டு, 1951ஆம் ஆண்டு வரை இங்குதான் செயல்பட்டது.
 
இந்திய, முகலாய மற்றும் கோதிக் கட்டிடக் கலைகளை ஒன்று கலந்து உருவாக்கப்பட்ட இந்தோ-சாராசனிக் பாணியில் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தை கட்டியவர் சாமிநாதப் பிள்ளை என்ற தமிழ் கான்ட்ராக்டர். ராபர்ட் சிஸ்ஹோம் (Robert Chisholm) என்ற ஆங்கிலேயர் கட்டிடத்திற்கான வரைபடத்தை வடிவமைத்துக் கொடுத்தார்.
 
சாமிநாதப் பிள்ளை அக்காலத்தில் மெட்ராஸ் ராஜ்தானியில் மிகவும் புகழ்மிக்க காண்ட்ராக்டராக விளங்கி வந்தார். பெங்களூர் நகரில் இவர் கட்டிய பல கட்டிடங்கள் மிகவும் சிறப்பாக இருப்பதாக அங்கிருந்த அதிகாரிகள் நற்சான்றிதழ் அளித்ததை அடுத்து, இந்த பணி சாமிநாதப் பிள்ளையிடம் ஒப்படைக்கப்பட்டது. தான் கட்டும் கட்டிடங்களில் பயன்படுத்துவதற்காக பூந்தமல்லியில் தனியாக செங்கல் சூளைகளை வைத்திருந்தார் சாமிநாதப் பிள்ளை. இங்கு பிரத்யேகமான முறையில் உறுதியான செங்கல்கள் தயாரிக்கப்பட்டன.
 
வழக்கமான ஸ்டேஷன் மாஸ்டர் அறை, அலுவலர்களின் அறைகளைத் தாண்டி நீண்ட, காற்றோட்டம் மிக்க காத்திருக்கும் அறைகள், சிற்றுண்டி விடுதி, பயணிகளின் உடமைகளை வைக்கும் அறை என எழும்பூர் ரயில் நிலையம் நன்கு விஸ்தீரணமாக கட்டப்பட்டது. இதற்கு அக்காலத்திலேயே 17 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவானதாம்.

அக்காலத்தில் மெரினா கடற்கரை, மூர் மார்க்கெட்டிற்கு அடுத்தபடியாக சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் இந்த ரயில் நிலையம் இருந்திருக்கிறது. மாலை வேளையில் இங்குள்ள சிற்றுண்டி விடுதியில் எதையாவது கொறித்துக் கொண்டு கதை பேச, ஒரு பெரிய கூட்டம் கூடுமாம். கொல்லங்கோடு மகாராஜா உள்பட பல மகாராஜாக்களும், ஜமீன்தார்களும், செல்வச் சீமான்களும் இங்குள்ள ஓய்வு அறையில், ரயில் வருகைக்காக மணிக்கணக்கில் காத்திருந்திருக்கின்றனர்.

அக்கால ரயில்களில் நான்கு வகுப்புகள் இருந்திருக்கின்றன. முதல் வகுப்பு, இந்தியப் பணக்காரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்குமானது. அடுத்தது இரண்டாம் வகுப்பு, அதற்கடுத்தது இண்டர் கிளாஸ் எனப்படும் இடைப்பட்ட வகுப்பு. இரண்டாம் வகுப்புக்கும், இடைப்பட்ட வகுப்புக்கும் இருக்கைகள் தான் வித்தியாசம். இரண்டாம் வகுப்பில் இருக்கை குஷன் சற்று தடிமனாக இருக்கும், பிந்தையதில் மெல்லியதாக இருக்கும். கடைசியாக பெரும்பாலானோர் பயணிக்கும் மூன்றாம் வகுப்பு பெட்டி. இதில் நீளமான மரப் பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். இதுதான் அன்றைய ரயில் பயணம்.
 
இங்குள்ள இரண்டு நடைமேடைகளில் மட்டும் நேராக கார்களை செலுத்திக் கொண்டு போய், தேவையான கம்பார்ட்மெண்டிற்கு அருகில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிடும் வசதி ஒரு காலத்தில் இருந்தது. இந்தியாவிலேயே ஹவுரா ரயில் நிலையத்திற்கு அடுத்து எழும்பூரில்தான் இந்த வசதி இருந்தது. அகல ரயில் பாதைகள் வந்த பிறகு இந்த வசதி பறிபோய்விட்டது. இப்படி கார்களில் வந்து ரயில்களுக்கு அருகில் இறங்குபவர்களை வேடிக்கை பார்க்கவே அக்காலத்தில் எழும்பூர் ரயில் நிலையத்தில் ஒரு கூட்டம் இருக்குமாம்.
 
எழும்பூரில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கும் ரயில்கள் இயக்கப்பட்டிருக்கின்றன. கொழும்பு செல்லும் பயணிகளை ஏற்றிச் செல்லும் எழும்பூர் - தனுஷ்கோடி போட் மெயில், அவர்களை தனுஷ்கோடியில் இறக்கிவிட்டுவிடும். பின்னர் அவர்கள் அங்கிருந்து படகு மூலம் இலங்கையின் தலைமன்னாருக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். தலைமன்னாரில் இருந்து கொழும்பு செல்ல ஒரு ரயில் தயாராக காத்திருக்கும். 1964ஆம் ஆண்டு வீசிய புயலில் தனுஷ்கோடி இருப்புப் பாதை முற்றிலுமாக அழிந்துபோனதால், அத்துடன் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
 
சிக்காகோவில் உலகப் புகழ்பெற்ற ஆன்மீக உரையை ஆற்றிய சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வந்தார். அப்போது கல்கத்தா செல்லும் வழியில் அவர் சென்னைக்கு வருகை தந்தார். எழும்பூர் ரயில் நிலையத்தில் அவருக்கு வரலாறு காணாத உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விவேகானந்தரின் வருகையை ஒட்டி ரயில் நிலையமே விழாக் கோலம் பூண்டிருந்தது.

இப்படி நிறைய வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சியாய் விளங்கிய எழும்பூர் ரயில் நிலையம், இன்றுதானே ஒரு வரலாற்று பெட்டகமாய் நின்று கொண்டிருக்கிறது.

நன்றி : தினத்தந்தி


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

சென்னை அரசு பொதுமருத்துவமனை

 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரில், மருந்து வாசனையோடு பிரம்மாண்டமாக நின்று கொண்டிருக்கும் பச்சைக் கட்டடத்திற்கு ஒரு நீண்ட நெடிய பாரம்பரியம் இருக்கிறது. தினமும் பல உயிர்களை காப்பாற்றிக் கரை சேர்த்துக் கொண்டிருக்கும் இந்த கட்டடத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. அரசு பொதுமருத்துவமனைக்கான அடிக்கல், கிழக்கிந்திய கம்பெனி சென்னையில் கால்பதித்த காலத்திலேயே நாட்டப்பட்டு விட்டது.

 1639இல் மெட்ராசில் குடியேறிய ஆங்கிலேயர்கள் முதலில் தங்களுக்கென ஒரு கோட்டையை கட்டிக் கொண்டனர். பின்னர் மற்ற வசதிகளை ஏற்படுத்தத் தொடங்கிய அவர்கள், தங்களுக்கென ஒரு மருத்துவமனை அவசியம் என்பதை உணர்ந்தனர். இதன் விளைவாக சர் எட்வர்ட் விண்டர் என்பவர் புனித ஜார்ஜ் கோட்டைக்குள் ஒரு அரசு பொது மருத்துவமனையைத் தொடங்கினார். கிழக்கிந்திய கம்பெனி வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 1664ஆம் ஆண்டு நவம்பர் 16ந் தேதி சிறிய அளவில் இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டது.
 


சர் எலிஹூ யேல் கவர்னராக இருந்தபோது, 1690இல் இந்த மருத்துவமனை விரிவுபடுத்தப்பட்டது. பிரெஞ்சுப் படைகளுடனான யுத்தத்திற்கு பிறகு 1772இல், இந்த மருத்துவமனை கோட்டையைவிட்டு வெளியேறி தற்போதைய இடத்திற்கு வந்து சேர்ந்தது. அதன் பின்னர் இதன் வளர்ச்சி வேகம் எடுக்கத் தொடங்கியது. சிகிச்சை அளிப்பதோடு மட்டும் நின்று விடாமல், நவீன மருத்துவத்தை பிறருக்கு கற்றுத் தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இங்கு பயிற்சி பெற்றவர்கள் அன்றைய மெட்ராஸ் ராஜதானியின் மாவட்ட தலைமையகங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.


பிப்ரவரி 2, 1835இல் அப்போதைய மெட்ராஸ் கவர்னராக இருந்த சர் ஃபிரெட்ரிக் ஆடம்ஸ் இதையே முறையான மருத்துவப் பள்ளியாகத் தொடங்கி வைத்தார். இது அரசு பொது மருத்துவமனையோடு இணைக்கப்பட்டது. மருத்துவமனையும், மருத்துவப் பள்ளியும் ஒன்றாக இணைந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, 1850, அக்டோபர் 1ஆம் தேதி, இந்த பள்ளியின் பெயர் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் என மாற்றப்பட்டது. இப்படிப் பல பரிமாண வளர்ச்சிகளுக்கு பிறகு மெட்ராஸ்வாசிகளுக்கு ஒருவழியாக முறையான ஒரு மருத்துவக் கல்லூரி கிடைத்தது.

நிறைய மாணவர்களை மருத்துவர்களாக மாற்றி அனுப்பிக் கொண்டிருந்த இந்த கல்லூரியின் வரலாற்றில் 1875ஆம் ஆண்டு மறக்கமுடியாததாக மாறியது. ஆம், அந்த ஆண்டில்தான் இந்தக் கல்லூரி உலக வரலாற்றில் நிரந்தரமாக இடம்பிடித்தது. அதற்கு காரணம் மேரி ஆன் டெகாம்ப் ஷார்லிப் (Mary Ann Dacomb Scharlieb) என்ற 30 வயது பெண்மணி. இவர் தான் உலகிலேயே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்த முதல் மாணவி. அந்த காலத்தில் உலகின் அனைத்து நாடுகளிலும் ஆண்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.


இந்த தருணத்தில்தான் மேரிக்கு வாசல் திறந்து உலகிற்கே முன்னுதாரணமாக மாறியது மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி. பின்னர் இங்கிலாந்து சென்று மருத்துவத்தில் மேல் படிப்பு முடித்த மேரி, இந்தியாவிற்கு திரும்பி ஒரு மருத்துவமனையை ஆரம்பித்தார். அதுதான் திருவல்லிக்கேணியில் தற்போது இயங்கி வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனை. உலகின் முதல் பெண் மருத்துவரால் பெண்களுக்காக தொடங்கப்பட்ட பிரத்யேக மருத்துவமனை.


ஆண்களால் நடத்தப்படும் மருத்துவமனைகளுக்கு பெண்கள் செல்லத் தயங்குவார்கள் என்பதால் டாக்டர் மேரி இந்த மருத்துவமனையைத் தொடங்கினார். இதற்காக ராணி விக்டோரியாவிடம் அனுமதி பெற்று அவரது பெயரை இந்த மருத்துவமனைக்கு சூட்டினார். இந்த மருத்துவமனை முதலில் நுங்கம்பாக்கத்தில்தான் இயங்கி வந்தது.


பின்னர் 1890இல் மெட்ராஸ் அரசு இந்த மருத்துவமனைக்காக சேப்பாக்கத்தில் ஒரு இடத்தை தானமாக வழங்கி, ரூ10,000 நன்கொடையும் கொடுத்தது. இதுமட்டுமின்றி ஓராண்டுக்கு தேவையான மருந்துகளும் இலவசமாக அளிக்கப்பட்டன. தற்போது இருக்கும் மருத்துவமனையின் பிரதான கட்டடம், வெங்கடகிரி ராஜா கொடுத்த ஒரு லட்ச ரூபாய் நன்கொடையில் கட்டப்பட்டது.
இவரைப் போல இன்னும் நிறைய பெண் மருத்துவர்களை மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி பெற்றெடுத்தது. அவர்களில் முக்கியமானவர் கிருபை சத்தியநாதன். அவர்தான் இங்கு பயின்ற முதல் இந்திய மாணவி. ஆனால் உடல்நலக் குறைவு காரணமாக அவர் முதல் ஆண்டுடன் தனது படிப்பை கைவிட வேண்டியதாகிவிட்டது. பின்னர் அவர் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளராக உருவெடுத்தார். 1884ஆம் ஆண்டு அபலா தாஸ், ரோஸ் கோவிந்தராஜூலு, குர்தியால் சிங் ஆகிய மூன்று இந்திய மாணவிகள் இந்த கல்லூரியில் சேர்ந்து வெற்றிகரமாக தங்கள் LMS படிப்பை முடித்தனர்.


இந்த கல்லூரியில் இருந்து 1912இல் MBBS பட்டம் பெற்று வெளியேறிய முதல் இந்திய மாணவிதான் புகழ்பெற்ற டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி. அவர் தொடங்கியதுதான் அடையாரில் இருக்கும் புற்றுநோய் மருத்துவமனை. இப்படிப் பல பெருமைகளைப் பெற்ற மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரி 1938 வரை ஆங்கிலேயே முதல்வர்களால் தான் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்த ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் டாக்டர் சர் ஆர்காடு லட்சுமணசாமி முதலியார். முதல் இந்திய முதல்வரான டாக்டர் ஏ.எல். முதலியாரின் சிலை கல்லூரி வளாகத்தில் இன்றும் நம்மை வரவேற்றுக் கொண்டிருக்கிறது.
1996இல் மெட்ராஸ் நகரம் சென்னை என பெயர் மாற்றம் அடைந்தபோது, இந்த கல்லூரியின் பெயரும் சென்னை மெடிக்கல் காலேஜ் என மாறியது. ஆனால் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் என்பது தான் உலகம் முழுவதும் அறியப்பட்ட பெயராக இருந்ததால், விரைவிலேயே அது மீண்டும் தனது பழைய பெயருக்கே திரும்பிவிட்டது.


சென்னை அரசு பொதுமருத்துவமனையும், மருத்துவக் கல்லூரியும் கால ஓட்டத்தில் நிறைய மாற்றங்களை சந்தித்திருந்தாலும், சுமார் 340 ஆண்டுகளைக் கடந்தும் மனித சமூகத்திற்கு சேவையாற்றும் அதன் தாயுள்ளம் மட்டும் மாறவே இல்லை. கிட்டத்தட்ட சென்னை நகரம் பிறந்தபோது, கூடவே பிறந்து வளர்ந்த இந்த மருத்துவ மையம், சென்னையின் நாடியை இன்றும் அக்கறையுடன் பிடித்துப் பார்த்துக் கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது.
----------------------------
* இந்தியாவிலேயே கம்பவுண்டர் என்ற பதவியை 1897ஆம் ஆண்டே உருவாக்கி அதற்கான படிப்பை கற்றுத் தந்த முதல் கல்லூரி என்ற பெருமையும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரிக்கு உண்டு. 




* டாக்டர் ஏ.எல். முதலியார் எழுதிய மருத்துவப் புத்தகங்கள் லண்டன் பல்கலைக்கழகத்தில் இன்றும் பாடப் புத்தகங்களாக இருக்கின்றன.




* எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை, கண் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை என 8 மருத்துவமனைகள் இந்த கல்லூரியின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 Saturday, April 14, 2012

பாரத் இன்ஷூரன்ஸ் கட்டடம்

 

Bharat_151382f.jpg
 
 
ஆடைகள் கிழிந்து அலங்கோலமான நிலையில், கிளைமேக்சில் கதாநாயகனால் காப்பாற்றப்படும் கதாநாயகி போல நின்று கொண்டிருக்கிறது பாரத் இன்ஷூரன்ஸ் கட்டடம். இப்படி கடைசி நேரத்தில் காக்கப்பட்ட இந்த காப்பீட்டு கட்டடம்தான், மெட்ராஸ் மாநகரின் முதல் உயரமான கட்டடம் எனக் கருதப்படுகிறது.
 
மவுண்ட் ரோடும், ஜெனரல் பேட்டர்ஸ் சாலையும் சந்திக்கும் இடத்தில் பிரம்மாண்டமாய் காட்சியளிக்கும் இந்த கட்டடத்தின் கதை 1868இல் தொடங்குகிறது. காரணம், அப்போதுதான் இந்த கதையின் நாயகன் ஸ்மித் (W.E. Smith) மெட்ராஸ் வந்தார். மருந்தாளரான ஸ்மித், மெட்ராசில் சில மருந்துக் கடைகளை வைத்து வியாபாரம் செய்துவந்தார். பின்னர் ஊட்டிக்கு இடம் மாறினார். அங்கும் நிறைய மருந்துக் கடைகளைத் தொடங்கினார். மருந்து விற்பனையில் மகத்தான வெற்றி கண்ட ஸ்மித், மீண்டும் மெட்ராஸ் திரும்பினார். ஆனால் இம்முறை ஒரு பிரம்மாண்ட திட்டத்துடன் களமிறங்கினார்.
 
மவுண்ட் ரோட்டில் பாரத் இன்ஷூரன்ஸ் கட்டடம் இருக்கும் இடத்தில் ஸ்மித், ஒரு பெரிய கடையை ஆரம்பித்தார். மருந்து தயாரிப்பு மற்றும் ஒட்டுமொத்த வியாபாரம் செய்யும் இடமாக அது மாறியது. இதுமட்டுமின்றி, அறுவை சிகிச்சை உபகரணங்கள் விற்பனை, சோடா தயாரிப்பு ஆகியவையும் இங்கு நடைபெற்றன. விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றதால் கடையை விரிவுபடுத்த நினைத்தார் ஸ்மித். இதற்காக பெரிய கட்டடம் ஒன்றை கட்ட விரும்பிய அவர், தென்னிந்தியாவின் மிகப்பெரிய மருந்து கம்பெனியின் தலைமைக் கட்டடம் அனைவராலும் பேசப்படும் வகையில் இருக்க வேண்டும் என கனவு கண்டார். அந்த கனவை நனவாக்கும் வேலை 1894இல் தொடங்கியது.
 
மூன்று வருட கடின உழைப்பில் மெட்ராஸ் மாநகருக்கு அழகு சேர்க்கும் வகையில் ஒரு அருமையான கட்டடம் உருவானது. 1897ஆம் ஆண்டு அந்த கட்டடம் தொடங்கி வைக்கப்பட்டபோது அதன் பெயர் கார்டில் கட்டடம் (Kardyl Building). மெட்ராஸ் பொதுப்பணித் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஸ்டீபன்ஸ் (J.H. Stephens) என்பவர்தான் இதனை வடிவமைத்தார். அப்போது மெட்ராசில் இந்தோ - சராசனிக் பாணி கட்டடங்கள் அதிக அளவில் கட்டப்பட்டு வந்ததால், அந்த பாணியை அடிப்படையாக வைத்து, அதனுடன் வேறு சில கட்டட பாணிகளையும் கலந்து பிரம்மாண்டமான அரண்மனை போன்ற இந்த கட்டடத்தை வடிவமைத்தார்.
 
உள்ளே நுழைந்ததும் 60 அடி நீளம், 40 அடி அகலத்தில் ஒரு விசாலமான ஷோரூம் இருந்தது. மருத்துவர்களுக்கான அறைகள் முதல் மாடியில் மவுண்ட் ரோட்டைப் பார்த்தவாறு அமைந்திருந்தன. அவர்களின் உதவியாளர்களுக்கான அறைகள், அதே மாடியில் ஜெனரல் பேட்டர்ஸ் சாலையை நோக்கியவாறு இருந்தன. ஒரு காபிக் கடையும், மதுபான விடுதியும் கூட இந்த கட்டடத்தில் இடம்பிடித்திருந்தன. கட்டடத்தின் பின்பகுதியில் சோடா கம்பெனி செயல்பட்டு வந்தது. கட்டடத்தின் உள்பகுதியில் வண்ண வண்ண கண்ணாடிகளுடன் கூடிய போலிக் கூரை (False ceiling) காண்போரை கவர்ந்திழுத்தது. அகலமான மரப் படிக்கட்டுகளும், ஆங்காங்கே அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட இரும்புச் சட்டங்களும் இந்த கட்டடத்தின் அழகை அதிகரித்தன.
 
மருந்து விற்பனையில் கோலோச்சி வந்த ஸ்மித்திற்கான போட்டி மவுண்ட் ரோட்டின் எதிர்புறத்தில் இருந்து புறப்பட்டது. சாலையின் எதிர்புறம் அமைந்த ஸ்பென்சர் நிறுவனம் மெல்ல மருந்து விற்பனையில் ஸ்மித்தை முந்தத் தொடங்கியது. இறுதியில் 1925இல் ஸ்மித், தனது வியாபாரம், கட்டடம் என அனைத்தையும் ஒட்டுமொத்தமாக ஸ்பென்சர் நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். ஸ்பென்சர் நிறுவனம் அந்த கட்டடத்தின் ஷோரூம் உள்பட பல பகுதிகளை வாடகைக்கு விட்டது.
 
1934இல் பாரத் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஸ்பென்சர்சிடம் இருந்து இந்த கட்டடத்தை வாங்கியது. லாகூரைச் சேர்ந்த லாலா ஹரிகிஷன்லால் என்பவர்தான் பாரத் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த கட்டடத்தை வாங்கிய இரண்டே ஆண்டுகளில் பாரத் நிறுவனம் ஹரிகிஷனிடம் இருந்து டால்மியாவின் கைக்கு மாறியது. இதனிடையே 1956ஆம் ஆண்டு ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் அரசுடமையாக்கப்பட்டபோது, நாட்டில் இருந்த பல காப்பீட்டு நிறுவனங்கள் அரசின் எல்ஐசி வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பட்டியலில் பாரத் இன்ஷூரன்சும் தப்பவில்லை. இப்படித்தான் எல்ஐசிக்கு சொந்தமானது இந்த கட்டடம்.
 
இதுநடப்பதற்கு முன்னர் பழைய கட்டடத்தின் முன்பகுதியில் தோட்டம் இருந்த இடத்தில் ஒரு புதிய கட்டடம் கட்டப்பட்டது. பைரன், அபோட், டேவிஸ் (Prynne, Abbott and Davis) போன்ற அந்தக் கால மெட்ராசின் புகழ்பெற்ற கட்டடக் கலைஞர்கள் இதனை வடிவமைத்தனர். இதுதான் பாரத் இன்ஷூரன்ஸ் கட்டடம் என்ற பெயரைத் தாங்கியபடி, இன்று மவுண்ட் ரோட்டை நோக்கி நின்று கொண்டிருக்கும் கட்டடம்.
 
முறையான பராமரிப்பு இல்லாததால் இந்த ஒட்டுமொத்த கட்டடமும் சிதிலமடைந்தது. எனவே இதில் வசிக்கும் அனைவரும் வெளியேறும்படி 1998ஆம் ஆண்டு எல்ஐசி கேட்டுக் கொண்டது. பின்னர் இந்த கட்டடத்தையும் இடிக்க முற்பட்டது. ஆனால் பாரம்பரிய விரும்பிகள், நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி முறையிட்டதால் கடைசி நேரத்தில் தப்பிப் பிழைத்தாலும், உயிர் இருந்தும் கோமா நிலையில் இருக்கும் நோயாளி போலத் தான் இன்று இருக்கிறது இந்த கட்டடம்.
 
மொத்தத்தில், ஒரு காலத்தில் மெட்ராஸ் நகருக்கு தனது கம்பீரத்தால் அழகு சேர்த்த கட்டடம், இன்று எப்போது இடிந்து விழும் எனத் தெரியாத அவல நிலையில் பரிதாபமாக நின்று கொண்டிருக்கிறது.
 
நன்றி - தினத்தந்தி
 
* முன்புறம் உள்ள பாரத் இன்ஷூரன்ஸ் கட்டடம், ஐக்கிய நாடுகள் சபை கட்டடத்தின் சாயலில் கட்டப்பட்டுள்ளது.
 
* மெட்ரோ ரயில் பணிகளுக்காக இந்த பாரம்பரியக் கட்டடத்தின் சில பகுதிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Saturday, April 7, 2012

ஹோட்டல் தி'ஏஞ்ஜிலிஸ்

 

நிலாவில் கால்பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங், சூடா ஒரு டீ சாப்பிடலாம் என டீக்கடை தேடினால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இருந்தது சுமார் 372 ஆண்டுகளுக்கு முன் மெட்ராசில் கால்பதித்த கிழக்கிந்திய கம்பெனிக்காரர்களின் நிலை. இங்கிருக்கும் இட்லியும், சாம்பாரும் அவர்களுக்கு பிடித்திருந்தாலும், இத்தனை ஆண்டுகளாக சாப்பிட்டுப் பழகிய சாண்ட்விச்சை எப்படி திடீரெனத் துறக்க முடியும்? கனவுகளில் துரத்தும் பீட்சாவுக்கும், பர்கருக்கும் என்ன பதில் சொல்வது?
 
இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, அவர்கள் தங்கள் நாட்டு சமையல்காரர்களை அழைத்து வந்து தேவையான உணவுகளை தயாரித்து சாப்பிடத் தொடங்கினர். வசதி படைத்த அதிகாரிகளுக்கு இது சரிப்பட்டு வரும். ஆனால், கிழக்கிந்திய கம்பெனியில் வேலை பார்த்த அனைவரும் இப்படி சமையல்காரரை அழைத்து வர முடியுமா? திருமணம் ஆகாமலோ, மனைவி உடன் இல்லாமலோ தனியாக வசித்த ஆங்கிலேயர்களின் கதி என்ன? இப்படி ஏங்கித் தவித்த நாக்குகளின், தாகம் தணிக்க வந்தவர்தான் கியாகொமோ திஏஞ்ஜிலிஸ் (Giacomo D'Angelis).
 
HOTEL+D'Angelis.jpg
ஹோட்டல் தி' ஏஞ்ஜிலிஸ்
 
 
இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் மற்றும் சாண்டோஸ் பகுதி இளவரசரான ரிச்சர்ட் பிளான்டாஜிநெட் காம்ப்பெல் (அடப்போங்கப்பா).... (Richard Plantagenet Campbell Temple-Nugent-Brydges-Chandos-Grenville) 1875ஆம் ஆண்டு மெட்ராசின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவ்வளவு நீளமான பெயரை சுமந்து கொண்டு மெட்ராஸ் வந்த ரிச்சர்ட், உஷாராக தனது நட்பு வட்டத்தில் இருந்த கியாகொமோ தி'ஏஞ்ஜிலிஸ் என்ற இத்தாலிக்காரரையும் உடன் வரும்படி அழைப்பு விடுத்தார். காரணம், தி'ஏஞ்ஜிலிஸ் இத்தாலிய மற்றும் பிரெஞ்சு உணவுகளை தயாரிப்பதில் விற்பன்னர். பிரான்சு சென்று இதற்கென பிரத்யேகமாக படித்தவர்.
 
ஆளுநரின் அழைப்பை ஏற்று குடும்பத்துடன் மெட்ராஸ் வந்தார் தி'ஏஞ்ஜிலிஸ். அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் இவரின் மேற்பார்வையில்தான் சமையல் அரங்கேறியது. தன்னுடைய வயிற்றுக்காக முன்கூட்டியே யோசித்து தி'ஏஞ்ஜிலிஸை அழைத்து வந்த பக்கிங்ஹாம் இளவரசருக்கு விதி வித்தியாசமான சவாலை முன்வைத்தது.
 
1876-78 காலகட்டத்தில் மெட்ராஸ் ராஜ்தானி முழுவதும் கடும் பஞ்சம் தலைவிரித்தாடியது. சிறந்த நிர்வாகியான பக்கிங்ஹாம் இளவரசர் ரிச்சர்ட், இந்த பஞ்சத்தை திறமையாகவே கையாண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். பஞ்ச காலத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை வேகமாக கொண்டு செல்ல வசதியாக, மரக்காணத்தில் இருந்து காக்கிநாடா வரை கால்வாய் வெட்டினார். சென்னையில் கூவம் நதி ஓடிக் கொண்டிருக்கும் பக்கிங்ஹாம் கால்வாய் பிறந்தது இப்படித்தான்.
 
1880இல் பணி முடிந்து பக்கிங்ஹாம் இளவரசர் இங்கிலாந்துக்கு திரும்பிச் சென்றுவிட்டார். ஆனால் தி'ஏஞ்ஜிலிஸுக்கு மெட்ராசை விட்டுச் செல்ல மனமில்லை. மெட்ராசின் மையப் பகுதியான மவுண்ட் ரோட்டில் ஒரு சிறிய கடையை ஆரம்பித்தார். பின்னர் அதை மெல்ல மெல்ல ஒரு உணவகமாக மாற்றினார். இப்படித்தான்  மவுண்ட் ரோட்டில் இன்று பாட்டா ஷோரூம் இருக்கும் இடத்தில், 1906ஆம் ஆண்டு தி'ஏஞ்ஜிலிஸ் ஹோட்டல் தொடங்கப்பட்டது.
 
சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு அருகில் இருப்பதாலும், எதிரிலேயே அரசினர் இல்லம் இருந்ததாலும் தி'ஏஞ்ஜிலிஸ் இந்த இடத்தை தேர்வு செய்தார். அவரது ஹோட்டல் அந்த காலத்தில் மெட்ராசிற்கு வரும் ஆங்கிலேயர்களுக்கு சொர்க்கபுரியாகவே திகழ்ந்தது. வேறெங்கும் கிடைக்காத விதவிதமான மேற்கத்திய உணவுகள், தங்குவதற்கு விசாலமான அறைகள், விளையாடி மகிழ பில்லியர்ட்ஸ் மேஜைகள் என விருந்தினர்களுக்கு தேவையான அனைத்தும் இங்கு கிடைத்தன. அந்த காலத்திலேயே இந்த ஹோட்டலில் லிப்ட் வசதி இருந்தது. ஒவ்வொரு அறையிலும் மின்விசிறிகள் இருந்தன, மாமிசத்தை பதப்படுத்தி வைக்க குளிர்பதன அறைகள் கூட இங்கிருந்தன.
 
ஓரே சமயத்தில் 100 பேர் உணவருந்தக் கூடிய வகையில் முதல் தளத்தில் விசாலமான டைனிங் ஹால் இருந்தது. வங்கக் கடல் காற்று வருடிக் கொடுக்க, மாலை வேளையில் மேற்கத்திய இசையை ரசித்தபடியே ஏகாந்தத்தில் மிதக்க வசதியாக, பின்புறம் தோட்டத்தில் மரங்களின் நிழலில் மேஜை போட்டு சிற்றுண்டிகள் பரிமாறப்பட்டன. சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து வாடிக்கையாளர்களை அழைத்து வரவும், மீண்டும் கொண்டு சென்று விடவும் பேருந்து வசதியையும் இந்த ஹோட்டல் வழங்கியது. அதே பேருந்தில் வாடிக்கையாளர்கள் சென்னை நகரையும் சுற்றிப் பார்த்து வரலாம்.
 
இப்படி வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்து கொடுத்ததால், இந்த ஹோட்டலுக்கு அன்றைய ஆங்கிலேய அதிகாரிகள் வட்டத்தில் பலத்த வரவேற்பு இருந்தது. மெட்ராசின் ஆளுநராக யார் வந்தாலும், அரசின் உணவு ஆர்டர்கள் தி'ஏஞ்ஜிலிஸ் வசமே ஒப்படைக்கப்பட்டன.
 
இந்நிலையில் 1934ஆம் ஆண்டு விடுமுறையைக் கழிக்க இத்தாலி சென்றிருந்த, தி'ஏஞ்ஜிலிஸ் அங்கேயே காலமானார். இதனையடுத்து இந்த ஹோட்டல் பொசோட்டோ என்ற இத்தாலியரின் வசம் வந்தது. பின்னர் ஹோட்டல் பொசோட்டோ பிரதர்ஸ் (HOTEL BOSOTTO BROS) என்ற பெயரில் செயல்படத் தொடங்கியது. இரண்டாம் உலகப் போரின்போது, பொசோட்டோ தனது தாயகத்திற்கு திரும்பி விட்டதால், 1950ஆம் ஆண்டு முசலப்ப சவுத்ரி என்பவர் ரூ.15,000 கொடுத்து இந்த ஹோட்டலை வாங்கினார். இப்படி அடுத்தடுத்த கைகளுக்கு மாறி, இன்று கால்களை அலங்கரிக்கும் பாட்டா ஷோரூம் ஆகியிருக்கிறது ஹோட்டல் தி'ஏஞ்ஜிலிஸ். மொத்தத்தில் கால ஓட்டத்தில் எத்தனையோ கால்கள் வந்துபோன இந்த இடம், இன்று கால்களுக்காகவே வந்துபோகும் இடமாக மாறி இருக்கிறது.
 

நன்றி - தினத்தந்தி
 
* 1884இல் ஊட்டியில் இயங்கி வந்த ஹோட்டல் ஒன்றை (Dawson Ootacamund) விலைக்கு வாங்கி சிறிது காலம் நடத்தி வந்தார் தி'ஏஞ்ஜிலிஸ்.
 
* தி'ஏஞ்ஜிலிஸ் தான் மெட்ராஸ் வான்வெளியில் முதல் விமானத்தை ஓட்டியவர். இந்த விமானத்தை இவரே வடிவமைத்தார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Sunday, April 1, 2012

பி ஆர் அண்ட் சன்ஸ்

 

1843இல் மெட்ராஸ் வந்த ஸ்காட்லாந்து சகோதரர்களோடு தொடங்குகிறது பி ஆர் அண்ட் சன்ஸ் (P.Orr & Sons) நிறுவனத்தின் கதை. சில நிமிடங்களில் கரைந்து மறைந்துவிடக் கூடிய ஐஸ் வியாபாரத்தில் ஆரம்பித்த அவர்களுக்கு, காலத்தால் கரைக்க முடியாதபடி மெட்ராஸ்வாசிகளின் நினைவுகளில் என்றுமே பெண்டுலம் ஆடப் போகிறோம் என்பது அப்போது தெரியாது.

சகோதரர்கள் பீட்டர் ஆரும் (Peter Orr) அலெக்சாண்டர் ஆரும் (Alexander Orr) நரைக்கத் தொடங்கிய நாற்பதுகளில் மெட்ராஸ் வந்தனர். மூத்தவர் பீட்டர் ஆர், கடிகாரம் தயாரிப்பதில் வல்லவர், இளையவர் அலெக்சாண்டர் ஆர் ஒரு வழக்கறிஞர். ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து ஆரம்பத்தில் மெட்ராசில் 4 அணாக்களுக்கு ஒரு பவுண்ட் ஐஸ் விற்றார்கள். பின்னர் இங்கிருந்த ஜியார்ஜ் கார்டன் அண்ட் கோ (George Gordon & Co) என்ற கடிகார நிறுவனத்தில் சேர்ந்தனர்.

நிறுவனரான கார்டன் 1849இல் ஓய்வு பெற முடிவு எடுத்தபோது, அவரிடம் இருந்து இந்த நிறுவனத்தை வாங்கிக் கொண்டனர். பின்னர் கடிகார விற்பனையில் முன்னணி நிறுவனம் என்ற பெயரைப் பெறுவதற்காக சகோதரர்கள் இருவரும் கடுமையாக உழைத்தனர். புத்திசாலி பொறியாளரான பீட்டர் ஆர், கடிகாரத் தயாரிப்பு மட்டுமின்றி, வேறு சில விஷயங்களிலும் தமது திறனை காட்டத் தொடங்கினார். அப்படி அவர் உருவாக்கியதுதான், நீராவியில் இயங்கும் சாமரம் வீசும் இயந்திரம்.

மூத்தவர் பீட்டர் ஆரின் மகன்களான ஜேம்சும், ராபர்ட்டும் கடிகாரத் தயாரிப்பில் சுவிட்சர்லாந்தில் பயிற்சி பெற்று திரும்பியதும், 1850களில் இந்நிறுவனத்தில் சேர்ந்தனர். 1863இல் இதன் பங்குதாரர்களாகவும் உயர்ந்தனர். இப்படித்தான் பி ஆர் அண்ட் சன்ஸ் என்ற பெயர் வந்தது. 1866இல் பீட்டர் இங்கிலாந்து திரும்பிவிட, 1869இல் ஜேம்ஸ் இறந்துவிட, நிறுவனம் மொத்தமாக ராபர்ட்டின் வசம் வந்தது. ராபர்ட் பி ஆர் அண்ட் சன்ஸ் பெயரை இந்தியாவில் பிரபலப்படுத்தியதோடு அல்லாமல் கடல் கடந்தும் புகழைப் பரப்பினார்.

இந்நிலையில் 1879இல்தான் பிராட்வேயில் இருந்த நிறுவனம் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக மவுண்ட் ரோட்டில் ஒரு அழகிய கட்டடம் கட்டும் பணி அப்போதைய மெட்ராஸ் அரசின் மூத்த கட்டட ஆலோசகரான ராபர்ட் சிஸ்ஹோமிடம் (Robert Chisholm) ஒப்படைக்கப்பட்டது. பிரசிடென்சி கல்லூரி, மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் செனட் இல்லம் போன்ற பல கட்டடங்கள் இவரது கை வண்ணத்தில் உருவானவைதான்.

இந்தோ-சராசனிக் பாணியில் கைதேர்ந்த ராபர்ட் சிஸ்ஹோம், அதனுடன் கால் கிலோ கேரள பாணியையும் சேர்த்து கூரைத் தொப்பி எல்லாம் போட்டு, பி ஆர் அண்ட் சன்ஸுக்காக ஒரு அருமையான கட்டடத்தை கட்டிக் கொடுத்தார். உள்ளே நுழைந்ததும் 60 அடி நீளத்திற்கு பிரம்மாண்டமான ஷோ ரூம், மேலே கண்ணைக் கவரும் சர விளக்குகளுடன் வாடிக்கையாளர்களை வரவேற்றது. பின் பகுதியில், கடிகாரங்களை பழுது நீக்க ஒரு வொர்க் ஷாப் அமைக்கப்பட்டது. மெட்ராஸ்வாசிகளுக்கு மிகத் துல்லியமான நேரத்தை தெரிவிக்க, கட்டடத்தின் முகப்பு கோபுரத்தில் மூன்று முக கடிகாரம் ஒன்றும் பொருத்தப்பட்டது. இந்த கட்டடத்தில்தான் சுமார் 130 ஆண்டுகளைக் கடந்தும் பி ஆர் அண்ட் சன்ஸ் செயல்பட்டு வருகிறது.

கடிகாரம் மட்டுமின்றி தங்க, வைர நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள் ஆகியவற்றின் விற்பனையிலும் பி ஆர் அண்ட் சன்ஸ் அந்நாட்களில் கொடி கட்டிப் பறந்தது. இங்கிருந்த வொர்க் ஷாப்பில் மிக நேர்த்தியான தங்க, வைர நகைகளும், வெள்ளிப் பாத்திரங்களும் செய்யப்பட்டன. 1880களில் இந்நிறுவனத்தின் வைரத்திற்கு இந்தியா முழுவதும் மிகப் பெரிய வரவேற்பு இருந்தது. ஐதராபாத் நிஜாம் முதல் வேல்ஸ் இளவரசர் வரை பலர் இதன் வாடிக்கையாளர்களாக இருந்தனர். ரங்கூன் கிளையில் இருந்து மவுண்ட் ரோடு அலுவலகத்திற்கு விலை உயர்ந்த கற்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இரண்டாம் உலகப் போரின் போதுதான் இது தடைபட்டது.

அதேசமயம் போரையும் இந்நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. நகைகள் போன்ற விஷயங்களை நிறுத்திவிட்டு, அதற்கு பதில் போர்க் காலத்தில் தேவையான ஏரோப்ளேன் மீட்டர் போன்ற உபகரணங்களை தயாரிக்கும் பணியில் இறங்கியது. போரில் சேதமான ஆயுதங்களை பழுது நீக்கித் தரும் பணியும் பின்னால் இருந்த வொர்க் ஷாப்பில் மும்முரமாக நடைபெற்றது. போருக்கு முன்பு நகைகள் மட்டுமின்றி, சர்வே உபகரணங்கள், துணிவகைகள், சமையல் பாத்திரங்கள், பேனா, சைக்கிள், கார் என பலதரப்பு பொருட்களும் இங்கு கிடைத்தன. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இதில் ஒவ்வொரு பொருளாக மெல்ல விடை பெறத் தொடங்கியது.

இதனிடையே இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் மாறினார்கள். அனந்தராமகிருஷ்ணனின் அமால்கமேஷன் குழுமத்தின் கைக்குப் போன நிறுவனம், 1967இல் அவரது நண்பர் கருமுத்து தியாகராஜ செட்டியாரின் வசம் சென்றது. பின்னர் மெல்ல மெல்ல பி ஆர் அண்ட் சன்ஸ் தனது பழைய கடிகாரத் தொழிலுக்கே திரும்பியது.

ஒரு காலகட்டத்தில் மெட்ராசில் இருந்த பெரும்பாலான வீடுகள் மற்றும் அலுவலகங்களை பி ஆர் அண்ட் சன்ஸ் கடிகாரங்களே அலங்கரித்துக் கொண்டிருந்தன. இப்படி வாட்ச் சக்கரங்களுக்கு வாழ்வை அர்ப்பணித்த பி ஆர் சகோதரர்கள், காலச் சக்கரத்தால் மறக்கடிக்கப்படாமல் இன்றும் நமது நினைவுகளில் சுற்றிச் சுழன்று கொண்டே இருக்கிறார்கள்.

நன்றி - தினத்தந்தி

* 1949இல் இதன் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட ராஜாஜி, இளைஞர்களின் கைத்திறனை வளர்ப்பதில் இந்நிறுவனம் பெரும் பங்காற்றி வருவதாகப் பாராட்டினார்.

* கனடாவில் உள்ள ராயல் ஒண்டாரியோ அருங்காட்சியகத்தில் பி ஆர் அண்ட் சன்ஸ் தயாரித்த காபி கப் ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

* மெட்ரோ ரயில் பணிகளுக்காக இந்நிறுவனத்தின் வொர்க் ஷாப் இடிக்கப்படும் என்ற அறிவிப்பு, சமூக ஆர்வலர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Saturday, March 24, 2012

மெட்ராஸ் விமானம்

 

மெட்ராஸ் வான்வெளியில் முதன் முதலில் விமானம் பறந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது. இந்த விமானம் பறந்தது மட்டுமல்ல, பிறந்ததும் மெட்ராசில்தான். எனவே இதை நாம் தாராளமாக மெட்ராஸ் விமானம் என்று அழைக்கலாம்.

1910ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தின் ஒரு வெயில் நாளில், தீவுத்திடல் மைதானத்தில் எதையோ பார்ப்பதற்காக ஏராளமானோர் கூடியிருந்தார்கள். ஓசியில் வேடிக்கை பார்க்க வந்த கூட்டமல்ல அது. இரண்டு அணாக்களில் இருந்து 5 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி வந்திருந்த கூட்டம். இரண்டு அணா கொடுத்தவர்கள் எல்லாம் தரையில் அமர்ந்திருக்க, ரூபாய்களில் கொடுத்தவர்கள் நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தார்கள்.

மைதானத்தின் மத்தியில் இரண்டு இறக்கைகளுடன் ஒரு விசித்திரமான வாகனம் பார்வையாளர்களின் விழிகளை விரிய வைத்துக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் அங்கு வந்த பிரெஞ்சுக்காரர் ஒருவர் அந்த வாகனத்தை சுற்றி சுற்றி வந்து எதை எதையோ சோதித்துக் கொண்டிருந்தார். பின்னர் அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற ஆர்வத்தில் மூச்சுவிடக் கூட மறந்து, பார்த்துக் கொண்டிருந்தார்கள் மெட்ராஸ்வாசிகள்.

