New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொல்காப்பிய மொழிபெயர்ப்புகள்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
தொல்காப்பிய மொழிபெயர்ப்புகள்
Permalink  
 


தொல்காப்பிய மொழிபெயர்ப்புகள்

tholkaappiyam1சங்க இலக்கியத்தின் மரபைப் புரிந்துகொள்ள இன்றியமையாதது தொல்காப்பியம் என்னும் இலக்கணம். பிற இலக்கணங்கள் யாவும் எழுத்து, சொல் ஆகிய மொழியியல்புகளை உணர்த்த, இலக்கியப் படைப்புக்குத் தேவையான இலக்கிய மரபினை, இலக்கியக் கொள்கைகளை உணர்த்தும் இன்றியமையா நூலாகத் தொல்காப்பியம் உள்ளது. ஆனால், தொல்காப்பியம் சங்க இலக்கியத்துக்குப் பின்னால் தோன்றியதா, முன்னால் தோன்றியதா என்ற விவாதம் இன்றுவரை முடியவில்லை. சங்க இலக்கியத்துக்குச் சில நல்ல மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. திருக்குறளுக்குப் பல மொழிபெயர்ப்புகள் உள்ளன. ஆனால் இலக்கண நூலான தொல்காப்பியத்திற்கு ஏனோ மொழிபெயர்ப்புகள் மிகுதியாக இல்லை. இத்தனைக்கும் தமிழின் வளத்தைப் புரிந்துகொள்வதற்கு மிக இன்றியமையாத நூலாக இருப்பது தொல்காப்பியம்.

முதன்முதலில் தொல்காப்பியத்தை மொழிபெயர்த்தவர் பின்னங்குடி சா.சுப்பிரமணிய சாஸ்திரி. முன்பே ஒரு கட்டுரையில் இவரை நாம் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். முதலில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியிலும் பின்னர் திருவையாறு அரசர் கல்லூரியிலும் தமிழ்ப்பேராசிரியராக இருந்த சுப்பிரமணிய சாஸ்திரியார், தொல்காப்பிய எழுத்ததிகார மொழிபெயர்ப்பை 1930இலும், சொல்லதிகார மொழிபெயர்ப்பை 1937இலும், பொருளதிகார மொழிபெயர்ப்பை 1945இலும் வெளியிட்டார்.

“சாஸ்திரியாரது மொழிபெயர்ப்பு, பகுதி பகுதியாக வெளியிடப்பட்டதனால், அதன் ஒரு பகுதிக்கும் மற்றொரு பகுதிக்கும் மொழி பெயர்ப்பு மற்றும் ஆய்வுமுறைமை சார்ந்த பொருத்தமின்மை காணப்படுகிறது; மேலும் அறிவியல் ரீதியான புறவயநோக்கு அதில் இல்லை” என்று முனைவர் வெ. முருகன் எடுத்துக்காட்டியுள்ளார்.

சாஸ்திரியார், தொல்காப்பியம் வடமொழி மரபினைப் பின்பற்றியது என்ற கருத்தினைக் கொண்டவர். ஆகவே பாணினியின் கருத்துகள், யாஸ்கரது நிருக்தக் கருத்துகள் போன்றவை தொல் காப்பியத்தில் காணப்படுகின்றன என்று சொல்லுகிறார். இதனை மறுக்கும் பேராசிரியர் அகத்தியலிங்கம், “தொல்காப்பியத்தையும் பாணினியின் அஷ்டாத்யாயீ போன்ற படைப்புகளையும் எளிமையாக ஒப்பிட்டுப் பார்த்தாலும், மேற்பரப்பளவில் சில ஒற்றுமைகளைத் தவிர, வடிவம், உள்ளடக்கம், கோட்பாட்டியல் சட்டகம், அழுத்தம் முதலியவை ஆழ்ந்த வேறுபாடுகளைக் கொண்டுள்ளன என்பதை உணரலாம்” என்கிறார்.

