நீங்கள் ‘அன்னியநிதி’ பற்றிய கட்டுரைகள் எழுதியிருப்பதை வாசித்தேன். அப்பட்டமான கேள்வி. உங்களுக்கும் இந்துத்துவ அமைப்புகளுக்கும் என்ன தொடர்பு? நீங்கள் அவர்களிடம் நிதி பெற்றிருக்கிறீர்களா? இல்லை என்று சொல்லமுடியுமா? இந்தக்கட்டுரைகளே இந்துத்துவ அஜண்டாதானே?
நான் என் ஆரம்பகாலத்து இந்துத்துவ இயக்கத் தொடர்புகள் பற்றி எப்போதுமே விரிவாகச் சொல்லியிருக்கிறேன். ஆம், நான் இளமையில் இந்துத்துவ இயக்கங்களில் உறுப்பினராக இருந்தேன். அவர்களிடம் அரசியல் பயிற்சி பெற்றேன். அவர்களின் அதிகாரபூர்வ இதழான விஜயபாரதம் இதழில் தொடர்ந்து எழுதினேன். அவர்களிடம் நீடித்திருந்தால் தமிழக அளவில் பொறுப்பில் இருந்திருப்பேன்.
ஆனால் என் கொள்கைவேறுபாடுகளினால் அவ்வமைப்புகளில் இருந்து முற்றிலும் விலகினேன். சிறிதுகாலம் நாடோடியாக அலைந்தேன். என்னுடைய விலகலுக்கும் அலைச்சலுக்கும் என் பெற்றோரின் தற்கொலையும் ஒரு காரணம். அது ஆன்மீகமான ஒரு தத்தளிப்பை என்னிடம் பலவருடங்கள் நீடிக்கவைத்தது.
கேரளத்தில் காசர்கோட்டில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே தொலைதொடர்புத் தொழிற்சங்கத்திலும் அதனூடாக இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி [மார்க்ஸிஸ்ட்]யில் உறுப்பினரானேன். அதன்பின், தர்மபுரி வந்தபின் எழுத்தாளன் எந்த அமைப்பிலும் உறுப்பினராகக்கூடாது என்பதற்காக விலகிக்கொண்டேன்.
நான் எழுதவந்த முதல் வருடத்திலேயே கோவை ஞானி நடத்திவந்த நிகழ் இதழில் வெளிப்படையாக என்னுடைய இந்த அரசியல் தொடர்புகளை விவரித்து எழுதியிருக்கிறேன். அதன்பின்னரும் பலமுறை வெளிப்படையாக எழுதியிருக்கிறேன். ரகசியமே கிடையாது.
நான் இந்துத்துவ முகவராக இருந்தால் அதை வெளிப்படையாக அப்பட்டமாகச் சொல்வேன். எனக்கு எவரைக்கண்டு பயம் என்று நினைக்கிறீர்கள்? உங்களையெல்லாமா? அப்படி நினைத்தீர்கள் என்றால் உங்கள் தன்னம்பிக்கையை வியக்கிறேன். ஆமாம், நான் இந்துத்துவாதான் என்று சொன்னால் எதை இழக்கப்போகிறேன்?
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதாவில் நான் சந்தித்த பல மனிதர்கள் மீது எனக்கு மிகப்பெரும் மரியாதை உண்டு. அப்பழுக்கற்ற நேர்மையாளர்கள் என நான் இன்றும் நம்பும் மனிதர்களை அங்கே நெருக்கமாக அறிந்திருக்கிறேன். நான் எந்த தனிப்பட்ட வருத்தத்தாலும் விலகவில்லை. முழுக்கமுழுக்க சிந்தனை மாறுபாட்டால்தான்.
எனன மாறுபாடு? அதை தனித்தனியாக மிக விரிவாக எழுதியிருக்கிறேன். சொல்லப்போனால் எழுதிக்கொண்டே இருக்கிறேன். எந்த அமைப்புடனும் தொடர்பில் இல்லாதவர்களிடம் மட்டுமே அதை என்னால் புரியவைக்கவும் முடியும்.என எழுதி எழுதிக் கண்டுகொண்டேன்.