வாகனத்தின் முன்னால் இருந்த காற்றாடி சுற்ற ஆரம்பிக்க மெல்ல நகரத் தொடங்கியது அந்த விசித்திர வண்டி. மைதானத்தை ஒருமுறை அப்படியே சுற்றி வந்தது. இப்போது அனைவரும் அதை நெருக்கத்தில் பார்க்க முடிந்தது. பின்னர் மெல்ல மெல்ல வேகமெடுத்து வானில் உயரக் கிளம்பியது. மெட்ராஸ்வாசிகள் கண்களை கசக்கிக் கொண்டு நடப்பது நிஜம்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டனர்.

வானில் கிளம்பிய வாகனம் வங்கக் கடலின் மேல் பறந்து சிறிய புள்ளியாய் மாறி, பின்னர் காணாமல் போனது. எல்லோரும் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, சுமார் அரைமணி நேரம் கழித்து அந்த உலோகப் பறவை திரும்பி வந்தது. மக்கள் அதற்கு ஆரவார வரவேற்பு கொடுத்தார்கள். விமானத்தில் இருந்து கைகளை அசைத்தபடி வெளியில் வந்த அந்த பிரெஞ்சுக்காரர், மக்களிடம் சென்று 'யாராவது வருகிறீர்களா, ஓசியில் ஒரு ரவுண்ட் அழைத்துச் செல்கிறேன்' என்றார். கூட்டத்தில் இப்போது பயங்கர நிசப்தம். யாரும் முன்வரத் தயாராக இல்லை.

சிறிது நேரம் கழித்து ஒரே ஒரு சிறுவன் மட்டும் எழுந்து நின்றான். அவனையும் அருகில் இருந்தவர்கள் இழுத்து உட்கார வைக்க முயற்சித்தனர். ஆனால் பிரெஞ்சுக்காரர் அந்த சிறுவனை அழைத்துச் சென்று விமானத்தில் தனக்கு அருகில் இருந்த இருக்கையில் உட்கார வைத்து சீட் பெல்ட் போட்டுவிட்டார். மீண்டும் பறக்கத் தயாரானது அந்த விசித்திர வாகனம். எல்லோரும் அதிசயிக்கும் வகையில், அதே சாகசம் மீண்டும் ஒருமுறை வான்வெளியில் வெற்றிகரமாக அரங்கேறியது.

அடுத்தநாள் மெட்ராஸ் நாளிதழ்கள் அனைத்திலும் இதுதான் முக்கியச் செய்தி. பாரதியார் நடத்திய இந்தியா வார இதழிலும் இதுபற்றிய செய்தி இடம்பெற்றிருந்தது. அந்த கட்டுரையில், ஏழ்மை காரணமாக இந்தியர்கள் இதுபோன்ற புதிய முயற்சிகளில் ஈடுபடுவதில்லை என்று பாரதி குறைபட்டிருந்தார். ஆனால் இந்த விமானத்தை உருவாக்கிய தொழிலாளர்கள் தமிழர்கள் என்பதையும் பாரதி குறிப்பிடத் தவறவில்லை.

இந்த சாகசத்தை செய்து காட்டிய பிரெஞ்சுக்காரரின் பெயர் டி'ஏஞ்ஜிலி (D' ANGELI). இவர் மெட்ராசின் மவுண்ட் ரோட்டில் டி'ஏஞ்ஜிலிஸ் ஹோட்டல் என்ற பெயரில் பெரிய உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். விமானம் செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பற்றிய தகவல்களை பாரீஸ் நகரில் இருந்து பெற்று, அதன் அடிப்படையில் இவர் மெட்ராசிலேயே இந்த விமானத்தை தயாரித்தார்.

அப்போது மெட்ராசில் ரயில் பெட்டிகள் தயார் செய்துகொடுத்துக் கொண்டிருந்த பிரபல சிம்சன் நிறுவனத்திடம் விமான பாகங்களை தயாரிக்கும் பணியை ஒப்படைத்தார். இது மிகவும் சாதாரண சிறிய ரக விமானம் என்பதால் அதிக சிரமம் இல்லாமல் இங்கேயே தயாரித்துவிட முடிந்தது. பல்லாவரம் பகுதியில் இதனை முதலில் சோதித்துப் பார்த்தார். சோதனை வெற்றி அடைந்ததால், அதிக சக்தி உள்ள என்ஜினைப் பொருத்தி மீண்டும் சோதித்துப் பார்த்தார். இதுவும் வெற்றிகரமாக அமைந்துவிட, உடனே 'கூட்டுங்கடா கூட்டத்தை' என்று தீவுத்திடலில் டிக்கெட் போட்டுவிட்டார்.

ஆர்.ஏ. பத்மநாபன் என்ற மூத்த பத்திரிகையாளர் இந்தியன் ரிவ்யூவில் (INDIAN REVIEW) எழுதிய கட்டுரையில் இந்த சம்பவத்தை அப்படியே நமக்கு படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். இப்படி இன்னும் நிறைய சுவாரஸ்யமான கதைகளை தனக்குள் புதைத்து வைத்திருக்கிறது மெட்ராஸ் மாநகரம். ஆனால் முறையாக ஆவணப்படுத்தத் தவறியதால் அவற்றில் பலவற்றை நாம் இழந்துவிட்டோம்.

நன்றி - தினத்தந்தி

* என்ஜின், பைலட் எல்லாம் சேர்த்து மெட்ராஸ் விமானத்தின் எடை வெறும் 700 பவுண்டுகள்தான்.

* விமானத்தில் உடன் பறந்த சிறுவனின் பெயர் பி.ஆர்.எஸ். வாசன். அந்த சிறுவனின் நேரடி அனுபவங்களும் அடுத்தநாள் செய்தித்தாள்களில் வந்திருந்தன.

மெட்ராஸ் விமான சாகசத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன் கல்கத்தாவில் ஒரு பஞ்சாபி தயாரித்த விமானம், 1909 டிசம்பர் 30ந் தேதி வானில் பறந்தது. அதுதான் இந்தியாவின் முதல் விமானம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Sunday, March 18, 2012

ராணி மேரிக் கல்லூரி

 

வங்கக்கடலின் காற்றுக்கு மேலும் குளிர்ச்சி கூட்டியபடி கடற்கரைச் சாலையில், கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் ராணி மேரிக் கல்லூரிதான் மெட்ராசின் முதல் பெண்கள் கல்லூரி. தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் இரண்டாவது பெண்கள் கல்லூரி என்ற பெருமையும் இதற்கு உண்டு. கடலைப் பார்த்தபடி மரங்களுக்கு இடையில் அமைதியாக காட்சியளிக்கும் இந்த கட்டடம் கல்லூரியாக மாறியதே ஒரு சுவாரஸ்யமான கதை.

ஜூலை 1914இல் மதராஸ் மகளிர் கல்லூரி என்ற பெயரில் தொடங்கப்பட்ட இது, அதற்கு முன்பு ஹோட்டலாகவும், அதற்கும் முன்பு தனியார் ஒருவரின் வீடாகவும் இருந்தது. கர்னல் பிரான்சிஸ் கேப்பர் (Col. Francis Capper) என்ற ராணுவ வீரர் கடற்கரைக்கு எதிரில் ஒரு வீடு கட்டினார். எனவே இந்த வீடு கேப்பர் இல்லம் (Capper’s House) என அழைக்கப்பட்டது. அவர் இந்தியாவை விட்டு வெளியேறும்போது, இந்த வீட்டை விற்றுவிட்டார். அடுத்து அங்கு ஒரு ஹோட்டல் முளைத்தது. அதையும் மக்கள் கேப்பர் ஹோட்டல் என்றுதான் அழைத்தனர். மெரினா சாலைக்கு வந்த முதல் ஹோட்டல் அதுதான். ஆனால் அந்த ஹோட்டலில் அதிக வருமானம் கிடைக்கவில்லை.

இதனிடையே 1910களில் பெண்களுக்கென ஒரு கல்லூரி தொடங்குவது குறித்து விவாதிக்கப்பட்டு வந்தது. இதற்கான இடம் தேடும் பணியும் ஒருபுறம் நடைபெற்றது. ஹோட்டலிலும் அதிக வருமானம் இல்லாததால் கேப்பர் இல்லத்தையே கல்லூரியாக மாற்றிவிடலாம் என முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுக்கு பின்னணியில் மெட்ராஸ் வர்த்தக சபையின் பங்கு இருந்ததாக கூறப்படுகிறது. காரணம், வர்த்தக சபையின் தலைவர் பியர்ட்செல்ஸின் (WA Beardsells) எக்மோர் இல்லத்தை கல்லூரியாக மாற்றலாம் என்றும் பரிசீலிக்கப்பட்டு வந்தது. இதனை தவிர்ப்பதற்காக கேப்பர் இல்லத்தை கைகாட்டி விட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஒருவழியாக 1914இல் கேப்பர் இல்லத்தில் மதராஸ் மகளிர் கல்லூரி தொடங்கப்பட்டது. ஆரம்பித்தபோது 37 பெண்கள் இதில் சேர்ந்தனர். முதல் முதல்வரான டி லா ஹே (Ms de la Haye) கல்லூரியின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டார். அவரது அயராத முயற்சியால் கல்லூரி வளாகத்தில் Pentland House (1915), Stone House (1918)Jeypore House(1921) ஆகிய கட்டடங்கள் கட்டப்பட்டன. இதனிடையே 1917இல் இது ராணி மேரிக் கல்லூரி எனப் பெயர் மாற்றப்பட்டது. கல்லூரிக்கு அருகில் இருந்த நீதிபதி சுப்பிரமணிய ஐயரின் பீச் இல்லம், நீதிபதி சங்கர ஐயரின் இல்லம் ஆகிய இரண்டு கட்டடங்கள் விலைக்கு வாங்கி கல்லூரியுடன் இணைக்கப்பட்டன.

 

எத்தனை கட்டடங்கள் வந்தாலும், இவற்றிற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்ட கேப்பர் இல்லம்தான் கல்லூரியின் முக்கியப் பகுதியாக விளங்கி வந்தது. 1990களில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், கேப்பர் இல்லம் சிதிலமடைந்தது. இதனை தொடர்ந்து பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என்பதால், அதன் பயன்பாடு நிறுத்தப்பட்டது. இங்கிருந்த அலுவலகங்கள் வேறு கட்டடங்களுக்கு மாற்றப்பட்டன.

 

இதனிடையே 2003இல் ராணி மேரிக் கல்லூரியை இடம் மாற்றிவிட்டு, அங்கு புதிய தலைமைச் செயலகம் கட்டப் போவதாக தமிழக அரசு அறிவித்தது. கல்லூரி மாணவிகள் பொங்கி எழுந்து போராட்டத்தில் குதித்தனர். கையெழுத்து இயக்கங்கள் நடத்தப்பட்டன, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசியல் கட்சிகள் இப்பிரச்னையை கையில் எடுத்தன. இப்படி பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து இந்த முடிவு கைவிடப்பட்டது. இந்நிலையில் தான் ஒருநாள் இரவு கேப்பர் இல்லத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது.

 

இதனை சீரமைப்பதற்கு பதிலாக, இந்த கட்டடம் ஒட்டுமொத்தமாக இடிக்கப்பட்டு, அங்கு ஒரு புதிய கட்டடம் கட்டப்பட்டது. அதேபாணியில் கட்டப்பட்டதாக சொல்லப்பட்டாலும், பழைய கட்டடத்திற்கும் புதியதற்கும் பெரிய ஒற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை. 2010ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட இந்த கட்டடத்திற்கு கலைஞர் மாளிகை எனப் பெயரிடப்பட்டது. இப்போது இது 'கலை மாளிகை'யாக மாறிவிட்டது.

 

இங்கிருக்கும் கட்டடங்களின் கதைகளைவிட, இங்கு பயின்று செல்லும் பெண்களின் கதைதான் மிக முக்கியம். அந்த வகையில், மெட்ராசின் முதல் பெண்கள் கல்லூரியாக உருவெடுத்து எத்தனையோ பெண்களின் வாழ்வையே மாற்றி இருக்கிறது இந்த ராணி மேரிக் கல்லூரி. சாமானியர்களாக, சாதாரண குடும்பத்தில் இருந்து படிக்க வந்த ஆயிரக்கணக்கான பெண்கள், சாதனைப் பெண்களாகும் வல்லமையுடன் இங்கிருந்து வெளியில் சென்றிருக்கிறார்கள். இப்படி சத்தமின்றி தொடர்ந்து சரித்திரங்களை படைத்து வரும் இந்த கல்லூரி விரைவில் நூற்றாண்டு விழா கொண்டாடத் தயாராகி வருகிறது.

 

நன்றி - தினத்தந்தி

 

* கல்லூரியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய முதல்வர் டி லா ஹேவிற்கு கல்லூரி வளாகத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

* அரசு மகளிர் கல்லூரிகளில் ராணி மேரிக் கல்லூரிதான் முதலில் (1987) தன்னாட்சி அதிகாரம் பெற்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

aturday, March 10, 2012

தங்க சாலை

 

மெட்ராஸ் மாநகரின் மிக நீண்ட தெரு என்ற பெருமைக்கு உரியது தங்க சாலை (MINT STREET). அரசின் நாணயங்களை அச்சடிக்கும் தொழிற்சாலை இங்கு இருந்ததால், இந்த சாலைக்கு இப்பெயர் வந்தது. நாணய சாலை இங்கு எப்படி வந்தது என்பதை தெரிந்துகொள்ள நாம் மெட்ராஸ் நகரம் உருவான காலத்திற்கு செல்ல வேண்டும்.

ஆம், 1639ஆம் ஆண்டு விஜயநகர அரசரின் பிரதிநிதியான வெங்கடாத்ரி நாயக்கரிடம் இருந்து மெட்ராஸின் நிலப்பகுதியை வாங்கிய கிழக்கிந்திய கம்பெனியார், இங்கு நாணயங்களை அச்சிட்டு புழக்கத்தில் விடும் உரிமையையும் பெற்றனர். எனவே புனித ஜார்ஜ் கோட்டைக்குள்ளேயே ஒரு நாணய தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இங்கிருந்த சில செட்டியார்கள் ஒப்பந்த அடிப்படையில் இதனை இயக்கி வந்தனர். நாணயத்தை அச்சடிக்கத் தேவையான தங்கத்தை கிழக்கிந்திய கம்பெனி இறக்குமதி செய்து தரும். பின்னர் 1650களில் இந்த நாணயக் கூடத்தை கிழக்கிந்திய கம்பெனி தானே இயக்குவது என முடிவு செய்தது.

கிழக்கிந்திய கம்பெனியின் வருகையின்போது, விஜயநகர அரசின் நாணயங்கள்தான் இப்பகுதியில் புழக்கத்தில் இருந்தன. விஷ்ணுவின் வராக அவதாரத்தை தாங்கி வெளியான இந்த நாணயங்கள் விஜயநகர தங்க வராகன்கள் என அழைக்கப்பட்டன. இதனிடையே கிழக்கிந்திய கம்பெனியும் தங்க நாணயங்களை வெளியிட்டதால் அவை மெட்ராஸ் வராகன்கள் எனப் பெயர் பெற்றன. இவை விஜயநகர நாணயங்களை விட எடை குறைவாக இருக்கும், அதேபோல இதன் மதிப்பும் குறைவுதான்.

இதனைத் தொடர்ந்து ஜார்ஜ் கோட்டையில் இருந்த நாணயக் கூடம், தங்க மற்றும் வெள்ளிப் பணங்களை வெளியிடத் தொடங்கியது. பின்னர் செப்புக் காசு, துட்டு ஆகியவை அச்சிடப்பட்டன. 1692 முதல் முகலாயர்களின் வெள்ளி ரூபாய்களையும் அச்சடித்துக் கொள்ளும் உரிமை இந்த நாணயக் கூடத்திற்கு அளிக்கப்பட்டது. பொதுமக்களும் தங்களிடம் இருக்கும் தங்கத்தை கொடுத்து, மெட்ராஸ் அல்லது முகலாய ரூபாயாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. ரூபாயை அச்சடித்துக் கொடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்பட்டது.

இந்நிலையில் 1695ஆம் ஆண்டு கோட்டைக்குள் ஒரு புதிய நாணயத் தொழிற்சாலை கட்டப்பட்டு சில ஆண்டுகள் கழித்து கோட்டைக்குள்ளேயே வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. 1742ஆம் ஆண்டு கோட்டைக்கு வெளியே ஒரு நாணயத் தொழிற்சாலை கட்டப்பட்டது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் சிந்தாதிரிப்பேட்டை. 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இரண்டாவது தொழிற்சாலை கோட்டைக்கே திரும்பிவிட்டது. இப்போது கோட்டைக்குள் இரண்டு நாணயத் தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கின.

1815ஆம் ஆண்டு ரூபாய், அணா, பைசா என நாணயத் தொழிற்சாலையின் பணி பல மடங்கு அதிகரித்தது. எனவே கோட்டைக்கு வெளியே ஒரு பெரிய நாணய தொழிற்சாலை அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஜார்ஜ் டவுனின் வடக்கு பகுதியில் பயன்பாடற்று கிடந்த வெடிமருந்து தொழிற்சாலையை நாணயத் தொழிற்சாலையாக மாற்றலாம் என டாக்டர் பானிஸ்டர் என்பவர் யோசனை தெரிவித்தார். அப்படித்தான் தங்க சாலைக்கு வந்து சேர்ந்தது நாணயத் தொழிற்சாலை.

அதற்கு முன்பெல்லாம் இந்த சாலையை வண்ணார் சாலை என்றுதான் அழைப்பார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் துணி வியாபாரத்திற்காக நியமிக்கப்பட்ட சலவைத் தொழிலாளர்கள் இந்தப் பகுதியில்தான் தங்கி இருந்தனர். இந்நிலையில்தான் இங்கு அமைக்கப்பட்ட நாணயத் தொழிற்சாலை, 1842ஆம் ஆண்டு தனது பணியைத் தொடங்கியது. இதனிடையே பம்பாய் மற்றும் கல்கத்தா ஆகிய இடங்களில் இரண்டு பெரிய நாணயத் தொழிற்சாலைகளை கிழக்கிந்திய கம்பெனி தொடங்கியது. மெட்ராஸ் நாணயச் சாலை இவற்றிற்கு வழிகாட்டியாக இருந்தது.

குருவை மிஞ்சிய சிஷ்யர்களாக இந்த இரண்டு தொழிற்சாலைகளும் உருவெடுத்ததை அடுத்து, மெட்ராஸ் நாணயச் சாலைக்கு தேவை இல்லாமல் போய்விட்டது. எனவே 1869ஆம் ஆண்டு இது மூடப்பட்டு, இந்த இடத்தில் அரசு அச்சகம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அச்சகம் இன்றும் செயல்பட்டு வருகிறது. பட்ஜெட் முதல் சலான்கள் வரை தமிழக அரசின் அனைத்து அச்சுத் தேவைகளையும் இதுதான் நிறைவு செய்து வருகிறது.

நாணயங்களோடு நெருங்கிய நட்பு பாராட்டிக் கொண்டிருந்த தங்க சாலை, பின்னர் அச்சகங்களின் முகவரியாக மாறியது. ஆறுமுக நாவலரின் நாவல வித்யானுபால அச்சகம் இந்த தெருவில் தான் இருந்தது. ஆனந்த விகடன் தனது ஆரம்ப நாட்களில் இங்கிருந்துதான் வெளியானது. 1880களில் தி ஹிந்து பத்திரிகை வாரத்திற்கு மூன்று முறை வந்துகொண்டிருந்தபோது, தங்கசாலையில்தான் அச்சடிக்கப்பட்டது.

இசைக்குகூட இந்த தெருவுடன் நிறைய தொடர்பு இருக்கிறது. டிக்கெட் வாங்கி கச்சேரி பார்க்கும் பழக்கத்திற்கு பிள்ளையார் சுழி போட்டதே இங்கிருந்த தொண்டைமண்டல சபாதான். திருவையாற்றில் ஆண்டுதோறும் தியாகராஜ ஆராதனையை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற முடிவு இந்த தெருவில்தான் எடுக்கப்பட்டது. இங்கிருக்கும் தொண்டை மண்டல துருவ வேளாளர் பள்ளியில் 1908ஆம் ஆண்டு கூடிய இசைக் கலைஞர்கள் தான் இந்த முடிவை எடுத்து செயல்படுத்தியவர்கள். கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஹரிகதா காலட்சேபத்தை முதல்முறையாக சரஸ்வதி பாய் என்ற ஒரு பெண் அரங்கேற்றியதும் இதே தங்கசாலையில்தான்.

இப்படி நிறைய சிறப்புகளைப் பெற்ற தங்க சாலையில் தமிழர்கள் மட்டுமின்றி தெலுங்கர்கள், மார்வாடிகள், குஜராத்திகள் என பல்வேறு தரப்பினரும் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். சென்னையில் வேறு எங்கும் காண முடியாத ஒரு அற்புதமான கலாச்சாரக் கலவையைக் கொண்டிருக்கும் இந்த நீண்ட தெரு, உண்மையில் 'தங்க' சாலைதான்.

நன்றி - தினத்தந்தி

* வடலூர் வள்ளலார் வாழ்ந்த வீராச்சாமி தெரு வீடும் இந்த பகுதியில்தான் இருக்கிறது.

* பேரறிஞர் அண்ணா பச்சையப்பன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தனது தொத்தாவுடன் இந்த தெருவில்தான் வசித்து வந்தார்.

* கெயிட்டி திரையரங்கு மூலமாக, தென் இந்தியாவில் முதல் தியேட்டர் கட்டிய இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற ரகுபதி வெங்கய்யா, தங்கச்சாலையில் கட்டியதுதான் கிரவுன் தியேட்டர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Saturday, March 3, 2012

ராயபுரம் ரயில் நிலையம்

 

கால வெள்ளத்தில் எவ்வளவு பெரிய விஷயங்களும் காணாமல் போய்விட வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான நிகழ்கால சாட்சியமாக நின்று கொண்டிருக்கிறது ராயபுரம் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தின் கதை, மிக மிக சுவாரஸ்யமானது. ஆனால் இந்த பகுதியைச் சேர்ந்த பலருக்கே கூட இன்று அது தெரியவில்லை என்பதுதான் உச்சகட்ட சோகம்.

தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் ராயபுரம்தான். இங்கிருந்துதான் தென்னிந்தியாவின் முதல் ரயில் தனது பயணத்தைத் தொடங்கியது. ஸ்டீபன்சன் நீராவி என்ஜினை கண்டுபிடித்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு, தென்னிந்தியாவில் ரயில்களை இயக்குவது குறித்து லண்டனில் விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து 1845ஆம் ஆண்டு 'மெட்ராஸ் ரயில்வே கம்பெனி' தொடங்கப்பட்டது.

ஆனால் அவர்கள் திட்டமிட்டு வேலையைத் தொடங்குவதற்கு முன்னர், 1849ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 'தி கிரேட் இந்தியா பெனின்சுலா கம்பெனி' இந்தியாவின் முதல் இருப்புப் பாதையை அமைத்துவிட்டது. 21 மைல் நீளத்திற்கு அமைக்கப்பட்ட இந்த இருப்புப் பாதையில் பம்பாயின் போரி பந்தரில் (Bori Bunder) இருந்து தானே வரை, இந்தியாவின் முதல் ரயில் 1853, ஏப்ரல் 16ந் தேதி இயக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் இருப்புப் பாதை அமைக்கும் பணியை மெட்ராஸ் ரயில்வே கம்பெனி தொடங்கியது. அதற்காக அது தேர்ந்தெடுத்த இடம்தான் ராயபுரம். கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் வசித்து வந்த புனித ஜார்ஜ் கோட்டைக்கு மிக அருகில் இருந்ததால், இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு, விசாலமான அறைகள், உயரமான தூண்கள், அழகான முகப்பு என பிரம்மாண்டமான ராயபுரம் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டது.

அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் ஹாரிஸ் பிரபு 1856, ஜூன் 28ந் தேதி இதனைத் திறந்துவைத்தார். இதனை அடுத்து, ஜூலை 1ந் தேதி தென்னிந்தியாவின் முதல் ரயில் இங்கிருந்து புறப்பட்டது. ஆற்காடு நவாப்பின் தலைமை இடமாக இருந்த ஆற்காடு வரை இந்த ரயில் இயக்கப்பட்டது. இதற்கான ரயில் பெட்டிகளை அக்காலத்தில் புகழ்பெற்ற சிம்சன் கம்பெனி தயாரித்திருந்தது. ஆளுநர் ஹாரிசும், சுமார் 300 ஐரோப்பியர்களும் இந்த முதல் ரயிலில் பயணப்பட்டனர். ஆம்பூர் சென்றடைந்த ரயிலுக்கு துப்பாக்கி குண்டுகளும், பேண்டு வாத்தியங்களும் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் மற்றொரு ரயில் ராயபுரத்தில் இருந்து திருவள்ளூர் வரை இயக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி பற்றி லண்டன் பத்திரிகையான The Illustrated London Newsவிரிவாக செய்தி வெளியிட்டிருந்தது. வழிநெடுகிலும் இந்த ரயில்களை ஏராளமானோர் அச்சம் கலந்த ஆச்சர்யத்தோடு பார்த்ததாக அந்த செய்தி தெரிவிக்கிறது. வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்களும், மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்களும் ஒரு மிகப் பெரிய இரும்பு வாகனம் தங்களை நோக்கி விரைந்து வருவதைப் பார்த்து மிரண்டு ஓடினார்களாம். சில இடங்களில் மக்கள் விழிகள் விரிய பலத்த ஆரவாரத்தோடு இந்த ரயிலை ரசித்துப் பார்த்திருக்கிறார்கள். இப்படி அன்றைய மெட்ராஸ்வாசிகளுக்கு மறக்க முடியாத ஒரு அனுபவத்தை கொடுத்தன ராயபுரத்தில் இருந்து புறப்பட்ட முதல் இரண்டு ரயில்கள்.

முதல் ரயில் ஆம்பூர் சென்றடைந்ததும், அங்கு ஒரு சிறிய விழா நடத்தப்பட்டிருக்கிறது. அதில் பேசிய ஆளுநர் ஹாரிஸ் பிரபு, மெட்ராஸ் ரயில்வே கம்பெனியையும், அதன் மேலாளர் ஜென்கின்சையும் (Major Jenkins) வெகுவாகப் பாராட்டி இருக்கிறார். ஒரு மைல் இருப்புப் பாதை அமைக்க 5,500 பவுண்டுகள் செலவானதாகவும், அது ஒரு நல்ல முதலீடுதான் என்றும் அவர் அப்போது குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படி கோலாகலமாக தொடங்கப்பட்ட ராயபுரம் ரயில் நிலையம், அடுத்த 17 ஆண்டுகளுக்கு மெட்ராஸ் மாநகரின் ஒரே ரயில் நிலையமாக கோலோச்சியது. 1873இல் இதற்கு போட்டிக்கு வந்தது மெட்ராஸ் சென்ட்ரல் ரயில் நிலையம். பின்னர் வடக்கு நோக்கி செல்லும் ரயில்கள் சென்ட்ரலில் இருந்தும், தெற்கு நோக்கி செல்லும் ரயில்கள் ராயபுரத்தில் இருந்தும் புறப்பட்டுச் செல்லும் என சொத்து பிரிக்கப்பட்டது. இதனிடையே சென்னை துறைமுகம் வேகமாக வளர்ச்சி அடைந்ததால், துறைமுகத்தின் சரக்குப் போக்குவரத்தும் ராயபுரம் ரயில்நிலையம் மூலம் நடைபெறத் தொடங்கியது. இதன் விளைவு, புதிதாக முளைத்தது எழும்பூர் ரயில் நிலையம். பின்னர் தெற்கு நோக்கி செல்லும் ரயில்கள் எழும்பூருக்கு இடம்பெயர்ந்தன.

ராயபுரம் ரயில் நிலையம் மெல்ல தனது செல்வாக்கை இழக்கத் தொடங்கியது. சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ரயில் நிலையம், இன்று புதர்கள் மண்டி பொட்டல்வெளி போல காட்சியளிக்கிறது. சென்னை கடற்கரை மார்க்கத்தில் இயக்கப்படும் வெகு சில ரயில்கள் மட்டுமே இங்கு நின்று செல்கின்றன. அப்படி ஒரு ரயிலில் அமர்ந்துகொண்டு ஜன்னல் வழியாக, பொலிவிழந்து கிடக்கும் இந்த ரயில் நிலையத்தைப் பார்க்கும்போது, நம்மையும் அறியாமல் கண்கள் பனிக்கின்றன.

நன்றி - தினத்தந்தி

* இந்தியாவில் ஹவுரா ரயில் நிலையத்திற்கு அடுத்தபடியாக அதிக இடவசதி இருக்கும் ஒரே ரயில் நிலையம் ராயபுரம்தான்.

* இந்த ரயில் நிலையம் கடந்த 2005ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டது.

* சென்ட்ரல், எழும்பூரைத் தொடர்ந்து ராயபுரத்தை மூன்றாவது ரயில் முனையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் தற்போது வலுத்து வருகின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Sunday, February 26, 2012

ஹிக்கின்பாதம்ஸ்

 

சிறந்த புத்தகம் என்பது மந்திரக் கம்பளம் போல, நாம் நுழைய முடியாத பல இடங்களுக்கு அது நம்மை அழைத்துச் செல்லும். அப்படிப்பட்ட மந்திரக் கம்பளங்கள் மலை போல் குவிந்திருக்கும் இடம்தான் புத்தகக் கடைகள்.

இன்று சென்னையில் நிறைய புத்தகக் கடைகள் வந்துவிட்டன. உலகின் மிக முக்கியமான புத்தகங்கள் அனைத்தையும் இங்கு காண முடிகிறது. புதிய புத்தகங்கள் உலகின் எந்த மூலையில் பதிப்பிக்கப்பட்டாலும் உடனே சென்னையிலும் அதன் பிரதிகள் கிடைக்கின்றன. ஆனால் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் இதெல்லாம் சாத்தியமா?

முயன்று பார்த்து வெற்றியும் கண்ட ஒரு மனிதரைப் பற்றித்தான் இந்த வாரம் பார்க்க இருக்கிறோம். ஏ.ஜே. ஹிக்கின்பாதம்ஸ் என்ற அந்த மனிதர் இங்கிலாந்தில் இருந்து மெட்ராசிற்கு வந்த ஒரு கப்பலில் டிக்கெட் வாங்காமல் வந்தவர் என்று கூறப்படுகிறது. இப்படி டிக்கெட் வாங்கக் கூட காசு இல்லாமல் மெட்ராஸ் வந்த ஹிக்கின்பாதம்ஸ்தான், இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் இந்தியாவின் மிகப் பழைய புத்தகக் கடையை நிறுவியவர்.

ஹிக்கின்பாதம்ஸ் மெட்ராசில் பார்த்த முதல் வேலை, இங்கிருக்கும் ராணுவ வீரர்களுக்கு பைபிள் விற்பனை செய்வது. அடுத்ததாக இங்கிருந்த வெஸ்லியன் புத்தகக் கடையில் அவருக்கு நூலகர் வேலை கிடைத்தது. புத்தகப் பிரியரான அவருக்கு இந்த வேலை, கரும்பு தின்னக் கூலி கொடுத்தது போல இருந்தது. ஆனால் இது அதிக காலம் நீடிக்கவில்லை. கடுமையான நஷ்டம் காரணமாக கடையை மூடி விட நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் ஹிக்கின்பாதம்ஸிற்கு இதனை விட்டுவிட மனமில்லை. எனவே மிகக் குறைந்த விலைக்கு இந்த கடையை அவரே வாங்கிவிட்டார்.

1844ஆம் ஆண்டு அப்படி உதயமானதுதான் 'ஹிக்கின்பாதம்ஸ்' புத்தகக் கடை. ஆரம்ப நாட்களில் பணியாளர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளும் அளவிற்கு அவருக்கு வசதி இல்லை. எனவே அவரே இங்கும் அங்கும் ஓடி வாடிக்கையாளர்களுக்கு புத்தகங்களை எடுத்துக் காட்டுவார். அவருடைய நினைவாற்றல் அபாரமானது. எந்த புத்தகம் பற்றிக் கேட்டாலும் மிகச் சரியாக சொல்லுவார். இது புத்தகப் பிரியர்களை இந்த கடையை நோக்கி இழுத்தது. வெல்லக் கட்டியை நோக்கி படையெடுக்கும் எறும்புகள் போல, ஹிக்கின்பாதம்ஸில் மொய்த்தார்கள் மெட்ராஸ் வாசகர்கள். மெல்ல மெல்ல இந்த கடையை மெட்ராசின் ஒரு அறிவார்ந்த அடையாளமாக மாற்றினார் ஹிக்கின்பாதம்ஸ்.

ஜான் முர்ரே என்பவர் 1859ஆம் ஆண்டு எழுதிய Guidebook to the Presidencies of Madras and Bombay என்ற புத்தகத்தில் ஹிக்கின்பாதம்ஸ் மெட்ராசின் பெருமைக்குரிய ஒரு புத்தகக் கடை என்று குறிப்பிட்டிருக்கிறார். அதே ஆண்டு மார்ச் மாதம், அப்போதைய மெட்ராஸ் ஆளுநரான டிரெவெல்யான் பிரபு (Lord Trevelyan) மெக்காலே பிரபுவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், மெட்ராஸ் நகரின் அழகான அம்சங்களில் தனது மனதிற்கு பிடித்த ஹிக்கின்பாதம்சும் ஒன்று என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், சாக்ரடீஸ், பிளாட்டோ முதல் விக்டர் ஹூகோ வரை அனைவரையும் ஹிக்கின்பாதம்சில் சந்திக்க முடியும் என்றும் புகழ்ந்திருக்கிறார்.

1858ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து இந்தியாவின் அரசாட்சி இங்கிலாந்து அரசியிடம் கை மாறிய போது, அதனைத் தெரிவிக்கும் பிரசுரங்களை ஹிக்கின்பாதம்ஸ்தான் ஆங்கிலத்திலும், தமிழிலும் அச்சிட்டு மெட்ராஸ் ராஜ்தானி முழுவதும் விநியோகித்தது. 1875இல் வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தபோது, அவரின் அதிகாரப்பூர்வ புத்தக விற்பனையாளராக ஏ.ஜே. ஹிக்கின்பாதம்ஸ் நியமிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். இதனையடுத்து அரசிற்கு தேவையான புத்தகங்களை விற்பனை செய்யும் மிகப் பெரிய வாய்ப்பு ஹிக்கின்பாதம்சிற்கு கிடைத்தது.

இதனிடையே ஹிக்கின்பாதம்ஸ் புத்தகங்களை சொந்தமாக வெளியிடவும் தொடங்கியது. அப்போதைய இங்கிலாந்து பிரதமர் கிளமெண்ட் அட்லி முதல் மைசூர் மகாராஜா ஜெயசாம்ராஜ்ய உடையார் வரை பல பிரபலங்கள் இதன் வாடிக்கையாளர்களாக இருந்தார்கள். பேரறிஞர் அண்ணா ஹிக்கின்பாதம்சிற்கு வரும் பெரும்பாலான புத்தகங்களை வாங்கிவிடுவாராம். ஒருமுறை ஹிக்கின்பாதம்ஸ் நடத்திய கணக்கெடுப்பின்படி, அதிக புத்தகங்களை வாங்கியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தவர்கள் மைசூர் மகாராஜாவும், பேரறிஞர் அண்ணாவும் தான்.

ஏ.ஜே. ஹிக்கின்பாதம்ஸ், 1888 மற்றும் 1889 ஆகிய ஆண்டுகளில் மெட்ராசின் ஷெரீப் என்ற கவுரவத்தையும் பெற்றார். 1891இல் அவரது மறைவிற்கு பிறகு அவரது மகன் சி.எச். ஹிக்கின்பாதம்ஸ் கடையின் நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டார். அவரது நிர்வாகத்தில் ஹிக்கின்பாதம்ஸ் மெட்ராசிற்கு வெளியிலும் விரிவடைந்தது. ரயில் நிலையங்களில் ஹிக்கின்பாதம்ஸ் கடைகள் முளைத்தன.

1904இல் தான் ஹிக்கின்பாதம்ஸ் இன்று இருக்கும் கலைநயமிக்க கட்டடத்திற்கு மாறியது. நல்ல காற்றோட்டம், உயரமான மேல்தளம் என புத்தகங்கள் பூஞ்சை பிடிக்காமல் இருக்கத் தேவையான அனைத்தையும் கருத்தில் கொண்டு இந்த கட்டடம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை அலங்கரிக்கும் வண்ணமயமான கண்ணாடிகள் ஐரோப்பாவில் இருந்த வரவழைக்கப்பட்டன, தளத்தில் பதிக்கப்பட்டிருக்கும் கற்கள் இத்தாலியில் இருந்து கொண்டு வரப்பட்டன.

1921ஆம் ஆண்டு ஹிக்கின்பாதம்சை, அசோசியேட்டட் பப்ளிஷர்ஸ் நிறுவனம் வாங்கியது. பின்னர் 1945ஆம் ஆண்டு அமால்கமேஷன் குழுமத்தின் எஸ். அனந்தராமகிருஷ்ணன் இதனை விலைக்கு வாங்கினார். இன்று ஹிக்கின்பாதம்ஸிற்கு தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் நிறைய கிளைகள் இருக்கின்றன.

நிர்வாகம் மாறிவிட்டாலும், இவை அனைத்திற்கும் விதை போட்டவர் இங்கிலாந்தில் இருந்து ஒன்றும் இல்லாமல் வந்து தனது கடின உழைப்பால் உயர்ந்த ஏ.ஜே. ஹிக்கின்பாதம்ஸ். அந்த மனிதரை நினைவூட்டியபடி இன்றும் மவுண்ட் ரோட்டில் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது இந்தியாவின் பழமையான புத்தகக் கடையான ஹிக்கின்பாதம்ஸ்.

நன்றி - தினத்தந்தி

* ஹிக்கின்பாதம்ஸ் முதல் புத்தக்கத்தை 1884ஆம் ஆண்டு வெளியிட்டது. புத்தகத்தின் பெயர் - ‘Sweet Dishes: A little Treatise on Confectionary'

* 1989ஆம் ஆண்டு சில சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு கட்டடத்தின் பழமையான தோற்றத்தை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

* மவுண்ட் ரோட்டில் இருக்கும் இந்த இடத்திற்கு பல கோடி ரூபாய்களை கொட்டிக் கொடுக்க பலர் முன்வந்தும், பழமையான இந்த கட்டடத்தை விட்டுக் கொடுக்க இதன் உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Monday, February 20, 2012

சென்னையில் தொலைபேசி

 

மெட்ராஸ் மாநகரம் பல்வேறு விஷயங்களிலும் உலகின் மற்ற நகரங்களுக்கு முன்னோடியாக இருந்திருக்கிறது. அப்படி மெட்ராஸ் முந்திக் கொண்ட ஒரு விஷயம்தான் தொலைபேசி. அதாவது கிரஹாம்பெல் தொலைபேசி என்ற கருவியை கண்டுபிடித்த 5 ஆண்டுகளிலேயே மெட்ராசில் தொலைபேசிகள் சிணுங்கத் தொடங்கிவிட்டன.

மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா மற்றும் ரங்கூன் ஆகிய நகரங்களில் தொலைபேசி இணைப்பகங்கள் ஆரம்பிக்க 1881ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அனுமதி அளிக்கப்பட்டது. ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி (ORIENTAL TELEPHONE COMPANY) என்ற இங்கிலாந்து நிறுவனம் இந்த அனுமதியைப் பெற்று இந்தியாவில் டெலிபோன் தொழிலில் காலடி எடுத்துவைத்தது. இந்த நிறுவனம் முதலில் அலுவலகம் தொடங்கியது மெட்ராசில்தான். 19-11-1881 அன்று பாரிமுனையில் உள்ள எர்ரபாலு செட்டித் தெருவில் 37ஆம் நம்பர் கட்டடத்தில் இந்தியாவின் முதல் தொலைபேசி இணைப்பகம் தொடங்கப்பட்டது.

புதிதாக தொலைபேசி இணைப்பகம் தொடங்கப்பட்ட சமயத்தில், சுமார் 4 லட்சம் மக்கள் வசித்த மெட்ராசில், வெறும் 17 பேர் மட்டுமே தொலைபேசியைப் பயன்படுத்தினர். அந்த ஆண்டு இறுதியில் இந்த எண்ணிக்கை 24ஆக உயர்ந்தது. அந்தக் கால வர்த்தகர்கள் இடையே தொலைபேசிக்கு பெரிய வரவேற்பு எதுவும் இல்லை. சாதாரண மக்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். எனவே தொலைபேசி நிறுவனம் பல்வேறு சலுகைகளை வழங்குவதாக விளம்பரங்களை வெளியிட்டது. ஆனால் அதுவும் பெரிதாக எடுபடவில்லை. 1910ஆம் ஆண்டு கூட வெறும் 350 பேரிடம் மட்டுமே தொலைபேசி இருந்தது. அதிலேயே நிறைய கிராஸ் டாக், ஒருவரைத் தொடர்பு கொள்ள முயன்றால் வேறு ஒருவருக்கு அழைப்பு செல்வது போன்ற பிரச்னைகள் இருந்தன.

1922ஆம் ஆண்டு ஓரியண்டல் டெலிபோன் கம்பெனியின் லைசன்சை புதுப்பிக்கும் தருணம் வந்தது. அப்போது அரசு மூன்று முக்கிய நிபந்தனைகளை விதித்தது. அதாவது, உள்நாட்டு நிறுவனத்திற்கு கம்பெனியை கைமாற்ற வேண்டும், தொலைபேசித் தொழில்நுட்பத்தை நவீனமாக்க வேண்டும், இதற்கு ஏதுவாக கட்டணத்தை உயர்த்த வேண்டும் ஆகியவை தான் அந்த நிபந்தனைகள்.

இதன்படி 1923ஆம் ஆண்டு, ரூ.5 லட்சம் முதலீட்டில் மெட்ராஸ் டெலிபோன் கம்பெனி லிமிடெட் தொடங்கப்பட்டது. இதனிடையே மெல்ல மெல்ல சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1224ஆக உயர்ந்தது. இது மட்டுமில்லாமல், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள், துறைமுகம், சால்ட் குவார்ட்ரஸ் ஆகிய இடங்களில் மக்கள் வசதிக்காக பொதுத் தொலைபேசிகளும் அமைக்கப்பட்டன. ஆனால் பொதுமக்கள் இதனைப் பெரிதாக பயன்படுத்தவில்லை.

இந்த நிலையில்தான் லண்டன் தொலைபேசி இணைப்பகத்தைப் போல மெட்ராஸ் இணைப்பகத்தையும் தானியங்கி முறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்கு எர்ரபாலு செட்டித் தெரு அலுவலகம் போதாது என்பதால் 1925ஆம் ஆண்டு சைனா பஜாரில் 21 ஆயிரம் சதுர அடி நிலம் வாங்கப்பட்டது. அங்கு உடனடியாக ஒரு அலுவலகம் கட்டப்பட்டு அந்த ஆண்டு டிசம்பர் மாதமே பால் காய்ச்சப்பட்டது. அதுதான் சென்னையின் 'டெலிபோன் ஹவுஸ்'.