சிகாகோ பல்கலைக்கழகத்திலும் அமெரிக்காவின் வேறு பல பல்கலைக்கழகங்களிலும் செல்கைப் பேராசிரியராக இருந்த மொழியியலாளர் பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், “சாஸ்திரியாரின் மொழிபெயர்ப்பு எப்போதுமே துல்லியமாக இருப்பதில்லை, எப்போதுமே நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் இருப்பதில்லை” என்று கூறியிருக்கிறார்.
எனவே அயல்நாட்டவர்களோ, இந்தியாவின் பிற பகுதிகளில் இருக்கும் பிறமொழியைச் சார்ந்தவர்களோ, நம்பி ஏற்றுக்கொண்டு ஆய்வுக்குப் பயன்படுத்தக்கூடிய ஒன்றாகப் பி. எஸ். சுப்பிரமணிய சாஸ்திரியாரின் மொழிபெயர்ப்பு இல்லாமல் போய்விட்டது என் பது ஒரு பெருங்குறை.

“தவறான வாசிப்புகளும், தவறான மொழிபெயர்ப்புகளும் ஒன்றுக் கொன்று காரணமாகவும் விளைவாகவும் உள்ளன. இவை சாஸ்திரியின் மொழிபெயர்ப்பின் செல்லுபடிநியாயத்தையும், பயன்பாட்டையும் அழித்துவிட்டன” என்று முடிவாகக் கருத்துரைக்கிறார், வெ. முருகன்.

இரண்டாவதாகத் தொல்காப்பியத்தை மொழிபெயர்த்தவர் இலக்குவனார். இலக்குவனாரின் முனைவர் பட்ட ஆய்வேட்டின் ஒரு பகுதியாகத் தொல்காப்பிய மொழிபெயர்ப்பு 1963இல் வெளிவந்தது. இலக்குவனார், சுப்பிரமணிய சாஸ்திரியாரின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வடமொழியையோ, பிற மூலங்களையோ சாராமல், முற்றிலும் தனித் தன்மை கொண்ட அசலான படைப்பே தொல்காப்பியம் என்று காட்ட முனைகிறார் பேராசிரியர் இலக்குவனார். அது “கலைச்சொல்லமைப்பின் போதாமை, இலக்கணப் பொருத்தப் பாடின்மை ஆகிய குறைபாடுகளைக் கொண்டிருக்கிறது” என்று சுட்டிக்காட்டியுள்ளார், வெ. முருகன். மேலும், “எழுத்து, சொல் அதிகாரங்களில் தந்து விளக்குவதாகத் தேவையான உதாரணங்களோடு அது அமையவில்லை” என்ற குறையையும் சுட்டிக் காட்டியுள்ளார். பேராசிரியர் கமில் சுவலபில், சாஸ்திரியாரது மொழிபெயர்ப்பு தீவிர வடமொழிச் சார்பு என்னும் குறைபாடு உடையதென்றால் இலக்குவனாரது மொழிபெயர்ப்பு எதிர் முனையிலுள்ளது என்று கூறியுள்ளார்.

அதற்குப் பிறகு 2000இல் முனைவர் வெ. முருகன் (ஆசியவியல் நிறுவனப் பேராசிரியர்) தொல்காப்பியத்தை முழுவதுமாக மொழிபெயர்த்துள்ளார். இவரது மொழிபெயர்ப்பு நேருக்குநேர் மொழிபெயர்ப்பு. மூன்று அதிகாரங்களுக்கும் அமைந்துள்ளது. என்றாலும், மிகுந்த நெகிழ்ச்சியும் சொற்பெருக்கமும் கொண்ட தாகவும், விரிவாகவும் இது அமைந்துள்ளது. ஏறத்தாழக் கொண்ட பொருளை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. மேலும் ஆங்காங்குக் கடினமான சொற்களையும் பயன்படுத்துகிறார்.

