கலாம் சமஸ்கிருதம் பற்றிய பதிவில் தனித்தமிழ் நடை குறித்து நான் சொன்ன ஒரு கருத்தை வைத்துப் பலரும் கும்மியடிக்கக் காண்கிறேன். என் தமிழ் உணர்வும், தமிழ்ப்பற்றும் பற்றி எனது பதிவுகளையும், இதற்கு முன் திண்ணையில் எழுதிவந்தவற்றையும் படித்தவர்கள் நன்கு அறிவார்கள்.
முதலில் நான் தமிழில் நல்ல கலைச்சொற்களை அறிமுகப்படுத்தும் முயற்சிக்கு எதிரானவனில்லை, ஆரவாரமில்லாமல் இத்தகைய சொற்களைப் பயன்படுத்தி வழிகாட்டி வருபவன். (உதாரணமாக, பத்ரியின் சம்ஸ்கிருதம் பற்றிய பதிவில் cryoptology என்பதற்கு நான் முதலில் பயன்படுத்தியிருந்த "குறியீட்டு இயல்" என்ற சொல்லே வந்தது கண்டு மகிழ்ந்தேன்). ஆனால் அதே நேரம் தமிழ்ப்படுத்துகிறேன் என்று பல பெயர்ச்சொற்களை தமிழில் படுத்தும் போக்கை ஏற்காதவன். ஸ்டாலின் என்ற பெயரை இசுடாலின் என்று இங்கே ஒருவர் எழுதுகிறார். இதே போக்கில் ஸ்விட்ஸர்லாண்ட் என்பதற்கு இசுவிச்சர்லந்து என்பதையும் ஸ்பெய்ன் என்பதற்கு இசுபெயின் என்பதையும் என்னால் (கொஞ்சமாவது பொதுப் புத்தியும், அழகியல் பற்றிய பிரக்ஞையும் உள்ள யாராலும்) ஏற்க முடியாது. நான் சொல்ல வந்தது இதைத்தான். தமிழைக் குறித்தோ அதன் தொன்மை குறித்தோ எந்த விமர்சனத்தையும் நான் வைக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட 'புனிதப் பசு" பதிவர் ஒருவரது புரியாத நடையைக் கொடுந்தமிழ் நடை என்று சொன்னது மாத்திரம் தான் நான் செய்தது.
இதே அடிப்படையில் தமிழில் இயல்பாகப் புழங்கும் சம்ஸ்கிருதச் சொற்களை வேண்டுமென்றே நீக்கி, அபத்தமான “தனி”த் தமிழ் என்பதாக எழுதுவதையும் எதிர்க்கிறேன். திரு. பத்ரி அவர்களும் இதில் என்னுடன் உடன்படுகிறார்.
இன்றைய காலகட்டத்தில், இந்த வக்கிரமான தனித் தமிழ் கருத்தை தூக்கிப் பிடிக்கும் எண்ணத்தின் பின்னால் ஒளிந்திருப்பவை இந்தத் தவறான புரிதல்கள் தான் -
- சம்ஸ்கிருதமும், தமிழும் ஒன்றுக்கொன்று எதிரிகள். அவற்றுக்கு இடையே வரலாற்று ரீதியான மோதல் உள்ளது.
- வட இந்தியர்கள் மற்றும் சம்ஸ்கிருதத்தை எதிர்க்காத அல்லது உயர்வாக மதிக்கும் எல்லா சாதிகளையும் சேர்ந்த எல்லா இந்தியர்களும் பார்ப்பனர்கள். தமிழ் எதிரிகள், துரோகிகள், தமிழர்களை அடிமைப் படுத்தத் துடிப்பவர்கள். (இதன் ஆணிவேர் ஆரிய திராவிட இனவாதத்தில் உள்ளது).
- சம்ஸ்கிருதம் பிராமணர்களின் மொழி. அதில் நல்லது என்று எதுவுமே இல்லை. அது தீயது. அது அரக்கன். அது பாம்பு.