அப்போதெல்லாம் தொலைபேசி ஒயர்கள் தலைக்கு மேலாகத்தான் சென்று கொண்டிருந்தன. கோவில் தேர் திருவிழாக்கள், சுழன்றடிக்கும் காற்று என பல காரணங்களால் இந்த ஒயர்கள் ஆங்காங்கே அறுந்து தொங்கின. இந்த பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காக பூமிக்கு அடியில் கேபிள் பதிப்பது என மெட்ராஸ் டெலிபோன்ஸ் முடிவெடுத்தது. 1927-28 காலகட்டத்தில் இந்த பணி மும்முரமாக நடைபெற்று கிண்டி வரை கேபிள்கள் பதிக்கப்பட்டன. 1932இல் பெரம்பூர், ராயபுரம், துறைமுகம் என சென்னையின் முக்கியப் பகுதிகள் அனைத்தின் வயிற்றிலும் டெலிபோன் வயர்கள் புகுந்து புறப்பட்டன.

1934ஆம் ஆண்டிற்கு முன்பு வரை டெலிபோன் டைரக்டரி என்பது வெறும் ஒருசில தாள்கள் கொண்டதாகவே இருந்தது. 1934 அக்டோபர் மாதம் தான் பல வண்ண விளம்பரங்களுடன் கனமான முதல் டெலிபோன் டைரக்டரி வெளியிடப்பட்டது. பின்னர் மெல்ல மெல்ல டெலிபோனின் உபயோகத்தை மக்கள் புரிந்துகொண்டனர். எனவே சென்னையில் மவுண்ட் ரோடு, மாம்பலம் ஆகிய இடங்களில் இணைப்பகங்கள் தொடங்கப்பட்டன.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் செயிண்ட் தாமஸ் மவுண்ட் பகுதியில் நிறைய ராணுவத்தினர் தங்கி இருந்ததால், அவர்களின் வசதிக்காக அங்கு ஒரு தொலைபேசி இணைப்பகம் ஆரம்பிக்கப்பட்டது. போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், லண்டனில் தயாரிக்கப்படும் போன்கள் அனைத்தும் போர்த் தேவைகளுக்காக அனுப்பப்பட்டுவிட்டதால், மெட்ராசிற்கு புதிய போன்கள் வருவது அடியோடு நின்றுபோனது. இதனால் மெட்ராஸ் டெலிபோன்ஸ் கிட்டத்தட்ட முடங்கிப் போனது என்றே கூட சொல்லலாம்.

இந்தப் போர் தொலைபேசிகளின் பயன்பாட்டை அரசிற்கு தெளிவாகப் புரிய வைத்தது. எனவே அரசே தொலைபேசி தொழிலை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மெட்ராஸ் டெலிபோன்ஸ் கம்பெனியின் இயக்குநர்கள் கடைசி முறையாக 1943 மார்ச் 26ந் தேதி சென்னையில் உள்ள டெலிபோன் ஹவுசில் கூடிப் பேசி கனத்த இதயத்தோடு கலைந்து போயினர். ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. டெலிபோன் தொழிலை அரசு ஏற்றுக் கொண்டது.

இப்படித் தான் மெட்ராஸ் மாநகரில் தொலைபேசிகள் அறிமுகமாகி, இன்று அனைவர் கைகளிலும் செல்போன்களாக சிணுங்கிக் கொண்டிருக்கின்றன.

நன்றி - தினத்தந்தி

* 1932இல் மெட்ராசில் தொலைபேசிகள் அறிமுகமானதன் 50ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது இந்த நிறுவனத்தின் பங்குகளை வைத்திருந்தவர்களுக்கு சிறப்பு போனஸ்கள் வழங்கப்பட்டன.

* அரசு இந்த தொழிலை ஏற்றுக் கொண்டதும், 1947இல் 1500 இணைப்புகளைக் கொண்ட புதிய மவுண்ட் ரோடு இணைப்பகம் தொடங்கப்பட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Saturday, February 11, 2012

டிராம் வண்டிகள்

 

மவுண்ட் ரோட்டில் மாட்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும் ஓடிக் கொண்டிருந்த காலத்தில், மெட்ராஸ்வாசிகளை மெய்சிலிர்க்க வைத்தவைதான் டிராம் வண்டிகள். இன்றைய தலைமுறை 'மதராசபட்டினம்' போன்ற படங்களில் மட்டுமே பார்த்து ரசிக்க முடிந்த டிராம் வண்டிகள், மெட்ராஸ் மாநகரில் சுமார் 80 ஆண்டுகளாக மாங்கு மாங்கென்று ஓடி இருக்கின்றன.

1877இல்தான் மெட்ராஸ்வாசிகளுக்கு டிராம் வண்டி அறிமுகமானது. ஆனால் அப்போதெல்லாம் குதிரை இழுத்துச் செல்லும் டிராம் வண்டிதான் புழக்கத்தில் இருந்தது. மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால், இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. இதற்காக 1892இல் மெட்ராஸ் டிராம்வேஸ் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது. ஒரு லட்சம் பவுண்ட் செலவில் தொடங்கப்பட்ட இந்த கம்பெனி, Messrs Hutchinson & Co என்ற லண்டன் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கியது. ஆனால் 3 ஆண்டுகள் கடின உழைப்பிற்கு பிறகே எலெக்ட்ரிக் டிராம்களை அவர்களால் சென்னையில் இயக்க முடிந்தது.

மே 7, 1895இல் சென்னை நகர வீதிகளில் முதன்முறையாக எலெக்ட்ரிக் டிராம்கள் ஓடின. இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் டிராம் ஓடுவது அதுதான் முதல்முறை. அவ்வளவு ஏன், அந்த சமயத்தில் லண்டன் போன்ற மாநகரங்களில் கூட எலெக்ட்ரிக் டிராம்கள் அறிமுகமாகவில்லை. எனவே எந்த விலங்கும் இழுக்காமல் தானாக நகரும் இந்த பெட்டி வண்டியை மக்கள் சற்றே மிரட்சியுடன் பார்த்தார்கள். அவர்களின் அச்சத்தைப் போக்குவதற்காக சில காலம் வரை ஓசிப் பயணம் எல்லாம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

சேவையை தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்கள். அதாவது மே 6ந் தேதியுடன் ஓசி பயணம் முடிவு பெறுகிறது, மே 7 முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. ஒரு மைலுக்கு சுமார் 6 பைசா என்ற அளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இன்றைய பேருந்து போல வண்டியில் ஏறியதும் கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கிக் கொள்ள வேண்டும்.

ஓட்டுநரும், கண்டக்டரும் காக்கி யூனிபார்ம் அணிந்திருப்பார்கள். திடீரென டிக்கெட் கலெக்டர் ஏறி, பயணிகள் அனைவரிடமும் டிக்கெட் இருக்கிறதா என பரிசோதிப்பார். கொஞ்ச நேரத்தில் எதிரில் மெதுவாக வரும் டிராம் வண்டியில் அப்படியே இங்கிருந்தபடி தாவிவிடுவார். டிக்கெட் பரிசோதகர்களின் இந்த சாகசங்களை வியந்து பார்க்கவே ஒரு கூட்டம் இருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் 6 அணா கொடுத்து டிக்கெட் வாங்கி விட்டால் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். மாத சீசன் டிக்கெட் முறைகளும் அமலில் இருந்தன. ஒரு குறிப்பிட்ட ரூட்டில் பயணிக்க மாதம் ரூ.6, எந்த ரூட்டில் வேண்டுமானாலும் பயணிக்க ரூ.10 வசூலிக்கப்பட்டது.

சென்னையின் பல வழித்தடங்களில் இந்த டிராம் வண்டிகள் இயக்கப்பட்டன. வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பாரிமுனை, சென்ட்ரல் ரயில் நிலையம், மவுண்ட் ரோடு, ராயப்பேட்டை, மயிலாப்பூர் என பல இடங்களுக்கும் டிராம் வண்டியில் ஏறிச் செல்லலாம். அப்போதெல்லாம் பேருந்துகள் தேசியமயமாக்கப்பட வில்லை. அதுவும் இல்லாமல், பேருந்துகள் கரியால் இயங்கிக் கொண்டிருந்தன. எனவே மின்சாரத்தில் இயங்கும் டிராம் வண்டிகளுக்கு மக்களிடம் நல்ல கிராக்கி இருந்தது. மெட்ராசில் குறுக்கும் நெடுக்குமாக கம்பளிப் பூச்சியைப் போல இந்த டிராம்கள் ஓடிக் கொண்டே இருந்தன. நாள்தோறும் சுமார் ஒரு லட்சம் பேர் இந்த வண்டிகளைப் பயன்படுத்தினார்கள்.

டிராம் வண்டி மக்களுக்கு வசதியாக இருந்ததே தவிர, அந்த லண்டன் நிறுவனத்திற்கு இதனால் எந்த பயனும் இல்லை. காரணம், எலெக்ட்ரிக் டிராம் வண்டிகளை conduit system எனப்படும் முறையில் இயக்க அந்த நிறுவனம் முடிவு செய்திருந்தது. அதாவது டிராம் வண்டி செல்வதற்காக சாலையில் தண்டவாளங்கள் இருக்கும், அதற்கு நடுவே மின்சார சப்ளைக்கு வழி செய்யும் வயர்கள் பதிக்கப்பட்டிருக்கும். ஆனால் சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக, இந்த முறையை கைவிட்டுவிட்டு, தலைக்கு மேல் ஒயர்கள் போட்டு, அதில் இருந்து மின்சாரம் பெற்றுக் கொள்ளும் முறைக்கு ஒப்புக் கொண்டது. இங்குதான் ஆரம்பித்தது சிக்கல்.

இந்த புதிய முறையால் நிறுவனத்திற்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டு, 1900இல் நிறுவனத்தை விற்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது. எலெக்ட்ரிக் கன்ஸ்ட்ரக்ஷ்ன் கம்பெனி லிமிடெட் என்ற இங்கிலாந்து நிறுவனம், இதனை வாங்கி நான்கு ஆண்டுகள் வரை இயக்கிப் பார்த்தது. பின்னர் 1904இல் மெட்ராஸ் எலெக்ட்ரிக் டிராம்வேஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு கை மாற்றியது. அந்த நிறுவனமும் கொஞ்சம் தாக்குப் பிடித்துப் பார்த்தது. ஆனால் கடும் நஷ்டம் காரணமாக அவர்களாலும் 1953ஆம் ஆண்டிற்கு மேல் டிராம்களை இயக்க முடியவில்லை. எனவே அந்த ஆண்டு ஏப்ரல் 11ந் தேதி நள்ளிரவுடன் மெட்ராசின் டிராம்கள் கடைசியாக ஓடி ஓய்ந்தன.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே அறிமுகமாகி, தங்களின் வாழ்வின் ஒரு அங்கமாகவே ஆகிப் போன டிராம்கள் திடீரென நின்று போனதை மக்களால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் இதனைத் தொடர்ந்து இயக்க அந்த நிறுவனமும் தயாராக இல்லை, அரசும் தயாராக இல்லை என ஏப்ரல் மாதம் அறிவித்தார் அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி. நிஜத்தில் இருந்த டிராம்கள், அந்தக் கால மெட்ராஸ்வாசிகளின் நினைவுப் பொருளாக மெல்ல மாறிப் போயின.

நன்றி - தினத்தந்தி

* துறைமுகத்திற்கு சரக்குகள் கொண்டு செல்லவும் டிராம் வண்டிகள் பயன்படுத்தப்பட்டன.

* இந்த வண்டிகளுக்கான மின்சாரம், பேசின் பிரிட்ஜில் இருந்த மின் நிலையத்தில் இருந்து தருவிக்கப்பட்டது.

* இந்தியாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகளுக்கு பிறகே அமெரிக்காவில் டிராம்கள் ஓடத் தொடங்கின.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Sunday, February 5, 2012

செயின்ட் தாமஸ் மவுண்ட்

 

மவுண்ட் ரோடு, சாந்தோம், செயின்ட் தாமஸ் மவுண்ட்.. என மெட்ராசின் பழமையான பல விஷயங்களுக்கு காரணமானவர் புனித தோமையார் என்று அழைக்கப்படும் செயின்ட் தாமஸ். ஏசுநாதரின் 12 சீடர்களில் ஒருவரான புனித தாமஸ், கிபி 52இல் இந்தியாவின் கேரளப் பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. அங்கு மதப் பிரசாரத்தில் ஈடுபட்ட தாமஸ், பின்னர் கடல் வழியாக மயிலாப்பூருக்கு வந்தார்.

இங்கும் தீவிர மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே சைதாப்பேட்டை அருகில் இருக்கும் சின்னமலையில் சில காலம் மறைந்து வாழ்ந்தார். அப்போது அருகில் இருக்கும் பெரிய மலை என்று அழைக்கப்பட்ட இன்றைய செயின்ட் தாமஸ் மவுண்ட்டிற்கு சென்று ஜபம் செய்வார். அப்படி ஜபம் செய்து கொண்டிருந்தபோது, கிபி 72இல் எதிரிகளால் பின்னால் இருந்து ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. மலையில் மயில் வேட்டையாடுவதற்காக வந்த ஒருவனின் ஈட்டி பாய்ந்து இறந்தார் என்று மார்க்கோ போலோ தனது இந்தியப் பயணக் குறிப்பில் எழுதியிருக்கிறார்.

அப்படி தாமஸ் உயிர்நீத்த இடத்தில் இன்று ஒரு அமைதியான சிறிய தேவாலயம் இருக்கிறது. 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாஸ்கோடகாமா இந்தியாவிற்கான கடல்வழியைக் கண்டுபிடித்த பின்னர் நிறைய போர்த்துகீசிய வணிகர்கள் கேரளத்திற்கும், மயிலாப்பூருக்கும் வணிகம் செய்ய வந்து சென்றனர். அப்படி வந்த வணிகர்கள் சிலர், கடல்மட்டத்தில் இருந்து 300 அடி உயரத்தில் இருக்கும் இந்த பெரிய மலையில் தேவாலயம் ஒன்றை கட்ட விரும்பினர். அதற்காக அவர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டபோது, புனித தாமஸ் வழிபட்ட கற்சிலுவை இரத்தத் திட்டுகளுடன் கிடைத்ததாக கூறப்படுகிறது (இந்த கற்சிலுவையை தாமஸ் தனது கைகளால் செதுக்கினார்). எனவே தாமஸ் கொலையுண்ட அதே இடத்தில் கிபி 1523ஆம் ஆண்டு ஒரு தேவாலயம் கட்டப்பட்டது.

தாமஸ் வழிபட்ட அந்த சிலுவை இன்றும் தேவாலயத்தில் நடுநாயகமாக வீற்றிருக்கிறது. இந்த சிலுவையில் இருந்து இரத்தம் வடிந்ததைப் பார்த்ததாக நிறைய தகவல்கள் இருக்கின்றன. கடைசியாக 1704இல் இந்த இரத்த வியர்வை காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் அருகில் கிபி 50இல் புனித லூக்காவினால் வரையப்பட்ட அன்னை மரியாளின் ஓவியம் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவிலேயே மிகப் பழமையான கிறிஸ்தவ ஓவியமாக கருதப்படும் இதை, இந்தியாவிற்கு வரும்போது தாமஸ் தம்முடன் கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதைப் பற்றி கேள்விப்பட்ட சந்திரகிரி மன்னன், 1559இல் இந்த ஓவியத்தை தனது மாளிகைக்கு கொண்டு வரச் செய்து பார்த்ததாகவும், பின்னர் அரசு பல்லக்கில் வைத்து இதனை பெரிய மலைக்கே திருப்பி அனுப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சில பழமையான வண்ண ஓவியங்களும் இந்த தேவாலயத்தை அலங்கரிக்கின்றன. இயேசு நாதர், அவரின் 12 சீடர்கள், புனித பவுல் என மொத்தம் 14 ஓவியங்கள் இருக்கின்றன. இவை 1727இல் வரையப்பட்டவை. அதாவது சுமார் 300 ஆண்டுகள் பழமையானவை.

மேரி மாதாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம், 'எதிர்பார்த்த அன்னையின் ஆலயம்' என அழைக்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றபடி ஏசுவை கருவில் சுமந்தபடி அமர்ந்திருக்கும் மேரி மாதாவின் அழகிய சிற்பம் ஒன்று இங்கிருக்கிறது. இதுதவிர புனித தாமஸின் சிறிய எலும்புத் துண்டும் இங்கு ஒரு சிலுவையில் பதித்து வைக்கப்பட்டிருக்கிறது.

மெட்ராசில் ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கிய ஆர்மீனிய வணிகர்கள் இந்த தேவாலயத்திற்கு நிறைய நன்கொடைகளை அளித்திருக்கின்றனர். அவர்களில் மிகவும் முக்கியமானவர் பெட்ரூஸ் உஸ்கான். இந்த புனித தேவாலயத்திற்கு சென்னையில் உள்ள அனைவரும் எளிதில் வரவேண்டும் என்பதற்காக, இவர் தனது சொந்த செலவில் அடையாற்றின் குறுக்கே 1726இல் ஒரு பாலத்தை கட்டிக் கொடுத்தார். அதுதான் அடையாறில் இருக்கும் மர்மலாங் பாலம். இதுமட்டுமின்றி மலை மீது ஏறுவதற்கு வசதியாக 135 படிகளையும் கட்டிக் கொடுத்திருக்கிறார்.

போர்த்துகீசியர்கள் புனித தாமஸின் நினைவாகத்தான் மயிலாப்பூருக்கு அருகில் அமைத்துக் கொண்ட தங்களின் இருப்பிடத்திற்கு சாந்தோம் என்று பெயரிட்டனர். அதாவது புனித தோமா (SAN+THOME) என்று அர்த்தம். ஆங்கிலேயர்கள் ஜார்ஜ் கோட்டையில் குடியேறிய பிறகு, செயிண்ட் தாமஸ் மவுண்ட்டிற்கு வந்து வழிபட வசதியாக ஒரு சாலை வேண்டும் என்று நினைத்ததின் விளைவுதான் இன்றைய மவுண்ட் ரோடு.

இப்படி மெட்ராசின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்திருக்கிறது இந்த மலை. இதன் உச்சியில் இருந்து பரந்து விரிந்திருக்கும் இன்றைய சென்னையைப் பார்க்கும்போது, ஏதோ கால இயந்திரத்தில் அமர்ந்தபடி பல நூற்றாண்டுகள் பின்னோக்கிப் பார்ப்பது போன்றதொரு பரவச அனுபவம் கிடைக்கிறது.

 

நன்றி - தினத்தந்தி

 

* போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பால், 1986ஆம் ஆண்டு இங்கு வருகை புரிந்திருக்கிறார்.

2011ஆம் ஆண்டு இந்த தேவாலயம் தேசியத் திருத்தலமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

* இந்த மலையைச் சுற்றிலும் நிறைய ஐரோப்பியர்கள் வசித்ததால் இதனை உள்ளூர் மக்கள் பரங்கி மலை (பரங்கியர் வசிக்கும் மலை) என்று அழைத்தனர்.

* சென்னை விமான நிலையத்திற்கு அருகில் அமைந்திருப்பதால், இங்கிருந்தபடி விமானங்கள் ஏறுவதையும், இறங்குவதையும் தெளிவாகப் பார்க்க முடிகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Saturday, January 28, 2012

கோடம்பாக்கம்

 

வானவீதிக்கு அடுத்தபடியாக நட்சத்திரங்கள் அதிகம் வலம் வரும் இடம் கோடம்பாக்க வீதிகள். தென்னிந்தியாவின் ஹாலிவுட் எனப் புகழப்படும் கோலிவுட்டின் கதை என்ன? தமிழகத்தின் கனவுத் தொழிற்சாலையாக கோடம்பாக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்?

முதலில் கோடம்பாக்கம் என்ற பெயர் எப்படி வந்தது என்று பார்ப்போம்? இதற்கு இரண்டு கதைகள் சொல்லப்படுகின்றன. ஒன்று வரலாற்று ரீதியானது, மற்றொன்று புராண ரீதியானது. ஆங்கிலேயர்கள் ஜார்ஜ் கோட்டையில் குடியேறிய பிறகு, அருகில் இருக்கும் கிராமங்களை வாங்கி மெட்ராஸ் என்ற பகுதியை விஸ்தரிக்கும் முயற்சியில் இறங்கினர். அப்போது இங்கு நிறைய நிலப் பகுதிகள் கர்நாடக நவாப்புகளின் ஆதிக்கத்தில் இருந்தன. அப்படிப்பட்ட ஒரு பகுதிதான் கோடம்பாக்கம்.

அந்தக் காலத்தில் ஆற்காடு நவாப்பின் குதிரை லாயங்கள் இங்கிருந்திருக்கின்றன. காட்டுப் பகுதியாக இருந்த கோடம்பாக்கம், நவாப்பின் குதிரைகளுக்கு நல்ல மேய்ச்சல் நிலமாக இருந்திருக்கிறது. இதனால் உருது மொழியில் 'கோடா பாக்' அதாவது குதிரைகளின் தோட்டம் என்று இதனை அழைத்திருக்கிறார்கள். அதுவே பின்னர் மருவி கோடம்பாக்கம் ஆகிவிட்டது.

இப்போது அடுத்த கதைக்கு வருவோம். நவாப்புகள் எல்லாம் வருவதற்கு முன்பே இந்த பகுதியில் மக்கள் வசித்திருக்கிறார்கள். இதற்கு சுமார் 2 ஆயிரம் ஆண்டுகால வரலாறு இருக்கிறது. தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியான இது, அந்தக் காலத்தில் புலியூர் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. புலிகள் நிறைந்த காட்டுப் பகுதி என்பதால் இந்த பெயர் வந்திருக்கலாம்.

இங்கு வியாக்ரபுரீஸ்வரர் அல்லது வேங்கீசர் ஆலயம் என்ற பழைய சிவாலயம் இருக்கிறது. வேங்கை பூசித்த ஈசர் என்பதால் வேங்கீசர் என்று கூறப்படுகிறது. சரி, இதற்கும் கோடம்பாக்கம் பெயருக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள்.

இந்த வேங்கீசர் ஆலயத்தில் கார்கோடகன் என்ற பாம்பின் சிலைகள் இருக்கின்றன. இந்து புராணங்களில் வரும் இந்த கார்கோடகன் இந்த பகுதியில் சிவபெருமானைப் பூஜித்ததாகக் கூறப்படுகிறது. அதனால் இந்த பகுதி கார்கோடகன் பாக்கம் (பாக்கம் என்றால் ஊர்) என்று அழைக்கப்பட்டு, பின்னர் கோடம்பாக்கம் ஆகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் கோடம்பாக்கம் கனவுகள் தயாரிக்கும் பகுதியாக ரசவாதம் பெற்றது. சினிமா கண்டுபிடிக்கப்பட்டு சில ஆண்டுகள் ஆன பிறகும் மெட்ராசில் முறையான ஸ்டூடியோக்கள் எதுவும் இல்லை, பம்பாய் அல்லது கல்கத்தாவிற்குதான் செல்ல வேண்டும். தென்னிந்தியாவின் முதல் ஸ்டூடியோவான ஸ்ரீனிவாசா சினிடோன் 1934ஆம் ஆண்டு முளைத்தது. ஆனால் அது ஆரம்பிக்கப்பட்ட இடம், கோடம்பாக்கம் அல்ல கீழ்ப்பாக்கம். நாராயணன் என்பவர் தொடங்கிய இந்த ஸ்டூடியோவில் தான், தமிழின் முதல் பேசும் படமான ஸ்ரீனிவாச கல்யாணம் எடுக்கப்பட்டது.

ஏவி மெய்யப்ப செட்டியார் கூட 1946இல் முதலில் காரைக்குடியில் தான் ஸ்டூடியோ தொடங்கினார். இரண்டாம் உலகப் போர் காலத்தில் சென்னையில் கடுமையான மின் தட்டுப்பாடு நிலவியதால், சொந்த ஊரில் ஸ்டூடியோ தொடங்கினார். பின்னர் 1948இல் இப்போதிருக்கும் இடத்திற்கு ஏவிஎம் இடம்பெயர்ந்தது. பி.என். ரெட்டி தொடங்கிய வாகினி ஸ்டூடியோவும் அருகில்தான் இருக்கிறது.

மெய்யப்ப செட்டியாரும், பி.என். ரெட்டியும் கோடம்பாக்கத்தை தேர்வு செய்ததற்கு என்ன காரணம் தெரியுமா? ஸ்டூடியோ என்றால் பிரம்மாண்டமான செட்டுகள், லேப் என விஸ்தாரமான இடம் வேண்டும். கோடம்பாக்கம் என்ற காட்டுப் பகுதி அதற்கு மிகவும் ஏற்றதாக இருந்தது. இதனை அடுத்து நிறைய ஸ்டூடியோக்கள் கோடம்பாக்கத்தில் உருவாகின. சினிமா உலகின் தவிர்க்க முடியாத அங்கமாக கோடம்பாக்கம் மாறியது.

தென்னிந்திய படங்கள் அனைத்துமே மெட்ராசில் மட்டுமே எடுக்கப்பட்ட காலங்கள் இருக்கின்றன. அப்பொழுதெல்லாம் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் மலையாள நட்சத்திரங்களும் கோடம்பாக்க வீதிகளில் வலம் வந்து கொண்டிருப்பார்கள். பாரதிராஜாவின் 16 வயதினிலே வரும்வரை, கோடம்பாக்க செட்களில் தான் தமிழ் சினிமா குடியிருந்தது.

கோடம்பாக்கத்தின் மற்றொரு சினிமா அடையாளம், இங்கிருந்த லிபர்டி திரையரங்கம். சென்னையின் பழைய தியேட்டர்களில் ஒன்றான இதில், திரை நட்சத்திரங்கள் பலர் ரசிகர்களுடன் அமர்ந்து தங்களின் படங்களைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள். எத்தனையோ உதவி இயக்குநர்கள் இங்கு படங்களைப் பார்த்து தங்களின் சினிமா கனவுகளுக்கு உரம் போட்டிருக்கிறார்கள். இப்படி கனவு வளர்த்த கட்டிடம் இன்று இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டுவிட்டது.

மொத்தத்தில் சினிமாவும் கோடம்பாக்கமும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல பின்னிப் பிணைந்திருக்கின்றன. எனவேதான் ஆஸ்கர் நாயகன் ரஹ்மான் முதல் சினிமாவில் கால்பதிக்கத் துடிக்கும் இளைஞன் வரை பலரின் முகவரியாக இன்றும் கோடம்பாக்கம் திகழ்கிறது.

நன்றி - தினத்தந்தி

 

* கோடம்பாக்கத்தில் இன்றும் புலியூர் என்ற பகுதி இருக்கிறது.

* 1921 வரை கோடம்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டத்தில்தான் இருந்தது.

* 1937இல் மகாத்மா காந்தி கோடம்பாக்கம் ஹரிஜன தொழிற்பள்ளியில் உரையாற்ற வந்திருக்கிறார்

* இங்கிருக்கும் மீனாட்சி மகளிர் கல்லூரி சர்வதேச மகளிர் ஆண்டான 1975இல் தொடங்கப்பட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Saturday, January 21, 2012

பாரிமுனை

 

மெட்ராசுக்கும் பாரீசுக்கும் என்ன தொடர்பு? பிரெஞ்சுக்காரர்களுடன் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருந்த பிரிட்டீஷார் தங்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பகுதிக்கு பிரான்சின் தலைநகரத்தின் பெயர் வர எப்படி அனுமதித்தார்கள்? சென்னையின் மையப் பகுதியான பாரீஸ் கார்னர் என்று அழைக்கப்படும் பாரிமுனையைக் கடக்கும்போது இப்படி ஒரு கேள்வி உங்களுக்குள் எழலாம். இந்த கேள்விக்கான விடையை நான் தேடிய போது, சற்றும் எதிர்பாராத ஒரு பதில் கிடைத்தது.

பாரீசுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், ஒரு சுவாரஸ்யமான மனிதர்தான் இந்த பெயர் வரக் காரணம் என்றும் தெரிய வந்தது. தாமஸ் பாரி என்ற அந்த மனிதர், இங்கிலாந்தின் வேல்ஸ் நகரில் இருந்து இந்தியாவில் வியாபாரம் செய்வதற்காக 1788ஆம் ஆண்டு மெட்ராசுக்கு வந்தார். கிழக்கு இந்திய கம்பெனியாரிடம் அனுமதி பெற்று தனி வர்த்தகராக தம்மை பதிவு செய்துகொண்ட பாரி, பல்வேறு பொருட்களின் விற்பனையில் ஈடுபட்டார். ஆனால் அவரின் முக்கியமான வியாபாரம் வட்டிக்குப் பணம் கொடுப்பது.

வட்டி என்றால் சாதாரண வட்டி அல்ல 12.5% வட்டி, இதுதவிர 1% கமிஷன் வேறு. ஆனாலும் அவரிடம் வட்டிக்கு வாங்க நிறையப் பேர் இருந்தார்கள். திப்பு சுல்தான் போன்றவர்களோடு சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் என்பதால், நிறைய இளவரசர்களும், கிழக்கிந்திய அதிகாரிகளும் போர்த் தேவைகளுக்காக பாரியிடம் கை ஏந்தினார்கள். பாரியின் வியாபாரமும் ஓஹோவென்று இருந்தது.

இதனால் 1792இல் பாரி சொந்த அலுவலகம் ஒன்றைத் தொடங்கினார். இந்த அலுவலகம் பல்வேறு துணிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. திடீரென வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட, அனைத்தையும் விட்டுவிட்டு 1796இல் கர்நாடக நவாப்பின் கருவூல அதிகாரியாக சிறிது காலம் பணிபுரிந்தார். பின்னர் 1800இல் கிளைவ் பிரபு ஆளுநராக வந்தபிறகு மெட்ராசில் வர்த்தகர்களின் நிலை மாறியது. கிழக்கிந்திய கம்பெனிக்கு தொடர்பில்லாத தனி வர்த்தகர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறி, கோட்டையைவிட்டு வெளியேற்றினார் கிளைவ். அப்போதுதான் தாமஸ் பாரி, இப்போது பாரீஸ் கார்னர் என்று அழைக்கப்படும் பகுதிக்கு வந்தார்.

ஒரு பக்கம் சீற்றம் காட்டும் கடல், மறுபுறம் உள்ளூர் மக்கள் தங்கியிருக்கும் கருப்பர் நகரம் என அதிகம் பேர் விரும்பாத இடமாக அது இருந்தது. அங்கு வாலாஜா நவாப்பிற்கு சொந்தமான வீடு ஒன்று இருந்தது. அதைத்தான் வாங்கி அலுவலகமாக மாற்றினார் பாரி. 1817ஆம் ஆண்டிலேயே அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைக்கும் அடுக்குமாடிக் கட்டடமாக அது இருந்தது.

மெல்ல வியாபாரத்தை விஸ்தரித்துக் கொண்டிருந்த பாரி, நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்தார். இந்த சூழலில் தான் அவருக்கு பார்ட்னராக வந்து சேர்ந்தார் ஜான் வில்லியம் டேர் (John William Dare). பாரி கட்டடத்தின் பெயர் 'டேர் ஹவுஸ்' என்று இருப்பதற்கு இந்த டேர்தான் காரணம். கடல் மற்றும் கப்பல்கள் பற்றிய அறிவு டேருக்கு நிறைய இருந்ததால், பாரியும் இவரும் சேர்ந்து கப்பல் தொழிலில் நங்கூரம் பாய்ச்சி பணம் பார்த்தனர்.

இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக 1823இல் இங்கிலாந்து திரும்ப முடிவெடுத்தார் பாரி. அவரின் வழியனுப்பு விழாவுக்காக உள்ளூர் வர்த்தகர்கள், பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு தங்க டீ கப்பை தயார் செய்தனர். ஆனால் பாரி திடீரென தனது பயணத்தை ரத்து செய்துவிட்டதால், அவர் ஊருக்கு போகாவிட்டாலும் தயார் செய்த கப் வீணாகிவிடக் கூடாது என்று அந்த கோப்பையை 1824 பிப்ரவரி மாதம் அவருக்கு பொதுமக்கள் வழங்கினர். இந்தளவு மக்கள் மனதில் இடம்பிடித்ததற்கு பாரியின் மனிதாபிமானமும், ஏழைகளுக்கு அவர் செய்த உதவிகளும்தான் காரணம்.

இங்கிலாந்து பயணத்தை ரத்து செய்த பாரியால், தனது பரலோகப் பயணத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. விடைபெறும் கோப்பையைப் பெற்றுக் கொண்ட அதே 1824ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தனது தொழிற்சாலை ஒன்றை ஆய்வு செய்யப் போனபோது காலரா வந்து உயிரிழந்தார் பாரி.

'உல்லாசமாக' வாழ்க்கை நடத்திய தாமஸ் பாரி இரக்க மனசுக்காரரும் கூட. அவர் எழுதி வைத்த உயிலே, இதற்கு அத்தாட்சி. தனது உறவினர்களுக்கு மட்டுமின்றி வேலைக்காரர்களுக்கும் சொத்தில் பங்கு கொடுத்தவர் பாரி. தன் வீட்டில் வளர்க்கப்பட்ட கண்பார்வையற்ற மேரி என்ற பெண்ணிற்கு மாதம் 11 ரூபாயும், செல்லா என்ற வேலைக்காரப் பெண்மணிக்கு மாதம் தலா 5 ரூபாயும், மற்ற வேலைக்காரர்களுக்கு மூன்ற மாத ஊதியமும் வழங்க வேண்டும் என்று தமது உயிலில் எழுதியிருந்தார். தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த மேரி ஆன் என்ற பெண்மணிக்கு மாதம் 5 ரூபாயும், உயில் எழுதப்பட்ட தேதியில் இருந்து 9 மாதத்திற்குள் அவருக்கு பிறக்கும் குழந்தைக்கு 50 ரூபாயும் அளிக்கப்பட வேண்டும் என்றும் பாரி உயிலில் குறிப்பிட்டிருந்தார்.

பாரியின் மறைவுக்கு பின்னர் அவரது தொழில்களை டேர் பார்த்துக் கொண்டார். 1838இல் குதிரை மீதிருந்து கீழே விழுந்ததில் அடிபட்டு அவரும் விண்ணுலகம் போய்ச் சேர்ந்தார். ஆனால் இரு நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், அந்த இரண்டு வர்த்தகர்களின் பெயர்கள் மட்டும் இன்னும் மறையவில்லை. எங்கிருந்தோ வந்து, சென்னை வீதிகளில் அலைந்து திரிந்து, மெட்ராஸ் என்ற மாநகரின் வரலாற்றில் இடம்பிடித்துவிட்ட அந்த இருவரையும், பாரிமுனையும், அங்கிருக்கும் டேர் ஹவுசும் இன்றும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன.

நன்றி - தினத்தந்தி

* தாமஸ் பாரியின் உடல் கடலூரில் அவர் அடிக்கடி சென்று வழிபட்ட தேவாலயத்தில் புதைக்கப்பட்டிருக்கிறது

* முருகப்பா குழுமத்தின் கட்டுப்பாட்டில் பாரி நிறுவனம் இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

* அமெரிக்க தூதரகமும் சிறிது காலம் இந்த பாரி கட்டடத்தில் இருந்து இயங்கி இருக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Saturday, January 14, 2012

லஸ் தேவாலயம்

 

கிழக்கிந்திய கம்பெனியார் சென்னையில் கால்பதித்து மெட்ராஸ் என்ற நகரம் உருவாவதற்கு முன்பே இப்பகுதியில் கட்டப்பட்டதுதான் லஸ் தேவாலயம். ஆங்கிலேயர்களே வராத காலத்தில் இதனை யார் கட்டினார்கள்? எதற்காக இங்கு கட்டினார்கள்? இந்த கேள்விகளுக்கான விடையை அறிந்துகொள்ள நாம் சுமார் 500 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும்.

ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் பல நூற்றாண்டுகளாக கடல் வழி வணிகம் நடைபெற்று வந்தாலும், அந்த கப்பல்கள் எல்லாம் பல நாடுகளை சுற்றிக் கொண்டே வர வேண்டியிருந்தது. எனவே இந்தியாவிற்கான சுருக்கமான நேரடி கடல் வழியைக் கண்டறியும் முயற்சிகள் 15ஆம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்டன. ஸ்பானியரும், போர்த்துகீசியரும் இதில் அதிக ஆர்வம் காட்டினர். கடைசியில் ஜெயித்தது போர்த்துகீசியர்கள்தான். ஆம், 1498 மே மாதம் 17ஆம் தேதி, போர்த்துகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா வெற்றிகரமாக கேரளத்தின் கோழிக்கோட்டை வந்தடைந்தார்.

அவர் கண்டுபிடித்த வழியில் பயணித்து, போர்ச்சுகலின் லிஸ்பன் நகரில் இருந்து 8 பாதிரிமார்கள் 1500இல் கோழிக்கோடு வந்தனர். அவர்களில் மூன்று பேர் கொல்லப்பட்டுவிட்ட நிலையில், எஞ்சியவர்கள் கொச்சின் சென்று மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சில ஆண்டுகள் கழித்து, மேலும் தெற்கு நோக்கி அவர்கள் பயணித்தபோது கடும் கடல்சீற்றம் காரணமாக அவர்களின் கப்பல் அலைக்கழிக்கப்பட்டது.

தங்களை பத்திரமாக கரை சேர்க்குமாறு அவர்கள் மேரி மாதாவிடம் வேண்டிக் கொண்டபோது, தூரத்தில் வானில் ஒரு ஒளி தோன்றியதாகக் கூறப்படுகிறது. அதனைப் பின்பற்றி கப்பலைச் செலுத்திய அவர்கள் ஒரு நிலப்பகுதியை அடைந்தனர். அந்த ஒளியை மேலும் பின்தொடர்ந்து சென்றபோது, அது ஒரு காட்டுப் பகுதியில் திடீரென மறைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

தங்களுக்கு வழிகாட்டி பத்திரமாக கரைசேர்த்த மேரி மாதாவிற்கு நன்றி பாராட்டும்விதமாக பாதிரிமார்கள், அந்த காட்டுப் பகுதியிலேயே ஒரு தேவாலயத்தை எழுப்பினர். அதுதான் லஸ் தேவாலயம். லஸ் என்றால் போர்த்துகீசிய மொழியில் ஒளி என்று அர்த்தம். அதனால்தான் இதனை பிரகாச மாதா தேவாலயம் (Church of Our Lady of Light) என்று அழைக்கிறார்கள். ஒரு காலத்தில், இது அடர்த்தியான காட்டுப் பகுதியாக இருந்ததால், உள்ளூர் மக்கள் இதனை காட்டுக் கோவில் என்றும் அழைத்தார்கள்.

கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக முதல் நூற்றாண்டில் இந்தியா வந்த புனித தோமையாருக்கும் இந்த பகுதிக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மலபார் மற்றும் சோழ மண்டல கடற்கரைப் பகுதிகளில் தமது பிரச்சாரத்தை துவங்கிய செயிண்ட் தாமஸ், சைதாப்பேட்டைக்கு அருகில் உள்ள சின்னமலைக்கு செல்லும் முன்பாக இன்றைய லஸ் பகுதியில் இருந்த மாந்தோப்பில் ஓய்வெடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது.

தற்போது காணப்படும் லஸ் தேவாலயம் 1516இல் கட்டப்பட்டது. சென்னையின் முதல் தேவாலயமான இது, 16ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய பாணியில், அதாவது கூர்மாட (Gothic) அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக இத்தாலியில் 16ஆம் நூற்றாண்டில் மிகவும் பிரபலமாக இருந்த பாரோக் (Baroque architecture) கட்டட அமைப்பில் இந்த தேவாலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான முறையில் இருந்து வேறுபட்டு பல புதுமைகளுக்கு இடம் அளிப்பதால் இந்த கட்டட அமைப்பு அக்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த சிறிய தேவாலயத்தின் உள்ளே மேரி மாதாவின் சிலைக்கு மேல் இருக்கும் மாடத்தின் உட்புறத்தில் தங்க நிறத்தில் அழகிய பூ வேலைப்பாடுகள் கண்ணைப் பறிக்கின்றன. அதேபோல இந்த தேவாலயத்தில் இருக்கும் சிலைகளை சுற்றியும் நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு தரையில் பதிக்கப்பட்டிருக்கும் கற்கள் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்று கூறப்படுகிறது.

இந்த தேவாலயம் இருமுறை கடும் சேதங்களை சந்தித்தது. 1662 - 1673 காலகட்டத்தில் கோல்கொண்டா படைகள் இதனை சேதப்படுத்தின. அடுத்து அதே வேலையை 1780இல் ஹைதர் அலியின் படைகள் செய்தன. அவற்றை எல்லாம் மீறி சுமார் 500 ஆண்டுகால வரலாற்றை சுமந்தபடி இன்றும் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது லஸ் தேவாலயம்.

நன்றி - தினத்தந்தி

* 1516இல் பெத்ரோ தெ அடோங்கியா என்ற பாதிரியாரால் கட்டப்பட்டது என்ற செய்தியுடன் பழைய ஐரோப்பிய கல்வெட்டு ஒன்று இங்கிருக்கிறது. இதுவே இந்த தேவாலயத்தின் காலத்திற்கான சாட்சியாக கருதப்படுகிறது.

* 1547 முதல் 1582 வரை இந்த தேவாலயத்தில் மறுகட்டுமானப் பணிகள் நடைபெற்றன.

* மைலாப்பூரின் லஸ் கார்னர் என்ற பெயருக்கு இந்த தேவாலயமே காரணம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Monday, January 9, 2012

வானிலை ஆய்வு மையம்

 

'அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் அனேக இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளது...' என மழைக் காலங்களில் தினமும் நம் கவனத்தைக் கவரும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வயது என்ன இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதிகபட்சம் 100 ஆண்டுகள் இருக்கலாம் என்று நினைத்தால் அது தவறு.

சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலை திருப்பத்தில் சற்றே உள்ளடங்கி இருக்கும் இந்த ஆய்வு மையம் சுமார் 220 ஆண்டுகள் பழமையானது. ஐரோப்பாவிற்கு வெளியே அமைக்கப்பட்ட முதல் நவீன வானியல் ஆய்வகம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. இதற்கான ஆரம்பப் புள்ளியை வைத்தவர் வில்லியம் பெட்ரீ (William Petrie) என்ற கிழக்கிந்திய கம்பெனி ஊழியர்.

வில்லியம் பெட்ரீ வான சாஸ்திரத்தில் தனக்கிருந்த அதீத ஆர்வம் காரணமாக, 1787இல் தன் நுங்கம்பாக்கம் வீட்டிலேயே சொந்த செலவில் ஒரு ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவினார். ஓய்வு நேரத்தை அங்கேயே செலவிட்டார். அப்போது அவரிடம் மூன்று அங்குல தொலைநோக்கிகள் இரண்டு, வானியல் கடிகாரங்கள் இரண்டு, நட்சத்திரங்களின் இடங்களை கண்காணிக்க உதவும் கருவி ஒன்று என வெகுசில உபகரணங்களே இருந்தன. இவற்றைக் கொண்டு கிழக்கிந்திய கம்பெனியின் கப்பல்களுக்கு அவர் வழிகாட்டி உதவினார்.

ஒருமுறை பெட்ரீ நீண்ட விடுமுறையில் இங்கிலாந்து சென்றபோது, தனது உபகரணங்களை உபயோகிக்க அரசுக்கு அனுமதி அளித்தார். பின்னர் அவர் மெட்ராஸ் திரும்பியபோது, அரசே ஒரு வானிலை ஆய்வுக் கூடத்தை நிறுவி அதை நிர்வகிக்கும் பொறுப்பை பெட்ரீயிடம் கொடுத்தது. மெட்ராஸ் அப்சர்வேட்டரி (Madras Observatory) எனப் பெயரிடப்பட்ட அந்த ஆய்வு மையத்தை அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் சர் சார்லஸ் 1792இல் தொடங்கி வைத்தார்.