தொல்காப்பியத்தை முழுவதுமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் இவர்கள் மூவரே ஆவர். ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகள் எதிலும் தொல்காப்பிய மொழி பெயர்ப்பு வந்ததாகத் தெரியவில்லை. வடநாட்டு மொழியாளர்கள் நம்நாட்டின் பிற நூல்கள் யாவும் பாணினியிலிருந்தும் பரதரிடமிருந்தும் தோன்றியவை என்று நம்பும்வரை, தொல்காப்பியத்தைப் பிற இந்திய மொழிகளில் பெயர்க்கமாட்டார்கள்.

சிலர் தொல்காப்பியத்தின் ஒரு பகுதியை மட்டும் மொழி பெயர்த்துள்ளனர். ஈ. எஸ். வரதராஜ ஐயர், பொருளதிகாரத்தை மட்டும் இருபகுதிகளாக 1948இல் மொழிபெயர்த்தார். தே. ஆல் பர்ட், 1985இல் எழுத்து, சொல் அதிகாரங்களை மட்டும் பெயர்த்துள்ளார்.

தொல்காப்பியத்தை மொழிபெயர்த்த ஒரே அயல்நாட்டவர் கமில் சுவலபில். மூன்று அதிகாரங்களையுமே பெயர்ப்பது அவருடைய திட்டமாக இருந்த போதிலும் அது நிறைவேறவில்லை. அவருடைய தொல்காப்பிய மொழிபெயர்ப்பு, எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்ற இரண்டிற்கும் மட்டுமே கிடைக்கிறது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழாய்வு இதழ்களில் 1972இல் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை மொழிபெயர்க்கத் தொடங்கி, 1974இல் முடித்தார். பின்னர் 1975இல் சொல்லதி காரத்தை மொழிபெயர்க்கத் தொடங்கி 1978வாக்கில் முடித்தார்.

இவை தவிர ஆங்காங்கு தம் ஆய்வேடுகள் அல்லது ஆய்வுக் கட்டுரைகளில் சில நூற்பாக்களைப் பெயர்த்தவர்கள் பல பேர் உள்ளனர். உதாரணமாக, பிஷப் ஹீபர் கல்லூரிப் பேராசிரியராக இருந்த செல்வி இந்திரா மனுவேலின் ஆய்வேட்டினைக் குறிப்பிடலாம். அதில் பொருளதிகாரத்தின் சில நூற்பாக்கள் தேவை கருதி ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டுள்ளன அல்லது பொருளுரைக்கப்பட்டுள்ளன. அதேபோல் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் இலக்கணங்களைப் பற்றி ஆய்வு செய்த எஸ்.இராஜம் என்பவரும் தொல்காப்பியத்தின் சில நூற்பாக்களை மொழிபெயர்த் துள்ளதாகத் தெரிகிறது.

மேற்கண்ட மொழிபெயர்ப்புகளில், எழுத்ததிகார-சொல்லதிகார ஆய்வுகளுக்கு மேற்கில் பெரும்பாலும் கமில் சுவலபிலின் மொழி பெயர்ப்பே பயன்படுத்தப்படுகிறது. ஆகவே அதனைச் சற்றே அறிமுகப்படுத்திக் கொள்வது நல்லது.
அவருடைய மொழிபெயர்ப்பினை ஒரு சிறிய, ஆனால் சிறப்பான முன்னுரையுடன் தொடங்குகிறார்.

