தலித் கிறித்துவர்களுக்கு அரசு நிர்வாகத்தில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று கிறித்துவ மதப் பீடங்களும்; தலித் - முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி முஸ்லிம் அமைப்புகளும் இடையறாமல் குரல் கொடுத்து வருகின்றன; போராட்டங்கள் நடத்துகின்றன. இத்தகைய போராட்டங்களையும், கோரிக்கைகளையும் முனைந்து ஆதரிக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால், அந்த மத அமைப்புகள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஓரங்கட்டப்படுகிறபோது, நாம் மவுன சாட்சியாக இருக்க வேண்டியதில்லை. தோழமையைத் தெரிவிக்கும் அதே நேரத்தில் சில நெருடல்களையும், வருத்தங்களையும் சுட்டிக்காட்ட வேண்டிய தருணம் வந்திருக்கிறது.
சாதிய சமூகமாக இருக்கும் இந்தியாவில், தங்களுக்குப் போதிய அங்கீகாரம் வேண்டும் என்றுதான் தலித் மக்கள் பிற மதங்களுக்கு மாறினார்கள். இந்து மதம் சுமத்திய ஜாதி - தீண்டாமை, கல்வி மறுப்பு, வறுமை ஆகியவற்றிலிருந்து விடுபட நினைத்தபோது ஆதரவு அளிக்கும் புகலிடமாக பிற மதங்கள் இருந்தன. கிறித்துவம், இஸ்லாம், சீக்கியம், பவுத்தம் போன்ற சமத்துவ மதங்களை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். இவற்றுள் கிறித்துவமும், இஸ்லாமும் பலம் பொருந்திய மாற்று மதங்களாக இங்கே இருக்கின்றன. பல நூறு கல்வி நிறுவனங்களையும், தொழில் நிறுவனங்களையும் அவை நடத்துகின்றன. ஆனால் இம்மதங்களைத் தழுவிய தலித் மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை இவர்கள் அளிக்கின்றார்களா? சட்டப்படி தான் நாங்கள் நடந்து கொள்கிறோம் என்று அவர்கள் சொல்லக்கூடும். ஆனால், அவர்கள் சமூகநீதிக் கொள்கைப்படி நடந்து கொள்ளவில்லை என்பதே நமது ஆதங்கம்.
தலித் மக்களின் நெடுநாள் கோரிக்கைகளை அலட்சியப்படுத்திவரும் அரசைக் கண்டிக்கும் கிறித்துவ, முஸ்லிம் அமைப்புகளும் தாங்கள் நடத்திவரும் கல்வி நிறுவனங்களில், காலங்காலமாக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்குகின்றனவா என்று சுயபரிசோதனை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. அறிவாளிகளும், திறமையாளர்களும் மட்டும்தான் அரசு நிர்வாகத்துக்கும், ஆட்சிப்பொறுப்புக்கும் வேண்டும் என்றால், அங்கே பிரதிநிதித்துவம் என்கிற ஜனநாயகக் கருத்துக்கு இழுக்கு நேரும் என்கிறார் அம்பேத்கர். இடஒதுக்கீடு என்பது பிரதிநிதித்துவமே அன்றி வேறல்ல. இந்நிலையில், சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தலித்துகளுக்கு இந்த 60 ஆண்டுகளாகப் போதிய பிரதிநிதித்துவத்தை ஏன் வழங்கவில்லை?
அரசு வேலைவாய்ப்பிலும், மாணவர் சேர்க்கையிலும் இடஒதுக்கீடு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிக் கொண்டுள்ளது. இச்சூழலில் இடஒதுக்கீட்டு ஆதரவாளர்கள், இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் செயல்படுவதைப்போல இரு மடங்கு கூடுதலாக செயல்படுகின்றார்களா என மக்கள் அறிந்து கொள்ள வேண்டியதும் தேவையாக உள்ளது. அரசு நிர்வாகம் மற்றும் அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் தலித்துகளுக்கென ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாத ஆயிரக்கணக்கான பின்னடைவுப் பணியிடங்கள் நிரப்பப்படவேண்டும் என்று போராடும் அதே வேளை கிறித்துவர்களாலும், முஸ்லிம்களாலும் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு மற்றும் மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு ஆகியவற்றின் நிலை குறித்தும் நாம் கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது.
தமிழக அரசு நிர்வாகத்தில் மட்டும் தலித் மற்றும் பழங்குடியினருக்கான 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் இன்றுவரை நிரப்பப்படாமல் உள்ளன. தமிழகத்திலுள்ள 67 அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 69 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், மத சிறுபான்மையினர் மற்றும் மொழிவாரி சிறுபான்மையினர் நடத்தும் 63 கல்லூரிகள் உள்ளிட்ட 160 அரசு உதவி பெறும் கல்லூரிகளில், 50 சதவிகித இடஒதுக்கீடு என்பது ஏட்டளவில் தான் உள்ளது. குறிப்பாக, தலித் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் பள்ளிகளில் கடந்த 60 ஆண்டுகளாக நடைமுறையில் இல்லை. அரசு உதவிபெறும் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளைத் தவிர, எஞ்சியுள்ள எந்த மருத்துவ, பொறியியல், மருத்துவம் சாராத பட்ட / பட்டய வகுப்புகளிலும் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுவதில்லை. அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரங்கள் இதோ:
அரசு உதவி பெறும் சுமார் 160 தனியார் கல்லூரிகளில் இருக்கும் மொத்தப் பணியிடங்கள் (விரிவுரையாளர்கள்) 9,866. இதில் 618 பேர் மட்டுமே தலித்துகள். பழங்குடியினர் எவரும் இல்லை. ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 5,326. இவர்களில் 838 பேர் மட்டுமே தலித்துகள். பழங்குடியினரோ ஒருவர் மட்டுமே. ஆக, மொத்தமுள்ள 15,192 (ஆசிரியர் - ஆசிரியர் அல்லாதோர்) பணியிடங்களில் ஒருவர் மட்டுமே பழங்குடி இனத்தவர். அதுவும் கூட பெருக்கும் பணியில் இருப்பவர். ஆசிரியர்களில் 30 பேர் இயலாதோர். 25 பேர் ஆதரவற்ற ‘கைம்பெண்கள்'. ஆசிரியர் அல்லாத பணியாளர்களில் 52 பேர் இயலாதோர். 42 பேர் ஆதரவற்ற ‘கைம்பெண்கள்'. மொத்தமுள்ள இந்த 15,192 பணியிடங்களில், 82 பேர் இயலாதோர், 67 பேர் ஆதரவற்ற ‘கைம்பெண்கள்'. பார்க்க முடியாதவர்கள் பார்க்கிறார்கள்; நடக்க முடியாதவர்கள் நடக்கிறார்கள் என்று மேடை தோறும் மதப்பிரச்சாரம் செய்யும் கிறித்துவ கல்வி நிலையங்களின் உண்மை முகம் இதுதான்!
மேலும் இதில் குறிப்பிடத்தகுந்த செய்தி என்னவெனில், அரசுக் கல்லூரிகளிலுள்ள மொத்தப் பணியிடங்கள் 4,915. அதே போல அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் இரண்டு மடங்கு ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. ஆண்டுதோறும் அரசு வழங்கும் 100 சதவிகித மானிய உதவி பெறும் கல்லூரிகளில் மொத்தம் 9,866 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 618 பேர் மட்டுமே தலித்துகள். இட ஒதுக்கீட்டின்படி 9,866 பணியிடங்களில், 1,883 தலித் விரிவுரையாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் 1,265 தலித் விரிவுரையாளர் பணியிடங்கள் இத்தனியார் கல்லூரிகளில் நிரப்பப்படாமலேயே விடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள 63 கல்லூரிகளில், சிறுபான்மை இனத்தவர்கள் அரசு உதவி பெற்று நடத்தும் 50 கல்லூரிகளில், ஒரு தலித் கூட விரிவுரையாளராக இல்லை. இப்படி தலித்துகளுக்கு இட ஒதுக்கீட்டை மறுக்கும் 50 கல்லூரிகளில் 45 கல்லூரிகள் மத சிறுபான்மையினரால் நடத்தப்படுபவை. 14 கல்லூரிகளில் ஒவ்வொன்றிலும் ஒரே ஒரு தலித் விரிவுரையாளர் மட்டுமே பணியில் உள்ளார். ‘வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன்' என்று உரக்க பேசும் கிறித்துவ, முஸ்லிம் கல்லூரிகளில், வருத்தப்பட்டு வருகிற தலித் மக்களுக்கு எந்த இளைப்பாறுதலும் தரப்படுவதில்லை. எங்களிடம் வராதீர்கள் என்ற நிலைதான் உண்மையில் நிலவுகிறது.
இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து சுமார் 58 ஆண்டுகள் கடந்த பின்னரும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இத்தகைய அவல நிலை தொடருவது வெட்கக்கேடானது மட்டுமல்ல, கடும் கண்டனத்திற்குரியதுமாகும். பெரும்பான்மை சமூகத்தினர் நடத்தும் கல்லூரிகளில் இடஒதுக்கீடு ஓரளவுக்காவது கடைப்பிடிக்கப்படுகிறது. சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளிலோ இடஒதுக்கீடு முற்றாக இல்லை. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்கள், தலித் மக்களுக்கும் தலித்துகளின் வேலைவாய்ப்புக்கும் எதிரானøவயா? என்ற கேள்வியையும் நாம் எழுப்ப வேண்டியுள்ளது. அரசமைப்புச் சட்டப்பிரிவு 30(1) இன் முன்பு அதே அரசமைப்புச்சட்டத்தின் பிரிவுகள் 16(4) 46 மற்றும் 335 ஆகியவை செல்லத்தக்கவை அல்லவா?
மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில் இயற்றப்பட்ட இடஒதுக்கீட்டுச் சட்டம், இந்திரா சகானி - எதிர் - மய்ய அரசு வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவாறு ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்தது : 1) இடஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 2) 50 சதவிகித இடஒதுக்கீடு என்பது பின்னடைவுப் பணியிடங்களையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 3) பணி நியமனம் செய்யும் ஆண்டில் உள்ள பணியிடங்களையே இடஒதுக்கீட்டிற்கு உட்படுத்த வேண்டும் (மொத்தப் பணியிடங்களை இடஒதுக்கீட்டின் அலகாகக் கொள்ளக்கூடாது). 4) பதவி உயர்வில் இடஒதுக்கீடு இல்லை (நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் நீங்கலாக). 5) சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் ‘கிரீமிலேயர்' நீக்கப்பட வேண்டும்.
இத்தீர்ப்பினால் பல மாநிலங்களில் 50 சதவிகிதத்திற்கு மேல் நடைமுறையில் இருந்த இடஒதுக்கீடு, 50 சதவிகிதத்திற்குக் குறைக்கப்பட்டது (தமிழ்நாட்டில் 69 சதவிகிதம் உள்ள இடஒதுக்கீடு தொடர்புடைய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது). இத்தீர்ப்புரையால் பதவி உயர்வில் தலித் மற்றும் பழங்குடியினருக்கு இருந்த இடஒதுக்கீடு இல்லாமல் போனது. இந்திரா சாகானி வழக்கின் தீர்ப்புரை ஏற்படுத்திய பாதிப்புகளை சரி செய்ய அரசமைப்புச் சட்டம் 1995 மற்றும் 2000த்திலும் திருத்தப்பட்டது. அரசமைப்பு (திருத்தச்) சட்டம் 1995 இன் மூலம், தலித் மற்றும் பழங்குடி இனத்தவருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. அரசமைப்புச் சட்டப்பிரிவு 16(4ஏ) சேர்க்கப்பட்டது:
‘16(4அ) Nothing in this article shall prevent the state from considering any unfilled vacancies of a year which are reserved for being filled up in that year in accordance with any provision for reservation made under clause (4) or clause (4A) as a separate class of vacancies to be filled up in any succeeding year or years and such class of vacancies shall not be considered together with the vacancies of the year in which they are being filled up for determining the ceiling of fifty percent reservation on total number of vacancies of that year’
1995 மற்றும் 2000 ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்திருத்தங்கள், வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு குறித்த வழக்குகளின் தீர்ப்புரைகளில் சொல்லப்பட்ட தடைகளுக்கு நிவாரணம் அளிப்பதாக இருந்தன.
இந்திரா சகானி - எதிர் - மய்ய அரசு வழக்குத் தீர்ப்புக்குப் பின்னர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் இனவாரி இடஒதுக்கீட்டினை எதிர்த்து எண்ணற்ற வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வாறு தொடரப்பட்ட வழக்குகளில் ஒன்றான டி.எம்.ஏ பாய் பவுண்டேஷன் - எதிர் - கர்நாடக அரசு (2003)) வழக்கில், பதினோறு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கல்வியை வர்த்தகப் பொருளாக, அதாவது கல்வி நிறுவனங்களை நிறுவி நிர்வகிப்பது அரசமைப்புச் சட்டப்பிரிவு 19(1)(g)இன்படி வாணிபம் செய்யும் அடிப்படை உரிமை எனத் தீர்ப்புரைத்தது. இத்தீர்ப்பின்படி அரசு உதவி / மானியம் பெறாத எந்த ஒரு கல்வி நிறுவனத்தின் செயல்பாட்டிலும், அரசு தலையிட முடியாது. இக்கல்வி நிறுவனங்களில் இனவாரி இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவோ, அரசு இடங்கள் இவை எனவோ எதையும் கோர முடியாது. இத்தீர்ப்புரை கல்வி வாணிபத்தை அங்கீகரித்தது மட்டுமின்றி, கல்வி தருவது அரசின் கடமை என்ற நிலையையும் மாற்றியமைத்தது. அரசும் கல்வி தரும் தன் அடிப்படைப் பொறுப்பிலிருந்து விலகி இத்தீர்ப்புரைக்கு ஆதரவாக இருந்தது.
மோசமான விளைவுகளுக்குக் காரணமான இத்தீர்ப்புரை பற்றி எந்த ஓர் அரசியல் கட்சியும், சமூக நீதி இயக்கமும் இன்றுவரை வாய் திறக்கவில்லை. மக்களுக்கு கல்வி தரும் பெரும் பொறுப்பைப் பற்றி கடந்த 16 ஆண்டுகளாக கவலையற்றவர்களாகவே இவர்கள் உள்ளனர். டி.எம்.ஏ. பாய் பவுண்டேஷன் - எதிர் - கர்நாடகா அரசு வழக்கின் தீர்ப்பே 2002ஆம் ஆண்டு முதல் புற்றீசல் போன்ற சுயநிதி பொறியியல், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்வி நிறுவனங்கள் தோன்ற முதன்மைக் காரணமாகி இருக்கிறது.
டி.எம்.ஏ. பாய் வழக்கினைத் தொடர்ந்து இஸ்லாமிக் அகாடமி ஆப் எஜுகேஷன் - எதிர் - கர்நாடக அரசு வழக்கில் (2003), அய்ந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, சுயநிதிக்கல்வி நிறுவனங்களில் அரசு இட ஒதுக்கீட்டிற்கான சட்டம் இயற்றும்வரை ஏற்கனவே நடைமுறையில் இருந்த இனவாரி இட ஒதுக்கீடு தொடரலாம் என தீர்ப்புரைத்தது. இந்தத் தீர்ப்புரையைத் தொடர்ந்து பி.ஏ. இனாம்தார் - எதிர் - மகாராட்டிரா வழக்கில், சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு என்ற பேச்சுக்கே இடமில்லை என ஏழு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு தீர்ப்புரைத்தது. இதன் மூலம் நாடெங்கிலும் உள்ள சுயநிதி மருத்துவம் மற்றும் பொறியியல், மருத்துவம் சார்ந்த பாடப்பிரிவுகள் அடங்கிய கல்லூரிகளில் இடஒதுக்கீடு என்றைக்குமே இல்லாமல் ஆகியிருக்கிறது.
இவ்வளவு பெரிய ஆபத்தினை சமூகம் எதிர்கொண்டுள்ளபோதும் இன்றைய அரசியல் கட்சிகள், மற்றும் சமூக நீதி இயக்கங்கள் இதைப்பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஆனால் போலி அரசியல் முழக்கங்கள் மட்டும் தொடர்ந்தபடி உள்ளன.
மதமாற்றம் - இந்திய அரசியல் அரங்கில் இடையறாது விவாதிக்கப்படும் ஒரு பிரச்சினையாகவே நீடித்து வருகிறது. மேலோட்டமாகப் பார்த்தால், இது வெறும் மதமாற்றம் என்பது போலத் தோன்றினாலும், இது மக்களின் சிந்தனையில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது. தெளிவாகச் சொன்னால், இது ஜாதி மாற்றம். சாதிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறும் வழிமுறை தொடர்புடையது. அதனால்தான் மதமாற்றம் என்றதும், ஆளும் வர்க்கங்களும் ஆட்சியாளர்களும் அலறுகின்றனர். இந்து மதத்தில் இருந்தால்தான் இடஒதுக்கீடு என்று சொல்வதற்குக் காரணமும் அதுதான். இந்து மதத்தில் இருந்தால்தானே ஒருவன் அடிமையாக கீழ் சாதியாக இருக்க முடியும். தலித் கிறித்துவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு விட்டால், அவர்கள் ஏன் இந்து மதத்தில் இருந்து தொலைக்கப் போகிறார்கள். இடஒதுக்கீடுதான் இந்த மக்களை அம்மதத்தில் இருக்கும்படி கட்டாயப்படுத்துகிறது.
அ.இ.அ.தி.மு.க. அரசால் பிரகடனப்படுத்தப்பட்ட கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் திரும்பப் பெறப்பட்டதற்கு இச்சட்டத்தைக் கொண்டுவந்த ஜெயலலிதா அரசும், அதற்கு காரணமாக இருந்த கருணாநிதி அரசும் மாறி மாறி உரிமை கொண்டாடின. மேலும், மதம் மாறிய பட்டியல் சாதியினருக்கும் - அனைத்து அரசியல் சட்ட உரிமைகளும் வழங்கப்பட வேண்டுமென, கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மய்ய அரசிற்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது போலவும், சில அறிவுஜீவிகள் சொல்வது போலவும் - தலித் கிறித்துவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் கூட - கடந்த தி.மு.க. அரசு ஆட்சியில் இருந்தபோது வெளியிட்ட ‘தலித் மதமாற்றத் தடை ஆணை' (சுவீகரதாஸ் எதிர் இந்திய உணவுக் கழகம் வழக்கில் 1996 இல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டி, மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்ட அரசுக் கடிதம் எண்.81 நாள் 19.9.2000) இருக்கும் வரை, மதம் மாறிய தலித்துகள் இடஒதுக்கீட்டைத் துய்க்க முடியாது. ஏனெனில், தி.மு.க. அரசு ரத்து செய்யப் பிடிவாதமாக மறுக்கும் அந்த ஆணை இப்படிக் கூறுகிறது : "பிறப்பால் கிறித்துவராக இருப்பவர் இந்துவாக மாறினால், அவர் ஆதிதிராவிடர் சாதிச் சான்றிதழ் பெறவோ இட ஒதுக்கீட்டுக்குரிய சலுகைகளை அனுபவிக்கவோ தகுதி இல்லை.'' இந்த ஆணை மத மாற்றத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகும் இன்றளவும் உயிர்ப்புடன் உள்ளது.
இந்த அரசுக் கடிதத்தால், பல்லாயிரக்கணக்கான மதம் மாறிய தலித்துகளுக்கு, ஆதிதிராவிடர் சான்றிதழ் வருவாய்த் துறையால் மறுக்கப்படுகிறது. இந்துவாக மதம் மாறிய ஆதிதிராவிடர்கள், ஆதிதிராவிடர் சான்றிதழ் பெற்று அரசு வேலையில் இருக்கும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு, சாதிச்சான்று மெய்த்தன்மை சரி பார்த்தல் விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கப்படுவதும், இறுதியாக இவர்களின் சான்றுகள் ரத்து செய்யப்பட்டு வேலை நீக்கம் செய்யப்படுவதும் இன்றைக்கு வாடிக்கையாகி விட்டது.
அரசுக் கடிதம் எண். 81/நாள் 19.9.2000 இன் சட்டப் பின்னணி என்ன? தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறைச் செயலர் பெ. கோலப்பன் கடிதம், ஆதிதிராவிடர்களின் வழிபாட்டு அடிப்படை உரிமையை மறுக்கிறது. எனவே, இது ஒருதலைப்பட்சமானது. அரசமைப்புச் சட்டம் பிரிவு 25க்கு எதிரானது. அவசர அவசரமாகத் திணிக்கப்பட்ட இந்த அநீதியை, தி.மு.க. அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.
கிறித்துவப் பெற்றோர்களுக்குப் பிறந்த பிள்ளைகள், பிறப்பால் கிறித்துவர்களாக இருந்தாலும் அவர்கள் இந்துக்களாக மதம் மாறலாம்; இந்துக்களாக வாழலாம். ஆனால், இந்துக்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீட்டு உரிமை மட்டும் கிடையாது. வாதத்திற்காக இடஒதுக்கீட்டு உரிமை மட்டும் இவர்களுக்கு கிடையாது என்பதை ஒப்புக் கொள்வதாகவே வைத்துக் கொள்வோம். ஆனால், இடஒதுக்கீட்டு உரிமைக்கு அப்பால் - இந்துவாக மாறிய பிறவி கிறித்துவர்களுக்கு - இந்து சொத்துரிமைச் சட்டம், இந்துக்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தத்துரிமைச் சட்டம், இந்து திருமணச் சட்டம் ஆகியவை அளிக்கும் உரிமைகளைப் பெறத் தகுதியுண்டா? அரசால் நியமிக்கப்படும் ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள், வன்கொடுமைத் தடைக் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், அறங்காவலர்கள் இன்ன பிற நியமனங்கள் பெறவும் தகுதியுள்ளவர்களா, இல்லையா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.
ஆனால், பெ. கோலப்பன் கடிதம் ‘இல்லை' என்கிறது.
"இந்து மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீட்டு உரிமை, பட்டியல் சாதியைச் சார்ந்தவரென சான்று பெற உரிமை உண்டா?'' என்ற கேள்விக்கு 1975, 1976 இல் இரு தீர்ப்புரைகள் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளன. "பிறப்பால் இந்துவாக இருந்த ஒருவர் கிறித்துவ மதத்திற்கு மாறி, மீண்டும் இந்து மதத்திற்கு மாறியவர் (reconversion) - பட்டியல் சாதியினருக்கான உரிமைகளைப் பெறத் தகுதியுள்ளவர்'' என்று சி.எம். ஆறுமுகம் எதிர் ராஜகோபால் மற்றும் சிலர், வழக்கு உரிமையியல் முறையீட்டு எண். 1172/1973 19.12.1975 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கிறித்துவப் பெற்றோருக்குப் பிறந்தவர் (பிறப்பால் கிறித்துவர்) இந்துவாக மதம் மாறினால் பட்டியல் சாதியினருக்கான உரிமைகளைப் பெறலாமென்று (குண்டூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் சிலர் எதிர் ஒய். மோகன்ராவ் (உரிமையியல் முறையீடு எண்.984/1975) 6.4.1976 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சி.எம். ஆறுமுகம் எதிர் ராஜகோபால் வழக்கில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: "அட்மினிஸ்ட்டிரேட்டர் ஜெனரல் ஆப் மெட்ராஸ் எதிர் அனந்தாச்சாரி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புரைக் காலத்திலிருந்து, அதாவது 1886 முதல் இந்து மதத்திற்கு மாறிய நபர், தான் வேறு மதத்திற்கு மாறியதற்கு முன்னர் அங்கம் வகித்த சாதியினர் ஏற்றுக் கொள்ளும் நிலையில், தான் வேறு மதத்திற்கு மாறியதற்கு முன்னர் இருந்த சாதி அங்கத்தினராக ஆக முடியும் என்பதே இந்நாட்டில் நடைமுறையாக உள்ளது. முதல் பிரதிவாதி இந்து மதத்திற்கு மீண்டும் மாறிய நிலையில், ஆதிதிராவிட சாதியினரால் ஏற்றுக் கொள்ளப்படும் நிலையில், அவர் மீண்டும் ஆதிதிராவிடர் சாதிக்குத் திரும்ப முடியும் என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புரையுடன் நாங்கள் ஒத்துப்போகிறோம்'' (பத்தி 17).