இந்தத்தேசம், இங்குள்ள மக்கள் சமூகம் வரலாற்றுக்காலத்திற்கு முன்பிருந்தே தொடர்ச்சியாக நிகழ்ந்துவந்த ஓர் ஒருங்கிணைக்கும்செயல்பாட்டால் உருவாகிவந்தது என நான் நினைக்கிறேன். அந்த ஒருங்கிணைவுப்போக்கு மேலும்மேலும் மக்களை உள்ளடக்கிக்கொண்டு விரிந்துசெல்லும்போதே இத்தேசம் வாழும் என்றும் ,அது பலவீனமடையும்போது இத்தேசம், சமூகம் சிதறத்தொடங்கும் என்றும் நம்புகிறேன்.
எனென்றால் மிகமிக அதிகமான மக்கள்தொகையும் நூறுகிலோமீட்டருக்கு ஒருமுறை மாற்றம்கொள்ளும் வாழ்க்கைமுறையும் கொண்ட இந்தமண் பூமியில் வேறெங்கும் இல்லாத ஒரு தனித்தன்மை கொண்ட அமைப்பு. ஒற்றுமை, சமன்வயம், மட்டுமே இதை கட்டிநிறுத்தமுடியும். சிறிய பூசல்கள்கூட குருதியாற்றையே உருவாக்கும்.
ஆகவே இதை எந்த ஒரு ‘தூய்மைவாத’ அடிப்படையிலும் ஒற்றைப்படையாக்குவதை நான் எதிர்ப்பேன். மதம், மொழி, இனம் ,வட்டாரம் எதுவானாலும். எந்த ஒருபிரிவினை நோக்கையும், எந்த ஒரு வெறுப்பையும், எந்த ஒரு வன்முறைப்பேச்சையும் நிராகரிப்பேன். அவை காதில் விழும்போது உருவாக்கப்போகும் அழிவைத்தான் முன்னரே காண்கிறேன். வெறுப்பை உருவாக்குபவர்களைப்போல அறைக்குள்ளும் ஆதரவுச்சூழலிலும் அடைபட்டவன் அல்ல நான். இத்தேசம் முழுக்க அலைந்துகொண்டே இருப்பவன். ஆகவே அவை இங்கே என்ன பொருள் பெறும் என அறிந்தவன்.
ஆகவே நான் ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு விலகிவந்தேன். அதனுடன் எந்ததொடர்பையும் வைத்துக்கொள்ளவில்லை. அதை பிளவுபடுத்தும் நோக்குள்ளது, ஒருங்கிணைவுப்போக்குக்கு எதிரானது என நினைக்கிறேன். இந்துத்துவ அரசியலை நிராகரிக்கிறேன். இந்துமெய்யியல் குறித்து நான் பேசுவது இந்துத்துவ அரசியலாக ஆகிவிடலாகாது என எப்போதும் கவனம் கொள்கிறேன்.
எந்த அடிப்படையில் திராவிட அரசியலை நிராகரிக்கிறேனோ, எந்த அடிப்படையில் தமிழ்த்தேசியத்தை நிராகரிக்கிறேனோ, எந்த அடிப்படையில் பிற மதவாதங்களை நிராகரிக்கிறேனோ அந்த அடிப்படையில் இந்துத்துவ அரசியலை முற்றாக நிராகரிக்கிறேன். இதை 1988ல் முதல்முறையாக நிகழ் இதழில் எழுதினேன். இன்றுவரை ஐம்பதுமுறையாவது எழுதியிருக்கிறேன்.
அதேபோல என் இடதுசாரித் தொழிற்சங்கத் தொடர்பிலும் பிறநிலையிலும் நான் சந்தித்த மார்க்ஸிய ஆசான்களும் செயல்வீரர்களும் மகத்தான மனிதர்கள். நேர்மையும் தியாகமும் என்றுமுள்ள மானுட விழுமியங்கள் என என்னை இன்றும் நம்பவைப்பவர்கள் அவர்கள். அவர்கள் மீது எப்போதும் பெருமதிப்புடன் மட்டுமே இருக்கிறேன். என் வாழ்க்கையின் தனிப்பட்ட சிறந்த பலதருணங்கள் அவர்களுடன் நிகழ்ந்தவை.
ஆனால் எப்படி என்னால் இந்துத்துவ சிந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லையோ அதேபோல கம்யூனிஸச் சிந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவை இந்தியச்சூழலில் ஆற்றும் பணி ஒன்று உள்ளது என நினைக்கிறேன். அவை இன்றி இங்கே தொழிற்சங்க அரசியல் இல்லை. மனித உரிமைப்போராட்டம் இல்லை. எளியமக்களை நோக்கி அரசியலை தொடர்ச்சியாக திருப்பிவைப்பவர்கள் அவர்கள்.
இந்தியாவின் வரலாற்றை, சமூக உருவாக்கத்தை, பொருளியல் கட்டமைப்பை புரிந்துகொள்ள மார்க்ஸிய முரணியக்க வரலாற்றுவாதம் முக்கியமான கருவி என்றே நினைக்கிறேன். இ.எம்.எஸ்,டி.டிகோஸாம்பி,கே.தாமோதரன் போன்றவர்கள் என் ஆசிரியர்கள்தான். ,
ஆனால் இந்தியச் சமூகத்தில் பண்பாட்டுப் பாரம்பரியத்தை, அதன் பண்பாட்டு ஒருமையை புரிந்துகொள்வதில் முழுமையான தோல்வியை அடைந்துள்ளது என்பதுடன் அதைச் சிந்தனைக்களத்தில் தொடர்வது மிகமிகப்பெரிய அழிவுப்பாதையை நோக்கிக்கொண்டுசெல்லும் என்றும் புரிந்துகொண்டிருக்கிறேன்.
ஏனென்றால் ஒட்டுமொத்த இந்தியப் பண்பாட்டையே முரண்பாடுகள் மற்றும் மோதல்களின் களமாகக் காண்பதும், அம்முரண்பாடுகளையும் மோதல்களையும் முன்னெடுத்து அதை வற்கப்போராக ஆக்குவதுமே அவர்களின் செயல்திட்டம். பல்லாயிரமாண்டுக்காலம் நீடித்த மிகமிகச்சிக்கலான ஒரு தொகுப்புச்செயல்பாடு வழியாக கொஞ்சம்கொஞ்சமாக உருவாகிவந்த ஒன்று இப்பண்பாட்டுப்படலம். வைதிகமதமும்,சமணமும், பௌத்தமும், பிரிட்டிஷ் ஆட்சியும் அதற்குப் பங்களிப்பாற்றியுள்ளன. இயற்கையான சூழியலமைப்புகளைப்போல உயிர்ப்புள்ள ஒன்று அது.
அதேசமயம் சூழியல் அமைப்புக்களைப்போல ஒருசரடு அறுந்தால் ஒட்டுமொத்தமாகவே அழியக்கூடியது. தங்கள் ஐரோப்பியமைய நோக்கு மற்றும் சந்தர்ப்பவாத அரசியல்விளக்கம் வழியாக இடதுசாரிகள் இன்றைய சூழலில் இப்பண்பாட்டின் அழிவுசக்திகளாக அறியாமலேயே ஆகியிருக்கிறார்கள்.
நான் மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியிலிருந்து விலகியபின் குறுகியகாலம் மிகுந்த நம்பிக்கையுடன் ஒற்றைப்படையான ஆர்வத்துடன் ஈடுபட்ட அரசியல் என்றால் விடுதலைப்புலி ஆதரவுதான். அதற்காக உணர்ச்சிகரமாக நிறைய எழுதினேன். அதற்கான காரணம் இருந்தது அன்று. என் முதிர்ச்சியின்மையும் காரணமே.
அதன்பின் இன்றுவரை எனக்கு என அரசியலேதும் இல்லை. கருத்தியல் நிலைபாடு என எதையுமே ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஏற்றுக்கொள்ள நினைத்ததுமே அதன் மறுபக்கம் நோக்கித்தான் சிந்தனை ஓடுகிறது. என்னுடைய எண்ணங்களை தொடர்ச்சியாக புனைகதைகளாக, கட்டுரைநூல்களாக எழுதிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் என் நூல்களில் எதையேனும் வாசித்து இதை தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.
விடுதலைப்புலி இயக்கம் மீதான கடும் ஏமாற்றம் கருத்தியல்கள் மீதே அவநம்பிக்கை கொள்ளச்செய்தது. அதை நீங்கள் பின் தொடரும் நிழலின் குரலில் காணலாம். நான் எழுத்தாளனுக்கு என எந்தக் கோட்பாட்டு அரசியலும் இருக்கலாகாது என்ற எண்ணத்தை வந்தடைந்தேன். அதை நோக்கி வர எம் கோவிந்தனும் அவரைத் தொடர்ந்த மலையாள எழுத்தாளர்களான ஓ.வி. விஜயன், ஆனந்த், பி.கெ.பாலகிருஷ்ணன் உதவினார்கள். முக்கியமாக சுந்தர ராமசாமி.
அத்துடன் ஒன்று நான் இருந்த குறுகிய காலத்தில் இருந்த ஆர்.எஸ்.எஸ் இன்றுள்ளதல்ல. கோவிந்தாச்சார்யா, நானாஜி தேஷ்முக் போன்றவர்களின் அமைப்பாக அன்றிருந்தது அது. அதன் முகமாக வாஜ்பேயி இருந்தார். காந்தியப்பொருளியலை தன் அதிகாரபூர்வமான கொள்கையாக அது அறிவித்திருந்தது. அன்றிருந்த கம்யூனிஸ்டுக்கட்சியும் இன்றில்லை. அது நான் ஆசிரியராக வணங்கும் இ.எம்.எஸ் மையத்தில் இருந்த காலகட்டம். கொள்கைவிவாதங்களின் காலகட்டம்.
ஆனாலும் எம் கோவிந்தனைப்போல ஒரு தனிமனித விமர்சனக்குரலாக மட்டும் ஒலிக்க எனக்கு விருப்பமில்லை. நான் ஒரு சமூகக் கனவை உருவாக்கிக்கொள்ள விரும்பினேன். அது என்னை ஜி.குமாரபிள்ளை, ‘காந்திகிராமம்’ ராமச்சந்திரன் போன்ற காந்தியவாதிகளிடம் கொண்டு சென்றது. ஆனால் அவர்களின் இறுக்கமான மதநம்பிக்கை போன்ற காந்திய விசுவாசம் என்னை ஏமாற்றம் நோக்கித் தள்ளியது. சிலசந்திப்புகளுடன் சலிப்பு ஓங்கியது.
அதன்பின் இருவரிடமிருந்து காந்தியை புத்தம்புதியவராக அணுகலாமென உணர்ந்தேன். ஒருவர் சுந்தர ராமசாமியின் நண்பரான பேராசிரியர் பத்மநாபன். இன்னொருவர் தற்செயலாக சந்திக்க நேர்ந்த லாரி பேக்கர். பின்னர் ஈரோடு வி ஜீவானந்தம்.
ஒவ்வொருவருக்கும் ஒரு முன்னுதாரணச் சமூகம் பற்றிய கனவு இருக்கவேண்டும். அதை ஒட்டிய ஒரு நகர்வுக்காகவே அவர் கருத்துலகில் செயல்படவேண்டும். நான் அத்தகைய ஒரு முன்னுதாரண உருவகத்தை நவீன காந்தியில் கண்டுகொண்டேன். அதை இன்றைய காந்தியில் எழுதியிருக்கிறேன். அதுவே என் பொதுவான அரசியல்.ஆனால் அதுகூட கருத்தியல்நிலைபாடு அல்ல. ஒரு தேடல் மட்டுமே.
ஆனால் காந்தியசிந்தனை அடிப்படையில் என்னுடைய ஆன்மீகமான தேடல்களையும் ஒருங்கிணைத்ததாக இருக்கவில்லை. மரணங்களின் அடிகளால் உருவான என் ஆதாரக்கேள்விகளுக்கு காந்தியிடம் பதில் இல்லை. அந்தத் தேடலே என்னை நித்ய சைதன்ய யதியிடம் கொண்டுசென்று சேர்த்தது.
நித்யா வழியாகவே நான் தேடுவது ஓர் ஒருங்கிணைந்த ஞானதரிசனத்தை என அறிந்துகொண்டேன். ஆன்மீகம் முதல் அன்றாடவாழ்க்கை வரை இணைக்கும் ஒரு மெய்யறிவு. அது கம்யூனிசமும் அல்ல இந்துத்துவ சிந்தனையும் அல்ல. அது வேதாந்தம். நாராயணகுருவின் தூய அத்வைதம். பௌத்த யோகாத்மவாதத்துக்கு சமானமான தத்துவம் அது. உறுதியான சமூகப்போராளியாகவும் பிரபஞ்ச உண்மையை அறிந்தவிந்த மெய்ஞானியாகவும் ஒரே சமயம் விளங்கிய நாராயணகுரு எனக்கான ஒரு பெரும் படிமம்.
அதன் பின் இந்த வருடங்களில் அந்த ஞானத்தை, அதை நோக்கிய தத்தளிப்புகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறேன். விஷ்ணுபுரமோ கொற்றவையோ எல்லாம் அதன் பல்வேறு படிநிலைகளே. அதை இந்துத்வ அரசியலில் இருந்து வேறுபடுத்திக்காட்ட, விரிவான இந்து மெய்ஞானமரபில் வைத்து விளக்க முயன்றுவருகிறேன். அதை என் நூல்களில் விரிவாகவே பேசியிருக்கிறேன்.
ஆக நான் முன்வைக்கும் கருத்துக்கள் என்பவை காந்தியும் நாராயணகுருவும் முன்வைத்தவற்றின் நீட்சியாகவே இருக்கும். எல்லா தளங்களிலும் கருத்துக்கள் அந்த அரசியலையே வெளிப்படுத்தும். முரண்பாடுகளிருந்தால் அவற்றையும் பதிவுசெய்திருப்பேன்.
நாராயணகுருவின் இயக்கத்துக்கு மார்க்ஸியம் என்றும் அன்னியமானதாக இருக்கவில்லை. நான் பலமுறை சொன்னது இது, மார்க்ஸியச் செயல்திட்டத்தை ஏற்பவனல்ல நான். அதன் வன்முறை மற்றும் வெறுப்பு சார்ந்த அறவியலை அங்கீகரிப்பவனல்ல. ஆனால் சமூகத்தின் பொருளியல்சார்ந்த செயல்பாட்டை புரிந்துகொள்ளவும், வரலாற்றின் பொருண்மையான பரிணாமத்தை வகுத்துக்கொள்ளவும் அதன் தத்துவார்த்தமான கருவியாகிய முரணியக்கப்பொருள்முதல்வாதம் முக்கியமான கருவி என்று எண்ணுபவன். மார்க்ஸியத்தை ஒரு நிறுவனமதமாக அணுகுபவர்கள் அதன் அரசியல் மற்றும் அறம் மீதான என் விமர்சனத்தை நிராகரிக்க என்னை முத்திரை குத்துகிறார்கள்.
நாராயணகுருவரை வளர்ந்து வந்து சேர்ந்த இந்து ஞானமரபை நான் என் பாரம்பரியமாக எண்ணுகிறேன். அது உலகஞானச்செல்வத்தின் ஒரு பெரும் களஞ்சியம் என்று நம்புகிறேன். அதை அவதூறு செய்தும் திரித்தும் அழிக்கநினைக்கும் அரசியல் முயற்சிகளை எதிர்க்கிறேன். திட்டவட்டமான விளக்கங்கள் மூலம் அந்த முயற்சிகளை அம்பலப்படுத்துகிறேன். அதற்காகவே அந்தத் திரிபுசக்திகளாலும் அவர்களின் கூலிப்படையாலும் நான் இந்துத்துவவாதி என்று வசைபாடப்படுகிறேன். அதை நான் பொருட்படுத்தவில்லை.
ஆனால் என்னளவில் நான் இந்துமெய்ஞானம் இந்துத்துவ அரசியலாகக் குறுக்கப்படுவதை முழுமையாக நிராகரிக்கிறேன். இந்து மெய்ஞானம் அதன் பன்மைத்தன்மையால், அதனுள் நிகழும் பெருவிவாதத்தால் மட்டுமே முன்னகர வேண்டும் என்றும் அது ஒற்றைப்படையான கொள்கைகளாகவோ நிறுவனமாகவோ ஆகுமென்றால் , ஓர் அரசியல்தரப்பாக ஆக்கப்படும் என்றால், அழிவையே உருவாக்குமென்பதே என் எண்ணம். அதை வலுவாகவே முன்வைக்கிறேன். இந்த ஆண்டுகளில் அத்தகைய ஒரு முயற்சியைக்கூட மிகக்கடுமையான சொற்களால் நான் கண்டிக்காமல் விட்டதில்லை.
நான் முன்னுதாரணமாகக் காணும் இந்துக்கள் நாராயணகுருவும் காந்தியும்தான். அவர்களின் அரசியல்தான் என்னுடையது. சாவர்க்கரோ கோல்வால்கரோ அல்ல, அவர்களை ஏற்றுக்கொள்ள என்னால் முடியாது. நாராயணகுரு- காந்தி- நித்யசைதன்ய யதி என்னும் ஞானச்சரடில் எளிய மணிகளாகவே என்னுடைய கட்டுரை நூல்கள் இருக்கும்.
ஆனால் என் புனைவுநூல்களைப் பொறுத்தவரை அவை என்னவென்று எனக்கே தெரியாது. அவை நான் கண்ட கனவுகள். நானே அவற்றை அன்னியமாக பீதியும் வியப்புமாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவற்றின் உள்ளடக்கம் வடிவம் எவையும் என்னுடைய தீர்மானங்கள் அல்ல. அவை என் வழியாக நிகழ்ந்தன. அவற்றை தமிழ் வாசகர்கள்தான் கண்டடையவேண்டும்.
எழுத்தாளனாக செயல்பட ஆரம்பித்தபின் இதுவரையிலான செயல்பாட்டில் நான் எந்த அரசியல், பண்பாட்டு அமைப்புகளுடனும் சேர்ந்து செயல்பட்டதில்லை. எந்த நிதியையும் எவ்வித உதவியையும் பெற்றுக்கொண்டதில்லை. என் முதல் நூல் முதல் இன்றுவரை விற்பனையில் எப்போதும் நான் தமிழின் நட்சத்திரங்களில் ஒன்றுதான். அவற்றை இப்போதிருக்கும் தளத்தைவிட்டு மொழிபெயர்ப்புகள் வழியாக மேலே கொண்டுசெல்ல நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஊடகங்கள் என்னை முன்னிறுத்தவும் நான் முயலவில்லை. ஆகவே எந்த உதவியும் தேவையானதும் இல்லை.
ஃபிலிஸ்டைன் என்று என்னைச் சொல்லலாம். அதை மறுக்கமாட்டேன். எழுத்தாளனாக ஒருவன் எடுக்கக்கூடிய மிகச்சிறந்த நிலைபாடு ஃபிலிஸ்டைனாக இருப்பதே என்று நான் நம்புகிறேன். அவ்வப்போது ஆழ்மனம், நீதியுணர்வு என்ன சொல்கிறதோ அதை நம்பி முன்செல்வது..கோவிந்தன் சொன்னது அதையே.
இவை எதுவும் ரகசியமல்ல. எல்லாமே வெளிப்படையானவை. ஆனாலும் என் மீதான அவதூறுகள் ஓயாதென நான் அறிவேன். நான் வைக்கும் விமர்சனங்களை அவர்கள் வேறு எவ்வகையிலும் எதிர்கொள்ள முடியாதென்பதே அதற்கான காரணம். அதைப் புரிந்துகொள்கிறேன்.