“முன்-பத்தாண்டுகளில் (அதாவது 1960களைக் குறிப்பிடுகிறார் சுவலபில்) தமிழ் மற்றும் திராவிட ஆய்வுகள் மிகப்பேரளவு வளர்ந்து பரவியிருக்கின்றன, அந்த ஆய்வுகளுக்குத் தொல்காப்பியம் உண்மையாகவே ஒரு தவிர்ககமுடியாத அடிப்படைப் பனுவலாக ஆகிவிட்டது” என்று கூறும் சுவலபில், இதற்குமுன் வந்த தொல்காப்பிய மொழிபெயர்ப்புகளைப் புறவய நோக்கில் அமையாதவை என்று ஒதுக்கிவிடுகிறார். “இதுவரை செய்யப்பட்ட மொழி பெயர்ப்புகள் அவ்வளவும் ஒருவித வலுவான சமஸ்கிருதச் சார்புடனோ, அதற்குச் சம அளவில் வலுவான சமஸ்கிரு தத்திற்கு எதிரான சார்புடனோதான் உள்ளன. ஒன்று, அவை மிகுதியாக உரையாசிரியர்களைச் சார்ந்துள்ளன, அல்லது உரையாசிரி யர் சார்பினை முற்றிலும் எதிர்ப்பவையாக உள்ளன”. மு. இராக வையங்கார், சுப்பிரமணிய சாஸ்திரி போன்ற பலரும் உரையா சிரியர்களை மிகவும் போற்றி அவர்களுடைய கருத்துகளை ஏற்றுக்கொள்ள, மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார் போன்றவர்கள் உரையாசிரியச் சார்பினை எதிர்த்தமை இங்கு நம் நினைவுக்கு வருகிறது. குறிப்பாக, மறைமலையடிகளும், சோமசுந்தர பாரதியாரும் நச்சினார்க்கினியரின் உரைகளைப் பெரிதும் எதிர்த்துள்ளனர்.

“பயனுள்ள, நம் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய இந்த நூலுக்கு ஒரு நவீன, விமரிசன நோக்கிலான, சார்பற்ற, நாம் நம்பிஏற்கக்கூடிய ஒரு மொழிபெயர்ப்பு இருந்தால் இம்மாதிரி ஆய்வுகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். தொல்காப்பியத்திற்கு எளிய, நன்கு புரியக்கூடிய, பொதுநோக்கிலான ஆங்கிலப் பெயர்ப்பு ஒன்று மேற்கத்திய தமிழ் மற்றும் திராவிட ஆய்வாளர்களுக்குக் கிடைக்கும்படி செய்யாமற்போனால், தமிழ் மற்றும் திராவிட ஆய்வுகள் கடுமையாக பாதிக்கப்படும்” என்று எச்சரிக்கிறார் சுவலபில்.

சிறப்புப் பாயிரத்தைப் புரிந்துகொள்வதற்காக Note எனத் தமது குறிப்புகளைச் சேர்த்திருக்கிறார். பிற நூற்பாக்களைப் பொறுத்த அளவில், ஒவ்வொரு இயலின் பின்னரும் கருத்துரை (Comment), அடிக்குறிப்புகள் ஆகியவை இணைந்துள்ளன. அந்தந்த இயலை மொழிஆய்வு நோக்குள்ளவர்கள் புரிந்துகொள்ளத் தேவையான குறிப்புகள் Comment  என்பதில் தரப்படுகின்றன. அடிக்குறிப்புகள், நூற்பாக்களிலுள்ள சொற்களைப் புரிந்து கொள்ளவேண்டித் தரப்படுபவை. கருத்துரைகளும், அடிக்குறிப்புகளும் செறிவாக அமைந்துள்ளன. கமில் சுவலபிலின் மொழிபெயர்ப்பின் மிகச் சிறந்த பண்பு அதன் செறிவு என்று சொல்லிவிடலாம்.

தமது முன்னுரையில், தம் மொழிபெயர்ப்பின் தன்மைகளை அவர் பட்டியலிட்டுள்ளார். அவற்றை நோக்கலாம்.

1. இது ஒரு No-nonsense Translation, அதாவது அர்த்தமற்ற முறையில் ஆக்கப்படாதது என்கிறார். (இதிலுள்ள குறிப்பு, இதுவரை தொல்காப்பியத்திற்கு அர்த்தமற்ற மொழி பெயர்ப்புகள் வந்திருக்கின்றன என்பதாக அமைகிறது.)