குண்டூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் சிலர் எதிர் ஒய். மோகன்ராவ் வழக்கில், "சி.எம். ஆறுமுகம் எதிர் எஸ். ராஜகோபால் வழக்கில் எழுந்த முதன்மையான கேள்வி, மதமாற்றத்திற்கு முன்னர் ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்த எஸ். ராஜகோபால் மீண்டும் இந்து மதத்திற்கு மாறியபோது, மீண்டும் ஆதிதிராவிட இனத்தவராக முடியுமா என்பதே. இந்த நீதிமன்றம் கொள்கை அடிப்படையில் பரிசீலித்து, ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள தீர்ப்புரைகளின் அடிப்படையில், இந்த நாட்டில் 1886 இல் இருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள கருத்தின்படி, இந்து மதத்திற்கு மீண்டும் ஒருவர் மதம் மாறும்போது, மதம் மாறிய நபர் தான் வேற்று மதத்திற்கு மாறுவதற்கு முன்னர் சார்ந்திருந்த சாதியின் உறுப்பினர்கள், அவரை அச்சாதியினராக ஏற்றுக் கொள்ளும் நிலையில் - அவர் அந்த சாதி உறுப்பினராக முடியும் என்று கூறியுள்ளது.
மேற்குறிப்பிட்டுள்ள இறுதி முடிவுக்கு வருவதற்குரிய காரணங்கள், "கிறித்துவ மதத்திற்கு மாறிய பெற்றோர்களின் பிள்ளை இந்து மதத்திற்கு மாறும்போது, அவரது பெற்றோர்கள் மதமாற்றத்திற்கு முன் சார்ந்திருந்த சாதியினர் ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவர் அந்த சாதியினராக இருக்க முடியும் என்பதற்கும் பொருந்தும்'' (பத்தி 7) என்று தெளிவுபட உச்ச நீதிமன்ற அரசியல் சட்ட பெஞ்ச் தீர்ப்புரைத்துள்ளது. இவ்விரு தீர்ப்புரைகளும் தலித்துகளின் மதமாற்ற உரிமையையும் இடஒதுக்கீட்டு உரிமையையும் உறுதிப்படுத்தியுள்ளன. இத்தீர்ப்புரைகள் 1975 76 இல் இருந்து இன்றுவரை நடைமுறையிலும் உள்ளன.
இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 341இன்படி, பட்டியல் இனத்தைச் சார்ந்தவர் எவரெவர் என்பதை இந்தியக் குடியரசுத் தலைவர்தான் நிர்ணயம் செய்ய வேண்டும். பட்டியலினத்தவர் எவரெவர் என்பதை மாநில அரசோ, மாநில அரசின் ஒரு துறைச் செயலாளரோ, குடியரசுத் தலைவரின் அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொள்ள முடியாது. என்றாலும், ஆதிதிராவிட நலத்துறைச் செயலரின் கடிதம், இன்றைக்கு ஆதிதிராவிடர் யார் என்பதை அத்துமீறி நிர்ணயித்துள்ளது.
தி.மு.க. அரசுக்கு நேர் எதிராகச் செயல்பட்டு வந்த அ.இ.அ.தி.மு.க. அரசு, இவ்வரசுக் கடிதத்தைப் பொறுத்தவரையில் அப்படியே முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது; தனது ஆட்சிக் காலத்தில் (2001 2006) உடும்புப் பிடியாக இக்கடிதத்தைச் செயல்படுத்தியது. நீதித் துறையிலிருந்தவர்களுக்கு எதிராகவும் இக்கடிதத்தைப் பயன்படுத்த அ.இ.அ.தி.மு.க. அரசு தயங்கவில்லை. உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். அசோக்குமாரின் பதவியைப் பறிக்க இவ்வரசு கடிதமே முழுக்க முழுக்க மேற்கோள் காட்டப்பட்டது. எஸ். அசோக்குமார் மீது தொடுக்கப்பட்ட வழக்கிலும், அண்மையில் ஆர். சங்கர் எதிர் தமிழ் நாடு அரசு தேர்வாணைக்குழு வழக்கிலும் - சென்னை உயர் நீதிமன்றம், கிறித்துவப் பெற்றோர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் இந்துவாக மதம் மாறும் நிலையில், இவர்கள் பட்டியல் சாதியினருக்கான அனைத்து அரசியல் சட்ட உரிமைகளையும் பெறத் தகுதியுள்ளவர்கள் எனத் தீர்ப்புரைத்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.
உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். அசோக்குமார் வழக்கிலும், ஆர். சங்கர் எதிர் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைக் குழு வழக்கிலும் சுவீகரதாஸ் எதிர் இந்திய உணவுக் கழகத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புரை, சுவிகரதாசுக்கு மட்டுமே பொருந்தும். அது, பொதுமைப்படுத்தப்படக் கூடாததை ஒரு தீர்ப்புரை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விரு தீர்ப்புரைக்குமிடையே 3.10.2003 அன்று சென்னை உயர் நீதிமன்றம் அரசுக் கடிதத்திற்கு எதிராக (கடிதம் எண்.81, 19.9.2000) நான் (அய். இளங்கோவன்) தொடுத்த பொதுநல வழக்கில் நிரந்தர தடையாணை பிறப்பித்துள்ளதையும் மீறி, மாவட்ட ஆட்சியாளர்கள் இவ்வரசுக் கடிதத்தின் அடிப்படையிலேயே - கிறித்துவராக இருந்து இந்துவாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்குச் சாதிச் சான்று வழங்க மறுப்பதும், ஏற்கனவே வழங்கப்பட்டவர்களை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதும் நடைமுறையில் உள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புரைகள், உயர் நீதிமன்றத் தீர்ப்புரைகள் எதுவாயினும், தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையைப் பொறுத்தவரை, பெ. கோலப்பன் கடிதம் (எண்.81, 19.9.2000) மட்டுமே இறுதியானது, நிலையானது. ஏனெனில், மதம் மாறியவர்களுக்கு (கிறித்துவ மதத்திற்குச் சென்று பின்னர் இந்து மதத்திற்குத் திரும்பியவர்களுக்கு) தண்டனையாக இடஒதுக்கீட்டு உரிமை மறுக்கப்படுகிறது. மதம் மாறிய அனைத்து தலித்துகளுக்கும் பட்டியல் சாதியினருக்கான உரிமைகள் வழங்கப்படுமென்ற தி.மு.க. தேர்தல் அறிக்கை மற்றும் சட்டமன்றத் தீர்மானத்திற்கு எதிரான கோலப்பன் கடிதத்தைத் தமிழக அரசு திரும்பப் பெறமால் இருப்பதற்கு என்ன காரணம்?
உயர் நீதிமன்ற நீதிபதி அசோக்குமார் வழக்கின் தீர்ப்புரை, ஆர். சங்கர் எதிர் அரசுத் தேர்வாணைக் குழு வழக்கின் தீர்ப்புரை மற்றும் இக்கடிதத்தின் மீதான உயர் நீதிமன்றத் தடையாணை அனைத்தும் அரசுக் கடிதத்தை அர்த்தமற்றதாக்குகிறது. மேலும், அரசு இக்கடிதத்தைத் திரும்பப் பெற முன் வராதது, அப்பட்டமான தலித் விரோத செயலன்றி வேறென்ன? தலித் உரிமைகளுக்காகப் போராடும் அனைவரும் இவ்வரசுக் கடிதத்தைத் திரும்பப் பெற வைப்பதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு செயல்படுவதே - தலித் உரிமையைப் பாதுகாக்கும் செயலாக இருக்க முடியும். தலித் இயக்கங்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினர்கள், தலித்துகளை இந்துக்களாக்கும் தமிழக அரசின் சதித்திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுக்காமல் இருப்பது ஏன்?
வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே! எங்களிடம் வராதீர்கள் படித்த தலித் மக்களின் பங்கு என்ன? – 6 அய். இளங்கோவன்
பதினைந்தாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. சமூக சிந்தனையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் எல்லாரும் தேர்தல் களத்தில் கூட்டணி வியூகம் வகுத்தவண்ணமுள்ளனர். தொகுதிச் சீரமைப்பிற்குப் பின்னர் தலித் மற்றும் பழங்குடியினருக்கான 120 தனித் தொகுதிகளின் எண்ணிக்கை, தற்பொழுது 131 ஆக உயர்ந்துள்ளதாக பெருமைப்படுகின்றனர். ஆனால் தலித்துகளோ அன்றாடம் சிறுமைப்படுத்தப்படுகின்றனர். நாடாளுமன்றத்திற்கு பதினான்கு முறை நடைபெற்ற தேர்தலில், ஒவ்வொரு முறையும் குறைந்த பட்சம் 100 தலித் மற்றும் பழங்குடியின உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுடைய வாழ்வு வளமானது; ஆனால், தலித் மக்களின் வாழ்வில் மட்டும் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை!
தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு முற்றிலும் எதிரானதொரு சட்டவரைவு 23.12.2008 அன்று மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, 47 நிறுவனங்களில் தலித் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு இல்லை என்பது உள்ளிட்ட, வேறு சில எதிர்மறையான விதிகளும் இச்சட்ட வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன. இது குறித்து ஓரளவுக்கு கண்டனக் குரல்கள் எழுந்த பிறகும் 25.2.2009 அன்று, இச்சட்டவரைவு மக்களவையில் வைக்கப்பட்டது. எதிர்ப்புகள் கிளம்பியதால், இச்சட்டவரைவு கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆனால் இச்சட்டவரைவு அன்று விவாதத்திற்கு வரும் எனத் தெரிந்திருந்தும், பெரும்பாலான தலித் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை!
இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் உயர் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையும், இங்கு படிப்பவர்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு உயர்ந்துள்ளன. இருப்பினும் ஏற்கனவே நாம் குறிப்பிட்டுள்ளபடி மருத்துவம், பொறியியல், தகவல் தொடர்பு, அறிவியல் மற்றும் ஆய்வுப் பிரிவுகள் ஆகியவற்றில் தலித் மற்றும் பழங்குடியினருக்கு, வேலைவாய்ப்பிலும் மாணவர் சேர்க்கையிலும் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 25.1 கோடி தலித் மற்றும் பழங்குடி மக்கள் உள்ளனர். ஆனால், எந்த ஒரு பாடப்பிரிவிலும் இம்மக்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. தலித் மக்களின் மேம்பாட்டிற்காகப் பாடுபடுவதாக வாய்கிழியப் பேசித் திரியும் அரசியல் கட்சிகளும், தலித் அரசுப் பணியாளர் சங்கங்களும், தலித் மேட்டுக்குடிகளும் இவ்வவலம் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.
தலித் மக்களுக்கு இடஒதுக்கீட்டை மறுக்கும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள், இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாத அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றோடு அரசுக் கல்லூரிகளும் மறைமுகமாக இணைந்து கொண்டுள்ளன. இருக்கின்ற இடஒதுக்கீட்டு உரிமைகளையும், கல்வி உதவிகளையும் இக்கல்லூரிகள் சீரழித்து வருகின்றன. தலித் மாணவர்களுக்காக வழங்கப்படுகின்ற பல்வேறு கல்வி மற்றும் இடஒதுக்கீட்டு உதவிகளை இக்கல்லூரிகள் திருடிக் கொள்கின்றன.இடஒதுக்கீட்டு உதவிகளை முறைகேடாகப் பயன்படுத்துவது, அதை செயல்படுத்தாமல் இருப்பதைக் காட்டிலும் மோசமான குற்றம். இக்குற்றங்கள் நாள்தோறும் பெரும்பாலான கல்லூரிகளில் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
தலித் மாணவர்கள் கல்வி மேம்பாட்டுக்கென்று "பல்கலைக்கழக நல்கைக் குழு' (மானியக்குழு – University Grants Commission )பல நலத்திட்டங்களை அளிக்கிறது. கிராமப்புறங்களிலிருந்து, தமிழ் வழிக்கல்வி படித்து விட்டு கல்லூரிக்கு வரும் தலித் மாணவர்கள் மிக அதிகம். இவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால், ஆங்கிலத்தில் திறன் பெறுவதாகும். தமிழ் வழியில் உயர் கல்வியை படிக்க முடியவில்லை; ஆங்கில வழியில் தன்னால் போட்டிப் போட முடியவில்லை என்பதற்காக மனம் வெதும்பி தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவர்களும் உண்டு. இத்தடையை நீக்க, தலித் மாணவர்கள் ஆங்கிலத்தில் திறன் பெறுவதற்கென, ஒவ்வொரு கல்லூரிக்கும் "பல்கலைக் கழக நல்கைக் குழு' ஆண்டொன்றுக்கு மூன்று லட்சம் ரூபாயை வழங்குகிறது. இத்தொகை கணினி, பயிற்றுநர் ஊதியம், நூல்கள், மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்கள், குறிப்பேடுகள், எழுது பொருட்கள் ஆகியவற்றுக்கு செலவழிக்கப்பட வேண்டும்.
இப்பயிற்சியை பெரும்பாலான கல்லூரிகள் நடத்துவதில்லை. இங்கு பெரும்பான்மை என்று குறிப்பிடுவது, ஒன்றிரண்டு கல்லூரிகளாவது நடத்தியிருக்காதா என்ற ஏக்கத்தில்தான். அனைத்துக் கல்லூரிகள் என்றே கூட இதை வாசிக்கலாம். போலி பற்றுச்சீட்டுகளை வைத்து கணக்கு முடிக்கப்பட்டு, அந்தப் பணம் துறைவாரியாகப் பங்கிடப்பட்டுவிடும் அல்லது துறைக்கொரு கணினியாகவோ, வேறு பொருளாகவோ அது மாறிவிடும். ஆங்கிலத்துக்கு மட்டுமல்ல, தலித் மாணவர்கள் உயர் கல்வியில் பின்தங்கியிருக்கும் பாடங்களில் சிறப்புப் பயிற்சி பெறுவதற்கும் கூட, பல்கலைக்கழக நல்கைக் குழு உதவுகிறது. அந்த நல்கையும் இப்படித்தான் நாசமாய்ப் போகிறது. மாணவர்கள் எளிமையான பாடங்களாகக் கருதும் தமிழ், பொருளாதாரம், வணிகவியல், வரலாறு ஆகிய துறைகளுக்கும்கூட இந்தப் பணத்தில் பங்கு போய்விடுகிறது. "ஊரான் வீட்டு நெய்யே, ஆளுக்கொரு கையே' என்கிற நிலைதான்! இந்த நல்கையை கல்லூரிகள் போட்டிப் போட்டுக் கொண்டு வாங்குகின்றன. இத்தகைய முறைகேடுகள் நடப்பதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. பல்கலைக் கழக நல்கைக் குழுவிடம் இந்த நல்கைகளை மேற்பார்வையிட குழுக்கள் எதுவும் இல்லை.
தலித் மாணவர்கள் அவர்களுக்கென்று திறக்கப்பட்டிருக்கும் அரசு விடுதிகளில்தான் தங்க வேண்டும் என்றொரு கருத்து உண்டு. ஆனால் அவர்கள் விரும்பினால், கல்லூரியின் முக்கிய விடுதியில், பிற மாணவர்களுக்கான விடுதிகளிலும் தங்கிப் படிக்கலாம். ஆனால் தனியார் கல்லூரிகள் எவையும் தமது கல்லூரி விடுதிகளில் தலித் மாணவர்களை சேர்த்துக் கொள்வதில்லை. கல்விச் சுற்றுலாவுக்கென நல்கைக் குழு பணம் தருகிறது. அதற்கு போலி பற்றுச்சீட்டு வைக்க முடியாது என்பதால், அந்த நல்கையை கல்லூரிகள் பயன்படுத்துவது இல்லை.
ஒவ்வொரு கல்லூரியிலும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழிகாட்டு மய்யம் திறக்க நிதி நல்கை உண்டு. அங்கு நாளேடுகளும், நூல்களும் வைக்கப்பட வேண்டும்; எதிர்கால திட்டத்தை வகுக்க ஆலோசனை வழங்க வேண்டும். இந்த மய்யம் பெரும்பாலான கல்லூரிகளில் கிடையாது. ஒவ்வொரு கல்லூரியிலும் ஆதி திராவிடர் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட ஆசிரியர் ஒருவரை, அம்மாணவர்களின் சிக்கல்களுக்கு உதவி செய்ய நியமிக்க வேண்டும். பிரச்சினைகளை கல்லூரிகளே செய்வதால், தனக்கே வழிகாட்டிக் கொள்ள தன்னுடைய ஆசிரியரை நியமிப்பதை அவை விரும்புவதில்லை! தலித் மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்த பல்கலைக் கழகங்களும் ஒரு தொடர்பு அலுவலரை நியமிக்க வேண்டும். அதுவும் நடைபெறுவதில்லை.
இடைக்கால நிதி நிலை அறிக்கையில், உயர் கல்விக்கென 9 மடங்கு அதிக நிதியை அளித்திருப்பதாக மய்ய அரசு அண்மையில் அறிவித்துள்ளது. தமிழக அரசு இதற்கென 1,463 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த ஒதுக்கீடுகளில் தலித் மாணவர்களுக்குரிய 18 சதவிகிதத்தை கேட்கவோ, மேலும் கேட்டுப் பெறவோ இக்கல்லூரிகள் தயாராக இல்லை. அரசியல் சட்டப்பிரிவு 16(5), தலித்துகளுக்கு கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதி செய்கிறது. அரசியல் சட்டத்தின் பின்புலத்தில் மாநில அரசு ஆணைகளை வெளியிடுகின்றன. ஆனால், உயர் கல்வி நிறுவனங்களில் தலித்துகளுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பிற்கு இடஒதுக்கீடு உண்டென்கிறது தமிழக அரசின் தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்டம் 1976. ஆனால் வேலைவாய்ப்பில் தலித்துகளுக்குப் "பட்டை நாமம்' போடுகின்றன தனியார் கல்லூரி நிர்வாகங்கள். இடஒதுக்கீட்டுச் சட்டங்களும் அரசாணைகளும் நிர்வாகங்களின் காலடியில் தான் கிடக்கின்றன.
தலித் மக்களுக்கான உரிமைகள் உயர் கல்வித் துறையில் இப்படி வெகுகாலமாய் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. இது குறித்த புகார்களை "தேசிய தலித் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்திற்கு' அனுப்பினால் அந்த ஆணையமோ, இக்கொடுமைகளை செய்துவரும் கல்லூரி நிர்வாகம் அளித்த தன்னிலை விளக்கக் கடிதத்தையே பதிலாக அனுப்பிவிட்டு பல்லிளிக்கிறது. எவ்வகையிலும் பயனளிக்க முடியாத ஆணையமாக அது இருந்து வருகிறது. இச்சூழலில் நாம் வேறு யாரையும் விட நம்மையே நம்புவதுதான் சிறந்தது. எனினும் தலித் மக்களுக்கு இது தொடர்பான வழிகாட்டும் நிலையில் இருக்கிற படித்த தலித்துகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? படித்த தலித்துகளை நம்பி ஏமாந்து போன அண்ணல் அம்பேத்கர், தமது இறுதிக் காலத்தில் அழுத கண்ணீர் இன்னும் காயாமல் கண்ணீர் சுனையாய் ஊற்றெடுக்கிறது. தலித் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கும், பாதுகாப்பதற்கும் கல்வி பெற்ற தலித்துகள் தயாராக இல்லை!
தலித் மக்களுக்கு நேரடியாகவும், அதிக அளவிலும் உதவி செய்யும் நிலையில் இருக்கும் வருவாய்த் துறையில் மட்டும் பதவி உயர்வு மூலம் நாற்பது சதவிகிதத்திற்கும் மேல் தலித்துகள் இன்று பொறுப்பில் உள்ளனர். முதியோர் உதவித் தொகை, இலவச மனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், கல்வி உதவித் தொகை, ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி உதவிகள் போன்றவற்றிற்காவது கையூட்டுப் பெறாமல் இவர்களில் பலர் உதவி செய்ய முன்வந்திருக்கிறார்களா? உயர் கல்வி நிலையங்களில் இருக்கும் பல தலித் பேராசிரியர்கள், தலித் மாணவர்கள் "ராஜிவ் காந்தி உயர் கல்வி நல்கை' போன்ற உதவிகளைப் பெறுவதற்குத் தடையாக இருக்கின்றனர். தம்மை நாடிவரும் மாணவர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாக இருப்பதற்கு மறுத்து விடுகின்றனர். தலித் மாணவர்களால் வரலாறு, தமிழ், பொருளாதாரம் போன்ற துறைகளில் மட்டுமே உயராய்வு செய்ய முடிகிறது. அறிவியல் பாடங்களில் உயராய்வு செய்ய இயலாமல், தலித் மாணவர்கள் திசை வழி தெரியாமல் தவிக்கின்றனர். இதைப்பற்றி எல்லாம் கவலை கொள்ள யார் இருக்கிறார்கள்? நன்கு படித்த ஒரு அம்பேத்கரால் ஆறு கோடி தலித் மக்கள் பயன் பெற்றனர்; இன்றும் 25 கோடிக்கும் மேற்பட்டோர் அவரது அயராத உழைப்பின் பயனை அறுவடை செய்து கொண்டிருக் கின்றனர். இன்று படித்த தலித்துகள் பல கோடிப்பேர் இருந்தும் அதனால் எந்தப் பயனும் விளைந்து விடவில்லை – பாமரனுக்கு!
இந்நாட்டின் ஜனநாயகம் உயிர்த் துடிப்புள்ளதாக மாற வேண்டுமெனில், அதற்கு சமூக, அரசியல், பொருளியல், கல்வி மற்றும் பண்பாட்டுத் தளங்களில் அடித்தட்டு மக்களுக்குரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். அரசியல் தளங்களில் மட்டும் பிரதிநிதித்துவம் இருந்தால் போதாது. அரசியல் தொடக்கம் அனைத்துத் தளங்களிலும் அது எதிரொலிக்க வேண்டும். விடுதலை இறையியல், தலித் இறையியல் என்றெல்லாம் வாய் கிழியப் பேசும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் குறிப்பாக, கத்தோலிக்க கல்லூரிகள் மற்றும் அதையொட்டி நடத்தப்படும்
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஆறு மாதங்களாக வெளிவரும் இத்தொடர் குறித்து கள்ள மவுனம் சாதிக்கின்றன. சாதி இந்துக்களின் தீண்டாமையை கை காட்டியே தங்களுடைய தீண்டாமைக் குற்றங்களை மறைத்து விடலாம் என்று அவர்கள் கனவு காண்கின்றனர். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதைக்கான, சம உரிமைக்கான, ஜனநாயகத்திற்கான போராட்டம் – அனைத்து வகை அநீதிகளையும், பாகுபாட்டையும் சுட்டெரிக்கும் என்பது மட்டும் உறுதி.
சிறுபான்மையினர் கல்லூரிகளும் தலித் மாணவர்களின் எண்ணிக்கையும்-3
படிப்பதற்கு உரிமை அற்றவர்களாக தலித்துகள் இருந்தபோது, ஆதிக்க சாதியினர் வேதங்களைப்படித்துக் கொண்டிருந்தனர். தலித் மக்கள் படிக்கத் தொடங்கிய போதோ, அவர்கள் கல்லூரிகளில் இருந்தனர். தலித் மக்கள் தொடக்கப் பள்ளியைத் தாண்டி உயர்நிலைப் பள்ளிகளுக்கு வந்த போதோ, அவர்கள் உயர் கல்வி ஆய்வில் ஆழ்ந்திருந்தனர். தலித் மக்கள் கல்லூரிகளிலே அடியெடுத்து வைத்தபோது, ஆதிக்க சாதியினர் தொழில் நுட்பப் படிப்புகளுக்குத் தாவினர். தலித் மக்கள் உயர் கல்விக்கு வந்து சேர்ந்த போது, அவர்கள் கணிப்பொறி படிப்புகளுக்குப் போய்விட்டிருந்தனர். தலித் மக்கள் கணிப்பொறி கல்விக்கு வரத் தொடங்கியபோது, ஆதிக்க சாதியினர் தகவல் தொழில்நுட்பத் துறையில் தொத்திக் கொண்டனர். தலித்துகள் தகவல் தொழில்நுட்பத் துறையில் நுழைய முயன்று கொண்டிருக்கிற இன்றோ-ஆதிக்க சாதியினர் ‘நானோ' தொழில்நுட்பத்தில்...