மைக்கேல் டோப்பிங் ஆர்ச் (Micheal Topping Arch) என்ற வானியல் ஆய்வாளர் இதனை வடிவமைக்க பெரிதும் உதவினார். வானிலை ஆய்வுக்கு தேவையான பல்வேறு உபகரணங்களையும் அவர் தருவித்தார். இதன் நினைவாக இங்கிருக்கும் 15 அடி உயர கிரானைட் தூணில் அவரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த தூணில்தான் நட்சத்திரங்களை கண்காணிக்கும் தொலைநோக்கிக் கருவி முதன்முதலில் பொருத்தப்பட்டிருந்தது.

'ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் வருபவர்களும் அறிந்துகொள்வதற்காக...' என்ற குறிப்புடன் இந்த தூணில் லத்தீன், தமிழ், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளில் இதுபற்றிய தகவல் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த தூண் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

1796இல் தான் இங்கு முதன்முறையாக வானியல் நிகழ்வுகளை முறையாகப் பதிவு செய்யும் வழக்கம் தொடங்கியது. கோல்டிங்ஹாம் (Goldingham) என்பவர்தான் இவ்வாறு பதிவு செய்த முதல் வானியல் ஆய்வாளர். இவரைத் தொடர்ந்து நிறைய புகழ்பெற்ற ஆய்வாளர்கள் இங்கு பணியாற்றி உள்ளனர். இவர்களில் முக்கியமானவர் போக்சன் (Pogson). சுமார் 30 ஆண்டுகள், இவர் மெட்ராஸ் அப்சர்வேட்டரியின் ஆய்வாளராக இருந்தார். இவரது மனைவியும், மகளும் கூட இவருடைய பணியில் உதவியாக இருந்தனர்.

19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் தெரிந்த முழு சூரிய கிரகணங்களை கண்காணித்து பதிவு செய்ததில் இந்த ஆய்வு மையம் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. 1867இல் இந்த மையத்தை மூடுவது பற்றி லண்டனில் விவாதிக்கப்பட்டது. அப்போது தென் பகுதியில் பிரிட்டாஷார் வேறு சில ஆய்வகங்களைத் தொடங்கி இருந்ததுதான் காரணம். மெட்ராஸ் அபசர்வேட்டரி நிறைய விஷயங்களை சேகரித்து வைத்திருந்ததால், புதிய விஷயங்களை சேகரிப்பதை நிறுத்திவிட்டு, கையில் இருக்கும் விஷயங்களை பதிப்பிப்பதில் கவனம் செலுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில்தான் 20 அங்குல தொலைநோக்கி ஒன்றை தமிழக மலைகளில் ஏதாவது ஒன்றில் பொருத்தி வானியல் நிகழ்வுகளை ஆராயலாம் என போக்சன் பரிந்துரைத்தார். அதன் அடிப்படையில் நீலகிரி மற்றும் பழனி மலைகளில் இடம்பார்க்கும் பணி நடைபெற்றது. இதன் பயனாகத்தான் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் கொடைக்கானல் அப்சர்வேட்டரி கட்டப்பட்டது. இதன் பிறகு, மெட்ராஸ் அப்சர்வேட்டரியின் பணிகள் அங்கு இடம்மாறின. இதனையடுத்து இந்த மையத்தின் முக்கியத்துவம் மெல்ல குறையத் தொடங்கியது.

இந்த நிலையில்தான் 1945இல் சென்னையில் மண்டல வானிலை ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி, லட்சத்தீவு ஆகியவற்றிற்கான வானிலை அறிக்கைகளை இந்த மையம் தற்போது வெளியிட்டு வருகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் ஒரு தனி மனிதனுக்கு உண்டான ஆர்வம், பெருமழை, புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்றவற்றில் இருந்து இன்று நம்மை தற்காத்துக் கொள்ள உதவுகிறது.

நன்றி - தினத்தந்தி

 

* வில்லியம் பெட்ரீ 1807இல் மூன்று மாத காலம் மெட்ராசின் ஆளுநராக இருந்திருக்கிறார்.

* இந்த ஆய்வு மையத்தில் மணிக்கொரு முறை வானியல் நிகழ்வுகள் பதிவு செய்யப்படும் முறை 1840இல் தொடங்கியது.

* தீர்க்க ரேகை போன்ற விஷயங்களில் மெட்ராஸ் அப்சர்வேட்டரி அளித்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்திய வரைபடம் உருவாக்கப்பட்டிருக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Saturday, June 30, 2012

ஏழு கிணறு

 

சென்னை மக்கள் குடங்களை தூக்கிக் கொண்டு தண்ணீர் லாரிகளை துரத்தும் காட்சிகளை நாம் நிறையவே பார்த்திருக்கிறோம். இந்த பிரச்னை இன்று நேற்று உருவானதல்ல, மெட்ராஸ் என்ற நகரம் உருப்பெறத் தொடங்கிய காலத்திலேயே தண்ணீர் பிரச்னையும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.
 
1639இல் சென்னையில் காலடி வைத்த கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் வங்கக் கடலுக்கு அருகில் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினர். கோட்டைக்குள்தான் கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரிகளும், ஊழியர்களும் ஆரம்ப நாட்களில் வசித்தனர். இங்கு இவர்கள் சந்தித்த பிரச்னைகளில் முக்கியமானது குடிநீர். கடலுக்கு அருகில் இருப்பதால், ஜார்ஜ் கோட்டையில் எங்கு தோண்டினாலும் உப்பு நீர்தான் கிடைத்தது. குளுகுளு இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களை, மெட்ராஸ் வெயில் ஒருபுறம் வாட்டி வதைக்க, தாகம் தணிக்க நல்ல தண்ணீர் கிடைக்காதது மற்றொருபுறம் பாடாய்படுத்தியது.
 
அந்த காலத்தில் கோட்டைக்கு வெளியில் இருந்த சென்னைவாசிகள் குளம், குட்டைகளில் இருந்தும், கிணறுகளில் இருந்தும் நீர் இறைத்துக் குடித்தனர். ஆங்கிலேயர்களும் ஆரம்பத்தில் இதனையே பயன்படுத்தினர். அருகில் உள்ள பெத்தநாயக்கன் பேட்டையிலிருந்து மாட்டு வண்டிகளிலும், தலை சுமையாகவும் கோட்டைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. ஆனால் இவ்வாறு தண்ணீர் கொண்டு வருவதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருந்ததால் இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
 
குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து, ALL IS WELL என்று சொல்ல வேண்டுமானால், நமக்கென தேவை ஒரு WELL என்று யோசனை சொன்னார் கேப்டன் பேகர் என்ற ஆங்கிலேயப் பொறியாளர். அவரது யோசனையின் பேரில்தான் இன்றைய மின்ட் பகுதியில் ஏழு கிணறுகள் தோண்டப்பட்டன. உண்மையில் மொத்தம் பத்து கிணறுகள் வெட்டப்பட்டன. ஆனால் ஏழு கிணறுகளில்தான் ஊற்று நன்றாக இருந்ததால், அந்த பெயரே நிலைத்துவிட்டது.
seven+wells.JPG

கோட்டையிலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள இந்த கிணறுகளில் இருந்து ஏற்றம் மூலம் நீர் இறைக்கப்பட்டு, குழாய் வழியாக கோட்டைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. 1772இல் செயல்படுத்தப்பட்ட இதுதான் இந்தியாவிலேயே குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்ட முதல் திட்டம். இந்த கிணறுகளுக்கு காப்பாளராக ஜான் நிக்கோலஸ் என்பவர் நியமிக்கப்பட்டார்.
 
இவர் இந்த பதவியை எப்படிப் பெற்றார் என்பது ஒரு சுவாரஸ்யமான தனிக்கதை. மெட்ராஸ் மீது ஹைதர் அலி  படையெடுத்து வந்தபோது, கோட்டைக்கு குடிநீர் வழங்கும் கிணறுகளில் விஷம் கலக்க முயற்சிக்கப்பட்டதாம். அப்போது கிழக்கிந்திய படையில் பணிபுரிந்த ஜான், அவ்வாறு விஷம் கலக்க முயன்ற ஹைதர் அலியின் போர் வீரனை வீழ்த்தி அவனிடம் இருந்த குத்துவாளை பறித்ததாக கூறப்படுகிறது. அந்த குத்துவாள் தற்போதும் ஜான் குடும்பத்தினர் வசம் இருக்கிறது. இவ்வாறு கோட்டைக்கான குடிநீர் ஆதாரத்தை காப்பாற்றியதால், ஏழு கிணறுகளை பாதுகாக்கும் உரிமை 125 ஆண்டுகளுக்கு ஜான் குடும்பத்தினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
 
இதற்காக ஜானுக்கு மாதம் 10 பக்கோடா ஊதியத்தோடு, வாடகை இல்லாமல் தங்கிக்கொள்ள ஒரு வீடும், ஒரு குதிரையும், பல்லக்கு ஒன்றும் வழங்கப்பட்டிருக்கிறது. இவரது மறைவிற்கு பிறகு இவரது சந்ததியினர் அடுத்தடுத்து இந்த பணியை செவ்வனே செய்து வந்திருக்கின்றனர். 1925இல் பொதுப்பணித் துறை இந்த கிணறுகளை வசப்படுத்தியபோது, இதன் காப்பாளராக இருந்த எவ்லின் நிக்கோலஸ் (Evelyn Nicholas), பனித்த கண்களோடும், கனத்த இதயத்தோடும் தன் குழந்தைகளை பிரிவதைப் போல, இந்த கிணறுகளைப் பிரிந்து சென்றிருக்கிறார்.
Evelyn+and+the+family-Sevene+Wells+drive
 
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்த கிணறுகளோடு வாழ்ந்து மறைந்த நிக்கோலஸ் குடும்பத்தினரின் கல்லறைகள் சென்னையில்தான் இருக்கின்றன. ராயபுரம் செயின்ட் ரோக்ஸ் (St. Roque’s cemetery) கல்லறைக்கு சென்றால், இந்த குடும்பத்தினர் அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். இப்படி நிக்கோலஸ்களால் நிறைந்திருப்பதால், இந்த பகுதியை நிக்கோலஸ் சதுக்கம் என்றும் உள்ளூர்வாசிகள் அழைக்கிறார்கள்.
 
இவ்வாறு 1772இல் தொடங்கப்பட்ட ஏழு கிணறு திட்டம், கோட்டையில் இருந்த ஆங்கிலேயர்கள் மட்டுமின்றி, வெளியில் இருந்த பூர்வகுடிகளின் தாகத்தையும் தீர்த்து வைத்தது. இந்த கிணறுகளில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 1,40,000 கேலன் (ஒரு கேலன் = 3.79 லிட்டர்) தண்ணீர் இறைத்திருக்கிறார்கள். புழல் நீர்த்தேக்கம் கட்டப்பட்டு, அது சென்னையின் குடிநீர் ஆதாரமாக மாறும் வரை, இந்த ஏழு கிணறுகள்தான் மெட்ராஸ் என்ற மாநகரின் தாகம் தீர்த்த அமுத சுரபியாக விளங்கி இருக்கிறது. ராணுவ குடியிருப்பு பகுதிக்குள் இருக்கும் இந்த கிணறுகளில் சில, இப்போதும் தொடர்ந்து தண்ணீர் வழங்குகின்றன. ஒரு நீரேற்று நிலையமும் இங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
 
இனி இதில் விஷம் கலக்க ஹைதர் அலியின் படை இல்லை என்ற போதும், இந்த கிணறுகளை கூரை போட்டு மூடி இருப்பதோடு, சிறிய கதவுகளை அமைத்து பூட்டியும் வைத்திருக்கிறார்கள். பூட்டப்பட்ட இந்த கிணறுகளுக்குள் தண்ணீரோடு, 200 ஆண்டுகளுக்கும் மேலான மெட்ராசின் நினைவுகளும் தளும்பிக் கொண்டே இருக்கின்றன.
 
நன்றி - தினத்தந்தி
   
 ஏழு கிணறு வெட்டிய கேப்டன் பேகரின் நினைவாக அவரது பெயர் பிராட்வே பகுதியில் ஒரு தெருவுக்கு வைக்கப்பட்டுள்ளது.
 
* இந்த கிணறுகள் இருப்பதால், தங்கசாலையை ஒட்டி இருக்கும் இந்த பகுதியே ஏழு கிணறு பகுதி என்று அழைக்கப்படுகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Saturday, June 23, 2012

எல்லீசன் என்ற தமிழன்!

 

சென்னை மாநகரில் நிறைய தெருக்கள் இன்றும் ஆங்கிலேயப் பெயர்களைத் தாங்கி நிற்கின்றன. அந்த வரிசையில் சாந்தி திரையரங்கிற்கு பின்புறம் திருவல்லிக்கேணியில் இருந்து அண்ணாசாலை வரை நீளும் சாலைக்கு எல்லீஸ் என்பவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. யார் இந்த எல்லீஸ் என்று வரலாற்றுப் பக்கங்களில் தேடியபோது, ஒரு சுவாரஸ்யமான மனிதரின் கதை கிடைத்தது.
 
கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றுவதற்காக இங்கிலாந்தில் இருந்து வந்த எத்தனையோ பேரில் ஒருவர்தான் ஃப்ரான்சிஸ் வைட் எல்லீஸ் (Francis Whyte Ellis). 1796இல் இந்தியா வந்த அவர்பல்வேறு பொறுப்புகளை வகித்து, படிப்படியாக முன்னேறி 1810இல் மெட்ராஸ் மாகாணத்தின் ஆளுநரானார்.
 
இங்கிலீஷ் பேசிப் பழகிய எல்லீசுக்கு தமிழ் மொழியைக் கேட்டதும் காதில் தேன் பாய்ந்திருக்கிறது. தமிழ் மீது எக்கச்சக்கமாக காதல்வசப்பட்டுப் போன அந்த வெள்ளைக்காரர், ராமச்சந்திரக் கவிராயர் என்பவரிடம் ட்யூஷன் படிக்க ஆரம்பித்து விட்டார். விருப்பம் இருந்ததால் விறுவிறுவென தமிழ் கற்ற எல்லீஸ், செய்யுள் இயற்றும் அளவுக்கு புலமை பெற்றுவிட்டார்.
 
தமிழ் கற்ற காலத்தில் திருவள்ளுவரின் தீவிர ரசிகராகிவிட்டார் எல்லீஸ். இரண்டே இரண்டு வரிகளில் இந்த மனிதர் எவ்வளவு அரிய பெரிய கருத்துகளை எல்லாம் சொல்லிவிட்டார் என்று அதிசயித்த எல்லீஸ், இதை ஆங்கிலேயர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 1812ல் வெளியான அவரின் ஆங்கிலேய அறத்துப்பால்தான், திருக்குறளின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு. இதுபோதாதென்று பல தமிழ் நூல்களையும் படித்து, திருக்குறளுக்கு ஒரு எளிமையான விளக்கவுரையையும் எழுதினார் எல்லீஸ்.
 
தமிழ் மட்டுமின்றி பிற தென்னிந்திய மொழிகளின் முக்கியத்துவத்தையும் உணர்ந்த அவர்இங்கு பணியாற்ற வரும் ஆங்கிலேயே அதிகாரிகள் இந்த மொழிகளை அறிந்திருப்பது அவசியம் என்று வலியுறுத்தினார். இதற்காக1812இல் புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகியவற்றை கற்பிக்கும் கல்லூரி ஒன்றை தொடங்கினார்.
ellys+inscription.jpg
 
அதேசமயம் எல்லீஸ், மக்கள் பணியிலும் கவனம் செலுத்தத் தவறவில்லை. 1818-ல் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் வந்தபோது, எல்லீஸ் சென்னையில் 27 கிணறுகளை வெட்டி இருக்கிறார். அவற்றுள் ஒன்று சென்னை இராயப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயிலில் இருக்கிறது. இந்த கிணற்றில் எல்லீசின் திருப்பணி பற்றி சொல்லும் ஒரு நீண்ட பாடல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.
 
அந்த கல்வெட்டின் விவரங்களை எனக்கு விரிவாக விளக்கினார், சென்னை அருங்காட்சியக நாணயவியல் துறை காப்பாட்சியர் திரு. சுந்தரராஜன். அதில் திருக்குறள் படித்ததன் பயனாகவே 27 கிணறுகளை வெட்டியதாக எல்லீஸ் குறிப்பிட்டிருக்கிறார். அந்த கல்வெட்டில் தம்மை சென்னப் பட்டணத்து எல்லீசன்’ என்று  அறிவித்துக் கொள்கிறார் எல்லீஸ். அத்துடன், ‘நட்சத்திர யோக கரணம் பார்த்து சுபதினத்தில் இருபத்தேழு துறவு கண்டு புண்யாகவாசகம் பண்ணுவித்தேன்’ என்றும் அறிவிக்கிறார். இந்தக் கல்வெட்டு தற்சமயம் மதுரை திருமலை நாயக்கர் மஹால் தொல்லியல் துறை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
 
திருக்குறள் மீது இருந்த பற்று காரணமாக, எல்லீஸ் திருவள்ளுவர் உருவம் பொறித்த, பொன்னாலான இரட்டை வராகன் நாணயத்தை வடிவமைத்து ஒப்புதலுக்காக கல்கத்தாவிற்கு அனுப்பினார். ஆனால் பல்வேறு காரணங்களால் தாமதமானதால், அது மக்கள் புழக்கத்திற்கு வரவே இல்லை.
valluvar+coin1.jpg
 
இதனிடையே எல்லீஸ் 1819ஆம் ஆண்டு தமது 41ஆவது வயதிலேயே காலரா வந்து காலமானார். வயிற்று வலி மருந்து என்று நினைத்து தவறுதலாக எதையோ குடித்ததால் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இறந்தாலும் தமிழை அவர் பிரியவில்லை என்பதை திண்டுக்கல்லில் உள்ள அவரது கல்லறை உணர்த்துகிறது. அதில் கீழ்கண்டவாறு ஒரு செய்யுள் பொறிக்கப்பட்டுள்ளது.
 
'திருவள்ளுவப் பெயர்த் தெய்வம் செப்பிய 
அருங்குறள் நூலுள் அறப்பா லினுக்குத்
தங்குபல நூலுதா ரணங்களைப் பெய்து
இங்கிலீசு தன்னில் இணங்க மொழிபெயர்த்தோன்'.


இவ்வாறு எல்லீஸ் தனது கல்லறையிலும் தமிழை பறைசாற்றிக் கொண்டிருக்கிறார். மொத்தத்தில் எங்கேயோ, பிறந்து வளர்ந்த இந்த ஆங்கிலேயர், பிழைக்க வந்த நாட்டில் தமிழால் ஈர்க்கப்பட்டு தனது இறுதி நாட்களில் தமிழராகவே மாறிவிட்டார் என்பதே உண்மை. இந்த கதையை அறிந்தபின் எல்லீஸ் சாலையில் செல்லும்போதெல்லாம், அங்கிருக்கும் ஏதோ ஒரு  கடையில் அமர்ந்து எல்லீஸ் அமைதியாக டீ குடித்தபடி திருக்குறள் படித்துக் கொண்டு இருப்பதைப் போலவே தோன்றுகிறது.
 
நன்றி - தினத்தந்தி
 
* தமிழறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர் என்ற நூலில், தமிழர் பண்பாடுதமிழர்களின் சமய நம்பிக்கை ஆகியவற்றில் எல்லிஸுக்கு இருந்த ஆழ்ந்த ஈடுபாடு பற்றி தெரிவித்திருக்கிறார்.
 
* தமிழ்ச் சங்கம் ஒன்றை நிறுவித் தமக்குக் கிடைத்த சுவடிகளை எல்லீஸ் அச்சிட்டு வெளியிட்டார் என்று அயோத்திதாசப் பண்டிதர்குறிப்பிட்டிருக்கிறார்.
 
தமிழின் யாப்பியலைப் பற்றி எல்லீஸ் எழுதி வெளியாகாதிருந்த ஒரு நூலை, தாமசு டிரவுட்மன் என்ற ஆய்வாளர் இங்கிலாந்தில் கண்டுபிடித்துள்ளார்.
 
எல்லீசன் கல்வெட்டு
 
வாரியும் சிறுக வருபடைக் கடலோன்
ஆர்கடல் அதிர ஆர்க்கும் கப்பலோன்
மரக்கல வாழ்வில் மற்றொப் பிலாதோன்
தனிப்பெரும் கடற்குத் தானே நாயகன்
தீவுகள் பலவும் திதிபெறப் புரப்போன்
தன்னடி நிழற்குத் தானே நாயகன் 
தாயினும் இனியன் தந்தையிற் சிறந்தோன்
நயநெறி நீங்கா நாட்டார் மொழிகேட்டு
உயர்செங் கோலும் வழாமை யுள்ளோன் 
மெய்மறை யொழுக்கம் வீடுற அளிப்போன்
பிரிதன்னிய சகோத்திய விபானிய மென்று
மும்முடி தரித்து முடிவில் லாத
தீக்கனைத் தும்தனிச் சக்கர நடாத்தி
ஒருவழிப் பட்ட ஒருமை யாளன்
வீரசிங் காதனத்து வீற்றிருந் தருளிய
சோர்சென்னும் அரசற்கு 57 ஆம் ஆண்டில் 
காலமும் கருவியும் கருமமும் சூழ்ந்து
வென்றியொடு பெரும்புகழ் மேனிமேற் பெற்ற
கும்பினி யார்கீழ்ப் பட்டகனம் பொருந்திய
யூவெலயத் என்பவன் ஆண்டவனாக
சேர சோழ பாண்டி யாந்திரம் 
கலிங்க துளுவ கன்னட கேரளம் 
பணிக்கொடு துரைத்தனம் பண்ணும் நாளில்
சயங்கொண்ட தொன்டிய சாணுறு நாடெனும் 
ஆழியில் இழைத்த அழகுறு மாமணி
குணகடல் முதலா குடகடல் அளவு
நெடுநிலம் தாழ நிமிர்ந்திடு சென்னப்
பட்டணத்து எல்லீசன் என்பவன் யானே
பண்டார காரிய பாரம் சுமக்கையில் 
புலவர்கள் பெருமான் மயிலையம் பதியான்
தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்
திருக்குறள் தன்னில் திருவுளம் பற்றி 
'இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு'
என்பதின் பொருளை என்னுள் ஆய்ந்து
ஸ்வஸ்திஸ்ரீ சாலி வாகன சகாப்தம் 
வருஷம் 1740க்குச் செல்லாநின்ற
இங்கிலீசு 1818ம் ஆண்டில் 
பிரபவாதி வருஷத்துக்கு மேற் செல்லாநின்ற
பஹீத்திர யோக கரணம் பார்த்து
சுபதினத்தில் இதனோடு இருபத்தேழு
துறவு கண்டு புண்யாகவாசகம்
பண்ணுவித்தேன் 1818.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Saturday, June 16, 2012

ஸ்டான்லி மருத்துவமனை

 

வடசென்னை மக்களின் வாழ்வோடு இரண்டரக் கலந்துவிட்ட ஸ்டான்லி மருத்துவமனை சுமார் இருநூறு ஆண்டுகள் பழமையானது. கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் 17ஆம் நூற்றாண்டில் மெட்ராசில் குடியேறிய பிறகு, அவர்களுக்கு வேலை செய்வதற்காக நிறைய பேர் கோட்டையை சுற்றி உள்ள பகுதிகளுக்கு வரத் தொடங்கினர். அப்படி வந்தவர்களால் உருவானதுதான் அன்றைய கருப்பர் நகரம் என அழைக்கப்பட்ட இன்றைய ஜார்ஜ் டவுன் பகுதி.
 
 
ஆங்கிலேயர்கள் சென்னையில் காலூன்றியதும், தங்களுக்கான தேவைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக பூர்த்தி செய்து கொண்டே வந்தனர். அந்த வரிசையில் நோய்வாய்ப்பட்ட ஆங்கிலேயர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கோட்டைக்குள் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் அதேசமயம் கோட்டைக்கு வெளியில் இருக்கும் சென்னையின் பூர்வ குடிகளுக்கு மருத்துவம் பார்க்க நவீன மருத்துவர்கள் என்று யாரும் இல்லை. நாட்டு மருத்துவர்கள் தான் அவர்களின் நோய்களுக்கு மருந்து கொடுத்து வந்தனர். எனவே அவர்களுக்கென ஒரு நவீன மருத்துவமனைக்கான தேவை மெல்ல உணரப்பட்டது.
 
இந்த சூழலில்தான் 1781இல் மெட்ராசில் மிக மோசமான பஞ்சம் தலைவிரித்தாடியது. சென்னையின் சொந்த மக்கள் சோற்றுக்கு வழியில்லாமல் பரிதவித்தனர். இவர்களுக்கு உதவுவதற்காக இன்றைய ஸ்டான்லி மருத்துவமனை இருக்கும் இடத்தில் ஒரு கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது. பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து கஞ்சி வாங்கி குடித்து தங்களின் பசியைப் போக்கிக் கொண்டனர். அடுத்த ஓராண்டில் இந்த இடம் ஒரு சத்திரமாக மாறியது.

 
Stanley+in+1964.jpg
 
பஞ்சத்தால் வாடியவர்கள் குறிப்பாக முதியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த இந்த இடம், மணியக்காரர் சத்திரம் என அறியப்பட்டது. நிறைய முதியவர்கள் இருந்ததால், அவர்களுக்கு மருத்துவ வசதியும் தேவைப்பட்டது. எனவே கிழக்கிந்திய கம்பெனி மருத்துவரான ஜான் அண்டர்வுட்டின் (John Underwood) முயற்சியால் இந்த இடத்தில் ஒரு சிறிய மருத்துவமனையும், தொழுநோயாளிகளுக்கான இல்லமும் தொடங்கப்பட்டது. 1799இல் தொடங்கப்பட்ட இதுதான் உள்ளூர்வாசிகளுக்கென பிரத்யேகமாக உருவான சென்னை மாநகரின் முதல் நவீன மருத்துவனை. இதனை உள்ளூர்வாசிகள் கஞ்சித்தொட்டி மருத்துவமனை என்று அழைத்தார்கள்.
 
காலப்போக்கில் இதற்கு அருகில் வெங்கடகிரி சத்திரம், ராஜா சர் ராமசாமி முதலியார் மகப்பேறு மருத்துவமனை என சில சிறிய கட்டடங்கள் தோன்றின. இவை அனைத்தும் மணியக்காரர் சத்திரத்தின் தலைமையில் இயங்கி வந்தன. இந்த சிறிய மருத்துவமனையில் ஒரு மருத்துவர், மருந்து கொடுப்பவர் ஒருவர், கண்காணிப்பாளர் ஒருவர் என மூன்று பேர் பணியாற்றி வந்ததாக 1889ஆம் ஆண்டு ஆவணங்கள் சொல்கின்றன.
 
இதனிடையே 1836இல் மெட்ராஸ் பல்கலைக்கழகம், இந்த மருத்துவமனையில் சில மருத்துவப் படிப்புகளை தொடங்கியது. 1903இல் மருத்துவமனை உதவியாளர் என்ற படிப்பும் புதிதாக சேர்க்கப்பட்டது. இங்கு பயின்று வெளிவரும் மாணவர்களுக்கு, 1911ஆம் ஆண்டு முதல் சான்று பெற்ற மருத்துவர் (Licensed Medical Practitioner) என்ற சான்றிதழ் கொடுக்கும் முறை உருவானது.
 
இப்படி மருத்துவப் படிப்புகள் அதிகரித்துக் கொண்டே வந்த வேளையில், இதனை நவீன மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றது. இதனையடுத்து 1913ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பென்ட்லாண்ட் பிரபு புதிய மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டினார். ஆனால் அடுத்த வருடமே முதல் உலகப் போர் வந்துவிட்டதால், மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் முடங்கின. இருப்பினும் உலகப் போரால் காயமுற்ற வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இங்கிருக்கும் மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் அரும்பணியாற்றினர். சிலர் போர்முனைக்கே சென்றும் மருத்துவம் பார்த்து தங்களின் உயிரையும் பறிகொடுத்தனர். அவர்களை கவுரவிக்கும் வகையில் ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்திற்குள் ஒரு நினைவுத் தூண் வைக்கப்பட்டுள்ளது.
 
பின்னர் ஒருவழியாக 1917இல் புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டன. அப்போதெல்லாம் இது ராயபுரம் மருத்துவமனை மற்றும் மருத்துவப் பள்ளி என்றுதான் அழைக்கப்பட்டது. பின்னர் 1934ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி தான் இது ஸ்டான்லி மருத்துவப் பள்ளி என பெயர் மாற்றப்பட்டது. அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் சர் பிரெட்ரிக் ஸ்டான்லியின் நினைவாக இந்தப் பெயர் வைக்கப்பட்டது.
 
பின்னர் 1938இல் இந்த மருத்துவப் பள்ளி மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் மருத்துவத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் டிஎஸ்எஸ் ராஜம் தான் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்தார். இவரே ஸ்டான்லி மருத்துவப் பள்ளியின் மாணவர் என்பதுதான் இதில் விசேஷமானது.
 
பின்னர் காலப்போக்கில் மருத்துவத்துறை வேகமாக முன்னேற, அந்த முன்னேற்றங்கள் அனைத்தும் ஸ்டான்லி மருத்துவமனையிலும் எதிரொலித்தன, தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டும் இருக்கின்றன. மொத்தத்தில், மக்களின் பசியாற்றும் சாதாரண கஞ்சித் தொட்டியில் இருந்து உருவான இந்த மருத்துவமனை, இன்று உலக அளவில் சத்தமில்லாமல் பல சாதனைகளைப் புரிந்துகொண்டிருக்கிறது.
 
நன்றி - தினத்தந்தி
 
சுத்தத்திற்கு முன்னுரிமை
 
ஸ்டான்லி மருத்துவனையின் சுத்தம் பற்றி நிறைய கதைகள் சொல்லப்படுகின்றன. ஒருமுறை லெப்டினன்ட் கர்னல் டி.ஜி. ராய் என்ற மருத்துவர் ரவுண்ட்ஸ் வரும்போது வெலிங்டன் வார்டில் இருந்த இத்தாலிய மார்பிள் தரையில் வழுக்கி விழுந்து விட்டாராம். இருப்பினும் விழுந்து எழுந்த கையோடு, அந்த தரையை அவ்வளவு பளபளப்பாக துடைத்து வைத்த ஊழியரை அழைத்து வெகுவாகப் பாராட்டினாராம். அந்தளவு அன்றைய மருத்துவர்கள் சுத்தத்தில் மிகவும் கவனமாக இருந்திருக்கின்றனர்.
 
---------
 
* ஸ்டான்லி மருத்துவமனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக உள்ளனர். ஒரு நாளைக்கு சுமார் 8000 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
 
* ஸ்டான்லி மருத்துவமனை கை மற்றும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையிலும்இரைப்பைகுடல் சார்ந்த சிகிச்சையிலும் இந்திய அளவில் சிறந்து விளங்குகிறது. 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Saturday, June 9, 2012

ஆவணக் காப்பகம்

 

திருவள்ளுவர் வீட்டு விலாசம், ஔவையாரின் மெடிக்கல் ரிப்போர்ட் போன்ற ஆவணங்கள் எல்லாம் காணக் கிடைத்தால் எவ்வளவு பரவசமாக இருக்கும். ஆனால் நம்மிடம் இந்த ஆவணப்படுத்துதல் என்ற பழக்கம் குறைவாக இருந்ததால், தமிழரின் பெருமைமிகு பாரம்பரியம் குறித்த நிறைய தகவல்கள் அறியப்படாமலே இருக்கின்றன. இலக்கிய சான்றுகள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் மூலம் தெரிய வந்தவை சில மட்டுமே. ஆனால் அன்றைய சாமானிய மக்களின் வாழ்க்கை முறை பற்றிய எக்கச்சக்கமான தகவல்கள் காலக்கரையானால் அழிக்கப்பட்டுவிட்டன.
 
ஆனால் மெட்ராஸ் என்ற பொட்டல்வெளியில் கிழக்கிந்திய கம்பெனியார் குடியேறிய காலத்தில் (1639) இருந்து நிகழ்ந்தவை பற்றிய தகவல்கள் நம்மிடம் இருக்கின்றன. இதற்கு வித்திட்டவர் சர் வில்லியம் லாங்கோர்ன் (Sir William Langhorne). 1672இல் மெட்ராஸ் ஆளுநராக நியமிக்கப்பட்ட வில்லியம், "வரலாறு முக்கியம் அமைச்சரே" என்பதை நன்கு உணர்ந்திருந்தார். எனவே, கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணங்களை முறையாக தொகுத்து பாதுகாக்க உத்தரவிட்டார்.
langhorne1.jpg
 
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இங்கிருந்த கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளுக்கும், இங்கிலாந்து அதிகாரிகளுக்குமான கடிதப் போக்குவரத்து போன்ற ஆவணங்கள்தான் முதலில் சேகரிக்கப்பட்டன. இவை அனைத்துமே ஆங்கிலேயர்களால் ஆங்கிலேயர்களுக்கு எழுதப்பட்டவை என்பதால் இதில் தமிழர்களைப் பற்றிய நல்ல விஷயங்கள் எவ்வளவு இருக்கும் என்பது சந்தேகமே. ஆனால் குறைந்தபட்சமாக அப்போது நிகழ்ந்த சம்பவங்களையாவது இவற்றின் மூலம் அறிந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது.
 
ஆரம்ப காலத்தில் கோட்டைக்குள் இருந்த கவுன்சில் அறையில் இந்த ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டன. பின்னர் ஆவணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க கோட்டைக்குள்ளேயே இவை இடம் மாறிக் கொண்டே இருந்தன. பிற்காலத்தில் மெட்ராஸ் மாகாணம் என்றழைக்கப்பட்ட தென்னிந்தியப் பகுதி முழுவதும் 1801இல் கிழக்கிந்திய கம்பெனியார் கட்டுப்பாட்டில் வந்தது. இதன் பிறகு, ஆணவங்கள் மலை போல் குவியத் தொடங்கிவிட்டன.
 
எனவே 1805இல் மெட்ராஸ் ஆளுநராக இருந்த வில்லியம் பெண்டிக், துறைவாரியாக சிதறிக் கிடந்த தலைமைச் செயலக ஆவணங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பாதுகாக்க உத்தரவிட்டார். இதற்கென ஒரு ஆவணக் காப்பாளரையும், சில உதவியாளர்களையும் பணியமர்த்தினார். இவர்கள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் பல்வேறு ஆவணங்களையும் தொடர்ந்து சேகரித்துக் கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் ஆவணங்களை வைக்க இடம் இல்லாத நிலை ஏற்பட்டதும்தான் இதற்கென தனி கட்டடம் தேவை என்பது உணரப்பட்டது.
 
அப்போது உருவானதுதான் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு எதிரில் இருக்கும் தற்போதைய தமிழ்நாடு ஆவணக் காப்பகம். 1909ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டடத்திற்கு அந்த காலத்திலேயே ரூ.2,20,000 செலவானதாம். இதில் ஆவணங்களை பாதுகாக்கத் தேவையான வசதிகளுக்காக தனியாக ரூ.1,17,000 செலவிட்டிருக்கிறார்கள். செக்கச் செவேலென இந்தோ - சராசனிக் பாணியில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் இந்த கட்டடத்தை லோகநாத முதலியார் என்ற தமிழர்தான் கட்டினார். அந்த காலத்தில் புகழ்பெற்ற கட்டுமானக் கலைஞராக விளங்கிய லோகநாத முதலியார்தான் பிற்காலத்தில் ரிப்பன் மாளிகையை கட்டியவர்.
tnarchives.jpg.crop_display.jpg
 
ஆவணக் காப்பகம் அந்த காலத்தில் மெட்ராஸ் ரெக்கார்ட் ஆபிஸ் என்று அழைக்கப்பட்டது. 1670ஆம் ஆண்டைச் சேர்ந்த சில ஆவணங்கள் கூட இங்கே இருக்கின்றன. இவை மட்டுமின்றி அந்த காலத்தில் தஞ்சாவூர் மகாராஜா போன்ற இந்திய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களுக்கு எழுதிய கடிதங்களும் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.
 
தென்னிந்திய பகுதி முழுவதையும் கைப்பற்றிய பிறகு கிழக்கிந்திய கம்பெனியார் நிர்வாக வசதிக்காக அவற்றை பல்வேறு மாவட்டங்களாகப் பிரித்தனர். அவற்றை நிர்வகிக்க தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். புதிதாக வரும் ஆங்கிலேயே அதிகாரிகள் அந்த மாவட்டத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்காக புத்தகங்கள் போடப்பட்டன. மாவட்ட கையேடு என்ற பெயரில் இவை பிரசுரிக்கப்பட்டன. முதலில் 1868இல் மெட்ராஸ் மாவட்ட கையேடு வெளியானது. இதனைத் தொடர்ந்து தென்னாற்காடு, வட ஆற்காடு, திருச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் கையேடுகள் வெளியாகின.
 
இந்த கையேடுகளில் உள்ள தகவல்களை புதுப்பிக்க வேண்டிய தருணம் வந்தபோது, இவற்றில் புதியவற்றை சேர்த்து மாவட்ட கெசட்டியர்கள் (District Gazetteers) வெளியிடப்பட்டன. முதல் மாவட்ட கெசட்டியர் 1906ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தைப் பற்றி வெளியானது. அன்று தொட்டு இன்று வரை இவை தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இவற்றின் மூலம் ஒரு மாவட்டம் பற்றிய பல்வேறு தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும். இந்த கெசட்டியர்கள் தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் விலைக்கும் விற்கப்படுகின்றன.
 
ஆவணங்களை பாதுகாப்பதோடு அவை மக்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் ஆராய்ச்சி மாணவர்கள் இந்த ஆவணங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர். பொதுமக்களும் இங்கிருக்கும் ஆவணங்களில் இருந்து தங்களுக்கு தேவையான தகவல்களை கட்டணம் செலுத்தி அறிந்து கொள்ளலாம்.
 
இங்கு குவிந்திருக்கும் மலை போன்ற ஆவணங்களில் நம்மை மலைக்க வைக்கும் ஏராளமான தகவல்கள் புதைந்திருக்கின்றன. ஜாடிக்குள் அடைபட்ட அலாவுதீன் பூதம் போல தம்மை வெளிப்படுத்த அவை தருணம் பார்த்துக் காத்திருப்பதாகவே தோன்றுகிறது.
 
நன்றி - தினத்தந்தி
 
* சர் வில்லியம் தனக்காக கிண்டியில் கட்டிய தோட்ட வீடுதான், ராஜ் பவன் எனப்படும் இன்றைய ஆளநர் மாளிகையாக உருமாறி இருக்கிறது.
 
* பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு இங்கிருக்கும் ஆவணங்கள் படி எடுக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.
 
* தெற்காசியாவிலேயே மிகப் பெரிய ஆவணக் காப்பகங்களில் முக்கியமானதாக இது திகழ்கிறது. 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Saturday, June 2, 2012

குஜிலி பஜார்

 

ஷாப்பிங் என்றால் இன்றைய சென்னைவாசிகளுக்கு முதலில் நினைவுக்கு வரும் இடம் பாண்டி பஜார். காரணம், தலைக்கு கிளிப் முதல் காலுக்கு செருப்பு வரை அனைத்தையும் இங்கு வாங்கி விட முடியும். ஆனால் அந்தக்கால சென்னைவாசிகள் இப்படி ஷாப்பிங் செய்ய வசதி இருந்ததா? அவர்கள் எங்கு போய் தங்களின் ஷாப்பிங் ஆர்வத்தைத் தணித்துக் கொண்டனர்? இதற்கான விடையைத் தேடிய போதுதான் மெட்ராஸின் ஒரு சுவாரஸ்யமான பஜார் பற்றிய செய்திகள் தெரிய வந்தன.
 
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இன்றைய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு பஜார் இருந்திருக்கிறது. இதன் பெயர் குஜிலி பஜார். பாரிமுனை கந்தசாமிக் கோவிலுக்கு அருகில் உள்ள இந்த பகுதியில், அந்த நாட்களில் நிறைய குஜராத்திகள் வசித்து வந்தனர். இங்கிருக்கும் ஏதோ ஒரு இளம் குஜராத்திப் பெண்ணைப் பார்த்து பரவசமாகிப் போன யாரோ ஒரு சென்னைவாசி அந்தப் பெண்ணின் மீது உருகி மருகியதன் விளைவாக உருவானதே குஜிலி என்ற சொல். குஜராத்தி+கிளி என்பதையே மெட்ராஸ் பாஷைக்கே உரிய பாணியில் ரத்தின சுருக்கமாக நசுக்கி பிசுக்கி குஜிலி ஆக்கியிருக்கிறார்கள். குஜிலி ஏரியாவில் இருக்கும் பஜார் என்பதால் குஜிலி பஜார் என்று பெயர் வந்திருக்கலாம் என மொழி ஆய்வாளர்கள் (!!!) கருதுகின்றனர். குஜிலி என்பது உருதுமொழிச் சொல் என்றும் ஒரு கருத்து இருக்கிறது.
 
குஜிலி பஜார் என்பதை மாலை நேரக் கடைத்தெரு என்று வைத்துக் கொள்ளலாம். இந்த பஜாரின் கதாநாயகன் பாட்டுப் புத்தகங்கள்தான். இங்கு கிடைத்த பாடல்கள் வெறும் சினிமாப் பாடல்கள் அல்ல. அந்த காலத்தில் ஏது அத்தனை சினிமா. இங்கு கிடைத்த பாடல்கள் எல்லாம் வேறு ரகம். இவற்றை குஜிலிப் பாடல்கள் என்று அழைத்தார்கள். புகைவண்டிமின்சார விளக்குமண்ணெண்ணெய்சிகரெட்தேநீர் என எந்த பொருள் புதிதாக அறிமுகமானாலும் அதைப் பற்றி பாட்டு எழுதி இருக்கிறார்கள். பொருட்கள் மட்டுமல்லாமல் அன்றாடம் நடந்த கொலைகொள்ளை போன்ற சம்பவங்களையும் பாட்டாக்கியிருக்கிறார்கள். அரை அணா இருந்தால் இந்த வித்தியாச பாடல்கள் அடங்கிய புத்தகங்களை வாங்கிவிடலாம்.
Chennai+Parrys+Corner-1890+(1).jpg
 
சாதாரண உப்புமாவில் இருந்து உப்பு சத்தியாகிரகம் வரைக்கும் குஜிலிக் கவிஞர்களின் பாடு பொருட்களாக இருந்தன. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தலைவர்கள் கைதான போது அரெஸ்டு பாட்டு’ என்றே சில பாடல்கள் எழுதப்பட்டன. இவை மக்கள் மத்தியில் சுடச்சுட விநியோகிக்கப்பட்டன. தேச பக்தர்களுக்கு எதிரானவர்களும் குஜிலியை கும்மி எடுத்திருக்கிறார்கள். அவர்கள் தரப்பிலிருந்து இராஜ விசுவாசக் கும்மி” போன்ற சில புத்தகங்களும் வெளி வந்திருக்கின்றன. இப்படி வெளியான இருதரப்புப் பாடல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல கிராக்கி இருந்தது.
 
1920 களிலும் 1930 களின் தொடக்கத்திலும் கிராமபோன் இசைத் தட்டுகள் பிரபலமாகி வந்தன. அது ரேடியோ இல்லாத காலம். எச்.எம்.வீ.,கொலம்பியாஓடியன் போன்ற இசைத் தட்டுக் கம்பெனிகள் பிரபல நாடக மேடைப் பாடகர்களைக் கொண்டு இசைத் தட்டுக்களை வெளியிட்டன. குஜிலிக் கடைக்காரர்கள் இந்த கிராமபோன் பாடல் வரிகளை அச்சிட்டு காசு பார்த்தார்கள்.
 