2. நூற்பாக்களின் மொழிபெயர்ப்பு மட்டுமே. உரைகள் அற்றது.

3. பனுவலை அதற்கு உள்ளிருந்தே அணுகுதல் என்ற முறையில் அமைந்துள்ளது என்கிறார்.
(பனுவலை உள்ளிருந்தே அணுகுதல் என்னும் நெறிமுறை, 1920-30கள் முதலாகவே அமைப்பு மொழியியலாளர்களால் கையாளப்பட்டது.) சுவலபிலுடைய இந்தக் கூற்றில் மேற்கண்ட நோக்கின் பாதிப்பு காணப்படுகிறது.

4. எவ்விதச் சார்பும் எச்சரிக்கையுடன் தவிர்க்கப்பட்டுள்ளது என்கிறார்.
பிறகு தொல்காப்பியத்தின் மிக முக்கியமானதொரு இயல்பைச் சுட்டிக்காட்டுகிறார்.

“அதில் சில பிற்காலச் சேர்க்கைகளும் இடைச்செருகல்களும் காணப்பட்டாலும், அது ஒரு மிகப்பழமையான பனுவல்; அதேசமயம் மிக நவீனமான ஒரு பனுவலும்கூட” என்று சொல்லி, “அதனால் இந்த மொழிபெயர்ப்பு, எளிய, சமகால மொழியில் மூலத்திற்கு மிக நெருக்கமாகத் தரப்படுகிறது” என்று உரைக்கிறார்.

தொல்காப்பியத்துக்குப் பனம்பாரனார் இயற்றிய சிறப்புப் பாயிரம் உண்டு என்பதை அனைவரும் அறிவர். அதன் சிறப்புக் கருதி, அதன் மொழிபெயர்ப்புகள் இரண்டினை இங்குக் காணலாம். ஒன்று, கமில் சுவலபில் செய்தது. மற்றது, வெ. முருகன் செய்தது.

வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறு நல்லுலகத்து /
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி/ செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு /
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி / புலம் தொகுத்தோனே போக்கறு பனுவல் / நிலம்தரு திருவின் பாண்டியன் அவையத்து /
அறம்கரை நாவின் நான்மறை முற்றிய / அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து / மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த / தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றி / பல்புகழ் நிறுத்த படிமையோனே.
என்பது சிறப்புப் பாயிரம். இதன் பொருள் நாம் அறிந்ததுதான் ஆகையால், சுவலபில் மொழிபெயர்ப்பினைக் காணலாம்.
In the beautiful world which speaks Tamil between northern Venkatam and southern Kumari / he explored the sounds, the words, and the things, /
and he has fathomed both the common and literary speech /
and enquired into ancient books which were in vogue in the land of chaste Tamil /
and he designed a perfect plan gathering knowledge as of spotless nature: /
and he the ascetic, renowned in ample fame,/
who revealed his name as Tholkappiyan  versed in Ainthiram surrounded by surging waves; / and he has unfolded the system and the order which starts with sounds,/ in a clear, unbewildering course; / and he dispelled the doubts of the Teacher of Athankotu / ripe in the wisdom of the four vedas. whose tongue resounded with virtue: / in the assembly of the Pandiyan, glorius and land bestowing.

சற்றே நெருடக்கூடிய பகுதிகளை அடிக்கோடிட்டுள்ளேன். நல்லுலகம் என்பதை beautiful world என்று மொழிபெயர்ப்பதும், நிலம்தரு திருவின் பாண்டியன் அவையத்து என்பதை in the assembly of the Pandiyan, glorius and land bestowing என மொழிபெயர்ப்பதும் சிறப்பாக உள்ளன. நிலம்தரு திருவிற் பாண்டியன் என்பதைப் பலர் இயற்பெயராகவே கொண்டுள்ளனர். (அடுத்த மொழிபெயர்ப்பில் முருகனும் அவ்வாறே கொண்டுள்ளார்.) இவர் காரணப்பெயராக அதைக்கொண்டு, glorius and land bestowing என்கிறார். he designed a perfect plan gathering knowledge என்பதற்கு பதிலாக நேராகவே, he gathered knowledge என்றிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என்று கருதுகிறேன்.
சிறப்புப் பாயிரத்தை வெ. முருகன் பின்வருமாறு மொழிபெயர்க்கிறார்.

In the virtuous Tamil speaking land / That extends from / Venkatam in the north /
And Kumari in the south,/ He has treated units of sound and word /
And semantic content as well,/ Rooted as he remained / In traditions of common speech and literary idiom;/ Conversant he was of his predecessors’ works /
That were in vogue and use on the soil / Which marked the cultivated idiom of the Tamil language; / He examined them in order / And has made a well wrought work;/ He presented his classic / In the assembly of Nilantarutiruvin Pandyan /
Where at the head was Atankottu Acan / Endowed with a tongue of virtuous words
And the wisdom of the four vedas rooted; / He expounded in terms irreproachable
The structure unambiguous of the language / And thereby,
The sage of the man that he was / And of renown exceeding marked,
Established in the sea-girt world / His name Tolkappiyan / Versed in the treatise Aintiram.

சுவலபிலின் மொழிபெயர்ப்பை விட இது உரைநடைத் தன்மை வாய்ந்ததாகவும், அதிகச்சொற்கள் கொண்டு செறிவற்றும் இருப்பதைக் காணலாம். ஆனால் கூடியவரை அந்தந்த அடைமொழிகள் எவற்றிற்குப் பொருந்துமோ அவற்றுடன் சேர்த்து அமைத்துள்ளார்.

செந்தமிழ் நிலத்து என்பதை land of chaste Tamil என்று சுவலபில் பெயர்க்க, soil என்று மொட்டையாகப் பெயர்த்து விடுகிறார் முருகன். அதங்கோட்டு ஆசான் என்பதை Teacher of Athankotu என்று சுவலபில் பெயர்க்க, இவர் இயற்பெயராகவே கொண்டு மொழி பெயர்க்கிறார்.

சுருக்கமாகச் சொன்னால், சுவலபிலின் மொழிபெயர்ப்பு ஒரு செய்யுள் போலவும், முருகனின் மொழிபெயர்ப்பு அதன் பொழிப்புரை போலவும்  அமைந்துள்ளன.

இருப்பினும், தொல்காப்பியத்துக்கும் ஏ.கே. இராமானுஜன் அல் லது ம.லெ. தங்கப்பா போன்ற ஒருவர் தேவை. குறிப்பாக அதன் பொருளதிகாரப் பகுதிக்கு. எழுத்து, சொல் அதிகாரங்கள் நேரடியாக மொழிவிளக்கம் செய்பவை ஆதலின் நேரடியாக மொழி பெயர்க்கும்போது அதில் அதிகக் குறைகள் வர வாய்ப்பில்லை. பொருளதிகாரமே அதிக இடர்ப்பாடும் கோட்பாட்டு விளக்கமும் நிறைந்தது என்பதால் அதற்குச் செறிவான நல்ல மொழிபெயர்ப்புகள் தேவை. குறைந்த பட்சம் ஆங்கிலத்துக்கேனும் சரியான மொழிபெயர்ப்பு சென்றால்தான், முன்னமே சுவலபில் சுட்டிக் காட்டியது போல, நல்ல, திறமான ஆய்வுகள் நடக்க வாய்ப்பு ஏற்படும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

தமிழ் நூல்களுக்கு தேதிகளை நிறுவ செய்யப்படும் ஆராய்ச்சிகளில் எல்லாம், சமஸ்கிருத நூல்களிலிருந்து குறிப்புகள், முறைகள், ஆதாரங்கள் முதலியவற்றை எடுத்து மேற்கோள் காட்டுகின்றனர்.

பிறகு சமஸ்கிருதத்தை மறுபிறம் வசைபாடுகின்றனர். தமிழிலிருந்து தான் சமஸ்கிருதம் வந்தது, உலக மொழிகள் வந்தன என்றெல்லாம் எழுதி வாதிக்கிறார்கள்.

இப்படி இரட்டைநிலைகளை வைத்துக் கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டால், எப்படி நிலையான முடிவுகளை எட்டமுடியும்? vedaprakash

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

நச்சினார்க்கினியர் உரை தீ கணேச அய்யர்
பதிப்பு என்ற நூலில் கூறப்பட்டுள்ள ஆசிரியர் உரையை காண்போம்.
தொல்காப்பியர் என்பவர் வடமொழி பார்ப்பன முனிவராகிய ஜமதர்க்கினி என்பவரின்

வழி தோன்றியவர். (அவருடைய கோத்திரத்தை சேர்ந்தவர்) இவருடைய இயற்பெயர்
ரிமாதாக்கினி என்று கூறுவர். . தனது மனைவியாகிய ரேணுகா தேவி வான்வெளியில்
பறந்து சென்று கொண்டிருந்த தேவர் குலத்து அழகன் ஒருவனைக்கண்டு
காமுற்றதாகவும், அதனை தன் ஞானத்தால் உணர்ந்து தனது மகன் பரசுராமனைக்
கொண்டு தன் மனைவியின் தலையை வெட்டச்சொன்னபுண்ணியவான்இந்த ஜமாதாக்கினி.
(இந்த பரசுராமன் வைணவ கடவுளாகிய விட்ணுவின் அவதாரம்). அவரும் தன்
தந்தையின் சொல்லை தலைமேற் கொண்டு தன் தாயின் தலையை கோடாரியால்
வெட்டினார். அதனால் ஏற்ப்பட்ட துயரமும், சினமும் தாங்காமல் வெறி பிடித்து
அழைந்தார். தன் கண் முன் தோன்றிய சத்திரிய குல மன்னர்களை எல்லாம் கொன்று
குவித்தார். இவர் ராமரை நேரில் சந்தித்த போது அவரிடம் போருக்கு சென்று
தோற்றார். அதனால் வருத்தமுற்று தெற்கு நோக்கி வந்து கோடாரியை கடலில்
விட்டு எறிய அந்த இடத்தில் தற்பொழுது கேரளம் என்று வழங்கக்கூடிய
நிலப்பகுதி தோன்றியது.அங்கு சென்று அவர் தவம் செய்து உயிர் நீத்தார்.
இந்த தொல்காப்பியர் அகத்திய முனிவரின் சீடர் என்ற ஒரு செய்தியும் உண்டு.
இந்த அகத்திய முனிவரே தமிழ் மொழியையும், இலக்கணத்தையும்ஆதிசிவனிடமிருந்து
தமிழ்நாட்டிற்கு கொணர்ந்தவர். முதல் தமிழ்ச்சங்கம் இவருடைய தலைமையிலேயே
(கன்னி ஆற்றங்கரையில் அமைந்திருந்த தென்மதுரையில் பாண்டிய மன்னன்
மாகீர்த்தி அரசவையில்) நடந்தது. காண்க. அபிதான சிந்தாமணி சிங்காரவேலு
முதலியார் 1931. இதை புராணம் என்று கொண்டாலும் சரி. வரலாறு என்று
கொண்டாலும் சரி. நமக்கு தெளிவாகத் தெரிகின்ற செய்தி என்னவென்றால்
தொல்காப்பியர் என்பவர் வடமொழி ஆரீய பார்ப்பனர். தமிழ் மொழிக்கும், தமிழர்
வாழ்வுக்கும் இலக்கணம் வகுத்தது ஒரு ஆரிய பார்ப்பனரே என்ற செய்தி நமக்கு
பெருமை தரும்செய்தியா? 
இவர்களிடம் எப்படி தமிழ் இலக்கணத்தை எதிர்ப்பார்க முடியும்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard