கிருத்தவத்தை வெளியிலிருந்து அனுகுபவர்கள் வைக்கும் கருத்துக்களில் ஒன்று - ஒன்று என்பதைவிட பல என்று சொல்லலாம் - கிருத்தவ மத புத்தகத்தில் மனித கைகளின் வேலைப்பாடு இருக்கிறது, அதனால் அதில் ஒன்றுக்கு ஒன்று புரணான கருத்துக்கள் இருக்கிறது என்பது.
இதுவும் கிருத்தவ வேதத்தின் பழைய ஏற்பாட்டிற்கான விமர்சனக் கருத்து இல்லை, பைபிலின் புதிய ஏற்பாட்டிற்கான விமர்சனக் கருத்தே. அதாவது இயேசு கிருஸ்துக் குறித்து என்று வரும்போது மட்டுமே இவைகள் எழுப்பப்படும்.
இத்தகைய விமர்சனங்கள் ஆதாரப் பூர்வ முகாந்திரங்கள் உடையதுதானா? இத்தகைய விமர்சனக் கருத்து எழக் காரணங்கள் என்ன? இத்தகைய விமர்சனங்கள் எழுவதற்கான காரணங்களைப் பொருத்தமட்டில் கிருத்தவ வரலாறு தெரியாததே முதன்மையான காரணம்.
பைபிலின் புதிய ஏற்பாட்டில் பெரிதும் இருப்பது இயேசு கிருஸ்துவின் சீடர்களின் நற்செய்திகளும், முதல் கிருத்தவ சபையை கட்டியெழுப்பிய பவுல் அடிகளின் கடிதங்களுமே. இவைகளே இயேசு கிருஸ்து குறித்த வரலாற்று ஆதாரங்களாகவும் இருக்கின்றன. இவைகளே விமர்சனங்களுக்கான மூலமாகவும் இருக்கின்றன.
இத்தகைய விமர்சனங்களை மேலும் சுவாரசியமாக்கியது Dead Sea Scrolls தொல்பொருள் கண்டுபிடிப்புகள். Dead Sea அமைந்திருக்கும் பகுதியில் இருக்கும் 11 குகைகளில் இருந்து கண்டு எடுக்கப்பட்ட காகிதச் சுருள்கள். இந்த குகைகள் Qumran பகுதி குகைகள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த கும்ரான் குகை காகிதச் சுருள்கள் பெரும்பாலும் எபிரேய மற்றும் அராமிக் மொழியிலும், சிறிது கிரேக்க மொழியிலும் எழுதப்பபட்டிருக்கின்றன. இந்த காகித சுருள்கள் அனைத்தும் தொடக்ககால கிருத்தவத்திற்கு முந்தைய 100 ஆண்டுகளையும் கிருத்தவத்தின் முதல் 100 ஆண்டுகளையும் உள்ளடக்கிய வரலாற்று தகவல்களைத் தருகிறது.
இந்த காகித சுருள்களில் இருக்கும் பல சுருள்களை எழுதியவர்கள் Essenes என்கிறக் குழுவைச் சேர்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள். மற்றொரு குழுவிற்கு Qumran Community என்று வரலாற்று ஆராய்ச்சிளார்கள் பெயர் வைத்திருக்கிறார்கள்.
இந்த இரு குழுவிற்கும் பெயர்கள் வேறு வேறு என்றாலும் இவர்களுடைய மத சமூக அரசியல் கருத்துக்கள் ஒன்றுப் போலவே இருக்கின்றன. இந்த இரு குழுக்களின் மதக் கருத்துக்கள் Q Gospel-லை ஒத்திருப்பதாக விவிலிய ஆராய்ச்சியாளர்களில் ஒரு பகுதியினர் கருதுகிறார்கள்.
Essenes, Qumran Community மற்றும் Q Gospel போன்ற கருத்தாக்கங்களைப் பற்றியத் தெளிவான புரிதல் இல்லாமல் பைபிலின் புதிய ஏற்பாட்டைக் குறித்து விமர்சனம் செய்வது அரைவேக்காட்டுத்தனமாகவே முடியும்.
Essenes மற்றும் Qumran Community பற்றிப் பார்ப்பதற்கு முன்னால் Q Gospel குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். புதிய ஏற்பாட்டில் இப்பொழுது இருக்கும் நான்கு நற்செய்திகளைப் போல 40 நற்செய்திகள் இருக்கின்றன.
ஆனால் பைபிலின் புதிய ஏற்பாட்டை தொகுத்தவர்கள் மற்ற நற்செய்திகளின் நம்பகத்தன்மையை கருத்தில் கொண்டு அவைகளை பைபிலில் இணைக்காமல் விட்டுவிட்டார்கள். ஆனால் இந்த Q Gospel என்பது தவிர்க்கப்பட்ட நற்செய்திகளில் ஒன்று அல்ல.
இன்னும் சொல்லப்போனால் Q Gospel என்ற ஒரு நற்செய்தி இருந்ததற்கான எவ்வித எழுத்துப் பூர்வமான ஆதாரமும் கிடையாது. பிறகு ஏன் இந்த Q Gospel முக்கியத்துவம் பெருகிறது? புதிய ஏற்பாட்டில் இருப்பதாக சொல்லப்படும் முரண்களுக்கும், மனித கையாடல் நடந்திருக்கிறது என்கிற விமர்சனத்திற்கும் பதில் தரக் கூடியது இந்த Q Gospel.
இந்த Q Gospel என்கிறப் பெயரில் இருக்கும் Q என்பது ஜெர்மன் மொழியின் Quelle என்கிற வார்த்தையில் இருந்து வந்தது. Quelle என்றால் மூலாதாரம் என்று பொருள். இன்றைய பைபிலின் புதிய ஏற்பாட்டில் இருக்கும் மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகள் இரண்டும் ஏறத்தாழ இயேசு வாழ்ந்த காலத்திற்குப் பிறகு 30-40 வருடங்கள் கழித்து எழுதப்பட்டவைகள்.
இந்த இரண்டு நற்செய்திகளை எழுதியவர்களும் இயேசுவோடு இருந்து அவரை நேரில் கண்டவர்கள் கிடையாது. இயேசுவின் சீடர்கள் சொன்னவைகளையும் மேலும் பல மூல ஆதாரங்களையும் கொண்டே தங்களுடைய நற்செய்தியை எழுதியிருக்கிறார்கள்.
மத்தேயு மற்றும் லூக்கா எங்கிருந்து தங்களுக்கான மூலாதாரங்களை எடுத்தார்கள் என்பதே பைபில் ஆராய்ச்சியாளர்களின் கேள்வியாக இருந்து வருகிறது. மத்தேயுவும் லூக்காவும் தங்களுடைய நற்செய்திகளை எழுத மூலாதாரங்களை பயன்படுத்தினார்கள் என்றால் இயேசு இந்த மண்ணில் இருந்த காலத்திலேயே ஒரு சிலரால் அவருடைய செயல்பாடுகளும் பிரசங்கங்களும் பதிவு செய்யப்பட்டு வந்தன என்று ஆகிறது.
அத்தகைய மூலதாரங்கள் ஒன்றிர்க்குத்தான் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் Q Gospel என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதற்கு Q document மற்றும் Q Sayings Gospel என்று வேறுப் பெயர்களையும் அவர்கள் வைத்திருக்கிறார்கள். மத்தேயும் லூக்காவும் தங்களுக்கு முன்னால் இருந்த ஒரு நற்செய்தியை மூலமாக வைத்து தங்களுடைய நற்செய்தியை எழுதியிருக்கிறார்கள் என்பது பைபில் மற்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் முடிவாக இருக்கிறது.
Q Gospel என்பது இன்றைய பைபிலில் இருக்கும் நான்கு நற்செய்திகளைப் போன்ற அமைப்பில் இல்லாமல் இயேசு கிருஸ்துவின் பிரசங்கங்களை மட்டுமே கொண்டிருந்திருக்கவேண்டும் என்ற முடிவிற்கும் வருகிறார்கள். அதாவது இயேசு கிருஸ்துவின் பிறப்பு குறித்தோ, அவர் இறைவனின் திருக்குமாரன் என்பதைப் பற்றியோ, அவர் மனிதர்களின் பாவங்களை சுமந்து சிலுவையில் அரையுண்டார் என்பதைப் பற்றியோ அல்லது இயேசுவின் உயிர்தெழுதல் குறித்தோ எதுவுமே பேசாமல் இந்த Q Gospel இயேசு செய்த பிரசங்கங்களை மட்டுமே சொல்கிறது.
Q Gospel பொறுத்த மட்டில் இயேசு என்பவர் யார்.........
Q Gospel போன்று மற்றொரு மூலதாரத்தை வைத்துக்கொண்டு எழுதப்பட்ட நற்செய்திகளுக்கு 2 Document அல்லது 2 Source Hypothesis என்பார்கள். மத்தேயும் லூக்காவும் இத்தகைய வகை மாதரியை சேர்ந்தவைகள்.
முன்பே பார்த்ததுப் போல Q Gospel என்று ஒன்று எழுத்து வடிவில் கிடையாது. ஆனால் இந்த நற்செய்தியை மீட்டுருவாக்கம் செய்ய முடியும். மத்தேயு, லூக்கா மற்றும் தாமசின் நற்செய்திகளில் இருந்து Q Gospel-யை மீட்டுருவாக்கம் செய்ய முடியும். இதில் தாமசின் நற்செய்தி புதிய ஏற்பாட்டில் சேர்க்கப்படவில்லை.
உதாரணமாக லூக்கா 3:1-6 வசனங்களை Q Gospel-ளின் QS-3-ஆக கருதுகிறார்கள் இப்படியே QS-62 வரை மீட்டுருவாக்கம் செய்ய முடியும். இவைகள் மத்தேயு மற்றும் தாமசின் நற்செய்திகளிலும் ஒன்றுப் போலவே இருக்கும்.
சரி இப்பொழுது Q Gospel-ளின் படி இயேசு என்பவர் யார் என்று பார்க்கலாம். புதிய ஏற்பாட்டின் நான்கு நற்செய்திகளும் அதாவது மார்க், மத்தேயு, லூக்கா மற்றும் யோவான் ஆகியவைகள் இயேசுவை தேவனின் குமாரன் என்றும் நியாயத் தீர்ப்பு நாளில் இறைவனின் வலது பாகத்தில் இயேசுவானவர் இருப்பார் என்றும் மனிதர்களின் பாவங்களை சுமந்து தீர்க்கவே சிலுவையில் அரையுண்டார் என்றும் குறிப்பிடுகின்றன.
ஆனால் Q Gospel இயேசுவைக் குறித்து இந்த நான்கு நற்செய்திகளும் சொல்லும் விசயங்களை சொல்வதில்லை மாறாக இயேசு கிருஸ்துவை போதகர் என்றே குறிப்பிடுகிறது. அதாவது Righteous Teacher என்று மட்டுமே சொல்கிறது. ஒரு Righteous Teacher-ஆக இயேசு சொன்ன வார்த்தைகளை மட்டுமே Q Gospel பதிவு செய்கிறது. அவருடைய பிறப்பு இறப்பு பூமியில் அவருடைய செயல்பாடுகள், அற்புதங்கள் என்று எதையுமே Q Gospel குறிப்பிடுவதில்லை.
இன்றைய பைபிலிருக்கும் நான்கு நற்செய்திகளும் இயேசுவின் பிறப்பு, அற்புதங்கள், பிரசங்கங்கள், இறப்பு மற்றும் உயிர்தெழுதல் பற்றிப் பேச இந்த நான்கில் மூன்று நற்செய்திகளின் மூலம் என்றுக் கருதப்படும் Q Gospel மட்டும் ஏன் இயேசுவின் போதனைகளை மட்டுமே சொல்கிறது? மூலத்தில் இல்லாத விசயங்களையும் மத்தேயு லூக்கா மற்றும் மார்க் சொல்கிறார்களா?
மத்தேயு, மார்க், லூக்கா போன்றவர்களுக்குத் தெரிந்த விசயம் அவர்களுக்கு மூலமாக இருந்து உதவிய Q Gospel-யை எழுதிய ஆசிரியருக்கு தெரியாமல் போய்விட்டதா? இப்படிப் பல கேள்விகள் எழுந்த சமயத்தில்தான் Dead Sea Scrolls தொல்லியல் கண்டுபிடிப்புகள் இந்த கேள்விகளுக்கான புதிய விடைகளை கொண்டுவந்தது.