இன்றைக்கு பிரபல பாடகர்களின் பெயரில் தனியாக பாட்டுப் புத்தகம் போடும் வழக்கம் அப்போதுதான் தொடங்கியது. எஸ்.எஸ். விஸ்வநாத தாஸ்எஸ்.ஜி. கிட்டப்பாகே.பி. சுந்தராம்பாள்என்.எஸ். பபூன் சண்முகம் போன்றோருக்கு தனிப் புத்தகங்கள் போடப்பட்டன. அவர்களின் ரசிகர்கள் அவற்றை வாங்கி பொக்கிஷமாகப் பாதுகாத்து பரவசமடைந்தனர். 1960கள் வரை கூட பாட்டுப் புத்தகங்கள்கதைப் பாடல்கள் போன்ற வெகுஜன நாட்டார் இலக்கியங்கள் குஜிலி பஜாரில் கிடைத்து வந்தன. 
 
குஜிலி பஜாரின் முக்கில்ஒரு வீதி ஈவினிங் பெஜார்“ என்றும்மற்றொரு வீதி தீவிங் பெஜார்“ என்றும் அழைக்கப்பட்டது. இதுபற்றி மாதவையா 1925ஆம் ஆண்டு வெளியான தனது பஞ்சாமிர்தம் இதழில் கீழ்கண்டவாறு எழுதி இருக்கிறார்.
''இதை நான் முதலில் கவனித்தபோதுஉண்மை எவ்வாறிருப்பினும்,ராஜதானி நகரத்திலே ஒரு வீதிக்கு தீவிங் பெஜார் ரோடு“ (அதாவது,திருட்டுக் கடைத் தெரு) என்றிருப்பது,  நகரவாசிகளுக்கேனும்,போலீஸாருக்கேனும் கௌரவம் தருவதன்று என்று நினைத்துஅப்பொழுது முனிசிபல் கமிஷனராயிருந்த என் நண்பர் மலோனி துரைக்கு அதைப்பற்றி எழுதஅவர், “தீவிங் பெஜார்“ என்ற பெயரை குஜிலி பெஜார்“ என்று மாற்றினார்.''
- மாதவையா
 
குஜிலி பஜாருக்கு அருகிலேயே சைனா பஜார் இருந்தது. அந்தக் கால சைனா பஜார் எப்படி இருந்தது என்பதை அறிந்துகொள்ள, 1913இல் வெளியான கட்டுரையின் கீழ்கண்ட பகுதி மிகவும் உதவியாக இருக்கும்.
 
''சைனா பஜார் வீதி - மாலைக் காலத்தில் எப்போதும் ஜன நெருக்கமுள்ள இவ்வீதியைப் பார்க்க வெகு வினோத விழாவாயிருக்கும். செலவழிக்க மனம் வராதவர்களும் வாங்கக் கூடிய துணிமணிகளும்கண் கவரும் பழ தினுசுகளும்சித்திரப் படங்களும்பொன், வெள்ளி ஆபரணங்களும்செம்பு பித்தளை வெங்கலப் பாத்திரங்களும்வாசனை திரவியங்களும்குடை,ஜோடுகொம்புதடிகளும், மிட்டாய் தினுசுகளும்புஸ்தகங்களும் மற்றும் பல வஸ்துக்களும் விற்கும் கடைகள் எண்ணிறந்தன.
வேடிக்கை பார்ப்பதிலேயே மனம் செலுத்தாமல் அப்போதுக்கப் போது தங்களுடைய ஜேபியிலும் மடியிலும் வைத்திருக்கும் பணப் பைகளை கவனித்து வர வேண்டும். இவ்விடத்தில்  முடிச்சவிழ்க்கும் பேர்வழிகள் அதிகம். இதற்கு விளக்கு வெளிச்சம் போராத குறையொன்றுண்டு. சென்னை நகரசபையார் இதைக் கவனித்து ஜியார்ஜ் அரசரின் உருவச் சிலைக்கு எதிரில் அதிகம்  வெளிச்சம்  தரக்கூடிய கொத்து விளக்குஒன்றை அமைக்கப் பெற்றால் வெகு நலமாயிருக்கும்.''

 - மயிலை கொ. பட்டாபிராம முதலியார்
 `விஷ்ணு ஸ்தல மஞ்சரி` 1913
 
இப்படி எல்லாம் மெட்ராஸ்வாசிகளின் மாலை நேரங்களை ரம்மியமாக மாற்றிய இந்த குஜிலி பஜார்தான் தற்போது பர்மா பஜாராக பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது.
 
நன்றி - தினத்தந்தி
 
* பர்மாவிலிருந்து வந்து குடியேறியவர்களுக்காக 1960களில் ஒதுக்கப்பட்ட பகுதிதான் பர்மா பஜார்.
* திருட்டுப் பொருட்கள் விற்கும் கடைகள் இருந்தன என்பதால், பர்மா பஜாருக்கு வெள்ளைக்காரர்கள் காலத்தில்  ‘தீவ்ஸ் பஜார் என்று பெயராம்.
 
--------
அரெஸ்ட் பாட்டு
 
king_george_v.jpg
 
ஐந்தாம் ஜார்ஜ் மன்னவரும்
அவர் மனைவி மேரியளும் மைந்தருடன்
பூவுலகில் மகாராஜர் வாழ்கவுமே
கவர்னர் வைசிராயவரும்
கனம் மாண்டேகு மந்திரியும்
புவனமெலாம் போற்ற புண்ணியர்கள் வாழ்கவுமே.
 
திக்கெங்கும் போர் படைத்த தியாகராஜன் புகழும்
மிக்க புகழ் நாயர் முதல் மேலவர்கள் வாழ்கவுமே.
புதுக்கோட்டை பிரின்ஸ் அவர்கள் பூமான்துரை ராஜா
மதிப்பாயுலகினிலே மன்னவரும் வாழ்கவுமே
ராஜா வெங்கடகிரி ராவ்பகதூரா ராஜரத்தினம்
தேசாபிமானியெல்லாம் தேவரொக்க வாழ்கவுமே
வாழ்க திராவிடரும் வாழ்க அவர் சங்கமதுவும்
வாழ்க பொதுவிற்குழைப்போர் வாழ்க வாழ்க வாழ்கவுமே
 
– ஹோம் ரூல் கண்டனதிராவிட முன்னேற்றஇராஜ விசுவாசக் கும்மி
[சேலம் ஆசுகவி தி.சு. கணபதி பிள்ளையால் எழுதப்பட்டது (1918).]


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Saturday, May 26, 2012

தேனாம்பேட்டை

 

மெட்ராஸ் பேட்டைகளில் முக்கியமானது தேனாம்பேட்டை.
கோர்ட்யார்ட் மரியட், ஹயாத் ரிஜென்சி என பிரம்மாண்ட 5 நட்சத்திர ஓட்டல்களோடு இன்று ஜொலிக்கும் இந்த பேட்டை, சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் வயல்கள் சூழ்ந்த கிராமமாக இருந்தது. ஷங்கர் பட கிளைமேக்ஸ் மாதிரி, இந்த கிராமம் ஒரு நவநாகரீகப் பகுதியாக உருமாறிய கதை ரொம்பவே சுவாரஸ்யமானது.
 
1800களுக்கு முன் இந்த பகுதி முழுவதும் விவசாய நிலங்களாகத் தான் இருந்தன. எங்கு பார்த்தாலும் நெல் வயல்கள், வெத்தலை, வாழைத் தோப்புகள், கரும்பு மற்றும் காய்கறித் தோட்டங்கள் என பச்சைப் பசேலென்று காட்சியளித்தது. இங்கு நிறைய தென்னந்தோப்புகள் இருந்ததால் இது தென்னம் பேட்டை என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் மருவி தேனாம்பேட்டை ஆகிவிட்டது என்று கூறப்படுகிறது.
 
தேனாம்பேட்டை பெயருக்கு வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. இந்த பகுதியில் செல்வாக்குடன் வாழ்ந்த தெய்வநாயக முதலியார் என்பவர் இங்குள்ள அகஸ்தீஸ்வர சுவாமி கோவில், அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் ஆகியவற்றிற்கு நன்கொடைகளை வாரிக் கொடுத்ததாகவும், அவரின் நினைவாகவே இது தெய்வநாயகம்பேட்டை என அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்தக் கால பத்திரப் பதிவு ஆவணங்களில் தெய்வநாயகம் பேட்டை என்பதை குறிக்கும் வகையில் தெ.பேட்டை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பேச்சு வழக்கில் மக்கள் 'தேனா பேட்டை' என்று அழைக்கத் தொடங்கி, அதுவே தேனாம்பேட்டை ஆகியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
 
சரி, இந்த தேனாம்பேட்டை கிடுகிடு வளர்ச்சி அடைந்த கதைக்கு வருவோம். தேனாம்பேட்டையின் மேற்குப் பகுதியில் அந்த காலத்தில் ஒரு பெரிய குளம் இருந்தது. இந்த குளத்து நீரைப் பயன்படுத்தித்தான் இங்கு விவசாயம் செழிப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில்தான் கதையில் ஒரு திருப்பம். கிழக்கிந்திய கம்பெனியார் சென்னையில் குடியேறிய உடன், புனித தோமையார் மலைக்கு செல்வதற்காக பரங்கிமலை வரை சுமார் 15 கி.மீ நீளத்திற்கு ஒரு சாலையை அமைத்தனர். 1781-1785 கால கட்டத்தில் சார்லஸ் மெக்கார்டினி (Charles MaCartney) மெட்ராஸ் ஆளுநராக இருந்தபோது அமைக்கப்பட்ட இந்த அகன்ற சாலைதான் இன்றைய மவுண்ட் ரோடு.
 
இந்த மவுண்ட் ரோடு, தேனாம்பேட்டையை ஒட்டி அமைக்கப்பட்டது இந்த பகுதியின் வளர்ச்சியை பன்மடங்கு அதிகரிக்கச் செய்தது. தேனாம்பேட்டை விவசாயிகள் மவுண்ட் ரோடு மூலம் தங்களின் விளை பொருட்களை மெட்ராசின் வேறு பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்தனர். இதனால் பலருக்கும் தேனாம்பேட்டை பற்றி தெரிய வந்தது. இயற்கை எழில் கொஞ்சும் சூழல், அருகிலேயே ஒரு பிரதான சாலை என அம்சமாக அமைந்துபோனதால், நிறைய ஆங்கிலேயர்கள் இங்கு தோட்ட வீடுகளை கட்டி குடியேற ஆரம்பித்தனர்.
 
அவர்களில் முதலில் தேனாம்பேட்டைவாசியானவர் லெப்டினன்ட் கர்னல் வேலெண்டைன் பிளாக்கர் (Lieu. Col. Valentine Blacker). இவருக்கு 1806ஆம் ஆண்டு இந்த பகுதியில் 9 ஏக்கர் நிலம் மானியமாக வழங்கப்பட்டது. இதில் அழகாக ஒரு வீட்டைக் கட்டி குடியேறிய அவர், 1817-1819 இடையே நடைபெற்ற மராத்திய யுத்தம் பற்றி சிறப்பாக எழுதிய வரலாற்று ஆய்வாளராக போற்றப்படுகிறார். அவரைத் தொடர்ந்து இந்த பகுதிக்கு வந்த முக்கிய பிரமுகர் லஷிங்டன். இவர் இன்றைய தோட்டக்கலை பண்ணையில் வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்தவர். இப்படி அடுத்தடுத்து நிறைய பிரபலங்கள் தேனாம்பேட்டைவாசிகளாக மாறினர்.
 
அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் ரிச்சர்ட் எல்டாம். 1801இல் மெட்ராஸ் நகர மேயராக இருந்த இவர், தேனாம்பேட்டையில் ஒன்றரை ஏக்கர் நிலத்தை வாங்கி லஸ் ஹவுஸ் என்ற வீட்டைக் கட்டினார். இவர் கிழக்கிந்திய கம்பெனியில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். இவரின் நினைவாகத் தான் இந்த சாலை இன்று எல்டாம்ஸ் சாலை (Yeldam Road) என அழைக்கப்படுகிறது.
ellayamman+temple.jpg
 
ஆங்கிலேயர்களின் வருகை அதிகரித்ததை அடுத்து இந்த பகுதியைச் சுற்றி பிரபல தேவாலயங்கள் எழுப்பப்பட்டன. இதில் வடக்கே அமைக்கப்பட்ட புகழ்பெற்ற கதீட்ரல் தேவாலயம் காரணமாக, அந்த சாலையே கதீட்ரல் சாலை எனப் பெயர் பெற்றது. தேனாம்பேட்டையின் மற்றொரு முக்கிய இடம் எல்லையம்மன் கோவில் பகுதி. இங்கிருந்த ஏரியில் ஒரு முறை பெரிய வெள்ளம் வந்துவிட்டதாம். அப்போது அலைகளில் அடித்தபடி ஒரு அம்மன் சிலை வந்ததாகவும், அதனைக் கொண்டு கோவில் அமைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அலைகளில் வந்த அம்மன் என்பதால் அலை அம்மன் என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் ஆலையம்மன் என்றும் எல்லையம்மன் என்றும் மருவிவிட்டதாகவும் சொல்கிறார்கள். இந்த கோவிலின் காலம் பற்றிய தகவல் உறுதியாகத் தெரியவில்லை.
 
ஒருபுறம் எல்லையம்மன் கோவில், மறுபுறம் நட்சத்திர ஹோட்டல்கள். இடையே அண்ணா அறிவாலயம், காமராஜர் அரங்கம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள், பேட்டையைச் சுற்றிலும் அரசியல் நாயகர்களான முன்னாள், இன்னாள் முதலமைச்சர்களின் வீடுகள், கோலிவுட் நாயகர்களான சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகனின் இல்லங்கள், இவற்றிற்கிடையே இன்றும் எந்த மாற்றமும் இல்லாமல் சந்து, பொந்துகளில் காட்சியளிக்கும் சென்னையின் பூர்வகுடிகளின் குடிசைகள் என வாழ்வின் மிகப் பெரிய தத்துவத்தை நம்முன்  காட்சிக்கு வைத்திருக்கிறது இந்த பேட்டை.
 
நன்றி - தினத்தந்தி
 
தேனாம்பேட்டை ஆரம்ப நாட்களில் வெள்ளாளத் தேனாம்பேட்டை,வன்னியத் தேனாம்பேட்டை என இரண்டாக இருந்தது
 
 
* பிரபல பாலிவுட் நாயகியாக விளங்கிய ஹேமாமாலினி முதலில் தன் இல்லத்தையும், நடனப் பள்ளியையும் இங்குதான் அமைத்திருந்தார்.
 

* மெட்ரோ ரயில் பணிகளால் மீண்டும் ஒரு பிரம்மாண்ட மாற்றத்திற்கு தயாராகி வருகிறது இந்த பேட்டை.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Saturday, May 19, 2012

சென்னை துறைமுகம்

 

 
துறைமுகம் இல்லாத சென்னையை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? முயன்று பாருங்கள், சற்று கடினமாகத் தான் இருக்கும். ஆனால் முந்நூறு ஆண்டுகளுக்கு முன், சென்னை வெறும் மணல்வெளியாக இருந்த காலத்தில், இங்கு துறைமுகம் இல்லை, அதற்கான தேவையும் இல்லை.
 
ஆனால் பல்லவர்கள் காலத்திலேயே இன்றைய மயிலாப்பூர், ஒரு துறைமுக நகரமாக இருந்திருக்கிறது. இங்கிருந்து ரோம சாம்ராஜ்ஜியத்துடன் பெரிய அளவில் வர்த்தகம் நடைப்பெற்றிருக்கிறது. 1522இல் போர்ச்சுகீசியர்கள் சோழ மண்டல கடற்கரையில் புனித தோமையாரின் பெயரால் சிறிய துறைமுகம் ஒன்றை நிறுவியிருக்கிறார்கள். போர்ச்சுகீசியர்களைத் தொடர்ந்து 1613இல் டச்சு வர்த்தகர்கள் பழவேற்காடு பகுதிக்கு வந்தனர். அவர்கள் வந்து சுமார் 25 ஆண்டுகள் கழித்தே, அதாவது 1639ஆம் ஆண்டுதான் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் சென்னை மண்ணில் கால் பதித்தார்கள்.
 
அவர்கள் கடற்கரை ஓரத்தில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டி வியாபாரத்தை ரிப்பன் வெட்டித் திறந்ததும், அவர்களுக்கான சரக்குகள் இங்கிலாந்தில் இருந்து பெரிய பெரிய கப்பல்களில் மெட்ராஸ் வரத் தொடங்கின. ஆனால் அப்போது இங்கு துறைமுகம் எதுவும் கிடையாது. எனவே கப்பல்கள் கடும் அலைகளைத் தாக்குப் பிடித்தபடி நடுக்கடலிலேயே நிற்க வேண்டும். பெரிய திறந்த படகுகள் (MASULAH BOATS) மூலம் கடலுக்குள் சென்று கப்பலில் உள்ள சரக்கை கரை சேர்ப்பார்கள். சில சமயங்களில் பெரிய அலைகளை எதிர்க்க முடியாமல் இந்த படகுகள் கவிழும்போது, சரக்குகளை கடல் ஸ்வாகா செய்துவிடும்.
%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0
 
ஒரு நூற்றாண்டு காலம் இப்படி அலைகளால் அலைக்கழிக்கப்பட்ட பின்னர், 1770ஆம் ஆண்டுதான் மெட்ராசிற்கு ஒரு துறைமுகம் தேவை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இந்த கருத்தை உதிர்த்தவர் பின்னாளில் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக உயர இருந்த வாரன் ஹேஸ்டிங்க்ஸ். ஆனால் அதற்காக உடனே விழுந்தடித்து எந்த முயற்சியும் செய்யப்படவில்லை. இப்படியே மேலும் ஒரு நூற்றாண்டு கழிந்தது.
 
இந்த முறை மெட்ராஸ் வர்த்தக சபையினர் துறைமுகம் வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக வைத்தனர். இதனையடுத்து பெரிய கப்பல்கள் சற்று உள்ளே வந்து நிற்பதற்கு வசதியாக 1861ஆம் ஆண்டு ஒரு நீண்ட சுவர் கடற்கரையில் இருந்து கடலுக்குள் செல்வது போல குறுக்காக கட்டப்பட்டது. ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் வீசிய புயலில் இந்த சுவர் குட்டிச் சுவராகிவிட்டது. எனவே இம்முறை இதனை சற்றே மாற்றி 'எல்' (L) வடிவில் இரண்டு தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டன. இந்த இரண்டு 'எல்'களுக்கு இடையில் கிழக்குப் பகுதியில் 515அடி திறப்புடன் ஒரு செயற்கைத் துறைமுகம் உருவானது. கராச்சி துறைமுகத்தை கட்டிய பார்க்கஸ் என்பவர்தான் இந்த யோசனையை முன்வைத்தார். இதற்காக பல்லாவரம் மலையில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டன.
 
1881ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த வேலை முடியும் தருவாயில், பெரிய கப்பல்கள் உள்ளே வரத் தொடங்கின. ஆனால் இரண்டு மாதங்கள் கூட இந்த நிம்மதி நீடிக்கவில்லை. நவம்பர் மாதம் வீசிய புயலில் பாதி 'எல்' காணாமல் போய்விட்டது. மனந்தளராத விக்கிரமாதித்தனைப் போல கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் மீண்டும் துறைமுகம் கட்டும் பணியில் இறங்கினர். ஒரு வழியாக இந்த பணி 1896இல் முழுமை அடைந்தது.
 
இந்த துறைமுகத்தை மேம்படுத்தும் பணியில் சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் என்பவர் 1904ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இவர்தான்  இன்றைய துறைமுகத்தின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர். அடுத்த ஆண்டு உருவாக்கப்பட்ட மெட்ராஸ் போர்ட் டிரஸ்டுக்கு தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பிரான்சிஸ், பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
Madras+view+from+the+harbor+1895.png
 
இதன் ஒரு பகுதியாக துறைமுகம் மாற்றியமைக்கப்பட்டது. பழைய கிழக்குப் பக்க வாயில் மூடப்பட்டு வட கிழக்கு மூலையில் 400 அடி வாயில் அமைக்கப்பட்டது. 1600 அடி நீள தடுப்புச் சுவரால் இது பாதுகாக்கப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் 1911இல் முழுமை அடைந்தன. முதல் இரண்டு ஆண்டுகளில் 600 கப்பல்கள் இங்கு வந்து போனதாகவும், 3 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டதாகவும் கிழக்கிந்திய கம்பெனி ஆவணங்கள் கூறுகின்றன.
 
இப்படி சென்னை துறைமுகம் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்த நிலையில்தான், முதல் உலகப் போர் வெடித்தது. இதில் இந்தியாவில் தாக்குதலுக்கு உள்ளான ஒரே நகரம் சென்னைதான், அதுவும் கடல் மார்க்கமாக. 1914ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், பிரிட்டீஷ் படைகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மெட்ராஸ் வந்த ஜெர்மனியின் எம்டன் கப்பல், சென்னை துறைமுகம் மீது 125 குண்டுகளை சரமாரியாக வீசியது. இதில் துறைமுகத்திற்குள் இருந்த பர்மா ஆயில் கம்பெனிக்கு சொந்தமான எண்ணெய் கிடங்கு கொளுந்துவிட்டு எரிந்தது.


இந்த தாக்குதலின் பாதிப்பில் இருந்தும் சென்னை துறைமுகம் விரைவில் மீண்டெழுந்தது. இறுதியில் 1919இல் பிரான்சிஸ் ஓய்வு பெறும்போது, சென்னை துறைமுகம் அனைத்து பிரச்னைகளையும் சமாளிக்கும் திறன் படைத்ததாக முன்னேறிவிட்டது. இதோடு நின்றுவிடாமல் தொடர்ந்து தன்னை மெருகேற்றிக் கொண்டே வந்ததால், இன்று பல லட்சம் கோடி மதிப்புள்ள சரக்குகளைக் கையாளும் உலகின் மிக முக்கியத் துறைமுகங்களில் ஒன்றாக சென்னை துறைமுகம் வளர்ந்திருக்கிறது.
 
ஆரம்ப காலங்களில் வீசும் புயல்களைப் புறந்தள்ளிவிட்டு, விடாமுயற்சியுடன் போராடினால் நிச்சயம் ஒரு நாள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதற்கு சாட்சியாய் நின்று கொண்டிருக்கிறது சென்னை துறைமுகம்.
 
நன்றி - தினத்தந்தி
 
* மும்பைக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய துறைமுகம் சென்னை துறைமுகம்தான்.
 
* கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமியின் போது, சென்னை துறைமுகம் சுமார் 13 கோடி ரூபாய் அளவுக்கு சேதமடைந்தது. இதனால் இரண்டு நாட்கள் துறைமுகப் பணிகள் நிறுத்தப்பட்டன.
 
* 1881ஆம் ஆண்டை தொடக்கமாகக் கருதி, கடந்த 2007ஆம் ஆண்டு சென்னை துறைமுகத்தின் 125வது ஆண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Saturday, May 12, 2012

ராஜாஜி ஹால்

 

 
பல தமிழ்ப்படங்களில் நீதிமன்றப் படிக்கட்டுகளாகக் காட்டப்படும் பிரம்மாண்ட படிக்கட்டுகளைக் கொண்ட ராஜாஜி ஹாலின் கதையும் அதே அளவிற்கு பிரம்மாண்டமானதுதான். இந்த ஹால் ஒரு மாபெரும் வெற்றியின் நினைவாகக் கட்டப்பட்டது. ஆம், திப்பு சுல்தானுக்கு எதிராக நான்காவது மைசூர் யுத்தத்தில் கிழக்கிந்திய படைகள் பெற்ற வெற்றியின் சின்னம்தான் இது.
 
1800இல் தொடங்கி 1802இல் கட்டி முடிக்கப்பட்டபோது, இதற்கு பான்குவிடிங் ஹால் (Banqueting Hall) எனப் பெயரிடப்பட்டது. காரணம், பொதுநிகழ்ச்சிகளை நடத்துவதற்கான ஒரு அரங்கமாகத் தான் இது கட்டப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியின் பொறியாளரும் வானியல் நிபுணருமான ஜான் கோல்டிங்ஹாம் என்பவர்தான் இந்த பிரம்மாண்ட ஹாலை வடிவமைத்தார். இவர் வானியல் நிபுணர் என்பதாலோ என்னவோ, வான சாஸ்திரத்தில் அதிக ஆர்வம் காட்டிய புராதன கிரேக்கர்களின் கன்னித் தெய்வமான ஏத்தெனாவின் பார்த்தினான் கோவில் சாயலில் இதனை வடிவமைத்தார். இப்போதும் ஏத்தென்ஸ் நகரில் சிதிலமடைந்து கிடக்கும் பார்த்தினான் கோவிலைப் பார்த்தால், உங்களுக்கு இதை ஏற்கனவே எங்கோ பார்த்திருக்கிறோமே என்ற எண்ணம் தோன்றும்.  
 
சரி, விஷயத்திற்கு வருவோம். புதிய தலைமைச் செயலக கட்டடம் அமைந்திருக்கும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தின் பரந்தவெளி முழுவதும் ஒரு காலத்தில் ஆண்டானியா தி மதிரோஸ் (Antonia de Madeiros) குடும்பத்தினருக்கு சொந்தமாக இருந்தது. அன்றைய சென்னைப்பட்டினத்தின் மிகவும் செல்வாக்கு வாய்ந்த இந்த குடும்பத்தினால்தான் சென்னைக்கு மெட்ராஸ் என்ற பெயரே வந்தது என்று ஒரு கருத்தும் உள்ளது. இந்த குடும்பத்திடம் இருந்து, அந்த பரந்து விரிந்த மைதானத்தை 1753இல் விலைக்கு வாங்கிய கிழக்கிந்திய கம்பெனி, மெட்ராஸ் ஆளுநர்கள் தங்குவதற்காக அங்கு ஒரு பெரிய பங்களாவைக் கட்டியது. அதுதான் அரசினர் இல்லம்.
 
basnquet+hall.jpg
 
பின்னர் ராபர்ட் கிளைவின் மகன் எட்வர்ட் கிளைவ் மெட்ராஸ் ஆளுநராக இருந்தபோது, 1800களில் இந்த கட்டடம் சற்றே புனரமைக்கப்பட்டது. அப்போதுதான் அருகில் பான்குவிடிங் ஹால் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தின் வடிவமைப்பாளர் ஜான் கோல்டிங்ஹாம் இதற்காக உருவாக்கிய வரைபடங்கள் இன்றும் பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
 
சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட இந்த ஹால், 1802 அக்டோபர் 7ந் தேதி திறந்து வைக்கப்பட்டது. அதன் பிறகு சென்னை மாநகரின் எத்தனையோ முக்கியமான விழாக்கள் இந்த கட்டடத்தில் நடைபெற்றன. மக்கள் இதைப் பெருமளவு பயன்படுத்தியதால், 1875இல் தொடங்கி இந்த ஹால் அடிக்கடி புனரமைக்கப்பட்டும், விஸ்தரிக்கப்பட்டும் வந்தது. 1857இல் இருந்து மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஆண்டுதோறும் இந்த பிரம்மாண்ட ஹாலில்தான் நடைபெற்றது. 1879இல் செனட் இல்லம் கட்டப்படும் வரை மெட்ராஸ் பட்டதாரிகள் இங்குதான் தங்களின் பட்டங்களை பெற்றுச் சென்றனர்.
 
1938 ஜனவரி 27 - 1939 அக்டோபர் 26 காலகட்டத்தில் மெட்ராஸ் ராஜ்தானியின் சட்டப்பேரவை இங்குதான் செயல்பட்டது. பின்னர் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததும், முதல் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜகோபாலச்சாரியின் நினைவாக, இந்த கட்டடம் 1948இல் ராஜாஜி ஹால் எனப் பெயர் மாற்றப்பட்டது.
Rajaji+Hall.jpg
 
120 அடி நீளமும், 65 அடி அகலமும், 40 அடி உயரமும் கொண்ட இந்த விசாலமான கட்டடம், வெறும் கூட்டங்கள் மட்டுமின்றி சரித்திரப் புகழ்மிக்க பல நிகழ்வுகளுக்கு சாட்சியமாய் இருந்திருக்கிறது. 1961ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்து ராணி எலிசபெத் தனது பிறந்தநாள் கேக்கை இந்த ஹாலில்தான் வெட்டினார். அப்போது முதலமைச்சராக இருந்த காமராஜர் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதே காமராஜர் இறந்தபோது, மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக இதே ராஜாஜி ஹாலில்தான் அவரின் உடல் வைக்கப்பட்டது. இவரைத் தவிர பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற முன்னாள் முதலமைச்சர்களின் உடல்களுக்கு தமிழகமே திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியதையும் இந்த ஹால் கனத்த இதயத்தோடு பார்த்திருக்கிறது.
 
ஓமந்தூரார் அரசினர் தோட்டம் ஒரு காலத்தில் அழகிய வனம்  போல இருந்தது. கொளுத்தும வெயிலிலும் குளிர்ச்சியான நிழல் பரப்பும் நிறைய ஆலமரங்கள் இங்கிருந்தன. ஆனால் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக இதில் பல மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. அரசினர் இல்லம், காந்தி இல்லம் உட்பட இங்கிருந்த சில பழைய கட்டடங்கள் இடித்து தள்ளப்பட்டன. ஆனால் இதில் இருந்து எல்லாம் தப்பிப் பிழைத்து, 200 ஆண்டுகளைக் கடந்து நின்று கொண்டிருக்கிறது ராஜாஜி ஹால்.
 
நன்றி - தினத்தந்தி
 
 
* ஒரு காலகட்டத்தில், இந்த ஹாலை கோலிவுட்காரர்கள் குத்தகைக்கு எடுத்துக் கொண்டதைப் போல, ஏராளமான படப்பிடிப்புகள் இங்கு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன.
 
* புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளால் இந்த ஹால் பலவீனமடைந்துள்ளதாகவும், உடனே இதை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Saturday, May 5, 2012

கலங்கரை விளக்கம்

 

 
கடலில் திக்குத் தெரியாமல் தவிப்பவர்களுக்கு கடவுளைப் போன்றது கலங்கரை விளக்கம். இன்று மெரினாவில் நாம் பார்க்கும் நீண்டு உயர்ந்த கலங்கரை விளக்கத்திற்கு மூன்று மூதாதையர்கள் இருக்கிறார்கள். அவர்களின் கதையை அறிந்துகொள்ள நாம் மூன்று நூற்றாண்டுகள் பின்னோக்கிப் போக வேண்டும்.
 
மெட்ராஸ் வெறும் மணல் வெளியாக இருந்த காலத்தில் இங்கிருந்த மீனவர்கள் சிறிய கட்டுமரங்களைத் தான் பயன்படுத்தினார்கள். அவர்கள் கடலில் மீன் பிடித்துவிட்டு திரும்பும்போது, இருள் நேரத்தில் கரையில் அவர்கள் வீட்டுப் பெண்கள் பெரிய தீப்பந்தங்களை ஏந்தியபடி காத்திருப்பார்கள். அதுதான் அவர்களுக்கு கரையைக் காட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது.
 
பின்னர் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் இங்கு கோட்டை கட்டி வசிக்கத் தொடங்கியதும், அவர்களுக்கான சரக்குகளை ஏற்றியபடி பெரிய கப்பல்கள் இங்கிலாந்தில் இருந்து இந்த பகுதிக்கு வரத் தொடங்கின. ஆனால் அப்போது மெட்ராசில் துறைமுகம் எல்லாம் கிடையாது. எனவே கப்பலை நடுக்கடலிலேயே நிறுத்திவிட்டு, சிறிய படகுகள் மூலம் சென்று கப்பலில் உள்ள சரக்கை கரைக்கு கொண்டு வருவார்கள். கிழக்கிந்திய கம்பெனியார் 1639ஆம் ஆண்டே இங்கு வந்துவிட்டாலும், 1795 வரை அவர்கள் கலங்கரை விளக்கம் என்ற ஒன்றைப் பயன்படுத்தினார்களா என்று தெரியவில்லை. அதற்கான ஆதாரங்களோ, ஆவணங்களோ எதுவும் இல்லை.
 
1796இல் தான் முதன்முறையாக ஜார்ஜ் கோட்டையில் இன்று கோட்டை மியூசியம் இருக்கும் கட்டடத்தின் உச்சியில் ஒரு எச்சரிக்கை விளக்கு பொருத்தப்பட்டது. இதுதான் சென்னையின் முதல் கலங்கரை விளக்கம். இந்த கட்டடத்தின் மேல் தளத்தில் ஒரு பெரிய எண்ணெய் விளக்கு எரிந்துகொண்டிருக்கும். கோட்டை இருக்கும் இடத்தை அறிந்து கப்பலை செலுத்த இது உதவியாக இருந்தது. சுமார் 50 ஆண்டுகள் (1841) வரை இங்கிலாந்தில் இருந்து வந்த கிழக்கிந்திய கப்பல்கள் இந்த விளக்கைத் தான் நம்பி இருந்தன. இப்போது நமது எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்வது போல, கலங்கரை விளக்கும் கோட்டையைவிட்டு ஒரு நாள் வெளிநடப்பு செய்தது.
 
19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மெட்ராஸ் இரண்டாக இருந்தது. ஆங்கிலேயர்கள் எல்லோரும் கோட்டைக்குள் வசித்தார்கள், சென்னையின் பூர்வகுடிகளும், ஆங்கிலேயர்களுக்கு பணிபுரியும் மற்ற இனத்தவர்களும் கோட்டைக்கு மேற்கே சற்று தள்ளி இருந்த பகுதியில் வசித்தார்கள். இது கருப்பர் நகரம் என்று அழைக்கப்பட்டது. கோட்டைக்கும் இந்த கருப்பர் நகரத்திற்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளி இருந்தது.
 
இங்குதான் சென்ன கேசவப்பெருமாள் கோவிலும், சென்ன மல்லீஸ்வரர் கோவிலும் ஆரம்பத்தில் இருந்தன. 1762இல் பரவிய (மர்ம) தீ இந்த பகுதியை கபளீகரம் செய்தது. இதை அடுத்து, கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் இந்த இடத்தை வசப்படுத்தி, இங்கிருந்த இரண்டு கோவில்களையும் தற்போதைய பூக்கடை பகுதியில் மீண்டும் கட்டிக் கொடுத்தனர். பின்னர் இங்கிருந்த காலி மைதானத்தில் ஒரு உயரமான கலங்கரை விளக்கத்தை அமைத்தனர்.
high+court+light+house.jpg
 
சுமார் 2 ஆண்டுகால உழைப்பில் 1841ஆம் ஆண்டு 161 அடி உயர கலங்கரை விளக்கம் கம்பீரமாக எழுந்து நின்றது. இதில் பொருத்துவதற்காக இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரில் இருந்த ஒரு பிரபல நிறுவனத்தில் நவீன விளக்கிற்கு ஆர்டர் கொடுத்திருந்தார்கள். ஆனால் அது உரிய நேரத்தில் கிடைக்காததால், கோட்டையில் இருந்த பெரிய லாந்தர் விளக்கையே இதன் உச்சியில் வைத்துவிட்டார்கள். சுமார் 3 ஆண்டுகள் வரை இந்த லாந்தர் தான் கலங்கரை விளக்கமாக செயல்பட்டது. பின்னர் 1844ஆம் ஆண்டு அந்த நவீன விளக்கு ஆற அமர வந்து கலங்கரை விளக்கத்தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டது. இது சாதாரண விளக்கைப் போல தொடர்ந்து எரியாமல், விட்டுவிட்டு ஃபிளாஷ் அடிக்கும். எனவே மற்ற விளக்குகளில் இருந்து இதனை எளிதாகப் பிரித்தறிய முடியும், வெளிச்சமும் கூடுதலாக இருக்கும். இந்த கலங்கரை விளக்கம் ஒரு அரை செஞ்சுரி போட்டபோது, மீண்டும் இடப்பெயர்ச்சி வந்துவிட்டது.
 
இந்த கலங்கரை விளக்கத்திற்கு அருகில், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்திற்கென ஒரு பிரம்மாண்டமான கட்டடம் 1892ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கட்டடம்தான் அந்த காலத்தில் சென்னையிலேயே மிக உயரமான கட்டடமாக இருந்தது. எனவே கலங்கரை விளக்கம் உயரமான இடத்தில் இருப்பதுதானே சரி என யாரோ கேள்வி எழுப்ப, உயர்நீதிமன்றத்தின் உயரமான மாடம் (175 அடி) ஒன்றிற்கு உடனடியாக மாற்றப்பட்டது. 1894ஆம் ஆண்டு இந்த மாடத்தில் ஏறிய கலங்கரை விளக்கம் 1977 வரை அங்குதான் இருந்தது.
light+house.jpg
 
பின்னர் கலங்ரை விளக்கம் இன்னும் சற்று தூரம் தள்ளி, மெரினா கடற்கரையில் சாந்தோமிற்கு அருகில் இப்போது இருக்கும் இடத்தை வந்தடைந்தது. உயர்நீதிமன்ற கலங்கரை விளக்கம் சட்டென பார்க்கும் போது குதுப் மினார் மாதிரி உயரமாக உருளையாக இருக்கும். ஆனால் மெரினாவில் அமைந்த கலங்கரை விளக்கம், உயரமான பென்சில் டப்பாவைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 187அடி உயரத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்கின் ஒளி, 28 கடல்மைல் தொலைவு தெரியும் அளவுக்கு சக்தி வாய்ந்தது.
 
இப்படித்தான் நமது கலங்கரை விளக்கம், மூன்று சுற்றுகளை முடித்து முழுமை அடைந்து, இன்று கடற்கரையில் ஹாயாக காற்று வாங்கிக் கொண்டிருக்கிறது.
 
நன்றி - தினத்தந்தி
 
* முதல் உலகப் போரின்போது ஜெர்மனின் எம்டன் கப்பல் கலங்கரை விளக்கை குறிவைத்தே உயர்நீதிமன்ற வளாகத்தை நோக்கி குண்டு வீசியதாக கூறப்படுகிறது.
 
* 1970கள் வரை உயர்நீதிமன்ற கலங்கரை விளக்கில் ஏறிப் பார்க்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
 
* தற்போது மெரினாவில் இருக்கும் கலங்கரை விளக்கம் தான் இந்தியாவிலேயே லிப்ஃட் வசதி கொண்ட ஒரே லைட் ஹவுஸ்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Saturday, April 28, 2012

டவுட்டன் இல்லம்

 

 
வகுப்புகளில் உட்கார்ந்திருப்பதை சிறையில் இருப்பதைப் போல இருக்கிறது என்று சில மாணவர்கள் கமெண்ட் அடிப்பதை கேட்டிருப்போம். ஆனால், காலம் இதை உண்மையாக்கிக் காட்டியிருக்கிறது. சென்னையில் சிலரை கைது செய்து வைக்கப் பயன்பட்ட ஒரு பழைய கட்டடத்தில் இன்று ஒரு கல்லூரி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த கட்டடம்தான் சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் டவுட்டன் இல்லம். அந்த கல்லூரி தான் மகளிர் கிறிஸ்துவக் கல்லூரி.
womens+christian+college+in+1916.jpg
 
 
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கும் பல்லாயிரம் மைல் தொலைவில் தென்னிந்தியாவில் இருக்கும் இந்த கட்டடத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. இரண்டுமே ஒரே காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஒரேவிதமான கட்டட அமைப்பில் கட்டப்பட்டவை. ஐரோப்பிய அதிகாரிகள் மெட்ராஸ் வரும்போது தங்குவதற்காக 1798இல் இந்த கட்டடம் கட்டப்பட்டது. முன் பகுதியில் பிரம்மாண்டமான தூண்களையும், பின்னால் பிறைநிலா வடிவிலான படிக்கட்டுகளையும் கொண்ட இந்த அழகிய கட்டடத்தை பெஞ்சமின் ரோபெக் (Benjamin Roebeck) என்ற புகழ்பெற்ற கட்டடக் கலைஞர் வடிவமைத்தார்.
 
அந்த காலத்தில் நுங்கம்பாக்கம் கிராமமாக இருந்தது. முன்புறம் பசுமையான நெல் வயல்கள், பின்புறம் தெள்ளத் தெளிவாக (அப்போது அப்படித்தான் இருந்தது) ஓடிக் கொண்டிருக்கும் கூவம் நதி என ரம்மியமான சூழலில் இந்த வீடு அமைந்திருந்தது. 1837ஆம் ஆண்டு வரை இது பெயரில்லாத கட்டடமாகத் தான் இருந்தது. பிறகுதான் இது டவுட்டன் இல்லம் என நாமகரணம் சூட்டிக் கொண்டது. காரணம், லெப்டினன்ட் ஜெனரலாக இருந்த ஜான் டவுட்டன் (Lt. General John Doveton) என்பவர் அப்போதுதான் இந்த வீட்டை விலைக்கு வாங்கினார். அவருக்கு பிறகு நிறைய ஆங்கிலேய அதிகாரிகள் இதில் தங்கினர். ஆனால் டவுட்டனின் பெயர் ஏனோ அப்படியே நிலைத்துவிட்டது.
இந்த டவுட்டன் என்ற பெயரில் ஏதோ ஈர்ப்பு சக்தி இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அது ஒரு பாரம்பரியமிக்க இந்து பிராமணக் குடும்பம் வரை பாய முடிந்தது. டவுட்டன் தனது இறுதிக் காலத்தில் இந்த வீட்டை தனக்கு நெருக்கமான ஒரு பிராமணக் குடும்பத்திற்கு உயில் எழுதி வைத்தார். அதில் இருந்து அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களுக்கு பின்னால் டவுட்டன் என்ற பெயரையும் சேர்த்துக் கொண்டனர். டவுட்டனுக்கும் அந்த பிராமணக் குடும்பத்திற்கும் இடையிலான பிணைப்பிற்கு என்ன காரணம் எனத் தெளிவாகத் தெரியவில்லை.
 
1792இல் மூன்றாவது மைசூர் போர் முடிவுக்கு வந்தபோது, ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி திப்பு சுல்தான் கிழக்கிந்திய படைக்கு ஒரு பெருந்தொகை தர வேண்டும் என முடிவானது. அதுவரை அவரது இரண்டு மகன்களை கார்ன்வாலிஸ் பிரபு பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தார். அந்த சிறுவர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு டவுட்டனிடம்தான் ஒப்படைக்கப்பட்டது. அந்த சிறுவர்கள் இந்த டவுட்டன் இல்லத்தில்தான் தங்க வைக்கப்பட்டனர் என்று ஒரு தகவல் சொல்கிறது. ஆனால் 1837இல் தான் டவுட்டன் இங்கு வந்ததால், இதற்கான வாய்ப்பு குறைவு என்றே கருதப்படுகிறது.
tipus+sons.jpg
 
 
ஆனால் வேறு ஒரு அரச குடும்பத்தை சேர்ந்தவர் இந்த இல்லத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். அவர்தான் பரோடா இளவரசர் மல்ஹர் ராவ். அவரது ஊரில் இருந்த ஒரு ஆங்கிலேய அதிகாரியை கொல்ல முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் மெட்ராஸிற்கு அனுப்பப்பட்டு, 1875இல் இந்த இல்லத்தில் சில காலம் சிறை வைக்கப்பட்டார்.  
 
இந்த இல்லத்தில் கடைசியாக தங்கிய ஆங்கிலேயர் மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி சர் ரால்ஃப் பென்சன் (Sir Ralph Benson). கூவத்தின் அழகில் மனதைப் பறிகொடுத்த இவர், வெள்ளியை உருக்கி ஊற்றியதைப் போல இருக்கிறது ("placid and silvery Cooum") இந்த நதி என்று குறிப்பிட்டிருக்கிறார்.
 