இவை அனைத்தும் எவ்வளவு பெரிய அண்டப் புளுகுகள், இந்திய தேசிய சிந்தனைக்கு எதிரானவைகள், தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கே எதிரானவைகள் என்பதைச் சொல்லத் தேவையில்லை. மொழிப் பாதுகாப்பின்மை பற்றிய ஒரு கேவலமான தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி அதில் கொஞ்ச காலம் வெற்றிகரமாகக் குளிர் காய்ந்த அரசியல் கொள்கைகளின் எச்சங்கள் தான் இவை. இவற்றின் காலம் மலையேறிவிட்டது என்று எல்லாத் தமிழர்களும், குறிப்பாக ஒருங்கிணைந்த, வலுவான இந்திய தேசியத்தின் ஊக்கத்தால் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் உயர்ந்த நிலை அடைந்திருக்கும் தமிழர்கள் உணர வேண்டும். உரத்துச் சொல்ல வேண்டும்.
இரண்டாயிரம் ஆண்டு தமிழ் இலக்கியத்தின் பாரம்பரியத்திற்கே எதிரானது இந்த “தனித் தமிழ்” ஜல்லி. தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலம்பு, திருக்குறள், கம்பராமாயண காலத்திலிருந்து இந்த நூற்றாண்டு வரை ஒரு உயிர்த் துடிப்புள்ள மொழி செய்துவரும் அற்புதமான பரிசோதனைகளின் பரிமாணங்கள் தான் சம்ஸ்கிருத மற்றும் பிற மொழிச் சொற்களின் இயல்பான கலப்புகள். இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாதவர்கள் குருட்டுத் தனமான மொழித் தீவிரவாதிகளே அன்றி மொழியை வளர்ப்பவர்கள் அல்லர்.
என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்கி வந்துள்ள பின்னூட்டங்களைப் புறக்கணித்து சில எதிர்க்கருத்துக்களுக்கு மட்டும் இங்கே பதில் சொல்கிறேன். இந்த அரிய தகவல்களில் சிலவற்றை எனக்கு அருளி உதவிய சான்றோர் ஒருவருக்கு நன்றியுடன் கடமைப் பட்டுள்ளேன்.
சம்பந்தர்:
தமிழன் என்பவர் எழுதுகிறார்:
"திருஞானசம்பந்தப் பெருமானே தமிழில் வடமொழி ஆதிக்கத்தைக் கண்டு வெறுப்படைந்தவர்தான். தன்னைப் பல இடங்களில் தமிழ்ஞானசம்பந்தன் என்றே அழைத்துக் கொள்கின்றார்.தனக்கு பூணூல் அணிவித்தபோது கூட காயத்திரி மந்திரம் வேண்டாம் என்று தமிழிலே சைவ வாழ்த்து பாடச்சொல்கிறார்."
இது எப்படி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய், திரிபுவேலை என்று பார்ப்போம். திருஞானசம்பந்தருக்குப் பூணூல் அணிவித்த சடங்கு முடிந்ததும் அங்கே வந்திருந்த வேத பண்டிதர்களுக்குப் பாடியதாகச் சொல்லப்படும் பஞ்சாக்கரப் பதிகத்தில் வரும் இந்தப்பாடல்:
மந்திரம் நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன
செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே
'நமசிவய' என்ற திருவைந்தெழுத்தே மந்திரங்கள் அனைத்திற்கும் மூலம் என்றும், தீ வளர்த்து ஓம்பியிருக்கும் வேதியர் முப்போதும் ஓதும் சந்தியாவந்தன மந்திரத்திலும் மூலமாயிருப்பது அதுவே என்கிறார். ஏனெனில் ஐந்துமுகம் கொண்ட வேதமாதாவான காயத்ரி தேவியே சதாசிவபத்னியான மனோன்மணி. காயத்ரி அஷ்டோத்திரத்திலே மனோன்மண்யை நம: என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. காயத்ரி தியான மந்திரத்தில் வரும் 'முக்தா, வித்ரும, ஹேம, நீல, தவளம்' என்ற இந்த ஐந்து வண்ணங்கள் பஞ்சபூதங்களையும் சதாசிவத்தையும் சுட்டுகின்றன. மாணிக்கவாசகர் சிவபுராணத்திலே 'நிறங்கள் ஓர் ஐந்துடையாய்' என்றதும் அதனால்தான். இதிலே காயத்ரி மந்திரம் வேண்டாம் என்று எங்கே சொல்கிறார்?