தலித் மக்கள் ஆதிக்க சாதியினரை எட்டிப்பிடிக்க முடியாதபடி, தடுப்பு ஆட்டம் இங்கே ஆண்டாண்டு காலமாய் தொடர்ந்தபடியே இருக்கிறது. ஆதிக்க சாதியினரைத் தொடமுடியும் என்ற நம்பிக்கையோ, போட்டியில் பங்கேற்பதற்கான மூளை பலமோ தலித் மக்களிடம் இல்லாமலில்லை. தலித்துகளுக்கு எதிராக உருவாக்கப்படும் சாதிய, ஆதிக்க மனோபாவத் தடைகளே அவர்களைத் தோற்கடிப்பதற்கான தந்திரங்களாக இன்றைக்கும் இருக்கின்றன.
ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதும் கிடைகின்ற புள்ளிவிவரங்களைக் கொண்டு, அவரவர் நோக்கில் ஒப்பீடுகள் பலவும் செய்யப்படுகின்றன. தலித் நோக்கிலும் அப்படியான ஒப்பீடுகள் செய்யப்படுவதுண்டு. 1961ஆம் ஆண்டு கணக்குப்படி, அன்று 6.4 கோடியாக இருந்த தலித் மக்களில் 10 சதவிகிதம் பேர்தான் எழுதவும் படிக்கவும் அறிந்திருந்தனர். 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 45 சதவிகித தலித் மக்கள் படித்திருப்பதாக சொல்லப்பட்டது. இது, 4.5 மடங்கு வளர்ச்சி. இந்த வளர்ச்சி 40 ஆண்டுகளில் வந்திருக்கிறது. 1961இல் 24.5 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் கல்வி நிலையோ 2001இல் 54 சதவிகிதமாக வளர்ந்திருக்கிறது.
வரலாற்றைப் புரட்டினால் அறிந்து கொள்ளலாம். தலித் மக்களுக்குப் "போனால் போகட்டும்' என்ற தரும சிந்தனையிலும், "புண்ணியம்' என்ற எண்ணத்திலும் தான் தொடக்கக் காலத்தில் கல்வி வழங்கப்பட்டது. வெள்ளையர்கள் கூட தலித் கல்வியில் ஆர்வம் காட்டவில்லை. இந்தியாவில் கல்வி நிலையங்களைப் பற்றி ஆராய்ந்த ஹண்டர் ஆணையம் (1882), “தீண்டத்தகாத மக்களுக்கு கல்வி அளிக்கலாம். ஆனால் அதனால் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுமானால், அதற்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை'' என்று குறிப்பிட்டிருந்ததை தன் நூலொன்றில் டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.
தலித் மக்களுக்கு வெறுமனே எழுதப் படிக்க சொல்லித்தரும் கல்வி மட்டும் போதாது; உயர் கல்வியும், தொழில் நுட்பக் கல்வியும் அளிக்கப்பட வேண்டும்; வெளிநாடுகளுக்கு தலித் மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்பது, அம்பேத்கரின் தொடக்கக் கால கோரிக்கையாகவே இருந்தது. 1942ஆம் ஆண்டு அக்டோபர் 29 அன்று அம்பேத்கர் அவர்களால் கவர்னர் ஜெனரல் லின்லித்தோவுக்கு அளிக்கப்பட்ட மனுவில் இக்கோரிக்கையைப் பார்க்கலாம். 1942ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 150(2)இன் படி, வெள்ளை அரசிடமிருந்து சுமார் 16 கல்வி நிறுவனங்கள் அன்று நிதியுதவி (மானியம்) பெற்று வந்துள்ளதை அம்மனுவில் அம்பேத்கர் சுட்டிக்காட்டுகிறார். ஆண்டொன்றுக்கு சுமார் 8,99,100 ரூபாய் இந்த கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், காசி இந்து பல்கலைக்கழகம், ரபீந்திரநாத் (தாகூர்) அவர்களால் தொடங்கப்பட்ட விஸ்வபாரதி மற்றும் சாந்திநிகேதன் போன்றவையும் இதில் அடக்கம். இத்தனியார் கல்வி நிறுவனங்களில் அலிகார் மற்றும் காசி பல்கலைக்கழகங்கள் இரண்டு மட்டுமே ஆண்டொன்றுக்கு ஆறு லட்சம் ரூபாயை மானியமாகப் பெற்றிருக்கின்றன. அந்த ஆறு லட்சம் ரூபாயும் ஆதிக்க சாதி இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் போய் சேர்ந்திருக்கின்றன. அப்படியெனில், தலித் மக்கள் உயர் படிப்பு படிக்கவும் அரசு உதவித் தொகைகளை வழங்க வேண்டும் என்பது, அம்பேத்கரின் வாதமாக அன்று இருந்தது. அம்பேத்கர் சுட்டிக்காட்டும் அந்தக் கல்லூரிகளில் நிச்சயமாக தலித்துகள் யாரும் அன்று படித்திருக்க வாய்ப்பில்லை.
இந்தியாவில் பல்வேறு சமூகப் பிரிவினரிடையே கல்வியறிவு எப்படிப் பரவியுள்ளது என்பதை அறிய 1930இல் அமைக்கப்பட்ட ஹர்தோக் குழுவின் புள்ளிவிவரங்களும் கூட, இதையேதான் சொல்கின்றன. 1930இல் தலித் மக்களிடையே கல்லூரியில் படித்தவர்கள் வெகு சொற்பம். சென்னையில் 47 பேர், மும்பையில் 9 பேர், வங்காளத்தில் (தலித் மற்றும் தலித் அல்லாதவர் சேர்த்து) 1670 பேர், அய்க்கிய மாநிலங்களில் 10 பேர், பஞ்சாபிலும், பீகாரிலும், ஒரிசாவிலும் எவரும் இல்லை. மத்திய மாநிலங்களில் 10 பேர் என்றுதான் அப்போது உயர் கல்வி படித்த தலித்துகள் இருந்தனர். இந்த உயர்கல்வி கூட தொழில்நுட்ப, அறிவியல் படிப்புகளாக இருந்திருக்க முடியாது.
எனவேதான் அம்பேத்கர், “வெறும் பட்டப் படிப்பு அல்லது சட்டத்துறைப் படிப்பை முடிப்பது, தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அதிகப் பயன் அளிக்காது. இந்துக்களுக்குக் கூட அது அதிக பலன் அளிக்கவில்லை. எது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு உதவுமெனில், விஞ்ஞானத்திலும் தொழில் நுட்பத்திலும் உயர்தரக் கல்வி கற்பதுதான். அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் கல்வி என்பது தாழ்த்தப்பட்ட சாதியினரின் சக்திக்கு அப்பாற்பட்டது. எனவேதான் பலர் தங்கள் குழந்தைகளை வெறும் பட்டப்படிப்புக்கோ, சட்டத்துறை படிப்புக்கோ அனுப்புகிறார்கள். அரசு உதவியில்லாமல், விஞ்ஞானத்திலும், தொழில்நுட்பத்திலும் உயர் கல்வியின் கதவுகள் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ஒருபோதும் திறந்திருக்க மாட்டா.
இது விசயத்தில் மத்திய அரசு அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்பதே சரியானதும் நியாயமானதுமாகும்.''(டாக்டர் அம்பேத்கர் தமிழ் நூல் தொகுப்பு : 19; பக்.35) என்று சொல்லியிருக்கிறார். இந்த உயர் கல்விக்கு ஆண்டொன்றுக்கு தலித் மாணவர்களுக்கென 2 லட்சம் ரூபாயை அரசு வழங்க வேண்டும். அவர்கள் வெளிநாடு சென்று கற்க விரும்பினால், ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்துகிறார்.
சுமார் 3 ஆண்டுகள் கழித்து 1.2.1945 அன்று பம்பாயில் தலித் மாணவர்களின் நலனுக்கான ஒரு கல்லூரியை நிறுவுவதற்காக அம்பேத்கர், மய்ய அரசிடம் ரூபாய் 6 லட்சம் கடன் கேட்டு ஒரு கடிதத்தினை எழுதினார். அவர், அக்கடிதத்தில் தலித் மாணவர்கள் உயர் கல்வி பெறுவதற்குத் தடையாக இருக்கும் காரணங்களைக் குறிப்பிட்டுள்ளார். வறுமை, கல்லூரியில் இடம் பெற முடியாத சிக்கல், விடுதி கிடைக்காமை ஆகிய அம்மூன்று காரணங்களில் இரண்டாவதை அவர் தெளிவாக வரையறுக்கிறார்: “பொருளாதார உதவி மூலம் தீர்க்க முடியாத ஒரு பிரச்சினை உள்ளது. கல்லூரிகளில் இடம் பெறுகிற பிரச்சினைதான் அது. கல்லூரிகளில் இடம் பெறுவோரின் எண்ணிக்கையை பல்கலைக்கழகமோ, அரசோதான் நிர்ணயிக்கின்றன. குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் மாணவர்கள் கல்லூரிகளில் சேர்க்கப்படுகிறார்கள்.
கல்லூரிப் படிப்பை மேற்கொள்ள விரும்பும் தீண்டத்தகாத வகுப்பு மாணவர்களுக்கு இது மிகுந்த சிரமத்தைத் தருகிறது. இதுதான் ஒரு பேரிடராகத் தோன்றுகிறது. மற்ற வகுப்பாரை விட தீண்டத்தகாத வகுப்பு மாணவர்கள்தான் இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். “இதற்கு முக்கியக் காரணம், பெரும்பாலான கல்லூரிகள் தனியார் அமைப்பால் நடத்தப்படுவதும், அமைப்பு ரீதியாகவும், அலுவலர் ரீதியாகவும் இந்த அமைப்புகள் வகுப்புவாதத் தன்மை கொண்டிருப்பதுமே ஆகும். எனவே, இதன் காரணமாக கல்லூரியின் நோக்கமே வகுப்புவாதத் தன்மை கொண்டதாகிறது. இந்த வகுப்புவாதத் தன்மை மாணவர் சேர்க்கையிலும் பிரதிபலிக்கிறது. இதனால் உயர் வகுப்பினர் சேர்க்கையில் முன்னுரிமை பெறுகிறார்கள். தீண்டத்தகாத வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு சேர்க்கை முடிந்து விட்டதாகக் கூறி இடம் மறுக்கப்படுகிறது.'' (டாக்டர் அம்பேத்கர் தமிழ் நூல் தொகுப்பு 36; பக்.549)
நாடு விடுதலையடைந்தும் அம்பேத்கரின் கனவு நிறைவேறவில்லை. உயர் கல்வி பெறும் தலித்துகளின் எண்ணிக்கை இன்றளவும் குறைவாகத்தான் இருக்கிறது. அட்டவணை 1இல் குறிப்பிடப்படும் சொற்ப சதவிகித தலித்துகள் கூட முக்கியத்துவம் இல்லாத, அறிவியல் தொழில் நுட்பப் பாடப் பிரிவுகளைச் சாராத, உயர் படிப்புகளைப் படித்தவர்களாகவேதான் இருப்பார்கள் என்பது உறுதி. அரசு, ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் இதுவரை தலித்துகள் எந்தெந்த பாடப்பிரிவுகளில் உயர் கல்வி பெற்றுள்ளனர் என்பதை ஆய்வு செய்து ஓர் வெள்ளை அறிக்கை வெளியிடுமானால், இந்த உண்மை வெளியாகும். ஆனால் எந்த அரசும் இதைச் செய்யாது. எந்த தலித் அமைப்புகளும், கட்சிகளும் இதைக் கேட்கவுமில்லை.
அண்மையில் கல்லூரிப் பட்டமளிப்பு விழாவொன்றில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், நாட்டிலுள்ள அரசுக்கல்லூரிகளின் "தரத்தை'ப் பற்றி தன் வாயாலேயே ஒப்புக் கொண்டார். உண்மைதான். நவீன வசதிகளும், தரமும் அற்றுதான் பெரும்பாலான அரசுக் கல்லூரிகள் இருக்கின்றன. தனியார் கல்லூரிகளோ இங்கு வசதிகளுடனும், நவீன கட்டமைப்புகளுடனும் இருக்கின்றன. இக்கல்லூரிகளை நடத்தும் சிறுபான்மையினர், கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, எத்தனை தலித் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் இடம் தந்திருக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளில் தலித் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இடங்களையும், பாடப்பிரிவுகளையும் ஆய்வுக்கு உட்படுத்தினால் அதிர்ச்சி ஏற்படுகிறது; ஆத்திரம் பொங்குகிறது. வரலாறு திரும்புகிறது என்று சொல்வதுண்டு. தலித் மக்களைப் பொறுத்தவரை வரலாறு திரும்பவில்லை. தொடக்க நிலையில் இருப்பதைப் போலவே நகராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சிறு குழந்தைகள் என்னிடம் வருவதைத் தடை செய்யாதிருங்கள்; பரலோக ராஜ்ஜியம் அவர்களுடையது என்று ஏசுவின் கொள்கையைப் பிரசங்கித்து வரும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள், தலித் குழந்தைகளை (தலித் மாணவர்களை) மட்டும் தங்களின் கல்லூரிகளின் பக்கமே வராதபடி, உயர் கல்விப் பரலோக வாயிலில் நின்று தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மையினர் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளிலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பெறப்பட்ட கடந்த பத்து ஆண்டுகளுக்கான விவரங்களை ஆய்வுக்கு உட்படுத்தினால்-தலித் மாணவர்களும், பழங்குடியின மாணவர்களும் மிகக் கடுமையான முறையிலே ஏமாற்றப்பட்டும், விரட்டப்பட்டும் இருப்பதை அறிய முடிகிறது. 22 கல்லூரிகளிலிருந்து மட்டுமே இதுவரை தகவல் கிடைத்துள்ளன. இவற்றில் 13 கல்லூரிகள் கிறித்துவர்களாலும், 5 முஸ்லிம்களாலும் நடத்தப்பட்டு வருகின்றன. 1999 முதல் 2008 வரையிலான பத்தாண்டுகளில் இக்கல்லூரிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளிலே சேர்க்கப்பட்டிருக்கும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 1,41,553. இவர்களிலே தலித் மாணவர்கள் 9,581. பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கையோ 692.
கடந்த பத்தாண்டுகளில் தலித் மாணவர்களை 13.8 சதவிகிதமும், பழங்குடியின மாணவர்களை 0.49 சதவிகிதமும் மட்டுமே சேர்த்துக் கொண்ட சிறுபான்மை மற்றும் தனியார் கல்லூரிகளை நாம் என்னவென்று அழைப்பது? இவர்களின் முதலாளிகள் பலருக்கும் மக்கள் மத்தியிலே "கல்வி வள்ளல்கள்' "கல்விக் கடவுள்கள்' என்றெல்லாம் பட்டப் பெயர்கள் இருக்கின்றன. அப்படியானால் தலித்துகளுக்கு கல்வி கொடுக்கிற பேர்வழி என்று சொல்லிக்கொண்டு கொடுக்காமல் இருக்கிறவர்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்கள்-"துரோகிகள்', "ஏமாற்றுக்காரர்கள்' என்பன போன்ற பட்டங்களையன்றி வேறென்ன தரமுடியும்?
சென்னையிலுள்ள லயோலா கல்லூரி, மேல் விஷாரம் சி. அப்துல் ஹக்கீம் கல்லூரி, அதிராம்பட்டிணம் காதர் முகைதீன் கல்லூரி, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, சிறீவைகுண்டம், சிறீ கே.ஜி.எஸ். கல்லூரி, திருப்பனந்தாள் கே.வி.எஸ். எஸ். கல்லூரி ஆகியவற்றில் கடந்த பத்தாண்டுகளில் சேர்க்கப்பட்ட தலித் மாணவர்களின் எண்ணிக்கை, சராசரியாக 22 சதவிகிதத்துக்கு மேல் இருக்கிறது. மற்ற 16 கல்லூரிகளிலோ தலித் மாணவர்களின் சேர்க்கை சராசரி 9.5 சதவிதமாகத்தான் இருக்கிறது. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் பழங்குடியின மாணவர்களின் பத்தாண்டு கால சேர்க்கை சதவிகிதம் 1.66. லயோலாவிலோ இது 2.11 சதவிகிதமாகும். பிற 20 கல்லூரிகளில் 0.24 சதவிகித பழங்குடியின மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களை இடஒதுக்கீட்டு வரைமுறைக்கும் அதிகமாக சேர்த்திருக்கிறோம் என்று விவரங்களை அளித்துள்ள கல்லூரிகள் பெருமிதம் கொள்ள எதுவும் இல்லை! ஏனெனில் அவை அனைத்திலும் ஒரே மாதிரியான சேர்க்கை முறையே பின்பற்றப்பட்டிருக்கிறது. தலித் மாணவர்கள் அறிவியல், தொழில் நுட்பப் பிரிவுகளில் அதிகமாக சேர்த்துக் கொள்ளப்படவில்லை. மாறாக வரலாறு, தமிழ் இலக்கியம், பொருளாதாரம் போன்ற பாடங்களிலேயும், அறிவியலில் ஒரு கலைப் பாடம் எனக் கருதப்படும் விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆகியவற்றிலேயும் தான் அதிகமாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலை இளங்கலையிலும் முதுகலையிலும் ஒரே விதமாகவே இருக்கிறது. ஆய்வு நிலையான எம்.பில். வகுப்புகளில் தமிழ்ப் பாடத்தில் மட்டுமே தலித் மாணவர்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளனர். சில கல்லூரிகளிலே சமூகப் பணி மற்றும் சமூகவியலில் தலித்துகளுக்கு அதிக இடம் தரப்பட்டுள்ளது. இப்பாடப் பிரிவுகளில் மனித வள மேம்பாடு தொடர்பான சிறப்புப் பிரிவுகள் எம்.பி.ஏ.வுக்கு இணையானவையாகக் கருதப்படுபவையாகும். ஆனால் இச்சிறப்புப் பிரிவுகள் பெரும்பாலும் தலித் மாணவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை.
இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்பிரிவுகளில் கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பாடப் பிரிவுகளில் தலித் மாணவர்களின் சேர்க்கை 10 சதவிகிதமாகவே உள்ளது. பழங்குடியினருடையதோ 0.1 சதவிகிதத்துக்கும் குறைவு. கார்ப்பரேட் செக்டார், உயிர் வேதியியல் மற்றும் தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பம், சுற்றுலா போன்ற பாடப்பிரிவுகளில் தலித்துகளோ, பழங்குடியினரோ சொல்லிக் கொள்ளும்படி இக்கல்லூரிகளில் சேர்க்கப்படவில்லை. திருப்பத்தூரில் இருக்கும் தூய நெஞ்சக் கல்லூரியும், கோவை நிர்மலா கல்லூரியும், குன்னூர் பிராவிடன்ஸ் கல்லூரியும் பழங்குடி மக்கள் அதிகம் கொண்ட பகுதியிலே இயங்கி வருபவையாகும். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் முறையே 57,1,10 என்ற எண்ணிக்கையில்தான் பழங்குடி மாணவர்களை இக்கல்லூரிகள் சேர்த்துக் கொண்டுள்ளன.
அதிராம்பட்டிணம் காதர் முகைதீன் கல்லூரி, பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, சிறீவைகுண்டம் கே.ஜி.எஸ். கல்லூரி, நாகர்கோயில் மகளிர் கிறித்துவக் கல்லூரி, திருப்பனந்தாள் கே.வி.எஸ். கல்லூரி ஆகியவற்றில் இந்தப் பத்தாண்டுகளில் ஒரே ஒரு பழங்குடியின மாணவர் கூட சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பது அதிர்ச்சியைத் தருகிறது. கல்வியின் விழுமியங்களுக்கு மாறாக இக்கல்லூரிகள் நடக்கின்றன. அறிவியல் தொழில் நுட்பப் பாடப் பிரிவுகளில் அனுமதிக்கப்படும் பழங்குடியின மாணவர் எண்ணிக்கை 50க்கும் குறைவாகவே இருக்கிறது.
இந்த வகுப்புகளில் சேர்க்கையின் போது கடைப்பிடிக்கப்படும் 1 முதல் 100 வரையிலான சுழற்சிப்புள்ளிகளில் 50ஆவது புள்ளியில் தான் பழங்குடியினருக்கான முறை வருகிறது. 2, 6, 12, 16, 22 என தலித்துகளுக்கான சுழற்சிப்புள்ளிகள் கணக்கிடப்படுவதால், அவர்களுக்குக் கூட இப்பாடப் பிரிவுகளில் இடம் கிடைத்துவிட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பழங்குடியினருக்கோ அந்த வாய்ப்பும் இல்லை. இதைப் போன்ற நடைமுறை சாக்குப் போக்குகளை சொல்லி இந்தக் கல்லூரிகள் ஏமாற்றி விடலாம். ஆனால் மானுட அறத்தின்படி குற்றமிழைத்தவை. ஏகலைவனின் கட்டை விரலை வெட்டிக் கொண்ட துரோணனின் சாதி வெறியை, யுகங்கள் தாண்டியும் நடத்தி வருவதற்கு இவர்கள் வெட்கப்பட வேண்டும்.
1986 ஆம் ஆண்டு அரசு ஒரு முடிவு எடுத்தது. அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் இருக்கும் கலைப்பாடங்கள் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெறுவதிலோ, சமூக நிலையைப் பொருளாதார ரீதியாக உயர்த்திக் கொள்வதிலோ எவ்வகையிலும் பயனளிக்கவில்லை. எனவே அவற்றை நீக்கிவிடலாம் என்றது. ஆசிரியர்கள் நடுவிலே அப்போது போராட்டங்கள் வெடித்தன. உடனே அரசு சுயநிதி முறையை அறிமுகப்படுத்தியது. சுயநிதிப் பாடங்களில் அறிவியல், தொழில் நுட்பப் பிரிவுகள் சேர்க்கப்பட்டு தலித்துகளுக்கு எட்டாத நிலையில் வைக்கப்பட்டன. கலைப்பாடங்களை வைத்துக் கொள்வது, சிறுபான்மையினர் கல்லூரிகளுக்கு வசதியாகப் போய்விட்டது. அந்த இடங்களில் தலித் மாணவர்களை சேர்த்து கணக்கு காட்டி விடுவதற்கு அவை உதவுகின்றன.
கலைப்பாடங்கள் படிக்கிறவனை நெகிழ்வாக ஆக்கிவிடும். வரலாற்றைப் பிடிக்காமல் வரலாறு போன்றவற்றைப் படித்துக் கொண்டேயிருக்கலாம். இதுபோன்ற பாடங்களைப் படித்துவிட்டு எழுத்தர்களாகவும், நான்காம் நிலை பணியாளர்களாகவும், வேலையற்றவர்களாகவும் தலித்துகள் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் அதிகாரப் பொறுப்புகளில், தொழில் நிர்வாகங்களில், அறிவியல் ஆய்வகங்களில், ஊடகத் துறையில் அவர்கள் வந்துவிடக் கூடாது என்று சாதி இந்துக்கள் நினைக்கின்றனர். சிறுபான்மையினரும் தங்களை இதனோடு இணைத்துக் கொள்கின்றனர். இது ஒரு கல்விச் சதி. இச்சதியை குற்ற உணர்வும், அற உணர்வுமின்றி சிறுபான்மையினர் செய்து வருகின்றனர்.
அம்பேத்கரின் காலம் தொடங்கி இன்று வரையிலும் தலித்துகள் அறிவியல் தொழில்நுட்ப உயர் கல்விகளில் வஞ்சிக்கப்பட்டே வருகின்றனர். சிறுபான்மையின-தனியார் கல்வி நிறுவனங்கள் அந்த துரோகத்தில் பங்கேற்றும் வருகின்றன. ஆனால் இவர்களின் மத பீடங்களோ ஏசு சமாரியர்களை நேசித்தார் என்றும், நபிகள் ஒரு கருப்பு அடிமையைத்தான் தொழுகைக்கு அழைக்க அமர்த்தினார் என்றும் பிரசங்கித்து வருகின்றன. எத்தனை முரண்பாடு
இக்குறுந்தொடர் குறித்துப் பலர் அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், "சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளில் தலித் கிறித்துவர்களுக்குப் பணி நியமனம் தந்திருப்பதை கணக்கில் கொள்ள வேண்டாமா?' என்ற வினாவையும் சிலர் எழுப்பி வருகின்றனர். சட்ட ரீதியாக தலித் கிறித்துவர்கள், பட்டியல் சாதியில் இடம் பெற முடியாது. தலித் கிறித்துவர்களின் இடையறாத போராட்டத்திற்குப் பிறகும் மய்ய அரசு, தலித் கிறித்துவர்களைப் பட்டியல் சாதியில் சேர்த்துக் கொள்ள மறுக்கிறது. எனவே, தலித் கிறித்துவ ஆசிரியர்களை / பணியாளர்களை சிறுபான்மையினர் கல்லூரிகளில் நியமித்திருப்பதை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. மேலும், தலித் கிறித்துவர்களுக்கு அக்கல்லூரிகளில் தலைமைப் பதவிகளை வழங்க மறுக்கும் அநீதியை என்னவென்று சொல்வது?
அய். இளங்கோவன்
என் மின்னஞ்சல் முகவரிக்கு அண்மையில் அனுப்பப்பட்ட கட்டுரை, நெடுநேரத்துக்கு என்னை சலனமற்றவனாக ஆக்கிவிட்டது. வி.பி. ரவாத், வி.பி.சிங் அவர்களைப் பற்றி எழுதிய ஒரு நினைவுக் கட்டுரை அது. "வறியவனாக இறந்து போன ஒரு ராஜா' என்று தலைப்பிடப்பட்டிருந்த அக்கட்டுரை, வி.பி. சிங் அவர்களின் மாபெரும் பணிகளை நினைவு கூர்ந்திருந்தது. கட்டுரையின் தலைப்பே ஆழமானது. இந்தியாவில் சமூக நீதி, தலித் முன்னேற்றம் என்று பேசுகிறவர்கள் எல்லோருமே மேல்நிலையில் இருப்பவர்களுக்கு இணையாக தலித்துகளை உயர்த்துவதைப் பற்றிய கருத்து நிலையோடுதான் பேசுகிறார்கள். "மேல்நிலை' என்பது ஆதிக்கக் கருத்து நிலை. மேலிருப்பவர்களெல்லாம் கீழிறங்கி வந்து தலித்துகளுடன் அய்க்கியமாவதே "சமநிலை'. வி.பி.சிங், சாகுமகாராஜ் போன்றவர்களின் பணிகள் இதை மெய்ப்பிக்கின்றன.
வி.பி. சிங் இறந்த செய்தி அறிந்த உடனே, அவரின் அளப்பரிய பணியால் அரசியல் வயப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் நாடு முழுவதும் துக்கம் கொண்டாடித் தீர்ப்பார்கள்; வீதிக்கு வீதி வி.பி. சிங்கிற்கு வீர வணக்கக் கூட்டம் நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் ஒன்றுமே நடக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நிகழ்ச்சிகள் நடந்தன. சென்னையில் முதல்வர் கருணாநிதி அவர்கள் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் "தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்' என்று சொன்ன வி.பி. சிங் அவர்களின் கனவை நனவாக்குவோம் என்று பேசியிருக்கிறார் (தி.மு.க. வி.பி. சிங் மறைவுக்கு 3 நாள் துக்கம் கடைப்பிடிப்பதாக அறிவித்தது. ஆனால் எத்தனை உடன்பிறப்புகள் துக்கம் கடைப்பிடித்திருப்பார்களோ தெரியவில்லை). "கார்ப்பரேட் செக்டார்களில்' இடஒதுக்கீடு வேண்டும் என்று வி.பி.சிங் தன் உரைகளில் பல முறை வலியுறுத்தியிருக்கிறார். அதையே தான் முதல்வரும் குறிப்பிட்டிருந்தார்.
நாம் தொடர்ந்து எழுப்பி வரும் குரல்களுக்கு ஆதரவாக, நமது முதல்வரின் குரலும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிற ஒன்றுதான். ஆனால் அந்த மகிழ்ச்சியை முழுமையாக்கிட வேண்டுமானால், அவர் இன்னும் சிலவற்றைச் செய்தாக வேண்டும்.
அரசு உதவி பெறும் சிறுபான்மை இனத்தவர் அல்லாத 100 தனியார் கல்லூரிகளைக் குறித்தும் நாம் இத்தொடரில் அலசி வருகிறோம். இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் சிறுபான்மை இனத்தவர்களின் கல்லூரிகளின் நிலை தான் இக்கல்லூரிகளின் நிலையும். தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டவிதி பிரிவு 11(அ)இன்படி, சிறுபான்மை இனத்தவர் அல்லாத தனியார் கல்லூரிகள் இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும். ஆனால் இச்சட்டவிதியோ இக்கல்லூரிகளின் குப்பைக் கூடையில். இடஒதுக்கீட்டினை இக்கல்லூரிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது (W.P..26832/2008).
இதற்குப் பாரிய நியாயங்கள் இருக்கின்றன. அதை நமக்குக் கிடைத்த புள்ளிவிவரங்களும் உறுதி செய்கின்றன. வகைக்கொரு எடுத்துக்காட்டுடன் நாம் இதை அலசினாலே இந்தக் கல்லூரிகளில் நடந்து வரும் அநீதிகள் புரிபடும். வள்ளல் பச்சையப்பன் அறக்கட்டளை நடத்தும் கல்லூரிகள் அனைத்துமே பட்டியலில் உள்ள நூறு கல்லூரிகளில் தான் வருகின்றன. சென்னையிலே மட்டும் பச்சையப்பன் கல்லூரி, கந்தசாமி கல்லூரி, செல்லம்மாள் மகளிர் கல்லூரி என மூன்று கல்லூரிகள் பச்சையப்பன் அறக்கட்டளைக்கு இருக்கின்றன. கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியும், காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர், மகளிர் கல்லூரிகளும் கூட இந்த அறக்கட்டளையால் நடத்தப்படுபவை. இக்கல்லூரிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதில் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படவில்லை. இக்கல்லூரிகள் ஆறிலும் இருக்க வேண்டிய 324 விரிவுரையாளர் பணியிடங்களில் சுமார் 63 இடங்கள் தலித் மக்களுக்கானவை. இதில் 31 இடங்களே நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 32 இடங்களை அந்த அறக்கட்டளை நிரப்பாமல் விட்டு வைத்திருக்கிறது.
வெள்ளைத் துரைகளிடம் "துவிபாஷி'யாக (மொழி பெயர்ப்பாளராக) இருந்த பச்சையப்பருக்கு கணக்கற்ற சொத்துக்கள் இருந்தன. அவருடைய மறைவுக்குப் பிறகு இரு மனைவிகளின் சார்பானவர்களும் மோதிக்கொண்டு திரிந்தனர். 1828 இல் சென்னையில் இருந்த அட்வகேட் ஜெனரல் ஜார்ஜ் நார்ட்டன் அவர்களால் சிக்கல் முடிவுக்கு வந்தது. ஆண்டுக்கு 4200 ரூபாய் கல்விக்கென ஒதுக்கப்பட்டது. 1828இல் இது பெரும் தொகையாகும். உடனே ஓர் அறக்கட்டளை அமைக்கப்பட்டு, பள்ளிகளும் கல்லூரிகளும் தொடங்கப்பட்டன. அறக்கட்டளையில் பிள்ளைமார் இருவரும், நாயக்கர்கள் இருவரும், மூன்று முதலியார்களும், ஒரு செட்டியாரும் அன்று இருந்தனர்.இப்படியான சாதி இந்துக்களின் ஆதிக்கம் அறக்கட்டளையில் இன்றுவரை தொடரும் என்றே தோன்றுகிறது. ஆனால் இது ஒரு பொது அறக்கட்டளை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஈகை குணம் கொண்டிருந்த பச்சையப்பர், தன் சொத்துக்களில் கணிசமான தொகையை வறியவர்களுக்கு உணவிடவே செலவழித்து இருக்கிறார். இந்த அறக்கட்டளை தொடங்கிய பிறகு 1846இல் நடைபெற்ற கல்லூரி கால்கோள் விழாவில், “பச்சையப்பரின் உதவிகளைக் கொண்டு மிக்க ஏழைகளும், ஆதரவற்றவர்களும் கல்வி பெற்று அரசுப்பணிகளில் சேர தகுதி பெற வேண்டும்'' என்று நார்ட்டன் பேசியிருக்கிறார். ஆனால் ஏழைகளிலும், வறியவர்களிலும், ஆதரவற்றவர்களிலும் தலித்துகள் வரமாட்டார்கள் என்று அறக்கட்டளையில் இன்று உள்ளவர்கள் நினைக்கிறார்களோ, என்னவோ!
பச்சையப்பன் கல்லூரிகளில்தான் இந்த நிலை என்றில்லை. சமூக நீதிக்காகப் பாடுபட்ட நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான சர். தியாகராயரின் பெயரில் இயங்கும் கல்லூரியிலும் இதே கதைதான். எட்டு தலித் விரிவுரையாளர்கள் இருக்க வேண்டிய அங்கு அய்ந்து பேர்தான் இருக்கிறார்கள். பெரியாரால் தொடங்கப்பட்ட ஈரோடு சிக்கைய்ய நாயக்கர் கல்லூரியில்கூட முழுமையாக இடஒதுக்கீட்டை செயல்படுத்தவில்லை. இக்கல்லூரியில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததால், மாணவர்கள் அண்மையில் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். அதனால் கொஞ்சம் இடங்கள் நிரப்பப்பட்டன. அப்படி நிரப்பியதில் தலித்துகள் எத்தனை பேர் என தெரியவில்லை. அக்கல்லூரியில் 12 தலித் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே தான் விடப்பட்டுள்ளன.
கோவை பூ.ச.கோ. கலை அறிவியல் கல்லூரியில் சுமார் 22 தலித் விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இக்கல்லூரிக்கு நிகர்நிலைப் பல்கலைக் கழகத் தகுதி அளிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. அப்படி ஆகிவிட்டால் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படாமல் போய் விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்தால் இந்த 22 இடங்களும் தலித்துகளுக்கு கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை.
கோவில்களுக்கு உள்ளே வரவிடாமல் தலித்துகளை தடுத்துக் கொண்டிருக்கும் இந்துமடக் கூடாரங்கள் நடத்தும் கல்லூரிகள் பல தமிழகத்தில் உண்டு. சிறீமத் சிவஞ்ஞான பாலசாமிகள் தமிழ்க் கல்லூரி, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரி, தருமபுரம் ஆதீனம் கல்லூரி, திருப்பனந்தாள் கல்லூரி ஆகிய மடக்கல்லூரிகளில் ஏழு தலித் விரிவுரையாளர் இடங்கள் நிரப்பப்படவில்லை. "தலித் மக்கள் நீச மொழி பேசுகிறவர்கள்' என்று சங்கர மடம் சொல்கிறது. அதனால் அவர்களுக்கு இடமில்லை என மடங்கள் சொல்கின்றன. இந்தக் கருத்தை அரசு பொறுப்பிலிருக்கும், இந்து அறநிலையத் துறை கல்லூரிகளும் அப்படியே பின்பற்றுகின்றன. பழனியிலும், பூம்புகாரிலும் இயங்கும் இத்துறையின் 3 கல்லூரிகளும் நிதியுதவி பெறும் பட்டியலில் வந்தாலும் அரசின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பவை. இவற்றின் தாளாளர்களாக அவ்வப்பகுதிகளில் பணியிலிருக்கும் வட்டாட்சியர்களே உள்ளனர். இவ்வளவு இருந்தும் இங்கும் இடஒதுக்கீடு இல்லை. சுமார் 21 தலித் பணி இடங்களை இக்கல்லூரிகள் நிரப்பாமல் வைத்திருக்கின்றன. அரைகுறையாக நிரப்பியுள்ள இடங்களை இப்படிப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இந்த நூறு கல்லூரிகளிலும் மொத்தமுள்ள 5874 பணியிடங்களில் 1124 இடங்கள் தலித்துகளுக்கானவை. அவற்றிலோ 557 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.
இது, அப்பட்டமான விதிமீறல் ஆகும். சிறுபான்மையினர் அல்லாதோரால் நடத்தப்படும் 100 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஒன்பதில் ஒரே ஒரு தலித் விரிவுரையாளர் கூட இல்லை. 7 கல்லூரிகளில் ஒரே தலித் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கூட இல்லை.
மனித உரிமை, சமூக சீர்த்திருத்தம், தலித் விடுதலை பேசும் காலம் இன்று நேற்று தொடங்கியதல்ல. நூறாண்டுகளுக்கும் மேல் அந்தப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த அழுத்தங்களையும், சூழல்களையும் புறக்கணித்து பழமையின் கூடாரங்களாகவும், விலங்காண்டிக் கூடங்களாகவும் பல அரசு உதவி பெறும் கல்லூரிகள் இன்றும் இயங்கி வருகின்றன. இதை மாற்ற வேண்டும் என்பதே நமது கருத்தும் செயலும். வி.பி. சிங் கூட்டத்தில் தமிழக முதல்வர் பேசிய தனியார் துறை இடஒதுக்கீட்டுக்கு இப்போது வருவோம். தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று பேசும் முதல்வர் ஒன்று செய்ய வேண்டும். அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீடு வேண்டும் என்று தொடரப்பட்டுள்ள பொது நல வழக்கில், அரசுத் தரப்பு வழக்குரைஞரை இடஒதுக்கீட்டுக்கு எதிராக வாதிடாமல், அப்பணியிடங்களை நிரப்ப இக்கல்லூரிகளை வலியுறுத்துமாறு சொல்ல வேண்டும். அப்படிச் செய்வாரா முதல்வர்?
நன்றாகப் படித்த, நாகரிக பார்வை கொண்ட, மனித உரிமைகளைப் போற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் ஜனநாயக நாட்டில் வாழ்கிற அரசு அலுவலர்களுக்கு, இடஒதுக்கீட்டு விதிகள் மட்டும் வெறுப்புக்கு உரிய ஒன்றாக இருப்பது ஏன்? இந்த வினாவுக்கு ஒரே விடைதான் இருக்கிறது. அது சாதிய மனநிலை. என்னுடைய பல்லாண்டு கால பொதுப்பணியில், பல்லாயிரம் தருணங்களில் சாதிய மனநிலையின் கொடூர முகத்தினைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலான இந்தியர்கள் ஒவ்வொருவரும் சாதிப் பேய் பிடித்த இரட்டை "ஆவி'களைக் கொண்ட மனிதர்களாகத்தான் வாழ்கிறார்கள்.
அண்ணல் அம்பேத்கர் இதற்கான மாற்று வழியை சிந்தித்ததன் விளைவாகத்தான் சட்ட உரிமைகளை உருவாக்கியிருக்கிறார். சமூகப் புரட்சிக்கான வாய்ப்புகளை முற்றிலும் தடை செய்ய வேண்டுமென்றால், கல்வி கற்பதற்கான உரிமையையும், ஆயுதம் ஏந்துவதற்கான உரிமையையும் முற்றிலும் தடை செய்துவிட வேண்டும். இந்து சமூகம் தாழ்த்தப்பட்டோருக்கு அதைதான் செய்திருக்கிறது என்கிறார் அம்பேத்கர். கல்விக்கான உரிமை மறுக்கப்படுகிறபோது, தனது நிலையின் காரணத்தை அம்மனிதனால் உணரமுடியாமல் போய்விடுகிறது. அவன் "விதி'யை நம்பத் தலைப்பட்டு விடுகிறான். இந்த உரிமைகளை மறுப்பதற்கான மனநிலை சாதிய நோயினால் பீடிக்கப்பட்டிருக்கும் மனநிலைதான். இந்த மனநிலையில் வெடி வைக்க வேண்டுமானால், தலித்துகளுக்கான உரிமைகளை சட்டப்படியானதாக மாற்றிவிட வேண்டும். ஏனெனில், அரசுக்கு கட்டுப்படும் மனோநிலை சாதி இந்துக்களிடம் உண்டு என்று அம்பேத்கர் எண்ணினார்.
“இந்துக்கள், உண்மையில் தீண்டத்தகாதவர்களின் நோக்கங்களையும் நலன்களையும் எதிர்க்கின்றனர். தீண்டத்தகாதோர் மத்தியில் செயல்பட்டு வரும் நட்பு சக்திகளிடம் அவர்கள் இரக்கம் காட்டுவதில்லை, ஆர்வ விருப்பங்களையும் அவர்கள் கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை. அவர்களுடைய விருப்பங்களுக்கு எதிராகவே இருக்கின்றனர். அவர்கள் தீண்டத்தகாதவர்களுக்கு நிச்சயமாக நியாயம் வழங்க மாட்டார்கள். அவர்களிடம் பல வகைகளிலும் பாரபட்சமுடன் நடந்து கொள்வார்கள். மதத்தின் ஆதார பலம் அவர்களுக்கு இருப்பதால், தீண்டத்தகாதவர்களிடம் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்ள அவர்கள் சிறிதும் தயங்கவோ, மயங்கவோ மாட்டார்கள்.
அதற்காக வெட்கித் தலை குனியவும் மாட்டார்கள். இந்துப் பெரும்பான்மையினரின் கொடுங்கோன்மைக்கு எதிராக, அரசியல் சட்டத்திலேயே தீண்டத்தகாதவர்களின் அரசியல் உரிமைகள் உறுதி செய்யப்படுவதுதான் - இத்தகைய மக்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்கான வழியாகும். தீண்டத்தகாதவர்கள் கோரும் இந்தப் பாதுகாப்பை மிகையான கோரிக்கை என்று எவரேனும் கூற முடியுமா?'' (அம்பேத்கர் தமிழ் நூல் தொகுதி 17; பக்.47)
ஓர் இந்துவை நான் நம்ப மாட்டேன் என்று சொல்வதற்கு, ஒரு தீண்டத்தகாதவருக்கு அத்தனை முகாந்திரங்களும் இங்கே இருக்கின்றன. அம்பேத்கரின் விருப்பப்படியே சட்டங்கள் உருவாகிவிட்டன. ஆனால் நிலைமை மட்டும் முழுமையாக மாறவில்லை. அவ்வாறெனில் அம்பேத்கர் ஏமாந்து விட்டாரா? அவர் ஏமாந்து போனதாக சொல்வதற்கு இடமில்லை. ஆனால் அவருடைய சிந்தனை இன்றளவும் மக்களிடம் முழுமையாக சென்றடையவில்லை. ஒரு தலித் தனது சட்டப்படியான உரிமைகளைப் பெறுவதற்கு என்று முழுமையாக ஒன்று சேர்கிறானோ, அன்றுதான் அவர் கனவு முழுமை பெறும். ஆனால் பல்வேறு திட்டங்களும் உரிமைகளும் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.
மூன்றாம் வகுப்பிலிருந்து அய்ந்தாம் வகுப்பு வரை படிக்கிற ஆதி திராவிடர் பெண் குழந்தைகளுக்கு, மாதம் அய்ம்பது ரூபாய் ஊக்கத் தொகை வழங்கிட வேண்டும் என்று ஓர் அரசாணை இருக்கிறது. இதன்படி, ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ஆண்டொன்றுக்கு 500 ரூபாய் வழங்க வேண்டும். தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இதைப் பெற்றுத்தர வேண்டும். பெரும்பாலானவர்கள் இதைப் பெற்றுத் தருவதில்லை. இத்திட்டம் அப்படியே ஏட்டளவில் இருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் மட்டும் 2007 - 2008 கல்வியாண்டில், இத்திட்டத்துக்கு உரிய 69 லட்சம் ரூபாய் பயன்படுத்தப்படõமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
சுகாதாரக் குறைவான பணிகளை செய்கின்ற பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு, அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாணவர்கள் இத்தொகையைப் பெறலாம். 2006ஆம் ஆண்டிலிருந்து 2008ஆம் ஆண்டு வரை இந்த உதவித்தொகை வழங்கப்படவில்லை. ஒருவேளை துப்புரவுப்பணி வேலூர் மாவட்டத்தில் அறவே ஒழிந்து விட்டதாக அரசு எண்ணுகிறதா என்று தெரியவில்லை. கல்வித் திட்டத்தில் மட்டுமல்ல,
எல்லா துறைகளிலும் இதே நிலைதான் தொடருகிறது.
அண்மையில் இந்த நிலைக்கு உச்சம் வைத்ததுபோல ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. அது ஓர் அதிர்ச்சிகரமான அனுபவம். வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினராக நான் இருப்பதால் சனவரி 26, 2009 அன்று, "தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்துண்ணலுக்குப்' போக வேண்டி இருந்தது. இந்த விருந்துண்ணலுக்கு அரசு ஓர் ஆணையை 1990லேயே வெளியிட்டது. “ஒவ்வொரு குடியரசு நாள் அன்றும் தீண்டாமை ஒழிப்பு நாள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தலித் மக்கள் ஆலயப் பிரவேசம் செய்வதைத் தடுக்கும் நிலை இன்னும் நிலவுவதால், அந்த நிலையைப் போக்க அன்று ஆலயங்களில் சமபந்தி விருந்துண்ணல் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இவ்விருந்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையேற்க வேண்டும்'' என்று அந்த அரசாணை கூறுகிறது. இவ்வாணைப்படிதான் இந்த சமபந்தி விருந்து நடைபெறுகிறது என்பதை நினைத்தபோது உள்ளூர மகிழ்ச்சியாக இருந்தது.
வேலூர் காட்பாடி சாலையில் இருக்கும் அருள்மிகு சொர்ணமுக்கீஸ்வரர் ஆலயத்தில்தான் சமபந்தி விருந்து நடைபெற்றது. (கோயில்கள்தான் ஜாதியின் தோற்றுவாய். இன்றளவும் இக்கோயில்களில் பிறப்பால் பார்ப்பனர் அல்லாத எவரும் இக்கோயில்களின் கருவறைக்குள் நுழைய அனுமதி இல்லை. "அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' என்று அரசாணைகள் மற்றும் சட்டமன்றத் தீர்மானங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டும், அவை இன்றும் உச்ச நீதிமன்ற வாயிலில் மண்டியிட்டுக் கொண்டிருக்கின்றன. சாதி - தீண்டாமையை நிலைநிறுத்தும் இக்கோயில்களில் "சமபந்தி போஜனம்' நடத்துவதே முரண்நகை. சாதி பாகுபாட்டுக்கு ஆட்படும் ஒடுக்கப்பட்ட மக்கள், முற்றாக இந்து கோயில்களைப் புறக்கணித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் - ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய மோசடிகள் அங்கு அரங்கேற்றப்படுகின்றன).
மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் கண்காணிப்பாளர் வேலூர் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.வை சேர்ந்த முகமது சகி, வேலூர் மேயர், காட்பாடி நகராட்சித் தலைவர், வட்டாட்சியர், கழிஞ்சூர் பேரூராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் போன்ற சிறப்பு அழைப்பாளர்கள் இதில் பங்கேற்றனர். விருந்துண்ண வந்திருந்தவர்கள், அதிகாரிகளுடன் சேர்ந்து 20 பேருக்கு இருந்தனர். விருந்து தொடங்கியதும் இந்த அலுவலர்கள் சிறப்பு அழைப்பாளர்களோடு, அக்கோயிலின் வெளியே காத்திருந்த பிச்சைக்காரர்கள் அழைத்து வரப்பட்டு நலக்குழு உறுப்பினர்கள் நால்வருடன் அமர வைக்கப்பட்டனர். 2ஆவது பந்திக்கு, கோயிலின் எதிரே நடைபெற்றுக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி விழாவுக்கு அழைத்து வரப்பட்டிருந்த மகளிர் கூட்டம் வந்து அமர்ந்தது. அவர்களுக்கு இதற்கென "டோக்கன்' வழங்கியிருந்தனர். அவ்வளவுதான். தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்துகிற சமபந்தி விருந்து முடிந்துவிட்டது.
இந்த விருந்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சித் தலைவர், தீண்டாமை ஒழிப்பு பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்த விருந்து எதற்காக நடக்கிறது என்றே அறியாத ஓர் அலுவலர், “சார், இன்றைக்கு அன்னதானம் சார்! இது இந்து அறநிலையத்துறையோட வேலை சார். ஆனா ஆதிதிராவிடர் நலத்துறையை செய்ய வச்சுட்டாங்க'' என்றார். இந்த அறியாமையை வெளிப்படுத் திக் கொண்டே அவர் மற்றொரு உண்மையை சொல்லி விட்டார். வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஏழு ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிக் காப்பாளர்கள் தலையில் விருந்து செலவுகளைச் சுமத்தி விட்டிருக்கிறது ஆதிதிராவிடர் நலத்துறை. ஆனால், விருந்து செலவுக்கான பற்றோ அதிகாரிகளின் பைகளுக்குப் போய்விடும்.
தீண்டாமையை ஒழிக்க போடப்பட்ட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தும் அழகு இதுதான். தமிழகம் முழுமைக்கும் மட்டுமின்றி, இந்தியா முழுமைக்குமே கூட நிலைமை இதுவாகத்தான் இருக்கும். தலித் மக்கள் விடிவு பெறுவதற்காகவும், கல்வி, பொருளாதார நிலைகளிலும், சமூக நிர்வாகப் பங்கேற்பிலும் உயர்வு பெற போடப்பட்டுள்ள எல்லா திட்டங்களும் இப்படித்தான் இருக்கின்றன.
இந்தத் திட்டங்கள் இவ்வாறு அலட்சியமாகவும், பொறுப்பற்றும், கடமை உணர்வு இன்றியும் செயல்படுத்தப்படுவதற்கான அடிப்படைக் காரணம் சாதி மனோபாவம் அன்றி வேறில்லை. இத்திட்டங்களை செயல்படுத்தும் இடத்தில் இருக்கிற சாதி இந்து அதிகாரிகள், சாதியையும், ஊழல் சிந்தனையையும் உள்வாங்கி "கவர்மெண்ட் பார்ப்பனர்'களாகிவிட்ட தலித் அதிகாரிகள் ஆகியோரே இதற்குக் காரணம். இத்தகைய சாதிய மனோநிலைதான் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி நிர்வாகத்திலும் இருக்கிறது.
இந்த மனநிலை இருப்பதால்தான், செந்தமிழ்க் கல்லூரி, மதுரை; சைவ பானு கல்லூரி, அருப்புக்கோட்டை; சீதையம்மாள் ஆறுமுகம் பிள்ளை கல்லூரி, திருப்பத்தூர்; கிருஷ்ணம்மாள் (ம) கல்லூரி, கோவை; கோன் யாதவ்(ம) கல்லூரி, மதுரை; என்.கே.டி. நேஷனல் (கல்) கல்லூரி, சென்னை; சிறீமத் சிவஞான கலைக்கல்லூரி, மைலம்; ராமசாமி தமிழ்க் கல்லூரி, காரைக்குடி ஆகியவற்றில் ஒரே ஒரு தலித் ஆசிரியர் கூட இல்லை. அரசு உதவி பெறும் 160 தனியார் கல்லூரிகளில் இன்றைக்குக் கூட ஒரு கல்லூரியிலும் ஒரு தலித் முதல்வராக இல்லை என்பதும் இச்சாதிய மனநிலையால் தானே? இவர்கள் அரசியல் சாசனத்திற்கு நேர் எதிராகத்தானே நடந்து கொள்கிறார்கள்? தீண்டாமை ஒரு குற்றம், தீண்டாமை ஒரு பாவச்செயல் என்றெல்லாம் கற்பித்துக் கொண்டு, தலித்துகளை பணியில் சேர்க்காதிருப்பதும் தீண்டாமைக் குற்றம்தானே? சட்டப்படி தவறுதானே!
தனியார் கல்லூரிகள் தலித் ஆசிரியர்களை உள்ளே வரவிடாமல் தடுக்க, பல வகையான தந்திரோபாயங்களை கையாளுகின்றன. லஞ்சம் வாங்குவதை மிக நேர்த்தியான தொழில் நுணுக்கத்துடன் செய்வது போலத்தான் இதுவும். மேலோட்டமாகப் பார்த்தால் இந்த நடவடிக்கைகள் தலித் விரோத நடவடிக்கைகளாகத் தெரியாது. அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி நிர்வாகங்களின் ஒப்புதலோடு, ஆசிரியர் கள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு இடப் பெயர்வு (Migration) செய்து கொள்ளலாம். இந்த இடப்பெயர்வுப் பணியிடங்களில் இடஒதுக்கீட்டை கடைப்பிடிக்க வேண்டியதில்லை என்பதால், இடப்பெயர்வு மூலம் இடஒதுக்கீட்டை இடப்பெயர்வு செய்துவரும் வேலை நடைபெறுகிறது.
தலித் பணிநியமனத்துக்கு என வரும் சுழற்புள்ளி (Roster) காட்டப்படுவதில்லை. சிலர் இந்த தவறுகளை தொழில் நேர்த்தியுடன் செய்துவிடுவதுண்டு. வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து இக்கல்லூரியில் பணியாற்றுவதற்கு தகுதியுடைய தலித் நபர் இல்லை என்று ஒரு சான்றிதழை வாங்கி வைத்துக் கொண்டு, தலித் இடங்களை பிறரைக் கொண்டு நிரப்பிவிடுவர். சில கல்லூரிகள் மேலும் கொஞ்சம் தாராளமாக நடந்து கொள்ளும். தலித் பணி நாடுநர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலுக்குப் பிறகு வந்தவர்களில் யாரும் எதிர்பார்க்கும் அளவுக்குப் போதிய தகுதியுடன் இல்லை என்று சொல்லித் திருப்பி அனுப்பப்படுவர். கோப்பு மூடப்படும்.
இத்தனியார் நிதியுதவிக் கல்லூரிகளைக் கண்காணிக்க, தமிழகத்தில் ஏழு மண்டல கல்லூரிக்கல்வி இயக்குநர்கள் இருக்கிறார்கள். சென்னை (2), வேலூர், திருச்சி, கோவை, திருநெல்வேலி, மதுரை ஆகிய நகரங்களில் இருக்கும் இவர்கள்தான் - இக்கல்லூரிகளின் பணி நியமனங்களுக்கு ஒப்புதல் அளிப்பார்கள். இனச்சுழற்சி முறை (Roster turn) எனப்படும் இனச்சுழற்றிப் புள்ளிகளையும் நிர்ணயிப்பவர்கள் இவர்கள்தான். ஆனால் கையூட்டு மூலம் இவர்கள் கைகள் முடக்கப்படும். இப்படியான உத்திகள் மூலம் தொடர்ந்து தலித் விரோத போக்குடன் இக்கல்லூரிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் ஏற்படும் எந்த ஆட்சி மாற்றமும் இந்த நிலையை மாற்ற முயல்வதில்லை. தலித் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற அரசியல் அமைப்புகளுக்கு ஓட்டு வாங்குவதற்கான களப்பணிகளை ஆற்ற வேண்டியுள்ளதால், இவற்றையெல்லாம் அவர்களின் வேலைத் திட்டத்திற்குள்ளேயே அனுமதிப்பதில்லை. தலித் மக்களுக்கு மறுக்கப்படும் சமூக நீதி மட்டுமன்று இந்த இடஒதுக்கீட்டு மறுப்பு. வேறு ஒரு வகையில் பார்த்தால், தலித் மக்களின் பெயரைச் சொல்லி செய்து வரும் ஒரு திருட்டுத்தனமும் கூட.
தலித் மக்களுக்கு என்று வழங்கப்படும் சிறப்பு உட்கூறு திட்டத்துக்கான நிதி செலவழிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுவதை நாம் அறிவோம். 1999 - 98இல் 594.53 கோடி, 98-99இல் 509.07 கோடி, 99 - 2000இல் 169.07 கோடி ரூபாய்களை திருப்பி அனுப்பியிருக்கிறது அரசு என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அண்மைக்கால புள்ளிவிவரங்கள் கிடைத்தாலும் அவையும் இதையேதான் சொல்லும். அதே வகையில்தான் இத்தனியார் கல்லூரி நிர்வாகங்களும் தலித் மக்கள் பணியிடங்களுக்குரிய நிதியை அம்மக்களுக்கு வழங்காமல், தலித் அல்லாத சாதி இந்துக்களுக்கு வழங்கி வருகின்றன.
கடந்த 9 ஆண்டு புள்ளி விவரங்களின்படி, அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் ஊதியத்திற்காக அரசிடம் இருந்து 1496.26 கோடி ரூபாயை பெற்றுள்ளன. இதில் 14.96 கோடி பழங்குடியின பணியாளர் ஊதியத்திற்கும், 269.15 கோடி தலித் பணியாளர் ஊதியத்திற்கும் போயிருக்க வேண்டும். மொத்தத்தில் 284.10 கோடி ரூபாய் தலித்துகளுக்கு ஊதியமாகப் போயிருக்க வேண்டும்.
ஆனால் 134.58 கோடி ரூபாய் மட்டுமே தலித் பணியாளர்களின் ஊதியமாகச் சென்றடைந்துள்ளது. பழங்குடியினருக்கு ஒரு பைசா கூட ஊதியமாகப் போய்ச்சேரவில்லை. மொத்தத்தில் 149.53 கோடி ரூபாய் தலித் மக்களுக்கு ஊதியமாகப் போய்ச் சேரவில்லை. அவ்வாறெனில், இத்தொகையை இக்கல்லூரி நிர்வாகங்கள் அரசியல் சாசனத்திற்கு எதிராக, சாதிய மனநிலையோடு, திருட்டுத்தனமாக தலித் அல்லாதவருக்கு வழங்கியுள்ளன. இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாததற்கான இன்னொரு காரணம் நமக்கு இப்போது புரிகிறது.
தலித்துகளைப் பொருளாதார ரீதியாக முன்னேற்ற விடாமலும், உயர் கல்வி நிறுவனங்களில் சமூக மாற்றத்திற்கான கல்வித்திட்டத்தில் தலித்துகளுக்கு எந்தப் பங்கும் இருக்கக்கூடாது என்ற திட்டமிட்ட சதியே இந்நிலைக்குக் காரணம்.
தலித் என்பதாலேயே சாதி இந்து ஆண்களால் வன்புணர்ச்சிக்கு ஆளாகின்ற பெண்கள் இந்தியாவெங்கும் இருக்கிறார்கள். பெண் என்பதால் அவர்கள் சொந்த சாதி ஆண்களாலும் ஒடுக்கப்படுகிறார்கள். எனவே, ஒரு தலித் பெண் இரண்டு முனைகளிலிருந்தும் கொடுமைகளை சந்திக்கிறார். தலித் பெண்களின் சிக்கல்கள் பிற பெண்களின் சிக்கல்களைக் காட்டிலும் வேறுபட்டவை என்று நீண்ட காலமாக தலித் மக்களுக்கான மனித உரிமைப் போராளிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்து பொதுப்புத்தியால் பீடிக்கப்பட்டிருக்கும் நமது சமூகம், இந்த உண்மையை உள்வாங்காமல் இருக்கிறது. அதில் வியப்பொன்றுமில்லை. ஆனால் தலித் மக்களின் மேம்பாட்டுக்காக தொடங்கப்பட்ட, தலித் கிறித்துவர்களால் நிர்வகிக்கப்படுகிற ஒரு கல்லூரியிலேயே இவ்வுண்மையை உள்வாங்கவில்லை என்பதுதான் வெட்கக்கேடானது.
நியாயம் கேட்கும் மாணவிகளை விரட்டியடிக்கும் மணிவண்ண பாண்டியன், சவுந்தரராஜன் மற்றும் ரஸல்
வேலூர் ஊரீஸ் கல்லூரிதான் அது. பாரம்பரியம் மிக்கதும், நூற்றாண்டைக் கடந்ததுமான அக்கல்லூரியில்தான் – ஒரு தலித் மாணவி வன்கொடுமைக்கும், பாலியல் கொடுமைக்கும் அண்மையில் உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இந்தக் கொடுமை நடந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் பொதுமக்கள் மத்தியிலும், மதப்பீடங்களின் மத்தியிலும் சலனமே இல்லை என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஆகஸ்ட் 28 அன்று இரவு ஏழரை மணியளவில், ஊரிஸ் கல்லூரியின் தமிழ்த்துறை விரிவுரையாளர் மணிவண்ண பாண்டியன் மாணவியர் விடுதிக்குச் சென்றார். கல்லூரி விடுதி இருக்கும் ‘டிபோர்' வளாகத்திலேயே விடுதி காப்பாளர் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோரின் வீடுகள் இருக்கின்றன. மணிவண்ண பாண்டியன் அக்கல்லூரியின் என்.சி.சி. அலுவலராகவும் இருப்பவர். வேறு எந்தக் கல்லூரியிலும் நடக்காத ஒரு விதிமீறல் ஊரிஸ் கல்லூரியில் நடைமுறையில் இருந்துள்ளது. அது, இக்கொடுமை வெளிச்சத்துக்கு வந்த பிறகுதான் தெரியவந்தது. மணிவண்ண பாண்டியனே மாணவியர் விடுதிக்கும் காப்பாளராக செயல்பட்டு வந்திருக்கிறார். மாணவியர் விடுதியில் தனியாக இருந்த ஒரு தலித் மாணவியின் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்ட மணிவண்ண பாண்டியன் அம்மாணவியின் உடையை கிழித்து, வன்புணர்ச்சிக்கு முயன்றார். அம்மாணவி அலறி சத்தம் போட்ட வுடன் அவர் விடுதியிலிருந்து ஓடிவிட்டார்.
பயத்தாலும் அவமானத்தாலும் ஒடுங்கிப் போயிருந்த மாணவி, விடுதி வளாகத்திலேயே இருந்த கல்லூரி முதல்வரின் வீட்டுக்குச் சென்று புகார் செய்தார். முதல்வர் டேனியல் எழிலரசு மறுநாள் விடுதிக்கு வந்து விசாரிப்பதாகச் சொல்லி மாணவியை அனுப்பிவிட்டார். ஆனால் அவர் மறுநாள் காலை சொன்னபடி விடுதிக்கு வரவில்லை. அன்று மாலை வந்து மாணவிகளை சந்தித்த கல்லூரி முதல்வர், ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆலயத்துக்குப் போய்விட்டதாகவும், மாணவியர் ஒழுக்கத்துடனும், போராடாமலும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு ஜெபம் செய்து விட்டுப் போய்விட்டார்.
மாணவிகளுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி பெற வேண்டி சக மாணவர்களின் உதவியை அவர்கள் நாடினர். அதே கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் அய். இளங்கோவன் அவர்களை சந்தித்தும் உதவி கோரினர். பாதிக்கப்பட்ட மாணவியை, இளங்கோவன் திங்கட்கிழமை (31.8.2009) அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திரனிடம் அழைத்துச் சென்றார். மாவட்ட ஆட்சித் தலைவர் மிகுந்த அக்கறையுடன் அம்மாணவியிடம் விசாரித்து, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சரோஜா திருவேங்கடத்திடம் மாணவியை அனுப்பி வைத்தார். சமூக நலத்துறை அலுவலர் சுமார் 3 மணி நேரம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்று, அதை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பினார். வாக்குமூல அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர், மாணவியிடம் வன்கொடுமை புரிந்த மணிவண்ண
பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கும்படி, காவல் துறை கண்காணிப்பாளருக்கு நேர்முகக் கடிதம் (D.O.) ஒன்றை எழுதினார்.
அடுத்த நாள் (1.9.09) குற்றமிழைத்த விரிவுரையாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத கல்லூரி முதல்வர், துணை முதல்வர், காசாளர் ஆகியோரைப் பதவி நீக்கம் செய்யக் கோரியும், மாணவிக்கு நீதி வழங்கக் கோரியும் மாணவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கல்லூரியின் வாயில்களைப் பூட்டிய மாணவர்கள், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் கல்லூரிக்குள்ளாகவே, தன்னெழுச்சியுடன் இவ்வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பட்டாபி தலைமையில் காவலர்கள் அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
போராடும் மாணவர்களை, வெளியிலிருந்து வந்த மணிவண்ணபாண்டியனின் ஆட்களும், அவருக்கு ஆதரவு தரும் வழக்குரைஞர் சவுந்தரராஜனும் மிரட்டியதோடு, வெளியாட்களும், ஆசிரியர்கள் இருவரும் தாக்கினர். கல்லூரியில், வேதியியல் துறைக்கு எதிரில், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முன்பாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த மாணவர்கள் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். மணிவண்ண பாண்டியனை கைது செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்கக் கோரியும் மாணவர்கள் விடுத்த கோரிக்கை கல்லூரிக்குள்ளிருந்த யாராலும் செவிமடுக்கப்படவில்லை. போராட்டம் வலுக்க, கோட்டாட்சியரும், மாவட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளரும் மருத்துவ விடுப்பில் இருந்த பேராசிரியர் அய். இளங்கோவனை அழைத்து, மாணவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். பாதிக்கப்பட்ட மாணவியிடம் இருந்து புகார் பெறப்பட்டு, மணிவண்ணபாண்டியன் கைது செய்யப்பட்டார்.
மணிவண்ணனை கல்லூரி நிர்வாகம் பிணையில் எடுத்ததுடன், அவருக்கு வேண்டிய அத்தனை உதவிகளையும் செய்து வருகிறது. ‘வன்கொடுமைக்கு ஆளான மாணவி ஒழுக்கங் கெட்டவர். அவர் ஒரு பாலியல் தொழிலாளி. அவரைக் கண்டிப்பதற்கே மணிவண்ணபாண்டியன் விடுதிக்கு சென்றார். அம்மாணவி அதைத் திசைதிருப்பி, ஆசிரியரைக் குற்றவாளியாக்கி விட்டார்' என்று கல்லூரி நிர்வாகம் கூறுகிறது. அக்கல்லூரியின் தலைவரும், பேராயருமான ஒய். வில்லியம் அவர்களேகூட மாணவிக்காகப் பரிந்து நிற்காமல், அம்மாணவியை ‘ஒழுக்கங்கெட்டவர்' என சொல்லியிருக்கிறார்.
இச்சிக்கல் தொடர்பாக செப்டம்பர் 2 முதல் 14 ஆம் தேதிவரை மூடப்பட்டிருந்த கல்லூரி, எந்த சங்கடமும் இன்றி மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. மாணவர் போராட்டம் உள்ளிட்ட நெருக்கடிகளைத் தொடர்ந்து கூடிய நிர்வாகக் குழு, மணிவண்ணபாண்டியனைத் தற்காலிக பணி நீக்கம் செய்ததுடன் உண்மை அறியும் குழு ஒன்றையும், சமாதானக் குழு ஒன்றையும் அமைத்தது. இக்குழுக்கள் வெறும் கண் துடைப்புக்குத்தான். அவை எந்தப் பணியையும் மேற்கொள்ளவில்லை.
கடந்த 14 அன்று நடைபெற்ற ஆசிரியர் பொதுப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற பேராசிரியர் இளங்கோவன், குற்றமிழைத்த ஆசிரியர் மீது நிர்வாகம் உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றார். அக்கூட்டத்தில் இச்சிக்கலைத் தொடர்ந்து தமது பதவியைத் துறப்பதாக கல்லூரியின் துணை முதல்வர் மனோஜ் செல்லதுரை அறிவித்தார்.
இக்கொடுமையைக் கண்டித்து மாணவர்களும், ஒரு சில பேராசிரியர்களும் மட்டுமே போராட முன்வந்திருக்கிறார்களே தவிர, அக்கல்லூரியின் நிர்வாகமும், பெரும்பாலான ஆசிரியர்களும், சி.எஸ்.அய். வேலூர் மண்டலப் பேராயமும் எதையுமே செய்ய முன்வரவில்லை. ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான் என்று பேசியும் பிரசங்கித்தும் வருகின்ற அவர்கள், பாதிக்கப்பட்ட ஏழை தலித் பெண்ணுக்காகப் பேச முன்வரவில்லை. வன்கொடுமைக்கு ஆளான பெண், பெற்றோரை இழந்தவராவார். அவர் தனது அத்தையின் அடைக்கலத்தில் இருந்து வருகிறார். பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பெண்ணைக் கல்லால் அடிக்க வந்தவர்களை நோக்கி, “உங்களில் குற்றம் செய்யாதவர் முதலில் இப்பெண் மீது கல் எறியட்டும்” என்றார் ஏசு. ஆனால் காமவெறிபிடித்த ஓர் ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவியை ‘விபச்சாரி' என்று எதிர்ப் பிரச்சாரம் செய்யத் தொடங்கி யுள்ளது கிறித்துவக் கல்லூரி நிர்வாகம்.
நியாயம் கேட்கும் மாணவர்களிடையே உரையாற்றும் அய்.இளங்கோவன்
மணிவண்ணபாண்டியன் தனது வழக்குரைஞரான சவுந்தரராஜனுடன் இணைந்து முழு நேரமாக இந்த எதிர்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மணிவண்ணபாண்டியனின் மனைவி ஜாஸ்மின், தங்களின் வீட்டில் நுழைந்து மாணவர்கள் சேதப்படுத்தியதாக ஒரு பொய்ப்புகாரை, பாகாயம் காவல் நிலையத்தில் அளித்திருக்கிறார். அப்புகாரில் மணிவண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட மாணவர்கள் சதீஷ் மற்றும் சந்தோஷையே முதல் குற்யறவாளிகளாக சேர்த்திருக்கிறார். வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு ஆதரவாக, குற்றவாளி மீது உடனடி நடவடிக்கை எடுக்கச் செய்திருக்கிறார், மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திரன். மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சரோஜா திருவேங்கடமும் இதில் உதவியிருக்கிறார்.
15.9.2009 அன்று கல்லூரி முதல்வர், கல்லூரி செயல்படும் என்று தன்னிச்சையாக அறிவித்தார். இதைக்கண்டு வெகுண்டெழுந்த மாணவர்கள் அன்று வேலை நிறுத்தம் செய்தனர். அன்று கல்லூரி ‘காபு' அரங்கத்தில் நடைபெற்ற மாணவர்களின்பொதுப் பேரவைக் கூட்டத்தில் விடுதி மாணவி நிஷா, கல்லூரி முதல்வரிடம் “உங்கள் மகளுக்கோ, சகோதரிக்கோ, மனைவிக்கோ இது போன்றதொரு வன்கொடுமை நடந்திருந்தால் நீங்கள் ஜெபம் மட்டும்தான் செய்வீர்களா? சொல்லுங்க சார்?” என்று கேட்ட கேள்விக்கு முதல்வரிடமிருந்து பதில் ஏதுமில்லை. அரங்கம் நிசப்தமானது.
16.9.2009 அன்று வேலூர் மாவட்ட ‘ஜேக்டோ' அமைப்பினர் மணிவண்ணபாண்டியனை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ராணிப்பேட்டை ‘பெல்' நிறுவனத்தின் தலித் மற்றும் பழங்குடியின ஊழியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தைச் சேர்ந்த லோகநாதன், சந்திரசேகர், ரவி ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கியுள்ளனர்.
இச்சிக்கலில் தொடக்கம் முதலே பேராசிரியர் இளங்கோவன் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இந்த ஆதரவு செயல்பாடுகளோடு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ‘ஆசிரியர் அரசு ஊழியர் அய்க்கியப் பேரவை'யும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. அக்குழு பேராயர் ஒய். வில்லியம் அவர்களை சந்தித்து, மணிவண்ண பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பாதுகாப்பு தரவும் வலியுறுத்தியுள்ளது. ஜனநாயக மாதர் சங்கமும், குடியேற்றம் சட்டமன்ற உறுப்பினர் தோழர் லதாவும் மாணவிக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், இச்சிக்கலில் மணிவண்ணபாண்டியனின் ஆதரவு வழக்குரைஞரான சவுந்தரராஜன், அவர் சார்ந்திருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். மணிவண்ணபாண்டியனுக்கு ஆதரவாக பாதிக்கப்பட்ட பெண்ணைக் குறித்தும், அப்பெண்ணுக்கு ஆதரவாக நிற்கும் பேராசிரியர் இளங்கோவனைக் குறித்தும் கீழ்த்தரமான அவதூறுகளைப் பரப்பி வருவதுடன், பொய்ப்பிரச்சாரத்தையும் செய்து வருகிறார்.
கடந்த வாரம் ஆரணியில் நடைபெற்ற அரசு ஊழியர், ஆசிரியர் அய்க்கியப் பேரவையில் வழக்குரைஞர் சவுந்தரராஜன் கலந்து கொண்டு செய்த பொய்ப்பிரச்சாரம் எடுபடவில்லை. கட்சியின் பெயரைக் கெடுக்க வேண்டாம். பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கமே நாம் நிற்க வேண்டும் என்று மாவட்டக் குழு சொன்னதை அவர் ஏற்கவில்லை. அவர் தன்னிச்சையாக ஏற்படுத்திக் கொண்ட ‘டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வழக்குரைஞர்கள் சங்கம்' என்ற அமைப்பின் மூலம் அய். இளங்கோவனையும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவானவர்களையும் தாக்கி அறிக்கை விட்டிருக்கிறார்.
அந்த வழக்குரைஞரின் பொய்ப் பிரச்சாரமும், அவதூறும் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரின் கவனத்துக்கு இச்சிக்கலின் விவரம் கொண்டு செல்லப்பட்டது. பேராசிரியர் அய். இளங்கோவனும், ‘ஜேக்டோ' செய்தித் தொடர்பாளர் ராமமூர்த்தியும் 23 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை சந்தித்தனர். அனைத்தையும் கேட்டறிந்த திருமாவளவன், கட்சி நிர்வாகிகள் வழியே வழக்குரைஞர் சவுந்தரரõஜனை கண்டித்ததுடன், பாதிக்கப்பட்ட தலித் மாணவிக்கு தமது அமைப்பு துணை நிற்கும் என்று உறுதியளித்திருக்கிறார்.
இந்நிலையில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம்', ‘வழக்குரைஞர் அணி' மற்றும் ‘இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை' – வேலூர் மாவட்டம்” என்ற பெயரில் பேராசிரியர் இளங்கோவனுக்கு எதிராகவும், அவதூறாகவும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு எதிராகவும், மணிவண்ண பாண்டியனுக்கு ஆதரவாகவும், துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டு ஊரிஸ் கல்லூரி மற்றும் சி.எஸ்.அய். தேவாலயங்களில் விநியோகிக்கப்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.
ஆதரவற்ற ஏழை தலித் மாணவிக்கு எதிராக ஆணாதிக்கமும், மத நிறுவனத்தின் சுயநலமும், கல்லூரி நிர்வாகத்தின் தடித்தனமும், சுரணையற்ற மக்களின் அலட்சியமும் நிற்கிறது. ஆயினும் ஆதரவு சக்திகளின் துணையோடு போராட்டம் தொடர்கிறது. போராட்டக்காரர்கள் கோருவது இதைத்தான் : மணிவண்ணபாண்டியன் எனும் காமுகன் தண்டிக்கப்பட வேண்டும். காமுகனுக்குத் துணைபோகும் கல்லூரி முதல்வர், காசாளர் மீது கல்லூரி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தலித் மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும். சுரணையற்ற சுயநலக் கல்லூரி நிர்வாகம் சீரமைக்கப்பட வேண்டும்.
தலித்துகள் அடர்த்தியாக வாழும் வேலூர் மாவட்டத்தில் அதிலும் குறிப்பாக அம்மாவட்டத்தின் தலைநகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் படிக்கும் ஒரு தலித் மாணவியை, அக்கல்லூரி நிர்வாகமே ‘விபச்சாரி' என்று பட்டம் சூட்டுகிறது; அதைக் கண்டு கொதித்தெழுந்த மாணவர்கள் மீதும், 35 ஆண்டுகாலம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமூக மாற்றத்திற்காகத் தன்னலமற்றுப் போராடி வரும் பேராசிரியர் அய். இளங்கோவனுக்கு எதிராகவும் அவதூறுகளைக் கிளப்பி, பாதிக்கப்பட்ட மாணவியின் பிரச்சினையை திசைதிருப்புகிறது. இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்காமல் இம்மாவட்ட சமூக இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் வெகுண்டெழுந்து, அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை இப்போராட்டம் ஓயாது என்பது மட்டும் உறுதி.
சிறுபான்மையினர் நடத்துகின்ற கல்வி நிறுவனங்களில் தலித் மக்களுக்கு இடஒதுக்கீடு கேட்பது, இங்கே கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. சிறுபான்மையினரின் உரிமைகளை எவ்வகையிலும் பறிக்கலாகாது என்றும், அவர்தம் நிர்வாகங்களில் தலையிடுவது அரசமைப்புச் சட்டப்படி தவறு என்றும், வெள்ளம் வருவதற்கு முன்பே அணை போடுவது போல - விவாதம் தொடங்குவதற்கு முன்பே சொல்லைப் பிடுங்கும் வேலை நடைபெறுகிறது.
தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கும் காலம் இது. அந்த கோரிக்கைக்கான அத்தனை நியாயங்களும் இங்கே இருக்கின்றன. இந்து சாதிய சமூகத்தில் நிலம், தொழில்கள், பதவி, அதிகாரம் அனைத்துமே கடந்த பலநூறு ஆண்டுகளாக ஆதிக்க சாதியினரிடம் தான் இருந்தன. இன்றளவும் நிலைமை மாறிவிடவில்லை. பொருளாதாரத்தையும், நிலங்களையும், அதிகாரங்களையும் ஆதிக்க சாதியினரே வைத்துக் கொண்டு, அதிகாரம் அற்ற அரசிடம் போய் கேள் என்றால் சரியா என்று கேட்கிறார்கள் தலித் மக்கள்.
வேறு வகையில் சொல்வதென்றால், 90 சதவிகித பணியிடங்களை தனியார்கள் வைத்துக் கொண்டு, 10 சதவிகித வேலை வாய்ப்புகளை மட்டுமே வைத்திருக்கும் அரசிடம் போய் கேள் என்றால், தலித்துகள் என்ன வெறும் நாக்கையா வழித்துக் கொண்டிருப்பது? சரி அப்படியும் கூட நீயே யாரையும் எதிர்பார்க்காமல் நிலம், பணம், கட்டுமானம் என்று பார்த்துக் கொண்டாலும் தாழ்வில்லை. நிலத்தை அரசு தருகிறது; நிதியையும் அதுவே தருகிறது; மின்சாரம், தண்ணீர் என்று அனைத்து அடிப்படைகளையும் அரசே தருகிறது என்றால், எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு எங்களிடம் வராதே என்று தலித்தைப் பார்த்து சொல்வது என்ன நியாயம் என்பதே தலித்துகளின் கேள்வி.
இதே வாதத்தினை நாம் சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருத்தலாம். குருதிப் பிரிவு வேறு, தசையின் தன்மை வேறு என்றெல்லாம் அடம்பிடிக்காமல் - இக்கருத்து அவர்களுக்கும் 100 சதவிகிதம் பொருந்தும் என்பதே உண்மையிலும் உண்மை. நாடு விடுதலை பெறுவதற்கு முன்பிருந்தே சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகள் அரசு மானியங்களைப் பல வகைகளில் பெற்று வந்திருக்கின்றன. அன்றைக்கு இருந்த எல்லா சிறுபான்மையினர் கல்லூரிகளுக்கும் அரசு பாதி விலையில் நிலம் கொடுத்தது. இதற்காக 1894 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்படி, பொது நன்மை என காரணம் காட்டி வெள்ளை அரசால் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. பின்னர் அந்நிலங்கள் சிறுபான்மையினர் நிர்வாகத்தின் கோரிக்கையின் பேரில் பாதி விலைக்குத் தரப்பட்டன. இதனோடு அரசு அக்கல்லூரிகளையும், கல்வி நிறுவனங்களையும் நடத்த நிதிக் கொடையையும் (Grant) அளித்தது.
அரசு இதோடு நின்றுவிடவில்லை. கட்டடம் கட்டவும் மானியம் அளித்தது. எடுத்துக்காட்டாக, வேலூரில் இயங்கும் ஊரிஸ் கல்லூரிகூட அப்படி கட்டப்பட்டதுதான்! அன்று சென்னை ராஜதானிக்கென ‘சென்னை கல்வி விதி' (Madras Educational Code) என்று இருந்தது. அதன் அடிப்படையில் ஆய்வுக்கூடங்கள், நூலகம் ஆகியவற்றைக் கட்டவும், தளவாடப் பொருட்கள் வாங்கவும் அரசு மானியம் அளித்தது. இந்த நிலை இன்றும் தொடர்கிறது. மக்களின் வரிப்பணத்திலிருந்து தான் அரசு இத்தகைய மானியங்களை சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அல்லாத கல்வி நிறுவனங்களுக்குத் தருகிறது. எனவே தலித் மக்கள் அதில் தங்களுக்கு உரியபங்கை கேட்பது, தார்மீக அடிப்படையில் நியாயமானதாகிறது.
இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 30(1)இன் கீழ் சிறுபான்மையினரின் உரிமைகளும், கல்வி நலன்களும் பாதுகாக்கப்படுகின்றன. அப்பிரிவு சில அடிப்படை உரிமைகளை அவர்களுக்கு வழங்குகிறது. அதே அரசமைப்புச்சட்டம் பிரிவு 16(4)இன்படி சமூக அளவிலும், கல்வியிலும் பின்தங்கியவர்களான தலித் மக்களுக்கு பணி நியமனம் பெறுவதை அடிப்படை உரிமையாக்குகிறது. அப்படி என்றால், சிறுபான்மையினரின் உரிமைகள் தலித் மக்களின் உரிமைகளை எந்த வகையில் இல்லாததாக்கும் அல்லது மறுக்கும்? ஒருவருடைய அடிப்படை உரிமையை காரணம் காட்டி பிறிதொருவரின் அடிப்படை உரிமையை மறுப்பதும், இல்லாததாக்குவதும் ஜனநாயக விரோதமானதாகும்; அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும்.
இந்தியா முழுவதிலும் இருக்கும் இந்து மதக் கோவில்களின் கர்ப்பக் கிரகங்களில், தாங்கள் தான் நுழையவும் பூசை செய்யவும் முடியும் என்று பார்ப்பனர்கள் - தமது பாரம்பரிய உரிமையை காரணம் காட்டுகிறார்கள். இது தொடர்பான வழக்குகளில் நீதிமன்றத்தில் பார்ப்பனர்களால் ‘பாரம்பரிய உரிமை' என்ற வாதமே வைக்கப்பட்டது; இன்றும் வைக்கப்படுகிறது. சிறுபான்மையினரும் அவ்வாறான அடிப்படை ‘உரிமை' என்ற நிலையை முன்னிறுத்தி, தலித் மக்களுக்கான பணி நியமன உரிமையை மறுத்து வருகின்றனர். இது தலித்துகளுக்கு எதிரான தந்திரமேயன்றி வேறென்ன?
தலித் மக்கள் இடையிலே தான் பெரும்பாலான சிறுபான்மையினரின் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அம்மக்களுக்கு தொண்டு செய்கிறோம் என்றும் அவை சொல்லிக்கொள்கின்றன.
ஆனால் அந்தத் தொண்டு என்பது கீழ்நிலையிலேயே நின்றுபோய் விடுகிறது. என்றைக்குமே பிறரை எதிர்நோக்கி இருக்கும் (Perpetual Dependence) நிலை அது. ஆண்டான் அடிமை நிலையும் கூட. அவர்களின் நிர்வாகங்களில் இருக்கும் உயர் பதவிகளுக்கு தலித்துகளை சிறுபான்மையினர் அனுமதிப்பதில்லை. கல்லூரிகளின், கல்வி நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் இருக்கிறவர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் இது விளங்கும். கூட்டம் சேர்க்கவும், தம்முடைய பலத்தையும் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்திக்கொள்ளவும் தலித் மக்களையே நம்பியிருக்கும் சிறுபான்மையினரின் நிறுவனங்கள், அம்மக்களுக்குப் பதவிகளோ, பணிகளோ அளிக்காமல் கைவிட்டுவிடுகின்றன. ‘ஆன்மீக விடுதலை பெறுங்கள்; உங்களுக்கு மோட்சத்தின் கதவுகள் திறந்திருக்கின்றன' என்று தலித் மக்களிடம் கூறிவிட்டு, நிர்வாகத்தின் கதவுகளை மூடிக்கொள்கின்றனர். பரலோகத்திற்கு வழிகாட்டுபவர்கள் பணி நியமனத்தில் வழிகாட்டுவதில்லை; வழிவிடுவதுமில்லை. ‘ஆன்மீக அரவணைப்பு' என்று சொல்லி, அன்றாட வாழ்வில் கைவிரிப்பது அநியாயமில்லையா?
இந்தியா முழுமைக்கும் மதிப்பிட்டால் முஸ்லிம்களிலும், கிறித்துவர்களிலும் மதம் மாறிய தலித் மக்களே பெரும்பான்மையாக இருக்கின்றனர். ஆனால் இம்மத சிறுபான்மையினரால் நடத்தப்பட்டுவரும் கல்லூரிகளின் பெரும் பொறுப்புகளான முதல்வர், துணை முதல்வர், துறைத் தலைவர் போன்ற பதவிகளில் இம்மதங்களில் இருக்கும் பெரும்பான்மை மக்களே இல்லை! (எ.கா. சென்னை கிறித்துவக் கல்லூரியில் நீண்டகாலம் பணிபுரிந்து வந்த உலகம் போற்றும் தாவரவியல் பேராசிரியர் தயானந்தன் அவர்களுக்கு, இறுதிவரை அக்கல்லூரி முதல்வர் பதவி வழங்கப்படவே இல்லை).
பார்ப்பனர்களையும், இடை சாதி இந்துக்களையும் இப்பொறுப்புகளில் அமர வைக்கும் சிறுபான்மையினர் நிர்வாகம், ஒரு தகுதி வாய்ந்த தலித்தை அங்கே வைப்பதில்லை. நாடு விடுதலை பெற்று அறுபது ஆண்டுகளாகத் தொடர்ந்து இத்தகைய தலித் விரோத போக்கைதான் கடைப்பிடித்து வருகின்றன, சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள். இது, சாதியம் அன்றி வேறென்ன? இக்கல்வி நிறுவனங்களில் இருக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு 100 சதவிகித ஊதிய மானியத்தை அரசிடம் இருந்து இந்நிர்வாகங்கள் பெற்றுக் கொள்கின்றன. மக்களின் வரிப்பணத்திலிருந்து இப்படி கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு, தலித்துகளுக்கு பதவி வழங்க மறுப்பது - இந்து சாதியத்தைக் காட்டிலும் படுமோசமானது அல்லவா?
‘அரசிடம் இருந்து உதவி பெறும் தனியார் கல்லூரிகளான 160 கல்லூரிகளில், 60 கல்லூரிகள் சிறுபான்மையினரால் நடத்தப்படுபவை. இது முன்னமே நமக்குத் தெரிந்ததே. 160 கல்லூரிகளில் 9,866 விரிவுரையாளர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களிலே சிறுபான்மையினரின் கல்லூரிகளில் பணிபுரிகிற விரிவுரையாளர்களை மட்டும் நாம் தனியே கணக்கிட்டால் 3,992 பணியிடங்கள் வரும். இது, மொத்தத்தில் 40.5 சதவிகிதமாகும். அப்படியானால் அரசு, தனியார் கல்லூரிகளுக்கு அளித்துவரும் ஊதிய மானியத்தில் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் 40.5 சதவிகித பணத்தைப் பெற்று வருகின்றன. இவ்வாறு அரசிடம் இருந்து கோடிக்கணக்கில் நிதியினைப் பெறுகின்ற சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள், அதே அரசின் சட்டம் உறுதிப்படுத்தும் தலித் மற்றும் பழங்குடியினருக்கான 18+1 சதவிகிதப் பணியிடங்களை வழங்க மறுப்பது ஏன்? (பார்க்க அட்டவணை ).
சிறுபான்மையினரின் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டின் படி 751 தலித் விரிவுரையாளர்களும், 49 பழங்குடியின விரிவுரையாளர்களும் பணிபுரிய வேண்டும். ஆனால் ஒரு கல்லூரிக்கு ஒருவர் என்ற விகிதத்தில் 61 தலித் விரிவுரையாளர்களே பணியில் இருக்கின்றனர். இந்த 61 விரிவுரையாளர்களும்கூட, 15 கல்லூரிகளிலேதான் இருக்கின்றனர். 45 சிறுபான்மையினர் கல்லூரிகளிலே ஒரு தலித்தும் விரிவுரையாளர் பணியிடத்தில் இல்லை. எந்த ஒரு கல்லூரியிலும் பழங்குடியின விரிவுரையாளர் இல்லை.
சிறுபான்மையினரின் கல்வி நிலையங்களில் மட்டும் தான் இந்த நிலை நீடிக்கிறதா? அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் அல்லாத தனியார் கல்வி நிறுவனங்களின் நிலை என்ன? இதைப் போன்ற கேள்விகள் இங்கே எழுவது இயல்பானதே. இக்கல்லூரிகளிலும் நிலைமைகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. இவ்வகை கல்லூரிகளின் எண்ணிக்கை 100. இக்கல்லூரிகள் எவை எவை என்பதற்கு சான்றாக சில பெயர்களை மட்டும் பார்ப்போம். பெயர் சொன்னால் போதும், தரம் எளிதில் விளங்கிவிடும்!
கல்வி வள்ளல் பச்சையப்பன் கல்லூரி, திருப்பனந்தாழ் ஆதீனம் கல்லூரி, இந்து சமய அறநிலைத் துறை நடத்தும் பூம்புகார் பேரவைக் கல்லூரி, அருள்மிகு பழநியாண்டவர் மகளிர் மற்றும் ஆடவர் கல்லூரி, நல்லமுத்து கவுண்டர் பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரி, ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி (தந்தை பெரியாரால் நிறுவப்பட்டது), மேல நீதி தநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கம் கல்லூரி, ஆதித்தனார் கல்லூரி, தூத்துக்குடி காமராசர் கல்லூரி, சேலம் சாரதா கல்லூரி, மயிலம் சிறீமத் சிவஞான பாலசுவாமிகள் கல்லூரி, கோவை தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்லூரி, கரந்தை தமிழவேள் உமா மகேசுவரர் கல்லூரி, தருமபுரம் ஆதீனம் கல்லூரி, வேலூர் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் கல்லூரி என்று இக்கல்லூரிகளின் பட்டியல் நீள்கிறது. இக்கல்லூரிகளுக்கும் இடஒதுக்கீட்டு சட்டம் பொருந்தும்.
இந்த 100 கல்லூரிகளில் இடஒதுக்கீட்டின்படி தலித் விரிவுரையாளர்கள் 1124 பேரும், பழங்குடியின விரிவுரையாளர்கள் 62 பேரும் இருக்க வேண்டும். பழங்குடியினர் யாரும் விரிவுரையாளர்களாக இக்கல்லூரிகளில் இல்லை. தலித் விரிவுரையாளர்களாக 557 பேர்களே இருக்கின்றனர். அதாவது 49.5 சதவிகிதம், எஞ்சிய 50.5 சதவிகித தலித் பணியிடங்கள் - தலித் அல்லாதவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளன. திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரியிலும், பரமத்தி வேலூர் கந்தசாமி கவுண்டர் கல்லூரியிலும், சென்னை எஸ்.அய்.வி.இ.டி. கல்லூரியிலும் மட்டும் இடஒதுக்கீடு முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இவை மூன்றும் பாராட்டத்தகுந்த கல்லூரிகள் எனலாம். சமூக நீதி காத்த மாவீரர்களும், வீராங்கனைகளும் தி.மு.க. விலும் அ.தி.மு.க.விலும் இருக்கின்றனர். ஆனால் இதைப் பற்றி யாரும் கவலைப் படவில்லை. தலித் மக்களின் பாதுகாவலர்கள் வாய் திறக்காமல் உள்ளனர்.
மேற்சொன்ன 160 கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 5,326. இதில் சிறுபான்மையினர் கல்லூரிகளின் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 2,064. இடஒதுக்கீட்டின் படி இப்பணியிடங்களில் சிறுபான்மைக் கல்லூரிகள் - 187 தலித்துகளையும், 14 பழங்குடியினரையும் நிரப்பியிருக்க வேண்டும். சிறுபான்மையினர் அல்லாத கல்லூரிகளிலோ 236 தலித்துகளையும், 32 பழங்குடிகளையும் பணியமர்த்தி இருக்க வேண்டும். ஆனால் பிற சாதியினரைக் கொண்டே இவ்விடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் கல்லூரியில் மட்டும் ஒரேயொரு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரை நான்காம் தரப் பணியில் வைத்துள்ளனர். முருகன், வள்ளி என்கிற பழங்குடியினப் பெண்ணை கட்டிக்கொண்டான் என இவர்கள் கதை சொல்கிறார்களே, அந்தப் பற்றுக்காகத்தான் இதுவோ எனத் தெரியவில்லை.
எழுத்தர், மேலாளர், காசாளர் போன்ற நிர்வாகம் மற்றும் நிதி விஷயங்களை கையாளக்கூடிய ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் தலித்துகளையும், பழங்குடியினரையும் முற்றிலுமாகப் புறக்கணித்திருப்பது அப்பட்டமான சாதி வெறி என்று தெரிகிறது. இதை சுட்டிக்காட்டும்போது, ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் தலித்துகளையும் பழங்குடியினரையும் பணியமர்த்தி இருக்கிறோமே என்பார்கள் இவர்கள். பெருக்குகிறவர், துப்புரவுப் பணியாளர், அலுவலக உதவியாளர் போன்ற பணியிடங்களில் வர்ணாசிரம தர்மப்படி தலித் மற்றும் பழங்குடி மக்களை நிரப்பியிருப்பது பதிலாக சொல்லப்படும். சிறுபான்மையினரின் கல்லூரிகளில் சிறுபான்மையினருக்கு மட்டுமே வேலை என்ற நிலை - மதச்சார்பின்மைக்கும், அரசமைப்புச் சட்டத்துக்கும் சவாலினை ஏற்படுத்தக்கூடியதும் ஊறுவிளைவிக்கக்கூடியதும் ஆகும்.
அரசமைப்புச் சட்டம் எடுத்துள்ள மதச்சார்பின்மை மற்றும் சமத்துவநிலை என்கிற இரு கண்களைப் போன்ற ஜனநாயக நிலைப்பாட்டுக்கு எதிராக, சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் "சனாதனம்' எனும் பழமைவாதக் கருத்து நிலையை எடுக்கின்றன. அந்த நிலைப்பாட்டிலிருந்து விலகாமல் நீண்ட நெடுங்காலமாக நடந்தும் வருகின்றன. சாதிய பாகுபாட்டை அவமான உணர்வு ஏதும் இன்றி கடைப்பிடிக்கின்றன. இந்நிலையில் இவர்கள் தலித் மக்களுக்கும் பழங்குடியினருக்கும் ஆதரவாக இருக்கிறோம் என்று சொல்வதில் பொருள் எதுவும் இல்லை.
சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள் சிறுபான்மை மக்களின் நலன் களுக்காக ஏற்படுத்தப்பட்டவை. அந்த நோக்கமாவது நிறைவேற்றப்படுகிறதா என்றால், அதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மை சமூகத்து மாணவர்கள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாக இருக்கிறார்கள். இங்கு சிறுபான்மையல்லாத சாதி இந்து மாணவர்களே அதிகமாக உள்ளனர்.
அரசுக் கல்லூரிகளும், தனியார் கல்லூரிகளும் செய்கின்ற அதே வேலையை செய்வதற்கு - சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள் என்ற தனி அமைப்புகள் எதற்கு? பணம் சம்பாதிக்கவும், அதிகாரத்தில் அமர்ந்து கொண்டிருக்கவும் தானா? கேரளாவில் 1957ஆம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் முதல் இடதுசாரி அரசு பதவி ஏற்றுக் கொண்டது. அந்த அரசு அப்போது "கேரள கல்விச் சட்டம் 1957' என்ற பெயரில் ஒரு சட்ட முன்வரைவை கொண்டு வந்தது. கேரள சிறுபான்மை சமூக மக்கள் இதை எதிர்த்துப் போராட்டங்களை நடத்தினர். இதன் விளைவாக சட்டப்பேரவையில் நிறைவேறிய சட்டமுன்வரைவு, ஆளுநரின் ஒப்புதலின்றி குடியரசுத் தலைவரின் கருத்துக்கு அனுப்பப்பட்டது. குடியரசுத் தலைவரோ அந்த சட்ட முன்வரைவை உச்ச நீதிமன்றத்தின் ஆய்வுக்கு அனுப்பிவிட்டார்.
இச்சட்டம் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் தலித் மக்களுக்கு இட ஒதுக்கீட்டினை வழங்க வகை செய்திருந்தது. அந்த சட்ட முன்வரைவை கவனமாக ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், தன் கருத்தை 1958 லேயே தெரிவித்திருக்கிறது. கேரள சட்ட முன்வரைவின் பிரிவு 11(2)இல் குறிப்பிடப்பட்டிருக்கிற சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் - தலித் மக்களுக்கான இட ஒதுக்கீடு, சிறுபான்மையினரின் அடிப்படை உரிமையை எவ்வகையிலும் பறிக்காது. அவர்களின் உரிமைக்கு இது எதிரானது அல்ல - சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் தலித் மக்களுக்கான இடஒதுக்கீடு, இப்பிரிவின்படி செல்லத்தக்கதே என்றது உச்ச நீதிமன்றம்.
சிறுபான்மையினரின் கல்வி நிலையங்களில் தலித், பழங்குடி மக்களுக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணிகளை வழங்கலாம் என்று கருத்துரைத்த உச்ச நீதிமன்றத்தின் விருப்பத்தை - அதைத் தொடர்ந்த எந்த மாநில அரசுகளும், மய்ய அரசுகளும் காதில் போட்டுக் கொள்ளாமல் விட்டு விட்டன. மொத்தத்தில் சாதிமயமாக்கப்பட்டுவிட்ட சிறுபான்மையினரின் அடாவடித்தனமும், சமூக நீதிக் காவலர்களின் பொறுப்பின்மையும் அரசின் பாராமுகமும் தலித் மக்களை - சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் வாசலில் நிறுத்தி வைத்துள்ளன.
கிறித்துவர்களின் விவிலியத்திலே ஏசு சொல்லியிருக்கும் கதைதான் நினைவுக்கு வருகிறது. லாசர் என்கிற ஒரு ஏழை, பணக்காரனின் வீட்டு வாசலில் காத்திருந்து செத்துப் போகிறான். பணக்காரனும் சாகிறான். ஏழை சொர்க்கத்துக்கும், பணக்காரன் நரகத்துக்கும் போகிறான். சொர்க்கத்தில் இருக்கும் ஏழையிடம் உதவி கேட்டு கதறுகிறான் பணக்காரன். ஏழைகளும், வறியவர்களுமாக இருக்கும் தலித்துகளே! இந்த கதையின் படி, உலகத்தில் இருக்கும் வரை எங்களிடம் கெஞ்சிக் கொண்டே இருங்கள். எல்லாவற்றையும் மேலே போன பிறகு கணக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்று போதிக்கிறார்கள் சிறுபான்மையினர். அவர்களுக்குத் தெரியும், அந்தக் கதை வெறும் கதை தானென்று. தலித்துகளுக்கும், பழங்குடியினருக்கும் தான் இன்னும் அது புரியவில்லை.
அவர்கள் இறுதித் தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள். காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதை உலகம் அறியும். அவர்கள் சொல்லும் இறுதித் தீர்ப்பென்பதும் மறுக்கப்பட்ட நீதி தானே!
உலக சமுதாயங்கள் அனைத்தும் அன்றும் சரி, இன்றும் சரி, ஒருங்கிணைந்து இயங்குவதில்லை. பல்வேறு அடிப்படையில் அமைந்த சிறிய, பெரிய குழுக்களை உள்ளடக்கிய கூட்டுச் சமுதாயங்களாகவே இயங்குகின்றன. இக்குழுக்கள் தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையில் அமைந்து செயல்படுகின்றன. நவீனத்தின் தொடக்க காலங்களில் இம்மாதிரியான குழுக்கள் எல்லாம் மறைந்து, சமுதாயங்கள் ஒருங்கிணைந்து செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்விதமாக சமூகத்துக்குள்ளான குழுக்கள் மறைந்து விடவில்லை. மாறாக, நவீனமடைந்த சமுதாயங்களில் குழுக்களின் அடிப்படையில் மாறுதல் ஏற்பட்டது.
பண்டைய சமுதாயங்களில் பல, மொழி அடிப்படையிலோ, மதத்தின் அடிப்படையிலோ ஒருங்கிணைக்கப்பட்டிருந்த போதிலும் - அவற்றுக்குள் பிறப்பாலோ, சூழ்நிலைகளாலோ, வேற்று இனக் கலப்பினாலோ இணைக்கப்பட்ட சிறு குழுக்கள் தொடர்ந்து செயல்பட்டே வந்தன. இவ்வகையான பண்டைய குழுக்களின் அடிப்படை அம்சங்கள், விரைவில் மாறாதவையாகவும், தொடர்ந்து நீடிக்கும் தன்மையுடையதாகவும் இருந்தன. மேலும் இக்குழுக்களில் தனி
மனிதர்கள் பெரும்பாலும் தன்னிச்சையாகப் போய் சேர்வதில்லை. அவர்களது உறுப்பினர் நிலை பெரும்பாலும் வழிவழியாக வருவது; பிறப்பால் ஏற்படுவது. ஆனால் நவீனத்தில் இம்மாதிரியான மாறாத, மறையாத குழுக்களின் அடிப்படையில் மாறுதல் ஏற்படுவதில்லை.
பிறப்பாலோ அல்லது பிறப்பைச் சார்ந்த ஓர் அம்சத்தின் அடிப்படையில் ஏற்பட்ட குழுமங்கள் மறைந்தோ, மங்கியோ போகவும் தன்னியல்பாக விரைவில் தோன்றி அழியக்கூடிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டே குழுக்கள் தோன்றவும் செய்கின்றன. ஆனால் இம்மாறுதல் எங்கும் எக்காலமும் ஒரே சீராக ஏற்படுவதில்லை. ஏனெனில் நவீனம் என்பது, ஒரு கருத்து லட்சியமே அன்றி வரலாற்று விளக்கம் அல்ல. ஆகவே எல்லா சமுதாயங்களிலும் குழுமங்களின் அடிப்படைகள் கலந்தே நிற்கும். மிக நவீனம் அடைந்துள்ளதாகக் கருதப்படும் மேலைச் சமுதாயங்களிலும் பிறப்பு சார்ந்த குழுக்கள் இல்லாமல் இல்லை. ஆனால் இதில் வேறுபாடு என்னவென்றால், அத்தகைய குழுக்கள், சமூக அரசியல் மதிப்பீடுகளில் முன்பு போலல்லாமல் இன்று மங்கியும் மழுங்கியுமே செயல்படுகின்றன.
பிறப்பும் பிறப்பு சார்ந்த அம்சங்களும், மனிதனுக்கும் மனித சமுதாயங்களுக்கும் முக்கியம் அல்ல. அம்மாதிரியான அம்சங்களின் அடிப்படையில் மனிதனையோ குழுக்களையோ அல்லது முழு சமுதாயங்களையோ எடை போடுவது மனிதத்தன்மை ஆகாது என்ற கொள்கை, கருத்தளவிலாவது ஓங்கி நிற்பதே இதற்குக் காரணம். நவீனத்தில் சமூக மதிப்பீடுகளின் அடிப்படை பிறப்பு அல்ல; செயல்பாடே என்ற புதிய நம்பிக்கையே கருத்தளவிலிருந்து இயங்குகிறது.
பிறப்பின் அடிப்படையில் குழுக்கள் ஏற்படுவதும், இக்குழுக்கள் அதே பிறப்பின் அடிப்படையில் தன்னை உயர்த்திக் கொள்வதும், பண்டைய சமுதாயங்களில் விரவிக்கிடந்த உண்மை என்பதை வரலாற்றின் மூலம் அறியலாம். இன்று "பிறப்பின் அடிப்படையில் சமூக மதிப்பீடு' என்னும் கொள்கையிலிருந்து விலகி விட்டதாக அறியப்படும் மேலைச் சமுதாயங்கள் - நேற்றுவரை அம்மாதிரியான அடிப்படைகளிலேயே இயங்கி வந்தன.
சமூகங்கள் பொதுவாக ஓதுவோர், ஆள்வோர், உழைப்போர் என்று பெருங்குழுக்களாக செயல்பட்டு வந்தன. இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், வரலாற்றில் பல்வேறு மோதல்கள் மூலம் தொடங்கிய இப்பிரிவுகள், இனக்குழுக்களாக மாறி, தனிமனிதர்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவ முடியாதபடி பிறப்பினால் வரையறுக்கப்பட்ட அரண்களாக மாறிவிட்டிருந்தன. ஆனால் இந்தக் கட்டுமானம் முதலில் கருத்தளவில் உடைக்கப்பட்டு, சிறிது சிறிதாக செயலளவுக்கும் கொண்டு வரப்பட்டது. பிறப்பினால் மதிப்பீடு என்னும் கொள்கையிலிருந்து அதற்கு எதிரிடையான, செயல்பாடுகளினால் மதிப்பீடு என்னும் மாற்றுக் கொள்கையை நோக்கி எழும் ‘அசைவு' இடப்பெயர்ச்சி அல்லது நிலை மாற்றத்தையே நவீனத்தின் உட்கருவெனக் கொள்ள வேண்டும்.
ஒரு சமூகத்தில், தனிமனிதனுக்கும் குழுக்களுக்கும் அவற்றின் பிறப்பு சார்ந்த தன்மைகளால் கொடுக்கப்பட்டு வந்த மதிப்பீடுகள் உயர்வோ, தாழ்வோ - குறைந்து கொண்டே வருகிறதா என்பதையும், அச்சமூகத்தில் பிறப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டு வந்த அதிகாரப்பங்கீடு, மாறியும் மறைந்தும் வருகிறதா என்பதையும் பொருத்தே - அச்சமுதாயம், நவீன, நல்லதொரு இலக்கை நோக்கி இடம் பெயர்கிறதா, இல்லையா என்பதை கணிக்க முடியும். இம்மாதிரியானதொரு விமர்சன - மதிப்பீட்டுக் களத்தில் நின்றே இன்றைய சாதிய சமுதாயத்தைப் பகுத்தறிய முடியும், வேண்டும். விமர்சன - மதிப்பீட்டுக் களத்தைத் தவிர்த்த ஆய்வும் வர்ணனையும், விடுதலைக்கான சமூக அறிவியலுக்கு வழிகோலாது.
சாதியும், சாதியமும் இன்று மாபெரும் சொல்லாடலாக, பல வகைப்பட்ட கருத்துக்களின் பொருளை நிர்ணயிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட ஒன்றாக விரவி நிற்கிறது. இது, இன்றைய நவீன இந்தியாவின் கட்டாயம் என்பதைப் பின்பு விவரிப்போம். அதற்கு முன்பு ‘சாதி' என்ற சொல் எதைக் குறிக்கிறது என்று சிந்தித்தால், அது இரு சமூக உண்மைகளை உள்ளடக்கியது என்று உணரலாம். ஒன்று, சாதி என்பது, பிறப்பாலும், பாலுறவாலும் ஒருங்கிணைக்கப்பட்ட அல்லது ஒருங்கிணைக்கப்பட்டதாக நம்பப்படும் இனக்குழுக்களைச் சுட்டுகிறது. இத்தகைய குழு அல்லது குழுக்கள், பல்வேறு அடிப்படையில் அமைந்தவையாக இருக்கலாம். தொழில் அடிப்படையிலோ, குறிப்பிட்ட சூழலியல் அடிப்படையில் எழுந்ததாகவோ, அல்லது தெய்வத்தையோ, சமயத்தையோ சார்ந்த குழுவாகவோ குழுக்களிடையே ஏற்பட்ட போரினால் பிரிந்து சென்ற ஒரு குழுவாகவோ இருக்கலாம். எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் பிரிந்து சென்ற கூட்டத்தார், நாளடைவில் சாதியாக உருவெடுப்பது, இந்திய வரலாற்றில் நாம் காணும் உண்மை. இந்தப் பொருளில் சாதி என்பது சாதிசனங்களைக் குறிக்கும்.
இச்சாதிகளுக்கிடையேயான உறவுகள் எப்பொழுதும் அமைதியாகவும் ஒருமைப்பாட்டுடனும் இயங்கின என்றும் சொல்வதற்கில்லை. எல்லா சமுதாயங்களையும் போலவே சாதிசமுதாயமும் சண்டை சச்சரவுகள், போர், அமைதி இவற்றின் மூலம் ஆதிக்க சாதி - அடிமை சாதி என்றபோக்குகளை தொடர வைத்தன. ஆதிக்கத்தின் அடித்தள சாதி சனங்களின் எண்ணிக்கை - தோள்பலம், சொத்து பலம், இருக்கும் இடங்களின் தன்மை, நீர்வளம், நிலவளம், இன்னும் பலவற்றைப் பொருத்தே அமைந்திருக்கும். இத்தகைய சமுதாயத்தில் ‘சாதி முறை' என்று ஒன்று இருந்ததில்லை. சமூக பலப் பரீட்சைகளில் வென்றவன் ஆதிக்க சாதி; தோற்றவன் அடிமைச்சாதி. ஆனால், வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவதுண்டு. ஆகவே ஆண்டான் சாதி அடிமை சாதியாவதும், அடிமைகள் பிறகு ஆண்டானாக மாறுவதும் கால இயல்பு.
ஆனால் இன்று நாம் சாதி என்று சொல்லும் போது, இந்த விளக்கம் மட்டும் சுட்டப்படுவதில்லை. சாதி என்றால் ‘சாதி முறை' என்ற ஒன்றும் குறிப்பிடப்படுகிறது. முறையென்னும் போது முறையாக வகுத்தது என்று பொருளாகிறது. அவ்வாறு வகுக்கப்பட்டதுதான் என்ன? அவ்வாறு வகுக்கப்பட்டதே "வர்ணமுறை'. சாதி என்பதன் பொருள் ‘வர்ணமுறை' என்று கொள்ளும்போது பிறப்பினால் உயர்வு - தாழ்வு கற்பிக்கப்படுகிறது. உயர்வு - தாழ்வு தோள்வலிமையின் மூலமோ, எண்ணிக்கையின் அடிப்படையிலோ, நிலம் முதலிய சொத்துக்களைக் கொண்டோ அல்லது கல்வி முதலான சிறப்பு குணங்களாலோ அல்லாமல் பிறப்பின் மூலம் என்று கற்பிக்கப்படுகிறது. இதன் உட்கருத்து என்னவெனில், இது மாற்ற முடியாதது, மாற்றவும் கூடாதது.
இம்மாதிரியான விளக்கத்தில் ஆயும் போது சாதிகள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருப்பதையே உணர்கிறோம். இத்தகைய அடுக்குகளில் சொருகப்படாத சாதியே இன்று கிடையாது. சமூகத்துக்குள் கட்டப்பட்ட இந்த அடுக்குமுறை, அரசு அமைப்புக்குள்ளும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உறுதிப்படுத்தப்படுவதையும் நாம் காணலாம். சாதிகள் ஒரு காலத்தில் ஆங்கங்கே சிதறி, குறைந்தபட்ச இடைச்செயல்பாடுகளோடு, பெருவாரியாகத் தனித்தியங்கும் தன்மை கொண்டவையாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில், இது ஒரு சாதி என்று ஒரு குழுவைச் சுட்டும்போது, அது ஏணிப்படியின் எந்தப்படியில் நிற்கிறது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. சாதியின் இந்த இரண்டாம் விளக்கத்தில் சமூக வாழ்வில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் உயர்ந்த சாதி உயர்ந்த சாதியே, தாழ்ந்தது தாழ்ந்ததே. மேலும் இம்மாதிரியான உயர்வு தாழ்வுகள் சொல்வதுபோல், முறை வகுத்தவர்களான பார்ப்பனர்கள் சொல்வது போல் வெறும் சமயசடங்குகளுக்காக மட்டுமே என்றும், ஒட்டுமொத்தமான சமூக வாழ்க்கையைப் பகுத்தாய்வதற்குப் பயன்படாதென்று வாதிடுவோரும் உண்டு.
ஆனால், சமூக வாய்ப்புகளும், அதிகாரங்களும், வள ஆதாரங்களும் ஒருங்கிணைக்கப்படாத, மய்யப்படுத்தப்படாத காலகட்டத்தில், ஏணிப்படிச் சமுதாயம் வெறும் சடங்கு முறையாகவே அன்று காட்சியளித்திருக்கலாம். ஆனால் இன்று சடங்கு முறையின் உட்கருவை சமூக முழுமையையும் உள்வாங்கிவிட்டதால், அடுக்குமுறை சமுதாயத்தின் எல்லா துறைகளிலுமே ஒரே மாதிரியாக வெளிப்படும்படியாகிவிட்டது. ஆகவே, அடுக்குமுறை சடங்குகள் சூழல் காரணமாக தொடங்கியிருந்தாலும் சுயமரியாதையில், சமூக அதிகாரத்தில், அரசியல் மற்றும் பொருளியலில் சமனமற்ற பங்கீட்டையே வலியுறுத்துகிறது. இது, சாதியக் கருத்தியலன்றி வேறல்ல.
சாதியின் இந்த இரண்டு விளக்கங்களும் வரலாற்றில் இரண்டு வெவ்வேறு ஊற்றுக்களிலிருந்து எழும்பியவை என்பது தெளிவு. "சாதிசனம்' என்ற இனக்குழுக்கள் வெகுகாலத்திய இயற்கை, சுற்றுச்சூழல் இவைகளின் செயல்பாடுகளாலும் அழுத்தங்களாலும் எழும்பி, மக்கள் தொகையின் குறைவு, ஊடகங்களின்மை இவற்றால் வளர்க்கப்பட்டு இன்றைய நிலைக்கு வந்துள்ளன. இவ்வேறுபாடுகளான - சாதி முறை அல்லது வர்ணமுறை என்பதோ ஒரு குறிப்பிட்ட கூட்டத்தாரால் முறையாக வகுக்கப்பட்டு, விதிக்கப்பட்டு பரப்பப்பட்டு வரும் ஒரு கருத்தியல். இதன் செயலாக்கம் சீராக இல்லாமலும் முழுமையடையாமலும் பல்வேறு உத்திகளின் மூலம் எதிர்க்கப்பட்டும் வருவதைக் காணலாம்.
சமூக அறிவியலின் தொடக்க காலங்களில் வர்ணமுறை காலத்தால் முந்தியது என்றும், முதலில் சாதிகள் நான்கு மட்டுமே என்றும், பிற இவைகளின் கலப்பால் எழுந்தவை என்றும் பலரால் கருதப்பட்டு வந்தன. ஆனால் வரலாற்றியலின் வளர்ச்சி - சிறப்பாக ஆரிய வடமொழிக்கு முற்காலத்திய பண்பாடுகள் பற்றி ஆய்வுகள் - சாதி பற்றிய கணிப்பை மாற்றிவிட்டன.
சுற்றுச்சூழல், தொழில், கடவுள் வழிபாடு, புலம் பெயர்ச்சி இவற்றின் அடிப்படையில் உருவான இனக்குழுக்கள் காலத்தால் மிக முந்தியவையாக அறியப்படுகின்றன. வர்ணமுறை மிகப்பிந்திய காலங்களில் இனக்குழுக்கள் மேல் திணிக்கப்பட்ட ஒரு கருத்தியலே என்ற உணர்வு இப்பொழுது மேலோங்கியுள்ளது. ஆனால் இன்றைய பிரச்சனை என்னவென்றால், வரலாற்றுப் போக்கில் இரண்டும் ஒன்றாகி, சாதி என்னும் சொல்லாடலாக உருவெடுத்து பொதுத்துறையை ஆக்கிரமித்துள்ளது.
இந்தப் பொருள் கலப்பு பெருமளவில் ஆதிக்க சாதிகளின் செயல்பாடுகளால் உருப்பெற்று, அவற்றின் ஆதிக்கத்தைத் தக்க வைக்கவே பயன்படுகிறது. ஆதிக்கத்திற்கும் அதனை எதிர்க்கும் அடிமட்டத்திற்கும் இடையே நடக்கும் இடையறாத கருத்தியல் போராட்டத்தில் சாதி பற்றிய இந்த இரண்டு விளக்கங்களும் ஒன்றுக்கொன்று மாறி நின்று, தோன்றி, ஆதிக்கத்தின் ஆதாரங்களை மறைக்கவும் மறுக்கவுமே உதவுகின்றன. சமூக அரசியலுக்குள்ளும் சமூக அறிவியலுக்குள்ளும் சாதி பற்றிய சர்ச்சை எழுவதையே ஆதிக்கம் விரும்புவதில்லை. சாதி என்னும் இலக்கை, அது தவிர்க்கவே முயலுகிறது. ஏனெனில் சாதியே அதன் அடிப்படை. எனவே சாதியைக் கூர்ந்து நோக்கும் எவ்விதக் கண்ணோட்டமும் ஆதிக்கத்திற்குப் பாதகமாகவே முடியும். ஆகவே ஆதிக்க கருத்தியல், சாதியைத் தவிர்ப்பதற்காக உலகப்பிரச்சனைகள் எல்லாவற்றையும் தனதாக்கிக் கொள்ளும். புதுப்புது பிரச்சனைகளை, பொதுவாக போலியானவற்றை எழுப்பிக் கொண்டேயிருக்கும்.
சாதியை ஒரு பிரச்சனையாக, எதிர்வினையாக அடிமட்டத்தினர் எழுப்பும் பொழுதுதான் சாதி ஆதிக்கத்திற்குத் தவிர்க்க முடியாத பிரச்சனையாகிறது. இவ்வாறாக எழுப்பப்படும் பிரச்சனையை எதிர்கொள்ளும் உத்தியாக இந்த இரண்டு விளக்கங்கள், ஆதிக்கத்திற்குத் துணைபுரிகின்றன. சிறப்பாக சாதி ஒழிப்புப் பிரச்சனையை அடிமட்ட ஒடுக்கப்பட்ட சாதிகள் எழுப்பும் பொழுது, அது சுட்டுவதெல்லாம் பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வர்ண முறையே. ஆனால் இதற்குப் பதிலாக, ஆதிக்கம் இனக்குழுக்கள் என்ற விளக்கம் மூலம் சாதி வசதியானது, தொன்று தொட்டு வருவது, சமூக காரியங்களுக்கு ஆதாரமானது, முக்கியமாக அடிமட்ட சனங்களுக்கு அடைக்கலம் போன்றது, ஏன் அது அவர்களது அடையாளம் என்று வாதிடும்.
இந்த வாதம் வர்ணமுறையினின்றும் அதனை ஒழிக்கவேண்டிய தேவையினின்றும் திசை திருப்பும் வாதமே. பொதுத்
துறையில் பிரச்சனையை உருவாக்குவது. சாதி என்ற இரு பொருள் கொண்ட ஒரு சொல் - கருத்து அல்ல; மாறாக பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வர்ணமுறையே. வர்ண முறை மறைந்தால் இனக்குழுக்களின் இறுக்கம் தளர்ந்து அதிகரிக்கும். குழுக்களிடையே பிறப்பால் உயர்வு தாழ்வு பற்றிய உணர்வுகளே, குழுக்களை இறுக்கமடையச் செய்கின்றன. இன்றைய காலகட்டத்தில் உயர்வு தாழ்வற்ற பல தரப்பட்ட "வெறும் வேற்றுமைகளினால் அறியப்படும் அல்லது உணரப்படும் இனக்குழுக்களால் நிறைந்ததே இந்தியா' என்ற மாயையை நிலைநிறுத்தவே, இறுக்கமடைந்த பிறப்பால் உறவு கொண்டாடும் இனக்குழுக்களின் ஆதிக்கம் மிகவும் பாடுபடுகிறது. இம்முயற்சிகள் சமூக அறிவியலில் தொடங்கி, அரசு கொள்கைகள், ஊடகங்கள் மற்றும் எளிய சமூக சொல்லாடல்களிலும் பரவி நிற்கின்றன. இந்த மாயையைக் கிழித்து பகுத்தறிவதே சமூக அறிவியலின் தொடக்கப்பணி.
இட ஒதுக்கீடு என்பது இந்திய அரசால் தலித் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகபட்சமான சலுகை என்பதாக சாதி இந்து மந்தைப் புத்தியால் இங்கு அர்த்தம் கொள்ளப்படுகிறது. அரசியல்- பொருளாதாரம்- சமூக அந்தஸ்து- கல்வி நிலைகளில் காலாதிகாலமாக பின்னுக்குத் தள்ளப்பட்டு நலிந்துபோனவன் வளர்ச்சி பெறுவதற்கு ஒதுக்கப்பட்ட 'தனி' இடங்கள் (Reserved seats) மூலம் அரசியலிலும், இட ஒதுக்கீடு மற்றும் இதர சலுகைகள் மூலம் கல்வியிலும் அரசு வேலைகளிலும் வாய்ப்பளிப்பதற்கான ஏற்பாடுதான் இடஒதுக்கீடு சலுகை என்று புரிந்துகொள்ள சாதி இந்துக்களால் முடியவில்லை இன்றுவரை. ஏதோ உயர் சாதி இந்துக்களுக்கு உரிய இடங்கள் இடஒதுக்கீடு பெயரால் தாழ்த்தப்பட்ட-பழங்குடியின மக்களால் பறிக்கப்பட்டு விடுகின்றன; இதனால் அதிகபட்ச தகுதியும் திறனும் இருந்தும் உயர்சாதியினருக்கு கல்வி-வேலை வாய்ப்பு ஆகிய இவற்றில் இடம் கிடைக்காமல் போய்விடுகிறது என்பதாக இருக்கிறது இவர்களது புலம்பல்கள்.
இடஒதுக்கீடு மூலம் தகுதி-திறமை குறைவானவர்கள் வேலைவாய்ப்புகள் பெற்று அலுவல் பணிகளில் ஈடுபடுவதால் திறன்மிக்க நிர்வாகம் மக்களுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது என்றெல்லாம் மனங்கூசாமல் பேசுகின்றனர் உயர் சாதியினர். உச்ச நீதிமன்றம்வரை கூட செல்கின்றனர். தலித் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கான வரலாற்றுப் பின்னணி, இன்றைக்குள்ள சமூக யதார்த்த நிலை குறித்த அறிவு போதாமையால் சாமானிய மக்கள்தான் இப்படிப் பேசுகின்றனர் என்றால் உயர் சாதி அறிவுஜீவிகள் எனப்படுவோரும் அவர்களது ஆதரவு ஊடகங்களும் இதே ரீதியில் பேசி மக்களைக் குழப்புகின்றனர் என்பதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை. இவர்களுக்கு முதலில் நாம் இங்கு 'இடஒதுக்கீடு' என்பது தலித்துகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள தனிச் சலுகையாக கருதக்கூடாது என்பதை சொல்லிக்கொள்வோம்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒட்டுமொத்த மக்கள் தொகையில் எஸ்சி-24.6 சதவீதம் என்றும் எஸ்டி-1.17 (மொத்தம் 25.77%) சதவீதம் என்றும் சொல்லப்படும் தலித் மக்களுக்கு 19 சதவீதம் மட்டுமே கல்வி-வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்பது ஒருபுறமிருக்க தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு சலுகையை பிசி பிரிவினர் 30%, எம்பிசி பிரிவினர் 20%, எஸ்சி/எஸ்டி பிரிவினர் 19% என்ற வகையில் பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதை சொல்லிக் கொள்வோம். மீதமுள்ள 31% சதவீதம் ஓசி/எஃப்சி எனப்படும் உயர்சாதிப் பிரிவினரால் அரவமில்லாமல் அனுபவிக்கப்படுகிறது. இவர்கள் மக்கள் தொகை அடிப்படையில் 30% சதவீதத்துக்கும் கீழ் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இங்கு மற்ற பிரிவினர் இடஒதுக்கீடு பெறுவதை யாரும் பெரிதாகப் பேசுவதில்லை. தலித் மக்கள் பெறும் இடஒதுக்கீடு சலுகை மட்டும் உயர்சாதி ஆதரவு ஊடகப் பேச்சுகளிலும் மக்கள் மத்தியிலும் பூதாகரமாகப் பேசப்படுகிறது. மக்கள் தொகையின் அடிப்படையிலான சமூக நீதி என்று பார்க்கப்போனால் இன்னும் கூடுதலாக 6.77% இடங்களை தலித் மக்களுக்கு இடஒதுக்கீடாக வழங்க வேண்டும்.
கல்வி நிலையில் பின்னடைவு:
கல்வி நிலையங்களிலும் அரசு வேலைகளிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு அறுபது ஆண்டுகள் தாண்டிய நிலையிலும் தலித் மக்கள் எதிர்பார்த்த வளர்ச்சியைக் கண்டடையவில்லை. வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு பெற்றதன் மூலம் மிகச் சிலர் ஓரளவு பொருளாதார முன்னேற்றம் கண்டுள்ளனர் எனலாம். ஆனால் கல்வி அறிவு வளர்ச்சி என்பதைப் பொருத்தமட்டில் தலித் அல்லாதவர்களுக்கும் தலித்துக்களுக்கும் இடையிலான பெரும் இடைவெளி அப்படியே இருந்துகொண்டுதான் உள்ளது. 2010-2011 கணக்கெடுப்பு விவரம் தாழ்த்தப்பட்ட மக்களுள் 33.1 சதவீதம், பழங்குடியின மக்களுள் 35.8 சதவீதம் பேர் கல்வி அறிவு அற்றவர்களாக இருக்கின்றனர் என அறிவித்துள்ளது. மற்றவர்களின் கல்வி அறிவற்ற நிலை என்பது வெறும் 17.4 சதவீதம் மட்டுமேயாம் என்பதுடன் நமது நிலைமையை ஒப்பீட்டுப் பார்க்கும்போது கல்வி வளர்ச்சியில் நமது இடத்தைப் புரிந்துகொள்ளலாம். இந்தாண்டு உயர் படிப்புகளுள் முக்கியமானதாகக் கருதப்படும் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்தோர் எம்பிசி- 6464, பிசி -12131, எஸ்சி- 6007, எஸ்டி -211, எஸ்சிஏ- 966 ஆவர். மருத்துவ படிப்புக்கு சாதி/பிரிவு அடிப்படையில் கட்ஆஃப் மதிப்பெண் பெற்றோர் விவரம், ஒப்பீட்டுக்குக் காண்க:
மருத்துவப் படிப்புக்கான கட்ஆஃப் மதிப்பெண்கள்:
பிரிவு
199.5
199.25
199
198.75
198.5
195
187.5
BC
39
48
74
95
119
2646
6536
MBC
1 6
18
23
35
34
863
2917
SC
1
3
5
6
11
185
825
ST
0
0
0
0
0
0
17
எஸ்சிஏ பிரிவில் 198.25/ 1,198/2,197.50/2, 195.00/20, 187.5/100 என்ற அளவில் கட்ஆஃப் மதிப்பெண்கள் எஸ்சிஏ மாணவர்கள் பெற்றிருந்தனர். எஸ்டி பிரிவில் 197.5 கட்ஆஃப் மதிப்பெண்களை இரண்டு மாணவர்கள் பெற்றுள்ளனர்.
மக்கள் தொகை அடிப்படையில் எஸ்சி பிரிவினருக்கு மிக நெருக்கத்தில் இருப்பதும் 20 சதமானம் இட ஒடுக்கீடு பெறுவதுமான எம்பிசி பிரிவு மாணவர்கள் 6464 பேர் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்திருக்க 19 சதமானம் இட ஒதுக்கீடு பெறும் எஸ்சி+எஸ்டி+எஸ்சிஏ பிரிவு மாணவர்கள் 7184 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் எம்பிசி மாணவர்களில் 16 பேர் 199.5 கட்ஆஃப் பெறுகின்றனர். எஸ்சி+எஸ்டி+எஸ்சிஏ பிரிவினருள் ஒரே ஒரு மாணவர் மட்டுமே அந்த மதிப்பெண்ணைப் பெறுகிறார். இந்த வேறுபாடு 187.5 கட்ஆஃப் மதிப்பெண்ணில் 2917/ 942 ஆக மாறுகிறது. அதாவது எம்பிசி மாணவர்களைவிட 31.5 சதவீதம் எஸ்சி/எஸ்டி மாணவர்கள் பின் தங்கியுள்ளனர். எஸ்சி பிரிவினருடன் ஒப்பிடும்போது எஸ்டி மற்றும் எஸ்சிஏ பிரிவில் நிலைமை இன்னும் மோசம் என்பதை அட்டவணையைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். இந்த வித்தியாசம் பொறியியல் மற்றும் மற்ற பிற படிப்புகளிலும் தொடரவே செய்யும் பட்சத்தில், தமிழகத்தில் இருக்கும் 2172 எம்பிபிஎஸ் இடங்கள் இடஒதுக்கீடு பின்பற்றாமல் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தகுதி அடிப்படையில் முன்னுரிமை என்று நிரப்பப்படுமானால் ஐம்பது எஸ்/எஸ்டி மாணவர்கள் கூட மருத்துவப் படிப்பில் சேர முடிந்திருக்காது. யதார்த்தத்தில் பெயரளவுக்கே சனநாயகம் வாழும் நாட்டில் சமநீதி-சம வாய்ப்பு என்பதெல்லாம் வாய் சொல்லில் வாள் சுழற்றும் கதையாகிவிடும்.
கல்வியில் இட ஒதுக்கீடு நடைமுறையில் இருப்பதால் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 412 எம்பிபிஎஸ் இடங்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவ மாணவியருக்கு கிடைத்துள்ளன. சம வாய்ப்பு வழங்குதல் என்பதன் அடிப்படையில் தலித்துகளுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் தலித்துக்களைக் கொண்டு நிரப்பப்படும்போது உயர் சாதியினருடன் ஒப்பிடுகையில் சற்றுக் குறைவான கட்ஆஃப் மதிப்பெண் பெற்றிருக்கும் தலித் மாணவர்களுக்கும் எம்பிபிஎஸ் இடம் கிடைத்து விடுகிறது. இது இன்றளவும் தலித் சமூகம் கல்வியில் பின் தங்கியுள்ள நிலைமையைக் காட்டுகிறது. நிதர்சனத்தில் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் தேவை என நிர்ணயிக்கப் பட்டிருக்கும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை விட 60-75 மதிப்பெண்கள் (35 சதவீதத்துக்கும் மேல்)கூடுதல் பெற்ற தலித் மாணவர்களுக்கே எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன என்பதால் இந்த நடைமுறையை தகுதி- திறமை குறைவானவர்களுக்கு அளிக்கப்படும் சலுகை என்று கருதுவதும் பேசுவதும் அறிவாகாது. எனவே உயர் சாதி மாணவர் ஒருவரை விட குறைந்த மதிப்பெண் கொண்டுள்ள தலித் மாணவனுக்கு உயர் கல்வியில் இடம் கிடைப்பதை தகுதித் திறமைக் குறைவுக்குக் கொடுக்கப்படும் சலுகை என்று பார்ப்பது தவறானது. கல்வியில் பின் தங்கியிருக்கும் தலித் சமூகத்துக்கு வழங்கப்படுவதற்கான வாய்ப்பு- ஏற்பாடு என்றே கருதப்பட வேண்டும். இந்த நிலை குறைபாடுகள் கொண்டது என்றால் இந்நிலை நீடிப்பதற்காக உண்மையில் வெட்கப்படவேண்டியது தலித் மக்களல்ல..ஜனநாயகம் கொடிகட்டிப் பறக்கிறது என்று சொல்லிக்கொள்ளும் இந்த தேசம்தான். இந்த ஏற்றத்தாழ்வும் சரி செய்யப்பட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கையும். தலித் அல்லாதோர் சிலர் தாமும் இட ஒதுக்கீடு மூலம் கல்வி- வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இடம் பெறுகிறோம் என்பதை மறந்து தலித் மக்களின் இடஒதுக்கீடு மீது மட்டும் கொண்டுள்ள வன்மமான எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.
மருத்துவம்-பொறியியல் உள்ளிட்ட உயர் படிப்புகளில் இவ்வாறு நாம் பின் தங்கியுள்ளோம் என்றால் அடிப்படைக் கல்வியிலும் தலித்துகளின் கல்வி நிலை மோசமாகவே உள்ளது. 2011 கணக்கீடுபடி தமிழ்நாடு எஸ்சி மக்களுள் கல்வி அறிவு பெற்றோர் 66.6 சதவீதம் ஆகும். பத்தாம் வகுப்புடன் பள்ளியில் இடை நின்றுபோவோர் எஸ்சி பிள்ளைகளுள் 2008 ஆண்டுபடி மாணவர்கள்-42.13 சதவீதம், மாணவிகள்-26.24 சதவீதம்; எஸ்டி பிள்ளைகளுள் மாணவர்கள்-72.83 சதவீதம், மாணவிகள்- 73.04 சதவீதம் ஆகும். இப்புள்ளி விவரப்படி பிற பிரிவினருடன் ஒப்பிடும்போது கண்ணுக்கு எட்டும் தூரத்தில் கூட தலித்துகள் இல்லை என்பதுவே நிதர்சனம். இந்த கணக்கெடுப்புகளை- ஒப்பீடுகளைப் பார்த்து பெருமூச்சு விடுவதிலோ மனப் புழுக்கம் கொள்வதிலோ பலனொன்றும் விளையப்போவதில்லை. தாழ்த்தப்பட்ட-பழங்குடியின மக்கள் தாம் கல்வி நிலையில் எந்த அளவுக்கு பின் தங்கி இருக்கிறோம் என்பதை அடையாளம் கண்டுகொள்வதும் அவசியம். 20 சதவீதம் இட ஒதுக்கீடு பெறும் எம்பிசி பிரிவினருள் வாதத்துக்கு 20 மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு 199.5 கட்ஆஃப் பெறுகின்றனர் என்றால் 19 சதவீத இட ஒதுக்கீடு பெறும் தலித் மாணவர்கள் 19 பேர்களாவது 199.5 கட்ஆஃப் பெறும் நிலை எப்போது வருமோ அப்போது தான் தலித் மக்கள் கல்வி நிலையில் வளர்ச்சி பெற்றுள்ளதாக அர்த்தமாகும். இப்போது எம்பிசி பிரிவில் 16 மாணவர்கள் 199.5 கட்ஆஃப் பெற்றால்/எஸ்சி-எஸ்டி பிரிவில் 1 மாணவர் மட்டிலுமே அம்மதிப்பெண்ணைப் பெறும் நிலை நிலவுகிறது. அதாவது 16:1 என்றிருக்கும் விகிதாச்சாரம் 16:16 என்ற இடம் நோக்கி நகர்த்தப்பட வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்?
"எந்தவொரு சமூகத்தினதும் பொருளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச்சிக்குக் கல்வி வளர்ச்சி என்பது முன் நிபந்தனையாக இருக்கிறது" என்கிறது டபிள்யூ.கார்னரின் குறிப்பு.
ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த நிலையை உயர்த்த கல்வியே சிறந்த கருவியென அம்பேத்கர் கருதினார். கல்வியை, குறிப்பாக மேல் நிலைக் கல்வியைப் பெறுவதன் வாயிலாக மட்டுமே சமூகப் பொருளாதார சமத்துவம் கைக்கூடும் என்றும் அம்பேத்கர் நம்பினார். அடித்தள மக்கள் கல்வியறிவு பெறுவதில் ஆர்வம் காட்டுவதுடன் மட்டும் அம்பேத்கர் நின்றுவிடவில்லை. கல்வியளிக்கும் பணிகளிலும் இவர்கள் பங்கெடுக்க வேண்டுமென்பதிலும் அதே அளவு ஆர்வத்தைக் காட்டினார். கல்வித் திட்டம் என்பது கல்விப் பணியில் இருப்பவர்களுடைய கொள்கைகள், நலன்கள், பண்புகள் ஆகியவற்றை எதிரொலித்தலே என்பது அவருடைய விவாதமாகும். 1927 ஆம் ஆண்டு பம்பாய் மாகாணச் சட்டமன்றத்தில் கல்விக்கான நிதி ஒடுக்கீடு குறித்து டாக்டர். அம்பேத்கர் பேசும்போது "கல்வி எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும்படி செய்ய வேண்டும். குறைந்த செலவில் தீண்டப்படாத மக்களுக்கு உயர் கல்வி கிடைக்கும் வகையில் கல்வித் துறையின் கொள்கை இருக்க வேண்டும். எனவே தீண்டப்படாத மக்களுக்குக் கல்வியில் தனிச்சலுகை தர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
ஐந்தாண்டு திட்டங்களில் கல்வி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட வேறுபல நடவடிக்கைகளும் கல்வி வளர்ச்சிக்காக மத்திய- மாநில அரசுகளால் எடுக்கப்படுகின்றன. பிற்படுத்தப்பட்ட-தலித் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் கல்விக் கட்டணம் செலுத்துவதில் விலக்கும் சலுகைகளும் பெறுகின்றனர். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு என்று தனிப்பள்ளிகளும் விடுதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், புத்தகங்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. உதவித் தொகைகளும் ஊக்கத் தொகைகளும் வழங்கப்படுகின்றன. இவ்வாறாக 1937களுக்குப் பிறகு பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சிக்காக தனித் துறைகள் உருவாக்கப்பட்டு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன. இலவசக் கல்வி, கட்டாயக் கல்வி என்று பரிணாமம் அடைந்து இன்று சமச்சீர்க் கல்வி என்ற போதனை முறையை வந்தடைந்துள்ளது நமது கல்விமுறை. இவ்வளவு இருந்தும் கல்வி நிலையில் தலித்துகள் பின் தங்கியே இருக்கின்றனர். ஏன்?
"தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சியானது தீண்டாமை உள்ளிட்ட பல்வேறு விதமான இடர்ப்பாடுகளின் காரணமாக மிகவும் மந்தமாகவே இருந்து வந்துள்ளது. பண்டைய காலங்களில் பள்ளிகள் கோவில்களுக்குள் இருந்த காரணத்தால் தீண்டப்படாதவர்களாக விலக்கி வைக்கப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அங்கே சென்று கல்வி பயில்வதற்கு முடியவில்லை"
இளையபெருமாள் கமிட்டி அறிக்கையில் இடம் பெற்றுள்ள இம்மேற்கோள் தலித் மக்களின் கல்விச் சூழல் பின்னடைவுக்கான வரலாற்றுப் பின்னணியை விளக்குவதை தலித் அல்லாதோரும் தலித் எதிர்கதையாடல்கள் நிகழ்த்துபவர்களும் புரிந்துகொள்ள முன் வரவேண்டும். ஆயிரங்காலத்து தலித் மக்கள் பிரச்சினைகள் முற்றுப்பெறுவதற்கு சில நூறாண்டுகள் தேவைப்படலாம். தலித்துகள் அவ்வளர்ச்சியை சீக்கிரத்தில் அடைவதற்கான தடைக் கற்களை அகற்றுவதற்கு முன்வரும் பெருந்தன்மை தலித் அல்லாதோர் மத்தியில் இல்லாமல் இருக்கலாம். அப்பாதையில் புதிய தடைக் கற்களை எழுப்பும் நயவஞ்சகர்களாகவாவது அவர்கள் மாறாமல் இருந்தால் நல்லது. இந்த மேற்சொன்ன கல்வி அசௌகரியங்களை ஏதோ தலித் மாணவர்கள் மட்டும் அனுபவிக்கின்றனர் என்பதாக தப்பர்த்தம் கொள்ளப்படுகிறது. "1937 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட அமைச்சரவைகளுக்குப் பிறகுதான் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி நிலை உயர்வதற்கு வேகமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன" என்கிற அன்றைய இளையபெருமாள் கமிட்டி அறிக்கையின்படி பிற்படுத்தப்பட்ட மக்களையும் உள்ளடக்கியே நாட்டின் கல்வித் திட்டங்கள் வரையப்பட்டுள்ளன என்பதினை அறிந்துகொள்ளலாம். விண்ணப்பப் படிவக் கட்டணங்கள் மற்றும் கல்விக் கட்டணங்களில் சிறு வேறுபாடு என்பது போன்ற சொற்பமான சலுகைகள் தவிர்த்து உயர் கல்விகளில் இடஒதுக்கீடு, ஸ்காலர்ஷிப் உட்பட அனைத்து கல்வி சலுகைகளையும் தலித் மாணவர்களைப் போலவே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் பெற்று வருகின்றனர். ஆனால், இந்து சாதி சமுதாய மந்தையோ தலித்துகளுக்கு மட்டும் தனியாக இந்த அரசாங்கம் வாரி வாரி வழங்கி வருகிறது என்பது போல வயிறெரிந்து பொசுங்குகிறது.
பட்டங்களையும் பதவிகளையும் வாங்கிக் குவித்துக்கொண்டதுடன் நின்றுவிடாமல், தான் பெற்ற கல்வி அறிவை தம் மக்கள் அனைவரும் பெற்று முன்னேற்றம் காணவேண்டும் என்ற சிந்தனையோடு தமது தீவிர அரசியல் பணிக் சுமைகளினூடே கல்விப் பணிகளையும் தம் வாழ்நாள் முழுதும் செய்து வந்தவர் அம்பேத்கர். தலித் தலைமைகளும் இலக்கிய முன்னோடிகளும் அம்பேத்கரிடம் அரசியல் கற்றுக்கொள்ள காட்டும் ஆர்வத்தில் சரிபாதி அளவுக்குக் கூட அவரது கல்விப் பணிகளைக் பின்பற்றுவதில் ஆர்வம் காட்டுவதில்லை.
தலித் அரசியல் கட்சிகள் கிராமங்கள்தோறும் கிளைகளை நிறுவி, கொடிக் கம்பங்களை நடுவது போல தலித் கல்வி மையங்கள், படிப்பு வட்டங்கள், நூலகங்கள் ஆகியவற்றையும் நிறுவ முன்வர வேண்டும். தலித் கல்வி மேம்பாட்டுக்கான அறக்கட்டளைகளைத் துவக்கி தேவையான நிதி ஆதாரங்களைத் திரட்டிக்கொள்வதன் மூலம் ஏழை தலித் மாணவர்களின் உயர் படிப்புகளுக்கு அந்நிதியைப் பயன்படுத்தலாம். அரசாங்கத்தின் தலித் மக்கள் கல்வி வளர்ச்சிக்கானத் திட்டங்களை தம் மக்களிடம் கொண்டு சேர்த்து அத்திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கான விழிப்புணர்வை தலித் மாணவ-மாணவியர் மத்தியில் வளர்த்தெடுக்க வேண்டும்.
தமிழ் நாட்டில் 13 அரசு பொறியியல் கல்லூரிகள், 12 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 4 பல்கலைக்கழகத் துறை(University Departments /CEG, ACT, SAP, MIT Campuses)கள், 523 சுய நிதிக் கல்லூரிகள் என மொத்தம் 552 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த சுயநிதிக் கல்லூரிகளில் 19 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றுவதில் உள்ள குளறுபடிகள் களையப்படுவதற்கான போராட்டங்களும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் தலித் மாணவர்களுக்கு மறுக்கப்படும் கல்வி உதவித் தொகையைப் பெறுவதற்கான போராட்டங்களும் தலித் அரசியல் அமைப்புகளாலும் மாணவர்களாலும் நடத்தப்பட வேண்டும். சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் இடம் பெறும் தலித் மாணவர்களிடம் அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணங்கள் நன்கொடை என்ற பெயரில் வசூலிக்கப்படும் அவலத்துக்கு எதிரான போராட்டங்கள் கட்டியெழுப்பப்பட்டு உயர் கல்வியில் வெளிப்படையாக நடைபெறும் பகல் கொள்ளைக்கு முடிவு கட்ட வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் கல்வி நிலையில் நமது பின்னடைவு குறித்து ஒப்பாரி வைப்பதால் மட்டும் ஆகப்போவதொன்றுமில்லை.
கல்வியாளர்களின் ஆலோசனைகளைத் தொகுத்தெடுத்து அவற்றின் வழிகாட்டுதல்களுக்கேற்ப தலித் மக்களின் சுயசார்பான கல்வித் திட்டங்களை வடிவமைத்து செயல்படத் துவங்கும்போது பதினாறு கால் பாய்ச்சலில் தலித் சமூகம் முன்னேறுவது நிச்சயம். கல்வியைப் பொருத்தமட்டும் நமது உடனடி இலக்கு தலித் மக்களின் கல்வி நிலையை மேம்படுத்துவதற்கு கற்றறிந்த தலித் பிரிவினர் மத்தியில் சிறப்பு நடவடிக்கைகளைக் கோருவது மற்றும் கல்வி நிலையில் மற்ற சமூகத்தவருக்கு இணையாக தலித் சமூகத்தையும் வளர்த்தெடுக்க வேண்டுவது. கல்வி அறிவு ஒன்று மட்டுமே ஒருவனுக்கு தன்னைத் தான் உற்று நோக்க உதவும் மாபெரும் சாதனமாகும். கல்வியறிவு ஒருவனுக்கு அவனது இடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும், வளர்ச்சிக்கான பாதையில் அவனை செலுத்தும், தனக்காகவும் தன் சமூகத்துக்காகவும் போராட அவனைத் தூண்டும்.
உதவிய இணயதளங்கள்/நூல்கள்:
1 www.tnhealth.org.com 2.www.nird.org/rural development statistics 2011 3 கற்றனைத் தூறும்-ரவிக்குமார் -உயிர்மை வெளியீடு 4.டாக்டர்.அம்பேதகர் ¨டா¢-அன்புச்செல்வம் - புலம் வெளியீடு 5.பாபாசாகேப் அம்பேத்கர் - ரகவேந்திரராவ் -சாகித்ய அகாடமி 6.தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2013-தகவல்கள்,அண்ணா பல்கலைக்கழகம்,சென்னை.