1913இல் அவர் மெட்ராஸில் இருந்து கிளம்பிய பின்னர், பெண்கள் கிறிஸ்துவக் கல்லூரி இந்த வீட்டை விலைக்கு வாங்கியது. இந்தியப் பெண்களுக்கு உயர்கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கில் 1915ஆம் தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரி, அடுத்த ஆண்டே புகழ்பெற்ற இந்த கட்டடத்திற்கு இடம்பெயர்ந்துவிட்டது. 41 மாணவிகளுடனும், 7 ஆசிரியர்களுடனும் தொடங்கப்பட்ட இந்த கல்லூரியில், இன்று சுமார் 3 ஆயிரம் மாணவிகள் பயில்கின்றனர்.
 
இந்த கல்லூரி வளாகத்திற்குள் இன்று நிறைய கட்டடங்கள் முளைத்துவிட்டன. இதில் கல்வி பயில வரும் இளம்பெண்களை, வயதான தாத்தா பேத்திகளை வாஞ்சையுடன் பார்ப்பதைப் போல பார்த்தபடி நின்றுகொண்டு நிற்கிறது, 200 ஆண்டுகளைக் கடந்த டவுட்டன் இல்லம்.
 
 
நன்றி - தினத்தந்தி
 
 
* 1914இல் இந்திய தேசிய காங்கிரசின் கூட்டம் ஒன்றும் இந்த கட்டடத்தில் நடந்திருக்கிறது.
* மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் மகளிர் கிறிஸ்துவக் கல்லூரிக்கு வருகை தந்துள்ளனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Sunday, April 22, 2012

சென்னை பொது தபால் நிலையம் (ஜி.பி.ஓ)

 
gpo+building.jpg
இன்று உறவுப் பாலங்களுக்கு உரம் சேர்க்க இ-மெயில், எஸ்.எம்.எஸ், சாட்டிங் என தொழில்நுட்பம் நிறைய வசதிகளை செய்து கொடுத்திருக்கிறது. ஆனால் இவையெல்லாம் இல்லாத காலத்தில் தபால்கள் மட்டுமே உறவுகளையும், உணர்வுகளையும் சுமந்தபடி தூது சென்று கொண்டிருந்தன. அந்த தபால்கள் மெட்ராஸ் மாநகரில் முதன்முதலில் எப்படி முளைத்து பின் விஸ்வரூபம் எடுத்தன என்பது ஒரு சுவாரஸ்யமான கதை.
 
1639ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியார் மெட்ராசில் கோட்டை கட்டி குடியேறிவிட்டாலும், ஆரம்ப காலத்தில் அவர்களிடம் சரியான தபால் முறைகள் எதுவும் இல்லை. 1736ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதிதான் இதற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டது. மெட்ராஸ் ராஜ்தானியில் இருந்து பிற இடங்களுக்கு அனுப்பப்படும் பல கடிதங்கள் அல்லது பார்சல்கள் உரியவர்களை சென்று சேராததை அடுத்து, இது குறித்து விவாதிப்பதற்காக ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்பட்டன.
 
இதனை மெட்ராஸ் ராஜ்தானிக்கு உட்பட்ட அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. அதன்படி அன்று முதல் அனுப்பப்படும் கடிதங்கள் அல்லது பார்சல்களின் மீது எண்களை குறிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அந்த பார்சல் ஒரு இடத்தை அடைந்ததும், அங்கிருந்து அடுத்த இடத்திற்கு அது பட்டுவாடா செய்யப்படும் தேதி, நேரம் ஆகியவை பார்சலின் மீதுள்ள வில்லையில் குறிக்கப்பட்டு பின்னரே அனுப்பப்படும். அங்கும் இதே முறை கடைபிடிக்கப்படும். இப்படி பல இடங்கள் மாறி உரிய இடத்தை அடையும்போது, அந்த பார்சல் எங்கெங்கிருந்து எப்போது புறப்பட்டு வந்திருக்கிறது என்ற தகவலை அறிந்துகொள்ள முடியும். கடைசியாக பார்சலைப் பெற்றவர் அதற்கு முன் அது எங்கிருந்து வந்ததோ அந்த அதிகாரியிடம் இதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதன்மூலம் காலதாமதம் ஏற்பட்டாலோ, பார்சல் வராவிட்டாலோ, எந்த இடத்தில் பிரச்னை என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். சுமார் 40 ஆண்டு காலம் இதே முறைதான் பின்பற்றப்பட்டது.
 
1774இல்தான் முதன்முறையாக தனியார் கடிதங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஒரு கடிதம் எத்தனை மைல்கள் பயணப்படுகிறது என்பதை வைத்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக இப்போது நாம் ஸ்டாம்ப் பயன்படுத்துவது போல, அந்த காலத்தில் செப்பு வில்லைகளை கடிதத்தின் மீது ஒட்டி அனுப்புவார்கள்.
 
1785ஆம் ஆண்டு தபால் அலுவலகத்திற்கான விதிமுறைகள் திருத்தப்பட்டன. அடுத்த ஆண்டு மெட்ராசில் இருந்து பம்பாய், கல்கத்தா ஆகிய நகரங்களுக்கு கடிதங்களை கொண்டு செல்லும் மெயில் சேவை தொடங்கப்பட்டது. ஆனால் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் இந்த சேவை கிடைக்கும். இதேஆண்டில்தான் மெட்ராஸ் ஜெனரல் போஸ்ட் ஆபிஸ் தொடங்கப்பட்டது. அப்போதைய மெட்ராஸ் ஆளுநரின் உதவியாளரான கேம்ப்பெல் என்பவர் முதல் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
 
இவருக்கு கீழ் ஒரு துணை போஸ்ட் மாஸ்டர் ஜெனரலும், ஒரு கிளார்க்கும், தபால்களை பிரிப்பதற்கு 5 பேரும், ஒரு தலைமை பியூனும், பத்து தபால்காரர்களும் இருந்தனர். இவர்கள்தான் அன்று மெட்ராஸூக்கு வந்த அனைத்து கடிதங்களையும் கையாண்டனர். தலைமைத் தபால் நிலையம் முதலில் கோட்டைக்குள் செயல்பட்டு பின்னர் பிராட்வே போய் இறுதியாக தற்போதைய இடத்தை வந்தடைந்தது.
 
மெட்ராசில் கடிதப் போக்குவரத்து அதிகரித்ததை அடுத்து தபால் நிலையத்திற்கென தனியாக ஒரு பெரிய கட்டடம் வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்காக இந்திய அரசும், மெட்ராஸ் அரசும் இணைந்து ரூ.2 லட்சம் ஒதுக்கின. பம்பாய் மற்றும் கல்கத்தாவில் தலைமை தபால் நிலையங்கள் கட்ட பணம் கொடுத்துவிட்டதால் அதற்கு மேல் ஒதுக்க நிதி இல்லை என இந்திய அரசு தெரிவித்துவிட்டது. எனவே 1873ஆம் ஆண்டே தபால் நிலையத்திற்கான இடத்தை தேர்வு செய்துவிட்டபோதிலும், பணம் இல்லாததால் 1880 வரை பணிகள் சூடுபிடிக்கவில்லை.
 
பின்னர் 1884இல் ஒருவழியாக கடற்கரைச் சாலையில் மொத்தம் ரூ.6,80,000 செலவில் பிரம்மாண்டமான மூன்று மாடிக் கட்டடம் கட்டப்பட்டது. மெட்ராஸ் வர்த்தக சபை இதில் கணிசமான தொகையை வழங்கியது. 352 அடி நீளமும், 162 அடி அகலமும், 125 அடி உயர இரட்டை கோபுரங்களையும் கொண்ட இந்த அழகிய கட்டடத்தை அப்போதைய அரசின் மூத்த கட்டட ஆலோசகரான ராபர்ட் சிஸ்ஹோம் வடிவமைத்துக் கொடுத்தார். அன்று முதல் இன்று வரை மெட்ராஸ் மாநகரின் மிக அழகிய கட்டடங்களில் ஒன்றாக இந்த இந்தோ-சராசனிக் பாணி கட்டடம் திகழ்ந்து வருகிறது.
 
இதனிடையே 1853ஆம் ஆண்டு மெட்ராசில் இருந்து ரயில் மூலம் கடிதங்களை அனுப்பும் முறை தொடங்கியது. அதற்கு அடுத்த ஆண்டுதான் முதன்முதலில் மெட்ராசில் தபால் தலை அறிமுகப்படுத்தப்பட்டது. 1864ஆம் ஆண்டு மெட்ராஸ் மாநகரில் மொத்தம் 9 தபால் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. 1870-1880 காலகட்டத்தில் பல புதிய விஷயங்கள் தபால் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டன. அலுவலக கடிதங்களுக்கு அதிக கட்டணம், வி.பி.தபால்கள், மணியார்டர் போன்றவை நடைமுறைக்கு வந்தன.
 
1872இல் கப்பல் மூலம் 15 நாட்களுக்கு ஒருமுறை மெட்ராசில் இருந்து பர்மாவின் ரங்கூன் நகருக்கு கடிதங்கள் கொண்டு செல்லப்பட்டன. 1886இல் மெட்ராசில் இருந்து இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள துறைமுகங்களுக்கு இதேபோன்ற சேவை தொடங்கியது.
 
1915ஆம் ஆண்டு வரை, மெட்ராஸ் மாநகரில் குதிரை வண்டிகள் மூலம் தான் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்பட்டன. பின்னர் சோதனை முறையில் இரண்டு மோட்டார் வாகனங்கள் தபால் துறைக்கு வழங்கப்பட்டன. அவை அதிக பயன் அளித்ததால், 1918ஆம் ஆண்டு குதிரைகளின் இடத்தை மோட்டார் வாகனங்கள் முழுமையாக பிடித்துக் கொண்டன.
 
பின்னர் வேகமெடுத்த தபால் துறை பல்வேறு சேவைகள் மூலம் மெட்ராஸ்வாசிகளின் வாழ்வின் பிரிக்க முடியாததொரு அங்கமாகிப் போனது. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தபால் நிலையங்களின் அவசியம் தற்போது குறைந்துவிட்டாலும், உறவுகளிடம் இருந்து வந்த கடிதங்களை ஆர்வமுடன் பிரித்து படித்த, அந்த பழைய நினைவுகள் மட்டும் அப்படியே நெஞ்சில் நிழலாடுகிறது.
 
நன்றி - தினத்தந்தி
 
* 2000ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜெனரல் போஸ்ட் ஆபிஸ் கட்டடத்தின் ஒரு பகுதியை தீ தின்றதால், இது மீண்டும் புனரமைக்கப்பட்டது.
* 2011ஆம் ஆண்டு பெருமழை காரணமாக இந்த கட்டடத்தின் ஒரு பகுதி கூரை இடிந்து விழுந்தது.
* 1852இல் தான் ஆசியாவிலேயே முதன்முறையாக தற்போதைய பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் ஸ்டாம்ப் அறிமுகமானது
* தற்போது இந்தியாவில் மொத்தம் 1,55,333 தபால் நிலையங்கள் இருக்கின்றன.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Sunday, September 23, 2012

சர்ச்சை நாயகன் எலிஹூ யேல்

 

அமெரிக்காவின் புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாக இருந்ததே மெட்ராஸ்தான். ஆம், மெட்ராஸ் வாரித் தந்த செல்வத்தில் இருந்து ஒரு பகுதியைக் கொண்டுதான் இந்த பல்கலைக்கழகம் வளர்ந்தது. இதற்கு நன்கொடை அளித்ததன் மூலம் சரித்திரத்தில் தனது பெயரை ஆழமாகப் பதித்துக் கொண்ட எலிஹூ யேலின் கதை மிகவும் விறுவிறுப்பானது.
 
இங்கிலாந்தைச் சேர்ந்த யேலின் குடும்பம் உள்நாட்டு குழப்பம் காரணமாக அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தது. அங்குதான் 1649இல் எலிஹூ யேல் பிறந்தார். பின்னர் இங்கிலாந்தில் இயல்புநிலை திரும்பியதால், யேலுக்கு மூன்று வயதாகும்போது அவரின் குடும்பம் மீண்டும் தாயகத்திற்கே வந்துவிட்டது. சற்றே வசதியான குடும்பத்தைச் சேர்ந்த எலிஹூ யேல், 1671 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு செல்லும் கிழக்கிந்திய கம்பெனியின் கப்பலில் ஏறினார். அந்தப் பயணம் தனது வாழ்வையே மாற்றப் போகிறது என்பது அப்போது அவருக்குத் தெரியாது.
 
Elihu_Yale.jpeg
எலிஹூ யேல்
24 வயதில் சாதாரண எழுத்தராக மெட்ராசிற்கு வந்த யேல், 15 வருட உழைப்பில் மெட்ராசின் இரண்டாவது கவர்னராக உயர்ந்தார். 1687இல் இருந்து 1692 வரை ஆளுநராக இருந்த யேல் (1684இல் ஆறுமாத காலம் தற்காலிக ஆளுநராக பொறுப்பு வகித்தார்), மெட்ராசின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணகர்த்தாவாக இருந்தார். மராட்டியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பரங்கிப்பேட்டை, கடலூர், குனிமேடு போன்ற இடங்களில் ஆங்கிலேயர்கள் குடியிருக்கவும், வியாபாரம் செய்யவும் உரிமைகளைப் பெற்றுத் தந்தவர் யேல். முகலாயர்களிடம் இருந்து மசூலிப்பட்டினம், விசாகப்பட்டினம் போன்ற சோழமண்டலத் துறைமுகங்களின் உரிமைகளையும் யேல் பெற்றுத் தந்தார்.
 
1689இல் முதல் இந்தியப் பட்டாளத்தை உருவாக்கிய யேல், திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை, புரசைவாக்கம், எழும்பூர் ஆகிய பகுதிகளின் உரிமைகளைப் பெற தீவிரமாக முயற்சித்தார். ஆனால் அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஓராண்டுக்கு பிறகுதான் இது சாத்தியமானது. இந்தப் பகுதிகள் எல்லாம் இன்று சென்னையின் முக்கிய அங்கமாகத் திகழ்வதற்கு அஸ்திவாரம் போட்டவர் எலிஹூ யேல்தான். அவரது காலத்தில்தான் இந்தியாவின் முதல் மாநகராட்சியான சென்னை மாநகராட்சி உருவானது. ஆனால் இது யேலுக்கு எதிரான நடவடிக்கையின் பலனாகப் பிறந்தது.
 
யேல்கவர்னராக இருந்தபோது கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குனராக ஜோசைய்யா சைல்டு என்பவர் இருந்தார். அவர்யேலின் தன்னிச்சையான நிர்வாகத்தை அடக்கவும்அதிகாரத்தைக் குறைக்கவும்நகராட்சி போன்ற அமைப்பு  வேண்டும் என கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் பரிந்துரை கடிதம் எழுதினார். அதற்காக வழங்கப்பட்ட உரிமை சாசனத்தால்தான் 1688செப்டம்பர் 29-ம் தேதி சென்னை கார்ப்பரேஷன் உருவானது.
 
யேல் கவர்னராக இருந்த போதுதான் சென்னை அரசு பொது மருத்துவமனை விரிவுபடுத்தப்பட்டது. எலிஹூ யேலின் திருமணம்ஜார்ஜ் கோட்டையில் உள்ள புனித மேரி தேவாலயத்தில்தான் நடந்தது. இப்படி யேலை நினைவு கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
 
yale's+marraige+document.JPG
யேலின் திருமணச் சான்றிதழ்
 
ஆனால் யேலின் சாதனைகளைவிட அவர் மீதான சர்ச்சைகளே அதிகம். இளமையிலேயே இறந்துபோன யேலின் மகன் டேவிட்டின் உடல் சென்னையில்தான் அடக்கம் செய்யப்பட்டது. மகனின் நினைவாக கடலூர் அருகே உள்ள தேவனாம்பட்டினத்தில் டேவிட் கோட்டை என்ற பெரிய கோட்டை ஒன்றை இரண்டு மில்லியன் செலவில் யேல் கட்டினார். அந்தப் பணம் முறைகேடாக சம்பாதித்தது என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியேல் பதவி இழந்தார். ஆனால் அதற்குள் எக்கச்சக்கமாக சொத்து சேர்த்துவிட்டார்.27 ஆண்டுகள் இந்தியாவில் பணியாற்றிய யேலின் சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய்க்கும் மேல் என்கிறார்கள்.

அந்த காலத்தில் கவர்னர் பதவிக்கே வெறும் 100 பவுண்ட்தான் சம்பளமாக வழங்கப்பட்டது. அப்படி இருக்க, 100 கோடி ரூபாயை யேல் எப்படி சம்பாதித்தார் இதற்கு முக்கியக் காரணம் அந்த காலத்தில் சென்னையில் நடைபெற்ற அடிமை வணிகம். இதன் மூலம் யேலுக்கு நிறைய வருவாய் கிடைத்தது. இதுமட்டுமின்றி யேல், வருவாயை அதிகப்படுத்திக்கொள்ள பல்வேறு அதிகார துஷ்பிரயோகங்களிலும் இறங்கினார். கம்பெனிக்கு தெரியாமல் வைர வணிகத்திலும் ஈடுபட்டார். உள்ளூர் வரியை மிதமிஞ்சி உயர்த்தியதோடு மக்களைக் கடுமையாகத் தண்டிக்கவும் செய்தார். இவரது குதிரை லாயத்தில் வேலை செய்த ஒருவன் குதிரையைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்தக் காலத்​தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
 
yale+university.jpg
யேல் பல்கலைக்கழகம்
பதவி பறிக்கப்பட்டதும் யேல் இங்கிலாந்து திரும்பினார். 1718-ம் ஆண்டு அவரின் 69-வது வயதில் காட்டன் மதேர் என்பவர்அமெரிக்காவின் கனெடிக்கெட் பகுதியில் உள்ள தங்களது இறையியல் நிறுவனத்தை கல்வி நிலையமாக மாற்ற நிதி அளிக்குமாறு வேண்டினார். யேலும்தாராள மனதுடன் தன்னிடம் இருந்த புத்தகங்கள்ஜார்ஜ் மன்னரின் ஒவியம்உடைகள், மரச் சாமான்கள் போன்றவற்றை பரிசாக அளித்தார். இவற்றை ஏலத்தில் விட்டதன் மூலம் கிடைத்த 562 டாலர் பணத்தைக் கொண்டு புதிய கட்டடம் கட்டப்பட்டது. அந்த கல்வி நிறுவனத்துக்கு அவரின் பெயரும் சூட்டப்பட்டது. அதன் பிறகுஅது பெரிய பல்கலைக்கழகமாக வளர்ச்சி அடைந்தது. 1745-ம் ஆண்டு முதல் அந்தப் பல்கலைக்கழகத்துக்கே யேலின் பெயர் சூட்டப்பட்டுவிட்டது.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் யேலை விட அதிகமான நிதி அளித்தவர் ஜெரேமியா டம்மர் என்பவர். அவரது பெயரைத்தான் பல்கலைக்கழகத்துக்கு சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. டம்மர் என்றால் வாய் பேச முடியாதவர் என்று பொருள். ஆகவேபல்கலைக்கழகத்துக்கு டம்மரின் பெயரை வைக்காமல் தவிர்த்துவிட்டதாக சொல்லப்படுகிறது. 
 
yales+grave.jpg
யேலின் கல்லறை

மொத்தத்தில் யேல் மெட்ராசில் அடித்த கொள்ளைக்கு அமெரிக்காவில் தேடிய பிராயச்சித்தம்தான் யேல் பல்கலைக்கழகம். ஆனால் கடைசியில் அதிலும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.
 
நன்றி - தினத்தந்தி
 
* இந்தியாவில் யூனியன் ஜாக் கொடியை 1687-ம் ஆண்டு யேல்தான் முதன்முறையாக பறக்கவிட்டவர்.
 
* புனித ஜார்ஜ் கோட்டையில் இவர் நட்டுவைத்த 50 அடி உயர கொடிக் கம்பம்தான் இந்தியாவில் மிகப் பெரிய கொடிக் கம்பமாக விளங்கியது.
 
அறிஞர் அண்ணா அமெரிக்கா சென்றபோது புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகத்தில் உரையாற்றி இருக்கிறார். உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து 'தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர் என்று தெரியும். ஆங்கில எழுத்துகளான ‘A,B,C,D’ ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற முடியுமா?' எனக் கேட்டார். உடனடியாக ஒன்று முதல் தொண்ணூற்று ஒன்பது வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொன்னார் அண்ணா. இவை எதிலும் மேற்சொன்ன நான்கு எழுத்துகளும் வராது. ஆனால் நூறு என்பதை ஆங்கிலத்தில் சொன்னால் ’D’ என்ற எழுத்து வந்து விடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்தபோது 'STOP' எனக் கூறி நிறைவு செய்தார். 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 Saturday, September 15, 2012

புனித ஜார்ஜ் பள்ளி

 

அண்மைக் காலமாக சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்று வரும் புனித ஜார்ஜ் இலவசப் பள்ளிதான் இந்தியாவிலேயே முதன்முதலாக நிறுவப்பட்ட மேற்கத்திய பாணி பள்ளிக்கூடம். அவ்வளவு ஏன், அந்தக் கால சிவப்புக் கட்டடங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் இதுதான் ஆசியாவிலேயே பழைய மேற்கத்திய பாணிப் பள்ளி என்றும் சொல்லப்படுகிறது. 300 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த பள்ளியின் ஆரம்பப் புள்ளி புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்துதான் தொடங்கியது.
st+george+school.jpg
புனித ஜார்ஜ் பள்ளி
கிழக்கிந்திய கம்பெனியார் வியாபாரம் செய்வதற்காகத்தான் மெட்ராஸ் என்ற நிலப்பகுதியில் குடியேறினர். எனவே ஆரம்ப நாட்களில் அவர்களின் கவனம் முழுவதும் வியாபாரத்தில் தான் இருந்தது. மற்ற எதைப் பற்றியும் அவர்கள் அதிகமாக கவலைப்படவில்லை. இந்நிலையில் வெள்ளையர் நகரத்தில் வசித்த எப்ரைம் என்ற பிரெஞ்சுப் பாதிரியார் தனது வீட்டிலேயே ஒரு சிறிய பள்ளியை தொடங்கினார்.
 
மெட்ராசில் குடியேறிய புதிதில் கிழக்கிந்திய கம்பெனியில் மணமாகாத இளைஞர்களே பெருமளவில் இருந்ததால் கம்பெனி ஊழியர்களின் குழந்தைகள் கோட்டைக்குள் குறைவாகவே இருந்தனர். இதனிடையே ரோமன் கத்தோலிக்கர்கள் சிலரும் பள்ளிகளைத் தொடங்கினர். இதனால் அச்சமடைந்த பிராடஸ்டன்டுகள், தங்கள் குழந்தைகளுக்கென ஒரு ஆசிரியர் தேவை என இங்கிலாந்து நிர்வாகத்திடம் வலியுறுத்தினர். இதனை ஏற்று பிராடஸ்டன்ட் பிரிவைச் சேர்ந்த ரால்ப் ஒர்டே என்ற திறமையான ஆசிரியர் 1677இல் அனுப்பி வைக்கப்பட்டார். இவர் குழந்தைகளுக்கு கிறிஸ்துவ பிராடஸ்டன்ட் பிரிவுக் கொள்கைகளை கல்வியோடு சேர்த்து போதித்தார். இதுதான் ஆங்கில அரசு இந்தியாவில் கல்விப் பணியில் எடுத்து வைத்த முதல் அடி.
 
சுமார் 40 ஆண்டுகாலம் இந்த பள்ளி நடைபெற்று வந்த நிலையில், இங்கிலாந்தில் இருந்து சென்னையில் குடியேறிய பிராடஸ்டன்ட் குழந்தைகளுக்காக அரசே ஒரு புதிய இலவசப் பள்ளியை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதன்படி கோட்டையின் பாதிரியாராக இருந்த வில்லியம் ஸ்டீவன்ஸன் 1715இல், 'புனித மேரி தேவாலய தர்ம பள்ளி'-யைத் தொடங்கினார்.
 
இந்த காலகட்டத்தில் பிரெஞ்சுப் படை கிழக்கிந்திய படையுடன் அடிக்கடி மோதி வந்தது. எனவே கோட்டைக்குள் இருப்பது பாதுகாப்பானது அல்ல என சொல்லப்பட்டதால் பள்ளியை கோட்டைக்கு வெளியே மாற்றுவது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து பள்ளி செயல்பட்டு வந்த இடம் அரசுக்கு 300 பகோடாக்களுக்கு (அந்தக்கால பணம்) விற்கப்பட்டது. அரசு இழப்பீடாக மேலும் 400 பகோடாக்களைத் தந்தது. இதனைக் கொண்டு கோட்டைக்கு வெளியே 1751இல் தீவுத்திடலில் ஒரு வாடகை இடத்திற்கு பள்ளி மாற்றப்பட்டது.
 
இதனிடையே ஏற்கனவே சென்னையில் இயங்கிக் கொண்டிருந்த ஆண், பெண் ஆதரவற்றோர் இல்லங்களுடன் இந்த பள்ளி இணைக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் எண்ணிக்கை 100க்கும் அதிகமாக உயர்ந்ததால் அந்த இடம் போதவில்லை. எனவே இப்போது எழும்பூர் ரயில் நிலையம் இருக்கும் இடத்திற்கு பள்ளி இடம்மாறியது. இப்படியே சில ஆண்டுகள் கழிந்த நிலையில், ரயில்வே நிர்வாகம் எழும்பூர் ரயில் நிலையத்தை விஸ்தரிக்க விரும்பியதால் மீண்டும் ஒரு இடப்பெயர்ச்சிக்கு ஆளானது இந்தப் பள்ளி. அப்படித்தான் பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் இருக்கும் இந்த இடத்திற்கு கடைசியாக வந்து சேர்ந்தது புனித மேரி இலவசப் பள்ளி.
 
பிரிகேடியர் கான்வே என்ற ஆங்கிலேய அதிகாரிக்கு சொந்தமான 21 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம், அந்தக் காலத்தில் 29,750 ரூபாய்க்கு வாங்கப்பட்டது. கான்வேயின் பளிங்கு சிலை ஒன்று கோட்டைக்குள் இருக்கும் புனித மேரி தேவாலயத்தில் இன்றும் இருக்கிறது. இந்த பள்ளி வளாகத்தில் உள்ள தேவாலயம் 1883 - 84 -ம் ஆண்டில் கட்டப்பட்டது. இங்கிலாந்தின் ஒரு கிராமப்புற தேவாலயம் போல தோற்றமளிக்கும் இதனைக் கட்ட அந்தக் காலத்திலேயே 16,000 ரூபாய் வரை செலவானதாம்.
 
இரண்டாம் உலகப் போருக்கும் இந்த பள்ளிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. காரணம் போரின் போது, ராணுவ வீரர்களின் பயன்பாட்டிற்காக இந்த பள்ளி ஒதுக்கப்பட்டது. எனவே 1945- 46 -ம் ஆண்டில் அரசு உத்தரவின்படி,கோவையில் இயங்கி வந்த ஸ்டேன்ஸ் பள்ளி வளாகத்துக்கு இந்த பள்ளி மாற்றப்பட்டது. இறுதியாக, 1954 - ல் கோவையிலிருந்து மீண்டும் சென்னைக்கு மாற்றப்பட்ட பிறகுதான் இது புனித ஜார்ஜ் பள்ளி மற்றும் ஆதரவற்றோர் இல்லம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
 
உருண்டோடிய இந்த இரண்டு நூற்றாண்டுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு கல்வி பெற்றுச் சென்றுவிட்டனர். எத்தனையோ கல்விமான்கள் இங்கு தங்களின் அறிவை அடுத்த தலைமுறைக்கு அளித்துச் சென்றுள்ளனர். ஆங்கிலேய ஆதிக்க நாட்கள், சுதந்திரப் போராட்ட நாட்கள், சுதந்திரத்திற்கு பிந்தைய சுகமான நாட்கள் என வரலாற்று சிறப்புமிக்க பல நினைவுகளை சுமந்தபடி இன்றும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் இந்த சிவப்புக் கட்டடங்களுக்கு இடையே நடைபயிலும்போது, மெட்ராசின் சரித்திரம் சக பயணியாக உடன் வருவது போலவே இருக்கிறது.
 
நன்றி - தினத்தந்தி
 
* ஆரம்ப நாட்களில் இந்த பள்ளியில் ஆங்கிலேயர்களின் குழந்தைகள் மட்டுமே கல்வி கற்றனர்.
* விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான மாணவர்களோடு தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் இன்று 1500க்கும் அதிகமானோர் பயில்கின்றனர். 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Saturday, September 8, 2012

புனித மேரி தேவாலயம்

 

ஜார்ஜ் கோட்டைக்குள் இருக்கும் புராதனமான புனித மேரி தேவாலயம்தான் சூயஸ் கால்வாயின் கிழக்கே உள்ள பழமையான ஆங்கிலத் திருச்சபை. கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் மெட்ராசில் கால் பதித்த 1639ஆம் ஆண்டு முதல் 1678ஆம் ஆண்டு வரை கோட்டைக்குள் இருந்த உணவு பரிமாறும் அறையில்தான் மத நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இதுதவிர ஒரு சிறிய கத்தோலிக்க தேவாலயமும் இருந்தது. ஸ்ட்ரெயின்ஷாம் மாஸ்டர் கம்பெனியின் ஏஜெண்டாக நியமிக்கப்பட்ட பிறகுதான் இதில் மாற்றம் வந்தது.
st,+marys+church.jpg
புனித மேரி தேவாலயத்தின் பழைய தோற்றம்
 
கம்பெனியின் அலுவலர்கள் உள்ளம் உருகி பிரார்த்திக்க ஒரு தரமான விஸ்தாரமான தேவாலயம் தேவை என்று நினைத்த ஸ்ட்ரெயின்ஷாம் மாஸ்டர் அதற்கான பணிகளைத் தொடங்கினார். எனவே கம்பெனியின் ஒப்புதலைப் பெறாமலேயே தேவாலயம் கட்ட நிதி திரட்ட ஆரம்பித்துவிட்டார். முதல் ஆளாக அவரே 100 பகோடாக்கள் (அந்தக் கால பணம்) கொடுத்து வசூலைத் தொடங்கி வைக்க, விரைவிலேயே 805 பகோடாக்கள் சேர்ந்தன. புனித மேரியின் அவதார தினமான மார்ச் 25, 1678இல் கட்டுமானப் பணிகள் தொடங்கியதால், தேவாலயத்திற்கு அவரது பெயரே சூட்டப்பட்டுவிட்டது.
 
அப்போது கோட்டையின் பீரங்கித் தலைவராக இருந்த வில்லியம் டிக்சன், பீரங்கித் தாக்குதல்களையும் தாங்கக் கூடிய அளவில் வலுவான ஒரு தேவாலயத்தை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனையடுத்து செங்கல், கருங்கல், சுண்ணாம்பு ஆகியவற்றால் நடைபெற்ற கட்டுமானம் இரண்டு ஆண்டுகளில் நிறைவடைந்து, அக்டோபர் 28, 1680ஆம் ஆண்டு இந்த தேவாலயம் தொடங்கி வைக்கப்பட்டது.  
 
பிரெஞ்சுப் படைகளின் அச்சுறுத்தல் இருந்ததால், பீரங்கி குண்டுகள் துளைக்காமல் இருக்க தேவாலயத்தின் கூரை சுமார் 2 அடி கனத்தில் மிக மிக உறுதியாக அமைக்கப்பட்டது. இதுமட்டுமின்றி பந்து போன்ற வட்டவடிவில் இருந்த அந்தக்கால பீரங்கிக் குண்டுகள் கூரை மீது விழுந்தாலும், விழுந்த உடன் வெளியே சிதறி விடும் வகையில் மேல்புறத்தை வடிவமைத்திருந்தனர். வெளிப்புறச் சுவர்கள் சுமார் 4 அடி கனத்தில் உறுதியாக அமைக்கப்பட்டன. தீ விபத்து போன்றவை நிகழாமல் தடுக்க முடிந்தவரை மரத்தின் பயன்பாட்டையும் தவிர்த்தனர்.
 
தேவாலயத்திற்கு அருகில் இன்று காட்சியளிக்கும் நீண்ட கோபுரம் 1701இல் கட்டப்பட்டு, இதன் கூம்பு 1710இல் சேர்க்கப்பட்டது. பின்னர் பாதுகாப்பறை, கோபுரங்கள், புதிய ஆராதனை மேடை என காலப்போக்கில் நிறைய விஷயங்கள் புதிதாக இணைந்து கொண்டன. தேவாலயத்தின் முன்புறம் பதிக்கப்பட்டுள்ள ஏராளமான கல்லறைக் கற்கள் அப்படி வந்து சேர்ந்தவைதான். சென்னை நகரின் பல முக்கியப் பிரமுகர்களின் கதைகளை சொல்லும் இந்த கற்கள், இங்கு வந்து சேர்ந்ததே ஒரு தனிக் கதை.
ST_MARYS_CHURC.jpg
தேவாலயத்தின் கோபுரம்
 
1758-59இல் பிரெஞ்சுப் படைகள் சென்னையை முற்றுகையிட்ட போது, இன்றைய சட்டக்கல்லூரி இருக்கும் இடத்தில்தான் போர் நடைபெற்றது. அந்தக் காலத்தில் இந்த பகுதி வெறும் சுடுகாடாக இருந்தது. எனவே இங்கிருந்த கல்லறை மேடைகளை பீரங்கி நிறுத்தவும், கல்லறை ஸ்தூபிகளை மறைந்துகொண்டு சுடவும் பிரெஞ்சுப் படையினர் பயன்படுத்தினர். இதனால் கடுப்பாகிப் போன கம்பெனியினர், போரெல்லாம் ஓய்ந்த பிறகு இந்த இடத்தில் இருந்த கல்லறைக் கற்களை அகற்றி புனித மேரி தேவாலயத்தின் முற்றத்தில் பதித்துவிட்டனர்.
 
அதன் பிறகும் அந்த இறந்த ஆன்மாக்களை ஆங்கிலேயர்கள் அமைதியாக விடவில்லை. 1782இல் ஹைதர் அலி கோட்டையை முற்றுகையிட்டபோது, பீரங்கிகளை நிறுத்துவதற்கு தேவை என அந்தக் கற்களை மீண்டும் தோண்டி எடுத்துப் பயன்படுத்தினர். இதனால் பல கற்கள் உடைந்து போயின. இந்த சோதனைகளை எல்லாம் தாண்டி இப்போது சில கற்களே பிழைத்திருக்கின்றன.
 
அன்றைய சென்னை மாநகரின் பல பெரிய மனிதர்களின் கல்யாண வாழ்க்கையும் இந்த தேவாலயத்தில்தான் தொடங்கி இருக்கிறது. இங்கு முதன்முதலில் திருமண மோதிரம் அணிவித்தவர் திருவாளர் எலிஹூ யேல். இவர் தான் அமெரிக்காவின் புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகத்திற்கு அஸ்திவாரம் போட்டவர். அதேபோல பிரிட்டீஷ் - இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நபரான ராபர்ட் கிளைவின் திருமணமும் இந்த தேவாலயத்தில்தான் நடைபெற்றது. இப்படி 1680இல் இருந்து இங்கு நடைபெற்ற திருமணங்கள், ஞானஸ்நானங்கள், இறுதிச் சடங்குகள் போன்றவற்றின் விவரம் இங்குள்ள குறிப்பேட்டில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு பார்வைக்கும் வைக்கப்பட்டிருக்கிறது.
 
சென்னையின் புகழ்பெற்ற ஆளுநர்களாக இருந்த லார்ட் பிகட், தாமஸ் மன்றோ ஆகியோர் இங்குதான் ஆழ்துயிலில் ஆழ்ந்திருக்கின்றனர். இதுமட்டுமின்றி கல்கத்தா நகரை நிர்மாணித்த ஜாப் சார்னாக்கிற்கும் இந்த தேவாலயத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இவரது மூன்று மகள்களுக்கு இங்கு தான் ஞானஸ்நானம் செய்து வைக்கப்பட்டது. பிகாரில் கணவனின் சிதையில் விழுந்து இறக்க முயன்ற ஒரு இந்து விதவையை காப்பாற்றி வாழ்க்கை கொடுத்தவர் இந்த ஜாப் சார்னாக். இவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்குத்தான் இங்கு ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டது.
 
இப்படி இன்னும் ஏராளமான கதைகள் இங்குள்ள காற்றில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றன. சென்னையின் ஆரம்ப நாள் கதைகளைப் பேசும் இந்த தேவாலயத்திற்குள் வெறுங்காலில் நடக்கும்போது, சரித்திரம் கால்களுக்கு அடியில் ஒரு அமைதியான நதியாக நழுவிச் செல்வதை உணர முடிகிறது.
 
நன்றி - தினத்தந்தி
 
* தேவாலயம் தொடர்பான பல பழம்பொருட்கள் அருகில் இருக்கும் கோட்டை அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
* பலிபீடத்தின் மேல் இருக்கும் 'கடைசி இரவு உணவு' ஓவியம் ரஃபேல் பாணியில் வரையப்பட்டுள்ளது. ஆனால் வரைந்தவர் யார் எனத் தெரியவில்லை. இதன் ஒரு பகுதியை ரஃபேலே வரைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
* பலி பீடத்தின் இரும்புத் தடுப்புகள் தஞ்சாவூர் இளவரசியால் 1877இல் பரிசாக அளிக்கப்பட்டவை.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Saturday, September 1, 2012

கவர்னரான வைர வியாபாரி

 

வந்தாரை வாழ வைக்கும் மதராசபட்டினம் எத்தனையோ பேருக்கு வசந்தத்தின் வாசலைத் திறந்துவிட்டிருக்கிறது. சாமானியர்களாய் வந்தவர்களை சரித்திர ஏடுகளில் சாகாவரம் பெற்றவர்களாய் நிலைக்கச் செய்திருக்கிறது. அப்படி மெட்ராசால் மேன்மை பெற்ற ஒருவர்தான் கவர்னர் தாமஸ் பிட்.
diamondpitt.gif
தாமஸ் பிட்
 
1653இல் இங்கிலாந்தில் பிறந்த தாமஸ் பிட், தனது இருபத்தியோராவது வயதில் இந்தியா வந்தார். ஒரிசாவின் பாலாசூர் நகரில் தங்கியிருந்த பிட், கிழக்கிந்திய கம்பெனியின் ஒப்புதலைப் பெறாமலே கிழக்கிந்திய நாடுகளுடன் வணிகம் செய்து வந்தார். இதனால் கம்பெனிக்கும் இவருக்கும் அடிக்கடி முட்டிக் கொண்டது. இவரை ஒடுக்க கம்பெனி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால் பிட் அவை அனைத்தையும் வெற்றிகரமாக முறியடித்துக் கொண்டே இருந்தார்.
 
இதனிடையே 1683இல் இங்கிலாந்து சென்ற பிட்டை அங்கேயே மடக்கிப் பிடித்து, கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான அவரது செயல்களுக்காக 400 பவுண்டுகள் அபராதம் விதித்தார்கள். ஆனால் அதற்குள் பிட் இந்தியாவில் எக்கச்சக்கமாக சம்பாதித்து விட்டதால், அந்த தொகையை பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் கட்டிவிட்டார். இருந்தாலும் சிறிது காலம் அடக்கி வாசிக்க முடிவு செய்த அவர், இங்கிலாந்திலேயே சில ஆண்டுகள் தங்கி இருந்தார். அங்கு நிறைய நிலங்களை வாங்கிப் போட்ட பிட், எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.
 
பின்னர் 1693இல் மீண்டும் இந்தியா வந்த தாமஸ் பிட், இம்முறை கிழக்கிந்திய கம்பெனியுடன் சமாதானம் செய்து கொண்டார். அவரது திறமையை புரிந்துகொண்ட கம்பெனி அவருக்கு தலைவர் பதவி கொடுத்து மெட்ராசிற்கு அனுப்பியது. அடுத்த ஆண்டே அவர் புனித ஜார்ஜ் கோட்டையின் கவர்னராக நியமிக்கப்பட்டார்.
 
முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் தளபதியான தாவூத் கான், 1702ஆம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டையை மூன்று மாதங்களுக்கும் மேலாக முற்றுகையிட்டிருந்தபோது, கோட்டையின் கவர்னராக தாமஸ் பிட்தான் இருந்தார். அவரது சமரச முயற்சிகளின் பலனாக முற்றுகை விலக்கிக் கொள்ளப்பட்டது. பின்னர் வருங்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் தடுக்க உள்ளூர் வீரர்களை கம்பெனியின் படையில் சேர்த்து கோட்டைக்கு வலுசேர்த்தார் தாமஸ் பிட்.
 
மெட்ராஸ் நகரை முதன்முறையாக துல்லியமாக சர்வே எடுக்க ஏற்பாடு செய்தது போன்ற நடவடிக்கைகளால் தாமஸ் பிட்டின் ஆட்சிக் காலத்தை மெட்ராசின் பொற்காலம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 1708இல் திருவொற்றியூர், கத்திவாக்கம், நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, சாத்தங்காடு ஆகிய கிராமங்களை தாவூத் கானிடம் இருந்து மானியமாகப் பெற்று மெட்ராசுடன் இணைத்ததும் தாமஸ் பிட்தான்.
 
தனக்கு இவ்வளவு செய்த பிட்டிற்கு, மெட்ராஸ் ஒரு பெரிய வைரத்தை பரிசளித்தது. ஆம், இந்தியாவில் கிடைத்த பெரிய வைரங்களில்முக்கியமானது ரீஜென்ட் வைரம். இந்த வைரத்திற்கு மற்றொரு பெயர் என்ன தெரியுமா?... பிட் வைரம் (Pitt Diamond). இந்த வைரம்கோல்கொண்டாவின் பர்க்கால் சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது.
 
வெட்டி எடுத்தபோது 410 காரட்டாக இருந்த இந்த வைரத்தை 1701ஆம் ஆண்டு கவர்னர் தாமஸ் பிட் 48,000 பகோடாக்கள் விலை கொடுத்து வாங்கினார். பின்னர் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டு பட்டை தீட்டப்பட்டதும் இது 137 காரட்டாக குறைந்தது.  பிட் வைரம் என்று அழைக்கப்பட்ட இதனை பிரெஞ்சு அரசுக்கு 1,35,000 பவுண்டுகளுக்கு விற்று மிகப் பெரிய ஜாக்பாட் அடித்தார் தாமஸ் பிட்.
regent+diamond.jpg
ரீஜென்ட் வைரம்
 
1717-ல் பிரெஞ்ச் மன்னரால் ரீஜென்ட் என்று பெயர் மாற்றப்பட்ட இந்த வைரத்தைத்தான் நெப்​போலியன் தன்னுடைய வாளின் கைப்பிடியில் பதித்து வைத்திருந்தார் என்கிறார்கள். நெப்போலியனுக்கு பணக் கஷ்டம் வந்தபோது, 40 லட்சம் டாலருக்கு இதை அடகு வைத்து பிறகு மீட்டார் என்றும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ ரீஜென்ட் வைரம் தற்போது பாரீஸ் நகரில் உள்ள லூவர் மியூசியத்தில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
 
1709இல் தனது பதவிக்காலம் முடிந்ததும் பெரும் செல்வத்துடன் இங்கிலாந்து திரும்பிய தாமஸ் பிட், பல பகுதிகளில் அரண்மனை போன்ற வீடுகளை கட்டி அம்சமாக செட்டிலாகிவிட்டார். அப்போதும் சும்மா இல்லாமல் மீண்டும் இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துவிட்டார். இதனிடையே அவரது மகனும் எம்.பி.யாகி விட்டதால் அப்பாவும், மகனும் சேர்ந்தே நாடாளுமன்றத்திற்கு சென்று வந்தனர்.
 