மேலும் 'திருஞானசம்பந்தர் வடமொழி ஆதிக்கத்தைக் கண்டு வெறுப்படைந்தவர்தான்' என்றொரு அடாத பொய்யைச் சொல்லி இருக்கிறார்.
இதையெல்லாம் மிசினரிமார்தான் இட்டுக்கட்டிச் சொல்வார்கள்.
பதிகத்துக்குப் பதிகம் இறைவனை வேத உருவாகக் கண்டவர் 'வேதநெறி தழைத்தோங்க' (சேக்கிழார் வாக்கு) வந்த திருஞானசம்பந்தர். வேதம் என்பதை “மெய்யறிவு” என்பதாக மட்டுமல்ல ரிக், யஜுர், சாம, அதர்வ வேதங்கள் என்ற பொருளிலேயே ஏராளமான பாடல்களில் பாடியுள்ளார் –
“வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாக.. “
“வேதமொடு ஆறங்கம் ஆயினானை.. “
“சாகை ஆயிரம் உடையார்.. “ (ஆயிரம் கிளைகள் உள்ள “ஸஹஸ்ர சம்ஹிதா” என்று ரிக்வேதத்தை குறிப்பிடுவார்கள்)
திருமூலர்:
சம்ஸ்கிருத ஐம்பது எழுத்துக்கள் அடிப்படையில் ஒலிக்குறிப்புகளாகும். இவை பலவித சேர்க்கையில் (combination) அண்டசராசரங்களின் தோற்றத்திற்கும் அடிப்படையாகும். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால் ஐந்தெழுத்தின் சூட்சுமத்தையும் புரிந்து கொள்ள முடியும் என்று பாடுகிறார் திருமூலர்.
ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும்
ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின்
ஐம்பது எழுத்தும் ஐந்தெழுத் தாமே
வள்ளலார்:
வள்ளலாரது திருவடிப் புகழ்ச்சியின் பாடல்களில் பல முழு சம்ஸ்கிருதத்தில் உள்ளன என்று சொல்லியும் சில மூடர்கள் அவர் சம்ஸ்கிருத வெறுப்பாளர் என்று இன்னும் வாதிடுகின்றனர். அந்த நூலின் முதற்பாடல் இதோ –
பரசிவம்சின்மயம் பூரணம் சிவபோக பாக்கியம் பரமநிதியம்
பரசுகம் தன்மயம் சச்சிதா னந்தமெய்ப் பரமவே காந்தநிலயம்
பரமஞா னம்பரம சத்துவம கத்துவம் பரமகை வல்யநிமலம்
பரமதத் துவநிரதி சயநிட்க ளம்பூத பௌதிகா தாரநிபுணம்
பவபந்த நிக்ரக வினோதச களம்சிற் பரம்பரா னந்தசொருபம்
பரிசயா தீதம்சு யம்சதோ தயம்வரம் பரமார்த்த முக்தமௌனம்
படனவே தாந்தாந்த மாகமாந் தாந்தநிரு பாதிகம் பரமசாந்தம்
பரநாத தத்துவாந் தம்சகச தரிசனம் பகிரங்க மந்தரங்கம்
பரவியோ மம்பரம ஜோதிமயம் விபுலம் பரம்பர மனந்தமசலம்
பரமலோ காதிக்க நித்தியசாம் பிராச்சியம் பரபதம் பரமசூக்ஷ்மம்
இதில் மெய் என்பது தவிர அத்தனையும் செஞ்சம்ஸ்கிருதச் சொற்கள். அற்புதமான ஞான, யோக தத்துவங்கள் அடங்கிய இந்த நூலை இங்கே படிக்கலாம்.
சன்மார்க்கம், சமரசம், அத்துவிதம் போன்ற வடசொற்களைத் தவிர்த்து தனித்தமிழில் அமைக்குமாறு சிலர் சொல்ல 'நிறைமொழி மாந்தர் ஆணையிற்' பிறந்த எல்லாம் மறைமொழிகள்தாம். அதில் மொழி பேதமில்லை, மாற்ற முடியாது என்று வள்ளலார் சொன்னார் என்று படித்திருக்கிறேன்.
இப்போது வள்ளலாரே சமஸ்கிருதச் சொற்களின் கலப்பைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
சன்மார்க்கம் என்ற அடிப்படைக் கலைச்சொல் ஒன்று. அதனோடு இணைக்கும் சமரசம், சுத்தம் என்பனவாகிய சொற்கள். இத்தகைய சொற்களை வள்ளலார் உண்டாக்கவில்லை. இவைகளையெல்லாம் வடமொழி எனத் தள்ளிவிட்டு, பழகுதமிழில் இக்கொள்கையை அமைத்திருக்கலாமே என்பது சிலரின் ஆசை.
மெய்ப்பொருளியற் கலைச்சொற்கள் மக்களாலோ, ஒரு இனத்தாராலோ உண்டாக்கப் பெற்றவை அல்ல. பரநாதத் தலத்தே விளங்கும் பரநாதம், பரவிந்து என்ற இரண்டும் இணைய அவ்விணைப்பின் மூலம் (அனந்த தாத்பர்யங்களை உள்ளடக்கி) பல்வேறு பொருள் நிலைகளை உள்ளடக்கி எழுந்த சொற்களே அவை ஆதலின் அவைகளை மாற்றுதல் இயலாது என்று குறிப்பிடுகிறார். அவைகள் வடமொழிச் சொற்கள் அல்ல, வடலுறு சொற்கள் என்பது வள்ளலார் வழக்கு.
ஆதாரம்: சிதம்பரம் இராமலிங்கரின் சித்திவளாகம் - பக்கம் 26/27.
இந்தப்புத்தகம் வள்ளலாரின் வலைத்தளத்திலேயே இருக்கிறது.
வடலுறு சொற்கள்: வடக்குத் திசையிலிருந்து இங்கே கொண்டு வரப்பட்டவை அல்ல; ஆலவிதை போன்ற பீஜமான சொற்கள்.
வடம் என்றால் ஆலமரம்.
தொழுவூர் வேலாயுத முதலியார்:
சமஸ்கிருதம் ஏதோ பிராமணர்களின் தனிச்சொத்து தனிமொழி என்றொரு பிம்பத்தை உருவாக்கி அதை அழித்துக் கொண்டிருப்பது சமீபத்தில்தான். 19' ம் நூற்றாண்டு வரை சமஸ்கிருதத்தை அனைத்து சாதியினரும் கற்றுத் தேர்ந்திருந்தனர். இதற்குச் சான்றாக சமீபத்தில் என் நண்பர் ஒருவர் மூலம் கிடைத்த ஓர் அரிய புத்தகத்தைக் கீழே பாருங்கள்:
சங்கரவிஜயம் என்ற இந்தப் புத்தகத்தை 1879'ம் ஆண்டில் சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்த்திருப்பவர் தொழுவூர் வேலாயுத முதலியார். வெளியிட்டவர் தண்டலம் ஆறுமுக முதலியார். இந்த தொழுவூர் வேலாயுத முதலியார் சமரச சன்மார்க்க சங்கத்தைத் தோற்றுவித்த முன்னோடிகளில் ஒருவர். வள்ளலாருக்கு மிக அணுக்கமானவர். சிதம்பரம் ராமலிங்கம் என்றே தம்மை அழைத்துக் கொண்டவரை வள்ளலார் என்று பெயரிட்டு அழைத்தவரும் இவர்தான்.
வெங்கட் சாமிநாதன் முன்பு சிஃபி.காமில் ஒரு கட்டுரையில் வருந்தியிருந்தார் – “தமிழ் இங்கு வளர்க்கப் படவில்லை, வெறுமனே தமிழ் கோஷப் படுத்தப் பட்டுள்ளது என்று”. ஒரு குறிப்பிட்ட கூட்டத்தின் இந்த எதிர்வினைகள் அதை உண்மையென்று நிரூபிக்கின்றன.
தமிழ் கோஷப் படுத்தப் பட்டது மட்டுமல்ல, வேஷப் படுத்தவும் பட்டுள்ளது. அதனால் நாசப் படுத்தப் படுகிறது. அதைச் செய்பவர்கள் தான் தமிழ் எதிரிகள். தமிழ் உணர்வு இல்லாதவர்கள்.