நன்றி - தினத்தந்தி

* இவரது பேரனான வில்லியம் பிட் சீனியரும், கொள்ளுப் பேரனான வில்லியம் பிட் ஜூனியரும் இங்கிலாந்தின் பிரதமர்களாக இருந்தவர்கள்.
 
* இறுதி நாட்களில் அவர் ஜமைக்காவின் கவர்னராக நியமிக்கப்பட்டார். ஆனால் சில காரணங்களால் பிட் அந்த பதவியில் சேரவில்லை.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Sunday, August 26, 2012

இத்தாலிய சித்த வைத்தியர்

 

மெட்ராஸ் நகரில் குடியேறிய ஆங்கிலேயர்களில் சிலர் தமிழ் மொழி மீது பற்று கொண்டு தமிழறிஞர்களாக மாறிய கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் இத்தாலியில் இருந்து இந்த மண்ணிற்கு வந்த ஒரு மனிதர் சிறந்த சித்த வைத்தியர் எனப் பேர் எடுத்த கதையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த புகழ்பெற்ற சித்த வைத்தியர்தான் நிக்காலோ மானுச்சி.
niccolo-manucci.jpg
நிக்காலோ மானுச்சி
 
இத்தாலியின் பிரபல வெனீஸ் நகரில் 1639இல் பிறந்த நிக்காலோ மானுச்சி தனது 14வது வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். ஒரு ஆங்கிலேயருக்கு உதவியாளனாக ஆசியா செல்லும் கப்பலில் ஏறினார் மானுச்சி. பல நாடுகளை சுற்றிக் கொண்டு கப்பல் இந்தியா வந்தடைவதற்குள் அவரது முதலாளி பரலோகம் சென்றடைந்துவிட்டார். மானுச்சிக்கு பிழைக்க வழி தெரியவில்லை.
 
அப்போது இந்தியாவில் ஷாஜஹானின் மகன்கள் தாரா சிக்கோவுக்கும், அவுரங்கசீப்புக்கும் இடையில் அரியணைக்காக அடிதடி அரங்கேறிக் கொண்டிருந்தது. இருதரப்பும் ஆள் சேர்த்துக் கொண்டிருந்தார்கள். இதைப் பயன்படுத்தி தாராவின் படையில் துப்பாக்கி வீரனாக சேர்ந்துகொண்டார் மானுச்சி. ஆனால் இறுதியில் அவுரங்கசீப் வெற்றி பெற்றதால், துப்பாக்கியை தூக்கி தூர வைத்துவிட்டு, மருந்து பெட்டியை கையில் எடுத்துக் கொண்டார் மானுச்சி. இதை வைத்து அவர் ஏதோ பெரிய மருத்துவர் என்று நினைத்துவிடாதீர்கள். அந்த காலத்தில் ஐரோப்பாவில் இருந்து வந்த பலர் மருத்துவர்களாக இருந்ததால் ஐரோப்பியர்கள் எல்லோருக்கும் மருத்துவம் தெரியும் என்று நம்ம மக்கள் நம்பினார்கள். விளைவு, போலி மருத்துவர்கள் பட்டியலில் மானுச்சியும் சேர்ந்து கொண்டார்.
 
போலி மருத்துவராக தொடங்கினாலும் தனது ஆர்வத்தினாலும், அயராத உழைப்பினாலும் மருத்துவத்தை வேகமாக கற்றுக் கொண்டார் மானுச்சி. இவர் கற்றுக் கொள்ள எத்தனை பேரை காவு கொடுத்தார் என்ற தகவல் கிடைக்கவில்லை. எப்படியோ 1670 முதல் 1678 வரை லாகூரில் சிறந்த மருத்துவர் எனப் பெயர் எடுத்து விட்டார். ஐரோப்பிய மருத்துவம் மட்டுமின்றி முகலாய பாணி மருத்துவத்தையும் சேர்த்து பார்த்ததே இதற்கு முக்கிய காரணம்.
 
பின்னர் அவுரங்கசீப்பின் தக்காண ஆளுநர் ஷா ஆலமின் அரசவையில் சிறிது காலம் பணியாற்றினார். ஆனால் 1686இல் ஷாவுடன் மனக்கசப்பு ஏற்பட்டதால் அங்கிருந்து வெளியேறி பிரெஞ்சுப் படைகள் வசமிருந்த புதுச்சேரிக்கு வந்தார். காரணம் அப்போதைய பிரெஞ்சு ஆளுநர் பிரான்கோய்ஸ் மார்ட்டின் இவரின் நண்பர். அவரிடம் தாம் ஐரோப்பா திரும்பப் போவதாக சொன்னார் மானுச்சி. அப்போதுதான் அவரது வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்பட்டது.
 
இதற்குள் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் கழித்திருந்தார் மானுச்சி. இவர் பயங்கர சாப்பாட்டுப் பிரியர் வேறு. எனவே இந்திய உணவுகளை செம பிடி பிடித்து நாக்குக்கு இந்திய சுவையை ஏற்றியிருந்தார். இதெல்லாம் அவரது நண்பர் மார்ட்டினுக்குத் தெரியும். எனவே 'இனிமேல் ஐரோப்பா சென்று உன்னால் வாழ முடியாது நண்பா, பேசாம இங்கேயே ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிடு' என்று யோசனை சொன்னார். அதோடு நிற்காமல் ஒரு பெண்ணையும் பார்த்துக் கொடுத்தார்.
 
எலிசபெத் கிளார்க் என்ற அந்தப் பெண் ஒரு விதவை. மெட்ராசின் கருப்பர் நகரத்தில் பிராட்வேயில் தனது ஆங்கிலேய கணவர் விட்டுச் சென்ற ஒரு பெரிய தோட்ட வீட்டில் வசித்துக் கொண்டிருந்தார். மானுச்சி எலிசபெத்தை மணந்துகொண்டு, அந்த தோட்ட வீட்டிற்கு உரிமையாளராகிவிட்டார். இப்படித் தான் மெட்ராஸ் மாப்பிள்ளை ஆனார் மானுச்சி.
 
பின்னர் மானுச்சி பரங்கி மலை அடிவாரத்தில் ஒரு தோட்ட வீட்டிற்கு குடிபோனார். இந்த வீட்டில் இருந்தபடிதான் அவர் தனது புகழ்பெற்ற Storia Do Mogor (முகலாயர்களின் சரித்திரம்) என்ற புத்தகத்தை எழுதினார். ஐந்து தொகுதிகளைக் கொண்ட இந்த புத்தகம் அன்றைய முகலாய ஆட்சி எப்படி நடைபெற்றது என்பதை அறிந்துகொள்ள பெரிதும் உதவுகிறது. தான் நேரில் பார்த்ததை மட்டுமே இந்த புத்தகத்தில் எழுதியிருப்பதாக மானுச்சி சொல்கிறார். ஆனால் ஷாஜஹானுக்கு முன் இருந்த முகலாய பேரரசர்கள் பற்றிய மானுச்சியின் தகவல்களில் நிறைய பிழைகள் இருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
 
மெட்ராசில் வசித்தபோது மானுச்சிக்கு ஒரு மகன் பிறந்தான். ஆனால் அவன் இளம் வயதிலேயே இறந்துவிட்டான். அவரது மனைவி எலிசபெத்தும் 1706ஆம் ஆண்டு மரணமடைந்துவிட்டார். இதனால் மனமுடைந்துபோன மானுச்சி, மெட்ராசில் இருந்து புறப்பட்டு மீண்டும் புதுச்சேரிக்கே சென்றுவிட்டார். தனது இறுதிக் காலம் வரை அவர் அங்கேயே இருந்தார். இதனிடையே மானுச்சி அன்றைய முகலாய மற்றும் ஐரோப்பிய ஆட்சியாளர்களுக்கு இடையே பலமுறை தூதுவராக செயல்பட்டார்.
 
ஆட்சியாளர்களுக்கு இடையிலான பல பிணக்குகள் இவரது தலையீட்டால் சரி செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் பல போர்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. இவர் இந்திய பாணியில் உடை அணிந்ததாலும், பெர்ஷியா, பிரெஞ்சு, ஆங்கிலம் எனப் பல மொழிகள் தெரிந்தவராக இருந்ததாலும் இரு தரப்பினரும் இவரை தங்களுக்கு நெருக்கமானவராக நினைத்தனர். மேலும் மக்கள் மத்தியில் இருந்த நல்ல பெயரும் இவரை ஒரு மரியாதைக்குரிய மனிதராக கருத வைத்தது.
 
இவ்வாறு அரசியல் தூதர், சித்த வைத்தியர் என மானுச்சி பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும், 17 மற்றும் 18 நூற்றாண்டு இந்தியாவை அறிந்துகொள்ள உதவும் பல பயனுள்ள குறிப்புகளை அளித்த வரலாற்று ஆசிரியராகவே உலகம் அவரைப் பார்க்கிறது. இந்த உலகப் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் முன்னூறு ஆண்டுகளுக்கு முன் உலவிய பிராட்வேயும், பரங்கி மலையும் இன்றும் அவரது நினைவுகளை அமைதியாக அசைபோடுகின்றன.
 
நன்றி - தினத்தந்தி
 
* காய்ச்சலை குணப்படுத்த பாதரச கலவையால் ஆன ஒரு கல்லை மானுச்சி பயன்படுத்தினார். இதனை அக்காலத்தில் மக்கள் மானுச்சி கல் என்றே அழைத்தார்கள்.
 
* மானுச்சிக்கு புலாவ் உணவு மிகவும் பிடிக்கும். இதுபற்றி தனது புத்தகத்தில் நாவில் எச்சில் ஊறும் அளவுக்கு உருகி உருகி எழுதி இருக்கிறார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Saturday, August 18, 2012

மெட்ராஸ் பஞ்சம்

 

சுமார் 375 ஆண்டு வரலாறு கொண்ட மெட்ராஸ் மாநகரம் நல்லது, கெட்டது என நிறைய விஷயங்களைப் பார்த்துவிட்டது. மெட்ராசையே தலைகீழாகப் புரட்டிப் போட்ட நிகழ்வுகள் எல்லாம் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானவை இந்த நகரம் சந்தித்த பஞ்சங்கள். பஞ்சத்தால் பறிபோன உயிர்களும், பஞ்சத்தோடு போராடிய உயிர்களும் நிறைய பாடங்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றன.
 
1640இல் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் மதராசபட்டினத்தில் கோட்டை கட்டி குடியேறினர். அடுத்த ஏழே ஆண்டுகளில் மிகக் கொடியதொரு பஞ்சத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அப்போது மெட்ராஸ் என்ற நகரம் இந்தளவு விரிவடைந்திருக்கவில்லை. இப்போது இருப்பதில் சிறிதளவே நகரின் மொத்த பரப்பளவாக இருந்தது.
 
1647, ஜனவரி 21ஆம் தேதியிடப்பட்ட ஒரு ஆங்கிலேயக் குறிப்பு இந்த பஞ்சத்தை பற்றி அறிந்துகொள்ள உதவுகிறது. ''இந்த சிறிய ஊரிலேயே 3000க்கும் குறைவில்லாமல் மனிதர்கள் இறந்திருக்கின்றனர். போர்த்துகீசியக் காலனியிலோ 15,000 மனிதர்கள் இறந்துவிட்டனர். இப்போது நம்மிடம் இருக்கும் நெசவாளர்கள், தச்சர்கள் எல்லாம் மூன்றில் ஒரு பங்காக குறைந்துவிட்டனர். 25 ஆங்கிலப் படை வீரர்கள் இறந்துவிட்டனர், பலர் நோயுற்றுள்ளனர்'' என்று அந்த குறிப்பு சொல்கிறது.
 
இந்த பஞ்ச காலத்தில் கோட்டைக்கு வெளியே சாந்தோம் போன்ற பகுதிகளில் இருந்த பல ஆங்கிலேயர்களும் கோட்டைக்குள் தஞ்சம் புகுந்துவிட்டனர். எனவே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கோட்டையில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. இதனை சமாளிக்க சூரத்தில் இருந்து அரிசியை வரவழைத்திருக்கிறார்கள். ஒருவழியாக ஓராண்டில் இந்த பஞ்சத்தை சமாளித்து இயல்பு நிலைக்கு மீண்டிருக்கிறார்கள்.
 
அடுத்த பஞ்சம் 1658இல் தலையெடுத்தது. அப்போது கோல்கொண்டா, சந்திரகிரி வீரர்களும் மெட்ராசில் இருந்தால் அனைத்து பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவியது. இதேநேரத்தில் வடநாட்டிலும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இதையும் ஒருவழியாக சமாளித்த நிலையில் 17ஆம் நூற்றாண்டின் கடைசிப் பஞ்சம் 1686இல் வந்தது. ஏற்கனவே இரண்டு பஞ்சங்களைப் பார்த்துவிட்டதால், கிழக்கிந்திய கம்பெனிக்காரர்களுக்கு இதனை சமாளிப்பதில் சற்று அனுபவம் கிடைத்துவிட்டது. நிவாரணப் பணிகளை எப்படி மேற்கொள்வது என அவர்கள் ஓரளவு கற்றுக் கொண்டனர்.
famine.jpg
 
அடுத்து 18ஆம் நூற்றாண்டிலும் பஞ்சங்களுக்கு பஞ்சமில்லை. இதுபோன்ற பஞ்சங்களால் கிராமப்புற மக்கள் பிழைக்க வழி தேடி மெட்ராஸ் நோக்கி படையெடுத்தனர். பல இடங்களில் பொருட்கள் சூறையாடப்பட்டன. வியாபாரிகள் பொருட்களை பதுக்கிவைத்து கொள்ளை லாபம் சம்பாதித்தனர். இவற்றைத் தடுக்க சில ஆணைகள் இடப்பட்டும் பெரிதாக எந்த பலனும் இல்லை. இந்த ஆணைகள் ஆங்கிலேய வணிகத்தை பாதிக்கும் என உணரப்பட்டதால் சிறிது காலத்திலேயே அவை விலக்கிக் கொள்ளப்பட்டன.
 
1781இல் வந்த பஞ்சம்தான் மிகவும் கொடுமையானதாக கருதப்படுகிறது. காரணம், அப்போது ஹைதர் அலியின் படையெடுப்பையும் சேர்த்து சமாளிக்க வேண்டி இருந்ததால் துயரின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. அந்த ஆண்டு இறுதியில் மதராசப்பட்டினத்தில் 42 நாட்களுக்குத் தேவையான உணவு தானியங்கள் மட்டுமே இருந்தன. எனவே ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என கணக்கெடுக்கப்பட்டு முதன்முறையாக ரேஷன் முறை அமலுக்கு வந்தது.
 
 
இதனிடையே சோற்றுக்கு வழியில்லாமல் பரிதவிக்கும் மக்களுக்கு உதவுவதற்காக இன்றைய ஸ்டான்லி மருத்துவமனை இருக்கும் இடத்தில் ஒரு கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது. பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து கஞ்சி வாங்கி குடித்து தங்களின் பசியைப் போக்கிக் கொண்டனர். அடுத்த ஓராண்டில் இந்த இடம் ஒரு சத்திரமாக மாறியது. நிறைய முதியவர்கள் இருந்ததால், அவர்களுக்கு மருத்துவ வசதியும் தேவைப்பட்டது. எனவே இங்கு ஒரு சிறிய மருத்துவமனையும், தொழுநோயாளிகளுக்கான இல்லமும் தொடங்கப்பட்டது. 1799இல் தொடங்கப்பட்ட இதுதான் உள்ளூர்வாசிகளுக்கென பிரத்யேகமாக உருவான சென்னையின் முதல் நவீன மருத்துவனை. உள்ளூர்வாசிகள் கஞ்சித்தொட்டி மருத்துவமனை என்று அழைத்த இதுதான் பின்னாட்களில் ஸ்டான்லி மருத்துவமனையாக உயர்ந்தது.
 
19ஆம் நூற்றாண்டிலும் அடிக்கடி பஞ்சங்கள் வந்துபோகத் தவறவில்லை. 1824இல் பஞ்சம் வந்தபோது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. மெட்ராசில் ஒரே ஒரு கடையில்தான் தானியம் விற்கப்பட்டதாம். பல இடங்களில் கலகங்கள் வெடித்ததால் ராணுவத்தை வைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.
famine2.jpg
 
1876-78 காலகட்டத்தில் மெட்ராஸ் ராஜ்தானி முழுவதும் கடும் பஞ்சம் தலைவிரித்தாடியது. சிறந்த நிர்வாகியான பக்கிங்ஹாம் இளவரசர் ரிச்சர்ட்,இந்த பஞ்சத்தை திறமையாகவே கையாண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். பஞ்ச காலத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை வேகமாக கொண்டு செல்ல வசதியாகமரக்காணத்தில் இருந்து காக்கிநாடா வரை கால்வாய் வெட்டினார். சென்னையில் கூவம் நதி ஓடிக் கொண்டிருக்கும் பக்கிங்ஹாம் கால்வாய் பிறந்தது இப்படித்தான்.
 
இதுமட்டுமின்றி மேலும் பல புதிய முயற்சிகளும், நிர்வாக சீர்திருத்தங்களும் பஞ்சங்களின் பயனாகவே விளைந்தன. மொத்தத்தில் மெட்ராஸ் மாநகரம் தோன்றிய காலம் முதல் தொடர்ந்து பல பஞ்சங்களை சந்தித்து பல பாடங்களை சேகரித்து வைத்திருக்கிறது. இந்த பாடங்களே இந்த மாநகரை இன்றும் காக்கின்றன.
 
நன்றி - தினத்தந்தி
 
* பஞ்ச காலத்தில் தானியங்களை பதுக்கியதற்காக நல்லண்ணா என்ற வியாபாரிக்கு பொதுமக்கள் முன்னிலையில் 25 சவுக்கடிகள் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
 
* பஞ்சங்களால் 1825 முதல் 1854 வரை மெட்ராஸ் கடும் பொருளாதார பின்னடைவை சந்தித்தது.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Sunday, August 12, 2012

ஆளுநர் மாளிகை

 

மாநகரின் நெரிசல்களில் இருந்து தப்பித்து ஏதாவது காட்டுப் பகுதியில் அமைதியாக ஓய்வெடுத்தால் எப்படி இருக்கும் என்ற ஏக்கம் அனேகமாக சென்னைவாசிகள் எல்லோருக்கும் இருக்கும். இந்த கனவை நனவாக்கும் ஒரு காட்டுப் பகுதி சென்னை நகருக்குள்ளேயே இருக்கிறது. ஆனால் நாம் அங்கு சென்று ஓய்வெடுக்க முடியாது. அதுதான் கிண்டியில் அமைந்திருக்கும் ராஜ் பவன் எனப்படும் ஆளுநர் மாளிகை.
 
ராஜ் பவன் தொடங்கி தரமணி வரை நீளும் கிண்டி ரிசர்வ் காடு தான் சென்னை நகரில் இன்று எஞ்சியிருக்கும் ஒரே காட்டுப் பகுதி. நடுவே ஐ.ஐ.டி வளாகம், காந்தி மண்டபம்ராஜாஜிபக்தவத்சலம்காமராஜ் ஆகியோரின் நினைவு மண்டபங்கள்குழந்தைகள் பூங்காபாம்புப் பூங்காபுற்றுநோய் மையம் ஆகியவை காட்டை சற்றே அழித்துவிட்டபோதும் இன்னும் இது பெரிய காடுதான். சென்னை மாகாண ஆளுநர்கள் இந்த காட்டுக்கு இடம்பெயர்ந்த கதை ரொம்பவே சுவாரஸ்யமானது.
govt+house+guindy.jpg
கிண்டி ஆளுநர் மாளிகை
ஆரம்ப நாட்களில் சென்னையின் ஆளுநர் புனித ஜார்ஜ் கோட்டைக்குள்தான் இருந்தார். முதன்முதலாக கோட்டைக்கு வெளியே தனிக்குடித்தனம் போனவர் கவர்னர் ஸ்ட்ரேய்ன்ஷம் மாஸ்டர். கோட்டைக்குள் கூட்டம் அதிகமாகிவிட்டதால், இன்று சட்டக்கல்லூரி இருக்கும் இடத்தில் ஒரு தோட்ட வீட்டிற்கு அவர் இடம்பெயர்ந்தார். பின்னர் இந்த பகுதியில் கருப்பர் நகரம் வேகமாக வளர்ந்ததால், 1680களில் அவர் கூவம் நதிக்கரையில் உள்ள ஒரு தோட்ட வீட்டிற்கு மாறியதாக கூறப்படுகிறது. ஆனால் இவரைத் தொடர்ந்து வந்த ஆளுநர்கள் இந்த வீட்டை அதிகமாக பயன்படுத்தவில்லை.
 
இதனிடையே 1746இல் சென்னையை முற்றுகையிட்ட பிரெஞ்சுப் படைகள், இந்த வீட்டை இடித்து தரைமட்டமாக்கிவிட்டன. சென்னை மீண்டும் பிரிட்டீஷார் வசம் வந்ததும், ஆளுநருக்கு வீடு தேடும் படலம் தொடங்கியது. அப்போதுதான் இன்று புதிய தலைமைச் செயலகம் இருக்கும் அரசினர் தோட்டத்தில் அன்று இருந்த ஒரு சிதிலமடைந்த வீடு விலைக்கு வாங்கப்பட்டது. அண்டோனியோ தி மதீராஸ் என்ற செல்வச் சீமாட்டிக்கு இந்த இடம் சொந்தமானதாக இருந்தது. கஷ்ட காலத்தில் கிழக்கிந்திய கம்பெனிக்கே நிதி உதவி செய்தவர் இந்த மதீராஸ். இவரது குடும்பத்தின் நினைவாகத்தான் சென்னைக்கு மதராஸ் என்ற பெயர் வந்தது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
 
1753இல் அப்போதைய ஆளுநர் தாமஸ் சாண்ட்ரிஸ் இந்த வீட்டை வெறும் ரூ.75,000க்கு வாங்கினார். பின்னர் காலப்போக்கில் கர்நாடக நவாப்பின் பண்ணையின் சில பகுதிகள் இணைக்கப்பட்டு இந்த இடம் மெல்ல விஸ்தரிக்கப்பட்டது. இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க அன்றைய அரசு அதிகாரிகள் கவர்னருக்காக நகருக்கு வெளியே ஒரு பரந்து விரிந்த தோட்ட வீடு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தனர். அப்போது அவர்கள் கண்ணில்பட்டதுதான் கிண்டி லாட்ஜ்.
guindy+govt+house.jpg
கிண்டி லாட்ஜ்
இன்றைய ராஜ் பவன் 1670களில் கிண்டி லாட்ஜ் என்று அழைக்கப்பட்டது. புனித தோமையார் மலைக்கு இந்த வழியாக சென்ற கவர்னர் வில்லியம் லாங்ஹார்ன் கிண்டி காட்டுப் பகுதியின் அழகில் மனதைப் பறிகொடுத்ததால் இங்கு ஒரு வீடு கட்டி, அதனைச் சுற்றி தோட்டம் அமைத்தார். வார இறுதி நாட்களில் இங்கு தங்கி ஓய்வெடுப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். பின்னர் 1678இல் ஒரேயடியாக இங்கிலாந்துக்கு புறப்பட்ட கவர்னர், சின்ன வெங்கடாத்ரிக்கு இந்த வீட்டை விற்றுவிட்டார். ஆங்கிலேயர்களுக்கு மெட்ராஸ் என்ற நிலப்பகுதியை பெற்றுத் தந்த பேரி திம்மப்பாவின் இளைய சகோதரர்தான் இந்த சின்ன வெங்கடாத்ரி.
 
ஆனால் சின்ன வெங்கடாத்ரிக்கும் இந்த வீட்டிற்கும் ராசியில்லை. கிழக்கிந்திய கம்பெனியோடு சில பிரச்னைகள் வந்தபோது, கம்பெனியை சரி கட்டுவதற்காக இந்த வீட்டை அடிமாட்டு விலைக்கு கொடுத்துவிட்டார். பின்னர் சில பல கைகள் மாறி கடைசியில் அரசு வங்கியிடம் அடமானத்திற்கு வந்தது இந்த வீடு. 1821இல் இந்த வீட்டையும், இதற்கு அருகில் ஷாமியர் என்ற ஆர்மீனியரின் சொத்தையும் அரசாங்கம் வாங்கிக் கொண்டது. அப்போது ஆளுநராக இருந்த சர் தாமஸ் மன்றோ, இடையூறு இல்லாமல் பொதுவிஷயங்களை கவனிக்க ஒரு இடம் தேவை என்று விரும்பியதால், இந்த வீடு வாங்கப்பட்டது.
 
தாமஸ் மன்றோ இங்கிருந்தபடி தனது அலுவல்களைப் பார்த்தார். இப்படித்தான் ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லம் என்ற கவுரவம் கிண்டி லாட்ஜிற்கு கிடைத்தது. இவருக்கு கோட்டைக்குள்ளேயும் ஒரு வீடு இருந்தது. பின்னர் ராஜ் பவன் மெல்ல விஸ்தரிக்கப்பட்டது. 1837இல் ஆளுநராக பொறுப்பேற்ற லார்ட் எல்ஃபின்ஸ்டன்தான் ராஜ்பவனை இன்றைய நிலைக்கு கொண்டு வந்தவர். இந்த வீட்டிற்கும் மவுண்ட் ரோட்டுக்கும் இடையில் சைதாப்பேட்டை வழியாக சாலை அமைத்தவர் இவர்தான். அடுத்தடுத்து வந்த ஆளுநர்களும் தங்கள் பங்கிற்கு ஆளுநர் மாளிகையை மெருகேற்றினர். ஆனாலும் இது கோட்டையில் இருந்து அதிக தூரத்தில் இருந்ததால், மவுண்ட் ரோடு அரசினர் இல்லம்தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும் வரை கவர்னரின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்தது.
 
ஆனால் சுதந்திர இந்தியாவில் தமிழக ஆளுநர்கள் இங்குதான் வசித்து வருகின்றனர். எனவே இன்றும் அரசியலோடு பின்னிப் பிணைந்திருக்கிறது இந்த ஆங்கிலேயக் கட்டிடம். மொத்தத்தில் காலச்சக்கரத்தில் 300 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும், இந்த ஆளுநர் மாளிகையின் ஒவ்வொரு கல்லும் ஏராளமான கதைகளால் நிறைந்து கிடக்கிறது.
 
நன்றி - தினத்தந்தி
 
* அரிய வகை மான்கள், விதவிதமான பறவைகள் ஆகியவற்றை இங்கு தாராளமாகப் பார்க்கலாம்.
 
* கோடை காலத்தில் மெட்ராஸ் கவர்னர்கள் ஊட்டிக்கு மலை ஏறியதால், அங்கும் ஒரு ராஜ் பவன் கட்டப்பட்டது


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Saturday, August 4, 2012

சேத்துப்பட்டு

 

சென்னையின் முக்கிய பகுதியாக இருக்கும் சேத்துப்பட்டின் பெயரைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு மழைக்காலம் ஞாபகம் வந்துவிடும். ஒரு சிறிய மழைக்கே சென்னை தெருக்கள் சேறும் சகதியுமாகி விடுவதைப் பார்க்கிறோம். அப்படி ஒரு சேற்றுப்பகுதிதான் பேச்சுவழக்கில் சேத்துப்பட்டு என மாறியிருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இதுபற்றி ஆராய்ந்தபோது, நிறைய சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.
 
முதல் சுவாரஸ்யம், இந்த பகுதிக்கு ஏன் சேத்துப்பட்டு எனப் பெயர் வந்தது என்பது பற்றியது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை இது ஒரு அக்மார்க் கிராமமாகத் தான் இருந்திருக்கிறது. பின்னர், கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் மெட்ராசில் மெல்ல வேர் பரப்ப ஆரம்பித்தபோது கோட்டைக்கு அருகில் இருந்த கிராமங்களை வாங்கத் தொடங்கினர். திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர் ஆகிய கிராமங்களின் வரிசையில் மெட்ராசுடன் இணைந்ததுதான் சேத்துப்பட்டு. ஆனால் அப்போது இதன் பெயர் என்ன என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை.
Chetput_Village.jpeg
சேத்துப்பட்டு கிராமம்
 
இப்படி வாங்கப்பட்ட பகுதியில் ஆங்கிலேயர்கள் பெரிய பெரிய மாளிகைகளையும் தோட்ட வீடுகளையும் கட்டி வசிக்கத் தொடங்கினர். இப்படி ஏறத்தாழ 200 ஆண்டுகாலம் இந்த பகுதியில் நிம்மதியாக வாழ்ந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகு மூட்டை முடிச்சுகளோடு இங்கிலாந்திற்கு கப்பல் ஏறினர். அப்போது இங்கிருந்த அவர்களின் வீடுகளை செல்வச் சீமான்களான செட்டியார்கள் அதிகளவில் வாங்கினர். இதனால் செட்டியார்கள் நிறைந்த பகுதியாக இது மாறியதால் செட்டியார்பேட்டை அல்லது செட்டிப்பேட்டை என அழைக்கப்பட்டு அதுவே காலப்போக்கில் சேத்துப்பட்டு என நிலைத்திருக்கிறது.
 
இங்கு வசித்த செட்டியார்களில் மிகவும் முக்கியமானவர், 19ஆம் நூற்றாண்டில் சென்னையின் மிகப் பெரிய கட்டட காண்ட்ராக்டரான நம்பெருமாள் செட்டி. விக்டோரியா ஹால், சென்னை உயர்நீதிமன்றம்சட்டக்கல்லூரிஎழும்பூரில் உள்ள சிற்பக் கலை கல்லூரிஅருங்காட்சியகம்கன்னிமாரா நூலகம் என மெட்ராஸ் மாநகரின் பல முக்கிய கட்டடங்கள் இவரது கைவண்ணத்தில் உருவானவைதான்.
 
இந்தோ சராசனிக் பாணியில் கட்டடங்களை வடிவமைத்த பிரபல ஆங்கிலேய கட்டடக் கலைஞர்கள் அனைவருமே தங்களின் கனவுகளுக்கு உருவம் கொடுக்கும் பொறுப்பை நம்பெருமாள் செட்டியிடம் தான் ஒப்படைத்தார்கள். இந்த பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காகவே இவர் பச்சையப்பன் கல்லூரிக்கு அருகில் ஒரு பிரத்யேக செங்கல் சூளையை வைத்திருந்தாராம். இதேபோல கட்டடப் பணிக்கு தேவையான மற்ற பொருட்களும் தரமானதாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார் நம்பெருமாள் செட்டி. இதற்காக சில பொருட்களை வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்து பயன்படுத்தி இருக்கிறார்.
 
"தாட்டிகொண்ட நம்பெருமாள்செட்டி என அழைக்கப்பட்ட இவர், ஆரம்ப காலத்தில் ஜார்ஜ் டவுனில் உள்ள தனது பரம்பரை வீடான ஆனந்த பவனத்தில் (தற்போது மைசூர் கஃபே) தான் வசித்து வந்தார். பின்னர் 1905இல் சேத்துப்பட்டில் 'க்ரையாண்ட்' என்ற வீட்டை விலைக்கு வாங்கி குடியேறினார். ஹாரிங்டன் சாலையில் உள்ள இந்த வீட்டுடன் சேர்த்து நம்பெருமாள் செட்டிக்கு சொந்தமாக 99 வீடுகள் இருந்தன. 100வது வீட்டை வாங்கினால் துரதிர்ஷ்டம் வந்துவிடும் என நம்பியதால், செட்டியார் செஞ்சுரி அடிக்கவில்லை என சொல்லப்படுகிறது. சேத்துப்பட்டு பகுதியில் இவருக்கு மொத்தம் 2000 கிரவுண்டு நிலம் இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட சேத்துப்பட்டின் பெரும்பகுதியை வாங்கிப் போட்டதாலேயே இவரின் நினைவாக அந்த பகுதிக்கு சேத்துப்பட்டு எனப் பெயர் வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
 
கணிதமேதை ராமானுஜம் தனது இறுதி மூச்சை இங்குதான் சுவாசித்தார் என்பது சேத்துப்பட்டிற்கு பெருமை சேர்க்கும் மற்றொரு விஷயம். காசநோய் அதிகமாகி இங்கிலாந்தில் இருந்து திரும்பிய ராமானுஜத்தை நம்பெருமாள் செட்டியார் தனது க்ரையண்ட் இல்லத்தில் தங்க வைத்து சிறப்பு வைத்தியங்களுக்கு  ஏற்பாடு செய்தார். பின்னர் ராமானுஜத்தின் வசதிக்காக க்ரையண்டிற்கு எதிரில் இருந்த கோமேத்ரா என்ற தன்னுடைய இன்னொரு வீட்டில் தங்க வைத்தார். ஆனால் சிறிது காலத்திலேயே ராமானுஜம் காலமானார். ராமானுஜம்கடல் கடந்து வெளிநாடு சென்றதால்அவரது உடலைக்கூட உறவினர்கள் ஏற்கவில்லை. எனவேநம்பெருமாள் செட்டிதான் ராமானுஜத்தின் ஈமச் சடங்குகளை செய்தார்.
 
Pond_at_Chetput1.JPG
சேத்துப்பட்டு ஏரி
அன்றைய மெட்ராசில் வெளிநாட்டுக் கார் (French Dideon) வைத்திருந்த முதல் இந்தியர் செட்டியார்தான். கார் என்ன பெரிய விஷயம், அவர்தன் சொந்த உபயோகத்திற்காகநான்கு பெட்டிகள் கொண்ட தனி ரயிலே வைத்திருந்தார். திருவள்ளூரில் இருக்கும் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு சென்று வருவதற்கு செட்டியார் இந்த ரயிலை பயன்படுத்தினார். 

சேத்துப்பட்டின் மற்றொரு முக்கிய விஷயம், 15 ஏக்கருக்கும் அதிகமாக பரந்துவிரிந்திருக்கும் ஏரி. அனேகமாக சென்னைக்குள் இருக்கும் பெரிய நீர்நிலை இதுவாகத் தான் இருக்கும். ஆக்ரமிப்புகள் காரணமாக தற்போது இதில் சிறிதளவே நீர் இருக்கிறது. ஆங்கிலேயர்கள் ஓய்வு நேரத்தில் இந்த ஏரியில் மீன் பிடித்து உல்லாசமாக பொழுது போக்கியிருக்கிறார்கள். ஆனால் இப்போது அதெல்லாம் பழங்கதையாகிவிட்டன.
 
மொத்தத்தில் கடந்த நூற்றாண்டு வரை இயற்கை எழில் சூழ, ரம்மியமாகத் திகழ்ந்த இந்த சேத்துப்பட்டு பகுதி, இப்போது போக்குவரத்து நெரிசல் மிகுந்த கான்கிரீட் காடாகக் காட்சி அளிக்கிறது. இருப்பினும் இன்றும் எஞ்சி இருக்கும் ஒரு சில பழங்கால கட்டடங்கள் அந்த அழகிய நினைவுகளை அசைபோட உதவுகின்றன.
 
நன்றி - தினத்தந்தி
 
* நம்பெருமாள் செட்டியின் சேத்துப்பட்டு வீடு இப்போதும் அவரது குடும்பத்தினர் வசம் உள்ளது. இங்கு சீனா, ஜப்பான்இத்தாலிஇங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட பீங்கான் கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
 
* சென்னையின் பழைய வண்ணான்துறைகளில் முக்கியமான சேத்துப்பட்டு வண்ணான்துறை, இந்தியாவின் இரண்டாவது பெரிய வண்ணான்துறையாக கருதப்படுகிறது.
 
* ராமானுஜம் காசநோயால் இறந்த சேத்துப்பட்டில், காசநோய் ஆராய்ச்சி மையம் ஒன்று இருக்கிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Saturday, July 28, 2012

பின்னி மில்

 

ஒருகாலத்தில் மெட்ராஸ் மாநகரின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கியது பின்னி மில். இன்று குடோனாகவும், படப்பிடிப்புத் தளமாகவும் விளங்கும் இந்த மில்லிற்கு கிட்டத்தட்ட 250 ஆண்டு வரலாறு இருக்கிறது. கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் மெட்ராசில் வணிகத்தை தொடங்கிய உடன் அவர்களோடு வியாபாரம் செய்வதற்காக இங்கிலாந்தில் இருந்து வந்த ஆங்கிலேயர்களில் ஒருவர்தான் சார்லஸ் பின்னி.
 
உரிமம் ஏதும் இல்லாமல் 1769இல் மெட்ராஸ் வந்திறங்கினார் சார்லஸ் பின்னி. வாலாஜா நவாப்புடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட அவர், மெல்ல மெட்ராஸ் மண்ணில் காலூன்ற முயற்சித்தார். இவரது குடும்பத்தினர் தொடர்ந்து நவாப்பிடம் பணியாற்றினர். அந்த வரிசையில் நவாப் சேவையைத் தொடர்வதற்காக சென்னை வந்தவர் ஜான் பின்னி. இவர்தான் பின்னாளில் பிரம்மாண்ட விருட்சமாய் வளர்ந்த பின்னி மில்லிற்கு வித்திட்டவர்.
john_binny.jpg
ஜான் பின்னி
 
இன்று மவுண்ட் ரோடில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமையகம் இருக்கும் இடத்தில் இவர் ஒரு அலுவலகத்தை தொடங்கினார். மெட்ராஸ் வரும் கப்பல்களில் இருந்து பொருட்களை ஏற்றி இறக்கும் வேலையில் இந்நிறுவனம் ஈடுபட்டிருந்தது. சிறிது காலம் கழித்து இந்த நிறுவனம் அருகிலேயே தற்போது தாஜ் கன்னிமரா ஹோட்டல் இருக்கும் இடத்திற்கு மாறியது. பின்னர் 1812இல் பாரிமுனையில் உள்ள ஆர்மீனியன் சாலைக்கு சென்றுவிட்டாலும், 1820 வரை ஜான் பின்னி இங்கிருந்த வீட்டில்தான் வசித்து வந்தார். இதன் நினைவாக இன்றும் அந்த சாலை பின்னி ரோடு என்றே அழைக்கப்படுகிறது.
 
இதனிடையே 1800இல் ஜான் பின்னி, டெனிசன் என்பவருடன் கூட்டு சேர்ந்தார். எனவே நிறுவனத்திற்கு பின்னி அண்ட் டெனிசன் எனப் பெயரிடப்பட்டது. துறைமுகத்திற்கு அருகில் இருப்பதால் ஆர்மீனியன் தெருவிற்கு இடம்பெயர்ந்த பிறகு, 1814இல் இது பின்னி அண்ட் கோ என பெயர் மாற்றப்பட்டது. கப்பலில் இருந்து சரக்குகளை கரைக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்காக இந்த நிறுவனம் 30க்கும் மேற்பட்ட சிறிய படகுகளை வைத்திருந்தது. அதேபோல தரைக்கு வந்த சரக்குகளை கையாள்வதற்காக பேருந்து சேவையையும் வழங்கியது.
 
வியாபாரத்தை பெருக்க நினைத்த பின்னி, வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையிலும் நுழைந்தார். இறுதியாக பின்னி கையில் எடுத்ததுதான், அவருக்கு பெரும் புகழ் ஈட்டித் தந்த துணி வியாபாரம். பின்னி அண்ட் கோ நிறுவனம், வட சென்னையின் பெரம்பூர் பகுதியில் 1877இல் பக்கிங்ஹாம் மில்லை (இன்றைய பின்னி மில்) ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து 1882இல் கர்நாடிக் மில் தொடங்கப்பட்டது. ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலை வழங்கிய இந்த மில்கள் 1920இல் இணைப்பட்டன. இதன்மூலம் சுமார் 14,000 தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனமாக பின்னி விளங்கியது.
binny+headquarters+in+armenian+st.jpg
பின்னியின் ஆர்மீனியன் தெரு அலுவலகம்
பின்னியின் தயாரிப்புகள் உள்ளூர் மட்டுமின்றி உலக அளவில் விற்பனையில் பின்னி எடுத்தன என்றுதான் சொல்ல வேண்டும். தயாரிப்புகள் தரமானதாக இருந்ததால், அடுத்த சில ஆண்டுகளிலேயே பின்னி அண்ட் கோ, துணி வியாபாரத்தில் முன்னோடி நிறுவனமாக மாறியது. இதனிடையே 1884இல் பெங்களூரில் பெங்களூர் காட்டன், சில்க் - உல்லன் மில்ஸை இந்நிறுவனம் தொடங்கியது. அந்த காலத்தில் இந்தியாவில் இருந்த பிரிட்டீஷ் அரசாங்கம் பின்னி அண்ட் கோவின் தயாரிப்புகளைத் தான் அதிகளவில் கொள்முதல் செய்தது. பொதுமக்கள் மத்தியிலும் பின்னி துணிகளுக்கு நல்ல மதிப்பு இருந்தது.
 
இப்படி வியாபாரத்தில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த பின்னிக்கு, இருபதாம் நூற்றாண்டு அத்தனை இனிமையானதாக இல்லை. மெட்ராசில் இயங்கி வந்த அர்புத்நாட் வங்கி (Arbuthnot Bank) 1906இல் திவாலானது பின்னிக்கு ஒரு பேரிடியாக அமைந்தது. இதனால் ஏற்பட்ட பொருள் இழப்பில் இருந்து மெல்ல மீள்வதற்குள் அடுத்த அடி 1947இல் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தபோது விழுந்தது. சுதந்திரம் கொடுத்த கையோடு ஆங்கிலேயர்கள் கப்பல் ஏறி சென்றுவிட பின்னியின் வியாபாரம் தொய்வடைந்தது.
 
இதனிடையே பின்னி மில்கள் 1970களின் பிற்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கடுமையாக சேதமடைந்தன. பின்னர் சுமார் 200 ஆண்டுகளாக மெட்ராசின் வர்த்தக வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய பின்னி மில், பல்வேறு காரணங்களால் 1996இல் தனது இயக்கத்தை ஒரேயடியாக நிறுத்திக் கொண்டது. இதில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். 2001இல் இந்த மில்கள் விற்கப்பட்டுவிட்டன.
 
தொழிற்சங்கங்களின் வரலாற்றிலும் பின்னிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. 1915இல் ஜவுளி வியாபாரியான செல்வபதி செட்டியாரால் பின்னி மில்லில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்கம்தான், தென்னிந்தியாவின் முதல் தொழிற்சங்கம். அவரின் தூண்டுதலின் பேரில்தான் சென்னையில் முதன்முதலாக மே தினம் கொண்டாடப்பட்டது. திரு வி.க தலைமையில் 1921இல் பின்னி மில்லில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இந்திய தொழிற்சங்க வரலாற்றில் மிகவும் முக்கியமானது.
 
இப்படி உண்மையான தொழிலாளர் போராட்டங்களை பார்த்த பின்னி மில், இன்று படப்பிடிப்புகளுக்காக அரங்கேறும் சண்டைக் காட்சிகளை பார்த்தபடி சென்னை வரலாற்றின் மௌன சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது.
 
நன்றி - தினத்தந்தி
 
* மாதவரத்தில் இருக்கும் பின்னி காலனி, புளியந்தோப்பில் இருக்கும் பின்னி கார்டன்ஸ், போயஸ் கார்டன் பகுதியில் இருக்கும் பின்னி ரோடு ஆகியவை இன்றும் பின்னியை நினைவு கூர்கின்றன.
 
* திருவி.க., பி.பி. வாடியா போன்ற தலைவர்களின் போராட்டங்களின் விளைவாகத் தான் 12 மணி நேரமாக இருந்த வேலைநேரம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டது.  
 
* பி அண்ட் சி நிர்வாகத்தால் நடத்தப்பட்ட பின்னி உயர்நிலைப் பள்ளியில் அரை நாள் படிப்பு அரை நாள் தொழில் என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Saturday, July 21, 2012

சேப்பாக்கம் அரண்மனை

 

சென்னை மாநகரில் ஒரு பரந்துவிரிந்த விசாலமான அரண்மனை இருந்தது, இன்னும் இருக்கிறது என்ற தகவல் நிறைய பேருக்கு ஆச்சர்யமளிக்கக் கூடும். மெட்ராஸ் என்ற நிலப்பரப்பே கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் வந்த பிறகுதானே மக்கள் புழக்கம் நிறைந்த பகுதியாக மாறியது... அப்படி இருக்க, இங்கு எந்த ராஜா அரண்மனை கட்டினான்? ஏன் கட்டினான்? என நீங்கள் கேட்பது புரிகிறது. இதற்கான பதிலை அறிந்துகொள்ள நாம் சுமார் 250 ஆண்டுகள் பின்னோக்கிப் போக வேண்டும்.
 
18ஆம் நூற்றாண்டில் வட ஆற்காடு, தென்னாற்காடு, திருச்சி, திருநெல்வேலி, நெல்லூர் உள்ளிட்ட பகுதிகள் கர்நாடக நவாபின் ஆட்சியின் கீழ் இருந்தன. இவரது தலைநகரம் ஆற்காட்டில் இருந்ததால் இவரை ஆற்காடு நவாப் என மக்கள் அழைத்தனர். 1749இல் இந்த நவாப் பதவிக்காக ஒரு போர் நடந்தது. நவாப்பின் வாரிசுகளுக்கு இடையில் நடந்த போரில் ஒரு தரப்பை பிரெஞ்சுக்காரர்களும், மற்றொரு தரப்பை ஆங்கிலேயர்களும் ஆதரித்தனர். இதில் ராபர்ட் கிளைவ் தலைமையிலான பிரிட்டீஷ் படை வெற்றி பெற்றதால், அவர்கள் ஆதரித்த வாலாஜா நவாபான முகமது அலி ஆற்காடு அரியணையில் ஏறினார்.
 
ஒருவழியாக அரியாசனத்தில் அமர்ந்துவிட்டாலும், அரசியல் ஆபத்துகள் காரணமாக ஆங்கிலேயர்கள் வசிக்கும் ஜார்ஜ் கோட்டைக்கு இடம்பெயர்வதுதான் பாதுகாப்பானது என்ற முடிவுக்கு வந்தார் முகமது அலி. இதற்கு ஆங்கிலேயர்களும் ஒப்புக் கொண்டதால் கோட்டைக்குள்ளேயே நவாபுக்காக அரண்மனை கட்டும் பணி தொடங்கியது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த திட்டம் ஆரம்பத்திலேயே நின்றுவிட்டது. இதனைத் தொடர்ந்து நவாப் அரண்மனைக்காக சேப்பாக்கத்தில் 117 ஏக்கர் நிலம் தனியாரிடம் இருந்து வாங்கப்பட்டது.
Chepauk+Palace+-+Madras+(Chennai)+-+1890
1890களில் சேப்பாக்கம் அரண்மனை
 
அரண்மனை கட்டும் பணி பால் பென்ஃபீல்ட் (Paul Benfield) என்ற கிழக்கிந்திய பொறியாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு அவர் 1768இல் கட்டி முடித்ததுதான் பிரம்மாண்டமான சேப்பாக்கம் அரண்மனை. நவாப் தனது மெகா குடும்பத்துடன் வாழ்ந்து வந்த இதுதான் பின்னாட்களில் பிரபல கட்டட பாணியாக மாறிய இந்தோ-சராசனிக் பாணியில் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கட்டடம். ஹூமாயுன் மஹால், கலஸ் மஹால் என இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்த கட்டடம், மெரினாவிற்கு மேலும் மெருகூட்டியது என்றே சொல்ல வேண்டும்.
 
நவாப் முகம்மது அலிக்கு கை தாராளம். ஆடம்பரப் பிரியர் வேறு. எனவே காசு இல்லாவிட்டாலும் கலங்காமல் ஆங்கிலேயர்களிடம் தொடர்ந்து கடன் வாங்கி 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்று வாழ்ந்திருக்கிறார். விளைவு, ஒருகட்டத்திற்கு மேல் இனி இது தாங்காது என முடிவெடுத்த ஆங்கிலேயர்கள், நவாப் பட்ட கடனுக்காக கர்நாடகத்தில் வரி வசூலிக்கும் உரிமையை பெற்றுக் கொண்டனர். இதனிடையே நவாப் முகம்மது அலி இறந்துவிட, அவரது மகன் உம்தத்-உல்-உம்ராவின் தலையில் கடன் சுமை இறங்கியது. 1801இல் அவரும் இறந்ததும், கவர்னர் ஜெனரல் வெல்லெஸ்லி பிரபுகர்நாடகம் முழுவதையும் கிழக்கிந்தியக் கம்பெனி அரசுடன் இணைத்துவிட்டார். எனவே நாடு இல்லாத நவாப்புகளான வாரிசுகள் சேப்பாக்கம் மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டது தான் தற்போது ராயப்பேட்டையில் இருக்கும் அமீர் மஹால்.
Mohamed_Ali_Khan_Walajan.jpg
நவாப் முகம்மது அலி
 
1855இல் சேப்பாக்கம் அரண்மனையை பிரிட்டீஷ் அரசு ஏலம் விட்டது. ஆனால் இதை ஏலத்தில் எடுக்கும் அளவிற்கு யாரிடமும் பணம் இல்லை. எனவே அரசே இதை கையகப்படுத்தி, அரசு அலுவலகமாக மாற்றியது. இதனிடையே 1860இல், பிரபல கட்டடக் கலைஞரான ராபர்ட் சிஸ்ஹோம் (Robert Fellowes Chisholm) ஹூமாயுன் மற்றும் கலஸ் மஹால்களுக்கு இடையில் ஒரு கோபுரத்தை நிர்மாணித்தார். கர்நாடக பகுதி முழுவதையும் பிரிட்டீஷார் கைப்பற்றியதன் நினைவாக இது எழுப்பப்பட்டது.
 
பின்னர் சிஸ்ஹோம், இந்த அரண்மனைக்கு முன்புறம், மெரினாவைப் பார்த்தபடி, ஸ்காடிஷ் பாணியிலான பொதுப்பணித் துறை கட்டடம், வாலாஜா சாலையைப் பார்த்தபடி, இந்தோ-சராசனிக் பாணியிலான ஆவணக் காப்பகம் மற்றும் வருவாய்துறை கட்டடங்களைக் கட்டினார். இதனால் சேப்பாக்கம் அரண்மனை இந்த கட்டடங்களுக்குள் மெல்ல மறைய ஆரம்பித்தது. பின்னர் 1950களில் எழிலகம் கட்டப்பட்டதும் கொஞ்ச நஞ்சம் தெரிந்த அரண்மனையும் முற்றிலுமாக மறைந்துவிட்டது.
 
ஒருகாலத்தில் அரண்மனைக்கு விருந்தினர்கள் வந்தால் அவர்களை துப்பாக்கி குண்டுகள் முழங்க வரவேற்ற மைதானத்தில், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் செனட் இல்லம் கட்டப்பட்டுவிட்டது. அதேபோல நவாப்பின் நீச்சல் குளமும் இடிக்கப்பட்டு பல்கலைக்கழக கட்டடங்கள் முளைத்துவிட்டன. அரண்மனையின் பிரதான அரைவட்ட நுழைவு வாயில் வாலாஜா சாலையில் இருந்திருக்கிறது. முக்கிய நிகழ்வுகளின்போது, இங்கிருந்த மாடத்தில் இருந்தபடி இசைக்கலைஞர்கள் தங்களின் இசையால் காற்றில் இனிமை சேர்த்திருக்கிறார்கள்.
 
இன்றைய திருவல்லிக்கேணி காவல்நிலையம் கூட சேப்பாக்கம் அரண்மனையின் ஒரு பகுதிதான். குதிரைக்காரர்களுக்கும், விருந்தினர்களின் உதவியாளர்களுக்கும் உணவு பரிமாறும் இடமாக இது இருந்திருக்கிறது. அதேபோல அரண்மனையின் பின்புறம் யானைக்குளம் ஒன்று இருந்திருக்கிறது. அரண்மனை யானைகளை இங்குதான் குளிப்பாட்டி இருக்கிறார்கள். இன்று குளமும் இல்லை, அதில் குளித்த யானைகளும் இல்லை. ஆனால் மெட்ராசின் ஒரே ஒரு அரண்மனையைச் சுற்றி இதுபோன்ற இனிய நினைவுகள் மட்டும் நிறைந்திருக்கின்றன.
 
நன்றி - தினத்தந்தி
 
2007 மார்ச்சில் இங்கு இயங்கி வந்த தோட்டக்கலை இயக்குநர் அலுவலகத்தின் முதல் மாடியின் கூரை இடிந்து விழுந்தது.
 
* 2012 ஜனவரியில் கலஸ் மஹாலின் ஒரு பகுதியை தீ தின்றுவிட்டது.
 
* பராமரிப்பின்றி சிதிலமடைந்திருக்கும் இந்த அரண்மனையை உரிய முறையில் சீரமைக்க அரசு ஆவண செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Saturday, July 14, 2012

சர் தாமஸ் மன்றோ

 

அண்ணாசாலையில் ஒரு குதிரை மீது சேணம் இல்லாமல் கம்பீரமாக அமர்ந்திருக்கும் மன்றோவின் சிலையைப் பார்க்கும் போதெல்லாம், யார் இந்த மனிதர், அப்படி என்ன சாதித்துவிட்டார் என்று சுதந்திர இந்தியாவில் ஒரு ஆங்கிலேயரின் சிலையை தொடர்ந்து இருக்க அனுமதித்திருக்கிறோம் என்ற கேள்வி எழும். இதற்கான விடையைத் தேடியபோது, உண்மையிலேயே ஆச்சரியமான ஒரு மனிதரின் வரலாறு கிடைத்தது.
Sir_Thomas_Munro.jpg
 
இங்கிலாந்தில் இருந்து 1780களில் சென்னைக்கு ஒரு சாதாரண படை வீரராக வந்தவர் தாமஸ் மன்றோ. 1792 இல் திப்பு சுல்தானுக்கு எதிரான போரில் துணை நிலை ஆளுநராக பணியாற்றினார் மன்றோ. அதில் வெற்றி பெற்றதால்பாரமகால் பகுதி முழுவதும் (தற்போதைய சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகள்) நிர்வகிக்கும் உரிமை தளபதி அலெக்ஸாண்டர் ரிட், தாமஸ் மன்றோ ஆகிய இருவரிடமும் ஒப்படைக்கப்பட்டது.
 
ஆட்சி செலுத்தும் உரிமை பெற்றதால் அந்த பகுதியில் வரிவசூல் செய்யும் அதிகாரமும் இவர்களிடம் வந்தது. இந்த நிலையில், தாமஸ் மன்றோ தனது ஆளுகைக்குட்பட்ட பகுதி முழுவதும் ஆய்வு செய்து நிலத்திலிருந்து பெறப்படும் வரிவசூல் மிகவும் அதிகம் என்ற முடிவுக்கு வந்தார். எனவே விவசாயிகளுக்கு நிலத்தை அளித்துஅதற்கான வரியை அரசாங்கம் நேரடியாக வசூல் செய்யும் ரயத்துவாரி என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் விவசாயிகள் இடைத் தரகர்களிடம் சிக்கி சீரழியும் வேதனை முடிவுக்கு வந்தது.
 
1807 ஆம் ஆண்டு மன்றோ இங்கிலாந்து சென்றபோது, இந்தியாவில் அவர் சொன்னபடி வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்கள் மன்றோவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டதால் ரயத்துவாரி முறை சென்னை மாகாணத்தில் செயல்பாட்டிற்கு வந்தது.
 
1814 ஆம் ஆண்டு சென்னை திரும்பிய மன்றோ மாவட்ட நிர்வாகம் மற்றும் நிதி ஆகிய இரண்டு துறைகளை சீர்திருத்தும் குழுவின் தலைவராக பொறுப்பேற்றார். 1820 ஆம் ஆண்டு அவர் சென்னை மாகாணத்தின் ஆளுநராகப் பதவி உயர்வு பெற்றார். அவருடைய ஆட்சியின்பொழுது மாவட்ட நிர்வாக முறையில் நிறைய ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
 
மன்றோ பற்றி ஒரு சுவையான செவி வழிச் செய்தியும் சொல்லப்படுகிறது.கி.பி.19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு முன்பு மானியமாக வழங்கப்பட்ட நிலங்களை எல்லாம் மீண்டும் அரசுடைமை ஆக்கும் சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்ரீ ராகவேந்திரரின் பிருந்தாவனம் அமைந்துள்ள மந்த்ராலய கிராமத்தை அரசுடைமை ஆக்குவதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த கிராமம் நவாப் சித்தி மசூத்கான் என்பவரால் திவான் செங்கண்ணரின் மூலம் ஸ்ரீ ராகவேந்திரருக்கு தானமாக அளிக்கப்பட்டது. எனவே இதனை ஒப்படைக்க முடியாது என பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இதுபற்றி நேரில் விசாரிக்க மன்றோ அனுப்பி வைக்கப்பட்டார். தனது காலணிகளையும் தொப்பியையும் அகற்றி விட்டு பிருந்தாவனத்திற்குள் சென்றார் மன்றோ. சிறிது நேரத்திற்கெல்லாம் மன்றோ ராகவேந்திரரின் நினைவிடம் முன்பு நின்று தனியாக பேச ஆரம்பித்துவிட்டாராம். பின்னர்
தன் உரையாடலை முடித்துக் கொண்ட மன்றோ பிருந்தாவனத்தை வலம் வந்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். காரணம், ராகவேந்திரரே அவர் முன் தோன்றி பேசியதாக நம்பப்படுகிறது.
 
ராகவேந்திரர் தோன்றியது உண்மையோ இல்லையோ ஆனால் பின்னர் தனது இருப்பிடத்திற்கு திரும்பிய மன்றோ, பிருந்தாவனத்தை அரசுடமை ஆக்கத் தேவையில்லை என அறிக்கை தந்துவிட்டார் என்பதற்கு ஆவணங்கள் இருக்கின்றன. இதுபற்றிய குறிப்பு மதராஸ் அரசாங்க கெஜட்டில் பக்கம் 213ல்ஆதோனி தாலுகா’ எனும் தலைப்பின் கீழ் விளக்கமாக தரப்பட்டிருக்கிறது.
MUNRO_150180g.jpg
 
சர் தாமஸ் மன்றோ இந்தியர்களின் மதவழிபாடுகளுக்கும் சடங்குகளுக்கும் அதிக மரியாதை அளித்தவர். இதன் காரணமாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஒரு அறக்கட்டளையினை உருவாக்கி சித்தூர் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களின் வரிவசூல் முழுவதும் அதற்கு சென்றடைய வழிவகை செய்தார். இன்றும் திருப்பதி தேவஸ்தானத்தில் நண்பகல் வழிபாட்டுக்குப் பின்னர் வழங்கப்படும் நைய்வேத்தியம்’ மன்றோ பெயரில் அவர் ஏற்படுத்திய அறக்கட்டளை வழியே நடைபெற்று வருகிறது.
 
ஒருமுறை பெல்லாரி மாவட்டத்தில் ஆங்கிலேய துணைக் கலெக்டர் ஒருவர் விவசாயிகளை மதம் மாற்றுவதற்கு முயற்சி செய்தபோதுஅப்போது கவர்னராக இருந்த மன்றோ, "மக்களை மதம் மாற்றும் முயற்சி மதகுருமார்கள் சார்ந்த விஷயம். அதிகாரி ஒருவர் மக்களைத் தன் அலுவலகத்தில் கூட்டிமதப் பிரசாரம் செய்வது அதிகாரத் துஷ்பிரயோகம்'என்று தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். அதேபோல, இந்தியா சுதந்திரம் அடைவதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே, ''இந்தியர்களுக்கு நாம் சுதந்திரம் அளிக்கத்தான் வேண்டும், அவர்களே தங்கள் நாட்டை ஆண்டு கொள்வார்கள்'' என்றும் சொன்னவர் தாமஸ் மன்றோ.
 
தென்னிந்தியாவை குறிப்பாகத் தமிழகத்தை நேசித்த மன்றோ, நாற்பதாண்டுகளுக்கும் மேலாக இங்கேயே பணிபுரிந்தார். தனது 67-ம் வயதில் தாயகம் திரும்ப விரும்பியதால், இங்கிலாந்து அரசு தர விரும்பிய கவர்னர் ஜெனரல் பதவியையும் வேண்டாம் என மறுத்துவிட்டார். இங்கிலாந்து திரும்பி கடைசி காலத்தில் அமைதியாக ஓய்வெடுக்க வேண்டும் என விரும்பினார் மன்றோ. ஆனால் விதி அவரை இங்கிலாந்து செல்ல விடவில்லை.
 
அவர் அனைத்து தரப்பு மக்களுடமும் குறிப்பாக ஏழைகளிடம் மிகவும் கருணையோடும் பாசத்தோடும் நடந்து கொண்டார். அந்த அன்பு காரணமாக, நாடு திரும்பும் முன்தான் ஆறாண்டு காலம் கலெக்டராகப் பணிபுரிந்த ஆந்திராவின் கடப்பா பகுதிக்குச் சென்றுவர விரும்பினார் மன்றோ. அப்போதுஅந்த பகுதியில் காலரா பரவியுள்ளதாக அதிகாரிகள் எச்சரித்தனர். இருந்தும் அங்கு சென்று மக்களோடு பேசி மகிழ்ந்தார். காலன் காலரா வழியாக வந்தான். 1827-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி காலையில் காலரா தாக்கி அன்றிரவே மன்றோ மரணமடைந்தார்.
 
அந்த காலத்தில் ஆந்திர மக்கள் மன்றோ மீது இருந்த பெருமதிப்பு காரணமாக தங்களின் குழந்தைகளுக்கு "மன்றோலப்பாஎன்று பெயர் சூட்டி மகிழ்ந்திருக்கின்றனர். அப்படி இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட அந்த ஆங்கிலேயரின் கதையை அறிந்த பின், இப்போது அவரது சிலையைப் பார்க்கும்போது மன்றோ இன்னும் கொஞ்சம் கூடுதல் கம்பீரத்துடன் தெரிகிறார்.
 
நன்றி - தினத்தந்தி
 
* அண்ணாசாலையில் இருக்கும் மன்றோவின் சிலைக்கான மொத்த செலவும் பொதுமக்கள் நன்கொடையாக அளித்தது.
 
* ஃபிரான்சிஸ் சாண்ட்ரி என்பவர் செய்த இந்த சிலை, இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டு கப்பல் மூலம் 1839ஆம் ஆண்டு சென்னை கொண்டு வரப்பட்டது.
 
* ராஜாஜி தன்னை சந்திக்க வரும் அரசியல் தலைவர்களிடம் மன்றோவின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்படி அறிவுறுத்துவாராம்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Saturday, July 7, 2012

இரட்டைக் கோவில்கள்

 

சென்னையில் பட்டணம் பெருமாள் கோவில் எங்கிருக்கிறது என்று விசாரித்தால், நிச்சயம் உங்களை ஏற இறங்கப் பார்ப்பார்கள். ஆனால் ஒரு காலத்தில் இந்த நகரின் முக்கிய அடையாளமாகத் திகழ்ந்திருக்கிறது இந்தக் கோவில். அவ்வளவு ஏன், மெட்ராசிற்கு சென்னை என்ற பெயர் வரக் காரணமே இந்த கோவில்தான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
 
மெட்ராஸ் என்ற மணல்வெளியில் கிழக்கிந்திய கம்பெனியார் குடியேறுவதற்கு முன்பிருந்தே திருவொற்றியூர், மயிலாப்பூர் போன்ற இடங்களில் புராதன கோவில்கள் இருந்தன. ஆனால் இவை எல்லாம் அப்போது மெட்ராஸ் என்ற எல்லைக்குள் வரவில்லை. அந்த வகையில் மெட்ராஸ் நகருக்குள் கட்டப்பட்ட முதல் பெரிய கோவில் சென்ன கேசவப் பெருமாள் கோவில்தான்.
chennakesava+perumal_jpg.jpg
 
ஃபிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் சந்திரகிரி மன்னரிடம் இருந்து இந்த பகுதியை 1639இல் குடிக்கூலிக்கு பெற உதவியாக இருந்த திம்மண்ணா என்ற வணிகர்தான் இந்த கோவிலைக் கட்டியவர். 1640களில் தாம் கட்டிய இந்த கோவிலை, ஏப்ரல் 24, 1648இல் நாராயணய்யர் என்பவருக்கு திம்மண்ணா தானமாக அளித்ததற்கான ஆவணங்கள் இருக்கின்றன. இந்த கோவில் அப்போது கோட்டைக்கு வெளியே தற்போது உயர்நீதிமன்ற கட்டடம் இருக்கும் இடத்தில் இருந்தது. சென்னையின் பூர்வகுடிகள் வசித்த அந்த பகுதி முழுவதும் கருப்பர் நகரம் என்று அழைக்கப்பட்டது.
 
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கிருந்தபடி சென்னைவாசிகளுக்கு அருள் பாலித்த சென்ன கேசவப் பெருமாளுக்கு 1757இல் ஆபத்து வந்தது. அடிக்கடி கோட்டையைத் தாக்கும் பிரெஞ்சுப் படைகளை சமாளிப்பது பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஒரு யோசனை தான் இந்த ஆபத்தை வரவைத்தது. கோட்டையைச் சுற்றி இருக்கும் அனைத்து கட்டடங்களையும் இடித்து தரைமட்டமாக்கிவிட்டால் எதிரிப் படைகள் தூரத்தில் வரும் போதே உஷாராகிவிடலாம் என்பதுதான் அந்த யோசனை.
 
இதன்படி கோட்டைக்கு வெளியில் இருந்த கருப்பர்நகரக் குடியிருப்புகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. சென்ன கேசவப் பெருமாளும் இதற்கு விதிவிலக்கல்ல என்று சொல்லிவிட்டது கிழக்கிந்திய கம்பெனி. ஒரு வழியாக கோவிலை இடித்து விட்டார்களே தவிர அதனால் ஏற்பட்ட மக்கள் கொந்தளிப்பை கிழக்கிந்திய கம்பெனிக்காரர்களால் சமாளிக்க முடியவில்லை. எனவே தற்போதைய பூக்கடை பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட கருப்பர் நகரத்தில் சென்ன கேசவப் பெருமாளுக்கு கோவில் கட்டித் தருவது என முடிவு செய்யப்பட்டது.
 
லார்ட் பிகட்டுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்த மணலி முத்துகிருஷ்ண முதலியார், இன்றைய பூக்கடை பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தை இதற்காக தானமாகக் கொடுத்தார். மேலும் சில இடங்களை அதற்குரிய மாற்று இடங்களைக் கொடுத்து உரியவர்களிடம் இருந்து கிழக்கிந்திய கம்பெனி பெற்றுத் தந்தது. இவ்வாறு சென்ன கேசவப் பெருமாள் கோவிலுக்காக சுமார் 24,000 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. இதுதவிர 1173 பகோடாக்களையும் (அன்றைய பணம்) கம்பெனி தானமாக வழங்கியது. மணலி முத்துகிருஷ்ண முதலியார் தமது பங்காக 5000 பகோடாக்களை அளித்ததோடு உள்ளூர்வாசிகளிடம் இருந்து நன்கொடையும் வசூலித்து மொத்தம் 15,000 பகோடாக்களை சேகரித்தார். இந்த பணத்தைக் கொண்டு 1762இல் கோவில் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
 
இந்த இடத்தில்தான் கதையில் ஒரு திருப்பம். சென்ன கேசவப் பெருமாளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கூடவே சென்ன மல்லீஸ்வரருக்கும் ஒரு கோவில் கட்டுவது என முடிவு செய்யப்பட்டது. ஆக இரண்டு கோவில்களைக் கட்டும் பணி களைகட்டியது. ஆனால் பல காரணங்களால் இந்த பணிகள் தாமதமாகி 1780 வரை நடைபெற்றன. கிழக்கிந்திய கம்பெனியார் உதவியால் கட்டப்பட்ட இந்த கோவில், கம்பெனி கோவில் என்றும் சில காலம் அழைக்கப்பட்டு வந்தது.
ChennaKesavaTemple.JPG
 
உயர்நீதிமன்றம் இருந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கோவிலில் வைக்கப்பட்டிருந்த மூலவர் தான் இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் ஹைதர் அலியின் படை எடுப்பின்போது, பழைய கோவிலில் இருந்த மூலவரை காப்பாற்றுவதற்காக அதனை கோவில் குருக்கள், திருநீர் மலைக்கு கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் மணலி முத்துகிருஷ்ண முதலி ஈடுபட்டாலும், அவருக்கு அது கிடைக்கவில்லை. எனவே திருநீர்மலைக் கோவிலில் இருந்து ஒரு சிலையைக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்ததாக நரசய்யா தனது மதராசப்பட்டினம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
 
அன்றில் இருந்து இன்று வரை மணலி முத்துகிருஷ்ண முதலியின் குடும்பத்தினர்தான் இந்த கோவிலை நிர்வகித்து வருகின்றனர். அவரது குடும்பத்தைச் சேர்ந்த மணலி கிருஷ்ணசாமி முதலியார், சரவண முதலியார் உள்ளிட்டவர்களின் கருங்கல் சிலைகள் இந்த கோவில் தூண்களில் நம்மை வரவேற்கின்றன.
 
ஒரு காலத்தில் ஜூன் மாதம் நடைபெறும் பெரியாழ்வார் திருவிழாவின் போது, நாகஸ்வர கலைஞர் ஒருவரை இங்கு வரவழைத்து 10 நாட்கள் இசைக் கச்சேரி வெகு விமர்சையாக நடத்தப்பட்டிருக்கிறது. 1917ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியாழ்வார் திருவிழாவில் பிரபல நாகஸ்வர கலைஞர் டி.என். ராஜரத்தினம் பிள்ளை இந்த கோவிலில் இசைக் கச்சேரி செய்திருக்கிறார். கோவிலுக்குள் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் தெருவில் நின்றபடி ஏராளமானோர் இந்த மயக்கும் இசையை ரசித்திருக்கிறார்கள்.
 
இப்படி நாகஸ்வரங்களை ரசித்துக் கொண்டிருந்த சென்ன கேசவப் பெருமாளும், சென்ன மல்லீஸ்வரரும் இப்போது தேவராஜ முதலி தெருவிலும், நைனியப்பன் தெருவிலும் விரைந்து கொண்டிருக்கும் சைக்கிள் ரிக்ஷாக்களின் மணி ஓசையை அமைதியாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
 
நன்றி - தினத்தந்தி
 
* தேவராஜ முதலி தெருவில் உள்ள சென்ன கேசவப் பெருமாள் கோவிலில் இருந்து என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சென்ன மல்லீஸ்வரர் கோவிலுக்கு செல்ல வழி அமைக்கப்பட்டுள்ளது.
* 1710இல் தயாரிக்கப்பட்ட மெட்ராஸ் வரைபடத்தில் இந்த கோவில், பெரிய கோவில் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
* சென்ன கேசவப் பெருமாள் இருப்பதால் தான் இந்த ஊருக்கு சென்னை என்று பெயர் வந்ததாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Saturday, September 29, 2012

எலெக்ட்ரிக் தியேட்டர்

 

சினிமாவில் சேர்வதற்காக எத்தனையோ பேர் கனவுகளோடு தினமும் சென்னையில் வந்து இறங்குகிறார்கள். இதற்கெல்லாம் காரணகர்த்தாவான சினிமா முதன்முதலில் சென்னைக்கு வந்த கதை உங்களுக்குத் தெரியுமா.. அந்த கதையோடு தொடர்புடைய ஒரு கட்டடம் இன்றும் அண்ணாசாலையில் இருக்கிறது என்பது தெரியுமா... இப்படி நிறைய தெரியுமாக்களுக்கு விடையாக நின்று கொண்டிருக்கிறது எலெக்ட்ரிக் தியேட்டர்.
electric+theatre.jpg
எலெக்ட்ரிக் தியேட்டரின் இன்றைய தோற்றம்
 
சினிமாவுக்கும் சென்னைக்குமான தொடர்பு ஏறக்குறைய சினிமா கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலேயே தொடங்கிவிட்டது. பிரான்சைச் சேர்ந்த லூமியர் சகோதரர்கள் தான் முதன்முதலில் சலனப்படங்களை உருவாக்கும் கருவி ஒன்றை கண்டுபிடித்தனர். சினிமாட்டோகிராப் என்ற இந்த கருவியைக் கொண்டு 1895ஆம் ஆண்டு டிசம்பர் 28ந் தேதி உலகின் முதல் சினிமாவை பொதுமக்களுக்கு திரையிட்டுக் காட்டினர். அடுத்த இரண்டே ஆண்டுகளில் சினிமா சென்னைக்கு வந்துவிட்டது.
மெட்ராசில் முதன்முதலில் சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள விக்டோரியா பப்ளிக் ஹாலில்தான் 1897ஆம் ஆண்டு திரைப்படம் என்ற புதிய விஷயம் அரங்கேறியது. அதனை திரைப்படம் என்று கூட சொல்ல முடியாது. நிறைய புகைப்படங்கள் அடுத்தடுத்து ஸ்லைட் ஷோ மாதிரி நகரும் சலனப்படக் காட்சி என்று சொல்லலாம். இதனை எட்வர்டு என்ற ஐரோப்பியர் திரையிட்டார். ஒரு தொழிற்சாலையில் இருந்து ஊழியர்கள் வேலை முடிந்து வெளியேறுவது, ரயில் ஒன்று ரயில் நிலையத்திற்குள் நுழைவது போன்ற சில நிமிடங்களே ஓடக்கூடிய மவுனப் படங்கள்தான் இங்கு திரையிடப்பட்டன. திரையில் விரிந்த இந்த விநோதத்தை சென்னைவாசிகள் விழிகள் விரியப் பார்த்தனர்.
இந்த புதிய கலைக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பைப் பார்த்ததும் சென்னையில் சினிமாவிற்கான அடுத்தகட்ட முயற்சிகள் தொடங்கின. தெரு ஓரங்கள், பூங்காக்கள் என பொதுமக்கள் கூடும் இடங்களில் இதுபோன்ற மவுனப் படங்கள் திரையிட்டுக் காட்டப்பட்டன. இப்படி கண்ட இடங்களில் கூட்டம் கூட்டுவதை விட, அதற்கென ஒரு அரங்கைக் கட்டினால் என்ன என இரண்டு ஆங்கிலேயர்களுக்கு தோன்றிய யோசனையின் பலன்தான் எலெக்ட்ரிக் தியேட்டர்.
வார்விக் மேஜர் மற்றும் ரெஜினால்ட் அயர் (Warwick Major & Reginald Eyre)ஆகிய இருவரும் இணைந்து, மெளன்ட் ரோடில் எலக்ட்ரிக் தியேட்டர்என்ற அரங்கை கட்டினார். இந்த தியேட்டர் 1900ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்று கூறுப்படுகிறது. இதன் நூற்றாண்டை நினைவு கூறும் வகையில் 2000ஆம் ஆண்டு இந்திய தபால்துறை சிறப்பு தபால்தலை ஒன்றையும் வெளியிட்டது. ஆனால் சினிமா வரலாற்று ஆய்வாளர்கள் இதனை ஏற்க மறுக்கின்றனர்.
எலெக்ட்ரிக் தியேட்டர் 1913ஆம் ஆண்டுதான் கட்டப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் இதற்கு முன்னரே சென்னையில் சில திரையரங்குகள் இருந்திருக்கின்றன. இன்றையே பிராட்வே பகுதியில் குளூக் (Mrs. Klug) என்ற அம்மையார் 1911இல் பயாஸ்கோப் என்ற திரையரங்கை நடத்தியிருக்கிறார். உண்மையாகப் பார்த்தால் இதுதான் சென்னையின் முதல் நிரந்தரத் திரையரங்கம். ஆனால் குளூக் இதனை திரையரங்கமாக நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டவில்லை. ஏற்கனவே இருந்த ஒரு கட்டடத்தை சற்றே மாற்றியமைத்து திரைப்படங்களை திரையிட்டார். இவர்தான் சென்னைவாசிகளுக்கு மாலையில் சினிமாவிற்கு போகும் பழக்கத்தை ஏற்படுத்தியவர்.
நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து குளூக் தனது தியேட்டரைப் பிரபலப்படுத்தினார். அந்த காலத்திலேயே மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியாக விளங்கிய பிராட்வேயில் தியேட்டரை அமைத்ததுடன், நிறைய பேர் பார்க்க வசதியாக ஒரு நூதன முறையையும் குளூக் பின்பற்றினார். அதாவது மாலை நேரம் முழுவதும் படங்கள் தொடர்ந்து திரையிடப்படும். யாருக்கு எப்போது வசதியோ அப்போது வந்து பார்த்து செல்லலாம். அந்த காலத்தில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இதுதான் நடைமுறையில் இருந்தது.
குளூக்கின் இந்த திரையரங்கம் வெறும் 6 மாதங்கள்தான் நீடித்தது. ஆனால் அன்றைய காலகட்டத்தில் இத்தனை மாதங்கள் தொடர்ந்து தாக்குப் பிடித்ததே பெரிய விஷயமாக பேசப்பட்டது. குளூக்கிற்கு முன்பே 1907இல் மவுண்ட் ரோடில் மிஸ்குவித் அண்ட் கோ என்ற கட்டடத்தில் (Misquith & Co)லிரிக் (Lyric) என்ற திரையரங்கு இருந்திருக்கிறது. இதனைப் பற்றிய கூடுதல் தகவல்கள் தெரியவில்லை.
இந்த சூழலில் மவுண்ட் ரோடில் அவதரித்ததுதான் எலெக்ட்ரிக் தியேட்டர். திரையரங்கமாக நடத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு கட்டப்பட்டது என்பதால் இதனையே சென்னையின் முதல் நிரந்தரத் திரையரங்கம் என எடுத்துக் கொள்ளலாம். அப்படிப் பார்த்தால் தென்னிந்தியாவின் முதல் நிரந்தரத் திரையரங்கமும் இதுதான். உறுதியான இரும்புத் தூண்களும், சாய்வான கூரையும் கொண்ட இந்த கல் கொட்டகைக் கட்டடம் அன்றைய சென்னைவாசிகளின் கனவுகளுக்கு வண்ணம் சேர்த்தது.
Electric-theatre-poster.jpg
தியேட்டர் போஸ்டர்
 
மயக்கம் தரும் மெல்லிய விளக்கு வெளிச்சமும், கையால் சுற்றப்படும் புரொஜெக்டரும், மெல்ல விலகும் நீல நிற சாட்டின் துணியும், திரையில் வந்து போகும் மவுனப் படக் காட்சிகளும், அரங்கின் ஒரு மூலையில் இருந்து உயிர் கசியும் பியானோ இசையும்... அன்றைய மெட்ராஸ்வாசிகளை அப்படியே அலேக்காகத் தூக்கி ஒரு கனவு உலகத்தில் உலவ விட்டது என்றே சொல்ல வேண்டும்.
படம் பார்க்க வரும் ரசிகனுக்காக வார்விக் இன்னும் சில வசதிகளையும் ஏற்படுத்தித் தந்திருந்தார். திரையரங்கிற்கு பின்புறம் குடிமகன்களுக்காக பாரும், விளையாடி மகிழ பில்லியர்ட்ஸ் டேபிள் ஒன்றும் இருந்தது. அன்றைய மெட்ராசின் புகழ்பெற்ற உணவுக் கலைஞரான டி ஏஞ்ஜெலிஸ் அருகிலேயே ஹோட்டல் வைத்திருந்ததால், அருமையான உணவு வகைகளும் எலெட்ரிக் தியேட்டரின் திறந்தவெளி பாரில் கிடைத்தன.
இத்தனை வசதிகள் இருந்தும் எலெட்ரிக் தியேட்டரின் பயணம் இரண்டு ஆண்டுகளுக்கு (21 மாதங்கள்) மேல் தொடரவில்லை. இதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று 1914இல் இதன் அருகிலேயே தொடங்கப்பட்ட கெயிட்டி தியேட்டர். ரகுபதி வெங்கைய்யா என்பவர் தொடங்கிய கெயிட்டிதான் தென்னிந்தியாவில் இந்தியர் ஒருவரால் கட்டப்பட்ட முதல் திரையரங்கம். இப்படி சில பல காரணங்களால் வார்விக் மேஜர் 1915ஆம் ஆண்டு தனது எலெக்ட்ரிக் தியேட்டரை தபால் துறைக்கு விற்றுவிட்டார். அன்று முதல் இன்று வரை இது இந்திய தபால் துறையின் வசம் இருக்கிறது.
தற்போது மவுண்ட் ரோடு தபால்நிலைய வளாகத்தில் இருக்கிறது இந்த பழமையான தியேட்டர். தபால்நிலைய வளாகத்திற்குள் நுழைந்ததுமே அந்தக்கால வீடு பாணியில் நம்மை எதிர்கொள்ளும் இந்த கட்டடத்தில் இப்போது அரிய தபால்தலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த கட்டடத்திற்குள் இப்போது நுழைந்தாலும் எங்கிருந்தோ மெல்லிய பியானோ இசை கசிவதைப் போலவே இருக்கிறது. ஒருவேளை, இல்லாத திரைகளில் இப்போதும் அந்த கருப்பு வெள்ளைப் படங்கள் ஓடிக் கொண்டே இருக்கலாம்.
நன்றி - தினத்தந்தி
 
* உலகின் முதல் தபால் தலையான பென்னி பிளாக் (Penny Black) முதல் பல அரிய தபால் தலைகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
 
* இங்குள்ள கல்வெட்டு ஒன்றில் இந்த தியேட்டர் 1900ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகத்தான் குறிக்கப்பட்டுள்ளது.
 
* இந்த கட்டடத்தின் சில பகுதிகள் 1980களில் இடிக்கப்பட்டுவிட்டன.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

இன்றய, " சென்னை சேத்துப்பட்டு " பகுதியின் வரலாறு யாருக்காவது தெரியுமா ?

இன்னொரு ஆச்சர்யமான செய்தி... தனியாக காரோ, பஸ்ஸோ வைத்திருந்தவர்களைப் பார்த்திருப்பீர்கள். , அட அதுகூட பரவாயில்லை. அந்தக்காலத்து கே.ஆர் விஜயாவின் கணவர் வேலாயுதம் தனி விமானமே வைத்திருந்தார் என்பார்கள்.

ஆனால் தனியாக ரயில் வைத்திருந்தவர் ஒருவர் சென்னையில் இருந்தார்.

சென்னையிலுள்ள பல பிரசித்தி பெற்ற, சிவப்பு நிறத்திலுள்ள பல கட்டடங்களை உருவாக்கிய கட்டட மேதை, ' தாட்டிகொண்ட நம்பெருமாள் ' செட்டியார்.

பாரிமுனையில் உள்ள உயர் நீதிமன்றம், சட்டக்கல்லூரி, எழும்பூரில் உள்ள சிற்பக் கலை கல்லூரி, மியூசியம், கன்னிமாரா நூலகம் போன்றவை இவரால் கட்டப்பட்டவை.

18-ம் நூற்றாண்டின் மத்தியில் ஆங்கிலேயர்களுக்கு கிடைத்த பில்டிங் கான்ட்ராக்டர் .

இவர் வாழ்ந்த வீடு, ' வெள்ளை மாளிகை ' என்ற பெயருடன், சேத்துப்பட்டு மேம்பாலம் அருகில், டாக்டர் மேத்தா மருத்துவமனையின் பின் உள்ளது.

இதில், மூன்று மாடிகள், 30 அறைகள் உள்ளன. இது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

சீனா, ஜப்பான், இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகளில், பீங்கானில் செய்யப்பட்ட அரிய கலைப் பொருட்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

எழும்பூர் பாந்தியன் சாலையிலிருந்து, ஹாரிங்டன் சாலை வரை உள்ள நிலப்பரப்பு அவருக்குச் சொந்தமாக இருந்தது.

அதனால் அது ' செட்டியார் பேட்டை ' என அழைக்கப்பட்டது.

நாளடைவில், " செட்டிபேட்டை ' என மருவி, இன்று, " செட்பெட் ' என மாறிவிட்டது. ஆங்கிலேயர் பலருக்கு வீடு கட்டித் தந்தவர்.

கணித மேதை ராமானுஜம் தம் இறுதி நாட்களை செட்டியார் வீட்டில் கழித்தார்.

இங்கிலாந்திலிருந்து திரும்பிய ராமானுஜருக்கு, காசநோய் பாதிப்பு அதிகமாகிவிட்டதால், அவரது உறவினர்கள் பயந்துபோய், திருவல்லிக்கேணியில் இருந்த அவர்களது வீட்டில் வைத்துக் கொள்ளவில்லை.

அப்போது, நம்பெருமாள் செட்டியார் அவரை அழைத்து வந்து, தனி அறை, தனி சமையல், சிறப்பு வைத்தியம் முதலிய ஏற்பாடுகள் செய்து, அவரைக் காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் செய்தார்.

ஆனால், ராமானுஜம் முட்டை முதலியவற்றை சாப்பிட மறுத்ததால், காசநோய்க்கு இளம் வயதில் மறைந்தார்.

அவர், கடல் கடந்து வெளிநாடு சென்றதால், அவரது உடலைக் கூட ஏற்றுக்கொள்ள உறவினர்கள் மறுத்தனர். ஆதலால், நம்பெருமாள் செட்டி அவர்களே அவரது ஈமச் சடங்குகளை செய்தார்.

ராமானுஜத்தின் மரணச் சான்றிதழ், இன்றும் செட்டியார் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பட்டம் பெற்றவர் நம்பெருமாள்.

முன்னாள் இம்பீரியல் வங்கி ( தற்போது SBI ) நியமனம் செய்த முதல் இந்திய டைரக்டர். சென்னை மாகாணத்தின் மேல் சட்டசபைக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியர். முதன் முதலாக வெளிநாட்டு கார் ( பிரெஞ்ச் டிட்கன் ) வாங்கிய முதல் இந்தியர்.

தற்போது இந்த கார் விஜய் மல்லையாவிடம் உள்ளது. தன் வின்டேஜ் கலெக்‌ஷன் கார்களில் ஒன்றாக அதை வைத்திருக்கிறார்.

தான் ஈட்டிய பணத்தில் பெரும் பகுதியை, சமஸ்கிருத வளர்ச்சி, வைணவ கோயில்களின் திருப்பணி, ஏழைகளின் கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்கு கொடுத்து உதவினார்.

வடசென்னையில் பல பள்ளிகளும் சேத்துப்பட்டிலுள்ள சேவா சதனம் வளாகத்தில், தாட்டிகொண்ட நாச்சாரம்மா மருத்துவமனையும் இவருடை அறக்கட்டளை சார்பில் நடைபெறுகின்றன. சென்னையின் வளர்ச்சியில் இவரது சேவை சிறப்பானது.

இந்த நம்பெருமாள் செட்டியார்தான் தன் சொந்த உபயோகத்துக்காக, நான்கு பெட்டிகள் கொண்ட தனி ரயில் வண்டி வைத்திருந்தார்.

தம் குடும்பத்தினரோடு திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்குச் சென்று வர இந்த ரயிலை உபயோகித்தார்.

மற்ற நேரங்களில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்தான் இவருடைய ரயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இவரது பெயரையே இன்று, " செட்பட் " தாங்குகின்றது.

Sankara Narayanan's photo.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

5baaa.jpg



__________________
«First  <  1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard